Thursday, February 4, 2010

ஆத்ம விஜயம்.

வான வீதியில் மேகக்கூட்டங்கள் காற்றிலாடி அசைந்து செல்கின்றன. அவற்றினூடே புள்ளிகளாய், மின்மினிப் பூச்சிகளாய் ஆயிரமாயிரம் ஆத்மாக்கள் பவனி வருகின்றன. சில பிரகாசமானவையாகத் தெரிகின்றன. சில பிரகாசம் குறைந்தனவாய் அசைகின்றன. மண்ணுலகில் பிறவியெடுத்தபோது செய்த செயல்களுக்கேற்ப பிரகாசம் கூடியும் குறைந்தும் உள்ளதாம். அந்த ஆத்மாக்களுக்குத்தான் அவை புரியும். காலம் எப்போது கனிந்து வரும்? அதுவரை அவை மேகக்கூட்டங்களிடையே வேண்டிய இடங்களையெல்லாம் பார்த்து அனுபவித்து வரவேண்டும். பூவுலகில் அந்தரத்தில் திரியலாம். வான வீதியில் உலா வரலாம். ஆனால் உடலும் உயிரும் சேர்ந்திருக்கும் போது அனுபவித்த இன்பதுன்பங்களை அனுபவிக்க முடியாது. கனவுலகில் நாம் அனுபவிக்கும் காட்சிகள்போல் அவை இருக்கும். இது நியதி. காலம் கனிந்ததும் பூவுலகில் பிறவியெடுக்கலாம். பிறந்து பூவுலக சுகபோகங்களை அனுபவிக்கலாம். அங்கு வாழும்போது செய்யும் செயல்களுக்கேற்ப பலனை அனுபவிக்கலாம். ஆனால் அந்தக் காலம் எப்போது கனியும். ஐயாயிரம் ஆண்டுகள் செல்லவேண்டுமாம். அதுவரை வானுலக வாசம்தான்.



வானவீதி எவ்வளவு அற்புதமானது. விரிந்து எல்லையற்றதாய் பரந்துள்ளது. நீலமாகவும் கருமையாகவும் சிற்சில இடங்களில் செம்மஞ்சள் நிறத்திலும் காட்சியாகிறது. அகண்டமாய் ஆயிரமாயிரம் பால்வெளிகளையும் சூரியக்குடும்பங்களையும், நட்சத்திரப் பூக்களையும் சூடியுள்ளது. இந்த நட்சத்திரங்கள் யாவும் ஒவ்வொரு சூரியனாம். அவற்றைச் சுற்றிச் சில சந்திரன்கள். இவை அனைத்தும் கிரகங்களாம். இவை அந்தத்தச் சூரியனைத் தலைவனாகக் கொண்ட குடும்பங்களாம். அதில் ஒன்றுதான் நாம் வாழும் பூமியுள்ள சூரியக் குடும்பம். இந்த அகண்ட வானவீதியில் எத்தனை சூரியக் குடும்பங்கள். அத்தனையும் வானவீதியில் தாமே சுழன்று கொண்டு முட்டிமோதாமல், தமக்கென ஒதுக்கிய பாதையில் விரைந்து செல்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக விரைந்து செல்லும் கற்கோளங்கள் எத்தனை. வாயுக்கோளங்கள் எத்தனை? இத்தனை கோடி அதிசயங்களை அகண்டத்தில் வைத்தது யார்? வானவீதியில் ஒளிக்கற்றைகளின் சோடிப்பு. இடையிடையே ஆகாய கங்கையெனும் பால்வெளிச் சூழல். ஒவ்வொரு பால்வெளியிலும் சூரியக்குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் கிரகங்களின் அற்புதங்கள். கிரகங்கள் மிகவும் அழகானவை. சிலவற்றைச் சூழ வண்ண வளையங்கள் தெரிகின்றன. மேகப்படலங்கள் மூடியுள்ளன. அத்தனை கிரகங்களிலும் உயிரினங்கள் உண்டா? வானவீதியில் உலா வரும் கோடானு கோடி உடுக்களைப் போல்தான் கோடானுகோடி ஆத்மாக்களும் உண்டாம். உருவம் அற்ற நிலையில் பாட்டம் பாட்டமாய் ஆத்மாக்கள் வலம்வருகின்றன.



ஆத்மாக்கள் எங்கும் செல்லக்கூடியனவாம். ஆனாலும் அவற்றுக்கும் கட்டுப்பாடுகள் உண்டாம். சூரியக்கதிர்கள் அவற்றைச் சுட்டுப் பொசுக்காது. வாயுக்களுள்ளே புகுந்து வரும். கிரகங்களைச் சூழ்ந்துள்ள தூசிதுணுக்கைகளாலான வளையங்களுள் புகுந்து ஒளிக்கற்றைகளில் பிரகாசித்து, இறுகிய வாயுப் பனிக்கட்டிகளில் குந்தியிருந்து குதுகலித்து ஆத்மாக்கள் பவனிவருகின்றன. ஆத்மாக்கள் தமக்குள்ளேயே உணரக்கூடியன. நமது கனவில் எத்தனை மாந்தர்களைக் காணுகிறோம். கதைக்கிறோம். அவர்களும் கதைப்பார்கள். நாம் கனவில் கதைத்தவர்கள் நமது அருகிலேயே இருப்பார்கள்;. அல்லது பக்கத்தில் இருப்பார்கள்;. நாம் என்ன கதைத்தோம் என்பது அவர்களுக்குப் புரியாது. தெரியாது. நாம் உறக்கத்தில் இருக்கும்போது கனவு காணுகிறோம். மனிதர்கள் கனவு காணுதல்போல் ஆத்மாக்களும் உணர்கின்றன. அவை கனவு உலகத்தில் சஞ்சரிக்கின்றன. அவை உயர்திணையைச் சேர்ந்தனவையா? அல்லது அல்திணையைச் சேர்ந்தனவையா? பௌதீகத் தன்மையைக் கொண்டனவையா? அல்லது இராசயனத் தன்மையைக் கொண்டனவையா? புரியாத புதிர்.



அவற்றுக்கு வெயிலும் மழையும். வெப்பமும் குளிரும் ஒன்றுதான். மழைபெய்யும் ஆனால் ஆத்மாக்கள் நனைவதில்லை. சூரியனின் வெப்பக்கிரணங்கள் தகிதகிக்கும். ஆனால் ஆத்மாக்களை அவை சுட்டெரிப்பதில்லை. பசியில்லை. தாகமில்லை. அவற்றால் எதனையும் சாதிக்கமுடியாது. எதனையும் சாதிப்பதற்கு ஒரு உடல்வேண்டும். உடலுக்கேற்ற சாதனைகளைத்தான் சாதிக்கலாம். ஆத்மாக்கள் சாதாரணமாக ஒரு கட்புலனாகாத புள்ளியாகவே அசைந்து திரிபவை. சாதாரண மனிதர்களது கண்களுக்கு அவை புலப்படாதன. ஆனால் அவை மனிதர்களையும், உலக அதிசயங்களையும் உணர்ந்து கொள்ளக் கூடியன. பூவுலகத்தில் மக்கள் விஷேட நாட்களாகக் கருதும் தினங்களில் ஆத்மாக்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களைப் பார்த்து வரலாம். உற்றார் உறவினர்களையும் கண்டு களித்து வரலாம். அவர்களோடு பேசிமகிழலாம். ஆனால் ஆத்மாக்கள் பேசுவதை மனிதர்கள் புரிந்து கொள்ளமுடியாது. ஆத்மாக்களுக்கு உடல் இருந்தால்தானே மனிதர்கள் அவற்றைப் பார்க்கலாம். பேசலாம். அதற்காகத்தானோ என்னவோ, ‘பிதிர்க்கடன்’ என்ற சடங்குமுறை நமது சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பெருங்கூட்டமாக ஆத்மாக்கள் வானவீதியில் உலா வருகின்றன. எங்கும் இன்பமயம்.



பல்லாண்டுகள் கழிந்தபின் பாட்டம் பாட்டமாய் அவை இன்று பூவுலகம் திரும்புகின்றன. பௌர்ணமி நாள். இருள்பரந்து பூவுலகைப் போர்த்திப் பார்க்கிறது. வானவீதியில் சந்திரனின் ஆட்சி. நட்சத்திரப்பூக்கள் கண்சிமிட்டுகின்றன. இருள் கலைந்து சந்து பொந்துகளிலும், மரஞ்செடி கொடிகளுக்குள்ளும் ஒளிந்து கொள்கின்றது. ஆத்மாக்கள் காற்றில் ஆடி அசைந்து கீழிறங்குகின்றன. எத்தனை அற்புதங்கள். எங்கும் அழகுக் காட்சிகள். பார்ப்பவர்களுக்கு வெளியாகத்தான் தெரியும் ஆனால் வெளி வெறுமையாக இல்லை. கட்புலனாகாத பல்வேறு அணுத்திரள்களும், வானலைகளும் நிறைந்திருக்கும். அவற்றுள் ஆத்மாக்கள் கட்புலனாகாமல் உலாவரும். ஆத்மாக்கள் பெருந்திரளாய் வான்வீதி வழியாக வருகின்றன. பலபக்கங்களுக்கும் பிரிந்து செல்கின்றன. கீழே புவிக்கோளத்தில் நீலக்கடலின் மத்தியில் இலங்கைத்தீவு இலங்குகிறது. கொள்ளையழகு கூத்திடுகிறது.



“இதுதானே இலங்கைத் தீவு. கடலால் சூழப்பட்டு மிதக்கிறது. கொள்ளை அழகானது.” ஆத்மாக்கள் உணர்ந்து கொள்கின்றன. வாழ்ந்தவர்கள், வாழ்ந்து போனவர்கள் எத்தனை ஆயிரம்பேர் மெச்சினார்கள் “இதுதான் சுவர்க்க பூமி. இங்குதான் செல்வங்கள் புதைந்து கிடக்கின்றன. தேவர்கள் வாழுமிடம் இதுதானா? அங்கே பாருங்கள். அற்புதமான மலைகள். மேட்டு நிலங்கள். பள்ளத்தாக்குகள். அசைந்து ஊரும் சிற்றாறுகள். அலைமோதிச் சிரிக்கும் அற்புதமான கடற்கரைகள். வளமான நிலம். இதுதான் நாம் வாழ்ந்த நம் தாய் நாடு.” அங்கு வாழ்ந்திருந்த ஆத்மாக்கள் உணர்ந்து கொள்கின்றன. மற்ற ஆத்மாக்களுக்கும் புரியும் என்ற நம்பிக்கை. அவை மிக உயரத்தில் இருந்து பார்ப்பதால் இலங்கைத் தீவின் முழுப்பரப்பும் தெரிகிறது. “அதோ வளைந்து வளைந்து விரைந்தும், மெல்லெனவும் ஓடும் நதிதானே மகாவலி? என்ன அற்புதமான நதி. அது சங்கமித்து திருக்கோணேஸ்வரனின் திருப்பாதங்களைக் கழுவுகிறதா?” அங்கே.. அதோ…அதுதானே கோணேசர் கோயில். அதோ அந்தப்பக்கம் தெரிவது கல்யாணி. நதியா? எத்தனை நீர்வீழ்ச்சிகள்? அதோ சிவனொளிபாதமலை தெரிகிறது. சிவனின் பாதங்கள் இருப்பதைப் பாருங்கள்.” சில ஆத்மாக்கள் பூரிப்போடு கூறி உலாவருகின்றன.



“அவை சிவனின் பாதங்கள் என்று யார் சொன்னது?. அவை எங்கள் போதிமாதவனின் பொற்பாதங்கள். அது சமனலகந்த. அது கல்யாணி இல்லை. களனி கங்கை” இறுமாப்புடன் சில வாதிட்டன. “அந்த மலையில் கௌதம புத்தரின் பாதங்களின் அடையாளங்கள் உண்டு. அங்கே பாருங்கள். புத்தம் சரணம் கச்சாமி கூறும் துறவிகளை.” சில ஆத்மாக்கள் கூறிக் கொண்டன. “ஏனப்பா கத்துறியள். அவை ஆதாமின் பாதச்சுவடுகள். அதனால்தான் அதனை ‘அடம்ஸ் பீக்’ என்று சொல்லுறம்.” சில வாதிட்டன. “அதெல்லாம் கிடையாது. அவை அல்லாவின் அடையாளச் சின்னங்கள்” வாதப் பிரதிவாதங்கள் வெளிப்பட்டன.



“இது கற்பனைக் கதை. கற்பாறையில் மனிதனின் பாதம் எப்படிப் பதியும். மணற்தரையில் என்றால் காற்தடம் பதிவது சாத்தியம். அல்லது சந்திரத்தரைபோல் இருந்தால் நம்பலாம். அங்கே காற்று இல்லை. தூசிப்படலம்தன் உள்ளது. அமெரிக்கரது காற்பாதத்தடங்கள் இன்னும் அங்கு சந்திரத்தரையில் அழியாது இருக்கு. ஆனால் இது பூமி. இங்கு காற்று வீசும். மழைபெய்யும். அவை அழிந்துவிடும். கற்பாறையில் உளிகொண்டு செதுக்கியிருக்க வேண்டும். அல்லது இயற்கையாக காற்றின் தின்னற்செயலினால் உருவாகியிருக்க வேண்டும்.” சில ஆத்மாக்கள் உணரத் தலைப்பட்டன. சர்ச்சை உருவாகிவிட்டது. ஆத்மாக்கிளிடையே கருத்து மோதல்கள். பலபிரிவுகள் தோன்றி சச்சரவுகள் வளர்ந்தன. “சரி..சரி கதையை விடுங்க. இப்போது நமக்கென்று இடமிருக்கா? அனுபவிக்க உடலிருக்கா? நாங்கள் அலைந்து திரியும் இலங்கைத் தமிழ் அகதிகளைப் போல அந்தரத்தில் வாழ்கிறோம். நம்மைக் கண்காணிக்க எத்தனை பூதப்படைகள் காவலுக்கு உள்ளன. நமக்கெதற்கு வீண்வம்பு? அது என்ன…? நிலத்திலும் நட்சத்திரங்களா? நட்சத்திரங்களைப்போல் மின்னுகின்றன”. நகரங்களில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆத்மாக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. “அவை மிதக்கும் நகரங்கள். மலைநாட்டின் நகரங்கள். அனுமான் கண்ட இலங்கைமாநகர்.” படித்த பண்டித ஆத்மாக்கள் புரிந்து கொண்டு சந்தோசத்தில் அந்தரத்தில் மின்மினிப்பூச்சிகளாய் பவனி வருகின்றன. அமைதிநிலவியது.



“இந்த இலங்கைத்தீவில் ஒருகாலத்தில் பிசாசுகள் வாழ்ந்தன. மரங்களையும். பிசாசுகளையும், சிலைகளையும் வணங்கும் மிலேச்சர்கள் வாழ்ந்தார்கள்;. போதிமாதவன் வந்ததால் புனிதமானது. இது எங்களது பௌத்த நாடு”. சடுதியாகச் சில ஆத்மாக்கள் ஒன்று சேர்ந்து கொண்டு சத்தமிட்;டன. சில ஆத்மாக்கள் வட்டமடித்து வந்தன. “ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் நாகரும் இயக்கரும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு ஆட்சிபீடம் இருந்தது. மேலைநாட்டில் மாயா, இன்கா நாகரீகம் கொடிகட்டிப்பறந்தது. ஆனால் அந்த ஆதிக் குடியினரின் வரலாறு அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டது. அவர்கள் இப்போது சில வரலாற்றுப் புத்தகங்களில்தான் வாழ்கிறார்கள்.; இப்போது இலங்கைத் தமிழருக்கும் அதே கதிதான் நேர்ந்திருக்கு. நமக்கும் நேரலாம்.” சில பறந்து பறந்து ஏனைய ஆத்மாக்களுக்குப் புரியவைத்தன. “இலங்கை எங்கள் பௌத்த நாடு”. பௌத்தத்தை தழுவியிருந்த ஆத்மாக்கள் கூக்குரலிட்டனர். “என்ன கூச்சல். இன்னும் உங்களுக்கு ஞானம் வரல்லையா?”. முதிர்ந்த ஆத்மாவொன்று சினத்தோடு கேட்கிறது.



பாய்ந்து சென்ற ஆத்மாவொன்று குறுக்கிடுகிறது. “பௌத்தத்தைத் தழுவுமுன் உங்களது சமயம் என்ன?” கேட்டது. அதற்கு விடை மௌனந்தான். “பிறக்கும்போது மனிதக் குழந்தைக்கு சாதிசமயத்தைப் பற்றித் தெரியுமா? மனிதன் சுயநலத்துக்காகத் தனக்குத்தானே பூட்டிய விலங்குதான் இவை. நாங்க என்ன சாதி? நீங்க என்ன சமயம்? என்ன மொழி பேசுகிறோம்? எதை இந்தப்பூவுலகுக்குக் கொண்டு சென்றோம்? எதை நம்மோடு எடுத்து வந்தோம்.? நம்மிடம் என்ன உள்ளது?. உடலும் இல்லை. நமக்கேன் வீண்வம்பு? பேசாது வந்தவேலையைப் பாரப்போம். பிதிர்கடன் செய்யச் சனங்கள் காத்திருக்கும். அதுகளின் மனதில மகிழ்ச்சியைப் பொங்கச் செய்வம். வாங்க போவோம்.” கூறிப் புறப்பட்டன. வானம் ஒரேசீராய் வெறும் வெட்டைவெளியாய் தெரிகிறது. காற்று வீசிக்கொண்டிருக்கிறது.



வான்வெளியில் மின்னல் கொடிகட்டுகிறது. சிரிப்பொலி ஒலிக்கிறது. ஒரு ஆத்மா எதையோ காட்டிப் புரியவைக்க முயல்கிறது. “சற்று நில்லுங்கள். கீழே பாருங்கள். இந்த இடத்தில்தான் நான் வீழ்ச்சியுற்றேன்”. ஒரு ஆத்மா எதையோ கூறமுற்படுகிறது. “என்ன புதுக்கதை இது”. சில ஆத்மாக்கள் அந்தரத்தில் நின்று கேட்டன. “ புதுக் கதையில்லை. உண்மையான வரலாறு. சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்க” அந்த ஆத்மா கெஞ்சி வற்புறுத்துகிறது. மற்றவை பரிதாபத்துடன் நின்று கேட்கின்றன. ”அப்போது எனக்கு வயது அறுபதைத் தாண்டியிருந்தது. தள்ளாத வயதுதான். மன்னர்கள் பேராசை பிடித்தவர்கள். நான் அப்படித்தான் இருந்தேன். ஆட்சியில் இருந்தால் உல்லாச வாழ்க்கை வாழலாம். நாற்பத்து நான்கு ஆண்டுகள் அனுராதபுரத்து அரசகட்டிலில் இருந்தேன். மக்கள் சந்தோசமாகத்தான் வாழ்ந்தார்கள். ஒரு குறையும் வைக்கவில்லை. குறைகளைக் கேட்டு அவற்றைக் களைவதற்கு அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணி கட்டியிருந்தேன். எத்தனை மக்களின் துயர் துடைத்திருப்பேன். எனது மகன் தேரில் பவனிவந்தான். ஒரு பசுவின் கன்று ஓடிவந்தது. தெரியாமல் தேர்க்காலில் அடிபட்டு மாண்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை தனது கொம்பால் இழுத்து அடித்து நின்றது. அதன் குறையைப் போக்க எனது மகனைத் தேர்க்காலால் கொன்றேன். எனது வாரிசையும் இழந்தேன். அந்தப்பசு அடைந்த துன்பத்தை நான் அனுபவித்தேன்.” அந்த ஆத்மா தொடர்ந்தது.



“இந்தத்தீவில் சைவத்துடன் பௌத்தமும் இருந்தது. இரண்டு மொழிபேசும் மக்கள்தான் இருந்தார்கள். சிங்களம், தமிழ் என்ற பேதமே இருக்கவில்லை. எனது படையில் ஏராளமான சிங்களவர்கள் இருந்தார்கள்”. அந்த ஆத்மா சிலாகித்தது. “அதுசரி யார் நீங்கள்? எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.” சில ஆத்மாக்கள் விபரமறிய ஆவலுடன் நின்றன. “நான்தான் எல்லாளன். இந்த இலங்கை நாட்டின் மன்னன்”. ஆச்சரியமாக குழுமியிருந்த ஆத்மாக்கள் பார்த்தன. “ஓ..இந்தியாவில் இருந்து வந்த தமிழனா”? ஏளனத்தோடு சில கூக்குரலிட்டன. “அப்படி யார்சொன்னது? நான்தான் எல்லாளனாக இருந்தேன். நான் இந்தியாவில் இருந்து வரவில்லை. அதோ தெரிகிறதே மகாவலி. அதற்கப்பால் வடக்கே விரிந்து கிடக்கும் வளநாடுதான் நான் பிறந்து வளர்ந்து விளையாடிய தொட்டில். என் மூதாதையர் வாழ்ந்து மடிந்த புண்ணியபூமி. நான் இந்தியாவில் இருந்து வந்தவன் என்று கதை கட்டிவிட்டார்கள். தெற்கே இருந்தவர்களுக்கு மகாவலிக்கு அப்பால் இந்தியா என்றுதான் எண்ணியிருந்தார்கள். இந்த மண்ணிலதான் பிறவியெடுத்தேன். இந்த மண்ணில் பேதங்கள் இருக்கவில்லை. சமத்துவம் இருந்தது. சாதி,மத மொழி வேறுபாடில்லை. எனது மக்களுக்கு ஒரு குறையும் வைத்ததில்லை. தென்பகுதியில் கவந்தீசன் மன்னன் ஆண்டான். நாங்கள் நல்ல நண்பர்கள். அவனும் என்னைப்போல் நல்லாட்சி செய்தான். அவனுக்கெதிராக அவனது குடும்பமே சதிசெய்தது. மகாராணி விகாரமகாதேவி முக்கிய பங்கினை வகித்தாள். மூத்த மகன் துட்டகாமினியைத் தூண்டிவிட்டாள். ஆட்சியைக் கைப்பற்ற சூழ்ச்சிகள் செய்தார்கள். எல்லாம் பதவிக்காகத்தான். அரச கட்டில் வேண்டும் என்று தந்தையை எதிர்த்து வாதாடினான். சிலதுறவிகள் துணைபோனார்கள். தாய் விகாரமகாதேவி வாதாடவைத்தாள். அதற்குக் காரணம் இருந்தது. கவந்தீசன் காலம்வரும்வரை பொறுத்திருக்கும்படி அறிவுரை கூறினார். அவன் துட்டகாமினி மகா துஸ்டன். தந்தையின் சொல் அவன்காதில் விழவில்லை. தான் அரசனாகவேண்டும் என்று வாதாடினான். கவந்தீசன் உடன்படவில்லை. துட்டகாமினி தனது நாட்டைவிட்டு ஓடினானன். அவனுக்கு தாய் பக்கபலமாக இருந்தாள்.



எனது படைத்தலைவன் விகாரமகாதேவியின் அன்புக் காதலன். கவந்தீசனுக்கும் தெரியும் நானும் அறிந்திருந்தேன். நான் அதனைக் கண்டும் காணாதிருந்து விட்டேன். அது பின்னர் எனக்கு எதிராக மாறுமென்று எண்ணவில்லை. துட்டகாமினி எனக்கெதிராகப் படையெடுத்தான். எனக்கு வாரிசு இல்லை. இருந்திருந்தால் அவன் ஆட்சியில் இருந்திருப்பான். அது துட்டகாமினிக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. துட்டகாமினியின் படையில் ஏராளமான தமிழ் வீரர்கள் இருந்தார்கள். அப்போது இருந்ததெல்லாம் பதவி மோகம் மட்டுமே. ஒரு அரசனுக்காக, அவனது சுகபோகங்களுக்காக எத்தனை உயிர்கள் பலியாக வேண்டியிருந்தது. இப்போதும் ஜனநாயகம் என்ற போர்வையில் அதுதானே நடக்கிறது. இன்றும் ஏழைக்குடும்பங்களின் பிள்ளைகள்தான் படையில் சேருகிறார்கள். சம்பளத்துக்காகவே அவர்கள் போருக்குச் செல்கிறார்கள். இளமையிலேயே பலியாகி விடுகிறார்கள். ஆனால் நாட்டுப்பற்று என்ற மாயையை போர்த்திவிடுகிறார்கள்.”. ஆத்மா கவலையோடு விளக்கியது.



“போர் தொடங்கியது. இந்தப் போர் என்னோடு முடியட்டும். துட்டகாமினியை நேருக்கு நேர் சண்டையிட அழைத்தேன். அவனுக்கும் சரியாகப் பட்டது. அவனது நோக்கம் எப்படியும் வெற்றி கொள்வதுதான். துட்டகாமினியின் தாய்தான் விகாரமாதேவி. துட்டகாமினியைத் தூண்டிவிட்டவளே அவள்தானே? அவளது மனதினில் புதையுண்டு கிடந்த இன்ப ரகசியங்களுக்கு கவந்தீசனும், நானும் தடைக்கற்களாக இருந்தோம். அதனால் துட்டகாமினி துணைபோனான். அவள் தனது மகன் துட்டகாமினியின் வெற்றிக்காக எதையும் செய்யத்துணிந்தாள். நாட்டுப்பற்று, தேசப்பற்று என்று அனைவரையும் நம்பவைத்தாள். எனது தளபதியின் காமக்கிளத்தியாகி அவனைக் கைக்குள் போட்ட வரலாறு சாதாரண மக்களுக்குத் தெரியாது. அதனை விகாரமாதேவி செய்தாள். அதனால் எனது படை வீழ்ச்சிகண்டது. தள்ளாத வயதில் யானையில் இருந்து சறுக்கிக் கீழே விழுந்தேன். அதுகூட ஒருசதிதான். அது துட்டகாமினிக்கு வாய்ப்பாயிற்று. நான் எழமுன் அவனது ஈட்டி எனது உடலில் பாய்ந்தது. என்னுயிர் பிரிந்தது. அவனைப் பாராட்டுகிறேன். எனது உடலை ராசமரியாதையுடன் அடக்கம் செய்தான். எனக்காக கல்லறை கட்டி வணக்கமும் செலுத்தப் பணித்தான். நான் இந்தியாவில் இருந்து படையெடுத்து வந்திருந்தால் துட்டகாமினி எனக்கு மரியாதை காட்டியிருக்கமாட்டான். என்னுடலை வாளால் அரிந்து கோடரியால் கொத்திக் குதறியிருப்பான். துட்டகாமினி ஒரு வகையில் சுத்த வீரன்தான்.” அந்த ஆத்மா சற்று மௌனமாயிருந்தது. பின் தொடர்ந்தது.



“அவன் சிங்கள இனவெறி பிடித்தவன் அல்ல. இப்பொழுது வரலாறு எழுதும் இனப்பற்றாளர் எனக்கூறிக் கொள்ளும் அறிவிலிகள்போல் துட்டகாமினி அப்படிப் பட்டவனும் இல்லை. நான் இலங்கையின் சோழகுலத் தமிழ்மன்னன். அப்படி இருந்தும் எனது கல்லறைக்கு மரியாதை செலுத்தினான். மரியாதை செலுத்தும்படி கட்டளையும் இட்டான். அவனுக்கு மரியாதை தெரிந்திருந்தது. அவன் அரசகுலத்தவன். அவனை எண்ணிப் பெருமையடைகிறேன். போரில் ஒரு மன்னன் மடிந்தால் அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை அவன் அறிந்திருந்தான். செய்தான்”. பெரிய பிரசங்கம் நடப்பதை ஆத்மாக்கள் உணர்ந்து கொண்டன. “அந்தக் கல்லறை எங்கே? அவ்விடத்தில்தான் இருந்தது. உங்களுக்குத் தெரிகிறதா? அதனை அழித்திருப்பார்கள்”? அந்த ஆத்மா சோகமாக அசையாது நிற்கிறது. அப்படியே ஆத்மாக் கூட்டம் செயலிழந்து நிற்கிறது. “நான் விட்ட பிழைகள் ஏராளம். எனது தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதாக ஒன்றும் செய்யவில்லை. சிங்கள தமிழ் மக்கள் என்று பிரித்துப் பாரக்கவில்லை. எல்லோரும் இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டோடுதான் மக்களை நேசித்தேன். அதுதான் நான்விட்ட மகாதவறு”. அந்த ஆத்மா சோகத்தில் சொல்வதை மற்ற ஆத்மாக்கள் புரிந்து கொண்டன.



ஆத்மாக்களின் பெரியதொரு கூட்டம் எதிர்ப்புறமாக வருகின்றது. எதிர்பாரத சந்திப்பு. வந்த ஆத்மா சற்றுத்தயங்கித் தாமதித்து நிற்கிறது. அந்த ஆத்மா எல்லாளன் பக்கம் செல்கிறது. பேசாது மௌனித்து நிற்கிறது. “அங்கே கீழே நடப்பதைப் பாருங்கள்”;. அனைத்து ஆத்மாக்களும் பூமியில் நடப்பதைப் பார்க்கின்றன. அது திருகோணமலை நகர்ப்பகுதியாகத் தெரிகிறது. ஒரு கூட்டம் ஆயுதங்களோடு செல்கின்றது.. குண்டுகளை வீசி எறிகிறது. அவை இடியோசையுடன் வெடித்துச் சிதறுகின்றன. வீடுகள் எரிகின்றன. எங்கும் புகைமண்டலம். மனித உடல்கள் வீதிகளில் கிடக்கின்றன. மனிதர்கள் இனவெறிபிடித்து ஆளையாள் தாக்கி அழிகின்றனர். ஆத்மாக்கள் அழுகின்றன. “நான்தான் காமினியாக இருந்தேன். நாம் சண்டையிட்டது அரசகட்டிலுக்காக. ஆனால் அதனையே திரிபுபடுத்தி இனவெறியாக்கி இன்பம் காணும் மனிதர்களைப் பார்க்க வேதனையாக உள்ளது. நான் சண்டையிட்டுக் கண்டதென்ன? நான் நிரந்தரமாகப் பூவுலகில் இருப்பேன் என்ற அகங்கார நம்பிக்கை. இங்கே நமக்கென்ன இருக்கிறது? நான் மன்னன் இல்லை. சாதாரண ஆத்மா. எல்லாம் மாயைதான். இதைத்தான் புத்தபகவானும் சொன்னார். யாரும் கேட்டு நடப்பதாயில்லை.



“இந்த ஆத்மா உடலுள் சென்றால் எவ்வளவு கர்வம் கொள்கிறது. எத்தனை ஆயிரம் உயிர்களைக் கொல்லக் காரணமாக இருந்தோம். அந்தப் பாவங்களைப் போக்கத்தானே கோயில்களையும், விகாரைகளையும் கட்டிக்கொடுத்தோம். மனித உடலோடு இருக்கும்போது முதுமைப் பருவத்தில் நான் செய்த பாவத்துக்காக எத்தனை இரவுகள் உறங்காது அழுதிருப்பேன்.? உலக வாழ்க்கையைப் புரிந்து எல்லோரும் பிறவியின் பேரின்பத்தைப் பெறுவதற்காக. நாம் கட்டிய கோயில்களும் விகாரைகளும் அழிந்த நிலையில் கிடக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பது யார்? இந்த இலங்கைமாதாவின் வரலாற்றுச் சின்னங்கள் என்று பாதுகாப்பவர் யார்?. அவற்றை இடித்து அழிப்பவர்கள் ஏராளம். இவை மனிதரிடையே வேற்றுமையையும், விரோதங்களையும் வளர்க்கின்றன. என்னைத் தங்களது இனத்தின் காவியத்தலைவனாகச் சில சுயநலப்புத்தி ஜீவிகள் சிருஸ்டித்து மக்களைப் பிரித்து அதிலே தங்களது லாபத்தைப் பெருக்கிவருகிறார்கள். சனங்களும் ஏமாந்து அவர்களது வலையில் வீழ்ந்து அழிகிறார்கள். நாம் விட்ட தவறுகளால் வந்த வினையிது. அங்கே பாருங்கள். தமிழர்கள் வேறு, சிங்களவர்கள் வேறு என்று சண்டையிட்டுச் சாகிறார்கள்.” வேதனையில் மூழ்கி அந்த ஆத்மா தவிக்கிறது.



“அங்கே பாருங்கள்.” சில ஆத்மாக்கள் ஒரு திசையைக் காட்டுகின்றன. அனைத்து ஆத்மாக்களும் அப்பக்கம் திருப்புகின்றன. பெரியதொரு யுத்தம் நடக்கிறது. இரண்டு குழுக்கள் மோதுகின்றன. நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் குண்டுகளைக் கக்குகின்றன. அவை வெடித்துக் கொத்துக் கொத்தாகக் குண்டுகள் பொழிந்து வெடிக்கின்றன. காடுகள் தீப்பற்றி எரிகின்றன. விலங்குகள் வீழ்ந்து சாகின்றன. எங்கும் அவல ஒலி. மனித உடல்கள் வெடித்துக் கிழிந்து சிதறி பிணவாடை வானெழுகிறது. பெண்களின் உடல்கள் நிர்வாணமாக்கப் பட்டு குதறப்படுகிறது. ஆண்களின் உடல்களையும் நிர்வாணமாக்கிக் கொடரியால் கொத்திக் கிழித்துக் கேவலப் படுத்துகிறார்கள். துட்டகாமினி எனும் ஆத்மா தேம்பி அழுகிறது. “ எதிரி இறந்தால் அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும். இந்த மனிதர்கள் மிருகங்களாக மாறிவிட்டார்கள். இந்த உலகுப் பயணம் வேண்டாம். திரும்புங்கள் வேறுகிரகத்துக்கு போவோம். எத்தனை யுகங்களானாலும் மனிதப்பிறவி இனியும் வேண்டாம. ”;. ஆத்மா வேதனைகொண்டு குலுங்கி அழுகிறது.



“நாங்கள் மட்டுமென்ன விதிவிலக்கா? நாங்கள் விட்டுச் சென்ற கோசங்களால் எத்தனை பிரிவுகள். உயிரிழப்புக்கள் ஏற்பட்டன”. மக்களை நல்வழிப்படுத்தச் சமயங்களைத் தோற்றுவித்த பொறுப்பான சில ஆத்மாக்கள் புலம்புகின்றன. தாங்கள் விட்டதவறுகளால் மனித இனம் தான்தோன்றித் தனமாகச் செயற்படுகிறது. சமயக்குழுக்களாகவும், இனங்களாகவும், மொழிவெறி கொண்டும், அதிகாரம் படைத்தவர்களாகவும் வாழ்கிறது. பதவி ஆசை கொண்டு அலைகிறது. இந்த மனிதப்பிறவி தேவைதானா? பிறப்பு இருக்கும் வரை பிரிவினைகளும், அழிவுகளும், துயரங்களும், இறப்பும் தொடரும். பிறவாத வரம் வேண்டும். அப்படிப் பிறப்பெடுத்தால் மனிதப் பிறவியல்லாத பிறவி வேண்டும். ஆத்மாக்கள் சோகத்தோடு வந்தவழியே திரும்பிச் செல்கின்றன.


யாவும் கற்பனை.

Read more...

Wednesday, February 3, 2010

நான் பொய்யனாம்

உடம்பெல்லாம் ஒரே வலியாக இருந்தது. இன்றாவது பகல் உணவுக்குப்பின் சற்று சாய்ந்து ஓய்வாக இருக்கவேண்டும். இப்படியொரு எண்ணம் உருவாகியது. பிரபஞ்சம் பற்றிய சிந்தனை வந்து மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தது. மனமென்னும் கடலில் எண்ணஅலைகளின் வண்ணம். ஓன்றன்பின் ஒன்றாக சுழன்றடித்தன. பிரபஞ்சமென்பதென்ன? நாம் வாழும் இந்தப்பூமியைப் பற்றியே சரியாகத் அறியவில்லை. எப்படிப் பிரபஞ்சத்தினை அறிவது? எப்படி மாணிக்கவாசகர் ‘மாற்றமாம் வையகம்’ என்று சொன்னார். அவர் எங்கே விஞ்ஞானம் படித்தார். எங்கோ சுமத்திராவுக்குப் பக்கமாக புவிநடுக்கம் தோன்ற இலங்கையின் கிழக்குக் கரையோரம் ஆழிப்பேரலைகளால் சீரழிந்து போயிற்று. சனங்களையும், பொருள் பண்டங்களையும் காவுகொண்டு போயிற்று. முன்பிருந்த இலங்கையின் கடற்கரையோரத்தின் படம் மாறிவிட்டிருந்தது. யப்பானுக்குத்தான் இதில் பெரிய புகழ்கிடைத்தது. சர்வதேசங்களால் ஒரு யப்பானியச்சொல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதுதான் ‘சுனாமி’ என்ற சொல். எல்லா மொழிகளும் உள்வாங்கிக் கொண்டன. பத்துவயதாக இருந்த பக்கத்து வீட்டுப் வயதுப் பார்வதி இன்று பாட்டியாகிப் போய்விட்டாள். திண்ணையுடன் இருந்த தென்னோலை வீடுகள் சிமெந்துக் கட்டிடங்களாக நிமிர்ந்துள்ளன.



எனது கைகளை, உயர்த்தி நிமிர்த்தி உதறிக்கொண்டு எழும்பி உடலைக் கண்ணாடியில் பார்க்கிறேன். இந்த உடல் சுருங்கி நரைதிரையோடு தெரிகிறது. இதைத்தானே கட்டழகு என்றும், அடர்த்தியான சுருண்ட தலைமயிர் என்றும் மனைவி சொன்னவள். எனது தேவைகளை யாரறிவார்.? யாதுமாகிநின்று எனது துயரங்களை எல்லாம் களைந்து, சுகம் தந்தவள். ஈருடலும் ஓருயிருமாகி இருந்த மனைவியும் வந்தவழியே போய்விட்டாள். நான்மட்டும் தனியனாகிக் கிடக்கிறேன். அவளது நினைவுச் சுழியில் சிக்கி மனம் தவிக்கிறது. அடுத்தபிறவி எடுக்கும் வரை சந்திரனில்தான் ஆத்மாக்கள் காத்திருக்குமாம். எங்கேயோ ஒரு புத்தகத்தில் வாசித்த நினைவு வந்தது. அவளும் சந்திரனில் இருப்பாளோ? ஆத்மாக்ளுக்குத்தான் உடலில்லையே. அவள் இருந்தால் எவ்வளவு நிம்மதி. தேவைகளை அறிந்து எல்லாம் செய்து தருவாளே.



‘ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன? வேரென நீயிருந்தாய். அதில் நான் விழுந்து விடாதிருந்தேன்.’ பாடல் அடிகள் வந்து செவிப்பறைகளில் குந்தியிருந்தன. எவ்வளவு ஆர்த்மாத்தமான உண்மை. நான் விழுந்து விடாதிருக்க அவள்தானே ஆதாரமாக இருந்தாள். நினைந்து கண்கள் குளமாகின. முதுமைக்காலம் பொல்லாதது. என்னதான் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என்று இருந்தாலும் மனைவியினால் நிறைந்திருந்த இடம் வெற்றிடம்தான். நாமும் போகும்வரை அதனை யாராலும் நிரப்பவியலாது. உலகத்தில் நிலையானது ஒன்றுமில்லை. மலைகளும் ஒரு வருடத்துக்கு நான்கு சென்றிமீற்றர்வரை நகர்வதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். சந்திரன் வளர்ந்து தேய்கிறது. அது வாழ்க்கையின் நிலையாமையைக் கூறுகிறதாம். இறப்புப் பிறப்புப் பற்றியும் கூறுகிறதாம். வாழ்க்கை இரவும் பகலும் போன்றது என்பார்கள். இதனை சுவாமி விபுலானந்தரும் ‘கந்தசாமி…’என்ற கவிதையில் கூறியிருக்கிறார். இதனைத்தான் நமது மணிவாசகனார் ‘மாற்றமாம் வையகம்’ என்று அன்று சொன்னாரோ?


நாட்டில் ஏற்பட்ட பிரச்சினையினால் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மக்கள் இடம்பெயர்ந்து நகரங்களில் அடைக்கலமானார்கள். நாங்களும் எங்கட கிராமத்தைவிட்டு நகரத்துக்கு தள்ளப்பட்டோம். திருகோணமலையில் வீடுகளுக்குப் பஞ்சம். காணியுள்ளவர்களுக்கு அதிர்ஸ்டலாபம். அதனால் அவர்களுக்குச் சந்தோசம். ஆயிரம் ரூபாவாக இருந்த ஒருபேர்ச் காணித்துண்டு பல லட்சரூபாக்களாக மாறியிருந்தது. நாங்கள் நால்வர் எடுக்கும் சம்பளத்தில் மிச்சம்பிடித்து ஆறுபேர்ச் நிலத்தை வாங்கி கொட்டிலமைத்துக் குடியிருந்தோம். ஓய்வூதிய பணிக்கொடை கிடைத்ததால் சிறிதாக இரண்டு அறைகொண்ட மாடியையும் அமைத்துக் கொண்டோம். எனக்கு மாடிதான் தஞ்சம். எனது அறையில் பேனாவையும் தாளையும் எடுத்து எழுதமுயன்றேன். தொடர்ந்து ஒரேஇடத்தில் இருக்கமுடியாது கைகால்கள் வலித்தன. எழுவதும் எழுந்து அறையினுள் உலாவுவதும்இ இருப்பதுமாக நேரம் போய்க்கொண்டிருந்தது. பங்குனி மாதத்துப் பற்றி எரியும் வெயிலின் வெப்பத்தைச் சுவர்கள் உறிஞ்சி அறையினுள் பரப்பிக் கொண்டிருந்தன. அறை போறணைபோன்று வெந்து கொண்டிருந்தது. நானென்ன அப்பரா? ‘வீசு தென்றலும் வீங்கிளவேனிலும், மூசுவண்டறைப் பொய்கைபோன்று’ அனுபவிப்பதற்கு.


வெயர்த்துக் கொட்டியது. பகல் ஒரு மணியைத் தாண்டிவிட்டது. “வீட்டில் யாருமில்லையா”? கீழே பலர் கதைப்பது கேட்டது. எனது மூத்த பேரன் அப்போதுதான் ரியூசன் முடிந்து வந்தான். எட்டிப்பார்த்தேன். அவனிடம் சிலர் கேள்விகள் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் திக்குமுக்காடினான். யாரிவர்கள்? யோசித்தவாறே நான் மெதுவாக கீழிறங்கி வந்தேன். இரண்டு பொலிஸ்காரர்கள் காவலுக்கு நின்றார்கள். நான்கு பேர் மின்சார மீற்றர் இருக்கும் பக்கம் நின்றார்கள். ஒருவர் மின்சார மீற்றரைப் பாரத்துக் கொண்டு ஏதோ சொன்னார். ஓரு அதிகாரிபோல் இருந்தவர் பார்த்துப் பதிந்து கொண்டிருந்தார். அவர்தான் அவர்களின் உயரதிகாரியோ? அவரது முகம் வித்தியாசமானது. ஒரு உணர்ச்சியையும் காட்டாத பேர்வழி. முகத்தில் சிரிப்புமில்லை. கோபமும் இல்லாத அதிசயப்பிறவி என்பதைப் புரிந்து கொண்டேன். இன்னொருவர் ஒரு வயரை எடுத்துத் தாங்கள் கொண்டு வந்த பெரிய மின்குமிழ் பொருத்திய பலகையில் பொருத்தினார். மற்றவர் சுவிற்சைப் போட்டார். சிங்களத்திலேயே உரையாடினார்கள். அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்கள். ஒருவர் சாடையாகத் தமிழில் பேசினார். அவர்களுக்குள்ளேயே பலவற்றைக் கதைத்து விவாதித்தார்கள். இப்போது மின்சார இணைப்பைப் பார்த்தார்கள். மின்சார சபையிலிருந்து மின்சாரமீற்றர் பாரக்க வந்துள்ளார்கள் என்று பேசாது நின்றேன்.



“வீட்டினுள்ளே எத்தனை ‘யுனிற் சுவிச்’ இருக்கின்றன.”? சிங்களத்தில் கேட்டார்கள். எனக்கு அவர்கள் சொன்ன சிங்களம் விளங்கவில்லை. எங்கள் வீட்டில் எத்தனை சுவிச் இருக்கிறது என்பதும் தெரியாது. பொதுவாக எங்கள் வீட்டார் மின்சார மீற்றர் பக்கமே போவதில்லை. அவர்களுக்கு விடிந்தால் பாடசாலை, அதனோடு தொடர்புடைய வேலைகள் என்று அலைவார்கள். அதிகமாக இரவு உணவு வேளையில்தான் சந்திக்கலாம். மாதமொருமுறை எங்கள் வீட்டுக்கு இருவர் தவறாது வருவது வழக்கம் ஒருவர் மின்சாரமீற்றர் பார்ப்பவர். மற்றவர் தண்ணீர் மீற்றர் பார்ப்பவர். அடிக்கடி இவை இரண்டிலும் தடைகள் வருவதுண்டு. மீற்றர் பார்க்கவருபவர் வந்து பதிந்து உரிய பட்டியலைத் தந்து விட்டுச்செல்வார். மகன் அதற்குரிய பணத்தை வங்கியில் கட்டிவிடுவார். இது எங்களது வாடிக்கை. இதே முறையையே கடைப்பிடித்து வருகிறோம்.



நான் ஆங்கிலத்தில் “எத்தனையென்று தெரியாது. இது எனது மகனின் வீடு. விரும்பினால் உள்ளே போய் பாருங்கள்” என்றேன். இந்த வீட்டுக்கு வந்து சுமார் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. அன்று போட்ட மின்சாரமீற்றர்தான் இன்றுவரை இருக்கிறது. வீட்டினுள் அந்த அதிகாரி வந்தார். பொலிஸ்காரர் இருவரும் கூடவே வந்தார்கள். ஒவ்வொரு அறையாகத் துருவித்துருவிப் பார்த்தார். மேல்மாடிக்கும் வந்தார். சுற்றிப் பார்த்தார். சுவிச்யுனிற்றுக்களை அவரே எண்ணிக் குறித்தார். நான் எழுதிய புத்தகங்களைப் பார்த்தார். அவற்றின் அட்டைப் படங்களைப் பார்த்தார் “அழகான படங்கள்” என்றார். “யார் வரைந்தது?” என்றார். “மகன்தான் வரைந்தார்” என்றேன். “நல்ல படங்கள்” என்றார். “நீங்கள் நல்ல கலா ரசிகர்போல் தெரிகிறது” ஒருபோடு போட்டுப் பாராட்டினேன். அவர் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.



புத்தகங்களுக்குக் கிடைத்த பல சான்றிதழ்கள், பரிசுகள், பொன்னாடைகளையும், பல அமைச்சர்கள் பரிசுகளையும், பட்டங்களையும் வழங்கியபோது அவ்வப்போது அவர்களோடு எடுத்த நிழற்படங்களையும் எனது மகன் கண்ணாடி அலுமாரியில் காட்சியாக வைத்திருந்தார். அவற்றைப் பார்வையிட்டார். பொலிஸ்காரர்கள் “உங்கள் வீடு அழகாக இருக்கிறது. எவ்வளவு புத்தகங்கள். ஒரு வாசிகசாலையே இருக்கிறது”. என்றார்கள். அதிகாரி கீழே இறங்கி நடந்தார். தொடர்ந்து பொலிஸ்காரர்கள். அவர்களின் பின்னால் நடந்தேன். இப்போது வெளியில் வந்து விட்டோம். பழையபடி மீற்றர் இருந்த இடத்துக்குப் போனோம். அதிகாரி இருவகையான கம்பித்துண்டுகள் நான்கினைக் காட்டினார். ஒருவகைக் கம்பியில் ஆங்கிலத்தில் இலங்கை மின்சார சபை என்பதன் சுருக்கமான இ.மி.ச. என்ற ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே இருந்த கம்பியில் அந்த எழுத்துக்கள் இல்லை. அந்த அதிகாரி நக்கலாகச் சொன்னார். “மாத்தையோ மேக்க பாலன்ன. இதைப்பாருங்க.” கூறித்தன் சிப்பந்திகளைப் பார்த்தார். அவர்கள் மீற்றர் வயரில் தாங்கள் கொண்டு வந்த மின்குமிழ் வயரைப் பொருத்திச் சுவிற்சைப் போட்டார்கள். நன்றாக எரிந்தது. “ பளன்ன...இவ்வளவு யுனிற் போகுது. ஆனால் உங்கட மீற்றர் சரியாக வேலை செய்யல்ல.” வந்திருந்த பொலிஸ்காரரிடமும் காட்டினார்கள். “நீங்க .. சரியான பொய்யன். மீற்றரைக் கழற்றி களவு செய்திருக்கிறீங்க. இவ்வளவு யுனிற் ஓடியிருக்கவேண்டும். ஆனால் உங்கட மீற்றர் குறைய ஓடியிருக்கு”. அந்த அதிகாரி சொன்னவை எனக்கே விளங்கவில்லை. பாவம். அந்தப் போலிஸ்காரருக்கு எப்படி விளங்கும். மீற்றர் குறைய ஓடியிருக்கிறதற்கு மருமகளின் கண்டிப்புத்தான் காரணம். பிள்ளைகள் மின்விளக்கை அதிக நேரம் பாவித்தாலும் ஏசுவார். மின்சாரக் கேத்தலைப் பாவித்தாலும் கரண்டபில்; கூடப்போகுது என்று கத்துவார். மருமகளை மனம் பாராட்டியது.



சொல்லிவிட்டு அதிகாரி தனது குறிப்பேட்டில் ஏதோ எழுதினார். எழுதும்போதே தன்னோடு வந்தவர்களுக்குக் கட்டளையிட்டார். மீற்றர் பக்கமே எட்டியும் பார்க்காத நான் மீற்றரைக் கழற்றி களவுசெய்ததாக இந்த அதிகாரி கூறுகிறானே? நானும் இவரைவிடவும் உயர்பதவியில் இருந்து இன்று ஓய்வுபெற்றவன்தான். இந்த அற்ப எண்ணங்களுக்கு ஆளாவதா? மின்சார வயர்களில், காகம், .புறா போன்றன குந்தியிருக்கும்போதே மின்சாரம் தாக்காதா என்று ஏங்கும் நாங்கள் மீற்றரில் மாற்றம் செய்வதாவது. பியூஸ் போனாலும் அதைப்போடத் தெரியாமல் தெரிந்தவர்களின் உதவியைத் தேடி, அவர்கள் வந்து சரிசெய்யும்வரை காத்திருக்கும் பெரிய புத்தகப் படிப்பாளிகள். வாழ்க்கைக்கு வேண்டியவற்றைக் கற்றுக் கொள்ளத்தெரியாத பண்டிதர்களாகப் போனோம். அவர்கள் மின்சாரத்தைத் துண்டித்துச் சீல்வைத்தார்கள். மீற்றரைக் கழற்றி எடுத்து பேப்பருக்குள் பொதிசெய்தார்கள். எனக்கு ஆத்திரம் வந்தது.



“திருகோணமலையில் ஒரு மின்சாரசபையுள்ளது. அதிலிருந்து மாதாமதம் அலுவலர்கள் வருகிறார்கள். ஏதும் பிழையென்றால் அவர்கள் எங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கவேண்டும். அவர்கள் தரும் பட்டியலுக்குரிய பணத்தினைத் தவறாது கட்டியும் விடுகிறோம். எப்படி நீங்கள் மின்சாரத்தைத் துண்டிக்கலாம்.? இங்கு படிக்கிற பிள்ளைகள் இருக்கிறார்கள். பரீட்சை நெருங்குது. ஏன் மின்சாரசபை அலுவலர்கள் உங்களுடன் வரவில்லை. ஏன் இதுவரை மின்சாரசபை இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இது சரியான மனித உரிமை மீறல்.” சாடினேன். “மாத்தையா.. இப்ப சட்டம் பேசேலாது. வாங்க பொலிஸ் ஸ்ரேசனுக்கு. உங்கள அரஸ்பண்ணிற்றுப் போகத்தான் பொலிஸ் காவலோடு வந்திருக்கம். புறப்படுங்க”. அந்த அதிகாரியின் கபடச்சிரிப்பை இப்போதுதான் புரிந்து கொண்டேன். நேரத்தைப் பார்த்தேன் மூன்றரை மணி. “மாத்தையோ பேர் என்ன? கேட்டார். சொன்னேன். எழுதிக்கொண்டார்.



“மொனவத றக்சாவக் கரான்ன? வேல என்ன என்று கேட்டார். “இப்போ ஓய்வூதியம் பெறுகிறேன்.” சொன்னேன். “முதலில் என்ன றக்சாவ”? பொலிஸ்காரர் கேட்டார். “வடக்கு கிழக்கு மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர்”. பொலிஸ்காரர்களின் முகத்தில் பரிதாப உணர்ச்சி குந்தியிருந்தது. பெரிய உத்தியோகம் பார்த்;தவர். இப்படிச் செய்திருப்பரா? ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். அவர்களால் ஒன்றுஞ்செய்ய முடியாது. “நான் பின்னேரம் பொலிஸ் ஸ்ரேசன் வாறன். நீங்க இப்போது போங்க”. சொன்னேன். “அது முடியாது. நீங்க சரியான பொய்யன். பொய்வேல செய்திருக்கிறீங்க. உங்கள கையோடு கூட்டிப்போகவேணும். வாங்க இப்பவே”. அந்த அதிகாரி அதிகார தோரணையில் அவசரப்படுத்தினார். “எனக்குப் பசிக்கிறது. இப்ப நேரம் மூன்றரை. வீட்டுல யாருமில்ல. கொஞ்சம் சாப்பிட்டுவிட்டாவது வாறனே…” பொலிஸ்கார்கள் என்ர நிலையைப் பார்த்துப் பரிதாபப் பட்டிருக்கிறார்கள். “சரி..சரி..கெதியா வாங்க” என்று சொன்னார்கள். அதிகாரியும் தலையை ஆட்டினார்.



மெதுவாக குசினியுள் நுழைந்து கொஞ்சம் சாப்பாட்டைப் பீங்கானில் போட்டேன். சாப்பிடமுயன்றேன். முடியவில்லை. ஒருவாறு விழுங்கி விட்டு உடுப்பை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தேன். அப்போதுதான் மகன் வந்தார். நடந்த விடயத்தைக் கேட்டுக் கவலை கொண்டார். அவர் சரளமாகச் சிங்களத்தில் விளக்கினார். “நாங்கள் எல்லாரும் அரசாங்க அலுவலர்கள். எங்களை இப்படி அவமானப்படுத்துவது கொஞ்சமும் அழகல்ல. தவறு எங்கிருக்கிறது என்று நீங்க கண்டுபிடித்து முதலில் அதைத் திருத்தவேண்டும். அதைவிட்டு அப்பாவிகளை இப்படி நடத்துவது நல்லதல்ல. இஞ்ச இருக்கிற மின்சாரசபை அலுவலர்கள் எல்லாரும் என்ன செய்கிறார்கள். அடிக்கடி மின்சாரம் இல்லாது போகிறது. அவர்களோடு தொலைபேசியில் கதைத்தால் எங்கட வேலை எங்களுக்குத் தெரியும். என்று பதில் சொல்லுவார்கள். சம்பளம்தான் அவர்களது ஓரே நோக்கமா”? அவர் படபடத்தார். அவருக்கும் சற்று உடல்நலக்குறைவாக இருந்தது. அவரைச் சமாதானப் படுத்தினேன். “செய்யவேண்டிய அலுவல்களைப் பார். ” கூறிவிட்டுப் புறப்பட்டேன்..



பக்கத்து வீட்டுச் சனங்கள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். “எப்படிப் போவது? நான் சைக்கிளில் வரட்டா”? கேட்டேன். அவர்களுக்கு நான் ஓடிவிடுவேன் என்றெரு சந்தேகம்போலும். “இல்லை இல்லை. வாகனம் இருக்கு”. என்றார்கள். பொலிஸ்காரர் வந்தபடியால் பொலிஸ் ஜீப் வந்திருக்கும் என்ற சந்தேகம் என்னைப் பற்றிக் கொண்டது. சுமூகத்தில் ஒரு அந்தஸத்து இருந்தது. மற்றவர்கள் மதிக்ககத்தக்க உத்தியோகத்தில் இருந்தவரை போலிஸ் புடிச்சிற்றுப் போகுது என்ற அந்தப் பழிச்சொல்லுக்கு ஆளாவதா? “பொலிஸ் ஜீப்பில் நான் ஏறமாட்டேன்.” என்றேன். “பொலிஸ் ஜீப் இல்லை. எங்கட வாகனத்தில் போகலாம். வாங்க” சொல்லி நடந்தார்கள். எங்கள் வீடு ஒரு ஒழுங்கைக்குள் இருந்தது. அந்த ஒழுங்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகத் தேய்ந்து ஒரு ஆட்டோவும் போகமுடியாத அளவிற்குத் தன்னைச் சுருக்கிக்கிக் குடியிருப்பாளர்களுக்குக் காணியைப் பெரிப்பித்துக் கொடுத்து விட்டிருந்தது. ஒரு பெரும்படை முன்னும் பின்னும் சூழ நடந்து சென்று வாகனத்தில் ஏறினேன்.



பொலிஸ் ஸ்ரேசனுக்குள் நுழைந்தேன். பொலிஸ் ஸ்ரேசன் பல மாடிகளைக் கொண்ட அழகான கட்டிடம். என்னைப் போன்ற அப்பாவிச் சனங்கள் குழுமியிருந்தார்கள். கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தகப் பெருமக்கள். சாதாரண பொது மக்கள் என்று ஏராளமானவர்கள் நின்றார்கள். ஆளையாள் பார்க்க வெக்கமாகவும் இருந்தது. “இவர்களும் என்னைப்போல் பொய்வேலை செய்தவர்கள்தானா? பொய்யன்களா”? என்னை நானே கேட்டுக் கொண்டேன். என்னை அழைத்துப்போன அதிகாரி பொலிஸ்காரரிடம் ஏதோ சொன்னார். தான் தயாரித்த அறிக்கையையும் கொடுத்தார். அந்தப் பொலிஸ்கரர் என்னை அழைத்துப் பெயரைக் கேட்டார். சொன்னேன். அந்த அறிக்கையில் சிங்களத்தில் இருந்தது. என்ன எழுதியிருந்தது என்பதை நானறியேன். அறிக்கையில் கையெழுத்தை மட்டும் போடச்சொன்னார். போட்டேன். முடிந்ததும் என்னை அழைத்துக் கொண்டு போனார். “ அத்துளட்ட யன்ன. அதற்குள் போயிருங்கள்” என்றார். காவலுக்கு நின்ற பொலிஸ்காரர், காலணியை வெளியில் கழற்றிவிடுமாறு சொன்னார். கால்சட்டை வழுகாது காப்பாற்றும் ‘பெல்ற்’ பட்டியைக் கழற்றச் சொன்னார். அத்தனையையும் கழற்றி வெளியில் போடச் சொன்னார். போட்டேன். நான் உள்ளே சென்றதும் இரும்புக்கம்பிக் கதவு பூட்டிக்கொண்டது. நான் இப்போது சிறைக்கூண்டுக் கைதி.



அது இருபது அடி அகலமான அறை. பத்தடியில் ஒரு ஹோல். மிகுதிப் பத்தடியில் இரண்டு சிறிய அறைகள். ஒரு மலசலகூடம். அதற்குள் ஐம்பதுக்கு மேல் ‘றிமாண்ட்’ கைதிகள். எனக்கொரு புது அனுபவம். என்னைப்போல் வந்தவர்களுக்கு நிற்கவும் இடமில்லை. “வாங்க சேர்” எனக்குப் பெரிய வரவேற்பு. என்னைத் தெரிந்த பலர் இருந்தார்கள். பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் பெயரால் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலர் இருந்தார்கள். தாங்கள் இருந்த இடத்தில் அரக்கி இடம் ஒதுக்கித் தந்தார்கள். மங்கலான வெளிச்சத்தை மின்குமிழ் உமிழ்ந்து கொண்டிருந்தது. “சேர் இந்தப்பையன்கள் இங்க வந்து இரண்டு மாதமாகுது. இன்னும் விடவில்லை. அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை எடுக்கவிருக்கிறார்கள். படிக்கவேணும். வசதியில்லை. நான் அவங்களுக்குப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கிறேன். புத்தகங்கள்தான் இல்லை”. கவலையோடு அந்த ஆசிரியர் சொன்னார்.



பலரைப் பேட்டி காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாவலாகத் தெரிந்தார்கள். சோகக்கதைகளைக் கேட்க மனம் வேதனை கொண்டது. இனவிடுதலைப் போராட்டம் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது. போராடுபவர்கள் எங்கேயோ போராடுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்பாவிகள்தான் அதன் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். சிறப்பாக இளைஞர்களும், யுவதிகளும் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கும் போராட்டத்துக்கும் தொடர்பே இருக்காது. ஆனாலும் அவர்கள்தான் அனாவசியமாகச் சிறைகளை நிரப்புகிறார்கள். அவர்களை நம்பியிருக்கும் எழைப் பெற்றோர்கள் தவிக்கிறார்கள். அவர்களது மனம் உடைந்து வாழ்க்கையில் விரக்தி உருவாகிவிடுகிறது. அவர்கள் உள்ளங்கள் இறுகி சமூகத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்கிறது.



நமது சமூக அமைப்பு அப்படிப்பட்டது. போட்டியும். பொறாமையும், கல்வியறிவின்மையும். பிறர் துயரத்தைப்பார்த்து சந்தோசிப்பதையும் கொள்கையாகக் கொண்டது. தமிழர்கள் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்ததற்கான வரலாறு கிடையாது. பெருமை மட்டும் பேசி அழிந்து கொண்டு போகும் இனமாகத் தமிழினம் மாறிவிட்டது. ‘என்சைக்கிளோப்பீடியா பிரித்தானிக்கா’ என்ற கலைக்களஞ்சிய நூலில் தமிழர் என்றால் ‘பணத்துக்காகவும். பதவிக்காகவும் காட்டிக்கொடுக்கும் இனம்’ என்று எழுதியிருக்கிறது. இதனை யாரும் மறுக்கவில்லை. இப்படிப்பட்ட சமூக அமைப்பில் ‘சுதந்திரம்’ என்ற சொல்லுக்கே இடமில்லை. எனது மனம் வேதனையில் வெந்தது. உடல் அலுப்பெல்லாம் பறந்துவிட்டது. நேரம் விரைந்து கொண்டிருந்தது. அந்த ஆசிரியரைப்பற்றி அறிந்திருக்கிறேன். அவர் அனுபவம் உள்ள ஆசிரியர். அவரது குடும்பம் வறுமைக்கோட்டில் வாழ்கிறது. அவரது தமக்கை ‘கான்சர்’ நோயில் வாடுபவர். அவரது சம்பளத்தை நம்பியே அவரது அம்மா. அக்கா. தங்கை தம்பிமார் வாழ்கிறார்கள். அவர் இந்தக் கைதிக்கூண்டில் வாடுகிறார். அவரது கதை என்னை வாட்டியது.



மனிதவாழ்க்கை வட்டம் குறுகியது. “சேர்..என்ர சம்பளம் போகாட்டி ..அக்காவுக்கு மருந்து கிடைக்காது. குடும்பம் பசியில் தவிக்கும். என்னைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் என்ர குடும்பத்தைப் பற்றித்தான் கவலை. கண்ணீர் மல்கக்கூறினார். இந்தப் பாதுகாப்புப்பிரிவினர் எவ்வளவு தப்புச் செய்கிறார்கள். சமாதானத்தை விரும்பும் அப்பாவிகளைக் கைது செய்து அவர்களுக்கு மென்மேலும் துன்பத்தைக் கொடுக்கிறார்கள். இவற்றைப் பற்றி உணரக்கூடியவர்கள் யாரிருக்கார்? சுயநலமிகள் பதவியில் இருப்பதால் எவ்வளவு பேருக்குக் கஸ்டம். இவற்றைத் தட்டிக் கேட்க நீதித்துறைக்கும் வல்லமை இல்லையா? கைது செய்து வருபவர்களை துரிதகதியில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தால் அப்பாவிகள் துன்பத்தில் இருந்து விடுபடுவார்கள். இப்படிக் கைது செய்து வருபவர்களது அறிக்கைகளை ஒருகிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது கைது செய்து வருபவர்கள்மேல் கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தினால் அப்பாவிகள் ஓரளவு நிவாரணமடைவார்கள்.



நேரம் இரவு ஒன்பது மணி. ஒரு பொலிஸ்காரர் வந்தார். பெயர்களை வாசித்தார். வரிசையில் வரச்சொன்னார். வெளியில் பெரிய வாகனம் நின்றது. ஏறும்படி சொன்னார்கள். நானும் ஏறிக்கொண்டேன். மஜிஸ்ரேட் பங்களாவில் விட்டார்கள். ஒருவர்பின் ஒருவராக நிற்க வைத்தார்கள். நின்றோம். மஜிஸ்ரேட் ஆறுதலாக வந்தார். அடிக்கடி தொலைபேசி அழைப்பு வரும். எழுந்து சென்று பேசிவிட்டு வருவார். பொலிஸ்காரர் பெயரை வாசிப்பார். பக்கத்தில் இதற்கென சட்டத்தரணிகள் நிற்பார்கள். பெயருடையவர் கைகட்டி பதுமைபோல் போவார். சட்டத்தரணிகள் முன்வந்து நிற்பார். மஜிஸ்ரேட் வழக்குப் பதிந்து தவணைக்குரிய நாளையும் கூறி பிணையில் விடுவார். எனது பெயர் வாசிக்கப்பட்டது. சட்டத்தரணி முன்னால் வந்தார். மஜிஸ்ரேட் தவணைக்குரிய நாளையும் கூறி பிணையில் விட்டார்.



மஜிஸ்ரேட் பங்களாவின் வெளிப்புற மதிற்சுவர் கேற்றில் சனக்கூட்டம். வெளியில் வரும்போது கையெழுத்திட்டுப் பிணையெடுக்க ஆட்கள் வேண்டும். மஜிஸ்ரேட்டிடமிருந்து வரும் படிவங்களில் கையெழுத்திடவேண்டும். அப்போதுதான் வெளியேறலாம். மகன் வந்திருந்தார். பத்தரை மணிக்கு வீடுவந்து சேர்ந்தேன். இந்தச் சமூக அமைப்பையும், அரச இயந்திரங்களின் அசமந்தப்போக்கினையும் எண்ணினேன். சரியாக அரச இயந்திரங்கள் இயங்கினால் சமூகத்தில் இவ்வாறான அசௌகரியங்கள் இடம்பெறுமா? இனி நீதிமன்றம் ஏறவேண்டும்.



இரண்டுநாட்கள் உருண்டோடின. இன்று நீதிமன்றில் சமூகம்கொடுக்க வேணும். அதிகாலையிலேயே எழுந்து விட்டேன. எட்டு மணிக்கெல்லாம் நீதிமன்றில் நிற்கவேணுமாம். நீதிமன்று மக்களால் நிரம்பி வழிந்தது. வரவு பதியாத உழைப்பு சட்டத்தரணிகளது என்பதைப் புரிந்து கொண்டேன். ஒருகையால் வாங்குவது மற்றக் கைக்குத் தெரியாதுபெறும் உத்தியோகம். நல்ல வருவாயுள்ளது. நானும் சட்டம் படித்திருந்தால் சாகும்வரை காணியுறுதியாச்சும் எழுதிப்பிழைத்துக் கொண்டிருக்கலாம் என எண்ணினேன். ஒரே நேரத்தில் பலமண்டபங்களில் வழக்குகள் நடைபெற்றன. எங்கும் கறுத்தக்கோட்டுகள் உலாவந்தன. வழக்குகள் நடைபெறும் இடங்களை அறிவித்தார்கள். இவ்வளவு பேரும் குற்றம் செய்தவர்களா? தெரிந்த முகங்களும், தெரியாத முகங்களுமாக உலா வந்தன. மகன் சட்டத்தரணியுடன் கதைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். சட்டத்தரணி என்னிடம் வந்தார். “ஐயா உங்கள் பெயர் கூப்பிடும்போது குற்றவாளிக் கூண்டில் ஏறிப் பேசாமல் நில்லுங்கள். மிச்சத்தை நான் பார்த்துக் கொள்ளுவன்”;. என்றார். ஒன்றுமே செய்யாது நான் குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டுமாம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீதிமன்றம் ஒரு தனி உலகம். எங்கள் வழக்கு நடைபெறும் மண்டபத்துள் நுழைந்தேன். இருக்க இடமில்லாது பலர் நின்று கொண்டிருந்தார்கள் நீதவான் வருகை அறிவிக்கப்பட்டது. எல்லோரும் எழுந்து அவர் இருக்கும்வரை நின்றார்கள். நானும்தான். நின்றேன். நடைமுறைகளை அவதானித்தேன்.



நான்காவதாக எனது பெயர் வாசிக்கப்பட்டது. சட்டத்தரணி சொன்னதுபோல் செய்தேன். நீதவான் ஒருமுறை நிமிர்ந்து என்னை பார்த்தார். சட்டத்தரணி நீதிவான் பக்கம் நின்றார். நீதிவான் குனிந்து எழுதினார். அவர் என்ன சொன்னார.; எழுதினார் என்பது எனக்கு விளங்கவில்லை. வெளியில் போகச்சொன்னார்கள். வெளியில் வந்தேன். பொலிஸ்காரர் ஒரு கூண்டைக்காட்டி “அதனுள் குற்றவாளி நிற்கவேணும். அதற்குள் போங்கள்”. என்று கூட்டைத்திறந்தார். எனக்குமுன் வெளியில் வந்தவர்கள் அதற்குள் நின்றார்கள். சட்டத்தரணி விரைந்து வந்து பொலிஸ்காரரிடம் ஏதோ சொன்னார். “அப்படியா? ஐயா இந்தப்பக்கம் வாங்க. இந்தக்கதிரையில் இருங்க”. தனக்குப் பக்கத்தில் இருத்தினார். மகன் இங்குமங்கும் ஓடித்திருந்தார். பதினொன்றரை மணி. மகன் பொலிஸ்காரரிடம் ஒரு பற்றுச்சீட்டைக் காட்டினார். பொலிஸ்காரர் அதைப்பார்த்துப் பதிந்தார். “ஐயா நீங்க போகலாம்.” என்றார். காசு ஐயாயிரம்கட்டி பற்றுச் சீட்டைப் பெற்றுக் காட்டினால்தான் நீதிமன்றத்தை விட்டுப்போக அனுமதி கிடைக்கும். யாருக்கு எதிராக வழக்குப்பதியப்படுகிறதோ அவர் ஐயாயிரம் கட்டவேண்டும். கட்டாவிட்டால் கட்டும் வரை சிறைவாசமாம். மகன் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். “அப்பா எல்லா வேலையும் முடிஞ்சுது. வாங்க வீட்டுக்குப் போவம்” அழைத்தார். “என்ன நடந்தது”. விசாரித்தேன். நாங்க மின்சார மீற்றரில் மாற்றம் செய்து கள்ளமாக மின்சாரம் எடுத்திருக்கமாம். தண்டம் நமக்கு எழுபதாயிரம் போட்டிருந்தார்கள். எல்லாத்தையும் சேர்த்துக் கட்டிப்போட்டன். அந்த அதிபர் பாவம் அவருக்கு ஒரு லட்சம். அந்தக் கல்விப்பணிப்பாளருக்கு தொன்னூறாயிரம். அதோ நிற்கிறார் உங்கட கூட்டாளிப் பென்சனியர் அவருக்கு ஒன்றரை லட்சம்”. மகன் இப்படியே அடிக்கிக் கொண்டே போனார். “எப்படி இவ்வளவு தொகை வந்தது”? ஆச்சரியத்துடன் கேட்டேன். “ஐந்து வருசத்துக்குக் கணக்குப்பார்த்து இந்தத் தொகையைத் தீர்மானித்தார்களாம்”. மகன் கவலையோடு விளக்கமாகச் சொன்னார்.



“இத மறுதலித்து நாங்க மேன்முறையீடு செய்யலாதோ”? கேட்டேன். “செய்யலாம். ஆனால் வழக்கு இழுபடுமாம். வழக்கு முடியும்வரை ‘கரண்ட்’ தரமாட்டாங்களாம். நமது பிள்ளயளுக்குச் சோதனை நெருங்குது. அவர்கள் படிக்கவேணும். தட்டிக்கேட்க நம்மால முடீயுமா? நூங்க எல்லாரும் அரசாங்கத்தில் வேலசெய்யிறம். இதில மினக்கிட ஏலுமா? அதற்காக லீவு எடுக்க வேண்டி வரும். ஊயர் அதிகாரிகளைப் பகைக்க வேண்டிவரும். ஏன்ன செய்வது?” மகன் அடுக்கிக் கொண்டு போனார். அவர் சொல்வதில் அடங்கியுள்ள விசயங்களை எண்ணிப்பார்த்தேன். அதிலும் ஞாயம் இருக்குதுதான். மனம் பொருமியது. ஊள்ளம் கொதித்தது. இந்தச் சமூகத்தை நினைத்துப் பார்த்தேன். இன்றைய காலகட்டத்தில் நடைமுறைச் சாத்தியங்கள் வித்தியாசமான வழிகளில் செல்வதை உணர்ந்து கொண்டேன். வெட்கமும் வேதனையும் பொத்துக் கொண்டு வந்தது.



“ஆக அவங்கட தீர்ப்பின்படி நான் பொய்யனாம். என்ன?; அவர்களின் கணிப்பின்படி நான் மட்டுமல்ல. பொதுவாக மின்சாரம் பாவிக்கும் வாடிக்கையாளர் எல்லாரும் பொய்யன்கள்தான். இவங்கள எந்த நீதிமன்றம் தண்டிக்கப் போகிறது? அரச இயந்திரம் சரியாக இயங்கினால் மக்களுக்குத் துன்பம் ஏற்படச்சாத்தியம் இல்லை. மின்சாரசபையில் வேலை செய்பவர்கள் எல்லோரும் சரியாக வேலை செய்தால் வாடிக்கையாளர்களுக்கு இந்த நெருக்கடி நேருமா? பத்துப் பதினைந்து வருசமா இந்தப்பிரதேசத்தில இருக்கும் மின்சாரசபை என்ன செய்தது? எத்தன இன்ஜீனியர்மார், எக்கவுண்டன்மார், சுப்பவைசர்மார் என்று இருக்கிறாங்க. எங்கிருந்தோ வந்தாங்கள் எல்லாரையும் பேய்க்காட்டி விட்டுப் போய்விட்டார்கள். இங்க இருக்கிற மின்சாரசபையினரையல்லவா தண்டிக்க வேணும்? இதைத்தட்டிக் கேக்க ஆக்களில்லையா? அரசாங்கத்தையும், பொதுமக்களையும் இவங்கள் ஆட்டிப்படைக்கிறாங்க. மின்சாரசபையைக் கலைக்கவேணும். தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது சரியான நிர்வாகம் நடக்கும். இதனைச் செய்வார்களா? செய்யவேணும். அரசாங்க உத்தியோகத்தர்களும். அரசசார்பான சபைகளும் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். இப்ப எல்லாரும் எஜமானர்களாகி விட்டார்கள். தடி எடுத்தவரெல்லாம் சண்டப்பிரசண்டன்களாகுமாப் போலாகிவிட்டார்கள். எனது மனதில் எனக்கு நடந்தவை படமாக விரிந்தது. இவர்களை மனித உரிமை மீறல் சட்டத்தின்கீழ் கொண்டுவந்து தண்டிக்கவேணும். அரசாங்கம் இவ்வகைச் செயற்பாடுகளை ஊக்குவிக்கிறதா? நீதி மன்றங்கள் அநீதிக்குத் துணைபோகலாமா? யாரோ செய்யும் தவறுகளுக்காக யாரோ பலியாவதா? கேள்வியோடு வீட்டுக்குப் போனேன். இப்போது மனித உரிமைகள் ஏட்டில் உறங்கிக் கொண்டு குறட்டைவிடுகின்றன. அதனால்தானோ என்னவோ நான் நீதி மன்றின் முன் பொய்யனானேன்.

Read more...

Monday, February 1, 2010

அடிமை வாழ்க்கை

அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை. சனி,ஞாயிறு விடுமுறை நாட்கள். இரண்டு மணிக்கு வஸ். அரை நாள் லீவும் எடுத்துக் கொண்டான். பேருந்தைப் பிடித்துப் புறப்பட்டான். ஐந்து மணிக்கு பேருந்தால் இறங்கியதும் துறையைக் கடக்கவேண்டும். அதிலிருந்து ஐந்து கிலோமீற்றர் கால்நடைதான்.


கடற்கரை விரிந்து கிடந்தது. கடற்கரை ஓரமாக நடந்தான். அலைகள் அவன் கால்களைத் தொட்டு விளையாடின. மெல்லப் பொழுது இறங்கிக் கொண்டிருந்தது. கடற்கரை ஓரமாகச் சிலர் கரைவலை இழுத்து கொண்டிருந்தார்கள். இந்தக்கடற்கரையில் எவ்வளவு நாட்கள் விளையாடியிருப்பான். அவன் சிறுவனாக இருந்தபோது இந்தக் கடற்கரையில் நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் இருந்து பெரிய தோணிகளில் பெப்ருவரி மாதம் தொடக்கம் ஒக்ரோபர் இறுதிவரை வந்து தங்கியிருந்து மீன்பிடிக்கும் மக்களை நினைந்து கொண்டான். பல வாடிகளை அமைத்து மீன்பிடிப்பார்கள். கடற்கரை எந்த நேரமும் கலகலத்துக் கொண்டிருக்கும். தமிழ்கலந்த சிங்களம் கதைப்பார்கள். பெர்னாந்து, பெனான்டோபிள்ளை, சூசைப்பிள்ளை எனப் பெயர்கள் இருக்கும். இவர்கள் அத்தனைபேரும் தமிழர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறி, இப்போது முழுச்சிங்களவர்களாக வாழ்பவர்கள். அவர்கள் இப்போது இப்பகுதிக்கு வருவதில்லை. இப்பகுதி முஸ்லிம்மக்கள் மீனவத் தொழிலில் ஈடுபட்டமையே காரணம். நண்பர்களை நினைத்துக் கொண்டான். அவன் சிறுவனாக இருந்தபோது ஒரே கூத்தும் கும்மாளமாகவும் இருக்கும் அந்த ஊரின் மூலைமுடுக்குகளில் அவன் பாதம் படாத இடங்களே இல்லை. பாடசாலைக்குக்கட்அடித்துவிட்டு சகமாணவர்களோடு சேர்ந்து லூட்டி அடித்த அனுபவங்கள் எட்டிப்பார்த்தன.



சிறுவர்கள் என்றால் பயமறியாதவர்கள். பாடசாலைக்குப் போவார்கள். ஓரு மூலையில் ஒன்று சேருவார்கள். அவர்களது திசை வேறுபக்கம் இருக்கும். உப்புநீர்ச் சிற்றாறுகள் ஊரைச் சுற்றி ஓடும். பள்ளங்களும், கணண்பிட்டிகளும் நிறைந்து கிடக்கும். வெள்ளப் பெருக்குக் காலங்களில் உப்புநீர்ச் சிற்றாறுகள் கரைபுரண்டு ஓடும். கிடங்குகள் உருவாகும். உப்புநீர் தேங்கி நிற்கும். கிடங்குகளில் பலவகை மீன்கள் விளையாடும். உப்புநீர்ச் சிற்றாறுகளில் வற்றுப் பெருக்கு நிகழும். கோடைகாலங்களில் வற்றுப் பெருக்கு அதிகநீரைக் கொண்டு வருவதில்லை. கிடங்குகளில் சேர்ந்த மீன்வகை கிடங்குகளிலேயே தங்கி வாழும். கிராமத்துப் பற்றைக்காடுகளில் ஒருவகைக் கொடியிருக்கும். ‘நச்சுக்கொடிஎன்று கூறுவார்கள். அந்தக்கொடியின் வேர்களைப் பிடுங்கி அளவாக வெட்டி மரக்கட்டைகளில் வைத்துத் தட்டினால் நசிந்துவிடும். நசிந்த வேர்களைக் கிடங்குகளில் தேங்கியுள்ள நீரில் கலக்கிவிட்டால் மீன்கள் மயங்கிவிடும். பிடிப்பபதற்கு இலகுவாக இருக்கும். பங்கு போட்டு வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள்.



மீனைக்கண்டதும் அம்மாக்குச் சந்தோசம் பிறக்கும். “எப்படி இந்தப்பெரிய மீன்களைப் பிடித்தாய்”? அம்மாவின் கேள்வி வரும்எங்கட நாகராசர் கனக்க மீன்பிடிச்சவராம். அவர்ர மகன் என்ர கூட்டாளிதானே. அவன் தந்தான்”;. பொய்தான். ஆருக்கும் துன்பம் தரும்படி கூறும் பொய்தான் சொல்லக்கூடாது. அம்மா சொல்லித் தந்தவ. இந்தப் பொய்சொல்வதில் தப்பில்லை. மனதுக்குள் தேற்றிய நாட்கள் எத்தனை?


ஒருநாள் பாடசாலைக்குக்கட்அடித்துவிட்டு, நண்பர்களோடு புறப்பட்டுவிட்டான். புத்தகங்களும் உடைகளும் மரக்கிளையில் தொங்கின. அம்மணமாய் கிடங்குகளில் இறங்கி நீச்சல் அடித்து மீன்பிடிக்கும்போது கையும் மெய்யுமாய் அப்பாவிடம் மாட்டி வாங்கிக் கட்டினதை நினைத்துக் கொண்டான். அப்பாமேல் கோபம் கோபமாக வரும். ஆனால் அந்த நேரத்தில் அப்பா சரியான முடிவு எடுத்திருக்காவிட்டால் வாழ்க்கை எவ்வளவு கஸ்டமாகப் போயிருக்கும் என்பதை நினைக்கும் போது அப்பாமேல் அன்பும் பாசமும் பொங்கி வந்தது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். அப்பா இறைவனிடம் போய்ச் சேர்ந்திட்டார். பெருமூச்சுப் பறந்தது. மனம் கசிந்து நெக்குருகியது. அதிலிருந்து விடுபட்டு பழைய நினைவுகளில் மனதைத் திருப்பினான். நிலாக்காலங்களில் கிராமத்தின் மணல்வீதிகளில் விடியவிடியக் கிளித்தட்டுப் பாய்ந்து, விளையாடிய மணலிலேயே படுத்துறங்கிய சந்தோசமும் மனதில் வந்து குந்தி அசைபோட்டது. சிரிப்பாக வந்தது. இனிய நினைவுகளில் மூழ்கினால் களைப்பே தெரியாது. கால்கள் நடந்தன.



தனிமையில் இருக்கும்போதுதான் சிந்தனை சிறகடிக்கிறது. இந்த ஆத்மா உடலை விட்டு எங்கெல்லாமோ போய் அலைந்து பழைய நினைவுகளில் மூழ்கி வருகிறது. இதுவும் ஒருவகை யோகம்தானோ? மேற்கே சூரியன் அவசரமாக மறைந்து கொண்டிருந்தது. உலகம் தோன்றிய காலத்திலிருந்து சூரியன் உதிபதற்கோ, மறைவதற்கோ மறந்ததில்லை. அவன் ஊர்போய் சேரும்போது இருள் பரந்துவிட்டிருந்தது. வீதிகளில் யாரும் இல்லை. ஊர் இப்போது அடங்கிப் போய்க்கிடந்தது. வீடுகளில் வெளிச்சங்களும் குறைந்திருந்தன. படலைகள் இறுக்கி மூடிக்கிடந்தன. பயப்பிராந்தி மனதை விரட்டியது. கூப்பிடு தூரத்தில் விடு இருந்தது. சந்தியில் இருக்கும் கோயிலைத் தாண்டித் திரும்பினால் இடப்பக்கமாக வீடு தெரியும். இன்னும் ஐந்து நிமிசத்தில் வீடு வந்துவிடும். நிழலாக உருவங்களைக் காட்டும் இருள். “ஆரது..தம்பி..இந்தநேரத்தில.. எனக்கு மதிக்கேலாமல் கிடக்குநாடு கிடக்கிற கிடயில.. காலநேரந்தெரியாதாகெதிபண்ணி வீட்ட போ…” அது பார்வதியாச்சியின் குரல்தான். அவரது குரலில் இருந்து இனங்கண்டு கொண்டான். பார்வதியாச்சி படலையைச் சாத்திக்கட்டிக் கொண்டிருந்தார்.

நான்தான் ஆச்சிஆறுமுகம். இப்பதான் வாறன். பதிலளித்தான். “ஆறுமுகமா ..இப்பதான் வாறாயா? சரி..சரி.. நாளைக்கு வா ..கதைப்பம். இப்ப கெதியாப் போ.. வெடிச்சத்தம் கேக்குதுபார்வதியாச்சி அவசரப்படுத்தினாள்.

ஆறுமுகம் அதிர்ந்து போனான். அவனுக்கு உள்ளுற வேர்த்தது. நடையை விரைவுபடுத்தினான். நாய்கள் குலைக்கும் சத்தம் செவிப்பறைகளை அடைத்தது. கால்கள் நடையை விரைவு படுத்தின. வீட்டை நெருங்கிவிட்டான். வீட்டுப்படலையைத் திறந்தான். அந்தச் சத்தம் கேட்டிருக்கவேண்டும். “ஆரது…” குரல்கொடுத்தபடி அரிக்கன் லாம்போடு செல்லம்மா வெளியில் வந்தார்நான்தான் அம்மாஆறுமுகம் பதிலளித்தான். மகனின் குரலைக் கேட்டதும் உசாரானார். அரிக்கன் லாம்பைத் தூக்கிப் பிடித்தபடிஎன்ன மனேசொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாய்….இஞ்சால கெதியா வாவா..” வெளிச்சம் படலை வரை பரந்து இருள்கலைந்தது. உள்ளே சென்றான். அரிக்கன் விளக்கைத் திண்ணையில் கிடந்த மேசைமேல் வைத்துவிட்டுக் கதைத்துக் கொண்டே மகனுக்குத் தேநீர் தயாரிக்கலானார். அவன் தனது பையை மேசையில் வைத்துத் திறந்து மாற்றுடுப்பை எடுத்தான்.

அம்மாவப் பாக்கணும்போல இருந்திச்சி. புறப்பட்டு வந்திற்றன்.” உடுப்பை மாற்றியவாறே சொன்னான். “அதுக்ககாகக் காலங்கெட்ட நேரத்தில வாறதா? நேரத்துக்கு வந்திருக்கலாம்தானே”? அன்பாகக் கடிந்து கொண்டாள். ஆனால் மகனைக் கண்ட சந்தோசம் அவள் மனதில் குந்திக்கொண்டது. மனதுக்குள் பாசம் பரந்து கொண்டது. அம்மாவின் பாசமொழி அவனைக் கிறங்கச் செய்தது. “ என்னம்மா செய்யிறது? எத்தன இடத்தில சோதனச் சாவடிகள். ஏறியிறங்கி வந்து துறையக்கடந்து நடந்து வாறன். அதுதான் இவ்வளவு நேரம்.” தேநீரை ருசித்தவாறே அம்மாவை அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தான். அம்மா சற்று இளைத்திருந்ததை அவதானித்தான். “என்னணேய்..அம்மா.. சுகமில்லாமல் இருந்ததா? உடம்பு இளைச்சிருக்கு. ஒரு கடுதாசி போட்டிருந்தால் வந்திருப்பன்தானே”? அன்போடு கூறினான். “அதல்லாம் ஒன்டுமில்ல மனே. மனசில நிம்மதியில்ல. காலம் கெட்டுக்கிடக்கிறது. பொழுதுபட்டால் விடியுமட்டும் பயம். விடிந்தால் பொழுதுபடுமட்டும் பயம். இப்படி பயந்து பயந்து வாழவேண்டிய அடிமை வாழ்கை வாழுறம்.” பெருமூச்செறிந்து அம்மா கூறினாள். “இன்டைக்குக் காகம் சுற்றிச்சுற்றிக் கத்திக்கொண்டு கிடந்தது. ஆராவது வரப்போறாங்க எண்டு நினைச்சன். ஒருவேளை என்ர புள்ள வந்தாலும் வருவான் என்றும் நினைச்சன். நீ வந்திட்டாய்”. அம்மா கூறும்போது அவளது முகத்தையே உற்றுப் பார்த்தான். அவளது முகத்தில்தான் எத்தனை சந்தோச ரேகைகள் பரந்தோடுகின்றன. என்னதான் பிள்ளை வளர்ந்து பெரியவனாகித் திருமணம் செய்து பிள்ளைகுட்டிகளைப் பெற்றாலும், ஒருதாய்க்குத் தன் பிள்ளை எப்போதும் சிறுகுழந்தைதான். பிள்ளைகள்தான் பாசத்தை மறந்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.


மனே.. மேலக்கழுவிட்டு வா. சாப்பிடுவம்”. கூறிக்கொண்டு அடுக்களைக்குள் புகுந்தாள். ஆறுமுகம் குளித்துவிட்டு வந்தான். அம்மா இருந்த கறிவகைகளைச் சூடேற்றினாள். சாப்பாடு தயார். அவன் குளித்துவிட்டுச் சாமியறையில் திருநீறு சாற்றிஎல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமேஎனக் கும்பிட்டு வெளியே வந்தான். தூரத்தில் நாய்கள் குலைத்தவண்ணம் இருந்தன. “வாமனே சாப்பிடுவம்”;. அவனை அழைத்தாள். அவன் அடுக்களைக்குள் வந்து விரித்திருந்த பனையோலைப் பாயில் இருந்தான். “என்னம்மா ஒரே நாய்குலைக்கும் சத்தம்”.? கேட்டான். "இப்பிடித்தான் மனேவிடியவிடிய நாய்குலைத்தபடிதான் இருக்கும். ஆமிக்காரங்கட நடமாட்டம்தான். வெடிச்சத்தங்களும் கேட்கும். நெஞ்சைப்பிடித்தபடி கிடக்கிறதுதான். என்ன செய்யலாம். நம்மட நாட்டுநில இதுதான். இப்ப கண்டபடி ஊருக்குள்ள போகேலாது. சட்டம்.” தட்டில் உணவைப் பரிமாறிக்கொண்டே சொன்னாள். “அம்மா சாப்பிடல்லையா”? கேட்டான். “இன்னும் இல்லமனே. இனித்தான். நீ முதலில் சாப்பிடு. பிறகு நான் சாப்பிடுறன்”. அவன் சாப்பிடக் கையை வைத்தான். படலையில் சத்தம் வந்தது.


மேஅம்மே.. யாரு ..இப்ப ..வந்தது. வரச்சொல்லுங்க..வெளியே”. அவள் எழுந்து வெளியே வருமுன் இரண்டு ஆமிக்காரர்கள் உள்ளே வந்து விட்டார்கள். அவர்கள் கைகளில் துப்பாக்கிகள். “ஊருக்குள்ள யாரும்சரி வந்தா ஸ்ரேசன்ல அறிவிக்கணும்தானே. தெரியாதா சட்டம்?”;. வந்தவர்கள் சத்தமிட்டார்கள். அவளுக்கு வெடுவெடுத்தது. செல்லம்மா வெளியில் வந்தாள். தொடர்ந்து ஆறுமுகம் வெளியில் வந்தான். "அது ஆருமில்ல. என்ர மகன். ஆறுமுகம். இப்பதான் வவுனியாவில இருந்து வந்தவன்”. உண்மையைச் சொன்னாள். “ அது ஆருவெண்டாலும் சரிஅறிவிக்கத்தானே வேணும்”. அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். “இப்ப இருட்டிப்போச்சு. இருட்டினபிறகு வெளியில வரப்படாது என்றுதான் …” அம்மா இழுத்தாள். அவளுக்கு மனம் படபடத்தது. “அது எல்லாம் நமக்குத் தெரியாது. ஏய்;… பேரென்ன”? ஆமிக்காரன் கேட்டான். “ஆறுமுகம்”;.சொன்னான். “சரி..சரி..என்ட..வாங்க.. பொயின்ருக்கு. பெரியவரிட்ட வந்து சொல்லுங்க”. அவர்கள் வரும்படி வற்புறுத்தினார்கள்.


மாத்தயா காலமைக்கு வந்து பதியிறம். இப்பதான் புள்ள வந்தவன். சாப்பிடக்குந்தினான். சாப்பிட்டபிறகு வாறம்”;. அம்மா கெஞ்சினாள். “அதெல்லாம் நமக்குத் தெரியாது. பெரியவர்ட்ட வந்து சொல்லுங்க”. ஆமிக்காரர் ஒரேபிடியாய் நின்றார்கள். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியாது. நடப்பது நடக்கட்டும். அப்படியே புறப்பட்டான். அம்மா சாப்பாட்டை மூடிவைத்தாள். அடுக்களையின் பன்னாங்குக் கதவை இழுத்து மூடினானாள். அரிக்கன் லாம்பையும் எடுத்துக் கொண்டு பின்னால் புறப்பட்டுவிட்;டாள். ஆமிக்காரர்கள் ஆறுமுகத்துக்கு முன்னாலும் பின்னாலும் நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் அரிக்கன் லாம்போடு ஆறுமுகத்தின் அம்மா. ‘ஆமிப்பொயின்ற’; அலுவலகம் திறந்திருந்தது. ஆனால் அலுவலர் இல்லை. “அப்பிடி நில்லுங்கஒருவன் கட்டளையிட்டான். ஒருவன் ஆமிப்பெரியவர் இருக்கும் பக்கத்து வீட்டுக்குப் போனான். ஒரு நிமிடம் ஒரு வருசமாக நகர்ந்தது. களைப்பும் பசியும் ஆறுமுகத்தைக் குடைந்தெடுத்தன. அவனுக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. தன்னைக் கட்டுப்டுத்திக் கொண்டு சமநிலையைப் பேணினான்.



எவ்வளவு நேரம் நின்றிருப்பான். அம்மாவைப் பார்த்தான். ஆமிப்பொயின்ற் கேற்றுக்கு அப்பால் அரிக்கனோடு குந்தியிருப்பது தெரிந்தது. “நான் வந்தது தப்பாகப் போச்சுது. என்னால்தானே அம்மா வெளியில இந்த நேரத்தில காத்துக்கிடக்கிறார். நான் வராமல் அங்கேயே நின்றிருக்கலாம்”;. மனதுக்குள் வருந்திக் கொண்டான். ஆமிப்பெரியவரின் வீட்டீல் நடப்பது தெரிந்தது. போனவன்சேர்என்று மெல்ல அழைத்து, வெளியிலேயே நின்றான். அவரை வெளியிலேயே காணவில்லை. பாதுகாப்புப்படை அதிகாரிகளைச் சாதாரணதரப் படைவீரர்கள் நினைத்தமாதிரிச் சந்திக்க முடியாது. எவ்விதமான விசயங்களாக இருந்தாலும் முன் அனுமதிபெற்று, அவர் விரும்பினால்தான் அதனையிட்டுப் பேசலாம். அங்குதான்ஆண்டான் அடிமைஎன்பதன் தாற்பரியம் புரியும். படையதிகாரியைச் சந்திப்பதில் பயமிருந்தாலும், நல்ல பெயர் வாங்குவதற்காக இப்படித் தவங்களும் புரியவேண்டும். எசமான் அவர்களை நடத்தும் முறைகளுக்கேற்ப, ஏவலாளிகளும் அவர்களுக்குக் கீழுள்ளவர்களை நடத்துவார்கள். தன்னை எஜமானனாக நினைத்துக் கொண்டுதான் என்னோடு இவன் நடந்து கொண்டான். அந்தச் சிப்பாயைக் குறைகூறிப் பயனில்லை. நின்று கொண்டே நடப்பதை அவதானித்தான்.



அம்மாவையும் பார்த்துக் கொண்டான். அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் அம்மாவின் நிழல் தெரிந்தது. “என்ர புள்ளைக்கு எவ்வளவு பசியாக இருக்கும். என்னப்பார்க்க வந்ததாலதானே..இந்தக் கஸ்டம். பாவம். இனி வரவேண்டாமென்று சொல்லவேணும். எல்லா ஆமிக்காறனுகளும் இப்படித்தான். இப்பிடித்தானே இந்திய ஆமிக்காரங்களும் செய்தவங்கசெல்லம்மாவின் மனதுக்குள் வேதனை அரித்தது. நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. ஆறுமுகத்தின் மனதில் அது படமாக விரிந்தது.



அது இந்திய அமைதிகாக்கும் படை இந்தநாட்டுக்குள் தங்கள் நாட்டின் அமைதியைக் காப்பதற்காக வந்திருந்த காலம். இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுத்தருவதாக முலாம்பூசி தமது நாட்டின் பாதுகாப்புக்காக இலங்கைத் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்கிப் பலிக்கடாக்களாக்க வந்திருந்தனர். காக்கி உடைகளைத்; கண்டால் அதுதபால்காரர்கள்என்று எண்ணும் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களின் குக்கிராமங்களிலும் இந்தியப்படை முகாமிட்டுத் தொல்லைகளைக் கொடுத்தார்கள். அமைதிகாக்க வந்தவர்கள் அதற்கு மாறாகச் செயற்பட்டார்கள்.



கிராமங்களில் தோட்டந்துரவுகளும், பயிர்பச்சைகளுமாக இருக்கும். ஆடு,மாடு,கோழி என அவர்களது வாழ்வாதாரம் இருக்கும். கிராமங்களில் தன்னிறைவுப் பொருளாதாரம் குடிகொண்டிருக்கும். வேலிகள் எல்லைகளாக இருந்து யாவற்றையும் பாதுகாக்கும். கிராமங்களின் எரிபொருள் தேவையைச் சிறு பற்றைக்காடுகள் நிறைவு செய்யும். தங்களது அமைதிக்காக எமது மக்களின் பாதுகாப்பில் கைகளை வைத்தார்கள். வேலிகள் வெட்டப்பட்டன. பற்றைக் காடுகள் மக்களைக் கொண்டே அழிக்கப்பட்டன. எந்த நேரமும்ரோந்துச் சேவைகால்நடையாக நடைபெறும். வீட்டுக்காணிகளை ஊடறுத்து ஆமி வேலிகளை உடைத்தும், வேலிக்கம்பிகளை வெட்டியும் நடந்து செல்வார்கள். தோட்டம் துரவுகள் மெல்லமெல்ல மறையத் தொடங்கின. பாதுகாப்பு கிராமங்களில் இல்லாதொழிந்தது. இளைஞர்கள் சித்திரவதைக்கு ஆளாகினர். ஊருக்குள் எவர் வந்தாலும் ஆமிப்பொயின்ற் சென்று பதியவேண்டும். இப்படித்தான் அன்றும் ஆறுமுகம் வந்திருந்தான்.


இருட்டிவிட்டது. ஊரடங்கிவிட்டிருந்தது. “மனே இப்ப நம்மட இந்திய அமைதிகாக்கும் ஆமிதான் இருக்கு. விடிஞ்சபிறகு போய் பதிவம். நீ சாப்பிட்டுட்டுப் படு”. அம்மா சொன்னபடியே செய்தான்.


விடிந்ததும் கடமைகளை முடித்துக் குளித்துச் சாப்பாடு முடித்தபின்ஆமிப் பொயின்ற்றுக்குச் சென்றான். கடமையில் நின்றவனிடம் தன்னை அறிமுகம் செய்து பதிவதுபற்றிச் சொன்னான். அவன் கொமாண்டரிடம் அழைத்துச் சென்றான். ஒரு கதிரையைக்காட்டி இருக்கும்படி கூறிவிட்டுக் கொமாண்டரின் அறைப்பக்கம் சென்றுவிட்டான். கொமாண்டர் அறையில் இல்லை. ஆறுமுகம் காத்திருந்தான். நேரம்மட்டும் நகர்ந்து கொண்டிருந்தது. ஒருவாறு கொமாண்டர் அறையினுள் வந்ததற்கான அறிகுறி தெரிந்தது. சிப்பாய் வந்து அழைத்தான். அவன் பின்னால் சென்றான். கோமாண்டரின் அறை வந்ததும் ஆறுமுகத்தை அப்படியே நிற்கும்படி சைகையால் சொன்னான். அவன் மட்டும் சென்றான். அறையின் கதவு திறந்திருந்து. ஆனால் திரைச்சீலை மறைத்திருந்தது. வாசலின் முன்நின்றுசலூற்அடித்து அனுமதி கேட்டான். கிடைத்தது. திரைச்சீலையை விலக்கி உள்ளே சென்றான். அவன் ஆறுமுகம் வந்தவிடயத்தை இந்தியில் சொல்லியிருக்க வேண்டும. கொமாண்டர் கோபத்தோடு சத்தமிட்டுக் கதைத்தது கேட்டது. ஆமிக்காரன் சற்று நேரத்தால் வெளியே வந்தான். உள்ளே வரும்படி அழைத்தான்.



அந்த ஆமிக்கொமாண்டர் ஒரு இந்திக்காரர். பெயர்சர்மா கொமாண்டிங் ஒபிசர’; என நெஞ்சுச் சட்டைப்பையின்மேல் இருந்த பட்டி சொல்லியது. தீப்பற்றிய விழிகளோடு கோமாண்டர் ஆறுமுகத்தைப் பார்த்தான். “குட் மோனிங் சேர். ஆம் ஆறுமுகம்.” தன்னை மிகப் பணிவோடு அறிமுகம் செய்தான். கோமாண்டர் சர்மா கோபாவேசத்தோடு எழுந்தார். “லுக் கியர் மிஸ்டர் ஆறுமுகம்…. ஆங்கிலத்தில் அட்டகாசமாகப் பிரசங்கம் செய்தார். அவரது கோபத்தை கைகளைப் பொத்தி மேசையில் குத்துவதில் இருந்து புரிந்து கொண்டான். “இங்கு நாங்கள் வைத்ததுதான் சட்டம். உங்கட புலிச்சேட்டை எங்களிட்ட விடேலாது. எந்த வெளியாட்களும் அவங்கட இஸ்டத்துக்கு வரேலாது. வாறவங்க ஆமிப்பொயின்ற்ல பதிய வேண்டும். வந்த காரியம் முடிந்ததும் போய்விட வேண்டும். நீ நேற்றுப் பின்னேரமே வந்திருக்கிறாய். இங்க வந்து அறிவிக்காமல் ஒரு வீட்டில நின்றுவிட்டு இப்பநிறுத்திவிட்டுத் தனது கையில் கட்டியிருந்த மணிக்கூட்டைப் பார்த்தான். “கிட்டத்தட்ட பத்துமணிக்குப் பதிய வாறாய். உன்னைப்பிடித்து லொக்கப்பில் றிமாண்ட் பண்ணவேணும்.” அவன் பேசிக் கொண்டே போனான். ஆறுமுகத்துக்குக் கட்டுக்கடங்காத கோபம் பொங்கியது. தன்னை அடக்கிக் கொண்டான். பொறுமையாக இருந்தான். “நாங்க இங்க சிரைக்கிறதுக்கு வரல்ல. புலிவேட்டையாட வந்திருக்கிறம்..” ஆறுமுகம் குறுக்கிட்டான். “சேர் ஆம் கவன்மெனற் சேவன்ற். டீப்பியூட்டி டிரக்டர் ஒவ் எடியுகேசன்ஆங்கிலத்திலேயே தொடர்ந்தான். “ நான் வந்து எங்கேயும் நிற்கவில்லை. என்ர வீட்டிலஎன்ர அம்மாவோடதான் நின்றனான். நான் பிறந்து விளையாடி வளர்ந்ததெல்லாம் இந்த மண்ணிலஎன்ர ஊருக்கு, என்ர அம்மாவப் பார்க்க வந்திருக்கிறன். என்ர தாய்நாட்டில என்ர ஊரில..என்ர வீட்டுக்கு வாறதற்கு ஏன் உங்கட அனுமதியப் பெறவேண்டும்? எங்கட அரசாங்கத்தில…. உயர்பதவியில இருக்கிறன். நான் இந்த நாட்டின்என்ர நாட்டின் குடிமகன்.” கூறிக்கொண்டு தனது அடையாள அட்டையைத் தூக்கிக் காட்டினான். அடையாள அட்டையைக் கொமான்டர் உற்றுப் பார்த்தான். “சேர்.. நீங்க என்னத்துக்கு வந்தீங்களோ எங்களுக்குத் தெரியாது. இது இந்த நாட்டுக்குப் புதியதல்லவரலாற்று ரீதியாக இந்திய மன்னர்கள் எங்கட நாட்டின்மேல் படையெடுத்து எங்கள அடிமைகளாக்கி ஆண்டு சுரண்டி ..கடசியில எங்கள நட்டாற்றில் விட்டுச் சென்றிடுவாங்க.. இங்க நாங்க படாதபாடு படவேண்டியது நியதியாப் போச்சுஎல்லாளன் தொடக்கம் இன்றுவரை அது தொடர்கிறது.” ஆவேசத்தோடு ஆறுமுகம் முழங்கினான். கோமாண்டர் ஆறுமுகத்தை ஏற இறங்கப் பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியாது. ஆறுமுகத்தை அழைத்து வந்த ஆமியைக் கூப்பிட்டான். இந்தியில் ஏதோ சொன்னான். அவன் கதிரையொன்றை கொண்டு வந்து வைத்தான். “பிளீஸ் சிற்டவுண்கூறிக் கொண்டு கொமாண்டரும் கதிரையில் இருந்தான். ஆறுமுகமும் கதிரையில் இருந்தான். கொமாண்டர் திசைமாற்றினான்.

லுக்மிஸ்ரர் ஆறுமுகம்…”ஆங்கிலத்திலேயே தொடர்ந்தான். எனது மனைவியும் ஒரு ஆசிரியை.. நான் கல்வியாளர்களுக்கு மதிப்பளிப்பவன். கல்விதான் ஒரு மனிதனை உயர்த்துவது. நாங்களும் தெரியாத்தனமாகஇங்க வந்திற்றம். ஏன் வந்தோம்….என்று எங்களுக்கே தெரியாது. முதலில் தமிழர்களின் அமைதி காக்கவென்றுதான் தெரிவிக்கப் பட்டது. அதனால் நாங்க அனுப்பப்பட்டோம். அவ்வளவுதான் தெரியும். இப்ப புலிகளுக்கு எதிராகச் சண்டையிடுகிறோம். சொல்லப்போனால் தமிழருக்கு எதிரான போராட்டம்தான். பொதுவாக தமிழ் இளைஞர்கள்தான் கொல்லப்படுகிறார்கள். எங்கட ஆக்கள் பலர் இறந்து விட்டார்கள். அந்தக்கடுப்பு இருக்கிறதால இப்படி நடக்க வேண்டியுள்ளது.

ஆம் சோ சொறி.. நீங்க அரசாங்க உயரதிகாரி என்று எனக்குத் தெரியாது.” அமைதியாகச் சொன்னான். இரண்டு கோப்பையில் தேநீர் வந்தது. குடிக்கும்படி கேட்டுக் கொண்டான்.



நாட்டு நடப்புகளைச் சொன்னான். தனது குடும்பத்தைப் பற்றிச் சொன்னான். எங்களுக்கு வரும் ஓடரை நாங்கள் செயற்படுத்துகிறோம். இந்த நாட்டில என்ன நடக்குது என்று இந்திய மக்களுக்கு ஒன்றுமே தெரியாது. இங்கு இரண்டு இனங்களுக்கிடையில் நடக்கும் போராட்டத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. இந்த நாட்டுச் சிங்களத் தலைமைகள் கெட்டிக்காரர்கள். தங்கள் மக்களைச் சண்டையில் ஈடுபடுத்தாமல் இலங்கைத் தமிழரை அழிக்க இந்தியப் படைகளைப் பயன்படுத்துகிறார்கள். எங்களது நாட்டுத் தவைர்களும் விவேகம் இல்லாத பதவிமோகம் கொண்டவர்கள். அவர்களால்தான் இந்த அவலம். இது எதுவரை சென்று எதில்முடியுமென்று எனக்குத் தெரியாது ;”. அந்தக் கொமாண்டர் விரிவகச் சொன்னான். ஆறுமுகத்துக்கு உண்மை புரிந்தது.



இந்தியப் படைகள் வந்தபோது தமிழ்மக்கள்எங்களை ரட்சிக்க வந்த ரட்சகர்கள்.”; என ஆடிப்பாடினார்கள். அவர்களோடு மிகவும் நட்பாகப் பழகினார்கள். அரசியல் சூதாட்டத்தினால் தமிழ் மக்களை அழிக்கும் எதிரிகள் ஆனார்கள். இந்தியப் படைகளை எதிர்த்துப் போரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்தியப்படை இலங்கையை விட்டுப் போகும் போது அவர்களது முகத்தைப் பார்க்கவும் கூசினார்கள். அதன் விளைவை எண்ணிப் பார்த்தான். இந்திய ஆமியின் வழியில் இப்ப எங்கட நாட்டுப்படையினர் இந்திய ஒத்துழைப்புடன் ஆட்டிப்படைக்கின்றார்கள். அவர்களைக் குறைகூறிப் பயனில்லை. இனவாத அரசியல்வாதிகளின் விவேகமில்லாத போக்குத்தான் நாட்டின் அழிவுக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டான். . “மே..என்ட..” அந்த ஆமிக்காரன் அழைத்தான். ஆறுமுகம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். அம்மாவைப் பார்த்தான். அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் அவர் குந்தியிருப்பது தெரிந்தது. ஆமிக்காரனின் பின்னால் சென்றான். அவன் அறையினுள் நுழைந்து சலூற் அடித்தான். சிங்களத்தில் முறைப்பாட்டை முழங்கினான். இவர்கள் பெரியவர் என அழைத்தவர் நடுத்தர வயதுடைய ஒரு கொமாண்டர். தன்னைவிடவும் வயதில் குறைந்தவனாக இருந்தான். கொமாண்டர் சீருடையில் இல்லை. நீண்ட கால்சட்டையும்,’ரிசேட்டும் அணிந்திருந்தான். ஆனால் அந்த மிடுக்கும், அகங்காரமும் அவனிடம் இருந்தது. “ சிங்கள தன்னவாத.. சிங்களம் தெரியுமா .. கொகே இந்தளா ஆவேஎன்ன பேர்? கொமாண்டர் ஒரு கிண்டலோடு தொடங்கினான். ஆறுமுகத்துக்குச் சிங்களம் ஓரளவு தெரியும். ஆனால்சிங்களம் தெரியாது. பேர் ஆறுமுகம்என்றான். “என்ன கொட்டியாத? எங்கிருந்து வந்தது? சொல்லு”? கொமாண்டர் சத்தமிட்டான். அந்த நேரத்திலும் ஆனந்தன் இந்த நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்கத் தவறவில்லை. அவன் இந்திக்காரன். அந்நியன். இந்தியன். .ந்திக்காரன். இவன் எங்கள் சொந்தநாட்டுக்காரன். சிங்களவன். அவ்வளவுதான். இரண்டு செயற்பாடுகளும் ஒன்றுதான். “வவுனியாவில இருந்து வந்தனான்.” பதிலளித்தான். “…வவுனியா.. அங்கதானே கொட்டியா ..இருக்கிறதுமே மாத்தயோஒங்கட இஸ்டத்துக்கு இஞ்ச வரேலாது. எங்கட சட்டத்துக்குத்தான்நடக்கவேணும்.. தேருணாததெரியுமா”? ஆணவத்தோடு கொட்டினான். ஆறுமுகத்துக்கு அடக்க முடியாத கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் பொறுமை காத்தான். “ஏன் இஞ்ச வந்தது..? வேவு பாக்கவா..சொல்லு”? கொமான்டர் அதட்டலோடு கேட்டான். இனியும் பொறுத்தால் இவன் கதையைச் சோடிச்சிப் போடுவான். “ஹலொ சேர்..லுக்.”. ஆங்கிலத்தில் தொடங்கினான். “இஞ்ச என்ன இருக்கு வேவுபார்க்க? நானும் இந்த நாட்டிலதான் பிறந்தவன். இது என்ர சொந்த ஊர். இந்த மண்ணிலதான் பிறந்து வளர்ந்தனான். என்ர அம்மாவப் பார்க்க வந்தனான். என்னை வரேலாது என்று சொல்வதற்கு நீங்க யார்? என்ர சொந்த ஊருக்கு வாறதற்கு ஏன் உங்களிட்ட அனுமதி கேட்க வேணும்? அன்றைக்கு இதே கேள்விய இந்தியனாமி கேட்டான். இன்றைக்கு இந்தஎன்ரநாட்டுஆமிக்காரன் கேக்கிறான். ஆவன் இந்திய இந்திக்காரன். நீங்க இலங்கைச் சிங்களவன். அவ்வளவுதான். நாங்க என்ன உங்கட அடிமைகளா? இது என்ன அடிமை வாழ்க்கையா”? ஆத்திரத்தைக் கேள்வியாகத் தொடுத்தான். “மிஸ்ரர்..கதைக்கிறதக் கவனமாகக் கதைக்கவேணும். நான் நினைத்தால் உன்ன லொக்கப்பில போடுவன். றிமாண்ட் பண்ணுவன். கனக்கக் கதையாத..தேருணாத? கோபத்தோடு கொமாண்டர் சொன்னான். ஆறுமுகம் விஸ்வரூபத்தில் நின்றான். அவனது உள்ளம் பொங்கியது. “நானும் உங்களப் போல அரசாங்க உயர்பதவியில் இருக்கிறன். ஆம் டிபியுட்டி டிரக்டர் ழப் எடியுகேசன். உங்களுக்குத் தெரிந்த சட்டங்கள் எனக்குந் தெரியும். நீங்களும் இந்த நாட்டிலதான் பிறந்தீங்க. நானும் இந்த நாட்டிலதான் பிறந்தனான். என்ன வித்தியாசம். நீங்க சிங்களவர். பெரும்பான்மையக இருக்கிறீர்கள். நாங்கள் தமிழர் சிறுபான்மையாக இருக்கிறம். பெரும்பான்மை என்ற அகங்காரம் உங்களப் பிடித்திருக்கு. யாரும்இது நமது நாடுஎன்று உணரவில்லை. நமது நாட்டுத்தலைவர்கள் பிரித்தாளும் நாட்டில் படித்தவர்கள். எப்படி மக்களைப் பிரித்துவிட்டு தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கலாம் என்று திட்டம் போடுபவர்கள். இனரீதியாகவும், சமயம். மொழிரீதியாகவும் பிரித்துப் பதவியில் குந்துபவர்கள். அன்று இந்தியர்கள் பாதியை அழித்தார்கள். மீதியை இன்றைக்கு நீங்கள் எங்களையும் அழித்து உங்களையும் அழிக்கத் துடிக்கிறீர்கள். இந்த அடிமைவாழ்க்கை இனியும் வேண்டாம். அரசாங்க உத்தியோகத்தர்கள் அரசியல் வாதிகளின் கைப் பொம்மைகளாக இருக்குமட்டும் பொதுமக்கள் அடிமைவாழ்க்கையை அனுபவிக்கத்தான் வேணும். நாங்க பொது மக்களின் ஊழியர்கள். இதை உணரவேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேணும். நான்டிபன்ஸ் மினிஸ்றியுடன் தொடர்பு கொண்டு கேக்கிறன். எனக்கும் சில கடமைகள் உண்டு. இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்புக் கொடுக்க வேணும். அந்தச் சட்டதிட்டங்கள் மக்களுக்கு நன்மையைக் கொடுக்க வேண்டும். நான் இங்கு வந்ததை சொல்லவேணும் என்பது எனக்குத் தெரியும். அதற்கும் நேரம் காலம் இருக்கு. நான் தீவிரவாதியில்லை. அரசாங்க உயரதிகாரி. அதை நீங்க உணரவேண்டும். ஒரு கடமைக்கு உங்களிடம் சொல்ல வேண்டும்தான். அதனைக் காலையில் செய்யலாம் என்றுதான் இருந்தன். இப்போ இரவு பதினொரு மணி. இதுவரை வயதுபோன அம்மா சாப்பிடாமல் வெளியில, ரோட்டில குந்தியிருக்கிறா. இதுதானா நாங்க. நீங்க, அரசாங்க உத்தியோகத்தர்கள் செய்யும் கடமை?. நான் யார் என்பதும், எதற்கு வந்தேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்க செய்யிறதச் செய்யுங்கஆறுமுகமும் தக்க பதிலைக் கொடுத்தான். கொமாண்டர் சற்றுத் தடுமாறினான். அவனது முகத்தில் அறிவுபூர்வமான ரேகைகள் படர்வதை அவன் அவதானிக்கத் தவறவில்லை. ஆறுமுகம் விறுவிறு என்று அம்மாவை நோக்கி நடந்தான். ஞானம்பெற்ற புத்தராக கொமாண்டர் அவனையே பார்த்தவாறு நின்றான்.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP