சிறுவர் கதைகள்
சிறுவர் கதைகள்
‘கோணேசர் உலா’
திருகோணமலை அழகிய நகரம். அந்நகரைச் சுற்றி மலைத்தொடர்கள் அரணாக அமைந்துள்ளன. கடல் சூழ்ந்துள்ளது. மலையடிவாரம் அழகானது. அங்குதான் கோணேசர் குடிகொண்ட கோயில் உள்ளது. அதனை ‘திருக்கோணேஸ்வரம்’ என்றழைப்பார்கள். அத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றதாகும். அந்த திருக்கோயிலை அண்டி கணபதிப்பிள்ளையின் குடிசை இருந்தது. அவர் கோணேசரின் பக்தன். எந்த வேலையைத் தொடங்கும்போதும் ‘கோணேசா’ என்றுதான் தொடங்குவார்.
அவரது மனைவி செல்லம்மா. பெயருக்கேற்ற குணமுடையவள். அவர்கள் ஏழைகள். ஆனால் கோணேசரின் அருளினால் மனதால் மகிழ்ந்திருந்தனர். அவர்கள் உள்ளத்தால் செல்வந்தர்கள்.
வறுமையில் இன்பத்தைக் கண்டார்கள். கோயிலுக்கு அப்பால் உள்ள சிறிய காடு தேனீக்களின் குடியிருப்பு. தேன்வதைகள் தொங்கும். பழமரங்கள் பழங்களைக் கொடுத்தன. அவர்களுக்கென்று சிறிய நிலம் இருந்தது. அதில் தங்களுக்குத் தேவையான விளைபொருட்களைப் பெற்றார்கள். தங்களிடம் இருக்கும் பொருட்களை மற்றவர்களுக்குக் கொடுப்பார்கள். மற்றவர்களின் பொருட்களில் பொறாமை கொள்ள மாட்டார்கள். யாரும் பசியென்று வந்தால் புசியென்று கொடுப்பார்கள். யாருக்கும் இல்லை யென்று சொல்லாது வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு அப்பால் திருகோணமலை நகரம் இருந்தது. அந்நகரம் அழகானது. காரோடும் வீதிகளும் மாடமாளிகைகளும் அழகூட்டின. ஆனால் மக்கள் ஆளுக்காள் பொறாமை கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களிடம் மனதில் அன்பில்லை. ஆடம்பரம் இருந்தது. பகட்டு இருந்தது. போலியாக வாழ்ந்தார்கள்.
கோணேசர் சிவராத்தரி தினத்தைத் தொடர்ந்து நகர்வலம் வருவார். இம்முறையும் வருவதற்கான ஆயத்தங்கள் நடந்தன. ஐந்து நாட்கள் நகர்வலம் வருவதாக அறிவித்தார்கள். வீதிகள் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டன. புதுமணல் பரப்பிக் கோலமிட்டார்கள். வீட்டு வாசல்களில் மலர்களால் சோடித்தார்கள். மின்விளக்குகளால் அலங்கரித்தார்கள். ஒவ்வொருவரும் தமது இருப்பிடங்களை மற்றவ்களைவிடவும் அழகாக இருக்கவேண்டும் என்று செயற்பட்டார்கள். சொர்க்கபுரியாக நகரம் பிரகாசித்தது. மக்கள் மனங்களில் ‘கோணேசர் உலா’ நிறைந்திருந்தது. அவர்களது சிந்தனை எல்லாம் கோணேசர் விழாச் சிறப்பில் ஆழ்ந்திருந்தது. அதற்கான ஆயத்தங்களில் இறங்கிக் களைத்திருந்தார்கள்.
ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. கோயிலில் கோணேசரை அலங்கரித்த தேரில் வைத்தார்கள். பட்டுச் சாற்றினார்கள். மலர் மாலைகளால் அலங்கரித்தார்கள். எல்லோரும் ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அதேவேளை அன்றைய தினம் மங்கிய மாலைப் பொழுதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிச்சைக்காரர்கள் வீதி வீதியாகத் திரிந்தார்கள். அவர்கள் பசியால் வாடியிருந்தார்கள். குளித்துப் பலநாட்களாகியிருந்தன. அழுக்கடைந்த கந்தலைக் கட்டியிருந்தார்கள். “அம்மா பசிக்குது. ஐயா! இந்த ஏழைகளின் பசியைப் போக்குங்க. படுத்துறங்க ஒரு இடம் தாங்க. நாங்க வெளியூர்காரங்க. இரக்கம் காட்டுங்க.” என்று கேட்ட வண்ணம் திரிந்தார்கள். அவர்களை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
ஊர்மக்கள் உள்ளமெல்லாம் கோணேசர் மட்டுமே நிறைந்திருந்தார். கோணேசர் ஊ}ர்வலம் வரும்போது பிரசாதம் வழங்குவார்கள். கோணேசர் வீடுகளுக்கு முன்னால் வந்ததும் பூசை நடக்கும். தேங்காய் உடைப்பார்கள். பிரசாதம் வழங்குவார்கள். மக்கள் முண்டியடித்துப் பிரசாதத்தைப் பெறுவார்கள். இந்த ஏழைகளுக்கு ஒன்றும் கிடைப்பதாக இல்லை.
பிச்சைக்காரர்களைக் கவனிக்க யாருமே இல்லை. நடந்த களைப்பால் பிச்சைக்காரர்கள் வாடிவிழுந்தார்கள். பசி அவர்களை வாட்டியது. யாரும் அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை. வீதிகள் எங்கும் அலைந்து பார்த்தார்கள். அவர்களை அப்பால் போகுமாறு விரட்டினார்கள். “ஏய் எங்க போறிங்க. அங்கால ஒதுக்குப் புறமாகப் போங்க.” காவல் துறையினரும் அச்சுறுதினார்கள். அவர்கள் தட்டுத் தடுமாறி நடந்தார்கள். களைப்படைந்து திக்குத் தரியாமல் நடந்தார்கள். கோணேசர் கோயிலருகில் உள்ள குடிசையை அடைந்து விட்டார்கள். அது கணபதிப்பிள்ளையின் குடிசை. கணபதிப்பிள்ளையின் குடிசையின் முன்னால் நின்றார்கள். “அம்மா பசிக்குது. ஐயா! இந்த ஏழைகளின் பசியைப் போக்குங்க. படுத்துறங்க ஒரு இடமாவது தாங்க”என்று கேட்ட வண்ணம் நின்றார்கள்.
சத்தம் கேட்டுச் செல்லம்மா எட்டிப் பார்த்தார். கணபதிப்பிள்ளையும் வெளியே வந்தார். இரண்டு ஏழைகள் குடிசைமுன் நிற்பதைக் கண்டார்கள். அவர்களது மனங்கள் இரக்கத்தில் மூழ்கின. “உள்ளே வாருங்கள்.” உள்ளே அழைத்தார்கள். கணபதிப்பிள்ளை “செல்லம்மா தண்ணீரைக் கொடு. உடலைக் கழுவட்டும்”. என்றார். செல்லம்மா பக்கத்தில் உள்ள கிணற்றடிக்கு அழைத்துச் சென்றாள். தண்ணீரை அள்ளிக் கொடுத்தாள். “கழுவுங்கள்” என்றாள். தான் கட்டுவதற்காக வைத்திருந்த சேலையைக் கொடுத்தாள். அந்தப் பெண் உடையை மாற்றிக் கொண்டாள். செல்லம்மாவுக்கு மாற்றிக் கட்ட வேறு சேலையில்லை. கணபதிப்பிள்ளையும் அப்படியே. தனது வேட்டியை அந்தப் பிச்சைக் காரருக்குக் கொடுத்தார். தங்களுக்கு மட்டும் போதுமான உணவுதான் இருந்தது. அதனைத் தயார் செய்தாள். அவர்களுக்கு உண்ணக் கொடுத்தார்கள். கோணேசருக்குப் படைப்பதற்காகப் பழங்கள் வைத்திருந்தாள். கொஞ்சம் பிரசாதமும் இருந்தது. அந்தப் பிரசாதத்தையும் பழங்களையும் கொடுத்தாள். அவர்கள் உண்டார்கள்.
‘படமாடக் கோயில் பரமர்க்கு ஒன்று ஈந்தால்நடமாடக் கோயில் நம்மவர்க்கு அதுஆகா.நடமாடக் கோயில் நம்மவர்க்கு ஒன்று ஈந்தால்படமாடக் கோயில் பரமர்க்கு அதுஆகும்’
என்பதைக் கணபதிப்பிள்ளை அறிந்திருந்தார்.
விருந்தாளிகள் உணவருந்தியதும் அவர்களுக்கு உரிய படுக்கையைத் துப்பரவு செய்தாள். தங்களிடம் இருந்த போர்வையை எடுத்து விரித்தாள். அவர்களை உறங்குமாறு அன்பாகக் கேட்டுக் கொண்டாள்.
மிகுதியாகக் கொஞ்சம் உணவு இருந்தது. அதனை இருவரும் பகிர்ந்து உண்டார்கள். தாங்கள் குடிசையின் வெளியே தாழ்வாரத்தில் தரையில் உறங்கினார்கள். விடிந்ததும் விருந்தாளிகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார்கள். அவர்கள் புறப்பட்டார்கள். அவர்களை வழியனுப்பி வைக்கப் படலைவரை வந்தார்கள். “நீங்கள் உங்களுக்கு இல்லாதபோதும் எங்களைக் கவனித்தீர்கள். உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. நீங்கள் எவற்றை விரும்புகிறீர்களோ அவை உங்களுடமை ஆகும்.” என்று சொல்லிச் சென்றார்கள். ஏழைகளுக்கு இரங்கி உதவிய செயல் அவர்களது உள்ளங்களை நிரப்பியது.
செல்லம்மா குடிசைக்கு வந்தாள். சமைப்பதற்குத் தானியம் இல்லை. அரிசி வேண்டுமே என்ன செய்வது? யோசித்தாள். பானையைப் பார்த்தாள் பானை நிறைந்து அரிசி இருந்தது. “இங்க பாருங்கள்”என்று கணபதிப்பிள்ளையை அழைத்தாள். அவர் வந்தார். நடந்த அதிசயத்தைக் காட்டினாள். அவருக்கு அதிசயம். வீட்டைப் பார்த்தார். அழகிய வீடாக மாறியது. அவர்களுக்குத் தேவையான அத்தனையும் சேர்ந்தன.
“செல்லம்மா இவையெல்லாம் கோணேசப் பெருமான் அருளியவை.. இவை நமகுக்குப் போதும். வேண்டியவற்றை மட்டும் கேட்போம். ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’. இறiவா எப்போதும் இப்படியே இருக்க வரந்தா. அவன் நமக்குத் தருவது போதும். இறைவன் சித்தம் நமது பேரின்பம். ஏழைகளுக்கு உதவுவோம். எப்போதும் இந்த மனத்தோடு இருப்போம்”. கணபதிப்பிள்ளை அறிவுரை கூறினார். சந்தோசத்தோடு இறைவனைப் பிரார்த்தித்தார்கள்.
நாட்கள் விரைந்தோடின. வருடங்கள் புரண்டோடின. கணபதிப்பிள்ளையும் செல்லம்மாவும் முதியவர்கள் ஆனார்கள். “செல்லம்மா இந்த வாழ்க்கை போதும். இனியும் நமது முதுமையைப் பொறுக்க முடியாது. இருவரும் ஒன்றாக இறைவனை அடைய வழிதேடுவோம். இறைவனை வேண்டிப் பிரார்த்திப்போம்.” சேர்ந்து பிரார்த்தித்தார்கள். மாளிகை மண்வீடானது. கோணேசர் கோயிலின் முற்றத்தில் புதிதாய் இரண்டு வில்வமரங்கள் தோன்றின. கோயிலுக்கு வருவோர் அம்மரங்களின் நிழலில் இருப்பார்கள்.
“செல்லம்மா ……”“சொல்லுங்கள்…….” என்ற ஒலி அவர்கள் காதுகளில் ஒலிக்கும். களைத்து வருவோர்க்கு நிழலைக் கொடுத்த வண்ணம் அம்மரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன.
“சின்னப் பெண்ணே!
முன்னொரு காலத்தில் இரண்டு சகோதரிகள் வாழ்ந்தார்கள். ஒரு பாத்தியில் இரண்டு அவரைக் கொடிகள் போல் வளர்ந்தார்கள். இளையவள் சுந்தரி மிக நல்லவள். மற்றவள் சிங்காரி தீயகுணங்களை உடையவள். அவர்களது தந்தைக்கு வேலையில்லை. அதனால் சகோதரிகள் உழைப்பதற்குப் புறப்பட்டார்கள்.இளையவள் சுந்தரி “நான் முதலில் செல்கிறேன். என்னால் என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன். பின்னர் மூத்தவள் சிங்காரி போகட்டும்.” என்றாள். தனது உடமைகளை மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டாள். வேலைக்காக நகர்புறங்களில் அலைந்தாள். யாருமே அவளைக் கணக்கெடுக்க வில்லை. நெடுந்தூரம் நடக்கலானாள். ஒரு சூளையை அண்மித்து நடந்தாள். அச்சூளையில் ரொட்டித்துண்டுகள் வெந்து கொண்டிருந்தன. அவளைக் கண்டதும் ரொட்டித் துண்டுகள் ஒருமித்துச் சத்தமிட்டன.
“ ஏய்! சின்னப் பெண்ணே! சின்னப் பெண்ணே! கொஞ்சம் நில்லு. சின்ன ரொட்டித் துண்டுகளை எட்டிப்பாரு இன்னும் நாங்கள் வெந்தோமானால் எரிந்து கரியாகி விடுவோம் ஏழுவருசம் தொடர்ந்து நாங்கள் இப்படித்தான் இந்தச் சூளை தன்னில் வெந்து நொந்து வேகுறோமே இறக்கிவிட யாரும் இல்லை எங்களை நீ இறக்கிவிடு. என்றும் நன்றி”சின்னப்பெண்ணின் இரக்க குணம் அவளை நிற்கவைத்தது. தனது உடமைகளைக் கீழே வைத்தாள். சூளையில் வெந்த ரொட்டிகளை இறக்கினாள். “உங்களுக்கு இப்போது வசதியாக இருக்கும்”. கூறி இறக்கிவிட்டுத் தனது உடைமைகளை எடுத்தாள். நடந்து சென்றாள்.
தூரத்தில் ஒரு பசு நன்றது. “ ஏய்! சின்னப் பெண்ணே! சின்னப் பெண்ணே! கொஞ்சம் நில்லு. தயவு செய்து எனது பாலைக் கறந்து விடு.ஏழு வருசமாய் காத்திருக்கிறேன் எவரும் இல்லை எனது பாலைக் கறக்க.தயவு செய்து எனது பாலைக் கறந்து விடு” என்று பசு கூறியது.இரக்கம் கொண்ட சின்னப் பெண் தனது உடமைகளைக் கீழே வைத்தாள். பாலைக்கறந்தாள். “உங்களுக்கு இப்போது வசதியாக இருக்கும்”. கூறிவிட்டுத் தனது உடைமைகளை எடுத்தாள். நடந்து சென்றாள்.
சற்றுத் தூரத்தில் கொய்யா மரம் நின்றது. கிளைகள் நிறைந்து பழங்கள் தெரிந்தன. அவை வளைந்து முறியும் நிலையில் இருந்தன. “ ஏய்! சின்னப் பெண்ணே! சின்னப் பெண்ணே! கொஞ்சம் நில்லு. தயவு செய்து எனது கிளைகளைக் குலுக்கி விடு.ஏழு வருசமாய் காத்திருக்கிறேன் எவரும் இல்லை. எனது கிளையைக் குலுக்கிவிட.தயவு செய்து எனது கிளையைக் குலுக்கி விடு” என்று கொய்யாமரம் கூறியது.இரக்கம் கொண்ட சின்னப் பெண் தனது உடமைகளைக் கீழே வைத்தாள். கொய்யா மரத்தின் கிளைகளைக் குலுக்கி விட்டாள். பழங்கள் விழுந்து கிளைகள் நிமிர்ந்தன. மரம் சந்தோசமடாக நின்றது.“உங்களுக்கு இப்போது வசதியாக இருக்கும்”. கூறி இறக்கிவிட்டுத் தனது உடைமைகளை எடுத்தாள். நடந்து சென்றாள்.
ஒரு வீடு தெரிந்தது. அந்த வீட்டின் சொந்தக்காரி பேச்சிமுத்து. அவள் இரக்கமில்லாதவள். மந்திர தந்திர வேலைகளில் கெட்டிக்காரி. அவளுக்கு வேலை செய்வதற்கு ஒரு வேலையாள் தேவைப்பட்டது. நல்ல சம்பளம் தருவதாகப் பேசிக் கொண்டாள். சின்னப் பெண் சுந்தரி அவளிடம் சென்றாள். “எனக்கு ஒரு வேலைவேண்டும்.” என்றாள். பேச்சிமுத்து சுந்தரியைப் பார்த்தாள். அவளுக்குப் பிடித்து விட்டது. “வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் ஒன்றை மட்டும் செய்யக் கூடாது” என்று மேலே பார்த்தாள்.
“என்னுடைய மரமே! என்னருமை மரமே! எனது சுட்டித்தனமுள்ள வேலைக்காரி வந்திருக்கிறாள். அவள் அடுப்பங்கரையின் புகைபோக்கியைத் தொட்டால் அது விழுந்து தீங்கு ஏற்படும். என்று அவளிடம் சொல்” என்றாள். சுந்தரி அதனைப் புரிந்து கொண்டாள். நல்ல சம்பளம் தருவதாகக் கூறினாள். சுந்தரி ஏற்றுக் கொண்டாள். அவளிடம் வேலைக்கு அமர்ந்து கொண்டாள். வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல் அவளது கடமையாயிற்று. ஆனால் புகைபோக்கியைத் துடைப்பதில்லை. நாட்கள் கழிந்தன. சுந்தரி பம்பரமாகச் சுழன்று வேலைகளை முடித்துவந்தாள். ஆனால் இதுவரை சம்பளம் கொடுபடவில்லை. சுந்தரிக்கு ஏமாற்றமாகப் போனது. அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. பணமில்லாது வீட்டுக்குப் போவதெப்படி? பொறுமையாக இருந்தாள்.
ஒருநாள் பேச்சிமுத்து வீட்டில் இல்லை. அவள் தனது மந்திரக் கோலான தும்புத்டியில் ஏறிச் சவாரி போய்விட்டாள். சுந்தரி புகைபோக்கியை உற்றுப் பார்த்தாள். ஏன் இதனைச் சுத்தப்படுத்தக் கூடாது என்றாள். அதனுள் என்ன இருக்கிறது என்று பார்க்க நினைத்தாள். அதனை நன்றாக உற்றுப் பார்த்துத் தூசு தட்டினாள். அதனுள் இருந்து பொத்தென்று ஒரு பொதி அவள் மடியில் விழுந்தது. அதனை அவிழ்த்துப் பார்த்தாள். அத்தனையும் பணக்கற்றைகள். அவளுக்கு ஆச்சரியம். இவ்வளவையும் வைத்துக் கொண்டு எனக்குச் சம்பளம் தரமறுத்தாள். “நல்லவேளை வீட்டுக்காரி இல்லை. இது நல்ல தருணம்” எனநினைத்தாள். வீட்டுக்குப் போகத்திட்டமிட்டாள். பொதியையும் தூக்கிக் கொண்டு ஓடினாள்.
கொஞ்சத் தூரம் போயிருப்பாள். பேச்சிமுத்து தனது வீட்டுக்குத் திரும்பினாள். சுந்தரியைக் காணவில்லை. அவளுக்குப் புரிந்து விட்டது. தனது மந்திரக்கோலான தும்புத்தடியில் ஏறினாள். தேடிப்புறப்பட்டு விட்டாள். சுந்தரி அவளது வருகையைப் புரிந்து கொண்டாள். தான் உதவி செய்த கொய்யா மரம் நின்றது.
கொய்யா மரமே! கொய்யா மரமே என்னைத் துரத்தும் மாயக்காரி என் பின்னால் வருகிறாள்.என்னைப் பிடித்தால் எலும்பை உடைத்துஅடுப்பில் சூப்பாய் வைப்பாள்.மண்ணுள் என்னை புதைத்து விடுவாள்என்னைக் காத்து மறைத்துக் கொள்ளுஎன்றும் உனக்கு நன்றிசெய்வேன்” கொய்யா மரத்தை வேண்டிக்கொண்டாள்.“உனக்கு உதவும் கடமை எனக்குஉனது உதவி பெருமைக்குரியது.அதனால் அது உலகில் பெரியதுஓடிவந்து கொப்பில் மறை” கொய்யா மரம் அவசரப்படுத்தியது. அவளை இலைகளால் மறைத்துக் கொண்டது.
மாயக்காரி பேச்சிமுத்து தும்புத்தடியில் பறந்து வந்தாள்.
“கொய்யா மரமே கொய்யா மரமேஎன் அன்புக்குரிய கொய்யா மரமேஎனது பணத்தை எடுத்துக் கொண்டசின்னச் சிறுக்கி வந்தாளா சொல்”என்று கேட்டாள். கொய்யா மரம் மறுதலித்தது.
“அன்புத் தாயே! அன்புத் தாயே!ஏழு வருசமாய் இதிலே நிற்கிறேன்எதையும் நான் கண்டதில்லைஎவரையும் நான் பார்த்ததில்லை” கொய்யா மரம் பதில் சொன்னது. பேச்சிமுத்து ஆத்திரத்தில் இருந்தாள். தும்புத்தயில் வேறு பக்கம் பறந்து போனாள். சுந்தரி மெதுவாக கொய்யா மரத்தை விட்டு வெளிவந்தாள். கொய்யா மரத்துக்கு நன்றி சொன்னாள். விரைந்து வீடுநோக்கி நடந்தாள்.
வழியில் பசு தூரத்தில் நிற்பதைக் கண்டாள். அதேநேரம் பேச்சிமுத்து பறந்து வருவதையும் அறிந்தாள். பசுவிடம் ஓடினாள்.
“அன்புப் பசுவே அன்புப் பசுவே!என்னைத் துரத்தும் மாயக்காரி என்னைப் பிடிக்க பின்னால் வருகிறாள்.என்னைப் பிடித்தால் எலும்பை உடைத்துஅடுப்பில் சூப்பாய் வைத்துக் குடிப்பாள்மண்ணுள் என்னை புதைத்து விடுவாள்என்னைக் காத்து மறைத்துக் கொள்ளுஎன்றும் உனக்கு நன்றிசெய்வேன்” என்று சுந்தரி பசுவை வேண்டிக்கொண்டாள்.
“உனக்கு உதவும் கடமை எனக்குஉனது உதவி பெருமைக்குரியது.அதனால் அது உலகில் பெரியதுஓடிவந்து இதற்குள் மறைந்து கொள்” என்று வைக்கோல் போருக்குள் புகுந்து ஒளியுமாறு கூறியது. சுந்தரியும் ஒளிந்து கொண்டாள். பேச்சிமுத்து பசுவிடம் வந்தாள்.
“பாலைப் பொழியும் அன்பின் பசுவே எனது பணத்தை எடுத்துக் கொண்டசின்னச் சிறுக்கி இவ்வழியாக வந்ததைக் கண்டாயா? சொல்”என்று கேட்டாள். பசு பேச்சிமுத்தைப் பார்த்தது.
“அன்புத் தாயே! அன்புத் தாயே!ஏழு வருசமாய் இதிலே கிடக்கிறேன்எதையும் நான் கண்டதே இல்லைஎவரையும் நான் பார்த்ததும் இல்லை” பசு பண்பாகப் பதில் சொன்னது. பேச்சிமுத்துவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தும்புத்தயில் வேறு பக்கம் பறந்து போனாள். சுந்தரி மெதுவாக வைக்கோல் போரை விட்டு வெளிவந்தாள். பசுவுக்கு நன்றி சொன்னாள். விரைந்து வீடுநோக்கி நடந்தாள்.
வழியில் சூளை தெரிந்தது. அதனை அண்மித்தாள். அப்போது பேச்சிமுத்து கோபத்தோடு வருவதை அறிந்தாள். சூளையை உற்று நோக்கினாள்.
“ரொட்டியை வெதுப்பும் சூளையேஎன்னைத் துரத்தும் மாயக்காரி என்னைப் பிடிக்க பின்னால் வருகிறாள்.என்னைப் பிடித்தால் எலும்பை உடைத்துஅடுப்பில் சூப்பாய் வைத்துக் குடிப்பாள்மண்ணுள் என்னை புதைத்து விடுவாள்என்னைக் காத்து மறைத்துக் கொள்ளுஎன்றும் உனக்கு நன்றிசெய்வேன்” என்று சுந்தரி சூளையை வேண்டிக்கொண்டாள்.“ஐயையோ என்ன செய்வேன்.சூளை நிறைய ரொட்டித் துண்டுசுருண்டு கொள்ள இடமும் இல்லை.போரணைக் காரர் அங்கே நிற்கிறார்அவரிடம் கேளு அவர் பதில் சொல்வார்” என்று போறணை சொன்னது. சுந்தரி போறணைக் காரரிடம் முறையிட்டாள். .
“ஒருமுறை எனது ரொட்டித் துண்டுகளைக் கருகவிடாது காப்பாற்றினாய் அல்லவா?அதற்குப் பிரதியுபகாரம் செய்வேன். உதவி கட்டாயம் செய்வது கடமை.வெதுப்பகம் உள்ளே ஓடி ஒளித்திரு” அவர் வழியைக் காட்டினார். சுந்தரி ஒளித்துக் கொண்டாள். பேச்சிமுத்து விரைந்து கோபத்தோடு வந்தாள். “ஓ..ஓ மனிதா… அன்பான மனிதா ..என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும்எடுத்துப் பையில் பதுக்கிக் கொண்டுசின்னச் சிறுக்கி இந்த வழியால்எனக்கு முன்னே வந்தாளா சொல்” என்று கேட்டு நின்றாள்.
“போறணை உள்ளே போய் பார்” என்றான். பேச்சிமுத்து புகுந்து தேடினாள். சட்டென போறனைக் கதவை மூடினான். பேச்சிமுத்து வெந்து போனாள். கையில் ரொட்டித் துண்டொடு வெந்;தாள். விரைந்து வீடு சென்றாள். வெந்த புண்ணுக்கு மருந்து தடவினாள்.
சுந்தரி வெளியில் வந்தாள். போறணைக் காரருக்கு நன்றி கூறினாள். மெல்ல நடந்து வீட்டையடைந்தாள். அனைவரும் சுந்தரியை அன்பாய் வரவேற்றனர். அவளுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் மூத்தவள் சிங்காரி பொறாமை கொண்டாள். நானும் போகிறேன். உழைத்துப் பணத்தொடு வருவேன் என்றாள். தனது உடமைகளைப் பொதியாக்கினாள். புறப்பட்டாள்.
சுந்தரி சென்ற வழியிலேயே சென்றாள். வழியில் போறணை தெரிந்தது. “ஏய் பெண்ணே இப்படி வா. ஏழு வருசமாய் எரிகிறோம் தீயில். எங்களை இறக்கி விட்டுச் செல்.” என்று ரொட்டித்துண்டுகள் கெஞ்சின. “எனக்கு வேறு வேலையில்லையா? உங்களைத் தொட்டு என் கையைத் தீய்ப்பதா? மன்னிக்க வேண்டும். என்னால் முடியாது”. என்று சொல்லிப் போனாள்.
போகும் வழியில் பசு நின்றது. “ஏய் பெண்ணே இப்படி வா. எனது மடியில் பால் சுரந்துள்ளது. தயவு செய்து எனது பாலைக் கறந்து விடு.ஏழு வருசமாய் காத்துக் கிடக்கிறேன் எவரும் இல்லை எனது பாலைக் கறக்க.தயவு செய்து எனது பாலைக் கறந்து விடு” என்று பசு கூறியது. சிங்காரி பசுவைப் பார்த்துச் சிரித்தாள். நான் உனது பண்ணைக்காரியில்லை. இன்னும் ஏழு வருசம் காத்திரு. நன்றி. நான் வருகிறேன”;. என்றாள். நடையைக் கட்டினாள்.
வழியில் கொய்யா மரம் நின்றது. அதன் கிளைகள் நிறைந்து பழங்கள் தொங்கின. தனது கிளையை உசுப்பிப் பழங்களைப் பறித்துவிடுமாறு கெஞ்சியது. “எனக்கு ஒன்று போதும்.. மிகுதியை நீயே வைத்துக்கொள்” என்று ஒன்றைப் பறித்து உண்டாள். தனது வழியில் தொடர்ந்தாள். ஈற்றில் மாயக்காரி பேச்சிமுத்து வீட்டுக்கு வந்தாள்.
பேகச்சிமுத்து போறணையில் வெந்த முகத்துக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தாள். அவளை அணுகி வேலை கேட்டாள். அவளுக்கு வேலை கிடைத்தது. வீட்டைச் சுத்தம் செய்தாள். பேச்சிமுத்து வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. வீட்டிலேயே அடைந்து கிடந்தாள். சிங்காரிக்கு புகைபோக்கியைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. களைப்பேற்படும் வரை வேலை செய்தாள். அன்றொரு நாள் பேச்சிமுத்து தனது தோட்டத்துள் சென்றாள். சிங்காரி வீட்டு வேலைகளைச் செய்தாள். தற்செயலாகப் புகைபோக்கியைப் பார்த்தாள். அதனைத் துப்பரவு செய்தாள். சடுதியாக ஒரு பணப்பை அவளது மடியில் விழுந்தது.
உடனடியாக அதனை எடுத்துக் கொண்டு ஓடினாள். சடுதியாக வீட்டுக்குப் பேச்சிமுத்து வந்தாள். சிங்காரி ஓடுவதைக் கண்டாள். அவளைத் துரத்திப் போனாள். வழியில் கொய்யா மரம் நின்றது. கொய்யா மரத்திடம் தன்னைக் காப்பாற்றுமாறு கேட்டாள். கொய்யாப் பழங்கள் நிறையவே உள்ளன. உனக்குத் தர எனக்கு இடமில்லை. மன்னித்துக் கொள்” என்றது.
பேச்சிமுத்து தனது தும்புத்தடியில் வந்தாள். “கொய்யா மரமே கொய்யா மரமேஎன் அன்புக்குரிய கொய்யா மரமேஎனது பணத்தை எடுத்துக் கொண்டசின்னச் சிறுக்கி வந்தாளா சொல்”என்று கேட்டாள்.
கொய்யா மரம் பதிலளித்தது. “ஓமோம் தாயே இந்தவழியால் ஓடினாள் ஒருத்தி.” சிங்காரி ஓடிய திசையைக் காட்டியது. பேச்சிமுத்து விரைந்து சென்றாள். சிங்காரியால் தப்ப முடியவில்லை. பேச்சிமுத்து சிங்காரியைத் துரத்திப் பிடித்தாள். நல்ல அடிபோட்டாள். பணப்பையைப் பிடுங்கிக் கொண்டு அவளை அடித்து விரட்டி விட்டாள். கையில் ஒருசதமும் இல்லாமல் வெறுங்கையுடன் வீடு சென்றாள் சிங்காரி.
0 comments:
Post a Comment