Friday, April 22, 2011

சிறுவர் கதைகள்

சிங்கமும் எருதுகளும்

இலங்கையில் சிங்கராசவனம் இருக்கிறது. வனம் என்பது பெரிய காடு. அந்தக் காட்டில் ராஜகோன் என்ற சிங்கம் வாழ்ந்தது. அதுதான் அந்தக் காட்டின் அரசன். ராஜகோனின் அமைச்சராக விக்ரமன் என்ற நரி இருந்தது. ராஜகோனின் தளபதியாக பொன்னன் என்ற ஓநாய் இருந்தது. இவை ராஜகோனின் திட்டங்களுக்குத் துணைபோயின. ராஜகோனின் அரசசபையில் ஓணான்கள் முக்கிய பதவிகளை வகித்தன. ராஜகோனின் ஆட்சி நல்லபடியாக நடந்தது.
ஓணான்கள் நிறத்தை மாற்றிக் கொண்டு வேவு பார்க்கும். இலகுவாக வேட்டையாடக் கூடிய விலங்குகளைக் காட்டிக் கொடுக்கும். விலங்குகள் தனியாக நிற்கும் வேளையில் ஓணான் விசிலடிக்கும். அந்த விசில் சத்தத்தைச் செவிமடுத்து விக்கிரமனும், பொன்னனும் ராஜகோனுக்குதர் தெரிவிக்கும். பின்னர் மிருகங்களை ராஜகோன் வேட்டையாடும். ராஜகோன் உண்ட மிச்சத்தை விக்கிரமனும், பொன்னனும் உண்ணும். ஓணான்கள் அங்கு வரும் பூச்சி புளுக்களை வேட்டையாடும். மிருகங்கள் பயத்துடன் வாழ்ந்தன.
ஒருநாள் ராஜகோன் விக்ரமனையும். பொன்னனையும் அழைத்தது. “எப்படியும் வில்பத்துக் காட்டில் புகுந்து வேட்டையாட வேண்டும் அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள். அது முடிந்தபின் என்னைப் பார்க்க வாருங்கள்” என்று ராஜகோன் கர்சித்தது.
வில்பத்து காடும் வளம் நிறைந்தது. அங்கு வல்லமை பொருந்திய ஐந்து எருதுகள் ஆட்சியை நடத்தின. அரசர் என்ற பதம் இல்லை. ஆனால் எருதுகள் அரசர்களாக உலா வந்தன. ஒற்றுமையே பலம் என்று வாழ்ந்தன. இந்த ஐந்து எருதுகளும் ஒற்றுமையாகச் சேர்ந்து செயற்பட்டன. எது வந்தபோதும் ஐவரும் ஒன்றாக எதிர்த்து நின்றன. அவற்றை வெல்ல எந்த மிருகங்களாலும் முடியவில்லை. விக்ரமனும் பொன்னனும் வில்பத்துக் காட்டினுள் ஊடுருவல் செய்தன. அங்கு வாழ்ந்த மிருகங்களிடை குழப்பங்களை ஏற்படுத்தின.
ஒருநாள் எருதுகள் ஒன்று கூடின. தமக்குள் முக்கியமான விடயங்களைக் கதைத்துக் கொண்டன. பிரிந்து நிற்க ஏகமனதாக முடிவெடுத்தன. காட்டெருமைகள் வேறாயின. வலங்குகளையும், பறவைகளையும் கூட்டின. பல இரகசியக் கூட்டங்கள் நடந்தன. மான்கூட்டம் வேறாக ஒதுங்கின. கரடிகள் ஒருபுறம் ஒதுங்கின. பறவைகள் வேறாயின. யானைகள் தனியான கூட்டமாக உலாவந்தன. எருதுகளின் பலம் குன்றியது.
எருதுகளும் ஒவ்வொரு பக்கம் சாய்ந்தன. ஒவ்வொரு எருதுக்கும் சார்புடைய விலங்குகளும், பறவைகளும் சேர்ந்து கொண்டன. வில்பத்துக் காட்டில் நிம்மதியும் சந்தோசமும் தொலைந்து போனது. செய்தி ராஜகோனுக்கு அனுப்பப்பட்டது.
விக்கிரமனும். பொன்னனும் சிங்கராஜவனம் வந்து சேர்ந்தன. வில்பத்து நிலைமையை எடுத்து விளக்கின. ராஜகோனுக்குச் சந்தோசம். ஓணான்களை அழைத்தது. வில்பத்துக் காட்டுக்குள் போய் நிலைமையை அறிவிக்கும்படி சொன்னது. ஓணான்கள் விரைந்தன.
வில்பத்து நிம்மதியைத் தொலைத்து விட்டது. நல்ல சந்தர்ப்பம் நிலவுகிறது. எருதுகளிடம் ஒற்றுமை இல்லை. அவை பிரிந்து நிற்கின்றன. என்ற செய்திகள் பறந்தன.
ராஜகோன் விக்கிரமனையும், பொன்னனையும் அழைத்தது. வானைப் பார்த்தது. வானம் நிர்மலமாக இருந்தது. பின்நிலவு காலம். “நமது படைகளைத் தயார் நிலையில் வையுங்கள். நாளை இருள் சூழ்ந்ததும் வில்பத்துக்குப் புறப்படுவோம். நமக்கு வேண்டியது நல்ல கொழுத்த இரைகள்தான். நல்ல திடகாத்திரமுள்ள விலங்குகளை மட்டும் கூட்டிச்செல்வோம்.” விளக்கியது.
எருதுகள் எந்த விலங்குகளுக்கும் தெரியாமல் சந்தித்தன. எதிர்கொள்ள வேண்டியவற்றைத் திட்டமிட்டன. ஒவ்வொரு எருதும் தமது ஆதரவாளர்களுக்குப் பயிற்சி அளித்தன. “உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று இறுதி நாளில் சொல்வேன். அப்பொழுது உங்கள் திறமையைக் காட்டுங்கள்”. ஒவ்வொரு எருதும் தமது படையணிகளுக்கு விளக்கின. வில்பத்துக் காடு அமைதியாக இருந்தது.
ஓணான்களின் விசில் ஒலித்தது. அதே விசில் வில்பத்துக் காட்டிலும் ஒலித்தது. வில்பத்துக் காட்டின் நடுவில் ஒரு வெளியிருந்தது. எருதுகளின் கட்டளைப்படி சில மிருகங்கள் அந்த வெளியில் கூடின.
ராஜகோனின் விலங்குப் படை வில்பத்துக் காட்டினுள் ஊடுருவியது. காட்டின் நடுப்பகுதிக்குள் விலங்குகள் நிற்பதைக் கண்டுகொண்டன. “நல்ல தருணம். அப்படியே சுற்றி வளைத்து வேட்டையாடுவோம்.” ராஜகோன் பாயந்து சென்றது. “சாடுங்கள் சத்தமிட்டது.” விலங்குகள் பாயதர் தொடங்கின.“சற்று திரும்பிப் பாருங்கள். உங்களைச் சுற்றி எங்கள் விலங்குகள் சூழ்ந்துள்ளன.” சத்தம் வந்த பக்கம் ராஜகோன் திரும்பிப் பார்த்தது. ஐந்து எருதுகளும் மூர்கத்தனத்தோடு நின்றன. “நீங்கள் நினைத்ததுபோல் நடக்கவில்லை. எங்களைப் பிரிக்கப் பார்த்தீர்கள். அது நடக்காது. உங்கள் சதி எங்களிடம் பலிக்காது. நாங்கள் ஒன்றாகவே போராடுவோம். முடியுமானால் தப்பிப் பிழையுங்கள்.” எருதுகளிகன் கட்டளை பிறந்தது. வில்பத்து விலங்குகள் மூர்க்கத்தனத்தோடு நின்றன.
வில்பத்துக் காட்டின் நடுவில் ராஜகோன் சிக்கிவிட்டது. “விக்கிரமனும். பொன்னனும் சேர்ந்து சதி செய்து விட்டன. தப்புவதற்கு வழியில்லை. இவர்களை நான் நம்பி மோசம் போனேன்”. என்று ராஜகோன் வருந்தியது. வில்பத்துக் காட்டில் ராஜகோன் சுற்றிவளைக்கப் பட்டுவிட்டது. பின்னாலும் சுற்றி வளைப்பு. நடுவினில் ராஜகோனின் விலங்குகள். எருதுகளின் கொம்புகள் விளையாடின. சிங்கராஜவனத்தில் இருந்து வந்த விலங்குகள் ஆபத்தில் சிக்கிக் கொண்டன. எருதுகளின் கொம்புகள்; ராஜகோனைக் குறிபார்த்து நின்றன.
எருதுகளைப் பிரிக்க முயன்ற விக்கிரமனும், பொன்னனும் வீழ்ந்து கிடந்தன. ஓணான்களைச் செம்பகங்கள் கொத்திக் கொண்டிருந்தன. அவை அழுது புலம்பிக் கெண்டிருந்தன.
“இறைவன் படைத்த இந்தப் பூமியில் எல்லோரும் வாழ உரித்துடையவர்கள். ஆளையாள் அடிமைப்படுத்துவதால் நன்மை ஏற்படப் போவதில்லை. நீங்களும் சுதந்திரமாக வாழவேண்டும். நாங்களும் சுதந்திரமாக வாழவேண்டும். இக்காடுகள் எல்லோருக்கும் சொந்தம். கேடுகெட்ட மனிதர்களைப் போல் நாமும் சண்டையிடுவதா? நமக்கும் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்க வேண்டும். நாம் மனிதர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவோம். இவ்வாறான அழிவுப் பாதைகளில் ஈடுபடமாட்டோம் என்று சத்தியப் பிமாணம் செய்வோம். அதற்கான உடன்படிக்கை செய்வோம். எவரும் எங்கும் வாழலாம் என்று பிரதிக்ஞை செய்வோம். நீங்கள் சுதந்திரமாகப் போய்வாருங்கள்”. எருதுகள் ராஜகோனுக்கு விடுதலை அளித்தன. தவறாக வழிநடத்திய விக்ரமனையும், பொன்னனையும் காவலில் வைத்தன. ஓணான்களைக் காட்டை விட்டு விரட்டின. அவை பயந்து பயந்து ஒளிந்து வாழ்கின்றன.
ராஜகோன் தனது தவறை உணர்ந்து கொண்டது. வில்பத்து விழாக் கொண்டாடியது.

குரங்கும் முதலையும்
மணியரசன் குளம் வரலாற்றுப் பெருமையுடையது. மிகப் பழமையானது. அந்தக் குளத்தில் எந்த நேரமும் தண்ணீர் நிரம்பியே இருக்கும். தாமரை மலர்கள் அடர்த்தியாகப் பூத்திருக்கும். தாமரைப் பூவில் இருந்து விதைகளை மக்கள் பிடுங்குவார்கள். அந்த விதைகள் நல்ல ருசியாக இருக்கும். தாமரை விதைகளில் நல்ல சத்துக்கள் உண்டு. அதனை உண்ணும் பெண்கள் மினுமினு என்று இருப்பார்கள் என்பது ஐதீகம்.
தாமரைக் கிழங்கு சத்துள்ள உணவாகும். கிழங்கை அவித்து உண்பார்கள். இவை யாவும் இயற்கை அளிக்கும் அருங்கொடைகள். விஜயன் தாமிரபரணியை அடைந்தபோது குவேனி கொடுத்த உணவு தாமரைக்கிழங்குதான். ஆதிகால மக்கள் இவற்றையே உண்டு வாழ்ந்தார்கள்.
குளத்தில் உள்ள தண்ணீரினால் அந்தப் பிரதேசத்தில் வரட்சி நிலவுவதில்லை. குளத்தை அண்டிய பகுதிகள் செழிப்பாக இருந்தன. எங்கும் தோட்டங்கள் நிறைந்திருந்தன. அவை காய்த்துப் பூத்துக் கலகலத்தன.
குளக்கரை நெடுகிலும் மரங்கள் நின்றன. நாவல், பனிச்சை, மருத மரங்கள் நிறைந்திருந்தன. காலத்துக்குக் காலம் பழங்கள் கிடைக்கும். குளம் மக்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்தது. குளத்தின் ஒரு பகுதியில் மக்கள் குளிப்பார்கள். கால்நடைகளும் தண்ணீர் குடிக்கும். பலவகையான பறவைகளும், பிராணிகளும் வாழ்ந்தன. அந்தக் குளத்தில் முதலைகளும் வாழ்ந்தன. ஆனால் முதலைகள் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருவதில்லை. குரங்குகள் குளத்தின் கரைக்குக் குழுக்களாக வரும். வரிசையாக இருந்து தண்ணீரை அருந்தும்.
குரங்குக் குழுக்களின் தலைவர் காவலுக்கு இருப்பார். அது அழகான காட்சியாக இருக்கும். குரங்குகளைப் பிடிக்க முதலைகள் பதுங்கி இருக்கும். குரங்குகளின் தலைவர் எச்சரித்த வண்ணம் இருப்பார். சிறிய அரவம் கேட்டாலும் பாய்ந்து சத்தமிடுவார். குரங்குகள் உசாராகி மரங்களில் தாவி ஏறிவிடும். முதலைகளின் அட்டகாசங்களை அடக்குவதற்குக் குரங்குத் தலைவன் திட்டமிட்டது.
இரண்டு முதலைகள் குளக்கரைக்கு வந்தன. கரையில் தலையை நீட்டி உரiயாடின. அவற்றின் கண்கள் கரையில் நின்ற நாவல் மரத்தில் குத்திட்டு நிலைத்தன. குரங்குகள் சந்தோசமாகப் பழங்களைப் பறித்து உண்டன. பெண்முதலை யொன்றுக்கு ஆசை பிறந்தது.
“இஞ்சாருங்கப்பா நாவல் பழங்கள் நல்ல ருசியாமே? உடல் உறுதிக்கு ஏற்றதாம். நமது குரங்குத் தலைவரிடம் கூறிக் கொஞ்சம் நாவல் பழம் சாப்பிடுவோமா? கேட்டுப் பாருங்க” முதலையொன்று தனது கணவனிடம் கூறியது. குரங்குக் கூட்டம் கும்மாளம் கொட்டிப் பாய்ந்து விளையாடின. முதலைகளைக் கண்டதும் எச்சரிக்கைச் சத்தமிட்டன. அதனை ஒருவாறு ஆண்முதலை உணர்ந்து கொண்டது.
“குரங்குகளுக்கு நல்ல மூளை வளர்ச்சியுண்டு. நாங்க உண்மையில் நாவற்பழந்தான் கேட்டாலும் அவை தரப்போவதில்லை. அவற்றை ஏமாற்றிப் பிடித்து விழுங்கி விடுவோம் என்ற பயமிருக்கு. இப்படி ஒரு கதையிருக்கு. அது உனக்குத் தெரியாதா”? ஆண்முதலை கேட்டது. “அது என்ன புதினமான கதை. எனக்குத் தெரியாதே”. ஆச்சரியத்துடன் பெண்முதலை கேட்டது.
“ ஓரு குரங்கும் முதலையும் நண்பர்களாக இருந்தன. குரங்கின் வசிப்பிடத்தில் நாவல் மரம் இல்லை. மறுகரையில் நாவல் மரம் இருந்தது. குரங்கை முதலை தன் முதுகில் ஏற்றும். குளத்தின் மறுகரைக்குக் கொண்டு போய் விடும். குரங்கு நாவற்பழத்தைப் பறித்து முதலைக்குக் கொடுக்கும். முதலை தன் மனைவிக்கும் கொடுக்கும். நல்ல ருசி என்று முதலை உண்ணும். குரங்கு நாவற்பழத்தை உண்டு கொழுத்திருந்தது. “அந்தக் குரங்கின் ஈரல் நல்ல ருசியாக இருக்கும். அதைப்பிடித்துத் தா” என்று பெண் முதலை கேட்டதாம். ஆண்முதலை உடன்பட்டதாம். குரங்கை ஏமாற்றி தனது முதுகில் ஏற்றிக் கொண்டது. வழியில் உண்மையை முதலை கூறியது.
“ஆஹா! இதையேன் முதலில் கூறவில்லை. எனது ஈரலை நாவல் மரத்தில் விட்டுவந்து விட்டேனே. என்னைத் திருப்பிக் கொண்டுபோ. ஈரலை எடுத்து வருகிறேன். உன் மனைவிக்குக் கொடுக்கலாம்.” என்று கூறியது. முதலையும் நம்பியது. கரையில் கொண்டுபோய் விட்டது. குரங்கு “தப்பினேன். பிழைத்தேன்”. என்றதாம். இதுதான் அந்தக் கதை. அன்றிலிருந்து முதலையென்றால் குரங்குகளுக்குப் பயம்.” ஆண்முதலை கூறியது. உரையாடியவாறே முதலைகள் கரையில் கிடந்தன. கொக்குநிரை அவ்வழியால் வந்திறங்கின. “நண்பர்கள் வந்து விட்டார்கள். கண்களை முடியிருப்போம். அப்போதுதான் அவை நமது அழுக்கைச் சுத்தப்படுத்துவார்கள்.” கண்களை மூடிக்கிடந்தன. கொக்குகள் முதலையின் உடலில் உள்ள அழுக்குகளை உண்டன. பற்களைச் சுத்தம் செய்தன. அந்தச் சுகத்தில் முதலைகள் உறங்கிவிட்டன.
முதலைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது வாய்கள் திறந்திருக்கும். முதலைகளைக் கண்ட குரங்குகள் மெதுவாக இறங்கி வந்தன. குரங்குகள் கூடிக் கதைத்தன. அளவான குச்சிகளைப் பொறுக்கி வந்தன. குச்சிகள் வைரமானவை. இலகுவில் முறியாதன. துணிச்சல் உள்ள குரங்கு இறங்கி வந்தது. முதலையின் பக்கத்தில் சென்றது. முன்னால் எச்சரிக்கையுடன் இருந்தது. மிக அவதானமாகப் பார்த்தது. முதலைகள் அசையாது கிடந்தன.
குரங்கு கைகளைப் பின்னால் நீட்டியது. பின்னால் இருந்த குரங்கு குச்சியைத் திணித்தது. முன்னால் இருந்த குரங்கு குச்சிகளைப் பற்றியது. மெதுவாகக் குச்சியினை முதலையின் தாடைகளுக்கு இடையில் செருகியது. அப்படி இரண்டு குச்சிகள் முதலையின் வாயினுள் ஏறின. ஒருவாறு இரண்டு முதலைகளின் வாய்களிலும் குச்சிகள் ஏறின. வந்தது போலவே குரங்குகள் மரத்தில் தாவி ஏறின.
குரங்குகள் குதூகலித்தன. மான்கூட்டங்கள் குளக்கரைக்கு வந்தன. முதலைகளைக் கண்டதும் பின்னிழுத்தன. குரங்குகள் கூச்சலிட்டன. குச்சிகளை வைத்த குரங்கு மரத்தை விட்டு இறங்கி வந்தது. மான்கள் அதனைக் கவனித்தன. குரங்கு முதலையின் வாயினுள் கையை விட்டுக் காட்டியது. மான்கள் குளத்தில் இறங்கி நீரை அருந்தின. முடிந்ததும் முதலைகளைச் சுற்றி நின்றன. நீரருந்த வந்த மிருகங்களும் நின்றன. பறவைகள் கூடிநின்று புதினம் பார்த்தன. முதலைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன. ஒரு குரங்குக்குச் சந்தோசம். கொப்புகளில் சத்தமிட்டுப் பாய்ந்தது. மரத்தின் கிளை பெரிய சத்தத்துடன் முறிந்தது.
அச் சத்தத்தில் முதலைகள் விழித்துக் கொண்டன. பக்கத்தில் நின்ற பறவைகளும், மிருகங்களும் சற்று விலகின. குரங்குகள் இறங்கி வந்து பார்த்தன. முதலைகளுக்கு வாயை மூடமுடியவில்லை. கதைக்கவும் முடியாதிருந்தது. வாலை முறுக்கி உன்னின. குளத்தினுள் இறங்கி மறைந்தன. பறவைகளும் மிருகங்களும் பார்த்துக் கொண்டிருந்தன. சற்று நேரத்தால் முதலைகள் கரைக்கு வந்தன. அவற்றின் வாயை மூடமுடியவில்லை. பார்ப்பதற்குக் கஸ்டமாக இருந்தது. செய்தியறிந்து யானைகள் வந்து சேர்ந்தன. சமரசம் பேசின.
மிருகங்களும் பறவைகளும் கலந்துரையாடின. ஒரு முடிவுக்கு வந்தன. குரங்குகள் பேசிக்கொண்டன. யானை ஒன்று முன்னால் வந்தது. முதலைகளைப் பார்த்தது. “இந்தக் குளத்தில் இருக்கும் தண்ணீர் எல்லா உயிரினங்களுக்கும் உரியது. நீங்கள் அவற்றை வேட்டையாடுவது என்ன ஞாயம்? தாகத்தோடு வரும் அந்த உயிர்களை நீங்கள் வதைப்பது குற்றம். அதனால் உங்களுக்கு இந்தத் தண்டனை. இதிலிருந்து விடுபட உடன்படிக்கைக்கு வரவேண்டும். தொடர்ந்தும் நீங்கள் அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது. அப்படி அச்சுறுத்தலாக இருந்தால் இச்செயற்பாடு தொடரும். சம்மதமா”? யானை கேட்டது. உங்கள் வாயுனுள் குச்சிகள் இருந்தால் உங்களால் உண்ணமுடியாது. உங்களுக்கு நிம்மதி கிடையாது. என்ன சொல்கிறீர்கள்.? யானை மீண்டும் கேட்டது. முதலைகள் பரிதாபத்துடன் பேசாதிருந்தன.
முதலைகள் நழுவித் தண்ணீருள் மூழ்கின. சற்று நேரத்ததால் வெளிவந்தன. பலமுதலைகளின் தலைகள் தெரிந்தன.. “குச்சிகள் வாயினுள் இருந்தால் எப்படிப் பேசமுடியும். அவற்றால் பேசமுடியாது.” ஓரு முதலை குளத்தினுள் இருந்து பேசியது “மௌனம் சமாதானத்துக்குச் சம்மதம். சரி அவற்றை எடுத்து விடுங்கள்”. யானை கேட்டுக் கொண்டது. “நாம் எச்சரிக்கையாக இருந்தால் சமாதானமாக உயிர் வாழலாம். எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”. குரங்குத் தலைவன் கூறியது. குரங்குகளைப் பார்த்துக் கனைத்தது. குரங்கு ஒன்று காட்டுக் கொடிகளோடு வந்தது. குரங்குத் தலைவனிடம் கொடுத்தது. குரங்குத் தலைவன் முதலையின் பக்கத்தில் வந்தது. முதலைகள் பரிதாபத்தோடு பார்த்தன. குரங்குத் தலைவன் கொடியை எடுத்தது. முதலையின் கடைவாயினுள் கொடியைத் திணித்தது. அக்கொடியின் மற்றநுனி மறுபக்கத்துக் கடைவாயிலால் தெரிந்தது. குரங்கொன்று அதனைப் பிடித்துக் கொண்டது.
அதேபோல் மற்ற முதலைக்கும் செய்தது. கொடிகளின் தலைப்புக்களை நான்கு குரங்குகளைப் பிடிக்கச் செய்தது. நாம் யாராவது குச்சிகளை எடுக்கக் கைகளைப் பாவித்தால் முதலை கைகளைப் பிடித்துக் கொள்ளும். அங்கு நமக்கு வில்லங்கனம் காத்திருக்கும். அதனால் நமது விவேகத்தைப் பயன்படுத்தவேண்டும். வீரம் மட்டும் போதாது. விளக்கம் கொடுத்தது. “நான்கு குரங்குகளும் ஒரே நேரத்தில் முன்பக்கமாக இழுக்க வேண்டும்.” அறிவுறுத்தலைக் குரங்குத் தலைவர் வழங்கினார். யானை பிளிறியது. குரங்குகள் கொடிகளை இழுத்தன. குச்சிகள் சரிந்து வெளியில் வந்தன. முதலைகளுக்கு விடுதலை கிடைத்தது. முதலைகள் நன்றியைத் தெரிவித்தன. தண்ணீரில் மூழ்கியெழுந்தன. பறவைகளும் மிருகங்களும் சந்தோசப்பட்டன. இப்பொழுது அந்தக் குளத்தில் எல்லா உயிரினங்களும் தண்ணீரைத் தாராளமாகக் குடித்து வருகின்றன. முதலைகளின் தொல்லைகள் இல்லை. அவை உயிரினங்கள் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து மகிழ்கின்றன.

குரங்கும் தூக்கணாங் குருவியும்.
பரந்த வயற்பரப்பின் நடுவே பழையதொரு வீடு தெரிந்தது. சுற்றிவரப் பனை மரங்கள் சோலையாக நின்றன. வேலியெங்கும் பனைமரங்கள். காற்று வீசிக் கலகலத்துக் கொண்டிருந்தது. வயல்வெளி பசுமையைப் போர்த்திக் கொண்டிருந்தது. உழைப்பாளிகள் பகல் முழுவதும் வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். இரவானதும் வீகளுக்குப் போய்விடுவார்கள்.
அந்த வீட்டில் சுப்பையா வாழ்ந்தார். அவருக்குத் துணையாக இராமன் இருந்தான். இராமன் சிறு வயதுமுதல் சுப்பையா வோடுதான் இருக்கிறான். அவனது தாய் அவனை அனாதையாகத் தவிக்க விட்டுப் போய்விட்டாள். சுப்பையா இராமனுக்குப் பாலூட்டி வளர்த்து விட்டார். இராமன் சுப்பையாவுக்கு உதவியாக இருப்பான். சுப்பையாவின் வயலில் குருவிகள் தொல்லை அதிகம். இராமன்தான் குருவிகளை விரட்டுவான்.
அவனது கையில் சுண்டுவில் இருக்கும். இராமனுக்குச் சின்னக் கால்சட்டை தைத்துக் கொடுத்திருந்தார். கால்சட்டையில் ‘பொக்கற்; இருக்கும். அதற்குள் சிறுகற்களை இராமன் வைத்திருப்பான். குருவிகளை விரட்டுவதற்குச் சுண்டுவில்லைப் பயன்படுத்துவான். சுண்டுவில்லில் கற்களை வைத்து அடிப்பான். குருவிகள் பாட்டமாக எழுந்து பறக்கும். இராமனுக்குத் துணை சீசர்தான். இராமன் சீசரோடு வயலைச் சுற்றி வருவான். சில சமயங்களில் சீசர் இராமனின் குதிரையாகும். சீசரில் ஏறிச் சவாரி செய்வான். குருவிகள் வயலில் தொல்லை கொடுக்கும் நேரத்தை இராமன் அறிந்திருந்தான். அந்த நேரத்தில் சீசரோடு சென்று பதுங்கியிருப்பான். குருவிகள் பாட்டமாக வந்து இறங்கும். அப்போது கற்களை வீசி விரட்டுவான். குருவிகள் இறங்காமலேயே பறந்து விடும். சுப்பையாவுக்குப் பெருமையாக இருந்தது. இராமனையும் சீசரையும் தடவிக் கொடுப்பார்.
ஒருநாள் சுப்பையா தனது வயற்பரப்பைச் சுற்றி வந்தார். அவர் முன்னால் இராமன் சென்றான். பின்னால் சீசரும் சென்றது. தற்செயலாகத் தனது குடியிருப்பையும் பார்த்தார். பனைமரங்கள் காற்றில் ஆடியசைந்தன. பனைகளில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள் தென்பட்டன. அவருக்கு ஆத்திரம் வந்தது. “எனது பனை மரங்களில் கூடுகளைக் கட்டியிருக்கிறீர்கள். எனது வயலை அழிக்கிறீர்கள். செய்து காட்டுறன் வேலை”. தனக்குள்ளேயே பேசிக் கொண்டார்.வயல்வரம்புகளில் நடந்தார். பின்னால் சீசர் நடந்தது. முன்னாலும், பின்னாலுமாக இராமன் ஓடியோடித் திரிந்தான். “டேய் இராமா! அங்கே பனைகளைப் பார். எங்கும் தூக்கணாங்குருவிக் கூடுகள். அவைதான் நமது நெற்பயிரை நாசம் செய்கின்றன. அவற்றைக் கலைக்க வேணும்;”. சத்தமாகச் சொன்னார். இராமனுக்குச் சங்கடமாக இருந்தது. இராமனுக்கு அன்று இரவு நித்திரையே இல்லை. ஒரே யோசனை.
அதிகாலை இராமன் விழித்துக் கொண்டான். சீசரையும் அழைத்துக் கொண்டு சென்றான். பனைமரங்களைப் பார்த்தான். பனையோலைகளில் கூடுகள் தொங்கின. “ சீசர்.. அந்தக் கூடுகளைப் பார். எவ்வளவு கஸ்டப்பட்டுக் குருவிகள் கட்டியிருக்கு. அங்கே பார்.. அந்தக் குருவிகள் நமக்கு முதல் எழுந்து பறக்கின்றன. சந்தோசமாக வானில் பாடிப் பறந்து வட்டமடிக்கின்றன. அவற்றின் சந்தோசத்தைக் கெடுக்கலாமா? அந்தப் பாவம் நம்மைச் சும்மா விடுமா”? கவலையோடு கூறியது.
“பாவம் பார்க்க முடியாது. நமக்குச் சோறு போடும் ஐயாவுக்கு விசுவாசமாக இருக்க வேணும். நீ மரத்தில ஏறிக் கூடுகளைப் பிய்த்து எறி”. சீசர் கூறிவிட்டுக் குந்தியிருந்தது. “சீசர் நான் சொல்வதைக் கேள். இந்த மனிதர்கள் பொல்லாதவர்கள். எதுக்கெடுத்தாலும் குத்திக் காட்டுகிறார்கள்.” கவலையோடு கூறியது. “எப்படி எப்படி”? சீசர் குறுக்கிட்டது. “எதுக்கெடுத்தாலும் ‘குரங்குப் புத்தி’ என்று சொல்லித் திரிகிறார்கள்”;. வெறுப்போடு சொன்னது.
“ஏன் அப்படிச் சொல்கிறார்கள்.” சீசர் வினாவியது. “ஒருமுறை தூக்கணாங் குருவிக் கூட்டை எங்கட தாத்தா பிய்த்தெறிந்தவராம். அதனால் அப்படிச் சொல்கிறார்கள்”. இராமன் எங்கோயோ பார்த்த வண்ணம் கூறியது. “இது என்ன கதை. எப்ப நடந்தது.”? சீசர் ஆவலோடு கேட்டது. “எனக்குந் தெரியாது. இது எப்பவோ நடந்திருக்கலாம். ஒருநாள் பலத்த மழை பெய்ததாம். எங்கட தாத்தா மழையில் நனைந்து மரத்துக்குக் கீழே நடுங்கியபடி நின்றாராம். மேலே தூக்கணாங்குருவிக் கூடு இருந்ததாம். கூட்டுக்குள் இருந்து தூக்கணாங்குருவி புத்தி சொன்னதாம்.” “என்னென்று”?“நான் கஸ்டப்பட்டுக் கூடுகட்டி மழையில் நனையாமல் வாழுகிறேன். நீயும் ஒரு வீட்டைக்கட்டி மழையில் நனையாது வாழலாமே. இப்படி நனையலாமா? என்றதாம்.”“பிறகு”? சீசர் ஆவலுடன் கேட்டது.“தாத்தாவுக்குக் கோபம் வந்திற்றாம். எனக்குப் புத்தி சொல்ல வந்திற்றாயா? உன்னை என்ன செய்கிறேன் பாரென்றாராம். அப்படியே மரத்தில் ஏறினாராம். கூட்டைப் பிய்த்து எறிந்தாராம்”. இராமன் சொல்லும்போது கண்கள் கலங்கின. “அந்தக் கதை இப்ப நடந்த மாதிரித் தெரியுது. ஆனால் அந்த வடுமட்டும் எனது மனதை உறுத்துது.” இராமன் கவலையுடன் சொன்னது.
“சீசர்! உன்னை நினைத்தாலும் கவலைதான் வருது.” இராமன் தொடர்ந்தது. “என்னை நினைத்தா? ஏன்”? சீசர் கேட்டது. “உனக்கும் அப்படித்தான் சொல்கிறார்கள்”. இராமன் குத்திக் காட்டியது. “எப்படிச் சொல்கிறார்கள்.” சீசர் அதனை அறியும் ஆவலில் நின்றது. “எதுக்கெடுத்தாலும் ‘நாய்ப்புத்தி’ என்று கிண்டல் செய்கிறார்கள்”. இராமன் தொடர்ந்தது.“என்னது? நாய்ப்புத்தியா? நாய்ப்புத்தி நன்றியுள்ளது. அதுதான் அதற்குப் பொருள்.” சீசர் பெருமையுடன் சொன்னது. இராமன் சிரித்தது. “ஏய் ஏன் சிரிக்கிறாய்.” சீசர் தொடர்ந்தது. “நாப்பதுக்கு மேல் நாய்ப்புத்தியாம். எதுக்கெடுத்தாலும்
வள்ளென்று பாய்ந்து விழுவதற்குச் சொல்வார்கள்”. இராமன் சொன்னது. சீசரின் முகம் சுருங்கியது. “சரி அதைவிடு. நமது விசயத்துக்கு வருவோம். சீசர் இதற்கு ஏதாவது செய்யவேண்டும். நான் மரத்தில் ஏறி தூக்கணாங்குருவிகளோடு பேச்சு வார்த்தை நடத்தப்போறன். நீ மத்தியஸ்த்தம் செய்”. கூறிக்கொண்டு இராமன் மரத்தில் ஏறியது. பனையில் கூடுகள் தொங்கின. பனையில் பழங்களும் குலைகட்டி இருந்தன. கூடுகளுக்குள் குஞ்சுகள் கொஞ்சும் சத்தம் கேட்டது. குரங்கைக் கண்ட தூக்கணாங் குருவிகள் அல்லோல கல்லோலப் பட்டன.
இராமன் குருவிகளுக்குச் சைகை செய்தது. அவை அமைதிகாத்தன. எல்லாக் குருவிகளும் வந்தன. இராமன் கீழே உள்ள சிறிய வடலியைக் காட்டியது. பின் கீழிறங்கி வந்தது. குருவிகள் வடலியில் ஒன்று திரண்டன.
சீசர் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது. இராமன் குருவிகளைப் பார்த்தது. “நண்பர்களே! நாங்கள் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் அனைவரும் இங்குள்ள மரங்களில் கூடுகட்டி வாழுகிறீர்கள். எங்களுக்கும் சந்தோசம். உங்கள் கூடுகளில் முட்டையும் குஞ்சுகளும் உள்ளன. உங்கள் சந்தோசம்தான் எங்கள் சந்தோசம். இந்தச் சந்தோசம் நீடிக்க வேண்டும். அதற்கு உங்கள் ஒத்துழைப்புத் தேவை.” இராமன் கூறிவிட்டு அமைதி காத்தது.குருவிகள் குசுகுசுத்தன. “எப்படிப்பட்ட ஒத்துழைப்புத் தேவை”? ஒரு குருவி கேட்டது. “நாங்கள் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும். அதனைக் கடைப்பிடித்து வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால் நாம் சந்தோசமாக வாழலாம்”;. இராமன் கூறியது. “இராமன்! சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்”. சீசர் குறுக்கிட்டது.
“நீங்களும் நாங்களும் இந்தச் சூழலில் வாழ்கிறோம். அதனால் இந்தச் சூழல் நமக்கு உரியது. ஆனால் இந்தச் சூழலைப் பேணிப் பாதுகாப்பது நமது கடமை. நாம் ஆளுக்காள் பக்கத் துணையாக இருக்க வேண்டும். நமது உழைப்பை நாம் அழிக்கக் கூடாது. எல்லோரும் சேர்ந்திருந்து வாழ்வோம். நமது எல்லைக்குள் உள்ள வயற்பரப்புக்களில் உள்ள நெற்பயிரைப் பாதுகாக்க வேண்டும். வேறு பறவைகளை உள்நுழையவிடாது பாதுகாக்க வேண்டும். நாங்கள் அதற்குள் புகுந்து அழிக்கக் கூடாது. அறுவடைகாலத்தில் சிந்துகின்ற தானியங்கள் ஏராளம். அவற்றைப் பாது காத்து உணவாகக் கொள்வோம். அப்படி வாழ்வதாயின் நாம் ஒற்றுமையாக வாழலாம். நமது கூடுகளுக்கு எந்தவித அழிவுகளும் வராது பாதுகாக்கலாம்”. கூறிவிட்டு இராமன் குருவிகளைப் பார்த்தது.
குருவிகள் தமக்குள் பேசிக்கொண்டன. “ இது நல்ல ஆலோசனை. அறுவடை நேரத்தில் சிந்துகின்ற நெல்மணிகள் ஏராளம். அவை வீணாக நிலத்தில் விழுந்து விரையமாகின்றன. அவற்றைச் சேகரித்து உண்பதால் நமக்குப் பஞ்சமிருக்காது. எந்தக் காலமும் வயிராற உண்ணலாம். நமது எல்லைக்குள் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்”. பெரிய தூக்கணாங்குருவி கூறியது. “இதனை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறீர்களா? சீசர் சத்தமிட்டது. தூக்கணாங்குருவிகள் சந்தோசத்தில் ஆரவாரித்தன.
“சரி உங்கள் உடன்படிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் கடமைகளைச் செய்கிறோம். எல்லோரும் சந்தோசமாக வாழ்வோம். ஆராவாரித்துப் பறவைகள் பறந்தன. நடந்தவற்றை சுப்பையா பார்த்துக் கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்பதை ஊகித்துக் கொண்டார். அவருக்குச் சந்தோசம். அன்றிலிருந்து நெற்பயிர்களைக் குருவிகள் அழிக்கவில்லை. அவை ஆனந்தமாகக் கூடுகளில் வாழ்கின்றன. சுப்பையாவின் அனுமதியோடு தானியங்களை இராமன் குருவிகளுக்குக் கொடுக்கிறான். சீசரில் சவாரி செய்கிறான்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP