வீட்டுக்கொருவர் ….
அப்பு அழுதவண்ணம் இருந்ததை எப்படிச் சொல்வது?.. பிள்ளைகள்… வீடு வளவு, மாடுகன்றுகள் என்று சொத்துக்கள் அனைத்தையும் எத்தனை வருசமாப் பொத்திக் காத்து வந்தார். அண்ணனை அவங்கள் வந்து கூட்டிப்போனபோது அவர் பட்ட பாடு… சொல்லமுடியாதது. அவன் இன்னும் வீடு திரும்பவில்லை. பெத்து வளர்த்து ஆளாக்கியெடுக்கப் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும் எத்தனை நாள் அம்மாவும், அப்பாவும் எங்களுக்காகப் பட்டினி கிடந்திருப்பாங்கள். அறிவழகன் குலுங்கி அழுதான். அம்மன் கோயிலுக்கு நேர்த்திக்காகக் கட்டியிழுத்துப் போன ஆட்டுக்குட்டியைப் போல அண்ணன் போனதை இன்னும் எண்ணியெண்ணி ஏங்கித்தவிக்கும் அந்தப் பெற்ற மனதின் துடிப்பைச் சொல்லில் வடிக்கேலாது. அந்தக் கவலையில் மூழ்கிப்போன அவருக்கு உள்ளவை யாவும் அழிக்கப்பட்டு விட்டன.…ஷெல்லடியினால் அவரது கண்முன்னாலேயே மாடுகள் உடல்சிதறித் துடித்துச் செத்தகாட்சியை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. வாய் பேசாத ஜீவன்கள் என்ன செய்தன? எல்லாவற்றையும் இப்படி..பறிகொடுத்து…யாரால தாங்கமுடியும்? அவரால நடக்கமுடியாது. உடலெங்கும் ஷெல்லடிக் காயங்கள். கொத்தணிக்குண்டின் நச்சுப்புகைபட்டு தோல் எரிந்து அவரின் உடல்நிலை மோசமாக இருந்தது. அவரது ஏக்கத்த எப்படிப் போக்குவது? பேயறைந்தமாதிரி… பங்கருக்குள் ஒரே திசையைப் பார்த்தபடி குந்தியிருக்கிறார். சுதந்திரமாய் நடமாடித்திரிந்த மக்களுக்குப் போக்கிடம் இல்லாது பங்கருக்குள்ளதான் சீவியம். புங்கருக்குள்ளே இருந்தவாறு ஆறிவழகனின் இதயம் அழுதது.
தனது அம்மாவைப் பார்க்கிறான். அம்மா தலைவாரிச் சீவி மாதங்களாகி விட்டன. எல்லாத் தாய்மாரும் அப்படித்தான். ஏன் இளம் கன்னியர்களும் இப்படித்தான். இந்த வன்னியில பங்கருக்குள்ள பட்டினியோட எத்தனை நாளைக்குக் கிடக்கிறது. வெளியில் தலைகாட்டினா ஷெல் விழுந்து தலைதெறிக்கும். நிலம் அதிரும். “கடவுளே பங்கருக்கு மேல ஷெல் விழாமக் காப்பாற்று. இந்த மக்களுக்கு வந்த மாயமென்ன? வற்றாப்பளைத் தாயே நீதான் துணை. கதிர்காமத்துக் கந்தா …கடம்பா …கதிர்வேலவனே.. ” அம்மாவின்ர வேண்டுதல் கந்தனுக்குக் கேக்குமா? இப்ப கதிர்காமத்துக் கந்தனுக்குத் தமிழ் விளங்குமா? அவருக்குச் சிங்களம்தான் விளங்கும். பூசை அர்ச்சனைகள் எல்லாம் சிங்களத்தில்தான் செய்கிறார்கள். தூரத்திலிருந்து ஒலிபெருக்கிச் சத்தம். கேட்கிறது. “என்ன சத்தம் அது. பிரித் ஓதுறாங்களோ?” கந்தையர் கைகளால் பொத்தியிருந்த காதுகளை விடுவித்துக் கேட்கிறார். “தங்கட பக்கம் வரட்டாம். பாதுகாப்புத் தாறங்களாம். சனங்களோட சனங்களா போவமே”? அறிவழகன் மெதுவாகச் சொன்னான்.
மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. “தம்பி பங்கருக்குள்ள வாற தண்ணிய அந்தப்பானைக்குள்ள கொஞ்சம் பிடி. வுடித்துக் குடிப்பம். குடிக்கவும் தண்ணியில்ல. பசிக்குத் தொண்டையையாவது நனைப்பம்”. அம்மா சொல்லவும் அறிவழகன் பானையை எடுத்து பங்கருக்கு வெளியே வைக்கிறான். மழைநீர் அதற்குள் சேருகிறது. ஷெல்லடி தொடருகிறது. இடிமின்னலுடன் சோவென மழை வாரியடிக்கிறது. பங்கருக்குள் இப்போது மழைநீர் நிறைகிறது. அதனை உள்நுழையவிடாது அறிவழகன் தடுக்கிறான். அவனையும் மீறி தண்ணீர் உள்ளே கசிந்து வருகிறது. இனியும் தாக்குப்பிடிக்கேலாது. “கந்தையாண்ணே ஷெல்லடி குறைந்ததும் வெளியில வாங்க. இனி ஒன்றும் செய்யேலாது. என்னால இனித்தாங்கேலாது. உடம்பெல்லாம் எரிகாயம் எரியுது. ஏப்படியென்றாலும் செத்துப்போறது நிச்சயம். அதிர்ஸ்டம் இருந்தால் யாராவது தப்பிப் பிழைக்கலாம். வாறது வரட்டும். நம்மட வரலாற்றச் சொல்லுறதுக்கும் ஆக்கள் வேணுந்தானே” சாமித்தம்பியர் விரக்தியின் விளிம்பில் இருந்து சொன்னார். அவரது உடலெங்கும் எரிகாயம். அதன் வேதனையைத் தாங்கமுடியாது தவித்துக்கொண்டிருப்பவர். அவர் சொன்னது சரியாகத்தான் பட்டது. செய்தி பங்கர்களுக்குப் பரவியது. புற்றுக்குள்ளிருந்து வெளிவரும் ஈசல்களைப்போல் சனங்கள் பிள்ளைகுட்டிகளோட மழையிருளில் பங்கரை விட்டு வெளியில் வந்தனர். மயான அமைதி. எங்கும் வெறிச் சோடிக்கிடந்தது.
கட்டிடங்கள், மரங்கள் ஒன்றையும் காணவில்லை. கேத்துக்கு வெளியாய் தெரிகிறது. மழைமேக மூட்டத்தின் ஊடாகத் தெரியும் வெள்ளிப் பொட்டுக்களின் வெளிச்சம் பூமியில் பட்டுத் தெறிக்கிறது. இருளில் இருந்து பழக்கப்பட்டால் இருளும் வெளிச்சமாகத்தான் தெரியும். இந்தச் சனங்களுக்கு இப்போது பழக்கமாகிவிட்டது. அதனால் பார்க்கும் இடமெல்லாம் வெட்ட வெளியாய் அந்த இருளிலும் தெரிந்தது. பள்ளங்களில் இருள்பதுங்கித் தொட்டந்தொட்டமாகத் தெரிந்தது. பள்ளம் படுகுழிகளாய், நிலம் பாறுண்டு கிடந்தது. ஷெல்விழுந்து வெடித்து உடலங்கள் சிதறிக் கிடந்தன. எங்கும் பிணவாடை. அந்த இருளில் உயிர் தப்பினால் போதும் என்ற உந்தல்வேறு. உயிர் தப்பியவர்கள் சாரிசாரியாக இடறிவிழுந்து நடந்தார்கள். கால்களில் இடறிய உடல்களைக் கடந்து நடந்தார்கள். குற்றுயிராய்க் கிடந்தவர்களின் முனகல் இருளில் கரைந்து போய்க்கொண்டிருந்தது.
எப்படி வாழ்ந்த சனங்கள் இப்படிச் சின்னாபின்னமாகி குற்றுயிருடனும், உயிரற்ற சடலங்களாகவும் சிதறிக்கிடக்கின்றனர். யாருக்கும் உதவக்கூடிய நிலையில் யாரும் இல்லை. ‘ஆண்ட இனமிங்கு மாண்டு கிடக்குதையோ’ அறிவழகனின் மனம் அங்கலாய்ந்தது. குலுங்கி ஏங்கிக்கலங்கியது. கண்கள் குளமாகிக் கண்ணீர் கொட்டியது. அவனது கண்கள் பொலபொலத்த வண்ணமிருந்தன. நடக்கும்போது ஒரு உடலில் காலிடறி விழுந்தான். அதனை அணைத்து முகத்தைப் பார்த்தான். அந்த உடலை அடையாளம் காணமுடியவில்லை. பிணவாடை அவனைக் கலக்கியது. அந்த உடலை அடக்கம் செய்யவும் அவனால் முடியாது. அங்கே சுணங்கினால் அவன் உயிரிழக்க நேரிடும “தம்பி யோசியாத ஐயா. நம்மலால ஒண்ணும் செய்யேலாது. எழும்பி ஓடிவா”. அவனை இழக்க அந்தப் பெற்ற மனம் இடம்கொடுக்கவில்லை. அம்மாவுக்குக் கொஞ்சம் துணிச்சல் இருந்தது. “எழும்பி கெதியா வா” அம்மாவின் குரலுக்குக் கட்டுப்பட்டான்.;. அப்புவை எப்படியும் கரைசேர்க்க வேண்டும். அவரது உயிரைக் காக்க வேண்டும். இவ்வளவு காலமும் எங்களை வளர்த்து ஆளாக்கிய அப்பு இப்படி ஆளாக்கப்பட்டு விட்டார். எழுந்து ஓடி தனது அப்பாவைத் தாங்கியபடி நடந்தான்.
உப்புநீர் சிற்றாறு குறுக்கிட்டது. ஆறு ஆழமற்றது. அதனைக்கடந்து சென்ற பழக்கமுண்டு. பலருக்குப் படுகாயங்கள். உடல்முழுவதும் எரிந்து மேற்தோல் உரிந்திருந்தது. குறுக்கோடிய ஆற்றைக் கடக்க வேண்டும். உப்புத்தண்ணீர் எரிகாயங்களைக் கழுவின. ஏரிச்சலெடுத்து உருண்டு துடித்தார்கள். திராணியுள்ளவர்கள் சிலரைச் சுமந்தும் நடந்தனர்.
அந்தப்பக்கம் ஷெல்லடியில்லை. ஆனால் சனங்களுக்கு நடக்கத் திராணியில்லை. பசியும், பட்டினியும், பயப்பிராந்தியும் அவர்களை வாட்டியெடுத்தது. ‘இனியொரு மனிதப்பிறவி வேண்டாமடா சாமி. அதுவும் தமிழனாகப் பிறக்கவே கூடாது. சபிக்கப்பட்ட இனம்.’ வுhய் முணுமுணுத்தவண்ணம் இருந்தன. காயப்பட்டவர்களும், உடல்நலம் குன்றியோரும் அதிகமாகக் காணப்பட்டனர். சிலருக்குக் காயங்களிலிருந்து சீழ்வடிந்து மணத்தது. முன்பின் அறிமுகமில்லாத இளைஞர்கள் காயப்பட்டவர்களையும், முதியவர்களையும் தூக்கிக் கரைசேர்த்தனர். அப்படித் தூக்கும்போது “ஐயோ அம்மா” எனக் கதறினர். வெடிச்சத்தங்கள் தூரத்தில் தொடர்ந்தன. “எல்லாரும் அப்படியே நிலத்தில குப்புறப் படுத்துக் கொள்ளுங்கோ. கட்டளைகள் பிறந்தன”. சனங்கள் நிலத்தோடு தம்மைச் சங்கமப் படுத்திக்கொண்டனர். சேறும் சகதியும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.;. போர் தொடங்கிய நாளிலிருந்து அவர்களுக்கு உறக்கம் என்பதே கிடையாது. சின்னஞ்சிறிசுகள் வீரிட்டன. அமைதியானதும் எழுந்து நடந்தனர்.
ஆற்றைக்கடந்து வடலிப்புதருக்குள் நுழைந்தனர். உயர்ந்த மரங்களைக் காணவில்லை. “பொழுதுபுலரும் வரை இங்கேயே கிடப்பம். விடிந்ததும் வெள்ளக் கொடியக்காட்டிச் சரணடைவம்’. கந்தையர் கூறினார். “இப்படியே இப்பவே போனால் நல்லதுதானே”? சாமித்தம்பி அவசரப்படுத்தினார். “அவங்களுக்கு யாரெண்டு தெரியும்? சுட்டுப்போட்டால்.. அவங்களிட்டத் துவக்கிருக்கு. இவ்வளவு தூரம் வந்திற்றம். பொறுத்த நாங்க கொஞ்சம் பொறுப்பம்.” எல்லோரும் அமைதியானார்கள். பசியும் களைப்பும் வாட்டியது. எல்லோரும் பட்டினியாலும். பயத்தினாலும் வாடி மெலிந்திருந்தார்கள். பட்டினி போட்டால் எவரும் சரணடையத்தான் செய்வார்கள். பண்டைய யுத்தச் சாணக்கியத்தில் பட்டினி நல்லதொரு ஆயுதமாகப் பயன்பட்டதாம். கொடுமையான யுத்தம் இது. நச்சுவாயு கலந்த குண்டுகளைப் போட்டுச் சாகடிக்கிறாங்கள். நாங்க என்ன எதிரிகளா? நாங்களும் இந்தநாட்டு மக்கள்தானே? ஏன் இப்படிச் செய்யுறாங்கள். ஆளுக்காள் கேட்டவாறே அப்படியே குந்தியிருந்தார்கள். அறிவழகன் மனதில் போராட்டம்.
விடிந்து கொண்டு வந்தது. கந்தையர் எல்லோரையும் உசார்படுத்தி எழுப்பி வரிசையில் நிற்கவைத்தார். வரிசை நீண்டு இரண்டு கிலோமீற்றர் நீளத்துக்கு நின்றது. சனங்களின்; கைகளில் பொலித்தின் பைகள் மட்டுமிருந்தன. ஆமிக்கரங்கள் இவர்களைக் கண்டிருக்க வேண்டும். தலைக்கு மேலால் வெடிகள் பறந்தன. சனங்கள் அலறியடித்துப் பதுங்கினர். கந்தையர் தனது தலையிலிருந்த துவாயை அவிழ்த்து தடியில் கட்டி சமாதானச் சமிக்ஞை கொடுத்தார். அவருக்கும் காயங்கள் இருந்தன. அவருக்கு மனத்தைரியம் கொஞ்சம் அதிகம். மனத்தைரியம் இருந்தால் உடல் உளவலிகளையும். பெரிய பிரச்சனைகளையும் சமாளித்துக் கொள்ளலாமாம். வெடிச் சத்தங்கள் குறைந்து ஓய்ந்தது. பொழுது புலர்ந்து வெயில் எறிக்கத் தொடங்கியிருந்தது. மழைபெய்த தரையில் சூரிய வெப்பம் ஏறித் தகித்தது. எரிகாயங்களில் எரிவு அதிகரித்தது. பசித்துக் களைத்த உடல்களில் இருந்து வியர்த்துக் கொட்டியது. இராணுவ வாகனங்கள் சுற்றி வளைத்தது. பயம் மக்களைக் கௌவிக்கொண்டது. கந்தையருக்குச் சிங்களம் கொஞ்சம் தெரியும். முன்னால் வந்து விசயத்தை விளக்கினார்.
வரிசையில் வரும்படி கட்டளைபிறந்தது. நடந்தார்கள். நடக்கத் தெம்பில்லை. சிலர் விழுந்து எழும்பினார்கள். வரிசை வளைந்து வளைந்து நகர்ந்தது. சனங்கள் வருவார்கள் என்று தெரிந்து இராணுவம் ஆயத்தமாகத்தான் இருந்தது. பிளாஸ்ரிக் தாங்கிகளில் தண்ணீர் வசதிகள் தெரிந்தன. லொறிகளில் உணவுப் பொட்டலங்கள் வந்தன. கொடுக்கத் தொடங்கினார்கள். உணவுப் பொட்டலத்தைக் கண்டதும் வரிசையாக வந்த மக்கள் வரிசை குழம்பி ஆளுக்காள் தள்ளுண்டு விழுந்து எழும்பி… பார்க்கப் பரிதாபமாகவும் கோபமாகவும் இருந்தது. “என்ன தமிழ் ஈழம் வேணாமா”? தவித்த முயல்களாக வந்தவர்களுக்கு சில சிப்பாய்களிடம் இருந்து நக்கலும் வந்தது. சில சிப்பாய்களுக்குச் சிரிப்பாக இருந்தது. அதே வேளை சிலருக்குப் பரிதாபமாகவும் இருந்தது.
இப்போது இந்தத் தமிழ் மக்கள் அடிமையாகி அகதிகளாகிவிட்டார்கள். ஒருபிடி உணவுக்காகவும், ஒதுங்கி உயிர்தப்புவதற்காகவும் அடங்கி ஒடுங்கி நின்றார்கள். புதுமாத்தளன் பகுதி இப்போது புகலிடமாகத் தெரிந்தது. பெயர்கள் பதியப்பட்டன. ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும் பிரிக்கப்பட்டார்கள். இளம் வயதினரை வேறாகப் பிரித்தெடுத்தார்கள். ஆடுமாடுகளைப் பட்டியில் அடைப்பதுபோல் கம்பிவேலி போட்டுக் காவலிருந்தார்கள். வெள்ளையர்கள் ஆபிரிக்காவினுள் புகுந்து பழங்குடி மக்களை வேட்டையாடிப் பிடித்துச் சங்கிலியால் பிணைத்துக் கப்பலில் கொண்டு போய் ஏலத்தில் விற்பார்கள். அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்று பார்க்க மாட்டார்கள். தாய் வேறு, தந்தை வேறு, பிள்ளைகள் வேறாக விற்பார்கள். ஏலத்தில் வாங்கியவர்கள் அமெரிக்க நாட்டில் அடிமைகளாகத் தமது பருத்தித்தோட்டத்தில் வேலை செய்யப்பணித்தார்கள். கூலியில்லை. அரை வயிற்றுக்குக் கூழ்கிடைக்கும் உரிமையில்லை. சவுக்கடி கிடைக்கும். அதனை அறிவழகன் நினைந்து கொண்டான்.
இப்பொழுது ஒரு நிம்மதியைக் கண்டார்கள். வெடிச்சத்தமில்லை. பங்கரும் இல்லை. ஆனாலும் முள்ளுக்கம்பி வேலிக்குள் சிறைவாசம். “இப்ப எங்கட கையில ஒண்டுமில்ல. வீசின கையும் வெறுங்கையுமாக. உயிர்தப்பி வந்து சேந்திட்டம். இந்தக் கம்பி வேலிக்குள்ள வந்தாச்;சி. என்ன செய்யப் போறாங்களோ தெரியாது. எத்தனை மாதங்களுக்கு இப்படிச் சிறையிருப்பம்”? தமக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். கொழுத்தும் வெயில் சுட்டெரித்தது. “எல்லாரும் ஏறுங்க வண்டியில”. சிங்களத்தில் கட்டளை வந்ததும் ஏற்றப்பட்டார்கள். புதுமாத்தளன் கடற்கரைக்கு பஸ்வண்டி சென்றது. அங்கிருந்து படகுகளில் கப்பலுக்கு மாற்றப்பட்டார்கள். கப்பல் புல்மோட்டை நோக்கி நகர்ந்தது.
இருள் பரந்துகொண்டு வந்தது. சிறிய கடற்படைத்தளம் புடவைக்கட்டு ஆற்றுமுனையில் இருந்தது. கப்பல் ஜெட்டியில் தரித்ததும் பயணிகள் இறக்கப்பட்டார்கள். புல்மோட்டை இல்மனைற் தொழிற்சாலையின் கட்டிடங்கள் தற்காலிக முகாமாக மாற்றப்பட்டிருந்தன. தற்காலிக ஆஸ்பத்திரியும் உருவாகிவிட்டது. காயப்பட்டவர்களையும், நோய்வாய்ப் பட்டவர்களையும் ஆஸ்பத்திரி பாரமெடுத்தது. காயப்பட்டவர்களை யாரும் பார்க்க முடியாது. இந்திய டாக்டர்கள் கடமையில் ஈடுபட்டனர். அறிவழகனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன இது? டாக்டர்களா இராணுவத்தினரா? அவனுக்குப் பரியவில்லை. டாக்டர்களின் இடுப்பிலும் பிஸ்ரல்கள். பயமாக இருந்தது.
பாடசாலைக் கட்டிடங்கள் நிரம்பி வழிந்தது. உடலாலும் உள்ளத்தாலும் நொந்த மக்கள் கூனிக்குறுகிக் கிடந்தனர். அகதிமுகாங்களாயின. அவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டன. சுற்றிவர ஆயுதமேந்திய இராணுவத்தினர் காவலிருந்தனர். இதில இயக்கத்தில் இருந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொழல் பயிற்சி அளிக்கப் போகிறோம். அப்படிப் பட்டவர்கள் தமது பெயரைத் தரவேண்டும். நாங்களாகக் கண்டுபிடித்தால் தண்டனைதான். ஆறிவிப்பபைக் கேட்டதுமு; இளைஞர் யுவதிகளிடையே ஓரு புயல் உருவாகிவிட்டது. பலர் தொழில்பயிற்சி பெறுவது நல்லது. சுயதொழில் செய்து வாழலாம். பெயர்களைப் பதிந்தனர்.
சற்று நேரத்துக்கெல்லாம் வாகனங்கள் வந்தன. பெயர்பட்டியல் வாசிக்கப் பட்டது. “ஏறுங்கள் வாகனங்களில்.” கட்டளை பிறந்தது. பார்த்துக் கொண்டிருந்த வாட்டசாட்டமான இளைஞர் யுவதிகளையும் பலாத்காரமாக வேறு வாகனங்களில் ஏற்றினர். அறிவழகனும் ஏற்றப்பட்டான். வுhகனங்கள் புறப்பட்டன. “சட்டி சுடுகுதென்று பயந்து நெருப்புக்குள்ள விழுந்தமாதிரிக் கிடக்கு. அவங்கட கட்டுப்பாட்டுல இருந்தம். வீட்டுக் கொருவர் வாங்க. என்று பிடிச்சிக் கொண்டு போனார்கள். பயந்து இங்கால, இவங்களிட்ட வந்தால் எல்லாரையும் கொண்டு போறாங்க. யாரிட்டச் சொல்வது.? தமக்குள் சொல்லிச் சொல்லி தேம்பினார்கள். தூரத்தே சரமாரியாக வெடிச்சத்தங்கள் கேட்டன. மிஞ்சியவர்களை ஏற்றுவதற்கு வெற்று வாகனங்கள் மட்டும் திரும்பி வந்தன. சமைத்த உணவு பாத்திரங்களில் அப்படியே கிடந்தது. அங்கு இருந்தவர்களுக்குப் பசிக்கவில்லை.