Tuesday, December 8, 2009

அவளும்,அவனும்

அவளது முகம் என்றும் இல்லாதவாறு வாடியிருந்தது. மனம் சோர்ந்து பற்றில்லாது தவித்தது. இன்று யார் முகத்தில் விழித்தாளோ தெரியவில்லை. அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இயந்திர கதியில் செயற்பட்டாள். கொம்பியூட்டரில் தரவுகள் யாவற்றையும் திணிக்க முயன்றாள். அறிக்கையில் வரைபுகளை வரையத் தரவுகளைக் கொடுத்தாள். வரைபுகள் சரியாக அமையவில்லை. முயன்று முயன்று தவறி.. தவறிக் கொண்டே போயின. அழுகை அழுகையாக வந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது. அவளுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. கைகளால் நெற்றியை அழுத்தித் தேய்த்தாள். தலையை இருகைகளாலும் தாங்கிவாறு குனிந்து இருந்தாள்.



அவளது செயலை மனேஜிங் டிரெக்டர் அவதானித்து இருக்கவேண்டும். அவர் அவள் பக்கம் வந்தார்.'என்ன லதா இண்டைக்கு வழமைக்கு மாறாக இருக்கிறியள். ஏதும் பிரச்சினையா'? அக்கறையோடு மனேஜிங் டிரெக்ரர் கேட்டார். அவருக்கு விரைவில் தனது வேலைகள் முடியவேண்டும் என்ற கரிசனை.'அப்படி ஒன்றுமில்லை சேர்.' பொய்யான புன்முறுவலை வரவழைத்தவாறே பதிலளித்தாள். ஆனால் அவளது முகம் காட்டிக்கொடுத்து விட்டது. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. 'லதா பொய் சொல்லாதீங்க. பொய் சொல்வதென்றாலும் பொருந்தச் சொல்லவேணும். உங்கட முகம் 'அது பொய்' என்று சொல்லுது. என்ன பிரச்சினை என்று என்னட்டச் சொல்லுங்க. உங்கட அப்பா அந்தஸ்ததில் இருந்து கேட்கிறன். என்னால் முடிந்த உதவியைச் செய்யுறன். மனது ஆறுதல் அடையும்.''அப்படி ஒன்றும் பெரிசா இல்லை சேர்.''பெரிசாக இல்லையெண்டால் ஏதோ ஒண்டு இருக்குது என்று அர்த்தம். அதுதான் என்ன?. சொல்லுங்க.' அவர் விடுவதாக இல்லை. அவளுக்குச் சங்கடமாக இருந்தது. யோசித்தாள்.'அது வந்து... மனம் சரியில்லை சேர்... மகள் சிந்துவுக்குச் சுகமில்லை. நாளைக்கு நமது கருத்திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க வேணும். அது இன்னும் முடியல்ல. அதுதான் கவலையாக இருக்கிறது. இழுத்து இழுத்து ஒருவாறு சொல்லிமுடித்தாள். அவள் கண்கள் கலங்கிக் கண்ணீர்த் துளிகள் முட்டின. வுழமையாகச் சுறுசுறுப்பாக இயங்குமi; அவள் இன்று நண்பகல் வரை பதட்டமாக இருந்தாள்.




லதா மிகவும் கெட்டிக்காரி. கருத்திட்டம் தயாரிப்பதில் வல்லவர். ஆவளால் தயாரிக்கப்பட்ட பல கருத்திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறுவனத்துக்கு நல்ல பெயரைக் கொடுத்திருந்தது. அவளால் நிறுவனத்துக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. லதாவுக்கு மதிப்பும் மரியாதையும் நிறுவனத்தில் கிடைத்தது. மனேஜிங் டிரெக்ரர் அவளது மனநிலையைப் புரிந்து விட்டார். அவள்மேல் இரக்கம் உண்டாகியது.
'அதுதானே பார்த்தன். ஏதோ ஒன்று இருந்தபடியால்தான் நீங்க இண்டைக்கு டல்லா இருக்கிறீங்க. வழமையான சுறுசுறுப்பும் இல்ல. லதா நானும் மனுசன்தான். எனக்கும் மனசு இருக்கு. மனநிலை சரியில்லாதபோது எந்த வேலையும் ஓடாது. தவிரவும் வேலை செய்யுமi;போது தவறுகள் ஏற்படச் சந்தர்பங்கள் நிறையவே உண்டு. இப்படியே இதெல்லாம் கிடக்கட்டும். அறிக்கை முக்கியமில்லை. பிள்ளையின் உடல்நிலைதான் முக்கியம். ஆறிக்கையை அடுத்த கிழமையும் அனுப்பலாம். அதற்கு அவகாசம் இருக்கிறது. முதல்ல போய் பிள்ளையைப் பாருங்கோ. போங்கோ. கூறிவிட்டு அவர் போய்க் கொண்டிருந்தார். அவளது மனதில் சற்று நிம்மதி வந்து குந்திய உணர்வு ஏற்பட்டது. லதாவுக்குப் பெரியதொரு பாரம் இறங்கியதுபோல் இருந்தது. மனேஜர் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது. வயதுக்கேற்ற அனுபவமும் அவரிடம் இருந்தது. அப்படி இல்லாவிடில் இப்படிப்பட்ட பெரிய நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமா?.
'இந்த மனேஜர் என்னைப் புரிந்த அளவிற்கு என்ர மனிசன் என்னைப் புரியல்ல. இந்த ஆண்வர்க்கமே அப்படித்தான். சரியான சுயநலவாதிகள்..' அவளது மனம் கணவனை எண்ணிக் கோபப்பட்டது. ஒருபக்கம் வேதனையாகவும் இருந்தது.



கண்கள் குளமாகிக் கரைமுட்டி உடைந்து வடிந்தது. இந்தப் பெண்களுக்கு எங்கிருந்து இவ்வளவு கண்ணீர் வருகிறதோ தெரியாது. கண்ணீராலேயே சாதித்து விடும் ஆளுமை பெண்களிடம் மட்டுமே உள்ளது. பிரச்சினைகள் என வரும்போது அதற்கு முகம்கொடுத்துச் சமாளிக்க முடியாதபோது கண்ணீரைக் கொட்டி அழுது தீர்ப்பது பெண்களுக்கே உரிய செயலாகும். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்.துயரம் வரும்போது அதனை அடக்கி வையாது இப்படி வெளியில் கண்ணீரைக் கொட்டிவிடுவதால் அவர்களது மனம் அமைதியடைகிறது. முன அழுத்தம் குறைகிறது. அடிக்கடி துடைத்துக் கொண்டாள்.



மேசைமேல் கிடந்த கோவைகளை மூடி அலுமாரியில் திணித்தாள். கொம்பியூட்டரை உறையினுள் அடக்கி மூடினாள். சோல்வதற்காக மனேஜரின் அறைப்பக்கம் போனாள். அவளைக் கண்டதும் 'லதா இன்னும் நீங்க போகல்லையா? போய் பிள்ளையைப் பாருங்க'. அவரிடமிருந்து பதில் வந்தது. மீண்டும் தனது இருக்கைக்கு வந்து தனது 'ஹான்பாக்கை' எடுத்தாள். அவசர அவசரமாகக் கிளம்பினாள். அலுவலகத்தை விட்டு வீதிக்கு வந்தாள். வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. கொழும்பில் காலி வீதி சனங்களால் நெருக்குவாரப் பட்டது. வாகனங்களின் இரைச்சல் காதையடைத்தது. வாகனங்களின் புகையும், தூசியும், இரைச்சலும் பலன்களைச் சித்திரைவதை செய்தன.



எவ்வளவு சனங்கள். வாகனங்கள். இந்த வாகனங்களும். சுனங்களும் எங்கிருந்து புறப்பட்டு வருகின்றனர்? அவள் மனம் கேள்விகளால் நிறைந்திருந்தது. ஆனால் பதில்தான் இல்லை. மனம் வீட்டைச்சுற்றி வலம் வந்தது. கண்கள் அவள் வீடு செல்வதற்கான வஸ் வண்டியைத் தேடின. கால்கள் நடந்தன. அவள் வழமையாக வஸ்வண்டியில் ஏறும் தரிப்பிடத்தை அடைந்தாள்.



அவள் மனதில் ஒருவித பயம் இருக்கத்தான் செய்தது. தமிழர்கள் மட்டுந்தான் பொட்டு வைப்பார்கள். அந்தப் பொட்டு எவ்வளவு அழகானது. புனிதமானது. முகத்துக்குப் பொலிவூட்டுவது. இனவிரிசல் தொடங்கிய காலத்திலிருந்து இந்த நாட்டில் அப்படியொரு அநர்த்தம். பொட்டு வைத்தவர்கள் தாக்கப் பட்டார்கள். ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டுக் குதறப் பட்டார்கள். கொலைசெய்யப் பட்டார்கள். அதை நினைக்கவே பயமாக இருந்தது. இப்போதும் தமிழர்களுக்குப் பூரண பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. வுழிப்பறிப்புகளும், கொலைகளும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவளால் கற்பனை செய்து பார்க்கவும் முடியவில்லை. கையைப்புரட்டிப் பார்த்தாள். நேரம் போய்க் கொண்டிருந்தது. தன்னைப் போல் ஆடை அணிந்தவர்களைக் கண்டால் மட்டும் ஒரு புன்னகையை உதடுகளில் வரவழைத்துத் தவழவிட்டிருந்தாள். மனமெல்லாம் சிந்துவைச் சுற்றியே வந்தது.



இன்று காலை வேலைக்குப் புறப்படும்போது சிந்துவின் பிஞ்சு விரல்கள் சுடிதாரியைப் பிடித்து இழுத்ததை நினைந்து கொண்டாள். இரவு முழுவதும் அவளுக்குக் காய்ச்சல். ஊடல் நெருப்பாய் எரிந்தது. இன்று அவளுக்கு வேலைக்குப் போவதற்கு மனமே இல்லை. ஆனால் கருத்திட்ட வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய இறுதிநாள் இன்றாகத்தான் குறிப்பிடப்பட்டிருந்தது. போய் கருத்திட்டத்தை முடித்துக் கொடுத்தே ஆகவேண்டும். புறப்பட்டு வந்து விட்டாள். சிந்து காய்ச்சலில் எப்படிக் கஸ்டப்படுதோ தெரியாது. அந்த இரண்டு வயதுப் பிஞ்சு இப்போது தேடும் என்றதை நினைந்ததும் அவளது கண்கள் பனித்தன. போனதும் மருந்து எடுக்கப் போகவேணும். புhழாய்ப் போன வஸ் இன்னும் வரவில்லை. நேரம் மந்த கதியில் நகர்ந்து கொண்டிருந்தது. மெதுவாக அவள் போகவேண்டிய அந்த இலக்க வஸ் வந்து நின்றது. முண்டியடித்து முயன்றும் முடியவில்லை. அவ்வளவு சனம். அனைவருக்கும் அவசரம். அடுத்து வரும் வஸ்ஸைப் பார்த்தாள். அடிக்கடி வஸ் வரும் திசையை நோக்கித் தவமிருந்தாள். வீதியைப் பார்த்து பெருமூச்செறிந்தாள். என்ன செய்வது? ஒரே ரென்சனாய் இருந்தது.




அவள் மனம் பதறிக் கொண்டிருந்தது. தனது கணவன் தரன் மேல் ஆத்திரமாக வந்தது. காலையில் நடந்ததை நினைந்து கொண்டாள். ஓவென்று அழவேண்டும்போலிருந்தது. 'பெண்ணென்றால் இவங்களுக்கு இளக்காரமாய்ப் போய்விட்டது'. மனதுக்குள் நொந்து கொண்டாள். முகம் அடிக்கடி கடுமையாகிக் கொண்டிருந்தது. கலியாணம் முடிக்கும்வரை தேனொழுகப் பேசுவார்கள். காலைக் கையைப் பிடிப்பார்கள். எல்லாம் முடிஞ்சபின் பெரிய லெவல் இவங்களுக்கு. இண்டைக்கு இரண்டில் ஒன்று பார்க்க வேணும். இன்று காலையில் நடந்த நிகழ்ச்சி மனத்திரையில் வந்து விழுந்து படமாக ஓடியது. மறக்க முயன்றும் முடியவில்லை.



காலையில் அலுவலகம் போவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை. 'இஞ்சாருங்கோ அப்பா... சிந்துவுக்குச் சுகமில்லை. மருந்து எடுக்க வேணும். இண்டைக்கு நீங்க லீவு எடுத்துச் சிந்துவோட வீட்டில் நில்லுங்க. நான் நாளைக்கு லீவு எடுக்கிறன்.' லதா சுடிதாரைச் சரிசெய்தவாறே கூறினாள். தரனுக்கு அது பிடிக்கவில்லை. தரன் இரவு முழுவதும் கொம்பியூட்ரில் வேலை செய்து கொண்டிருந்தான். மறுநாள் நடைபெறும் ரெண்டர் மீற்றிங் பற்றிக் கூறியுமிருந்தான். என்ன விசர்கதை கதைக்கிறாய். இண்டைக்குத்தான் ரெண்டர் கொடுக்கிறதுக்குக் கடைசிநாள் என்று உனக்குத் தெரியும்தானே.? துவறினால் நமது கம்பனிக்கு நட்டமப்பா. ஏவ்வளவு நம்பிக்கையோடு கம்பனியை ஒப்படைத்து இருக்கிறார்கள். எத்தனை தரம் சொல்லியிருக்கிறன். உனக்கு விளங்கல்லையா?' அவன் புறப்பட்டுக் கொண்டே கூறினான்.



தரன் அந்த நிறுவனத்தில் பயிலுநராகவே சேர்ந்தவன். சுறுசுறுப்போடு சுழன்று உழைத்தவன். அவனது கடின உழைப்பு நல்ல பெயரைத் தேடிக் கொடுத்தது. அவனது திறமையைப் பார்த்து நிறுவனத்தின் பங்காளிகள் தரனை கம்பனியின் மனேஜராக அண்மையில் பதவியில் அமர்த்தினர். இப்போது அவன் திறமைவாய்ந்த பொறுப்புள்ள மனேஜராகக் கடமையாற்றுகிறான். ஓய்வு ஒழிவில்லாது உழைப்பவன். அவனுக்குப் பொறுப்புக்கள் அதிகம். லதாவும் இதனை உணர்ந்திருந்தாள். அவனது கஸ்டத்தைப் பார்த்துப் புரிந்து அனுதாப்பட்டும் இருக்கிறாள். இன்று லதாவின் நிலையும் சங்கடமானதாக இருந்தது. யார் யாருக்காக அனுதாபப்படுவது. லதாவுக்கு பொறுமை இன்று எல்லைமீறிவிட்டது. அவளை அறியாமலேயே ஆட்டிலறி ஷெல் விழுந்து வெடித்துச் சிதறுவது போல் சொற்கள் பறந்தன.
உங்களுக்கு மட்டுந்தானா அவசர வேலை.? நானும் இண்டைக்குக் கருத்திட்ட அறிக்கையை முடித்துக் கொடுக்க வேணும். உங்களைப் போலதானே நானும் வேலை செய்யிறன். ஏனக்கும் பொறுப்புக்கள் இருக்கு. நான் அதுகள முடித்துக் கொடுக்க வேணும்தானே.? வீட்டிலும் வேலை. கந்தோரிலும் வேலை. எல்லாத்திலயும் மாட்டிக் கொண்டு தவிக்கிறன். கண்ணீருடன் கொட்டி வைத்தாள்.



தரனுக்குப் பொறுமை போய்விட்டது. லதாவை எரித்து விடுவது போன்று பார்த்தான். 'லதா .. நல்லா யோசித்துப் பார். நமது கஸ்டத்தைப் போக்கத்தானே நான் ஓய்வில்லாது இப்படி பாடுபட்டு உழகை;கிறன். ஏன் இதை எண்ணிப் பார்க்கல்ல. எல்லாத்திலயும் மாட்டிக் கொண்டு தவிக்கச் சொன்னேனா? தவிரவும் உன்னை யார் வேலைக்குப் போகச் சொன்னது? இனிமேல் கஸ்டப்படத் தேவையில்லை. வேலையை விட்டுப் போட்டு இருக்கச் சொல்லி எத்தனை தடவைகள் சொல்லியிருக்கிறன்.' தரன் கடுகடுப்போடு கொட்டி வைத்தான்.வேலைக்குப் போறதுதான் இப்ப உங்கட கண்ணில குத்துதாக்கும். நான் வேலைக்குப் போகாட்டித் தெரியும் கடுப்பு. நான் வேலைக்குப் போறதால என்ன குடிமுழுகிப் போச்சு. பெண்கள் வேலை செய்யக் கூடாதென்ற சட்டமா? மூச்சு விடாது சொற்களை அள்ளி வீசினாள்.'இரண்டு பேரும் வேலைக்குப் போறதால நமது பிள்ளை பாதிக்கப்படுது. இது உனக்கு விளங்கல்ல. குடும்பத்தில ஒரு ஆள் வேலைசெய்தால் போதும்.' துரன் பதிலுக்குக் கூறிவைத்தான். லதாவுக்குப் பொத்துக் கொண்டு ஆத்திரம் வந்தது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. அவளும் பொரிந்து தள்ளினாள். 'பிள்ள ஏன் பாதிக்கப்படுது? நான் வேலைக்குப் போறது உங்களுக்குப் பொறாமை எண்டு சொல்லுங்க.''நீ வேலைக்குப் போறதால எனக்கு ஏன் பொறாமை? உனக்கு விசர். பெண்கள் வேலை செய்வதில் தப்பில்லை. ஆனால் திருமணத்துக்குப் பிறகு யோசிக்க வேணும். ஆளையாள் புரிந்து கொள்ள வேணும். பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்தெடுக்க வேணும்.. அதுக்குக் கணவனும் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழவேணும். வேலைக்குப் போறதும், உழைக்கிறதும் வாழ்க்கை யில்லை. சந்தோசம் குடும்பத்தில் நிலவவேணும். இப்ப நான் எடுக்கிற சம்பளம் நமது குடும்பத்தை நடத்தப் போதுமானது. நீ வேலைக்குப் போய்த்தான் உழைக்க வேணும் என்ற கட்டாயம் இல்லை.' தனது அலுவலக ஆவணங்களை அடுக்கிக் கொண்டே பதிலளித்தான். 'நான் வேலைக்குப் போவதுதான் உங்கட கண்ணில குத்துது' அவள் யோசிக்கமாமல் பொரிந்து தள்ளினாள். தரன் ஒன்றும் பேசாது புறப்பட ஆயத்தமானான். லதாவின் அம்மா தேநீர் கொண்டு வந்தார். மேசையில் காலை உணவு அப்படியே இருந்தது. வீட்டு வேலைகளோடு சிந்துவையும் லதாவின் அம்மாதான் கவனிப்பவர். அவர் இருப்பதால் அவர்களுக்குப் பெரிதும் ஆறதலாக இருந்தது.



'மாமி சிந்துவைப் பார்த்துக் கொள்ளுங்க.' கண்ணாடியைப் பார்த்துக் கழுத்துப் பட்டியைச் சரிசெய்தவாறே கூறினான். வெளியில் வந்து தனது மோட்டார் சைக்கிளை இயக்கினான்.'தம்பி சாப்பிடல்லயா?''வேண்டாம் மாமி. நான் பிறகு வாறன்.' மோட்டார் சைக்கிள் இரைந்தது. புறப்படத் தயாரானான். லதா பாய்ந்து வெளியில் வந்தாள்;. ஆத்திரம் பொத்திக் கொண்டு வந்தது.'ஆர் சிந்துவை மருந்தெடுக்கக் கூட்டிப் போவது'? வெளியில் வந்து உரத்துச் சத்தமிட்டாள். பதில் சொன்னால் வாய்த்தர்க்கம் வளர்ந்து விடும். பெரிய குழப்பமாகிவிடும் மௌனமானான். புதில் கூறாமல் சென்றுவிட்டான். லதா குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவள் ஏன் அழுதாள் என்பது அவளுக்கே தெரியாது. திருமணம் முடித்த நாளிலிருந்து நேற்று வரை தரன் வேலைக்குப் போகும்போது வாசல் வரை வந்து புன்னகையோடு வழியனுப்பி வைத்தவள். இன்று அப்படிச் செய்யவில்லை. அதற்கு அவகாசமும் இருக்கவில்லை. அவளுக்குப் பெரிய தர்மசங்கடமாகி விட்டது. தங்களுக்குள் ஒரு இடைவெளி உருவாகி வருவதை உணர்ந்தாள். சிந்துவை நினைந்து உருகினாள். பெண்ணாகப் பிறந்ததே பெரிய பாவமா? பலதையிட்டும் வருந்தினாள்.



' பிள்ளை உனக்கு வரவர வாய் கூடிப்போச்சு. பேசாம உன்ர வேலையை நீ பார். நான் இருக்கிறன்தானே? சிந்துவை நான்தானே பார்க்கிறன். வேலைகளை முடிச்சுப் போட்டு மருந்தெடுக்கக் கூட்டிப்போவன். இதுக்குப் போய் அவரோட ஏன் சண்டை பிடிக்கிறாய். பாவம் தம்பி. அது சாப்பிடாமப் போகுது. அவர் ஆம்பிள. ஆயிரம் வேலைகள் இருக்கும். அவர் சொன்னதும் சரிதானே'? அம்மா ஒரு ஆறுதலுக்காகத்தான் கூறினார். லதாவுக்கு அது பிடிக்கவில்லை.'நானா சண்டை பிடிக்கிறன். அவர் ஆம்பிள என்டால் அடங்கிப் போகணுமா? ஆணுக்கொரு நீதி. பேண்ணுக்கொரு நீதியா? நல்ல நியாயம். ஒரு நாள் லீவு போட்டுட்டு சிந்துவோட நிக்கச் சொன்னனான். அது சண்டையா? உங்களுக்கும் ஒன்டும் விளங்கேல்ல. நீங்களும் அவர்ர பக்கம்தான். அவளுக்கு எரிச்சலாக வந்தது. கண்ணும் மூக்கும் கசிந்தன. முகத்தைத் துடைத்துக் கொண்டாள். தான் தனிமரமாக நிற்பதாக உணர்ந்தாள். இந்த அம்மாவும் அவருக்குத்தான் சப்போட் பண்ணுறா. சே ..என்னை யாரும் புரியல்ல. அலுத்துக் கொண்டாள்.



'பிள்ள.. அவருக்கு அவசரமான வேலையென்டபடியால்தான் போறார். எப்பயாவது இப்படி நடந்திருக்கிறாரா? நீ இதை விளங்கிக் கொள்; குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும். இப்ப கோபிப்பியள். பிறகு சந்தோசமாக இருப்பியள். இது சகஜம். இதெல்லாம் நிரந்தரமான சண்டை இல்ல. எல்லாத்தையும் விட்டுப் போட்டு நீயும் வேலைக்குப் போய் வா. புறப்படு'. கூறிவிட்டு அவ்விடத்தில் நில்லாமல் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். லதா தேநீரை மட்டும் குடித்தாள். உடையைச் சரிசெய்தாள். சிந்துவிடம் சென்றாள். சுpந்து அம்மா வேலைக்குப் போய்வாறன். ஆம்மம்மாவோட இருங்க. அம்மா கெதியாக வந்திருவன். சுரியா?.' கூறிக்கொண்டு அவளது தலையைதர் தடவிவிட்டாள். சிந்துவுக்கு இதமாக இருந்தது. வாஞ்சையோடு தாயின் சுடிதாரைப் பிடித்துக் கொண்டாள். மெதுவாக அவளது பிஞ்சு விரல்களை விலக்கிவிட்டு அந்த விரல்களில் ஒரு பொம்மையைத் திணித்து விட்டாள். சிந்து பொம்மையோடு மெல்ல எழுந்து நின்றாள். கைகளால் 'டாட்டா' காட்டினாள். லதா புறப்பட்டுப் போய் விட்டாள்.



'என்ன லதா இன்டைக்கு நேரத்துக்கே வீட்டுக்குப் புறப்பட்டாச்சு'? குரல்கேட்டு லதா திரும்பினாள். மாலதி புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள். தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். தெரியாத உலகத்தில் தெரிந்த முகத்தைக் கண்டதும் ஒரு நிம்மதியை உணர்ந்தாள். 'என்ன கடும் யோசினை'? தொடர்ந்து மாலதி கேட்டாள். 'ஓன்டுமில்லை. சிந்துவுக்குச் சுகமில்லை. மருந்தெடுக்கவும் இல்லை. அதுதான் நேரத்துக்குப் போகலாம் என்று வந்தன். ஆனால் இந்த வஸ் வந்தபாடில்லை'. லதா பதிலளித்தாள். கண்கள் வஸ் வரும் வீதியைத் துளாவின.
தூரத்தே அந்த வஸ் வந்து கொண்டிருந்தது. தனது சிந்தனையில் இருந்து விடுபட்டாள். மாலதியோடு சேர்ந்து பாய்ந்து ஏறிக்கொண்டாள். இருப்பதற்கு இருக்கை கிடைக்கவில்லை. ஐந்து கிலோமீற்றர் வரை நின்றே பயணித்தாள். அவளது உடல் வஸ்சில் இருந்ததேதவிர உள்ளம் சிந்துவைச் சுற்றியே வந்தது. தரன்மேல் கோபமாக இருந்தாலும், அவன் இன்று சாப்பிடாமல் வேலைக்குச் சென்றது அவளது உள்ளத்தில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. வஸ் தரிப்புக்களில் நிற்கும் போதும், புறப்படும் போதும் மனித உடல்கள் முட்டி மோதி உரைஞ்சி வெயர்வையோடு மனித வெப்பத்தையும், அதனால் ஏற்படும் வெயர்வை மணத்தையும் வஸ்சினில் பரவி விட்டிருந்தது. மனித வெக்கை பொல்லாதது. வேப்பமான உடல்கள் முட்டும்போது என்ன மாதிரி அவிச்சல் ஏற்படுகிறது. மூச்சுத்திணறலோடு பயணித்துத் தனது பயணத்தை முடித்துக் கொண்டாள். மாலதிக்குக் கையசைத்து விட்டு இறங்கினாள். நடந்து வீட்டுக் கேற்றைத் திறந்ததும், பாய்ந்து வீட்டினுள்ளே வந்தாள்.



'அம்மா! சிந்துவுக்கு இப்ப எப்படி இருக்கு? மருந்து எடுத்தீங்களா? காய்ச்சல் இப்பவும் இருக்கா? கேள்வி மேல் கேள்வி கேட்ட மகளுக்கு அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை. அவளைப் பார்த்துச் சிரித்தாள். அவளது போக்கு வித்தியாசமாக இருந்தது. எவ்வளவுதான் படித்திருந்தாலும் அவளும் சாதாரண பெண்தானே? 'நான் கேள்வி கேட்கிறன். பதில் சொல்லாமல் சிரிக்கிறீங்க'. லதா சடசடவெனப் பொழிந்து தள்ளினாள்.'காய்ச்சல் இருக்கா இல்லையா என்று போய்ப் பார்க்கிறதுதானே.' ஆம்மா பதில் சொல்லிவிட்டுத் தன் கடமையில் ஆழ்ந்து விட்டார். கையிலிருந்த பொருட்களை மேசைமேல் வீசி விட்டுச் சிந்து படுத்திருந்த அறையினுள் ஓடினாள். மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தாள். அவள் ஆடிப்போனாள். ஆப்படியே அசைவற்று நின்றாள். அவளது கண்களை அவளால் நம்பமுடியவில்லை. சிந்து தரனின் அணைப்பில் உறக்கத்தில் இருந்தாள். மெல்லச் சிந்துவைத் தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் இல்லை. வந்தது போலவே வெளியில் ஓடினாள். ஆம்மாவிடம் கேட்டாள். தரன் வேலைக்குப் போனதையும், உடன் திரும்பி வநது தாங்கள் மருந்தெடுத்து வந்ததையும் அம்மா கூறினார். அவள் தன்னை மறந்த நிலையில் நடந்தாள். அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டாள். அப்படியே கட்டிலில் சிலைபோல் இருந்து விட்டாள். அவளது கைகள் தரனின் கால்களைப் பற்றியிருந்தன. விழிகள் கண்ணீரில் மதந்தன. சூடான கண்ணீர்த் துளிகள் தரனின் கால்களில் விழுநது நனைத்தன. விழித்துக் கொண்ட தரன் லதாவை அன்போடு பார்த்தான். அவள் தேம்பி அழுதாள். தனது தவறுகளைக் கண்ணீரால் கழுவிக் கொண்டாள்.


லதா.. சின்னப் பிள்ளைபோல்..என்ன இது? அவனே அவளது முகத்தை ஏந்தித் துடைத்துவிட்டான்.நமது நிறைவான செல்வம் சிந்துதான். அதை நான் மறப்பேனா? காலையில் நடந்ததை கனவாக நினைத்துக் கொள். ஆறதல் கூறினான். அவனது மார்பில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுதாள். அவளை அப்படியே அணைத்துக் கொண்டான். லதாவின் உள்ளத்தில் தரன் விஸ்வரூபம் எடுத்திருந்தான். ஆண்கள் பொல்லாதவர்கள் இல்லை. ஆணும் பெண்ணும் சமமெனக் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை லதா புரிந்து கொண்டாள்.


யாவும் கற்பனை

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP