Sunday, December 6, 2009

செவ்வந்திமாலைப் பொழுது

அவர்தான்; சோமசுந்தரம்பிள்ளை. அவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல பெரும் புலவருமாவார். 'எல்.பி திறி;' என அழைக்கப்படும் லிங்கபுரம் பாடசாலையில் கடந்த இரு வருடங்களாகக் கடமையாற்றி வருகிறார். அது கிளிவெட்டிப் பிரதேசத்தில் உள்ள ஒரு கூடியேற்றப் பிரதேசம். போக்கு வரத்து வசதிகளற்ற மிகக்கஸ்டமான பகுதி. வெள்ளிக்கிழமை நாட்களில் சமாளித்துக் காலை பத்துமணி பேருந்தைப் பிடித்தால் மாலை ஐந்து மணிக்கு மட்டக்களப்பில் உள்ள களுவாஞ்சிக்குடியை அடையலாம். அங்கிருந்து எருவில், குறுமண்வெளி ஊடாக பொடிநடை போட்டால் மண்டூர் துறையை அடையலாம். மட்டக்களப்பு வாவி நிலத்திணிவை இருகூறுகளாக்கி நீண்டு படுத்திருக்கும். அந்த வாவியில் தோணிகட்டிப் படகுச்சவாரி போவது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அனுபவம் கிடைக்கும். வாவிக் கரைகள் தோறும் கிராமங்கள் மெருகூட்டும். ஆவினமும் மேதிகளும் தலையாட்டும். வாவியின் இருகரைகளையும் இணைத்துக் குறுக்காகத் தோணிகள் பயணம் போகும்.




சோமசுந்தரம்பிள்ளை இந்த வாரம் வியாழக்கிழமையே புறப்பட்டு விட்டார். புதன்கிழமை கிடைத்த செய்தி அவரை உலுக்கி விட்டிருந்தது. அவரது இல்லத்தரசி பவளம்தான் அந்தச் செய்தியை அனுப்பியிருந்தார். புலவருக்கு யோசனை தலைக்கேறி விட்டது. ஒரு தாளை எடுத்துத் தனது நிலைமையை விளக்கிச் சொந்த ஊருக்கு இடமாற்றம் தரும்படி கல்வித் திணைக்களத்துக்கு மனுவினை எழுதித் தபாலில் சேர்த்தும் விட்டார். ஊர்மனை உறங்கிக் கொண்டிருந்தது. பழைய மாணவனின் துணையோடு சைக்கிளில் கிளிவெட்டித் துறையை அடைந்தார். கூட்டிவந்தவரை உபசரித்து அனுப்பிவிட்டு பயணத்துக்கு ஆயத்தமானார். ஆனால் வஸ்வண்டியைத்தான் காணவில்லை. கிளிவெட்;டி, வெருகல், பனிச்சங்கேணி, குறுமண்வெளி துறைகளைத் தாண்டி மண்டூர் செல்லவேண்டும். அதிகாலையில் புறப்பட்ட பயணம் இது. வஸ் வந்ததும் ஏறிக்கொண்டார்.



வஸ் ஓடுவதற்கேற்ப அவரது கற்பனைத் தேரும் ஓடியது. கண்களை மூடியபடியே அந்த உலகத்தில் உலா வந்தார். இடையிடையே கற்பனை கலையும். விழித்துக் கொள்வார். சிலநேரங்களில் பவளத்தின் கடிதச் செய்தி பூதாகரமாக உருவெடுக்கும். சற்று நேரத்தில் இதெல்லாம் பெரிய பிரச்சினையா? ஏன்று மங்கித்தூசாகும். குண்களை மூடி மண்டூர் முருகனை மனதிருத்தினார். 'மண்டூர் முருகா! ஒருக்காக் கண்திறந்து பாரையா. ஏனக்கு யாரிருக்கார். உன்னைத்தானே நம்பியிருக்கிறன். நாசமறுவான் இப்படி இடமாற்றத்தத் தந்து கஸ்டப்பட வச்சுப் போட்டான். அவள் அங்க எவ்வளவு பாடு படுவாளோ தெரியாது.' வழிநெடுகிலும் மண்டூர் முருகனையே நினைந்து நெக்குருகி வேண்டுதல் செய்து கொண்டுதான் வந்தார்.



தனது கஸ்டத்திலும் பிறரைத் திட்டித் தீர்க்கும்போது பயன்படுத்தும் சொற்களையும் எண்ணிப்பார்த்தார். ' 'நாசமறுவான்' என்பது நாசம் அறு ஆன் - அழிவு இல்லாதவன் அல்லது நாசத்தை இல்லாதாக்குபவன் என்றல்லவா பொருள். நான் அவனைத் திட்டினேனா அல்லது வாழ்த்தினேனா'? தனக்குள் சிரித்துக் கொண்டார். பிறர் நமக்குத் தீங்கு செய்தாலும் நாம் அவருக்குத் திருப்பி அதனைச் செய்யக் கூடாது. மனதினில் போராட்டம். ஒருவாறு மண்டூர் துறையடிக்கு வந்து சேர்ந்து விட்டார். துறையைக் கடக்க கோவிந்தனின் உதவி கிடைத்தது. அவன் புலவரை தனது தோணியில் ஏற்றிக் கரைசேர்த்துவிட்டான். துறையடி மாரியம்மனை ஒருக்காத் திரும்பிப் பார்த்து விட்டு 'நீயெல்லாம் ஓரு இடத்தில் இருக்க நான் மட்டும் அங்க இங்க என்று இழுபடுறன். நீ நல்லா இரு.' மனதில் முணுமுணுத்தபடி தோளிலும், கைகளிலும் சாமான் சட்டுக்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டார் மெதுவாக நடக்கத் தொடங்கினார்.



மனிதமனம் பொல்லாதது. துன்பம் சூழும்போது தனிமையில் தனக்கு வாயில் வந்தவாறு புலம்பும். இறைவனை முன்நிறுத்தி குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நீதி கேட்கும். விசித்திரமான மனம். பிரயாண அலுப்பு சுமையை அதிகமாக்கியது. மனிதன் தனிமையில் இருக்கும்போதுதான் உள்மனிதன் விழித்துக் கொள்கிறான். அந்த உள்மனிதன் உண்மைகளை அறிந்தவன். நிறைகுறைகளைச் சட்டிக் காட்டுபவன். புலவரைச சிந்திக்க வைத்துவிட்டான். 'நானும் பொறுமையாக இருந்திருக்க வேணும். அந்த அரசியல்வாதியிடம் மோதியிருக்கக் கூடாது. அரசியல் வாதி சொன்னதுபோல் ஒத்துப் போயிருந்தால் இந்நிலை வந்திராது, எப்படி ஒத்துப் போவது? அனியாயம் செய்யும் அரசில்வாதிக்குப் பக்கபலமாக இருப்பதைவிட விலகியிருப்பது நல்லது. அவருக்கு இப்போது அது நினைவில் தட்டியது.



அந்த அரசியல்வாதியின் திட்டத்தை சின்னத்துரை சொன்னவிதம் அவருக்குப் பிடிக்கவில்லை;. 'புலவரையா! நம்மட தலைவர், உங்கள தன்ர பக்கம் வேலைசெய்யட்டாம். அவருக்காக எடுக்கிற விழாவில பாட்டும் எழுதித் பாடட்டாம். மேடையில் தன்னை ஆதரித்துப் பேசட்டாம். என்னை அதுக்காகத்தான் அனுப்பினவர்.' புட்டு வைத்தான். 'சின்னத்துரை ஒரு தலைவனைப் புகழ்வதில் தப்பில்லை. ஆனால் போலிகளை இந்தப் புலவன் புகழமாட்டான். சொல்லிப் போட்டன். நீ போ.' புலவர் கடுகடுத்தார். 'நான் நல்லதுக்குத்தான் சொன்னனான். பிறகு வரும் வில்லங்கத்துக்கு என்னைப் பிழைகூறக்கூடாது.' கூறியவாறே சின்னத்துரை மெதுவாக நழுவ முற்பட்டான். புலவர் ஆத்திரத்தில் ' தன்னைப் புகழச் சொல்பவன் தலைவனா? மக்களின் கஸடநஸ்டம் தெரியுமா அவருக்கு?. தொண்டு செய்பவன்தான் தலைவன். ஏன்னால் முடியாது. போய்ச் சொல். செய்யிறதைச் செய்யட்டும்' புலவர் கடுகடுத்தார். அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்.



'நாடு கெட்டுப்போய்க் கிடக்கிறது. மனிதர்கள் ஆளையாள் கொன்றொழிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? என் இந்த நிலை வந்தது? இதற்கு யார் பொறுப்பு.'? மனதினிலே எண்ணியவாறு நடந்தார். 'பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் போறார்களாம். யார் இழுத்துப் போகிறார்கள்? எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? ஒன்றும் விளங்காத நிலையில் தடுமாறிப் போனார். எல்லாம் இந்தச் சுயநல அரசியல்வாதிகளின் சதிவேலை.



செவ்வந்தி மாலைபொழுது அழகைச் சொரிந்து கொண்டிருந்தது. அந்த செவ்வந்தி மாலைப் பொழுதை அவரால் இரசிக்க முடியவில்லை. 'அழகை இரசிப்பதற்கும் மனதில் நிம்மதி வேண்டும். நிம்மதி என்பது அவரவர் மனதைப் பொறுத்ததுதானா? ஏனக்கு அழகாகத் தெரியும் பொருட்கள், காட்சிகள் மற்றவர்களுக்கு அழகாகத் தென்படுவதில்லை ஏன்?. ஒருவர் இரசிக்கும் காட்சியை வேறொருவர் இரசிக்கமாட்டார். என்ன வேடிக்கையான மனம்.' சோமசுந்தரம் மனதோடு உரையாடிக் கொண்டிருந்தார். கால்கள் நடந்து கொண்டிருந்தன. அவர் சிந்தனையில் ஆழ்ந்தாரென்றால் அவரையே அவர் மறந்து நடந்து கொண்டிருப்பார். கால்கள் போகவேண்டிய இடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும். பக்கத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரிவதில்லை. சிலநேரங்களில் இவரது நிலையைக் கண்டவர்கள் விசரன் என்று விலகிப் போவதுமுண்டு. புலவர் கற்பனையில் இறங்கினால் தன்னை மறந்து விடுவார். அவரது கண்கள் புருவ நெற்றிக்கூடாக நேர்பார்வையில் இருக்கும். எண்ணமெல்லாம் இழையோடிக் கொண்டிருக்கும். சொற்கூட்டம் சேர்ந்து கொள்ளும். பாவடிவில் பயணிக்கும். மெட்டெடுத்து வாய் முணுமுணுக்கும். அவர் ஒரு அற்புதப்பிறவி.



அப்பொழுதுதான் மண்டூர் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை களைத்து வந்து சேர்ந்ததைக் கந்தவனத்தார் கண்டுகெண்டார். அவரது உடலை மூடியிருந்த வாலாமணி நனைந்திருந்தது. அவரை இப்பொழுதெல்லாம் அடிக்கடி மண்டூரில் காணமுடிவதில்லை. 'நல்ல மனிசன். ஏன் அவருக்கு இடமாற்றம் வந்தது?' கந்தவனத்தாரிடம் பலர் இப்படிக் கேட்டார்கள். 'நல்லதைக் கேட்டால், சொன்னால் அவன் பொல்லாதவன். கவிஞர் பொதுநலவாதி. பொதுமக்களுக்காகக் குரல் எழுப்பினார். நமது அரசியல்வாதிகளுக்கு பிடிக்கல்ல. அதுதான் அவருக்கு வந்த வினை'. கந்தவனத்தார் பெருமூச்சுடன் சொன்னார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றுதான் புறப்பட்டார். ஆனால் பொருளாதாரக் கஸ்டம் அவருக்குச் சுமையாகியது. வீடும் பாடசாலையும் என்று வாழ்ந்தவருக்கு இடமாற்றம் வேதனையை அளித்தது. சம்பளத்தை எடுப்பார். மனைவி பவளத்தின் கையில் கொடுப்பார். அவ்வளவுதான். வீட்டில் நடப்பது அவருக்குத் தெரியாது. கந்தவனத்தாருக்குப் புலவரின் குணாதிசயங்கள் அத்துப்படி. புலவர் முன்னால் போய்க் கொண்டிருந்தார். பின்னால் கந்தவனத்தார் விரைந்து நடந்தார். 'என்ன புலவரையா கடும் யோசனை?' குரல் கேட்டுத் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மண்டூர்ப் புலவர் சோமசுந்தரம் குரல் வந்த பக்கம் திரும்பிப் பார்த்தார். அவர் பக்கத்தில் கந்தவனத்தார் புன்னகையோடு நின்றார்.



'வாங்க ..கந்தவனம்.. இப்பதான் வாறன்' ஓரு புன்னகையை வீசியெறிந்து பேசினார். அவரது முகத்தில் சோர்வு தெரியவில்லை. சொந்தக்காரரைக் காண்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது. தனது சொந்த ஊரில் கால்பட்டதும் சுகம் கூடிக்கொண்டது. ஒருவித பெருமிதத்தோடு நடந்தார். கந்தவனத்தார் புலவரின் பொருட்களின் சுமையைப் பகிர்ந்து கொண்டார். ஊர்விசயங்கள் புரண்டு துள்ளின. பார்க்கும் இடமெல்லாம் இப்போது அற்புதமாகத் தெரிந்தது. ஆனாலும் புலவரது மனதினிலே இனந்தெரியாத வேதனை முள் தைப்பதைப்போல் குத்திக் கொண்டிருந்தது. அந்த வலியினால் ஏற்பட்ட உளைச்சல் எரிச்சலையும் கூட்டியது. நிம்மதியாக வாழ்ந்த மக்களது மனங்கள் துயரக்கடலில் மூழ்கியுள்ளதை நிநைந்து வெந்து கொண்டார். 'புலவரையா எப்படி இப்ப வேலைபார்க்கிற இடம்?. நம்மட ஊரைப்போல இருக்குமா?' 'கந்தவனம்; ..அந்த ஊர் நல்லதுதான். நல்ல சனங்கள். ஆனாலும் நம்மட ஊர் நமக்குச் சொர்க்கம்தான். சொந்த ஊரைப்போல ஒன்றும் சுகம்தராது. அங்க உல்லாசமாக இருந்தாலும், ஒரு தனிமை வாட்டும். நம்மட ஊர்ல காலைநீட்டிக் கொண்டிருந்தாலே போதும். சுகம் சுண்டும். அந்தச் சுகம் எங்கும் கிடைக்காது. ஆனால் அது இப்ப தொலைஞ்சு போச்சுது போலக்கிடக்குது.' புலவர் அடுக்கிக் கொண்டு போனார்.



கந்தவனத்தார் மட்டக்களப்பைத் தவிர வேறு ஊர்களுக்குப் போனது கிடையாது. அரசாங்க உத்தியோகம் பார்க்கிறவர்கள் இடமாற்றம் பெற்றுப் பல ஊர்களில் வாழக்கூடிய சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொள்வார்கள். நல்ல அனுபவங்களைப் பெற்றும் கொள்வார்கள். கந்தவனத்தார் போன்றவர்கள் சொந்த ஊரிலேயே கிடப்பவர்கள். கிணற்றுத் தவளைகளைப் போல் ஊருக்குள்ளேயே கிடப்பதைத் தவிர வேறு அனுபவம் கிடக்கச் சந்தர்ப்பம் இல்லை. அவருக்குப் பல ஊர்களைப்பற்றி அறிய ஆசைதான். ஏப்படிப் போய்ப்பார்ப்பது. பொருளாதாரம் இடம் கொடுக்காது. அது சாத்தியப் பட்டும்வராது.




'என்டாலும் புலவரையா நீங்க கொடுத்து வைத்தவர்தான். நாலு இடங்களையும் மனிசரையும் பார்த்துப் பழகச் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கல்லவா?' நடந்து கொண்டே கந்தவனத்தார் தன் உள்ளக் கிடக்கையை வெளிக்காட்டினார். புலவரின் உள்ளம் அவரிடம் இல்லை. அது பறந்தோடியது. ஆந்த ஒரு வினாடிப் பொழுதில் அந்தக் கணத்தைக் கண்டார். பழையதை அசைபோடுவதில் ஒரு புதுமை இருக்கும். சுகமும் இருக்கும். புலவருக்கு தான் கடமையாற்றும் பிரதேசத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருப்பதை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.



நவராத்திரி தொடங்கினால் மூதூர் பிரதேசம் குதூகலிக்கும். பாடசலைகளும் கோவில்களும் விழாக்கோலம் பூணும். மாலைதொடக்கம் நள்ளிரவு வரை கலைநிகழ்சிச்pகள் நடைபெறும். கவிதை அரங்குகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படும். மல்லிகைத் தீவு அற்புதமான மருதநிலக் கிராமம். செந்நெல் வயல்சூழ்ந்து விளைந்து கிடக்கும். தென்னஞ்சோலை பாளைவெடித்துச் சிரிக்கும். மாலையானால் மைனாக்கனின் குதூகலிப்பு. கட்டிப்புரண்டு கதைபேசி மகிழும் காட்சி மனதை ஈர்க்கும். பார்க்கும் பக்கமெல்லாம் பசுமை போர்த்திருக்கும். மல்லிகைத்தீவு மகாவித்தியாலயம் தன்னை அலங்கரித்து மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தது. மண்டபம் நிறைந்து மக்கள் வழிந்து கொண்டிருந்தனர். 'கவிதை அரங்கு எப்போது? கவிஞர்கள் வந்து விட்டார்களா'? கேள்விமேல் கேள்வி கேட்டுக் கவிஞர்களின் வருகைக்காக மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். வரிசையாகக் கவிஞர்கள் சைக்கிள் சவாரி செய்தவண்ணம் வந்து சேர்ந்தார்கள். மண்டூர்கவிஞரும் எடுப்பாக நின்றார். இது அவர்களுக்கு எத்தனையாவது சுற்று.? கிராமங்கள் தோறும் வாணிவிழா கவிதை அரங்குகள் களைகட்டும். பலகிராமங்களில் கவிதையரங்குகளில் பங்கு கொண்டு விட்டுக் களைத்து வந்திருந்தார்கள். தாமரைத்தீவானின் தலைமையில் கவிதையரங்கு. ஆலையூரன், ஈச்சையூர்தவா,தமிழ்பித்தன், பின்னால் புலவர் இசையோடு பாடினார்.




தோப்பூரில் வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை;-
உனக்கு சொந்தக்காரர் இல்லை,
இங்கு துன்பம் கோடி தொல்லை
ஆப்பு வைத்தான் ஒருவன்
அதில் அகப்பட்டவன் நாளை
ஆப்பு உடைத்து வருவான் உன்
அகந்தை உடைத்து வெல்வான்.


கைதட்டலும் சிரிப்பும் வானைப் பிளந்தது. புலவர் இறுதியாக இசையோடு பாடினார்.


தோடர்ந்து பாடிய கேணிப்பித்தன்
தோப்பூரில் வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை;-
உனக்கு சொந்தக்காரர் கொள்ளை,
இங்கு துன்பம் கோடி இல்லை
காப்பவிழ்ந்த பூதான் நீ
காலமெல்லாம் வாழ்வாய்
காலம் பதில் சொல்லும்
கவலை உனக்கு இல்லை.
இப்படிப் பாடினார்.


மக்கள் ஆரவாரித்து மகிழ்ந்ததை புலவர் மனநிறைவோடு எண்ணிக் கொண்டார். மனிதமனம் அலைபாயும் தன்மையுடையது. நிறம் மாறும் ஓணாண்போல் நிமிடத்து நிமிடம் மனம் மாறும். புலவரும் அப்படித்தான். சட்டென்று விசயத்துக்கு வந்துவிட்டார். 'இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைதான் கந்தவனம்.' புலவர் தனது மன உளைச்சலை பெருமூச்சோடு வெளித்தள்ளினார். நடந்து கொண்டே தான் பிறந்து வளர்ந்த ஊரின் அழகையும் பெருமையையும் வியந்து மெய்மறந்து நெஞ்சுருகினார்.



அழகான அந்த வாகைமரம் காற்றினை ஏந்தி அரவணைத்துச் சலசலத்துத் தாளம்போட்டுக் கொண்டிருந்தது. வாகை மரங்கள் ஊடாக மட்டக்களப்பு வாவியின் பரந்த அழகு எட்டிப்பார்க்கிறது. அந்த வாவியில்தான் சித்திரை முழுநிலவின் ஒளியில் நீரரமகளிர இன்னிசை பாடிவருவதாக ஐதீகம். விபுலானந்த அடிகள் அந்த இசையைக் கேட்டு யாழ்நூலை எழுதினார். அந்த வாவி மட்டக்களப்பை இருகூறுகளாக்கிப் பரந்து நீண்டு கிடக்கிறது. எழுவான்கரையில் எம்பிய காற்று, படுவான்கரையை நோக்கி வீசுகின்றது. யாழ்நூலில் வித்தகன் விபுலானந்தரின் கற்பனை அற்புதம். பாடும் மீன்களான நீரரமகளிர் மாலையில், நீலவானில் நிலவு பவனிவரும் வேளையில், மலைவு கொண்டு பாடி ஆடி மட்டக்களப்பு வாவியில் உலா வரும் காட்சியை அற்புதமாகக் காட்டியுள்ளார். பாடலுக்கேற்ற இசையை அள்ளிய காற்று வாவியின் மெலிதான அலைகள் ஊடாகப் பரப்புகிறது. மயங்கிய மாலைப் பொழுதில் மனங்கள் துள்ளி ஆடுகின்றன.



நீல வானிலே நிலவு வீசவேமாலை வேளையே மலைவு கொள்ளுவோம்சால நாடியே சலதி நீருளேபாலை பாடியே பலரொடாடுவோம்.சுவாமி விபுலானந்தரின் இந்தப்பாடலை மண்டூர்ப் புலவர் சோமசுந்தரம் வாய்விட்டுப்பாடி மகிழ்வார். பாடி மற்றவர்களையும் மகிழ்விப்பார். மண்டூர் புலவர் சோமசுந்தரம்பிள்ளை ஒரு வித்தியாசமான மனிதர். அவரது கொடுப்புள் ஒரு புன்னகை ஒளிந்து கொண்டிருக்கும். புருவங்களைச் சுருக்கி இனிமையாகப் பேசுவார். வெள்ளை வேட்டி சட்டையுடன் கழுத்தில் மாலையாக சால்வை அலங்கரிக்கும். அகம்பாவமற்ற உயர்ந்த தோற்றத்தோடு நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக காட்சி தருவார். அவரது கற்பித்தல் முறையும் வித்தியாசமானது. அவரே பாடப் புத்தகம்தான். வகுப்பறையில் அவர் பாடம் தொடங்கினால் பக்கத்து வகுப்பறை மாணவர்களது மனங்களும் கண்களும் அவர் பக்கம் இருக்கும். செயல்மூலம் கற்பிக்கும் திறங்கொண்டவர். மாணவர்களது அபிமானம் பெற்ற நல்லதொரு ஆசிரியர்.



அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மண்டூர்க் கரையில் மோதி உடைகின்றன. மண்டூர், வாவியின் அலைகளை அணைத்து முத்தமிட்டவாறு நீண்டு விரிந்து படுத்திருக்கிறது. வெயிலின் வெப்பத்தினால் ஆவியாக்கம் நடைபெற்று வளி குளிரைத்தடவிக் குதூகலிக்கிறது. வாவி நீரில் குளித்த காற்று புதுமையைக் கலந்து மரக்கொப்புகளை உலுப்புகிறது. அந்த உலுப்புதலில் அசைவாக்கம் பிறக்கிறது. அந்த அசைவில் ஒரு நளினம் சுழன்றாடியது. காற்று, அசைவினூடாக இன்னிசையைப் பரப்பி இங்கிதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.



பெரியதொரு யானை அசைந்தாடுவதுபோல் வாகைமரம் காட்சியாகியது. அதன் அடிமரம் சரிந்து வளைந்து, இடையில் கிளைவிட்டு வளைந்து சடைத்துச் சாய்ந்திருந்தது. அதன் வேர்கள் நிலத்தின் மேல் பெரிதாய் விரிந்து புடைத்து இருக்கைகளாக மேடையமைத்திருந்தன. அப்படியான வாகைமரங்கள் மூன்று நான்கு நின்று நிழல்வடித்துக் கொண்டிருந்தன. வருவோர் போவோருக்கு இளைப்பாற்றும் பணியை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். இந்த மரங்களுக்கு இப்படியான கட்டளையை இட்டது யார்?. இடையிடையே வம்மி மரங்களின் பிரசன்னம். வம்மிப்பூக்களில் இருந்து பரவும் நறுமணம் சொர்க்கத்தை நினைவூட்டும். இந்தப் பூக்களில் இருந்து எப்படி இந்த வாசனை வருகிறது? கந்தவனத்தார் ஒரு வம்மிப்பூவைக் கையில் ஏந்தி அதனைத் தன் கைகளுள் திணித்து அதன் மென்மையை உணரத்தொடங்கினார்;. கந்தவனத்தாரின்; நண்பகல் அந்த வாகைமரத்தடியில்தான் கழியும். சீனித்தம்பியும் அங்குதான் வருவார். அவரோடு பலர் குழுமுவார்கள். கூட்டங்கூட்டமாகப் பரந்து இருப்பார்கள். களைப்பாற மட்டும் வருவதில்லை. வேலோடு விளையாடும் முருகனின் திருவிளையாடல்களைப் பேசி மகிழ்வதற்குமாகவும் ஒன்று கூடுவார்கள். சூரனை வதம்செய்ய கந்தன் ஏவிய வேலினது அகோரம் தணியவில்லையாம். அது பலகிளைகளாகப் பிரிந்து பல இடங்களில் தங்கியதாக மக்கள் கூறுகின்றனர். ஒரு வேல் மண்டூரின் வாவியோரமாக இருந்த தில்லைமர வேரில் தங்கியதாக இன்றும் மக்கள் நம்புகின்றார்கள். அந்த வேலினைக் கண்ட மக்கள் அப்படியே கோயிலமைத்து வணங்கி வருவதாக வரலாறு. முருகனின் புகழ்பாடும் மண்டூர் பெருமைமிக்கது.




அதர்மத்தை விலக்கித் தர்மத்தை நிலைநாட்ட அவ்வப்போது அவதாரங்கள் தோன்றும். சூரனின் பிடியில் சிக்கித் தவித்த ஆன்மாக்களுக்கு விடுதலையழித்து விண்ணரசைத் தோற்றுவித்ததாக இதிகாசங்களும், புராணங்களும் கூறுகின்றன. அவற்றையெல்லாம் அசைபோட்டவாறு ஒரு கூட்டம் கூடிக்குதூகலிக்கும். மதியம் பன்னிரெண்டு மணி. மண்டுர் முருகனின் கோயில்மணி ஒலிக்கிறது. கருவறைக் கதவின் திரையில் ஆறுமுகமும், பன்னிரு கைகளும். பக்கத்தில் வள்ளி தெய்வயானை சமேதரராய் முருகனின் அழகுக் காட்சி. அற்புதமாக அழகு வண்ணத்தில் ஓவியமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வண்ணக்கர் குணசுந்தரனார் பூசகருக்கும் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டிய ஆணைகளைப் பிறப்பித்தவாறு விசாலமாகத் தோன்றுகிறார். சாதாரண மனிதனுக்கு அது அற்புதமான காட்சியாகத் தெரியும். ஆனால் தத்துவ ஞானிகளுக்கு பரப்பிரமத்தின் அற்புதப்பொருள் தென்படும். பாரினில் ஐந்தாய் பரந்த நாயகன். நீரினில் நான்காய்த் திகழ்ந்த தத்துவன். தீயினில் மூன்றாய் மூழ்கிய நுண்ணியன். வுளியினில் இரண்டாய் வலம்வரும் புண்ணியன். வெளியிடை ஒன்றாய் வியாபித்த சோதிவானவனின் திருவிளையாடல் அனுபவமாகும். தீபாராதனையுடன் பூசை தொடங்குகிறது. கற்புகனார் கந்தையா பயபக்தியில் மூழ்கி முருகனில் ஆழ்ந்திருக்கிறார். குழுமியிருந்த ஆண்களின் தோளில் கிடந்த சால்வைகள் இடுப்பில் தஞ்சமாகின்றன. கைகள் தலைமேல் வைத்துக் கண்ணீர் அரும்பித் ததும்ப, மனங்களை முருகனின் சந்நிதானத்தில் படைத்து சாஸ்டாங்கமாக விழுந்து 'முருகா.. மண்டுர் கந்தா..குகனே..கதிர்வேலவனே.. பட்ட துன்பங்கள் போதும். இந்த நாட்டில் சமாதானத்தையும் சாந்தியையும் காட்டு. யுத்தம் இல்லாத சூழலை ஏற்படுத்து. மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையைக் காட்டு.' கந்தவனத்தாரின் கைகள் அகல விரிந்து தலைமேல் குவிந்து இரக்கின்றன. தாய்மார்கள் தமது பிள்ளைகளை 'யுத்தச் சுனாமியில் இருந்து காப்பாற்று.' இரந்து நிற்கிறார்கள். தனக்காக வேண்டுதலை அங்கு காணவில்லை. உலக மக்களின் துயரங்களைப் போக்க ஆராதனை நடக்கின்றது. காட்டுத்தர்பார் நடக்கும் நாட்டில் பிணமுண்ணும் பேய்களைத்தான் காணமுடியும். தவித்த முயலடிக்கும் சந்தர்ப்ப வாதிகளைத்தான் சந்திக்க முடியும். சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாயும் மானிடர்களைத்தான் பார்க்கக் கூடும். இறைவன் இருக்கின்றானா? இறைவன் கல்லா? வெறும் கற்பனையா? இது புரியாத புதிர்தான். கணீர்;; குரல் ஒன்று ஓங்கி ஒலிக்கிறது. அருணகிரியாரின் அற்புதப் பாடல் பரவுகிறது. கண்களில் கண்ணீர் மல்க மண்டுர் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை உடல்சிலிர்க்கப் பாடுகிறார். அவரது குரல்வளம் அற்புதாக ஒலிக்கிறது. பாடலின் ஒவ்வொரு சொல்லும் மிகத்தெளிவாக, அர்த்தபுஷ்டியாக இதயங்களில் படிகின்றன. பாடலோடு ஒன்றித்து அனுபவித்து ஒலிநயத்தோடு பாடல் செவிகளில் புகுந்து மெய்சிலிர்க்க வைக்கிறது. கேட்டுக் கிறங்கிக் கல்லாக மக்கள் திரண்டு நிற்கிறார்கள். அவர்களது மனங்கள் நீராய் உருகி ஓடுகிறது. ஒருபுறம் பெண்கள் கூப்பிய கைகளோடு விழிகள் மூடி, மனங்களைக் கந்தன் தாளில் படியவைத்து மெய்மறந்து நிற்கிறார்கள். ஆண்கள் தலைமேல் கைகள் மொட்டிக்க 'கந்தா' என நா வறள அரற்றி நிற்கிறார்கள். பாடல் முடிய அவர் தோப்பூரில் கவிதை அரங்குகளில் அவ்வப்போது நகைச்சுவைக்காகப் பாடும் அந்தப் பாடலைச் சற்று மாற்றி முணுமுணுக்கத் தவறவில்லை.



தோப்பூரில் வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை உனக்கு ஆப்பு வெச்ச தாரு அதனை அகற்றி வைப்பவர் யாரு. அவரது வேண்டுகோள் முடிந்தது. பக்தர்கள் பரவசமாகி நிற்கிறார்கள். எங்கிருந்தோ அந்தத் தோகை மயில் பறந்து வருகிறது. இரண்டு வரிசையாக நிற்கும் மக்கள் மத்தியில் புகுந்து வளைந்து நடக்கிறது. மேளவாத்தியம் முழங்குகிறது. அதற்கேற்ப மயிலின் அசைவுகள் பார்ப்போரைக் கிறங்கடிக்கின்றன. அற்புதமான காட்சியாகத் தெரிகிறது. இந்த மயில் கோயிலுக்கு வெளியேதான் திரியும். கோயிலைச் சுற்றி வலம் வரும். கோயில் கோபுரத்தில் நின்று அகவும். புறந்து மரக்கிளையில் தாவும். பக்தர்கள் கொடுக்கும் உணவுகளைக் கொத்தி உண்ணும். ஆனால் இன்று வித்தியாசமாக கோயில் உள்ளே பூசை நேரத்தில் புகுந்துள்ளது. ஒருநடனமாது போன்று அசைந்து நடந்து புலவர்முன் நின்றது. அங்கிருந்து நேரே பறந்து வெளியில் குதித்தது. அது பறந்த விசையில் காற்று எம்பி உதைத்தது. ஆச்சரியத்தோடு பக்தர்கள்'முருகா' என்று அரற்றினார்கள். பூசை முடிந்து வெளியில் வந்தார்கள். 'புலவரையா..ஏதோ நன்மை நடக்கப்போகிறது. அது உங்களுக்குத்தான். இருந்து பாருங்கள். அடுத்த கிழமை நீங்கள் மண்டூருக்கு மாற்றமலாகி வந்து விடுவீர்கள்' கந்தவனத்தார் கம்பீரமாகச் சொன்னார். 'நீங்க சொன்னது பலிக்கட்டும்'. வழமையான புன்சிரிப்போடுச் சொல்லி வீட்டுக்கு நடைபோட்டார்.



'இரண்டுநாள் லீவு போட்டு நில்லுங்க. இந்தச்சச்சரவுகள முடிச்சுப் போட்டுப்போனால் நல்லதுதானே'. பவளம் சொல்வதிலும் ஞாயத்தைக் கண்டார். 'சரி... நான் சொல்லிப்போட்டுத்தான் வந்தனான். புதன்கிழமை போவம். அதுக்குள்ள காரியங்கள பார்த்து முடிச்சுpட்டுப் போடுவம்.' புலவரின் பதிலைக் கேட்டதும் பவளத்துக்குச் சந்தோசம். லீவைப் பற்றிக் கதையெடுத்தாலே பொத்திக்கொண்டு கோபம் வரும். இன்று புலவரின் நடத்தையில் பவளம் மாற்றத்தைக் கண்டு கொண்டார். ஊரின் நிலவரங்களை அறியவேணும். வீணான வம்புகளில் மாட்டுப்படக் கூடாது. சைக்கிளை எடுத்துக் கொண்டு உலா வந்தார். பவளம் கடிதத்தில் குறிப்பிட்டது போல் அவ்வளவு பிரச்சினைகள் இருந்ததாக அவருக்குத் தெரியவில்லை. ஏதோ அங்கொண்று இற்கொண்று நடந்திருக்கு. அவை தவிர்க்கமுடியாதவை எனத் தெரிந்து கொண்டார். எனினும் பவளத்தின் உடல்நிலையில் மாற்றத்தைக் கண்டார். 'பவளம் ஒருக்கால் கல்முனைக்கு அல்லது மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குப் போய் காட்டுவோமா'? ஆதரவோடு கேட்டார். 'இதுக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்குப் போவனேன்.? நம்மட ஊர் ஆஸ்பத்திரில் காட்டி மருந்தெடுப்போம். சாதாரண காய்ச்சல்தானே? அது மாறிடும்.' பவளம் மறுத்துவிட்டாள். அவளுக்கு நாட்டு நிலவரத்தை எண்ணியே கவலையாயிருந்தது. இளம்பிள்ளைகளை வீடுகளில் வைத்துப் பார்ப்பது பெரிய வேலை. இப்போதுள்ள பெற்றாருக்குப் பெரும் கவலையைக் கொடுத்தது. அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. 'நீங்க இருந்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும். நான் தனிய எப்படிச் சமாளிப்தென்றுதான் யோசினை'. அவளது கண்கள் குளமாயிற்று. அவள் கண் கலங்குவதையிட்டு வேதனை கொண்டார். 'பவளம் கவலையை விடு. நடப்பது நடக்கட்டும் எல்லாம் இறைவன் செயல். நாம ஆருக்கும் கெடுதல் செய்யல்ல. சொல்லியவாறு தனது கண்ணீரை அவளுக்குத் தெரியாதவாறு துடைத்துக் கொண்டார்.



படலையில் சைக்கிள் மணி ஒலித்தது. 'ஆரது' என்று பவளம் எட்டிப்பார்த்தார். 'அட தம்பி சுந்தரம் வா. அதிசயமாயிருக்கு. எப்படி இந்த நேரத்தில் கடிதம் வரும். கடிதம் மண்டூருக்கு வர எப்பிடியும் ஒரு மணியாகுமே'? கூறியவாறே படலையடிக்குச் சென்றாள். 'அம்மா ஐயா இருக்கிறாரா'? கேள்வியோடு சுந்தரம் உள்ளே வந்தான். 'ஓமோம்.. வா. சுந்தரம்.' புலவர் எழும்பி வந்தார். 'ஐயா..உங்களுக்குத் தந்தி வந்திருக்கு. அதுதான் தர வந்தனான்'. தபால்காரச் சுந்தரம் கையிலிருந்த தந்தியைக் கொடுத்தான். 'தந்தியா... எனக்கு யாரிருக்கா அனுப்ப? கொண்டா பாப்பம்' வாங்கிப் பிரித்துப் படித்தார். சிறகில்லாது வானில் பறக்கும் உணர்வினைப் பெற்றார். அவருக்கு ஆச்சரியம். அத்துடன் அதிர்ச்சியாகவும் இருந்தது. 'இஞ்சார் பவளம். எனக்கு மண்டூருக்கு மாற்றம் போட்டிருக்கு. கந்தவனத்தார் சொன்னது சரியாய்ப் போச்சு. முதலில் அந்த மனிசனுக்குத்தான் இதைச் சொல்லணும்.' கூறிக்கொண்டு தந்தியை சட்டைப் பொக்கற்றில் மடித்து வைத்தார். 'கடவுள் சோதிக்கிறது மனிதர்களைப் புடம்போடத்தான். கஸ்டம் வந்தால்தானே கடவுளை நினைக்கிறம்.' பவளம் மனதில் இனந்தெரியாத பக்தியுணர்வு பீறிட்டுப் பாய்ந்தது.



புலவர் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு கந்தவனத்தாரைத் தேடிப் போனார். ஏனோ அவரது மனம் கனத்தது. 'அருமையான பிள்ளைகள். அன்புடைய சனங்கள். எப்படி அந்தச் சனங்களை விட்டு வருவது.? சீ... இந்த மனம் பொல்லாதது. இங்கிருந்தால் அங்கு இருப்பது நல்லதாகத் தோன்றுகிறது. அங்கிருந்தால் இங்கிருப்பது நல்லதாகப் படுகிறது. இல்லாததையெல்லாம் எண்ணி ஏங்குகின்றது. கந்தவனத்தார் தூரத்தில் வந்து கொண்டிருந்தார். சைக்கிளை விட்டு இறங்கி நின்றார். கந்தவனத்தாரிடம் செய்தியைச் சொன்னார். தனது சங்கடத்தையும் சொன்னார். அவர் ஒரு சிரிப்புச் சிரித்தார். புலவருக்கு அதன் பொருள் விளங்காமலில்லை. புலவரே நீங்கதானே 'தோப்பூரில் வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை உனக்கு ஆப்பு வெச்ச தாரு அதனை அகற்றி வைப்பவர் யாரு. என்று பாடிநீங்க. ஆப்பு அகற்றப்பட்டுவிட்டது. சந்தோசமாக உலாவருவோம். நம்மட ஊருக்கு நல்லதச் செய்வம். வாங்க ஒருக்கா முருகனிட்டப் போய்வருவம்.' கோயிலுக்குச் சென்று மனதார வணங்கினார். விடைபெற்று வீட்டுக்குத் திரும்பினார்;.


கற்பனை கலந்த உண்மை

1 comments:

Unknown December 7, 2009 at 12:50 PM  

மிகவும் அருமை ஐயா உங்கள் கதை. உண்மைதான்; மனிதமனம் விசித்திரமானதுதான்.ஒரு மனம் இரசிப்பதை இன்னொரு மனம் இரசிப்பதில்லயே. பிறிதொரு தேசத்திலிருந்தாலும் எமது ஊர்களையும், இயற்கைகளையும் இரசித்து ஒருமுறை உலா வரும் சந்தர்ப்பம் கிடைத்து எனக்கு உங்கள் கதையால். மிகவும் நன்றி..... வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் இனம் புரியாத ஆனந்தம் ஏற்பட்டது இதை வாசிக்கும் போது.......

-திருமலை விக்னா-

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP