Tuesday, April 26, 2011

சிறுவர் கதைகள்.

காகமும் குயிலும்
வசந்த காலம் தொடங்கிவிட்டது. பறவைகளுக்குக் கொண்டாட்டம். அதிகாலையிலேயே எழுந்து பாடத் தொடங்கிவிட்டன. மாமரங்கள் துளிர்த்துப் பூத்தன. வேம்புகள் இலைகளைச் சொரித்து இளந்தளிர்களைச் சூடிக் கொண்டன. குளிர்மை சேர்த்தன. தளிர்களில் பூச்சூடி மகிழ்ந்தன. சில வேம்புகள் கொத்துக் கொத்தாய் காய்களைச் சுமந்தன. குளிர்மையைப் பரவவிட்டு நின்றன. பொதுவாக எல்லா மரங்களும் பூத்துக் காய்த்துக் கலகலத்தன. காகங்கள் ஆணும் பெண்ணுமாய் மரங்களிலே கூடுகளை அமைக்கத் தொடங்கி விட்டன.
மரங்களில் வசதியான கிளைகளைத் தெரிந்தெடுத்தன. பொருத்தமான சுள்ளிகளையும். தும்புகளையும் சேர்த்தன. தமது அலகால் மிக நேர்த்தியாகப் பின்னிக் கட்டின. குதிரைகள் பாய்ந்து திரிந்தன. குதிரைகளில் போய்க் குந்தின. தோழர்கள் தம்மைத் துப்பரவு செய்ய வந்துவிட்டார்கள் என்று சந்தோசித்தன. அவை உண்ணிகளைப் பிடுங்கின. அத்துடன் குதிரையின் மயிர்களையும் பிடுங்கின. அம்மயிர்களைக் கூடுகளில் பதமாய் வைத்துப் பின்னின. கூடு மெத்தையாக இருந்தது. தமது குஞ்சுகளுக்கு இதமளிக்கும் வண்ணம் கூடுகளை அமைத்தன.
காகக் கூடுகளைக் குயில்கள் பார்த்து வந்தன. எங்கும் குயில்களின் கூவல்கள். ஒவ்வொன்று ஒவ்வொரு திசையில் இருந்து கூவின. ஏட்டிக்குப் போட்டியாகக் கூவத்தொடங்கி விட்டன
இரண்டு குயில்கள் பதுங்கியிருந்தன. “ஒரு கூட்டைப் பார்த்து வாங்க. பெண்குயில் கூறியது. நமக்கு முன்னால் இருக்கும் கூடு நல்லது. அந்தக் காகங்கள் அழகாகக் கூடுகள் கட்டியுள்ளன. கொஞ்சம் பொறு. அவை வெளியே போகும். அப்போது உள்ளே போய் முட்டையை வைத்துவிட்டு வா. அதுவரை பொறுமையாக இரு.” ஆண்குயில் கூறியது.
வேம்புகளில் காகங்களின் ஆட்சி. பெண்காகம் கூட்டில் இருக்கும். முட்டைகள் இடும். ஆண்காகம் உணவு தேடப்போகும். பெண்காகம் வெளியில் போனால் ஆண் காகம் முட்டைக்குக் காவல் இருக்கும். குயில்கள் குதூகலித்துப் பாடும். அந்தப் பாடல்களைக் காகங்கள் காது கொடுத்துக் கேட்கும்.
“கூட்டை விட்டு வெளியே வா? கொஞ்சநேரம் கதைத்து உறவாடுவோம்”. ஆண்காகம் வேறு கிளையில் இருந்து அழைத்தது. பெண்காகம் அக்கம் பக்கம் பார்த்தது. மெதுவாக ஆண்காகத்திடம் வந்தது. பக்கத்தில் இருந்தது. பெண்காகத்தின் இறக்கைகளைக் கொதிவிட்டது. கொஞ்சம் சுகமாக இருந்தது.
“இந்தக் குயில்களை நம்ப முடியாது. அவை நமது கூடுகளில் வந்து முட்டையிடும். அதன் முட்டைகளை அடையாளம் காணமுடியாது. அவற்றின் முட்டையும் எங்கட முட்டையைப்போல்தான் இருக்கும். நாம்தான் கஸ்டப்பட்டுக் குஞ்சுகளைப் பொரிக்க வேண்டும். அவற்றுக்கு உணவூட்டிக் காப்பாற்றவும் வேண்டும். குஞ்சுகளுக்குப் பறவை காட்டி வளர்க்கவும் வேண்டும். இது நமக்குத் தேவைதானா”? பெண்காகம் கேட்டது. அப்போது குயிலின் கூவல் காற்றில் கலந்து வந்தது. காகங்கள் காது கொடுத்துக் கேட்டன. சற்றுநேரம் அமைதி காத்தன. பெண்காகத்துக்கு ஆறுதல் கூறியது.
“நீ ஏன் கவலைப்படுகிறாய். எல்லாம் புண்ணியம்தான். கடவுள் நமக்கு இட்ட கட்டளையாகக் கொள்வோம்”. ஆண்காகம் அறிவுரை கூறியது. கதையோடு கதையாக “ஏன் நமது குரல் இனிமையாக இல்லை”? ஆண்காகம் கேட்டது.? “யார் சொன்னது? நீங்க பாடினால்தான் எனக்குச் சந்தோசம். நமது பாடல் நமக்கு இனிக்கும். எங்க பாடுங்க”? பெண்காகம் கேட்டுத் தனது உடலைக் கோதிவிட்டுச் சிலிர்த்தது. ஆண்காகத்துக்கு உற்சாகம் பிறந்து விட்டது.
ஆண்காகம் குரலெழுப்பிப் பல்வேறு குரல்களில் பாடியது. ‘கா…ஆ…ஆ’ பாடியது. “சா… எவ்வளவு இனிமையாக இருக்கிறது”. பெண்காகம் பாராட்டியது.கதை நீடித்தது. மெல்லிய காற்று வீசியது. வேம்பின் இலைகள் சலசலத்தன.சந்தர்ப்பத்தைக் குயில்கள் பார்த்திருந்தன. ஆண்குயில் பெண்குயிலைத் தூண்டியது. பெண்குயில் மெதுவாகப் பறந்து வந்தது. சூழலைக் கவனித்தது. காகத்தின் கூட்டைப் பார்த்தது. சடுதியாகப் புகுந்தது. கண்ணிமைக்குமுன் முட்டையை விட்டதும் பறந்தது. ஆண்குயில் அதனைத் தொடர்ந்து பறந்தது.
அப்போதுதான் ஆண்காகம் கண்டது. தமது முட்டைகளைக் குடிப்பதற்குத்தான் குயில் வந்தது என்று எண்ணியது. குயிலைத் துரத்திக் கொண்டு போனது. ஆனால் குயில் பறந்து விட்டது.
அந்தக் கூட்டுக்குள் முட்டைகள் இருந்தன. எத்தனை முட்டைகளை விட்டோம் என்ற நினைவு காகத்துக்குத் இருப்பதில்லை. கூட்டில் முட்டைகளைப் பார்த்தது. முட்டைகள் இருந்தன. “சரி இனி நீ வெளியில் வராதே. நான் உனக்கு உணவு கொண்டு வருகிறேன்”;. கூறிக்கொண்டு ஆண்காகம் பறந்தது. பெண் காகம் கூட்டில் இருந்து அடை காத்தது. அடைகாப்பது இலகுவான செயலல்ல. பொறுமையாக இருந்து பாதுகாக்கவேண்டும். முனிவர்களின் தவம் போன்றது. ஒரு குழந்தையைப் பெறும் அவஸ்த்தையை ஒத்தது.
நாட்கள் உருண்டன. கூடு களைகட்டியது. குஞ்சுகள் முட்டைகளில் இருந்து எட்டிப்பார்த்தன. காகங்களுக்குக் கொண்டாட்டாம். விடியவும் எழுந்திருந்து குஞ்சுகளைப் பார்க்கும். அவற்றின் வளர்ச்சியைக் கண்டு களிக்கும். குஞ்சுகளின் சின்னஞ்சிறு இறக்கைகளைக் கோதிவிடும். அவற்றின் பசியைப் போக்குவதற்குப் பறந்து பறந்து உழைக்கும்.
கிடைக்கும் உணவைப் பதம் பார்த்துத் தேர்ந்து எடுக்கும். சிந்தாமல் வாயுனுள் பாதுகாப்பாகக் கொண்டு வரும். தாயும், தந்தையும் மாறி மாறி உணவை ஊட்டும். ஓய்வில்லாது உணவுதேடும் படலம் நடந்தது. குஞ்சுகள் இப்போது வளர்ந்து விட்டன.
குங்சுகள் கூட்டைவிட்டு வெளியில் வந்தன. கொப்புகளில் இருந்தன. ஒற்றுமையாகக் கூடிக் குலவின. காகங்கள் எந்தவித பேதமுமின்றிப் பாதுகாத்தன. அடிக்கடி உணவைக் கொண்டு வந்து ஊட்டின.
இரண்டு குஞ்சுகள் வித்தியாசமாக நடந்து கொண்டன. நிறத்திலும் குணத்திலும் மாற்றம். வளர்ந்த குஞ்சுகள் அதனை உணர்ந்து கொண்டன.
இரண்டு குஞ்சுசுகளின் கண்கள் சிவப்பாக இருந்தன. நிறத்தில் ஓரு குஞ்சு வித்தியாசமாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல குரலிலும் வித்தியாசம் தெரிந்தது. காகம் உணவைக் கொண்டு வந்தது. பெரிய காகக்குஞ்சு தாயைப் பார்த்தது. “அம்மா எனக்கொரு சந்தேகம். உண்மையில் அந்த இரண்டு குஞ்சுகளும் எனது சகோதரர்களா? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.” உணவூட்டும் தாயிடம் கேட்டது.
“அம்மா ஓகு குஞ்சு நிறத்தில் வித்தியாசமாக இருக்கிறது. இது உங்களுக்கு விளங்கவில்லையா”? அடுத்த குஞ்சு புறுபுறுத்தது. “பிள்ளைகளா! எனக்கு நீங்கள் எல்லாரும் பிள்ளைகள்தான். நான் அவர் வேறு, இவர்வேறு என்று பார்ப்பதில்லை. நான் அடைகாத்தேன். அடைகாப்பது தவம் செய்வதுபோலொரு விரதம். எனது உடல் சூட்டை முட்டைகளுக்கு ஊட்டவேண்டும். அந்தக் கணகணப்பில் உங்களின் உடலுறுப்புக்கள் உருவாகின்றன. முட்டைக் கோதுகளை உடைத்துக் கொண்டு நீங்கள் வெளிவருவீர்கள். எல்லோரும் எனக்குப் பிள்ளைகள்தான். பிள்ளைகள் எங்களுக்கு உதவவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. பருவம் வந்ததும் ஆளுக்கொரு திசையில் பறந்து விடுவீர்கள். என்னால் வளர்க்கப் படுகின்ற பிள்ளைகள் அனைவரும் எனது பிள்ளைகளே. நீங்கள் பேதம் பார்க்காது வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.” தாய்க்காகம் புத்திமதி கூறியது.
குயில் குஞ்சுகள் காது கொடுத்துக் கேட்டன. “நான் கறுப்பாக இருக்கிறேன். ஆனாலும் ஏன் எனது கண்கள் சிவப்பாக இருக்கின்றன. குரல் வித்தியாசமாக உள்ளது”? கறுத்த குயில்குஞ்சு மனதுக்குள் கேட்டுக் கொண்டது. புள்ளிக்குஞ்சு அவை பேசுவதை கேட்டது.
“எனக்கேன் புள்ளிகள் உள்ளன”.? கறுத்தக் குஞ்சுவிடம் கேட்டது. “நீ ஆண். அதனால் புள்ளிகள் உள்ளன. நான் பெண். அதனால் புள்ளிகள் இல்லை. நாம் காகத்தின் குஞ்சுகள் இல்லை. நாம் இருவரும் குயிலினம். “உண்மையில் நாங்க யார்? எங்கள் தாய் தந்தையர் யார்? எங்களுக்கு என்று ஒரு கூடு இல்லையா?” குஞ்சுகள் மனம் வெதும்பின. அந்த மரக்கிளையில் குயில்கள் வந்திருந்தன. அவற்றைக் குஞ்சுகள் கண்டு கொண்டன. “ஏய்! அங்கே பார். நம்மைப் போல் உடலமைப்பு. அவங்கதான் நமது சொந்தக் காரர்ர்களோ? ஆண்குயிற் குஞ்சு பேசியது. அப்படிச் சொல்வதற்கே வெட்கமாயிருக்கு. முட்டையிடுவது அவங்க. அடைகாத்துக் குஞ்சு பொரித்து வளர்ப்பது இவங்களா? என்ன பிறவிகளோ? ஏன் பிறந்தோமென்று இருக்கிறது. பெண்குயில் குஞ்சு கூறியது.
தாய்க்காகம் உணவோடு வந்தது. குஞ்சுகள் சிறகுகளை விரித்தன. ஆர்வத்தோடு வாயைத்திறந்து நின்றன. காகம் உணவை வாய்க்குள் திணித்தது. குஞ்சுகள் உண்டன. அம்மா! “நாங்க உங்கட குஞ்சுகள் இல்லையா”? குயில் குஞ்சுகள் கேட்டன. நீங்களும் எங்கட குஞ்சுகள்தான். இவ்வளவு காலமும் அடைகாத்துப் பாதுகாத்தேன். இப்போது உணவு தேடி ஊட்டுகிறேன். நீங்கள் வளர்ந்து பெரியவர்களானதும் புரிந்து கொள்வீர்கள். இப்போது உண்ணுங்கள்”. உணவைக் கொடுத்தது.
குயில்கள் உற்றுக் கேட்டன. பெண்குயில் இயற்கையையின் நியதியை எண்ணி வருந்தியது. “கவலைப் படாதே. இதனை மாற்ற முடியாது. நமு சந்ததி இதனையே தொடரும். நமக்குப் பிள்ளைகளை வளர்க்கும் பாக்கியத்தை இறைவன்தான் தரவேண்டும். அதற்காகக் அவனை வேண்டுவோம். நான் முதற்குரலை எழுப்புகிறேக். இசைகூட்டிக் கூவியது.
குயிலின் கூவலைக் கேட்டதும் காகத்துக்குக் கொபம் வந்தது. கா..கா என கரைந்தது. சுற்றிவரக் காகக்கூட்டம் சேர்ந்து விட்டது. வா..போவோம். காகங்கள் கூடிவிட்டன. தப்ப முடியாது. கூறிக் nஅகாண்டு பறந்தன. அவற்றகை; காகங்கள் பாதி வழிவரை துரத்தின. பின் திரும்பி விட்டன.
குஞ்சுகள் வளர்ந்து விட்டன. கூட்டுக்குள் அவை தங்குவதற்கான இடம் போதாதிருந்தது. குஞ்சுகளை கிளைகளில் தங்குவதற்குப் பழக்கின. கூடு வெறுமனே கிடந்தது. பறக்கத் தொடங்கி விட்டன. ஆளுக்கொரு திசையில் பறந்து பார்த்தன. தாய்க் காகம் போகும் இடங்களுக்குக் குஞ்சுகளும் சென்றன. காகக்குஞ்சுகள் குதூகலித்துக் “கா..கா” என்று இரைந்தன. குயில் குஞ்சுகளின் குரலில் வித்தியாசம் வந்தது. அவை கொஞ்ச நாட்கள் மௌனம் காத்தன.
ஒரு விடியற்காலை. ஆண் குயில் குஞ்சு கூவியது. கேட்பதற்கு இனிமையாக இருந்தது. பெண்காகம் அவற்றின் பக்கத்தில் வந்திருந்தது. “அம்மா” என்றன. காகம் அன்போடு அவற்றைப் பார்த்தன.
“இன்றிலிருந்து உங்கள் உணவை நீங்களே தேடிக் கொள்ளுங்கள். உங்களுக்கு விரும்பிய மரங்களில் தங்கலாம். என்னால் உணவு கொண்டு வர முடியாது. வயது போய்விட்டது. களைத்து வந்த காகம் கூறியது. தாய்க்காகம் ஒரு கிளையில் இருந்தது. ஆண்காகமும் வந்திருந்தது. கலங்கியவாறு குஞ்சுகள் பறந்தன. அவை அந்தப் பக்கம் வரவே இல்லை.
தாய்க்காகம் நோய்வாய்ப் பட்டது. ஆண்காகம் இரை கொண்டு வந்து கொடுத்தது. ஒரு நாள் தாய்க்காகம் மரத்தில் இருந்து கீழே விழுந்தது. விழுந்தது விழுந்ததுதான். அதன் கதை முடிந்து விட்டது. செய்தி காகங்களுக்குப் பரவியது. காகங்கள் கூட்டங்கூட்டமாக வந்தன. பறந்து பறந்து கரைந்தன. அந்தப் பிரதேசம் இரைந்து கொண்டிருந்தது. அந்தக் காகத்துக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு யாருமில்லை. குயில்கள் அந்தப் பக்கமே வரவில்லை. காகங்கள் மட்டும் கரைந்தவாறு பறந்து திரிந்தன.

"என்ன தோட்டம் நிறைந்து காகங்கள் கரைகின்றன." கூறியவாறே கந்தப்பர் வந்தார். காகம் கீழே கிடப்பதைக் கண்டார். மண்வெட்டியைக் எடுத்துக் குழியைத் தோண்டினார். உடலைக் குழியில் போட்டு மூடினார். காகங்கள் பார்த்திருந்தன. அவை ஒவ்வொன்றாகக் கலைந்து போய்விட்டன. தூரத்தே மரக்கிளைகளில் இருந்து குயில்கள் கூவிக் கொண்டிருந்தன.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP