Sunday, January 23, 2011

சிறுகதை

சிறுகதை
கண்ணாடி வீட்டில்…
“ஆனந்தன்! அழைத்தவாறே அவர் வெளிக் கதவைத் தட்டினார். வெளிக் கதவின் தட்டுமோசை கேட்டது. ஆனந்தன் எட்டிப்பார்த்தான். அவனது உயரதிகாரி. புன்னகையோடு நின்றிருந்தார். “என்றுமில்லாது இன்றைக்கு இவர் வந்திருக்கிறார்”. ஓடிவந்து வெளிக்கதவைத் திறந்து விட்டான்.“வாங்க சேர்.” வரவேற்று அழைத்தான். அவர் பின் தொடர இவன் முன்னால் நடந்தான். வரவேற்பறையில் இருக்கையைக் காட்டி இருக்கும்படி கூறினான். “சும்மா வோக்கிங் போனனான். இப்படியே ஒருக்கா எட்டிப் பாரத்துவிட்டுப் போகலாம் என்று வந்தன்.” இருக்கையில் அமர்ந்தவாறே சொன்னார்.
காலையில் எழுந்து நடப்பது அவரது கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருப்பவர். நடந்ததால் அவரது உடல் வெயர்த்திருந்தது. காற்றாடியைச் சுழலவிட்டான். ஆனந்தனின் மனைவி மலர் சுடச்சுடத் தேனீர் தயாரித்து வந்தாள்.“பெரிய அதிசயமாக இருக்கு” மலர் புன்னகையுடன் கொடுத்தாள். இருவரும் தேநீரைப் பெற்றுக் கொண்டார்கள். “வர நினைக்கிறதுதான். எங்கம்மா நேரம் கிடைக்கிறது”? தேநீரைக் குடித்தவாறே அவர் சொன்னார். “மிஸ்டர் ஆனந்தன்! மட்டக்களப்புக்குப் போறீங்க. ஒருக்கா மகளையும் எங்கட வீட்டில இறக்கிவிடுங்க. அவ தயாரக இருக்கிறா. அதுதான் சொல்ல வந்தனான்”. கதையோட கதையாய்ச் சொன்னார். “அதுக்கென்ன சேர். வேன்தானே போகுது. அதில பன்னிரண்டு பேர்போகலாம். இப்ப காலை ஏழுமணியாகுது. ஒரு எட்டரை மணிக்குப் புறப்பட்டால் போதும்தானே?;” “ஓமோம். டயஸ்தான் றைவர். அவன் இளம்பொடியன்தானே. விரைவாக ஓட்டுவான் கொஞ்சம் ‘கொன்றோல்ல’ வைச்சுக் கொள்ளுங்க. எத்தனை பேர் போறீங்க? அதிகாரி கேட்டார். “ என்னோடு எக்கவுண்டன் சேகரும், நந்தன் கிளாக்கர் மட்டுந்தான்.” “ நேற்று இதைச்சொல்ல நினைச்சனான். மறந்திட்டன். எக்கவுண்டனோட நீங்களும் ஒருக்கா ஒப்பிலாமணியரின் பாடசாலைக்குப் போய் விசாரித்துப் பாருங்க. நாங்களும் அதிபர்களாக இருந்துதானே இப்படி உயர்ந்து வந்திருக்கிறம். பாடசாலையின் வளர்ச்சி அதிபரிலதான் தங்கி இருக்கு. அதிபருக்குக் கஸ்டத்தைக் கொடுக்கிறது எனக்கெண்டால் பிடிக்கல்ல. கஸ்டப்பிரதேச அதிபர்மார் படும் துயரம் இந்த எக்கவுண்டன்மாருக்கு விளங்காது. பாவங்கள்.” அவர் சொன்னதும் ஒப்பிலாமணி அதிபரை நினைந்து கொண்டான்.“ ஓம் சேர்.. ஒப்பிலாமணி அதிபர் தன்ர பணத்தைக் கொடுத்துத்தான் பாடசாலையை வளர்க்கிறார். எனக்குத் தெரியும். அவருக்கெதிரா ஏதும் விளக்கமா?” “ஓமோம். அதுக்காகத்தான் எக்கவுண்டன் போறார். ஆனால் அதுமட்டுமல்ல அவர் இந்தச் சாட்டில தன்ர வீட்டுக்குப்போறார். அது வேறவிசயம். அதுசரி நீங்க எங்க தங்குவிங்க. அங்க எங்கட மகள் வீட்டிலயும் தங்கலாம். நான் சொல்லியிருக்கிறன்”.? “ தாங்க்ஸ் சேர். நான் ‘சேர்க்கிற் பங்களாவில’ அறையொன்றுக்கு சொல்லிப்போட்டன்.” “அது நல்ல இடம். சாப்பாட்டுக்கு மகள் வீட்டுக்குப் போங்க”“இல்ல சேர். நான் அங்கேயே ஒழுங்கு செய்துபோட்டன். அட்வான்சும் கட்டிப்போட்டன்”. அவர் சிரித்துக் கொண்டார். “ எப்ப திரும்புவீங்க”? புருவங்களை உயர்திக் கேட்டார்.
“;வியாழன், வெள்ளி இரண்டுநாள் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், சனிக்கிழமை அதிபர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கும் நடக்கும.; போகவர இரண்டு நாள். எல்லாமாக ஐந்து நாள். ஞாயிற்றுக்கிழமை திரும்பிடுவன்” ஆனந்தன் விளக்கினான். அந்த உயரதிகாரி சிரித்துக் கொண்டார்.“ஏன் சேர் சிரிக்கிறீங்க”?“ சும்மாதான்.” நாடியைத் தடவியவாறே நின்றார். “அப்ப எப்படியும் எக்கவுண்டன் தன்ர வீட்டில டியூட்டி லீவில நிற்பார். ஐந்து நாளைக்கு மேலதிக ‘பட்டாவும்’ கிடைக்கும். அதிபர் தன்ர பாடசாலைக்கு வரும் அதிகாரிகளை வரவேற்று உபசரித்து சமாளிக்க யார் பணம் கொடுப்பார்கள்”? மனதுக்குள் வெதும்பினார்.
“அதுசரி சேர், ஒப்பிலாமணி அதிபருக்கெதிராக குற்றச்சாட்டா? அவர் நல்லதொரு அதிபராச்சே. பாவம். அவர் பாடசாலைக்காக பாடுபடுவது எனக்கு நன்றாகத் தெரியும். தன்ர சம்பளத்தில் தொண்டர் ஆசிரியருக்கும் உதவி செய்து பாடசாலையை வளர்க்கிறார். அவருக்கு எதிராகக் குற்றச் சாட்டா? என்னால நம்பமுடியல்ல ”
“எனக்குந்தான். ஆனந்தன்! இதெல்லாம் இவங்களுக்கு விளங்காது. ஆசிரியர்கள் உயிர்களோடு வேலை செய்யிறவங்க. வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர்களை நாங்க வருத்தலாமா”? அவர் உருக்கமாகச் சொன்னார். “சரி நான் வாறன். மறந்திடாமல் மகளையும் கூட்டிற்றுப் போங்க. அங்கிருந்து வரும்போதும் கூட்டிவந்திடுங்க.”. கூறிக்கொண்டு வந்தவழியே சென்றார்.
வாகனம் எட்டு மணிக்கு வந்துநின்றது. டயஸ் ஆயத்தமாக நின்றான். ஆனந்தன் கொண்டுபோக வைத்திருந்த ஆவணங்களை வாகனத்தில் ஏற்றினான். தனது உடமைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். மலர் வசல்வரை வந்து வழியனுப்பினாள். வாகனம் புறப்பபட்டது.
“டயஸ்..!“சேர்;;”“அவசரம் ஒன்றுமில்லை. ஆறுதலாகப் போனால் போதும். எக்கவுண்டன் முன்சீற்றில்தான் இருப்பார். அவர் ஏறியதும் சாய்ந்து வி;டுவார். நீயும் சாயாமல் கவனமாக ஓடவேணும்”டயஸ் சிரித்துக் கொண்டான். “வழியில் ‘ர்றபிக் பொலிஸ்’; நிற்கும். மாட்டிக் கொள்ள வேண்டாம்”. ஆனந்தன் அறிவுறுத்தினான். டயஸ் வாகனத்தை இயக்கித் திருப்பினான். முன்னால் நந்தன் கிளாக்கர் வந்தார். டயஸ் வாகனத்தை விட்டிறங்கி வந்து அவருடைய பொருட்களை வாங்கினான். “சேர்..நீங்க ஏறுங்க. வீட்டில நில்லுங்க என்று சொன்னன்தானே? நின்டிருக்கலாமே? நான் வந்து ஏற்றிப்போவன்;தானே. உங்கட வீட்ட வரத்தான் புறப்படுறம்”. டயஸ் பணிவுடன் சொல்லிக்கொண்டே வாகனத்தினுள் வைத்தான்.“ டயஸ் நேரம் போச்சுதென்டு எப்படீயோ வந்திட்டன். மற்றவங்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் நமது கடமையைச் செய்ய வேணும்.”. கூறியவாறு நந்தன் ஏறிக்கொண்டார்.நந்தன் கடமைகளை ஒழுங்காகச் செய்பவர். கதையால் யாரையும் மடக்கிவிடுவார். அவருக்கு தனக்கு முன்னால் இருக்கும் முதலாவது இருக்கையை ஆனந்தன் ஒதுக்கியிருந்தான். நந்தனுக்கு அது பெருமையாக இருந்தது. வாகனம் உயரதிகாரியின் வீட்டில் நின்றது. அவரின் இளைய மகள் வந்து ஏறிக்கொண்டாள்.
வாகனத்தினுள் அலுவலகத்தில் வேலைசெய்யும் சிற்றூழியரின் குடும்பமும் பின்னிருக்கையில் ஏறிக்கொண்டது. ஒரு பிரயாணம் போவதென்றால் உடன் வேலைசெய்யும் அலுவலர்களின் தேவைகளையும் நிறைவு செய்யவேண்டும். அது மானிட தர்மமும்கூட. ஆளுக்காள் உதவுவதில் தப்பில்லை. அப்படிச் செய்வதால் அவர்கள் தமது கடமைகளை மனநிறைவோடு செய்வார்கள். ஓரு குடும்பமாக ஒற்றுமையாகச் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பது ஆனந்தனின் கொள்கை.
முன்சீற்றை எக்கவுண்டனுக்கு ஒதுக்கிவிட்டான். அவருக்கு முன்சீற்றில் இருந்து போகத்தான் விருப்பம். அவரின் குணத்தை நன்றாக அறிந்து வைத்திருந்தான். அவருக்குத் தனது பதவி ஒரு பணிப்பாளரது பதவியைவிடவும் பெரியது என்ற எண்ணம் குடிகொண்டிருந்தது. ஆனால் பணிப்பாளரின் அனுமதியுடன்தான் செயற்படுவதை அவர் மறந்து விட்டார். வாகனம் எக்கவுண்டன் வீட்டு வாசலில் நின்றது. அவர் வந்து முன்சீற்றில் ஏறியதும் ‘குட்மோனிங்’;; சொல்லிக்கொண்டார். எல்லோரும் ‘குட்மோனிங்’ சொன்னார்கள். ஆனந்தன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
வாகனம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனந்தன் அந்த உயரதிகாரியினை நினைந்து கொண்டான். அவரது உள்ளம் ஆசிரியர்களுக்காக ஏங்குவதைப் புரிந்து கொண்டான். அந்த எண்ணத்தில் மிதந்தான். வாகனம் சாராசரியான வேகத்தில்தான் சென்றது. மனதின் வேகம் ஒலி. ஒளியின் வேகத்தைவிடவும் விரைவானது. கண்ணிமைப் பொழுதில் அண்ட சராரங்களையும் அளந்துவிட்டு வந்து விடும்.
வாகனம் கந்தளாயைத் தாண்டிக் ஹபறனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. “சேர் அங்க பாருங்க”. டயஸ் சடுதியாக வாகனத்தை நிறுத்தினான். ஆனந்தன் எட்டிப் பார்த்தான். எக்கவுண்டனும் பதறித்துடித்து எழுந்தார். நடுவீதியில் இரண்டடி உயரத்தில் படமெடுத்தபடி பெரிய நாகம் அசையாமல் நின்றது. “நல்ல வேளை. கவனமில்லாது போயிருந்தால் பாம்பு அடிபட்டிருக்கும்”;. எக்கவுண்டன் எட்டிப்பார்த்துக் கூறினார். சற்று நேரம் பாம்பு அசையாது நின்றது. ஒரு பத்து நிமிடங்கள் அப்படியே நின்றது. பின்னால் வந்த வாகனங்களும் நின்றன. சிலர் இறங்கி வேடிக்கை பார்த்தனர். பாம்பு படத்தைச்சுருக்கி மெதுவாகப் புதருக்குள் போய் மறைந்தது.
வாகனங்கள் புறப்பட்டன. பாம்பின் படத்தின் அழகு பற்றிக் கதைத்தார்கள். “டயஸ் பாம்பு நல்ல சகுனமா? பார்த்துப் போ” எக்கவுண்டன் சகுனம் பார்த்தார். மின்னேரியாவைத் தாண்டி ஜெயந்திபுரத்தால் செல்லும்போது ஒரு சைக்கிளில் இரண்டு பாடசாலை மாணவியர் பயணித்தனர். திடீரென சைக்கிள் வீதியைக் குறுக்கறுத்தது. டயஸ் தன்னால் இயன்றவரை வாகனத்தைக் கட்டுப் படுத்தினான். சைக்கிளில் வாகனம் முட்டவில்லை. எனினும் சைக்கிளில் சென்ற மாணவியர் பயத்தினால் விழுந்து விட்டனர்.
சைக்கிளின் ஹான்டில் சற்று நெளிந்து விட்டது. வாகனத்தை நிறுத்தி மாணவியருடன் உரையாடும்போது பெரும்பான்மை இனத்தவர் சிலர் வந்து குவிந்து கொண்டார்கள். இருவர் நிறைபோதையில் நின்றனர். மாணவியர் தங்கள்மேல்தான் பிழையென்பதை ஏற்றுக் கொண்டார்கள். எனினும் கூடிநின்றவர்கள் வாகனத்தை மொய்த்துக் கொண்டு தாறுமாறாகப் பேசினார்கள். அவ்விடத்தை விட்டுப்புறப்பட்ட மாணவியரையும் போகவிடாது தடுத்தார்கள்.
பாடசாலை விட்டுப் பிள்ளைகளும் ஆசிரியர்களும் வந்து கொண்டிருந்தார்கள். கல்வித்திணைக்களத்தின் வாகனத்தைக் கண்டதும் ஆசிரியர்கள் கூடிவிட்டார்கள். “சேர் மொக்கத உணே”? என்ன நடந்தது.? கேட்டார்கள். நந்தன் நடந்ததைச் சொன்னார். “சேர் ஹெட் ஒப்பிசக்கத வடகறன்ன? கேட்டான். நந்தன் பயமில்லாது “ ஓவ் - ஓம்” என்றார். “சேர் அப்பி லோன் கண்ட அப்ளைக் கறா சேர். ஏக்கக் கறலாதெண்ட” கேட்டு நின்றார்கள். “அர இன்ன மாத்தயாத்தமாய் அப்பே எக்கவுண்டன். எயா கறலாதெனவா. நம் விஸத்தற தென்ட” சொன்னார். நாங்கள் கடனுக்கு விண்ணப்பித்தோம். இன்னும் அது வரவில்லை. அதைச் செய்து தாருங்கள் என்று கூறினார்கள். கணக்காளர் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார். அவர்கள் தங்கள் பெயர்களை எழுதி ‘லோன்’; பற்றிய விபரங்களையும் எழுதிக் கொடுத்தார்கள்.
“மே மேகொல்லோ அப்பே மினிசு. லொக்கு மாத்துறு. கறுநாகறலா இடதெண்ட” இவர்கள் எல்லோரும் எங்கள் மேலதிகாரிகள். தொந்தரவு தரவேண்டாம். ஒரு ஆசிரியர் சத்தமிட்டார். அனைவரும் விலகிக் கொண்டார்கள். “சேர் அப்பி பலாபொறுத்து இன்னம் சேர்.” என்றார்கள். நந்தன் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தார். அடுத்த கிழமை தொடர்பு கொள்ளுமாறு கூறினார். ஒருவாறு வாகனம் புறப்பட்டது.
எக்கவுண்டன் வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டார். “ சேர் நான் இறங்கிறன். டயஸை நாளைக் காலையில ஏழு மணிக்கு அனுப்பிவிடுங்க.” கூறிவிட்டு வீட்டுக்குள் போனார். அதிகாரியின் மகளை அவரது மூத்தமகள் வீட்டில் விட்டபின் சிற்றூழியர் குடும்பமும் தங்கள் வீட்டின்முன் இறங்கிவிட்டது. வாகனம் சேக்கிற் பங்களாவில் நின்றது. இறங்கிக் கொண்டார்கள். “டயஸ்”“ சேர்” “குளிச்சிட்டு வாங்க. ஒரு சிற்றுண்டி சாப்பிட்டுட்டு ஒருக்கா ஒப்பிலாமணி அதிபரைப் பார்த்துவருவம். என்ன”?“ ஓம் சேர்” டயஸ் தனது அறைக்குள் போனான். ஆனந்தன் ஆயத்தமாகிக் காத்திருந்தான். டயஸ் போனதுபோல் ஆயத்தமாகி வந்தான். இருவருக்கும் சிற்றுண்டி காத்திருந்தது. உண்டதும் ஒப்பிலாமணி அதிபரின் பாடசாலையை நோக்கி வாகனத்தில் விரைந்தார்கள்.“ஒப்பிலாமணி அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் அதிபர். அவரில எக்கவுண்டனுக்கு என்ன கோபம்?” ஆனந்தன் வழி நெடுக யோசித்தான். ஆரையம்பதி அருணோதயக் கல்லூரி எடுப்பாக இருந்தது. கல்லூரிக்குள் வாகனம் நுழைந்தது. விளையாட்டுத் திடலில் மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். சில வகுப்புக்களில் பாடங்களும் நடந்து கொண்டிருந்தன. கல்லூரியை வலம் வந்தான். கூடவே டயஸையும் அழைத்துக் கொண்டான்.
ஆனந்தனுடன் சரிசமமாகப் போவதில் அவனுக்கு பரமதிருப்தி. ஆனந்தனிடம் மட்டுந்தான் இந்த சலுகையை எதிர்பார்க்க முடியும். மற்றவர்கள் சாரதியை வாகனத்திலேயே காக்க வைத்து விடுவார்கள்.
ஆனந்தனைக் கண்டதும் சில ஆசிரியர்கள் வந்து உரையாடினார்கள். “உங்கள் அதிபர் எங்கே”? “அவர் ஏ எல் பிள்ளைகளுக்கு பௌதீகவியல் வகுப்பெடுக்கிறார் சேர். வாங்க அலுவலகத்தில் இருந்து கதைப்பம்”. ஆசிரியர்கள் அழைத்தார்கள். “டயஸ் வாங்க” ஆனந்தன் டயஸையும் அழைத்துக் கொண்டு சென்றான். லாப்பை அடைந்ததும் எட்டிப் பார்த்தான். ஒப்பிலாமணி அதிபர் மின்னோட்டம் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். குழுக்களாகப் பிரித்து செய்முறையில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அவரது கற்பித்தல் திறமையை வியந்தான். ஒப்பிலாமணி ஆசிரியர்களுள் ஒப்பில்லாதவர்தான். மனதுக்குள் பாராட்டிக் கொண்டான். ஓரு மூலையில் ஒதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். டயஸ் பக்கத்தில் நின்றான். ஆசிரியர்களும் நின்றனர்.
வகுப்பு முடிந்ததும்தான் ஒப்பிலாமணி நிமிர்ந்தார். அவரது கண்கள் ஆனந்தனில் நிலைக்குத்தி நின்றன. “சேர் மன்னிக்கவேணும். சத்தமில்லாமல் படிப்பிக்கிறதப் பார்த்து நின்றுட்டன்”. தனது பாணியில் வெளிப்படுத்தினான். ஒப்பிலாமணியருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. “வாங்க சேர்” ஆனந்தனின் கைகளைப் பிடித்து அலுவலகத்துக்குள் அழைத்தச் சென்றார். “ஆசிரியர் பற்றாக்குறை என்று சும்மா இருந்தால் பாதிக்கப்படுவது நமது பிள்ளைகள்தானே? அதுகளின் வாழ்க்கைப் பிரச்சினை. அதுகளுக்கு வழிகாட்ட வேண்டியது நமது கடமையல்லவா? அதுதான் இந்த ஆசிரியர்களையும் வருத்தி இழுத்துக் கொண்டுபோறன்”. கூறிக்கொண்டே நடந்தார்.
“இப்படி ஒவ்வொரு அதிபர்களும் ஆசிரியர்களும் சிந்தித்துச் செயற்பட்டால் நமது மாணவச்செல்வங்கள் ஏன் வழிதவறிச் செல்கிறார்கள்?” ஆனந்தன் புளகாங்கிதம் அடைந்தான். “ஒரு பாடசாலை மக்களுக்காக இருபத்திநாலு மணித்தியாலங்களும் திறந்திருக்கவேண்டும.; பாடசாலை விட்டபின்தான் பாடசாலை தொடங்குகிறது” என்ற கருத்தியலை நினைந்து கொண்டான். இப்படிப்பட்ட அதிபர்களுக்கு இடைஞ்சல் வரத்தான் செய்யும். ஆனால் அவர்களுக்கு வரும் துன்ப துயரங்களை பெற்றாரும், கல்வி அலுவலர்களும் களைவதற்கு உதவவேண்டும்.
தேநீர் வந்தது. எல்லோரும் குடித்தார்கள். “சேர் இந்தத் தேநீர் எங்களது ஆசிரியர்களது நிதியத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஏற்பாட்டு முறை. இதில் எனக்குச் சம்பந்தம் இல்லை. நான் இதில் ஒரு பங்குதாரர்மட்டுமே”. புன்னகையுடன் ஒப்புவித்தார்.
“சேர், உங்கட அர்ப்பணிப்பு செயலாளருக்கும் தெரியும். எனக்கு உங்கள நல்லாகவே தெரியும். கண்ணாலேயே அதைக் கண்டிருக்கிறன். ஆனால் ‘எக்கவுண்ட’; வைக்கிறதில ஏதும் சிக்கலா”? ஒருவாறு போட்டான். ஒப்பிலாமணி அதிபர் பெரிதாகச் சிரித்தார். “அங்க பெரிசாச் சிக்கல் இல்ல. வசதிகட்டணவரவு செலவுப் பதிவில எங்கட ஆசிரியர் ஒரு சின்னப் பிழை விட்டிட்டா. அதை எக்கவுண்டன் பெரிசாத் தூக்கிப் பிடிச்சிக் கொண்டு விளக்கம் கேட்டிருக்கார். அவ்வளவுதான்”. அவர் அதை வெகு இலகுவாக எடுத்துக் கொண்டதைக் கவனித்தார்.
“வரவும் செலவும் பதிவில சரியாகத்தான் இருக்கு. ஆனால் பற்றுச்சீட்டிலதான் சிக்கல். கொள்வனவு செய்த பொருட்களுக்கு எல்லாப்பற்றுச் சீட்டிலும் வாங்கிய நிறுவனத்தின் ‘றப்பர்ஸ்ராம்;சீல்’; வேணுமாம். அப்படி சில சின்னச்சின்னக் குற்றச்சாட்டு. தெரியாமத்தான் கேட்கிறன். எங்கட இந்தச் சின்ன ஊரில உள்ள சின்னக் கடையில ‘றப்பர்ஸ்ராம்சீல்’; இருக்குமா? கடையின்ர பெயரையெழுதி, கையெழுத்துப் போட்டுத் தருவார்கள். அதுவும் பெரிய சிரமத்தின் மத்தியிலதான் தருவார்கள். ஆனால் எல்லாப் பற்றுச் சீட்டும் பத்திரமாக இருக்கு. ஒருக்கா நீங்களும் பாருங்க சேர்.” அதிபர் விளக்கமாகச் சொல்லி அதற்குரிய கணக்குப் பதிவேட்டையும் மேசையில் வைத்தார்.
ஆனந்தனுக்குப் பெரிய சங்கடமாகி விட்டது. ஒரு கண்ணோட்டத்தை விட்டான். அவர் சொன்னது சரியாகவே இருந்தது. “இதெல்லாம் பார்த்தாப் பாடசாலையை நடத்தேலாது சேர். எதற்கும் நீங்கள் முன்னாயத்தமாக இருங்கள். செயலாளர் உங்களப்பற்றி நல்ல அபிப்பிராயம் வைச்சிருக்கிறார். ஒருக்கா என்னையும் பார்த்துவரச் சொன்னவர். நாளைக்கு எனக்கு ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு இருக்கு. நான் வரமாட்டன். எக்கவுண்டன் வந்திருக்கிறார். அவர் வருவார். கொஞ்சம் பார்த்துச் சமாளியுங்கசேர். எங்கள மீறி ஒன்றும் நடக்காது. எதற்கும் சனிக்கிழமை நடக்கும் அதிபர் கருத்தரங்குக்கு வாங்க சேர். நாங்க வாறம்”. கூறி எழுந்து புறப்பட்டார்கள். அதிபர் வழியனுப்பி வைத்தார்.
இரண்டு நாள் ஆசிரியர் கருத்தரங்கு முடிந்த பின் அதிபர் கரத்தரங்குக்கு ஆயத்தம் செய்துவிட்டு ஒப்பிலாமணி அதிபருக்காகக் காத்திருந்தான். கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தார். கருத்தரங்கு முடிந்ததும் தனியதக அதிபரோடு கதை கொடுத்தான். “என்ன சேர் நடந்தது. ஏதும் வில்லங்கமோ”? வினாவினான். “அதையேன் கேட்கிறியள். நான் சொன்னதைத்தான் அவர் தூக்கிப்பிடித்துக் கொண்டு நின்றார். வரவுக்கும் செலவுக்குமிடையில் இரண்டு ரூபா வித்தியாசம். செலவுக்குரிய பற்றுச் சீட்டு இல்லை. அதைத்தூக்கிப்பிடித்துக் கொண்டு விளக்கம் கேட்டார்” சால்வையால் முகத்தைத் துடைத்தவாறு தொடர்ந்தார்.
“எனக்கு வந்த கோபத்துக்கு ….” நிறுத்திப் பின் தொடர்ந்தார். ஆனந்தன் அவரைப் பேசவிட்டுப் பார்த்திருந்தான். “நான் ஆசிரியர். அதுவும் அதிபர். என்னால் எக்கவுண்டன் வேலையும் செய்யமுடியும். நான் வெறும் பேப்பரோடு வேலைசெய்யவில்லை. உயிருள்ள ஜீவன்களோடு சேவைசெய்யிறன். இதையார் புரியப்போறார்கள். ஒரு மேலதிகாரி; பாடசாலைக்கு வந்தால் அவர்களை உபசரிப்பது எங்களின் பண்பு. அதற்குரிய செலவை யார் ஈடுசெய்வது? அதிபரோ ஆசிரியர்களோ கல்வி அலுவலகம் வந்தால் இருக்கவும் சொல்லாத அதிகாரிகளுக்கு நாங்கள் எவ்வளவு மரியாதை செய்யிறம்.” எங்கோ பார்த்தவாறு தொடங்கினார்.
“அதிகாரிமார் பாடசாலைகளுக்கு மேற்பார்வை என்று வந்தால் அவர்களை உபசரித்து வேண்டிய வசதிகளைச் செய்வது பயத்தால் இல்லை. எங்கள் பண்பாட்டைக் காட்டுவதற்காகத்தான். பாடசாலைதான் பண்பாட்டை வளர்க்கும் மையங்களாகும். நாங்கள் இன்று செய்வதைத்தான் எங்களுக்குப் பின்வரும் சமுதாயம் கடைப்பிடிக்கும். இதை ஏன் இந்த மேலதிகாரிகள் உணரவில்லை.”? அவர் ஆவேசமாகவே பேசினார்.
“சேர், நீங்கள் என்னைத் தவறாக நினைக்கவேண்டாம். நான் உண்மையைத்தான் சொல்லுறன். அதிகாரிமார் பாடசாலைகளுக்குச் செல்வதற்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அதிபர்கள் கல்வி அலுவலகம் வருவதற்குக் கொடுப்பனவு தருகிறார்களா? பாடசாலை அதிபர்களது உபசரிப்பை அனுபவித்துக் கொண்டு, பயணப்படியையும் முழுமையாகப் பெற்றுக் கொண்டு வாழும் அதிகாரிகளைப் பற்றி எங்களுக்கும் தெரியும் சேர்.” ஒப்பிலாமணி அதிபர் ஆவேசமாகப் பேசியதை ஆனந்தன் எடைபோட்டுப்பார்த்ததான். அவரது கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை உணர்ந்து கொண்டான்.
“ சேர்! நேற்று எக்கவுண்டன் காலை ஒன்பது மணிக்கு வந்ததிலிருந்து மூன்று மணிக்குப் போகும் வரை தேநீர், பகலுணவு, பின்னேரம் தேனிர், சிற்றுண்டி வரை அனைத்துச் செலவுகளையும் ஈடுசெய்தது எங்கள் பாடசாலை. இதனை நாங்கள் ஏன் செய்தோம்?. பாடசாலை அது இருக்கும் மக்களின் பாரம்பரியத்தை எடுத்து விளக்கும் புனிததலம். பண்பாடு பாடசாலையில்தான் காலூன்றி வேர்விட்டு நிலைக்கிறது. இது எங்கள் பண்பாடு”. அதிபர் ஒப்பிலாமணியின் இதயம் துடித்தது. ஆனந்தன் அவரின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டான். அவரின் மனஉளைச்சலின் உச்சத்தை உணர்ந்து கொண்டான்.
“சேர்! அமைதியாக இருங்கள். சில அதிகாரிகளை வைத்துக் கொண்டு மற்றவர்களையும் எடைபோடவேண்டாம். நீங்கள் பயமில்லாது போங்கள். “டயஸ்!” சாரதியை அழைத்தான். டயஸ் உடன் வந்தான். “சேரைக் கொண்டுபோய் பாடசாலையில் விட்டுப்போட்டு வாங்க”. அதிபரை வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைத்தான். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனது மேலதிகாரிக்கு அன்றிரவே தொலைபேசியில் விபரங்களைத் தெளிவு படுத்தினான். விடிந்ததும் வந்ததுபோல் அனைவரையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.
எக்கவுண்டனின் அறிக்கையும், பிரயாணக் கொடுப்பனவுக்கான பூரணப்படுத்தப்பட்ட படிவங்களும் மேலதிகாரியின் அனுமதிக்காக அவரது மேசைக்கு வந்து சேர்ந்தன. அவரால் அனுப்பப்பட்ட ஒப்பிலாமணியருக்கு எதிரான அறிக்கையை விரிவாகப் படித்தார். அந்த அறிக்கையினை இரண்டு போட்டோப் பிரதி எடுக்கும்படி உதவியாளரிடம் கொடுத்து எடுத்துக் கொண்டார். எக்கவுண்டனின் பிரயாணத்துக்கான விபரங்களையும் பற்றுச்சீட்டுக்களையும் படித்தார். மேலதிகாரியின் உள்ளம் கொதித்தது. ஆனந்தனின் அலுவலக அறையின் மணி ஒலித்தது. அதேநேரம் எக்கவுண்டன் அறையின் மணியும் ஒலித்தது. இருவரும் மேலதிகாரியின் அறையை நோக்கி நடந்தார்கள்.
ஆனந்தனின் அறிக்கையினையும், பிரயாணச் செலவுக்கான படிவங்களை எக்கவுண்டனிடம் கொடுத்துச் சரிபார்க்கும்படி கொடுத்தார். அத்துடன் ஒப்பிலாமணி அதிபருக்கு எதிரான அறிக்கையையும் கொடுத்தார். எக்கவுண்டனின் அறிக்கையையும் செலவுக்கான படிவங்களையும் ஆனந்தனிடம் சரிபார்க்கும்படி கொடுத்தார். அத்துடன் ஒப்பிலாமணி அதிபருக்கு எதிரான அறிக்கையையும் கொடுத்தார்.
“எக்கவுண்டன். நீங்க ஒப்பிலாமணி அதிபருக்கு எதிராகக் கொடுத்த அறிக்கையினைப் பார்த்தேன். ஒப்பிலாமணி அதிபர் உங்களுக்குத் தந்த விளக்கத்தினையும் பார்த்தேன். அந்த அதிபரின் விளக்கத்தைப் படித்தீர்களா? அவர் சரியான விளக்கத்தைத் தந்துள்ளார். நீங்கள் அதனைப் படித்துப் பார்க்காமல் அவருக்கெதிரான அறிக்கையை எழுதித் தந்திருக்கிறீர்கள். பாடசாலைக்குச் சென்று விசாரணையை முடித்தபின் கடையில் சாப்பிட்டிருக்கிறீங்க. உணவு உண்டதுக்கான பற்றுச்சீட்டும் உண்டு.” சில பத்திரங்களைப் புரட்டிப் பார்த்தவாறே கூறினார்.
“பற்றுச்சீட்டில் ‘றப்பர்ஸ்ராம்சீல்’ இல்லை. உங்கட செலவுத் தொகை அதிகம். அதிபரின்; ‘றப்பர்ஸ்ராம்சீல்’ இல்லாத பற்றுச் சீட்டிலுள்ள தொகை சிறியதொகைதான். நீங்களே பிழையான வேலைகளைச் செய்துவிட்டு. மற்றவரைப் பிழைபிடிப்பது என்ன ஞாயம்? கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியலாமா? “லோ மேக்கர்ஸ் சுட் நொட் பி த லோ பிறேக்கர்ஸ்” சட்டத்தை ஆக்குபவர்கள் அதனை உடைப்பவர்களாக இருக்கக்கூடாது. உங்களுக்கும் றைவருக்கும் அதிபர் உணவு தந்ததாக டயஸ் தனது பிரயாணப் படிவத்தில் எழுத்தில் தந்திருக்கிறார். உங்களுக்கு அதிபர் உணவு தரவில்லையா”? அவரை உற்றுப் பார்த்துக் கேட்டார்.
“உங்கள் வீட்டில் இருந்து விட்டு ‘கெஸ்ற்ஹெளஸ்’ பற்றுச்சீட்டைத் தந்திருக்கிறீங்க. உண்மையில் அதிபர் இரண்டு ரூபாயை விளையாடி விட்டார் என்பதை நிருபிக்க நீங்க எத்தனை ஆயிரம் ரூபாய் உங்களுக்காக்கிக் கொள்ளப் பார்க்கிறீர்கள். நீங்கள் பாடசாலைக்குள் நுழைந்த நேரம் தொடக்கம் உங்களை எவ்வளவு மரியாதையாக பாடசாலை மதித்துள்ளது. தேநீர். சிற்றுண்டி. உணவு எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு அதிபரைக் கள்ளனாகக் காட்டுவது மனிதாபிமானமாகுமா? அந்த இருண்டு ரூபாய்க்குப் பற்றுச் சீட்டில்லையென்றால், அவரிட்டச் சொன்னால் அவர் அதைச் சரிசெய்துகொள்வார்தானே. அதற்காக நீங்க ஐந்துநாள் டியூட்டி லீவும் அதோடு பிரயாணப்படியும், பட்டாவும் பெறுவதுதான் நோக்கமா”? மேலதிகாரியின் கண்களில் சினத்தைக் காணவில்லை. மனிதாபிமானம் மேலோங்கியிருந்தது.
“என்ன மிஸ்டர் சேகர்? பாடசாலைகளுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக வரும் நிதியில் எவ்வளவு கொமிசன் நமக்குக் கிடைக்கிறது? இதைப்பற்றி அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரியாமல் இல்லை. நாங்க பாடசாலைகளுக்கு மேற்பார்வைக்காகப் போவது அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உதவுவதற்காகத்தான் என்பதை ஏன் மனதில் கொள்வதில்லை.? அவர்களுக்காகத்தான் நாமிருக்கிறோம். நம்மைப்போன்றவர்கள் மனிதர்கள்தானா? யோசியுங்கள்” அந்த மேலதிகாரியின் கண்களில் இப்போதும் கோபத்தைக் காணவில்லை. பதிலாக பச்சாதாபம் தெரிந்தது. அவர் எழுந்து வெளியில் போனார். எக்கவுண்டன் முகத்தைக் கவிழ்த்தபடி இருந்தார்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP