Wednesday, February 3, 2010

நான் பொய்யனாம்

உடம்பெல்லாம் ஒரே வலியாக இருந்தது. இன்றாவது பகல் உணவுக்குப்பின் சற்று சாய்ந்து ஓய்வாக இருக்கவேண்டும். இப்படியொரு எண்ணம் உருவாகியது. பிரபஞ்சம் பற்றிய சிந்தனை வந்து மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தது. மனமென்னும் கடலில் எண்ணஅலைகளின் வண்ணம். ஓன்றன்பின் ஒன்றாக சுழன்றடித்தன. பிரபஞ்சமென்பதென்ன? நாம் வாழும் இந்தப்பூமியைப் பற்றியே சரியாகத் அறியவில்லை. எப்படிப் பிரபஞ்சத்தினை அறிவது? எப்படி மாணிக்கவாசகர் ‘மாற்றமாம் வையகம்’ என்று சொன்னார். அவர் எங்கே விஞ்ஞானம் படித்தார். எங்கோ சுமத்திராவுக்குப் பக்கமாக புவிநடுக்கம் தோன்ற இலங்கையின் கிழக்குக் கரையோரம் ஆழிப்பேரலைகளால் சீரழிந்து போயிற்று. சனங்களையும், பொருள் பண்டங்களையும் காவுகொண்டு போயிற்று. முன்பிருந்த இலங்கையின் கடற்கரையோரத்தின் படம் மாறிவிட்டிருந்தது. யப்பானுக்குத்தான் இதில் பெரிய புகழ்கிடைத்தது. சர்வதேசங்களால் ஒரு யப்பானியச்சொல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதுதான் ‘சுனாமி’ என்ற சொல். எல்லா மொழிகளும் உள்வாங்கிக் கொண்டன. பத்துவயதாக இருந்த பக்கத்து வீட்டுப் வயதுப் பார்வதி இன்று பாட்டியாகிப் போய்விட்டாள். திண்ணையுடன் இருந்த தென்னோலை வீடுகள் சிமெந்துக் கட்டிடங்களாக நிமிர்ந்துள்ளன.எனது கைகளை, உயர்த்தி நிமிர்த்தி உதறிக்கொண்டு எழும்பி உடலைக் கண்ணாடியில் பார்க்கிறேன். இந்த உடல் சுருங்கி நரைதிரையோடு தெரிகிறது. இதைத்தானே கட்டழகு என்றும், அடர்த்தியான சுருண்ட தலைமயிர் என்றும் மனைவி சொன்னவள். எனது தேவைகளை யாரறிவார்.? யாதுமாகிநின்று எனது துயரங்களை எல்லாம் களைந்து, சுகம் தந்தவள். ஈருடலும் ஓருயிருமாகி இருந்த மனைவியும் வந்தவழியே போய்விட்டாள். நான்மட்டும் தனியனாகிக் கிடக்கிறேன். அவளது நினைவுச் சுழியில் சிக்கி மனம் தவிக்கிறது. அடுத்தபிறவி எடுக்கும் வரை சந்திரனில்தான் ஆத்மாக்கள் காத்திருக்குமாம். எங்கேயோ ஒரு புத்தகத்தில் வாசித்த நினைவு வந்தது. அவளும் சந்திரனில் இருப்பாளோ? ஆத்மாக்ளுக்குத்தான் உடலில்லையே. அவள் இருந்தால் எவ்வளவு நிம்மதி. தேவைகளை அறிந்து எல்லாம் செய்து தருவாளே.‘ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன? வேரென நீயிருந்தாய். அதில் நான் விழுந்து விடாதிருந்தேன்.’ பாடல் அடிகள் வந்து செவிப்பறைகளில் குந்தியிருந்தன. எவ்வளவு ஆர்த்மாத்தமான உண்மை. நான் விழுந்து விடாதிருக்க அவள்தானே ஆதாரமாக இருந்தாள். நினைந்து கண்கள் குளமாகின. முதுமைக்காலம் பொல்லாதது. என்னதான் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என்று இருந்தாலும் மனைவியினால் நிறைந்திருந்த இடம் வெற்றிடம்தான். நாமும் போகும்வரை அதனை யாராலும் நிரப்பவியலாது. உலகத்தில் நிலையானது ஒன்றுமில்லை. மலைகளும் ஒரு வருடத்துக்கு நான்கு சென்றிமீற்றர்வரை நகர்வதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். சந்திரன் வளர்ந்து தேய்கிறது. அது வாழ்க்கையின் நிலையாமையைக் கூறுகிறதாம். இறப்புப் பிறப்புப் பற்றியும் கூறுகிறதாம். வாழ்க்கை இரவும் பகலும் போன்றது என்பார்கள். இதனை சுவாமி விபுலானந்தரும் ‘கந்தசாமி…’என்ற கவிதையில் கூறியிருக்கிறார். இதனைத்தான் நமது மணிவாசகனார் ‘மாற்றமாம் வையகம்’ என்று அன்று சொன்னாரோ?


நாட்டில் ஏற்பட்ட பிரச்சினையினால் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மக்கள் இடம்பெயர்ந்து நகரங்களில் அடைக்கலமானார்கள். நாங்களும் எங்கட கிராமத்தைவிட்டு நகரத்துக்கு தள்ளப்பட்டோம். திருகோணமலையில் வீடுகளுக்குப் பஞ்சம். காணியுள்ளவர்களுக்கு அதிர்ஸ்டலாபம். அதனால் அவர்களுக்குச் சந்தோசம். ஆயிரம் ரூபாவாக இருந்த ஒருபேர்ச் காணித்துண்டு பல லட்சரூபாக்களாக மாறியிருந்தது. நாங்கள் நால்வர் எடுக்கும் சம்பளத்தில் மிச்சம்பிடித்து ஆறுபேர்ச் நிலத்தை வாங்கி கொட்டிலமைத்துக் குடியிருந்தோம். ஓய்வூதிய பணிக்கொடை கிடைத்ததால் சிறிதாக இரண்டு அறைகொண்ட மாடியையும் அமைத்துக் கொண்டோம். எனக்கு மாடிதான் தஞ்சம். எனது அறையில் பேனாவையும் தாளையும் எடுத்து எழுதமுயன்றேன். தொடர்ந்து ஒரேஇடத்தில் இருக்கமுடியாது கைகால்கள் வலித்தன. எழுவதும் எழுந்து அறையினுள் உலாவுவதும்இ இருப்பதுமாக நேரம் போய்க்கொண்டிருந்தது. பங்குனி மாதத்துப் பற்றி எரியும் வெயிலின் வெப்பத்தைச் சுவர்கள் உறிஞ்சி அறையினுள் பரப்பிக் கொண்டிருந்தன. அறை போறணைபோன்று வெந்து கொண்டிருந்தது. நானென்ன அப்பரா? ‘வீசு தென்றலும் வீங்கிளவேனிலும், மூசுவண்டறைப் பொய்கைபோன்று’ அனுபவிப்பதற்கு.


வெயர்த்துக் கொட்டியது. பகல் ஒரு மணியைத் தாண்டிவிட்டது. “வீட்டில் யாருமில்லையா”? கீழே பலர் கதைப்பது கேட்டது. எனது மூத்த பேரன் அப்போதுதான் ரியூசன் முடிந்து வந்தான். எட்டிப்பார்த்தேன். அவனிடம் சிலர் கேள்விகள் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் திக்குமுக்காடினான். யாரிவர்கள்? யோசித்தவாறே நான் மெதுவாக கீழிறங்கி வந்தேன். இரண்டு பொலிஸ்காரர்கள் காவலுக்கு நின்றார்கள். நான்கு பேர் மின்சார மீற்றர் இருக்கும் பக்கம் நின்றார்கள். ஒருவர் மின்சார மீற்றரைப் பாரத்துக் கொண்டு ஏதோ சொன்னார். ஓரு அதிகாரிபோல் இருந்தவர் பார்த்துப் பதிந்து கொண்டிருந்தார். அவர்தான் அவர்களின் உயரதிகாரியோ? அவரது முகம் வித்தியாசமானது. ஒரு உணர்ச்சியையும் காட்டாத பேர்வழி. முகத்தில் சிரிப்புமில்லை. கோபமும் இல்லாத அதிசயப்பிறவி என்பதைப் புரிந்து கொண்டேன். இன்னொருவர் ஒரு வயரை எடுத்துத் தாங்கள் கொண்டு வந்த பெரிய மின்குமிழ் பொருத்திய பலகையில் பொருத்தினார். மற்றவர் சுவிற்சைப் போட்டார். சிங்களத்திலேயே உரையாடினார்கள். அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்கள். ஒருவர் சாடையாகத் தமிழில் பேசினார். அவர்களுக்குள்ளேயே பலவற்றைக் கதைத்து விவாதித்தார்கள். இப்போது மின்சார இணைப்பைப் பார்த்தார்கள். மின்சார சபையிலிருந்து மின்சாரமீற்றர் பாரக்க வந்துள்ளார்கள் என்று பேசாது நின்றேன்.“வீட்டினுள்ளே எத்தனை ‘யுனிற் சுவிச்’ இருக்கின்றன.”? சிங்களத்தில் கேட்டார்கள். எனக்கு அவர்கள் சொன்ன சிங்களம் விளங்கவில்லை. எங்கள் வீட்டில் எத்தனை சுவிச் இருக்கிறது என்பதும் தெரியாது. பொதுவாக எங்கள் வீட்டார் மின்சார மீற்றர் பக்கமே போவதில்லை. அவர்களுக்கு விடிந்தால் பாடசாலை, அதனோடு தொடர்புடைய வேலைகள் என்று அலைவார்கள். அதிகமாக இரவு உணவு வேளையில்தான் சந்திக்கலாம். மாதமொருமுறை எங்கள் வீட்டுக்கு இருவர் தவறாது வருவது வழக்கம் ஒருவர் மின்சாரமீற்றர் பார்ப்பவர். மற்றவர் தண்ணீர் மீற்றர் பார்ப்பவர். அடிக்கடி இவை இரண்டிலும் தடைகள் வருவதுண்டு. மீற்றர் பார்க்கவருபவர் வந்து பதிந்து உரிய பட்டியலைத் தந்து விட்டுச்செல்வார். மகன் அதற்குரிய பணத்தை வங்கியில் கட்டிவிடுவார். இது எங்களது வாடிக்கை. இதே முறையையே கடைப்பிடித்து வருகிறோம்.நான் ஆங்கிலத்தில் “எத்தனையென்று தெரியாது. இது எனது மகனின் வீடு. விரும்பினால் உள்ளே போய் பாருங்கள்” என்றேன். இந்த வீட்டுக்கு வந்து சுமார் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. அன்று போட்ட மின்சாரமீற்றர்தான் இன்றுவரை இருக்கிறது. வீட்டினுள் அந்த அதிகாரி வந்தார். பொலிஸ்காரர் இருவரும் கூடவே வந்தார்கள். ஒவ்வொரு அறையாகத் துருவித்துருவிப் பார்த்தார். மேல்மாடிக்கும் வந்தார். சுற்றிப் பார்த்தார். சுவிச்யுனிற்றுக்களை அவரே எண்ணிக் குறித்தார். நான் எழுதிய புத்தகங்களைப் பார்த்தார். அவற்றின் அட்டைப் படங்களைப் பார்த்தார் “அழகான படங்கள்” என்றார். “யார் வரைந்தது?” என்றார். “மகன்தான் வரைந்தார்” என்றேன். “நல்ல படங்கள்” என்றார். “நீங்கள் நல்ல கலா ரசிகர்போல் தெரிகிறது” ஒருபோடு போட்டுப் பாராட்டினேன். அவர் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.புத்தகங்களுக்குக் கிடைத்த பல சான்றிதழ்கள், பரிசுகள், பொன்னாடைகளையும், பல அமைச்சர்கள் பரிசுகளையும், பட்டங்களையும் வழங்கியபோது அவ்வப்போது அவர்களோடு எடுத்த நிழற்படங்களையும் எனது மகன் கண்ணாடி அலுமாரியில் காட்சியாக வைத்திருந்தார். அவற்றைப் பார்வையிட்டார். பொலிஸ்காரர்கள் “உங்கள் வீடு அழகாக இருக்கிறது. எவ்வளவு புத்தகங்கள். ஒரு வாசிகசாலையே இருக்கிறது”. என்றார்கள். அதிகாரி கீழே இறங்கி நடந்தார். தொடர்ந்து பொலிஸ்காரர்கள். அவர்களின் பின்னால் நடந்தேன். இப்போது வெளியில் வந்து விட்டோம். பழையபடி மீற்றர் இருந்த இடத்துக்குப் போனோம். அதிகாரி இருவகையான கம்பித்துண்டுகள் நான்கினைக் காட்டினார். ஒருவகைக் கம்பியில் ஆங்கிலத்தில் இலங்கை மின்சார சபை என்பதன் சுருக்கமான இ.மி.ச. என்ற ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே இருந்த கம்பியில் அந்த எழுத்துக்கள் இல்லை. அந்த அதிகாரி நக்கலாகச் சொன்னார். “மாத்தையோ மேக்க பாலன்ன. இதைப்பாருங்க.” கூறித்தன் சிப்பந்திகளைப் பார்த்தார். அவர்கள் மீற்றர் வயரில் தாங்கள் கொண்டு வந்த மின்குமிழ் வயரைப் பொருத்திச் சுவிற்சைப் போட்டார்கள். நன்றாக எரிந்தது. “ பளன்ன...இவ்வளவு யுனிற் போகுது. ஆனால் உங்கட மீற்றர் சரியாக வேலை செய்யல்ல.” வந்திருந்த பொலிஸ்காரரிடமும் காட்டினார்கள். “நீங்க .. சரியான பொய்யன். மீற்றரைக் கழற்றி களவு செய்திருக்கிறீங்க. இவ்வளவு யுனிற் ஓடியிருக்கவேண்டும். ஆனால் உங்கட மீற்றர் குறைய ஓடியிருக்கு”. அந்த அதிகாரி சொன்னவை எனக்கே விளங்கவில்லை. பாவம். அந்தப் போலிஸ்காரருக்கு எப்படி விளங்கும். மீற்றர் குறைய ஓடியிருக்கிறதற்கு மருமகளின் கண்டிப்புத்தான் காரணம். பிள்ளைகள் மின்விளக்கை அதிக நேரம் பாவித்தாலும் ஏசுவார். மின்சாரக் கேத்தலைப் பாவித்தாலும் கரண்டபில்; கூடப்போகுது என்று கத்துவார். மருமகளை மனம் பாராட்டியது.சொல்லிவிட்டு அதிகாரி தனது குறிப்பேட்டில் ஏதோ எழுதினார். எழுதும்போதே தன்னோடு வந்தவர்களுக்குக் கட்டளையிட்டார். மீற்றர் பக்கமே எட்டியும் பார்க்காத நான் மீற்றரைக் கழற்றி களவுசெய்ததாக இந்த அதிகாரி கூறுகிறானே? நானும் இவரைவிடவும் உயர்பதவியில் இருந்து இன்று ஓய்வுபெற்றவன்தான். இந்த அற்ப எண்ணங்களுக்கு ஆளாவதா? மின்சார வயர்களில், காகம், .புறா போன்றன குந்தியிருக்கும்போதே மின்சாரம் தாக்காதா என்று ஏங்கும் நாங்கள் மீற்றரில் மாற்றம் செய்வதாவது. பியூஸ் போனாலும் அதைப்போடத் தெரியாமல் தெரிந்தவர்களின் உதவியைத் தேடி, அவர்கள் வந்து சரிசெய்யும்வரை காத்திருக்கும் பெரிய புத்தகப் படிப்பாளிகள். வாழ்க்கைக்கு வேண்டியவற்றைக் கற்றுக் கொள்ளத்தெரியாத பண்டிதர்களாகப் போனோம். அவர்கள் மின்சாரத்தைத் துண்டித்துச் சீல்வைத்தார்கள். மீற்றரைக் கழற்றி எடுத்து பேப்பருக்குள் பொதிசெய்தார்கள். எனக்கு ஆத்திரம் வந்தது.“திருகோணமலையில் ஒரு மின்சாரசபையுள்ளது. அதிலிருந்து மாதாமதம் அலுவலர்கள் வருகிறார்கள். ஏதும் பிழையென்றால் அவர்கள் எங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கவேண்டும். அவர்கள் தரும் பட்டியலுக்குரிய பணத்தினைத் தவறாது கட்டியும் விடுகிறோம். எப்படி நீங்கள் மின்சாரத்தைத் துண்டிக்கலாம்.? இங்கு படிக்கிற பிள்ளைகள் இருக்கிறார்கள். பரீட்சை நெருங்குது. ஏன் மின்சாரசபை அலுவலர்கள் உங்களுடன் வரவில்லை. ஏன் இதுவரை மின்சாரசபை இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இது சரியான மனித உரிமை மீறல்.” சாடினேன். “மாத்தையா.. இப்ப சட்டம் பேசேலாது. வாங்க பொலிஸ் ஸ்ரேசனுக்கு. உங்கள அரஸ்பண்ணிற்றுப் போகத்தான் பொலிஸ் காவலோடு வந்திருக்கம். புறப்படுங்க”. அந்த அதிகாரியின் கபடச்சிரிப்பை இப்போதுதான் புரிந்து கொண்டேன். நேரத்தைப் பார்த்தேன் மூன்றரை மணி. “மாத்தையோ பேர் என்ன? கேட்டார். சொன்னேன். எழுதிக்கொண்டார்.“மொனவத றக்சாவக் கரான்ன? வேல என்ன என்று கேட்டார். “இப்போ ஓய்வூதியம் பெறுகிறேன்.” சொன்னேன். “முதலில் என்ன றக்சாவ”? பொலிஸ்காரர் கேட்டார். “வடக்கு கிழக்கு மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர்”. பொலிஸ்காரர்களின் முகத்தில் பரிதாப உணர்ச்சி குந்தியிருந்தது. பெரிய உத்தியோகம் பார்த்;தவர். இப்படிச் செய்திருப்பரா? ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். அவர்களால் ஒன்றுஞ்செய்ய முடியாது. “நான் பின்னேரம் பொலிஸ் ஸ்ரேசன் வாறன். நீங்க இப்போது போங்க”. சொன்னேன். “அது முடியாது. நீங்க சரியான பொய்யன். பொய்வேல செய்திருக்கிறீங்க. உங்கள கையோடு கூட்டிப்போகவேணும். வாங்க இப்பவே”. அந்த அதிகாரி அதிகார தோரணையில் அவசரப்படுத்தினார். “எனக்குப் பசிக்கிறது. இப்ப நேரம் மூன்றரை. வீட்டுல யாருமில்ல. கொஞ்சம் சாப்பிட்டுவிட்டாவது வாறனே…” பொலிஸ்கார்கள் என்ர நிலையைப் பார்த்துப் பரிதாபப் பட்டிருக்கிறார்கள். “சரி..சரி..கெதியா வாங்க” என்று சொன்னார்கள். அதிகாரியும் தலையை ஆட்டினார்.மெதுவாக குசினியுள் நுழைந்து கொஞ்சம் சாப்பாட்டைப் பீங்கானில் போட்டேன். சாப்பிடமுயன்றேன். முடியவில்லை. ஒருவாறு விழுங்கி விட்டு உடுப்பை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தேன். அப்போதுதான் மகன் வந்தார். நடந்த விடயத்தைக் கேட்டுக் கவலை கொண்டார். அவர் சரளமாகச் சிங்களத்தில் விளக்கினார். “நாங்கள் எல்லாரும் அரசாங்க அலுவலர்கள். எங்களை இப்படி அவமானப்படுத்துவது கொஞ்சமும் அழகல்ல. தவறு எங்கிருக்கிறது என்று நீங்க கண்டுபிடித்து முதலில் அதைத் திருத்தவேண்டும். அதைவிட்டு அப்பாவிகளை இப்படி நடத்துவது நல்லதல்ல. இஞ்ச இருக்கிற மின்சாரசபை அலுவலர்கள் எல்லாரும் என்ன செய்கிறார்கள். அடிக்கடி மின்சாரம் இல்லாது போகிறது. அவர்களோடு தொலைபேசியில் கதைத்தால் எங்கட வேலை எங்களுக்குத் தெரியும். என்று பதில் சொல்லுவார்கள். சம்பளம்தான் அவர்களது ஓரே நோக்கமா”? அவர் படபடத்தார். அவருக்கும் சற்று உடல்நலக்குறைவாக இருந்தது. அவரைச் சமாதானப் படுத்தினேன். “செய்யவேண்டிய அலுவல்களைப் பார். ” கூறிவிட்டுப் புறப்பட்டேன்..பக்கத்து வீட்டுச் சனங்கள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். “எப்படிப் போவது? நான் சைக்கிளில் வரட்டா”? கேட்டேன். அவர்களுக்கு நான் ஓடிவிடுவேன் என்றெரு சந்தேகம்போலும். “இல்லை இல்லை. வாகனம் இருக்கு”. என்றார்கள். பொலிஸ்காரர் வந்தபடியால் பொலிஸ் ஜீப் வந்திருக்கும் என்ற சந்தேகம் என்னைப் பற்றிக் கொண்டது. சுமூகத்தில் ஒரு அந்தஸத்து இருந்தது. மற்றவர்கள் மதிக்ககத்தக்க உத்தியோகத்தில் இருந்தவரை போலிஸ் புடிச்சிற்றுப் போகுது என்ற அந்தப் பழிச்சொல்லுக்கு ஆளாவதா? “பொலிஸ் ஜீப்பில் நான் ஏறமாட்டேன்.” என்றேன். “பொலிஸ் ஜீப் இல்லை. எங்கட வாகனத்தில் போகலாம். வாங்க” சொல்லி நடந்தார்கள். எங்கள் வீடு ஒரு ஒழுங்கைக்குள் இருந்தது. அந்த ஒழுங்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகத் தேய்ந்து ஒரு ஆட்டோவும் போகமுடியாத அளவிற்குத் தன்னைச் சுருக்கிக்கிக் குடியிருப்பாளர்களுக்குக் காணியைப் பெரிப்பித்துக் கொடுத்து விட்டிருந்தது. ஒரு பெரும்படை முன்னும் பின்னும் சூழ நடந்து சென்று வாகனத்தில் ஏறினேன்.பொலிஸ் ஸ்ரேசனுக்குள் நுழைந்தேன். பொலிஸ் ஸ்ரேசன் பல மாடிகளைக் கொண்ட அழகான கட்டிடம். என்னைப் போன்ற அப்பாவிச் சனங்கள் குழுமியிருந்தார்கள். கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தகப் பெருமக்கள். சாதாரண பொது மக்கள் என்று ஏராளமானவர்கள் நின்றார்கள். ஆளையாள் பார்க்க வெக்கமாகவும் இருந்தது. “இவர்களும் என்னைப்போல் பொய்வேலை செய்தவர்கள்தானா? பொய்யன்களா”? என்னை நானே கேட்டுக் கொண்டேன். என்னை அழைத்துப்போன அதிகாரி பொலிஸ்காரரிடம் ஏதோ சொன்னார். தான் தயாரித்த அறிக்கையையும் கொடுத்தார். அந்தப் பொலிஸ்கரர் என்னை அழைத்துப் பெயரைக் கேட்டார். சொன்னேன். அந்த அறிக்கையில் சிங்களத்தில் இருந்தது. என்ன எழுதியிருந்தது என்பதை நானறியேன். அறிக்கையில் கையெழுத்தை மட்டும் போடச்சொன்னார். போட்டேன். முடிந்ததும் என்னை அழைத்துக் கொண்டு போனார். “ அத்துளட்ட யன்ன. அதற்குள் போயிருங்கள்” என்றார். காவலுக்கு நின்ற பொலிஸ்காரர், காலணியை வெளியில் கழற்றிவிடுமாறு சொன்னார். கால்சட்டை வழுகாது காப்பாற்றும் ‘பெல்ற்’ பட்டியைக் கழற்றச் சொன்னார். அத்தனையையும் கழற்றி வெளியில் போடச் சொன்னார். போட்டேன். நான் உள்ளே சென்றதும் இரும்புக்கம்பிக் கதவு பூட்டிக்கொண்டது. நான் இப்போது சிறைக்கூண்டுக் கைதி.அது இருபது அடி அகலமான அறை. பத்தடியில் ஒரு ஹோல். மிகுதிப் பத்தடியில் இரண்டு சிறிய அறைகள். ஒரு மலசலகூடம். அதற்குள் ஐம்பதுக்கு மேல் ‘றிமாண்ட்’ கைதிகள். எனக்கொரு புது அனுபவம். என்னைப்போல் வந்தவர்களுக்கு நிற்கவும் இடமில்லை. “வாங்க சேர்” எனக்குப் பெரிய வரவேற்பு. என்னைத் தெரிந்த பலர் இருந்தார்கள். பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் பெயரால் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலர் இருந்தார்கள். தாங்கள் இருந்த இடத்தில் அரக்கி இடம் ஒதுக்கித் தந்தார்கள். மங்கலான வெளிச்சத்தை மின்குமிழ் உமிழ்ந்து கொண்டிருந்தது. “சேர் இந்தப்பையன்கள் இங்க வந்து இரண்டு மாதமாகுது. இன்னும் விடவில்லை. அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை எடுக்கவிருக்கிறார்கள். படிக்கவேணும். வசதியில்லை. நான் அவங்களுக்குப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கிறேன். புத்தகங்கள்தான் இல்லை”. கவலையோடு அந்த ஆசிரியர் சொன்னார்.பலரைப் பேட்டி காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாவலாகத் தெரிந்தார்கள். சோகக்கதைகளைக் கேட்க மனம் வேதனை கொண்டது. இனவிடுதலைப் போராட்டம் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது. போராடுபவர்கள் எங்கேயோ போராடுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்பாவிகள்தான் அதன் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். சிறப்பாக இளைஞர்களும், யுவதிகளும் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கும் போராட்டத்துக்கும் தொடர்பே இருக்காது. ஆனாலும் அவர்கள்தான் அனாவசியமாகச் சிறைகளை நிரப்புகிறார்கள். அவர்களை நம்பியிருக்கும் எழைப் பெற்றோர்கள் தவிக்கிறார்கள். அவர்களது மனம் உடைந்து வாழ்க்கையில் விரக்தி உருவாகிவிடுகிறது. அவர்கள் உள்ளங்கள் இறுகி சமூகத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்கிறது.நமது சமூக அமைப்பு அப்படிப்பட்டது. போட்டியும். பொறாமையும், கல்வியறிவின்மையும். பிறர் துயரத்தைப்பார்த்து சந்தோசிப்பதையும் கொள்கையாகக் கொண்டது. தமிழர்கள் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்ததற்கான வரலாறு கிடையாது. பெருமை மட்டும் பேசி அழிந்து கொண்டு போகும் இனமாகத் தமிழினம் மாறிவிட்டது. ‘என்சைக்கிளோப்பீடியா பிரித்தானிக்கா’ என்ற கலைக்களஞ்சிய நூலில் தமிழர் என்றால் ‘பணத்துக்காகவும். பதவிக்காகவும் காட்டிக்கொடுக்கும் இனம்’ என்று எழுதியிருக்கிறது. இதனை யாரும் மறுக்கவில்லை. இப்படிப்பட்ட சமூக அமைப்பில் ‘சுதந்திரம்’ என்ற சொல்லுக்கே இடமில்லை. எனது மனம் வேதனையில் வெந்தது. உடல் அலுப்பெல்லாம் பறந்துவிட்டது. நேரம் விரைந்து கொண்டிருந்தது. அந்த ஆசிரியரைப்பற்றி அறிந்திருக்கிறேன். அவர் அனுபவம் உள்ள ஆசிரியர். அவரது குடும்பம் வறுமைக்கோட்டில் வாழ்கிறது. அவரது தமக்கை ‘கான்சர்’ நோயில் வாடுபவர். அவரது சம்பளத்தை நம்பியே அவரது அம்மா. அக்கா. தங்கை தம்பிமார் வாழ்கிறார்கள். அவர் இந்தக் கைதிக்கூண்டில் வாடுகிறார். அவரது கதை என்னை வாட்டியது.மனிதவாழ்க்கை வட்டம் குறுகியது. “சேர்..என்ர சம்பளம் போகாட்டி ..அக்காவுக்கு மருந்து கிடைக்காது. குடும்பம் பசியில் தவிக்கும். என்னைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் என்ர குடும்பத்தைப் பற்றித்தான் கவலை. கண்ணீர் மல்கக்கூறினார். இந்தப் பாதுகாப்புப்பிரிவினர் எவ்வளவு தப்புச் செய்கிறார்கள். சமாதானத்தை விரும்பும் அப்பாவிகளைக் கைது செய்து அவர்களுக்கு மென்மேலும் துன்பத்தைக் கொடுக்கிறார்கள். இவற்றைப் பற்றி உணரக்கூடியவர்கள் யாரிருக்கார்? சுயநலமிகள் பதவியில் இருப்பதால் எவ்வளவு பேருக்குக் கஸ்டம். இவற்றைத் தட்டிக் கேட்க நீதித்துறைக்கும் வல்லமை இல்லையா? கைது செய்து வருபவர்களை துரிதகதியில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தால் அப்பாவிகள் துன்பத்தில் இருந்து விடுபடுவார்கள். இப்படிக் கைது செய்து வருபவர்களது அறிக்கைகளை ஒருகிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது கைது செய்து வருபவர்கள்மேல் கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தினால் அப்பாவிகள் ஓரளவு நிவாரணமடைவார்கள்.நேரம் இரவு ஒன்பது மணி. ஒரு பொலிஸ்காரர் வந்தார். பெயர்களை வாசித்தார். வரிசையில் வரச்சொன்னார். வெளியில் பெரிய வாகனம் நின்றது. ஏறும்படி சொன்னார்கள். நானும் ஏறிக்கொண்டேன். மஜிஸ்ரேட் பங்களாவில் விட்டார்கள். ஒருவர்பின் ஒருவராக நிற்க வைத்தார்கள். நின்றோம். மஜிஸ்ரேட் ஆறுதலாக வந்தார். அடிக்கடி தொலைபேசி அழைப்பு வரும். எழுந்து சென்று பேசிவிட்டு வருவார். பொலிஸ்காரர் பெயரை வாசிப்பார். பக்கத்தில் இதற்கென சட்டத்தரணிகள் நிற்பார்கள். பெயருடையவர் கைகட்டி பதுமைபோல் போவார். சட்டத்தரணிகள் முன்வந்து நிற்பார். மஜிஸ்ரேட் வழக்குப் பதிந்து தவணைக்குரிய நாளையும் கூறி பிணையில் விடுவார். எனது பெயர் வாசிக்கப்பட்டது. சட்டத்தரணி முன்னால் வந்தார். மஜிஸ்ரேட் தவணைக்குரிய நாளையும் கூறி பிணையில் விட்டார்.மஜிஸ்ரேட் பங்களாவின் வெளிப்புற மதிற்சுவர் கேற்றில் சனக்கூட்டம். வெளியில் வரும்போது கையெழுத்திட்டுப் பிணையெடுக்க ஆட்கள் வேண்டும். மஜிஸ்ரேட்டிடமிருந்து வரும் படிவங்களில் கையெழுத்திடவேண்டும். அப்போதுதான் வெளியேறலாம். மகன் வந்திருந்தார். பத்தரை மணிக்கு வீடுவந்து சேர்ந்தேன். இந்தச் சமூக அமைப்பையும், அரச இயந்திரங்களின் அசமந்தப்போக்கினையும் எண்ணினேன். சரியாக அரச இயந்திரங்கள் இயங்கினால் சமூகத்தில் இவ்வாறான அசௌகரியங்கள் இடம்பெறுமா? இனி நீதிமன்றம் ஏறவேண்டும்.இரண்டுநாட்கள் உருண்டோடின. இன்று நீதிமன்றில் சமூகம்கொடுக்க வேணும். அதிகாலையிலேயே எழுந்து விட்டேன. எட்டு மணிக்கெல்லாம் நீதிமன்றில் நிற்கவேணுமாம். நீதிமன்று மக்களால் நிரம்பி வழிந்தது. வரவு பதியாத உழைப்பு சட்டத்தரணிகளது என்பதைப் புரிந்து கொண்டேன். ஒருகையால் வாங்குவது மற்றக் கைக்குத் தெரியாதுபெறும் உத்தியோகம். நல்ல வருவாயுள்ளது. நானும் சட்டம் படித்திருந்தால் சாகும்வரை காணியுறுதியாச்சும் எழுதிப்பிழைத்துக் கொண்டிருக்கலாம் என எண்ணினேன். ஒரே நேரத்தில் பலமண்டபங்களில் வழக்குகள் நடைபெற்றன. எங்கும் கறுத்தக்கோட்டுகள் உலாவந்தன. வழக்குகள் நடைபெறும் இடங்களை அறிவித்தார்கள். இவ்வளவு பேரும் குற்றம் செய்தவர்களா? தெரிந்த முகங்களும், தெரியாத முகங்களுமாக உலா வந்தன. மகன் சட்டத்தரணியுடன் கதைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். சட்டத்தரணி என்னிடம் வந்தார். “ஐயா உங்கள் பெயர் கூப்பிடும்போது குற்றவாளிக் கூண்டில் ஏறிப் பேசாமல் நில்லுங்கள். மிச்சத்தை நான் பார்த்துக் கொள்ளுவன்”;. என்றார். ஒன்றுமே செய்யாது நான் குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டுமாம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீதிமன்றம் ஒரு தனி உலகம். எங்கள் வழக்கு நடைபெறும் மண்டபத்துள் நுழைந்தேன். இருக்க இடமில்லாது பலர் நின்று கொண்டிருந்தார்கள் நீதவான் வருகை அறிவிக்கப்பட்டது. எல்லோரும் எழுந்து அவர் இருக்கும்வரை நின்றார்கள். நானும்தான். நின்றேன். நடைமுறைகளை அவதானித்தேன்.நான்காவதாக எனது பெயர் வாசிக்கப்பட்டது. சட்டத்தரணி சொன்னதுபோல் செய்தேன். நீதவான் ஒருமுறை நிமிர்ந்து என்னை பார்த்தார். சட்டத்தரணி நீதிவான் பக்கம் நின்றார். நீதிவான் குனிந்து எழுதினார். அவர் என்ன சொன்னார.; எழுதினார் என்பது எனக்கு விளங்கவில்லை. வெளியில் போகச்சொன்னார்கள். வெளியில் வந்தேன். பொலிஸ்காரர் ஒரு கூண்டைக்காட்டி “அதனுள் குற்றவாளி நிற்கவேணும். அதற்குள் போங்கள்”. என்று கூட்டைத்திறந்தார். எனக்குமுன் வெளியில் வந்தவர்கள் அதற்குள் நின்றார்கள். சட்டத்தரணி விரைந்து வந்து பொலிஸ்காரரிடம் ஏதோ சொன்னார். “அப்படியா? ஐயா இந்தப்பக்கம் வாங்க. இந்தக்கதிரையில் இருங்க”. தனக்குப் பக்கத்தில் இருத்தினார். மகன் இங்குமங்கும் ஓடித்திருந்தார். பதினொன்றரை மணி. மகன் பொலிஸ்காரரிடம் ஒரு பற்றுச்சீட்டைக் காட்டினார். பொலிஸ்காரர் அதைப்பார்த்துப் பதிந்தார். “ஐயா நீங்க போகலாம்.” என்றார். காசு ஐயாயிரம்கட்டி பற்றுச் சீட்டைப் பெற்றுக் காட்டினால்தான் நீதிமன்றத்தை விட்டுப்போக அனுமதி கிடைக்கும். யாருக்கு எதிராக வழக்குப்பதியப்படுகிறதோ அவர் ஐயாயிரம் கட்டவேண்டும். கட்டாவிட்டால் கட்டும் வரை சிறைவாசமாம். மகன் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். “அப்பா எல்லா வேலையும் முடிஞ்சுது. வாங்க வீட்டுக்குப் போவம்” அழைத்தார். “என்ன நடந்தது”. விசாரித்தேன். நாங்க மின்சார மீற்றரில் மாற்றம் செய்து கள்ளமாக மின்சாரம் எடுத்திருக்கமாம். தண்டம் நமக்கு எழுபதாயிரம் போட்டிருந்தார்கள். எல்லாத்தையும் சேர்த்துக் கட்டிப்போட்டன். அந்த அதிபர் பாவம் அவருக்கு ஒரு லட்சம். அந்தக் கல்விப்பணிப்பாளருக்கு தொன்னூறாயிரம். அதோ நிற்கிறார் உங்கட கூட்டாளிப் பென்சனியர் அவருக்கு ஒன்றரை லட்சம்”. மகன் இப்படியே அடிக்கிக் கொண்டே போனார். “எப்படி இவ்வளவு தொகை வந்தது”? ஆச்சரியத்துடன் கேட்டேன். “ஐந்து வருசத்துக்குக் கணக்குப்பார்த்து இந்தத் தொகையைத் தீர்மானித்தார்களாம்”. மகன் கவலையோடு விளக்கமாகச் சொன்னார்.“இத மறுதலித்து நாங்க மேன்முறையீடு செய்யலாதோ”? கேட்டேன். “செய்யலாம். ஆனால் வழக்கு இழுபடுமாம். வழக்கு முடியும்வரை ‘கரண்ட்’ தரமாட்டாங்களாம். நமது பிள்ளயளுக்குச் சோதனை நெருங்குது. அவர்கள் படிக்கவேணும். தட்டிக்கேட்க நம்மால முடீயுமா? நூங்க எல்லாரும் அரசாங்கத்தில் வேலசெய்யிறம். இதில மினக்கிட ஏலுமா? அதற்காக லீவு எடுக்க வேண்டி வரும். ஊயர் அதிகாரிகளைப் பகைக்க வேண்டிவரும். ஏன்ன செய்வது?” மகன் அடுக்கிக் கொண்டு போனார். அவர் சொல்வதில் அடங்கியுள்ள விசயங்களை எண்ணிப்பார்த்தேன். அதிலும் ஞாயம் இருக்குதுதான். மனம் பொருமியது. ஊள்ளம் கொதித்தது. இந்தச் சமூகத்தை நினைத்துப் பார்த்தேன். இன்றைய காலகட்டத்தில் நடைமுறைச் சாத்தியங்கள் வித்தியாசமான வழிகளில் செல்வதை உணர்ந்து கொண்டேன். வெட்கமும் வேதனையும் பொத்துக் கொண்டு வந்தது.“ஆக அவங்கட தீர்ப்பின்படி நான் பொய்யனாம். என்ன?; அவர்களின் கணிப்பின்படி நான் மட்டுமல்ல. பொதுவாக மின்சாரம் பாவிக்கும் வாடிக்கையாளர் எல்லாரும் பொய்யன்கள்தான். இவங்கள எந்த நீதிமன்றம் தண்டிக்கப் போகிறது? அரச இயந்திரம் சரியாக இயங்கினால் மக்களுக்குத் துன்பம் ஏற்படச்சாத்தியம் இல்லை. மின்சாரசபையில் வேலை செய்பவர்கள் எல்லோரும் சரியாக வேலை செய்தால் வாடிக்கையாளர்களுக்கு இந்த நெருக்கடி நேருமா? பத்துப் பதினைந்து வருசமா இந்தப்பிரதேசத்தில இருக்கும் மின்சாரசபை என்ன செய்தது? எத்தன இன்ஜீனியர்மார், எக்கவுண்டன்மார், சுப்பவைசர்மார் என்று இருக்கிறாங்க. எங்கிருந்தோ வந்தாங்கள் எல்லாரையும் பேய்க்காட்டி விட்டுப் போய்விட்டார்கள். இங்க இருக்கிற மின்சாரசபையினரையல்லவா தண்டிக்க வேணும்? இதைத்தட்டிக் கேக்க ஆக்களில்லையா? அரசாங்கத்தையும், பொதுமக்களையும் இவங்கள் ஆட்டிப்படைக்கிறாங்க. மின்சாரசபையைக் கலைக்கவேணும். தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது சரியான நிர்வாகம் நடக்கும். இதனைச் செய்வார்களா? செய்யவேணும். அரசாங்க உத்தியோகத்தர்களும். அரசசார்பான சபைகளும் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். இப்ப எல்லாரும் எஜமானர்களாகி விட்டார்கள். தடி எடுத்தவரெல்லாம் சண்டப்பிரசண்டன்களாகுமாப் போலாகிவிட்டார்கள். எனது மனதில் எனக்கு நடந்தவை படமாக விரிந்தது. இவர்களை மனித உரிமை மீறல் சட்டத்தின்கீழ் கொண்டுவந்து தண்டிக்கவேணும். அரசாங்கம் இவ்வகைச் செயற்பாடுகளை ஊக்குவிக்கிறதா? நீதி மன்றங்கள் அநீதிக்குத் துணைபோகலாமா? யாரோ செய்யும் தவறுகளுக்காக யாரோ பலியாவதா? கேள்வியோடு வீட்டுக்குப் போனேன். இப்போது மனித உரிமைகள் ஏட்டில் உறங்கிக் கொண்டு குறட்டைவிடுகின்றன. அதனால்தானோ என்னவோ நான் நீதி மன்றின் முன் பொய்யனானேன்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP