Monday, December 14, 2009

சௌந்தரம்மா

அந்தப் பத்திரிகையினைக் கையில் எடுத்துக் கொண்டு மூக்குக் கண்ணாடிக் கூட்டைத் தேடினேன். வயது போனால் நினைவுகளும் மறந்து போகுது. வைத்த இடம் நினைவில் இல்லை. “சுலக்சி’ பேரக்குழந்தைக்குக் குரல் கொடுத்தேன். முதுமை பொல்லாத கொடுமையை அனுபவிக்கச் செய்கிறது. மிகவும் அவதானமாகச் செயற்பட்டால் தப்பித்துக் கொள்ளலாம்.. அல்லது சங்கடத்தில் சிக்கிக் கட்டிலில் சாய்த்து விடும். எப்படித்தான் உடல் முதுமையடைந்தாலும் இந்த உள்ளம் மட்டும் என்றும் இளமையாகவே இருக்கிறது. இருந்து துள்ளுகிறது. அதன் வேகத்துக்கு உடலால் ஈடுகொடுக்க முடியவில்லை. என்றும் பசுமையையே விரும்புகிறது. எனது பேரக்குழந்தை சிரிப்போடு கண்ணாடியைத் தந்தாள். கண்ணாடியை முகத்தில் பொருத்திக் கொண்டு பத்திரிகையை விரித்துப் படிக்கிறேன். பக்கங்கள் புரண்டன. ஒரு இடத்தில் என் கண்கள் நிலைக்குத்தி நின்றன. நன்றாக விழிகளைத் திறந்து கண்ணாடியை மேலும் கீழும் அசைத்துப் பார்க்கிறேன். அந்தப் படம் என்னை ஆட்டியசைத்து விட்டது. அது சௌந்தரம்மாவின் படம். படத்தின் கீழ் “அம்மம்மா உங்கள் நினைவு எங்கள் மனதில் நிறைந்திருக்கும்.” பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் நினைவுகூர்ந்திருந்தார்கள். உள்ளம் உளைந்து பழைய நினவுகளில் மூழ்கி மூச்சிரைத்து நிமிர்கிறது. சுமார் அறுபத்தைந்து வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நினைவுகள் ஒளிந்து ஓடிப்பிடித்து எட்டிப்பாரத்து அலைமோத வைக்கிறது. அந்த நினைவுகளின் ஆதர்ஷண சக்தியால் உந்தப் பட்டு நாடி நரம்புகள் விறுவிறுத்து பெருமூச்சாகி நெஞ்சாங்கூட்டை அமுக்கி உயர்த்தி எம்பிப் பறந்தது.




ஒரு பொருள் நமது பக்கத்தில் இருக்குமட்டும் அதன் அருமை பெருமைகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இல்லாதபோது அதன் அருமை புரிகிறது. நிலையில்லாத மனிதவாழ்வில் எத்தனை தளம்பல்கள். கடலில் காற்று வீசி அலைகளை எழுப்பி கரையை உடைப்பது போல் வாழ்கையிலும் துன்பங்களும். துயரங்களும். இழப்புக்களும் வீசி சந்தித்துக் காலத்தோடு கரைந்து போகின்றன. பலரோடு சேர்ந்திருந்து பழகி பிரிந்தபின்தான் அவர்களது அருமை பெருமைகள் மனதில் குந்தியிருந்து விளையாட்டுகளைக் காட்டும். அவர்களோடு கழித்த நாட்கள் நினைவுச் சுழியில் சிக்கிச் சுழலும். சௌந்தரம்மாவின் நினைவலைகள் மனக்கடலை துளாவி எண்ணக்குமிழிகளை ஊதி எனக்குப் பூச்சாண்டி காட்டியது. சௌந்தரம்மாவின் படத்தைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவவின் இளமைக்கால உருவம் உருண்டு திரண்டு மனக் கண்முன் நின்றது. எத்தனை அழகு. சின்னவயதிலேயே “அம்மம்மா நீங்க நல்ல வடிவு. சௌந்தரம் என்றால் அழகு என்று வகுப்பில சொல்லித்தந்தவங்க” என்று சொன்னேன். அவவின் அந்தச்சிரிப்பு அற்புதமானது. இரு கன்னங்களிலும் குழிகள் விழ ஒரு புன்னகை எறிந்த காட்சி இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த உருவத்தையும் பத்திரிகையில் உள்ள படத்தையும் உற்று நோக்கினேன். அன்றைய அழகிய உருவம் படத்தில் இல்லை. மாற்றம் என்பது இதுதானா? கட்டுடல் தளர்ந்து தோல்சுருங்கி கண்கள் குழிவிழுந்து புலனைந்தும் பொறிகலங்கி…. நிலைதடுமாறி… சே… என்ன பிறவியிது? இன்றிருக்கும் உடல் நாளைக்கு மாறியிருக்கும். அதுதானே நம்மவர்கள் உருமாறிக்கொண்டு செல்லும் உடலுக்கு மெய்யென்று சொன்னார்கள். எனது கண்களில் கண்ணீர் குளங்கட்டி உடைந்து நெஞ்சுச் சட்டையை ஈரமாக்கியது.




எனக்குப் பசுமையான நினைவாக அது பதிந்து விட்டிருந்தது. அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். ஒருநாள் எங்கள் வீடு அதிர்ந்து கொண்டிருந்தது. “எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிசம் இருக்கக்கூடாது. வெளிக்கிடுங்க” அப்பாவின் குரல் ஆவேசமாகப் பறந்தது. வீட்டில் இருந்த சாமான்கள் வெளியில் வீசப்படுவதை அவதானித்தேன். இவர்களுக்கு என்ன நடந்து விட்டது? நானும் தம்பியும் சுண்டெலிகளாக நடுங்கிக் கொண்டிருந்தோம். அப்பா திடீரென வெளியில் போனார். போனது போல் வீச்சாக வந்தார். மூட்டை முடிச்சுக்கள் தயாராகின. இரண்டு மூன்று சாக்குகள் நிரம்பின. எங்கள் உடமைகள் அதனுள் தஞ்சமாகின. அவற்றை அப்பாவின் தலை சுமந்தன. இரண்டு மூன்று முறை அப்பாவின் தலையில் அவை ஏறின. வெளியில் போய்வந்தார். “ சரி வாங்க” என்றார். புறப்பட்டோம். இப்போது அப்பா முன்னே விறுவிறு என்று நடந்தார். அம்மா அழுது கொண்டு பின் தொடந்தார். சின்னஞ்சிறிசுகள் நாங்கள். சின்னச் சின்னச் சாமான்களைக் கைகளில் எடுத்து அவர்களின் பின் நடந்தோம். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன நடந்தது? ஏன் போகிறோம்.? ஓன்றும் புரியவில்லை. “அவர்ர அட்டகாசம் அவருக்குத்தான் பெரிசு. என்னட்டையும் காட்ட வந்திட்டார். நான் பொறுக்க மாட்டன்” அப்பா கோபாவேசமாக இருப்பது புரிந்தது. “அவன் தெரிஞ்சா செய்தவன். இதற்கெல்லாம் போய்…” அம்மா முடிக்கல்ல. “வாயப் பொத்திற்று வா.” அப்பா கொதித்தார். அம்மா ஒன்றும் பேசவில்லை. மாமாவைத்தான் குறிப்பிடுகிறார் என்பது மட்டும் புரிந்தது.





எங்கள் மாமா மயில்வாகனம். மிகவும் பொறுமைசாலி. எங்கள் மேல் அளவு கடந்த பாசம் கொண்டவர். ஆனால் அநீதியென்றால் இராமனின் கோதண்டமாக மாறிவிடுவார். அனியாயத்தைத் தட்டிக் கேட்டாராம். அதனை அப்பா “உனக்கேன் இந்த வீண்வம்பு” என்று கேட்கப் போய் வில்லங்கமாகி இந்த நிலை வந்ததாக உணர்ந்து கொண்டோம்.. “என்னண்டாலும் நீங்க பொறுமையாக இருந்திருக்கலாம்.” அம்மாவின் குரல் தளதளத்தது. “நீ வாயை மூடிக்கொண்டு வா. எனக்கு மானம்தான் முக்கியம்.” அப்பா கடுகடுத்தது நினைவிருக்கிறது. “அப்பா நாங்க எங்க போறம்.” தம்பி இடையில் குறுக்கிட்டான். “டேய்.. சின்னவன் நம்மட சௌந்தரம்மா வீட்டுக்குப் போறம்.”. அப்பாவின் குரல் அந்தக் கும்மிருட்டில் ஒலித்தது. “டேய் அண்ணா நம்மட சௌந்தரம்மா வீட்டுக்குத்தான் போறம்.. எனக்குச் சந்தோசமாக இருக்குது.” தம்பி குதுகலத்துடன் கூறினான். என் ஆச்சி, அப்புவை விட்டுவர எனக்கு மனமில்லை. மனம் இடம் கொடுக்கவில்லை. எனக்கு அழுகை வந்தது. அவர்கள் பின்னால் நடந்தேன். அன்று பகல் தொடக்கம் சாப்பாடு ஒன்றுமில்லை. அதோ குப்பி விளக்கொளி தெரிகிறது. சௌந்தரம்மா வாசலில் குப்பி விளக்கோடு காத்திருந்தார். பக்கத்தில் முத்துக்குமார் ஐயா நின்றிருந்தார். எங்களைக் கண்டதும் “போய் கைகால் கழுவி வாங்க சாப்பிடுவம்.” அன்பும் ஆதரவும் கலந்து கட்டளையிட்டார்கள்;. சௌந்தரம்மாவின் பார்வை என்னை வசீகரித்து விட்டது. நெத்தலி மீன் தீயலுடன் அவர் தந்த சாப்பாடு இன்னும் ருசிக்கிறது.





எங்கள் குடும்பம் சௌந்தரம்மா வீட்டில் குடிவந்து பல நாட்களாகி விட்டன. மிகவும் அந்நியோன்யமாகி விட்டோம். அந்த வீடு ஆலங்கேணியில் விநாயகர் ஆலயத்துக்கு முன்வாசல் பக்கமாக மேற்குத் திசையில் செல்லும் தெருவில் இருந்தது. தெரு உப்புநீர் சிற்றாறு ஊர்ந்து வரும் பக்கமாக ஓடி ஒட்டி உறவாடும். உப்புநீர் பரவி சிற்றாற்றில் ஓடும். சின்னச்சின்ன மீன்களும் சேர்ந்து ஓடும். அந்த ஓட்டத்தில் மெல்லிய நுரை தோன்றி கரையில் உடையும். கண்ணா மரங்களில் பறவைகளும், சிள்வண்டும் இசையெழுப்பிப் பாடும். கரையை ஒட்டினாற்போல் தென்னைகள் தலையவிழ்ந்து ஆடும். கூடவே பனைகள் ஒலியெழுப்பிக் கலகலக்கும். அவற்றின் ஊடாகப் பார்த்;தால் சமாவைத்ததீவு தெரியும். அப்பால் வைரமுத்தப்பாவின் சல்லிக்களப்புத் தோட்டம் தெரியும். பூவரசந்தீவில் நல்லையரின் தோட்டம், அப்பால் வண்ணான்வயல் விரிந்து கிடக்கும். அங்கு செல்லனின் துணிகாயவைக்கும் கொடிகள் அசையும். ஒரு அற்புதமான காட்சி பரந்து இருந்தது. சௌந்தரம்மாவின் வீடு ஒரு பழங்காலத்து பெரிய வீடு. வீட்டை ஒட்டினாற்போல் முன்புறமாக ஒரு பெரிய மண்டபம். அந்த மண்டபம் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. முன் அறை யார் வந்தாலும் அமர்ந்திருந்து பேசுவதற்காகப் பயன் படுத்தப்பட்டது. அதுதான் கூத்துப் பழகும் களரியாக விளங்கியது. அங்கு ஒரு சாய்மனைக் கதிரை, ஒரு பலகை பரப்பிய கட்டில், இரண்டு நீண்ட வாங்குகள், சில பாய்கள் இருந்தன. மாலையானதும் அந்த மண்டபம் களை கட்டும். சமாவைத்ததீவில் இருந்து வடிவேலர், பொன்னையர், குமாரசாமி என்று ஒரு பட்டாளமே வரும். நடுச்சாமம் வரை ஆட்டம் பாட்டம் நடக்கும். அண்ணாவி தாமோதரத்தாரும், பத்தினியரும் சேர்ந்து கூத்துப் பழக்குவார்கள். ஊரிளைஞர்கள் கூடியிருந்து கூத்தாடுவார்கள். சார்மனைக் கதிரையில் முத்துக்குமார் கால்மேல் கால்போட்டிருந்து ரசிப்பார். சௌந்தரம்மா பக்கத்தில் இருந்து மெய்மறந்து ரசிப்பார். நாங்கள் தூங்கி விழுந்து ரசிப்போம். சிலவேளை அழுதுமிருக்கிறோம்.




இரண்டாவது அறை களஞ்சிய அறையாகப் பயன்படுத்தப்பட்டது. அந்த இரண்டாம் அறை அற்புதமானது. அறையினுள் நெற்பட்டறை இருக்கும். நெல்லைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் முறை அது. வைக்கோலை இதமாக வைத்து, வைக்கோல் புரியை வளையமாகச் சுற்றி அதனுள் நெல்லினைச் சொரிந்து பட்டறை காட்சிதரும். பட்டறை அந்த அறையின் மூலைகளை மட்டும் விட்டு வைத்திருக்கும். அவ்வளவு அகலமானது. பட்டறையின் உயரம் அந்த அறையின் முகட்டைத் தொட்டு நிற்கும். பட்டறை நிறைந்து நெல் குவிந்திருக்கும். பட்டறைமேல் ஏறிப்பார்க்க ஆசைதான். சௌந்தரம்மா ஏசுவார் என்ற பயம் இருந்தது. ‘ஒருநாளைக்கு ஏறிப்பார்க்க வேணும்’. மனதில் அந்த எண்ணம் குடிகொண்டு விட்டது. மண்டபத்தை ஒட்டினாற்போல் அடுக்களை இருந்தது. அடுக்களை எப்பொழுதும் தூய்மையாக இருக்கும். சாணமும், களிமண்ணும் சேர்ந்த கலவையால் மெழுகிச் சில்லுக்காயினால் அழுத்தித் தேய்த்துப் பளபளவென்று இருக்கும். வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்கும். பானை சட்டி சரிந்து விழாதிருக்க களிமண்ணினாலான மேடையில் திருகணிகள் செய்யப்பட்டிருக்கும். அத்திருகணிகளில் சமையற்பாத்திரங்கள் அழகாக அடுக்கி இருக்கும். சமையல் முடிந்ததும் வரிசையில் வைக்கப்படும். சோறு சமைத்து முடிந்ததும் சோற்றுப்பானையை இறக்கி பானையின் வெளிப்புறத்தைக் கழுவி தனது மூன்று விரல்களால் திருநீற்றை அள்ளி பானையின் மூன்று பக்கம் சாத்துவார். “அம்மம்மா சோற்றுப் பானையைக் கழுவி ஏன் திருநீறு போட்டனீங்கள்.” கேட்டுவிட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தேன். “ஓ..அதுவா”? “அது சோற்றுப் பானைக்குக் கொடுக்கும் மரியாதை. அருவமும் உருவமும் இல்லாத சிவனின் திருவுருவமாகக் காட்சி தருவது சோற்றுப்பானை. இறைவன் நமக்குப் படி அளக்கிறான். அவன் அளந்து தந்த அமுதம் பானையில் இருக்கு. அதற்கு மரியாதை செய்யவேணும். அதனால் அவனை நினைவில் கொள்ளவேண்டும். அதற்காகத்தான் இதெல்லாம்” என்பார். அப்போதெல்லாம் எனக்கு அதன் பொருள் தெரியாது. பெரியவனாக முதிர்ச்சியடைந்த பின்னர்தான் அதன் பொருளும் நமது பண்பாடும் புரிந்தது.




அந்தப் பண்பாடும் வழக்கமும் இன்று நமது பெண்களிடம் இல்லாது போய்விட்டது. அதனையிட்டு எண்ணும்போது கவலைதான். உணவு உண்டபின் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து அடுக்கி வைத்துவிட்டு உணவு உண்ட இடத்தினைப் பெருக்கி அடுக்களையினை மூடியபின்தான் சௌந்தரம்மா ஓய்வாக இருப்பார். மூன்று வேளையும் இப்படியேதான் செய்வார். “உண்டபின் சுத்தம் செய்யாது விட்டால், திண்ட இடம் நம்மைத் திட்டும்” என்பார். இரவில் இரண்டு பேர் உண்ணக்கூடிய உணவு பானையில் இருக்கும். யாராவது வீட்டுக்கு வந்து விட்டால் ‘பசி தீர்க்க’ உணவளிக்கும் இல்லத்தரசி அவர். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் யாராவது வீடு தேடி வருபவர்களைச் சாப்பிடுங்கள் என்று கொடுத்து மகிழும் பண்பை அவர் கொண்டிருந்தார்.




ஒருநாள் பள்ளிவிட்டு வருகிறேன். கோழி கொக்கொக் எனக் கொக்கரித்துக் கொண்டிருந்தது. சௌந்தரம்மா எனக்காகக் காத்திருந்ததை உணர்ந்தேன். “டேய் அருள்… நம்மட கோழி பட்டறையில் முட்டை விட்டிருக்கு. முதலில் சாப்பிடு. பிறகு பட்டறையில் ஏறி முட்டையை எடுத்துவா.” சௌந்தரம்மா கட்டளையிட்டார். பட்டறையில் ஏறக் காத்திருந்த எனக்குச் சந்தோசம் வீட்டின் முகட்டில் குடிகொண்டு இருந்தது. விண்வெளியில் விண்கலத்தில் தாவி ஏறுவது போன்ற பிரமை. புத்தகங்கள் எங்கு வீசப்பட்டதென்று தெரியாது. பட்டறைப் புரிகளில் காலை வைத்துப் பற்றிப்பிடித்துத் தாவியேறிவிட்டேன். ”டேய் கவனம்.. சாப்பிட்டுவிட்டு ஏறிப்பார் என்றுதானே சொன்னனான். அதற்குள் ஏன் ஏறினநீ.? விழுந்திருவாய். கவனம்.” சத்தமிட்டவாறு நான் ஏறுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். நான் பட்டறையில் உலாவந்தேன். எனக்குச் சந்திரனில் நடக்கிற அனுபவம் தட்டியது. வீட்டின் முகட்டில் பட்டறை முட்டியிருந்தது. பட்டறை நிறைந்து நெல் சிரித்தது. என்னைக் கண்டதும் சேவலொன்று அங்கிருந்து சத்தமிட்டுப் பறந்தோடியது. “அம்மம்மா இங்கயிருந்து சாவல்தான் பறந்தோடுது. முட்டையக் காணல்ல” “நல்லாப் பார்” அவவிடமிருந்து சத்தம் வந்தது. வைக்கோலை நீவிப் பார்க்கிறேன். முட்டைகள் என்னை முழுசிப் பார்த்தன. தங்கச் சுரங்கத்தில் வெண்கற்களாக முட்டைகள். ஓன்று இரண்டு …எத்தனை.. ஒரு பத்து இருக்குமா? சந்தோசத்தால் “அம்மம்மா ஒரு பெட்டி தாங்க… முட்டை கனக்கக் கிடக்கு.” சத்தமிட்டேன். “இந்தக் கோழிக்கு இடமில்லையென்டா அங்க போய் முட்டை விடுது.”? கோழிக்கு ஒருபாட்டம் ஏச்சு விழுந்தது. சௌந்தரம்மாவுக்குக் கோபம் வருவதில்லை. வந்தால் ஒரே புறுபுறுப்புத்தான். முட்டைகளைப் பத்திரமாக் கொடுத்தேன். எனது தலையைத் தொட்டுத் தடவி” கெட்டிக்காரன்” என்றார். என் உச்சி குளிர்ந்தது.




வளவின் மூலையில் பெரியதொரு புளியமரம். அந்த மரம் நிறைந்து பறவைகள் கூச்சலிடும். என் கையில் சுண்டுவில் இருக்கும். சட்டைப்பை நிறைய களிமண்ணைக் குழைத்து உருண்டையாகச் செய்து வெயிலில் காயவைத்த உருண்டைக் களிக்கற்கள் இருக்கும். நானும் ஒருகுருவியையாவது அடிக்கலாம் என்று முயன்றுதான் பார்த்தேன். அது முடியாது போயிற்று. “டேய் பாவம்டா குருவி நமக்கு என்ன தீங்கு செய்யுது.? அதுகளுக்கு அடிக்காத” அடிக்கடி புத்திமதி சௌந்தரம்மா சொல்லுவா. புளியங்கிளையில் தாவியேறித் தொங்குவது சுகமாயிருக்கும். கிளை முறியாது வளைந்து கொடுக்கும். “மரத்தில ஏறி விழுந்து கையக்கால முறிச்சுப் போடாத” புறுபுறுப்புத் தொடங்கும். காலையில் புளியம்பூ முற்றமெல்லாம் சொரிந்து கிடக்கும்.. இலையும், பூவும். பிஞ்சும் மண்ணோடு சேர்ந்து அழகூட்டும். அவற்றைக் கொஞ்சநேரம் பார்த்து ரசிப்பார். பிறகு அவற்றைக் கூட்டிப் பெருக்கி அள்ளி குழியில் போடுவார்.. “என்ன அழகான பூக்கள். கொத்துக் கொத்தாய். அங்க பார். பிஞ்சு தொங்குது.” அவவுக்கு எல்லாவற்றிலும் ஒரு ரசனை இருந்தது. சௌந்தரம்மா பெயருக்கேற்றவாறு தங்கத்தின் நிறத்தில் யொலிப்பார். எந்த நேரமும் ஒரு புன்னகை அவரது இதழ்களில் நெளிந்து கொண்டே இருக்கும். அதிகாலை தலைக்கோழி கூவுமுன்னே எழுந்து குளித்து வேலைகளை முடித்து, சோற்று முடிச்சையும் கட்டி வைத்திருப்பார். முத்துக்குமார் ஐயா கண்டற்காடு வயல்நோக்கிப் புறப்பட்டு விடுவார். அவர் போவதையே பார்த்திருப்பார். அவரோடு அயல்கிராமத்து வயற்காரர்களும் சேர்ந்து கதையளந்து செல்வார்கள். நடையில் செல்வார்கள். அல்லது மாட்டு வண்டியில் செல்வார்கள்.




கண்டற்காட்டின் நிலப்பரப்பு, பெட்டைக்குளம், வைராவெளி, ஊர்க்குளம் என விரிந்து கிடக்கும். கணவர் வரும்வரை பம்பரமாய்ச் சுழன்று வீட்டு வேலைகளைக் கவனிப்பார். முத்துக்குமாரின் அண்ணன் செல்லையா நல்லாச் சாத்திரம் சொல்வார். “ பிள்ள சௌந்தரம்.. நீ இருந்து பார்….இவன் அருளன் நல்ல ராச உத்தியோகத்தில இருப்பான்.
“ அவன் படிக்கிற படிப்புக்கு எங்கட மாட்டத்தான் மேய்ப்பான்” எனது அம்மா சொல்லுவா. “அதையிப்பவும் செய்யிறான்தானே. நீங்க பாருங்க. .இந்தச் செல்லையாச் சாத்திரி சொன்னால் சொன்னபடி நடக்கும்.” செல்லையர் சொல்லிப்போட்டு நடையைக் கட்டினார். அவர் பெரிய புள்ளகுட்டிக்காரர். அவரது மனைவி இறந்ததும் தனிக்கட்டையாகி பிள்ளைகளைக் கவனிப்பதில் கரிசனம் காட்டினார். ஆனால் பிள்ளைகள் ‘குஞ்சியாத்தை’ என்று சௌந்தரம்மாவையே சுற்றி வந்தனர். உணவும் உறைவிடமும் கொடுத்து அவர்களை ஆதரித்தார். பற்றாக்குறைக்கு அவரது ஒன்றுவிட்ட தங்கையின் பிள்ளைகளும் வீட்டை நிரப்பியிருந்தனர். அவர்களையெல்லாம் குறைவில்லாது பார்த்துக் கொண்டார்.





சௌந்தரம்மா தனது பிள்ளைகளாகவே எல்லோரையும் நினைத்தார். பகல் உணவு பெரிய அண்டாவில் வேகும். சமையல் முடிந்ததும் தட்டுகளில் பரிமாறுவார். “என்ன வேணும்? இன்னும் கொஞ்சம் போடட்டா? போதுமா?” என்று அன்பாக உணவை கொடுப்பார். பிள்ளைகள் உண்பதைப் பார்த்து சந்தோசிக்க, ரசிக்க சௌந்தரம்மாவுக்கு நிகர் சௌந்தரம்மாதான். ஒருநாள் பாடசாலை விட்டு ஓடி வருகிறேன். அம்மாவின் சமையல் முடியவில்லை. சோற்றைத் தட்டில் போட்டேன். சௌந்தரம்மா செல்லன் கட்டாடியிடம் உடுப்புக்களைக் கணக்கிட்டு அடுக்கிக் கொண்டிருந்தார். “செல்லன், இந்தா.. சாப்பிட்டுப் போ.” தட்டை நீட்டினார். செல்லன் பணிவோடு வாங்கிச் சாப்பிடத் தொடங்கினான். “உன்ர மகன் சித்திரன் பள்ளிக்கு ஒழுங்காப் போறானா?. அவன் கெட்டிக்காரன். உன்ர தொழிலச் செய்யவிடாத. நல்லாப் படிப்பி. அவன் படித்தால் சட்டம்பியாய் வரலாம். இந்தச் சாதி சக்கட்டுக்கள் நம்மட தலைமுறையோடு அழியவேணும். தமிழருக்குள்ள ஒற்றுமையிருக்கா?. நாங்க ஒற்றுமையாக இருந்தால்தானே உரிமையோடு வாழலாம்”? அவ அப்போது கதைச்சது எனக்கு விளங்கல்ல. சௌந்தரம்மா எல்லாப் பிள்ளைகளிலும் ஏன் கரிசனை காட்டுறார். சித்திரன் என்ற சித்திரவேல் என்னோடுதான் படிக்கிறான். நாங்க ஒரே வாங்கில பக்கத்தில இருந்துதான் படித்தோம். சொந்தரம்மா சொன்னதுபோல் சித்திரவேல் இப்ப நல்லதொரு ஆசிரியராக இருக்கிறான். அவன் வண்ணார்வயலில் இருந்து பாடசாலைக்கு நடந்து வருவான். நல்ல நடைகாரன். பூவரசன்தீவக்குப் பக்கவாட்டில் வண்ணார்வயல் இருந்தது. அது குளக்கோட்டு மன்னனால் அவர்களுக்கு நிவந்தமாக வழங்கப் பட்டிருந்தது. நான் முட்டைவிடச் சுற்றும் கோழியாக நிற்கிறேன். பசி யாரைத்தான் விட்டது. ‘டேய் அருள்! இங்கே வா.’ குரல் கேட்டுத் திரும்பினேன். சௌந்தரம்மா கறியோடு நின்றார். எனது தட்டைப் பறித்து கறியைப் போட்டு தனது கையால் பிசைந்து சாப்பிடு என்று தந்ததை இன்னும் நான் மறக்கவில்லை. “இண்டைக்கு வெள்ளச் சட்டம்பியார் என்ன சொல்லித் தந்தவர்? சொல்லு பார்ப்பம்” சாப்பிடும் போது கேட்டார்.

“பக்கத்து வீட்டுச் சேவல் உங்கட வீட்டில் முட்டையிட்டால் முட்டை ஆருக்குச் சொந்தம்.” என்றார். “அதற்கு நீ என்ன பதில் சொன்னாய்?” சௌந்தரம்மா கேட்டார். “அது எங்கட சௌந்தரம்மவுக்குச் சொந்தம்” என்று சாப்பிட்டவாறே பதில் சொன்னேன். அவர் விழுந்து விழுந்து சிரித்தார். செல்லனும் சிரித்தான். அந்தச் சிரிப்பு என்னையும் சிரிக்க வைத்தது. எனக்கு விளங்கவில்லை. “ஏன் சிரிக்கிறீங்க’. கேட்டேன். “டேய் .. கிறுக்குப்பயலே .. சேவல் முட்டை விடுமா”? என்றார். எனக்குப் புரியவில்லை. “பட்டறையில் சேவல்தானே இருந்தோடியது, அதுதான் சொன்னேன்.” என்றேன்.




சௌந்தரம்மாவின் ஆணம் தனிச்சுவையானது. பாலமீன் ஆணத்தில் தேசிக்காய்ப் புளி விட்டுச் சமைப்பார். அந்த மணமும், ருசியும் இன்றும் சுவைக்கிறது. அவரது நிறத்தைப் போலவே ஆணமும் மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். இப்போது சொதி என்று சொல்கிறோம் அல்லவா? அதனை ஆணம். என்றுதான் சொல்வோம். அந்தச் சொல்லை இப்பொழுது முஸ்லீம் மக்கள்தான்; பயன் படுத்துகிறார்கள். திருமணம் செய்து பலவருடங்களின்பின்தான் கணேசன் பிறந்தான். பின் புஸ்பம் பிறந்தார். “சின்ன அம்மம்மா” என்று கூறித்துள்ளினேன். புஸ்பம் பிறந்தபின்னர் சௌந்தரம்மாவின் வாழ்க்கையில் சீரும் சிறப்பும் புகுந்து கொண்டது. வயல் நல்ல விளைச்சலைக் கொடுத்தது. வீடு புதுபு; பொலிவு பெற்றது. முத்துக்குமார் கிண்ணியா கிராமசபைத் தேர்தலில் வென்றதும் “இதெல்லாம் நமக்குத் தேவைதானா?;. நமக்கு அரசியல் எதற்கு”? என்றார். ஆனாலும் கணவனின் வெற்றியில் சந்தோசித்தவர் அவர்தான். முத்துக்குமார் நல்ல உயரமுடையவர். நீண்ட தலைமுடியை வாரி வளைத்துக் கொண்டை கட்டுவார். எங்கள் தமிழ் கிராமங்களில் ஆண்கள் தலைமுடி வளர்த்துக் கொண்டைகட்டுவது பெருவழக்காக இருந்தது. முத்துக்குமார் தேர்தலில் வென்றபின் தனது கொண்டையை வெட்டிவிட்டார். பழங்காலத்து ராஜாக்கள்போல் தியாகராஜபாகவதரின் சாயலில் காட்சி தந்தார். அழகாகத்தான் இருந்தார். அன்று சௌந்தரம்மா விழுந்து விழுந்து சிரித்தார். அவர் தனது கணவரில் ஒரு தனி ஆளுமையை கண்டுகொண்டார்போலும்;. அவருக்கு ஆலங்கேணி பிள்ளையாரிடம் பக்தி அதிகம். நாள்தவறாமல் கோயில் வலம் வருவார். வெள்ளிதோறும் பத்தினிஅம்மன் கோயிலை வலம் வருவார். நேர்த்திக்கடன் செலுத்துவார். அந்தப்பத்தினி அம்மன் கோயில் மிகப்பழமை வாய்ந்தது. அதன் பெருமைகளை சௌந்தரம்மா அற்புதமாகச் சொல்வார். போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட வரலாற்றையும் சொல்வார். அதன் இடிபாடுகள் இன்றும் மணல்மூடிக் கிடக்கிறது.




சௌந்தரம்மாவின் குடும்பம் எங்கள் கிராமத்தில் வசதியான குடும்பந்தான். அப்போதெல்லாம் வாகனவசதி என்றால் இரட்டைமாட்டு வண்டிதான். அந்த வண்டியில்தான் கொட்டியாபுரம், தம்பலகாமம், தீனேரி, சுங்கான்குழி, மாகாமம், கற்சுனை வயல்வெளி என்று செல்வார்கள். தூரத்துப் பயணங்கள் கூடார வண்டிகளில்தான் தொடரும். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் திருவிழா தொடங்கினால்தான் மாட்டு வண்டிப் பயணத்தின் மகிமை தெரியும். வண்டிற் சவாரி தூள்பறக்கும். ஆலங்கேணிக்கும் தம்பலகாமத்துக்கும் இடையில் சூரன்கல் என்ற இடம் உள்ளது. சூரன்கல் பிரதேசத்தில் பெரிய வெளியிருந்தது. அது சுமார் மூன்று நான்கு கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டது. அந்த இடத்தை நெடுங்கரைச்சை என்றழைப்பார்கள். அந்த இடத்தில்தான் வண்டிற்சவாரி தொடங்கும். இளைஞர்களது வீரவிளையாட்டுக்கள்; களைகட்டும். சுமார் நான்கு அல்லது ஐந்து மணிக்கு வண்டில்கள் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, உப்பாறு கிராமங்களில் இருந்து புறப்படும். வெயில் குறைந்து களைப்பு நீங்கும் நேரமாக இருக்கும். வண்டில்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும். நெடுங்கரைச்சை வந்ததும் தொடர்ந்து வந்த வண்டில்கள் பக்கவாட்டில் பிரியும். ஓன்றன் பக்கத்தில் மற்றது போய்கொண்டிருக்கும். துள்ளிப்பாய்ந்து காளைகள் பறக்கும். பேரொலியாக இருக்கும். பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும். விபத்துக்களும் இடம்பெறுவதுண்டு.





மாட்டு வண்டிகள் செய்வதில் பெரியதம்பி, வேலுப்பிள்ளை, கதிரவேலர் சிறந்த ஓடாவிமார்கள். நல்ல உறுதியாகச் செய்வார்கள். திருவிழா வந்து விட்டால் வண்டில்கள் வண்ணம் பெறும். சில கூடார வண்டிகளாக மாறும். கூடாரவண்டிகள் சவாரியில் ஈடுபடுவதி;ல்லை. எங்களது ஊரில் ‘சாட்டையன் பிணையல்’ என்ற காளைகள் சவாரிக்குப் புகழ்பெற்றது. அதனை வாடகைக்கு அமர்த்துவார்கள். ஒருமுறை ‘சாட்டையன் பிணையல்’ வண்டியில் தம்பலகாமம் திருவிழாவுக்கு சென்றோம். வண்டி ஓட்டியவரைச் சரியாக நினைவில் இல்லை. சௌந்தரம்மா, பக்கத்து வீட்டுப் பெண்கள் பிள்ளைகள் எனப் பலர் பிரயாணம் செய்தோம். “நமக்குச் சவாரி வேணாம். நாம் கோணேசரிடம் போறம். பயபக்தியாய்ப் போய்வரணும் விளங்குதா”? வண்டியில் ஏறும்போதே சௌந்தர்மா கட்டளையிட்டு விட்டார். வண்டில்கள் போய்க்கொண்டிருந்தன. பலவண்டிகள் எங்களது வண்டியைத் தாண்டிப் பறந்தன. ‘சாட்டையன் பிணையல்’ சவாரி செய்து பழக்கப் பட்டவை. பாய்ந்து சென்றன. சௌந்தரம்மா துணிச்சல் மிக்கவர். “கவனமாகப் பிடியுங்க. பிடியை விடக்கூடாது. வண்டில் சரிந்தால் தூரத்தில பாயவேணும்.. விளங்குதா?” கட்டளை கொடுத்திருந்தார். வண்டிகள் மோதுண்டு தடம்புரண்டு சிதறுண்டன. எங்கள் வண்டியும் புரண்டு பக்கவாட்டில் கிடந்தது. அதிசயம். யாருக்கும் காயங்கள் இல்லை. அவவுக்கு எங்கிருந்து அந்தத் துணிச்சல் வந்ததோ தெரியவில்லை. பாய்ந்து சென்று விழுந்து கிடந்த அனைவருக்கும் உதவி செய்தார். வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவர்களை கூப்பிட்டார் சரிந்த வண்டில்களை நிமிர்த்தி உதவும்படி வற்புறுத்தினார். அவரது துணிச்சல் அபரிகரமானது.





“சாகிறதெண்டாலும் நாம பிறந்த இடத்திலதான் சாகவேணும். மணல்தெருவில் காலாற நடந்து கோயிலுக்குப் போய் அம்மனையும். பிள்ளையாரையும் கும்பிட வேணும். ஊரெல்லாம் கூடி சந்தோசமாக வாழவேணும்.. அதுதான் வாழ்க்கை”. தத்துவம் பேசும் சௌந்தரம்மாவின் வாழ்வைச் சோகம் சொந்தமாக்கிக் கொண்டது. இனப்பிரச்சினை ஊரைக்காவு கொண்டபோது ஊரோடுதான் தனது ஊரைவிட்டுச் சென்றார். இரவும் வரும். பகலும் வரும். காலம் யாருக்காகவும் காத்து நிற்பதில்லை. வாழ்க்கை வட்டம் சுழன்று கொண்டுதான் இருக்கும்.. காலத்தின் வழிமுறைகளையும், வரைவிலக்கணங்களையும் மனிதனால் தடுத்து நிறுத்திவிடமுடியாது. எந்த உயிர் பிறந்தாலும் அந்த உயிர் இறக்கத்தான் வேண்டும். இது இயற்கையின் நியதி. மனித வாழ்வில் இழப்புக்கள் பலவிதமகத் தாக்குகின்றன. சில இயற்கையால் வருவன. சில மனிதனால் வரவைக்கப் படுகின்றன. இனப்பிரச்சினை என்று அழிப்புக்கள் தொடங்கின. ஊரைவிட்டு கிண்ணியாத் துறையைக் பாதையில் கடக்கும்போது ஊர்பக்கம் பார்த்து மக்களோடு அவவிட்ட பெருமூச்சு அனலாய்ப் பறந்தது. சௌந்தரம்மாவின் வீடு வளவு, சுற்றம் பொருள் பண்டம் அனைத்தும் இழந்து அகதியாகத் தவித்தபோது அவர் விட்ட கண்ணீர் கொட்டியாரக் குடாக்கடலோடு கலந்ததைக் கண்டேன். “ஒருநாளைக்கு இந்தக்கடல் பொங்கியெழும்.” எதை மனதில் வைத்துச் சொன்னாவோ தெரியாது. ஊர்ச்சனங்கள் அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாய் அகதிகளாக ஊரைவிட்டு ‘கிளப்பன்பேர்க்’ முகாமில் தஞ்சமாகினார்கள். ராணிபோல் வாழ்ந்த சௌந்தரம்மா பிள்ளைகளுக்காக அவர்களோடு காலத்தைக் கழித்தார். ஒரு மனிதன் பிறந்தான். இறந்தான் என்று சொல்வதிலும் பார்க்க, அவன் உயிர் வாழ்ந்த காலத்தில் என்ன சாதித்தான் என்பதில்தான் முக்கியம் உண்டு. ஒருவன் எவ்வகையிலேனும் பிறருக்கு உதவியிருந்தால், அவன் ஒரு சிலரது உள்ளங்களிலாவது நினைவு கூரப்படுவான்.; சௌந்தரம்மாவை இன்றுள்ள ஆலங்கேணி மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அம்மக்களும் வன்செயல்களுக்கு ஆளாகி இடம்பெயர்ந்து அல்லல் பட்டு மீளவும் குடியேறியுள்ளனர். மூலவேர்களைக் காணவில்லை. சல்லி வேர்கள்தான் காலூன்றி நிலைத்துள்ளன. சௌந்தரம்மா வாழ்ந்த காலத்தில் இருந்தவர்கள் இன்று இல்லை.




காலந்தான் கவலைகளை மாற்றவல்லது. என்று இனப்படுகொலைகள் தொடங்கப்பட்டதோ அன்றிலிருந்து எம்மைத் துயர் துரத்தத் தொடங்கியது. ஆளுக்கொரு பக்கமாக ஓடினோம். பின்னர் ஆளையாள் சந்திக்கும் வாய்ப்பை இழந்து விட்டோம். ஆனாலும் எனது உள்ளத்தில் நீக்கமற நிறைந்து சௌந்தரம்மா இருக்கின்றார். அவர் வாழ்ந்த காலம் பொன்னானது. சௌந்தரம்மா போன்றவர்கள் ஆலங்கேணியில் வாழ்ந்து பண்பாட்டைப் போற்றியவர்கள். ஆலங்கேணியில் வாழ்ந்து அந்த மண்ணிலேயே சங்கமமாகும் அவரது எண்ணம் நிறைவேறாது விட்டது. மண்ணுலக வாழ்வு நிட்சயமற்றது. நினைத்துப்பார்க்கும் போது எல்லாம் பாழாய், பழங்கதையாய்த் தெரிகிறது. தமிழ் மக்கள் வாழ்ந்த இடமெல்லாம் இன்று இல்லை. அவை புதியவர்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும், ஊர்ப்பெயர்களையும் அழித்தொழித்துப் புதுப்பெயர்களும் வரலாறுகளும் முளைத்துவிட்டன. என்பாதங்களைப் பதித்து நண்பர்களோடு நடந்த இடமெல்லாம் கற்பனையில்தான் காணமுடியும். நானும்தான் சொந்த ஊரைத் துறந்துவிட்டுத் தூரத்தேதானே கிடக்கிறேன். முகம்பார்க்கும் கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்தேன். முகம் நன்றாய்த் தெரியவில்லை. கண்களைத் துடைத்து விட்டு எனது உருவத்தையும் பார்த்தேன். இளமையில் நானும் மனைவியும் சேர்ந்தெடுத்த படத்தையும் பார்த்தேன். எவ்வளவு மாற்றம். ‘மாற்றமாம் வையகம்…’ கண்கள் குளமாகி வழிகிறது “தாத்தா ஏன் அழுறீங்க” சுலக்சியின் குரல் கேட்டு நிமிர்கிறேன். அவள் எனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவளது கண்களிலும் கண்ணீர். “ஏனம்மா அழுறாய்..”? “நீங்க ஏன் அழுதீங்க”.? அவளது கேள்விக்குப் பதில் என்னால் கூறமுடியவில்லை. எதைக்கூறுவது?



கற்பனை கலந்த உண்மை

2 comments:

சாந்தி மாரியப்பன் January 5, 2011 at 8:07 AM  

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_05.html

இமா க்றிஸ் August 26, 2012 at 2:10 PM  

வெகுகாலம் கழித்து அருமையானதொரு படைப்பினைப் படித்தேன், மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP