Saturday, October 2, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
5
மக்கள் முண்டியடித்து வஸ்சில் ஏறினார்கள். கொண்டுவந்த பொருட்களை வஸ்சில் ஏற்றமுடியவில்லை. “எப்படிப் போகப்போறம். சரியான சனமாக்கிடக்கு. ஆட்டோவில போவம். பிள்ளையும் களைச்சுப் போனாள்.” சுந்தரத்தார் யோசித்தார். தங்கத்தின் முகமும் ஆமோதித்தது. ஆட்டோவை அழைத்தார். பேரம்பேசி ஏறிக்கொண்டார்கள். ஆட்டோ குறுக்குச் சந்துகளால் புகுந்து புறப்பட்டது. குதிரைச் சவாரி செய்வது போலிருந்தது. வீதிகள் பள்ளம் படுகுழிகளோடு படுத்திருந்தன. கயல்விழிக்கு ஆச்சரியமாக இருந்தது. இது நான் பார்த்த மூதூரா? எவ்வளவு மாற்றம். தெரிந்த முகங்களைக் காணமுடியவில்லை. பற்றைக்காடுகள் மண்டிக்கிடந்த பகுதிகள் குடிச்செறிவுள்ள பகுதிகளாக மாறிவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் குடிச்செறிவினைக் காணமுடியவில்லை. ஜெட்டியிலும் தமிழ்க் கடைகளைக் காணவில்லை.
குறுக்கு வழி கட்டைபறிச்சான் ஆற்றுப் பாலத்தை இலகுவில் காட்டியது. ஆற்றுக்கப்பால் தமிழ் மக்களின் நடமாட்டம் தெரிந்தன. வீதியின் கரையோரம் பற்றைக் காடுகள். பல்வகைத் தாவரங்கள் நெடிதாக வளர்ந்திருந்தன. கண்டல் தாவரங்கள் செழித்திருந்தன. கட்டைபறிச்சான் கிராமம் இதுதானா? அடையாளம் காணமுடியாதுள்ளது. அழகான வீடுகள் எங்கே? சமதரையில் ஆங்காங்கே சில மரங்கள் மட்டும் தெரிந்தன. வேலிகள் இல்லை. தற்காலிகக் கொட்டில்களில் மக்கள் தஞ்சம் புகுந்திருந்தனர். பெய்த மழைநீர் வீதிகளிலும், தூர்ந்து போய்கிடக்கும் ஷெல்விழுந்த பள்ளங்களிலும் தேங்கிநின்றது. “அப்பா இது எந்தத் தெரு.”? கயல்விழியால் அடையாளம் காணமுடியாதிருந்தது. அப்பாவிடம் கேட்டாள். சுந்தரத்தாருக்கும் தடுமாற்றமாகத்தான் இருந்தது. கற்பகவிநாயகர் கோயில் தெரிந்தது. அது உடைந்து கிடந்தது. அதனை அடையாளம் கண்டு கொண்டாள்.
விபுலானந்த வித்தியாலயம் விழுந்து கிடந்தது. அதனைத் தூக்கி நிறுத்த மக்கள் வந்து விட்டார்கள். ஆட்டோ சுந்தரத்தாரின் வீட்டுக் காணியில் நின்றது. பேசியவாறு பணத்தைக் கொடுத்து ஆட்டோவை அனுப்பினார்கள். மெதுவாக உள்ளே நடந்து சென்றார்கள். ஆளுயரத்துக்குச் செடிகள் வளர்ந்திருந்தன. வீட்டின் சிதைவுகள் எட்டிப் பார்த்தன. பலஆண்டுகளுக்குப் பின் தனது சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள்.
ஊரைவிட்டுப் போய் வருடங்கள் பல கழிந்து போயின. இப்போதுதான் மக்களைக் குடியேறுவதற்கு அனுமதித்து உள்ளார்கள். ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஆயம் புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்கு உதவியுள்ளது. பலர் இன்னும் வந்து சேரவில்லை. வந்தவர்களுக்கு வீட்டைத் திருத்துவதற்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. பலர் திருத்த வேலைகளில் ஈடுபட்டுவிட்டனர். சுந்தரத்தாரும் வந்து விட்டார். கயல்விழிக்குப் புதியதொரு உலகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. புதிதாகக் காடுகளை வெட்டிச் சேனைப்பயிர் செய்யும் உணர்வு பிறந்தது.
சுந்தரத்தார் வீட்டையும் திருத்துவதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. சுந்தரத்தார் திருத்த வேலைகளில் ஈடுபட்டார். வேலைக்கு ஆட்களைப் பிடித்தும், தானும் சேர்ந்தும் வளவினைச் சுத்தம் செய்து விட்டார். ‘ஏரிக்கரை’ அவரது ஓய்வு இல்லம். அதனைத் திருத்தி விட்டார். தற்காலிகமாகத் தங்குவதற்குக் கொட்டில் போட்டாகி விட்டது. செல்லச்சாமி கிணற்றை இறைப்பதற்குப் பம்செற் எடுத்து வந்தார். கிணற்றைத் துப்பரவு செய்தார்கள். கயல்விழியும் சேர்ந்து கொண்டாள். பல்கலைக்கழகத்தில் புத்தகங்களோடு கிடந்தவளுக்கு இங்கு அவற்றைத் துறந்து உடலுழைப்பில் ஈடுபடுவது சுகமாக இருந்தது.
“மகள் நீ அம்மாவோடு திருகோணமலையில் போயிரு. நான் இந்த வேலைகள முடிச்சிட்டு வாறன். பிறகு நமது சாமான்களை எடுத்துக் கொண்டு வருவம்.” சுந்தரத்தார் கூறினாள். “அப்பா நானும் இங்கிருந்தால் நல்லது. நான் அங்க இருந்து என்ன செய்யிறது? இஞ்ச இருந்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்தச் சனங்களோடு பழகி வாழலாம். அழிந்த நாட்டில் புதிதாய்க் குடியேறுவது போலிருக்கிறது. இந்தத் தோட்டத்தை மாற்றியமைக்கப் போறன்”. ஒரே பதிலாகச் சொன்னாள். சுந்தரத்தார் உலகையறிந்தவர். மகள் சொல்வதிலுள்ள உண்மையை உணர்ந்து கொண்டார். “தங்கம் நீ ஒருக்கா திருகோணமலைக்குப் போய் வீட்ட நல்லாப் பூட்டிப்போட்டு வந்தால் நல்லது”. மனைவியைப் பார்த்துச் சொன்னார்.
“அதெல்லாத்துக்கும் ஏற்பாடு செய்து போட்டுத்தான் வந்தனான். பக்கத்து வீட்டு முத்தம்மாக்காட்டச் சொல்லிப்போட்டன். அவ பார்த்துக் கொள்ளுவா. தம்பிக்கும் சொன்னான். அவரும் பார்த்துக் கொள்வார். நாங்க இந்த வேலைகளக் கெதியாச் செய்து முடிச்சிப்போட்டு இஞ்ச வந்திட வேணும்”. தங்கம் சிதைவுகளை அப்புறப் படுத்திக் கொண்டே கூறினாள். தங்கள் வேலையைத் தாங்கள் செய்வதில் உள்ள திருப்தி மகத்தானது. அலுப்பில்லாது அயராது உழைத்தார்கள். முதலில் அடுக்களையைத் துப்பரவாக்கினார்கள். கிடந்த தடிகளை எடுத்துக் குசினியை திருத்தியமைத்தார்கள். பெரிய மண்டபத்தோடு கூடிய வீடு சிதைந்து கற்குவியலாகக் கிடந்தது. கற்களை அப்புறப்படுத்தினார்கள். நடு அறையின் சுவர்கள் தப்பியிருந்தன. சுவர்கள் வெடிக்கவில்லை. கூரையில்லாது இருந்தது. அந்த அறையினைத் துப்பரவு செய்தார்கள். ‘யூ.என்.எச்.சி.ஆர் அலுவலர்கள் கூடாரத்துக்குரிய படங்கு கொடுத்தார்கள். அதனை விரித்து அந்த அறையின் மேல் விரித்தார்கள். முறிந்து கிடந்த வீட்டுக் கைமரங்களைச் சுந்தரத்தார் பொருத்தினார். ஒரு நீளமான கைமரம் உருவாகியது. அதனை அறையின் மத்தியில் வைத்து உயர்த்திவிட்டார். பார்ப்பதற்குக் கூம்பு வடிவில் தெரிந்தது. “அப்பா இது பிரமிட் கூடாரம்” கயல்விழி சிரிப்போடு சொன்னாள். “அதென்ன பிரமிட் கூடாரம்’? ஆச்சரியமாக் கேட்டார்.
“எகிப்திய மன்னர்கள் இறந்தபின் அவர்களது உடல்களையும், அவர்கள் விரும்பிய பொருட்களையும் பாதுகாப்பாக வைத்து கூர்நுனிக் கோபுரங்களைக் கட்டுவார்கள். அதற்குள் இருக்கும் பொருட்கள் அழியாது பாதுகாப்பாக இருக்குமாம். அதனைப் போல்தான் நமது வீடும் இருக்கிறது.” அவள் விளக்கமாகக் கூறினாள். அவர் கேட்டாரோ கேட்கவில்லையோ தெரியாது. தனது வேலையில் மும்முரமாக இருந்தார். படுக்கவும் இடந்தயாராகி விட்டது. கிணறும்தயார். குடியேறும் குடும்பங்களுக்குச் சமையலுக்கான பாத்திரங்களை ஒரு அரசசார்பற்ற நிறுவனம் வழங்கியது. தங்கம் அவற்றைப் பெற்று வந்தாள். தங்கத்தின் வழமையான கடமைகள் தொடங்கி விட்டன.
செல்லச்சாமி ஒரு பைநிறைய இறால் கொண்டுவந்தார். “அண்ணன் கயலும் வந்திருக்கு. அவளுக்கு இறால் பிடிக்கும். மலிவாகக் கிடச்சிது. வாங்கி வந்திருக்கிறன். கூறிக் கொண்டே கொடுத்தார். “சித்தப்பா இறால்பாலத்துக்குப் போகலாமா? போக விடுறாங்களா”? ஆச்சரியக் குறியோடு கயல்விழி கேட்டாள். அம்மன்நகரில சனங்கள் குடிவந்திற்றாங்கள். பாலத்தடியில் ‘ஆமிசெக் பொயின்ற்’ இருக்கு. போறவாற ஆக்கள நோட்டம் விடுறாங்க. ஆனால் கரைச்சல் இல்ல. போய்வரலாம். பகல்நேரத்தில இறால் மீன் பிடிக்க விடுறாங்க”. செல்லச்சாமி விளக்கினார். “ம்…. நமக்கு வந்த கேடு”. தங்கம் புறுபுறுத்தாள்.
தங்கம் சுறுசுறுப்பானாள். இன்றைக்கு அவளுக்கும் ஒரு புத்துணர்வு ஏற்பட்டுவிட்டது. மூவரும் சேர்ந்து ஆளுக்கொரு வேலையைச் செய்தார்கள். ஆற்றோரத்தில் தேற்றாமரம் நிழல் பரப்பிநின்றது. அதனைச் சூழவுள்ள பகுதியை கயல் துப்பரவாக்கினாள். தங்கம் நிறுவனம் கொடுத்த பாயை விரித்து சாப்பாட்டுக்காகத் தயாரானாள். “முகத்தக் கழுவிக் கொண்டு வாங்க. சாப்பிட்டுப்போட்டு வேலை செய்யலாம்”. அழைத்தாள். அப்போதுதான் கயல் பசியை உணர்ந்தாள். நல்ல பசியாய் இருந்தது. அம்மா சொன்னபடி செய்தார்கள்.
தேற்றாமரத்தின் நிழல் குளிர்ச்சியாய் இருந்தது. உணவு ருசித்தது. பசி ருசியை அறியாது என்பார்கள். கயலுக்கு இன்று சாப்பாடு அருமையாகச் சுவைத்தது. “அப்பா இன்றைக்குத்தான் சாப்பாடு ருசி. இறால்கறி சுப்பர்”. கூறிக் கொண்டு சாப்பிட்டாள். “அது நமது ஊர்த்தண்ணியின் விஷேசம்”. அம்மா பெருமையாகச் சொன்னார். ‘எந்த ஊர் என்றாலும் - அது நம் சொந்த ஊர் போல் வருமா’ என்ற பாடல் கயலுக்கு நினைவில் தட்டியது. சிரித்துக் கொண்டாள். சுந்தரத்தார் அவர்களது உரையாடலைக் கேட்டுப் புன்னகைத்தார். உண்டமயக்கம் தொண்டருக்கும் உண்டாம். சுந்தரத்தார் களைத்திருந்தார்.
தேற்றாமரத்தின் வேர் புடைத்து நிலத்தின்மேல் தெரிந்தது. அப்படியே அந்த வேரில் சாய்ந்து கோழித்தூக்கம் செய்தார். கயல் அப்பாவைப் பார்த்தாள். கவலைகுடிகொண்ட அவரது முகத்தைப் பார்த்தாள். அனுபவ ரேகைகள் நெற்றியில் தடம் பதித்திருந்தன. “எங்களை வளர்த்தெடுக்க அப்பாவும் அம்மாவும் பட்டபாடு” நினைந்தாள். வந்த உறக்கமும், உற்சாகமும் காற்றில் பறந்தன. அவள் கண்கள் பனித்தன.
அப்படியே அப்பாவை அணைத்துக் கதறி அழவேண்டும் போலிருந்தது. அப்பா அன்று குலுங்கிக் கதறி அழுததை நினைந்து கொண்டாள். எதற்கும் கவலையடையாத அப்பா அன்று துடிதுடித்து அழுதார். அண்ணன் இளங்கோ கெட்டிக்கார மாணவன். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். பாடசாலை விட்டு வரும்வழியில் சில வாலிபர்களால் அழைத்துச் செல்லப்பட்டான். அவனோடு படிக்கும் பலரைக் கூட்டிச் சென்றார்கள். இயக்கம் இளைஞர்களைக் கடத்தி ஆயுதப்பயிற்சி வழங்குகிறார்களாம்.
எந்தப் பெற்றார் தங்கள் பிள்ளைகளைக் களப்பலி யாக்குவார்கள். ஊரே கலங்கி நின்றது. சுந்தரத்தார் உரியவர்களைக் கண்டு விசாரித்தபோது கிடைத்த பதில் ‘நாங்கள் பிடிக்கவில்லை’ என்பதுதான். அண்ணனை அவர்கள் அழைத்துச் சென்றபோது இராமனை இழந்த தசரதனைப் போல் ஆவிதுடித்து அரற்றிய காட்சியை நினைந்து உருகினாள். அன்று போனவன்தான். இதுவரை அவனது செய்தி கிடைக்கவில்லை. எப்படி இந்த அப்பாவினால் சகித்துக் கொள்ள முடிந்தது? அவள் மனம் அழுதது.
அண்ணனால் அப்பாவுக்கு ஏற்பட்ட துன்பங்கள் எத்தனை?. காவற்பகுதியினர் விசாரணை என்ற பெயரில் கொடுத்த தண்டனைகளையும், அவர் அனுபவித்த கொடுமைகளையும் எண்ணிப் பார்த்தாள். அவரை மீட்டெடுக்க அம்மா செய்த செலவுகளையும் நினைந்தாள். அண்ணன் போனபின் அப்பா தளர்ந்து உடைந்து போனார். அவள் கண்கள் பனித்தன. எத்தனை ஆயிரம் அப்பா அம்மகாக்கள் இப்படிக் கண்ணீரோடு வாழ்கின்றனர். இத்தனை ஆயிரம் இளைஞர்களையும் பலி கொடுத்து கிடைத்த முடிவென்ன? சேர சோழ பாண்டியர்கள் சேர்ந்தொன்றாய் வாழ்ந்தார்களா? அவளது உள்ளத்தில் போராட்டம். அப்பா அசைந்து கண்களைத் திறந்தார். “அடட நித்திரை கொண்டிட்டன். என்ன”? புன்னகைத்தவாறே எழுந்தார். அப்பாவுக்குத் தெரியாதவாறு கண்களைத் துடைத்துக் கொண்டாள். அம்மாவுக்கு ஓய்வே கிடையாது. அம்மாவைப் பார்த்தாள். அம்மா வேலைகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.
இந்த அம்மா எவ்வளவு துயரங்களைச் சுமந்து கொண்டு வாழ்கிறார்? கயல்விழி க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள். திடீரெனச் செல்கள் வந்து விழுந்து வெடிக்கின்றன. சித்தப்பா. சித்தி பிள்ளைகள் ஷெல்லடியில் கண்முன்னால் சிதறுண்டு தசைப் பிண்டங்களாகக் கிடக்கின்றனர். மக்கள் விழுந்தடித்து காடுகளில் பதுங்குகிறார்கள். “கயல்விழி அம்மாவோடு ஓடு” குரல் கொடுத்துக் கொண்டே சுந்தரத்தார் பின்னால் ஓடினார். இப்படிப் பலதடவைகள் நடந்தன. வெடிச்சத்தங்கள் ஓய்ந்தபின் ஊர்ச்சனங்கள் சேர்ந்து ஈமக்கிரியைகளைச் செய்தார்கள். இந்த நிகழ்வுகள் அடிமனத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்தன. அவற்றை மீண்டும் நினைத்துப் பார்க்க அவளுக்கு மனமில்லை. மெதுவாக எழுந்து அம்மாவிடம் சென்றாள்.
தொடரும்

Read more...

Monday, September 27, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
4
“கயல்! எப்படிப் படிப்பெல்லாம். சோதினைய நல்லாச் செய்தியா? எப்ப முடீவு வரும்.? நீயும் ஓரு வேலைக்குப் போனியண்டா அப்பாக்கும் கொஞ்சம் பாரம் குறையும்”. தங்கம் தனது பாரத்தை இறக்கினாள். கயல்விழிக்கு உயர்ந்த மலையிலிருந்து பாதாளத்துக்குத் தன்னைத் தள்ளிவிட்ட பிரமை ஏற்பட்டது. எதிர்பாராத பெரிய பிரச்சினையை அம்மா அறிமுக மாக்கிவிட்டார். ‘வேலை தேடும் படலத்தைப் பார்’ என அம்மா மறைமுகமாக எச்சரித்து விட்டார். படிக்கும்வரை பிரச்சினை இல்லை. படித்து முடித்தபின்தான் விலங்கு மாட்டப்படுகிறது. சமூகம் ஒரு மனிதனை எப்படி நோக்குகிறது. “பல்கலைக்கழகம் போனால் சோதனை பாஸ்தான். நமது நாட்டிலதான் படிக்கிறதுக்கு வாய்ப்புகள் குறைவு. நீ கவலப்படாத. றிசல்ட் இந்த மாதக்கடசியில் வந்திரும். பிறகு வேலைதேடுவம்”. கடலைப் பார்த்தபடி கூறினாள்.
கயல்விழியின் மனம் பாதாளமலைக் கடலாக விரிந்தது. அதில் வீசும் அலைகளாக எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்து, ஓங்கி ஆர்ப்பரித்துச் சிலிர்த்து மோதி உடைந்து சென்றன. பரீட்சை முடிவு வந்து விடும். அதன்பின் என்ன செய்வது? எங்களுக்கு முதல் சித்தியடைந்து வெளியேறிய பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. நமக்கு எப்போது கிடைக்கும். என்ன கல்வித்திட்டம்.? வேலைக்கேற்ற படிப்பு இல்லை. படிப்புக்கேற்ற வேலையில்லை. வேலையில்லாப் பட்டதாரிகள் பெருகிவிட்டார்கள். எப்படி அப்பா அம்மாவைக் காப்பாற்றுவது? கேள்வி மேல் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.
. “வாழ்க்கை என்பது நாம் நினைப்பதுபோல் மலர்கள் பரப்பிய பஞ்சணைந்த படுக்கையல்ல. அது முட்கள் பரப்பிய கற்பாறைப் படுக்கை. பள்ளமும் படுகுழிகளும் நிறைந்த கரடுமுரடான பாதை. அது ஒரு பாம்புப் புற்று. புற்றுக்குள் என்ன, எது இருக்கும், எப்போது வெளிவரும்?. இவை புரியாத புதிராகவே இருக்கும். வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் அதன் தாற்பரியம் புரியும். கோழைகளால் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் உங்களைப் போன்ற புத்திசாலிகளுக்கு அது எளிதாகிவிடும். நீங்களும் சவால்களைக் கண்டு பின்வாங்கினால் சமூகம் குட்டிச் சுவராகிவிடும்.” பல்கலைப் பேராசிரியை பத்மா இறுதிப்பரீட்சை எழுதி வெளியேறும் மாணவியர்களுக்கு பேருரை நிகழ்த்தினார். அதனை நினைந்து அகொண்டாள்.
சிறுவர்களாக இருந்திருந்தால் எப்போதும் கவலையை மறந்து சந்தோசமாக வாழலாம். பணக்கார வர்க்கத்துக்கும் பிரச்சினை குறைவு. அதோபோல் ஏழையாகப் பிறந்தவருக்கும் பிரச்சினைகள் குறைவாகவே இருக்கும். ஆனால் வசதியற்ற நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களுக்குத்தான் பிரச்சினைகள் அதிகம். கயல்விழியின் உள்ளத்தில் அடுக்கடுக்காகப் பல ஆராய்ச்சிகள் வந்து வந்து போயின. இந்த நாட்டில் அடுக்கடுக்காக வந்து போன பேரழிவுகளை நினைந்து கொண்டாள். சுனாமியின் தாக்கமும் அதன் விளைவுகளும் வந்து போயின. சுனாமி வந்தபொழுது விடுதலைப்புலிகள் சிங்களப் பகுதி மக்களுக்கு உதவி செய்ததையும் எண்ணிப்பாரத்தாள். அப்போது சமாதானம் வந்துவிட்டதாகவே எண்ணினாள்.
கிழக்கே அவள் கண்கள் பார்வையைப் பரவவிட்டன. கொட்டியாரக் குடாக்கடலில் மகாவலியின் சங்கமம் தெரிந்தது. மத்திய மலைநாட்டில் உற்பத்தியாகிப் பல சிற்றாறுகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டு கடலோடு சங்கமிக்கிறது. சங்கமிக்கும் இடம் மிக ரம்யமானது. அது பாய்ந்து வரும் பாதையெல்லாம் எவ்வளவு செழிப்பாக இருக்கும். மகாவலி என்றும் வற்றாத ஜீவநதி. இலங்கையின் மிக நீண்டநதி. அதனூடாக் கடலில் பாயும் தண்ணீரைத் தடுத்து நீர்த்தேக்கங்களை அமைத்தால் நமது நாடு சொர்க்கமாகும். இலங்கையில் ஓடும் நதிகளையிட்டு அவள் மனம் யோசித்தது. எல்லா நதிகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து வலைபின்னல் ஏற்படுத்தினால் நமது மக்களின் வாழ்க்கை ஏற்றம் பெறும். இதையிட்டு எந்த அரசியல்வாதிகளும் நினைப்பதில்லை. இந்தநாட்டு நதிகளின் நீரைக் கடலுக்குள் விடாமல், பயிர் செய்நிலங்களுக்குப் பாய்ச்சி வளம் பெருக்கும் காலம் வருமா? கற்பனையில் மூழ்கினாள்.
மரஞ்செடி கொடிகளும் பேசுமாமே. அவற்றின் மொழி எதுவாயிருக்கும்.? மரஞ்செடி கொடிகளாகப் பிறந்திருந்தாலும் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் நான் மனிதகுலத்தில் பிறந்து விட்டேனே. நான் செய்த தவப்பேறா? இல்லை இவை யாவும் முன்னம் முற்பிறவியில் செய்த பாவச்செயல்களா? அவளது சிந்தனை விரிந்தது. அவளது விழிகளில் தூக்கத்தின் தாக்கம் எள்ளளவும் இல்லை. யோசித்து யோசித்து எண்ணங்கள் மனக்கடலில் வந்து மோதி உடைந்து, பின்வாங்கி அப்படியே மறைந்து பின் புதிதாக உத்வேகத்தோடு வந்து மோதி உடைந்து போகும். என்னைப் போல் எத்தனை பாவப்பட்ட ஜீவன்கள் இந்த உலகத்தில் இருக்கின்றனவோ? அவள் மனம் சுழன்றடித்தது. பாதாளமலையைக் கடந்து கப்பல் பயணித்தது. ஆட்டமில்லாது கப்பல் நீந்திக் கொண்டிருந்தது. உல்லாசப் பயணிகள் படு சந்தோசமாகக் காட்சியளித்தார்கள். கப்பலின் மேல்தளத்தில் இருந்து ரசித்துக் கதைத்தார்கள். சம்பூர் அவர்கள் வாயில் ‘சாம்பூரா’கப் புகுந்து விளையாடியது. காலாகாலமாகத் தமிழ் மக்களின் பிரதேசங்களாகக் கிடந்த இடங்கள் இப்போது அழிந்து போய்க்கிடக்கின்றன. தமிழ் மக்கள் வீடுவாசல்களையும் சொத்துப்பத்துக்களையும் இழந்து அகதிகளாகிவிட்டனர். சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயமாகிவிட்டது. சம்பூர் மக்கள் பலகிராமங்களிலும் சிதறிக்கிடக்கின்றனர். சம்பூருக்குள் இராணுவம் மட்டும் உள்ளது. சம்பூர் பத்திரகாளி அம்மன் கோயிலின் நிலை எவ்வாறு இருக்கும்? நினைக்கக் கவலையாக இருந்தது.
சொந்த ஊரைப் பலவருடங்களுக்குப் பின் பார்க்கப் போகிறாள். ஊர் எப்படிக் கிடக்கும?;. மக்கள் இல்லாத ஊர் காடாக இருக்கும். அவள் மனம் விரைந்தது. ஒரு இடத்தில் இருந்து கொண்டே இந்த மனம் உலகமெல்லாம் சுற்றி வருகிறதே. இந்த மனம் பொல்லாதது. எந்தத் தடை போட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்துப் போய்விடும். கற்பனை எனும் தேரேறி கயலின் மனம் பறந்தது. அவள் இப்போது மேலே இருந்தவாறு தனது கல்லூரியைப் பார்க்கிறாள். தான் படிக்கும்போது கடமையாற்றிய ஆசிரியர்களைப் பார்க்கிறாள். தனது வகுப்பறைகளுக்கு விரைகிறாள். அந்தப்பரந்த வளாகத்தினைச் சுற்றி வலம் வருகிறாள். அதிபர் கதிர்காமத்தம்பி வேட்டியும் வாலாமணியுடனும் வளாகத்தை வலம் வருகிறார். எத்தனை ஆசிரியர்கள் கற்பித்திருந்தாலும் ஒருசிலர் மட்டுந்தானே மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.
சுற்றிவர வகுப்பறைக் கட்டிடங்கள். பாடசாலைக் கட்டிடங்களின் மத்தியில் பாடசாலைத் தோட்டம். தோட்டத்தில் பலவகைப் பயிர்கள். அதிகாலையில் அருளானந்தமும், தங்கராசாவும் வந்து வகுப்பெடுப்பார்கள். விபுணசேகரம் ஆசிரியர் வந்துவிடுவார். சில மாணவர்களும் வந்து தண்ணீர் இறைப்பார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் சிறு நிலம் ஒதுக்கப்பட்டு அதில் பயிர்கள் நடப்பட்டிருக்கும். வகுப்புக்களுக்கு இடையே போட்டி. மாணவர்கள் தாமே இயங்கினார்கள். குரோட்டன் செடிகள் வகுப்பறைக் கட்டிடங்களுக்கு வெளியே நின்று அழகூட்டின. மூன்று ஜீவரத்தினங்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள். ஒரு ஜீவரத்தினம் உதவி அதிபராக இருந்தார். மற்றவர் மாணவர்களின் கட்டொழுங்கில் கவனமாக இருந்தார். அடுத்தவர் ஆங்கிலம் கற்பித்தலில் ஈடுபட்டார். அவர்களது வீடுகளும் கட்டைபறிச்சானில் இருந்தன.
கயல்விழியின் வீடும் அங்குதான் இருந்தது. காலையில் ஒன்று கூடலின்போது ஆசிரியர்களின் நற்சிந்தனை நடைபெறும். அதிபர் தலைமையில் மாணவர்கள் அணிவகுத்து நின்றார்கள். “கல்வி என்பது வெறும் புத்தகப்படிப்பு மட்டுமல்ல. அறிஞர்களுடைய அறிவுரைகள், படிப்பினைகள் புத்தகங்களில் நிறைந்துள்ளன. நாம் அவற்றைப் படித்து அதிலுள்ளவற்றை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். படித்தவற்றை நடைமுறைப் படுத்தாவிட்டால் கற்றதன் பயனை அனுபவிக்கமுடியாது. படித்தவற்றை அனுபவமாக்க வேண்டும். படித்தபடி நடக்க முனையுங்கள்”;. அவர் கூறிய கூற்றுக்கள் கயல்விழியின் காதுகளில் ஒலித்தன. உயர்தரப் பரீட்சைக்காகப் படிக்கும்போதே நாட்டுப் பிரச்சினை தொடங்கிவிட்டது. பொதுவாக கிராமப் புறங்களே பாதிக்கப் பட்டன.
இயக்கங்களின் கண்மூடித்தனமான செயல்களால் கட்டொழுங்கு சிதைந்தது. படிக்கின்ற மாணவர்களை இயக்கங்கள் இழுத்தெடுத்தன. கட்டாயமாக இழுத்தெடுத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் விருப்பமில்லாது சென்றார்கள். அவர்களது உள்ளங்கள் மரத்துப் போய்விட்டன. ஒருவித விரக்தியுடன் வாழ்க்கையை எதிர்கொண்டார்கள். தங்களுக்கு மரணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டது. எதையும் செய்யலாம் என்ற துணிச்சல் பிறந்து விட்டது. நல்லது கெட்டது தெரியாத பருவத்தில் தாங்களாகவே முடிவெடுக்கத் தெரியாமலிருந்தார்கள். கற்றவர்களின் அனுபவங்களைப் பெறமுடியாத நிலையில் இருந்தார்கள். தலைமைப்பீடங்களின் கொள்கைகளைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியாத பருவத்தில் இருந்தார்கள். பல்லாயிரக் கணக்கான இளைய தலைமுறையினரின் உயிர்களை இயக்கங்கள் பலிகொண்டன.
“கயல்! என்னம்மா யோசிக்கிறாய்”? அம்மாவின் குரல் கேட்டுத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். “இனி இறங்குவம். மூதூர் வந்தாச்சு. இப்ப வஸ் இருக்காம். இறங்கின கையோடு வஸ்சில போவம். இல்லாட்டி ஆட்டோவிலதான் போகவேணும். இருநூறு ரூபா கேப்பாங்க. கெதியாக இறங்கிப் போவம்.” அம்மா துரிதப்படுத்தினாள். ”கப்பல் பயணம் நல்லது. விரைவாக வந்து விட்டது. அம்மா இன்னும் கரைக்கு வரவில்லை. அவசரப்படாதிங்க. ஆறுதலாய் இறங்குவம்”. தாயைச் சாந்தப்படுத்தினாள். கப்பல் கரையை அடையும் முன்னரே சனங்கள் இறங்குவதற்காக எழுந்து நின்றார்கள். இந்த மக்களுக்குப் பொறுமை என்பதே கிடையாது.
மூதூர் ஜெட்டியில் இறங்கினார்கள். ஜெட்டிப் பாலம் மரப்பலகைகளால் ஆனது. பரவியிருந்த தடித்த பலகைகளின் இடையில் அதிக இடைவெளிகள் தெரிந்தன. அந்த இடைவெளிக்குள் அம்மாவின் பாட்டா புகுந்து இடரச்செய்தது. கயல் அவதானமாக நடந்தாள். மூதூர் மாற்றம்பெற்றிருந்தது. ஓலைக்குடிசைகள் ஒழிந்து கல்வீடுகள் முளைத்திருந்தன. ஆனால் தெரிந்த முகங்களைக் காணமுடியவில்லை. இப்போது கெடுபிடிகள் தளர்ந்திருந்தன. உடலில் ஆயுதங்கள் இருக்கின்றதா, என ஆட்களைத் தடவிப்பார்ப்பார்கள். சிலர் தடவிப்பார்ப்பது போல் தழுவியும் பார்த்த ஈனச்செயல்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் நடந்தன. ஆட்களைத்தடவி விடும் தொல்லை இல்லாதிருந்தது. எங்கும் படைவீரர்கள்தான் நிறைந்திருந்தார்கள். வெளியில் வந்தார்கள். நிம்மதிப் பெருமூச்சுப் பறந்தது.
தொடரும்

Read more...

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
3
கட்டைபறிச்சான் நல்ல அழகான கிராமம். கொட்டியாரக்குடாக் கடல் நிலத்தைக் குடைந்து சிற்றாறைத் தூதனுப்பி நிலம்பிடிக்க முயற்சித்தா? உப்புநீர் சிற்றாறு ஊரைச் சுற்றி ஓடுகிறது. வெண்கண்ணா மரங்களின் மூச்சுவேர் வெளிக்கிளம்பிக் குத்தீட்டிகளாக நிமிர்ந்து நிற்கும். கண்டல் கண்ணாவின் நீண்ட காய்கள் நீரிலாடி நீந்தி வரும். காய்கள் ஆற்றோரத்தில் அடைந்து அங்கேயே முளைவிட்டு நிமிர்ந்து நிற்கும். உச்சிக் கிளையில் மீன்கொத்திப் பறவைகள் காவலிருக்கும். கொக்குநிரை உப்புநீர் சிற்றாற்றின் கரையோரம் தவமிருக்கும். சிறு தோணிகள் உலாப்போகும். நீரின்மேல் மிதக்கும் மிதவைகளைப் பிடித்து இழுப்பார்கள். மீன் நண்டு வலையோடு வரும். இறால் மலிவாகக் கிடைக்கும். தோட்டம் நிறைந்து பயிர்கள் சிரிக்கும் இராசவள்ளிக் கிழங்கு நிலத்தடியில் அடைகாக்கும்.
வாழை, கமுகு மரக்கறிவகைகள் விளைந்து நிற்கும். சிறுகுளங்களில் இருந்து தண்ணீர் வாய்க்கால் வழி பாய்ந்து வயல்விளைந்து கிடக்கும். செல்வச்செழிப்போடு திளைத்த கிராமம். வந்தார்க்கெல்லாம் அள்ளிக் கொடுக்கும் மக்கள், இன்று யாரும் கிள்ளிக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அகதிகளாக்கப் பட்டுவிட்டார்கள். கயல்விழியின் மனக்கண்முன் கட்டைபறிச்சான் கிராமம் படமாக விரிந்து ஓடியது.
இறால் பாலத்துக்கப்பால் இருக்கும் அம்மன்கோயிலில் வருசத்துக்கு ஒருமுறை வேள்வி நடக்கும். மடைபோட்டுச் சாமியாடி, பொங்கல் பொங்கி மக்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்வார்கள். இளைஞர்களிடையே மந்திரப் போட்டிகள் நடக்கும். சிவம் சாமியாடி ஆசிரியர்களுக்கு வாழைப்பழங்களைச் சீப்போடு தூக்கி வந்து “ ம்..இந்தா” என்று கொடுப்பார். பாடசாலைப் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். இறால் பாலத்தில் தட்டையான கற்களைத் தண்ணீரில் சாய்வாக எறிந்தால் அது தெத்தித் தத்தித் தூரத்துக்குப் போகும். அதை ரசிப்பது வேடிக்கையாய் இருக்கும். அநற்றை நினைந்து மகிழ்ந்தாள். எல்லாம் பகற்கனவாய்ப் போய்விட்டது.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சுந்தரத்தார் எழுந்து விட்டார். அவருக்கு அது பழக்கப்பட்டதுதான். தங்கம் வீடு வாசலைப் பெருக்கித் தேநீர் தயாரித்து விட்டார். கயல்விழி அதிகாலையிலேயே விழித்து விட்டாள். ஆனால் அவள் படுக்கையிலேயே இருந்தாள். அவளது எண்ணமெல்லாம் எதிர்காலம் பற்றியதாக இருந்தது. கிராமத்து மக்கள் அதிகாலையிலேயே எழுந்து விடுவார்கள். சுறுசுறுப்பாக வேலைசெய்வார்கள். உடல் உறுதியாக இருக்கும். மனம் தூய்மையாக இருக்கும். வன்செயல்களினால் அவர்கள் தளர்ந்து நொடிந்து விட்டார்கள். அவளது அசைவை தங்கம் உணர்ந்து கொண்டார். “கயல் தேநீர் தரட்டா பிள்ள”. கேட்டவாறே ஒரு கோப்பைத் தேநீரைக் கொடுத்தார். எழுந்து அவளும் புறப்படத் தயாரானாள். பல்கலைக்கழகத்தில் இருந்து வந்து பலநாட்களாகிவிட்டன. திருமங்கையிடம் இருந்து செய்தியொன்றும் வரவில்லை.
சமதரையில் கிராமத்தில் காலாற நடந்து திரிந்தவளுக்குப் புறாக்கூட்டு வாழ்க்கை வெறுத்தது. படிக்கும் வரைக்கும் தோழிகளோடு அரைட்டையடித்து மகிழ்ந்தவளுக்கு வாழ்க்கை ‘போர்’ அடித்தது. பகலில் நூல்நிலையம் செல்வாள். பத்திரிகைகளைப் புரட்டி வேலைவாய்ப்பு விளம்பரப் பகுதிகளில் கண்களைச் செலுத்துவாள். தெரிந்த முகங்களைத் தேடுவாள். குறிப்பாக அந்தப் பழகிய முகத்தைத் தேடுவாள். தேடும் பொருள் கண்களில் படாது. கவலையோடு திரும்புவாள்.
வீட்டில் அம்மாவுக்கு உதவிகள் செய்வாள். உணவின்பின் வீட்டில் அடைந்து கிடப்பாள். புத்தகங்கள்தான் அவளுக்கு தோழிகள். நல்ல நூல்களைத் தேடி வாசித்தாள். நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் என்பதை உணர்ந்து கொண்டாள். வாழ்க்கையின் சுழிவு நெளிவுகளை படிப்படியாக அறிந்து கொண்டு வந்தாள். காற்று வசதியற்ற நகரத்து வாழ்க்கை அவளுக்கு அலுப்பைக் கொடுத்தது. தனது பொழுது வீணே கழிவதை உணர்ந்தாள். ஊருக்குப்போனால் பயனுள்ள வழிகளில், உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கலாம். ஒருமுடிவுக்கு வந்தாள்.
“அப்பா நானும் ஊருக்கு வரப்போறன். எனக்கு ஊரைப்பார்க்க ஆசையாய்க் கிடக்கு. நான் வந்தால் உதவியாகவும் இருக்கும்”. கயல்விழி ஆசையோடு கேட்டுக்கொண்டாள். மகளின் சொல்லைத் தட்டவும் மனமில்லை. “இஞ்சாருங்க. நானும் வாறன். எல்லாருமாய்ப் போய் வருவம். வீடுவாசலைப் பார்த்து துப்பரவு செய்தால் நிம்மதியாக போய்க் கிடக்கலாம்.” தங்கம் சொல்லிக் கொண்டே காலைச் சாப்பட்டைத் தயாரித்தார். “எதுக்கும் கொஞ்சம் உண்டனச் சமையுங்க. பகலுக்கும் உதவும்.” சுந்தரர் முன்னெச்சரிக்கையாகச் சமிக்ஞை கொடுத்தார். தாய்க்குக் கயல்விழி உதவினாள். “நீ அங்கால போ பிள்ள. நான் ஒரு நொடியில செய்துபோடுவன். நீ வெளிக்கிடு”. கூறிக்கொண்டு தனது வேலையில் ஈடுபட்டார். சுந்தரத்தார் வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டார். “தங்கம்! சிலநேரம் வேலைகள் முடியாட்டி ஒரு நாளைக்கு நிற்கவேண்டி வரலாம். நான் நின்று வேலைய முடித்துத்தான் வருவன். நீங்க திரும்பிட வேணும்.” சுந்தரத்தார் சொல்லிக் கொண்டு ஆயத்தமானார்.
ஆட்டோவில் ஜெட்டிக்குப் புறப்பட்டார்கள். செல்லச்சாமி ஜெட்டியில் காத்திருந்தார். பெரிய கியு நின்றது. “இன்டைக்குச் சந்தோசமாயிருக்கு. கயல்விழியும் ஊருக்கு வாறதால லோஞ் இல்லை. கப்பல்சேவைதான் இருக்காம். அது எட்டு மணிக்குப் புறப்படுமாம்”. செல்லச்சாமி உற்சாகத்தோடு விளக்கினான். சுந்தரத்தாருக்கு உள்ளுறச் சந்தோசம். கப்பலில் போவது பயமில்லை. பாதாளமலைப் பகுதி சுழியுள்ள இடம். காற்றும் வீசும். பயங்கர அலையும் மோதும். லோஞ் நடுக்கடலில் அலைகளில் மோதுண்டு ஆட்டும். மகள் பயந்து விடுவாள். பயம் அவரை உறுத்தியது. பெற்ற மனம் பித்து என்பார்கள். மனித மனத்தின் இயல்புகள் அப்படித்தானே. அடையாள அட்டையைக் கொடுத்துப் பதிந்தார்கள். பணத்தைக் கொடுத்து ரிக்கட் எடுத்தார்கள். ஏறுவதற்கு வசதியாகக் கப்பல் ஜெட்டி ஓரத்தில் தரித்து நின்றது. அப்படியே கப்பலின் உள்ளே ஏறிப் பார்த்தார்கள். சுமார் இருநூறு பயணிகள் பயணிக்கலாம். கயல்விழிக்குக் கப்பல் பயணம் புதியது. லோஞ்சில் பயணம் செய்திருக்கிறாள். ஓவ்வொரு முறையும் பயணம் செய்யும் போதும் உயிர் போய் திரும்பி வரும் உணர்வைப் பெறுவாள். எனினும் பயணம் செய்யத்தானே வேண்டும். இன்று சற்று வித்தியாசமாக இருந்தது. கப்பலில் யன்னல் ஓரமாக இருக்கையில் இருந்தாள். அம்மா அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். யன்னலின் ஊடாகத் திருகோணமலையின் இயற்கைத் துறைமுகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தாள். பயணிகள் கப்பலில் ஏறிக்கொண்டனர். அப்பா முன்னால் இருக்கையில் இருந்தார். எட்டரை மணிக்குக் கப்பல் புறப்பட்டது. பிரச்சினைகள் தொடங்குவதற்கு முன் துறைமுகத்தின் வழியே பயணங்கள் மேற்கொள்ளப் பட்டன. அது குறுகிய தூரம். ஆனால் பிரச்சினை தொடங்கியதும் அவ்வழி மூடப்பட்டுவிட்டது. தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பது போல் இப்போது பிறிமா ஜெட்டிவரை சென்று மலைத்தொடரைச் சுற்றித் திரும்ப வேண்டும்.
கப்பல் நிறையப் பயணிகள் இருந்தனர். பலர் பெரும்பான்மை இனத்தவர்கள். நம்நாட்டுப் பிரசைகள். அவர்களுக்கு ‘ரூறிஸ்ற்’; அந்தஸ்த்துக் கொடுத்து ஒரு மாயையைத் தோற்றுவித்திருந்தனர். அவர்களும் வெளிநாட்டு மக்களைப் போல் தமது கலாசாரத்தை மறந்து சுற்றுலாப் பயணிகளாக கப்பலில் பயணம் செய்தனர். விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து நாட்டைமீட்டு விட்டோம். பயங்கரவாதம் முடிந்து விட்டது. நாட்டைக் கைப்பற்றி விட்டோம். என்ற அரச அறிவிப்புப் பரவியது. அதனைத் தொடர்ந்து ‘ இலங்கையின் வடக்குக் கிழக்கு’ வேறொரு பிரதேசமாக விளக்கம் கொடுபட்டுள்ளது. வேறொரு நாட்டினைக் கைப்பற்றி வெற்றிகொண்டதாக ஒரு எண்ணம் பெரும்பான்மை மக்களிடம் இருந்தது. இப்போது திருகோணமலை உள்நாட்டுப் பெரும்பான்மை இன மக்களுக்குச் ‘சுற்றுலா மையமாக’ ஆகிவிட்டது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கப்பலில் பயணிக்கிறார்கள். கப்பல் ஆட்டம் இல்லாது சென்றது. பாதாளமலையடியில் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. கப்பலும் மெதுவாக அசைந்தது. தொட்டிலில் இட்ட பிள்ளைகளாக பயணிகளும் அசைந்தனர். அலைகள் கப்பலில் மோதின. மோதிய வேகத்தில் அலை உடைந்து நீர்த்திவலைகள் மேலெழுந்து தூறலாய்ப் பரந்தது. நீலக்கடலில் பால்போல் நுரை பரவிச்சிரித்தது. கயல்விழி பார்த்து ரசித்தாள். பாளைச் சிரிப்பு உதிர்ந்தது. அவளது அதீத கற்பனை சிறகடிக்கத் தொடங்கியது. அவளது மனம் கட்டைபறிச்சானை நோக்கிப் பறந்தது.
சுந்தரத்தாரின் வீடு அழகானது. அவரது காணியின் கிழக்கெல்லையாக உப்பு நீர்ச்சிற்றாறு ஓடுகிறது. ஆறுதான் கிழக்கெல்லையின் வேலி. தென்னைகள் வரிசையாகக் காட்சி தரும். மா, பலா, வாழையென எங்கும் கனிதரு மரங்கள். ‘தெங்கும் இளநீரும், தேமதுர முந்திரியும்’ என யாழ்நூலில் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் குறிப்பிடுவது போல, இரண்டு ஏக்கர் காணியில் அவரது இராச்சியம் அரசோச்சியது. சுற்றிவரத் தோட்டப்பயிர்கள் காய்த்துப் பூத்துக் கலகலக்கும். காணியில் ஆழமான கிணறு இருந்தது. நிலத்தடி நீர் பயிர்களுக்குச் செழிப்புட்டியது. வீட்டைச் சுற்றிப் பூந்தோட்டம். வண்ண வண்ண ரோஜாச் செடிகளை கயல்விழி வளர்த்திருந்தாள். குரோட்டன் செடிகளைத் திட்டமிட்டுக் கச்சிதமாக நட்டிருந்தாள். பூஞ்செடிகள் பூத்திருக்கும். இடையிடையே கத்தரி, மிளகாய் கண்சிமிட்டும். கலப்புப் பயிர்ச்செய்கையில் நாட்டம் அவளுக்கு. மரவள்ளிச் செடிகள் ஒரே மட்டமாக அழகாக வளர்ந்திருக்கும். இராசவள்ளிக் கொடிகள் சிறு தடிகளைச் சுற்றிப் பின்னிப் படர்ந்திருக்கும். வீட்டுத்தோட்டம் மேலதிக வருவாயைக் கொடுத்தது.
கட்டைபறிச்சான் நாகதம்பிரான் கோயில் பெருமைவாய்ந்தது. உற்சவ காலங்களில் திருகோணமலை மாவட்டக் கிராமங்களில் இருந்து மக்கள் வருவார்கள். நேர்த்தி வைத்தவர்கள் பயபக்தியோடு விரதமிருந்து பொங்கலிடுவார்கள். இனசனங்கள் தங்கள் உறவுகளோடு சேர்ந்து கொள்ளும் நிகழ்வாக விளங்கியது. இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். வீரசிங்கம் குழுவினரின் வில்லுப்பாட்டு ஊரைக்கலக்கி எடுக்கும். அன்னலக்சுமி, சந்தானலெக்சுமி குழுவினரின் இசைமழை உள்ளங்களைக் கவர்ந்தெடுக்கும். அந்தக்குழுவில் அம்பிகாவோடு கயல்விழியும் சேர்ந்து பாடுவாள். பல்லிசை விற்பன்னர் விபுணசேகரத்தின் பல்லிய வாத்தியக் கருவிகளின் இன்னிசை காற்றில் பரவும்.
‘கத்தும் கடலும் கவிபாடித் தாலாட்டும்முத்தம் எங்கள் மூதூர் பிரதேசத்தின் கட்டைபறிச்சானில்காலிடறும் பக்கமெல்லாம்இசைபரந்து களிப்பூட்டும்.இளந்தென்றல் பரவிவரும்கட்டை பறிச்சானைத் தழுவிவரும் பூங்காற்றுப்பட்டாலே போதும் பாட்டு வந்து கூத்தாடும்காலாற வீதிகளில் கதைத்து நடந்தாலே கொண்ட மனக்கவலைகுலைந்தோடிப் போய்விடுமாம்’
எனக் ‘கேணிப்பித்தன் கவிவரி’களைக் கட்டைபறிச்சான் கனகசிங்கம் பாடி அசத்துவார்.
அந்தக் கவிதை வரிகளை அசைபோட்டுப் பார்த்தாள். என்ன அற்புதமான காலம். எல்லாம் கனவாகிப் போய்விட்டன. கிராமத்தின் வாழ்க்கை முறை ‘கல்லெறிபட்ட தேன் கூடாகக்’ கலைந்து போயிற்று. அவளது எண்ணத்தறி கப்பலின் அசைவால் சிதறியது. “அம்மா! இந்த இடத்தில்தான் லோஞ் புரண்டது. கனபேர் செத்தவங்கள்.” கயல்விழி நினைவு கூர்ந்தாள். தங்கத்துக்குப் பயம். “அதையேன் நினைக்கிறாய். அந்தக் கோணேசரை நினைத்துக் கொள். ஓன்றும் வராது”. அவளுக்கு உள்ளுரப் பயம். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது மகளின் சிந்தனையை வேறு பக்கம் திசைதிருப்ப முனைந்தாள்.
தொடரும்.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP