Thursday, January 20, 2011

சிறுகதை

சிறுகதை
மதுராஞ்சலி
“பத்மினி! “ சேர் ”“எல்லாம் தயாரா?”“ஓம் சேர்”. எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துவிட்டு பத்மினி வரவேற்றார். அந்தப் பயிற்சியறையை எனது கண்கள் துளாவின.அப் பயிற்சியறை தாமரைக்குளம்போல் காட்சியாகிக் கொண்டிருந்தது. செந்தாமரைகள் மலர்ந்து சிரிப்பது போல் ஒரு மலர்ச்சி. எனது கண்கள் சுழன்று சூழலை அவதானித்தன.
அது முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஐந்துநாள் வதிவிட வசதிகொண்ட பயிற்சி. அந்தப்பயிற்சியில் கலந்துகொள்ள நாற்பத்தைந்துபேர் வந்திருந்தனர். அனைவரும் இளம்வயதுப் பெண்கள். முன்பள்ளிகளில் கல்விப்பணியாற்றப் பெண்கள்தான் பொருத்தமானவர்களோ? அனைவரும் முதல்நாள் மாலை ஐந்து மணிக்கு வந்துவிட்டனர். பத்மினி உதவியாளராகச் செயற்பட்டார். தங்குமிடவசதிகள் பயிற்சியறையைச் சூழ்ந்திருந்தன. மிகவசதியான பாதுகாப்பான இடம். ஒவ்வொரு அறையிலும் மூன்றுபேர்கள் தங்கலாம்.
“பத்மினி மூவின ஆசிரியைகளும் வருவார்கள். அனைவரையும் கலந்து அறைகளை ஒதுக்குங்கள்” உதவியாளர் பத்மினியைப் பணித்திருந்தேன். அவர் அதேபோல் ஒரு அறையில் தமிழ், முஸ்லிம். சிங்களம் என மூன்றுபேர் வீதம் கலந்து அறைகளை ஒதுக்கீடு செய்திருந்தார். இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
மங்கல விளக்கேற்றியதும் மௌன இறைவணக்கத்துடன் பயிற்சி தொடங்கியது. முதலில் அறிமுகம்.இருவர் இருவராகச் சேர்ந்து தமக்குள் கலந்துரையாடி தரவுகளைப் பெற்று ஒருவருக்காக மற்றவர் அறிமுகம் செய்யவேண்டும். பணிப்புரை கொடுபட்டதும் அனைவரும் சுறுசுறுப்பாகினர். ஐந்து நிமிடங்களின் பின் ஒன்றுசேர்ந்து இருவரிருவராக எழுந்து ஒருவரை மற்றவர் அறிமுகம் செய்தனர். முதற் சோடியினர் வந்தார்கள். “எனது பங்காளியின் பெயர் சுந்தரி. அவர் மகாலக்ஸ்மி முன்பள்ளியில் கடந்த மூன்று வருடங்களாகக் கடமையாற்றுகிறார். திருமணம் ஆகவில்லை. இந்தப்பயிற்சியில் மேலதிக அறிவினைப் பெறலாம் என வந்துள்ளார்”;. அவர்முடிக்குமுன் “எனது பங்காளியின் பெயர் ஆமினாபேகம். அவர் மஜீதியா முன்பள்ளியில் மூன்றரை வருடங்களாகக் கடமையாற்றுகிறார். திருமணமாகி கணவரோடும் இரண்டு குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறார்”;. சுந்தரி முறுவலோடு முடித்தார். அறிமுகம் தொடர்ந்து கொண்டிருந்தது.
அடுத்து ஒரு இளம் ஆசிரியை எழுந்தார். அழகே உருவான கட்டிளம் பெண். கண்முன் தேர் அசைவதுபோன்று நின்றாள்.“எனது சகோதரியின் பெயர் மதுரா. பன்குளம் பாலர்பாடசாலையில் கடமையாற்றுகிறார். இருபத்துமூன்று வயது. திருமணமாகிவிட்டது…. ஒரு மகன் இருக்கிறார்…. அவருக்கு வயது ஒன்றரை…கணவர்…..” அதற்குமேல் அவர் தொடரவில்லை. அந்த ஆசிரியையால் தொடர்ந்து கூறமுடியாது தவிப்பதை உணர்ந்து கொண்டேன். கூறும்போது அவரது முகம் வாடி வதங்கி எதையோ பறிகொடுத்த ஏக்கத்தோடும், தாழ்வு மனப்பாங்கோடும் போராடுவதை அவதானித்தேன். கண்கள் குளமாகி கண்ணீர் உடைப்பெடுத்துப் பொலபொலத்தது. நிலைமையைத் தொடரவிடாது அடுத்த ஆசிரியையின் குரல் திசைதிருப்பியது.
அவளும் அழகான இளம்கன்னி. அவள் நடையே தனியழகாக இருந்தது. அவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். “எனது சகோதரியின் பெயர் அஞ்சலி. அவர் தம்பலகாமம் முன்பள்ளியில் கற்பிக்கின்றார். வயது இருபத்திமூன்று. திருமணமாகிவிட்டது. ஒன்றரை வயது மகன் இருக்கிறார்…கணவர்….” கிள்ளை மொழி என்பார்களே, அந்த மொழியில் தொடர்ந்தார். அவராலும் தொடரமுடியவில்லை.
அரைகுறைத் தமிழிலும் சிங்களத்திலும் கலந்து சொல்லும்போது அந்த ஆசிரியரின் விழிகள் கலங்கி கண்ணீர் உடைப்பெடுக்கத் தொடங்கியது. அவரது முகத்தில் ஆயிரம் கதைகள் ஊர்வதை அவதானித்தேன்.
பத்மினி கெட்டிக்காரி.. சந்தர்ப்பத்தை உணர்ந்துவிட்டார். அவர்களை இக்கட்டுக்குள் விடவில்லை.“சரி… நீங்கள் தொடங்குங்கள்…” மற்றவர்களை முடுக்கிவிட்டார். அவர்கள் தொடங்கினார்கள்.“ஆயிசா…குசும் …அருந்ததி…அகிலா…” இப்படிக் கூறிக் கொண்டே போனார்கள்.
எனது மனதில் புயல் வீசத்தொடங்கியது. எனது மனமும் சிறுபிள்ளைபோல் எதையும் அறியும் ஆவலோடு அலைந்தது. மூன்று தொடக்கம் ஐந்து வயதுச் சிறுவர்கள் சிந்தனையாளர்கள். சதா அவர்களது மனங்கள் கற்பனையில் மிதக்கும். பளிச்சிடும் கண்களோடு, சிரித்தவண்ணம் கள்ளமில்லா உள்ளத்தோடு பேதமில்லாது விளையாடித்திரிவார்கள். அவர்களோடு சேர்ந்திருந்தால் அவர்களே நமக்குக் கற்றுத்தருவார்கள்.
ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து நம்மைப் பிரமிக்க வைத்துவிடுவார்கள். எனது மனதினுள்ளும் பல கேள்விக்கணைகள் கிளர்ந்தெழுந்தன. ஏன் இந்த இளம் ஆசிரியைகளின் மனக்கடல்கள் அலைமோதின?. இந்த இளம் வயதில் இவர்களுக்கு நடந்ததென்ன? எவ்வளவு அழகான பிள்ளைகள். அவர்கள் பேசும் மொழிதான் வித்தியாசமானது. ஆனால் உணர்வுகள் ஒன்றுதானே. உடனறியும் ஆவலிருந்தாலும் சந்தர்பம் சரியில்லை. அனைவரும் யாவற்றையும் மறந்து பயிற்சியில் ஈடுபடவேண்டும். கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தவேண்டும்.. கற்றல் மகிழ்ச்சிகரமானதாக அமையவேண்டும். பிள்ளைகளாக தங்களை நினைந்து கற்றலில் ஈடுபடவேண்டும். ஏற்கனவே நிகழ்சிநிரல் எல்லாம் தயார். ஆனாலும் பங்குபற்றுநர் சொன்னால் நாகரீகமாக இருக்கும் அல்லவா? பத்மினியைப் பார்த்தேன்.
பத்மினி தொடங்கினார்
“தேநீர் இடைவேளை எப்போது? பத்து அல்லது பத்தரை. எது பொருத்தமானது”? ஒரே குரலாகச் சொன்னார்கள். “பத்தரை மணிக்கு” பத்மினி எழுதிக் கொண்டார். “பகலுணவை நீங்களே தீர்மானியுங்கள்.” என்றார். பாமினி எழுந்தார். “நாங்கள் அனைவரும் கூடித்தீர்மானித்த நிகழ்ச்சி நிரலிது. வாசிக்கிறேன். அதன்படி செயற்படத் தீர்மானித்துள்ளோம். இது எங்களது ஓய்வு நேரமும், இடைவேளைகள் மட்டுந்தான். பாடப்பயிற்சிகளை நீங்கள் தீர்மானியுங்கள்.”
தனது கொப்பியில் உள்ளதை உரத்து வாசித்தார்.“ காலை ஐந்து மணிக்கு துயிலெழுதல். சிரமதானம். தேநீர், காலையுணவு ஏழு தொடக்கம் எட்டுவரை. ஏட்டரை தொடக்கம் பத்தரை வரை பயிற்சி. ஒருமணியிலிருந்து இரண்டு மணிவரை பகல் உணவுக்கான இடைவேளை. மூன்றரை மணிக்கு தேநீர் இடைவேளை. ஐந்தரையில் இருந்து ஆறரைவரை இன்னுமொரு இடைவேளை. எட்டுத் தொடக்கம் ஒன்பதுவரை இரவு உணவு இடைவேளை. இரவு பத்தரைக்கு ஓய்வு. இதனையே தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.” பாமினி முடித்தார். எனக்கு மனதினுள் மத்தாப்பு விரிந்தது.. “இதனை எல்லோரும் ஆமோதிக்கிறீர்;;களா”? பத்மினி ஒருமுறை ஆசிரியர்களிடம் கேட்டார். “ஓமோம்.” புதில்வந்தது. “சரி உங்கள் விருப்புடன் சந்தோசமாக பயிற்சியினைத் தொடங்குவோம்.”பத்மினி ஆசிரியர்களின் விருப்பத்தினை அறிந்து அன்றைய நாளுக்குரிய நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தார். அதனைச் சுவரில் காட்சிப்படுத்தியும் விட்டார்;.
ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களை முன்பள்ளிகள், பாலர்பாடசாலை, நேசரி எனப் பலபெயர்களால் அழைத்தாலும், ஆசிரியர்களை ரீச்சர் என்றே அழைப்பார்கள். அங்கு கல்வி கற்பவர்கள் மூன்று முதல் ஐந்து வயதுச் சிறார்கள்தான். செய்யும் சேவைக்குரிய வேதனத்தைப் பெறாத அப்பாவிகள் இந்த முன்பள்ளி ஆசிரியர்கள். பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து, அன்பு, அரவணைப்பு, இரக்கம். பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு பிள்ளைகளை அறிந்து விளையாட்டு மூலம் அவர்களது சிந்தனைக்கு வடிகால் அமைக்கவேண்டும்.
நிகழ்ச்சி நிரலின்படி பயிற்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நகர்ந்துவிட்டன. இன்று நான்காம் நாள். ஐந்தரை மணிவரை பயிற்சிநடந்தது. தங்களை மறந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். ஒரு மணித்தியால இடைவேளையின் பின் மீண்டும் பயிற்சி தொடங்கும். நாளை நண்பகலுடன் பயிற்சி முடிந்து அனைவரும் தமது இருப்பிடங்களுக்குப் போய்விடுவார்கள்.
பயிற்சியாளர்கள் கலைந்து தமது அறைகளுக்குச் சென்றார்கள். நானும் வெளியில் சென்று அரைமணித்தியாலத்தின் பின் திரும்பினேன். ஆறுமணியாகிவிட்டது. இன்னும் அரைமணி நேரமிருந்தது. ஓய்வெடுத்து உடைகளை மாற்றி உசாராய் வந்தார்கள். இருவர் மூவராகச் சேர்ந்து உரையாடினார்கள். ஒரே கலகலப்பாக இருந்தது. ஒரு மூலையில் ஒதுங்கி இருவர் இருப்பதை எனது கண்கள் கண்டுகொண்டன. அறிமுகம் செய்யும்போது அவதியுற்றவர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். மெதுவாக அவர்களிடம் சென்றேன். என்னைக் கண்டதும் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். “வாங்க சேர்”. எழுந்து நின்றார்கள். அவர்களை அமரும்படி சைகைசெய்து அவர்களுடன் கதிரையில் அமர்ந்தேன். “எப்படி பயிற்சி….போகுது”?“நல்லாப்போகுது சேர். நல்ல அனுபவங்களைப் பெறுகிறோம்”. இருவரும் கூறினார்கள்.“உங்கட பெயர் .”.? கேட்டேன். எனது தமிழில் கேட்டேன். “ மதுரா” பதில் வந்தது. மதுரமாக இனித்தது.“உங்கள் முன்பள்ளி…? சிங்களத்தில் கேட்டேன். ” பங்குளம” பன்குளம் என்ற தமிழ்கிராமம் குடியேற்றத்திட்டத்தின் பின் ‘பங்குளம’ என ஆகிவிட்டதை உணர்ந்தேன். “நீங்க ..? மற்றவரைப் பார்த்துக் கேட்டேன். “ அஞ்சலி. தம்பலகாமம்”. தமிழ் இனித்தது. முதல்நாள் அறிமுகத்தின் போது நடந்த நிகழ்ச்சி என் மனக்கண்முன் வந்து நின்றது. அடிமனதில் குடைந்து கொண்டிருந்த குமுறல் வெளியாகியது. “ அஞ்சலி எப்படி மதுராவோடு கதைக்கிறீர்கள்”? இருவரும் ஒரு புன்னகையை வீசினார்கள். உள்ளத்தில் புதையுண்டு கிடக்கும் அத்தனை சோகங்களும் அப்புன்னகையூடாகப் பாய்வதைக் கண்ணுற்றேன். “கைபாசையும் எனக்குத் தெரிந்த சிங்களச் சொற்களும் பாவிக்கிறன். இவவும் அதுபோல் தெரிந்த தமிழ் சொற்களையும் பாவிக்கிறா. புரிந்து கொள்ளுறம்”. அஞ்சலி விளக்கினார். “இருவரும் ஒரு அறையிலா இருக்கிறீர்கள்.?”“ ஓம் சேர்” “ மதுரா உங்களப்பற்றிச் சொல்லுங்க ஏன் இருவரும் சோகமாக இருக்கிறீங்க? இங்க ஏதும் பிரச்சினையா? உங்கள யாராவது ஏசினார்களா? மதுராவிடம் சிங்களத்தில் விசாரித்தேன். அவள் உறைந்து போனாள். “அஞ்சலி! என்ன பிரச்சினை. ஏன் வாடிப்போய் இருக்கிறீங்க”? அஞ்சலியிடமும் கேட்டேன்.“அப்படி ஒன்றுமில்லை. நல்லத்தான் இருக்கிறம்.”“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.. உங்கட பிரச்சினையை எனக்குச் சொன்னால் உங்களும், எனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். சொல்லுங்கம்மா”. வினயமாகச் கேட்டேன்.“சேர்..சொன்னால் உங்களால என்ன சேர் செய்யமுடியும். போனது திரும்பி வரவாபோகுது”?. அஞ்சலி தைரியமானாள். எவ்வளவு அமைதியான பிள்ளையா இப்படிக் கேட்கிறாள். ஆச்சரியமாக இருந்தது. “சேர்…நமது நாட்டில் காட்டுமிராண்டிகள்தான் உள்ளனர்…” குலுங்கி அழுதாள். கூடவே மதுராவும் அழுதாள். “என்னம்மா என்ன நடந்தது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை”.“அஞ்சலி;! கமக் நஹ. சேர்ட கியமு. ஒயா கியாண்ட” சிங்களத்தில் மதுரா கூறினாள். அஞ்சலி அழுகையை அடக்கி மதுராவின் பக்கத்தில் சென்றாள். அவளது கையைப் பிடித்தாள். “சேர்..நாங்க இரண்டுபேரும் இந்த மண்ணில்தான் பிறந்தோம். இருவரும் காதலிச்சித்தான் திருமணம் செய்தோம். இருவருக்கும் ஒரே வயதுதான். இவள் சிங்களம். நான் தமிழ். இதுதான் வித்தியாசம். ஆனால் எங்க இரண்டு பேருக்கும் பிரச்சினை ஒன்றுதான். இருவரது உடலில் ஓடுவது ஒரேவகையான சிவப்பிரத்தந்தான். எங்கள் கதையும் ஒன்றுதான் சேர்.” விம்மினாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். “ நாங்கள் என்ன பாவம் செய்தோம் சேர்.”? என்னைப் பார்த்தாள். எனக்குப் பெரிய சங்கடமாகிவிட்டது. அவள் கை மதுராவை நோக்கி நீண்டது.
“இவள் கணவன் வேறுவேலை கிடையாததால் இராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். சம்பளம் வந்ததாம். கொஞ்சநாட்கள்; சந்தோசமான வாழ்வு கிடைச்சதாம். இலங்கை இராணுவத்தில் விருப்பமில்லாமல்தான் சேர்ந்தாராம். மதுராவின் கணவனை வன்னிப் போருக்கு அனுப்பினார்கள். அவராக விரும்பிப் போகல்ல. போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினால் போனார். விலகவும் முடியவில்லையாம். போனவர் போனவர்தான். அவரின் வாழ்வு முடிந்துவிட்டது. இப்போது அவளுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவரைப் போருக்கு அனுப்பியவர்கள் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.” அவள் நாக்கு வரண்டிருக்கவேண்டும். செருமிவிட்டுச் சற்று நிறுத்தித் தொடர்ந்தாள். மதுரா நிலத்தில் குந்தியிருந்து முகத்தைத் தன் கைகளினால் தாங்கிப் பிடித்தபடி விம்மிவிம்மி அழுதாள். அஞ்சலி அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.
“நானும் திருமணமாகி சந்தோசமாய்த்தான் சேர் வாழ்ந்தேன். அந்த நாட்களை என்னால் மறக்கமுடியாது. எனது கணவர் என்னைக் கண்கலங்காது பாதுகாத்து வந்தார். நான் தாய்மையுற்று இருந்தேன். ஒருநாள் அதிகாலை நான்கு மணி. எங்கள் கிராமத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்தார்கள். இளைஞர்களைக் கைது செய்து கூட்டி வந்தார்கள். விடிந்து கொண்டு வந்தது. ஆறரை மணியிருக்கும். எங்கள் வீட்டின் கதவைத்தள்ளித் திறந்து கொண்டு புகுந்தார்கள். எனது கணவரை வெளியில் இழுத்தெடுத்தார்கள். எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். விட்டார்களா பாவிகள்.? வீதிக்கு இழுத்து வந்தார்கள்.” கண்ணகியின் ‘கண்ணீராடிய கதிரிள வனமுலை’ தோற்றத்தை அவளிடம் கண்டேன். கண்களைத் துடைத்துக் கொண்டாள்.“ வரிசையில் நிற்க வைத்தார்கள். எங்களைத் துரத்தினார்கள். எங்களுக்கு முன்னாலேயே அந்த அப்பாவிகளைச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார்கள். எனது கணவன் எனது கண்முன்னாலேயே துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் புரண்டார். அழுது புலம்பினோம். விறகுக் கட்டைகளையும் பழைய ரயர்களையும் போட்டு எங்கள் கண்முன்னாலேயே தீயிட்டுக் கொழுத்தினார்கள். அந்தக் கோரச் சம்பவத்தை நினைக்கவே மனது வேகுது சேர்”. அவள் களைத்துவிட்டாள். சோர்ந்து நிலத்தில் குந்திவிட்டாள்.
இப்போது மதுரா அவளைத் தேற்றினாள். கண்களைத் துடைத்துக் கொண்டே “அடுத்தமாதமே ஒரு குழந்தைக்குத் தாயானேன். இப்போது அவனுக்கு ஒன்றரை வயது” கூறிவிட்டுக் குந்தியிருந்து விம்மினாள். அவள் பக்கம் மதுராவும் குந்திக் கொண்டு அழுதாள். இந்த இரண்டு இளம் உள்ளங்கள் ஒன்று சேர்ந்து துயரங்களைப் பகிர்வதைக் கண்டு என் மனமும் அவர்களுடன் சேர்ந்து அழுதது.
எத்தனை இளைஞர்களை இந்தக் கொடிய போர் காவுகொண்டுள்ளது?. எத்தனை இளம் விதவைகளை உருவாக்கியுள்ளது?. எத்தனை அநாதைக் குழந்தைகளையும், அனாதை இல்லங்களையும் உருவாக்கியுள்ளது?. எத்தனை அங்கவீனர்களை இந்த நாடு கண்டுள்ளது? எத்தனை கோடிப் பெறுமானமுள்ள சொத்துக்களை இழந்துள்ளோம்?. இதற்கெல்லாம் யார் காரணம்.?
வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிம்மதியாக இந்த நாட்டில் வாழ்கிறார்கள். அல்லது வெளிநாடுகளுக்குப் போய்வி;டுகிறார்கள். வாழ்க்கையின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். சாதாரண பொது மக்களிடையே பெரும்பாலும் வேற்றுமைகள் இல்லை. அவர்களை அரசியல்வாதிகள்தான் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று இனவாத்தைக் காட்டிக் குழப்பி விடுகிறார்கள். நாட்டின் தலைவிதியைத் தீர்மானிப்பது பாராளுமன்றம்தான். ஆனால் நமது பாராளுமன்றம் நாட்டின் வன்முறைகளுக்குத் தூபமிடும் இடமாக மாறிவிட்டது.
இன ஐக்கியத்தோடு வாழ்ந்து வந்த இந்த நாட்டை மொழியால் பிரித்தார்கள். சமயத்தால் பிரித்தார்கள். தேசியகீதத்தைச் சிங்கள மொழியில் பாடவேண்டும் என்று எந்தப் பொதுமகன் கேட்டான்?. எத்தனை வீதமான சிங்கள மக்களுக்குத் தேசியகீதம் தெரியும். தேசியகீதத்தைப் பற்றித் தெரியாதவர்களே அதனைச் சிங்களத்தில் மட்டும் பாடும்படி பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள். இந்தநாட்டில் பிறந்து வாழும் குடிமக்களாகிய தழிழ் பேசும் மக்களுக்கு இந்தநாடு சொந்தமில்லையா? இவர்கள் ஏன் பாராளுமன்றம் செல்கிறார்கள்.?
இலங்கை நாட்டின் நதிவளங்களை வலைபின்னல் அமைப்புக்களை ஏற்படுத்தினால் விவசாயம் பெருகும். பொருளாதாரத்தில் நம்நாடு தலைநிமிரும். இவற்றைப்பற்றிய அறிவு இல்லாதவர்களை இந்த மக்கள் ஏன் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்கிறார்கள்.? மதுராவும் அஞ்சலிகளும் இந்நிலைக்கு ஆளாவார்களா?
இந்தநாட்டின் மக்கள் படுந்துன்பங்களைப் பற்றிக் கதைப்பதற்கு யாரும் பாராளுமன்றத்தில் இல்லை. ஒருபுறம் அகதிமுகாம்களில் வாடும் மக்கள். இன்னொரு புறம் வீடுவாசல்களைத் தொலைத்துவிட்டு நாடோடிகளாக அலையும் மக்கள். இன்னொருபுறம் உறவுகளை இழந்து மனவடுக்களுக்கு ஆளாகி முள்ளுக்கம்பி வேலி கொண்ட அகதிமுகாங்களுக்குள் முடங்கித் தவிக்கும் மக்கள். மற்றொரு புறம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுத் துயருறும் மக்கள் என்பதைப்பற்றிக் கவலை கொள்ள யாரும் இல்லை. நினைந்து நினைந்து என் மனது கனத்துப் பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருக்கும்வரை மதுராஞ்சலிகள் பெருகிக்கொண்டே போவார்கள். ஒருவித கொடுப்பனவும் இல்லாத முன்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சியும், டிப்ளோமா அல்லது பல்கலைக்கழகப் பட்டமோ தேவைப்பட்டால் நாட்டை ஆள்வதற்குரிய பிரதிநிதிகளுக்கு எவ்வகையான தகுதி வேண்டும:;? பாராளுமன்றம் செல்வதற்குச் சில தகுதிகளை உருவாக்கவேண்டும். மும்மொழியும் தெரிந்தவர்களாக, நாட்டுப்பற்றுள்ளவர்களாக, பண்பான பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகவுள்ள அறிஞர்களைத்தான் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான தகுதியை மக்கள் உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாடு சொர்க்கமாக மாறும்.
“சேர்… என்ன சேர் யோசனை? பயிற்சியைத் தொடங்கலாம் சேர். வாங்க”. பத்மினி பக்கத்தில் வந்துநின்று அழைப்பதை உணர்ந்தேன். மதுராவையும் அஞ்சலியையும் பார்த்தேன். அவர்கள் பயிற்சி வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தார்கள். நான் அப்படியே உறைந்திருந்தேன்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP