கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
8.
விறாந்தையின் விளிம்பைக் கெட்டியாய்ப் பிடித்து சிரமப்பட்டு ஏறினான். நனைந்து குளிர் உதறத் தொடங்கியது. உதைத்தவன் மெதுவாக மறைந்து விட்டான். "அய் வட்டுனே“? ஏன் விழுந்தாய். கேட்டவண்ணம் கதவைத்திறந்து விட்டவன் வந்தான். இவனும் சேர்ந்து செய்த வேலையென்பது ஆனந்தனுக்குப் புரிந்தது. சிப்பாயின் கபடச்சிரிப்புக் காட்டிக் கொடுத்தது. ஒன்றும் பேசாது தனது அறையினுள் சென்றான். சிப்பாய் கதவைத் தாளிட்டான் சென்றுவிட்டான். குளிர் வாட்டியெடுத்தது. 'கையது கொண்டு மெய்யது பொத்தி’ய நிலையில் தன்னுடல் சூட்டால் ஈரத்தைக் காயச்செய்து கொண்டிருந்தான். மழை வி;ட்டபாடில்லை. எதையோ நினைத்தவனாக அதிலே ஆழ்ந்தான். உடலில் இந்த உயிர் ஒட்டியிருக்கும்போதுதான் வலிகளை உணர்கிறோம். ஆன்மா உடலைவிட்டு அகன்று அப்பால் தூரத்தில் நின்றால் உடலின் உபத்திரவம் உணரப்படுவதில்லை. ஆனந்தனுக்கு அந்தத்துன்பமான வேளையிலும் பல்கலைக்கழக நிகழ்வு வந்து உசுப்பியது. தக்க நேரத்தில் அது கைகொடுத்து உதவியது. சிரிப்பு வந்தது. சற்றுத் தன்னை மறந்து அந்த நிகழ்வில் ஊறிப்போனான்.
பேராதனைப் பல்கலைக்கழகம் பனிமலைகளிடைப் பதுங்கிக்கிடக்கிறது. புதியமாணவர்களது அனுமதி தொடங்கி மூன்றுநாட்கள் பறந்தோடிய நிலை. 'றாக்கிங்’ எனும் பகிடிவதை நடந்து கொண்டிருக்கிறது. மகாவலி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இயற்கை தனது அழகையெல்லாம் அள்ளிக் கண்டிநகரையும் அதன் எல்லைப்புறங்களையும் சோடித்து அழகு பார்க்கிறது. இருளில் மின்மினிப்புச்சிகள் பாட்டம்பாட்டமாகப் பறப்பதைப் பார்ப்பதற்கே ஆயிரம் கண்கள் வேண்டும். இந்திரலோகமாக பேராதனை பல்கலைக்கழக வளாகம் யொலிக்கிறது. 'சீனியர்ஸ்ருடன்ஸ்“ வேட்டைநாய்களாகி 'ஜூனியேர்ஸ்’ என்ற புதியமாணவர்களின் பெயர்ப்பட்டியல்களோடு அவர்களைத் தேடி வளாகக் ஹொஸ்ரல் அறைக் கதவுகளைத் தட்டிக் கொண்டு வருகிறார்கள். அதிகாலை மூன்றரை மணிதொடக்கம் இரவு பத்துப் பதினொரு மணிவரை இது தொடர்கதையாகும். தொடர்ந்து இரண்டு கிழமைகளுக்கு பகிடி வதை நடக்கும். தமிழ்மொழி பேசும் மாணவர்களைச் சிங்கள மாணவர்கள் பகிடிவதை செய்வதில்லை. தமிழ் மாணவர்களே செய்தார்கள். சிங்கள மாணவரைச் சிங்கள மாணவர்களே செய்தார்கள். அந்தத் தார்மீக உணர்வு பல்கலைக் கழகத்தில் இருந்தது.
பல தொடர்மாடிக் கட்டிடங்களை ஒன்றாக இணைத்துக் கட்டியிருந்தார்கள். கட்டிடங்களுக்கிடையில் சுமார் இருபதடி அகலமான இடைவெளியிருக்கும். புல் ஆளுயரத்துக்கு வளர்ந்திருக்கும். இரவில் பனியில் தோய்ந்து குளித்துக் கொண்டிருக்கும். ஒரு கட்டிடத்தொகுதியில் சுமார் எண்ணூறு மாணவர்கள் தங்கியிருக்கும் வசதிகள் கொண்டிருந்தன. ஒரு அறையில் இரண்டுபேருக்கான வசதியிருந்தது. பின்னர் இது மூன்றுபேர்களை உள்வாங்கிக்கொண்டது. இவ்வாறான ஏழெட்டுக் ஹொஸ்ரல்கள் பரந்திருந்தன. பெண்களுக்கு வேறான ஹொஸ்ரல்கள். ஆண்களுக்கு வேறான ஹொஸ்ரல்கள் இருந்தன. அதிகாலை மூன்றரைமணிக்கு நல்லுறக்கம் உடலில் ஊர்ந்து தழுவி ஆட்கொள்ளும் நேரம். பெரிய ஆரவாரமாக இருந்தது.
புதியவர்களை வெளியில் அழைத்தார்கள். உடைகளைக் களைந்து தலையில் கட்டச்சொன்னார்கள். புதியவர்கள் அனைவரும் ஆதிமனிதர்களாக அம்மணக் கோலத்தில். கட்டிடங்களுக்கு இடையில் உள்ள புல்லினை மடக்கி அதன்மேல் வரிசையாக உருளச் சொன்னார்கள். ஒரு ஐந்து நிமிடங்களில் நிமிர்ந்திருந்த புற்கள் தரையோடு படுத்திருந்தன. வெறும் உடலில் புற்களின் சுணை அப்பிக் கொண்டது. நமது மூதாதையரின் செயல் தொடங்கியது. அதுதான் சொறிச்சல். அனைவரது கைகளும் உடலைச் சொறியத் தொடங்கின. கட்டிடத் தொகுதியினுள் பல செயற்கைத் தடாகங்கள் இருந்தன. அவற்றைப் பார்க்கும்படி சுற்றி நிற்கவைத்தார்கள். தண்ணீர் தேங்கி பளிங்குபோல் தெரிந்தது. எட்டிப் பார்த்தார்கள். தாங்கள் பிறந்தமேனியோடு நிற்பதைப் பார்த்துக் கொண்டார்கள்.
பின்னர் நடக்கப் போவது அவர்களுக்குத் தெரியாது. அவ்வளவுதான். பின்னால் இருந்தவர்கள் தடாகத்தினுள் தள்ளி விட்டார்கள். தடாகம் ஆழமில்லை. ஆனால் தண்ணீர் ஐசாகக் குளிர்ந்தது. தோல் விறைப்புற்றது. உடல் நடுங்கியது. பற்கள் கிடுகிடுத்தன. புல்லின் சுணைக்கு இதமாக இருந்தது. அதேபோல் இந்தச் சிப்பாய்களின் சித்திரவதையின் வலியை மழைநீர் குறைத்துவிட்டது போன்ற உணர்வு அவனுக்கு. மெல்லத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
விடிந்து விட்டதற்கான அறிகுறி தெரிந்தது. சூரியக்கதிர்கள் உலகை உய்விக்கப் புறப்பட்டு விட்டன. சூரியன் இல்லையேல் இவ்வுலகில் இயக்கம் இல்லை. சூரியக்கடவுள் வல்லமை படைத்தவர். அவரது மனைவி சந்திரனாம். நட்சத்திரங்கள் எல்லாம் இவர்களது பிள்ளைகளாம். சூரியன் தனது பிள்ளைகளைப் பிடித்து வழுங்கிவிடுமாம். அதற்காக தந்தை சூரியனுக்கும் தாய் சந்திரனுக்கும் இடையில் தகராறு. இரவில் சூரியன் உறக்கம் கொள்ளும். சந்திரன் இரவு முழவதும் தனது குழந்தைகளுக்குக் காவலாக இருந்து விளையாடும். பகலில் சூரியன் வானில் பவனிவரும். நட்சத்திரக் குழந்தைகள் ஓடி ஒளிந்து கொள்ளும். இவை கிரேக்க இதிகாச புராணக்கதைகள் கூறும் செய்திகள். ஆனந்தன் கதைகளை நினைவு கூர்ந்தான். சூரியக் கதிர்கள் ஆனந்தனையும் எட்டிப்பார்க்க முயற்சித்தன. ஆனால் முடியவில்லை.
தன்னை இந்தச் சிறையில் அடைத்து வைத்ததால் சந்திரன் கவலையில் தன்னை எட்டியும் பார்க்வில்லைப்போலும். மனதினுள் நினைந்து கொள்வான். இருள் அவனிருக்கும் அறையினுள் பதுங்கிக் கொண்டது. பகல் இரவாகும். இரவு பகலாகும். சிப்பாய்கள் வருவார்கள். சிறைப்பட்டிருப்போரை ஆசைதீரமட்டும் அடித்து நொருக்குவார்கள். போவார்கள். அறையினுள் எப்போதும் இருளாகவே இருக்கும். காலை வரும். பகலாகும். மாலை மலரும். பட்டிகளில் மாடுகளை கொண்டு வந்து அடைப்பதுபோல் தமிழ் இளைஞர்களைப் பிடித்து வருவார்கள். அடைப்பார்கள். நினைத்த நேரம் வந்து வதைப்பார்கள். முடிந்ததும் அறைகளில் பூட்டுவார்கள்.
இரவு மெல்லப் படரும். விரும்பிய நேரங்களில் சிப்பாய்கள் வருவார்கள். ஐயர் மூலஸ்த்தானத்தைப் பூசைக்காகத் திறப்பதுபோல் இரும்புக் கதவைத் திறப்பார்கள். சுவாமிக்குப் பூசை செய்வதுபோல் அடியுதைப் பூசைகள் செய்வார்கள். பூசை கொடுத்தபின்; களைத்துப் பூட்டிவிட்டுப் போய்விடுவார்கள். இது நித்தியம் நடக்கும் 'சா’பாட்டுக்கான கால அட்டவணை.
சரியாக மாலை ஆறுமணியிருக்கும். இராணுவச் சிப்பாய்களின் அட்டகாசமான அதட்டல்களும், கேலிச்சிரிப்புகளும் அந்தக் காவலறைக் கட்டிடத்தினுள் எதிரொலிக்கிறது. மெதுவாக எழுந்து இரும்புக்கம்பிக் கதவருகே நின்று நடப்பதை பார்த்தான். பல இளஞர்களை இழுத்து வந்தார்கள். அவனது பக்கத்து அறையினுள் விட்டுப் பூட்டிச் சென்றார்கள். அந்த இளஞர்களின் முகங்கள் சரிவரத் தெரியவில்லை. சுவர்மணிக்கூடு ஏழுமணி காட்டியது. சிப்பாய்க் கூட்டம் அட்டகாசமாக வந்தது. பக்கத்து அறை திறக்கப்படும் சத்தம் கேட்டது. இரண்டு இளஞர்களை அறையிலிருந்து இழுத்து வந்தார்கள். அவர்களது சேட்டைக் கழற்றினார்கள். கைகளைப் பின்புறமாக இழுத்துப் பிணைத்தார்கள். சிலர் இளஞர்களை இறுக்கமாகப் பிடித்தார்கள். ஒரு இளஞனைத் தூக்கிக்; கீழே குப்புறப் போட்டார்கள். கீழே கிடந்த இளஞனின் முதுகில் பூட்ஸ் காலை வைத்துத் திருகினார்கள். அவன் ஓலமிட்டு அழுதான். மற்ற இளஞனின் இமைகளை அகல விரித்துப் பிடித்தார்கள். ஒருவன் சரையில் இருந்த மிளகாய்த் தூளை அள்ளிக் கண்களுள் விசிறி அடித்தான். இளஞன் வீரிட்டழுதான். கைகள் பின்புறமாகக் கட்டுப்பட்டுக் கிடந்தன.
மிளகாய்த்தூள் கண்களை எரித்தது. துடிதுடித்துக் கதறியழுது கண்ணீரைப் பொழிந்தான். அவன் துடிப்பதைப் பார்த்துச் சிரித்தார்கள். சிப்பாய்களின் கைகளில் பலவித தடிகள் இருந்தன. சிப்பாய்கள் மாறிமாறி அடித்தார்கள். யார் அடிப்பது என்று அவர்களால் பார்க்க முடியவில்லை. அவன் சுருண்டு விழுந்து அலறினான். கீழே கிடந்த இளஞனை நிமிர்த்தினார்கள். அவனது கண்களிலும் மிளகாய்த் தூள் வீசப்பட்டது. இளஞர்கள் துடிதுடித்துக் கதறினார்கள். ஆனந்தனால் பொறுக்க முடியவில்லை. அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கதவோரமாகச் சாய்ந்து தன்முன்னால் நடக்கும் கொடுமைக் காட்சிகளைக் கண்டு சிலையாகித் திகைத்து நின்றான். சில சிப்பாய்கள் அறையைத் திறந்து உட்சென்றார்கள். அடைபட்டுக்கிடந்த இளஞர்களைப் பதம் பார்த்தார்கள். இளஞர்கள் எதனைத் தாங்குவார்கள். ஏன் இப்படி சித்திரவதை செய்கிறார்கள்.? அவர்கள் என்ன செய்தார்கள்?
ஆனந்தனை நோக்கி சிப்பாய் ஒருவன் வந்தான். "அடோவ் ஒயா கௌத? ஆருடா நீ "? முறைத்தபடி கேட்டான். சிப்பாயின் கண்கள் சிவந்திருந்தன. அவன் போதையில் இருந்தான். ஆனந்தன் பதில் சொல்ல வில்லை. பேசாதிருந்தான். அப்படியே சென்றுவிட்டான். வந்த சிப்பாய்க் கூட்டம் சென்றுவிட்டது. காவல் கடமையில் இருந்தவன் வந்தான். அடிபட்ட இளஞர்களது கட்டுக்களை அவிழ்த்து விட்டான். வாளியில் தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தான். கண்களைக் கழுவ உதவினான். இருவரையும் அறையினுள் விட்டுப் பூட்டினான். தனது இடத்துக்குச் சென்றுவிட்டான். மயான அமைதி நிலவியது. பக்கத்து அறையில் இருந்து விசும்பல் ஒலிகேட்டவண்ணம் இருந்தது. அரைவிழி மூடி நினைவினில் மூழ்கியிருந்தான். அறைதிறபடும் சத்தம் கேட்டு எழுந்து நின்றான். தன்னை முறைத்துப் பார்த்தவன் முன்னால் நின்றான். அவனது கையில் கதவினை அடைப்பதற்கான 'பார்’ தடி இருந்தது.
"அடோவ் ... பற கொட்டியோ... உம்பலாட்ட ஈழம்த ஓன?“ உங்களுக்கு ஈழமா வேணும்? சத்தமிட்டு அடித்தான். கைகால், முதுகு எங்கும் அடித்தான். இரத்தம் கசிந்தது. தலையில் அடிவிழாது இரு கைகளாலும் மூடியபடி அறையின் மூலையில் ஒதுங்கினான். அடி தாங்கமுடியாது ஆனந்தன் சுருண்டான். காவலுக்குப் பொறுப்பான சிப்பாய் பாய்ந்து வந்தான். அவனைப் பிடித்துத் தள்ளினான். "உம்ப மொன மோட வட கறன்ன“? நீ என்ன மடவேலை செய்கிறாய்? கூறியவாறு அவனை இழுத்து வெளியில் தள்ளினான். கதவினை இழுத்துப் பூட்டினான். அவன் திமிறிக் கொண்டிருந்தான். "கோப்ரல,; தங் மகே டியூட்டி வெலாவ. மெயாட்ட மொனவாஹறி உனுத். மமத்தமாய் வககியான்ட ஓன. ஒயாட்ட தன்னவத“? "சிப்பாய் இப்ப எனது டியூட்டி நேரம். இவனுக்கு ஏதாவது நடந்தால் நான் வகை சொல்லவேண்டும். தெரியுமா உனக்கு?. அவன் அரசாங்க ஊழியன். கையெழுத்திட்டு பாரம் எடுத்திருக்கிறன். அவனைத் திருப்பிப் பாரம் கொடுக்கும் வரை நான்பொறுப்பு.“? அவனைத் தள்ளிக் கொண்டு வெளியில் சென்றான். ஆனந்தன் செயலிழந்து கிடந்தான். அவனால் எழுந்து நிற்கத் திராணியற்ற நிலை. வாய் மேரியை நினைத்து முணுமுணுத்தது. மயங்கிய நிலையில் கிடந்தான். அவன் கனவில் மிதந்தான்.
தொடரும்

0 comments:
Post a Comment