Saturday, October 2, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
5
மக்கள் முண்டியடித்து வஸ்சில் ஏறினார்கள். கொண்டுவந்த பொருட்களை வஸ்சில் ஏற்றமுடியவில்லை. “எப்படிப் போகப்போறம். சரியான சனமாக்கிடக்கு. ஆட்டோவில போவம். பிள்ளையும் களைச்சுப் போனாள்.” சுந்தரத்தார் யோசித்தார். தங்கத்தின் முகமும் ஆமோதித்தது. ஆட்டோவை அழைத்தார். பேரம்பேசி ஏறிக்கொண்டார்கள். ஆட்டோ குறுக்குச் சந்துகளால் புகுந்து புறப்பட்டது. குதிரைச் சவாரி செய்வது போலிருந்தது. வீதிகள் பள்ளம் படுகுழிகளோடு படுத்திருந்தன. கயல்விழிக்கு ஆச்சரியமாக இருந்தது. இது நான் பார்த்த மூதூரா? எவ்வளவு மாற்றம். தெரிந்த முகங்களைக் காணமுடியவில்லை. பற்றைக்காடுகள் மண்டிக்கிடந்த பகுதிகள் குடிச்செறிவுள்ள பகுதிகளாக மாறிவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் குடிச்செறிவினைக் காணமுடியவில்லை. ஜெட்டியிலும் தமிழ்க் கடைகளைக் காணவில்லை.
குறுக்கு வழி கட்டைபறிச்சான் ஆற்றுப் பாலத்தை இலகுவில் காட்டியது. ஆற்றுக்கப்பால் தமிழ் மக்களின் நடமாட்டம் தெரிந்தன. வீதியின் கரையோரம் பற்றைக் காடுகள். பல்வகைத் தாவரங்கள் நெடிதாக வளர்ந்திருந்தன. கண்டல் தாவரங்கள் செழித்திருந்தன. கட்டைபறிச்சான் கிராமம் இதுதானா? அடையாளம் காணமுடியாதுள்ளது. அழகான வீடுகள் எங்கே? சமதரையில் ஆங்காங்கே சில மரங்கள் மட்டும் தெரிந்தன. வேலிகள் இல்லை. தற்காலிகக் கொட்டில்களில் மக்கள் தஞ்சம் புகுந்திருந்தனர். பெய்த மழைநீர் வீதிகளிலும், தூர்ந்து போய்கிடக்கும் ஷெல்விழுந்த பள்ளங்களிலும் தேங்கிநின்றது. “அப்பா இது எந்தத் தெரு.”? கயல்விழியால் அடையாளம் காணமுடியாதிருந்தது. அப்பாவிடம் கேட்டாள். சுந்தரத்தாருக்கும் தடுமாற்றமாகத்தான் இருந்தது. கற்பகவிநாயகர் கோயில் தெரிந்தது. அது உடைந்து கிடந்தது. அதனை அடையாளம் கண்டு கொண்டாள்.
விபுலானந்த வித்தியாலயம் விழுந்து கிடந்தது. அதனைத் தூக்கி நிறுத்த மக்கள் வந்து விட்டார்கள். ஆட்டோ சுந்தரத்தாரின் வீட்டுக் காணியில் நின்றது. பேசியவாறு பணத்தைக் கொடுத்து ஆட்டோவை அனுப்பினார்கள். மெதுவாக உள்ளே நடந்து சென்றார்கள். ஆளுயரத்துக்குச் செடிகள் வளர்ந்திருந்தன. வீட்டின் சிதைவுகள் எட்டிப் பார்த்தன. பலஆண்டுகளுக்குப் பின் தனது சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள்.
ஊரைவிட்டுப் போய் வருடங்கள் பல கழிந்து போயின. இப்போதுதான் மக்களைக் குடியேறுவதற்கு அனுமதித்து உள்ளார்கள். ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஆயம் புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்கு உதவியுள்ளது. பலர் இன்னும் வந்து சேரவில்லை. வந்தவர்களுக்கு வீட்டைத் திருத்துவதற்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. பலர் திருத்த வேலைகளில் ஈடுபட்டுவிட்டனர். சுந்தரத்தாரும் வந்து விட்டார். கயல்விழிக்குப் புதியதொரு உலகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. புதிதாகக் காடுகளை வெட்டிச் சேனைப்பயிர் செய்யும் உணர்வு பிறந்தது.
சுந்தரத்தார் வீட்டையும் திருத்துவதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. சுந்தரத்தார் திருத்த வேலைகளில் ஈடுபட்டார். வேலைக்கு ஆட்களைப் பிடித்தும், தானும் சேர்ந்தும் வளவினைச் சுத்தம் செய்து விட்டார். ‘ஏரிக்கரை’ அவரது ஓய்வு இல்லம். அதனைத் திருத்தி விட்டார். தற்காலிகமாகத் தங்குவதற்குக் கொட்டில் போட்டாகி விட்டது. செல்லச்சாமி கிணற்றை இறைப்பதற்குப் பம்செற் எடுத்து வந்தார். கிணற்றைத் துப்பரவு செய்தார்கள். கயல்விழியும் சேர்ந்து கொண்டாள். பல்கலைக்கழகத்தில் புத்தகங்களோடு கிடந்தவளுக்கு இங்கு அவற்றைத் துறந்து உடலுழைப்பில் ஈடுபடுவது சுகமாக இருந்தது.
“மகள் நீ அம்மாவோடு திருகோணமலையில் போயிரு. நான் இந்த வேலைகள முடிச்சிட்டு வாறன். பிறகு நமது சாமான்களை எடுத்துக் கொண்டு வருவம்.” சுந்தரத்தார் கூறினாள். “அப்பா நானும் இங்கிருந்தால் நல்லது. நான் அங்க இருந்து என்ன செய்யிறது? இஞ்ச இருந்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்தச் சனங்களோடு பழகி வாழலாம். அழிந்த நாட்டில் புதிதாய்க் குடியேறுவது போலிருக்கிறது. இந்தத் தோட்டத்தை மாற்றியமைக்கப் போறன்”. ஒரே பதிலாகச் சொன்னாள். சுந்தரத்தார் உலகையறிந்தவர். மகள் சொல்வதிலுள்ள உண்மையை உணர்ந்து கொண்டார். “தங்கம் நீ ஒருக்கா திருகோணமலைக்குப் போய் வீட்ட நல்லாப் பூட்டிப்போட்டு வந்தால் நல்லது”. மனைவியைப் பார்த்துச் சொன்னார்.
“அதெல்லாத்துக்கும் ஏற்பாடு செய்து போட்டுத்தான் வந்தனான். பக்கத்து வீட்டு முத்தம்மாக்காட்டச் சொல்லிப்போட்டன். அவ பார்த்துக் கொள்ளுவா. தம்பிக்கும் சொன்னான். அவரும் பார்த்துக் கொள்வார். நாங்க இந்த வேலைகளக் கெதியாச் செய்து முடிச்சிப்போட்டு இஞ்ச வந்திட வேணும்”. தங்கம் சிதைவுகளை அப்புறப் படுத்திக் கொண்டே கூறினாள். தங்கள் வேலையைத் தாங்கள் செய்வதில் உள்ள திருப்தி மகத்தானது. அலுப்பில்லாது அயராது உழைத்தார்கள். முதலில் அடுக்களையைத் துப்பரவாக்கினார்கள். கிடந்த தடிகளை எடுத்துக் குசினியை திருத்தியமைத்தார்கள். பெரிய மண்டபத்தோடு கூடிய வீடு சிதைந்து கற்குவியலாகக் கிடந்தது. கற்களை அப்புறப்படுத்தினார்கள். நடு அறையின் சுவர்கள் தப்பியிருந்தன. சுவர்கள் வெடிக்கவில்லை. கூரையில்லாது இருந்தது. அந்த அறையினைத் துப்பரவு செய்தார்கள். ‘யூ.என்.எச்.சி.ஆர் அலுவலர்கள் கூடாரத்துக்குரிய படங்கு கொடுத்தார்கள். அதனை விரித்து அந்த அறையின் மேல் விரித்தார்கள். முறிந்து கிடந்த வீட்டுக் கைமரங்களைச் சுந்தரத்தார் பொருத்தினார். ஒரு நீளமான கைமரம் உருவாகியது. அதனை அறையின் மத்தியில் வைத்து உயர்த்திவிட்டார். பார்ப்பதற்குக் கூம்பு வடிவில் தெரிந்தது. “அப்பா இது பிரமிட் கூடாரம்” கயல்விழி சிரிப்போடு சொன்னாள். “அதென்ன பிரமிட் கூடாரம்’? ஆச்சரியமாக் கேட்டார்.
“எகிப்திய மன்னர்கள் இறந்தபின் அவர்களது உடல்களையும், அவர்கள் விரும்பிய பொருட்களையும் பாதுகாப்பாக வைத்து கூர்நுனிக் கோபுரங்களைக் கட்டுவார்கள். அதற்குள் இருக்கும் பொருட்கள் அழியாது பாதுகாப்பாக இருக்குமாம். அதனைப் போல்தான் நமது வீடும் இருக்கிறது.” அவள் விளக்கமாகக் கூறினாள். அவர் கேட்டாரோ கேட்கவில்லையோ தெரியாது. தனது வேலையில் மும்முரமாக இருந்தார். படுக்கவும் இடந்தயாராகி விட்டது. கிணறும்தயார். குடியேறும் குடும்பங்களுக்குச் சமையலுக்கான பாத்திரங்களை ஒரு அரசசார்பற்ற நிறுவனம் வழங்கியது. தங்கம் அவற்றைப் பெற்று வந்தாள். தங்கத்தின் வழமையான கடமைகள் தொடங்கி விட்டன.
செல்லச்சாமி ஒரு பைநிறைய இறால் கொண்டுவந்தார். “அண்ணன் கயலும் வந்திருக்கு. அவளுக்கு இறால் பிடிக்கும். மலிவாகக் கிடச்சிது. வாங்கி வந்திருக்கிறன். கூறிக் கொண்டே கொடுத்தார். “சித்தப்பா இறால்பாலத்துக்குப் போகலாமா? போக விடுறாங்களா”? ஆச்சரியக் குறியோடு கயல்விழி கேட்டாள். அம்மன்நகரில சனங்கள் குடிவந்திற்றாங்கள். பாலத்தடியில் ‘ஆமிசெக் பொயின்ற்’ இருக்கு. போறவாற ஆக்கள நோட்டம் விடுறாங்க. ஆனால் கரைச்சல் இல்ல. போய்வரலாம். பகல்நேரத்தில இறால் மீன் பிடிக்க விடுறாங்க”. செல்லச்சாமி விளக்கினார். “ம்…. நமக்கு வந்த கேடு”. தங்கம் புறுபுறுத்தாள்.
தங்கம் சுறுசுறுப்பானாள். இன்றைக்கு அவளுக்கும் ஒரு புத்துணர்வு ஏற்பட்டுவிட்டது. மூவரும் சேர்ந்து ஆளுக்கொரு வேலையைச் செய்தார்கள். ஆற்றோரத்தில் தேற்றாமரம் நிழல் பரப்பிநின்றது. அதனைச் சூழவுள்ள பகுதியை கயல் துப்பரவாக்கினாள். தங்கம் நிறுவனம் கொடுத்த பாயை விரித்து சாப்பாட்டுக்காகத் தயாரானாள். “முகத்தக் கழுவிக் கொண்டு வாங்க. சாப்பிட்டுப்போட்டு வேலை செய்யலாம்”. அழைத்தாள். அப்போதுதான் கயல் பசியை உணர்ந்தாள். நல்ல பசியாய் இருந்தது. அம்மா சொன்னபடி செய்தார்கள்.
தேற்றாமரத்தின் நிழல் குளிர்ச்சியாய் இருந்தது. உணவு ருசித்தது. பசி ருசியை அறியாது என்பார்கள். கயலுக்கு இன்று சாப்பாடு அருமையாகச் சுவைத்தது. “அப்பா இன்றைக்குத்தான் சாப்பாடு ருசி. இறால்கறி சுப்பர்”. கூறிக் கொண்டு சாப்பிட்டாள். “அது நமது ஊர்த்தண்ணியின் விஷேசம்”. அம்மா பெருமையாகச் சொன்னார். ‘எந்த ஊர் என்றாலும் - அது நம் சொந்த ஊர் போல் வருமா’ என்ற பாடல் கயலுக்கு நினைவில் தட்டியது. சிரித்துக் கொண்டாள். சுந்தரத்தார் அவர்களது உரையாடலைக் கேட்டுப் புன்னகைத்தார். உண்டமயக்கம் தொண்டருக்கும் உண்டாம். சுந்தரத்தார் களைத்திருந்தார்.
தேற்றாமரத்தின் வேர் புடைத்து நிலத்தின்மேல் தெரிந்தது. அப்படியே அந்த வேரில் சாய்ந்து கோழித்தூக்கம் செய்தார். கயல் அப்பாவைப் பார்த்தாள். கவலைகுடிகொண்ட அவரது முகத்தைப் பார்த்தாள். அனுபவ ரேகைகள் நெற்றியில் தடம் பதித்திருந்தன. “எங்களை வளர்த்தெடுக்க அப்பாவும் அம்மாவும் பட்டபாடு” நினைந்தாள். வந்த உறக்கமும், உற்சாகமும் காற்றில் பறந்தன. அவள் கண்கள் பனித்தன.
அப்படியே அப்பாவை அணைத்துக் கதறி அழவேண்டும் போலிருந்தது. அப்பா அன்று குலுங்கிக் கதறி அழுததை நினைந்து கொண்டாள். எதற்கும் கவலையடையாத அப்பா அன்று துடிதுடித்து அழுதார். அண்ணன் இளங்கோ கெட்டிக்கார மாணவன். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். பாடசாலை விட்டு வரும்வழியில் சில வாலிபர்களால் அழைத்துச் செல்லப்பட்டான். அவனோடு படிக்கும் பலரைக் கூட்டிச் சென்றார்கள். இயக்கம் இளைஞர்களைக் கடத்தி ஆயுதப்பயிற்சி வழங்குகிறார்களாம்.
எந்தப் பெற்றார் தங்கள் பிள்ளைகளைக் களப்பலி யாக்குவார்கள். ஊரே கலங்கி நின்றது. சுந்தரத்தார் உரியவர்களைக் கண்டு விசாரித்தபோது கிடைத்த பதில் ‘நாங்கள் பிடிக்கவில்லை’ என்பதுதான். அண்ணனை அவர்கள் அழைத்துச் சென்றபோது இராமனை இழந்த தசரதனைப் போல் ஆவிதுடித்து அரற்றிய காட்சியை நினைந்து உருகினாள். அன்று போனவன்தான். இதுவரை அவனது செய்தி கிடைக்கவில்லை. எப்படி இந்த அப்பாவினால் சகித்துக் கொள்ள முடிந்தது? அவள் மனம் அழுதது.
அண்ணனால் அப்பாவுக்கு ஏற்பட்ட துன்பங்கள் எத்தனை?. காவற்பகுதியினர் விசாரணை என்ற பெயரில் கொடுத்த தண்டனைகளையும், அவர் அனுபவித்த கொடுமைகளையும் எண்ணிப் பார்த்தாள். அவரை மீட்டெடுக்க அம்மா செய்த செலவுகளையும் நினைந்தாள். அண்ணன் போனபின் அப்பா தளர்ந்து உடைந்து போனார். அவள் கண்கள் பனித்தன. எத்தனை ஆயிரம் அப்பா அம்மகாக்கள் இப்படிக் கண்ணீரோடு வாழ்கின்றனர். இத்தனை ஆயிரம் இளைஞர்களையும் பலி கொடுத்து கிடைத்த முடிவென்ன? சேர சோழ பாண்டியர்கள் சேர்ந்தொன்றாய் வாழ்ந்தார்களா? அவளது உள்ளத்தில் போராட்டம். அப்பா அசைந்து கண்களைத் திறந்தார். “அடட நித்திரை கொண்டிட்டன். என்ன”? புன்னகைத்தவாறே எழுந்தார். அப்பாவுக்குத் தெரியாதவாறு கண்களைத் துடைத்துக் கொண்டாள். அம்மாவுக்கு ஓய்வே கிடையாது. அம்மாவைப் பார்த்தாள். அம்மா வேலைகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.
இந்த அம்மா எவ்வளவு துயரங்களைச் சுமந்து கொண்டு வாழ்கிறார்? கயல்விழி க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள். திடீரெனச் செல்கள் வந்து விழுந்து வெடிக்கின்றன. சித்தப்பா. சித்தி பிள்ளைகள் ஷெல்லடியில் கண்முன்னால் சிதறுண்டு தசைப் பிண்டங்களாகக் கிடக்கின்றனர். மக்கள் விழுந்தடித்து காடுகளில் பதுங்குகிறார்கள். “கயல்விழி அம்மாவோடு ஓடு” குரல் கொடுத்துக் கொண்டே சுந்தரத்தார் பின்னால் ஓடினார். இப்படிப் பலதடவைகள் நடந்தன. வெடிச்சத்தங்கள் ஓய்ந்தபின் ஊர்ச்சனங்கள் சேர்ந்து ஈமக்கிரியைகளைச் செய்தார்கள். இந்த நிகழ்வுகள் அடிமனத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்தன. அவற்றை மீண்டும் நினைத்துப் பார்க்க அவளுக்கு மனமில்லை. மெதுவாக எழுந்து அம்மாவிடம் சென்றாள்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP