Sunday, October 10, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

13
இந்த மக்களிடம் உள்ள சக்தியை ஒன்றுதிரட்டிப் பார்க்க ஆசை. அவர்களின் அறியாமையைப் போக்கி விட்டால், தங்களை உணரும் சக்தியைக் காட்டிவிட்டால் தங்களில் தாங்களே தங்கியிருப்பார்கள். பிரதேசச் செயலாளர் சொன்னதுபோல் நிவாரணப் பொருட்கள் வந்தன. “கயல்விழி யார்”? லொறியில் வந்தவர்கள் கேட்டார்கள். கயல்விழி வந்தாள். “தங்கச்சி பிரதேசச் செயலாளர் உங்களிடம் இந்தப் பொருட்களைக் குடுக்கச் சொன்னவர். எங்க இறக்க வேண்டும்? சொல்லுங்க”. அவர்கள் பதிலுக்காகக் காத்திருந்தனர். “சாந்தன், நீங்க இதற்குப் பொறுப்பு. எங்க இறக்கினால் வசதி.”? கேட்டாள். “கோயிலடி பொருத்தமான இடம். அங்க இறக்குவம்”;. சாந்தன் கூறினான். “கோயிலடியில இறக்குங்க. சாந்தன் எல்லாத்தையும் கவனிப்பார்”;. அனுப்பி வைத்தாள்.
சாந்தன் லொறிக்காரரோடு சென்றான். “ மங்கை நீ அங்க போய் மற்ற வேலைகளைக் கவனி. நான் பிறகு வாறன். சாரதாவையும் கூட்டிப்போ”. சனங்கள் வேலையில் ஈடுபட்டார்கள். நிவாரணப் பொருட்கள் வந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியது. ஒரு குழப்பநிலை உருவாகியது. சாரதாவிடம் கயல்விழி செய்தியொன்றை அனுப்பியிருந்தாள். குழுத் தலைவர்கள் தங்கள் குழுக்களோடு பகல் மூன்று மணிக்கு வருமாறு அறிவுறுத்தியிருந்தாள். வரும்போது தங்கள் குடும்ப உறுப்பினர்களது பெயர் விபரங்களை எழுதி வரும்படி அறிவுறுத்தப் பட்டிருந்தது. செய்தி மக்களிடையே பரவியது. அவர்கள் மீண்டும் தமது கடமைகளில் மூழ்கினார்கள். பகல் பன்னிரெண்டு மணிக்கு வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள்
கயல்விழி கோயிலடிக்குச் சென்றாள். பொருட்களை சாந்தனின் குழு பொறுப்புணர்ச்சியோடு இறக்கி அடுக்கியிருந்தார்கள். பொருளாளர் ராகினியின் அறிவுறுத்தலுக்கேற்ப காவலுக்கு மூன்று இளைஞர்கள் இருந்தார்கள். சாந்தனுடன் பொருட்களைப் பகிர்வது பற்றி மங்கை உரையாடிக் கொண்டிருந்தாள். ராகினியும் உடனிருந்தாள். “கயல்! எல்லாம் ஒழுங்காக இருக்கு. சாந்தன் ஏற்ற ஒழுங்குகளைச் செய்துள்ளார். ராகினி பகல் மூன்று மணிக்குச் சனங்களை வரச்சொல்லியிருக்கிறா. அவர்கள் வரும்போது தங்கள் குடும்ப விபரத்தையும் கொண்டு வருவார்கள். கொப்பியில் விபரங்;களைப் பதிவதற்குச் சுலோச்சனா தலைமையில் ஒரு குழு இயங்கும். எல்லா எற்பாடும் தயார். இரண்டரை மணிக்கு நாம் வந்தால் சரி. இப்போது வீட்டுக்குப் போய் இந்த உடல் தன்னைக் கழுவிவிடச் சொல்லுது. வீட்டுக்குப் போவோமா”? மடமடவென்று சொன்னாள். இளைஞர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.அம்மா பிள்ளைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார். “வெயில் நல்லாச் சுட்டுப் போட்டுது. ரெண்டு பேரும் நல்லாக் கறுத்துப் போனிங்க. மேலக்கழுவிட்டு வாங்க சாப்பிடுவம். அப்பா காத்துக் கொண்டு இருக்கிறார்.” தங்கம் கூறிக்கொண்டே தனது வேலைகளில் ஈடுபட்டார். இருவரும் கிணற்றடியில் தண்ணீரை அள்ளி முகத்தில் அடித்துக் கழுவினார்கள். தண்ணீர் பட்டதும் உடல் சிலிர்த்தது. சுகமாக இருந்தது. “தண்ணீருக்குச் சுவையில்லை என்று சொல்லுறாங்க. ஆனால் கட்டைபறிச்சான் தண்ணீருக்குச் சுவையிருக்கிறது. தாகத்தை இந்தத் தண்ணீர் தீர்க்கிறது”. மங்கை தண்ணீரை அள்ளிச் சுவைத்தவாறே கூறினாள்.
அப்பாவோடு சேர்ந்திருந்து சாப்பிட்டார்கள். சுந்தரத்தார் கட்டபறிச்சானுக்கு மீள்குடி ஏறியதும் மரக்கறி வகைகளை நட்டிருந்தார். அவை இப்போது பயனளித்தன. நல்ல இறால் கறி சுவையாக இருந்தது. “மகள் உங்க ரெண்டு பேரையும் பார்க்க எனக்குச் சந்தோசமாக இருக்கு. என்னோட பிரதேசச் செயலாளர் கதைச்சவர். உங்களப் போல்தான் உங்கட மகளும் பொதுத் தொண்டில இறங்கியிருக்கிறா என்று. நம்மட சனங்கள் நல்லதுகள். அவர்களிடம் ஆற்றல் தேங்கிக் கிடக்கு. நம்மட இளைஞர்கள் நல்ல கெட்டிக்காரர்கள். அதோட நல்ல விவேகிகள். நீங்கள் இரண்டு பேரும் அவங்கள்ற திறமையைக் கண்டு கொண்டியள். இதை அப்படியே பிடிச்சிங்கண்டா ஊரை முன்னேற்றலாம். அப்பாவின் ஆதரவு எப்போதும் உண்டு. பிள்ள மங்கை! வீட்டுக்கு அறிவிச்சுப்போடு. சரியா”? அவர் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்.
சரியாக இரண்டரை மணி. இருவரும் கோயிலடிக்குச் சென்றார்கள். ராகினியும் சுலோச்சனாவும் பொருள் விநியோகத்துக்கு ஆயத்தமாக நின்றார்கள். சனங்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து விட்டார்கள். பதிவுகள் நடந்தன. கிராமத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்திருந்தார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் குழுக்கள் இருந்தன. குழுக்கள் தங்கள் பகுதிப் பதிவுகளைச் செய்தன. பதிவுகள் ராகினியிடம் சென்றன. சுலோச்சனா பதிவுகள் முடிந்ததும் பொருள் விநியோகப் பகுதிக்கு வழிகாட்டினாள். சாந்தன் தனது குழுக்களோடு பொருள் விநியோகத்தில் நின்றான். மிக அமைதியாகப் பொருள் விநியோகம் நடந்தது. கிராம சேவையாளர் அருமைராசா மேற்பார்வையில் ஈடுபட்டார். அவருக்கு வேலை இருக்கவில்லை.
தனது ஊர்மக்கள் இவ்வளவு கட்டுப்பாடாக இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார். மனிதர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும் அதுதான் நிரந்தரமானது. கயல்விழிக்குச் சந்தோசம். மங்கையை அழைத்தாள். சைக்கிள்கள் உரைச்சுற்றி வலம் வந்தன. ஊர் அழகாக பளிச்சென்று இருந்தது. அப்படியே அதிபரைச் சந்திக்கச் சென்றார்கள். அதிபர் பாடசாலையில் அலுவலக வேலையில் இருந்தார். பாடசாலை விட்டதும்தான் பாடசாலை தொடங்குகிறது. உள்ள ஆசிரியர்களைக் கொண்டு மேலதிக வகுப்புக்களை நடத்திக் கொண்டு வருகிறார்.
தான் படித்த பாடசாலையை மங்கைக்குக் காட்டினாள். கயல் சின்னப் பிள்ளையாகி விட்டாள். பாடசாலைத் தோட்டம் பூத்துக் காய்த்துக் கலகலத்தது. என்ன பயிர் இல்லை.? உற்றுப் பார்த்தார்கள். வெங்காயம் சிலிர்த்து வளர்ந்திருந்தது. வெண்டி விரல்களை நீட்டி ‘என்னைப் பறித்துச் சாப்பிடுங்கள்’ என்று காய்களைத் தள்ளியிருந்தது. தக்காளிப் பழங்கள் கனிந்திருந்தன.
பாடசாலையைச் சுற்றிவிட்டு அதிபரின் அலுவலகத்தினுள் புகுந்தார்கள். அதிபர் இரத்தினசிங்கம் “வாங்க” என வரவேற்றார். “சேர் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் வேலை செய்வீங்க”? ஒருபுன்னகையோடு கேட்டாள். “பாடசாலை நேரத்தில் பாடங்களைப் படிப்பிப்பதில் ஈடுபடவேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை. அதனால் அலுவலக வேலைகளைப் பாடசாலை விட்டபின்தான் செய்யலாம். இது நமது பாடசாலை. எனக்கு முதல் இருந்தவர்கள் வழிகாட்டிச் சென்று விட்டார்கள். அவர்களைப் பின்பற்றி நான் செய்கிறேன்”. ஒரு அலுப்பில்லாது கதைத்தார். “இப்பவும் மேலதிக வகுப்புக்கள் நடக்கின்றன. நமது ஆசிரியர்களும் மிக நல்லவர்கள். நல்ல ஒத்துழைப்புத் தருகிறார்கள்”. கூறிக் கொண்டு போனார்.
“முக்கியமாக எந்தெந்தப் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது”? வினவினாள். “விஞ்ஞான கணித பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. உயர்தர வகுப்பில் தமிழ், புவியியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை”. தனது பெருங்குறையை விளக்கினார். “சேர் உங்கள் அனுமதி கிடைத்தால் மங்கை தமிழ், புவியியல் பாடங்களை கற்பிக்க வருவார். நான் கணிதம் விஞ்ஞான பாடங்களைக் கற்பிக் வாறன். காலையில் சொல்லியனப்பினால் வருவோம். மற்றப்படி மாலை வகப்புக்களை நாங்கள் நடாத்துகிறோம். உங்களுக்கும் நிர்வாகச் சிக்கல் இருக்காது”. கயல்விழி தனது திட்டத்தை விளக்கினாள். அதிபரின் முகம் மலர்ந்து பெரிய சந்தோசத்தில் திளைத்தார்.
“சேர், உங்களிட்ட ஒரு உதவி கேட்கலாமா”? மங்கை மெதுவாகத் தொடங்கினாள். “நமது சின்னப்பிள்ளைகளுக்குச் சிறுவர்களுக்குப் பாடசாலைகள் இல்லை. நமது பாடசாலையில் பாவிக்காத வகுப்பறையொன்றைத் தந்தால் உதவியாக இருக்கும். எங்கள் தொண்டர்கள் கற்பிக்கத் தயாராய் இருக்கிறார்கள். நீங்கள் இடம் தாறதெண்டால் நாளைக்கே தொடக்கலாம் என்றிருக்கிறோம்”. கேட்டிருந்தார்கள். “நல்ல விஷயங்கள் நடக்கிறதென்றால் அதற்கு யாரும் மறுப்புச் சொல்ல மாட்டார்கள். நீங்கள் நாளைக்கே தொடங்கலாம்.” பதிலிறுத்தார். கயல்விழி மங்கையைப் பார்த்தாள். இருவரும் சந்தோசத்துடன் நன்றி சொன்னார்கள்;.
“கீழ் வகுப்புக்களில் ஆசிரியர் பற்றாக்குறையுண்டு. பல பழைய மாணவிகள் ஜீ.ஏ.கியு செய்து போட்டு இருக்கிறார்கள். அவர்களது உதவிகளைப் பெறுவதற்கு உதவலாமா”? அதிபரே கேட்டார். “சேர் எத்தனை பேர் வேண்டும்.”? கேட்டுநின்றார்கள். “கட்டாயம் ஐந்துபேர் வேண்டும்”. பதிலிறுத்தார். நாளைக்கே அவர்கள் வருவார்கள். அத்துடன் நாளைக்கு சிறுவர் பாடசாலையையும் திறப்போம். நாங்களும் பாடசாலைக்கு வந்து பாடங்களைத் தொடங்குகிறோம். எதற்கும் நீங்கள் கல்விப் பணிமனையில் அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள். வருமுன் காத்தல் தலைசிறந்தது. இல்லையா சேர்.”? அறிவுரையாகக் கூறினார்கள். அதிபர் சிரித்தார். “அதைப்பற்றி கவலை வேண்டியதில்லை. இது ‘அவசரக் காலக்கல்வி’ என்ற திட்டத்தில் நடப்பது. நமது கல்விப்பணிப்பாளர் குணராசரத்தினம் ஏற்கனவே அனுமதி தந்து விட்டார்”. சிரிப்போடு பதிலளித்தார்.
“நாற்று மேடையில் நிறையவே பயிர்கள் உள்ளன. நாங்கள் வீட்டுத்தோட்டத்தை கட்டயப்படுத்தி முன்னெடுக்கப் போகிறோம். நீங்கள் வேண்டிய பயிர்க் கன்றுகளைத் தந்துதவினால் பேருதவியாக இருக்கும். இப்போது எங்களிடம் நிதிவசதி யில்லை. தரமுடியுமா சேர்.”? மிகப் பணிவாகக் கேட்டார்கள். “நமது பிள்ளைகள் செய்த தோட்டம் அது அவர்களுக்கு உதவுமென்றால் எவ்வளவு சந்தோசம்?. இன்னும் மூன்று நாட்களால் கன்றுகளைப் பிரித்து நடலாம்.” அதிபர் பதிலளித்தார். அதிபருக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். சனங்கள் பொருட்களைப் பெற்றுக் கொண்டிருந்தர்கள்.
சாரதா தகவல்களைச் சரிசெய்து கொண்டிருந்தாள். சிலர் தகவல்களைச் சரிபார்த்தனர். எல்லோரும் இயங்கிக் கொண்டிருந்தர்கள். கயல்விழி கோயிலடியில் குந்தியிருந்தாள். பக்கத்தில் மங்கை வந்தாள். ராகினி, சுலோச்சனா வந்தார்கள். சாந்தனும் வந்து சேர்ந்தான். நாளை நடைபெறவுள்ள திட்டங்களை விபரித்தார்கள். செய்திகள் பரவின. சாந்தனின் குழு சைக்கிள்களில் பறந்து செயல்களில் ஈடுபட்டன. சிறுவர் பாடசாலையில் கற்பிக்க நான்கு பேர் முன்வந்தார்கள். பாடசாலையில் படிப்பிக்க ஐந்து பேர் தயார். முன்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன.
ஆறரை மணிக்கு வேலைகள் யாவும் முடிந்தன. ஏழு மணிக்குக் கல்விக் குழுச் சந்திப்பு நடந்தது. “அதிபரோடு உரையாடியபடி நடவடிக்கைகளை மெற்கொள்வோம். ஒன்றை மட்டும் கவனியுங்கள். நமக்கு இப்போது நிதிவசதியில்லை. ஆனால் அதனைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இரண்டு பாடசாலைகளுக்கும் பத்துப் பேர் ஆசிரியர்கள் வேண்டும் ஆறு முன்பள்ளி ஆசிரியர்கள் வேண்டும். நமது ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்தின் கடமைகளை செய்வதற்குப் பலர் வேண்டும். உங்கள் ஒத்துழைப்புத்தான் வேண்டும். அதுதான் நமது முதலீடு. உங்களை நம்பித்தான் பெரிய பொறுப்பை ஏற்றுள்ளேன். இனிமேல் நீங்கள்தான் எல்லாம்”. பேசும்போது அவள் கண்கள் பனித்தன. சற்று நேரம் மௌனமாக நின்றாள்.
“அக்கா நீங்க ஒன்றுக்கும் கவலைப்படாதிங்க. நாங்கள் இருக்கிறம். நீங்க என்ன சொல்லுறிங்களோ அதனைச் செய்யத் தயாராய் இருக்கிறம். நாளை நீங்கள் சொன்னபடி எல்லாம் நடக்கும். சனங்கள் இப்ப நமது பக்கம் இருக்கிறாங்க. நமது பிள்ளைகளைப் படிக்க வைக்கவேணும். அதைச் செய்வம்”. சாந்தன் பக்கபலமாக இருந்து கூறினான். நளைய ஒழுங்குகளைத் திட்டமிட்டார்கள். முன்பள்ளி ஆசிரியர்களின் பெயர்களை மங்கை தயாரித்தாள். பாடசாலையில் கற்பிக்க முன்வந்தவர்களின் பெயர்களையும் எழுதிக் கொண்டாள். பெற்றார்களுக்கு முன்பள்ளி பற்றிய செய்தி அறிவிக்கப் பட்டது. ஒழுங்குகளை முடித்துவிட்டு வீடுகளுக்குக் கலைந்தார்கள் மெல்லமெல்ல வானம் தெளிவானது. கிழக்கு வானில் வெண்ணிலவின் ஆட்சி. கருமேகக் கூட்டங்கள் கலைந்து விட்டன. மெலிதான கருமேகங்கள் வெண்ணிலவைப் போர்த்திப் பார்க்கும் ஆசையில் ஈடுபட்டன. அவை மூடும்போது வெண்ணிலவின் ஒளி மெதுவாக மங்கலாகும். மேகம் அசைந்து சென்றதும் சந்திர ஒளி பிரகாசிக்கும். “இப்போது கருமேகம் மறைத்திருக்கிறது. மேகம் விலகத்தான் போகுது. நமக்கும் வாழ்வில் ஒளி வீசத்தான் போகிறது. வாழ்க்கை என்பது வீசுதென்றலல்ல. சுழன்றடிக்கும் சூறாவளி. நாணலாய் நின்று பார்ப்போம். முயன்று முயற்சிப்போம். முயற்சி வீண்போவ தில்லை.” கயல்விழி எழுந்திருந்தாள். அவளுக்கு அந்த முரட்டுத் தைரியம் எங்கிருந்து வந்தது? அவளது தந்தை ஊட்டி வளர்த்த தைரியம். “கயல்விழி நீ வாழப்பிறந்தவள். இந்த உலகில் நீ ஒரு உதாரணமாக, வழிகாட்டியாக வாழ்ந்து காட்டவேண்டும்.” அப்பா அடிக்கடி கூறும் தாரகமந்திரம். காதுகளில் ஒலித்தது. வாழ்ந்து காட்ட உறுதிபூண்டு விட்டாள்.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP