Thursday, May 20, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

26

அலெக்ஸாந்தரின் "வாங்க சேர்“; சத்தம் அவனைச் சுயநினைவுக்கு இழுத்தது. உள்ளே போனான். கண்களை வீசி அளந்தான். அதிபர்களது முகங்களைப் படித்தான். கல்வி அதிகாரியை வரவேற்க ஆயத்தமாகி யிருப்பதை அவதானித்தான். ஒரு வகுப்பறையின் வடிவில் தளபாடங்கள் இருந்தன. நான்கு கதிரைகள். அவற்றுக்கு முன்னால் பெரிய மேசை. மாணவர்கள் இருப்பது போல் அதிபர்கள் அமர்ந்திருந்தனர். ஆனந்தனைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களது எண்ணமெல்லாம் கல்வி அதிகாரியிலேயே இருந்தன. செட்டிகுளப் பங்குத் தந்தை அருட்திரு.பிலிப் அடிகளார் வருவதை அலெக்ஸ் கண்டு கொண்டார். அலெக்ஸ் எழுந்து அடிகளாரிடம் சென்று "வணக்கம் பாதர் வாங்க. என்ன விசயம் பாதர்“? அவரிடம் விசாரித்தார்.

"வணக்கம் அலெக்ஸ். எங்க கல்வி அதிகாரி? அவர் காலயில என்னைச் சந்திக்க வந்திருக்கார். நான் வெளியில போயிருந்தன். அவர் பாடசாலையில் நிற்பதாகச் சொல்லியிருக்கார். நான் வந்ததும் சொன்னார்கள். அதுதான் வந்தனான்“. விசயத்தைச் சொன்னார். "அவர் இன்னும் வரல்ல பாதர். அதுதான் காத்திருக்கிறம்“;. அலெக்ஸ் விளக்கினார். "இன்னும் வரல்லையா“? பாதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது கண்கள் ஆனந்தனைத் தேடின. ஆனந்தன் அடிகளாரைப் பார்த்து விட்டான். எழுந்து வெளியில் வந்தான். "குட் மோர்னிங் பாதர். நான் ஆனந்தன். காலையில் உங்களப் பார்த்து ஆசிர்வாதம் பெறலாம் என்று வந்தன். நீங்க வெளியில் போனதாகச் சொன்னார்கள். வாங்க பாதர் உள்ளே..“ அழைத்தான்.

அலெக்ஸாந்தருக்குத் தன்னை யாரோ அலக்காகத் தூக்கி வாரி மேலே எறிந்து, அதள பாதாளத்தில் இருந்து விழும் உணர்வு ஏற்பட்டது. "காலையில் இருந்து யாரோடு கதைத்தேனோ அவர்தான் கல்வி அதிகாரி என்பதை அறிந்து கொள்ளவில்லையே. மரியாதையோடு அடக்கமும் உள்ள அதிகாரி. சே.. எவ்வளவு மடத்தனம்.“ தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். எண்ணியவாறே உள்ளே முன்னால் சென்றார். பிலிப் அடிகளாருக்கு நல்ல மரியாதை இருந்தது. சமயங்கள் எல்லாம் அன்புவழியைக் காட்டுவன. மனிதர்களைப் பாவச் செயல்களில் இருந்து காப்பாற்றி நல்வழிப்படுத்துவன, என்ற உன்னத நோக்கத்தைக் கொண்டவர். பாதரைக் கண்டதும் அதிபர்கள் எழுந்தார்கள். வணக்கம் சொன்னார்கள். அவரும் வணக்கத்தைத் தெரிவித்தார்.

பாதர் மேசையருகில் இருந்த கதிரையில் அமர்ந்தார். பக்கத்தில் அதிபர்சங்கத் தலைவர் யோகசாமி போயிருந்தார். செயலாளர் அதிபர் பாலசிங்கம். அவரும் சென்று இன்னொரு கதிரையில் இருந்தார். அதிபர் யோகசாமி தான் தலைமை வகித்தார். இரண்டு நிமிட மௌனப் பிரார்த்தனையோடு கூட்டம் தொடங்கியது. "இதுவரை நமது கல்வி அதிகாரி வந்து சேரவில்லை. பாதர் வந்திருக்கிறார். அவரது ஆசியோடு நமது கூட்டத்தைத் தொடங்குவோம். எப்படியும் கல்வி அதிகாரி வந்துவிடுவர்“;. பிலிப் அடிகளாரை ஆசியுரை வழங்குமாறு அழைத்தார். அடிகளாருக்குச் சிரிப்பு வந்தது. "நமது மக்களும் இப்படித்தானே. எங்கும் நிறைந்திருக்கும் ஏகாந்தப் பரம்பொருளைத் தமக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவரைத்தேடி அலைகிறார்கள்“. மனதில் நினைத்துக் கொண்டு அடிகளார் எழுந்தார்.

"எனக்கு இன்றைக்குச் சந்தோசமாக இருக்கிறது. நமது பக்கத்திலேயே இறைவனை வைத்துக் கொண்டு அவனைக் காணவில்லை என்று தேடுகிறோம். நாம் நம்மை அறிந்து, நமது சூழலையும் புரிந்து தேடலில் ஈடுபடவேண்டும். ஒவ்வொருநாளும் புதிதாக வருகின்றன. கழிந்த நாட்கள் திரும்பி வருவதில்லை. புதிய நாட்கள் நம்முன்னே வந்து நிற்கின்றன. நாம்தான் அதனைப் பரிந்து நமது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். எங்களது செட்டிகுளம் கல்வி வட்டாரம் வளமுறவேண்டும். நல்லதொரு கல்விச் சமூகம் உருவாக வேண்டும் என்பதற்காக நமது மத்தியில் வந்திருக்கும் கல்வி அதிகாரி திரு.ஆனந்தன் அவர்களே! அதிபர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கமும், நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக“. பாதர் கூறியதும் அனைவரது கண்களும் சுழன்றன.

எங்கே கல்வி அதிகாரி? யார்..? அவரா..? வினாக்கள் எழுந்தன. "இதோ உங்களோடு ஒருவராக அமர்ந்திருக்கும் இவர்தான் நமது கல்வி அதிகாரி திரு.ஆனந்தன்.“ கைகளால் சுட்டிக் காட்டினார். அனைவரது கண்களும் ஒரே நேரத்தில் ஆனந்தனை மொய்த்தன. யோகசாமி எழுந்து ஆனந்தனிடம் சென்றார். சேர்! மன்னிச்சிக் கொள்ளுங்கோ. உண்மையில் நாங்கள் வேறு யாரோவென்று இருந்துவிட்டோம்.“ மன்னிப்புக் கேட்டு அவருக்காக ஒதுக்கப்பட்ட கதிரையில் அமருமாறு கேட்டுக் கொண்டார். அதிபர்கள் அனைவரும் ஒரே முகமாக அழைத்தார்கள்.

ஆனந்தன் மெல்ல எழுந்து கதிரையில் அமர்ந்தான். பாதர் தொடர்ந்தார். "செட்டிகுளம் கல்வி வட்டாரத்தில் இரண்டு புதிய பாடசாலைகளைத் திறப்பதற்கு இரண்டு வருடங்களாக முயற்சிக்கிறோம். ஆனால் இன்னும் திறந்தபாடில்லை. முதல்வேலையாக அவற்றைத் திறந்து தர ஆவனசெய்யவேண்டும். அடுத்ததாக இந்தப்பாடசாலையிலும் சுற்றுப்புறப் பாடசாலைகளிலும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை நடத்துவதற்கான மத்திய நிலையம் செட்டீகுளத்தில் இல்லை. செட்டிகுளத்தில் அந்தப் பரீட்சை நடத்துவதற்குரிய மத்திய நிலையத்துக்கான அனுமதியையும் பெற்றுத்தரும்படி“ தனது ஆசியுரையோடு சேர்த்துக் கேட்டுக் கொண்டார்.

ஆனந்தன் தன்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்தான். அதிபர்கள் தங்களை அறிமுகம் செய்தார்கள். புன்னகையோடு அவர்களுக்கு வணக்கம் சொன்னான். பாடசாலைகளின் குறைகளைப் பட்டியல் படுத்திப் பாடசாலைவாரியாகப் பெற்றுக் கொண்டான். "பாடசாலைத் தேவைகளுக்காக நீங்கள் கல்வி அலுவலகம் செல்லவேண்டியதில்லை. அத்தேவைகளை என்னிடம் தாருங்கள். உடனேயே முடித்துத் தருவேன்.“ ஆணித்தரமாக முன்வைத்தான். முதற் கூட்டத்திலேயே அதிபர்களது நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டான். "பாதர் குறிப்பிட்ட இரண்டு விடயங்களும் அடுத்தமாதம் கைகூடும். அதனைச் செய்து தருவது எனது பொறுப்பு“?. என்றான். அதிபர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. நம்பினவர்களும் உண்டு. நம்பாதவர்களும் இருந்தார்கள்.

"சேர்! மன்னிக்கவேணும். பீடிகையோடு அதிபர் முருகப்பா எழுந்தார். "நீங்க நினைப்பது போல் புதிய பாடசாலைகள் திறப்பது இலகுவானதல்ல. அதேபோல்; செட்டிகுளத்தில் பரீட்சை நிலையம் வைப்பதற்கான அனுமதியும் பெறுவது முடியாத காரியம்“. எதையோ வீழ்த்திய பெருமையில் அவர் சொற்களை வீசினார். ஆனந்தன் சிரித்துக் கொண்டான். "நீங்கள் ஏன் எதிர்மறையாய் நினைக்கிறீர்கள். முடியும் என்று நம்புவோமே.“ ஆனந்தன் வழமையான பதிலை ஆறுதலாகக் கூறினான். "அதுக்கில்ல சேர், புகழுக்காகச் சொல்லிப்போட்டு செய்யாமல் விடக்கூடாது. இப்படிப் பல அதிகாரிகள் வந்தார்கள். அது செய்வேன். இது செய்வேன் என்று சொல்வார்கள். போய்விடுவார்கள். ஒன்றும் நடக்காது. பின் அதுபற்றிய பேச்சே இருக்காது. அதுதான் சொன்னேன்.“ முருகப்பா பதிலளித்தார்.

"அதிபர் முருகப்பா சொல்வதிலும் உண்மையில்லாமல் இல்லை. ஆனால், பாதர் நீங்கள் முன்வைத்த இரு கோரிக்கைகளையும் அடுத்த மாதக்கூட்டத்தில் அறிவிப்பேன். சரி உங்களது வட்டார வேலைத் திட்டத்தின்படி விடுபட்ட வேலைகள் இருக்கினறனவா“? வினாவாகக் கேட்டு விடையை எதிர்பார்த்தான். அதிபர் பாலசிங்கம் எழுந்தார். "சேர்! வட்டார விளையாட்டுப் போட்டி அரைவாசியில கிடக்கு. அதைப்பற்றி வட்டார விளையாட்டுச் செயலாளர் திரு.அலெக்ஸாந்தர் கூறுவார். அலெக்ஸ் சேர், அதைப் பற்றிக்கூறுங்களன்“;. அலெக்ஸாந்தரைக் கேட்டுக் கொண்டார். அலெக்ஸாந்தர் எழுந்து விபரத்தை விளக்கினார். 'கீற்ஸ்’ முடிந்துவிட்டது. "பைன’லில் இன்னும் சில நிகழ்ச்சிகளும், பரிசுகளும் வழங்க வேண்டும். அதற்குரிய நிதி வளமும் இல்லை. என்ன செய்யலாம், சேர்? வினாவாக முடித்தார்.

"என்னன்ன செலவு வரும். உத்தேசமாகச் சொல்லமுடியுமா? கேட்டு விட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தார். "சேர்! விருந்தினர்கள், நடுவர்களது உபசரிப்பு, பரிசுப் பொருட்கள், இதர செலவுகளாக உத்தேசமாக இருபத்தைந்தாயிரம் தேறும். அலெக்ஸாந்தர் சமர்ப்பித்தார். "அதிபர் சங்கத்தால் எவ்வளவு கொடுக்கலாம்“. வினவினான். சங்கத்தின் பேரில் விளையாட்டுப்போட்டிக்காக ஏழாயிரம் இருக்கு. அலெக்சாந்தர் வாசித்தார். சரி எப்போது விளையாட்டுப் போட்டியை வைக்கலாம்.? திகதியைத் தீர்மானியுங்கள்“;. கூறிக்கொண்டே தனது தினக்குறிப்பைப் புரட்டினான். "இன்று வியாழன் அடுத்தகிழமை வியாழன் பொருத்தமாக இருக்கும் சேர். எல்லா ஆயத்தங்களையும் செய்து விடலாம்“. கரீம் அதிபர் சுட்டிக்காட்டினார். அது சரிப்பட்டு வராது. மூன்றுகிழமையாவது வேண்டும்“;. மீண்டும் முருகப்பா குறுக்கிட்டார். "வேண்டாம் சேர். அதிபர் கரீம் கூறியபடி வியாழக்கிழமையே வைப்போம“;. அதிபர்கள் ஏகமனதாகத் தீர்மானித்தார்கள்.

"அலெக்ஸ் ஏற்பாடுகளைக் கவனியுங்கள். ஐம்பது உணவுப் பொட்டலம் வேண்டும். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். பரிசுப் பொருட்களை புதன்கிழமை வாங்குவோம். வவுனியா மாவட்டக் கல்வி அலுவலகம் வரமுடியுமா“? கேட்டுவிட்டு அலக்ஸ்சாந்தரைப் பார்த்தான். "ஓம் சேர்“;. அலெக்ஸாந்தரிடமிருந்து பதில் வந்தது. பதினெட்டு வியாழன் விளையாட்டுப் போட்டி நடைபெறும். உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள்“. அதிபர் யோகசாமிக்கு ஆனந்தனின் செயல்கள் அனைத்தும் பிடித்துக் கொண்டது. கூட்டம் முடியும்போது "அன்பானவர்களே உங்கள் பாடசாலைகளுக்குத் திடீர்விஜயம் செய்வேன். உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யுங்கள். அத்துடன் எனது அலுவலகம் இந்தப் பாடசாலையிலேயே அமையும். உங்கள் தேவைகளை இங்கேயே நிறைவேற்றப் படும்“. நிறைவாகக் கூறி விடைபெற்றான்.

அதிபர்களது கூட்டம் முடிந்தது. பாதர் ஆனந்தனிடம் விடை பெற்றார். மெதுவாக ஏதோ சொன்னார். அவனால் தட்டமுடியவில்லை. சம்மதித்தான். அவர் சென்றுவிட்டார். அதிபர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். ஆனாலும் அவர்களால் உடன் செல்லமுடியவில்லை. போக்குவரத்து மிகவும் அரிதாகவே நடைபெற்றது. செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் ஒரு பகுதியில் சிறியதான அறையை பிரதேசக் கல்வி அலுவலகமாக மாற்றியமைத்தான். அதிபர் ரத்தினத்தின் உதவியோடு அலெக்ஸ் யாவற்றையும் செய்து முடித்தார். அதிபர் பாலசிங்கம் பூரணமாக ஒத்துழைத்தார். பல அதிபர்கள் கல்வி அலுவலக அறை ஒழுங்கு படுத்திக் கொண்டே உரையாடினார்கள். உரையாடல்கள் இடையே பலவற்றைப் பரிமாறிக் கொண்டார்கள்.

"செட்டிகுளம் பிரதேசத்தைப் பற்றித் தெரியாது. வஸ்போக்குவரத்தும் குறைவு. எப்படி பாடசாலைகளுக்கு இவர் திடீர் விஜயம் செய்வார். வஸ் வாறநேரம் எங்களுக்குத்தான் தெரியும்“. முருகப்பாவின் குரல் ஓங்கி ஒலித்ததை ஆனந்தன் உள்வாங்கிக் கொண்டான். இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் இருக்கும் திறமைகளை இனங்காணவேண்டும். தக்க தருணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். மனதில் பதித்துக் கொண்டான். ஒரு மனிதனிடம் பலமும் உள்ளது. அதேபோல் பலவீனம் உள்ளது. அதனைப் போக்குவதற்குரிய சந்தர்பங்களை அறியவேண்டும். அதனைப் பயன்படுத்தும் சாதுரியத்தையும் அறிந்திருக்கவேண்டும். மனிதனிடமுள்ள மானிடத்தைக் கண்டுபிடித்துவிடலாம்.

துரிதகதியில் அலுவலகம் தயாராகிவிட்டது. அலுவலகத்தை ஒட்டியதுபோல் ஒரு அறை இருந்தது. அதனைத் தான் தங்குவதற்கென ஒதுக்கிக் கொண்டான். "அலெக்ஸ்! அழைத்தான். அலெக்ஸ் வந்தார். "எனக்கொரு உதவி செய்யவேண்டும். நான் வந்து தங்கும் நாட்களில் உணவு வசதிக்கு ஏற்பாடு செய்துதர வேண்டும். செய்யலாமா? கேட்டான். "அதற்கென்ன சேர். நான் ஒழுங்கு செய்யிறன்“;. அலெக்ஸ் ஏற்றுக்கொண்டார். பாடசாலை முடிந்து பிள்ளைகள் போய்க்கொண்டிருந்தார்கள். அதிபர்களும் சென்றுவிட்டார்கள். பிலிப் அடிகளார் செய்தியனுப் பியிருந்தார். அலெக்ஸ் ஆனந்தனை பாதரிடம் அழைத்துச் சென்றார். பகல் உணவுடன் பாதர் காத்திருந்தார். அலெக்ஸாந்தரையும் அவர் அழைத்திருந்தார். சேர்ந்து உணவருந்தினார்கள். உண்டபின் தனது திட்டங்களை விளக்கினான். பாதரிடம் திறக்கவேண்டிய பாடசாலைகளின் விபரங்களைப் பெற்றுக் கொண்டான். அடுத்தகிழமை சந்திப்பதாகக் கூறி விடைபெற்றான்.

தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP