Friday, October 29, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
24
மரவட்டக்குளத்தில் தண்ணீர் போதாதிருந்தது. குடியிருப்புக் களில் மலசல கூடங்கள் வீட்டுத்திட்டத்தோடு கட்டப்பட்டன. கிணறுகள் தேவைப் பட்டன. படிப்படியதக அவை நிறைவேறி வந்தன. முன்னூறு இளைஞர்களில் பல பட்டதாரிகள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் ‘சேர்ந்து வாழ்’ நிறுவனம் தொழில் வசதிகளை அளித்தது. பொது வேலைகளில் படித்த இளைஞர் யுவதிகள் இணைந்து கொண்டனர். வீட்டில் பெண்கள் சுயதொழில்களில் ஈடுபட்டனர். கோழி வளர்ப்பில் பலர் ஈடுபட்டனர். மரவள்ளிக் கிழங்கைச் சீவி பொரித்துச் சிறு பொதிகளில் அடைத்தார்கள். தள்ளுவண்டியில் சிற்றுண்டிகளை வைத்துத் தெருக்களில் விற்றார்கள். அவர்களுக்கு நிதியுதவியினை சுய உதவிக் குழுக்களே உதவின. ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்திடம் நிதி சேர்ந்து விட்டது. முன்னூறு இளைஞர்களும் அந்த நிதியின் உதவியினால் தங்கள் காணிகளைத் திருத்தி விட்டனர். நிறுவனச் சேமிப்பு சுழற்சிமுறைக் கடன்களைக் கொடுக்க உதவியாக இருந்தது.
கயல்விழி தனிமையில் இருந்தாள். அவளது மனம் இருண்டு கிடந்தது. ஒரு இனந்தெரியாத தனிமையை உணர்ந்தாள். .ந்த மனமே இப்படித்தான். சற்றுநேரம் துள்ளிக்குpக்கும்; பின் தடார் என்று கீழே விழுந்து தவிக்கும் இதைத்தான் குரங்கு மனம் என்றார்களோ? அவளது இருண்ட மனதைப்போல் வானமும் இருண்டு கிடந்தது. வானில் நட்சத்திரப் பூக்களைக் காணவில்லை. கருமேகக் கூட்டத்தின் பவனி. மழைக்கான முன்னாயத்தம். காற்றுச் சில்லிட்டது. இடையிடையே சிறியதான மின்னல் கீற்றின் விளையாட்டு. தூரத்துக் கடலில் முழக்கத்தின் ஒலி. ஊர்மனையில் வாழமுடியாத சூழ்நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஏன் அந்த நிலை உருவாகியது? யார் இதற்கெல்லாம் காரணம்? அவள் மனம் வினாக்களின் விளைநிலமாகி, விடையை நோக்கிய பயணத்தில் இருந்தாள்.
திடீரென மழை பெய்யத்தொடங்கியது. அவளது சிந்தனை கலைந்தது. நல்ல வேளை வேலைகளை முடித்து ஒய்வாக இருக்கும்போது மழை பெய்தது. சுந்தரத்தார் ஏரிக்கரை வீட்டுக்கு வந்தார். தங்கமும் அங்குதான் இருந்தார். அருண் கயல்விழி சாந்தன் ராகினி சுலோச்சனா முக்கிய விடயங்களை ஆராய்ந்தனர். மங்கை அவர்களுக்குத் தேநீர் கொடுத்து விட்டு தேநீரோடு வந்து சேர்ந்தாள். தேநீரை எல்லாருக்கும கொடுத்தாள். குடித்துக் கொண்டே கதைத்தார்கள். மங்கை எப்போது அருண் கயல்விழி கதையை எடுப்பார்கள் என்று எதிபார்தாள். அவர்கள் பல கதைகளைக் கதைத்தார்களே தவிர இதைப்பற்றிக் கதைக்கவில்லை.
“என்ன அம்மா இந்தக் கயல்விழி எப்ப பார்த்தாலும் ஊர், மக்கள் என்று திரியிறா. ஒருக்கா கண்டிக்கக் கூடாதா”? அருணின் அம்மாவுக்குச் சாடை காட்டினாள். “ஓம் பிள்ள. நான் அதுபற்றிக் கதைக்கத்தான் வந்தனான். அண்ணரும் வரட்டும் என்றுதான் இருந்தன். இப்ப மங்கை நினைவு காட்டினது நல்லதாய் போச்சு”. அவர் தொடங்கினார். சுந்தரத்தாருக்குத் தூக்கிவாரிப் போட்டது.. திடீரென்று மகளை மாட்டிவிடப் பார்கிறாள் போலத் தெரியுது. யோசித்தார். அமைதியாய் இருந்தார். “அண்ணன் அருண் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே கயல்விழியை விரும்பி இருக்கிறான். அவவுக்கும் விரப்பம் இருக்குது. ஆனால் இரண்டு பேரும் அதைப்பற்றிப் பேசல்ல.” தொடங்கினார்.
“யார் முதல் சொல்வது என்ற தயக்கத்தில இருக்கிறாங்க. அருண் கலியாணம் செய்தால் கயல்விழியைத்தான் செய்வன் என்று பிடிவாதமாயிருக்கிறான். அவங்கட போக்கைப் பார்த்து முடிவுக்கு வரத்தான் வந்தனான். எனக்கு கயல்விழியில நல்ல விருப்பம். இந்த மங்கை ஒரேயடியாய் அம்மா கதையுங்க, கதையுங்க என்று முன்னும் பின்னும் அலையுது. உங்கட சம்மதத்த நான் அறிய வேணும். சம்மதம் என்றால் எப்பவும் அதை முடிச்சுப் போடலாம்.” முற்றுப்புள்ளி வைத்தார். தங்கத்துக்கு கொள்ளை மகிழ்சி. “தங்கச்சி அருணை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கன். உண்மையகச் சொன்னால் அருணை மருமகனாக அடைவதற்கு நாங்க குடுத்து வைச்சநாங்க”. உணர்ச்சி பொங்கச் சொன்னார்.
“எங்களுக்கு இரண்டு மகள். ஓன்று கயல்விழி. மற்றது இவள் மங்கை. இவளுக்கும் நல்ல இடத்தில பாத்திருக்கன். அவளுக்கும் தெரியும். அந்தப் பொடியன் நல்ல பிள்ள”. அவர் சொல்லும்போது மங்கை தனது நாக்கைக் கடித்துக் கொண்டாள். “இந்த அப்பா எப்படிக் கண்டு பிடித்தார். சரியான உளவாளி;போல் தெரிகிறது.” தன்னுடைய குட்டு அம்பலமாகி விட்டதே. அப்படியே குந்தியிருந்தாள். “கயல்விழி என்னிடம் ஒருநாள் சொன்னாள். அப்பா உங்களுக்கு இரண்டு பிள்ளயள். ஓன்று நான். மற்றது மங்கை. மங்கை சாந்தனை விரும்புறா, சாந்தனும் விரும்புறான். சாந்தனிடம் கயல்விழி கேட்டிருக்கிறாள். அவன் ஓமென்று சொல்லிப் போட்டான். இதுதான் இவங்க இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை” அவர் சொல்லிக் கொண்டே போனார். மங்கை அப்படியே தான் கீழே விழுவதை உணர்ந்தாள். அருணின் அம்மா குலுங்கிச் சிரித்தார்.
கலந்தரையாடல் முடிந்து அருண் வந்து கொண்டிருந்தான். அம்மா சந்தோசமாகச் சிரித்து மகிழ்வதை இன்றுதான் கண்டிருக்கிறான். அவனுக்குச சந்தோசம். “அம்மா இன்றைக்குத்தான் நீங்க சிரித்துச் சந்தோசமாய் இருப்பதைப் பார்க்கிறன். அவனும் சிரித்தான். “கயல்விழி எங்க”? மங்கை கேட்டாள். “இப்பதான் பொக்கற்றில இருந்து இறக்கி விட்டுட்டு வாறன்”. சிரிப்போடு சொன்னான். “இவன் இப்படித்தான். ஒரே தமாசாய் பேசுவான்.” அருணைப்பற்றி அம்மா சொன்னார். “இன்றைக்கு நல்ல மழை பெய்திருக்கு. குளத்தில் தண்ணீர் பிடித்திருக்கும். எல்லாம் சந்தோசமான செய்திதான்”. மங்கை சொல்லிக் கொண்டு கயல்விழியிடம் ஒடினாள்.
“மங்கை நாளைக்கு முதல்வேலை மரவட்டக் குளத்தைப் பாரக்கணும். எவ்வளவு தண்ணீர் பிடிச்சிருக்கும். எனக்குச் சந்தோசமாயிருக்கு”. கயல்விழி குதூகலித்தாள். “என்ர தோழிக்குச் சந்தோசம் என்றால் எனக்கும் சந்தோசம்தான். இன்றைக்குச் சரியான சந்தோசம்தான்”;. மங்கை சிரித்தபடியே சொன்னாள். அருண் குளித்தான். உடையை மாற்றி வந்தான். சுந்தரத்தார் சாப்பிட அழைத்தார். புறப்பட்டார்கள். சாப்பாட்டு மேசையை தோழிகள் சேர்ந்து தயார்ப் படுத்தினார்கள். “சாப்பிடுவமா பிள்ளயள்’. அப்பா குரல் கொடுத்தபடி வந்தார். “வாங்க எல்லாம் தயார். சாப்பிடுவம்.” கயல்விழி அழைத்தாள்.
“ஓன்றாக இருந்து சாப்பிடுவம்” மங்கையின் கட்டளை. “என்ன விஷேசம்”? அருணின் வினா. “நல்ல மழைபெய்திருக்கு”. கயலின் விடை. சுந்தரத்தார் சிரித்தார். “எல்லாம் நல்லபடி நடக்கும். அருணின் அம்மா ஜானகி சொன்னார். “நாங்க பல்கலைக் கழகத்தில் இப்படித்தான் சுற்றியிருந்து சாப்பிடுவம்.” மங்கை கூறினாள். “ஆனால் ஒன்று. ஆண்கள் வேறு பெண்கள் வேறாக இருந்து சாப்பிடுவம்’. அருண் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தான். “பல்கலைக் கழக வாழ்க்கை மறக்கமுடியாதது. அது ஒரு தனி உலகம். இளைஞர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்தி சுயமாக முடிவை எடுக்கும் காலம். எப்ப படிப்பை முடித்து வெளியில வாறமோ அன்று எங்களுக்கு நாங்களே விலங்கை மாட்டிக் கொண்டு வாறம். அதுவரை எதைப்பற்றியும் கவலைப் படுவது கிடையாது.” மங்கை விவாதித்தாள்.
“மங்கை இன்றைக்கு உனக்கு என்ன நடந்தது.”? கயல்விழி கேட்டாள். “ஒன்றுமில்லை. வழமையாகத்தான் இருக்கிறன். ஏன்? எதும் வித்தியாசமாய் இருக்கிறேனா”? கள்ளச்சிரிப்போடு கேட்டாள். “ஏதோ எனக்கெண்டா வித்தியாசமாத்தான் தெரியுது. ஒருக்கா மரவட்ட குளத்துக்கு அனுப்பியெடுத்தால் சரிவரலாம்.” கயல்விழி புன்னகையோட சொன்னாள். “பல்கலைக் கழக ராக்கிங்கை விட இது பொல்லாததா”? சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள். ராக்கிங் என்றதும் அருண் கயல்விழியைப் பார்த்தான். அவனுக்குப் பழைய நினைவு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டான். அவளுக்கு வெக்கமாயிருந்தது.
அவள் கதையை மாற்றினாள். “அப்பா அடுத்;த கிழமை விளையாட்டுப் போட்டியும், கலைவிழாவும் நடக்கப் போகுது. இந்த முறை நல்லாகச் செய்யவேண்டும் என்று அதிபர், ஆசிரியர்கள், பெற்றார் எல்லாரும் ஆர்வமாய் இருக்கிறார்கள். ஆயத்தங்கள் நடக்குது. மங்கை சொல்லலையோ?” கயல்விழி கேட்டாள். “மங்கைக்கு எங்க நேரம் இருக்கு. அவள் உனக்குப் பின்னாலதானே திரியுறா.” சுந்தரத்தார் சொன்னார். நாளைய திட்டங்களை கயல்விழி கூறினாள். சாப்பாடு முடிந்து ஓய்வெடுத்தார்கள்.
மரவட்டக்குளத்தில் தண்ணீர் நிறைந்துள்ள செய்தியைச் சுந்தரத்தார் சொன்னார். கயல்விழி துள்ளிக் குதித்தாள். இன்பபுரியில் பிரதேச செயலாளர் பத்து ஏக்கர் நிலத்தை ‘சேர்ந்து வாழ’; நிறுவனத்துக்கு வழங்கியிருந்தார். நிலத்தைப் பண்படுத்தி கூட்டுப்பண்ணையாக உருவாக்கியிருந்தார்கள். சுழற்சிமுறைப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டார்கள். கயல்விழி அடிக்கடி பண்ணையைப் பாரக்கப் போவாள். மாட்டுத் தொழுவம் இருந்தது. ஆட்டுப்பட்டி ஒருபுறம் இருந்தது. கோழிப்பண்ணை இன்னொரு புறம் இருந்தது. மரக்கறித் தோட்டம் செழித்திருந்தது. வேளாண்மை விளைந்து கிடந்தது. பண்ணையைப் பட்டதாரிகள் பராமரித்தார்கள்.
கயல்விழி பண்ணையில் உலா வந்தாள். பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தன. அவளைக் கண்டதும் அவை மகிழ்ந்து சரசரத்தன. அவற்றை அளைந்து மகிழ்ந்தாள்; படித்த இளைஞர்களின் முயற்சியாகப் பண்ணை காட்சி தந்தது. இன்பபுரி விவசாயக் குடியிருப்பாக மாறிவிட்டது. பால் சேகரிக்கும் நிலையத்தில் பலர் வேலை செய்தார்கள். அரிசி ஆலை நெல்குற்றுவதிலிருந்து எல்லாவற்றையும் அரைக்கும் ஆலையாகவும் இயங்கியது. பலர் தொழில் வாய்ப்பைப் பெற்னர். ஓவ்வொருவரும் தத்தம் இயலுமைக்கேற்ற தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். மது ஒழிப்பு வலுப்பெற்றது. வறுமை ஒழிந்திருந்தது. சேமிப்பு அதிகரித்திருந்தது.
கட்டைபறிச்சான் கிராமம் குதூகலிப்பில் ஆழ்ந்திருந்தது. பாடசாலை இரண்டும் ஒன்றாக விளையாட்டு விழாவை நடத்தின. மாவட்டத்தில் உள்ள அரச, அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள். மாலை ஊர் விழாக் கோலம் பூண்டிருந்தது. பாடசாலை விளையாட்டுத் திடல் பந்தலால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பாலர் முதல் பாட்டி பாட்டாவரை அனைவரும் சந்தோசத்தில் இருந்தார்கள். கிராமியக் கலைகள் அரங்கங்களை நிறைத்தன. இசையரங்கு மனங்களைக் கொள்ளை கொண்டன. கவிதையரங்கு கட்டைபறிச்சான் கனகசிங்கத்தின் தலைமையில் நடந்தது. இளைஞர்கள் கவிமழை பொழிந்தனர். யுவதிகளின் கும்மி. கோலாட்டம், கண்கவர் நடனங்கள் மெய்மறக்க வைத்தன.
நிறைவு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பிரதேச செயலாளர் தலைமை தாங்கினார். அவர் தனது நிறைவுரையை நிகழ்த்தினார். “இங்கு இந்தக் கிராமத்துக்கு வந்திருக்கும் பெரியவர்களைப் பாரக்கிறேன். சகல திணைக்களத் தலைவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். உங்களது உழைப்பு அவர்களை இங்கே அழைத்திருக்கிறது. கல்வியில் நீங்கள் காட்டும் அக்கறை தெளிவானது. சுயஉதவிக்குழுக்களின் சேவை மகத்தானது. ஒரு நாட்டின் பொருளாதாரத் தன்னிறைவை சுய உதவிக் குழுக்களால் முழுமை பெற வைக்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாக நீங்கள் இருக்கிறீர்கள். படித்தவர்கள் எல்லாரும் அரசாங்க உத்தியோக் பார்க்கவேணும் என்ற நிலை உங்களால் மாறியிருக்கிறது”. மக்கள் ஆரவாரித்தனர்.
“ஒரு பரட்சிகர மாற்றத்தை இந்தக் கிராமம் செய்துள்ளது. இங்கு படித்த பட்டதாரிகளின் உழைப்பு மகத்தான மாற்றத்தை உருவாக்கி விட்டிருக்கிறது. கல்வி நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அந்தச் சிந்தனை கட்டைபறிச்சான் கிராமத்தில் செயல்வடிவம் பெற்றுள்ளது. ஒரு கயல்விழி தனது பலத்தையும் பலவீனத்தையும் சீர்தூக்கி, பலவீனத்தையும் பயனுள்ளதாக்கி தன்னைப் போன்றவர்களைத் தன்னோடு இணைத்து மகத்தான செயற்திட்டத்தை வெற்றி பெறவைத்துள்ளார். அவரது கனவு நிறைவேறியுள்ளது. இன்றையப் பிரச்சினைகளில் பலியாக்கப் படுபவர்கள் இளைஞர்கள்தான்.”
“அவர்களையே தங்களது அழிவுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். இன்றைய நாசகாரச் செயல்களைப் புரிவதற்கு இளைஞர்களே துணைபோகிறார்கள். அவர்கள் விரும்பிப் போவதில்லை. அவர்களை வழிநடத்தக் கூடியவர்கள் இல்லை. அதனால் அவர்களைத் தீயசக்திகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இளைஞர்கள் வெறும் தண்டச்சோறு என்பதை கயல்விழியும், அவரது சகபாடிகளும் உடைத்தெறிந்து உள்ளார்கள். அவ்ரகளால் சாதிக்க முடியாதவை எவையும் இல்லை என்பனைக் காட்டியுள்ளாரகள்;. ஒவ்வொரு அரசாங்க அலுவலரும் தான் மக்களில் ஒருவர் என்று நினைக்க வேண்டும்”. ஆணித்தரமான கருத்தை முன்வைத்தார்.
“அந்த மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும். இந்த வைபவத்தில் ஓரு அரசியல்வாதிகளையும் காணவில்லை. உங்களுக்காக உங்களோடு தோள்கொடுத்து உழைத்தவர் எங்கள் கிராம அபிவிருத்தி அலுவலர் திரு.அருண். அவரது அயரா முயற்சியின் பயனால் பலநன்மைகள் கிடைத்துள்ளன. அவரையும் இயக்கி, உங்களையும் இயக்கி, இந்த கிராமத்தை புரட்சிகர மாற்றத்துக்குக் கொண்டுவந்த சக்தியாக செல்வி. கயல்விழியைப் பாரக்கிறேன். அத்துடன் சாந்தன், மங்கை. சாரதா, ராகினி, சுலோச்சனா அவர்களது குழுவினர் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.” பிரதேச செயலாளர் வாழ்த்தினார்.
இந்தக் கிராமத்தின் அபிவிருத்திக்குப் பல நிறுவனங்கள் பலவகைகளில் உதவிகளை வழங்கியுள்ளன. ‘சேர்ந்துவாழ்’ நிறுவனம் இன்று பெரியதொரு நிறுவனமாகப் பல வளங்களைக் கொண்டுள்ளது. அதற்கென வாகன வசதிகள் உண்டு. கிராம மருத்துவ மனைக்கு அம்புலன்ஸ் வண்டியை அன்பளிப்புச் செய்துள்ளதைப் பாராட்டுகிறேன். செல்வி. கயல்விழி, சூழவுள்ள கிராமங்களுக்கும் தனது நிறுவன சேவையை விரிவுபடுத்தி வருகிறார். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” தனது நிறைவுரையை முடித்தார்.
பெருவிழாவாக நடந்து முடிந்தது. ஊர்மக்கள் சந்தோசப் பட்டார்கள். பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு விருந்தளித்து வழியனுப்பி வைத்தார்கள். வீடுபோய் உடைமாற்றி ஆறுதலாக ஏரிக்கரை வீட்டின் முன் இருந்தார்கள். சுந்தரத்தார் ஜானகியிடம் அதனைக் கொடுத்தார். “மங்கை அந்த வெளிச்சத்தைக் கொண்டுவா பிள்ள. குரல் கொடுத்தார். மங்கை மின்குமிழைப் போட்டுப் பற்ற வைத்தாள். சுந்தரத்தார் கொடுத்த பேப்பரைப் படித்தார். “அண்ணன் எப்பகுடுக்கப் போறிங்க”? கேட்டார். “குடுத்திட்;;டன். பிழைதிருத்தம் பாரக்க எடுத்து வந்தனான். அதுதான் தந்தனான். நல்லா இருக்கா. பார்த்துச் சொல்லுங்க.” சுந்தரத்தார் கேட்டார். “நல்லா இருக்கு. இரண்டையும் ஒன்றாகச் செய்தால் நல்லது’ ஜானகி சொன்னார். “அப்படித்தான் போட்டிருக்கிறன்;”. ஒரு சிரிப்போடு சொன்னார். “மங்கை என்ன நடக்குது. ஓன்றும் விளங்கல்ல. பார்த்துச் சொல்லு”? கயல்விழி மங்கையை உசார்படுத்தினாள். “அவர்கள் இருவரும் என்ன கதைக்கிறார்கள்”? மங்கைக்கு ஒன்றும் விளங்க வில்லை. தங்கம் பேசாதிருந்தார்.
“என்ன மங்கை! வேவு பார்க்கிறமாதிரித் தெரியுது? இது பெரியவங்க பார்க்கிற விசயங்கள். நீங்க உங்கட பாட்டப் பாருங்க.” அலுத்துக் கொண்டது போல் ஜனகி பாசாங்கு செய்தார். “என்னம்மா கோவத்தோட சொல்லுற மாதரியிருக்கு. என்ன பிழை செய்தனாங்க”? மங்கை அழுவதுபோல் சொன்னாள். செய்வதெல்லாம் செய்துபோட்டு இப்ப கேட்கிறிங்க. சரி இந்தாங்க. இதக் கொண்டு போய்; படிச்சிப் போட்டுச் சொல்லுங்க. இரண்டு துண்டுகளைக் கொடுத்தார். மங்கை அதிர்ந்து விட்டாள். கயல்விழிக்கும் பதட்டமாக இருந்தது. “மங்கை இஞ்ச கொண்டுவா. பார்ப்பம்”. கயல் கூறிக்கொண்டு எழுந்தாள்.
இருவரும் வெளிச்சத்தில் அத்துண்டுகளை விரித்தார்கள். உள்ளமெல்லாம் படபடத்தது. படித்தார்கள். அவர்கள் இந்த உலகத்தில் இல்லை. ஆகாயத்தில் பறந்து திரிந்தார்கள். இருவரும்; திகைத்தார்கள். அம்மா அப்பா கால்களில் விழுந்தார்கள். அவர்கள் பிள்ளைகளைத் தூக்கி ஆசிரிவதித்தார்கள். அப்படியே ஜானகியின் கால்களில் வீழ்ந்து வணங்கினார்கள். அருண் அக்காட்சியைப் பாரத்து வேர்த்தான். செய்தி ஊரெங்கும் பரவியது.“அருமையான முடிவு”. சனங்கள் ஆரவாரித்தார்கள். மங்கை சாந்தனோடு சல்லாபித்திருந்தாள். அருணின் மார்பில் கயல்விழி சாய்ந்திருந்தாள். மங்கை மெதுவாக கயல்விழியின் அருகில் வந்தாள். அவளது கைகளைப் பிடித்தாள். “தோழி நான் அன்றும் சொன்னன். இன்றும் சொல்லுறன். உன்னை என் தோழியாய் அடைந்ததற்கு உண்மையில் முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டு;ம். என்ர கடனையெல்லாம் எனக்குத் தெரியாமல் அடைச்சிப் போட்டாய். சாந்தனையும். என்னையும் ஒன்று சேர்த்து வைத்தாய். இபபோதும் என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறாய”;. சொல்லிக்கொண்டு கண்ணீர் சிந்தினாhள். “நீ மட்டும் என்னவாம். எனக்காக எவ்வளவு போராடி யிருக்கிறாய். கஸ்டங்கள் வந்தபோது நீ என்னுடன் பக்கபலமாக நின்றாய். நானும் உன்னைப் போலதான். உன்னைத் தோழியாக அடைஞ்சது நான் செய்த தவப்பயன்தான். கலங்கியவாறு சொன்னாள்.
“வாழ்க்கை ஒரு போராட்டம். போராடியவர் வெற்றி பெறுவார். ஒரு நல்ல இலட்சியத்தை முன்வைத்து உழைக்க வேண்டும். ‘நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்’ என்று அயராது உழைத்தால் அது கைப்படும்”. அருண் சிரித்தபடி கூறிக்கொண்டான். “ பாரதி என்ன பாடினான்? மங்கை கேட்டாள். “நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்” என்று பாடினான். கயல்விழி பதிலளித்தாள். இன்பபுரி மக்களுக்கு இன்பத்தை வாரி வழங்குகிறது.
நிறைவு.

Read more...

Tuesday, October 26, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
23
நல்ல நிலவு வீசிக் கொண்டிருந்தது. சுற்றிவரக் கதிரைகள் போடப்பட்டிருந்தன. கயல்விழி பாயோடு வந்தாள். சில கதிரைகளை நகர்த்திவிட்டுப் பாயை விரித்தாள். மங்கையும் கயலும் பாயில் இருந்தார்கள். “எப்படி அம்மா கட்டைபறிச்சான்? பிடிச்சிருக்கா”? மங்கை தொடங்கினாள். “நான் முதல் கட்டைபறிச்சான் வந்திருக்கிறன். நாகதம்பிரான் திருவிழாவுக்கு வந்தனான். நல்ல ஊர். நல்ல மனங்கள் கொண்ட மக்கள்.” அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அருண் நிலத்தைப் பார்த்தபடி இருந்தான். சுந்தரத்தாரும் வந்தார். அருண் மெதுவாக எழுந்து அறைக்குள் சென்றான்.
கொஞ்சநேரம் கதைத்தார்கள். உறக்கம் வந்து கண்களைத் தாலாட்டியது. “அம்மா பயணக்களைப்பு. உங்களுக்கும் அலுப்பாக இருக்கும். நாளைக்கு எங்களுக்கு நிறைய வேலையிருக்கு”. மங்கை சொன்னதும் “அப்படி என்ன வேலை”? அருணின் அம்மா கேட்டார். அம்மா காலையில நானும் கயல்விழியும் பாடசாலைக்குப் போவம். அங்கிருந்து ஊர் விசயங்களையும் கவனிப்பம். அதோட எங்கட இளைஞர் விவசாயத் திட்டம் இருக்கு. அங்கே போவம் அந்த வேலைகளையும் கவனிக்க வேணும். இப்படி எக்கச்செக்கமான வேலை. ஒய்வெடுக்க ஏலாது. நூங்க ஓய்வெடுத்தா எல்லாம் ஓய்ந்துவிடும். மங்கை வளவளத்தாள். சுந்தரத்தார் மங்கையின் துணிச்சலான பேச்சைக் கண்டு சிரித்தார்.
“மங்கை நீ இஞ்ச அம்மாவோடு உறங்கலாமே? அம்மாவத் தனிய விடலாமா? சுந்தரத்தார் கேட்டார். “எனக்கு என்ன தனி. என்ர பிள்ளயும் இருக்கிறான். மங்கை நீங்க போய் தூங்குங்க. நாளைக்குக் கதைப்பம். அருணின் அம்மா கூறினார். “இல்லயம்மா நானும் உங்களோட வாறன். மங்கை போய் தனது படுக்கையை எடுத்து வந்தாள். அம்மாவுக்காக ஒதுக்கிய அறையில் தனது படுக்கையையும் விரித்தாள். கயல் நாளைக்குச் சந்திப்பம். நாங்க ஓய்வெடுக்கப் போறம். சோல்லிக் கொண்டு அறையினுள் சென்றாள். கயல்விழியோடு சுந்தரத்தார் பின்னால் சென்றார். தங்கம் சென்றார்.
நல்ல காற்று. நுளம்புத் தொல்லையும் இல்லை. இருவரும் படுக்கையில் சாய்ந்தார்கள். “அம்மா ஒன்று சொல்லுவன் கோவிக்கக் கூடாது. சொல்லட்டா”? மங்கை தொடங்கினாள். “நான் என் கோவிக்கிறன். சொல்லுங்க”. பதிலளிதார். “அம்மா எங்கட கயல்விழியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க”? கேள்வியாகக் கேட்டாள். “நல்ல பிள்ளைபோல்தான் தெரியுது. அவளுக்கென்ன”? விசாரித்தார். அவளைப்பற்றி அறியும் ஆவலில் மனதைக் கட்டுப்படுத்தி உசாரானார். “கயல்விழி தங்கமான பிள்ள. அவமேல அருணுக்கும் விருப்பமிருக்குப் போல் தெரியுது. கயலுக்கும் விருப்பம் இருக்கு. ஆனால் இருவரும் தாங்கள் விரும்புவதை வெளியில் காட்டுறாங்க இல்லை. அம்மா இந்த இரண்டு பேரையும் ஒன்று செர்த்து வையுங்கம்மா”. கெஞ்சினாள். “நல்ல விசயத்தைச் சொல்லுறாளே”. அவருக்குச் சந்தோசம்.
“மங்கை அருணுக்கு கயல்விழி மேல் அன்பு இருக்கிறது. அவன் பல்கலைக் கழகத்தை விட்டு வந்ததுமே கயல்விழியைத்தான் மணம் முடிப்பேன் என்று இன்றுவரை காத்திருக்கிறான். அவனுக்காத்தான் நான் வந்திருக்கிறன். நாங்க எல்லாரும் சேர்ந்து நல்லபடியாக செய்து வைப்பம்.” அம்மா இப்படிக் கூறுவார் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. உடனே ஓடிப்போய் கயல்விழிக்குச் சொல்ல வேணும் என்று மனம் தள்ளியது. அடக்கிக் கொண்டாள். சந்தோசத்தில் உறங்கிவிட்டாள். கயல்விழிக்கு உறக்கம் வரமறுத்தது. அப்பா வந்ததும் அருண் ஏன் அறைக்குள் போனார். பிடிக்கவில்லையா? அல்லது மரியாதையா? மனதைப் போட்;டுக் குளப்பிக் கொண்டிருந்தாள். எப்படியோ உறங்கிவிட்டாள்.
எப்படித்தான் பிந்தி உறங்கினாலும் விடியாலா சத்தத்தில் கயல்விழி எழுந்து விடுவாள். தனது கடமைகளை முடித்துக் கொண்டு தேநீரோடு ஏர7pக்’கரை வீட்டு வாசலில் கதவைத் தட்டியபடி நின்றாள். அம்மா எழும்பியாச்சா? இந்தாங்க தேநீர். கொடுத்தாள். சன்னம்மா உனக்கும் தேநீர் இந்தாங்க பிடியுங்க ஒரு நையாண்டியுடன் கொடுத்தாள். “ஆமா சொல்லுவீங்க. தெரியும் உங்கட லெவெல். கொடுப்புள் சிரித்த வண்ணமே தேநீரை வாங்கனிhள். அருணின் அறைக் கதவைத் தட்டிக் காத்திருந்தாள். அவன் கதவைத் திறந்ததும் “குட் மோnனிங். தேநீர். இந்தாங்க”. ஓரு புன்னகையை வீசியவாறு கொடுத்தாள். அந்தக் காலைப்பொழுதில் முழுநிலவாய் ஜொலித்தாள். முகம் மலர்ந்து தேநீரைப் பெற்றுக் கொண்டான்.
இன்பபுரி நகராக படிப்படியாக மாறிக் கொண்டிருந்தது. நாட்கள் நகரத் தொடங்கின. பசி, பட்டினி பஞ்சம் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. குழுக்களுக்குப் பயிற்சிகளை வழங்கி வலுவூட்டப்பட்டது. வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது, கணக்குப் பேணும் வழிமுறைகள். வங்கியில் hணமெடுத்தல், வைப்பில் இடுதல். சுகாதாரப் பழக்க வழககங்கள், முதலுதவிப் பயிற்சிகள். ஆனர்த்த முகாமைத்துவும் பற்றி பயிற்சிகளில் தேறியவர்களாள மக்கள் மாறிவிட்டனர். உற்பத்தியைப் பெருக்கும் வழிவகைகளைத் தெரிந்திருந்தனர். சுய உதவிக்குழுக்கள் தமக்குள்ளேயே தேவைகளைக் கண்டறியும் ஆற்றலைப் பெற்றிருந்தனர். அதற்கேற்ப தேவைகளை நிறைவேற்றும் தீர்மானங்களை எடுக்கவும் பழகிவிட்டனர்.
காணிகளில் பயிர்கள் வளர்ந்து காற்றிலாடி அசைந்தன. அந்த மாலைபொழுது அழகாக இருந்தது. இளைஞர்கள் குழுமி இருந்தனர். இன்று சுய உதவிக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தலைமை தாங்க வேண்டும். வழமையான கூட்ட நடைமுறைகளைப் பின்பற்றி நீங்களே தீர்மானங்களை பரிசீலனை செய்து முடீவுக்கு வரவேண்டும். நாங்கள் பார்வையாளர்களாக இருப்போம் அவசியம் ஏற்புடும்போது நாங்கள் உதவுவோம். குயல்விழி கேட்டுக் கொண்டாள். முப்பது சுய உதவிக்குழுக்கள் சமுகம் கொடுத்திருந்தன. அவர்களுக்குள்ளேயே மற்றக்குழுக்களும் இருந்தனர்.
“நாகேஸ்வரன் தலைமை தாங்குவார்.” ஏகோபித்த முடிவாக எழுந்தது. நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். குழுக்கள் தங்கள் செயற்பாடுகளை விளக்கினார்கள். தங்கள் தேவைகளை முன்வைத்தார்கள். நமது முக்கிய தேவையாக இருப்பது சிறிய அரிசி ஆலை. ஆந்த ஆலையை பொதுவான இடத்தில் வைக்கவேண்டும். அதனால் பலவசதிகள் ஏற்படும். மக்கள் மூதூருக்கு எடுத்துச் செல்லும் கஸ்டம் நீங்கும். அந்த மெசினில் நெல்மட்டுல்ல மா மிளகாய்த்தூள் எல்லாம் அரைக்கலாம். அப்படி அரிசி ஆலையைத் தொடங்கினால் நமது குழுக்களுக்கு லாபம். நமது பணம் நமக்கே பயன்படும். இரண்டு பேர் வேலைவாய்ப்புப் பெறலாம். தவிடு கால்நடைகளுக்குத் தீனியாகும். இதற்குரிய பணத்தினை குழுவில் இருந்து பெற்று அதற்குரிய வட்டியையும் குழுவுக்குக் கட்டலாம். விவாதித்தார்கள். நல்ல பயனுள்ள விசயம். இதனை உடனடியாக நடைமுறைப் படுத்துவோம். உரிய விலை மனுக்களைக் கோரி நிறைவேற்றும் தீர்மானம் முடிவாகியது. நமது பிரதேசத்தில் கால்நடைகள் உள்ளன. நல்ல இனப்பசுக்கள் இல்லை. பொலநறுவை அல்லது கந்தளாய் பண்ணைகளில் இருந்து இளம் காளைகளை வாங்கினால் எதிர்காலத்தில் பயனைப் பெறலாம். நீண்ட காலப்பயனுள்ளதாக இருக்கும்.
நமது மக்கள் பாலைச் சேகரித்து வைப்பதங்குரிய வசதிகள் இல்லாமல் பாலைச் சேகரித்துப் பயன்பெறத் தெரியாமல் உள்ளார்கள். அதேவேளை பால்மா பக்கற்றுக்களை வாங்கிப் பாவிக்கிறார்கள். நமது கட்டாக்காலி மாடுகளைக் கட்டி பால் கறந்;து பயன்பெற வற்புறுத்த வேண்டும். பால் சேகரித்து பால்சபைக்கு அறிவித்து அவர்களை இங்கு வந்து பாலை எடுத்துச் செல்ல வழிசெய்யவேண்டும். குழுக்கள் நல்ல செயற்திட்டங்களை முன்வைத்தார்கள். “கிராம முன்னேற்ற அபிவிருத்தி அலுவலர் என்ற வகையில் சிலவற்றைச் சொல்ல வேண்டும். நீங்கள் சொன்ன அத்தனை திட்டங்களையும் எற்கனவே உங்கள் ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத் தலைவி உரிய இடங்களுக்கு அனுப்பிவிட்டார். அதனை அவரது நிறைவேற்று முகாமையாளர் விளக்குவார். அருண் மங்கையை இழுத்து விட்டான்.
அரிசி ஆலை வேலைகள் முடிந்து விட்டன. உரிய இயந்திரம் நாளை வரும். அதற்குரிய வேலைகளை பொருளாளர் ராகினி செய்து விட்டார். கோயிலடியில் நூலகத்துக்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் நாளை மாலை இதே நேரம் திறக்கலாம். உங்கள் எல்லோரையும் அழைக்கிறோம். குழுக்கள் ஆரவாரித்தார்கள். பால் சேகரிக்கும் விசயம் தொடர்பாக பால்சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதிகமாக அடுத்த கிழமை நிறைவேறிவிடும். ஆனால் நீங்கள் மனம் வைத்தால்தான் பால்மா பக்கற் விவகாரம் இல்லாது போகும். ராகினி விளக்கினார்.
குழுக்களே தீர்மானம் எடுத்தார்கள். மாடு உள்ளவர்கள் தங்கள் மாடுகளைத் தேடிப் பாதுகாக்க வேண்டும். அவற்றைக் கட்டிப் பால்கறந்து தந்தால் உங்கள் பாலை நாங்கள் வாங்கிப் பால்சபைக்குக் கொடுப்போம். உரிய பணத்தினை உங்களுக்கு வழங்குவோம். இதனை நடைமுறைப் படுத்துங்கள். ஒரு வேண்டுகோளாக விடுத்தார்கள். “கல்விக் குழு எப்படி இயங்குகிறது.”? ஓருகுழு வினாவியது. குல்விக்குழுதான் சரியாக இயங்குகிறது. வீடுகளில் பிள்ளைகள் படிக்கிறார்கள். பெற்றோர் தங்களாலான முயற்சிகளை எடுக்கிறார்கள். பாடங்கள் நல்ல முறையில் நடைபெறுகின்றன. இரண்டு பாடசாலைகளும். முன்பள்ளிகளும் சேர்ந்து விளையாட்டுப் போடடிகளையும், கலைவிழாவையும் நடத்த ஒழுங்குகளையும் செய்கிறோம். கல்விக்குழு செயற்பாடுகளை விளக்கியது. இவற்றை எல்லாம் கண்ணால் கண்டு, களிப்போடு நின்றாள் கயல்விழி.
தொடரும்

Read more...

Monday, October 25, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
22
இளைஞர் வீட்டுத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்தது. பிரதேசச் செயலாளரின் உதவியைக் கயல்விழி நாடினாள். அவரின் பெருமுயற்சியினால் இளைஞர் வீட்டுத்திட்டமும் கிடைத்து விட்டது. புதிய காணிகளில் புத்தம் புதிய வீடுகள் முளைத்தன. முன்னூறு இளைஞர்கள் முழுநேர விவசாயிகளாக மாறியிருந்தனர். அரசாங்கத்தின் முழுக்கவனமும் கட்டைபறிச்சான் பக்கம் திரும்பியிருந்தது. அருண் வீட்டுக்குப் போயிருந்தான். அந்த நாட்கள் கயல்விழியின் வேகம் குறைந்திருந்ததை மங்கை கவனித்தாள். வகுப்புக்களிலும் கலகலப்பு இல்லை.”கயல்விழி நீ எனது உயிர் தோழிதானே?” மங்கை கேட்டாள். “ என்னடி சந்தேகம்”? நெற்றியைச் சுருக்கியவாறே கயல் கேட்டாள்.“ கயல் எனக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேணும். அது எனக்கு விளங்குது. ஆனால் நீ என்னிடம் மட்டுமல்ல சம்பந்தப்பட்டவர்களுக்கும் மறைக்கிறாய். ஏன்? சொல்?” அவளைப் பார்த்தபடியே கேட்டாள். “ நீ என்ன கேட்கிறாய்? எனக்கு விளங்கவில்லை.” எங்கேயோ பார்த்தபடி கூறினாள். “கயல்விழி என்னட்ட மறைக்காத. உன்ர மனதைக் கேள். உன்ர மனதுக்குள்ள என்ன இருக்குது என்று பார்.” மங்கை ஆற்றைப் பார்த்தவாறு கேட்டாள். “கயல்விழி நானும் இவ்வளவு காலமும் பழகியிருக்கிறன். இப்பதான் உன்ர முகத்தில ஒரு மாற்றத்தைக் கண்டிருக்கிறன். அதற்கான காரணத்தையும் தெரிந்திருக்கிறன். ஆனால் நீ பிடிபடாமல் நடிக்கிறாய்?” மங்கை விடுவதாயில்லை.
“சரி நேரடியாகக் கேட்கிறன். நீ அருணைப் பற்றி என்ன நினைக்கிறாய்.? மங்கை கேட்டாள். கயல்விழி திடுக்குற்றாள். சற்றுத் தடுமாறித்தான் போனாள். யோசித்தாள். “அருண் மிக நல்ல நண்பர். அவர்மேல் எனக்கு மரியாதை இருக்கு.” இழுத்து இழுத்துக் கூறினாள். “அருண் மிக நல்ல இளைஞன். உனக்கு ஏற்றவர். நீ அவரைக் காதலிக்கிறாய். ஆனால் போலியாய் நடிக்கிறாய்.” சற்று ஆவேசமாய்ப் பேசினாள். “மங்கை காதல் என்பது புனிதமானது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லறத்தில் இறங்கவேண்டும். எனக்கு அந்தப் பக்குவம் இன்னும் வரல்ல. அந்த நிலைக்கு நான் வருவதற்கு நாளெடுக்கும். என்னை அருண் விரும்புவதை நான் அறியவில்லை. அவர் அன்பாக நமக்கு எவ்வளவோ செய்கிறார். அதனால் என்னை காதலிக்கிறார் என்று நான் எப்படிச் செல்லமுடியும்? சரி இதை இப்படியே விடு”.அவள் கதையை நிறுத்தினாள்.
சுந்தரத்தார் ஏதோ வேலையாக வந்தவர் இவர்கள் பேசியதைக் காதில் வாங்கிக்கொண்டார். தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். அருண் வேலை நிமித்தம் வருவதும் போவதுமாக இருந்தான். உண்மையில் அவனுக்கு அதிகமான வேலைகள் இருந்தன. நாட்கள் வாரங்களாகி, மாதங்களாக விரைந்து ஓடின. சாந்தன், ராகினி, சுலோச்சனா மங்கை ஆகியோரின் ஒத்தாசையோடு அனைவரது ஒத்துழைப்பும் கிடைத்தது. மரவட்டக்குளம் ‘இன்பபுரி’யாக மாற்றம் பெற்றுவிட்டது. குளத்து வேலைகள் முடிவுற்றன. குளத்தின் திருத்த வேலைகளை விரைவில் செய்ய உதவியமைக்காக மக்களுக்கு நீர்பாசனத் திணைக்களம் நன்றி தெரிவித்தது. சிறப்பாக கயல்விழியைப் பாராட்டியது.
மாலையாகி வந்தது. வழமைபோல் ஆற்றங்கரையைப் பார்த்தவாறு கயல்விழி இருந்தாள். அவளது மனத்திரையில் பழைய கட்டைபறிச்சானின் பசுமை எட்டிப்பார்த்தது. அப்பா சொன்னவைகளை அசைபோட்டுப் பார்த்தாள். அவளை மறந்து சிலையாகி நின்றாள். கட்டைபறிச்சான் துறை கிருஸ்ணபிள்ளையின் அதிகாரத்தில் இருந்தது. அப்போது பாலம் இல்லை. ஒரு படகுப்பாதை இருந்தது. இரண்டு கரையையும் இணைத்துத் தடித்த கயிற்றால் கட்டியிருப்பார்கள். அந்தக் கயிற்றில் படகுப் பாதையை இணைத்திருப்பார்கள். படகில் பயணிப்பவர்கள் கயிற்றை இழுத்தால் படகு அசைந்து போகும். கரையின் இருபுறமும் சிறிய தேநீர்க் கடைகள் இருக்கும.; பயணிகளுக்கு அவை ஆறுதல் அளித்தன. வைகாசி, புரட்டாசி மாதங்களில் கிராமங்களில் கும்பம் வைத்து அம்மன் வழிபாடு நடக்கும். ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு நடைபெறும். கட்டைபறிச்சானிலும் அதனைச் சூழ்துள்ள கிராமங்களிலும் நடக்கும்.
இச்சடங்கு முறை மக்களை சமூகமயப்படுத்தியது. அனைவரும் ஒன்று பட்டுழைப்பார்கள். ஒத்தாசைகளைச் செய்வார்கள். கும்பம் வைப்பதற்கான செலவுகளை மக்களே பொறுப்பெடுத்து பங்களிப்புச் செய்வார்கள். நாட்பூசைகளையும் தாங்களே ஏற்று நடத்துவார்கள். இளைஞர்கள் பெரிதும் பங்கேற்கும் விழாவாக விளங்கும். கட்டைபறிச்சான் கிராமம் மந்திர தந்திரங்களில் முன்னணியில் இருந்தது. இளைஞர்கள் தமக்குள் மந்திரங்களை மனப்பாடம் செய்து பரீட்சிக்கும் களமாக கும்பத்து மால் நிகழ்ச்சிகள் இருக்கும்.ஒவ்வொரு இரவும் ஊர் கலகலக்கும். பூசைநேரத்தில் சாமி ஆடிக் கட்டுச்சொல்வது சுவையான நிகழ்ச்சியாக இருக்கும். பூசாரியார் கும்பம் தொடங்கிய நாளில் இருந்து கும்பத்து மாலில் பயபக்தியாக இருப்பார். அந்தச் சடங்கு முறை இப்போது அருகிவிட்டது. பூசை தொடங்கியதும் பூசாரியின் உடுக்கும், மந்திரமும் பார்த்திருக்கும் பலரை நடுங்க வைக்கும். சிலர் தங்களை அறியாமல் உடல் குலுங்க நடுங்கி அலறியும் விடுவார்கள். அத்துடன் பறைமேளம் அதிரும். சாமியாடி வருபவர்கள் பறை மேளகாரரின் பக்கம் செல்வார்கள். சாமியாடி பக்கத்தில் வந்தால் மேளம் அடிக்கிறவர்களுக்கும் கொண்டாட்டம். உரத்து மேளம் அடிப்பார்கள். சாமி தாளத்துக்கு ஏற்ப ஆடும். நல்ல வேடிக்கையாக இருக்கும். சாமி ஆட்டம் நடக்கும். சாமியாடும் போது அவர்களின் உடல் குலுங்கும் முறை வித்தியாசமானது. அவர்களது கண்கள் அரைவிழி மூடியிருக்கும்;. இதனை நம்புவதா? நம்பாமல் இருப்பதா? பெரிய சங்கடமாக இருக்கும்.
நிறைவு நாள் உற்சாகமாக இருக்கும். கும்பங்களைத் தூக்கி வருபவர்கள் அதற்கான ஆடையணிந்து வருவார்கள். மாலை கும்பம் ஊர்வலம் வரும். இளைஞர்கள் வீதிகளில் நிற்பார்கள். கும்பம் வரும்போது வீதிகளுக்குக் குறுக்கே மந்திரித்துக் கோடுகள் வரைந்து திருநீறு கைகளில் எந்தி மந்திரம் சொல்லி நிற்பார்கள். அவர்களது உடல் நடுங்கியவாறே இருக்கும். மந்திரம் கனலாகப் பறக்கும். இந்த மந்திரங்களைப் பாடமாக்கும் நமது இளைஞர்கள், தங்கள் பாடங்களைப் படித்தால் பரீட்சைகளில் சித்தியடைந்து பெரிய பதவிகளில் வரலாம் என்று அன்று கற்பித்த ஆசிரியர்கள் சொன்னதையும் நினைந்து கொண்டாள்.
வீதிக்குக் குறுக்கேயுள்ள கோட்டுக்கு அண்மையில் வந்ததும் சாமியாடி வருபவர்கள் அதைத் தாண்டி போகமுடியாமல் திணறுவார்கள். ஓருகுழு போகமுடியாதவாறு மந்திரிப்பார்கள். சாமியாடியவர்கள் தொப் தொப்பென்று விழுவார்கள். இன்னுமொரு குழு அதற்கெதிரான மந்திரங்களை சொல்லி காய் வெட்டுவார்கள். வீழ்து விட்ட சாமிகளைத் தூக்கி நிறுத்தி அவர்களுக்கு ஊருவேற்றுவதில் இன்னுமொரு குழு செயற்படும். இவர்களால் முடியாதவற்றைப் பூசாரியார் வந்து மந்திரித்துத் தண்ணீர் தெளித்தால் கட்டு உடைந்து சாமி போகும். சில சாமிகள் பூசாரியாரிடமிருந்து சாட்டையைப் பெற்று வரும். மந்திரம் தெரிந்த இளைஞரிடம் கொடுத்து ஒரு கையை நீட்டி நிற்கும். இளைஞர் சாட்டையைத் தன் இரு கைகளிலும் ஏந்திப்பித்து மந்திரம் சொல்லி சாட்iயால் சாமிக்கு அடிப்பார். முடிந்ததும் மஞ்சள் தண்ணீரால் கழுவி சாட்டையைச் சாமியின் கழுத்தில் அணிந்து விடுவார்.
நாட்டுப் பிரச்சினைகள் பிரச்சினைகள் பூதாகாரமாக வளர்ந்தன. பழையன கழிந்து புதியன புகுந்து விட்டன. ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சிதறிவிட்டன. அகதி வாழ்வு சிறைப்படுத்தி விட்டது. சிறுதெய்வ வழிபாடு தொலைந்து விட்டது. “கயல்விழி.. இஞ்ச வந்து பார்..கெதியா வா.” அம்மாவின் சத்தம் கேட்டுத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். அம்மாவிடம் போனள். அவளது கண்களை அவளால் நம்ப முடியவில்லை. சிலையானாள். “அருண் வந்திருக்கார். அம்மாவும் வந்திருக்கா” அம்மா சொன்னதும்தான் தன்னையுணர்ந்தாள். முகம் மலவர்ந்தது. விழிகள் ஒளிவீசின.
“வாங்க.. வாங்க. அம்மா சகம் எப்படி,? பலநாட் பழகியதுபோல் பக்கத்தில் சென்று அவரை கதிரையில் அமரச் செய்தாள். “நீங்க இப்படி இருங்க”. இருக்கையைக் கொடுத்தாள். “அம்மா நான் தேநீர் போட்டு வாறன்.” துடித்து நின்றாள். அவளுக்குக் கையும் ஓடல்லக் காலும் ஓடல்ல. “கயல் நான் எல்லாம் செய்யிறன். நீ அவங்களோட கதச்சிக் கொண்டிரு”. அம்மா குசினிக்குள் போனாள்.
அருண் தனது வீட்டுக்குப் போய் இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டிருந்தது. அவனைத் திடீரெண்டு திருகோண மலையிலும் கடமை செய்யும்படி தற்காலிகக் கடமைப் பட்டியல் கொடுத்திருந்தார்களாம். அதனால் அவன் கட்டைபறிச்சானுக்கு வரச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது கஅது முடிந்ததும் கட்டைபறிச்சானில் கடமையாற்ற வந்து விடான்.
“அம்மா நான் உங்களிட்ட சொன்ன சமூகசேவகி இவதான். பெயர் கயல்விழி. ஆனால் கனல் விழியாகத்தான் எனக்குத் தெரியுது.” வழமைபோல் தமாசாகச் சென்னான். “டேய் அருண்..நீ எங்கயும் இப்படித்தான் பேசுவியா? பாவம்டா அந்தப் பிள்ள அப்படியா இருக்கா”. சிரிப்போடு சொன்னார். “அம்மா பார்த்த உடனே எடைபோடாதிங்க. இவட தோழி மங்கை இருக்கிறா. இந்த இரண்டும் சேர்ந்து இந்த ஊரைப்போட்டுப் படுத்திற பாடு சொல்லேலா. அதுக்குள்ள என்னையும் சேர்த்து தொடர்ந்து இங்கேயே வேலை செய்ய வேண்டும் என்று பிரதேசச் செலாளரிடம் சொல்லி, இங்கேயே இருக்க வெச்சிட்டா. பாவம் அம்மா சனங்கள்”. பல உண்மைகளை எப்படி நாசூக்காகச் சொல்லுறான். அவளுக்குச் சொல்லமுடியாத சந்தோசம்.
மனித வாழ்விலும் இன்ப துன்பங்கள் மாறி மாறி வந்து போகும். அப்போதுதான் வாழ்க்கை சுவைக்கும். அருணைக் கண்டதும் அவளை அறியாமல் உள்ளம் துள்ளுவதேன்?. அவன் போனதும் வாடி வதங்கிப் போவதுமேன்? மங்கை சொன்னது சரிதானா? நான் என்னை ஏமாற்றுகிறேனா? அல்லது எனது அகம்பாவமா? ஓன்றுமே விளங்கவில்லை. அம்மா தேநீர் கொண்டு வந்தார். கொடுத்தார். குடித்தார்கள். மங்கை வந்ததும் சந்தோசப்பட்டாள். “அம்மா நான் சொன்ன மங்கை இவதான்” அருண் முந்திக் கொண்டான். வணக்கம் சொன்னாள். “நல்ல பிள்ளயள்.” பாராட்டினார்.
“கயல் எல்லா வசதியையும் செய்து குடு.” தங்கம் மகளுக்குச் சொன்னார். மங்கை அவர்களது உடமைகளை எடுத்துக் கொண்டு போனாள். அருண் அம்மாவுடன் சென்றான். “அம்மா இந்த ஆற்றிலதான் இவங்க குளிக்கிறவங்க. நீங்களும் அவங்களோட சேர்ந்து நீச்சல் பழகலாம்” அம்மா கேட்டுக் குலுங்கிச் சிரித்தார். “இவன் இப்படித்தானம்மா. ஏதாவது சொல்லிச் சிரிக்க வைப்பான்”;. கயல் சேர்ந்து குலுங்கிச் சிரித்தாள். இன்றைக்குத்தான் கயல் குலுங்கிச் சிரிக்கிறா. சொல்லித்தானும் சிரித்தாள். கயல் அறையினைத் துப்பரவாக்கினாள். அழகாக அடுக்கி வைத்தாள். வேண்டிய பொருட்களை ஆயத்தம் செய்து வைத்தாள். “அம்மா குளிக்க வசதியிருக்கு. பின்பக்கம் சுடுதண்ணி வைச்சிருக்கிறன். சோப் துவாய் எல்லாம் இருக்கு. போய்க் குளியுங்க. பிரயாணக்களைப்புப் பறந்து விடும். படபடவெனக் கூறினாள்.
அம்மா குளிக்கச் சென்றார். அவருக்கு நல்லாப் பிடித்துக் கொண்டது. “நீங்களும் குளிச்சிட்டு வாங்க. நல்லா நேரம் போயிற்று. அம்மாக்குப் பசிக்கும் நாங்க சாப்பாட்டத் தார் செய்திட்டு வாறம்.” சொல்லிவிட்டுப் பின்னால் போனாள். “அம்மா ஏதாவது தேவையா? கேட்டாள். “இல்லம்மா நான் குளிச்சிட்டு வாறன்”. அவர் குளிகத் தொடங்கினார். “இவனுக்கு ஏற்ற பிள்ளைதான்.” பார்த்த பார்வையிலேயே தீர்மானித்து விட்டார். “இப்படியான ஒரு பிள்ளயத்தான் நான் தேடிக் கொண்டிருந்தன். இறைவனால் பார்த்து நான் நினத்ததைத் தந்திருக்கிறார். என்ர எண்ணம் நிறைவேறினால் நான் பாக்கிய சாலிதான்.” மனதினில் நினைந்த கொண்டே குளித்து முடித்தார்.
அருண் கிணற்றடியில் குளித்து வந்தான். அவர்கள் உடைகளை மாற்றி வந்து வெளியில் இருந்தார்கள். “அருண் நீ சொன்னமாதிரி அழகான இடம்தான். என்னமாதிரிக் காற்று வீசுது.” மெய்மறந்து பேசினார். “அருண் இனியும் என்னால் பொறுக்கமுடியாது. எனக்குப் பிடிச்சிக் கொண்டுது. நான் இனி அவங்களோட கதைக்கப் போறன்.” அம்மா முடீவோடு இருந்தார். “அம்மா இன்றைக்குத்தானே வந்திருக்கிறீங்க. முதலில் கயல்விழியின் விருப்பத்தை அறியுங்க. ஆறுதலாய் கதையுங்க. இப்ப என்ன அவசரம்.? அம்மாவைப் பொறுமை காக்க வைத்தான்.
கயல்விழியும் மங்கையும் வந்தார்கள். கயல்விழி நின்றிருந்தாள். “கயல் வாம்மா. கதிரையில் வந்திருங்க. அம்மா அழைத்தார். “பரவாயில்லை. நான் இப்படி நிக்கிறன். இப்ப அம்மா கூப்பிடுவா. சாப்பிடப் போவம். அம்மா இறால் சாப்பிடுவிங்கதானே? சும்மாதான் கேட்டாள். “என்ர அம்மா என்னப்போலதான். எதையும் சாப்பிடுவா, அம்மா கயல்விழியிர அம்மா இறால்கறி சமைத்தால் சா..சொல்லி வேலையில்ல. அப்படி ருசியாக இருக்கும்.” ஓரு போடுபோட்டான். “மங்கை..! வரச் சொல்லுங்க. அப்பாவும் வந்திற்றார்”. தங்கம் கூப்பிட்டார்.
சாப்பாட்டுக்காகச் சென்றார்கள். மேசையில் எல்லாம் தயாராய் இருந்தது. சுந்தரத்தார் “வாங்க” வரவேற்றார். அவருக்கு அரண் தனது அம்மாவை அழைத்து வந்தது நல்ல சந்தோசம். மங்கை கைகழுவக் கிண்ணத்தில் தண்ணீர் கொடுத்தாள். மங்கை பீங்கான் கோப்பைகளில் உணவினைப் பரிமாறினாள். சுhப்பிடுங்க என்றாள். அண்ணே நீங்களும் வாங்க. எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவம். சந்தோசமாக இருக்கும். அருணின் அம்மா அழைத்தார். யாராலும் தட்டமுடியவில்லை. சுற்றியிருந்து உண்டார்கள். அடிக்கடி கயல் எழுந்து பரிமாறினாள். சுhபப்pடும் போது அவளது விழிகள் அருணைப் பார்க்கத் தவறவில்லை. மங்கையின் கண்கள் மிகக் கவனமாகச் சுழன்றன.
குடும்பங்களைப் பற்றிப் பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள். நாட்டு நடப்புக்களைப் பற்றிக் கதைத்தார்கள். அருணைப் பற்றிப் பேசினார்கள். இங்கு நடக்கும் வேலைத் திட்டங்களைப் பற்றிக் கலந்துரையாடினார்கள். “இன்றைக்கு எனது மனம் நிறைந்து இருக்கிறது. உங்களோட இருந்து இப்படி சாப்பிட்டுறதற்குக் கொடுத்து வைத்திருக்கவேணும்”. நன்றியோடு அருணின் அம்மா கூறினார். “இது நிலைக்க வேணும்.” சொல்லிக் கொண்டு எழும்பினார். எழும்பி வேறுகதிரைகளில் இருந்து கதைத்தார்கள். “ஏரிக்கரை’ வீட்டுக்குப் போவோமா? நான் கோயிலடிவரை நடந்து போய்வாறன்”;. சொல்லிவிட்டு நடந்தார்.
தொடரும்

Read more...

Thursday, October 21, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
21
வடக்குத் தெற்காக கிறேவல் வீதி நீண்டு கிடந்தது. வீதிக்குக் கிழக்காக நிலம் விரிந்து கிடந்தது. படிப்படியாக கீழ் நோக்கி இயற்கையாகச் சாய்ந்திருந்தது. நிலஅளவையாளர்கள் சுறுசுறுப்பானார்கள். அவர்கள் அளந்து கூனியடித்துச் சென்றார்கள். பிரதேசச் செயலாளரின் அலுவலர்கள் பெயர்ப்பட்டியலை எடுத்தார்கள். பயனாளிகளை வாசித்தார்கள். காணித்துண்டுகளுக்கு இலக்கமிட்டார்கள்;. இலக்கங்கள் எழுதிய துண்டுகளைக் குலுக்கல் முறையில் எடுக்கும்படி பணித்தார்கள். பயனாளிகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் நின்று நெறிப்படுத்தினார்கள். அதிபர் ஆலோசனைகளை வழங்கினார். கிராமசேவையாளர் அறிவுறுத்தினார். மிஸ்டர். டேவிட் வந்து எல்லாவற்றையும் அவதானித்தார். அவர் பயனாளிகளைக் கவனித்தார். அவர்கள் அனைவரும் இளைஞர்களும் யுவதிளும்தான். அவருக்கு மிகத்திருப்தியாக இருந்தது.
இளைஞர்களின் கட்டுப்பாடும் ஒழுங்கும் டேவிட்டுக்குப் பிடித்துக் கொண்டது. குலுக்கல் முறை முடிந்ததும் பயனாளிகளுக்குக் காணிகளை அடையாளம் காட்டினார்கள். பயனாளிகள் தங்கள் காணிகளுக்குள் நின்றார்கள். லொறிகளில் காணிதுப்பரவு செய்வதற்கான உபகரணங்கள் வந்தன. அதனைச் சாந்தன் பெற்றான். அருண் உபகரணங்களைக் கொடுத்துதவிய நிறுவனத் தலைவரோடு உரiயாடினான். அவர் சம்மதம் தெரிவித்தார். லொறி காணிகளை நோக்கிச் சென்றது. சாந்தன் அவர்களுக்கு ஒதுக்கியிருந்த உபகரணங்களை அவர்கள் நற்கும் இடத்துக்குக் கொண்டு சென்று கொடுத்து வந்தான். விவசாயப் பணிப்பாளரும், பிரதேசச் செயலாளரும் வந்து பார்த்தார்கள். அவர்களுக்கச் சந்தோசம்.
“கயல்விழி! இந்தப் பிரதேசத்தில் இன்னும் ஒரு நூறு இளைஞர்களைச் சேர்த்துக் கொள்வோம். காணி இருக்கிறது. இளைஞர்களுக்கு வழியைக் காட்டினால் அவர்கள் சமுதாயத்தைத் தாங்கும் தூண்களாக மாறிவிடுவார்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. ஆரசாங்க உத்தியோகம் செய்யவேணும் என்ற எண்ணங்களும் மறைந்து விடும். அருண் எல்லாவற்றையும் செய்வார். பிரதேசச் செயலாளர் சொல்லிக் கொண்டிருந்தார். காணியை அளந்து விடுவார்கள். இந்தப் பிரதேசத்தில் உள்ள படித்த இளைஞர் யுவதிகளைத் தெரிவு செய்வோம். அடுத்த கிழமை அவர்களை அழைத்துக் கொடுக்கலாம்”;. சொல்லிக் கெண்டே விவசாயப் பணிப்பாளரைப் பார்த்தார். அவரும் அதனை ஆமோதித்தார். “நல்லயோசனை” என்றார்.
காணியைப் பெற்றவர்கள் துப்பரவாக்கத் தொடங்கிவிட்டார்கள். கயல்விழி ஒரு இடத்தில் நின்று கொண்டே தனது தொண்டர்கள் சேவை செய்வதை அவதானித்துக் கொண்டிருந்தாள். மிஸ்டர் டேவிட் அருணை அழைத்தார். இருவரும் கயல்விழியிடம் சென்றார்கள். அவர்கள் தன்னிடம் வருவதற்குள் அவள் அவர்களை நோக்கி முன்னே வந்தாள். “மிஸ் கயல்விழி உங்கட வங்கிக்கணக்கு இலக்கம் தேவை தரமுடியுமா”? கேட்டார். மங்கை “இதோ” என்று நீட்டினாள். டேவிட் அசந்து போனார். எள் என்று சொன்னால் எண்ணெய்யாக இயங்குகிறார்களே. எப்படி முடீகிறது? அதிசயித்தார்.
“எனக்கு நல்ல திருப்தி. இந்த நிதி வெளிநாட்டு அரசாங்கத்தின் உதவி. இதனை உதவியாக அளிக்கிறது. நீங்க திருப்பிக் கட்டத்தேவையில்லை. ஒரு நபருக்குப் பதினைந்தாயிரம் வீதம் மானியமாக இருநூற்றைம்பது நபர்களுக்கு உதவு தொகையாக நாளைக்கு உங்கட வங்கிக் கணக்கில வைப்பில் இடுவோம். மாதாமதம் நிதி அறிக்கையும், விவரண அறிக்கையும் அனுப்பி வைய்யுங்கள். அடிக்கடி எங்கள் நிறுவனம் வந்து வழிகாட்டும். இடையிடையே நானும் வருவேன். எனது வாழ்த்துக்கள்”;. சொல்லி தனது சாரதிக்குக் கையைக் காட்டினார்.
வாகனம் வந்தது. அதிலிருந்து சாரதி ஒரு கோவையைக் கொண்டு வந்தார். அதனைப் பெற்றுச் சில பத்திரங்களை எடுத்தார். “இது உடன்படிக்கை. நீங்கள் கையெழுத்தைப் போட்டுத் தாங்க”. என்றார். மங்கை பக்கத்தில் நின்றாள். கயல்விழி ஒப்பமிட்டான். மங்கை நிறுவனத்தின் றப்பர் முத்திரையை இட்டுத் திகதியையும் எழுதிக் கொடுத்தாள். டேவிட் ஒரு பிரதியை கயல்விழியிடம் கொடுத்தார். கைகுலுக்கினார். விடைபெற்றுச் சென்றார். கயல்விழி தனது ஒவ்வொரு செயலின் போதும் அருணைப் பார்த்து மெல்லப் புன்னகைப்பாள். ஒவ்வொரு திட்டமும் அவனால் செயலுருப் பெறுவதை அவள் மட்டும்தான் அறிவாள். ‘எல்லாம் உங்களால்தான்’ என மனதுள் நினைந்து கொள்வாள்.
சாந்தன் நில அளவையில் ஈடுபட்டவர்களுக்கு உணவு வழங்கினான். சாரதா வந்திருந்த நிறுவனத்தினருக்கு உணவுவகைகளை எடுத்து வந்தாள். எல்லோரும் உணவினை மகிழ்ந்து உண்டார்கள். குளம் தூர்ந்து கிடந்தது. அதனைத் திருத்தினால் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாய்சல் செய்யலாம். நீர்ப்பாசனத் திணைக்களத்தில் முறையிட்டிருந்தாள். அவர்கள் உரிய செலவு மதிப்பீட்டைச் செய்திருந்தனர். ஆனால் அதற்குரிய நிதியைப் பெறமுடியாதுள்ளதை அறிவித்தனர். அதனை வைத்துக் கொண்டு பல அரச சார்பற்ற நிறுவனங்களுக்குத் தனது முன்மொழிவுகளை அனுப்பி யிருந்தாள். “இந்தக் குளத்தைத் திருத்திவிட்டால் நமது திட்டம் பூரணமாகும்”;. மங்கையிடம் சொன்னாள். இரண்டு நிறுவனங்கள் இணைந்து குளத்தைத் திருத்தித் தருவதற்கு முன்வந்திருந்தன. “விரைவில் குளத்தைத் திருத்த உதவிகள் வரும்” மங்கை உறுதியாகச் சொன்னாள். “தொடர்ந்து வேலைகள் நடைபெறும். இரண்டு கிழமைகளுக்குள் வெளியாக்கி விடவேண்டும். இது நமது வேலை என்று எடுத்துக்குக் கொண்டார்கள். “இன்றைய நாள் நமது மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் நாள்.” சொல்லிக் கொண்டார்கள். வேலைகளை முடித்து அனைவரும் சென்றார்கள்.
வீட்டை அடையும்போது இருட்டி விட்டிருந்தது. நல்ல களைப்பு. அருண் நன்றாகக் குளித்துவிட்டு முற்றத்தில் கதிரையில் சாய்ந்திருந்தான். கயல்விழியும் மங்கையும் வந்தார்கள். “இன்றைக்கு வேலைகளைப் பற்றிய கதை வேண்டாம். சந்தோசமாக ஏதாவது கதைப்பம். என்ன கதைக்;கலாம்.” கயல்விழி தொடங்கினாள். அருண் அதிசயமாகப் பார்த்தான். “மங்கை இப்ப கட்டாயம் மழை பெய்யும்.” அருண் சிரிப்போடு சொன்னான். “வானத்தில் இருளைக் காணல்ல. வானம் தெளிவாய் இருக்கு. நிலவு ஆற்றுக்குள்ளும் வெளிச்சத்தைப் பாச்சுது. மழை இப்போதைக்கு இல்லை. மங்கையும் பொடிவைத்துப் பேசினாள். “என்ன இரண்டு பேரும் பேசுவது எனக்கும் விளங்கும்”. கயல்விழி சிணுங்கினாள்.
“கயல்விழி நாளைக்கு நான் மூதூர் போகவேணும். பிறகு திருகோணமலைக்குப் போகவேணும்.” சொல்லிக் கொண்டிருந்தான். அவள் பதறியடித்தாள். “என்ன அதற்குள்ளாகவா? வந்தவேலைகள் முடியவில்லை. இன்னும் இரண்டு நாட்களாவது நில்லுங்க.” படபடப்போடு உளறினாள். “என்ன வேலையிருக்கு? முக்கியமான வேலைகள் செய்தாச்சு. இனி உங்கட நிறுவன வேலைகள்தான். அதனை நீங்க செய்யலாம்.” அவன் தொடர்ந்தான். “நாளைக்கு நமது விவசாயத் திட்டத்தில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அடுத்த திட்டம் பற்றிக் கதைக்க வேணும். அவர்களுக்கு எப்படி நிதியை வழங்குவது பற்றி விளக்க வேணும். குளம் திருத்துவதற்கான முதற்கட்டச் சிரமதானம் ஒழுங்கு செய்ய வேணும்”. அடுக்கிக் கொண்டு போனாள்.
“அது சரி. இப்பதானே வேலைகள் பற்றிக் கதைக்கக் கூடாது என்று சொன்னிங்க. மறந்திட்டிங்களா”? சொல்லிக் கொண்டு சிரித்தான். அவள் உண்மையில் கொஞ்சம் சோர்ந்துதான் போனாள். அருணைப் பார்த்தாள். “நான் இயங்குவது உங்களால்தான். நீங்க இல்லாட்டி என்னால் இயங்க முடியாது. இதை உணரமாட்டிங்களா?” மனதில் உள்ளதைக் கண்களால் சொல்லிக் கொண்டாள். “கயல்; நான் உனக்காகத்தானே தவங்கிடக்கிறன். நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லையா இன்னும்? அவன் தனது மனதுக்குள் கிடந்தவற்றை தன் பார்வையால் சொல்லிக் கொண்டான். இருவரது உள்ளங்களிலும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. “இவள் என்மேல் கொண்டிருப்பது நட்பா? என்னை நண்பனாகப் பார்த்துப் பழகுகிறாளா? புரியவில்லையே. நண்பானாகப் பழகிக் கொண்டிருக்கும் உரிமையில்தான் இப்படி பழகிக் கொண்டிருக்கிறாளா? இன்னும் சில நாட்களில் புரிந்து விடும்” கடும் யோசனையில் ஆழ்ந்தான்.
“என்ன யோசனை? அமைதியைக் கயல்விழி கலைத்தாள். “ஒன்றுமில்லை. நாளைய திட்டங்களை யோசித்தேன்”. என்றான். “நாளைய திட்டங்களை நாளை பார்ப்போம். இப்ப அம்மாவைப் பற்றிச் சொல்லுங்க. அம்மா எப்படி இருக்கிறா”? கதையை மாற்றினாள். “அம்மா சுகமாக இருக்கிறா. அடுத்த முறை அம்மாவை ஒருக்கா இங்க கூட்டிவர யோசிக்கிறன்”. தனது அடுத்த கட்ட நகர்வை முன்வைத்தான். “கட்டாயம் கூட்டி வாங்க. எனக்கும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கு. அவவுக்கு இந்த இடம் நல்லாப் பிடிக்கும்”. ஓரு துள்ளலோடு சொன்னாள். நேரம் போனது தெரியவில்லை. உணவின்பின் ஓய்வெடுத்தார்கள்.
அருண் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து கிராம அபிவிருத்தி வேலைகளைக் கவனித்தான். அதகிமான காடுகள் அந்நிலங்களில் இருக்கவில்லை. அதிகமான காணிகள் வெளியாக்கப் பட்டன. வீதியோரமாக மேட்டு நிலமாக அமைந்திருந்தது. கொட்டில்களை அமைக்க இது வசதியாக இருந்தது. பலர் கொட்டில்களை அமைத்து விட்டார்கள். வீதியோரமாக புதிதாக ஒரேவரிசையில் கொட்டில்கள் இருந்தன. சிலவற்றைக் கிடுகினால் வேய்ந்தார்கள். பொதுவாக எல்லா இளைஞர் யுவதிகளும் தங்களை வேலையில் ஈடுபடுத்தி யிருந்தார்கள்.
மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வேலையிருந்தால் அதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். வேலை இல்லாதிருந்தால் மற்றவரகளுடைய விவகாரங்களில் தலையிட்டுத் தவித்த முயலடிப்பார்கள். கட்டைபறிச்சான் மாறியிருந்தது. எவரைப் பார்த்தாலும் கேட்டாலும் நேரமில்லை எனறுதான் சொன்னார்கள். அவரவர் வேலைகளில் மற்றவர்கள் தலையிட நேரமில்லாதிருந்தது. ஆனால் பொது வேலைகளுக்கு அனைவரும் சமூகம் கொடுத்தார்கள். பாடசாலைக்குப் பிள்ளைகள் போனார்கள். கல்வி அபிவிருத்தியில் முன்னேற்றம் எற்பட்டது. சமய வழிபாடுகள் தொடர்ந்தன.
மரவட்டகுளப் பகுதி பெரிய கிராமமாகிவிட்டது. திடீரெனக் குளம் திருத்துவதற்கான நிறுவனங்கள் வந்திறங்கின. பிரதேசச் செயலாளரின் ஆலோசனையின்படி அருண் அதற்கான ஆயத்தங்களைச் செய்திருந்தான். நீர்ப்பாசன அமைச்சின் அனுசரணையுடன். பொறியியலாளர்களின் நேரடி மேற்பார் வையில் வேலைகள் துரிதமாகின. தொடக்க நாள் மக்களின் சிரமதானத்தோடு தொடங்கியது. பாடசாலைப் பிள்ளைகள் தொடக்கம் கிராமத்தின் பெரியவர்கள் வரை கலந்து கொண்டார்கள்.
கிராம மக்கள் தொழிலாளர்களாக இயங்கினார்கள். தங்கள் சொந்த வேலையாகச் செய்தார்கள். ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள். குளக்கட்டுக்களைப் புனரமைக்கும் வேலைகள் நடந்தன. கயல்விழி பாடசாலை, நிறுவன மேற்பார்வை என பம்பரமாய் இயங்கினாள். மங்கையிடம் கயல்விழி ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். அதனைப படித்ததும் அவள் கண்களில் இருந்து ஆறாய்ப் பெருகியது. “; மகள் ..நீ அனுப்பிய பதினைந்தாயிரம் ரூபாயும் கிடைத்தது. அப்படியே மாமாவின் கடனைக் கொடுத்து விட்டோம். நீ எப்படி இருக்கிறாய். கயல்விழிக்கும் அம்மா, அப்பாவுக்கும் சுகம் சொல்லு. பதில் அனுப்பு.” என்றிருந்தது. “யார் அப்பாவுக்குப் பணம் அனுப்பியது. கயல்விழியை அப்படியே கட்டிப்பிடித்து அழுதாள். “கயல் எப்படி உனக்குக் கைமாறு செய்யப்போறன்.? தேம்பினாள். “அடி பைத்தியமே நீ என்ர உயிர்த்தோழியடி.”சரி உன்ர வேலையைக் கவனி” கூறிவிட்டு வேலையில் ஈடுபட்டாள்.
தொடரும்

Read more...

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
20
சாந்தன் வந்தான். “வாங்க சாந்தன்”. கூறிக் கொண்டு மங்கை கதிரையை எடுத்துக் கொடுத்தாள். சாந்தன் இருந்ததும் “நாளைக்கு எப்படி நமது நிகழ்ச்சிகள் இருக்கும்? சொல்லுங்க”. அருண் தொடங்கினான். ‘அக்காதான் சொல்லவேணும். அவ எப்பவும் திட்டம் போட்டுத்தான் செயற்படுவா. போட்ட திட்டங்கள் இதுவரை தோல்வியைச் சந்திக்க வில்லை”. சாந்தன் தப்பிக் கொண்டான். சாந்தனுக்கு இப்போது இருபத்து மூன்று வயது. கயல்விழியின் வயதை ஒத்தவன். ஆனாலும் அவள்மேல் கொண்ட அன்பினால் அக்கா என்றே அழைப்பான். வௌ;வேறு பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள். “மங்கைதான் எங்கட நிறைவேற்று முகாமையாளர். அவர் சொல்வதுதான் சரி”. கயல்விழி மங்கைமேல் தட்டிவிட்டாள். “அதெப்படி தலையிருக்க வாலாடுவது. கயல்விழிதான் சொல்ல வேணும்.” அவள் தப்பிக்கொண்டாள்.
“என்ன இது? ஆளையாள் தட்டிக் கழிக்கிறீங்க. சரி நான் சொல்லுறன்.” அவனே விளக்கினான். தான் போட்ட திட்டத்தை அப்படியே அவன் சொல்கிறானே. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்த நாள் நிகழ்ச்சிகளை ஒன்று விடாது சொல்லி முடித்தான். “இதுதான் உங்களின் தலைவியின் திட்டம். என்ன அப்படித்தானே மங்கை” என்றான். “அது சரி எனக்குத் தெரிந்த அத்தனையும் உங்களுக்குத் தெரியுதே. ஆச்சரியமாய் இருக்கிறது”. மங்கை கூறினாள். “இதைத்தானே அக்கா என்னிடமும் கூறினார். எப்படி உங்களுக்குத் தெரியும்”? சாந்தன் எடுத்து வைத்தான்.
“அதுதான். அப்படி வாங்க. எல்லாருக்கும் தெளிவாகச் சொல்லி, எல்லோரது ஒத்துழைப்புக்களையும் பெற்று திட்டத்தை நிறைவேற்றுவதுதான் தலைமைத்துவம். ஒரு திட்டத்தை முன்வைக்கும் போது ‘நடைமுறைப்படுத்துவது எப்படி’ என்பதை விளக்க வேண்டும். அது ஒரு படிமுறையாக இருக்கும். கயல்விழி எழுதும் ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டத்திலும் நடைமுறை மிகத் தெளிவாக இருக்கும். எந்த நிறுவனமும் அதைப்படித்துத்தான் தீர்மானத்தை எடுக்கும். அதில இன்னொரு விசயமும் இருக்கு”. சொல்லும்போது சாந்தன் “என்னது. சொல்லுங்க”. குறுக்கே கேட்டான்.
“ஒரு திட்டத்தினால் ஏற்படும் குறுங்காலப் பயனும், நெடுங்காலப்பயனும். அத்துடன் அந்தத் திட்டத்தை தக்க வைப்பதற்கான வழிமுறைகளும் சரியாக இருக்கவேணும். கயல்விழியின் திட்டங்களைப் படித்தால் ஒரு இருபத்தைந்து வருடங்களுக்குப் பின் அந்தத்திட்டத்தினால் பெற்ற பயன் நம் கண்முன் வந்து நிற்கும். இதை நான் சொல்லவில்லை. பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் ஏற்றுக் கொண்ட உண்மை. அதனால்தான் உங்களுக்கு உதவ எல்லாரும் ஓடி வாறாங்க”. பெருமையாக விளக்கினான். கயல்விழி குனிந்த தலை நிமிராது இருந்தாள்.
“சரி…. மிகுதியை நாளைக்குப் பார்ப்போம். இப்போது சாப்பிடப் போவம் எழும்புங்க. வாங்க அம்மா தயாராய் காத்திருப்பா.” கயல்விழி கூறிக் கொண்டு எழுந்தாள். “அக்கா நான் காலையில வாறன்.” சாந்தன் புறப்பட்டான். அவனையும சாப்பிட அழைத்தார்கள். அவன் சாப்பிட்டாகிவிட்டது என்றான். அவனை வழியனுப்பி விட்டு வந்தாள். “ நீங்க வாங்க” அழைத்து நடந்தாள். அருண் பின்னால் சென்றான்.
“இதற்குள் கைகளைக் கழுவுங்கள்”. தண்ணீர்க் கிண்ணத்தை நீட்டினாள். “அம்மா! அப்பா எங்கே? சாப்பிட்டாரா”? கேட்டாள். “முதல்ல நீங்க சாப்பிடுங்க. பிறகு நாங்க சாப்பிடுறம்”. அம்மா சாப்பாட்டு மேசையருகில் நின்றபடி “தம்பி வாங்க சாப்பிடுங்க.” அழைத்தார். மேசையில் சாப்பாடு இருந்தது. மூன்று பேருக்கும் தானே பரிமாறினாள். மங்கை உதவினாள். கதைத்தவாறே உணவினை உண்டார்கள்.
சுந்தரத்தார் வந்தார். “அப்பா இவர்தான் அருண்.” என்றார். தம்பியை எனக்கு நல்லாத் தெரியும். சாப்பிடுங்க.” கூறிக் கொண்டு கிணற்றடிக்குச் சென்றார். தயிர் இருக்கு. உங்களுக்குத் தயிர் விருப்பம் என்று தெரியும். ஒரு ரம்ளரில் அளவாகச் சீனிபோட்டுத் தயாரித்திருந்தாள். “வாங்க வெளி முற்றத்தில் இருந்து தயிர் சாப்பிடுவம். “மங்கை” அழைத்தாள். “நான் இங்க நிக்கிறன். வாங்க” முற்றத்தில் இருந்து மங்கை சத்தமிட்டாள். அவள் கதிரைகளோடு முற்றத்தில் நின்றாள். கயல்விழி “வாங்க” என்று குரல் கொடுத்துக் கொண்டு வெளியில் நடந்தாள். அவன் வந்ததும் தயிரைக் கொடுத்தாள். அவன் விருப்பத்தோடு பெற்றுக் கொண்டான். மூவரும் இருந்து ருசித்துச் சாப்பிட்டார்கள். “நல்ல ருசி;. இப்படியான சூழலில் இருந்து கதைச்சிக்கொண்டு சாப்பிடுவது உண்மையில் சந்தோசம்தான்”. சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்.
“தங்கம் சாப்பிடுவமா? சுந்தரத்தார் கூறிக்கொண்டே வந்தார். “நாங்க அங்க போவமா? கொஞ்ச நேரம் கதைச்சிட்டு ஒய்வெடுப்பம். வாங்க போவம்”. கயல்விழி அழைத்தாள். “மங்கை வா”. சொல்லிக் கொண்டு முன்னால் நடந்தாள். அந்த வீட்டினுள் நுழைந்து கட்டிலை ஒழுங்கு செய்தாள். படுக்கையை உதறி விரித்துத் தலையணையை சீராக்கி வைத்தாள். எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதைப் பார்த்தாள். வெளியே வந்து இருந்தாள். நிலவு முகங்களைத் தெளிவாகக் காட்டியது. “நிலவு அழகா அல்லது உன் முகம் அழகா” மனதுக்குள் கேட்டுக் கொண்டான். கயல்விழியின் முகத்தைப் பார்த்தான். அவள் நிலத்தைப் பார்த்தாள். மங்கை இரு உள்ளங்களின் தவிப்பைக் கண்டு கொண்டாள்.
“அப்பாவும் உங்களோடுதான் இங்கதான் இருப்பார். அவர் வந்ததும் நாங்க போவம். அதுவரை கதைப்பம்.” கயல்விழி சொன்னாள். “எனக்குப் பயமில்லை. ஏன் எனக்குக் காவல். நான் ஒடமாட்டன்.”? சொல்லிச் சிரித்தான். “அதுக்கில்லை. ஒரு துணை வேணும்தானே? அதுக்குத்தான்”. என்றாள். “கயல் இருங்க. இந்தா வாறன்” சொல்லிவிட்டு மங்கை வெளியில் சென்றாள். கயல் பெரிய சங்கடத்தில் மாட்டிய உணர்வினைப் பெற்றுவிட்டாள். அருணுக்கு என்ன கதைப்பதென்றே தெரியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தார்கள்.
கயல்விழி துணிந்தாள். “அருண்; பல்கலைக் கழகம் முடிந்ததும் என்ன செய்தீங்க”? கேட்டாள். “வேலைதேடியலைந்து கடைசியில் மனதுக்குப் பிடிச்சமாதிரி இல்லை என்டாலும் ஒரளவு திருப்தியோடு இந்த வேலை கிடைச்சிது. அம்மாவோடு இருக்கிறன். அம்மாவுக்கு நானும், எனக்கு அம்மாவுமாக இருக்கிறம்.” சொன்னான். நீங்க அம்மாவுக்குச் செல்லப்பிள்ளயென்று தெரியும். அம்மா எப்படி இருக்கிறாங்க? கேட்டாள். “ நல்ல சுகமாயிருக்கிறா. அம்மா தனியத்தான் இருக்கிறா. அதுதான் எங்கயிருந்தாலும் இரவில் வெளியில தங்கிறதில்ல. உங்கட வேலயென்ட படியால்தான் வந்து நிக்கிறன். கட்டபறிச்சானில் உங்கட வீட்டிலதான் தங்கவன் என்று சொன்ன பிறகுதான் சம்மதித்தவ.” ஒரு அர்த்ததோடு சொன்னான். “அம்மாக்கு என்னை எப்படித் தெரியும்? கேட்டாள். நான் உங்களைப் பற்றி அம்மாட்ட நிறையச் சொல்லியிருக்கிறன்” பெருமையாகக் கூறினான்.
“அம்மாவை ஒரு நாளைக்கு இங்க கூட்டிவாங்களன். ஒரு மாற்றமாக இருக்கும். இந்த இடம் அவருக்குப் புதுமையாக இருக்கும்”. அவள் சொன்னாள். “அது நல்லதுதான். யோசிப்பம். கயல்விழி ஒரு பொருள் நமது பக்கத்தில் நெருங்கி இருந்தாலும் அது நமக்குக் கைப்பட வேணும். அப்பொழுதுதான் மனதில் இன்பமும் வாழ்க்கையின் அர்த்தமும் புரியும். வாழ்ந்ததற்கான நிறைவும் இருக்கும். இல்லையா? வினாவாக விளக்கினான். “அது உண்மைதான். ஆனால் எது உண்மை. எது பொய் என்று சரியாக இனங்கண்ணடபின்தான் தீர்மானிக்க முடியும். இல்லையா”? வினாவாக முடித்தாள்.
“நாம் விரும்பிய பொருள் கைப்படுமா? படாதா என்பதை அறிவது சுலபமாக எனக்குப் படவில்லை.” வானத்தைப் பார்த்தபடி கூறினான். அவளுக்கு இவன் என்ன சொல்கிறான். இவன் யாராலும் எமாற்றப்பட்டானா? என்பது புரியவில்லை. அவள் தவித்தாள். என்றாலும் பதிலுக்கு அவளும் ஏதும் சொல்ல வேண்டும். “நீங்க சொல்வது சரிதான். பாரதிகூட ‘நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்’ என்று பாடியிருக்கிறார். அப்போதுதான் நீங்க சொன்னதுபோல் வாழ்க்கையின் அர்த்தம் புரியும் வாழ்ந்ததுக்கான திருப்தியிருக்கும்”. மனதில் பட்டதைச் சொன்னாள். “நான் என்ன நினைக்கிறேனோ அதை நீங்க சரியாகச் சொல்றீங்க. உங்களுக்கு ‘மைண்ட் றீடிங்’ மனதை அறிந்து சொல்லும் கலை தெரியுமா”? வேடிக்கையாகக் கேட்டான். அவள் கலகலத்தாள்.
“நீ சிரிக்கும் போதும் அழகுதான்” சொல்ல வாயெடுத்தான். சுந்தரத்தார் வரும் நிழல் அசைந்தது. “அப்பா வாறார். நாளைக்குச் சந்திப்பம். நல்லாத் தூங்குங்க. நாளைக்கு உங்களுக்குத்தான் அதிக வேலையிருக்கு. நான் வரட்டா”, சொன்னாள். “வாங்க” இரண்டு கருத்துப்படச் சொன்னான். அவள் போனாள். “என்ன வரட்டா என்று போறீங்க.”? சொல்லிச் சிரித்தான். அவளும் கூடவே சிரித்து அவன் உள்ளத்தைத் திருடிக் கொண்டு தனது உள்ளத்தை அவனிடம் விட்டுவிட்டுச் சென்றாள்.
“குட் மோர்னிங். இந்தாங்க தேநீர்”. கதவில் தட்டி ஒரமாகி நின்றாள். அவன் கதவைத் திறந்து வந்தான். அவனது கையில் தேநீரைக் கொடுத்துக் “குடியுங்க” என்றாள். குளித்து ஆயத்தமாகுங்க.. சாப்பாட்டுக்கு நான் வந்து கூப்பிடுறன்”. கொடுத்து விட்டுச் சென்றாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். காலையிலேயே தேவதையாகக் காட்சி தந்தாள். எனக்கு ‘நெருங்கின பொருள்’ நீதான். “ஒரு சமூகசேவகி எனது மனைவியாகக் கிடைத்தால் எனது பிறவியின் பயனை அடைந்தவனாவேன்.” மனதில் எண்ணிக்கொண்டான்.
கடமைகள் கண்முன்னால் நின்று அவனை விரட்டின. ஆயத்தமானான். கயல்விழி சாப்பாட்டு மேசையில் நின்றாள். மங்கை “மயங்குகிறாள் ஒரு மாது” இராகமிழுத்தாள். “மங்கை என்ன குதூகலிப்பு. என்ன விஷேசம்.” கயல்விழி ஒழுங்கு படுத்தியவாறே கேட்டாள். “இல்ல பாட்டு வந்தது. பாடிப்பார்த்தேன்”. சிரித்தபடியே சொன்னாள். “இன்றைக்கு நமது விசயமெல்லாம் நல்லபடி நிறைவேறிய பின் பாடு. உனக்கு முன்னால் இருந்து ரசித்துக் கேக்கிறன். அதுவரை கடவுள மன்றாடு”. கயல்விழி கடுகடுத்தாள்.
“எல்லாம் நல்லபடி நடக்கும். என்ர தோழியின் கனவுகள் பொய்க்காது. அதுக்காகத்தான் அவளுக்காகத் தினமும் மன்றாடி வாறன்”. மங்கையின் பதிலுக்குச் “சா…கேக்கிறதுக்கு புளிப்பாக இருக்கு. வாவா விசயத்தக் கவனிப்பம்”. கயல்விழி கூறிக்கொண்டு போனாள். “இவள் என்ன பிறவியோ தெரியாது. இவளை எப்படிப் புரியப் போறனோ தெரியாது”. அருணை அழைத்து வந்தாள் சாப்பாடு முடிந்ததும் பம்பரமானார்கள். பாடசாலை சென்று அதிபரோடு கதைத்தார்கள். அப்படியே மரவட்டகுளப் பகுதிக்குச் சென்றார்கள். சொன்னபடி இளைஞர் யுவதிகள் மரவட்ட குளப்பகுதியில் கூடியிருந்தார்கள்.
தொடரும்

Read more...

Wednesday, October 20, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
19
குலேந்திரன் அதிபரிடம் ஒரு பெரிய உறையைக் கொடுத்தார். இது இந்த ஆசிரியர்களுக்கான உதவு தொகை. அவர்களிடம் கொடுங்கள். அதிபர் பெரிய உறையைத் திறந்தார். அதற்குள் ஆசிரியர்களின் பெயர்கள் எழுதிய சிறு உறைகள் இருந்தன. பெயரை வாசித்து அவர்களிடம் அதிபர் கையளித்தார். “சாந்தனுக்கு நூலகருக்கான உதவுதொகையும் இருக்கிறது”. எடுத்துக் கொடுத்தார். அதற்குள் இருந்த படிவத்தையும் கொடுத்தார். படிவத்தில் கையெழுத்தை இட்டனர். “திறந்து பாருங்கள். இது இந்த மாணவருக்காக நீங்கள் செய்யும் சேவைக்கான யூனிசெவ் உதவுதொகை.” அதிபர் புன்னகையுடன் சொன்னார். ஒவ்வொரு உறையுள்ளும் பத்தாயிரம் எட்டிப் பார்த்தது. நன்றி சொன்னார்கள்.
“நாங்க எல்லாருக்கும் ஒரேயளவான உதவிதொகை வழங்குவது உங்களுக்குள் சங்கடமாக இருக்கும். நீங்கள் உயர்கல்வி கற்றவர்கள். உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் உதவு தொகை போதாது. ஆனால் எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை. ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து தருகிறோம்.” குலேந்திரன் விளக்கம் அளித்தார். “சேர் இதுவே எங்களுக்குப் பெரிய தொகை. இது போதும். இன்னும் உற்சாகமாகச் செய்வோம்”;. கயல்விழி நன்றியோடு சொன்னாள். மேலதிக வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உதவு தொகை வழங்கப்பட்டது. விபுலானந்த வித்தியலயத்து ஆசிரியர்களும் வந்தார்கள். அவர்களுக்குரிய உதவு தொகையையும் கொடுத்தார். பெற்றதும் அவர்கள் பாடசாலைக்குப் போய்விட்டார்கள். அதிபர் சிற்றுண்டி வழங்கினார். குலேந்திரன் விடைபெற்றுச் சென்றார். அதிபருக்குச் சந்தோசம்.
“கயல்விழி உண்மையில் உங்களைப் பற்றிப் பெருமைப் படுகிறேனம்மா. நீங்க ஒரு புதுப்பிறவி. உங்களச் சுற்றி இருக்கும் இந்தக்கூட்டம் பெரிய ஆற்றல் கொண்டது. உங்களுக்குப் பின்னால நின்று படிப்பிக்கிறாங்க. ஊரை நிறுவனமாக்கி இயங்க வைக்கிறாங்க” அவர் அடுக்கிக் கொண்டு போனார். “சேர் எங்களப் புகழாதிங்க. புகழ் மனிதனை வீழ்த்திவிடும். எங்கள உற்சாகப்படுத்துங்க. அதுதான் எங்களுக்கு வேண்டும்.” கயல்விழி இடையில் புகுந்து சொன்னாள். “அப்படி இல்லம்மா. நான் கண்ணால காண்பதைத்தான் சொல்லுறன். இன்றைக்கு உன் முயற்சி இல்லையென்றால் இந்த ஊர் விழிப்புற்றிருக்காது. சரி. அதவிடு. நாளைக்கு என்ன செய்யலாம்?” வினவினார்.
“நீங்க சொன்ன காணிப்பகுதிகளுக்குப் போகவேணும். எங்களுக்கு அது பற்றிய அறிவு இல்ல. நீங்களும் வந்தால் நல்லதாயிருக்கும்.” மெதுவாக எடுத்துச் சொன்னாள். “நில அளவையாளரிடம் அதன் படம் இருக்கும். அவங்க சரியாக அடையாளம் காட்டுவாங்க. கிராம சேவையாளருக்கு நான் சொல்லுறன். அவரும் வருவார். சரி நானும் வாறன்.” அவர் ஒத்துக் கொண்டார். கயல்விழிக்கு மனம் நிறைந்திருந்தது. ஒரு ஊரில் சேவை செய்வதன் வெற்றி அங்குள்ள அனைவரையும் அணைத்துக் கொள்வதில்தான் தங்கியுள்ளது. இதனை அனுபவத்தில் கண்டுகொண்டாள். பாடசாலை விட்டதும் வீட்டுக்குப் போனார்கள். இன்று சாரதா, ராகினி, சாந்தன் அத்தனை பேரும் படு சந்தோசத்தில் இருந்தார்கள்.
மங்கை வீட்டுக்குப் போனதும் அப்பாவைத் தேடினாள்.“ அம்மா!, அப்பா எங்கே”? அம்மாவிடம் கேட்டாள். “அப்பா கிணற்றடியில் நிற்கிறார். கைகால் கழுவிற்று வருவார். வாங்க எல்லாரும் சாப்பிடுவம்”. அம்மா ஆயத்தம் செய்தாள். அப்பா உள்ளே வந்தார். “அம்மா இப்படி வாங்க”. அம்மாவின் கைகளைப் பிடித்து அப்பாவின் பக்கத்தில் நிறுத்தி “இப்படி நில்லுங்க.” கேட்டுக் கொண்டாள். அவர்கள் கைகளைப் பிடித்துத் தனது உதவுதொகை இருந்த உறையைத் திணித்துவிட்டுக் கால்களில் வீழ்ந்து வணங்கினாள். கயல்விழியின் கண்கள் பனித்தன. கயல்விழியும் பக்கத்தில் கிடந்தாள். அம்மா பதறிப்போனார். “எழும்புங்க பிள்ளையள். நீங்க நல்லா இருக்கணும். கடவுள் உங்களக் கைவிடமாட்டார்”. வாழ்த்தினார். “சரி வாங்க சாப்பிடுவம்”. சுந்தரத்தாரின் கண்கள் பனித்திருந்தன.
“அப்பா மங்கையின் உறையினுள் பத்து இருக்கு. என்ர உறையினுள் பத்து இருக்கு. என்னுடைய உறையிலிருந்து ஐந்தை எடுத்து பதினைந்தாக மங்கையின் அப்பாவுக்கு அனுப்பி விடுங்க. பாவம் அதுகள் கஸ்டப்படுதுகள். அவங்களுக்குக் கடன் தொல்லை. நான் சொன்னேன்தானே மங்கையின் கஸ்டநிலையை”. விளக்கமாகச் சொன்னாள். மங்கைக்குச் சொல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள். “அப்பா இப்ப நாலுமணி போல அருண் வருவார். நாளைக்குக் காணி அளந்து கொடுக்க நிலஅளவையாளர்களை பிரதேசச் செயலாளர் அனுப்புகிறார். அருணை எங்க தங்க வைப்பம்”?. கேட்டாள்.
“அந்தா இருக்குது. நமது சிறிய ஏரிக்கரை வீடு. அது நல்லது. அதை வடிவாகத் திருத்திப் போட்டன். கட்டிலும் கிடக்கு. எல்லா வசதியும் இருக்கு. அவருக்குப் பொருத்தமான இடம். அதோட சாப்பாட்டுப் பிரச்சினையும் இருக்காது. எங்களோட சாப்பிடலாம்தானே. அருண் நல்லபிள்ள”. அப்பாவின் பேச்சிலிருந்து அருணை அப்பாவுக்குப் பிடித்திருப்பதை உணர்ந்து கொண்டாள். அவளுக்கு மனதுக்குள் மத்தாப்பு விரிந்தது. அப்பாவை மனதுக்குள் போற்றிக் கொண்டாள். “மங்கை வா. அந்த வீட்டைத் துப்பரவு செய்வோம்.” கயலின் உரையாடலை அப்பா கேட்டார். “மகள் அதெல்லாம் நான் துப்பரவாக்கி வைச்சிருக்கன். மூன்றுபேர் தங்கலாம். நீங்க உங்கட வேலையளப் பாருங்க”. அப்பா சத்தமாகச் சொன்னார். “மங்கை சாந்தனை வரச் சொன்னனான். நாளைக்கு நில அளவையாளர்களுக்குப் பகல் சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்ய வேணும். அப்பாட்டச் சொன்னா அவர் ஏதும் ஒழுங்கு செய்வார். சொல்லுவமா?” கயல்விழி கூறினாள். “கயல் ராகினிடம் சொல்லுவம். மற்றது மிஸ்டர் டேவிட்டும் வாறார். அவர நல்லாக் கவனிக்க வேணும். நல்ல மனிதர்”. மங்கை தனது திட்டத்தைச் சொன்னாள்.
“அப்பா நாங்க பாடசாலைக்குப் போறம். அருண் வந்தால் அறையைத் திறந்துவிடுங்க. எங்களுக்குச் சொல்லி அனுப்புங்க”. சொல்லிவிட்டுப் போனார்கள். வகுப்புக்கள் கலகலத்தன. ஆசிரியர்கள் அனைவரும் சந்தோசமாகப் பாடங்களை நடத்தினார்கள். மாலை நேர வகுப்புக்களுக்கும் பிள்ளைகள் தவறாது வந்தார்கள். இரண்டு வகுப்புக்களை நடத்தியதும் திரும்பினார்கள். நேரே கோயிலடிக்குச் சென்றார்கள். சாந்தன் விளையாட்டுத் திடலில் ஒழுங்குகளைக் கவனித்து விட்டுத் திரும்பினான். ராகினியும், சாரதாவும் உமாவும் சம்பூர் மக்கள் இருந்த முகாமுக்குப் போனார்கள். தகவல்களைச் சேகரித்தார்கள்.
சனங்கள் கூடியிருந்தார்கள். சுலோச்சனாவும் அவளது குழுவினரும் சுயஉதவிக் குழுக்களோடு கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். வீட்டுத்தோட்டங்கள் செழித்து வளர்ந்துள்ளதைத் தெரியப் படுத்தினார்கள். காய்கறி வகைகளை வேற்றாக்களுக்குக் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள். வியாபாரம் செய்யச் சைக்கிள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. பல இளைஞர்கள் தோணிகளைப் பயன் படுத்திப் போதுமான வருவாயைப் பெறுவதையும் சொன்னார்கள். பிள்ளைகள் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போவதைக் கல்விக்குழு விபரித்தது. ஊரில் என்ன நடந்தாலும் மாலை கோயிலடியில் விவாதிக்கும் பழக்கம் வந்துவிட்டது. காணி கொடுபடும் விசயத்தைப் பரப்பிவிட்டார்கள். பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது.
சரியாக ஐந்து மணி அருண் வந்தான். நேராகக் கோயிலடிக்கே வந்தான். காணிவிசயத்தைக் கதைத்தார்கள். அருணைக் கண்டதும் எழுந்து மரியாதை செலுத்தினார்கள். ஒரு கதிரையை நகர்த்தி அவனை அமரும்படி கூறினார்கள். “நாளை காலை நாங்கள் மரவட்டகுளத்துக்குப் போகிறோம். துண்டு குலுக்கிப் தெரிவு செய்து காணிகளைக் கொடுப்போம். காணிகளைத் துப்பரவாக்க வேண்டியது உங்களது கடமை. துப்பரவு செய்தவர்களது காணியை அளந்து அதற்கான கூலியைத் தருவோம். துப்பரவாக்காத காணிகளை வேறு ஆக்களுக்குக் கொடுப்பார்கள். இது இளைஞர்களுக்கான திட்டம். ஆனால் குடும்பத்வர்கள் சேர்ந்து வெளியாக்கலாம். பயிரிடலாம்.” அருண் விபரமாகச் சொன்னான். சாந்தன் தான் காணிகளைப் பார்த்து வந்ததாகச் சொன்னான்.
“நில அளவையாளர்கள் காலையில் வருவார்கள். அவர்கள் வருமுன் நாம் அங்கே நிக்கவேணும். நீங்க செய்யிற வேலையிலதான் உங்களுக்குரிய நிதியைத் தருவார்கள்;. அதனைப் பார்வையிட நாளை மிஸ்டர். டேவிட் வாறார். உங்கட கெட்டித்தனத்திலதான் எல்லாம் தங்கியிருக்கு. கயல்விழி நல்ல செயற்திட்டங்களை முன்மொழிவுகளாக அனுப்பிக் கொண்டே இருக்கிறா. காணி துப்பரவாக்க வேண்டிய ஆயுதங்களும் நாளைக்கு வரும். சரி நேரமாகிறது. எங்களுக்கும் நிறைய வேலைகள் இருக்கு”. அவனுடைய பங்கினை நிறைவு செய்தான். சனங்கள் கலையத் தொடங்கினார்கள்.
“சாந்தன் பிறகு வாங்களன். கதைப்பம்”. அருண் சாந்தனைப் பார்த்துக் கூறினான். “அருண் வாங்க வீட்டுக்குப் போவம். எல்லா ஏற்பாடும் செய்திருக்கு. வாங்க”. அழைத்தபடி கயல்விழி நடந்தாள். “நீங்க நடங்க. நான் மோட்டார் சைக்கிளை எடுத்திட்டு வாறன்”;. சொல்லிக் கொண்டு மோட்டார் சைக்கிளை இயக்கினான். பின்னால் மெதுவாகப் போனான். கயல்விழி நேரே அருணுக்காக ஒழுங்கு செய்திருந்த வீட்டுக்குப் போனாள். கதவினைத் திறந்து வசதிகளைப் பார்த்தாள். எல்லா ஏற்பாடுகளையும் அப்பா செய்திருந்தார். கழிவறை துப்பரவாக இருந்தது. துவாய், பற்பசை, சோப், பௌடர் யாவும் தயாராய் இருந்தது. அருண் வந்ததும் அவனிடம் யாவையும் காட்டினாள். “குளியுங்க. நாங்களும் குளிச்சிட்டு வாறம். கதைப்பம்”;. சொல்லிக் கொண்டு சென்றாள்.
அருண் அந்தச் சூழலைக் கண்களால் துளாவினான். ஆற்றோரத்தில் அமைந்த வீடு. கண்டல்களில் மறைந்திருக்கும் பசுமை. கூடவே ஒளிந்திருக்கும் குளிர்மை. அமைதி. அற்புதமாக இருந்தது. பல்கலைக் கழகத்தில் கயல்விழியோடு எதனைக் கதைப்பது என்று மௌனமாய் இருந்த காலங்கள். எல்லாம் நிழலாய் வந்து போயின. “இதுவரை அவள்தான் தனது இதயக்கோயிலில் குடியிருக்கும் தேவதை என்பதை இதுவரை வெளியில் சொல்லவில்லை. என்மேல் அவள் வைத்திருக்கும் பிரியம் எப்படியானது? எனது எண்ணங்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது கேட்கவில்லையே. எப்படியும் இம்முறை அறியத்தான் வேணும்”. நினைத்துக் கொண்டு குளித்தான்.
அருண் குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு வெளியில் கதிரைகளைப் போட்டு இருந்தான். காற்று வீசிச் சுகம் காட்டியது. ஆற்றின் குதூகலிப்பு அவன் உள்ளத்தைத் தொட்டது. “சா…என்ன அருமையான இடம். வானில் பவனி வரும் நிலவின் நிழல் தண்ணீரில் பிரவாகித்தது. மீன்களின் துள்ளலால் எழும் சிற்றலைகளால் நிலவின் பிம்பம் அசைந்து கொண்டிருந்தது. தன்னிலை மறந்து இயற்கையோடு ஒன்றித்திருந்தான். அவன் இளைஞனல்லவா?. மனதில் கிளர்ச்சிகள் துளிர்விடத் தொடங்கின. கயல்விழி வந்ததையும் அவன் கவனிக்கவில்லை.
“என்ன சிந்தனை? தனிமையில் விட்டுப் போட்டு போய்விட்டாங்க என்ற யோசனையா”? குரல் கேட்டதும்தான் சுயநினைவுக்கு வந்தான். “அப்படி ஒன்றுமில்ல. இந்த அருமையான இடத்தைப் பார்த்து ரசித்தேன். வாங்க.” வரவேற்றான். கதிரைகளில் இருந்தார்கள். “சாந்தனை வரச் சொன்னனான். அவர் வந்தால் நாளைய விசயங்களைப் பற்றிப் பேசலாம்”. என்றான். “மங்கை எப்படி கட்டைபறிச்சான்? பிடிச்சிக் கொண்டதா”? அருண் மங்கையிடம் கேட்டான். “கயல்விழி எங்க இருக்கிறாவோ அங்க எனக்கும் பிடிக்கும். நான் இன்றைக்குச் சற்று நிம்மதியாக இருக்கிறதெண்டால் அதுக்கக் காரணம் இந்தக் கயல்விழிதான்.” குலுங்களோடு சொன்னாள். “மங்கை சும்மா ஐஸ் வைக்காதே. வேறு எதையாவது சொல்லு. கேட்கச் சந்தோசமாக இருக்கும்.” கயல்விழி நாணத்தோடு சொன்னாள்.
“மங்கை! கவனம். கயல்விழி கனல்விழிகளாக மாறிவிடும். பிறகு புலிவேட்டையும் நடக்கலாம்.”. கூறிக்கொண்டு அருண் சிரித்தான். கயலும் சிரித்தாள். “இவன் இன்னும் அதை மறக்கல்லையே”. தனக்குள் அந்த நினைவினை மீட்டுப் பார்த்தாள். “என்ன அருண். இன்னும் அதை நீங்க மறக்கல்லயா”? நாணத்தோடு கேட்டாள். ‘எப்படி மறக்கமுடியும்.? அது அற்புதமான காட்சியல்லவா? எனக்கு இன்னும் அந்தக் கண்களை நினைத்தால் பயமாக இருக்கும்”;. சொல்லிவிட்டுச் சிரித்தான். அவளும் சிரித்தாள்;. மங்கைக்குப் புரியாத புதிராக இருந்தது.
தொடரும்

Read more...

Saturday, October 16, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
18
கட்டைபறிச்சான் புதுமெருகு பெற்றுவிடத் துடித்துக் கொண்டிருந்தது. மூதூர் வங்கியிலிருந்து முகாமையாளர் வந்தார். சுய உதவிக்குழுக்களைச் சந்தித்தார். கயல்விழி ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்தின் பெயரில் பொதுவாகக் கணக்கைத் திறக்க ஏற்பாடு செய்திருந்தாள். அப்படிச் செய்வது மக்களுக்கு நல்லது. அவர்கள் மூதூருக்குப் போகவேண்டியதில்லை. பிரதேச செயலாளர், கிராம அபிவிருத்தி அலுவலர். அதிபர் ஆகியோரின் வழிகாட்டலில் வங்கியில் சேமிப்புக்கணக்குத் தொடங்கப்பட்டது. “முதற்தடவையில் அறுபதாயிரம் வைப்பில் இடப்பட்டது. இது பெருஞ்சாதனை”. முகாமையாளர் புகழாரம் சூட்டினார். “ஒவ்வொரு குழுவும் தமது குழு உறுப்பினர்களுக்குக் கடன் கொடுக்கலாம். யாருக்கு அவசியமாகக் கடன் தேவைப் படுகிறதோ அவர் குழுவின் சிபார்சில் பெறலாம். விளக்கினார்கள்.
அருண் போன் பண்ணவே இல்லை. அவன் சொன்னதுபோல் வரவுமில்லை. பகல் முழுவதும் பாடசாலையில் வேலை. மிகுதி நேரமெல்லாம் ஊரின் முன்னேற்ற வேலை. ஓய்வில்லாது உழைத்தார்கள். பாடசாலையில் இருந்து களைத்து இருவரும் வந்தார்கள். சாந்தன் பின்னால் வந்தான். “அக்கா நாளைக்குப் பிரதேசச் செயலாளர் கட்டாயம் வரச்சொன்னவர். வரும்போது இளைஞர்களது பெயர்ப்பட்டியலைக் கொண்டு வரச்சொன்னவர்”;. என்றான். “எத்தனை மணிக்;கு. கேட்டிங்களா? வினவினாள். “ஓம் அக்கா. காலை பத்து மணிக்கு வரச் சொன்னவர்”.? “சரி நீங்க போங்க. நாளைக்குப் போவம்”. கூறிவிட்டுப் படலையைத் திறந்து உள்ளே சென்றார்கள். “மங்கை! நாங்க இரண்டு பேரும் போகவேணும். அத்துடன் சாரதா ராகினி, சுலோச்சனா, சாந்தனும் சேர்ந்து போகவேணும். அதிபரிடம் சொல்ல வேணும். முதலில் ‘வயிற்றுக்குச் சோறிட வேணும்’. பாடலாக இழுத்தாள்.
உணவின்பின் அதிபரிடம் சென்றார்கள். நாளையத் திட்டத்தை முன்கூட்டியே சொன்னார்கள். அதிபர் ஒரு புன்னகையை உதிரவிட்டு ‘சென்று வாருங்கள்” என்றார். மாலை வகுப்புக்கள் நடந்தன. வகுப்புக்கள் முடிந்ததும் சிலர் தோட்டத்துக்கு தண்ணீர் இறைத்தார்கள். சிலர் விளையாடினார்கள். இரண்டு விளையாட்டுத் திடலிலும் ‘வொலிபோல்’ நடந்தது. பெண்பிள்ளைகள் வலைப்பந்து விளையாடினார்கள். ‘சேர்ந்து வாழ’; நிறுவனத்தின் குழுவினர் அதன்பின்னர்தான் கூடினார்கள். அன்றைய வரவு செலவு பார்க்கப்பட்டது. அடுத்தநாள் பிரதேச செயலாளர் அலுவலகம் செல்வதற்குரிய ஆயத்தங்களைச் செய்தார்கள். முடிந்ததும் வீடுகளுக்குச் சென்றார்கள்.
சைக்கிள்கள் மூதூரை நோக்கிப் பறந்தன. கட்டைபறிச்சான் பாலத்தைக் கடந்து சென்றன. வீதியின் இருமருங்கிலும் நாணற்புல் வளர்ந்தோங்கி பூங்கொத்துக்களுடன் காற்றில் ஆடின. அற்புதமான காட்சியாக இருந்தது. பிரதேசச் செயலாளர் அலுவலகத்தில் சொன்ன நேரத்துக்கு நின்றார்கள். தங்கள் வரவை அறிவித்துக் காத்து நின்றார்கள். அழைப்பு மணி கேட்டதும் உள்ளே சென்றார்கள். பல அதிகாரிகள் இருந்தார்கள். விவசாயப் பணிப்பாளரும் புன்னைகையோடு இருந்தார். “ எல்லாருக்கும் வணக்கம் சேர்”. மிக மரியாதையாகச் சொல்லி நின்றார்கள். “வணக்கம் வாங்க. இருங்க. இவர்கள் அனைவரும் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். தொடங்குவோமா”? பிரதேசச் செயலாளர் தெரிவித்தார். “சரி சேர்.” கயல்விழி சொன்னாள். மிஸ்டர் டேவிட்! இவங்கதான் நான் சொன்ன ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இவர் கயல்விழி, இவர் மங்கை, சாரதா, சுலோச்சனா, ராகினி, சாந்தன்” அறிமுகம் செய்தார். இவர்கள் மீள்குடியேற்றக் கிராமத்தில் இருந்து சேவை செய்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவைசெய்தாலும் இவர்களது இலக்குக்குழு இவர்களைப் போலுள்ள இளைஞர் யுவதிகள்தான். ஊர் மக்கள் அனைவரையும் அணிதிரட்டி வலுப்படுத்தி தங்களை உணரச் செய்துள்ளார்கள். சுமார் முன்னூறு இளைஞர் யுவதிகளுக்கு வாழ்வளிக்க நினைத்துள்ளார்கள். விவசாயம், சிறுகைத்தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி பொருளாதார மறுமலர்ச்சியைக் காணத்துடிக்கிறார்கள். நாங்கள் அரச காணிகளை நாளை கொடுக்கிறோம். ஒருவருக்கு ஒரு ஏக்கர் குடியிருப்பு நலமும், இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் கொடுக்கிறோம்.” அவர் விபரித்துக் கொண்டு சென்றார்.
அவசரமாக அருண் உள்நுழைந்தான். “சேர் எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன். நிலஅளவையாளர்கள் நாளைக் காலை கட்டைபறிச்சானில் நிற்பார்கள். ஏற்கனவே அளந்து கூனியடித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லைகளைக் காட்டுவார்கள். பட்டியலில் உள்ளவாறு கொடுக்கலாம்”;. விபரமாகச் சொன்னான். பிரதேசச் செயலாளர் டேவிட்டுக்கு அவனை அறிமுகம் செய்தார். “இவர் மிஸ்டர்.அருண். கிராம அபிவிருத்தி அலுவலர். கெட்டிக்காரர். கிராம முன்னேற்றத்தில் இவரது பங்கு அதிகம்”. கூறிவிட்டுத் தொடர்ந்தார். அவனை அமரச்சொன்னார்.
“நமது கடமை இளைஞர்களை வழிநடத்துவதுதான். அவர்களின் ஆற்றலை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். உங்கள் முன்னே இருக்கிறவர்கள். எல்லோரும் பட்டதாரிகள். வேலைவேண்டும் என்று மறியற்போராட்டங்கள் நடத்துபவர்கள் மத்தியில் இவர்கள் வித்தியாசமானவர்கள். மனித வளத்தை முயற்சியில் மூலதனமிட்டு உழைப்பவர்கள். இவர்களுக்கு இப்போது நிதியுதவி தேவை. சிறிய முதல் கொடுத்தால் பெரிய பயனை அடையலாம். அதற்கு உங்கள் உதவியைக் கோருகிறார்கள். நீங்கள் அவர்களோடு சென்று இடங்களைப் பாருங்க. பிறகு முடிவெடுங்க”. சொன்னார்.
டேவிட் கடுமையாக யோசித்தார். “நான் இவங்கட முன்மொழிவைப் பார்த்துத்தான் வந்தனான். நல்லதொரு திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முறையை நல்லாக விபரித்திருந்தாங்க. நான் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறன். “ஒரு ஆளுக்கு பத்தாயிரம் வீதம் முதற்கட்டமாகக் கொடுக்கலாம். பின்னர் ஐயாயிரம் கொடுப்போம். அந்த நிதியை இவர்களின் நிறுவனத்தில் வைப்பிலிடுவோம். எங்களுக்கு மாதாமாதம் முன்னேற்ற அறிக்கை தரவேண்டும். கணக்கறிக்கை வேறாகத் தரவேண்டும். எங்கள் நேரடி மேற்பார்வை இருக்கும். இதை மட்டுந்தான் இப்போது எங்களால் செய்ய முடியும். முதல்கட்ட நிதியை நான் கொழும்புக்குப் போனதும் இவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவேன். அந்த இடங்களைப் பார்த்தால் நல்லது. நாளை பார்க்கலாம் என்றிருக்கிறோம்”. டேவிட் அழுத்தம் திருத்தமாக விபரித்தார். அருணை கயல்விழி பார்த்தாள். அவன் புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு இருந்தான்.
“மிஸ் கயல்விழி அதற்குரிய எற்பாட்டைச் செய்யுங்க. சரியாக பட்டியல் இருக்குதா? அதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டி வருமா”? விழிகளை உயர்த்தியவாறு கேட்டார். அப்போது அவரது நெற்றிசுருங்கி விரிந்தது. அதனைப் புரிந்து கொண்டாள். “சம்பூர் சனங்களும் இப்ப கட்டைபறிச்சானில்தான் முகாமில் இருக்கிறாங்க. அவர்களையும் இதில் சேர்க்கலாமா”? சாரதா கேட்டாள். பிரதேச செயலாளர் டேவிட்டைப் பார்த்தார். “நான் இருநூற்றி ஐம்பது பேருக்கு நிதியொதுக்கீடு செய்திருக்கிறன். போய்ப் பார்த்தபின்தான் சொல்லுவன். மீள்குடியேற்றம் என்றபடியால் பார்க்கலாம்”; என்றார்.
“அருண்! நீங்க நாளைக்கு இவங்களோட போங்க. இதெல்லாம் உங்கட ஏற்பாடுதானே. அதனால் திருப்தியாகச் செய்ய வேண்டும்”. “சேர் நீங்க சொன்னதை நான் நிறைவேற்றுறன். அவ்வளவுதான். இன்றையில் இருந்து ஒரு கிழமைக்கு கட்டைபறிச்சானில் தங்கி நிற்கப்போறன். நில அளவையாளர்கள் வாறாங்க. மிஸ்டர் டேவிட்டும் வாறார். இன்னும் சில நிறுவனங்களும் வரவிருக்கிறன. சம்பூர் மக்களையும் கவனிக்க வேண்டும்தானே?” தனது திட்டத்தைச் சொன்னான். கயல்விழியின் கண்கள் மலர்ந்தன. அருண் போன் எடுக்காததற்கான காரணங்களைப் புரிந்து கொண்டாள். “அருண் ஒருக்கா இவங்களோட போயிருந்து அந்தப் பட்டியலைச் சரிபாருங்க. என்ன? அப்ப இவங்கள அனுப்புவம். கயல்விழி நீங்க நல்ல திட்டங்களத் முன்வைச்சிங்க. அதைச் செய்து முடிப்பது உங்கள் எல்லோருடைய கடமையுமாகும் வாறவங்கள நல்லாக் கவனிச்சு மக்களுக்குச் சேவை செய்யுங்க”. கூறி விடைகொடுத்தார்.
மலர்ந்த முகங்களோடு வெளியில் வந்தார்கள். அருணுக்காகக் காத்திருந்தார்கள். அருண் வந்தான். “கயல்விழி எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு. ஒரு நாலு மணிபோல வாறன். பிறகு கதைப்பம். சொல்லிவிட்டுச் சென்றான். சைக்கிள்கள் வந்தவழியே திரும்பின. நேரே பாடசாலைக்குச் சென்றார்கள். அதிபர் வகுப்பில் இருந்தார். அவர்களைக் கண்டதும் அலுவலக்தினுள் சென்றார். “வாங்க இப்படி இருங்க. நல்லாக் களச்சிட்டிங்க. மங்களேஸ்! இங்க வாம்மா”. ஒரு பிள்ளையை அழைத்தார். “இப்பதானே ரீ போட்டிங்க. எடுத்துட்டு வாங்க”. அவள் போனாள். “போன விசயம் எப்படி”? விசாரித்தார்.
“சேர் உங்கட ஆசி எங்களுக்கு இருக்கு. நாளைக்கு காணிகளைக் கொடுக்க வாறாங்க. அதுமட்டுமல்ல, சேர,; ஓரு ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் நிதியையும் ஓரு நிறுவனம் தருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. நாங்க முதல் இருநூறு பேர்களைத்தான் குடுத்தம். பிரதேச செயலாளர் பட்டியலில் மாற்றங்கள் வருமா? என்று ஒரு சைகையோடு பார்த்தார். நல்ல வேளை. சாரதா கெட்டிக்காரி. சம்பூர் மக்களும் இருக்கிறார்கள். என்று சொன்னா. இருநூற்றைம்பது பேருக்கு நிதியுள்ளதாம். தான் நாளைக்கு வந்து பார்த்தபின் முடிவெடுப்பாராம். எங்களுக்கு வழி காட்டுங்க சேர்”. கயல்விழி படபடத்தாள்.
“கயல்விழி நீங்க நம்மட ஊர், மக்கள் என்று சிந்தித்து அவங்கள ஒருவாறு அணிதிரட்டி இப்ப நீங்க என்ன சொன்னாலும் செய்யும் நிலையில் இருக்கிறாங்க. நிதி நமது நிறுவனத்துக்கு வருவது நல்லது. அதை எப்படிக் கையாள்வது என்று உங்களுக்கு நல்லாத் தெரியும் மங்கை, சாரதா, ராகினி. சுலோச்சனா. சாந்தன் எல்லாரும் உங்கட பக்கம் இருக்கிறார்கள். முழு ஊருமே உங்கட பக்கம் இருக்கு. நான் பக்கமலமாக இருப்பன். கவலப்படத் தேவையில்லை. எல்லாம் நல்லபடி நடக்கும்”;. அதிபரின் ஆசி கயல்விழியின் காதுகளில் வந்து விழுந்து இனித்தது. களைத்து வந்தவர்களுக்குச் சூடான ரீ புதுத் தெம்பைக் கொடுத்தது.
யூனிசெவ் நிறுவனத்தின் வாகனம் வந்து நின்றது. குலேந்திரன் இறங்கி வந்தார். அதிபர் வரவேற்றார். வகுப்பறைகளைப் பார்வையிட்டார். கற்றல் பற்றி மாணவரிடம் விசாரித்தார். தாங்கள் சந்தோசமாகக் கற்பதாகச் சொன்னார்கள். சில பயிற்சிக் கொப்பிகளைப் பார்வையிட்டார். பாடசாலை நூலகத்தினுள் சென்றார். அதற்குப் பொறுப்பான ஆசிரியர் பதிவுகளை எடுத்துக் காட்டினார். ஒரு நாளைக்கு எத்தனைபேர் நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக பதிவுகளையும் வைத்திருந்தார். அதனைப் பார்த்துச் சந்தோசப்பட்டார். அலுவலகத்தினுள் சென்றதும் அதிபரோடு பேசினார். அதிபர் யூனிசெவ் நிறுவனம் உதவி செய்யும் ஆசிரியர்களை வரச் சொன்னார்.
தொடரும்

Read more...

Friday, October 15, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
17
மூன்று வாகனங்கள் நின்றன. அருண் முக்கியமான பாதைகளை சாரதியிடம் சொல்லியிருந்தான். யூனிசெவ் வாகனத்தில் அவன் ஏறிக்கொண்டான். அதில் கயலையும், மங்கையையும் ஏறும்படி குலேந்திரன் கேட்டுக் கொண்டார். வழியில் சந்தேகங்களைக் கேட்டறியும் நோக்கம் அவருக்கு. சில இடங்களில் வாகனங்கள் நின்றன. வீட்டுத் தோட்டங்களைப் பார்வையிட்டனர். மக்களோடு அளவளாவினார்கள். கோயிலடிக்குச் சென்றார்கள். பெருந்திரளான சனங்கள் நின்றார்கள். “ஊரைப்பார்க்க அழகாக இருக்கிறது. தெருக்கள் துப்பரவாக உள்ளன. மிஸ். கயல்விழி உங்களப்போல ஒவ்வொரு ஊரிலும் சிலர் இருந்தால் மக்கள் பயனடைவார்கள். நீங்கள் இருவர் இங்கிருந்து எப்படி எல்லா மக்களையும் அணிதிரட்டினீர்கள்?” கேள்வியாகத் தொடுத்தார். அருணை ஓரவிழியால் பார்த்தாள்.
“உங்களைப் போல் சிலநல்ல உள்ளங்கள் இருந்து உற்சாகம் தருவார்கள் என்ற நம்பிக்கைதான் சேர்”. சொல்லித் தலை கவிழ்ந்தாள். அவள் முகம் நாணத்தால் சிவந்து மலரந்;தது. யூனிசெவ் நிறுவன வாகனத்துள் விவசாயப் பணிப்பாளரும் இருந்தார். கயல்விழிக்கு இது தெரியாது. “அடுத்த கட்ட நடவடிக்கையென்ன”?. வினவினர். “சேர் இங்கிருக்கும் இளைஞர் யுவதிகளை விவசாயத்தில் ஈடுபடுத்தப் போகிறோம். அவர்களுக்குத் தலா இரண்டு ஏக்கர் நிலத்தைப் பார்த்திருக்கிறோம். விவசாயப் பணிப்பாளரைச் சந்தித்து அவரது உதவியைப் பெறப் போகிறோம். எல்லாருக்கும் வேலையிருந்தால் பிரச்சினைகள் வராது. பொருளாதார வளர்ச்சி ஏற்படும். தங்கள் காலில் தாங்களே நிற்பார்கள்.” விளக்கினாள்.
“விவசாயப் பணிப்பாளரிடம் எப்படியான உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?” விவசாயப் பணிப்பாளரே கேட்டார். “விவசாயப் பணிப்பாளர் நல்ல மனம் கொண்டவர் என்று கேள்விப்பட்டிருக்கிறம். இன்னும் சந்திக்கவில்லை”. அருண் தனக்குள் சிரித்துக் கொண்டான். கயல்விழியின் வெகுளித் தனத்தை ரசித்தான். அவள் சொல்லத்தொடங்கினாள். “விவசாய சம்பந்தமான அறிவுரைகள், அடிக்கடி வயல்களையும். தோட்டங்களையும் பார்த்து, நோய் பீடைகள் இருந்தால் அதற்குரிய வழிகளைக் காட்டும்படி கேட்போம். இந்த நிலத்துக்குப் பொருத்தமான நல்ல விதைகளை அறிமுகம் செய்யும்படி கேட்க இருக்கிறோம். இந்த இளைஞர் யுவதிகளுக்கு விவசாயத்தில் பயிற்சிகளை வழங்கும்படியும், நல்ல பயன்தரக்கூடிய நாற்றுக்களையும், மரக்கன்றுகளையும் கேட்கவிருக்கிறோம். விவசாயப் பணிப்பாளரை விரைவில் சந்திக் இருக்கிறோம்”. அவள் அடுக்கிக் கொண்டு போனாள். அவர் தனக்குள் சிரித்துக் கொண்டார்.
வாகனங்கள் கோயிலடியில் தரித்தன. இறங்கிக் கொண்டார்கள். பிரதேச செயலாளர் அவர்களை வரவேற்றார். கூட்டம் கூடுவதற்கான ஏற்பாடுகளை சாந்தன் குழு செய்திருந்தது. வந்திருந்த அனைவரும் அந்த மக்களைப் பார்த்தார்கள். பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட முகங்கள். ஓடியோடிக் களைத்து மெலிந்த உடல்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆவேசத்தோடு போராடும் துணிவுடன் நின்றார்கள். அவர்கள் மேல் அனைவருக்கும் அனுதாபம் ஏற்பட்டது. வசதியாக வாழ்ந்த மக்கள் இந்த நிலைக்கு ஆளாகி விட்டார்கள். அவர்களை வேலையில்லாப் பட்டதாரிகள் வழிநடத்துகிறார்கள்.
“அரசாங்க உத்தியோகத்தர் நாங்கள். எங்களால் ஒரு குறிப்பிட்ட உதவிகள்தான் செய்யலாம். உங்கள் ஒத்துழைப்புக் கிடைத்தால் அவற்றை இருமடங்காகச் செய்யலாம். உங்களுக்கும், எங்களுக்கும் பெருமைதரக்கூடிய செயல்களில் இந்த ஊர் இளைஞர்களும். யுவதிகளும் இயங்குகிறீர்கள். செல்வி. கயல்விழியும் அவரது குழுவும் இந்த ஊர் முன்னேற்றத்துக்கு எடுக்கும் முயற்சிகள் ஏராளம். அவர்கள் எல்லாவற்றையும் செயலில்தான் காட்டுகிறார்கள். இந்த ஊரின் தேவைகளை ஆவணப்படுத்தியுள்ளார்கள். எல்லாத்தரவுகளையும் வைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் எவ்வாறு இயங்குவதென்று திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமாக இரண்டைக் குறிப்பிடலாம். ஓன்று கல்வி. மற்றது சுயஉதவிக்குழுக்களின் பொருளாதார முன்னேற்றம். இளைஞர் யுவதிகளுக்குக் காணிகள் கேட்டுள்ளார்கள்”. அவர் நிறுத்தினார். அவரது கண்கள் ஒரு சுற்றுச் சற்றிப் பார்த்தன.
“நமது மாவட்டத்தில் உள்ள அனைத்துத் திணைக்களத் தலைவர்களுக்கும் உங்கள் நிலை பற்றி செல்வி. கயல்விழி எழுதியுள்ளார். அவற்றை எனது சிபார்சுடன் அவர்களுக்கு அனுப்பியுள்ளேன். இங்கே விவசாயப் பணிப்பாளர் இதோ வந்திருக்கிறார்” அவரைச் சுட்டிக் காட்டினார். கயல்விழியின் கண்கள் விவசாயப் பணிப்பாளரைத் தேடியது. அவளது கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அவரோடுதான் தான் கதைத்து வந்தததை நினைந்து கொண்டாள். “சே..தெரியாது போய்விட்டதே. இந்த அருணும் சொல்லவில்லையே”. அவனைப் பார்த்தாள். அவன் தெரியாதது போல் சிரித்துக் கொண்டான். “காணிக்கு நான்தான் பொறுப்பு. அதனால் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்க சிபார்சு செய்து விட்டேன்”. கூறினார்.
“இந்தக் கிராமத்தின் அபிவிருத்தியில் அக்கறை கொண்ட இன்னொருவரையும் அறிமுகம் செய்கிறேன். அவர்தான் திரு.அருண். அவரது சிபார்சில்தான் இத்தனை நிறுவனங்களும் வந்துள்ளன”. சொல்லிக் கொண்டு போனார். கயல்விழியின் கண்கள் அருணை வலம் வந்தன. நன்றியால் நனைந்தாள். “இன்று பகல் உணவுக்குப் பின் நாங்கள் அனைவரும் உங்களோடு இருந்து உங்கள் தேவைகளை நிறைவு செய்ய இருக்கிறோம். இப்போது நூலகத்தினை யூனிசெவ் நிறுவனர் திரு.குலேந்திரன் பார்வையிட்டு நூல்களை அன்பளிப்புச் செய்வார்.’ பேச்சை நிறுத்தினார்.
குலேந்திரன் நூலக அறையை நோட்டம் விட்டார். கயல்விழியையும், மங்கையையும் அழைத்தார். “இந்த நூல்களை இவர்களிடம் ஒப்படைக்கின்றேன். பயன் பெறுவது உங்களது பொறுப்பாகும்.” என்றார். நூல்களை வழங்கினார். “பூ..இவ்வளவுதானா”? சிலரின் வாய்களில் இருந்து வார்த்தைகள் வழுக்கி விழுந்தன. அங்கே பக்கத்தில் நின்ற லொறியைப் பார்த்தார். கையை அசைத்தார். பல பெட்டிகள் இறக்கப்பட்டன. சாந்தன் குழுவினர் புத்தகங்களை அறையினுள் கொண்டு சென்றார்கள். நீண்ட மேசைகள் ஐந்தும், கதிரைகளும் இறக்கப்பட்டன. “இவ்வளவும் நமக்கா?” அதே மக்கள் கூறினார்கள். புத்தகங்கள் வைப்பதற்கான அலுமாரிகள் ஐந்தும் இறக்கப்பட்டன. “இதற்குப் பொறுப்பாக சாந்தன் அவர்களை செல்வி கயல்விழி சிபார்சுவு செய்துள்ளார். அவர் பொறுப்பாக இருப்பார். அவருக்குத் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு யூனிசெவ் மாதாமாதம் நிதியுதவி செய்யும்”;. சாந்தனுடைய கைகளைக் குலேந்திரன் பிடித்து உயர்த்தியவாறு கூறினார். மக்கள் ஆரவாரித்தனர்.
‘மக்களுக்காக’ என்ற நிறுவனத்தின் வாகனங்கள் வந்தன. அந்த நிறுவனத்தின் முகாமையாளர் திரு. கங்காதரன் இறங்கி வந்தார். அருண் அவரை அழைத்து வந்தான். கயல்விழியை அழைத்தான். “நான் சொன்ன பெயரப்பட்டியல் இருக்கிறதா? எடுங்க பார்ப்பம்.” என்றான். மங்கை “இதோ” என்று நீட்டினாள். “இரண்டு பேரும் ரெடியாகத்தான் இருக்கிறிங்க”. சிரிப்போடு பெற்றுக் கொண்டான். அருண் கங்காதரனை அறிமுகம் செய்தான். உங்கள் கிராமத்தின் வளங்களை இனங்கண்டு எங்கள் நிறுவனத்திடம் உதவி கேட்டிருந்தீர்கள். அதனை பிரதேசச் செயலாளர் முன்னுரிமை கொடுத்துச் சிபார்சு செய்திருந்தார். மீன், இறால், நண்டு பிடிப்பதற்கான தோணி. வலைகளையும், அதற்கான பயிற்சிகளையும் தருவதற்காக வந்துள்ளோம். தோணிகள் வந்து கொண்டிருக்கி;ன்றன. எப்படியம் இரண்டு மணியாகும். வந்தவுடன் நீங்கள் தந்த பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களுக்கு அவற்றைத் தருவோம்.” என்றார். சனங்களுக்குச் சந்தோசம். கைதட்டி மகிழ்ந்தார்கள்.
பிரதேசச் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்கி விளையாட்டு உபகரணப் பொதிகளை ஒரு நிறுவனம் வழங்கியது. பாடசாலைக்குரிய விளையாட்டுப் பொதிகளைப் பாடசாலையில் வழங்க முடிவெடுக்கப் பட்டது. அதிபரின் அழைப்பை ஏற்றுப் பாடசாலைக்குச் சென்றார்கள். கல்வித் திணைக்களத்தின் வாகனம் வந்தது. அதிபர் வாசலுக்குப் போய் கல்விப் பணிப்பாளரை “நீங்கள் சொன்னபடி வருவீர்கள் என்று தெரியும். வாங்க சேர்” வரவேற்றார். ஒரு வகுப்பறையில் உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுந்தரத்தார் சுறுசுறுப்பாக இயங்கினார். ஆசிரியர்கள் இன்முகத்துடன் விருந்தினர்களை வரவேற்றார்கள். உயர்தர வகுப்பு மாணவர்களும், மாணவியரும் ஒத்துழைத்தார்கள். கயல்விழியும் மங்கையும் பகிர்தலில் ஈடுபட்டார்கள். ஏனைய ஆசிரியர்களும் பங்கு கொண்டார்கள்.
“நமக்காகத்தானே இவர்கள் வந்துள்ளார்கள். அவர்களை அன்போடு உபசரிப்பது நமது கடமை” என்று ஊர்மக்கள் செயற்பட்டார்கள். அடிக்கடி அருணை கயலின் கண்கள் வட்டமிட்டன. அவளை அறியாமலேயே அவனைப் பார்க்க மனம் ஆவலாய் இருந்தது. உண்டு கொண்டே பாடசாலைத் தேவைகளை கல்விப் பணிப்பாளர் குலேந்திரனுக்க விளக்கினார். குலேந்திரன் தான் எடுத்த முடிவுகளை விளக்கினார்.
“மூதூர் கிழக்கில் பதினைந்து பாடசாலைகளைத் தெரிவு செய்துள்ளோம். அதுபற்றி நீங்கள்தானே சிபார்சு செய்திருந்தீர்கள். அதில் மேலதிகமாக வகுப்புக்களை நடத்தி இழந்த கல்வியை ஈடுசெய்யும் திட்டத்தை நடைமுறைப் படுத்த நிதிவசதியிருக்கிறது. அத்துடன் கட்டைபறிச்சானில் இரண்டு பாடசாலைகளுக்கு ஆசிரியர் பற்றாக் குறைபற்றி நீங்கள் சிபார்சு செய்ததைப் பர்த்தேன். அந்த வகையில் பத்து ஆசிரியர்களுக்கு இரண்டு வருடத்துக்கான கொடுப்பனவுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். ஆறு முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கொடுப்பனவு வழங்கவுள்ளோம்.” குலேந்திரன் விளக்கமாகச் சொன்னார். கல்விப்பணப்பாளர் நன்றியைத் தெரிவித்தார்.
அலுவலர்களோடு வந்த அனைவரையும் அழைத்து உணவு கொடுத்து உபசரித்தார்கள். “இந்த மக்கள் எவ்வளவு நன்றி விசுவாசம் உள்ளவர்கள். தங்களுக்கு இல்லாவிட்டாலும் தங்களை நாடிவருபவர்களுக்குக் கொடுக்கும் பண்பு கொண்டவர்கள்.” வந்தவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள். உணவின் பின் அதிபர் அலுவலகத்தினுள் சென்றார்கள். குலேந்திரன் தொண்டர் ஆசிரியர்களது கடிதத்தில் கல்விப் பணிப்பாளரின் சிபார்சினைப் பெற்றுக் கொண்டார். பாடசாலைக்குரிய புத்தகங்களையும் விளையாட்டு உபகரணங்களையும் கொடுத்தார்கள். இரண்டரை மணிக்குக் கோயிலடிக்குச் சனெ;றார்கள்.
மீன்பிடி உபகரணங்கள் முப்பது பேர்களுக்கு வழங்கப்பட்டன. பதினைந்து பேருக்கு வியாபாரம் செய்வதற்கான பெட்டி, தராசு அடங்கிய சைக்கிள் வழங்கப்பட்டன. அவரவர் தமது பெயர்களை அறிவித்ததும் வந்து பெற்றுக் கொண்டனர். “கிராம அபிவிருத்தி அலுவலர் என்ற வகையில் வந்திருக்கும் நிறுவனங்களின் அலுவலர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். சிறப்பாக எனக்கு வழிகாட்டும் பிரதேச செயலாளரருக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். இதற்கெல்லாம் மூலகாரண சக்தியாக இருந்து இயக்கும் கயல்விழிக்கும் அவரது குழுவினருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்”. அருண் கூறிமுடித்தான்.
கயல்விழி இருகரம் கூப்பினாள். “எனக்கு என்ன கூறுவதென்று தெரியாமல் தவிக்கிறேன். நான் பலருக்குக் கடமைப் பட்டுள்ளேன். முதலில் எனக்கு வலது கரமாக இருக்கும் திருமங்கை, சாரதா, ராகினி, சுலோச்சனா, தம்பி சாந்தன் மற்றும் எங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும். அவர்கள் இல்லாவிட்டால் இவற்றைச் செய்திருக்க முடியாது. எங்கள் அதிபர் திறமைசாலி. எங்களை வழி நடத்திச் செல்வதில் வல்லவர். நாங்கள் மதிக்கும் ஒரு மாமனிதன் இருக்கிறார் என்றால் அவர் எங்கள் பிரதேசச் செயலாளர் சிவநாயகம்தான். அவர்தான் இந்தச் ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்தை அமைப்பதற்கான வழிகாட்டி”. கயல்விழியின் கண்கள் உணர்ச்சியினால் கலங்கின. அவள் தொடர்ந்தாள்.
“யூனிசெவ் நிறுவனத்துக்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம். அதேபோல் கல்விப்பணிப்பாளர், இங்கே வந்து பேருதவி செய்த அத்தனை நிறுவனர்களுக்கும் மனமார்ந்த நன்றி. எங்களுக்கு உதவுபவர் ஒருவர் இருக்கிறார். நாங்கள் என்ன நினைக்கிறோமோ. அதனை அவர் உணர்ந்து செயலில் காட்டிவிடுகிறார். பிரதேச செயலாளரினால் அனுப்பட்ட எங்கள் கிராம அபிவிருத்தி அலுவலர் திரு.அருண் அவர்கள். அவருக்குப் பெரிதும் கடமைப் பட்டுள்ளோம். எல்லோரையும் தொடர்ந்தும் அனர்த்தங்களால் அல்லல் உற்ற மக்களுக்குச சேவையாற்ற அழைக்கிறோம்”. பேசிமுடித்தாள்.
அனைவரும் விடைபெற்றார்கள். வாகனங்களில் ஏறிக் கnhண்டார்கள். “அருண்! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாது. சொல்லாமலே பலவற்றைச் செய்திருக்கிறீங்க.” அவள் உருகிநின்றாள். “கயல் உங்கள எனக்கு எப்பவோ தெரியும். நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது எனது கடமை. போகப் பொகத் தெரியும். மனதைப் போட்டுக் குழப்பாமல் வேலையைக் கவனியுங்க. நான் நாளை மறுநாள் வாறன்”. அவன் புறப்பட்டான். “போன் பண்ணுங்க”. கூறினாள். வாகனங்கள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
தொடரும்

Read more...

Wednesday, October 13, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

16
அவர் அலுவலகத்துள் சென்றார். பின்னால் கயல்விழியும் சென்றாள். மங்கை வந்து சேர்ந்தாள். “என்ன ஏதும் விஷேசமா”? அதே புன்னகையோடு கேட்டார். “ஓம் சேர். நாளைக்கு நமது பாடசாலைக்கு யூனிசெவ் அலுவலர்கள் வருகிறார்கள். நமது புது ஆசிரியர்களின் விபரங்களை அவர்களிடம் நீங்கள் கொடுக்க வேண்டும். நாங்கள் எல்லாவற்றையும் தயாரித்து விட்டோம். யூனிசெவ் அவர்களுக்கு ஓரு கொடுப்பனவு செய்தாலும் செய்வார்கள். விளையாட்டுப் பொருட்களும், நூலகத்துக்குப் புத்தகங்களும் வரும். நீங்கள் நன்றாகக் கதைப்பிர்கள். சேர் அவர்களுக்குப் பகல் உணவு கொடுப்போமா”? கேட்டார்கள். “நமது ஊருக்கு வாறவர்களுக்கு விருந்து கொடுப்பது நமது பண்பாடு. அதை மறப்பேனா?, செய்வோம். உங்கள் முயற்சிக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி”. வாழ்த்தி அனுப்பினார். வந்த பணிமுடிந்த சந்தோசத்தில் கோயிலடிக்குப் பறந்தார்கள்.
சாந்தனின் குழு கரப்பந்தாட்டத்துக்குரிய இடத்தினைத் தெரிவு செய்துவிட்டனர். நான்கு தென்னங்குற்றிகள் வந்தன. இரண்டை கோயிலடியில் நட்டார்கள். மற்றவைகளை பாடசாலைக்குப் பக்கத்தில் அளந்து நட்டார்கள். “‘வொலிபோல் கோட்’; தயார்”. சுhந்தன் உற்சாகமாகச் சொன்னான். ‘நெற்போல்’ பற்றிய சிந்தனை கயல்விழிக்குத் தட்டியது. “மங்கை நெற்போல் விசயத்தை மறந்து விட்டோமே. என்ன செய்வது? அவளைப் பார்த்துக் கேட்டாள். “அதெல்லாம் தயார்”;. சிரித்துக் கொண்டே மங்கை பதிலளித்தாள். கயலுக்குச் சந்தோசமாக இருந்தது.;. ஒருகுழு படிப்பகத்துக்கான வேலைகளில் ஈடுபட்டது. பாடசாலையில் பாவிக்க முடியாத நிலையில் இருந்த தளபாடங்களை அதிபர் படிப்பகத்துக்குக் கொடுத்தார். அவை திருத்தப் பட்டுப் பாவிக்கக் கூடியதாக மாறிவிட்டதை கயல்விழி கண்டுகொண்டாள்.
ஊரில் நடைபெறும் வேலைகளுக்கு கட்டைபறிச்சானில் உள்ளவர்களுக்குக் கொடுக்கும் கட்டாய உத்தரவை பிரதேச செயலாளர் வழங்கி இருந்தார். அதிபர் வீட்டுத் தோட்டத்துக்கான நாற்றுக்களை வழங்கினார். தோட்டங்கள் வீடுகளில் உருவாகின. புhடசாலைகளில் கற்பித்தல் சிறப்பாக நடந்தது. கல்விக்குழு பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளைக் கவனித்து அனுப்பி வைத்தது. மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை. மனித மனங்களில் ஒரு துணிவை ஏற்படுத்தி உற்சாகத்தைக் கொடுத்தால். செயல்வடிவம் பெறுவதை அவதானித்தாள். நாளைய நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்கள். “சுயஉதவிக்குழுக்கள் நிலை என்ன. இதுவரை எத்தனை குழுக்கள் உருவாகியுள்ளன.”? வினவினாள்.
“இதுவரை இருபத்தைந்து குழுக்கள் உருவாகிவிட்டன. ஒவ்வொரு குழுவிலும் பத்துப் பேர் உள்ளனர். ஒரு உறுப்பினர் ஒரு நாளைக்கு இரண்டு ரூபா வீதம் சேர்த்து வருகிறார். ஒருகிழமைக்கு ஒருவர் பதினைந்து ரூபாய் கட்டுறார். அவர்களே இதனைத் தீர்மானித்தார்கள். ஒரு மாதம் ஒருவர் அறுபது ரூபாய் கட்டுறார். ஒரு மாதத்தில் ஒருகுழுவுக்கு அறுநூறு ரூபாய் சேருது. நாங்கள் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகின்றன. இதுவரை முப்பதாயிரம் ரூபாய் சேர்ந்துள்ளது. வங்கியில் சேமிப்புக்கணக்குத் தொடங்க வங்கி முகாமையாளரோடு கதைத்து விட்டோம். வங்கியில் இருந்து ஒரு அலுவலரை அனுப்புவதாக முகாமையாளர் அறிவித்துள்ளார்.” பொருளாளர் ராகினி விளக்கமாச் சொன்னார்.
சுய உதவிக்குழுவினால் நமது கிராமம் தன்னிறைவு பெறும். இது நமது கனவு. மனிதர்கள் கனவு காணவேண்டும். அந்தக் கனவு எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையவேண்டும். அந்தக் கனவின் பொருளை நாம் அனுபவிக்க வேண்டும். நாம் நினைக்கும் பொருள் நம்மை நெருங்கி வரவேண்டும். நெருங்கின பொருள் கைப்படவும் வேண்டும். அதற்கு நமது விடா முயற்சிதான் முக்கியம். நமக்குள் எந்தப் பிரச்சினைகளும் தலைதூக்காது பார்த்துக் கொள்ள வேண்டும்.” பெரிய பிரசங்கத்தைக் கயல்விழி செய்தாள். “இவ்வளவையும் இவள் எங்கே கற்றாள்.”? மங்கை வியப்போடு மனதில் கேட்டுக் கொண்டாள்.
வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் போது பத்தரை மணிக்கு மேலாகிவிட்டது. “பிள்ளையள் ஒரே வேலையென்று அலையாமல் உடலையும் பார்த்துக் கொள்ள வேணும். சுவர் இருந்தால்தான் சித்த்pரம் வரையலாம்”. அம்மா சற்றுக் கடிந்து கொண்டார். அப்பா சிரித்துக் கொண்டார். தங்கம் அவங்க சின்னப் பிள்ளைகள் இல்ல. படித்த பட்டதாரிகள். அவங்களுக்குத் தெரியும். இந்த ஊர் மக்கள் நல்லாக இருக்க வேணும் என்றுதானே பாடுபடுதுகள். இப்ப நம்மட ஊர் எவ்வளவு சந்தோசமாக இருக்கு. எல்லோரும் எதோ தங்கள் வேலைகளையாவது செய்து கொண்டு இருக்குதுகள். அதற்கு யார் காரணம்.? நம்மட இந்த இரண்டு பிள்ளயளும்தானே?”. அப்பா சொல்லிக் கொண்டு போனார். அம்மா கேட்டு ரசித்தார்.
மங்கையின் உள்ளம் உணர்ச்சியில் பொங்கியது. “என்னையும் தன் மகளாக மதித்துப் போற்றுகிறார்களே. நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள்”. அவளது கண்கள் பனித்தன. “என்ன சென்டிமென்டா”? கயல்விழி கலகலத்தாள். “இது சென்டிமென்ற் இல்ல. உண்மை. எங்கட வீட்டில கிடைக்காத அன்பும் பாசமும் எனக்கு இங்க உன்னால கிடைக்குது. உன்னில் காட்டும் அதே அன்பை உன் அப்பா அம்மா என்மேல் காட்டுறாங்க. இதற்கு என்ன கைமாறு செய்யப் போறனோ தெரியாது”. மீண்டும் கண்கலங்கினாள். “மங்கை வீணான கற்பனையில குழம்பாத. நமக்குத் தலைமேல வேலை கிடக்கு. அதைச் செய்து முடிக்கும் வழியைப் பார்ப்பம்”;. அவளைத் தேற்றினாள்.
நல்ல நிலவு காய்ந்தது. நிலவின் ஒளி ஆற்றில் பட்டு வளவெங்கும் பளிச்சிட்டது. “வெளியில் கொஞ்சம் இருப்போமா? இந்த நிலவில் ஆற்றில் தோணியில் போய் ஒரு சுற்றுச் சுற்றி வந்தால் எப்படி இருக்கும்.”? மங்கை கூறினாள். “திடீரென என்ன கற்பனை உனக்கு? இன்றைக்குப் போயா நாளில்லையே”? சிரித்துக் கொண்டே கயல்விழி கூறினாள். அப்பாவும் அம்மாவும் வந்தார்கள். ஆற்றிலிருந்து மீன்கள் துள்ளும் சத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. “இந்த மீன்கள் தூங்குவதில்லையா”? மங்கை கேட்டாள். “மீனின் வாழ்க்கை அற்புதமானது. மீன்களும் தண்ணீரில் நீந்தியவாறே உறங்கும். சுதந்திரமாக மீன்கள் நீந்தித் திரிவதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அவற்றுக்கு நிறையவே ஆபத்துக்கள் உண்டு. பெரிய மீன்கள் சிறிய மீன்களை வேட்டையாடி விடும். பறவைகள், மற்ற உயிரினங்களினால் உயிராபத்துக்கள் உண்டு. மனிதர்களின் அச்சுறுத்தல்தான் அதிகம். விளக்கம் கயல்விழி கொடுத்தாள்.
“நாளைக்கு என்னம்மா விஷேசம்”? அப்பா வினவினார். “நாளைக்கு யூனிசெவ் வருது. இன்னும் பல நிறுவனங்களும் வரலாம்.” மங்கை விளக்கினாள். “ஏதோ ஊருக்கு நல்லது நடக்க வேணும். இந்தச் சனங்களின்ர கஸ்டம் தீரந்ததென்றால் எவ்வளவு நல்லது. ஆண்டவா நீதான் என்ர பிள்ளையளுக்கு உதவவேணும்”. அவர் கடவுளை வேண்டினார். கொஞ்ச நேரம் கதைத்தார்கள். “அப்பா அவர்களுக்கு உணவு கொடுக்க வேணும். அதிபர் ஓமென்டவர். ஆனாலும் நாங்களும் ஆயத்தமாக இருந்தால் நல்லதில்லையா”? கயல்விழி கூறினாள். நான் நாளைக்குக் காலை அதிபரோடு கதைத்து ஒழுங்கு செய்யிறன். நீங்க நித்திரைக்குப் போங்க.” அப்பா அவர்களை அனுப்பினார்.
வீதிகளில் பாடசாலைப் பிள்ளைகளின் ஊர்கோலம். கல்விக் குழுவினரின் வீதியுலா. பெற்றோரின் பரபரப்பு. பார்ப்பதற்கு இங்கிதமாக இருந்தது. மங்கை ஆசிரியர்களது சுயவிபரக் கோவைகளை எடுத்துக் கொண்டாள். வேண்டிய அறிவுறுத்தல்களை அவரவருக்கு வழங்கினாள். கயல்விழியோடு பாடசாலைக்கு விரைந்தாள். பாடசாலை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. “இன்னும் யூனிசெவ் வரல்லையே. அருண் ஏன் இன்னும் போன் எடுக்கல்ல.” அவளது மனம் அடித்துக் கொண்டது. சரியாக பத்து மணி. கயல்விழியின் தொலை பேசியின் இசை ஒலித்தது. முடுக்கிவிட்டுக் காதில் வைத்தாள்.
“ஹலோ” என்றாள். “கயல் நான் அருண். இதோ வந்து கொண்டிருக்கிறம். இன்னும் பத்து நிமிசத்தில பாடசாலைக்கு வந்திடுவம். சுரியா”? சொல்லி முடிந்ததும் வைத்து விட்டான்.
சொன்னதுபோல் வாகனங்கள் வந்து நின்றன. பலர் இறங்கினார்கள். அதிபரின் அலுவலகத்துள் சென்றார்கள். அவர் எழுந்து வரவேற்றார். கதைத்தார்கள். அதிபருடன் வகுப்பறைகளைப் பார்வையிட்டார்கள். பாடசாலையின் சுற்றுப்புறச் சூழலைப் பார்த்தார்கள். இந்தக் கஸ்டமான நெருக்கடி நிலையிலும் இப்படியொரு பாடசாலையா? வியந்தார்கள்.
பாடசாலைத் தோட்டம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் அவர்கள் கண்களைக் குளிரச் செய்தன. வகுப்புக்கள் கற்றல் கற்பித்தல் உபகரணங்களால் நிரம்பியிருந்தன. அத்தனை கற்றல் கற்பித்தல் உபகரணங்களும் மறுசீராக்கப் பொருட்களால் ஆனவை. வகுப்பறைகளுள் சென்றார்கள். பிள்ளைகள் பண்பாக வரவேற்றனர். வினாக்களையும் வினவினார்கள்.
“யார் உங்கள் ரீச்சர்?” விடைகளைப் பிள்ளைகள் சொன்னார்கள். குறித்துக் கொண்டார்கள். முன்பள்ளியினுள் சென்றார்கள். பிள்ளைகள் தரையில் இருப்பதைக் கண்டு வருந்தினார்கள். மீண்டும் அதிபரின் அலுவலகத்தினுள் வந்தார்கள். அவர்களை வரவேற்று உபசரித்தார்கள். உபசரிப்பில் நிரந்தர ஆசிரியர்களே பங்கு கொண்டார்கள். அதிபரின் மதியூகம் அப்படிச் செய்தார்கள். தேநீர் சிற்றுண்டி பரிமாறப் பட்டது. ஆசிரியர்களது கூட்டம் ஒன்றை அதிபர் ஒழுங்கு செய்திருந்தார். ஆசிரியர்கள் ஒன்று திரண்டிருந்தார்கள். அதிபரிடம் பல வினாக்களை வினாவினார்கள். ஆசிரியர்களோடும் உரையாடினார்கள். அவர்களது மனங்களில் வாழத்துடிக்கும் கிராம மக்களது ஏக்கங்கள் புகுந்து கொண்டன.
அதிபரிடம் ஆசிரியர்களது விபரங்களைக் கேட்டனர். ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். “நீங்கள் இந்தப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கொண்ட கரிசனையைப் பாராட்டுகிறோம். எங்களாலான உதவிகளைச் செய்வோம்” உறுதியளித்தார்கள்.. தற்காலிகமாகத் தொண்டு அடிப்படையில் கஸ்டப்படும் ஆசிரியர்களின் விபரங்களை அதிபர் கொடுத்தார். யூனிசெவ் தொண்டு அடிப்படையில் சேவை செய்யும் ஆசிரியர்களுக்க மாததந்தம் ஒரு தொகை நிதியை ஊக்குவிப்பாகத் தரும். இங்குள்ள இரண்டு பாடசாலைகளிலும் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதற்காக மற்ற ஆசிரியர்களுக்கும் ஒரு ஊக்குவிப்புத் தரமுன்வந்துள்ளது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும். இங்குள்ள இரண்டு பாடசாலைகளுக்கும். முன்பள்ளிகளுக்கும் தளபாட வசதி செய்து தரப்படும். நூல்நிலையங்களுக்கு நூல்கள் வழங்கப் படும்” யூனிசெவ் நிறுவனர் குலேந்திரன் உறுதியளித்தார். ஒரு தொகை உபகரணங்களையும் கொடுத்தார்.
யூனிசெவ் நிறுவனம் வந்த செய்தி பரவியது. சாரதா, ராகினி, சுலோச்சனா, சாந்தன் ஆயத்தமாக இருந்தார்கள். சாந்தன் ஓடி வந்தான். கயல்விழியிடம் சென்றான். “நாங்கள் தயாராய் இருக்கிறோம்.” கூறிவிட்டுப் பறந்தான். “சேர், உணவு விசயம்.? கயல்விழி இழுத்தாள். “அதெல்லாம் ரெடி. நமது ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முதலில் இந்த வேலைகளைப் பார்ப்போம். ஒருமணிக்குச் சாப்பிடத் திரும்பி வரலாம். எல்லாத்தையும் அவர்களிடம் சொல்லி அனுமதியும் வாங்கிட்டன். அதிபர் உற்சாகமாகச் சொன்னார்.
அதிபர் வந்தவர்களை ஊரைச் சுற்றிப் பார்க்க அழைத்தார். புறப்பட்டார்கள். கயல்விழியையும் மங்கையையும் கூடவே வரும்படி கேட்டுக் கொண்டார்கள். பிரதேசச் செயலாளர் கோயிலடியில் மக்களோடு கலந்துரையாடிக் கொண்டிருந்தார். சாரதா, ராகினி. சுலோச்சனா சாந்தன் மற்றையத் தொண்டர்களும் உற்சாகமாகச் செயற்பட்டனர்.
தொடரும்

Read more...

Monday, October 11, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

15
“பல்கலைக் கழகத்தில் சந்தித்தபின் இன்றுதான் கண்டிருக்கிறன்.” அருண்தான் தொடக்கினான். “அம்மா இதுதான் அருண். எங்களோட பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஆனால் எங்களுக்குச் சீனியர். இப்ப மூதூர் பிரதேச செயலாளர் கந்தோரிலதான் வேலை. இரண்டு வருசத்துக்குப் பிறகு இன்டைக்குத்தான் சந்தித்திருக்கிறம்”. ஒரு புன்னகையுடன் அம்மாவுக்கு அறிமுகம் செய்தாள். அம்மா ஒரு சிரிப்போடு தன்னை அறிமுகப்படுத்தினார். “முதல் திருகோணமலையில் தானே இருந்தீங்க. எப்ப இங்க வந்தீங்க? அருண் தொடர்ந்தான். “அருண் இதுதான் எங்கட சொந்த ஊர். இங்கிருந்துதான் ஏ.எல் எடுத்தனான். பிரச்சினையினால் ஒருவாறு உயிர் தப்பி திருகோணமலையில் வாடைக்கு இருந்தோம். பல்கலைக் கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அது முடியும் வரை திருகோணமலையில்தான் இருந்தோம். இப்ப இங்கு வந்திட்டம்”;. விளக்கமாகச் சொன்னாள்.
“நீங்க எப்படி இருக்கிறீங்க”. அவனிடம் வினாவினாள். “எனக்கென்ன குறை. ராசா மாதிரி இருக்கிறன். அம்மா நல்லாச் சமைத்துத் தாறா. சாப்பிட்டுப் போட்டு ஊர்சுத்துறதான் வேலை. அதுக்கு அரசாங்கம் சம்பளம் தருது”. பெரிய சிரிப்போடு சொன்னான். “கயல்! அருண் இன்னும் தமாசாத்தான் பேசுறார். ஒரு மாற்றமும் இல்ல.” மங்கை சுட்டிக்காட்டினாள். “நான் உண்மையைச் சொன்னன். நான் சமூகவியலை ஒரு பாடமாக எடுத்ததால சமூகத்தோடு சேர்ந்து சேவை செய்யச் சந்தர்ப்பம் கிடச்சிது. ஆர்.டி.ஓ. அதாவது கிராம அபிவிருத்தி அலுவலராக வேலை செய்யிறன். எனக்குப் பொருத்தமான வேலை”. சொல்லிக் கொண்டு சாப்பிட்டான். சாப்பாடு முடிந்ததும் மரநிழலில் கதிரைகளை எடுத்துச் சென்று அமர்ந்து கதைத்தார்கள்.
“அருண்! இப்ப வேலைகிடைப்பது மிகக்கஸ்டம். பட்டதாரிகள் பெருகி விட்டனர். நாட்டில பிரச்சினைகள் வந்து எல்லாம் தலைகீழாப் போச்சு. இனி நாங்க எங்கட காலிலதான் நிற்க வேணும். அரசியல்வாதிகளை நம்பி நமது இளைஞர்கள் படுகுழியில் விழுகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்து எங்களால முடியும் என்று காட்டப் போறம். அதுதான் மங்கையும் என்னோட வந்திருக்கிறா. அவவுக்கு ஒரு வேலை கிடைக்குமட்டும் இங்கு என்னோட இருப்பா. அதுவரை நாங்கள் சமூக சேவை செய்யப்போகிறோம்”. கயல்விழி மரக்கிளைகளைப் பார்த்தவாறே கூறினாள். “கயல் உங்களுடைய பாதை தெளிவானது. என்னால் உதவக்கூடிய வழிகளில் உதவக் காத்திருக்கிறன்.” உறுதியுடன் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்டுச் சந்தோசப்பட்டாள். “நான் இப்ப மூதூ; போய் செயலாளரிடம் கதைச்சிப் போட்டு திருகோணமலை போவன். நாளைக்கு யூனிசெவ் அதிகாரிகளைச் சந்திப்பன். அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களையும் சந்தித்து ஊர்நிலைமைகளை விளக்கிக் கூறுவன். உங்கட போன் நம்பரைத் தாங்க. உங்களத் தொடர்பு கொள்ள இலகுவாக இருக்கும்”. அவன் கேட்டான். கேட்டதும் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தாள். பெற்றுக் கொண்டு விடைபெற்றான். வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள். புளுதியைக் கிளப்பிக் கொண்டு மோட்டார் சைக்கிள் போய்மறைந்தது.
கோயிலடியில் மக்கள் கூடியிருந்தார்கள். பிரதேச செயலாளர் கொடுத்த கடிதங்களைச் சாந்தன் கொண்டு வந்திருந்தான். ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்தைப் பதியும் படிவங்களையும் எடுத்து வந்தான். ஒவ்வnhரு கடிதங்களிலும் ஒவ்வொரு பிரதியையும் சேர்த்து அனுப்பியிருந்தாள். அக்கடிதங்களில் தனது சிபார்சினை எழுதி அனுப்பிப் பிரதிகளிலும் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார். மோசடிகளும், தில்லுமுல்லுகளும் தலைவிரித்தாடும் அரச திணைக்களங்களில் பிரதேச செயலாளர் சிவநாயகம் ஒரு வித்தியாசமான பிறவிதான். அவர்தானே கிராம அபிவிருத்தி அதிகாரியை அனுப்பியிருந்தார். அவரை நினைந்து நெக்குருகினாள். மனதார நன்றி கூறினாள்.
நாட்கள் யாருக்காகவும் காத்திருப்தில்லை. சூரியன் மறந்தும் உதிக்காது விடுதில்லை. பகல் வரும். பொழுது பட்டு இரவு வரும். பூமிப் பந்து சுழலும் பருவகாலங்கள் நிகழும். வாழ்க்கை வண்டில் சக்கரம் போன்றது. அது சுழன்று கொணடுதான் இருக்கும். அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். அருணை நினைத்தாள். அவன் தன்னோடு பழகிய நாட்களை நினைந்தாள். மிகவும் மரியாதையாக நடந்து கொண்டான். எவரது மனமும் புண்படாத வகையில் பேசுவான். அவனை கயல்விழிக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் அது காதலல்ல. காதலிக்கும் எண்ணத்துக்கு நாட்டு நடப்புகள் இடங்கொடுக்கவில்லை. அவள் தனது அண்ணனை நினைந்து கொள்வாள். வாழ்க்கை வெறுமையாகத் தெரியும். அருண் வந்து போனதிலிருந்து அவள் மனம் படபடத்தது. அடிக்கடி நினைந்து கொள்கிறது. என்ன மனமிது. தனது மனதைக் கடிந்து கொண்டாள்.
கயல்விழியின் தொலைபேசி இசையோடு ஒலித்தது. “ஹலோ” சொன்னாள். “கயல் நான் அருண” அருண், இப்பதான் உங்கள நினைச்சனான்.” சொன்னாள். “அப்படியா? அதுசரி, நாளைக்காலை உங்கள் ஊருக்கு யூனிசெவ் அலுவலர்கள் வருகிறார்கள். ஆயத்தமாகி இருங்கள். அவர்களுடன் நானும் வரலாமா”? இடையில் ஒரு தமாஸ் விட்டான். “நீங்கள் கட்டாயம் வரவேண்டும். காத்திருப்பன்.” சொல்ல வாயெடுத்தாள். ஆனால் முடியவில்லை. நீங்களும் வாறது நல்லதல்லவா? வாங்க.” ஒருவாறு சொன்னாள்.
“கயல் இன்னுமொரு நல்ல செய்தி. அங்க எத்தனை வொலிபோல் ரீம் இருக்கு”. கேட்டான். “இன்னும் நாங்க தொடங்கல்ல. நெற்போல் ரீம் நான்கு இருக்கு. ஆனால் ஒரு உபகரணமும் இல்லை”. விபரத்தைச் சொன்னாள். “சரி நீங்க இளைஞரிடம் சொல்லி இரண்டு இடங்களில் வொலிபோல் விளையாடக் கூடியதாக ஆயத்தம் செய்து வையுங்க. கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள கட்டிடம் வெறுமையாகக் கிடக்கு அதை நான் கண்டனான். அதைத் துப்பரவாக்கி வையுங்க. அதில் ஒரு படிப்பகத்தைத் தொடங்குவம். பாடசாலைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களும் வரும். நாளைக்குச் சந்திக்கிறன். வைக்கிறன்”. அருண் தொலை பேசி இணைப்பைத் துண்டித்தான்.
“மங்கை இஞ்ச வா. நல்ல சேதி. அருண் இப்ப கோல் எடுத்தவர். நாளைக்கு யூனிசெவ் வருதாம். சாரதாவைக் கூப்பிடு. முன்பள்ளியில படிப்பிக்கிற ஆசிரியர்களின் பெயர், சுயவிபரம். கல்வித்தகைமை எல்லாவற்றையும் தயாரிக்கச் சொல்லுங்க. அதே போல் பாடசாலைகளில் கற்பிக்கும் நமது தொண்டர் ஆசிரியர்களது விபரங்களையும் தயாரியுங்க. சாந்தனை இரண்டு ‘வொலிபோல் கோட்’ போடச் சொல்லுங்க. கோயிலுக்குப் பக்கத்தில இருக்கிற கட்டிடத்தைத் துப்பரவு செய்யச் சொல்லுங்க”, அடிக்கிக் கொண்டே சென்றாள். சாரதா ஒடிவந்து கயல்விழி சொல்லச் சொல்லக் குறிப்பெடுத்தாள். அதிபரைச் சந்திக்க வேணும். “சாரதா நீங்க இந்த ஒழுங்குகளச் செய்யுங்க. நாங்க அதிபரைச் சந்தித்து விசயங்களைச் சொல்லிவிட்டு வாறம். மங்கை வா போவம்.” சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்..
அதிபர் பாடசாலையில் இல்லை. அவர் பகல் உணவுக்குச் சென்றவர். இன்னும் திரும்பவில்லை. பாடங்கள் நடந்து கொண்டிருந்தன. இரண்டு வகுப்புக்களுக்கு ஆசிரியர்கள் வரவில்லை. ஆளுக்கொரு வகுப்பில் நுழைந்தார்;கள். பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். எப்பொழுதும் பாடத்தையே கற்பித்தால் பிள்ளைகளுக்கு அலுப்புத் தட்டும். அவர்களுக்க விளையாட்டு மூலம் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் விரும்பிக் கற்பார்கள். அவர்களை அந்த நிலைக்குக் கொண்டுவருவது ஆசிரியர்களின் கடமையாகும். நமது பிள்ளைகள் பாதிக்கப்பபட்டவர்கள். அவர்களது மனம் நொந்துபோய்க் கிடக்கிறது. கண்ணுக்குத் தரியாத அந்தக் காயங்களை அவர்களிடம் இருந்த அகற்றுவதற்குரிய முறைகளைக் கையாள வேண்டும்.
சிலர் மனவடுக்களைப் போக்குவதாய் சொல்லிக் கொண்டு மக்களை மென்மேலும் துன்பத்துக்குள் ஆஆழ்த்துகிறார்கள். அவர்கள் மனம் விட்ட அழுதால் அந்தத் துயரம் நீங்கிவிடும் என்று நம்புகிறார்கள். அனால் அதனால் அவர்களுத துன்பத்தைத் தூண்டிவிடுகிறார்கள். விளையாட்டு சிறந்த மருந்து. ஆடல்பாடல் அபிநயத்தல் போன்ற கலை நிகழ்வுகள் மக்களின் துயரங்களுக்கு வடிகால்களாக அமையும் அபபடிச் செய்தால் விரைவில் அவர்கள் தங்கள் துயரங்களை மறந்து விடுவார்கள்; மனவடு மெல்ல மெல்ல நீங்கிவிடும். ஆடிக்கடி மங்கையுடன் இதனையிட்டு ஆராய்வாள். இருவரும் இவ்வகைச் செயற்பாடுகளைச் செய்து பார்த்துள்ளனர்.
கயல்விழியைக் கண்டதும் “ரீச்சர் விளையாட்டு ஒன்று சொல்லித் தாங்க” என்று குதூகலித்தார்கள். “சரி. ஒரு கொப்பியை எடுங்கள். சொன்னாள். பிள்ளைகள் தயங்கினார்கள். “எழுதுவதற்கு இல்ல. விளையாடத்தான். கொப்பியை எடுத்துக் குழல்போல் சுற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் செய்ய வேணும்”. செய்து காட்டினாள். “சரி அப்படியே கொப்பிகளை மேசையில் வையுங்கள்.” வைத்தார்கள். “இப்போது உங்கள் கைகள் இரண்டையும் விரித்து உங்கள் உள்ளங்கைகளில் ஓட்டை தெரிகறதா என்று பாருங்கள்”. சொன்னதும் பிள்ளைகள் செய்து பார்த்தார்கள். தெரிகிறதா? சிலர் “ஓம் ரிச்சர்.” என்றார்கள். பலர் “இல்லை” யென்று சொன்னார்கள். என்கும் தெரியவில்லை. எப்படி உங்களுக்குத் தரியும்? என்றாள்.
“இப்ப சொல்லுங்கள். தெரிகிறதா”? எல்லோரையும் பார்த்துக் கேட்டாள். “இல்லை. இல்லை’ என்ற பதில் வந்தது. அப்படியென்றால் உங்கள் உள்ளங்கையில் வெட்டித் துளை போடுவோமா? சிரிப்போடு கேட்டாள் “நோகும் ரீச்சர்.” சத்தமிட்டார்கள். “சரி நோகாமல் துளை போடுவம். சரியா”? “சரி ரீச்சர்”. பிள்ளைகள் ஒத்துக் கொண்டார்கள். என்னைப் பார்த்து நான் செய்வதுபோல் செய்ய வேண்டம். “தயாரா? கோப்பிய எடுங்கள். குழல்போல் சுற்றுங்கள். இடது கையால் அதனைப் பிடியுங்கள். இடது கண்ணில் அதனை வைத்துப் பிடியுங்கள்”. என்றாள்.
சொன்னதுபோல் செய்தார்கள். “இப்போது வலது கையை விரித்து இடது கையில் இருக்கும் குழாயோடு இணைத்துப் பிடியுங்கள். இரண்டு கண்களையும் திறந்தபடியே குழாயூடாகப் பாருங்கள். உங்கள் உள்ளங்கையில் ஓட்டை தெரிகிறதா? அதற்கூடாக என்னைப் பாருங்கள். நான் தெரிகிறேனா? பார்த்துச் சொல்லுங்கள்”;. என்றாள். “ஓம் ரீச்சர். ஓம் ரீச்சர்”. என்றார்கள். வகுப்புக் கலகலத்தது. அதிபர் வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்தார். “நமது பிள்ளைகளை நீங்கள் நல்லாப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதுதான் நமது மாணவர்களுக்குத் தேவை. அவர்களது மனங்களில் உள்ள உட்காயங்கள் ஆறுவதற்கு இப்படிப்பட்ட விசயங்கள் கட்டாயம் தேவை”. அதிபர் பாராட்டினார்.
தொடரும்

Read more...

Sunday, October 10, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

13
இந்த மக்களிடம் உள்ள சக்தியை ஒன்றுதிரட்டிப் பார்க்க ஆசை. அவர்களின் அறியாமையைப் போக்கி விட்டால், தங்களை உணரும் சக்தியைக் காட்டிவிட்டால் தங்களில் தாங்களே தங்கியிருப்பார்கள். பிரதேசச் செயலாளர் சொன்னதுபோல் நிவாரணப் பொருட்கள் வந்தன. “கயல்விழி யார்”? லொறியில் வந்தவர்கள் கேட்டார்கள். கயல்விழி வந்தாள். “தங்கச்சி பிரதேசச் செயலாளர் உங்களிடம் இந்தப் பொருட்களைக் குடுக்கச் சொன்னவர். எங்க இறக்க வேண்டும்? சொல்லுங்க”. அவர்கள் பதிலுக்காகக் காத்திருந்தனர். “சாந்தன், நீங்க இதற்குப் பொறுப்பு. எங்க இறக்கினால் வசதி.”? கேட்டாள். “கோயிலடி பொருத்தமான இடம். அங்க இறக்குவம்”;. சாந்தன் கூறினான். “கோயிலடியில இறக்குங்க. சாந்தன் எல்லாத்தையும் கவனிப்பார்”;. அனுப்பி வைத்தாள்.
சாந்தன் லொறிக்காரரோடு சென்றான். “ மங்கை நீ அங்க போய் மற்ற வேலைகளைக் கவனி. நான் பிறகு வாறன். சாரதாவையும் கூட்டிப்போ”. சனங்கள் வேலையில் ஈடுபட்டார்கள். நிவாரணப் பொருட்கள் வந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியது. ஒரு குழப்பநிலை உருவாகியது. சாரதாவிடம் கயல்விழி செய்தியொன்றை அனுப்பியிருந்தாள். குழுத் தலைவர்கள் தங்கள் குழுக்களோடு பகல் மூன்று மணிக்கு வருமாறு அறிவுறுத்தியிருந்தாள். வரும்போது தங்கள் குடும்ப உறுப்பினர்களது பெயர் விபரங்களை எழுதி வரும்படி அறிவுறுத்தப் பட்டிருந்தது. செய்தி மக்களிடையே பரவியது. அவர்கள் மீண்டும் தமது கடமைகளில் மூழ்கினார்கள். பகல் பன்னிரெண்டு மணிக்கு வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள்
கயல்விழி கோயிலடிக்குச் சென்றாள். பொருட்களை சாந்தனின் குழு பொறுப்புணர்ச்சியோடு இறக்கி அடுக்கியிருந்தார்கள். பொருளாளர் ராகினியின் அறிவுறுத்தலுக்கேற்ப காவலுக்கு மூன்று இளைஞர்கள் இருந்தார்கள். சாந்தனுடன் பொருட்களைப் பகிர்வது பற்றி மங்கை உரையாடிக் கொண்டிருந்தாள். ராகினியும் உடனிருந்தாள். “கயல்! எல்லாம் ஒழுங்காக இருக்கு. சாந்தன் ஏற்ற ஒழுங்குகளைச் செய்துள்ளார். ராகினி பகல் மூன்று மணிக்குச் சனங்களை வரச்சொல்லியிருக்கிறா. அவர்கள் வரும்போது தங்கள் குடும்ப விபரத்தையும் கொண்டு வருவார்கள். கொப்பியில் விபரங்;களைப் பதிவதற்குச் சுலோச்சனா தலைமையில் ஒரு குழு இயங்கும். எல்லா எற்பாடும் தயார். இரண்டரை மணிக்கு நாம் வந்தால் சரி. இப்போது வீட்டுக்குப் போய் இந்த உடல் தன்னைக் கழுவிவிடச் சொல்லுது. வீட்டுக்குப் போவோமா”? மடமடவென்று சொன்னாள். இளைஞர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.அம்மா பிள்ளைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார். “வெயில் நல்லாச் சுட்டுப் போட்டுது. ரெண்டு பேரும் நல்லாக் கறுத்துப் போனிங்க. மேலக்கழுவிட்டு வாங்க சாப்பிடுவம். அப்பா காத்துக் கொண்டு இருக்கிறார்.” தங்கம் கூறிக்கொண்டே தனது வேலைகளில் ஈடுபட்டார். இருவரும் கிணற்றடியில் தண்ணீரை அள்ளி முகத்தில் அடித்துக் கழுவினார்கள். தண்ணீர் பட்டதும் உடல் சிலிர்த்தது. சுகமாக இருந்தது. “தண்ணீருக்குச் சுவையில்லை என்று சொல்லுறாங்க. ஆனால் கட்டைபறிச்சான் தண்ணீருக்குச் சுவையிருக்கிறது. தாகத்தை இந்தத் தண்ணீர் தீர்க்கிறது”. மங்கை தண்ணீரை அள்ளிச் சுவைத்தவாறே கூறினாள்.
அப்பாவோடு சேர்ந்திருந்து சாப்பிட்டார்கள். சுந்தரத்தார் கட்டபறிச்சானுக்கு மீள்குடி ஏறியதும் மரக்கறி வகைகளை நட்டிருந்தார். அவை இப்போது பயனளித்தன. நல்ல இறால் கறி சுவையாக இருந்தது. “மகள் உங்க ரெண்டு பேரையும் பார்க்க எனக்குச் சந்தோசமாக இருக்கு. என்னோட பிரதேசச் செயலாளர் கதைச்சவர். உங்களப் போல்தான் உங்கட மகளும் பொதுத் தொண்டில இறங்கியிருக்கிறா என்று. நம்மட சனங்கள் நல்லதுகள். அவர்களிடம் ஆற்றல் தேங்கிக் கிடக்கு. நம்மட இளைஞர்கள் நல்ல கெட்டிக்காரர்கள். அதோட நல்ல விவேகிகள். நீங்கள் இரண்டு பேரும் அவங்கள்ற திறமையைக் கண்டு கொண்டியள். இதை அப்படியே பிடிச்சிங்கண்டா ஊரை முன்னேற்றலாம். அப்பாவின் ஆதரவு எப்போதும் உண்டு. பிள்ள மங்கை! வீட்டுக்கு அறிவிச்சுப்போடு. சரியா”? அவர் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்.
சரியாக இரண்டரை மணி. இருவரும் கோயிலடிக்குச் சென்றார்கள். ராகினியும் சுலோச்சனாவும் பொருள் விநியோகத்துக்கு ஆயத்தமாக நின்றார்கள். சனங்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து விட்டார்கள். பதிவுகள் நடந்தன. கிராமத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்திருந்தார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் குழுக்கள் இருந்தன. குழுக்கள் தங்கள் பகுதிப் பதிவுகளைச் செய்தன. பதிவுகள் ராகினியிடம் சென்றன. சுலோச்சனா பதிவுகள் முடிந்ததும் பொருள் விநியோகப் பகுதிக்கு வழிகாட்டினாள். சாந்தன் தனது குழுக்களோடு பொருள் விநியோகத்தில் நின்றான். மிக அமைதியாகப் பொருள் விநியோகம் நடந்தது. கிராம சேவையாளர் அருமைராசா மேற்பார்வையில் ஈடுபட்டார். அவருக்கு வேலை இருக்கவில்லை.
தனது ஊர்மக்கள் இவ்வளவு கட்டுப்பாடாக இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார். மனிதர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும் அதுதான் நிரந்தரமானது. கயல்விழிக்குச் சந்தோசம். மங்கையை அழைத்தாள். சைக்கிள்கள் உரைச்சுற்றி வலம் வந்தன. ஊர் அழகாக பளிச்சென்று இருந்தது. அப்படியே அதிபரைச் சந்திக்கச் சென்றார்கள். அதிபர் பாடசாலையில் அலுவலக வேலையில் இருந்தார். பாடசாலை விட்டதும்தான் பாடசாலை தொடங்குகிறது. உள்ள ஆசிரியர்களைக் கொண்டு மேலதிக வகுப்புக்களை நடத்திக் கொண்டு வருகிறார்.
தான் படித்த பாடசாலையை மங்கைக்குக் காட்டினாள். கயல் சின்னப் பிள்ளையாகி விட்டாள். பாடசாலைத் தோட்டம் பூத்துக் காய்த்துக் கலகலத்தது. என்ன பயிர் இல்லை.? உற்றுப் பார்த்தார்கள். வெங்காயம் சிலிர்த்து வளர்ந்திருந்தது. வெண்டி விரல்களை நீட்டி ‘என்னைப் பறித்துச் சாப்பிடுங்கள்’ என்று காய்களைத் தள்ளியிருந்தது. தக்காளிப் பழங்கள் கனிந்திருந்தன.
பாடசாலையைச் சுற்றிவிட்டு அதிபரின் அலுவலகத்தினுள் புகுந்தார்கள். அதிபர் இரத்தினசிங்கம் “வாங்க” என வரவேற்றார். “சேர் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் வேலை செய்வீங்க”? ஒருபுன்னகையோடு கேட்டாள். “பாடசாலை நேரத்தில் பாடங்களைப் படிப்பிப்பதில் ஈடுபடவேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை. அதனால் அலுவலக வேலைகளைப் பாடசாலை விட்டபின்தான் செய்யலாம். இது நமது பாடசாலை. எனக்கு முதல் இருந்தவர்கள் வழிகாட்டிச் சென்று விட்டார்கள். அவர்களைப் பின்பற்றி நான் செய்கிறேன்”. ஒரு அலுப்பில்லாது கதைத்தார். “இப்பவும் மேலதிக வகுப்புக்கள் நடக்கின்றன. நமது ஆசிரியர்களும் மிக நல்லவர்கள். நல்ல ஒத்துழைப்புத் தருகிறார்கள்”. கூறிக் கொண்டு போனார்.
“முக்கியமாக எந்தெந்தப் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது”? வினவினாள். “விஞ்ஞான கணித பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. உயர்தர வகுப்பில் தமிழ், புவியியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை”. தனது பெருங்குறையை விளக்கினார். “சேர் உங்கள் அனுமதி கிடைத்தால் மங்கை தமிழ், புவியியல் பாடங்களை கற்பிக்க வருவார். நான் கணிதம் விஞ்ஞான பாடங்களைக் கற்பிக் வாறன். காலையில் சொல்லியனப்பினால் வருவோம். மற்றப்படி மாலை வகப்புக்களை நாங்கள் நடாத்துகிறோம். உங்களுக்கும் நிர்வாகச் சிக்கல் இருக்காது”. கயல்விழி தனது திட்டத்தை விளக்கினாள். அதிபரின் முகம் மலர்ந்து பெரிய சந்தோசத்தில் திளைத்தார்.
“சேர், உங்களிட்ட ஒரு உதவி கேட்கலாமா”? மங்கை மெதுவாகத் தொடங்கினாள். “நமது சின்னப்பிள்ளைகளுக்குச் சிறுவர்களுக்குப் பாடசாலைகள் இல்லை. நமது பாடசாலையில் பாவிக்காத வகுப்பறையொன்றைத் தந்தால் உதவியாக இருக்கும். எங்கள் தொண்டர்கள் கற்பிக்கத் தயாராய் இருக்கிறார்கள். நீங்கள் இடம் தாறதெண்டால் நாளைக்கே தொடக்கலாம் என்றிருக்கிறோம்”. கேட்டிருந்தார்கள். “நல்ல விஷயங்கள் நடக்கிறதென்றால் அதற்கு யாரும் மறுப்புச் சொல்ல மாட்டார்கள். நீங்கள் நாளைக்கே தொடங்கலாம்.” பதிலிறுத்தார். கயல்விழி மங்கையைப் பார்த்தாள். இருவரும் சந்தோசத்துடன் நன்றி சொன்னார்கள்;.
“கீழ் வகுப்புக்களில் ஆசிரியர் பற்றாக்குறையுண்டு. பல பழைய மாணவிகள் ஜீ.ஏ.கியு செய்து போட்டு இருக்கிறார்கள். அவர்களது உதவிகளைப் பெறுவதற்கு உதவலாமா”? அதிபரே கேட்டார். “சேர் எத்தனை பேர் வேண்டும்.”? கேட்டுநின்றார்கள். “கட்டாயம் ஐந்துபேர் வேண்டும்”. பதிலிறுத்தார். நாளைக்கே அவர்கள் வருவார்கள். அத்துடன் நாளைக்கு சிறுவர் பாடசாலையையும் திறப்போம். நாங்களும் பாடசாலைக்கு வந்து பாடங்களைத் தொடங்குகிறோம். எதற்கும் நீங்கள் கல்விப் பணிமனையில் அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள். வருமுன் காத்தல் தலைசிறந்தது. இல்லையா சேர்.”? அறிவுரையாகக் கூறினார்கள். அதிபர் சிரித்தார். “அதைப்பற்றி கவலை வேண்டியதில்லை. இது ‘அவசரக் காலக்கல்வி’ என்ற திட்டத்தில் நடப்பது. நமது கல்விப்பணிப்பாளர் குணராசரத்தினம் ஏற்கனவே அனுமதி தந்து விட்டார்”. சிரிப்போடு பதிலளித்தார்.
“நாற்று மேடையில் நிறையவே பயிர்கள் உள்ளன. நாங்கள் வீட்டுத்தோட்டத்தை கட்டயப்படுத்தி முன்னெடுக்கப் போகிறோம். நீங்கள் வேண்டிய பயிர்க் கன்றுகளைத் தந்துதவினால் பேருதவியாக இருக்கும். இப்போது எங்களிடம் நிதிவசதி யில்லை. தரமுடியுமா சேர்.”? மிகப் பணிவாகக் கேட்டார்கள். “நமது பிள்ளைகள் செய்த தோட்டம் அது அவர்களுக்கு உதவுமென்றால் எவ்வளவு சந்தோசம்?. இன்னும் மூன்று நாட்களால் கன்றுகளைப் பிரித்து நடலாம்.” அதிபர் பதிலளித்தார். அதிபருக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். சனங்கள் பொருட்களைப் பெற்றுக் கொண்டிருந்தர்கள்.
சாரதா தகவல்களைச் சரிசெய்து கொண்டிருந்தாள். சிலர் தகவல்களைச் சரிபார்த்தனர். எல்லோரும் இயங்கிக் கொண்டிருந்தர்கள். கயல்விழி கோயிலடியில் குந்தியிருந்தாள். பக்கத்தில் மங்கை வந்தாள். ராகினி, சுலோச்சனா வந்தார்கள். சாந்தனும் வந்து சேர்ந்தான். நாளை நடைபெறவுள்ள திட்டங்களை விபரித்தார்கள். செய்திகள் பரவின. சாந்தனின் குழு சைக்கிள்களில் பறந்து செயல்களில் ஈடுபட்டன. சிறுவர் பாடசாலையில் கற்பிக்க நான்கு பேர் முன்வந்தார்கள். பாடசாலையில் படிப்பிக்க ஐந்து பேர் தயார். முன்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன.
ஆறரை மணிக்கு வேலைகள் யாவும் முடிந்தன. ஏழு மணிக்குக் கல்விக் குழுச் சந்திப்பு நடந்தது. “அதிபரோடு உரையாடியபடி நடவடிக்கைகளை மெற்கொள்வோம். ஒன்றை மட்டும் கவனியுங்கள். நமக்கு இப்போது நிதிவசதியில்லை. ஆனால் அதனைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இரண்டு பாடசாலைகளுக்கும் பத்துப் பேர் ஆசிரியர்கள் வேண்டும் ஆறு முன்பள்ளி ஆசிரியர்கள் வேண்டும். நமது ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத்தின் கடமைகளை செய்வதற்குப் பலர் வேண்டும். உங்கள் ஒத்துழைப்புத்தான் வேண்டும். அதுதான் நமது முதலீடு. உங்களை நம்பித்தான் பெரிய பொறுப்பை ஏற்றுள்ளேன். இனிமேல் நீங்கள்தான் எல்லாம்”. பேசும்போது அவள் கண்கள் பனித்தன. சற்று நேரம் மௌனமாக நின்றாள்.
“அக்கா நீங்க ஒன்றுக்கும் கவலைப்படாதிங்க. நாங்கள் இருக்கிறம். நீங்க என்ன சொல்லுறிங்களோ அதனைச் செய்யத் தயாராய் இருக்கிறம். நாளை நீங்கள் சொன்னபடி எல்லாம் நடக்கும். சனங்கள் இப்ப நமது பக்கம் இருக்கிறாங்க. நமது பிள்ளைகளைப் படிக்க வைக்கவேணும். அதைச் செய்வம்”. சாந்தன் பக்கபலமாக இருந்து கூறினான். நளைய ஒழுங்குகளைத் திட்டமிட்டார்கள். முன்பள்ளி ஆசிரியர்களின் பெயர்களை மங்கை தயாரித்தாள். பாடசாலையில் கற்பிக்க முன்வந்தவர்களின் பெயர்களையும் எழுதிக் கொண்டாள். பெற்றார்களுக்கு முன்பள்ளி பற்றிய செய்தி அறிவிக்கப் பட்டது. ஒழுங்குகளை முடித்துவிட்டு வீடுகளுக்குக் கலைந்தார்கள் மெல்லமெல்ல வானம் தெளிவானது. கிழக்கு வானில் வெண்ணிலவின் ஆட்சி. கருமேகக் கூட்டங்கள் கலைந்து விட்டன. மெலிதான கருமேகங்கள் வெண்ணிலவைப் போர்த்திப் பார்க்கும் ஆசையில் ஈடுபட்டன. அவை மூடும்போது வெண்ணிலவின் ஒளி மெதுவாக மங்கலாகும். மேகம் அசைந்து சென்றதும் சந்திர ஒளி பிரகாசிக்கும். “இப்போது கருமேகம் மறைத்திருக்கிறது. மேகம் விலகத்தான் போகுது. நமக்கும் வாழ்வில் ஒளி வீசத்தான் போகிறது. வாழ்க்கை என்பது வீசுதென்றலல்ல. சுழன்றடிக்கும் சூறாவளி. நாணலாய் நின்று பார்ப்போம். முயன்று முயற்சிப்போம். முயற்சி வீண்போவ தில்லை.” கயல்விழி எழுந்திருந்தாள். அவளுக்கு அந்த முரட்டுத் தைரியம் எங்கிருந்து வந்தது? அவளது தந்தை ஊட்டி வளர்த்த தைரியம். “கயல்விழி நீ வாழப்பிறந்தவள். இந்த உலகில் நீ ஒரு உதாரணமாக, வழிகாட்டியாக வாழ்ந்து காட்டவேண்டும்.” அப்பா அடிக்கடி கூறும் தாரகமந்திரம். காதுகளில் ஒலித்தது. வாழ்ந்து காட்ட உறுதிபூண்டு விட்டாள்.
தொடரும்

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP