Wednesday, December 8, 2010

சிறுகதை
வைராவெளிப் பேச்சியம்மன்
“இவனை வைராவெளிப்பக்கம் ஆர்போகச் சொன்னது.? இப்ப மாராயத்தத் தேடிட்டு வந்து படுக்கிறான்”. அபிராமியின் கடுகடுப்பைப் பொறுக்க முடியாத கந்தையர் சினமடைந்திருக்க வேணும். “இஞ்ச கொஞ்சம் உன்ர வாயப்பொத்திக் கொண்டிரு பாப்பம். இப்ப சரவணயர் வந்ததும் குறிபார்த்துச் சொல்லுவார். தம்பி மயில்! சரவணையர் எப்ப வருவாராம்”? மயில்வாகனத்தின் பக்கம் திரும்பிக் கேட்டார். “செக்கல் பட்டதும் வருவனென்றவர். இப்ப வாறநேரம்தான்;” மயில் தனது வேலைகளைக் கவனித்தவாறே சொன்னான். “சரி குறிபார்க்கிறதுக்குரிய அடுக்கைக் கவனி.” கந்தையரின் கட்டளை பிறந்தது. நல்லதம்பியின் புலம்பல் அதிகரித்திருந்தது. நடுக்கத்துடன் காய்சலும் அடித்தது. “வைராவெளிப் பக்கம் போகவேணாம் என்று எத்தன தரம் படிச்சிப் படிச்சிச் சொன்னான். கேட்டத்தானே? இப்ப புலம்பிக் கொண்டு கிடக்கிறான்.” அபிராமி தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தாள். “நம்மட மாடு அந்தப்பக்கம் போனால் என்ன செய்வது? போகத்தானே வேணும். உனக்கு ஒண்டும் விளங்காது. அவன் ஆமிக்காரனுக்குப் பயப்படுறதா? இல்லாட்டி அம்மனுக்குப் பயப்படுறதா”. கந்தையருக்குக் கடுங்கோபம் வந்து சொற்கள் சூடாகப் பறந்தன. மகனுக்குச் சுகமில்லாமல் வந்தது அவருக்கு அபிராமியை விடவும் கவலை அதிகமாக இருந்தது. கந்தையரின் வேலைகளில் பாதியை இளையவன் நல்லதம்பிதான் செய்து வந்தான்.
“வைராவெளிப் பேச்சியம்மாளே!.. என்ர பிள்ளையச் சோதியாதை. அவன் தெரியாத்தனமாய் ஏதும் செய்திருந்தால் அதப் பெரியமனது பண்ணி மன்னிச்சிக் காப்பாத்து தாயே!” அபிராமி மனதாரக் கும்பிட்டவாறே வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். உடல் வேலைகளைச் செய்தாலும் அவளது மனம் வைராவெளி அம்மன் கோயிலைச் சுற்றியே வந்ததது. கோயில் என்று சொல்வதற்;கு அங்கு இப்போது ஒன்றுமே இல்லை. ஒரு வேப்பை மரம்மட்டும் அடையாளமாக நிற்கிறது. சுற்றிவரக் காட்டுச் செடிகள் படர்ந்து கிடக்கு. போர்த்துகீசர் கோயில்களை அழித்ததாகக் கேள்வி. “வெள்ளைக்காரன்களும். ஆமிக்காரரும் இந்தக் கோயில்கள உடைக்கமட்டும் இந்தச் சாமியள் பார்த்துக் கொண்டுதானே இருந்திருக்கு? அவங்கள ஒன்றும் செய்யாம, என்ர பிள்ளைக்கு மட்டும் அநியாயம் செய்யிறது உனக்கு நல்லாயிருக்கா”? வந்தபடியெல்லாம் மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள். செக்கலாகிக் கொண்டிருந்தது. படலைப் பக்கம் அவள் கண்கள் பாய்ந்தன. சரவணையர் படலையைத் திறந்து கொண்டு வருவதைக் கண்டுகொண்டாள்.
“இஞ்சாருங்கப்பா… .சரவணையப்பா வந்திட்டார். வாங்க…” கூறிக்கொண்டு பாயை எடுத்து உதறி முற்றத்தில் விரித்துவிட்டு விசயத்தைப் புட்டுவைதாள் அபிராமி.
“மயில் எல்லாம் சொன்னவன். வைராவளிப் பேச்சியம்மன் பொல்லாத தெய்வம். நாங்களே பயந்து கொண்டுதான் போவம். நேரங்கெட்ட நேரத்தில் இவன் போயிருப்பான். அம்மனின் பார்வை பட்டடிருக்கும். எதுக்கும் குறிபார்த்தால் நல்லதுதானே? எல்லாம் ஆயத்தமோ?” சரவணையர் சொல்லுமுன் “எல்லாம் ஆயத்தப்படுத்திப் போட்டன்” மயில் வாயிலிருந்து சொற்கள் பறந்தன.
சரவணையர் வீட்டின் நடு அறையில் சிறியதொரு வெள்ளைத் துணியை விரித்தார். அதில் குத்துவிளக்கை வைத்துத் திரியிட்டு எண்ணெய்; விட்டார். விளக்கின்முன் தலைவாழை இலையில் சிறிது நெல்லைப் பரப்பினார். அதன்மேல் சிறிய செம்பில் மூன்று மாவிலைகளைக் கழுவித் திணித்து, அதன்மேல் உரித்துக் கழுவி, திருநீறு பூசிய முடியுடன் கூடிய தேங்காயை வைத்து நிறைகுடத்தை வைத்தார். தேங்காய் முடியின்மேல் செவ்வரத்தம்பூவைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்தார். வெற்றிலையைக் கழுவி ஒருவரிசையில் மூன்று வெற்றிலையை இடைவிட்டு வைத்தார். இரண்டாம் அடுக்கில் இரண்டும் மூன்றாம் அடுக்கில் ஒன்றும் வைத்துப் பாக்குப் பழம், பூ என வைத்தார் முக்கோணவடிவில் அவை காட்சியாகின. விளக்கைக் கொழுத்தினார். ஊதுபத்தியைக் கொழுத்தி ஒரு வாழைப்பழத்தில் செருகினார். களிமண்ணாலான காற்றுப் புகுவதற்கே வழிதேடும் அறுக்கையான இரண்டறை வீடு. குத்து விளக்கு வெனிச்சம் மட்டும் வீட்டினுள் பிரகாசித்தது. கைப்பிடியுள்ள தட்டில் தணல் நிறைந்திருந்தது. அதில் சாம்பிராணியைத் தூவினார். புகைமண்டலம் எங்கும் பரவி நறுமணம் கமழ்ந்தது. பக்கத்து வீட்டுச் சனங்கள் திண்ணையில் கூடிவிட்டனர்.
நல்லதம்பியை வெள்ளை விரித்து இருக்க வைத்தார்கள். அவன் வலியையும் பொருட்படுத்தாது குந்தியிருந்தான். கற்பூரத்தைக் கொழுத்தி அதனைத் தூபமாகக் காட்டி மந்திரித்தார். சிறிய தடியை வளைத்து வில்லைப்போல் செய்து கொண்டு வந்திருந்தார். “ மயில் பாக்குவெட்டியைக் கழுவியெடுத்து வா” சரவணையர் சொல்லுமுன் தயாராய் கழுவி வைத்திருந்த பாக்குவெட்டியை மயில் ஈரத்தோடு கொடுத்தான். வில்லை இடது கையால் தூக்கியவாறே பாக்கு வெட்டியை விரித்து வில்நாணில் கொழுவினார். பாக்கு வெட்டி வில்லில் தொங்கியது. அதனைப் பார்த்து மந்திரித்தார். அவரையே எல்லோரும் வைத்தகண் வாங்காமல் பார்த்திருந்தனர். அறை நிறைந்து சாம்மிராணிப் புகை மூடியிருந்தது. சரவணையர் கை நடுங்கியது. அவரும் நடுங்கினார். நடுக்கத்தினால் விரைவாக மூச்சுப் பறப்பதைக் கண்டார்கள். பள்ளிப் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். “டேய் சரவணையர் சொன்னால் உண்மையாக இருக்கும். குறிபார்த்து நடந்ததைக் கண்டு பிடித்து விடுவார். அங்கே பார் அவருக்கு உருவந்திற்று.”; குத்து விளக்கு மெல்லிய வெளிச்சத்தைப் பரப்பியது. சாம்பிராணிப் புகைமண்டலத்துள் சரவணையர் முகம் பயங்கரமாகப் பயங்காட்டியது.
காற்றுப் புகாத வீட்டுக்குள் வியர்த்துக் கொட்டியது. சரவணைப்பூசாரி தொப்பமாக நனைந்து விட்டார். “கந்தையா இஞ்ச கவனமாப் பார். இவன் தெற்குப்பக்கமாக மாட்டைச் சாய்த்து வந்திருக்கான். அம்மனின் பார்வை பட்டிருக்கு. பயந்துமிருக்கான். தெற்குப்பக்கமாக பாக்குவெட்டி சரிந்து ஆடுது. பார்”. எல்லார் கண்களும் பார்த்தன. பாக்குவெட்டி நடுங்கியதைப் போல் தெரிந்தது. சிலர் பார்க்கமலே “ஓமோம்” போட்டார்கள். அதன் காரணம் புரியவில்லை. அவர்களுக்குத் திசையும் தெரியவில்லை. ஆனால் நம்பினார்கள்.
“என்ன பரிகாரம் செய்ய வேணும்.”? கேள்வி தொடுத்தாள் அபிராமி.
“இன்றைக்குச் செவ்வாய். புதன், வியாளன், மறுநாள் வெள்ளி. மடை போட்டால் எல்லாம் சரியாகும். இது ஒரு சின்ன விசயந்தானே? இதற்கென்ன பயம்?”
ஒரு பெரிய சிரிப்போடு சரவணையர் எழுந்தார். திருநீற்றை மந்திரித்து நல்லதம்பியின் தலையில் படும்படி தூவி, நெற்றியில் மந்திரத்தோடு பூசி “ஓம் சுவாகா” என்று நல்லதம்பியின் முகத்தருகே விபூதியை ஊதினார்.; மூக்குவழியால் சென்ற விபூதித் தூள் நச்சரிப்பைக் கொடுத்தது. நல்லதம்பி தாக்குப்பிடிக்க முடியாமல ஏழெட்டு முறை தும்மினான். தும்மலினால் நாடி நரம்புகள் துரிதமடைந்தன. வலி குறைந்தமாதிரி இருந்தது.
“தம்பி இனிப்பயமில்லை. வெள்ளிக்கிழமை மடைபோட்டால் சரி. ஆயத்தம் செய்யுங்கோ. நான் வரப்போறன்”. வெளிக்கிட்டார். கந்தையர் தட்சணையைக் கைக்குள் பொத்தி வைத்தார். சரவணையர் கையடக்கிக் கொண்டார்.
“பூமடையா இல்லாட்டி”?கந்தையர் இழுத்து முடிக்குமுன் “என்ன அம்மனோட விளையாட்டா? வைராவெளி அம்மனிட்டச் சேட்ட விடாதிங்க. சிறப்பான மடையாப் போடுங்க”. படலையைத் தாண்டிப் போகும் போதும் “வெள்ளிக் கிழமை. மறந்திட வேணாம்.” சத்தமாகச் சொல்லிப் போனார். சிறுவர்களுக்குக் கொண்டாட்டம். அவர்களுக்கு வெள்ளிக்கிழமை மடையில் ஒரு வெட்டு வெட்டலாம் என்ற சந்தோசம். நல்லதம்பிக்குக் காய்ச்சல் விட்டபாடில்லை. காலில் வலியெடுத்தது. உள்ளங்கால் வலித்தது. புறங்காலும் சிறிது வீக்கம் கொண்டது. நாளுக்குநாள் வலி கூடியது.
வெள்ளிக்கிழமை வண்டிலைக் கட்டி வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு வைராவெளிக்குப் போனார்கள். வைராவெளி கண்டல்காட்டின் புகுமுகக் கிராமம். மகாவலியின் கிழக்காகப் பரந்து கிடக்கும் விசாலமான பிரதேசம். இலங்கையின் ஆதிக்குடிகளான இயக்கர் வாழ்ந்த மண். பல்லவர் ஆட்சியின்போதும். சோழப்பெருமன்னர் ஆட்சியின்போதும் தமிழ் மக்கள் பெருவாரியாக பௌத்தத்தைத் தழுவியிருந்த காலம். அந்நியரின் ஆட்சி தொடர்ந்தது. போர்த்துக்கேயரின் பின் ஒல்லாந்தரும் அவர்களுக்குப்பின் பிரித்தானியரும் ஆண்டனர். நமது மண் அந்நியரின் ஆதிக்கத்தினுள் வந்ததால் நிலம் கைநழுவிப்போனது.
தொடக்ககாலத்தில் ஆண்ட மன்னர்கள் பதவிக்காகச் சண்டையிட்டார்களே தவிர சிங்கள, தமிழ் என்ற பேதமற்று ஆண்டனர். தமிழ் மன்னர்களும் விஜயபாகு, கஜபாகு என்ற பெயர்களைத் தாங்கி ஆண்டார்கள். திருகோணமலைப் பிரதேசம் கொட்டியாபுரப்பற்று, தம்பலகாமப்பற்று, திருகோமலைப் பற்று, கட்டுக்குளம் பற்று என நர்வாக அலகுகளாக இருந்தன. கண்டி மன்னனின் ஆட்சியின்கீழ் வன்னிமைகளின் ஆளுகைக்குள் இருந்த பிரதேசங்கள். அந்நிய படையெடுப்புக்களாலும், மலேரியாவின் சூறையாடலினாலும் மக்கள் இடம்பெயர்ந்து கரையோரங்களை நாடிக்குடியேறினர். குடியிருப்புக்களை மட்டும் மாற்றிக் கொண்டனர். நாடு காடாகியது. எனினும் பரம்பரைச் சொத்துக்ளைப் பாதுகாத்துப் பயிரிட்டு வாழ்க்கை நடத்தினர். நாடு சுதந்திரம் பெற்றபின் ஜனநாயகம் என்ற பெயரினால் பெரும்பான்மை, சிறுபான்மை. தனியலகு என்ற சுயநலக் கும்பல்களின் பிடியில் சிக்கி நாடு சின்னாபின்னமாகிப் போயிற்று. ஆயுதப்போராட்டம் தொடங்கி அனைத்தும் நாசமாயிற்று.
நடந்து முடிந்த வன்செயல்களினால் இப்பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ்மக்கள் இடம்பெயர்ந்து திக்குத் தெரியாது அலைந்தனர். உயிர்தப்பிய சிலர் மீண்டும் தங்கள் சொந்தக்கிராமங்களில் குடியேறினர். இப்போது இந்தப்பிரதேசத்தில் பல பிரச்சினைகள். பிறந்துவிட்டோம் இருக்கும்வரை வாழத்தானே வேண்டும். எஞ்சியுள்ள நிலபுலங்களையும், கால்நடைகளையும் வைத்துப் பிழைக்கிறார்கள். ஆலங்கேணியில் இருந்து கண்டல்காடு ஏழுமலை; தொலைவில் உள்ளது. மருதநில வளம் நிறைந்த பகுதி. செல்வச் செழிப்போடு திகழ்ந்த பிரதேசம் இப்போது சீரழிந்த குளங்களோடும், காடு பற்றிய வயல்நிலங்களோடும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி.யாகி விட்டது. கால்நடைகளை வைத்திருப்பவர்களும், வயல்நிலங்கள் உள்ளவர்களும் இராணுவத்தினரிடம் அனுமதி பெற்றே செல்லவேண்டும். கந்தையர் போன்ற பலர் அனுமதியினைப் பெற்றுத் தமது தொழில்களைப் பார்த்தனர்.
கண்டல்காட்டுத் துறையைத் தாண்டிப் பலவண்டில்கள் தொடராக வருவதைக் கண்ட இராணுவச்சிப்பாய்க்குச் சந்தேகம். அவன் அனுமதிக்க மறுத்து விட்டான். கந்தையர் இராணுவக் கப்டனிடம் கதைத்தார். பொங்கல் முடிந்ததும் எல்லோரும் போய்விடுவார்கள் என்ற நிபந்தனையில் அனுமதி கிடைத்தது. வைராவெளி பேச்சியம்மன் கோயிலடிக்கு வந்து விட்டார்கள். சரவணையர் தன் சகாக்ளுடன் மடைபோடும் இடத்தை வெளியாக்கினார். வேப்பை மரத்தை மையமாக வைத்துத் தடிகளால் பந்தல் அமைத்தார். செல்லன் இதில் கட்டிக்காரன். கொண்டுவந்த சேலைகளால் பந்தலுக்குக் கூரையிட்டு, சுற்றிவர வெள்ளை வேட்டிககைக் கட்டி மறைத்து, கதவாக வெள்ளைத் திரை தொங்கவிட்டான். சரவணையர் சற்றுத் தூரத்தில் உள்ள கிணற்றில் தோய்ந்து வந்து தனது வேலையில் கவனமானார்.
வண்டிகளில் வந்த மடப்பெட்டிகளை இறக்கிப்; பிரித்து வசகைப்படுத்தி பந்தலுக்குள் வைத்தார்கள். யாருக்கு என்ன வேலையென்று பிரித்துக் கொடுக்கவில்லை. ஆனால் எல்லோரும் ஒழுங்காக வேலைகளைச் செய்தார்கள். வெற்றிலை பச்சைப்பாக்கு, வாழைப்பழக்குலை, பொங்கலுக்குரிய பொருட்கள் என்று குவிந்து கிடந்தன. வாழைப் பழங்களைக் கவனமாக அவற்றின் இருபக்க முனைகளையும் கூரிய கத்தியினால் வெட்டிக் கழுவிக் குவித்தார்கள். பாக்குத் தோலுடன் பலநிறங்களில் பளபளத்தன. அவற்றையும் இருபக்கமும் வெட்டிக் கழுவினார்கள். பனையோலைக் கடகங்களில் எல்லாம் பந்தலுக்குள் சென்றன. சடங்கு முறைகளை நம்முன்னோர் இந்த ஒற்றுமைக்காகத்தான் எற்பாடு செய்தார்களோ?
பந்தலுக்குள் நிலத்தைப்பரவி, வெள்ளை விரித்து பெரிய நிறைகுடம் வைத்து வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூக்களை ஒழுங்கு முறையில் எண்ணிக்கையில் பரவி மந்திரித்து சரவணையர் மடையை வைக்கத் தொடங்கினார்.. வெளிப்புறத்தில் பெண்கள் அடுப்பை மூட்டிப் பாற்பொங்கலில் ஈடுபட்டனர். ஆளுக்கொரு வேலையாகத் தாங்களே இழுத்துப் போட்டுச் செய்வது ஒரு சந்தோசமான நிகழ்வுதான். சிறுவர்கள் விறகு பொறுக்கி எற்சாகமாகச் செயற்பட்டனர். நாலைந்து அடுப்புகளில் பொங்கல் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இருள்படர்ந்து பரவியது. வைராவெளி இன்று மட்டும் ஊர்ச்சனங்களால் நிறைந்திருந்தது. மரங்களுக்குக் கீழ் சிறு வெளிச்சங்கள் மின்னின.
ஒருகாலத்தில் பெரிய நகரமாக விளங்கிய பிரதேசங்கள் காடுபற்றி சூனியப் பிரதேசங்களாகிவிட்டன. இராணுவ அட்டகாசங்கள் நடந்தபோது இந்த மக்கள் எல்லோரும் இந்தப் பிரதேசங்களில்தான் மறைந்திருந்தார்கள். பயங்கரவாதமென்ற பெயரில் இனஒழிப்புக்கள் முடிந்து இராணுவக்கெடுபிடிகள் முடிந்ததும் இராணுவத்தின் அனுமதியுடன் மாரி காலத்தில பயிர்ச்செய்கையைத் தொடங்கினார்கள். கால்நடைகள் உள்ளவர்களும் அனுமதி பெற்று பட்டிகளை வைத்துக்கொண்டார்கள். நாட்கள் செல்ல கொட்டில்களை அமைத்துத் தங்கி நிற்கவும் அனுமதி கிடைத்தது. கந்தையரின் வயலும் பெட்டைக்குளத்திலும், பட்டி வைராவெளிக்கப்பால் கீரைத்தீவிலும்; இருந்தது.
எல்லா ஆயத்தங்களும் முடிந்து விட்டன. அப்பொழுதுதான் “ஆயத்தமா” என்றவாறு ராசம்மா வந்திறங்கினார். அவரைக்கண்டதும்தான் சரவணையருக்கு உயிர் வந்தது. ராசம்மா நேரே கிணற்றடிக்குச் சென்;று தன்னைத் தூய்மைப்படுத்தினார். கிணற்றடியில் நின்றவாறே ராசம்மா ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தார். தான் நின்ற இடம் இருள் சூழ்ந்திருந்தது. பந்தலைச் சுற்றியுள்ள வெள்ளையூடாக பல குத்து விளக்குகளின் வெளிச்சம் பிரவாகித்துப் பரவியது. மடைப்பந்தல் தகதகத்து ஒளிவீசியது. சோதிமயமாக ஜொலித்தது. சரவணையர் ஒரு சட்டியில் மஞ்சள் கரைத்த நீரை ஏந்தி வேப்பங் கொத்தினை அதனுள் தோய்த்து எங்கும் விசிறி வந்தார். ஒரே வாசனைத் திரவியங்களின் நறுமணமும் பாற்பொங்கலின் புது மணமும் சேர்ந்து சிறுவர்களைக் கிறங்கடித்தது. மடைப்பந்தலுக்கு நேரே வைரவருக்கான சிறாம்பியில் மடையும் வைத்தமாகிவிட்டது. செல்லன் பந்தலுக்கு வெளியே திரையோரமாக வெள்ளை விரித்துவிட்டான்;. அதில் நல்லதம்பியை இருத்தினார்கள். அவனுக்குத் தாங்கமுடியாத வலியுடன் காய்ச்சலும். பொறுமையாக இருந்தான். அபிராமி நல்லதம்பியின் உடலைத் தொட்டுப்பார்தாள். நெருப்பாகக் கொதித்தது. அவளுக்கு ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.
ராசம்மா மடைப்பந்தலைபப் பார்த்தபடி விரித்திருந்த வெள்ளையின் ஓரத்தே வந்து நின்றார். பந்தலுக்குள் இருந்து மணியொலித்துக் கொண்டிருந்தது. உடுக்கு உறுமியொலித்தது. மந்திரம் சரவணையர் வாயிலிருந்து ஆறாகப் பாய்ந்தது. இரண்டாம் வகுப்பு மட்டும் படித்த சரவணையர் எப்படி இதையெல்லாம் கற்றார்? சிறுவர்களுக்கு அதிசயம். றோமன்கத்தோலிக்க பாடசாலையில் கத்தோலிக்க வாசகத்தைப் படித்தவர் சைவசமயக் கிரியைகளை நடத்துவதும், மந்திரங்களைப் பாடமாக்கி சடங்குகளைச் செய்வதும் ஆச்சரியந்தானே? மந்திரமும், உடுக்கொலியும் மணியொலியும சேர்ந்து ஓலித்த வண்ணமிருந்தன. சரவணையரின் மந்திரமும் உடுக்கொலியும் ஓங்கி ஒலிக்கும்போது தீபம் காட்டப்படும். அப்போது மடைப்பந்தலின் திரை திறக்கப் படும். திரைதிறந்ததுதான் தாமதம்.. ராசம்மா உருவேறி வெள்ளையில் சப்பாணிகொட்டியிருந்து தலையைச் சுழற்றிக் கீசினார்.
சரவணையர் வெளியில் வந்து ராசம்மவின் உச்சந்தலையில் சிறிது தண்ணீரை ஊற்றி உருக்கொடுத்து விட்டு வைரவர் பந்தலில் பூசையை முடித்து வந்தார். பந்தலுக்குள் சென்றார். பூசைப் பொருட்களுள்ள தட்டினை சரவணையரின் சீடர்கள் ஏந்தி வந்தார்கள். மந்திரத்தை உச்சாடனம் செய்து ராசம்மாவிடம் இரண்டு சிலம்மினைக் கொடுத்தார். ராசம்மா வாங்கி இருண்டு கைகளிலும் மாட்டினார். வேப்பிலைக் கொத்துகளையும் கொடுத்தார். மந்திரமும் உடுக்கும் மணியும் ஓங்கி ஒலித்தது. ராசம்மாவின் நீண்ட தலைமுடி கருவட்டமாகச் சுழன்று வந்தது. தொடக்கத்தில் மெதுவாகச் சுழன்று படிப்படியாக வேகம்கூடிச் சுழன்றது. ஒளிகலந்த இருளில் ஒரு கரிவட்டம் பட்டமாகச் சுழன்றது. ஒலிகலந்த மூச்சு வேகமாகப் பரவியது. பூசைத்தட்டு ராசம்மாவின் முன்னே இருந்தது.
ஒவ்வொரு பொருளாய்ச் சரவணையர் எடுத்துக் கொடுத்தார். சாம்pராணிப்புகை பரவியது. ஊதுபத்தி வாசம் கலந்த காற்று எங்கும் பரப்பியது. பௌடரும். குங்குமமும் கல்நத கலவையை ராசம்மா முகத்தில் பூசிக்கொண்டார். சந்தனத்தையும். குங்குமத்தையும் பொட்டாக வைத்துக் கொண்டார். சிறிய கண்ணாடியைக் கொடுக்க அதில் தனது முகத்தைப் பார்த்துக் கொண்டார். சரவணயரின் மந்திரத்துடன் உடுக்கும் உறுமியது. மீண்டும் கலைகொண்டு ராசம்மா தலையைச் சுழற்றி ஆடினார்.
“அம்மா தாயே இந்தப் பூமரத்த என் வதைக்கிறாய்? சுகமாக்கு. அதுக்குத்தான் உன்னை வரவழச்சம்” சரவணையர் ஒப்புவித்தார். ராசம்மா தலைமுடியைப் பின்னால் வீசி நல்லதம்பியைப் பாரத்தார். தன்னருகில் அழைத்தார். அவனால் நகரமுடியவில்லை. அவனை நகர்த்திவிட்டார்கள். பூசைத்தட்டில் இருந்த மஞ்சள் தண்ணீரை வேப்பிலையில் தோய்த்து அவன் முகத்தில் அடித்தார். உடலெங்கும் மஞ்சள் நீர் பரவியது. கொதிக்கும் உடலில் குளிர் குளிப்பாட்டியது. அவன் நடுங்கினான். அவனை யாரும் பார்க்கவில்லை. ராசம்மாவின் செயலையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆயத்தமாக இருந்த வெள்ளைத் துணியால் நல்லதம்பியின் முகத்தைத் துடைத்தார். விபூதியை அள்ளி அவன்மேல் வீசி, அவன் முகத்தில் விபூதியைப் பூசி. சந்தனம், குங்குமம் கலந்த பொட்டையும் வைத்துவிட்டு பெருவிரலையும் மோதிரவிரலையும் இணைத்து ஒரு சுண்டுச் சுண்டி விட்டுப் புன்னகையை வீசி மீண்டும் கலைகொண்டு ஆடினார்.
அபிராமி பக்கத்தில் குந்தியிருந்து “தாயே என்ர பிள்ளைக்குச் சுகம் குடம்மா” வேண்டினாள். “அம்மன் விரலைச் சுண்டியதைக் கவனிக்கல்லையா? அவட வாயில இருந்து புன்சிரிப்பும் வந்ததே. இனியென்ன பயம்? எல்லாம் சுகம். வீட்ட போகமுதல் காய்ச்சல் குறைஞ்சிடும்.” சரவணையர் விளக்கமாகச் சொன்னார். சாமியாடும் ராசம்மாவைப் பார்த்தார்.“தாயே சந்தோசம்தானே? எதும் குறையிருக்கோ? இருந்தால் வாயைத் துறந்து சொல்லிப்போடு”. சரவணையர் உரிமைக்குரலோடு உரத்துச் சொன்னார்.“ஆசான் … பூமரத்துக்கு…. இரண்டு ….. நாளில…..சுகம்வரும்…. சந்தோசம்…. நான் மலையேப்போறன்.” இழுத்து இழுத்துக் கூறிவிட்டு வேகத்துடன் தலையைச் சுழற்றி ஆடிவிட்டு ஒரு பயங்கர அலறலுடன் ராசம்மா நிலத்தில் சாய்ந்தார். ராசம்மா கீசிய அலறல் சத்தம் சிறுவர்களுக்கு பயம் காட்டியது. பயந்து நடுங்கினார்கள். சரவணையர் மடைப்பந்தலுக்குள் போய் மந்திரித்துத் தீபம் காட்டிவிட்டு மஞ்சள் தண்ணீரை வேப்பிலையில் தோய்த்து எங்கும் தெளித்தார். ராசம்மாவின் முகத்தில் மஞ்சள் தண்ணீரை மந்திரித்து அடித்தார். ராசம்மா நித்திரை விட்டெழும்பியதுபோல் எழுநது சுற்றிப் பார்த்தார். எழுந்து கும்பிட்டுவிட்டு உடைகளை மாற்றச் சென்றார்.
பூசை முடிந்துவிட்டது. சீடர்கள் விபூதி. சந்தனம், தீர்த்தம், வெற்றிலை பாக்கு, பழம் என வரிசைக்கிரமத்தில் பிரசாதங்களை வழங்கத் தொடங்கினார்கள். வாழையிலையோடு சிறுவர்கள் காத்திருந்தார்கள். எருமைப்பாற் பொங்கலுடன் சக்கரைப் பொங்கல் எனப் பலவகையான பொங்கல் கிடைத்தது. அவர்களுக்குக் கொண்டாட்டம். “கெதி பண்ணுங்க. இஞ்ச நிக்கேலாது. போவம். ஆமிக்காரன்கள் கரச்சல் தருவாங்கள்.” கந்தையர் அவசரப்படுத்தினார். இவ்வளவு நேரமும் தங்களை மறந்து இருந்த மக்களின் மனங்களில் ஆமிப்பயம் கௌவிக்கொண்டது. துரிதகதியில் இயங்கி மடைப்பந்தலைக் கலைத்தார்கள். எல்லாவற்றையும் வண்டிகளில் ஏற்றினார்கள். ராசம்மாவின் பங்கு அவர் வந்த வண்டிலுக்குப் போயிற்று. சரவணையரின் பங்கு அவர் வந்த வண்டியில் ஏறியது. வழியில் ஆமிக்காரருக்கு நன்றி கூறினார்கள்.; நல்லதம்பிக்குக் காய்ச்சல் குறைந்திருந்தது. சூட்டைக் குளிர் தண்ணீர் குறைத்து விட்டது. அனைவரும் வந்த வழியே இருளில் வீடு திரும்பினார்கள
வண்டில் குலுக்கிய நோவுடன் விடியற்சாமம் போல் நல்லதம்பி ஒப்பாரி வைத்தான். அவனுக்கு கால் வீங்கி வலித்தது. காய்ச்சல் நெருப்பாய்க் கொதித்தது. கந்தையருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அபிராமிக்குக் கையும் காலும் ஒடவில்லை. அவளுக்கு ஒரே கவலை. விடியுமட்டும் நல்லதம்பியின் பக்கத்திலேயே குந்தியிருந்து கண்ணீர் விட்டாள். நல்லதம்பி நடுக்கத்துடன் அப்படியே உறங்கிவிட்டான். விடிந்து வந்தது. அபிராமி வீட்டு வேலைகளையெல்லாம் செய்து முடித்தாள். தேநீரைத் தயாரித்தாள். கந்தையர் இருக்குமிடத்துக்குப் போனாள்.“என்னப்பா செய்யிறது? சாமி சுகம் வருமெண்டு சொன்னது. இப்ப திரும்பவும் காய்ச்சல் வந்திற்று.” அபிராமி கவலை தோய்ந்த முகத்துடன் தேநீரைக் கொடுத்தவாறே சொன்னாள். அபிராமியைத் தேற்றவேண்டுமே. “உடனே சுகம் வருமா? சாமி திருநீறு சாத்தின பிறகு காய்ச்சல் குறைஞ்சதுதானே?; இரண்டு நாளில சுகம் வரும். எள்டுதானே சாமியும் சொன்னது. எப்படியும் சுகம் வரும்” கந்தையருக்கும் கவலைதான். அதைக்காட்டாது கூறினார்.
நண்பகல் தாண்டி பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. படலையில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. காது கொடுத்துக் கேட்டார் “கமக்காரன். நான் வைரன் வந்திருக்கிறன். வரலாமா”? கேட்டுக் கொண்டே படலையைத் திறந்து கொண்டு வைரமுத்து வந்தார். “அட நம்மட வைரன். வா..வா.. நீ என்னட்ட வாறதுக்குக் கேட்க வேணுமா? எப்ப வந்தநீ ?. இப்படி வந்து இரு.” ஒரு இருக்கையைக் காட்டினார். வைரன் இருந்தார். ஒரு வாங்கில் இருவரும் சமமாக இருந்தார்கள். “இவ்வளவு நாளும் எந்த முகாமில இருந்தநீ.” வைரமுத்து கந்தையரின் பால்ய நண்பன். சிறுவர்களாக இருக்கும்போதே நண்பர்களாகப் பழகியவர்கள். வைரமுத்து சலூன் வைத்திருந்தவர். நல்ல வைத்தியம் தெரிந்தவர். பொதுவாக சவரத்தொழில் செய்பவர்கள் சிறந்த மருத்துவர்கள் என்ற பெயரெடுத்தவர்கள். அவர்களைப் பரிகாரி அல்லது பரிசாரி என்றே அழைப்பார்கள். மன்னாரில் ‘பரியாரிகண்டல்’ என்ற பெயரே இருக்கிறது.
“என்ன செய்யிறது கமக்காரன். நம்மட தலைவிதியப்படி. ஒரு விடிவு வருமென்று என்னெல்லாமோ நினைச்சம். நாம நினைக்கிறது நடக்குமா? எல்லாம் கனவாப் போச்சு. ஓடித்திரிந்து வன்னியில பதுங்குகழிக்குள்ள கிடந்து, அப்பிடி இப்பிடியென்று ஆமியின்ர உதவியினால புல்மோட்டை வந்து. செட்டிகுளம் முகாமில முள்ளுக்கம்பி வேலிக்குள்ள கஸ்டப்பட்டு ஒருமாதிரி நேற்றுத்தான் வந்து சேர்ந்தன். வந்ததும் கமக்காரன் என்ர வீட்டைத்திருத்திப் பாதுகாப்பாக வைத்திருந்ததைக் கேள்விப்பட்டன். “வைரன் எப்பவும் வருவார் என்று நம்பியிருப்பதையும்” சனங்கள் சொன்னதைக் கேட்டன். என்ர மனம் நிறைஞ்சுபோச்சு. கமக்காரன்ட மகனுக்குச் சுகமில்லயென்றும் கேள்விப்பட்டன். அதுதான் ஒருக்காப் பார்த்திட்டுப் போகலாம் என்று வந்தன்.” வைரன் மூச்சுவிடாது முற்றுப்புள்ளி வைத்தார்.
“அதுசரி வைரன். உன்ர குடும்பமெல்லாம் எப்படி”?“ஏதோ கடவுள் விட்டவழி என்று ஒரு பொல்லாப்பும் இல்லாம வந்து சேர்ந்திட்டம். நீங்க பட்ட கஸ்டமெல்லாம் கேள்விப்பட்டம். காடுகளிலும். முகாம்களிலும் கிடந்து மக்கள் பட்ட துன்பமெல்லாம் கேள்விப்பட்டம். இப்ப ஊரில அரவாசிப்பேர்தான் இருக்குதுகள்போல. மனதுக்குப் பெரும் வேதனையாயிருக்கு”. வைரமுத்து தனது பாரத்தை இறக்கி வைத்தார்.அபிராமி தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள். இருவரும் குடித்தார்கள்.“அபிராமியக்கா மகனுக்கு என்ன நடந்தது.”?“அதையேன் கேட்கிறாய்? நல்லதம்பிக்குக் காய்ச்சல் வந்தது. கால் வீங்கியிருக்கு. கால்வலிக்குதாம். காய்ச்சல் வேற வந்திருக்கு. வைராவெளிப் பேச்சியம்மனின் பார்வை பட்டதால காய்ச்சல் என்று சரவணையர் குறி பார்த்துச் சொன்னார். வைராவெளிபோய் மடையும் போட்டம். இன்னும் சுகமாகவில்ல. அதுதான் கவலையாயிருக்கு”. அபிராமி தனது கவலையை வைரமுத்துவின் முன்னால் கொட்டினாள். “என்ன வைத்தியம் செய்தநீங்க? எங்க வைத்தியம் செய்யிறது? நம்மட சரவணையர்தான் குறி பார்த்து, வைராவெளிப் பேச்சியம்மன் பார்வை பட்டிருக்கு. மடைபோட்டால் சுகம் வருமென்றார். நேற்று இரவுதான் மடையும் போட்டு வந்தம். காய்சல் உடனே குறைஞ்சிது. இப்ப உரத்திருக்கு. என்ன செய்வதென்று தெரியல்ல”. அழுதகண்ணும் சிந்திய மூக்குமாகக் கந்தையர் விளக்கினார். அவரது மனநிலையை வைரமுத்து புரிந்து கொண்டார். “கமக்காரன்! வாங்க. ஒருக்கா நான் தம்பியப்பார்க்க வேணும்”. சொல்லிக் கொண்டே எழுந்தார். நல்லதம்பி காலைப் பிடித்தவாறு அழுதவண்ணம் இருந்தான். தந்தையைக் கண்டதும் அழுகையை அடக்கிக் கொண்டான். வைரமுத்து நல்லதம்பியை நன்றாக உற்றுப் பார்த்தார். பக்கத்தில் போயிருந்தார்.
“தம்பி என்ன செய்யுது”? “காலுக்க குத்துது. கால் வீங்கிக் கொண்டு வலிக்குது. தாங்கேலாமல் இருக்கு”“ கால நீட்டுங்க. எந்தப்பக்கம் குத்துது? காட்டுங்க பார்ப்பம்”. நல்லதம்பி கஸ்டப்பட்டீக் காலை நீட்டிக் காட்டினான். வைரன் காலைப் பார்த்தார். நல்லதம்பியின் உள்ளங்காலில் சீழ்;கட்டி மஞ்சள் நிறத்தில் ஒரு கட்டிபோன்று துருத்திக் கொண்டிருந்தது. கால் பெரிதாய் வீங்கியும் இருந்தது. வைரமுத்து மெதுவாக நல்லதம்பியின் காலைத் தடவிவிட்டார். வைரனுக்குப் புரிந்து விட்டது.“கமக்காரன் பச்சைத் தென்னோலை ஈக்கிலும். மூங்கிலும் தேவை. வேப்பெண்ணெய் இருக்குதா? கொஞ்சம் எடுங்க.” கூறிக் கொண்டு வைத்தியத்துக்கு ஆயத்தமானார். தென்னோலையின் பச்சை ஈக்கிலை எடுத்து அதனைக் கூரியகத்தியினால் சுரண்டித் துகளை எடுத்தார். மூங்கிலையும் அவ்வாறே செய்து எடுத்தார். “கொஞ்சம் வேப்பெண்ணெய் தாங்க” கேட்டார்.மண்சட்டியில் வேப்பெண்ணெய்யை விட்டு அடுபப்pல் வைத்தார். வேப்பெண்ணெய் சூடேறிக் கொதித்தது. அதற்குள் துகளைக்கலந்து போட்டுக் கிளறிவிட்டார். துகள் பொரிந்து வந்தது. அப்படியே வைத்துவிட்டு நல்லதம்பியிடம் போனார்.
“தம்பி காலை நீட்டிக் கொண்டு குப்புறப் படுத்துக் கொள்ளும். வலிக்காது. நான் மெதுவாகத் தடவிவிடுவன். பிறகு எண்ணெய்யைத் தடவி விடுவன். சரியா? ஒரு வலியும் இருக்காது. காய்ச்சலும் இருக்காது”. வைரன் சொல்வது புதினமாக இருந்தது. நல்லதம்பி அவ்வாறே செய்தான். வைரன் வலியுள்ள வலது காலைத் தன் மடியில் வைத்துத்தனது கையினால் மெதுவாதகத் தடவினார். “வலிக்குதா”? கேட்டார். “இல்லை நல்லா இருக்கு”. என்று பதில் வந்தது. கதை தொடர்ந்தது. காலைத் துணியினால் கழுவிக்கொண்டார். தனது பழைய கதைகளைச் சொன்னார். நல்லதம்பி கதையில் லயித்திருந்தான். சந்தர்ப்பத்தைப் பார்த்துத் தனது கூரிய கத்தியினால் ஒரே கீறு. கட்டியைக் கீறி விட்டார். நல்லதம்பிக்கு என்ன நடக்குது என்றே தெரியவில்லை. சிதளும் கறுத்த நிறத்தில் இரத்தமும் வடிந்தது.
ஆயத்தமாக வைத்திருந்த பழைய துணியால் துடைத்தெடுத்துச் சுத்தப்படுத்தினார். இளஞ்சூட்டோடு பொரித்தெடுத்த மருந்தை வைத்துக் கட்டிவிட்டார். “கமக்காரன்! நல்லதம்பியின் காலில கூரிய கட்டை குத்தியிருக்கு. கவனமில்லாததால குத்துவலி வந்திருக்கு. குத்தி முறிந்திருந்த கட்டையைப் பாருங்க”. காலில் இருந்து எடுத்த கட்டைத்துண்டைக் காட்டினார். கந்தையருக்குப் பெரிய அதிசயம். “இன்னும் ஓரிருநாள் விட்டிருந்தல் ஏற்பு வைத்திருக்கும். இனியென்ன பயம்.? சிரித்துக் கொண்டு வைரன் வெளியில் வந்தார். காய்ச்சல் பறந்து விட்டது. நல்லதம்பி நடக்கத் தொடங்கிவிட்டான். கந்தையர் வைரமுத்தைக் கட்டித் தழுவி “வைரன் நீ கெட்டிக்காரன்தான். உனக்கு எப்படி நன்றிதெரிவிப்பது என்று எனக்குத் தெரியாது. இந்த ஊருக்கு நீயொரு முதுசம்”;. நெக்குருகி நின்றார். வைரமுத்து அன்பில் நிறைந்து திளைத்தார். “எல்லாம் அந்த வைராவெளிப் பேச்சியம்மனின் அருள்”; என்று அபிராமி கும்பிட்டாள்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP