Wednesday, May 12, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

12

எவற்றை மனம் விரும்புகிறதோ, அவற்றைச் செய்யும்போது களைப்பும் சலிப்பும் ஏற்படுவதில்லை. எந்தக் கடினமான வேலையென்றாலும் அதனை விரும்பிச் செய்தால் இலகுவாகிவிடும். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் வரும் சவால்களை விளையாட்டாக எடுத்துக் கொண்டு செய்யத்துணிந்தால், அதனை நாம்தான் செய்தோமா என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும். விளையாடிக் கொண்டே சவால்களைச் சமாளிக்கப் பயின்று கொள்ளவேண்டும். மனதைப் பொறுத்ததுதான் வாழ்க்கை. அதற்கேற்றாற்போல்தான் வெற்றியும் அமையும். தனது ஆசிரியர்களது அமுத மொழிகளை ஆனந்தன் அசைபோட்டு அதன்படி நடந்து பார்ப்பவன். அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே ஆழ்ந்து உறங்கி விட்டான்.

டேவிட் எப்போதும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிடுவார். எழுந்ததும் குளித்துவிட்டு சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்து விட்டு நிமிரும்போது மாதா கோயில்மணி ஒலிக்கும். ஆனந்தன் கண்விழித்தான். டேவிட் கட்டிலில் தியானத்தில் இருந்தார். "அப்பா தேநீர் குடியுங்கள். அண்ணா எங்கே“ கூறியவாறு மயூரி இரண்டு கோப்பைகளில் தேநீர்;; கொண்டு வந்து தந்தாள். "அவர் குளிக்கிறார். மேசையைக் காட்டி "அதில வை. வரட்டும்“;. அவள் வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். ஆனந்தன் நீராடிவிட்டு வந்தான். சுடச்சுடத் தேநீரைக் குடித்தான். அவனது மனம் சந்தோசத்தில் துள்ளியது. டேவிட் வெளியே வந்து மண்டபத்தில் இருந்தார். ஆனந்தன் உடையணிந்தான். அவனும் வெளியில் வந்தான். அவனைக் கண்டதும், “ புறப்படுவோமா? வாங்க போவம்“;. புறப்பட்டார்கள். செபஸ்தியார் வீட்டில் நின்று கொண்டார். அவர் வழமையாக ஆறரை மணிக்குத்தான் போவார். நடந்தார்கள்.

காலையில் நடப்பது சுகமாக இருந்தது. வீதி பரந்து கிடந்தது. வாகன நெரிசல் இல்லை. கண்ணைக்கூசும் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு வாகனங்கள் விரைந்தன. "அண்ணி கோயில் தூரத்திலா இருக்கு“? மயூரி கேட்டாள். "ஒரு கூப்பிடு தூரந்தான். நடந்தே போயிடலாம்“. பிரதான வீதியைத்தாண்டி இடப்பக்கமாகத் திரும்பி நடந்தார்கள். முஸ்லிம் ஹோட்டல்கள் திறந்திருந்தன. பள்ளிவாயில்களில் தொழுகை நடந்து கொண்டிருந்தது. தூரத்தில் இந்து ஆலயத்தில் இருந்து மணியோசை காற்றில் கலந்து காதுகளில் இனித்தது. "அதோ அதுதான் கோயில்“ மேரி சுட்டிக் காட்டினாள். சிலுவையின் வெளிச்சம் பளிச்சிட்டது. கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும்பான்மையாகக் கோயில்களுக்குச் செல்வார்கள். அதனைக் கட்டாயக் கடமையாகவும் கொண்டவர்கள். கோயில் விசாலமாக இருந்தது. கோயில் நிறைந்து மக்கள் குழுமியிருந்தனர்.

திருகோணமலையிலும் மாதா கோயிலுக்குச் சென்றிருக்கிறான். எங்கும் ஒரேவிதமான பூசையை அவதானித்தான். அவைகள் யாவும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டிருப்பதை அவதானித்தான். மக்கள் பயபக்தியாக மன்றாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பூசைநேரத்தில் அமைதி குடிகொண்டிருப்பதை அவதானித்தான். கிறிஸ்தவம் மேற்கு நாட்டிலிருந்து வந்தாலும் பல அரிய பழக்க வழக்கங்களையும் வழங்கிருந்தது. தேவையில்லாத இரைச்சல் இல்லை. தூய்மை பேணப்படும். வேண்டியபோது நின்றும், வாங்குகளில் இருந்தும், முழந்தாளில் நின்றும் வணங்குவார்கள். ஒன்றாகச் சேர்ந்து பாடுவார்கள். குருவானவர் அறிவுபூர்வமான பிரசங்கங்கங்கள் செய்வது பிடித்தமான செயல்களாகப் பட்டன.

திருப்பலிப் பூசையின்போது ஒரு மணியொலிக்கும். அப்போது அனைவரும் தலைகுனிந்து மன்றாடுவார்கள். மறுமணி ஒலிக்கும் வரை தலைகள் அப்படியே இருக்கும். பூசையின் நிறைவின்போது ஆளையாள் வணங்கி வணக்கம் சொல்வது ஆனந்தனுக்குப் பிடித்த செயல்களாகின. பூசை முடிந்து வெளியில் வந்தார்கள். மனங்களில் அமைதி குடிகொண்டிருந்தது. அதனை அவர்களது முகங்கள் காட்டின. "எப்படிப் பூசை? அனுபவித்தீர்களா“? கேட்டபடியே மேரி முன்னால் நடந்தாள். "மனதுக்கு நிம்மதியாக நல்லாயிருந்தது. திருப்தியோடு சொன்னான். டேவிட் முன்னால் சென்றார“;. தொடர்ந்து மாகிரட்டும் சின்னதுகளும் சென்றார்கள். பின்னால் மயூரி தொடர்ந்தாள். "அண்ணி என்ன கேட்டீங்க“? மயூரி கேட்டாள். " நான் ஒண்ணும் கேக்கல்ல“. மேரி பதிலளித்தாள். "அப்ப ஏன் அண்ணி கோயிலுக்குப் போறீங்க“? மயூரி கேட்டாள். "இறைவனுக்கு நன்றி சொல்ல. மயூரி இந்த மனிதப்பிறவியைத் தந்தவனே அவன்தானே? அவனருளாலே அவன்தாள் வணங்கவும், அவனருளாலே உலகம் உய்யவும், மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டியும் யாசிக்கப் போனேன்.“ மேரி விளக்கினாள். "அண்ணா! அண்ணியின் தத்துவம் புரிந்ததா? எனக்கு விளங்கல்ல. உங்களுக்குப் புரிந்ததா“? மயூரி நடந்து கொண்டே கூறினாள்.

மேரியின் பதில் ஆனந்தனை ஈர்த்தது. இவள் இவ்வளவு தத்வாத்துவமாகப் பதிலளிக்கிறாளே? தனக்ககா மட்டும் வேண்டிப் பிராத்தனையில் ஈடுபடும் மக்களிடையே இவள் வேறுபட்டு நிற்பதை உணர்ந்து கொண்டான். பிறருக்காக எவர் வாழ்கிறாரோ அவர் உயர்ந்தவராகிறார். ஆனந்தனும் இதைத்தானே பிரார்த்தனையின் போது நினைத்தான். அருவமும் உருவமும் இல்லாத ஒளிமயமான இறைவனை எப்படிவேண்டுமானாலும் யாசிக்கலாம். கற்பனை கடந்த சோதி வானவன், அணுவுக்குள் மூன்று மூலங்களை வைத்து அதனூடாக ஆற்றலைப் பெருகச் செய்யும் இறைவனது சக்தி மகத்தானது. அணுவுக்குள் புறொட்டோன், நியுற்றோனை வைத்து அதனைச் சுற்றி இலத்திரோனையும் வைத்து இயக்கத்தை உருவாக்கிய அற்புதச் சிருஷ்டிகர்த்தா இறைவன். தன்னுள் எண்ணி வியந்தான்.

"அண்ணா! என்ன ஆழ்ந்த யோசனை? அண்ணி சொன்னது விளங்கல்லயா? அல்லது குழப்புகிறதா“? குறும்பு கலந்து கேட்டாள். அவன் சிரித்துக் கொண்டான். கதையை வேறுபக்கம் இழுத்தான். "மயூரி! ஒன்று கேட்க மறந்திட்டன். நாங்க கொழும்புக்கு வரும்போது கவனமாக வைக்கும்படி ஒரு பெரிய என்வலப் கொடுத்தனான். நினைவிருக்கா“? "ஓம் அது அலுமாரி லாச்சியில் இருக்கு. அதுக்கென்ன இப்ப“? "வாற அவசரத்தில சொல்ல மறந்திற்றன். அதுக்குள்ள இன்ரவியுக்கு வந்த கடிதம் இருக்கு. இப்பதான் நினைவுக்கு வந்தது. போனதும் நினைவாக எடுத்துத் தரவேணும். புதன்கிழமை இன்ரவியு“. ஒருமாதிரிச் சொல்லித் தப்பினான். "என்னத்துக்கு இன்ரவியு“? அதிசயமாகக் கேட்டாள்.

நான் சொன்னேன்தானே? ரீச்சிங். அதற்கானதுதான்“. "அண்ணா உங்க ஆசை நிறைவேறும். கட்டாயம் ரீச்சிங் கிடைக்கும். அண்ணியும் நம்வீட்டுக்கு வருவா. எனக்குச் சிரியான சந்தோசம்.“ குதுகலத்தோடு சொன்னாள். "அண்ணி உங்க அதிர்ஷ்டம். அண்ணனுக்கு ரீச்சிங் இன்ரவியுவுக்கு கடிதம் வந்திருக்கு. சந்தோசமா“? சத்தமிட்டுச் சொன்னாள். "எனக்கு எப்பவோ தெரியும்“. சொல்லிவிட்டு உதடுகளைக் கடித்துக் கொண்டாள். "தெரியுமா எப்படித் தெரியும்“.? எல்லாம் ஒரு யூகம்தான். இப்பதானே நீங்க சத்தமாகச் சொன்னீங்க.“ சமாளித்தாள். "அண்ணா அப்பாவுக்குத் தெரிந்தால் சந்தோசப் படுவார். இப்பவே சொல்லவா“? அவசரப்படுத்தினாள். "மயூரி, வீட்டுக்குப் போய்ச் சொல்லலாம்தானே? சாப்பிடும்போது ஆறுதலாகச் சொல்வோம். அதோ வீடும் வந்திற்று“. மேரி பதிலளித்தாள். "அண்ணி வீடு எப்படி வரும். நாங்கதானே வீட்டுக்கு வாறம்.“ சிரித்துக் கொண்டே கூறினாள். "என்ன கிண்டலா“? சிரித்தவாறே நடந்தாள்.

ஆனந்தன் புன்னகைத்தான். எலிசபத் முன்னால் போய்விட்டாள். பின்னால் மாகிரட் நடந்தார். தொடர்ந்து டேவிட் சென்றார். வீடு கலகலப்பாகியது. வழமையான வேலைகள் நடந்தேறின. மாகிரட் பம்பரமாகச் சுழன்றார். துணைக்கு மேரியும் எலிசபத், மரியா, ஏஞ்சல். மயூரியும் இருந்தார்கள். மனைமாட்சி என்பது பெண்களின் கைவண்ணத்தில்தான் உள்ளது. காலையுணவு பரிமாறப்பட்டது. செபஸ்தியார் சாப்பிட்டவாறே "ஒரு நாள் நின்று நாளைக்குப் போனால் என்ன?“ கதையை இழுத்தார். டேவிட் சிரித்தார். "நீங்க சொல்வது நல்லதுதான். கேட்கவும் நல்லாத்தான் கிடக்கு. அங்க வேலை நிறையக் கிடக்கிறது. ஆனந்தனுக்கு லீவும் எடுக்கேலாது. போறத்துக்கான ரிக்கற்றையும் ஸ்ரனிலாஸ் எடுத்துத் தந்திட்டான். திங்கள் காலையில் ஸ்ரேசனில காத்திருப்பான். அவனுக்குச் சாப்பாட்டுக்கும் கஸ்டம்“ டேவிட் செபஸ்தியாரை மேற்கொண்டு பேசுவதற்கு இடம்கொடாது விளக்கினார்.

"அப்பா அண்ணாவுக்கு இன்ரவியுவும் இருக்காம். அதனால நிக்கேலாது“. மயூரி அவலை உரலில் போட்டுவிட்டாள். ஆனந்தனுக்குச் சங்கடமாயிற்று. ஒரு பொய்யை மறைக்க எத்தனைவிதமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே டேவிட் ஐயாவிடம் சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்சினை இருக்காது. சமாளிக்கத்தான் வேண்டும். "ஆனந்தன், என்ன இன்ரவியு, எப்ப நடக்கும்“. டேவிட் வினாவினார். "அதுதான் நான் சொன்னேனே. ரீச்சிங். புதன்கிழமை நடக்கும்“. பதிலளித்தான். "நல்லதாகப் போச்சுது. பாத்தீங்களா? இதுதான் ஆண்டவன் சித்தம் என்பது. நான்கூட இன்டைக்கு ஆனந்தன் வேலை விசயமாகத்தான் மன்றாடினனான். என்டைக்கும் இறைவன் உதவ பின்நிற்க மாட்டார். சரி எப்ப கடிதம் வந்தது.“? டேவிட் ஆனந்தனைப் பார்த்தார். "வெள்ளிக்கிழமை. நாங்க கொழும்புக்கு வாறண்டைக்குத்தான். அவசரத்தில சொல்ல மறந்திட்டன். போய்த்தான் ஒழுங்குகளைச் செய்யவேணும்“. ஆனந்தன் ஒருவாறு கூறிமுடித்தான்.

பகற்பொழுது பறந்து போனது. டேவிட் மனநிறைவோடு இருந்தார். செபஸ்தியார் மனம்விட்டுக் கதைத்தார். "நாங்க உங்கள மறக்கமாட்டம். எவ்வளவு காலம் உங்களப் பார்க்காமல் இருந்தம். அதையெல்லாம் நினைக்கும் போது கவலையாகத்தான் இருக்கு“. நெக்குருகிக் குழைந்தார். பக்கத்தில் மாகிரட் நின்றிருந்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. "என்னைத் தேடி நீங்கதானே வந்தீங்க. எல்லாத்தையும் கனவாக நினையுங்க. போனதயிட்டுக் கவலயடையக் கூடாது. நடப்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். மேரியின்ர விசயத்தைப் பார்ப்பம். இப்ப நவம்பர் மாதம். எப்படியும் மேமாதம் கலியாணத்த வைக்கலாம் என்று யோசிக்கிறன். அதற்கு ஆயத்தப்படுத்துங்க.“ டேவிட் விளக்கமாகக் கூறினார்.

புறப்படும் நேரம் நெருங்கிவிட்டது. பிரிவு என்பது உணர்வுகளைப் பிழியும் வல்லமை கொண்டது. அன்பு பிணைப்பை ஏற்படுத்துவது போல் பிரிவும் நெருக்கத்தை வலிமையடையச் செய்யும். நம்மில் ஒருவராகக் கலந்து இருந்தவர் ஒருவர் பிரிந்து சென்றால், அவரோடு பழகிய அந்த நாட்களில் ஏற்படுத்திக் கொண்ட நல்ல உறவு, அவர் இல்லாத போது நினைந்து நினைந்து, அந்த நினைவுகள் பாலமாக அமைந்து மென்மேலும் அன்பையும் பாசத்தையும் வளர்த்து விடும். தலைவன் தலைவியிடையே ஏற்படும் பிரிவும் இத்தகையதே. இந்தப்பிரிவு நினையும் தோறும் துன்பத்தைக் கொடுத்தாலும், அதிலொரு இன்பத்தையும் கொடுக்கும். இதனை ஆனந்தன் உணரத்தலைப்பட்டான். கொழும்புக் கோட்டை புகைவண்டி நிலையத்தில் விடைபெற்றுப் பிரியும் போது மேரி வெறுமையை உணர்ந்தாள்.

தன்னைத் தன்னந்தனியாக விட்டு எல்லாமே பிரிந்து செல்வதாக நினைந்தாள். றெயில்வண்டி கூவலோடு புறப்பட்டது. மேரியின் விழிகளில் கண்ணீர் துளிர்விட்டதைக் கண்டு கொண்டான். "விரைவில் வருவேன். கவலைப் படவேண்டாம்“ மெதுவாகக் கூறினான். "அண்ணி உங்கள் அன்புக்கு நன்றி. எனது அண்ணனுக்கு நல்லதொரு மனைவி கிடைத்ததை எண்ணிச் சந்தோசம். நாங்க போய்வாறம்“ மயூரி விடைபெற்றாள். புகைவண்டி இருளைக் கிழித்து இரைந்து தண்டவாளத்தில் சடசடத்தது. ஆனந்தனது உடல் மட்டும் புகைவண்டி இருக்கையில் அசைந்து கொண்டிருந்தது. அவன் கண்களை மூடியபடி கனவு கண்டான். ஒரு இனிமையான புத்தம்புது உலகத்தில் மேரியோடு பயணித்தான்.

தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP