Monday, February 1, 2010

அடிமை வாழ்க்கை

அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை. சனி,ஞாயிறு விடுமுறை நாட்கள். இரண்டு மணிக்கு வஸ். அரை நாள் லீவும் எடுத்துக் கொண்டான். பேருந்தைப் பிடித்துப் புறப்பட்டான். ஐந்து மணிக்கு பேருந்தால் இறங்கியதும் துறையைக் கடக்கவேண்டும். அதிலிருந்து ஐந்து கிலோமீற்றர் கால்நடைதான்.


கடற்கரை விரிந்து கிடந்தது. கடற்கரை ஓரமாக நடந்தான். அலைகள் அவன் கால்களைத் தொட்டு விளையாடின. மெல்லப் பொழுது இறங்கிக் கொண்டிருந்தது. கடற்கரை ஓரமாகச் சிலர் கரைவலை இழுத்து கொண்டிருந்தார்கள். இந்தக்கடற்கரையில் எவ்வளவு நாட்கள் விளையாடியிருப்பான். அவன் சிறுவனாக இருந்தபோது இந்தக் கடற்கரையில் நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் இருந்து பெரிய தோணிகளில் பெப்ருவரி மாதம் தொடக்கம் ஒக்ரோபர் இறுதிவரை வந்து தங்கியிருந்து மீன்பிடிக்கும் மக்களை நினைந்து கொண்டான். பல வாடிகளை அமைத்து மீன்பிடிப்பார்கள். கடற்கரை எந்த நேரமும் கலகலத்துக் கொண்டிருக்கும். தமிழ்கலந்த சிங்களம் கதைப்பார்கள். பெர்னாந்து, பெனான்டோபிள்ளை, சூசைப்பிள்ளை எனப் பெயர்கள் இருக்கும். இவர்கள் அத்தனைபேரும் தமிழர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறி, இப்போது முழுச்சிங்களவர்களாக வாழ்பவர்கள். அவர்கள் இப்போது இப்பகுதிக்கு வருவதில்லை. இப்பகுதி முஸ்லிம்மக்கள் மீனவத் தொழிலில் ஈடுபட்டமையே காரணம். நண்பர்களை நினைத்துக் கொண்டான். அவன் சிறுவனாக இருந்தபோது ஒரே கூத்தும் கும்மாளமாகவும் இருக்கும் அந்த ஊரின் மூலைமுடுக்குகளில் அவன் பாதம் படாத இடங்களே இல்லை. பாடசாலைக்குக்கட்அடித்துவிட்டு சகமாணவர்களோடு சேர்ந்து லூட்டி அடித்த அனுபவங்கள் எட்டிப்பார்த்தன.சிறுவர்கள் என்றால் பயமறியாதவர்கள். பாடசாலைக்குப் போவார்கள். ஓரு மூலையில் ஒன்று சேருவார்கள். அவர்களது திசை வேறுபக்கம் இருக்கும். உப்புநீர்ச் சிற்றாறுகள் ஊரைச் சுற்றி ஓடும். பள்ளங்களும், கணண்பிட்டிகளும் நிறைந்து கிடக்கும். வெள்ளப் பெருக்குக் காலங்களில் உப்புநீர்ச் சிற்றாறுகள் கரைபுரண்டு ஓடும். கிடங்குகள் உருவாகும். உப்புநீர் தேங்கி நிற்கும். கிடங்குகளில் பலவகை மீன்கள் விளையாடும். உப்புநீர்ச் சிற்றாறுகளில் வற்றுப் பெருக்கு நிகழும். கோடைகாலங்களில் வற்றுப் பெருக்கு அதிகநீரைக் கொண்டு வருவதில்லை. கிடங்குகளில் சேர்ந்த மீன்வகை கிடங்குகளிலேயே தங்கி வாழும். கிராமத்துப் பற்றைக்காடுகளில் ஒருவகைக் கொடியிருக்கும். ‘நச்சுக்கொடிஎன்று கூறுவார்கள். அந்தக்கொடியின் வேர்களைப் பிடுங்கி அளவாக வெட்டி மரக்கட்டைகளில் வைத்துத் தட்டினால் நசிந்துவிடும். நசிந்த வேர்களைக் கிடங்குகளில் தேங்கியுள்ள நீரில் கலக்கிவிட்டால் மீன்கள் மயங்கிவிடும். பிடிப்பபதற்கு இலகுவாக இருக்கும். பங்கு போட்டு வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள்.மீனைக்கண்டதும் அம்மாக்குச் சந்தோசம் பிறக்கும். “எப்படி இந்தப்பெரிய மீன்களைப் பிடித்தாய்”? அம்மாவின் கேள்வி வரும்எங்கட நாகராசர் கனக்க மீன்பிடிச்சவராம். அவர்ர மகன் என்ர கூட்டாளிதானே. அவன் தந்தான்”;. பொய்தான். ஆருக்கும் துன்பம் தரும்படி கூறும் பொய்தான் சொல்லக்கூடாது. அம்மா சொல்லித் தந்தவ. இந்தப் பொய்சொல்வதில் தப்பில்லை. மனதுக்குள் தேற்றிய நாட்கள் எத்தனை?


ஒருநாள் பாடசாலைக்குக்கட்அடித்துவிட்டு, நண்பர்களோடு புறப்பட்டுவிட்டான். புத்தகங்களும் உடைகளும் மரக்கிளையில் தொங்கின. அம்மணமாய் கிடங்குகளில் இறங்கி நீச்சல் அடித்து மீன்பிடிக்கும்போது கையும் மெய்யுமாய் அப்பாவிடம் மாட்டி வாங்கிக் கட்டினதை நினைத்துக் கொண்டான். அப்பாமேல் கோபம் கோபமாக வரும். ஆனால் அந்த நேரத்தில் அப்பா சரியான முடிவு எடுத்திருக்காவிட்டால் வாழ்க்கை எவ்வளவு கஸ்டமாகப் போயிருக்கும் என்பதை நினைக்கும் போது அப்பாமேல் அன்பும் பாசமும் பொங்கி வந்தது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். அப்பா இறைவனிடம் போய்ச் சேர்ந்திட்டார். பெருமூச்சுப் பறந்தது. மனம் கசிந்து நெக்குருகியது. அதிலிருந்து விடுபட்டு பழைய நினைவுகளில் மனதைத் திருப்பினான். நிலாக்காலங்களில் கிராமத்தின் மணல்வீதிகளில் விடியவிடியக் கிளித்தட்டுப் பாய்ந்து, விளையாடிய மணலிலேயே படுத்துறங்கிய சந்தோசமும் மனதில் வந்து குந்தி அசைபோட்டது. சிரிப்பாக வந்தது. இனிய நினைவுகளில் மூழ்கினால் களைப்பே தெரியாது. கால்கள் நடந்தன.தனிமையில் இருக்கும்போதுதான் சிந்தனை சிறகடிக்கிறது. இந்த ஆத்மா உடலை விட்டு எங்கெல்லாமோ போய் அலைந்து பழைய நினைவுகளில் மூழ்கி வருகிறது. இதுவும் ஒருவகை யோகம்தானோ? மேற்கே சூரியன் அவசரமாக மறைந்து கொண்டிருந்தது. உலகம் தோன்றிய காலத்திலிருந்து சூரியன் உதிபதற்கோ, மறைவதற்கோ மறந்ததில்லை. அவன் ஊர்போய் சேரும்போது இருள் பரந்துவிட்டிருந்தது. வீதிகளில் யாரும் இல்லை. ஊர் இப்போது அடங்கிப் போய்க்கிடந்தது. வீடுகளில் வெளிச்சங்களும் குறைந்திருந்தன. படலைகள் இறுக்கி மூடிக்கிடந்தன. பயப்பிராந்தி மனதை விரட்டியது. கூப்பிடு தூரத்தில் விடு இருந்தது. சந்தியில் இருக்கும் கோயிலைத் தாண்டித் திரும்பினால் இடப்பக்கமாக வீடு தெரியும். இன்னும் ஐந்து நிமிசத்தில் வீடு வந்துவிடும். நிழலாக உருவங்களைக் காட்டும் இருள். “ஆரது..தம்பி..இந்தநேரத்தில.. எனக்கு மதிக்கேலாமல் கிடக்குநாடு கிடக்கிற கிடயில.. காலநேரந்தெரியாதாகெதிபண்ணி வீட்ட போ…” அது பார்வதியாச்சியின் குரல்தான். அவரது குரலில் இருந்து இனங்கண்டு கொண்டான். பார்வதியாச்சி படலையைச் சாத்திக்கட்டிக் கொண்டிருந்தார்.

நான்தான் ஆச்சிஆறுமுகம். இப்பதான் வாறன். பதிலளித்தான். “ஆறுமுகமா ..இப்பதான் வாறாயா? சரி..சரி.. நாளைக்கு வா ..கதைப்பம். இப்ப கெதியாப் போ.. வெடிச்சத்தம் கேக்குதுபார்வதியாச்சி அவசரப்படுத்தினாள்.

ஆறுமுகம் அதிர்ந்து போனான். அவனுக்கு உள்ளுற வேர்த்தது. நடையை விரைவுபடுத்தினான். நாய்கள் குலைக்கும் சத்தம் செவிப்பறைகளை அடைத்தது. கால்கள் நடையை விரைவு படுத்தின. வீட்டை நெருங்கிவிட்டான். வீட்டுப்படலையைத் திறந்தான். அந்தச் சத்தம் கேட்டிருக்கவேண்டும். “ஆரது…” குரல்கொடுத்தபடி அரிக்கன் லாம்போடு செல்லம்மா வெளியில் வந்தார்நான்தான் அம்மாஆறுமுகம் பதிலளித்தான். மகனின் குரலைக் கேட்டதும் உசாரானார். அரிக்கன் லாம்பைத் தூக்கிப் பிடித்தபடிஎன்ன மனேசொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாய்….இஞ்சால கெதியா வாவா..” வெளிச்சம் படலை வரை பரந்து இருள்கலைந்தது. உள்ளே சென்றான். அரிக்கன் விளக்கைத் திண்ணையில் கிடந்த மேசைமேல் வைத்துவிட்டுக் கதைத்துக் கொண்டே மகனுக்குத் தேநீர் தயாரிக்கலானார். அவன் தனது பையை மேசையில் வைத்துத் திறந்து மாற்றுடுப்பை எடுத்தான்.

அம்மாவப் பாக்கணும்போல இருந்திச்சி. புறப்பட்டு வந்திற்றன்.” உடுப்பை மாற்றியவாறே சொன்னான். “அதுக்ககாகக் காலங்கெட்ட நேரத்தில வாறதா? நேரத்துக்கு வந்திருக்கலாம்தானே”? அன்பாகக் கடிந்து கொண்டாள். ஆனால் மகனைக் கண்ட சந்தோசம் அவள் மனதில் குந்திக்கொண்டது. மனதுக்குள் பாசம் பரந்து கொண்டது. அம்மாவின் பாசமொழி அவனைக் கிறங்கச் செய்தது. “ என்னம்மா செய்யிறது? எத்தன இடத்தில சோதனச் சாவடிகள். ஏறியிறங்கி வந்து துறையக்கடந்து நடந்து வாறன். அதுதான் இவ்வளவு நேரம்.” தேநீரை ருசித்தவாறே அம்மாவை அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தான். அம்மா சற்று இளைத்திருந்ததை அவதானித்தான். “என்னணேய்..அம்மா.. சுகமில்லாமல் இருந்ததா? உடம்பு இளைச்சிருக்கு. ஒரு கடுதாசி போட்டிருந்தால் வந்திருப்பன்தானே”? அன்போடு கூறினான். “அதல்லாம் ஒன்டுமில்ல மனே. மனசில நிம்மதியில்ல. காலம் கெட்டுக்கிடக்கிறது. பொழுதுபட்டால் விடியுமட்டும் பயம். விடிந்தால் பொழுதுபடுமட்டும் பயம். இப்படி பயந்து பயந்து வாழவேண்டிய அடிமை வாழ்கை வாழுறம்.” பெருமூச்செறிந்து அம்மா கூறினாள். “இன்டைக்குக் காகம் சுற்றிச்சுற்றிக் கத்திக்கொண்டு கிடந்தது. ஆராவது வரப்போறாங்க எண்டு நினைச்சன். ஒருவேளை என்ர புள்ள வந்தாலும் வருவான் என்றும் நினைச்சன். நீ வந்திட்டாய்”. அம்மா கூறும்போது அவளது முகத்தையே உற்றுப் பார்த்தான். அவளது முகத்தில்தான் எத்தனை சந்தோச ரேகைகள் பரந்தோடுகின்றன. என்னதான் பிள்ளை வளர்ந்து பெரியவனாகித் திருமணம் செய்து பிள்ளைகுட்டிகளைப் பெற்றாலும், ஒருதாய்க்குத் தன் பிள்ளை எப்போதும் சிறுகுழந்தைதான். பிள்ளைகள்தான் பாசத்தை மறந்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.


மனே.. மேலக்கழுவிட்டு வா. சாப்பிடுவம்”. கூறிக்கொண்டு அடுக்களைக்குள் புகுந்தாள். ஆறுமுகம் குளித்துவிட்டு வந்தான். அம்மா இருந்த கறிவகைகளைச் சூடேற்றினாள். சாப்பாடு தயார். அவன் குளித்துவிட்டுச் சாமியறையில் திருநீறு சாற்றிஎல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமேஎனக் கும்பிட்டு வெளியே வந்தான். தூரத்தில் நாய்கள் குலைத்தவண்ணம் இருந்தன. “வாமனே சாப்பிடுவம்”;. அவனை அழைத்தாள். அவன் அடுக்களைக்குள் வந்து விரித்திருந்த பனையோலைப் பாயில் இருந்தான். “என்னம்மா ஒரே நாய்குலைக்கும் சத்தம்”.? கேட்டான். "இப்பிடித்தான் மனேவிடியவிடிய நாய்குலைத்தபடிதான் இருக்கும். ஆமிக்காரங்கட நடமாட்டம்தான். வெடிச்சத்தங்களும் கேட்கும். நெஞ்சைப்பிடித்தபடி கிடக்கிறதுதான். என்ன செய்யலாம். நம்மட நாட்டுநில இதுதான். இப்ப கண்டபடி ஊருக்குள்ள போகேலாது. சட்டம்.” தட்டில் உணவைப் பரிமாறிக்கொண்டே சொன்னாள். “அம்மா சாப்பிடல்லையா”? கேட்டான். “இன்னும் இல்லமனே. இனித்தான். நீ முதலில் சாப்பிடு. பிறகு நான் சாப்பிடுறன்”. அவன் சாப்பிடக் கையை வைத்தான். படலையில் சத்தம் வந்தது.


மேஅம்மே.. யாரு ..இப்ப ..வந்தது. வரச்சொல்லுங்க..வெளியே”. அவள் எழுந்து வெளியே வருமுன் இரண்டு ஆமிக்காரர்கள் உள்ளே வந்து விட்டார்கள். அவர்கள் கைகளில் துப்பாக்கிகள். “ஊருக்குள்ள யாரும்சரி வந்தா ஸ்ரேசன்ல அறிவிக்கணும்தானே. தெரியாதா சட்டம்?”;. வந்தவர்கள் சத்தமிட்டார்கள். அவளுக்கு வெடுவெடுத்தது. செல்லம்மா வெளியில் வந்தாள். தொடர்ந்து ஆறுமுகம் வெளியில் வந்தான். "அது ஆருமில்ல. என்ர மகன். ஆறுமுகம். இப்பதான் வவுனியாவில இருந்து வந்தவன்”. உண்மையைச் சொன்னாள். “ அது ஆருவெண்டாலும் சரிஅறிவிக்கத்தானே வேணும்”. அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். “இப்ப இருட்டிப்போச்சு. இருட்டினபிறகு வெளியில வரப்படாது என்றுதான் …” அம்மா இழுத்தாள். அவளுக்கு மனம் படபடத்தது. “அது எல்லாம் நமக்குத் தெரியாது. ஏய்;… பேரென்ன”? ஆமிக்காரன் கேட்டான். “ஆறுமுகம்”;.சொன்னான். “சரி..சரி..என்ட..வாங்க.. பொயின்ருக்கு. பெரியவரிட்ட வந்து சொல்லுங்க”. அவர்கள் வரும்படி வற்புறுத்தினார்கள்.


மாத்தயா காலமைக்கு வந்து பதியிறம். இப்பதான் புள்ள வந்தவன். சாப்பிடக்குந்தினான். சாப்பிட்டபிறகு வாறம்”;. அம்மா கெஞ்சினாள். “அதெல்லாம் நமக்குத் தெரியாது. பெரியவர்ட்ட வந்து சொல்லுங்க”. ஆமிக்காரர் ஒரேபிடியாய் நின்றார்கள். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியாது. நடப்பது நடக்கட்டும். அப்படியே புறப்பட்டான். அம்மா சாப்பாட்டை மூடிவைத்தாள். அடுக்களையின் பன்னாங்குக் கதவை இழுத்து மூடினானாள். அரிக்கன் லாம்பையும் எடுத்துக் கொண்டு பின்னால் புறப்பட்டுவிட்;டாள். ஆமிக்காரர்கள் ஆறுமுகத்துக்கு முன்னாலும் பின்னாலும் நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் அரிக்கன் லாம்போடு ஆறுமுகத்தின் அம்மா. ‘ஆமிப்பொயின்ற’; அலுவலகம் திறந்திருந்தது. ஆனால் அலுவலர் இல்லை. “அப்பிடி நில்லுங்கஒருவன் கட்டளையிட்டான். ஒருவன் ஆமிப்பெரியவர் இருக்கும் பக்கத்து வீட்டுக்குப் போனான். ஒரு நிமிடம் ஒரு வருசமாக நகர்ந்தது. களைப்பும் பசியும் ஆறுமுகத்தைக் குடைந்தெடுத்தன. அவனுக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. தன்னைக் கட்டுப்டுத்திக் கொண்டு சமநிலையைப் பேணினான்.எவ்வளவு நேரம் நின்றிருப்பான். அம்மாவைப் பார்த்தான். ஆமிப்பொயின்ற் கேற்றுக்கு அப்பால் அரிக்கனோடு குந்தியிருப்பது தெரிந்தது. “நான் வந்தது தப்பாகப் போச்சுது. என்னால்தானே அம்மா வெளியில இந்த நேரத்தில காத்துக்கிடக்கிறார். நான் வராமல் அங்கேயே நின்றிருக்கலாம்”;. மனதுக்குள் வருந்திக் கொண்டான். ஆமிப்பெரியவரின் வீட்டீல் நடப்பது தெரிந்தது. போனவன்சேர்என்று மெல்ல அழைத்து, வெளியிலேயே நின்றான். அவரை வெளியிலேயே காணவில்லை. பாதுகாப்புப்படை அதிகாரிகளைச் சாதாரணதரப் படைவீரர்கள் நினைத்தமாதிரிச் சந்திக்க முடியாது. எவ்விதமான விசயங்களாக இருந்தாலும் முன் அனுமதிபெற்று, அவர் விரும்பினால்தான் அதனையிட்டுப் பேசலாம். அங்குதான்ஆண்டான் அடிமைஎன்பதன் தாற்பரியம் புரியும். படையதிகாரியைச் சந்திப்பதில் பயமிருந்தாலும், நல்ல பெயர் வாங்குவதற்காக இப்படித் தவங்களும் புரியவேண்டும். எசமான் அவர்களை நடத்தும் முறைகளுக்கேற்ப, ஏவலாளிகளும் அவர்களுக்குக் கீழுள்ளவர்களை நடத்துவார்கள். தன்னை எஜமானனாக நினைத்துக் கொண்டுதான் என்னோடு இவன் நடந்து கொண்டான். அந்தச் சிப்பாயைக் குறைகூறிப் பயனில்லை. நின்று கொண்டே நடப்பதை அவதானித்தான்.அம்மாவையும் பார்த்துக் கொண்டான். அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் அம்மாவின் நிழல் தெரிந்தது. “என்ர புள்ளைக்கு எவ்வளவு பசியாக இருக்கும். என்னப்பார்க்க வந்ததாலதானே..இந்தக் கஸ்டம். பாவம். இனி வரவேண்டாமென்று சொல்லவேணும். எல்லா ஆமிக்காறனுகளும் இப்படித்தான். இப்பிடித்தானே இந்திய ஆமிக்காரங்களும் செய்தவங்கசெல்லம்மாவின் மனதுக்குள் வேதனை அரித்தது. நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. ஆறுமுகத்தின் மனதில் அது படமாக விரிந்தது.அது இந்திய அமைதிகாக்கும் படை இந்தநாட்டுக்குள் தங்கள் நாட்டின் அமைதியைக் காப்பதற்காக வந்திருந்த காலம். இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுத்தருவதாக முலாம்பூசி தமது நாட்டின் பாதுகாப்புக்காக இலங்கைத் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்கிப் பலிக்கடாக்களாக்க வந்திருந்தனர். காக்கி உடைகளைத்; கண்டால் அதுதபால்காரர்கள்என்று எண்ணும் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களின் குக்கிராமங்களிலும் இந்தியப்படை முகாமிட்டுத் தொல்லைகளைக் கொடுத்தார்கள். அமைதிகாக்க வந்தவர்கள் அதற்கு மாறாகச் செயற்பட்டார்கள்.கிராமங்களில் தோட்டந்துரவுகளும், பயிர்பச்சைகளுமாக இருக்கும். ஆடு,மாடு,கோழி என அவர்களது வாழ்வாதாரம் இருக்கும். கிராமங்களில் தன்னிறைவுப் பொருளாதாரம் குடிகொண்டிருக்கும். வேலிகள் எல்லைகளாக இருந்து யாவற்றையும் பாதுகாக்கும். கிராமங்களின் எரிபொருள் தேவையைச் சிறு பற்றைக்காடுகள் நிறைவு செய்யும். தங்களது அமைதிக்காக எமது மக்களின் பாதுகாப்பில் கைகளை வைத்தார்கள். வேலிகள் வெட்டப்பட்டன. பற்றைக் காடுகள் மக்களைக் கொண்டே அழிக்கப்பட்டன. எந்த நேரமும்ரோந்துச் சேவைகால்நடையாக நடைபெறும். வீட்டுக்காணிகளை ஊடறுத்து ஆமி வேலிகளை உடைத்தும், வேலிக்கம்பிகளை வெட்டியும் நடந்து செல்வார்கள். தோட்டம் துரவுகள் மெல்லமெல்ல மறையத் தொடங்கின. பாதுகாப்பு கிராமங்களில் இல்லாதொழிந்தது. இளைஞர்கள் சித்திரவதைக்கு ஆளாகினர். ஊருக்குள் எவர் வந்தாலும் ஆமிப்பொயின்ற் சென்று பதியவேண்டும். இப்படித்தான் அன்றும் ஆறுமுகம் வந்திருந்தான்.


இருட்டிவிட்டது. ஊரடங்கிவிட்டிருந்தது. “மனே இப்ப நம்மட இந்திய அமைதிகாக்கும் ஆமிதான் இருக்கு. விடிஞ்சபிறகு போய் பதிவம். நீ சாப்பிட்டுட்டுப் படு”. அம்மா சொன்னபடியே செய்தான்.


விடிந்ததும் கடமைகளை முடித்துக் குளித்துச் சாப்பாடு முடித்தபின்ஆமிப் பொயின்ற்றுக்குச் சென்றான். கடமையில் நின்றவனிடம் தன்னை அறிமுகம் செய்து பதிவதுபற்றிச் சொன்னான். அவன் கொமாண்டரிடம் அழைத்துச் சென்றான். ஒரு கதிரையைக்காட்டி இருக்கும்படி கூறிவிட்டுக் கொமாண்டரின் அறைப்பக்கம் சென்றுவிட்டான். கொமாண்டர் அறையில் இல்லை. ஆறுமுகம் காத்திருந்தான். நேரம்மட்டும் நகர்ந்து கொண்டிருந்தது. ஒருவாறு கொமாண்டர் அறையினுள் வந்ததற்கான அறிகுறி தெரிந்தது. சிப்பாய் வந்து அழைத்தான். அவன் பின்னால் சென்றான். கோமாண்டரின் அறை வந்ததும் ஆறுமுகத்தை அப்படியே நிற்கும்படி சைகையால் சொன்னான். அவன் மட்டும் சென்றான். அறையின் கதவு திறந்திருந்து. ஆனால் திரைச்சீலை மறைத்திருந்தது. வாசலின் முன்நின்றுசலூற்அடித்து அனுமதி கேட்டான். கிடைத்தது. திரைச்சீலையை விலக்கி உள்ளே சென்றான். அவன் ஆறுமுகம் வந்தவிடயத்தை இந்தியில் சொல்லியிருக்க வேண்டும. கொமாண்டர் கோபத்தோடு சத்தமிட்டுக் கதைத்தது கேட்டது. ஆமிக்காரன் சற்று நேரத்தால் வெளியே வந்தான். உள்ளே வரும்படி அழைத்தான்.அந்த ஆமிக்கொமாண்டர் ஒரு இந்திக்காரர். பெயர்சர்மா கொமாண்டிங் ஒபிசர’; என நெஞ்சுச் சட்டைப்பையின்மேல் இருந்த பட்டி சொல்லியது. தீப்பற்றிய விழிகளோடு கோமாண்டர் ஆறுமுகத்தைப் பார்த்தான். “குட் மோனிங் சேர். ஆம் ஆறுமுகம்.” தன்னை மிகப் பணிவோடு அறிமுகம் செய்தான். கோமாண்டர் சர்மா கோபாவேசத்தோடு எழுந்தார். “லுக் கியர் மிஸ்டர் ஆறுமுகம்…. ஆங்கிலத்தில் அட்டகாசமாகப் பிரசங்கம் செய்தார். அவரது கோபத்தை கைகளைப் பொத்தி மேசையில் குத்துவதில் இருந்து புரிந்து கொண்டான். “இங்கு நாங்கள் வைத்ததுதான் சட்டம். உங்கட புலிச்சேட்டை எங்களிட்ட விடேலாது. எந்த வெளியாட்களும் அவங்கட இஸ்டத்துக்கு வரேலாது. வாறவங்க ஆமிப்பொயின்ற்ல பதிய வேண்டும். வந்த காரியம் முடிந்ததும் போய்விட வேண்டும். நீ நேற்றுப் பின்னேரமே வந்திருக்கிறாய். இங்க வந்து அறிவிக்காமல் ஒரு வீட்டில நின்றுவிட்டு இப்பநிறுத்திவிட்டுத் தனது கையில் கட்டியிருந்த மணிக்கூட்டைப் பார்த்தான். “கிட்டத்தட்ட பத்துமணிக்குப் பதிய வாறாய். உன்னைப்பிடித்து லொக்கப்பில் றிமாண்ட் பண்ணவேணும்.” அவன் பேசிக் கொண்டே போனான். ஆறுமுகத்துக்குக் கட்டுக்கடங்காத கோபம் பொங்கியது. தன்னை அடக்கிக் கொண்டான். பொறுமையாக இருந்தான். “நாங்க இங்க சிரைக்கிறதுக்கு வரல்ல. புலிவேட்டையாட வந்திருக்கிறம்..” ஆறுமுகம் குறுக்கிட்டான். “சேர் ஆம் கவன்மெனற் சேவன்ற். டீப்பியூட்டி டிரக்டர் ஒவ் எடியுகேசன்ஆங்கிலத்திலேயே தொடர்ந்தான். “ நான் வந்து எங்கேயும் நிற்கவில்லை. என்ர வீட்டிலஎன்ர அம்மாவோடதான் நின்றனான். நான் பிறந்து விளையாடி வளர்ந்ததெல்லாம் இந்த மண்ணிலஎன்ர ஊருக்கு, என்ர அம்மாவப் பார்க்க வந்திருக்கிறன். என்ர தாய்நாட்டில என்ர ஊரில..என்ர வீட்டுக்கு வாறதற்கு ஏன் உங்கட அனுமதியப் பெறவேண்டும்? எங்கட அரசாங்கத்தில…. உயர்பதவியில இருக்கிறன். நான் இந்த நாட்டின்என்ர நாட்டின் குடிமகன்.” கூறிக்கொண்டு தனது அடையாள அட்டையைத் தூக்கிக் காட்டினான். அடையாள அட்டையைக் கொமான்டர் உற்றுப் பார்த்தான். “சேர்.. நீங்க என்னத்துக்கு வந்தீங்களோ எங்களுக்குத் தெரியாது. இது இந்த நாட்டுக்குப் புதியதல்லவரலாற்று ரீதியாக இந்திய மன்னர்கள் எங்கட நாட்டின்மேல் படையெடுத்து எங்கள அடிமைகளாக்கி ஆண்டு சுரண்டி ..கடசியில எங்கள நட்டாற்றில் விட்டுச் சென்றிடுவாங்க.. இங்க நாங்க படாதபாடு படவேண்டியது நியதியாப் போச்சுஎல்லாளன் தொடக்கம் இன்றுவரை அது தொடர்கிறது.” ஆவேசத்தோடு ஆறுமுகம் முழங்கினான். கோமாண்டர் ஆறுமுகத்தை ஏற இறங்கப் பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியாது. ஆறுமுகத்தை அழைத்து வந்த ஆமியைக் கூப்பிட்டான். இந்தியில் ஏதோ சொன்னான். அவன் கதிரையொன்றை கொண்டு வந்து வைத்தான். “பிளீஸ் சிற்டவுண்கூறிக் கொண்டு கொமாண்டரும் கதிரையில் இருந்தான். ஆறுமுகமும் கதிரையில் இருந்தான். கொமாண்டர் திசைமாற்றினான்.

லுக்மிஸ்ரர் ஆறுமுகம்…”ஆங்கிலத்திலேயே தொடர்ந்தான். எனது மனைவியும் ஒரு ஆசிரியை.. நான் கல்வியாளர்களுக்கு மதிப்பளிப்பவன். கல்விதான் ஒரு மனிதனை உயர்த்துவது. நாங்களும் தெரியாத்தனமாகஇங்க வந்திற்றம். ஏன் வந்தோம்….என்று எங்களுக்கே தெரியாது. முதலில் தமிழர்களின் அமைதி காக்கவென்றுதான் தெரிவிக்கப் பட்டது. அதனால் நாங்க அனுப்பப்பட்டோம். அவ்வளவுதான் தெரியும். இப்ப புலிகளுக்கு எதிராகச் சண்டையிடுகிறோம். சொல்லப்போனால் தமிழருக்கு எதிரான போராட்டம்தான். பொதுவாக தமிழ் இளைஞர்கள்தான் கொல்லப்படுகிறார்கள். எங்கட ஆக்கள் பலர் இறந்து விட்டார்கள். அந்தக்கடுப்பு இருக்கிறதால இப்படி நடக்க வேண்டியுள்ளது.

ஆம் சோ சொறி.. நீங்க அரசாங்க உயரதிகாரி என்று எனக்குத் தெரியாது.” அமைதியாகச் சொன்னான். இரண்டு கோப்பையில் தேநீர் வந்தது. குடிக்கும்படி கேட்டுக் கொண்டான்.நாட்டு நடப்புகளைச் சொன்னான். தனது குடும்பத்தைப் பற்றிச் சொன்னான். எங்களுக்கு வரும் ஓடரை நாங்கள் செயற்படுத்துகிறோம். இந்த நாட்டில என்ன நடக்குது என்று இந்திய மக்களுக்கு ஒன்றுமே தெரியாது. இங்கு இரண்டு இனங்களுக்கிடையில் நடக்கும் போராட்டத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. இந்த நாட்டுச் சிங்களத் தலைமைகள் கெட்டிக்காரர்கள். தங்கள் மக்களைச் சண்டையில் ஈடுபடுத்தாமல் இலங்கைத் தமிழரை அழிக்க இந்தியப் படைகளைப் பயன்படுத்துகிறார்கள். எங்களது நாட்டுத் தவைர்களும் விவேகம் இல்லாத பதவிமோகம் கொண்டவர்கள். அவர்களால்தான் இந்த அவலம். இது எதுவரை சென்று எதில்முடியுமென்று எனக்குத் தெரியாது ;”. அந்தக் கொமாண்டர் விரிவகச் சொன்னான். ஆறுமுகத்துக்கு உண்மை புரிந்தது.இந்தியப் படைகள் வந்தபோது தமிழ்மக்கள்எங்களை ரட்சிக்க வந்த ரட்சகர்கள்.”; என ஆடிப்பாடினார்கள். அவர்களோடு மிகவும் நட்பாகப் பழகினார்கள். அரசியல் சூதாட்டத்தினால் தமிழ் மக்களை அழிக்கும் எதிரிகள் ஆனார்கள். இந்தியப் படைகளை எதிர்த்துப் போரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்தியப்படை இலங்கையை விட்டுப் போகும் போது அவர்களது முகத்தைப் பார்க்கவும் கூசினார்கள். அதன் விளைவை எண்ணிப் பார்த்தான். இந்திய ஆமியின் வழியில் இப்ப எங்கட நாட்டுப்படையினர் இந்திய ஒத்துழைப்புடன் ஆட்டிப்படைக்கின்றார்கள். அவர்களைக் குறைகூறிப் பயனில்லை. இனவாத அரசியல்வாதிகளின் விவேகமில்லாத போக்குத்தான் நாட்டின் அழிவுக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டான். . “மே..என்ட..” அந்த ஆமிக்காரன் அழைத்தான். ஆறுமுகம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். அம்மாவைப் பார்த்தான். அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் அவர் குந்தியிருப்பது தெரிந்தது. ஆமிக்காரனின் பின்னால் சென்றான். அவன் அறையினுள் நுழைந்து சலூற் அடித்தான். சிங்களத்தில் முறைப்பாட்டை முழங்கினான். இவர்கள் பெரியவர் என அழைத்தவர் நடுத்தர வயதுடைய ஒரு கொமாண்டர். தன்னைவிடவும் வயதில் குறைந்தவனாக இருந்தான். கொமாண்டர் சீருடையில் இல்லை. நீண்ட கால்சட்டையும்,’ரிசேட்டும் அணிந்திருந்தான். ஆனால் அந்த மிடுக்கும், அகங்காரமும் அவனிடம் இருந்தது. “ சிங்கள தன்னவாத.. சிங்களம் தெரியுமா .. கொகே இந்தளா ஆவேஎன்ன பேர்? கொமாண்டர் ஒரு கிண்டலோடு தொடங்கினான். ஆறுமுகத்துக்குச் சிங்களம் ஓரளவு தெரியும். ஆனால்சிங்களம் தெரியாது. பேர் ஆறுமுகம்என்றான். “என்ன கொட்டியாத? எங்கிருந்து வந்தது? சொல்லு”? கொமாண்டர் சத்தமிட்டான். அந்த நேரத்திலும் ஆனந்தன் இந்த நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்கத் தவறவில்லை. அவன் இந்திக்காரன். அந்நியன். இந்தியன். .ந்திக்காரன். இவன் எங்கள் சொந்தநாட்டுக்காரன். சிங்களவன். அவ்வளவுதான். இரண்டு செயற்பாடுகளும் ஒன்றுதான். “வவுனியாவில இருந்து வந்தனான்.” பதிலளித்தான். “…வவுனியா.. அங்கதானே கொட்டியா ..இருக்கிறதுமே மாத்தயோஒங்கட இஸ்டத்துக்கு இஞ்ச வரேலாது. எங்கட சட்டத்துக்குத்தான்நடக்கவேணும்.. தேருணாததெரியுமா”? ஆணவத்தோடு கொட்டினான். ஆறுமுகத்துக்கு அடக்க முடியாத கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் பொறுமை காத்தான். “ஏன் இஞ்ச வந்தது..? வேவு பாக்கவா..சொல்லு”? கொமான்டர் அதட்டலோடு கேட்டான். இனியும் பொறுத்தால் இவன் கதையைச் சோடிச்சிப் போடுவான். “ஹலொ சேர்..லுக்.”. ஆங்கிலத்தில் தொடங்கினான். “இஞ்ச என்ன இருக்கு வேவுபார்க்க? நானும் இந்த நாட்டிலதான் பிறந்தவன். இது என்ர சொந்த ஊர். இந்த மண்ணிலதான் பிறந்து வளர்ந்தனான். என்ர அம்மாவப் பார்க்க வந்தனான். என்னை வரேலாது என்று சொல்வதற்கு நீங்க யார்? என்ர சொந்த ஊருக்கு வாறதற்கு ஏன் உங்களிட்ட அனுமதி கேட்க வேணும்? அன்றைக்கு இதே கேள்விய இந்தியனாமி கேட்டான். இன்றைக்கு இந்தஎன்ரநாட்டுஆமிக்காரன் கேக்கிறான். ஆவன் இந்திய இந்திக்காரன். நீங்க இலங்கைச் சிங்களவன். அவ்வளவுதான். நாங்க என்ன உங்கட அடிமைகளா? இது என்ன அடிமை வாழ்க்கையா”? ஆத்திரத்தைக் கேள்வியாகத் தொடுத்தான். “மிஸ்ரர்..கதைக்கிறதக் கவனமாகக் கதைக்கவேணும். நான் நினைத்தால் உன்ன லொக்கப்பில போடுவன். றிமாண்ட் பண்ணுவன். கனக்கக் கதையாத..தேருணாத? கோபத்தோடு கொமாண்டர் சொன்னான். ஆறுமுகம் விஸ்வரூபத்தில் நின்றான். அவனது உள்ளம் பொங்கியது. “நானும் உங்களப் போல அரசாங்க உயர்பதவியில் இருக்கிறன். ஆம் டிபியுட்டி டிரக்டர் ழப் எடியுகேசன். உங்களுக்குத் தெரிந்த சட்டங்கள் எனக்குந் தெரியும். நீங்களும் இந்த நாட்டிலதான் பிறந்தீங்க. நானும் இந்த நாட்டிலதான் பிறந்தனான். என்ன வித்தியாசம். நீங்க சிங்களவர். பெரும்பான்மையக இருக்கிறீர்கள். நாங்கள் தமிழர் சிறுபான்மையாக இருக்கிறம். பெரும்பான்மை என்ற அகங்காரம் உங்களப் பிடித்திருக்கு. யாரும்இது நமது நாடுஎன்று உணரவில்லை. நமது நாட்டுத்தலைவர்கள் பிரித்தாளும் நாட்டில் படித்தவர்கள். எப்படி மக்களைப் பிரித்துவிட்டு தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கலாம் என்று திட்டம் போடுபவர்கள். இனரீதியாகவும், சமயம். மொழிரீதியாகவும் பிரித்துப் பதவியில் குந்துபவர்கள். அன்று இந்தியர்கள் பாதியை அழித்தார்கள். மீதியை இன்றைக்கு நீங்கள் எங்களையும் அழித்து உங்களையும் அழிக்கத் துடிக்கிறீர்கள். இந்த அடிமைவாழ்க்கை இனியும் வேண்டாம். அரசாங்க உத்தியோகத்தர்கள் அரசியல் வாதிகளின் கைப் பொம்மைகளாக இருக்குமட்டும் பொதுமக்கள் அடிமைவாழ்க்கையை அனுபவிக்கத்தான் வேணும். நாங்க பொது மக்களின் ஊழியர்கள். இதை உணரவேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேணும். நான்டிபன்ஸ் மினிஸ்றியுடன் தொடர்பு கொண்டு கேக்கிறன். எனக்கும் சில கடமைகள் உண்டு. இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்புக் கொடுக்க வேணும். அந்தச் சட்டதிட்டங்கள் மக்களுக்கு நன்மையைக் கொடுக்க வேண்டும். நான் இங்கு வந்ததை சொல்லவேணும் என்பது எனக்குத் தெரியும். அதற்கும் நேரம் காலம் இருக்கு. நான் தீவிரவாதியில்லை. அரசாங்க உயரதிகாரி. அதை நீங்க உணரவேண்டும். ஒரு கடமைக்கு உங்களிடம் சொல்ல வேண்டும்தான். அதனைக் காலையில் செய்யலாம் என்றுதான் இருந்தன். இப்போ இரவு பதினொரு மணி. இதுவரை வயதுபோன அம்மா சாப்பிடாமல் வெளியில, ரோட்டில குந்தியிருக்கிறா. இதுதானா நாங்க. நீங்க, அரசாங்க உத்தியோகத்தர்கள் செய்யும் கடமை?. நான் யார் என்பதும், எதற்கு வந்தேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்க செய்யிறதச் செய்யுங்கஆறுமுகமும் தக்க பதிலைக் கொடுத்தான். கொமாண்டர் சற்றுத் தடுமாறினான். அவனது முகத்தில் அறிவுபூர்வமான ரேகைகள் படர்வதை அவன் அவதானிக்கத் தவறவில்லை. ஆறுமுகம் விறுவிறு என்று அம்மாவை நோக்கி நடந்தான். ஞானம்பெற்ற புத்தராக கொமாண்டர் அவனையே பார்த்தவாறு நின்றான்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP