Tuesday, December 15, 2009

தவம் கலைகிறது

வானத்தில் அலங்கோலமாக மேகக்கூட்டத்தின் விசிறல். அமைதியைத் தொலைத்து விட்டுத் தேடும் குழந்தையாகச் சூழலின் தவிப்பு. மரங்களில் எதற்காகவோ தவமிருந்து கூவும் குயில்களின் இன்னிசையிலும் துன்பியலின் கோடுகள் நெளிகின்றன. சூறாவளியின் பின் நிலவும் பயங்கர அமைதியின் மயானத்தன்மை. இனிதாக வீசும் இளங்காற்றுக்கூட உடலையும் உள்ளத்தையும் வெதுப்பியது. உள்ளத்தின் கொந்தளிப்பால் ஏற்பட்ட கொதிப்பு. அனல் மூட்டிவிட்ட வெப்பத்தால் உள்ளத்துள் வெயர்த்து எரிமலையாகி விசுறுகிறது. அது உடலெங்கும் பரவி கொதியாய்க் கொதிக்கிறது. பாதிவிழி திறந்த நிலையில் அமர்ந்திருக்கிறான் கௌதம புத்தன். ஆழ்ந்த தியானம் கலைந்து கொண்டே இருக்கிறது. எப்படி அமைதிப்படுத்தினாலும் மனம் அமைதியடைவாதாக இல்லை. மனம் பொல்லாதது. மனதைப்போல் நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. அமைதி கலைந்து கொண்டே இருக்கிறது. மனக்கடலில் சூறாவளியாய் மாயையின் சித்து விளையாட்டு. பல ஆண்டுகளாகத் தன்னை வருத்தித் தவமிருந்து மானிடம் வாழ வழிகண்ட கௌதமன் மட்டும் விதிவிலக்கா என்ன? அவனது மனதிலும் சுழன்றடிக்கும் சூறாவளிச் சஞ்சலம். சுனாமியின் தீண்டல்.




பாரதம் ஞானிகளையும் புனிதர்களையும் தன்மேனியில் தவழவிட்டு மகிழ்ந்திருந்தது. அதனால்தான் தனக்கென ஒரு பெருமையைத் தேடிக்கொண்டது. பாரதத்தில்தான் துச்சோதனனும் வாழ்ந்தான். கபிலவஸ்து அவனது நாடு. அவன் போற்றுதற்குரிய பேரரசனாக ஆட்சிசெய்தான். அவனது ஒரே தவப்புதல்வன்தான்; சித்தார்த்தன். தனது மகன் இந்த உலகத்தின் துயரங்களைக் கண்டுகொள்ளக்கூடாது. அவனது மனதில் துன்பமே குடிகொள்ளக் கூடாது என்ற பிடிவாதத்தில் இருந்தான். இந்த உலகத்தின் மாமன்னனாகத் திகழவேண்டும் என்று திட்டமிட்டு வளர்த்தான். இளமையிலேயே யசோதையைத் திருமணம் செய்து வைத்தான். வாலிபம் இனிமையானது. உடற் சுகத்தைத் துய்த்து மகிழும் பருவம். அன்புக்கினியாளின் அரவணைப்பில் அகிலத்தை மறந்து மயங்கிக் கிடக்கும் அற்புத வாய்ப்பு. அனுபவித்தான். சகலதையும் உற்றுணர்ந்தான். அற்ப சுகம் நிரந்தரமானதல்ல. நிரந்தரமானதென்ன? அது எங்கே உள்ளது. எங்கே கிடைக்கும்.? அவனது மனம் தேடலில் தேர்ச்சியை நாடிச் சென்றது. வாரிசு வந்து பிறந்தது. துன்பத்தின் நிழலையே பார்த்திராதவன் வாழ்க்கையில் இன்பத்தைக் காணமுடியவில்லை. எவை அவன் பார்க்கக் கூடாது என மறைக்கப்பட்டனவோ அவற்றை அவன் நேரில் கண்டு கொண்டான். உலகத்தில் நிலவும் துயரங்களையும் துக்கங்களையும் கண்டான். அவனது மனதில் வெறுமை குடிகொண்டது. மனைவியைப் பார்த்தான். அவளது களங்கமில்லாத முகம் யொலித்தது. எனினும் அந்த முகம் அவனை வசீகரிக்கவில்லை. மாறாக விட்டு விடுதலையாகும் வைராக்கியத்தைப் பெருகச் செய்தது. அருந்தவப் புதல்வனையும் நோக்கினான். எல்லாம் மாயையாக அர்த்தமற்றனவாகத் தெரிந்தன. மனதில் சங்சலம் குடிகொண்டது. மன்னன் மகன் மக்கள் துயர்துடைக்க வேண்டும். ஆனால் சித்தார்த்தன் மனிதத்துயர் துடைக்க அரசையே தூக்கி எறிந்து விட்டான். தன்னையே அர்ப்பணிக்கத் துணிந்துவிட்டான். காட்டை அடைந்து கடுந்தவம் இயற்றப் புறப்பட்டு விட்டான்.





நாட்டைத்துறந்து கடுந்தவம் இருந்து பிறவிப் பெருங்கடல் நீந்தும் வழியைத் தேடினான். தியானம் அவனுக்கு ஆறுதல் அளித்தது. தியானம் யோகநிலைக்கு இட்டுச் செல்வது. நல்ல சிந்தனைகள் ஊடாக நற்பேறைக் காண்பது. தியானத்துக்கு மனப்பக்குவம் தேவை. வைராக்கியம் தேவை. சிந்தனையைக் குழப்பும் எண்ண அலைகள் மோதும். அவற்றை வெல்லக்கூடிய மன உறுதி தேவை. அலைபாயும் மனதைக் கடிவாளமிட்டுக் கட்டுப் படுத்தும் கலையைக் கற்றுக் கொண்டான். அவனது பார்வை ஆழமானதாக இருந்தது. அது ஒருவகை யோகம். நல்ல எண்ணங்களை ஒருங்கிணைத்தலை யோகம் என்பார்கள். மனத்தைக் கட்டுப்படுத்தல் முக்கியமானது. நல்ல எண்ணங்களை சிந்தித்துத் திட்டமிட்டுதல் இன்னுமொரு வகையானது. அதற்கான செயல்வடிவங்களை உருவாக்கல். அவற்றைச் செயற்படுத்தும் முறை அனைத்தும் யோகம்தான். அதனை அவன் அனுபவம் செய்தான். நல்ல எண்ணங்களை அனுபவம் செய்தல் கஸ்டமானது. அதனை நினைவில் இருத்தல் என்பார்கள். யோகிகள் நினைவில் இருப்பார்கள். அதனைத் தவமென்போம். சித்தார்த்ன் பல ஆண்டுகள் தியானித்தான். தவமிருந்தான். தியானத்தின் வழியே ஞானத்தைக் கண்டான். சித்தார்த்தன் கௌதமபுத்தர் ஆனான். ‘பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பும் நிட்சயம் உண்டு.’ துன்பத்தின் ஊற்றை அவதானித்தான். இன்பத்தின் வழியே துன்பம் தொடர்கிறது. ‘பிறவாமை வேண்டும்’ என்றான். துறவறத்தை வற்புறுத்தினான். பஞ்சசீலக் கொள்கையை அறிமுகம் செய்தான். கொலை, களவு, காமம், பொய், மது ஆகியவை மனதை லௌகீகத்தில் ஆழ்த்துவன. அவற்றைத்துறந்தால் வாழ்வில் பேரின்பத்தை அடையலாம் எனக் கண்டான். பௌத்த தர்மம் உருவாகியது.




பாரதத்தில் கௌதமபுத்தர் பௌத்த தர்மத்தைத் தந்தார். அவர் பிறந்த நாடு அவரது போதனைகளை ஏற்கவில்லை. வேற்று நாட்டு மக்கள் அதனை அரவணைத்தனர். அந்த தர்மத்தை ஏற்றுப் போற்றிப் பின்பற்றினர். ஆனால் அதனைப் பின்பற்றும் மக்கள் அந்தத் தர்மத்தை மறந்து விட்டனர். உடல் அழியும்தன்மையது. அது நிலையானதல்ல. இந்த உடல் உயிருக்கு அவசியமானது. உடலும் உயிரும் சேரும்போதுதான் அது வாழ்வாகிறது. பலர் ஆத்மா அழியாதது என்பார்கள். ‘ஆத்மா அழியும் தன்மையது’ என்றார் புத்தர். பௌத்தம் மறுபிறவி பற்றிப் பேசுகிறது. இதற்கிடையில் வாதிப் பிரதிவாதத் தர்க்கம். வாழும்போது நன்மைகள் செய்து வாழ்ந்தால் சுவர்க்கம் அல்லது பரிநிர்வாணம் கிட்டும் என்பது பௌத்தத்தின் முடிபு. புத்தகாயாவில் தோன்றிய பௌத்தம் புத்தரது காலத்திலேயே தளர்ந்து விட்டது. அதன் ஒருசிறு வேர் மட்டும் பாரதபூமியில் வெளியில் தெரிகிறது. அதன் கிளைகள் பாரதத்துக்கு வெளியே தழைத்து பெருவிருச்சமாக நிற்கிறது. பௌத்த தர்மத்தைத் தந்த கௌதமர் வந்த கடமையை நிறைவேற்றி விட்டு மறைந்து விட்டார். ஆனால் அந்தத் தர்மத்தைப் பின் பற்றும் மக்கள் கௌதமரின் உடலெச்சங்களை வைத்துக் கோயில் கட்டி அடிதடியில் இறங்கி ஆரவாரிக்கின்றனர்.





கௌதமபுத்தரின் கொள்கைகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அந்திம காலத்தின் விளிம்பில் புத்தார் இருந்தார். அவரது கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதையிட்டுச் சிந்தித்தார். பௌத்தத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும் என ஆழ்ந்தறியும் முயற்சியில் இறங்கினார். அவருக்கு வேதனையைத் தரும் செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறவிருப்பதைக் கண்டார். அதனை முற்று முழுதாகப் பார்க்கும் முனைப்பில் ஈடுபட்டார்.




கௌதமர் தியானத்தில் இருக்கிறார். கௌதமிரின் தியானம் நிலைத்து நில்லாமல் அடிக்கடி கலைகிறது. அவரது மனதில் சலனம் குடிகொள்கிறது. கௌதமரின் பிரதான சீடரான ஆனந்தரின் கவனத்தை அது ஈர்க்கிறது. அவர் மெதுவாகக் கௌதமரின் பக்கம் செல்கிறார். “குருநாதா, நானும் தங்களைக் கவனிக்கின்றேன். தாங்கள் நிம்மதியற்றுத் தவிப்பதைக் காணுகிறேன். அதன் காரணத்தை அறியலாமா?. ஆனந்தர் மெதுவாகத்தான் தொடங்கினார். கௌதமனின் முகத்தில் சஞ்சலத்தின் அறிகுறிகள். நெற்றியில் கோடுகளாக நெளிகின்றன. “ஆனந்தரே சஞ்சலம் தவத்தைக் குழப்புகிறது. எனது தவமும் அதனால் ஏற்பட்ட தர்மமும் முழுப்பயனையும் விளைவிக்குமா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. ஒரே குழப்பமாக இருக்கிறது. கூரிய வாளை வல்லவனிடம் கொடுத்தால் அவன் மக்களுக்குக் காவலைக் கொடுப்பான். ஆனால் அதே வாள் கொலைஞனிடம் கிடைத்தால்? நினைக்க உடல் நடுங்குகிறது. ஆயிரம் வருடங்களின்பின் புத்த தர்மத்தின் பெயரால் எத்தனை அட்டூழியங்கள் நடைபெறும் என்பதனை நானறிவேன். இதற்காகவா இவ்வளவு காலமும் தவமிருந்தேன்.”? கௌதமரின் கண்கள் கலங்கியிருக்க வேண்டும். “குருதேவா, இப்போது என்ன நடந்துவிட்டது. நீங்கள் இப்படிக் கலங்கலாமா”? ஆனந்தர் கௌதமரைத் தேற்ற முற்பட்டார்.





“ஆனந்தரே ஓன்றும் நடைபெறவில்லை. ஆனால் புத்ததர்மம் மதம் பிடித்தவர்களது சொத்தாகிவிடும். பல பிரிவுகளாகிப் போய்விடும். சமயவாதங்கள் நடைபெறும். ஆளையாள் அழித்துக் கொள்ளும் மனிதர்கள் புத்ததர்மத்தைத் தம் கைகளில் எடுத்துக் கொள்வார்கள். இந்தக் கௌதம புத்தரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு பாதகச் செயல்களில் ஈடுபடுவார்கள். பஞ்சசீலக் கொள்கைகள் ஏட்டில் உறங்கும்”;. மனவேதனையோடு கௌதமர் கூறினார். ஆனந்தர் பிரமித்துப் போனார். அதனைப் போதிமாதவன் அறிந்து கொண்டான். “ஆனந்தரே இப்படி வந்து அமருங்கள்.” கௌதமர் அன்புக் கட்டளை இட்டார்.




கௌதமர் கல்லிருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனந்தரும் கௌதமர் கூறியவாறே அவர் முன்னே இருந்த கல்லிருக்கையில் அமர்ந்து கொண்டார். அரைவிழி மூடியவாறு ஆனந்தரின் நெற்றிப் பொட்டில் தன் பார்வையைச் செலுத்தினார். ஆனந்தரின் நெற்றிப் பொட்டுத் திரையாக விரிந்தது. ஆனந்தர் உடல் நடுங்கியது. அவர் உணரத் தொடங்கினார். தமக்கேற்றவாறு புத்ததர்மம் மாற்றப் படுவதைக் கண்டார். தேரர்களிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றி பிளவு படுவதைக் கண்டார். அரசர்களைத் தம்வயப்படுத்தி ஆட்சியில் பங்கு கொள்வதைக் கண்டார். பிறசமயங்களைப் புறந்தள்ளிவைப்பதை அவதானித்தார். “குருதேவா..” ஆனந்தரின் வாயிலிருந்து சொற்கள் பறந்தன. “பதறாதீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்.” கௌதமரின் ஆணை அவரைக் கட்டுப்படுத்தியது. ஆனந்தர் அமைதியானார். ஆனால் அவரது சிந்தனையில் அது தெளிவாகத் தெரிந்தது.



இரவு நேரமது. வானம் நட்சத்திரங்களால் தன்னை அலங்கரித்துப் பார்க்கிறது. கல்லும், சிமென்தும் மணலும், சிறு இரும்புக் கம்பிகளும், வண்ணங்களும் குவிந்து கிடக்கின்றன. பலமனிதர்கள் கூட்டமாகச் சேர்ந்து வேலை செய்கிறார்கள். இடையிடையே சில தலைவர்கள் கார்களில் வந்து போகிறார்கள். அழகான பல சிலைகள் உருவாகின்றன. அவ்வளவும் கௌதமரின் உருவங்கள். இவ்வளவு சிலைகளும் எதற்காக? என்ன செய்யப் போகிறார்கள்? ஆனந்தரின் மனதினிலே ஆச்சரியக் கேள்விக் குறிகள். இரவிரவாக சிலைகளை வாகனங்களில் ஏற்றிப் பல இடங்களில் இறக்கி அங்கு நிலைநிறுத்துகிறார்கள்.




சூரியக் கதிர்கள் மேகங்களைத் தூசிதட்டிச் சோடிக்கின்றன. இரவுமுழுவதும் ஒளியூட்டிக் களைத்த நட்சத்திரக் கூட்டம் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டன. காலையாகிறது மக்கள் கூட்டம் நிறைகிறது. புத்தம் புதிய புத்தரின் சிலைகள் அமைதியைக் கலைக்கின்றன. ஆரவாரம் தொடங்குகிறது. எப்படி இந்த இடத்தில் புத்தரது சிலை வரலாம்.? “அழுக்கும் துர்நாற்றமும் வீசும் இடத்தில் புத்தபகவானின் சிலை இருப்பதா”? மக்களில் சிலர் கேள்விகளைக் கேட்கிறார்கள். “நாங்கள் பெரும்பான்மையினர். இது பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் சிலைகளை எங்கும் வைப்போம்”. பதில்கள் ஓங்கி ஒலிக்கின்றன. பிரச்சினை தீப்பற்றிக் கொண்டு தொடர்கிறது. அந்தப் பிரச்சினை மத்தியிலும் இளம்வட்டங்கள் உலா வருகின்றார்கள். அவர்களது உலகம் தனிஉலகம். அற்புதமான கனவுகளைக் காணும் பருவம். பகல்கனவில் மூழ்கி எதிர்காலத்திற்கான அத்திவாரங்களை நிறுவித் திரியும் வாலிபப் பருவம். பல்கலைக்கழகத்தின் பட்டாம்பூச்சிகள். மாலையில் கூட்டமாய் இயற்கையை ரசித்து இளமைத்துடிப்புக்களை அள்ளி வீசியபடி சைக்கிள்களில் ஒரு கூட்டம் வருகிறது. கடற்கரையில் கூடி கதையளந்து மகிழ்வது அவர்களது பொழுதுபோக்கு. அவர்களை அந்நாட்டுக் காவல்படையினர் சுற்றி வளைக்கிறனர். அந்த இளம்வட்டங்களின்மேல் பொறாமையா? இனக்குரோதமா? அடித்து வதைத்துப் பந்தாடுகிறனர். படையினருக்கு மதுவின் மயக்கம். சித்தசுவாதினமற்றவர்களாகப் பயங்கரமாகச் செயற்படுகின்றார்கள். அவர்களின் கைகளில் துப்பாக்கிகள். துப்பாக்கிகள் தீப்பிளம்போடு சீறுகின்றன. அந்த இளசுகளின் கனவுகள் காற்றில் பறக்கின்றன. இளசுகளின் உடல்களில் இருந்து இரத்தம் நிலத்தில் பரவுகிறது. உடல் சின்னாபின்னமாகிச் சிதறிக்கிடக்கின்றன. ‘பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசும்போது படையினர் திருப்பித் தாக்கியதில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.’ அரச வானொலி செய்தி ஒலிபரப்புகிறது. மக்கள் கூட்டம் கண்ணீர் வடித்துக் கதறுகின்றனர். ஆனந்தரின் உடலில் அசைவு தெரிகிறது. அவரின் நெற்றி சுருங்கி விரிகிறது. கௌதமரின் கட்டளையை அவரால் மீறமுடியவில்லை. மீண்டும் அப்படியே இருக்கிறார். காட்சி தொடர்கிறது.




சித்திரைப் புத்தாண்டு இனங்களை இணைக்கும் நன்நாள். சித்திரைப்புத்தாண்டைக் கொண்டாடும் ஆர்வம் மக்களுக்கு. தேவயான பொருட்களோடு புத்தாடைகளை வாங்கவும் கடைத்தெருக்களில் நுழைகிறார்கள். குண்டு வெடிப்புக்கள் அமைதியைக் குலைக்கிறது. எங்கும் புகைமண்டலம். இதற்காகவே காத்திருந்தவர்களைப் போல் காடையர் கும்பல் திபுதிபு என்று புறப்படுகிறது. வுhள்வெட்டுக்கள் விழுகின்றன. அவல ஒலி ஆக்கிரமிக்கிறது. கற்பழிப்புக்கள், ஒரு இனத்தின் அழிவில் இன்னுமோர் இனம் சந்தோசிக்கிறது. மிலேச்சத்தனங்கள் தாண்டவமாடுகின்றன. அடிதடியில் தொடங்கி துப்பாக்கிக் குண்டுகள் மனித இரத்தத்தை ருசிக்கின்றன. உயிர்கள் பறிபோகின்றன. உடலங்கள் உருளுகின்றன. ஊரடங்குச் சட்டம் அமுலாகிறது. தளர்கிறது. இக்காட்சிளை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனந்தரினால் பொறுக்க முடியவில்லை. “குருதேவா போதும். என்னால் தாங்க இயலாது.” அவர் தளர்ந்து நடுங்கினார். கௌதமரின் விழிகள் அப்படியே இருந்தன. கவலைகளைப் போக்கி அமைதியைச் சாதித்த போதிமாதவனின் விழிகளிலும் கண்ணீர்த் திவலைகள் எட்டிப் பார்த்தன.




“ஆனந்தரே, சங்கம யுகத்தில் இவையெல்லாம் நடக்கத்தான் செய்யும். யுகம் அழியும். மாற்றம் வரும். மாற்றம் தவிர்க்க முடியாததொன்று. புதுயுகம் பிறக்கும். மாற்றத்தை யாரும் தடுக்க முடியாது. தவிர்க்கவும் முடியாது. புதியது வரும். பழையதாகப் போகும். மீண்டும் புதியது வரும். ஒன்றன்பின் ஒன்றாக யாவும் நிகழும். இங்கு எது சரி? எது தவறு என்று தீர்மானிக்க முடியாது. எது நடக்கவேண்டும் என்று நியதி இருக்கின்றதோ அது நடந்தே தீரும். இது தவிர்க்க முடியாத நியதி. சற்று அமைதியாக இருந்து பாருங்கள். இன்னும் அதிசயத்தைக் காண்பீர்கள்”. ஆனந்தரினால் போதிமாதவனின் அன்புக்கட்டளையை மீறமுடியவில்லை. அப்படியே அமைதியானார். அவரது நெற்றிப் பொட்டில் புத்தரின் அரைவிழிப் பார்வை தொடுகிறது. பார்வை பட்டதும் காட்சி விரிகிறது. கற்பனையா இது? ஆனந்தர் அதிசயித்துப் பிரமிக்கிறார். யாவும் தத்ரூபமாகத் தெரிகிறது.




பாராளுமன்றத் தேர்தல் திருவிழாக்கள் நடக்கின்றன. பல தேர்தல் மேடைகளில் அரசியல் பிரச்சாரங்கள் நடக்கின்றன. கனவுகாண்பது போல் காட்சிகள் மாறிமாறித் தோன்றுகின்றன. மேடைகளில் அரசியல்வாதிகளும்,தேரர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள். தங்களது நிலையை மறந்து, துறவறத்தை மறந்து ஏதேதோ பேசுகிறார்கள். ஆனந்தரின் கைகள் அவரை அறியாமலேயே காதுகளை இறுக்கி பொத்துகின்றன. அவர்களது ஆவேசமான பேச்சுக்கள் அசிங்கமானவை. இங்கே செவிப்பொறிக்கு வேலையில்லை. செவிப்புலனுக்கே வேலை. புலனூடாகத் தேரர்களது வாதப்பிரதிவாதங்கள் புகுந்து ஆனந்தரை ஆட்டிப்படைக்கின்றன. மன்னர் ஆட்சி ஏகபோகமானது. தனியொருவரது விருப்பு வெறுப்பு நிறைவேற்றப் படுகிறது. அது ஒரு வகையில் நன்மை தரக்கூடியது. அது வேண்டாம். மக்கள் ஆட்சிவேண்டும். மக்களுக்காக, மக்களே மக்களால் ஆளுகின்ற முறைதான் மக்களாட்சி. ஒருவகையில் மக்களாட்சி முறையும் மறைமுகமான மன்னர் ஆட்சிமுறைதான். வெற்றி பெற்றதும் அவர் ஒருதொகுதியின் வெற்றி பெற்ற மன்னர்தானே. அவரது ஆட்சி நடக்கும். ஏகபோகமானதாக இருக்கும். அதனால் கட்சிகளை அமைத்து வேட்பாளர்களாக பௌத்த துறவிகள் நிற்கிறார்கள். பிரசாரத்தில் இறங்குகிறார்கள். வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள். நாடாள்வதற்காகப் புறப்பட்டிருந்தார்கள். வத்திக்கான் தேர்தல் முறையும் புலனாகிறது. உலகப் பற்றைத் துறந்து திருவோடு ஏந்தி இரந்துண்டு பிறவிப் பெருங்கடலை நீக்க அறிவுரைகூறப் புறப்பட்ட துறவிகள் மஞ்சள் காவியுடையில் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.




பாராளுமன்ற விதிகளின்படி சபாநாயகர் சபையினுள் வருகிறார். பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும். இது வழமை. துறவிகள் எல்லாம் துறந்தவர்கள். மரியாதையையும், சம்பிரதாயங்களையும் துறந்தவர்கள். இருக்கையில் அப்படியே இருக்கிறார்கள். வாக்கு வாதங்கள். தொடர்கின்றன. மசோதாக்கள் வாசிக்கப் படுகின்றன. செங்கோலை அகற்றச் சிலர் முனைகிறார்கள். சிலர் அதனைத் தடுக்கிறார்கள். தேரர்களின் காவியுடை இழுபடுகிறது. இழுபறியில் ஆளையாள் தள்ளி விழுத்துகின்றனர். அடியுதை பரிமாறப் படுகின்றன. பாராளுமன்றம் மக்களின் ஆள்பதியுரிமையைக் காக்கும் புனிதமான இடம். அங்கு அடாவடித்தனம் தாண்டவமாடுகிறது. ஆனந்தரின் மனம் இறுக்கமடைகிறது. அவரால் தொடர்ந்து அமைதிகாக்க முடியவில்லை. கண்களை மெதுவாகத் திறக்கிறார்.




என்ன அதிசயம். அங்கே புத்தபகவானைக் காணவில்லை. அவரது திருவுடலைக் காணவில்லை. ஆனந்தரின் செவிகளில் கணீரென ஒலி பாய்கிறது. ‘இன்னுமொருமுறை மனிதப் பிறவி வேண்டாம். மனிதர்களைத் திருத்தவே முடியாது.’ ஆனந்தரது உடல் சிலையாக மாறுகிறது. அவரது சிலைதான் காட்சியாகிறது. சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. அந்தச் சிலை தாறுமாறாக வெடித்து விரிவடைகிறது. வெடிப்புக்கள் ஊடாக இரத்தவெள்ளம் வடிகிறது. கல்லும், மணலும், சிமெந்தும் கரைந்து இரும்புக்கம்பிகள் தலைகாட்டுகின்றன. ஆனந்தரின் சிலை வெடித்துச் சிதறித் துகளாகிப் போகிறது.



யாவும் கற்பனை.

1 comments:

Unknown December 30, 2009 at 10:03 PM  

அருமை ஐயா! காலத்திற்கு ஏற்ற கதை. உண்மையில் இது கதையல்ல நிஜம். மனதில் இருக்கும் கணத்தை இந்த கதை ஊடாக இறக்கிவைத்த உணர்வு ஏற்படுகிறது.... சாதாரணமாக தனது தனிப்பட்ட கருத்தை தனது சக அதிகாரிக்கு சொல்லியதால் அரச வைத்தியர் ஒருவர் அரச பணியில் இருந்து பணிநீக்கம் செய்த நாட்டில் இருந்துகொண்டு நீங்கள் இப்படியான ஒரு கதையை எழுதியிருப்பது கொஞ்சம் ஆச்சரியமாகவும், பயமாகவும் இருக்கிறது ஐயா!

ஆனந்தவெளி ஊடாக உங்கள் ஆக்கங்கள் அனைத்தையும் முடிந்தளவு வாசித்து பயண்பெறுகிறேன்.

நன்றி ஐயா! நான் உங்கள் நண்பர் 'அன்பில் ஆனந்தனின்' மகன்
திருமலை விக்னா.

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP