Friday, December 11, 2009

மாமனிதர்கள்.

ஆனந்தர் விசுக்கென்று சைக்கிளை விட்டிறங்கினார். விறுவிறென்று ‘கலைக்கூடம்’ அச்சகத்தினுள் நுழைந்தார். அவரைக் கண்டதும் உரிமையாளர் சங்கரர் எழுந்து வரவேற்றார்.“அட்டைப்படம் எப்படி இருக்குது பாருங்கள்.? தலைப்புக்கு ஏற்றவாறு பொருத்தமாக வந்திருக்கு. இல்லையா”? அட்டைப் படத்தையும், புத்தகத்தையும் சேர்த்துக் காட்டியவாறு நீட்டினார் சங்கரர். ஆனந்தர் அட்டைப் படத்தையும் புத்தகத்தையும் திருப்பிப் புரட்டி உற்றுப்பார்த்தார். அவரது கண்கள் சுழன்று துளாவின. புருவங்கள் நெற்றியைச் சுருக்கி உயர்ந்து பதிந்தன. தலையை ஆட்டிக்கொண்டார். சம்மதம் பரிமாறப்பட்டது. “இனி ஆகவேண்டியதைக் கவனியுங்கள். புத்தகங்கள் இன்னும் எண்ணி நான்கு நாட்களில் தந்து விடுவேன். ஞாயிற்றுக் கிழமைதானே வெளியீடு? புத்தக வெளியீட்டுக்கு அடுக்குப் பண்ணவேண்டியதுதான். விளம்பரத்தை நாளைக்கே தந்து விடுங்கள்.” அச்சக உரிமையாளர் சங்கரர் கூறிவிட்டார்.




சங்கரரின் அச்சகத்தில்தான் ஆனந்தர் தனது புத்தகங்களை அச்சிடக் கொடுப்பார். சங்கரருக்கும் ஆனந்தரின் குணாதிசயங்கள் தெரியும். சங்கரர் தனது பெயரைச் சங்கர் என்று குறுக்கிக் கொண்டார். ஆனந்தர் சிரித்தவாறே ஒன்று சொன்னார். “தம்பி சங்கரா நான் சொல்லுவதைக் கவனித்து யோசித்து முடிவை எடு. உன் அப்பா ஆசையாக உனக்கு வைத்த பெயர் சங்கரர். அதை நீ மாற்றலாமா?. யோசித்துப்பார். நாளைக்கு உன் மகன் இதைத்தானே செய்வான். இல்லையா? அப்பாவுக்குக் கொடுக்கும் மரியாதையைக் கொடு.” ஆனந்தர் சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஞானம் பெற்ற புத்தராகச் சங்கரர் மாறிவிட்டார். தப்பித் தவறி ‘சங்கர்’ என்று யாராவது சொன்னால் போதும். பொல்லாத கோபம் பொத்துக் கொண்டு வரும். அன்றிலிருந்து ஆனந்தின்; மேல் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுவிட்டது. அவரைக் காணும்போதெல்லாம் பயபக்தியாக மரியாதை செலுத்துவார். புத்தகத்தின் அமைப்புப் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்பதை அவரது புருவங்களும், முகபாவங்களும் தௌ;ளெனக் காட்டிவிடும். புத்தகத்தின் வடிவமைப்புப் பிடித்துக் கொண்டது. கொடுப்புக்குள் ஒரு சிரிப்பு. அவரது மனதுக்குள்ளே ஒரு துள்ளல். பார்த்து விட்டுப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார். சங்கரர் புரிந்து கொண்டார்.




“அப்ப..நான் வாறன்”. விடைபெற்றுச் சைக்கிளைத் தள்ளித் தாவி ஏறினார். சைக்கிள் ‘காற்று வேண்டும். காற்றை நிரப்பு அல்லது ‘றிம்’மை கல்லுடைக்கும்’ என்று அடம்பிடித்தது. வழியில் நண்பர் சிவாவின் கடையைக் கவனித்தார்.. சிவா ஆனந்தரின் அபிமான பால்ய நண்பன். வுhசகப்பிரியன். பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் அற்புதப்பிறவி. எந்தப் புத்தக வெளியீட்டிலும் சிவாவைச் சந்திக்கலாம். ஒரு சிறிய சைக்கிள் திருத்தும் கடையை நடத்துபவர். சிவாவின் கடையில் சசைக்கிளை நிறுத்தினார். ஆனந்தர் பெரியபதவியில் இருந்தபோதும் அவர்களது நட்புத் தொடர்ந்திருந்தது. “சிவா சைக்கிளுக்குக் காற்றுக் காணாது. காற்றடித்து விடு.” சைக்கிளை நிறுத்திவிட்டு நின்றார். “அதுக்குத்தானே நானிருக்கிறன்.” சிவா காற்றை ஏற்றியவாறே “என்னடாப்பா கனநாளாக ஆளையே காணல்ல. பென்சன்ல போனால் பேசாமல் வீட்டில இருக்கிறதா? ஓடியாடி வேலை செய்ய வேணும். இல்லாட்டி மகாகவி ‘பஞ்சலிங்கம் பென்சனிலே போனார், கொஞ்சநாளில், பஞ்சியாலே செத்துமே போனார்’. ;என்று பாடியமாதிரித்தான் வரும். சிரித்தவாறே பகிடியாய்ச் சொன்னார். சிவாவுக்கு ஆனந்தரின் செயற்பாடுகள் நல்லாத் தெரியும். “அது சரி.. ஏதும் விஷேசம் இல்லையோ”? பொறுப்புடன் வினாவினார்.




ஆனந்தர் ஒரு புன்னகையை வீசியவாறு “வழக்கம்போலத்தான். எனது பொழுது போக்குத் தெரியும்தானே? ஓரு புத்தகம் வெளியிடப்போறன். அதுவிசயமாகத்தான் அலையுpறன்.” ஆனந்தர் கூறினார். “அதுதானே பாத்தன் நல்ல விசயம்தான். நடக்கட்டும். புத்தக வெளியீட்டைக் கலாதியாக நடத்து. எனக்கும் அறிவித்துவிடு. நீ அறிவித்தாலும் அறிவியாவிட்டாலும் நான் கட்டாயம் வருவன்.” சிவா கூறிக்கொண்டே கடமையை முடித்தார். “இந்தா சிவா.. இதை வச்சுக்கொள்.” ஒரு பத்து ரூபாவை நீட்டினார். “எப்பவாவது நான் உன்னட்ட காசு வாங்கி இருக்கிறனா? நீ எத்தன புத்தகங்களத் தந்திருக்கிறாய். உன்ர காசை நீயே வச்சுக்கொள். என்ர கோபத்தக் கிளறாத”. பொய்க் கோபத்தோடு சைக்கிளை ஆனந்தரிடம் தள்ளினார். நன்றிகூறி தனது பஞ்சகல்யாணியில் தாவி ஏறினார். ஆனந்தரது சைக்கிளைக் கண்டால் “பஞ்சகல்யாணி வருகுது”. என்று சொல்லி ஓடி மறைபவர்களும் இருந்தார்கள். எப்போதும் ஆனந்தரின் தோளில் ஒரு பை தொங்கும். அதனுள் சில புத்தகங்கள் உறங்கும். தெரிந்தவர்களிடம் நீட்டுவார். காசு கொடுத்தால் வாங்குவார். அல்லது தனது குறிப்புப்புத்தகத்தில் குறித்துக் கொள்ளுவார். காசு வந்தால் கண்டு கொள்வார். இல்லையேல் பெயர்களைப் பார்த்து ஒரு அசட்டுச்சிரிப்பை உதிர்த்து விடுவார். சிவா எவ்வளவு விசுவாசம் உள்ளவன். அவனுக்கு எவ்வளவு பெரிய மனம். ஆனந்தருக்கு வழிநெடுகிலும் சிந்தனைதான். இம்முறை கலாதியாகப் புத்தக வெளியீடு செய்ய வேண்டும் என்று சிவாவும் சொல்லிப் போட்டான். பெரிய திட்டத்தை மனம் தயாரிக்கத் தொடங்கியது.




ஆனந்தருக்கு நிறையவே நண்பர்கள் இருந்தார்கள். தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள். அவருக்குத் தெரியாத இலக்கிய நண்பர்கள் இல்லை என்றே சொல்லலாம். அவரையும் தெரிந்தவர்கள் நிறையவே இருந்தார்கள். அவர் உயர்பதவியில் இருந்தபோது மதிப்பும் மரியாதையும் காட்டியவர்களை நினைந்து கொண்டார். அவர்களை நினைந்து நெக்குருகி நின்றார். நினையும்போதெல்லாம் நெஞ்சுருகி நினைவு கொண்டார். அவர்கள் சேவையில் இருந்தபோது நடந்து கொண்ட முறைகள், காட்டிய புரிந்துணர்வுகள் அவரை ஆட்கொண்டன. எனினும் மனிதர்களது மனங்கள் பொல்லாதவை. அடிக்கடி மாறுபவை. புதவியில் இருந்தபோது காட்டிய கரிசனை இப்போது இருக்காது என்பதையும் உணர்ந்தவர். பேசுவது ஒன்று. செய்வது ஒன்றாக இருக்கும் இந்த உலகத்தில் மனிதர்களது மனங்களும் வேறுபடும் என்பதை உணர்ந்திருந்தார். எனினும் அவர்களை மதித்தார். கண்டால் காணதமாதிரி ஓடி மறையும் இந்தக் காலத்தில் முதல் இருந்த மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து இருக்குமா? அல்லது கிடைக்குமா? அவர்களோடு தொடர்பு கொண்டு அவர்களது மனங்களை அறிய ஆவலானார்.




ஆனந்தர் ஒரு எழுத்தாளன். பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவருக்குப் பேராசை. அரச உயர் அதிகாரிகளையும், அரசசார்பற்ற அலுவலர்களையும், கல்வியியலாளர்களையும், அரசியலில் செல்வாக்குடையவர்களையும், தனவந்தர்களையும் ஒரே மேடையில் பார்க்க வேண்டும் என்ற பேராசை. அவருக்கு இந்த விபரீத எண்ணம் எப்படித் தோன்றியது. எதனையும் பரீட்ச்சித்துப் பார்க்கும் அவசரம் அவரிடம் இருந்தது. இம் மனிதமனங்களைப் படித்துப் பார்ப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் அலாதியானது. தனது இருபத்தைந்தாவது நூல் வெளியீட்டினை வித்தியாசமாக நடத்திப்பார்க்க எண்ணினார். கோலாகலமாக நடத்தி முடிக்காவிட்டாலும் இவர்களை ஒருசேரப் பார்த்தால் என்ன என்ற விசப்பரீட்சை எண்ணம் விசுவரூபம் எடுத்திருந்தது. அதனைச் செயற்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டார்.





வீடு சென்றதும் தொலைத் தொடர்பு இலக்கக்கோவையைத் தேடினார். அதனை எடுத்துத் தட்டினார். தூசி மண்டலம் பரந்தது. துண்டை எடுத்து முகத்தை மறைத்துக் கட்டிக் கொண்டார். வீடு அதிரும்படி தும்மினார். சும்மாவா சொன்னார்கள். ‘வீட்டைத் தூசி தட்டு வருத்தம் தானாகவே வரும்’ என்று. மனதுக்குள் எண்ணிக் கொண்டார். இந்தத் தூசு எங்கிருந்து வருகிறதோ தெரியாது. வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் புகுந்நு விளையாடுகிறது. தொடர்ந்து தும்மல் வாட்டி எடுத்தது. பக்கங்களைப் புரட்டி இலக்கங்களைத் தேடீ விரல்கள் விளையாடின. தொலைபேசியை தனதருகே நகர்த்தி எடுத்து ஒவ்வொரு இலக்கமாகச் சுழற்றினார். தொலைபேசியின் மறுமுனையிலிருந்து “ஹலோ” பெண்ணின் குரல் ஒலித்தது. “ஹலோ…நான் ஆனந்தர்.. மிஸ்டர் கீர்த்தி பிளீஸ் ..” பதிலுக்காகக் காத்திருந்தார். தொலைபேசியை ஓரு கை தாங்கிக் கொண்டிருந்தது. மறுகை பேனாவைத் தூக்கிக் கிறுக்கிக் கொண்டிருந்தது. மனம் படபடத்தது. சற்று அமைதியின் பின் தொலைபேசி ஒலித்தது. “அவர் குளித்துக் கொண்டிருக்கிறார். தாமதித்து எடுங்கள்”. தொலைபேசி வைக்கும் சத்தம் கேட்டது. அவரது முகம் சுளித்திருக்க வேண்டும். ஆனால் சுளிக்கவில்லை. வேறு இலக்கத்தைச் சுழற்றினார். “ஹலோ..” குரல் ஒலித்தது. உரையாடினார். தனது உள்ளக் கிடக்கையைச் சொன்னார். எதிர்முனையில் இருந்து “கண்டிப்பாக வருவேன். உங்களுக்கு இல்லாமலா? எப்போது நூல் வெளியீடு”.? கனிவோடும் கரிசனையோடும் வினா வந்தது. “எதிர்வரும் ஞாயிறு மூன்று மணிக்கு” நாளையும் இடத்தையும் கூறினார். “நல்லது. கட்டாயம் வருவேன்.” பதில் வந்தது. .சந்தோசத்துடன் குறித்துக் கொண்டார். அவரது கைகள் பல இலக்கங்களைச் சுழற்றின. தொலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. தெரிந்தவர்களது முகங்கள் மனதில் நிழலாடி வந்து போயின. அவர்களது இலக்கங்களைச் சுழற்றினார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு பட்டியலைத் தயாரித்தார். ‘பணி தொடரட்டும்’ என்று அனைவரும் வாழ்த்தினார்கள். வருவதாக வாக்களித்தார்கள். ஒரு அரைமணி நேரம் செலவழித்தார். மனதினிலே ஒரு தென்பு பிறந்தது.





ஒரு நூல் வெளியீடு என்பது சிறியதொரு விடயமல்ல. ஒரு திருமணம் நடத்துவதை விடவும் சிரமங்கள் அதிகம். நூல் வெளியிடு;ம் சந்தர்ப்பமும் முக்கியம். நூல் வெளியிடும் எழுத்தாளரது அந்தஸ்தைப் பொறுத்தும் நிகழ்வின் வெற்றி நிட்சயிக்கப்படும். சாதாரண எழுத்தாளரின் வெளியீடு என்றால் பெரும்பாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய கூட்டமே கூடும். அந்த நூல்வெளியீட்டு நிகழ்வுக்கு இருபத்தைந்து பேர்வரை வந்தார்களாயின் அது பெரியகதைதான். ஆனால் பெரும் பதவியில் இருப்பவரின் நூல்வெளியீடு என்றால் கூட்டம் பொங்கி வழியும். ஏதோ ஒரு சலுகையைப் பெற்றுவிடும் நப்பாசைதான் காரணம். ஆனந்தர் பதவியில் இருந்தபோது கூடிய கூட்டம் அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றதும் ஒதுங்கிக் கொண்டதையும் உணர்ந்தவர். நூலை அச்சிட்டபின் கடைகளுக்கும் தெரிந்தவர்களுக்கும் கொடுத்து விடுவார். வெளியீடே வைப்பதில்லை. எனினும் எழுதுவதை அவர் நிறுத்திவிடவில்லை. எழுதிக் கொண்டுதான் இருந்தார். அவரது மனதுக்குச் சிலர் தெம்பாக இருந்தார்கள். அவர்களை அசைபோட்டார். வாசிப்பதில் கரிசனை காட்டுபவர்கள் இருந்தார்கள். எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஆர்வமுடையவர்கள் இருந்தார்கள். எப்படி முகத்தை முறிப்பது? போய் முகத்தைக் காட்டிவிட்டு வரும் அன்பர்களும் இருந்தார்கள். “இவர்களுக்கு வேறுவேலை இல்லையா”? என்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். தலைமை தாங்குவதாக வாக்குக் கொடுத்து விட்டுத் தலைமறவாகி விடுபவர்களும், நூல் நயவுரை கூறுவதற்குப் பதிலாக தம்மைப்பற்றித் தம்பட்டம் அடித்து நூலாசிரியரை மட்டந்தட்டி விட்டுச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு வருபவர்களும் இருக்கத்ததன் செய்தார்கள். ஆனந்தர் இவற்றையெல்லாம் அனுபவமூடாகக் கண்டவர்தான். எந்த நூல்வெளியீடு என்றாலும் ஆனந்தர் பங்குபற்றத் தவறுவதில்லை. இவற்றையெல்லாம் தனக்குள்ளேயே எண்ணிச் சிரித்துக் கொண்டார். எனினும் இந்த நூல்வெளியீட்டை ஒரு சவாலாக ஏற்று இறங்கிவிட்டார்.





இப்போது ஆனந்தருக்குச் சிக்கல் வந்து விட்டது. தான் தொடர்பு கொண்டவர்கள், நேரில் கண்டு சொன்னவர்கள் அனைவரும், பெரும் புள்ளிகள். யாரைப் பிரதம அதிதியாகப் போடுவது?. இவர்களுக்கு எவ்வாறு விளம்பரத்தில் இடம் ஒதுக்குவது.? பெரும் சவாலை எதிர்கொண்டார். அவருக்கு உறக்கம் வரவில்லை. கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. உறக்கம் உடல் உழைப்பையும், களைப்பையும் போக்கி உயிரினத்துக்கு ஓய்வைக் கொடுப்பது. ஆனால் உறக்கம் இப்போது அவரைத் தனிமைப்படுத்தியது. பசி அவர்பக்கம் தலைகாட்ட மறுத்தது. பசிக்கவும் இல்லை. திக்குத் தெரியாத கடலில் நிலத்திணிவைத் தேடிப் பயணம் மேற்கொண்ட கொலம்பஸைப் போல் சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவர் மனம் பதைபதைத்தது. இருப்பதும், எழுந்து நடப்பதும், யோசிப்பதுமாக நேரம் கழிந்தது. இருண்ட மூளையில் ஒரு மின்னல் கீற்றின் உதயம் பளீச்சிட்டது. “குலுக்கல் முறைமூலம் தேர்ந்தெடுத்தால் என்ன”? வினாவும் விடையுமாக மனம் போராடிக் கொண்டிருந்தது. நிலத்தைக் கண்ட கொலம்பஸ் போல் சந்தோசித்தார். “வருவது வரட்டும்.” ஒரு குழந்தையைப் போல் துள்ளலான உற்சாகம் பிறந்தது. மனிதர்களை எடைபோட்டுப் பார்க்கும் விசப்பரீட்சை அல்லவா இது? அந்தப் படலம் தொடங்கியது. உசாராகிக் கொண்டார். விரைந்து எழுந்தார். விறுவிறு என்று மேசையின் பக்கம் சென்றார். வெற்றுத்தாளையும் கத்தரிக் கோலையும் தேடியெடுத்தார். தாளை எடுத்துச் சிறுதுண்டுகளாக நறுக்கினார். பலதுண்டுகளில் பெயர்களை எழுதினார். அவற்றை ஒரு வெற்றுப் பிளாஸ்ரிக் பாத்திரததி;ல் போட்டு மூடி வைத்தார். பலவற்றில் பிரதமஅதிதி, சிறப்பு அதிதி, கௌரவ அதிதி, முதற்பிரதி பெறுபவர்கள் என எழுதினார். அவற்றையும் வேறு ஒரு வெற்றுப் பிளாஸ்ரிக் பாத்திரத்தில் போட்டு அடைத்து மேசைமேல் வைத்தார். நிம்மதிப் பெருமூச்சை விட்டு நிம்மதியாக உலாவந்தார்.




தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை தொடரும் என்பார்கள். ஆனந்தர் எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் அதிகாலை நான்கு மணிக்கு விழித்தெழுந்து விடுவார். வெந்நீர் வைத்துக் குளித்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவார். தனது வேலைகளைத் தானே செய்யக் கற்றுக் கொண்டார். ஆனால் சமையல் பக்கம் போவதே இல்லை. ஒரு தேநீர் போடத்தெரியாத மேதை. மேதைகள் அப்படித்தானே? ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு தத்துவ ஞானி ஒரு சுவரில் இரண்டு துளைகளைப் போட்டார். ஒருதுளை பெரியது. மற்றையது சிறியது. அந்த மேதையைத் தேடி நண்பர் ஒருவர் வந்தார். வந்தவர் மேதையிடம் “ஒரு சுவரில் இரு துளைகளும் எதற்கு”? என்று கேட்டார். அவர் சொன்ன பதில் வந்தவரை ஆச்சரியத்துள் ஆழ்த்தியது. “எனது பெரிய பூனை செல்வதற்குப் பெரிய துளையும், அதன் குட்டி செல்வதற்குச் சிறிய துளையும் வைத்துள்ளேன்” என்றார். அதற்கு நண்பர் “இரண்டு பூனைகளும் ஒரு துளையூடாகச் செல்லலாம் அல்லவா”? என்றாராம். தனக்குள்ளேயே இந்தக் கருத்துக்களைச் சொல்லி ஆனந்தர் சிரித்துக் கொள்வார். கடமைகளை முடித்து வந்ததும் பேணிகளை எடுத்தார். தாளும் பேனாவும் தயாராக இருந்தது. தனது பேரக்குழந்தையை அழைத்தார். ஒரு பேணியில் கையை விட்டுத் துண்டு ஒன்றை எடுக்கச் சொன்னார். அந்தக்குழந்தை புன்னகையோடு எடுத்துக் கொடுத்தது. பெயரை எழுதிக்கொண்டார். அடுத்த பேணியில் உள்ள துண்டை எடுக்கும்படி கூறினார். குழந்தை சந்தோசத்துடன் எடுத்தது. பெயருக்கு எதிரே அதிதி வரிசைக்கிரமத்தை எழுதினார். குழந்தை விளையாடுவதை விரும்பியது. வுpளையாட்டு என்பது ஒரு கற்றல் செயற்பாடுதானே. துண்டுகளை எடுப்பதும் கொடுப்பதுமாக இருந்தது. எல்லாத் துண்டுகளும் முடிந்து விட்டன. ஆனந்தத்தாரின் பணி நிறைவேறியது. அதனால் நடைபெறும் விபரீதங்களையும் கற்பனை செய்து பார்க்கத் தவறவில்லை. வேறு வழியும் அவருக்குத் தெரியவில்லை.




விளம்பரத்தைத் தயாரித்தார் ஒரு பிரதியைத் தான் வைத்துக்கொண்டார். மறுபிரதியை அச்சகத்தில் ஒப்படைத்தார். அச்சக உரிமையாளர் சங்கரர் விளம்பரத்தைப் பாரவையிட்டார். தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். அந்தச் சிரிப்பில் அர்த்தம் இருந்தது. சங்கரரும் மனிதமனங்களை எடைபோடும் வல்லமை உடையவர். “ஐயா பெரிய புள்ளிகளைப் பிடித்துள்ளீர்கள். மாலையில் நோட்டீஸ் தயாராக இருக்கும். வந்தெடுத்துப் போங்க” என்றார். ஆனந்தர் அப்படியே புத்தகங்களையும் பார்வையிட்டார். திருப்தியாகினார். இரண்டு பிரதிகளையும் கையோடு ஒரு கட்டு மேலுறைகளையும் பெற்றுக் கொண்டு விரைந்தார். வீச்சாகச் சென்று முகவரிகளை எழுதத் தொடங்கினார். உறைகளை எழுதியதும் இலகுவாக விநியோகிப்பதற்கு ஏற்றவாறு தரம்பிரித்துக் கட்டினார். மாலை அச்சகம் சென்று விளம்பரங்களை எடுத்து வந்தார். விளம்பரங்களை மடித்து உறைகளில் திணித்தார். தான் நேரில் கொண்டு சென்று கொடுக்க வேண்டியவர்களது கட்டுக்களை வேறுபடுத்தினார். அவற்றை ஒருபுறம் எடுத்து வைத்தார். நண்பர் கங்கா ஒரு வித்தியாசமான பிறவி. ஒத்தாசை செய்ய முன்வந்தார். அவரிடம் விளம்பரங்களில் பலவற்றைக் கொடுத்து விட்டார். கங்கா சுயநலம் பாராது பொது வேலைகளில் ஈடுபட்டுழைப்பவர். பொதுநலவாதி. அவர் ஏழைகளுக்கும், அடிமட்டத்தில் உழலும் மக்களுக்கும் உழைப்பவர். இறைவனைக் காண்பதற்குக் கோயில்களுக்குச் செல்லவேண்டியதில்லை. ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் இறைவைனைக் காணலாம். என்று உழைப்பவர். அவர் சுறுசுறுப்பாக இயங்கினார். சேரவேண்டிய இடங்களுக்கு நோட்டீஸ் சேர்ந்து விட்டன. அதனை உடனுக்குடன் தெரியப் படுத்தினார்.




ஆனந்தர் முக்கியமான புள்ளிகளுக்குத் தானே நேரில் சென்று விநியோகம் செய்ய நினைத்தார். விளம்பரக் கட்டை எடுத்துப் பையினுள் நுழைத்தார். முதன்முதல் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பரிடம் விளம்பரத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலை மனம் தூண்டியது. தனது பஞ்ச கல்யாணியில் தாவிப் பறந்தார். தூரத்தே அந்தப் பெரிய கட்டிடம் எடுப்பாய் நிமிர்ந்திருந்தது. அவரது கண்கள் நாலைந்து பேர்நின்று கதைத்துக் கொண்டிருப்பதை கண்டுகொண்டன. அவரது நண்பரும் அதில் நின்றிருந்ததை அவதானித்து விட்டார். அவரது சைக்கிளைக் கண்டதும் அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். பஞ்சகல்யாணியை மரநிழலில் நிறுத்தினார். ஒன்றும் அறியாதவர்போல் உள்ளே செல்லக் கதவைத் திறந்தார். சிற்றூழியர் சுகந்தன் நந்தியைப் போலிருந்தார். அவர்தான் வரவேற்பாளர். யாவுமாகி நிற்கின்ற பரம்பொருளின் வலிமையோடு காட்சி தந்தார். ஆனந்தர் அவரின் பக்கம் சென்றார்.


“தம்பி ஐயாவைப் பார்க்கவேணும். ஒரு உதவிசெய்ய முடியுமா?” வெகுபக்குவமாய்த் தெரிவித்தார். “ஐயாவை இப்ப பார்க்கேலாது. இரண்டு மணிக்குத்தான் பார்க்கலாம்.” யாவுமாகி நின்றவன் பதிலைக்கேட்டு ஆனந்தர் பதறிப்போனார்.
“தம்பி ஆனந்தர் சந்திக்க வந்திருக்கிறார் என்ற செய்தியை மட்டும் கூறிவிடுங்கள். அது போதும்” அமைதியாகக் கூறினார். அவன் ஆனந்தரை ஏற இறங்கப் பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியாது.


“சரி அப்படி இரும். பார்த்து வாறன்.” வேண்டா வெறுப்பாக எழுந்து சென்றான். தான் வகித்த உயர்பதவியில் தனது சிற்றூழியர்களைத் தான் நடத்திய முறைகளை நினைந்து கொண்டார். சிற்றூழியர்களாக அவர்களை நினைக்கவில்லை. தன்னோடு சேவைசெய்யும் ஒருவராகவே கருதியவர். அந்தச் சிற்றூழியர்களது பண்பை நினைந்து கொண்டார். அதேவேளை யாவுமாகி நின்ற இந்தச் சிற்றூழியரது மனப்பாங்கையும் ஒப்பிட்டுப் பார்த்தார். தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். ‘மாற்றமாம் வையகத்தில்’ மாணிக்கவாசகரின் வரிகள் மனதைத் தொட்டன. போனவனை இன்னும் காணவில்லை. அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.




அந்தச் சிற்றூழியர் தாமதித்துத்தான் வந்தார். “ஐயா ‘பிசியாக’ இருக்கிறார். கொஞ்ச நேரத்தில கூப்பிடுவார்.” என்றான். தனது இருக்கையில் அமர்ந்து கிறுக்கிக் கொண்டிருந்தான். அவன் தனது வேலையில் ஆழ்ந்துவிட்டதாக நினைத்துக் கொண்டார். அந்த அதிகாரி ஒருமுறை ஆனந்தரிடம் வந்து உதவி பெற்றதை நினைந்து கொண்டார். அவர் வந்ததும் தாமதியாது வரவேற்று வந்த விடயத்தை முடித்து அனுப்பியதையும் மனங்கொண்டார். எல்லாம் காலத்தின் கோலம்.



சற்று நேரத்தில் மணியொலித்தது. சிற்றூழியர் எழுந்து போய் கதவைத் திறந்தான். உள்ளே போன கையுடன் வெளிவந்தான். “ஐயா கூப்பிடுறார். போங்க” என்றான். ஆனந்தர் விளம்பர நோட்டீஸ் இருந்த உறையைக் கையிலெடுத்தார். எழுந்து நடந்தார். மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே சென்றார். அந்த நண்பரான அதிகாரி ஓரு முறுவலோடு “வாங்க” வரவேற்றார். வணக்கம் சொல்லி கையிலிருந்த கடித உறையை நீட்டினார். அதனைப் பெற்றுத் திறந்தவாறே “புத்தகம் கொண்டு வரல்லையா”? என்றார். “வெளியீடு ஞாயிற்றுக்கிழமை. அன்றுதானே புத்தகம் பெறலாம். முதற்பிரதியை நீங்கள்தான் பெறவேண்டும்.” அமைதியாகச் சொன்னார். அந்த அதிகாரியின் கண்கள் நோட்டீஸில் நிலைகுத்தித் தனது பெயரைத் தேடியதை ஆனந்தர் கண்டுகொண்டார். அவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. அந்த அதிகாரியின் உதடுகளில் அசட்டுச்சிரிப்பு நெளிந்ததை ஆனந்தர் அவதானித்தார். தனக்கு முக்கிய இடம் கிடைக்கவில்லை என்பதை அந்த அசட்டுச்சிரிப்பு கட்டியம்கூறிக் கொண்டது. நோட்டீசை மேலோட்டமாகப் பார்த்து மடித்து தனது டயறிக்குள் வைத்தார்.

“ஞாயிறு நாலுமணிக்கு.... என்ன...? சரியான வேலை இருக்கு.... வரப்பார்க்கிறன்.” இழுத்தார்.

“என்ன வரப்பார்க்கிறன்… கட்டாயம் வரவேண்டும். உங்களக் குழப்ப விரும்பவில்ல. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். அப்ப நான் வாறன்.” எழுந்து வெளியில் வந்தார். அவர் போவதையே வைத்தவிழி வாங்காது பார்த்தார் அந்த அதிகாரி. அவரது உதடுகளில் ஒரு நமட்டுச் சிரிப்பு வழிந்தோடியது. “என்ர பதவியென்ன? நான் போய் சிறப்புப் பிரதி பெறுவதா? சரியான அசட்டு முட்டாள்தனம். இவருக்கு ஒரு புத்தக வெளியீடு.” மனதுக்குள் முணுமுணுத்தார். மேசையில் ஓங்கிக் குத்தினார். முன்னால் இருந்த மணியை அழுத்தினார். அது ஒலித்தது. சிற்றூழியர் உள்ளே ஓடினான். “போய் கன்ரீன்ல ரீ வாங்கிவா” அவன் வெளியே போனான்.




ஆனந்தருக்கு மெல்லக் கேட்டது. இவர் வரப்போவதில்லை என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. சைக்கிளைத் தள்ளினார். கால்கள் பெடலை மிதிக்கவும் சில்லுகள் உருண்டன. பல அலுவலகங்களையும் அனுபவங்களையும் கண்டுகளித்து அனுபவித்தார். ‘பிரச்சினைகளை சகித்துக் கொள்ளாமல். ஏதிர்கொண்டு சமாளியுங்கள்’ என்று பெஞ்சமின் பிறாங்கிளின் சொன்னதை நினைவுபடுத்திக் கொண்டார். இலக்கியகாரர் இழிச்சவாயர்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு. பதவி இன்றுவரும். நாளை போகும். நான் வகிக்காத பதவியா? வாறவர் வரட்டும். இவர்கள் வராவிட்டால் புத்தக வெளியீடு நடக்காதா? விறுவிறுவென்று வீட்டுக்குப் போனார். ஆயத்தங்களில் மும்முரமாக ஈடுபட்டார். அவருக்கென்றொரு கூட்டம் இருந்தது. கங்காவும் நவமும் சுழன்றார்கள். அவர்கள் வேண்டிய உதவிகளைச் செய்தார்கள். ஆயத்தங்கள் நடைபெற்று முடிந்தன. பொழுது புலர்ந்தது. ஞாயிறு காலை ஆனந்தரின் தொலைபேசி ஒலித்தது. எடுத்தார். அவர் பேசமுன்னமேயே குரல் ஒலித்தது. “எனக்கு மிக அவசரமான வேலையிருக்கு. வரேலாது. குறைநினைக்க வேண்டாம். வைக்கிறன்.” அடுத்து மணி ஒலித்தது. ஒரு குரல் ஒலித்தது. “இப்பதான் கொழும்பில இருந்து ‘கோல’; வந்தது. அவசர மீற்றிங் இருக்காம். இப்ப வெளிக்கிடுறன். குறை இல்லையே”? தொலைபேசி வைக்கும் சத்தம் கேட்டது. இந்த நவீன அரிச்சந்திரப் போலிகளை நினைத்தார். ஆனந்தர் வாய்விட்டுச் சிரித்தார். சரியாக நாலு மணி. வெளியீட்டு விழா தொடங்கியது. ஆனந்தர் எழுந்து நின்று மண்டபத்தைப் பார்த்தார். மண்டபம் நிறைந்திருந்தது. முதன்மை அதிதி, விஷேட அதிதிகள் மலர் மாலைகளோடு இருக்கைகளில் அலங்கரித்தனர். ஏனைய அதிதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு வரிசை இருக்கைகள் வெறிச்சோடிக் கிடந்தன. விழா முடியும்வைரை அவை அந்த மனிதர்களுக்காகக் காலியாகவே காத்திருந்தன. ஆனந்தரின் கண்கள் ஒரிடத்தில் நிலைக்குத்திச் சுழன்று நின்றன. அங்கே ஒதுக்குப்புறமாக சிவா புன்னகையோடு இருப்பதைக் கண்டார். ஆனந்தரின் பிடரியில் யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்ததுபோல் இருந்தது. தான் சிவாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கமறந்ததை இப்போதுதான் உணர்ந்தார். “நீ எனக்கு அழைப்பிதழ் தராவிட்டாலும் நான் வருவன்” சிவா அன்று சொன்னது நினைவில் வந்தது. சிவா விஸ்வரூபமாகத் தெரிந்தான். அவரது கண்களில் நீர் கட்டியது.



யாவும் கற்பனை.

1 comments:

முல்லை அமுதன் January 20, 2011 at 7:48 PM  

nalla karpanai.
innum ezhuthungkal.
nadpudan.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP