Thursday, February 4, 2010

ஆத்ம விஜயம்.

வான வீதியில் மேகக்கூட்டங்கள் காற்றிலாடி அசைந்து செல்கின்றன. அவற்றினூடே புள்ளிகளாய், மின்மினிப் பூச்சிகளாய் ஆயிரமாயிரம் ஆத்மாக்கள் பவனி வருகின்றன. சில பிரகாசமானவையாகத் தெரிகின்றன. சில பிரகாசம் குறைந்தனவாய் அசைகின்றன. மண்ணுலகில் பிறவியெடுத்தபோது செய்த செயல்களுக்கேற்ப பிரகாசம் கூடியும் குறைந்தும் உள்ளதாம். அந்த ஆத்மாக்களுக்குத்தான் அவை புரியும். காலம் எப்போது கனிந்து வரும்? அதுவரை அவை மேகக்கூட்டங்களிடையே வேண்டிய இடங்களையெல்லாம் பார்த்து அனுபவித்து வரவேண்டும். பூவுலகில் அந்தரத்தில் திரியலாம். வான வீதியில் உலா வரலாம். ஆனால் உடலும் உயிரும் சேர்ந்திருக்கும் போது அனுபவித்த இன்பதுன்பங்களை அனுபவிக்க முடியாது. கனவுலகில் நாம் அனுபவிக்கும் காட்சிகள்போல் அவை இருக்கும். இது நியதி. காலம் கனிந்ததும் பூவுலகில் பிறவியெடுக்கலாம். பிறந்து பூவுலக சுகபோகங்களை அனுபவிக்கலாம். அங்கு வாழும்போது செய்யும் செயல்களுக்கேற்ப பலனை அனுபவிக்கலாம். ஆனால் அந்தக் காலம் எப்போது கனியும். ஐயாயிரம் ஆண்டுகள் செல்லவேண்டுமாம். அதுவரை வானுலக வாசம்தான்.



வானவீதி எவ்வளவு அற்புதமானது. விரிந்து எல்லையற்றதாய் பரந்துள்ளது. நீலமாகவும் கருமையாகவும் சிற்சில இடங்களில் செம்மஞ்சள் நிறத்திலும் காட்சியாகிறது. அகண்டமாய் ஆயிரமாயிரம் பால்வெளிகளையும் சூரியக்குடும்பங்களையும், நட்சத்திரப் பூக்களையும் சூடியுள்ளது. இந்த நட்சத்திரங்கள் யாவும் ஒவ்வொரு சூரியனாம். அவற்றைச் சுற்றிச் சில சந்திரன்கள். இவை அனைத்தும் கிரகங்களாம். இவை அந்தத்தச் சூரியனைத் தலைவனாகக் கொண்ட குடும்பங்களாம். அதில் ஒன்றுதான் நாம் வாழும் பூமியுள்ள சூரியக் குடும்பம். இந்த அகண்ட வானவீதியில் எத்தனை சூரியக் குடும்பங்கள். அத்தனையும் வானவீதியில் தாமே சுழன்று கொண்டு முட்டிமோதாமல், தமக்கென ஒதுக்கிய பாதையில் விரைந்து செல்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக விரைந்து செல்லும் கற்கோளங்கள் எத்தனை. வாயுக்கோளங்கள் எத்தனை? இத்தனை கோடி அதிசயங்களை அகண்டத்தில் வைத்தது யார்? வானவீதியில் ஒளிக்கற்றைகளின் சோடிப்பு. இடையிடையே ஆகாய கங்கையெனும் பால்வெளிச் சூழல். ஒவ்வொரு பால்வெளியிலும் சூரியக்குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் கிரகங்களின் அற்புதங்கள். கிரகங்கள் மிகவும் அழகானவை. சிலவற்றைச் சூழ வண்ண வளையங்கள் தெரிகின்றன. மேகப்படலங்கள் மூடியுள்ளன. அத்தனை கிரகங்களிலும் உயிரினங்கள் உண்டா? வானவீதியில் உலா வரும் கோடானு கோடி உடுக்களைப் போல்தான் கோடானுகோடி ஆத்மாக்களும் உண்டாம். உருவம் அற்ற நிலையில் பாட்டம் பாட்டமாய் ஆத்மாக்கள் வலம்வருகின்றன.



ஆத்மாக்கள் எங்கும் செல்லக்கூடியனவாம். ஆனாலும் அவற்றுக்கும் கட்டுப்பாடுகள் உண்டாம். சூரியக்கதிர்கள் அவற்றைச் சுட்டுப் பொசுக்காது. வாயுக்களுள்ளே புகுந்து வரும். கிரகங்களைச் சூழ்ந்துள்ள தூசிதுணுக்கைகளாலான வளையங்களுள் புகுந்து ஒளிக்கற்றைகளில் பிரகாசித்து, இறுகிய வாயுப் பனிக்கட்டிகளில் குந்தியிருந்து குதுகலித்து ஆத்மாக்கள் பவனிவருகின்றன. ஆத்மாக்கள் தமக்குள்ளேயே உணரக்கூடியன. நமது கனவில் எத்தனை மாந்தர்களைக் காணுகிறோம். கதைக்கிறோம். அவர்களும் கதைப்பார்கள். நாம் கனவில் கதைத்தவர்கள் நமது அருகிலேயே இருப்பார்கள்;. அல்லது பக்கத்தில் இருப்பார்கள்;. நாம் என்ன கதைத்தோம் என்பது அவர்களுக்குப் புரியாது. தெரியாது. நாம் உறக்கத்தில் இருக்கும்போது கனவு காணுகிறோம். மனிதர்கள் கனவு காணுதல்போல் ஆத்மாக்களும் உணர்கின்றன. அவை கனவு உலகத்தில் சஞ்சரிக்கின்றன. அவை உயர்திணையைச் சேர்ந்தனவையா? அல்லது அல்திணையைச் சேர்ந்தனவையா? பௌதீகத் தன்மையைக் கொண்டனவையா? அல்லது இராசயனத் தன்மையைக் கொண்டனவையா? புரியாத புதிர்.



அவற்றுக்கு வெயிலும் மழையும். வெப்பமும் குளிரும் ஒன்றுதான். மழைபெய்யும் ஆனால் ஆத்மாக்கள் நனைவதில்லை. சூரியனின் வெப்பக்கிரணங்கள் தகிதகிக்கும். ஆனால் ஆத்மாக்களை அவை சுட்டெரிப்பதில்லை. பசியில்லை. தாகமில்லை. அவற்றால் எதனையும் சாதிக்கமுடியாது. எதனையும் சாதிப்பதற்கு ஒரு உடல்வேண்டும். உடலுக்கேற்ற சாதனைகளைத்தான் சாதிக்கலாம். ஆத்மாக்கள் சாதாரணமாக ஒரு கட்புலனாகாத புள்ளியாகவே அசைந்து திரிபவை. சாதாரண மனிதர்களது கண்களுக்கு அவை புலப்படாதன. ஆனால் அவை மனிதர்களையும், உலக அதிசயங்களையும் உணர்ந்து கொள்ளக் கூடியன. பூவுலகத்தில் மக்கள் விஷேட நாட்களாகக் கருதும் தினங்களில் ஆத்மாக்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களைப் பார்த்து வரலாம். உற்றார் உறவினர்களையும் கண்டு களித்து வரலாம். அவர்களோடு பேசிமகிழலாம். ஆனால் ஆத்மாக்கள் பேசுவதை மனிதர்கள் புரிந்து கொள்ளமுடியாது. ஆத்மாக்களுக்கு உடல் இருந்தால்தானே மனிதர்கள் அவற்றைப் பார்க்கலாம். பேசலாம். அதற்காகத்தானோ என்னவோ, ‘பிதிர்க்கடன்’ என்ற சடங்குமுறை நமது சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பெருங்கூட்டமாக ஆத்மாக்கள் வானவீதியில் உலா வருகின்றன. எங்கும் இன்பமயம்.



பல்லாண்டுகள் கழிந்தபின் பாட்டம் பாட்டமாய் அவை இன்று பூவுலகம் திரும்புகின்றன. பௌர்ணமி நாள். இருள்பரந்து பூவுலகைப் போர்த்திப் பார்க்கிறது. வானவீதியில் சந்திரனின் ஆட்சி. நட்சத்திரப்பூக்கள் கண்சிமிட்டுகின்றன. இருள் கலைந்து சந்து பொந்துகளிலும், மரஞ்செடி கொடிகளுக்குள்ளும் ஒளிந்து கொள்கின்றது. ஆத்மாக்கள் காற்றில் ஆடி அசைந்து கீழிறங்குகின்றன. எத்தனை அற்புதங்கள். எங்கும் அழகுக் காட்சிகள். பார்ப்பவர்களுக்கு வெளியாகத்தான் தெரியும் ஆனால் வெளி வெறுமையாக இல்லை. கட்புலனாகாத பல்வேறு அணுத்திரள்களும், வானலைகளும் நிறைந்திருக்கும். அவற்றுள் ஆத்மாக்கள் கட்புலனாகாமல் உலாவரும். ஆத்மாக்கள் பெருந்திரளாய் வான்வீதி வழியாக வருகின்றன. பலபக்கங்களுக்கும் பிரிந்து செல்கின்றன. கீழே புவிக்கோளத்தில் நீலக்கடலின் மத்தியில் இலங்கைத்தீவு இலங்குகிறது. கொள்ளையழகு கூத்திடுகிறது.



“இதுதானே இலங்கைத் தீவு. கடலால் சூழப்பட்டு மிதக்கிறது. கொள்ளை அழகானது.” ஆத்மாக்கள் உணர்ந்து கொள்கின்றன. வாழ்ந்தவர்கள், வாழ்ந்து போனவர்கள் எத்தனை ஆயிரம்பேர் மெச்சினார்கள் “இதுதான் சுவர்க்க பூமி. இங்குதான் செல்வங்கள் புதைந்து கிடக்கின்றன. தேவர்கள் வாழுமிடம் இதுதானா? அங்கே பாருங்கள். அற்புதமான மலைகள். மேட்டு நிலங்கள். பள்ளத்தாக்குகள். அசைந்து ஊரும் சிற்றாறுகள். அலைமோதிச் சிரிக்கும் அற்புதமான கடற்கரைகள். வளமான நிலம். இதுதான் நாம் வாழ்ந்த நம் தாய் நாடு.” அங்கு வாழ்ந்திருந்த ஆத்மாக்கள் உணர்ந்து கொள்கின்றன. மற்ற ஆத்மாக்களுக்கும் புரியும் என்ற நம்பிக்கை. அவை மிக உயரத்தில் இருந்து பார்ப்பதால் இலங்கைத் தீவின் முழுப்பரப்பும் தெரிகிறது. “அதோ வளைந்து வளைந்து விரைந்தும், மெல்லெனவும் ஓடும் நதிதானே மகாவலி? என்ன அற்புதமான நதி. அது சங்கமித்து திருக்கோணேஸ்வரனின் திருப்பாதங்களைக் கழுவுகிறதா?” அங்கே.. அதோ…அதுதானே கோணேசர் கோயில். அதோ அந்தப்பக்கம் தெரிவது கல்யாணி. நதியா? எத்தனை நீர்வீழ்ச்சிகள்? அதோ சிவனொளிபாதமலை தெரிகிறது. சிவனின் பாதங்கள் இருப்பதைப் பாருங்கள்.” சில ஆத்மாக்கள் பூரிப்போடு கூறி உலாவருகின்றன.



“அவை சிவனின் பாதங்கள் என்று யார் சொன்னது?. அவை எங்கள் போதிமாதவனின் பொற்பாதங்கள். அது சமனலகந்த. அது கல்யாணி இல்லை. களனி கங்கை” இறுமாப்புடன் சில வாதிட்டன. “அந்த மலையில் கௌதம புத்தரின் பாதங்களின் அடையாளங்கள் உண்டு. அங்கே பாருங்கள். புத்தம் சரணம் கச்சாமி கூறும் துறவிகளை.” சில ஆத்மாக்கள் கூறிக் கொண்டன. “ஏனப்பா கத்துறியள். அவை ஆதாமின் பாதச்சுவடுகள். அதனால்தான் அதனை ‘அடம்ஸ் பீக்’ என்று சொல்லுறம்.” சில வாதிட்டன. “அதெல்லாம் கிடையாது. அவை அல்லாவின் அடையாளச் சின்னங்கள்” வாதப் பிரதிவாதங்கள் வெளிப்பட்டன.



“இது கற்பனைக் கதை. கற்பாறையில் மனிதனின் பாதம் எப்படிப் பதியும். மணற்தரையில் என்றால் காற்தடம் பதிவது சாத்தியம். அல்லது சந்திரத்தரைபோல் இருந்தால் நம்பலாம். அங்கே காற்று இல்லை. தூசிப்படலம்தன் உள்ளது. அமெரிக்கரது காற்பாதத்தடங்கள் இன்னும் அங்கு சந்திரத்தரையில் அழியாது இருக்கு. ஆனால் இது பூமி. இங்கு காற்று வீசும். மழைபெய்யும். அவை அழிந்துவிடும். கற்பாறையில் உளிகொண்டு செதுக்கியிருக்க வேண்டும். அல்லது இயற்கையாக காற்றின் தின்னற்செயலினால் உருவாகியிருக்க வேண்டும்.” சில ஆத்மாக்கள் உணரத் தலைப்பட்டன. சர்ச்சை உருவாகிவிட்டது. ஆத்மாக்கிளிடையே கருத்து மோதல்கள். பலபிரிவுகள் தோன்றி சச்சரவுகள் வளர்ந்தன. “சரி..சரி கதையை விடுங்க. இப்போது நமக்கென்று இடமிருக்கா? அனுபவிக்க உடலிருக்கா? நாங்கள் அலைந்து திரியும் இலங்கைத் தமிழ் அகதிகளைப் போல அந்தரத்தில் வாழ்கிறோம். நம்மைக் கண்காணிக்க எத்தனை பூதப்படைகள் காவலுக்கு உள்ளன. நமக்கெதற்கு வீண்வம்பு? அது என்ன…? நிலத்திலும் நட்சத்திரங்களா? நட்சத்திரங்களைப்போல் மின்னுகின்றன”. நகரங்களில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆத்மாக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. “அவை மிதக்கும் நகரங்கள். மலைநாட்டின் நகரங்கள். அனுமான் கண்ட இலங்கைமாநகர்.” படித்த பண்டித ஆத்மாக்கள் புரிந்து கொண்டு சந்தோசத்தில் அந்தரத்தில் மின்மினிப்பூச்சிகளாய் பவனி வருகின்றன. அமைதிநிலவியது.



“இந்த இலங்கைத்தீவில் ஒருகாலத்தில் பிசாசுகள் வாழ்ந்தன. மரங்களையும். பிசாசுகளையும், சிலைகளையும் வணங்கும் மிலேச்சர்கள் வாழ்ந்தார்கள்;. போதிமாதவன் வந்ததால் புனிதமானது. இது எங்களது பௌத்த நாடு”. சடுதியாகச் சில ஆத்மாக்கள் ஒன்று சேர்ந்து கொண்டு சத்தமிட்;டன. சில ஆத்மாக்கள் வட்டமடித்து வந்தன. “ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் நாகரும் இயக்கரும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு ஆட்சிபீடம் இருந்தது. மேலைநாட்டில் மாயா, இன்கா நாகரீகம் கொடிகட்டிப்பறந்தது. ஆனால் அந்த ஆதிக் குடியினரின் வரலாறு அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டது. அவர்கள் இப்போது சில வரலாற்றுப் புத்தகங்களில்தான் வாழ்கிறார்கள்.; இப்போது இலங்கைத் தமிழருக்கும் அதே கதிதான் நேர்ந்திருக்கு. நமக்கும் நேரலாம்.” சில பறந்து பறந்து ஏனைய ஆத்மாக்களுக்குப் புரியவைத்தன. “இலங்கை எங்கள் பௌத்த நாடு”. பௌத்தத்தை தழுவியிருந்த ஆத்மாக்கள் கூக்குரலிட்டனர். “என்ன கூச்சல். இன்னும் உங்களுக்கு ஞானம் வரல்லையா?”. முதிர்ந்த ஆத்மாவொன்று சினத்தோடு கேட்கிறது.



பாய்ந்து சென்ற ஆத்மாவொன்று குறுக்கிடுகிறது. “பௌத்தத்தைத் தழுவுமுன் உங்களது சமயம் என்ன?” கேட்டது. அதற்கு விடை மௌனந்தான். “பிறக்கும்போது மனிதக் குழந்தைக்கு சாதிசமயத்தைப் பற்றித் தெரியுமா? மனிதன் சுயநலத்துக்காகத் தனக்குத்தானே பூட்டிய விலங்குதான் இவை. நாங்க என்ன சாதி? நீங்க என்ன சமயம்? என்ன மொழி பேசுகிறோம்? எதை இந்தப்பூவுலகுக்குக் கொண்டு சென்றோம்? எதை நம்மோடு எடுத்து வந்தோம்.? நம்மிடம் என்ன உள்ளது?. உடலும் இல்லை. நமக்கேன் வீண்வம்பு? பேசாது வந்தவேலையைப் பாரப்போம். பிதிர்கடன் செய்யச் சனங்கள் காத்திருக்கும். அதுகளின் மனதில மகிழ்ச்சியைப் பொங்கச் செய்வம். வாங்க போவோம்.” கூறிப் புறப்பட்டன. வானம் ஒரேசீராய் வெறும் வெட்டைவெளியாய் தெரிகிறது. காற்று வீசிக்கொண்டிருக்கிறது.



வான்வெளியில் மின்னல் கொடிகட்டுகிறது. சிரிப்பொலி ஒலிக்கிறது. ஒரு ஆத்மா எதையோ காட்டிப் புரியவைக்க முயல்கிறது. “சற்று நில்லுங்கள். கீழே பாருங்கள். இந்த இடத்தில்தான் நான் வீழ்ச்சியுற்றேன்”. ஒரு ஆத்மா எதையோ கூறமுற்படுகிறது. “என்ன புதுக்கதை இது”. சில ஆத்மாக்கள் அந்தரத்தில் நின்று கேட்டன. “ புதுக் கதையில்லை. உண்மையான வரலாறு. சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்க” அந்த ஆத்மா கெஞ்சி வற்புறுத்துகிறது. மற்றவை பரிதாபத்துடன் நின்று கேட்கின்றன. ”அப்போது எனக்கு வயது அறுபதைத் தாண்டியிருந்தது. தள்ளாத வயதுதான். மன்னர்கள் பேராசை பிடித்தவர்கள். நான் அப்படித்தான் இருந்தேன். ஆட்சியில் இருந்தால் உல்லாச வாழ்க்கை வாழலாம். நாற்பத்து நான்கு ஆண்டுகள் அனுராதபுரத்து அரசகட்டிலில் இருந்தேன். மக்கள் சந்தோசமாகத்தான் வாழ்ந்தார்கள். ஒரு குறையும் வைக்கவில்லை. குறைகளைக் கேட்டு அவற்றைக் களைவதற்கு அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணி கட்டியிருந்தேன். எத்தனை மக்களின் துயர் துடைத்திருப்பேன். எனது மகன் தேரில் பவனிவந்தான். ஒரு பசுவின் கன்று ஓடிவந்தது. தெரியாமல் தேர்க்காலில் அடிபட்டு மாண்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை தனது கொம்பால் இழுத்து அடித்து நின்றது. அதன் குறையைப் போக்க எனது மகனைத் தேர்க்காலால் கொன்றேன். எனது வாரிசையும் இழந்தேன். அந்தப்பசு அடைந்த துன்பத்தை நான் அனுபவித்தேன்.” அந்த ஆத்மா தொடர்ந்தது.



“இந்தத்தீவில் சைவத்துடன் பௌத்தமும் இருந்தது. இரண்டு மொழிபேசும் மக்கள்தான் இருந்தார்கள். சிங்களம், தமிழ் என்ற பேதமே இருக்கவில்லை. எனது படையில் ஏராளமான சிங்களவர்கள் இருந்தார்கள்”. அந்த ஆத்மா சிலாகித்தது. “அதுசரி யார் நீங்கள்? எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.” சில ஆத்மாக்கள் விபரமறிய ஆவலுடன் நின்றன. “நான்தான் எல்லாளன். இந்த இலங்கை நாட்டின் மன்னன்”. ஆச்சரியமாக குழுமியிருந்த ஆத்மாக்கள் பார்த்தன. “ஓ..இந்தியாவில் இருந்து வந்த தமிழனா”? ஏளனத்தோடு சில கூக்குரலிட்டன. “அப்படி யார்சொன்னது? நான்தான் எல்லாளனாக இருந்தேன். நான் இந்தியாவில் இருந்து வரவில்லை. அதோ தெரிகிறதே மகாவலி. அதற்கப்பால் வடக்கே விரிந்து கிடக்கும் வளநாடுதான் நான் பிறந்து வளர்ந்து விளையாடிய தொட்டில். என் மூதாதையர் வாழ்ந்து மடிந்த புண்ணியபூமி. நான் இந்தியாவில் இருந்து வந்தவன் என்று கதை கட்டிவிட்டார்கள். தெற்கே இருந்தவர்களுக்கு மகாவலிக்கு அப்பால் இந்தியா என்றுதான் எண்ணியிருந்தார்கள். இந்த மண்ணிலதான் பிறவியெடுத்தேன். இந்த மண்ணில் பேதங்கள் இருக்கவில்லை. சமத்துவம் இருந்தது. சாதி,மத மொழி வேறுபாடில்லை. எனது மக்களுக்கு ஒரு குறையும் வைத்ததில்லை. தென்பகுதியில் கவந்தீசன் மன்னன் ஆண்டான். நாங்கள் நல்ல நண்பர்கள். அவனும் என்னைப்போல் நல்லாட்சி செய்தான். அவனுக்கெதிராக அவனது குடும்பமே சதிசெய்தது. மகாராணி விகாரமகாதேவி முக்கிய பங்கினை வகித்தாள். மூத்த மகன் துட்டகாமினியைத் தூண்டிவிட்டாள். ஆட்சியைக் கைப்பற்ற சூழ்ச்சிகள் செய்தார்கள். எல்லாம் பதவிக்காகத்தான். அரச கட்டில் வேண்டும் என்று தந்தையை எதிர்த்து வாதாடினான். சிலதுறவிகள் துணைபோனார்கள். தாய் விகாரமகாதேவி வாதாடவைத்தாள். அதற்குக் காரணம் இருந்தது. கவந்தீசன் காலம்வரும்வரை பொறுத்திருக்கும்படி அறிவுரை கூறினார். அவன் துட்டகாமினி மகா துஸ்டன். தந்தையின் சொல் அவன்காதில் விழவில்லை. தான் அரசனாகவேண்டும் என்று வாதாடினான். கவந்தீசன் உடன்படவில்லை. துட்டகாமினி தனது நாட்டைவிட்டு ஓடினானன். அவனுக்கு தாய் பக்கபலமாக இருந்தாள்.



எனது படைத்தலைவன் விகாரமகாதேவியின் அன்புக் காதலன். கவந்தீசனுக்கும் தெரியும் நானும் அறிந்திருந்தேன். நான் அதனைக் கண்டும் காணாதிருந்து விட்டேன். அது பின்னர் எனக்கு எதிராக மாறுமென்று எண்ணவில்லை. துட்டகாமினி எனக்கெதிராகப் படையெடுத்தான். எனக்கு வாரிசு இல்லை. இருந்திருந்தால் அவன் ஆட்சியில் இருந்திருப்பான். அது துட்டகாமினிக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. துட்டகாமினியின் படையில் ஏராளமான தமிழ் வீரர்கள் இருந்தார்கள். அப்போது இருந்ததெல்லாம் பதவி மோகம் மட்டுமே. ஒரு அரசனுக்காக, அவனது சுகபோகங்களுக்காக எத்தனை உயிர்கள் பலியாக வேண்டியிருந்தது. இப்போதும் ஜனநாயகம் என்ற போர்வையில் அதுதானே நடக்கிறது. இன்றும் ஏழைக்குடும்பங்களின் பிள்ளைகள்தான் படையில் சேருகிறார்கள். சம்பளத்துக்காகவே அவர்கள் போருக்குச் செல்கிறார்கள். இளமையிலேயே பலியாகி விடுகிறார்கள். ஆனால் நாட்டுப்பற்று என்ற மாயையை போர்த்திவிடுகிறார்கள்.”. ஆத்மா கவலையோடு விளக்கியது.



“போர் தொடங்கியது. இந்தப் போர் என்னோடு முடியட்டும். துட்டகாமினியை நேருக்கு நேர் சண்டையிட அழைத்தேன். அவனுக்கும் சரியாகப் பட்டது. அவனது நோக்கம் எப்படியும் வெற்றி கொள்வதுதான். துட்டகாமினியின் தாய்தான் விகாரமாதேவி. துட்டகாமினியைத் தூண்டிவிட்டவளே அவள்தானே? அவளது மனதினில் புதையுண்டு கிடந்த இன்ப ரகசியங்களுக்கு கவந்தீசனும், நானும் தடைக்கற்களாக இருந்தோம். அதனால் துட்டகாமினி துணைபோனான். அவள் தனது மகன் துட்டகாமினியின் வெற்றிக்காக எதையும் செய்யத்துணிந்தாள். நாட்டுப்பற்று, தேசப்பற்று என்று அனைவரையும் நம்பவைத்தாள். எனது தளபதியின் காமக்கிளத்தியாகி அவனைக் கைக்குள் போட்ட வரலாறு சாதாரண மக்களுக்குத் தெரியாது. அதனை விகாரமாதேவி செய்தாள். அதனால் எனது படை வீழ்ச்சிகண்டது. தள்ளாத வயதில் யானையில் இருந்து சறுக்கிக் கீழே விழுந்தேன். அதுகூட ஒருசதிதான். அது துட்டகாமினிக்கு வாய்ப்பாயிற்று. நான் எழமுன் அவனது ஈட்டி எனது உடலில் பாய்ந்தது. என்னுயிர் பிரிந்தது. அவனைப் பாராட்டுகிறேன். எனது உடலை ராசமரியாதையுடன் அடக்கம் செய்தான். எனக்காக கல்லறை கட்டி வணக்கமும் செலுத்தப் பணித்தான். நான் இந்தியாவில் இருந்து படையெடுத்து வந்திருந்தால் துட்டகாமினி எனக்கு மரியாதை காட்டியிருக்கமாட்டான். என்னுடலை வாளால் அரிந்து கோடரியால் கொத்திக் குதறியிருப்பான். துட்டகாமினி ஒரு வகையில் சுத்த வீரன்தான்.” அந்த ஆத்மா சற்று மௌனமாயிருந்தது. பின் தொடர்ந்தது.



“அவன் சிங்கள இனவெறி பிடித்தவன் அல்ல. இப்பொழுது வரலாறு எழுதும் இனப்பற்றாளர் எனக்கூறிக் கொள்ளும் அறிவிலிகள்போல் துட்டகாமினி அப்படிப் பட்டவனும் இல்லை. நான் இலங்கையின் சோழகுலத் தமிழ்மன்னன். அப்படி இருந்தும் எனது கல்லறைக்கு மரியாதை செலுத்தினான். மரியாதை செலுத்தும்படி கட்டளையும் இட்டான். அவனுக்கு மரியாதை தெரிந்திருந்தது. அவன் அரசகுலத்தவன். அவனை எண்ணிப் பெருமையடைகிறேன். போரில் ஒரு மன்னன் மடிந்தால் அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை அவன் அறிந்திருந்தான். செய்தான்”. பெரிய பிரசங்கம் நடப்பதை ஆத்மாக்கள் உணர்ந்து கொண்டன. “அந்தக் கல்லறை எங்கே? அவ்விடத்தில்தான் இருந்தது. உங்களுக்குத் தெரிகிறதா? அதனை அழித்திருப்பார்கள்”? அந்த ஆத்மா சோகமாக அசையாது நிற்கிறது. அப்படியே ஆத்மாக் கூட்டம் செயலிழந்து நிற்கிறது. “நான் விட்ட பிழைகள் ஏராளம். எனது தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதாக ஒன்றும் செய்யவில்லை. சிங்கள தமிழ் மக்கள் என்று பிரித்துப் பாரக்கவில்லை. எல்லோரும் இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டோடுதான் மக்களை நேசித்தேன். அதுதான் நான்விட்ட மகாதவறு”. அந்த ஆத்மா சோகத்தில் சொல்வதை மற்ற ஆத்மாக்கள் புரிந்து கொண்டன.



ஆத்மாக்களின் பெரியதொரு கூட்டம் எதிர்ப்புறமாக வருகின்றது. எதிர்பாரத சந்திப்பு. வந்த ஆத்மா சற்றுத்தயங்கித் தாமதித்து நிற்கிறது. அந்த ஆத்மா எல்லாளன் பக்கம் செல்கிறது. பேசாது மௌனித்து நிற்கிறது. “அங்கே கீழே நடப்பதைப் பாருங்கள்”;. அனைத்து ஆத்மாக்களும் பூமியில் நடப்பதைப் பார்க்கின்றன. அது திருகோணமலை நகர்ப்பகுதியாகத் தெரிகிறது. ஒரு கூட்டம் ஆயுதங்களோடு செல்கின்றது.. குண்டுகளை வீசி எறிகிறது. அவை இடியோசையுடன் வெடித்துச் சிதறுகின்றன. வீடுகள் எரிகின்றன. எங்கும் புகைமண்டலம். மனித உடல்கள் வீதிகளில் கிடக்கின்றன. மனிதர்கள் இனவெறிபிடித்து ஆளையாள் தாக்கி அழிகின்றனர். ஆத்மாக்கள் அழுகின்றன. “நான்தான் காமினியாக இருந்தேன். நாம் சண்டையிட்டது அரசகட்டிலுக்காக. ஆனால் அதனையே திரிபுபடுத்தி இனவெறியாக்கி இன்பம் காணும் மனிதர்களைப் பார்க்க வேதனையாக உள்ளது. நான் சண்டையிட்டுக் கண்டதென்ன? நான் நிரந்தரமாகப் பூவுலகில் இருப்பேன் என்ற அகங்கார நம்பிக்கை. இங்கே நமக்கென்ன இருக்கிறது? நான் மன்னன் இல்லை. சாதாரண ஆத்மா. எல்லாம் மாயைதான். இதைத்தான் புத்தபகவானும் சொன்னார். யாரும் கேட்டு நடப்பதாயில்லை.



“இந்த ஆத்மா உடலுள் சென்றால் எவ்வளவு கர்வம் கொள்கிறது. எத்தனை ஆயிரம் உயிர்களைக் கொல்லக் காரணமாக இருந்தோம். அந்தப் பாவங்களைப் போக்கத்தானே கோயில்களையும், விகாரைகளையும் கட்டிக்கொடுத்தோம். மனித உடலோடு இருக்கும்போது முதுமைப் பருவத்தில் நான் செய்த பாவத்துக்காக எத்தனை இரவுகள் உறங்காது அழுதிருப்பேன்.? உலக வாழ்க்கையைப் புரிந்து எல்லோரும் பிறவியின் பேரின்பத்தைப் பெறுவதற்காக. நாம் கட்டிய கோயில்களும் விகாரைகளும் அழிந்த நிலையில் கிடக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பது யார்? இந்த இலங்கைமாதாவின் வரலாற்றுச் சின்னங்கள் என்று பாதுகாப்பவர் யார்?. அவற்றை இடித்து அழிப்பவர்கள் ஏராளம். இவை மனிதரிடையே வேற்றுமையையும், விரோதங்களையும் வளர்க்கின்றன. என்னைத் தங்களது இனத்தின் காவியத்தலைவனாகச் சில சுயநலப்புத்தி ஜீவிகள் சிருஸ்டித்து மக்களைப் பிரித்து அதிலே தங்களது லாபத்தைப் பெருக்கிவருகிறார்கள். சனங்களும் ஏமாந்து அவர்களது வலையில் வீழ்ந்து அழிகிறார்கள். நாம் விட்ட தவறுகளால் வந்த வினையிது. அங்கே பாருங்கள். தமிழர்கள் வேறு, சிங்களவர்கள் வேறு என்று சண்டையிட்டுச் சாகிறார்கள்.” வேதனையில் மூழ்கி அந்த ஆத்மா தவிக்கிறது.



“அங்கே பாருங்கள்.” சில ஆத்மாக்கள் ஒரு திசையைக் காட்டுகின்றன. அனைத்து ஆத்மாக்களும் அப்பக்கம் திருப்புகின்றன. பெரியதொரு யுத்தம் நடக்கிறது. இரண்டு குழுக்கள் மோதுகின்றன. நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் குண்டுகளைக் கக்குகின்றன. அவை வெடித்துக் கொத்துக் கொத்தாகக் குண்டுகள் பொழிந்து வெடிக்கின்றன. காடுகள் தீப்பற்றி எரிகின்றன. விலங்குகள் வீழ்ந்து சாகின்றன. எங்கும் அவல ஒலி. மனித உடல்கள் வெடித்துக் கிழிந்து சிதறி பிணவாடை வானெழுகிறது. பெண்களின் உடல்கள் நிர்வாணமாக்கப் பட்டு குதறப்படுகிறது. ஆண்களின் உடல்களையும் நிர்வாணமாக்கிக் கொடரியால் கொத்திக் கிழித்துக் கேவலப் படுத்துகிறார்கள். துட்டகாமினி எனும் ஆத்மா தேம்பி அழுகிறது. “ எதிரி இறந்தால் அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும். இந்த மனிதர்கள் மிருகங்களாக மாறிவிட்டார்கள். இந்த உலகுப் பயணம் வேண்டாம். திரும்புங்கள் வேறுகிரகத்துக்கு போவோம். எத்தனை யுகங்களானாலும் மனிதப்பிறவி இனியும் வேண்டாம. ”;. ஆத்மா வேதனைகொண்டு குலுங்கி அழுகிறது.



“நாங்கள் மட்டுமென்ன விதிவிலக்கா? நாங்கள் விட்டுச் சென்ற கோசங்களால் எத்தனை பிரிவுகள். உயிரிழப்புக்கள் ஏற்பட்டன”. மக்களை நல்வழிப்படுத்தச் சமயங்களைத் தோற்றுவித்த பொறுப்பான சில ஆத்மாக்கள் புலம்புகின்றன. தாங்கள் விட்டதவறுகளால் மனித இனம் தான்தோன்றித் தனமாகச் செயற்படுகிறது. சமயக்குழுக்களாகவும், இனங்களாகவும், மொழிவெறி கொண்டும், அதிகாரம் படைத்தவர்களாகவும் வாழ்கிறது. பதவி ஆசை கொண்டு அலைகிறது. இந்த மனிதப்பிறவி தேவைதானா? பிறப்பு இருக்கும் வரை பிரிவினைகளும், அழிவுகளும், துயரங்களும், இறப்பும் தொடரும். பிறவாத வரம் வேண்டும். அப்படிப் பிறப்பெடுத்தால் மனிதப் பிறவியல்லாத பிறவி வேண்டும். ஆத்மாக்கள் சோகத்தோடு வந்தவழியே திரும்பிச் செல்கின்றன.


யாவும் கற்பனை.

1 comments:

dhanabal.,  February 4, 2010 at 11:32 PM  

ஆத்ம விஜயம் அய்யா
என்ன! அருமையான பதிவு !மனதைத் தொட்டு கண்ணீரை வரவழைக்கும் பதிவு.எத்தனை ஆயிரமாயிரம் ஆத்மாக்கள் அந்த இலங்கை மாநகரின் மேல் மரண ஓலமிட்டு அழுது கதருகிறதோ ?!எத்தனை எத்தனை பிஞ்சுக் குழந்தைகளின் ஆன்மாக்கள் அங்கு அழுது கொண்டிருக்கிறதோ?இதை நினைக்கும் போது மனம் சொல்லொன்னா வேதனை அடைகிறது.இந்தப் பிறவியில் அவர்கள் அடைந்த சொல்லொன்னா துக்கங்களுக்கு மாறாக அடுத்தப் பிறவியில் அவர்கள் சந்தோசமாக வாழவேண்டும் என்பதே நான் இறைவனை வேண்டுவது.
நன்றி ஆத்ம விஜயம் அய்யா

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP