Sunday, April 25, 2010

தூக்கணாங் குருவிக் கூடு.

சாவகச்சேரி செழிப்பான அழகிய நகரம். சாவகச்சேரிச் சந்தை பிரசித்திபெற்றது. நல்ல மண்வளம் சாவகச்சேரியை சூழ்ந்துள்ளது. வயல்சார்ந்த நிலம் பரந்திருந்தது. உழைப்பால் உயர்ந்த மக்களைக் கொண்டது மா, பலா. தென்னை. பனை, வாழையெனப் பயன்தரும் மரங்கள் நிறைந்திருந்தன. பனைகள் வானுயர வளர்ந்து காற்றில் ஆடின. நுங்குக் குலைகள் சேர்ந்தாடின.
வயல்வெளியில் நெற்கதிர்கள் சாய்ந்தாடின. பறவைகள் பாட்டம் பாட்டமாய்ப் பறந்து திரிந்தன. சிட்டான் குருவிகள் வயல்வரம்புகளில் கூடுகட்டிக் குதூகலித்தன. தினையான் குருவிகள் பற்றைகளில் கூடுவைத்தன. உயர்ந்த பனையோலைகளில் தோரணங்கள் ஆடின. அவை தோரணங்கள் அல்ல. தூக்கணாங் குருவிகளின் கூடுகள். தோட்டங்களில் காய்கறி வகைகள் விளைந்தன. சிறுவர்களுக்குக் கொண்டாட்டம். மண்டுவில்லேன் சிறுவர்கள் குறும்புக் காரர்கள். விடிந்தால் வயல்வெளிகளில் திரிவார்கள். பற்றைகளில் பதுங்கிக் குருவிகளைப் பிடிப்பார்கள்.

கூட்டமாகச் சேருவார்கள். பனைகளின் கீழ் சிறு கொட்டில்களைப் போடுவார்கள். கண்ணில் படுவதெல்லாம் அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள்தான். அவர்களுக்கு ஆண்பெண் என்ற வித்தியாசமில்லை. சாதிபோதம் கிடையாது. வெள்ளையுள்ளம் கொண்ட வண்ணத் தேவதைகள். வடலிகளுக்குள் புகுந்து ஓடுவார்கள். விளையாடுவார்கள். அடிக்கடி விளையாட்டுக்கள் மாறும். சந்தையும் குதூகலிக்கும். நெருஞ்சிச் செடிகளின் இலைகளை எடுப்பார்கள். தண்ணீரில் போட்டுப் பிழிவார்கள். அதனை வடிப்பார்கள். அது எண்ணெய்போல் தடிப்பான திரவமாகும். அது அவர்களுக்கு எண்ணெய்யாகும். சிறு போத்தல்கள் இருக்கும். அளந்து வியாபாரம் நடக்கும். செங்கற்தூள் அவர்களுக்கு மிளகாய்த் தூள். கண்ணில் பட்டதெல்லாம் அவர்களது விளையாட்டுப் பொருட்களே.

குரும்பட்டிகளைச் சேர்ப்பார்கள். நுங்குக் கோம்பைகளையும் சேர்ப்பார்கள். இரண்டு குரும்பட்டிகளை அல்லது நுங்குக் கோம்பைகளை எடுப்பார்கள் ஒரடி நீளமான தடியின் முனைகளில் இணைப்பார்கள். பற்றையில் உள்ள நீளமான தடியை வெட்டுவார்கள். இரண்டு கிளைகள் பிரியும் இடத்தைக் கவனிப்பார்கள். அளவாக வெட்டி எடுப்பார்கள். அதனை நுங்குகள் பொருத்திய தடியில் மாட்டுவார்கள். தள்ளுவார்கள். நுங்கு வண்டில் உருளும். வண்டிச் சவாரிப்போட்டி நடக்கும். சந்தோசத்தில் துள்ளுவார்கள்.

விழுந்த பனையோலையின் அடிப்பகுதியை தங்கள் உயரத்திற்கு ஏற்ப வெட்டுவார்கள். அதனைத் தலைகீழாகப் பிடித்துத் தார் வீதியில் அழுத்தித் தள்ளுவார்கள். அமுக்கத்தினால் பனைமட்டை தெத்தும். அப்போது மோட்டார் சைக்கிள் போல் சத்தம் வரும். பாடிப்பாடி மோட்டார் சைக்கள் ஓடும். சிலநேரம் பாடசாலை நடக்கும். சிலர் ஆசிரியர்களாகப் பாடம் நடத்துவார்கள். மற்றவர்கள் மாணவர்களாக மாறுவார்கள். எருக்கலை இலைகள்தான் அவர்களது கொப்பிகள். பனை ஈர்க்குகள் அவர்களுக்குப் பென்சில்களாக மாறும். ஈர்க்கிலால் எருக்கலை இலையில் கிறுக்குவார்கள். எருக்கலை இலை தடிப்பானது. அதில் ஈர்க்கினால் எழுதும்போது பதியும்.

அதனைப் பார்த்து மகிழ்வார்கள். அவர்களுக்குத் தங்கள் கிறுக்கல் யாவும் எழுத்துக்கள்தாம். அதனையே வாசிப்பார்கள். தமக்குத் தெரிந்த கதைகளை இலைகளைப் பார்த்துச் சொல்வார்கள். தெரிந்த கதைகள் வாசிக்கப்படும். பனையிலிருந்து தூக்கணாங் குருவிக்கூடுகள் விழும். அவற்றைச் சேகரிப்பார்கள். அதன் வடிவமைப்பைப் பார்த்துப் பிரமிப்பார்கள்.

சிறுவர்களது செயற்பாடுகளை நாள்தவறாது இருவர் அவதானித்தார்கள். இந்தச் சிறார்களுக்கு ஏதும் நாங்கள் செய்யவேண்டும். இவர்களது சின்ன மனங்களில் நல்ல சிந்தனைகள் உருவாகியுள்ளன. இவர்களை நல்ல மனிதர்களாக்க வேண்டும். சிறுவர்கள் வெற்றுக்குடங்களல்ல. குழந்தை கருவில் உருவாகும் போதே கற்கத் தொடங்குகிறது. அவர்களது மூளையும் இதயமும் விருத்தியடைகிறது. இந்த வயதிலேயே இவர்கள் நல்லனவற்றைச் சிந்திக்கிறார்கள். அவர்கள் இருவரும் தமக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள். “இவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்க வேண்டியது நமது கடமை”. அதனைச் செய்வதற்கு மகாலிங்கத்தார் தருணம் பார்த்திருந்தார். இராசரத்தினத்தார் உந்து சக்தியாக உதவியாக இருந்தார். “சிறுவர் பாடசாலை ஒன்றைக் கட்டவேண்டும். அதனைச் செய்தால் உங்கள் மனதுக்கு சந்தோசமாக இருக்கும்”. இராசரத்தினம் மகாலிங்கத்தாரைக் கேட்டுக் கொண்டார். அதற்கான ஒழுங்குகளை இருவரும் செய்தார்கள்.

ஒருநாள் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பலத்த காற்றுச் சுழன்றடித்தது. பனைகள் ஆடிச்சுழன்றன. பனையோலைகள் சரசரத்தன. பல பனையோலைகள் வீழ்ந்தன. அடர்த்தியான பனைகளுக்குள் ஒதுங்கினார்கள். அவர்களுக்கு அண்மையில் ஒரு பனையோலை வீழ்ந்தது. முதலில் பயந்தார்கள். காற்று ஓய்ந்தது. ஓலையோடு குருவிக்கூடு விழுந்தது. அதனைக் கண்டார்கள். ஓடிச்சென்று எடுத்தார்கள். கூட்டினுள் குஞ்சுகளின் ஆரவாhரம். சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்.

மூன்று குஞ்சுகள் கூக்குரலிட்டன. தூக்கணாங் குருவிகள் பறந்து வட்டமடித்தன. சிறார்களுக்கு அவை அழுவதுபோல் தோன்றின. இந்திரன்தான் அவர்களுக்குத் தலைவன். அவனுக்கு இரக்க சுபாவம் அதிகம். குஞ்சுகளைப் பார்த்து மகிழ்ந்தான். அண்ணார்ந்து பார்த்தான். தாய்க்குருவி அலறியடிப்பதைக் கண்டான். தந்தைக்குருவியும் பறந்து பறந்து சத்தமிட்டது. அவற்றைச் சுற்றிப் பலகுருவிகள் சேர்ந்து ஓலமிட்டன. “ஏய் … தம்பி தங்கைகளே.. இந்தக் குருவிக் குஞ்சுகளை என்ன செய்வோம் சொல்லுங்கோ”? பலத்துச் சொன்னான். “நாங்க வளர்ப்போம்”. ஒரேகுரலாகப் பதில் வந்தது. இந்திரன் இதனை எதிர்பார்க்கவில்லை. அவனுக்குக் கவலையாக இருந்தது. “இவை சின்னஞ்சிறிய குஞ்சுகள். என்ன செய்வது? அவன் யோசித்தான்.

குஞ்சுகளைப் பார்த்தான். அவை சின்னச் சிறகுகளை விரித்து வாயைத் திறந்து சத்தமிட்டன. “ஐயோ பாவம். அதுகளுக்குப் பசிபோல. ஏதும் தின்னக் குடுப்பமே?” ருக்மணி பரிதாபப்பட்டாள். அவளுக்கு இரக்ககுணம் அதிகம். “ஓன்று செய்வோம். குஞ்சுகளை அப்படியே விடுவோம். தாய் வந்து தூக்கிக் கொண்டு போகும். விடுவோமா”? ராசன் மனமில்லாமல் கூறினான். “விடுவோம்” குரல் வந்தது. “இப்படியே விடுவது பாவம்.” முகுந்தன் சத்தமிட்டான். அவ்வழியே இராசரத்தினத்தார் வந்தார். கூடவே மகாலிங்கத்தாரும் வந்தார். சிறுவர்களுக்குச் சந்தோசம். “ஐயா இஞ்ச…பாருங்கோ. குருவிக் குஞ்சுகள். பாவம் . அங்க பாருங்கோ.. தாய்க்குருவி அலறுது. பனையில் இந்தக் கூட்டை வைக்கலாமோ சொல்லுங்கோ. ஐயா”? இந்திரன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.

இராசரத்தினத்தார் குஞ்சுகளைப் பார்த்தார். குஞ்சுகள் அவரைப்பார்த்தன. வாயைப்பிளந்து சத்தமிட்டன. இராசரத் தினத்தார் மகாலிங்கத்தைப் பார்த்தார். இருவரும் புன்னகை செய்தார்கள். “என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்கள்.” இருவரும் ஒன்றாகவே பதிலளித்தார்கள். “ஐயா! இந்தக் குஞ்சுகளைக் கூட்டில் விடுவோம். கூட்டைப் பனையில் கட்டிவிடுவோம். தாய் வந்து கூட்டிச்செல்லும். பாவம் ஐயா. எங்களால மரத்தில் ஏறமுடியாது”. இந்திரன் வினயமாக ஒப்புவித்தான். மகாலிங்கம் இளகிய மனம் படைத்தவர். இராசரத்தினத்தைப் பார்த்தார். இராசரத்தினம் செல்வாக்குள்ள நல்ல மனிதர். “சரி நீங்கள் சொல்வது போல் செய்வோம். ஆனால் ஒன்று. நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவேணும். அதன்படி நடக்கவேணும். சம்மதமா”? கேள்வியைக் கேட்டு பதிலுக்காகக் காத்திருந்தார்.

“என்ன ஐயா செய்யவேணும்? ருக்மணி முந்திக் கொண்டு பதில் சொன்னாள். இந்திரன் எல்லோருடைய முகங்களையும் பார்த்தான். அவர்களது மனங்களைப் படித்தான். தாங்கள் எருக்கலை இலையில் கிறுக்குவதையே வாசித்துப் பழக்கப் பட்டவர்கள். அல்லவா?. அவனும் ஒப்புக் கொண்டான். மகாலிங்கத்தாருக்குக் கொள்ளைச் சந்தோசம். இராசரத்தினத்தார் பலமாகச் சிரித்தார். சிறுவர்களுக்குப் பயமாக இருந்தது. ஆனாலும் இந்தக் குஞ்சுகளுக்காக ஒத்துக் கொண்டனர். “ஐயா என்ன செய்யவேணும். அதைச் சொல்லுங்கோ. அங்கே மேலே பாருங்கள். அந்தக்குருவிகள் அலறுகின்றன. இந்தக் குஞ்சுகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்”. ஓன்றாகவே சத்தமிட்டனர்.

சிறுவர்களது இரக்க சுபாவத்தை வெகுவாக ரசித்தார்கள். “நீங்கள் பெரிசாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. உங்களுக்காக அந்த இடத்தில பாடசாலை கட்டித்தரப் போகிறோம்.” முன்பள்ளி கட்டப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டினார். “அந்த நேசரி எங்களுக்கா”? ஆவலோடு கேட்டார்கள். “வேற ஆருக்கு? உங்களுக்குத்தான். நீங்கள் நல்ல பிள்ளைகள். உங்களிடம் இரக்கமும், அன்பும் இருக்கிறது. நீங்கள் படிக்கவேண்டும். விளையாடி விளையாடிப் படிக்கவேண்டும். பாடசாலை கட்டித் தருவது எங்கட பொறுப்பு”. மகாலிங்கத்தார் கூறினார். பிள்ளைகள் குதூகலித்தார்கள். துள்ளிச் சந்தோசப் பட்டார்கள். “ஹேய்…” என்று சத்தமிட்டார்கள். “நாங்கள் பாடசாலைக்கு வருவோம்”. ஏகமனதாகக் கூச்சலிட்டனர். “ஐயா! எப்ப பாடசாலை தொடங்கும்”. ருக்மணி ஆவலோடு கேட்டாள். அவள் பாடசாலைக்குப் போவதாகக் கனவுகாணத் தொடங்கிவிட்டாள். “அடுத்த மாதம் பாடசாலை தொடங்குவோம். சரியா”? மகாலிங்கத்தார் பதில் கூறினார். இராசரத்தினம் யாரையோ தேடினார். தூரத்தில் மயில்வாகனம் வந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும். “தம்பி… மயில்..இஞ்ச கொஞ்சம் வா..தம்பி” அழைத்தார். மயில் ஓடோடி வந்தான்.

“இஞ்சபார் தம்பி..ஒருக்கா இந்தப் பனையில ஏறி இந்தக்கூட்டை வைக்கலாமோ? பார் தம்பி”. அன்போடு கேட்டார். மயில் நல்ல பையன். பனைகளில் ஏறிஇறங்குவதில் சூரன். சிறுவர்களின் கூட்டாளி. சிலநேரங்களில் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடுவான்; அவன் ஐந்தாம் வகுப்போடு படிப்புக்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டான். அவன்தான் சிறுவர்களுக்கு நுங்கு வெட்டிக் கொடுப்பவன். புனையை அண்ணார்ந்து பார்த்தான். பனை அவ்வளவு உயரமில்லை. “ஐயா…அந்தக் கூட்டுக்குள் என்ன இருக்கு? மயில் கேட்டான். “அதுக்குள் குருவிக்குஞ்சுகள் இருக்கு” ருக்கு பதில் கூறினாள். “அண்ணன் இப்ப ஏன் நீங்க விளையாட வாறதில்லை. பள்ளிக்குப் படிக்கப் போறீங்களோ”? செந்தில் கேட்டாள். “அந்தப் பள்ளிக்கு யார் போவான்.” முகத்தைச் சுளித்தமாதிரிச் சொன்னான். “ஏன் படிப்பது நமக்கு நல்லதுதானே”? மீண்டும் செந்தில் கூறினாள். “நல்லதுதான். ஆனால் ‘ஸ்கொலசிப்’ சோதினை என்று உசிரை எடுக்கிறாங்கள்.” “அப்ப தம்பி நீ சோதினை எடுக்கல்லையோ?” மகாலிங்கத்தார் வியப்போடு கேட்டார்.

“சோதினை எடுத்தனான் ஐயா. ஒரு ‘மார்க்ஸ்’; குறைவாம். அதுக்கு நான் என்ன செய்யிறது? ‘மார்க்ஸ’; போடுறவங்க குறைச்சிட்டாங்க… அவங்க கூடப்போட்டிருக்கலாம்தானே?. பாஸ்பண்ணின பிள்ளைகளை பாராட்டுறாங்க. நான் ஒரு மார்க்ஸால விட்டுட்டன். என்ர மனம் எவ்வளவு வேதனைப் பட்டது. அது எனக்குத்தான் தெரியும். அதனால பள்ளிக்குப் போறல்லை. நிண்டிட்டன்.” அவன் சொல்லும் போது இராசரத்தினத்தின் விழிகள் பனித்தன. பெருமூச்சு விட்டார். யோசித்தார். “இந்த ‘ஸ்கொலசிப்’ சோதினை யாருக்காக நடத்தினம். வறுமைக்கோட்டுக்குள் வாழும் பிள்ளைகளுக்காகத்தானே. பாஸ்பண்ணுகிற பிள்ளைகள் யார்? எல்லாரும் வசதியான குடும்பத்துப் பிள்ளைகள்தான். இப்ப ஸ்கொலசிப் சோதினை கௌரவத்துக்காக நடக்கிறது. பாவம். இதனால் வறுமையான பிள்ளைகள்தான் நஸ்டம் அடைகிறார்கள். அரசாங்கம் நன்மை அடைகிறது”. அவரது மனம் வெந்தது. “தம்பி வேற பள்ளியில் சேர்த்து விட்டால் படிக்கலாம்தானே”? கேட்டார். அவன் “ஓம் ஐயா” சட்டென்று பதில் சொன்னான். “சரி அதுக்கு நான் ஏற்பாடு செய்யிறன். இது முடிய என்னோடு விட்டுக்கு வா. சரியா? இப்ப இந்தக் கூட்டைப் பனையில வை தம்பி” அவன் கூட்டை எடுத்துப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் குஞ்சுகள் சிறகை விரித்தன. வாயைத்திறந்து சத்தமிட்டன. “ஐயோ.. பாவம். சன்னக் ” பரிதாபப் பட்டான்.

ருக்கு கூட்டை எடுத்துக் கொடுத்தாள். கூட்டை எடுத்து இடுப்பில் கட்டினான். மளமளவென்று அணில்போல பனையில் ஏறினான். அவன் ஏறுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இராசரத்தினத்தாருக்கு நெஞ்சு படபடத்தது. “கடவுளே அந்தப் பிள்ளையைக் காப்பாற்று” மனதில் கடவுளைப் பிரார்த்தித்தார். மயில் வளைந்து வளைந்து பதம் பார்த்தான். உறுதியான பனை மட்டைகளைப் பிடித்தான். வசதியாகக் கால்களை வைத்துக் கொண்டான். ஒரு பனையோலையைப் பிடித்து இழுத்துக் கொண்டான். கூட்டை எடுத்து ஓலையில் வரிந்து கட்டினான். முடிந்து விட்டது. பனையோலையை மெதுவாக விட்டான். கீழே நின்றவர்கள் ஆரவாரித்தார்கள். கூடு பனையோலையில் காற்றில் ஆடியது. பறவைகள் பார்த்த வண்ணம் இருந்தன. “மெதுவாக இறங்கு”. கீழே இருந்து குரல்கள் ஒலித்தன. மயில் கீழே இறங்கி வந்தான். அவனை சிறுவர்கள் சூழ்ந்து நன்றி சொன்னார்கள். குருவிகளின் சத்தம் அடங்கிவிட்டது. தாய்ப்பறவை குஞ்சுகளை அணைத்துக் கொண்டது.

பறவைகள் எல்லாம் வட்டமடித்து வந்தன. அவர்களைச் சுற்றிவிட்டுப் பறந்து போயின. சிறுவர்களுக்குச் சந்தோசம். “இப்ப எல்லாருக்கும் சந்தோசம்தானே? சரி நீங்க விளையாடுங்கோ. அடுத்த மாதம் முதலாம் திகதி பாடசாலை தொடங்குவோம். சரியா”? கூறிக் கொண்டு இருவரும் நடந்தார்கள். “தம்பி மயில் என்னோட வா”. இராசரத்தினம் அவனை அழைத்தார். அவனும் பின்னால் சென்றான். அவனைச் சாவகச்சேரி இந்துக் கல்லூரில் சேர்த்துவிட்டார். அவனது படிப்புச் செலவை அவரே பொறுப்பெடுத்தார். பாடசாலை கட்டப்பட்டது. நல்ல நாளில் பாடசாலை தொடங்கி விட்டது. மூன்று இளம் ஆசிரியைகள் நியமிக்கப் பட்டார்கள். பிள்ளைகள் ஆர்வத்தோடு கல்வி கற்கத் தொடங்கிவிட்டனர்.

சாவகச்சேரியில் தபால் அலுவலக வீதி சுறுசுறுப்பாகியது. இராசரத்தினத்தார் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அது மண்டுவில்லேனை அடைந்தது. மகாலிங்கம் ஆவலோடு காத்திருந்தார். குகேந்திரன் முன்பள்ளி கலகலத்தது. ஆர்வமுடன் சிறுவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். கற்றல் விளையாட்டு முறையில் நடந்து கொண்டிருந்தது. இருவரையும் கண்ட சிறுவர்கள் ஆசிரியைகள் சகிதம் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஐயா! நாங்கள் நன்றாகப் படிக்கிறோம். ஒருமித்த குரலில் சத்தமிட்டார்கள். ருக்மணியும், செந்திலும் தாங்கள் செய்த மாலைகளை எடுத்து வந்தார்கள். ருக்மணி இராசரத்தினத்தாரின் கழுத்தை அலங்கரித்தாள். செந்தில் மகாலிங்கத்தாரின் கழுத்தை அலங்கரித்தாள். அவர்களை அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தினார்கள்.

தாங்கள் பயின்ற கற்றல் நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டினார்கள். இருவருக்கும் பெருமையாக இருந்தது. பெற்றார்கள் மகிழ்ந்து பாராட்டினார்கள். மகாலிங்கத்தாரின் கண்கள் பனித்தன. “இன்று எனது மனம் நிறைந்து விட்டது. எனது ஆசைமகன் குபேந்திரனின் கனவு நிறைவேறி விட்டது. இந்தப் பிஞ்சு முகங்களில் அவனைக் காண்கிறேன்.” அவரது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. இராசரத்தினத்தாரின் மனம் சந்தோசித்தது. சிறுவர்கள் ஆடிப்பாடி மகிந்து கொண்டார்கள். தங்களுக்கு வாழ்வளித்த சிறுவர்களைப் பாரத்துக் குருவிகள

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP