Sunday, April 25, 2010

கிளிக்குஞ்சு மலை

திருகோணமலை நகரின் மேற்காகக் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. இடையில் உள்ளதுதான் கிளிக்குஞ்சு மலை. அப்பகுதி இயற்கை வளம் நிறைந்த பிரதேசம். சிறிய மலைத்தொடர் நீண்டு கிடக்கிறது. மலைத் தொடரில் தொட்டம் தொட்டமாக தாவரப்போர்வை. தொடரை மூடிச் சோடித்துக் கிடக்கிறது. மரஞ்செடி கொடிகள் பரந்திருந்தன. பூக்களும் காய்கனிகளும் நிறைந்திருந்தன. நெருக்கமாகப் புதர்கள் வளர்ந்திருந்தன. மரஞ்செடி கொடிகள் பரந்திருந்தன. பூக்களும், காய்கனிகளுமாய் நிறைந்திருந்தன. பறவைகளுக்குப் புகலிடமாக விளங்கியது. எங்கும் பலவகைப் பறவைகள் வாழ்ந்தன.

கிளிகள்தான் அதிகமாகக் காணப்பட்டன. புறாக்களும் நிறையவே வாழ்ந்தன. மலைத் தொடர் நீண்டு ஆங்காங்கே கற்பாறைகளை நீட்டியிருந்தன. பாறைகள் அடுக்கடுக்காகப் படுக்கை விரித்திருந்தன. பாறை இடுக்குகள் பெரிதும் சிறிதுமாகக் காணப்பட்டன. இடுக்குகள் குகைபோல் தெரிந்தன. மலை இடுக்குகளில் புறாக்களும், கிளிகளும் வாழ்ந்தன. மைனாக்களும் இன்னும் பலவகைப் பறவைகளும் வாழ்ந்தன. பொந்துகளில் கூடுகளை அமைத்தன. முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரித்து வாழ்ந்தன. ஊரிய நேரத்தில் குஞ்சுகளுக்கு உணவை ஊட்டின. குஞ்சுகள் சந்தோசமாகச் சிறகடித்து குதூகலித்தன.


கிழக்கு வெளிக்குமுன் பறவைகள் எழுந்து விடும். காலைவேளை குதூகலமாக இருக்கும். பொழுது புலருமுன் அனைத்துப் பறவைகளும் வெளியில் வந்து விடும். குஞ்சுகளும் பொந்துகளைவிட்டு வெளியில் எட்டிப் பார்க்கும். அனைத்தும கூடிச் சல்லாபிக்கும். காலையானதும் கிளிகளும் புறாக்களும் பாட்டம் பாட்டமாகச் சேரும். இரைதேடப் போவது சந்தோசமானது. பாட்டம் பாட்டமாகச் சேர்ந்து பாடிப்பறக்கும்.

வான்வெளியில் சிறகடித்து வலம் வரும். காற்றில் சிறகை விரித்துப் பறப்பது அற்புதமானது. பறவைகள் வெளியே போனதும் கிளி. புறா, மைனா, எனக் குஞ்சுகள் ஒன்று சேரும். சேர்ந்து ஒற்றுமையாக விளையாடிப் பேசிமகிழும். அவைகளுக்குள் வேற்றுமையில்லை. மரங்களிலும். மலையோரங்களிலும் குஞ்சுகள் நிறைந்திருக்கும். கிளிக்குஞ்சுகளின் அட்டகாசந்தான் பெரிதாக இருக்கும். கிளிக்குஞ்சுகளின் சொர்க்கமாக மலை விளங்கியது. அதனால் ‘கிளிக்குஞ்சுமலை’ என்ற பெயர் வந்தது.

மாலையானதும் ஒரே குதூகலம்தான். புறாக்கள் ஒருபுறம் கூடி உறவாடும். கொஞ்சிக் குலாவும். கிளிகள் கூட்டமாகச் சேர்ந்து பேசும். மனிதர்கள் வந்தார்கள். தரமான கருங்கற்கள் எனப் பார்த்தவர்கள் கூறினார்கள். உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் மனிதனுக்குரியவை. “இறைவன் மனிதனுக்காகப் படைத்த செல்வங்கள் இவை”. இப்படித்தான் மனிதர்கள் பேசிக்கொண்டார்கள். கல்லுடைக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. தொழிலாளர்களுக்கு தற்காலிக தொடர்வீடுகள் கட்டப்பட்டன. பல தொழிலாளர்களது குடும்பங்கள் வந்தனர். மலையை வெடிமருந்து வைத்துத் தகர்க்கத் தொடங்கினர். வெடிச்சத்தம் அந்தப்பிரதேசத்தைக் கலங்க வைத்தது.

கிளிக்குஞ்சு மலையடிவாரத்தில் கல்லுடைக்கும் ‘குவாரி’ இருந்தது. குவாரியில் இருந்து கூப்பிடு தூரத்தில் கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தையும் கிளிக்குஞ்சுமலை என்றே அழைத்தார்கள். அக்கிராமத்தில் ஐம்பது வீடுகள்வரை இருந்தன. தமிழ், முஸ்லிம், சிங்களக் குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். குவாரியில் ஆண்களும், பெண்களும் வேலை செய்தார்கள். வேலை செய்பவர்கள் அனைவரும் ஏழைகள். அற்புதனின் வீடும் அங்கேயே இருந்தது. அன்சார். நிமால், விக்ரர் வீடுகளும் பக்கத்திலேயே இருந்தன.

அற்புதனின் அம்மாவும் அப்பாவும் குவாரியில் வேலை செய்தார்கள். குவாரிக்கு நடந்து போவார்கள். அற்புதனின் வீட்டுத்தோட்டத்தில் கனிதரு மரங்கள் இருந்தன. மா, பாலா, வாழை, தென்னை நிறைந்திருந்தன. குவாரியில் வேலை தொடங்கும். குவாரியில் கல்லுடைக்கும் சத்தம் பயங்காட்டும். கிளிக்குஞ்சுகள் கிராமத்துள் வந்துவிடும். காலையில் இருந்து மாலைவரை மரங்களில் கூத்தடிக்கும்.

சனங்கள் அதிகாலையில் எழுவார்கள். உணவினைச் சமைப்பார்கள். வேலைக்குச் செல்வார்கள். பகல் உணவுக்கு வருவார்கள். உணவின்பின் சென்றுவிடுவார்கள். அவர்கள் வேலைக்குச் சென்றதும், பிள்ளைகள் ஒன்று கூடுவார்கள். பறவைகளும் பகலில் குஞ்சுகளைத் தேடிவரும். உணவினை ஊட்டும். பின்னர் உணவு தேடிச்சென்றுவிடும். பாடசாலை அந்தக்கிராமத்தில் இல்லை. சின்னச் சிறுவர்களும் கல்லுடைக்கப் போவார்கள். போகாதவர்கள் வீடுகளில் கூத்தடிப்பார்கள். அற்புதனின் வீட்டுத் தோட்டம்தான் அவர்களது விளையாட்டு மைதானம். அன்சார். நிமால், விக்ரர் என நண்பர்கள் வருவார்கள். தோட்டம் நிறைந்து கலகலக்கும். அந்தத் தோட்டத்தில்தான் பறவைக் குஞ்சுகளும் கூடும். மாலையானதும் வேலை முடிந்துவிடும். வேலையாட்கள் வீடுகளுக்குப் வந்துவிடுவார்கள். கிளிக்குஞ்சுகள் மலைக்குப் போய்விடும். தங்கள் கூடுகளில் தவமிருக்கும். காலையில் போன உறவுகள் கூடுகளுக்கு வரும். பின்னர் ஒரே கொண்டாட்டம்தான். விடியவிடியக் கதையளந்து குதூகலிக்கும்.

கல்லுடைக்கும் வேலை கஸ்டமானது. சிறிய காயங்களை ஏற்படுத்தும். கண்களில் கற்துணிக்கைகள் படும். கவனமாக வேலை செய்யவேண்டும். இரும்பினால் செய்த வளையம் இருக்கும். அதற்குள் கற்துண்டங்களைப் போடுவார்கள். வேண்டிய கற்களின் அளவினைச் சொல்வார்கள். அந்த அளவுக்குச் சுத்தியலால் அடித்துத் துண்டங்களாக்க வேண்டும். நாள் முடிந்ததும் தாச்சிச் சட்டிகளால் அளந்து கணக்குக் கொடுக்கவேண்டும். கிழமை முடிவில் கூலி கொடுபடும். கையில் காசு வந்தால் கேட்கவும் வேண்டுமா? ஆண்கள் நிலவில் கூடியிருந்து கொண்டாடுவார்கள். கூட்டங்கூட்டமாகச் சிறுவர்கள் கூடிக்கதைப்பார்கள். கிளிக்குஞ்சுகளின் கதைகளைக் கூறுவார்கள்.

பகலில் அற்புதன் வீட்டில் தனிமையில் இருப்பான். அன்சார். நிமால், விக்ரர் என நண்பர்கள் வருவார்கள். மரத்தில் கிளிக்குஞ்சுகள் இருக்கும். அவை சீட்டியடித்து விளையாடும். அற்புதனும் அவைற்றைப் போல் செய்து பார்ப்பான். நுண்பர்களும் செய்வார்கள். இப்படிப் பலநாட்கள் செய்துவந்தார்கள். கிளிக்குஞ்சுகள் அவர்களை நண்பர்களாக எற்றுக் கொண்டன. அவர்கள் சீட்டியடிப்பார்கள். பதிலுக்குக் குஞ்சுகளும் சீட்டியடிக்கும். குஞ்சுகளுக்குப் பழங்களைக் கொடுப்பார்கள். அவை சந்தோசமாக உண்ணும். பழக்கம் வழக்கமாகி விடுமாம். ஓவ்வொரு நாளும் அவர்கள் பழங்களைக் கொடுப்பார்கள். அவை சந்தோசத்தோடு உண்டு வந்தன. நட்பு வளரத்தொடங்கியது.

கன்னியாவில் பாடசாலை கட்டப்பட்டது. கட்டாயக் கல்விச் சட்டம் வந்தது. சிறுவர்கள் அனைவரும் பாடசாலைக்குப் போகவேண்டும். அவர்களும் போனார்கள். பாடங்கள் நடக்கும். பாடங்களில் ஆர்வம் இல்லை. தங்களது சுதந்திரம் பறிக்கப் பட்டதாக எண்ணிக்கொண்டார்கள். பாடசாலைக்குப் போகாவிட்டால் வழக்குத் தொடரப்படும். பெற்றார் தண்டப்பணம் கட்ட வேண்டிவரும். ஆதனால் பாடசாலைக்குப் போனார்கள். பாடசாலை விட்டதும் வீடுகளுக்கு ஓடுவார்கள். குஞ்சுகளோடு கொஞ்சுவார்கள். சிறுவர்கள் வரும்வரை குஞ்சுகள் காத்திருக்கும். அவர்கள் வந்ததும் ஆரவாரிக்கும்.


சிறுவர்கள் பாடசாலை விட்டு வந்தார்கள். கிளிக்குஞ்சுகள் கவலையோடு இருந்தன. அவை பாடவில்லை. பேசவில்லை. அனைத்துக் குஞ்சுகளும் அமைதியாக மரங்களில் இருந்தன. ஆனால் அதிகம் குஞ்சுகளைக் காணவில்லை. பழங்களைக் கொடுத்தார்கள். அவை உண்ணவில்லை. அன்சார் சீட்டியடித்தான். பதிலில்லை. விக்ரர். நிமால் சேர்ந்து சீட்டியடித்தார்கள். பதிலில்லை. அற்புதனுக்கு ஆச்சரியம். அவனும் சீட்டியடித்தான். பதிலே இல்லை. குஞ்சுகள் கவலையோடு இருப்பதைக் கவனித்தார்கள். ஒவ்வொரு குஞ்சுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருந்தார்கள். பெயர் சொல்லிச் சீட்டியடிப்பார்கள். பதிலுக்கு அவை சீட்டியடிக்கும். ஏன் இப்படி இருக்கின்றன. அவர்களுக்குப் புரியவில்லை. பெயர் சொல்லிச் சீட்டியடித்தார்கள். சில பதிலளித்தன. பல பதிலளிக்கவில்லை. உங்களுக்கு என்ன நடந்தது.? சத்தமிட்டுக் கத்தினாhர்கள். இரண்டு தாய்ப்புறாக்கள் தலைகளை அசைத்தன. அவைகளும் கவலையுடன் இருந்தன.

குஞ்சுகளின் மொழியைப் புரிந்து கொண்டார்கள். அவர்களும் சாப்பிடவில்லை. கவலையோடு இருந்தார்கள். பிள்ளைகள் ஏன் சாப்பிடவில்லை? பெற்றோருக்கும் கவலை. புpள்ளைகளைத் தேடி வந்தூர்கள். அற்புதன் அம்மாவிடம் சென்று விசாரித்தான். அன்சாரின் அம்மா பயக்கூன் வந்தார். நிமாலின் அம்மா அனுலா வந்தார். விக்ரரின் அம்மா பிலோமினாவும் வந்தார். ஏன் சாப்பிடவில்லை? கவலையோடு கேட்டார்கள். குஞ்சுகள் எங்களோடு கதைக்கவில்லை. பல குஞ்சுகளைக் காணவில்லை. என்ன நடந்திருக்கும்? கவலையோடு இருக்கிறோம். பசியே இல்லை.” என்றார்கள்.

அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது. கிளிக்குஞ்சு மலைக்கு சிலர் வந்திருந்ததைக் கூறினார்கள். குஞ்சுகளைப் பிடித்துப் போனதையும் சொன்னார்கள். சிறுவர்கள்; கவலையடைந்தார்கள். என்ன மனிதர்கள் இவர்கள்? இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். சைகையால் குஞ்சுகளுக்கு ஆறதல் கூறினார்கள். சிறுவர்கள் யோசித்தார்கள். “டேய் நமக்கு நமது ஆசிரியர்கள்தான் உதவக்கூடியவர்கள். அவர்களிடம் சொல்வோம். இதற்கு ஒரு விடிவு கடைக்கும். அற்புதன் புதிய பாதையைக் கண்டு பிடித்தான். அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

பொழுது விடிந்தது. அவர்கள் பாடசாலைப் படலையில் நின்றார்கள். அதிபர் எப்ப வருவார்? வரும்வரை காத்திருந்தார்கள். அதிபர் யோகராசன் வந்தார். அவரைத் தொடர்ந்து ஏனைய ஆசிரியர்களும் வந்தார்கள். அதிபருக்குப் பெரியதொரு ஆச்சரியம். சிறுவர்களை உற்றுப் பார்த்தார். “இவர்கள் வழமையாகப் பாடசாலைக்குப் பிந்தி வருபவர்கள். பாடசாலைக்கு ஒழுங்காக வருவதுமில்லை. படிப்பதும் இல்லை. இன்று பாடசாலைக்கு முந்தி வந்திருக்கிறார்கள். இவர்கள் ஏதோ சொல்ல நினைக்கிறார்கள்”;. ஊகித்துக் கொண்டார். அவர்களை அன்போடு அழைத்தார்.

கதை கொடுத்து விசாரித்தார். அவர்களது கதை அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. “சேர் எங்கட கிளிக்குஞ்சு மலையில பறவைக் குஞ்சுகள் இருக்கு. அவற்றை மனிதர்கள் பிடித்துச் செல்கிறார்கள். தாய்ப் பறவைகள் வருந்துகின்றன. குஞ்சுகள் பயந்து நடுங்கிக் கிடக்கின்றன. நீங்கதான் சேர் காப்பாற்ற வேண்டும்”. அற்புதன் பிரசங்கம் செய்தான். அதிபர் அவர்களை அன்போடு பார்த்தார். அவர்களையிட்டுத் தான் கொண்ட அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டார். உயிர்களிடம் இச்சிறுவர்கள் காட்டும் அன்பை நினைத்து மகிழ்ந்தார். ‘இவர்கள் நன்றாகப் படித்தால் இந்த நாட்டையே மாற்றியமைப்பார்கள். இவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.’ உறுதியெடுத்தார்.

“சரி நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். உங்களுக்குப் பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும். அவ்வளவுதானே”? கேட்டார். “ஓம் சேர்”. பயபக்தியுடன் ஆர்வத்தோடு நின்றார்கள். “நான் சொல்வதைக் கேட்டு நடந்தால் காப்பாற்ற முடியும். உங்களால் முடியுமா”? மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். “முடியும் சேர்”; ஒன்றாகச் சேர்ந்து ஒரே குரலில் சொன்னார்கள். “இனிமேல் பாடசாலைக்கு ஒழுங்காக வரவேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். உங்களால்தான் பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்ற முடியும்”. அதிபர் விளக்கினார். “பாடசாலைக்கு வந்தால் காப்பாற்ற முடியுமா? அதெப்படி சேர்”? ஆவலோடு கேட்டார்கள். “ஒழுங்காகப் பாடசாலைக்கு வந்து படியுங்கள். நடப்பதைப் பாருங்கள். அதிபர் கூறிக் கொண்டிருந்தார்.

“சேர் பறவைக் குஞ்சுகளுக்காக எதையும் செய்வோம் சேர். பாடசாலைக்கு ஒழுங்காக வருவோம் சேர். வந்து நன்றாகப் படிப்போம் சேர். அதுமட்டுமில்லை சேர். பாடசாலைக்கு வராமல் வீட்டில நிற்கிற பிள்ளைகளையும் கூட்டி வருவோம் சேர். குஞ்சுகளைக் காப்பாற்றுங்க சேர்” கெஞ்சினார்கள். அவர்களது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. பறவைக் குஞ்சுகளுக்காக அவர்களது மனங்கள் ஏங்கின. அப்பாவிச் சிறுவர்களின் இரக்க குணம் அதிபரை மெய்மறக்கச் செய்தது. ஆசிரியர்கள் சூழ்ந்து மாணவர்களின் உள்ளங்களைப் படித்தனர். இந்தச் சின்ன வயதில் இவர்களுக்கு எத்தனை பெரிய மனது.? பிரமித்தார்கள். பறவைக் குஞ்சுகளுக்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராக நின்றார்கள்.

அதிபரும் ஆசிரியர்களும் மனம் நெகிழ்ந்து போனார்கள். சதீசன் சுறுசுறுப்பான ஆசிரியர். மாணவர்களில் அக்கறையுடையவர். மாணவர்களை வகுப்புக்களுக்கு அனுப்பினார்கள். பாடம் தொடங்கியது. அதிபர் சதீசனை அழைத்தார். தனது திட்டத்தைச் சொன்னார். சதீசன் அதிபரைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றினார். பிரதேச செயலாளரின் அலுவலகம் சென்றார்கள். அவரிடம் விரித்துரைத்தார்கள். பிரதேச செயலாளர் போலிஸ் அத்தியட்சருடன் தொலைபேசியில்

கதைத்தார். அவர்கள் ஏதோ கதைத்துக் கொண்டார்கள். அப்படியே அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் முறையிட்டனர்.

இன்றும் கவலையோடுதான் பாடசாலைக்கு வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பறவைக் குஞ்சுகளும் பாட்டமாக வந்தன. மரங்களில் தஞ்சம் புகுந்தன. சிறுவர்களின் மனதில் தாங்கமுடியாத கவலையிருந்தது. பாடசாலை தொடங்கியது. ஒன்றுகூடல் நடந்தது. பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டது. முடிவுற்றதும் வகுப்குக்கள் தொடங்கின. குஞ்சுகள் அவர்கள் போகும் பக்கமெல்லாம் அலைந்தன. வகுப்பறைகளுக்குள் நுழைந்து அமைதியாக இருந்தன. மாணவர்களது செயல்களை ஆசிரியை ஜனார்த்தனி அவதானித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஆச்சரியம். உயிர்கள் அனைத்தும் ஒன்றுதானே? தனக்குத் தானே நினைத்துக் கொண்டார். சற்று நேரத்தில் வாகனங்கள் பல வந்தன. பாடசாலையின் நுழைவாயிலை அடைந்தன. பிள்ளைகளுக்கு ஆச்சரியம்.

பிரதேச செயலாளர் தேவி இறங்கினார். ஒரு தேவதை வந்ததுபோல் இருந்தது. அவரைத் தொடர்ந்து பொலிஸ் அத்தியட்சர் வந்தார். அரசசார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்களும் வந்தார்கள். கிராமசேவகர் ஊடாக மக்களுக்கு அறிவிக்கப் பட்டது. அதிபரும் ஆசிரியர்களும் அவர்களை வரவேற்றனர். பாடசாலை மண்டபத்தினுள் கூட்டம் நடைபெற்றது. அதிபர் தலைமை வகித்தார். கிளிக்குஞ்சு மலையின் சூழலை அதிபர் விளக்கினார். மாணவர்களைப் பற்றிச் சொன்னார். அற்புதன். அன்சார், நிமால். விக்ரர் எனப் பெயர்கள் குறிப்பிடப் பட்டன. பிரதேச செயலாளர் அவர்களை விளித்துப் பாராட்டினார். “உங்களால் கிளிக்குஞ்சுமலை காப்பற்றப்படுகிறது. இனி எந்தத் தொல்லையும் இருக்காது. போலிஸ் அத்தியட்சர் பிடித்துப் போனவர்களைக் கைது செய்துள்ளார். நீதிமன்றில் வழக்கு நடந்தது. பிடித்துப் போனவர்களுக்குத் தண்டனையும் கிடைத்துள்ளது. நீதிபதி செழியன் பறவைக்குஞ்சுகளைப் பிடிப்பதற்குத் தடையும் போட்டுள்ளார். இனி யாரும் எந்தப் பறவைகளையும் பிடிப்பதற்கு வாய்ப்பில்லை. பறவைகளைப் பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் குஞ்சுகளை மீட்டுள்ளோம். அதோ அங்கே பாருங்கள்”;. சுட்டிக் காட்டினார். பலர் கூடுகளுடன் நின்றார்கள். கூடுகளுள் பறவைக் குஞ்சுகள் இருந்தன. அற்புதன் ஓடிவந்தான். அன்சார், நிமால், விக்ரர் பின் தொடர்ந்தார்கள். பறவைக்குஞ்சுகள் அவர்களைக் கண்டு கொண்டன. சிறகடித்து ஆரவாரித்தன.


கூடுகளை அவர்களிடம் ஒப்படைக்கும்படி கூறினார். கூடுகளை வாங்கியதும் கூத்தாடினார்கள். கொள்ளை இன்பம் அவர்களைப் பற்றிக் கொண்டது. கூடுகளைத் திறந்தார்கள். பறவைக் குஞ்சுகள் சுதந்திரமாக வெளியில் வந்தன. சிறுவர்களின் தோளில் தொத்திக் கொண்டன. பற்றைகளில் பதுங்கியிருந்த பறவைக் குஞ்சுகளும் சேர்ந்து கொண்டன. பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். உயிர்கள் அனைத்தும் ஒன்றுதான். உடல்களில் மட்டுந்தான் வித்தியாசம். அவை தொடர்பாடும் வழிமுறைகளிலும் வித்தியாசம் உண்டு. உணவு, உறைவிடம், உறவு, பாசம் ஆகியன யாவற்றுக்கும் உண்டு. உயிர்களிடத்து அன்பு வேண்டும்.

பிரதேசச் செயலாளர் தேவியின் கண்கள் பனித்தன. போலிஸ் அத்தியட்சர் பிரமித்துப் போனார். மனிதர்கள் மட்டுமேன் இப்படி ஆனார்கள்.? சிறுவர்களை வாழ்த்தினார்கள். “நீங்கள் பெரிய சாதனையாளர்கள். உங்களால் கிளிக்குஞ்சுமலை சுதந்திரம் பெற்றுள்ளது. பறவைக் குஞ்சுகள் விடுதலை பெற்றன. நன்றாகப் படித்து வாழ்க்கையில் வெற்றியடைய வாழ்த்துக்கள்”. கூறிவிட்டுச் சென்றார்கள். பாடசாலை மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

அற்புதனும் நண்பர்களும் பாடசாலைக்குப் போவார்கள். பாடசாலைவரை குஞ்சுகள் பறந்து வரும். பாடம் நடப்பதைப் பார்த்து மகிழும். பாடசாலை விட்டதும் அவர்களோடு சேர்ந்து வீடு போகும். பறவைக் குஞ்சுகள் தங்கள் நண்பர்களையிட்டுச் சந்தோசமடைந்தன. அவர்கள் சாதனையைச் செய்துள்ளார். உங்களுக்கு எங்கள் நன்றி. நன்றாகப் படியுங்கள். வாழ்த்தி வானில் பறந்து கொண்டாடின. இப்போது சிறுவர்கள் ஒழுங்காகப் பாடசாலை செல்கிறார்கள்.

1 comments:

Jeya April 25, 2010 at 4:58 PM  

அருமையாக உள்ளது ஐயா! வாழ்த்துக்கள்.

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP