தங்கைக்கொரு பாட்டு -– சிறுவர் பாடல்
கல்வி கற்கவேண்டும்
கல்வி கற்க வேண்டும் - அதனைக்
கற்றுத் தேற வேண்டும்
தொல்லை நீங்கி வாழ – அது
துணை புரிய வேண்டும்
உன்னை உணர வேண்டும் - நீ
உலகை அறிய வேண்டும்
தன்னை உணர்ந்த பின்னால் - நீ
தலைவி யாக வேண்டும்.
சட்டம் பயில வேண்டும் - தங்கை
தலை நிமிர வேண்டும்
குட்டும் மனிதர் வெட்க -– நிமிர்ந்து
குலவு நடை போடு
மொழிகள் யாவும் கற்பாய் - கற்றால்
முன் அணியில் நிற்பாய்
வழிகள் பலதைக் காண்பாய் - மாந்தர்
வறுமை போக்க உழைப்பாய்.
புதுமைப் பெண்
அன்பை முகத்தில் காட்டு -– உன்
அகத்தில் மலர்ச்சி ஊட்டு
என்றும் இனிமை தேக்கு –- அந்த
இதயம் கோயில் ஆக்கு
வறுமைக் கோட்டை உடைப்பாய் - உன்
வரவைக் கண்டு விடியும்
சிறுமை ஓடி ஒதுங்கும் - உலகம்
சிலிர்த்து அழகு துலங்கும்.
அடிமை விலங்கை உடைப்பாய் - இந்த
அவனி உன்னைப் புகழும்
அடிக்க ஓங்கும் கைகள் - உன்னை
அன்பால் வணங்கித் தழுவும்.
வாழ்க்கை முழுதும் இன்பம் - நாம்
வாழும் முறையில் உண்டு
வாழ்க்கை இன்பத் தேராய் -- மாற்றி
வாழ்ந்து புகழைத் தேடு
வாழ்ந்து காட்டு
வளியை உற்றுப் பாரு –- அதன்
வலிமை பற்றிக் கேளு
வளி அசைந்து கொண்டால் - நம்
வாழ்க்கை விரிந்து கொள்ளும்.
வளி அசைந்து கொள்ள - வெப்பம்
வெய்யோன் அள்ளித் தருமாம்
தெளிந்து வீசும் போது –- அதனைத்
தென்றல் என்று கொள்வார்.
கடலை அமுக்கிப் பார்க்கும் - அலை
கரையைத் தொட்டுப் பார்க்கும்
உடலை உரைஞ்சிப் பார்க்கும் - மனிதர்
உள்ளம் மகிழ வைக்கும்.
வேகம் கொண்டு வந்தால் - அலை
விரைந்து அழிவைக் கொடுக்கும்
ஊகம் கொண்டு வாழ்வாய் - இந்த
உலகம் புகழ வாழ்வாய்
குளிர் நீராவாய்
மேகம் திரண்டு வந்தால் - வான்
விரைந்து கருமை கொள்ளும்
வேகம் கொண்டு உரசும் -– மின்
வெட்டி இடியாய் முழங்கும்.
வான் அலைகள் அதிரும் - மழை
வந்து மாரி பொழியும்
மீன் புரண்டு துள்ளும் - குளம்
மீது நிறைந்து கொள்ளும்.
தாகம் தீர்க்கும் நீராய் - என்
தங்கை வாழ வேண்டும்
சோகம் எல்லாம் ஓடும் - உன்
சொந்தம் எல்லாம் பாடும்
வருந்தும் ஏழைக் கிரங்கு –- அவர்
வருத்தம் போக்க இறங்கு
திருத்தம் வேண்டும் என்றால் - அதை
செய்து காட்டு நன்றாய்
சுழலும் சில்லு
சுழன்று செல்லும் வஸ்சின் சில்லு
சுழன்று சுழன்று போகும் –- தினம்
சுழன்று தூரம் போகும்
சுழன்று செல்லும் காரின் சில்லு
சுழன்று சுழன்று போகும் –- தினம்
சுழன்று தூரம் போகும்
சுழன்று செல்லும் சைக்கள் சில்லு
சுழன்று சுழன்று போகும் –- தினம்
சுழன்று தூரம் பொகும்.
பாரம் ஏற்றி செல்லும் லொறியின்
பக்கச் சில்லும் சுழலும் - தினம்
சுழன்று தூரம் செல்லும்
சக் புக் கோச்சி வண்டிச் சில்லு
சத்தம் போட்டுப் போகும் –- தினம்
சுழன்று தூரம் போகும்.
சிக்க னமாய் நமது கடமை
தினம் முடிக்க வேண்டும் - தங்காய்
தினம் முடிக்க வேண்டும்.
உப்புக் காற்று
உப்புக் காற்று வந்து –- ஊதி
உள்ளே புகுந்து வீசும்
வெப்பம் நீங்கி வியர்வை –- மெல்ல
விரும்பும் இதத்தை ஊதும்
யன்னல் கம்பி நிறமும் - மாறி
செதில் செதிலாய் மெலியும்
என்ன விந்தை என்று –- மனம்
எண்ணி அறிவும் விரியும்
வீட்டின் வேலிக் கம்பி - முதல்
வேறு இரும்பு பொருளும்
நாட்கள் செல்ல துருவால் - மெல்ல
நலிந்து துகளாய் ஆகும்
உப்புக் காற்று பட்டால் - அதன்;
உருவம் மாறிப் போகும்
எப்பொ ருளும் உலகில் - நிலைத்து
என்றும் நிற்ப தில்லை.
மழைக்காலம்
வானக் கோழி அழுகிறதாம்
வாடி தங்காய் பார்ப்போம்
வானம் எங்கும் இருண்டுளதாம்
வாடி தங்காய் கேட்போம்.
காலை விட்ட வெள்ளைமுட்டை
காவு கொண்டு போனதார்.?
மாலை விட்ட தங்க முட்டை
மறைத்துக் கொண்டு போனதார்?
துருவக் கரடி தொலைஞ்சு போச்சாம்
துயரால் வானம் அழுதாம்
பெருகும் வெள்ளிக் கூட்டமெல்லாம்
போன தென்று அழுதாம்.
வானம் அழுதால் வாழுமுலகு
வெள்ளக் கடலாய் மாறும்
மோன நிலைதான் மிகுதியாகும்
மாய்ந்து எல்லாம் அழியும்.
Monday, February 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment