Sunday, July 31, 2011

வித்தகன் விபுலாநந்தன் - தொடர்ச்சி

வித்தகன் விபுலாநந்தன் - தொடர்ச்சி
யாழ்நூல் “ஐயிரண்டு ஆண்டுகளாக நேரங்கிடைக்கும் போதெல்லாம் முயன்று குருவருளினாலும், தமிழ்த் தெய்வத்தின் கடைக்கண் நோக்கினாலும், இவ்வாராய்ச்சி நூலினை ஒருவாறு எழுதிமுடித்தேன்”;. என வுpபுலானந்த அடிகள் யாழ்நூலில் கூறுவதன் மூலம் பத்தாண்டுகளுக்கும் அதிகமான காலமாக ஈடுபட்டு உழைத்துள்ளதை அறியலாம். பழமை வாய்ந்த இசைநூல்களை ஆராய்ந்து தமது பன்மொழித்திறத்தினாலும் கணித, விஞ்ஞான அறிவின் துணைகொண்டும் யாழ்நூலை எழுதியுள்ளார்.
யாழ்நூலில் அடிகள் ‘சரித்திர கால எல்லைக்கு எட்டாத காலத்தில் வில்யாழ் எனப் பெயரிய குழவியாய் உதித்தாள்.. மழலைச் சொற்பேசி, இடையர் இடைச்சியரை மகிழ்வித்தாள். சீறியாழ் என்னும் பேதைப் பருவச் சிறுமியாகி, பாணனொடும், பாடினியொடும்; நாடெங்கும் திரிந்தாள். ஏழைகளும் இதயம் களிப்பெய்த இன் சொற்கூறினாள். பின்பு ‘பேரியாழ்’ என்னும் பெயரோடு பெதும்பைப் பருவமெய்திப் , பெரும்பாணரோடு சென்றாள். குறுநில மன்னரும், முடிமன்னரும், தமிழ்ப்புலவரும், கொடை வள்ளல்களும். கேட்டு வியப் பெய்தும் வண்ணம். நயம்பட உரைபகர்ந்தாள்;. அதன்பின் மங்கைப்பருவம் எய்தி, அப்பருவத்துக்கு ஏற்ப. புதிய ஆடையும் அணிகலனும் பூண்டு, நாடக அரங்கத்திலே திறமை காட்டி, மடந்தைப் பருவம் வந்தெய்தலும், திருநீலகண்டப் பெரும்பாணரோடும், மதங்க சூளாமணியாரோடும், அம்மையப்பர் உறைகின்ற திருக்கோயில்கள் பலவற்றை வலம்வந்து, தெய்வ இசையினாலே அன்பருள்ளத்தினை உருக்கி, முத்தமிழ் விரகரால் பாராட்டப்பட்டு, அரிவைப் பருவம் வந்தெய்துதலும், அரசிளங்குமரிகளுக்கு இன்னுயிர் பாங்கியாகி, அவர்க்கேற்ற தலைவரை அவர்பாற் சேர்த்து. சீரும் சிறப்பும் எய்தி நின்ற யாழ் என்னும் மென்மொழி நங்கை இருந்தவிடம் தெரியாமல் மறைந்துபோனாள்”. என யாழ்நூலில் மனம் வருந்துகிறார்.
உழை, இளி, விளரி, தாரம். குரல், துத்தம். கைக்கிளை என்னும் ஏழிசையோசையின் சிறப்புக்களும் தனித்தன்மைகளும், நூலில் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் யாழினின்று எழும் இனிய இசை பற்றிய குறிப்புக்கள் இருப்பதாக பாயிரவியல் குறிப்பிடுகிறது.
பாயிரவியல், தேவாரவியல், ஒழிபியல், சேர்க்கை எனும் பகுதிகளாக யாழ்நூல் கொண்டுள்ளதை அவதானிக்கலாம். யாழ்நூலைப் புரிந்து கொள்ள மூவகை அறிவான இசையறிவு, கணித அறிவு, தமிழறிவு தேவையென பேராசிரியர் சி.மௌனகுரு கருதுவர். இசைநுணுக்கம் தெரியாதோரும் படித்து இன்புறும் பல பகுதிகளும் உண்டு என்று உடுவை தில்லைநடராசா கூறுவர். பழந்தமிழ் இலக்கியங்களில் யாழினின்று எழும் இனிய இசை பற்றிய குறிப்புக்கள் உள்ளதை பாயிரவியலில் குறிப்பிடுகிறது.
“புனத்திலும் பொழிலிலும், குன்றத்தின்மீதும், மருதத் தண்பணையிலும், முல்லைப் புறவத்திலும், கடற்கானலிலும், கான்யாற்றடைக் கரையிலும், அஞ்சுரத்திலும், மனையகத்திலும், தேவர்கோட்டத்தும், அறவோர் பள்ளியிலும், இசை வழங்கிய நாடு தமிழ்நாடு. மெல்லென்றிசைக்கும் தென்றலின் உயிர்ப்பிலும், இழுமென இழிதரும் அருவி நீரிலும், நறுமலரில் முரலுகின்ற தேன்வண்டின் ஒலியிலும், இசையினைக் கேட்டு உவந்த பழந்தமிழர், பாடன் மகளது மிடற்றுப் பாடலையும், பாணனிசைத்த யாழ்ப்பாடலையும், குழலோன் தந்த வங்கியப் பாடலையும் செவியாரக் கேட்டு இன்பமெய்தினர்” எனக்குறிப்பிடுவர்.
யாழ் உறுப்பியல்உறுப்பியல் பகுதியில் வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ், செங்கோட்டியாழ், சகோடயாழ் அகியவசற்றின் உறுப்புக்களின் அமைதிபற்றிக் கூறுகிறார். வில்வடிவில் அமைந்த யாழை வில்யாழ் எனக்கூறுவர். யாழ்வகைகளில் முதன்மை பெறுபவை பேரியாழ், மகரயாழ், சீறியாழ், செங்கோட்டியாழ் என்பவையாகும். இந்த நான்கு வகைகளைத் தவிர, நாரதயாழ், கீசகயாழ், தும்புரயாழ், மருத்துவயாழ் போன்றனவும் உள்ளன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த யாழ்க் கருவியின் படத்தைப் பாருங்கள். விபுலானந்தர் யாழ்நூலில் காட்டும் சில யாழ் வகைகளைப் படத்தில் காணலாம் ஏனைய இயல்கள்.யாழ்நூலில் இசை நரம்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற பகுதிகளில் இசை இலக்கணங்கள் பற்றிய செய்திகள் உள்ளன. இந்நூல் இசை இலக்கிய ஆய்வாகவும் அமைந்துள்ளது.பண்ணியலில் பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், நெய்தல்யாழ் என்ற நாற்பெரும் பண்களும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல், என்னும் நால்வகை வேறுபாடுகளினால் ஒவ்வொன்றும், நான்காகி பதினாறு பண்களாகி வரும் நிலை கூறப்படுகிறது..தேவார இயலில் 103 பண்களில் தேவாரப் பாடலில் காணப்படும் பண்கள், கட்டளை விபரங்களைக் குறிப்பிடுகிறார். பழந்தமிழிசை மரபிற்கும், வடநாட்டு மரபிற்கும், அமைந்த தொடர்பு நிலையையும் விளக்கியுள்ளார். யாழ் உறுப்பியலில் வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ், சகோடயாழ் எனும் ஐவகை யாழ்களை விபரிக்கிறார். வில் யாழுக்கு விளக்கம் தருவதற்காக இசைவான இடத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். “நண்பகற் காலமாகிறது. இடைச்சி ஒரு குடுவையில் பாலிட்டுக் காய்ச்சிய கூழ்கொண்டு வருகிறாள். இடையன் கூழுண்டு நீரருந்துகிறான். பின் கையிலே குழலை எடுக்கிறான். சில நாட்களுக்கு முன் அம்மூங்கிற் குழல் இடையனால் ஆக்கப்பட்டது. குழலிலே பாலைப் பண் வாசிக்கிறான். இடைச்சி கேட்டு மகிழ்கிறாள்.”
அவள்போனபின் வில் வடிவமான கருவியை எடுக்கிறான். அஃது ஒரு வில்யாழ். அக்கருவியையும் தானே செய்து கொண்டான். உள்ளே துளையுடைய குமிழ மரக் கொம்புகளை வில்லாக வளைத்து, மரநாரிலே திரித்த கயிற்றினை நாணாகக் கட்டியிருக்கிறான். ஒரே அளவான ஏழு விற்கள் இருக்கின்றன. நாண்கள் மாத்திரம் தாழ்த்தியும், உயர்த்தியும் கட்டப்பட்டனவாய், அளவு வேறுபட்டிருக்கின்றன. இடையன் நரம்புகளைத் தெறித்து இசை யொப்புமையினையை ஆராய்கிறான்” எனக் காட்டுகிறார்.
தமிழ் நிகண்டு நூல்கள், சங்க இலக்கியங்கள், வடமொழிநூல்கள் ஆகியவற்றிலுள்ள யாழ் பற்றிய குறிப்புக்களோடு பிறதேசங்களிலும் தமிழ்க்குலத்தோர் வாழ்ந்து நாகரீகம் பரப்பினார்கள் எனவும், அந்நாடுகளில் யாழ்க்கருவிகள் போற்றப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார். யாழ்நூல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினால் 1947ல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினால் 1974 ல் வெளியிடப் பெற்றது. அதன்பின்னர் வெளிவந்ததற்கான சான்றுகள் கிடைத்தில.
‘சகோடயாழ்’ பலவழிகளிலும் சிறப்புடையது எனக் அடிகளார் குறிப்பிடுவர். “சிறப்பு வாய்ந்த கருவியின் இசையினை மீண்டுமொருமுறை தோற்றுமாறு செய்தல் தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கு சிறந்ததோர் ஏதுவாகும் என்கிறார்.‘சிறப்பு வாய்ந்த யாழ் எழுப்பும் ஒலி தமிழ் வழங்கும் இடமெல்லாம் ஒலிக்க வேண்டுமாயின் இசை ஆர்வலர் மத்தியில் ‘யாழ்நூல்’; என்னும் இனிய நூல் வலம்வரவேண்டும். இசைக்கலைஞர்கள் யாழ்நூலை நன்கு பயின்று மீண்டும் தமிழ் ஒலிக்கும் இடமெல்லாம் ‘யாழ்’ ஒலிக்க வகை செய்தல் வேண்டும்’ என்று உடுவை தில்லைநடரசா தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
யாழ்நூலை பல்கலைக்கழகத்தில் பாடநூலாகக் கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்களா? சுவாமி விலானந்தர் இசை நடனக்கல்லூரி பல்கலைக்கழக வளாகமாகத் தரமுயர்ந்துள்ளது. அவரது நூல்களைப் பாடநூல்களாக ஏற்றுக் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைச் செய்வோர் அவர் விட்டுச் சென்ற சேவையினைத் தொடர்பவர்கள் என்ற வரிசையில் சிறப்பார்கள்.
ஒரு வரலாறு முடிந்தது. ‘யாழ்நூல்’; அரங்கேற்றம் நிகழ்ந்து முடிந்தபின் சுவாமி விபுலானந்தர் இலங்கை திரும்பினார். பல்கலைக் கழகத்துப் பணியினை மேற்கொண்டார். அவரது உடல் நோய்வாய்ப் பட்டிருந்தது. ஓய்வு தேவைப்பட்டது. கொழும்பு மருத்துவ விடுதியிலே சிகிச்சையளிக்கப் பட்டது. எனினும் அது பயனற்றுப் போயிற்று. ‘யாழ்நூல்’; அரங்கேற்றம் நிகழ்ந்து நாற்பத்துநான்கு நாட்களே இப்பூவுலகில் வாழ்ந்தார். அவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகவே இருந்து 1947 ஜூலை 19ம் நாள் அவர் இவ்வுலகை நீத்தார்.
வவுனியா சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினர் ‘உள்ளக்கமலம்’ என்னும் மலரினை வெளியிட்டார்கள்.
அதில் ‘விபுலாநந்த அலை’ எனும் தலைப்பில் ஆலன் இப்படி எழுதியுள்ளார். “உடல்நலம் குன்றிய விபுலானந்தர் கொழும்பு மருத்துவ மனையில் ஓய்வெடுக்கிறார். அவரது உடல் களைப்புற்றுக் கிடக்கிறது. உள்ளம் உயிர் எங்கோ.. வெகுதூரத்தில் ..மட்டக்களப்பு வாவியினடியில் எழும் அந்த இசையை நாடிச் செல்கிறது. அவரது காதுகளில் ‘ச,ரி,க..ம.ப.த,நி’.. இசை பரவுகிறது.
‘நீல வானிலே நிலவு வீசவேமாலை வேளையே மலைவு தீருவோம்சால நாடியே சலதி நீருளேபாலை பாடியே பலரொ டாடுவோம்’
அந்த இசையோடு இசையாகி உயிர் பிரிகிறது. தமிழ்த்தாய் கண்ணீர் வடிக்கிறாள். தமிழ் பேசும் மக்கள் ஆறாத்துயரால்
அலைமோதுகின்றனர். மட்டக்களப்புப் புகைவண்டி நிலையத்தில் இருந்து சுவாமிகளது ஊனுடம்புப் பேழை ஊர்வலமாக வருகிறது. ஸ்ரீ இராமக்கிருஷ்ண சதுக்கத்தை அடைகிறது. அவர் உருவாக்கிய சிவானந்த வித்தியாலயத்தில், சிவபுரிக் கோட்டத்தில் கமலாலயத்தின் முன்னால் வீதியோரமாக ஆலமரம் உள்ளது. அந்த ஆலைநிழலில் சமாதியடைகிறது.
‘சிலம்பு தந்த இளங்கோபோல் யாழ்நூல் தந்த விபுலன்’ எனக்கூறிச் சாரிசாரியாக மக்கள் கூட்டம் அஞ்சலி செலுத்தி அலைமோதுகிறது”. எனக்குறிப்பிடுகிறார்.
அந்த இடத்தில் நினைவுச்சின்னமாக அழகிய சமாதி எழுப்பப்பட்டுள்ளது.
‘வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மா மலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது’.
என அச்சமாதியில் அவரது பாடல் பொறிக்கப் பட்டுள்ளது நான் மாணவனாக சிவானந்த வித்தியாலயத்தில் கற்கும்போது மணிமண்டபம் கட்டும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. குறிப்பிட்ட பழைய மாணவர்கள் ஒன்றுகூடினார்கள். அந்தக்காலகட்டத்தில் 1957ல் படித்துக் கொண்டிருந்த மாணவர்களும் சேர்ந்துகொண்டார்கள். ஒரு நாடகத்தைத் தயாரித்து மேடையேற்றினால் சிறிதளவு தொகை நிதியினை மணிமண்டபம் கட்டுவதற்குச் சேர்த்துக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
அதற்கேற்ப கல்லடி உப்போடை கிராமசபையில் எழுதுவினைஞராகக் கடமையாற்றிய திரு.கனகலிங்கம் கதைவசனம் எழுதிய ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தைப் பழகினோம். வீரபாண்டியக் கட்டப்பொப்மன் தமிழகத்தில் படமாக வருமுன்னமேயே விபுலானந்தருக்காக நாங்கள் நாடகமாக்கி அரங்கேற்றினோம். அதனை சிவானந்த வித்தியாலயத்தில் கற்று ஆரையம்பதியில் ஆசிரியராகவும் சிவானந்த வித்தியாலயத்தின் விடுதியின் பொறுப்பாளராகுவும் இருந்த திரு. நேசராசா என்ற சாமித்தம்பிதான் நெறியாள்கை

செய்தார். ஆனைப்பந்தி விவேகானந்த வித்தியாலய மாணவியரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு நகர மண்டபத்திலும், கல்முனை நகர மண்டபத்திலும் நிகழ்திப் பங்களிப்புச் செய்தமை எனது மனதில் இன்றும் நிறைந்து சிவானந்த வளாகத்தினுள் உள்ள மணிமண்டபம்.
இனிக்கின்றது. 1957 – 60 களில் விபுலானந்தருக்கு மணிமண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் படத்தைப் பாருங்கள்.
விபுலானந்தரின் நினைவுகள் தொடர்கின்றன.
சுவாமி விபுலானந்தரின் சேவையினைப் புரிந்தவர்கள் சிலரே இருந்தார்கள். அவர் மறைந்தபின்னரும் அவர் செய்த தியாகங்களை நினைத்துப் பார்த்தவர்கள் வெகு சிலரே. கிழக்கு மாகாணத்தில் அவரது சேவை அளப்பரியது. சுவாமி விபுலானந்தர் கிழக்கிலங்கையில் இல்லாதிருந்தால் இன்றைய மறுமலர்ச்சி சூனியமாக இருந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் நாவலரைப் போல், கிழக்கிலங்கையில் விபுலானந்தர் ஏற்றிவைத்த சுடர் இன்றுவரை பிரகாசிக்கிறது.
குறுமண்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட அருள் செல்வநாயகம் அவர்கள் சுவாமி விபுலானந்தரது ஆக்கங்களைத் தொகுத்தளித்தார். அவரே விபுலானந்தரது ஆக்கங்களை வெளியுலகினுக்கு அறிமுகப் படுத்தியவராக மதிக்கப்படுகிறார்.
விபுலானந்தர் நூற்றாண்டுச் சபை.
1992ல் ‘மட்டக்களப்பு சுவாமிவிபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை’ உருவாக்கம் பெற்றது. அச் சபையின் தலைவராக திரு. க.தியாகராஜா அவர்கள் அருந்தொண்டாற்றினார். திரு.க.தியாகராஜா அவர்கள் சுவாமி விபுலானந்தரினால் கட்டியெழுப்பிய கலைக்கோயிலான சிவானந்த வித்தியாலயத்தில் கற்றவர். சிவானந்த வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றியவர். வடக்குக் கிழக்கு மாகாணத்தின் மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும். கல்விச் செயலாளாராகவும் சேவை செய்தவர்.
அவரோடு தோளோடு தோள்நின்று உழைத்தவர்கள் பலர் அவர்களுள் வித்துவான் ச. இ. கமலநாதன், த.செல்வநாயகம். வ.சிவசுப்பிரமணியம். காசு. நடராஜா. பி.யுவராஜன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்களைத் தேடித் தொகுத்துள்ளார்கள். பல தொகுதிகளாக அவை நூலாக்கம் செய்யப்பட்டன. இவை பாராட்டப் படத்தக்கனவாகும். இவ்வறிஞர்கள் சுவாமி விபுலானந்தருக்கும் தமிழ்கூறும் நல்லுலகினிற்கும் செய்த மாபெரும் கைங்கரியமாகும்.
வவுனியாவில் விபுலானந்தர் நூற்றாண்டு விழா.
1992ல் வவுனியாவில் திரு. எஸ்.நவரத்தினராஜா பிரதேசக்கல்விப் பணிப்பாளராகக் கடமையினைப் பொறுப்பேற்றார். வவுனியமாவட்டப் பாடசாலைகளின் பௌதீக வளங்கள் நலிந்திருந்தன. திரு.எஸ்.நவரத்தினராஜா கல்விப் பணிப்பாளராகக் கடமை ஏற்றபின்புதான் வவுனியா மாவட்டப் பாடசாலைகள் மாடிக்கட்டிடங்களைக் கண்டன. சுமார் 58 புதியபாடசாலைகள் திறப்பதற்கு உதவியாக இருந்தார். அவரது காலத்தில் வவுனியாவில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினைத் தொடங்கினோம்.
அப்போது கொத்தணி முறை இருந்தது. ஒவ்வொரு கொத்தணியிலும் கலைநிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தோம். ஆசிரியர்களினதும், பாடசாலைப் பிள்ளகைளினதும் ஒத்துழைப்பு நிறையவே கிடைத்தது. பெற்றோரது வரவேற்பு பயனுள்ளதாக அமைந்தது. சுவாமி விபுலானந்தர் நிதியத்தை உருவாக்கினோம். ‘உள்ளக்கமலம்’ என்ற மலரை வெளியிட்டோம். இன்று அந்த நிதியம் பல ஏழை மாணவர்களுக்குப் பல்கலைக் கழகக் கல்வியைத் தொடர்வதற்கு உதவுகிறது. அதற்காக உழைத்த உத்தமர்களான திரு.க.சீனிவாசகம். அருட்சகோ.மடுத்தீன், திரு. மர்மலானந்தகுமார், திருமதி தெய்வச்சிலை முத்துக்குமாரசாமி. திரு. வீ. பேரம்பலம் திரு.ஜி.அலெக்சாந்தர், திரு. பத்மநாதன் ஆகிய கொத்தணி அதிபர்கள் என்றென்றும் நன்றிக்குரியவர்கள்.
இன்று காரைதீவில்…
காரைதீவில் இன்று அவர் பிறந்த வீட்டை நினைவாலயமாக மாற்றியுள்ளார்கள்.
அவரது இறுதி நினைவுகளாகப் பல படங்களையும் காணலாம். கரைதீவு மக்கள் அவருக்கு நினைவு மண்டபமும் நிறுவியுள்ளார்கள். காரைதீவில் எழுப்பப்பட்ட மணிமண்டபத்தின் முன்னால் விபுலானந்தரின் உருவச்சிலை உள்ளது. அவரது வீட்டின் ஒரு அறையில் விபுலானந்தரின் உருவச்சிலை உள்ளது.
சாரதா இல்லமும் இயங்கிக் கொண்டு பல நூறு மாணவியருக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் வாழ்ந்த வீடு நினைவாலயமாக மாற்றப்பட்டுள்ளது. அவரது நினைவுகளைத் தாங்கிய எச்சங்களாக இறுதிக் காலங்களில் எடுத்த புகைப்படங்கள் இருக்கின்றன. அவரது அறையில் இப்போது அவரது உருவச்சிலை உள்ளது. அவற்றின் படங்களை உங்களுக்காகத் தந்துள்ளேன். இலங்கையில் தமிழ் மொழித்தினமும் விபுலானந்தரும்
1968 முதல் இலங்கையில் கல்வி அமைச்சு தமிழ் மொழித்தினத்தினைப் பாடசாலைகளில் நடத்தி வருகிறது. பாடசாலை மட்டம், வட்டாரமுறை இருந்த காலத்தில் வட்டார மட்டம், மாவட்ட மட்டம் என விரிந்து தேசிய மட்டம் வரை தமிழ்மொழித் தினத்தை நடத்தினர். இந்நிகழ்வு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். முதல்நாள் பாடசாலை மாணவரிடையே போட்டிகள் நடைபெறும். இரண்டாம் நாள் நிகழ்வு பரிசளிப்பு நடைபெறும். சிறந்த நிகழ்வுகளை மேடையேற்றி பெருவிழாவாக எடுத்தனர். அமரர் வெற்றிவேல் சபாநாயகம் தமிழ்மொழிப்பிரிவின் பிரதிச் செயலாளர் நாயகமாக நியமனம் பெற்றார்.
அன்று முதல் சுவாமி விபுலானந்தர் அமரரான ஜூலை 19ம் திகதியை அகில இலங்கைத் தமிழ்மொழித் தினமாகப் பிரகடனப்படுத்தி பெருவிழா வாக எடுத்து வந்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பிலும், எனைய மலைநயக நகரங்களிலும் சிறப்பாக நடத்தி வந்தார். அவரது சேவையை மனங்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. திரு. வெ. சபாநாயகம்.
அவரைத் தொடர்ந்து திரு. அல்பிரட் அவர்கள் தமிழ் மொழிப்பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தார். அவர் இருக்கும்வரை வெகு விமரிசையாக நடத்தி வந்தார். ஆனால் அவர்களின் பின் அவை யாவும் போய்விட்டன.
வடக்குக் கிழக்கு மாகாணத்தில்
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்தபோது கல்வி அமைச்சும், மாகாணக் கல்வித் திணைக்களமும் திருகோணமலையில் அமைந்திருந்தன. தமிழ்மொழித்தின நடைமுறை சிறப்பாக இருந்தது. அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம் இரண்டு நாட்கள் மாகாண மட்டத்திலும் நடந்தது. திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, வவுனியா எனப்பல நகர்களிலும் கொண்டாடப்பட்டது. தமிழ் பேசும் மக்களின் மொழி. கலை இலக்கியப் பண்பாடு யுத்த சூழ்நிலைகளுக்குள்ளும் வெளிக் கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு மாகாணமட்ட தமிழ்மொழித் தினவிழாக்களில் பங்கு கொள்ளும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்குமிட வசதியுடன் உணவும் கொடுக்கப்பட்டது. போக்கு வரத்துக்குரிய கொடுப்பனவும் வழங்கப்பட்டன. இவை யாவும் அரச பணத்தில் நடைபெறவில்லை. தமிழ்ப்பற்றாளர்களின் தயவுடன் நடந்தேறின. அதற்கேற்பக் கனதியான விழா மலர்கள் வெளியிடப்பட்டன. திரு. க. தியாகராஜா அவர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளராக இருந்தார்.
தமிழ்மொழித்தின விழாச்சபை அவரது காலத்தில் உருவாக்கப்பட்டது.
திரு. க. தியாகராஜா
போசகராக மாகாணக் கல்விச் செயலாளர் இருந்தார். தலைவராக மாகாணக் கல்விப் பணிப்பாளர் செயற்பட்டார். பொருளாளராக கல்வி அமைச்சின் கணக்காளர் கடமையாற்றினார். செயலாளராக மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் செயற்பட்டார். திரு.க.தியாகராஜா கல்விச் செயலாளராக இருந்தபோது செல்வி. திலகவதி பெரியதம்பி அவர்கள் மாகாணக்கல்விப் பணிப்பாளராக இருந்தார்கள். தமிழ்மொழித் தினத்தினை நடாத்தும் பொறுப்பை மேலதிக மாகாணகக் கல்விப்பணிப்பாளர் திரு.ச.அருளானந்தம் ஏற்றார். ‘சுவைத்தேன்,’ ‘பார்த்தேன்.’ ‘மலைத்தேன்’ என மலர்களை வெளியிட்டார்.
அகில இலங்கைத் தமிழ்மொழித்தினப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதற்கெனத் தனியான விழாச்சபை இருந்தது. தலைவராக அப்போது மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. க. தியாகராசா இருந்தார். செயலாளராக திரு.ச.அருளானந்தம் இருந்தார். செயற்குழு உறுப்பினர்களாக அதிபர் திரு. வ.தங்கவேல் அவர்களும் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ஒ.குலேந்திரன் அவர்களும் இருந்தனர்.
முதலாம் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூபாய் 700 சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு வழங்கப்பட்டது. பயிற்றுவித்த ஆசிரியர்களையும். வெற்றிபெற உழைத்த அதிபர்களையும் பாராட்டிப் பரிசுகள் வழங்கப்பட்டன. அந்நிகழ்வு 1997 வரை ஆண்டுதோறும் ஒரு பெரு விழாவாகவே நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழித்தினம்
பல ஆண்டுகளின் தொய்வின் பின்னர் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஒரு புதிய பாதையில் பிரவேசித்துள்ளது. தமிழ் மொழி ‘செம்மொழி’யாகப் பிரகடணப் படுத்தப்பட்டு பெருவிழாவை தமிழகம் கொண்டாடியது. அந்த எழுச்சி கிழக்கிலங்கையில் பற்றிக் கொண்டது. தமிழ்மொழித் தினத்தை ‘தமிழ் செம்மொழி விழா’வாக எடுக்கத் திட்டமிட்டுச் செயற்பட்டது.
சுவாமி விபுலானந்தரின் நினைவு தினமான 19 – 07 – 2010 ல் அவர் பிறந்த காரைதீவில் ‘தமிழ் செம்மொழி தினவிழா’வினை கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களம் பெருவிழாவாக எடுத்துப் பெருமையைத் தேடிக்கொண்டது. ‘தமிழ் செம்மொழித் தினம்’ என்ற மகுடத்தின்கீழ் பெருவிழாவாக நிறைவேறியது.
இவ்வகையில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ.நிசாம் அவர்கள் பெருமைக்குள்ளாகிறார். அவரைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. அவரது பெருமுயற்சியும், பிரதிக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி. எஸ்.சிவநித்தியானந்தா அவர்களினதும், உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.விக்னராஜா அவர்களினது ஒத்துழைப்பும் மெச்சத்தக்கது. கல்முனையில் காமல் பத்திமாக் கல்லூரியில் தமிழ் மொழித்தினத்துக்கான முதலாம் நாள் நிகழ்வுகள் நடந்தேறின.
இரண்டு நாட்கள் இவ்வைபவம் நடைபெற்றது. முதல்நாள் மாணவர்களின் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வும் வழக்கம்போன்று பெருவிழாவாகவே நடைபெற்றது.
மாணவர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் எனப் பெருந்திரளானோர் கூடினார்கள். இன்னியம் காற்றில் பரவ ஊர்வலம் விழா மண்டபத்தை அடைந்தது.

நிகழ்சிகள் சம்பிரதாயங்களோடு தொடங்கப் பட்டன. இவற்றையெல்லாம் செய்யத்தான் வேண்டுமா? என்ற வினாக்கள் எழுப்பப்படுவது வழக்கமானவைதான். ஆனால் இவ்வாறு நாம் செய்ய மறந்தால் நமக்குப் பினனால் வரும் சமூகம் மறந்துவிடும். பண்பாடு அழிந்துவிடும். நமது பாரம்பரிய பண்பாட்டம்சங்களைப் பேணிப் பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைப்பது நமது தலையாய கடமையாகும்.
பாடசாலைகள்தான் பண்பாட்டுக் காவிகளான மாணவர்களை வழிப்படுத்துவது. அங்கேதான் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த வாய்ப்பு மாணவர்கள் ஊடாக, அவர்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்குத் தரப்படுகிறது. அதிதிகளாக வருபவர்களை ஆலத்தி எடுத்து வரவேற்பது தமிழர்தம் பாரம்பரியப் பண்பாடாகும். அதனை ஆசிரியர்கள் செயல்மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.
தமிழ் அன்னைக்கும், தமிழை வளர்க்கப் பாடுபட்ட சுவாமி விபுலானந்தருக்கும் மாலையணிவித்து, மங்கல விளக்கேற்றி விழா தொடங்கியது.
தமிழ்த் தாய் வணக்கத்தின்போது தமிழ் முஸ்லின் மாணவியர் கலந்து நின்று பாடினார்கள்.பார்வையாளர்கள் பெருந்திரளாக வருகைதந்து பெருமைப் படுத்தினர்
19 – 07 – 2010 அன்று சுவாமி விபுலானந்தரின் நினைவு தினமாகும். தமிழ்மொழித் தனத்தின் இரண்டாவது நாள் விழாவாகும். ‘தமிழ் செம்மொழி தினவிழா’வின் ஊர்வலம் காலை நீலாவணையில் இருந்து தொடங்கியது. அலங்கரிக்கப் பட்ட ஊர்திகளின் பவனி மெய்மறக்கச் செய்தது.
விழாவில் பங்கு கொண்டவர்களுக்கு விபுலானந்தரின் திருவுருவப்படம் கொண்ட சின்னம் அணிவிக்கப்பட்டது. அதன் வடிவமைப்புக் கண்ணைக் கவருமாறு இருந்தது. மக்கள் வீதிகளின் இருமருங்கும் நின்று விபுலானந்தரை வாழ்த்தினார்கள். வழிநெடுகிலும் மாவிலை தோரணங்கள், வண்ணக் கொடிகள் கொண்ட அலங்காரங்கள் மகிழ்ச்சியை ஊட்டின. “வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ”? என்று பாடியவாறு மக்கள் ஊர்வலம் வந்தார்கள். தங்களது பாரம்பரிய உடைகளில் அவர்களைக் கண்டபோது உள்ளம் உவகையால்
துள்ளியது.சுவாமி விபுலானந்தரின் திருவுருவப் படங்களைத் தாங்கிய ஊர்திகளின் தொடரணிகள் பவனிவந்தன. சிலப்பதிகாரத்தின் சில காட்சிகளும் ஊர்திகளில் உலாவந்தன. ஆச்சியர் குரவையை நினைவூட்டும் குரவையொலி காற்றில் மிதந்து பரவசமூட்டியது. முஸ்லிம் மக்களும் பேதமறக் கலந்து கொண்டு தமது பாரம்பரியக் கலைநிகழ்வுகளை நிகழ்த்தினர்.
இவ்விழாவுக்கு தமிழகத்தில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் பல அறிஞர்கள் வந்திருந்தனர். முனைவர் அறிவுடை நம்பி அவர்களளும், முனைவர் வெங்கடேஸ்வரனும் கலந்து கொண்டனர். தமிழுக்காகத் தொண்டாற்றிய நமது நாட்டுப் பேராசிரியர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.
சிறப்பாகத் தமிழ் முஸ்லிம் மக்கள் பெருந்திரளாகத் திரண்டிருந்தனர். ஊர்வலத்தில் கல்லூரி மாணவ மாணவியர்களின் இன்னிய இசை அற்புதமாக இருந்தது. காரைதீவில் ஊர்வலத்தினை வரவேற்க முன்வளைவில் மக்கள் கூடியிருந்தனர்.
ஊர்வலத்தில் வலய மட்டத்தில் வெற்றி பெற்ற பாடசாலைகளில் இருந்து கலந்து கொண்ட மாணவ மாணவியரும். ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பொதுவாக கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் பிள்ளைகள் அணியணியாகப் பவனி வந்தார்கள்.
சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் ஊர்வலம் வளைவைக் கடந்து வந்து கொண்டிருந்தது. தொடரணியாக வந்த ஊர்திகளின் பின்னால் பல பிரமுகர்களும் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் பெருந்திரளாக மக்களும் திரண்டு வந்தார்கள். ஊர்வலம் காரைதீவு விபுலானந்த கல்லூரியை அடைந்தது. அங்கு குழுமியிருந்தவர்கள் ஊர்வலத்தை வரவேற்று விழா மண்டபத்தினுக்குள் அழைத்துச் சென்றனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் அன்றைய நாள் முழுவதும் அந்நிகழ்வில் கலந்து கொண்டார். பேராசிரியர் முனைவர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் முனைவர் அறிவுடை நம்பி ஆகியோருடன் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ.நிசாம் அவர்களைப் புடைசூழ ஏனைய பிரமுகர்களை கல்லூரி வளாகத்தில் சூழ்ந்திருந்த மக்கள் வரவேற்றனர்.
இந்நிகழ்வு பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் படவேண்டிய தொன்றாகும். சிறப்பாக கிழக்கு மாகாண மாணவரிடையே ஒரு எழுச்சியைக் காணக் கூடியதாக இருந்தது. சுவாமி விபுலானந்தர் கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளி. அவர் ஆற்றிய சேவை அளப்பெரியது. உழைப்பால் உயர்ந்த உத்தமர். சான்றோரில் சான்றோன். தானும், தனது சுற்றத்தாரும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகின்ற இந்த உலகத்தில் தனது உழைப்பை சகல மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று பாடுபட்டவர். சிறப்பாக ஆநாதைகளாக யாரும் இருக்கக் கூடாது. அவர்களுக்கு உதவி உயர்த்திவிட வேண்டும் என்று சிந்தித்துச் செயலாற்றிய உத்தமர்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’; என்ற கூற்றுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடலுக்கேற்ப அவர் நிறுவிய கல்விக்கூடங்கள் இயங்கின. தமிழ் மொழியின் சிறப்பை வெளியுலகத்தினர் உணரும்படி செய்த பெருமையுடையவர். நடைமுறைப்படுத்தினார். இன மத, மொழி பேதங்களைக் கடந்து சேவையாற்றிய உத்தமர். ‘உள்ளக்கமலம்தான் உத்தமனார் வேண்டுவது’ என்று பறைசாற்றிய மகான் அவர். அவர் பிறந்த மண்ணில் அவரை நினைவு கூர்ந்த நிகழ்வு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியதொன்றாகும்.
2004ல் கடற்கோள் காரைதீவுக் கடற்கரையைக் காவு கொண்டது. மாற்றமாம் வையகத்தில் மாற்றம் வருவது இயல்பு. மீண்டும் அமைந்த விபுலானந்தா மத்திய கல்லூரி விழாக்கோலத்தில் ஆழ்ந்தது. ஒரு புயலின்பின் அமைதி வருவதுபோல, ஒரு துயரின் பின்னால் ஒரு மகிழ்வு உதயமாகும். சுவாமி விபுலானந்தர் விளையாடித் திரிந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் சமுத்திரமாகக் கூடியிருந்தனர். அந்த உத்தமரை நினைந்து கொண்டாடுவதற்காக தமிழறிஞர்கள் கூடியிருந்தனர். காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி புதுப்பொலிவு கொண்டிருந்தது.
மாணவர் அலையலையாகத் திரண்டு வந்து விழாவில் கலந்து கொண்டனர். கற்றவர்களும், கல்லாதவர்களும் சுவாமியின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்ந்தனர். அவர் பிறந்த மண் அவரினால் புனிதம் அடைகிறது. காரைதீவு மக்கள் பாக்கியசாலிகள். நமது நாட்டுப் பேராசிரியர்களான திரு. தில்லiநாதன். முனைவர். அ. சண்முகதாஸ் போன்றவர்கள் கௌரவிக்கப் பட்டார்கள். அதேபோல் வெளிநாட்டு அறிஞர்களையும் கௌரவப்படுத்தினார்கள்;.
“நாங்கள் புண்ணியவான்கள். அதனால்தான் சுவாமி விபுலானந்தர் பிறந்த இந்தப் புண்ணிய பூமியில் எங்களது கால் தடம்பதிக்கிறது. அவர் பிறந்த மண்ணைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்கிறோம். அவராலன்றோ நாங்கள் வந்தோம். அவரது நினைவாக ‘தமிழ் செம்மொழித் தின விழாவெடுப்பது’ போற்றுதற்குரியது. அதனை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் செய்திருக்கிறது.” என வெளிநாட்டுப் பேராசிரியர்கள் குறிப்பிட்டார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். அவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.இலங்கையின் தேசிய பத்திரிகைகள் பாராட்டி எழுதின.
நிறைவாக தமிழ்மொழி வாழ்த்து இடம்பெற்றது. தமிழ் முஸ்லீம் மாணவியர் ஒருங்கிணைந்து பாடினார்கள்.
“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழிய வே !வான மளந்த தனைத்தும் அளந்திடும்வண் மொழி வாழிய வே !ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசிஇசைகொண்டு வாழிய வே!எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ் மொழிஎன்றென்றும் வாழிய வே!சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்துலங்குக வையக மே!தொல்லை வினை தரு தொல்லை யகன்றுசுடர்க தமிழ்நா டே! “ பாடலைக் கேட்டதும் பாரதியின் கருத்தை ஆழமாகச் சிந்தித்தேன். “சுடர்க தமிழ்நா டே!” என்று தமிழ்நாட்டை மட்டும் ஏன் வாழ்தினார்? ஏன் இப்படிப் பாரதி பாடினார்? என்று எண்ணிப் பார்த்தேன். தமிழர் உள்ள இடமெல்லாம் தமிழ்நாடுதான் என்ற ஒரு உண்மையை வைத்துத்தான் பாடியிருக்கிறான். தமிழரிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டித்தான் இப்படிப் பாடியிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன்.
கிழக்கிலங்கையின் ஒரு மூலையில் இருந்து கொண்டும் தமிழ்நாட்டை வாழ்த்தும் ஈழத்தவரின் இதயத்துடிப்பை எந்த இந்தியத் தமிழர்களும் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ் மொழியால் உலகத்தில் வாழும் அத்தனை தமிழர்களையும் ஈழத்தவர்கள் நினைவு கொள்கிறார்கள். ஈழத்தில் இருந்து தமிழகத்தில் சேவை செய்த சுவாமி விபுலானந்தரின் புகழைத் தமிழர் உள்ளவும் போற்ற வேண்டும். தமிழகத்தார் சுவாமி விபுலானந்தரது சேவையை இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. காந்தியத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தியர்கள் இதுவரை சாதியை எதிர்த்துக் குரல்கொடுக்க வில்லை. பாரதியின் பாடல்களை தமிழர்களுக்குப் புரியவைக்க ஒரு விபுலானந்தர் தேவைப்பட்டார். இன்று தமிழகம் பாரதியின் பாடல்களை ஏற்றுக் கொண்டாடுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரலெழுப்பினார். அவர்களது வாழ்வில் ஒளியேற்படக் கல்விப் பயிர் விதைத்தார். அவருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அண்டிய மேட்டுக்குடியினர் நன்நீரைப் பெறத் தடைவிதித்தனர். அதனைப் பொருட்படுத்தாது உப்புநீரை உட்கொண்டு சேவை செய்தார். விபுலானந்தரின் சேவை தமிழகத்துக்கு ஒரு பாடமாக இருக்கும். அதனைப் பலர் இன்னும் புரியவில்லை. தமிழ் பேசும் சமூகத்துக்கு விபுலானந்தரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டலாகவும் எடுத்துக் காட்டாகவும் அமையும்.
ஈழநாட்டில் பிறந்து உலகத்துக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்த நமது விபுலானந்தரை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். இசையாராச்சியில் ஈடுபட்டுழைத்து யாழ்நூலை தமிழுலகத்துக்குத் தந்தவர். சாதி, சமய, இன, மொழி பேதங்களைக் கடந்து மனிதர்கள் எல்லோரும் ஒரே குலம். ஒருவனே தேவன் என்ற அறநெறியில் வாழ்ந்து காட்டிய உத்தமனை நாமெல்லோரும் போற்றி உலகத்தோருக்குப் புரியவைப்போம்.
தொடர்ந்தும் இக்கைங்கரியத்தை சுவாமி விபுலானந்தரின் நினைவு நாளாகக் கொண்டாட வேண்டும் என்பது தமிழ் பேசும் மக்களது பேரவாவாகும். இவற்றை வெறும் புகழுக்காக அல்லாது நமது மண்ணில் பிறந்து கல்விக்காகவும் மக்களுக்காகவும் தம்மைத் தியாகம் செய்த உத்தமர்களை மனங்கொண்டு வாழ்த்திப் போற்றவேண்டும். இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக இவை அமையவேண்டும்.இந்த வகையில் கிழக்கு மகாண முதலமைச்சர் மாண்புமிகு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் திரு.சி.தண்டாயுதபாணி அவர்களும், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். எம். ரி. ஏ. நிசாம் அவர்களும், அவர்களுடன் தோழோடு தோள் கொடுத்து உழைத்த அனைத்து அன்புள்ளங்களும் வெகுவாகப் பாராட்டபட வேண்டியவர்களே. என்றென்றும் நினைவில் கொள்ளவேண்டியவர்களே. அவர்கள் அனைவரும் பெருநன்றிக்குரியவர்கள் எனப் போற்றுவோம்.

நன்றி
இந்த நூலில் பல அறிஞர் பெருமக்களது ஆக்கங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் நிறையவே உண்டு. தனித்தனியே அந்நூல்களை அடிக்குறிப்பாக்கிப் போடமுடியாதுள்ளேன். தங்களது கருத்துக்கள் இடம்பெறுவதைக் கண்ணுற்றால் உங்களது ஆக்கங்களால் இந்நூல் பெருமையுறுவதாகப் பெருமனம் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆசிரியர்.

1 comments:

Rathnavel Natarajan August 4, 2011 at 7:44 PM  

தங்களது பதிவைப் படித்தேன்.
மற்ற பதிவுகளையும் அவ்வப்போது படிக்கிறேன்.
உங்கள் தமிழ் அழகு தமிழ். நாங்கள், எங்களது பிள்ளைகள் எழுதும் தமிழும், பேசும் தமிழும் ஆங்கிலம் கலப்பில்லாமல் இல்லை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள் ஐயா.

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP