Sunday, July 31, 2011

வித்தகன் விபுலாநந்தன்

வித்தகன் விபுலாநந்தன்
சிறுவர் ஆய்வு இலக்கியம். கேணிப்பித்தன். ச. அருளானந்தம்
அணிந்துரை
நாடறிந்த நல்லெழுத்தாளர் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் சிறுவர் தொடர்பில் ஏராளமான இலக்கிய வடிவங்களை ஆக்கியளித்து வருகின்றார். சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள், சிறுவர் நாவல்கள், சிறுவர் செயல் விளையாட்டுக்கள் போன்ற பல்வேறு இலக்கிய ஆக்கங்களைத் தொடர்ந்து அவ்வப்போது படைத்துவரும் பாங்குடையவர். அவ்வரிசையில் சிறுவர் ஆய்வு இலக்கிய வடிவாக அமைகின்ற வித்தகன் விபுலானந்தன் எனும் நூலுக்கு அணிந்துரை அளிப்பதில் அகமகிழ்வு அடைகிறேன்.
விபுலானந்தர் பன்முகச் சிந்தனையாளரும். பயன்தரு படைப்பாளியுமாவார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் சிறந்த புலமைவாய்ந்தவர். இலத்தின், வங்காளம், சிங்களம், போன்ற ஏனைய மொழிகளையும் கற்றிருந்தார். இப் பன்மொழிப்புலமை அன்னார் பல்வேறு பதவிகளைப் பொறுப்பேற்று அலங்கரிப்பதற்கு அடிகோலின. சீரிய கரத்தும், நற்பெறுமதியும் நிறைந்த விடயங்களைப் பிறமொழிகளில் இருந்து தமிழ் மொழிப்படுத்தவும். தமிழிலுள்ள தரமான அறிவுப் பொக்கிசங்களை பிறமொழியினர் புரியும் விதத்தில் வெளிப்படுத்தவும், ஒப்பீட்டுரைக்கவும் வாய்ப்பாக அமைந்தது.
அவரது கல்விச் சிந்தனைகளும் - தொண்டுகளின் பரவலாக்கமும் நம் மட்டுமன்றி பாரதநாடு உட்பட பல பிறநாடுகளுக்கும் பயன்படும் பாங்குடைத்தவை. விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகள், தொண்டுகளின் உண்மைநிலை, பெறுமதி, தாக்கம் என்பன குறித்து முறையாகக் கூறுவோரும், எழுதுவோரும் மிகவும் குறைவே. வசதியற்ற மாணவர்தம் கல்விக்கென அநாதைகள் இல்லங்கள் அமைத்தலும், அவற்றில் உரிய வசதிகள் வழங்க “விவேகாநந்த வித்தியா தருமநிதியத்தை” நிறுவுதல் வேண்டுமெனவும் உள்ளார்த்தமாக வெளியிட்டவர் விபுலாநந்த அடிகளாவார். அவர் மனிதநேயப் பெருமனங்கொண்ட கல்வித் தத்துவவியலாளராகக் கணித்துக் கௌரவப் படுத்தப்பட வேண்டியவராவார்.
விபுலாநந்தரின் பல்வேறு வகிபாகங்கள் குறித்து இலக்கிய நயத்துடன் இனிதாகவும், எளிதாகவும் சிறுவர் நன்கு விளங்கும் வண்ணம் இந்நூலை அருளானந்தம் அவர்கள் வடிவமைத்துள்ளார். விபுலாநந்தர் குறித்துத் துல்லியமாக .ன்றையச் சிறார்கள் தெரிந்து கொள்ள, அவரின் கல்விப்புலமை, பணிகள், சிறப்புக்கள் பற்றித் தெளிவுறத் தகுந்தமுறையில் ஆங்காங்கு அரிய விளக்கப் புகைப்படங்களையும் புகுத்தியிருப்பது இன்னுமொரு விசேட அம்சமாகும்.
விபுலானந்தரின் மதங்கசூளாமணி, யாழ்நூல் குறித்து விபரமான விளக்கங்கள் இலக்கியப் பாங்கில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்குக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இன்றையச் சிறார்களின் அறிவுத் தாகத்தணிப்புக்கு இந்நூல் தனது பங்களிப்பை நல்குதற்கு இசைவாக அமையுமென்பதில் ஐயமில்லை.
கல்வித்துறையில் நல்ல பயிற்சியும், ஆழமான ஈடுபாடும், பரந்த அனுபவமும் கொண்ட கலாபூஷணம் அருளானந்தம் தமக்கே தனித்தான இலக்கியப் பாங்கில் விபுலாநந்தரின் வித்தகத் தன்மையை விளக்கியுள்ளார். இவ்வாறான நூல்கள் சிறுவர் வட்டத்துள் மட்டுமன்றி, இளையோர், வளர்ந்தோர் அடங்கலாக அனைவர் மத்தியிலும் வரவேற்புப் பெறுமென்று எதிர்பார்க்கின்றேன். கேணிப்பித்தன் அருளானந்தத்தின் எழுத்தாக்க முயற்சிகள் வெற்றியுற இறைவனை இறைஞ்சி வாழ்த்துகிறேன்.
29ஃ 2, மத்திய வீதி செ.அழகரெத்தினம்.உவர்மலை முன்னாள் பீடாதிபதிதிருகோணமலை தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா
பதிப்பாளர் உரை‘வித்தகன் விபுலாநந்தன்’ என்ற சிறுவர் ஆய்வு நூலைப் பிரபல எழுத்தாளரும், கல்விமானும், கவிஞருமான கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் எழுதியுள்ளார். படிப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் மொழிநடையில் சுவாமி விபுலாநந்தரின் சரிதையை வரைந்துள்ளார். திரு.ச.அருளானந்தம் அனுபவமிக்கவர். நல்லாசானாய் விளங்கியவர். நிறைந்த கற்பித்தல் அனுபவமிக்கவர். ஆசிரியர்களைப் பயிற்றுவித்தவர். அதிபராகவும், கல்வி நிர்வாக சேவைப் பணிப்பாளராகவும் சேவை செய்தவர்.
நமது சிறார்களுக்காக இடைவிடாது பல ஆக்கங்களை எழுதிவருபவர். அவற்றைப் படிப்படியாக உங்களுக்குத் தரவிருக்கிறோம். இந்நூலில் வித்தகன் விபுலாநந்தனின் சரிதையுண்டு. விபுலானந்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றும் விரும்பிப் படிக்கும் வண்ணம் உள்ளது. சின்னச் சின்ன விடயங்களை உங்கள் மனங்களில் தங்க வைப்பதற்காக இலகுவான நடையில் எழுதியுள்ளார்.
சிறுவர்களுக்காகவே எழுதி வெளியிட்ட இந்நூலைச் சிறுவர்கள் வாங்கிப் படித்து இன்புறவேண்டும். இந்நூல் அனைவரும் படிக்கவேண்டியதொன்று. நீங்கள் படித்துப் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே இந்நூலை வெளியிடுகின்றோம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் இந்நூலை வாங்கித் தம் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து படிக்கத் தூண்டவேண்டும். வாசிப்பதால் நமது அறிவு விரிவடைகிறது. அத்துடன் நம் நாட்டுப் பேரறிஞர்களைப் பற்றி அறியும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஆதலால் இவ்வகை நூல்களை வாங்கிப் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
க.சதீஸ்முகாமையாளர்லங்கா புத்தக சாலை கொழும்பு -12
எனது உரை
சுவாமி விபுலானந்தரைப் பற்றிச் சிறுவருக்கு ஏற்ற வகையில் எழுத வேண்டும் என்ற அவா தொடர்ந்து கொண்டிருந்தது. சுவாமி விபுலானந்தரையும். ஈழத்திருநாட்டில் தமிழுக்காகத் தொண்டு செய்த அறிஞர் பெருமக்களையும் அறியச் செய்யவேண்டும் என்ற முயற்சியில் இந்தச் சிறு நூலினை எழுதமுனைந்தேன். சுவாமி விபுலானந்தரது அயரா முயற்சியினால் எழுந்த கல்விக்கூடமான சிவானந்த வித்தியாலயம் எனது கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.
ஆங்கிலம் போதனாமொழியாக இருந்தும், இந்துப்பாரம்பரியக் கல்விமுறை பேணப்பட்டது. அங்கு ஓரளவில் குருகுல முறையான கல்வி கிடைத்தது அதற்கு வித்திட்டவர்களாக சுவாமி விபுலானந்தரை அடியொற்றி வந்து அக்காலத்தில் கடமையாற்றிய இராமகிருஷ்ண மிசன் துறவிகளான சுவாமி. நடராஜானந்தா, சுவாமி. சர்வானந்தா, சுவாமி. ஜீவனாநந்தா போன்றவர்களும், அதிபர்கள் திரு.எஸ்.அம்பலவாணர், திரு.க.கணபதிப்பிள்ளை, அவர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த அதிபர்களும். ஆசிரியர்களுமாவார்கள். நான் மாணவனாக இருந்த காலத்தை நினைந்து பேருவகை அடைவேன். இன்று சிவானந்த வித்தியாலய வளாகம் முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. நவீன வசதிகளைக் கொண்டு தேசியபாடசாலையாக மாறியுள்ளது. வவுனியாவில் பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்தபோது திரு.எஸ். நவரத்தினராசா கல்விப்பணிப்பாளராக இருந்தார். அவரோடு இணைந்து அறுபத்தைந்து புதிய பாடசாலைகளைத் திறந்தோம். அப்பாடசாலைகளுக்குத் தமிழ் வளர்த்த அறிஞர்களாகிய வீரமாமுனிவர், சுவாமி.ஞனப்பிரகாசர், போன்றோரது பெயர்களோடு, சுவாமி விபுலாநந்தா, சுவாமி நடராஜானந்தா, சுவாமி சிவானந்தா, சுவாமி விவேகாந்தா போன்ற இராமகிருஷ்ண துறவிகளது பெயர்களையும் சூட்டினோம். அத்துடன் வவுனியாவில் விபுலானந்த நூற்றாண்டு விழாக்குழுவையும் உருவாக்கி, ‘உள்ளக்கமலம்’ எனும் நூற்றாண்டு மலரையும் வெளியிட்டு, பல்கலைக்கழகம் சென்று படிக்கமுடியாத வறுமைக்கோட்டுக்குக் கீழ்வாழும் மாணவருக்குப் புலமைப் பரிசு வழங்குவதற்கான நிதியத்தையும் நிறுவினோம்.
இன்று அந்த நிதியம் பேருதவி செய்கிறது. இவற்றை நினையும்தோறும், ஏதோ ஒருவகையில் சுவாமி விபுலானந்தரின் சேவையில் ஒரு துளியை நிறைவு செய்த நிம்மதி உருவாகிறது. இந்நூல் உருவாக உழைத்த அனைருக்கும் -சிறப்பாக அணிந்துரையுடன் சில ஆலோசனைகளையும் வழங்கிய முன்னாள் திருகோணமலை மாவட்டக் கல்விப் பணிப்பாளரும், வவுனியா கல்வியியல் கல்லூரி முன்னாள் பீடாதிபதி திரு. செ.அழகரத்தினம் டீ.யு.னுip.in நுன. ஆ.நன அவர்களுக்கும், பதிப்புரை நல்கி எனது நூல்களைச் சந்தைப்படுத்தும் கொழும்பு லங்கா புத்தகசாலை முகாமையாளர் திரு .க . சதீஸ், அட்டைப்படத்தினை வடிவமைத்த எனது மகன் திரு.ச.அ.அருள்பாஸ்கரன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வகை நூல்களை வாங்கி. நமது இளையோருக்கு வாசித்தறியும் படி செய்வது தங்கள் அனைவரதும் கடமையாகும் என்பது எனது அவாவாகும். அதற்கான ஆதரவை நல்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கேணிப்பித்தன் -ச.அருளானந்தம்.


வித்தகன் விபுலானந்தர்; தந்த மதங்கசூளாமணி என்னும் ஒரு நாடகத்தமிழ் நூல்
மதங்க சூளாமணியில் சுவாமி விபுலானந்தரின் மொழி நடையினைக் காணலாம். அதனையே இங்கு தருகிறேன். வாசித்துப் பாருங்கள்.
“நாடகவியலினை ஆராயப்புகுந்த இச்சிற்றாராய்ச்சியில் கண்ட முடிபுகள் அனைத்தும் பலநாளாக என்னுள்ளத்தினுள் பயின்று கிடந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் இருபத்து மூன்றாம் வருட உற்சவத்துக்குச் சென்றிருந்தபோது அவற்றினைத் தொகுத்துத் தமிழ்நாட்டுப் பெரும்புலவர் குழுமியிருந்த வித்தகக் கழகத்தில் பெரும் புலவருள் பெரும்புலவராகிய மஹாமஹோ பாத்தியாய சாமிநாதையர் அவர்களது தலைமையின் கீழ் இயன்றவரை விரித்துக் கூறினேன்.
இவ்வாராய்ச்சி பயன்தரத் தக்கதென மஹாமஹோ பாத்தியாயர் அவர்களும் எனைய புலவர்களும் பாராட்டினார்கள். ஆதலினாலும், சங்கத்துக் கௌரவ காரியதரிசியாக இருந்து தமிழ் அபிவிருத்திக்காகப் பலவாற்றாலும், முயற்சித்துத் தம் கைப்பொருளையும், நேரத்தையும் செலவிட்டு வருபவரும், எனது நண்பருமாகிய மதுரை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசஐயங்கார் அவர்கள், இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிட வேண்டுமென்று பலமுறை கூறி என்னை ஊக்கப்படுத்தினார்.
ஆதலினால் இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமிழாராய்ந்த நான்மாடக் கூடலில் இருந்து இவ்வாராய்ச்சியை எழுதப்பெற்ற பெரும்பேற்றினை நினைக்குமபோது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியேனாகிய யான் எடுத்துக் கொண்ட இக்கருமம் இனிது நிறைவுறும் பொருட்டு உலகமாதாவாகிய மீனாட்சியம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக” என சுவாமி விபுலானந்தர் “மதங்கசூளாமணி” நூலில் குறிப்பிடுகிறார்.
1924 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் தமது இருபத்து மூன்றாவது ஆண்டு விழாவைக் கொண்டாடினார்கள். அந்த விழாவிலே பெரும் புலவராகிய மஹாமஹோபாத்தியாய சாமிநாதையர் தலைமை வகித்தார். சாமிநாதையர் ஏட்டுச்சுவடிகளில் இருந்த பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்துத் தந்தவர். அவர் இருந்திராவிட்டால் நாம் இன்று காணும் பல இலக்கியங்களை இழந்திருப்போம். இளந்துறவி விபுலானந்தர் இவ்விழாவில் கலந்து கொண்டு “நாடகத் தமிழ்” என்ற சொற்பொழிவு மூலம் தான்கண்ட இசைநாடக முடிபுகளை வெளியிட்டார். அதனை நூலுருவாக எழுதித்தருமாறு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் கேட்டுக் கொண்டார்கள். அதனை ஏற்று நூலுருவில் எழுதிக் கொடுத்தார். மதங்கர் என்பது கூத்தாடுபவரைக் குறிக்கும் சொல். சூடாமணி என்பது விலைமதிக்க முடியாத ரத்தினம். அதுவே மதங்கசூளாமணி ஆகும்.
‘நானிலம் யாவுமோர் நாடக மேடையே – அதில்நடிப்பவர் ஆண் பெண் அனைவருமாவோம்’
என்ற கூற்றை தமிழ்க் கவிஞர்களும். அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள். கம்பரது கவிகள், நயம்பல கொண்டவை. அவரது கவிதைகள் முத்திரை பதிக்கப்பெற்றவை. முதன்மை பெற்று விளங்குபவை. ஆங்கிலக் கவிஞர் சேக்ஸ்பியரது நாடகங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. கம்பர் கவிச்சக்கரவர்த்தியாக விளங்குவதுபோல் சேக்ஸ்பியர் நாடகச் சக்கரவர்த்தி என சுவாமி விபுலானந்தர் போற்றுகிறார். சேக்ஸ்பியர் நாடகங்களை எழுதியதோடு மட்டுமல்லாது மேடையில் நடித்துமுள்ளார்.
“உலக வாழ்க்கையை நாடகமாகக் கற்பித்துக் கூறிய இக்கவிவாணர் வனப்பின்மிக்க நாடக நூல்கள் பலவற்றை உலகுக்கு அளித்துள்ளார். அதுமட்டுமல்லாது அரங்கினுட் புகுந்து தாமும் கூத்தருள் ஒருவராக நின்று நடித்துள்ளார். நாடகக் கவிகளுள் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் பிறரில்லை. ஆதலால் சேக்ஸ்பியர் என்னும் இயற்பெயர் பூண்ட இக்கவிவாணரை யாம் மதங்கசூளாமணி என வழங்குவாம். இவரது நாடகங்களுள் அமைந்து கிடந்த வனப்பினுட் சிலவற்றை ஆராயப்புகுந்த இவ் உரைத்தொடரும் மதங்கசூளாமணி என வழங்கப் பெறும்” என சுவாமி விபுலானந்தர் மதங்கசூளாமணியில் கூறுகிறார். எந்த நாட்டவரும் சேக்ஸ்பியருக்குக் கொடுக்காத கௌரவத்தையும் முதன்மையையும் நமது அடிகள் கொடுத்துக் கௌரவித்துள்ளார்.
மதங்கசூளாமணி என்னும் நாடக நூல் உறுப்பியல். எடுத்துக்காட்டியல். ஒழிபியல் என மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. நாடகப் பாத்திரங்கள், சம்பவங்கள், எவ்வாறு அமையவேண்டும் என்று மிக நுணுக்கமாக ஆராய்ந்து மதங்கசூளாமணியில் தந்துள்ளார். மாணவர்களும் மதங்கசூளாமணி பற்றி அறியவேண்டும் அல்லவா? அதற்காகச் அதனைச் சுருக்கமாகத் தருகிறேன்.
உறுப்பியல்
உறுப்பியல் சிலப்திகார அடியார்க்கு நல்லார் உரையினால் பெறப்பட்ட அழிந்துபோன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை விளக்குகின்றார். இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்துக்கு உரிய கட்டுக்கோப்பு, என்பவற்றுடன் நாடகத்துக்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவையுணர்வு என்பன பற்றியும் எடுத்துக் கூறப்படுகிறது.எடுத்துக் காட்டியல்இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களை மொழிமாற்றம் செய்து உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கேற்ப விளக்கியுள்ளார். நாடகத்தின் அமைப்பை, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல், என விளக்கி, அந்த அமைப்பு இந்த நாடகங்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைக் காட்டுகிறார். அத்துடன் நாடகம் தரும் சுவையுணர்வுகiளான வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுவுநிலை என்ற ஒன்பது சுவைகளையும் விளக்கி, அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார். இந்நாடகங்களில் சிலவற்றின் கதைகளை மட்டும் கூறிச் செல்கிறார்.ஒழிபியல்ஒழிபியல் தனஞ்செயனார் வடமொழியில் இயற்றிய இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்து கூறுகிறது. நாட்டிய சாத்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களை எல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகமாகும். இவற்றைவிட தொல்காப்பியர் சூத்திர உரையினின்றும் எடுக்கப்பட்ட நாடகத்துக்குரிய அவிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்துக்குப் பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல். அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.இந்நூலை மதுரைத் தமிழ்ச் சங்கம் 1926 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன் மறுபதிப்பாக இலங்கையின் பிரதேச அமைச்சு 1987 ஜூலை 19ல் வெளியிட்டுள்ளது. அந்நூலின் தோற்றத்தையே படத்தில் காட்டியுள்ளேன். இந்த நூலைக் கற்பவர்கள் எத்தனை பேருளர்.? பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவர்களுக்கு மதங்கசூளாமணி பாடநூலாக்கப்பட்டுள்ளதா என்பதும் கேள்விக்குறியே. நம்நாட்டுப் பேரறிஞர் சாத்திரங்களை நாங்களே ஒதுக்கிவிடுகிறோம். மதங்கசூளாமணியை ஒரு வெள்ளைக்காரர் எழுதியிருந்தால் உலகமே போற்றுவதாக நம்தமிழர் மார்தட்டுவார்கள். நாங்கள் எல்லோரும் நடிப்புச் சுதேசிகள்தானே?
இந்த அரிய நூலை எழுதியவர் நமது விபுலானந்த அடிகள். அவர் கிழக்கிலங்கையில் பிறந்து வாழ்ந்து மறைந்தவர். அவரது வாழ்க்கையை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அது நமக்குப் பெருமையைத் தரும். ஈழத்தில், கிழக்கிலங்கையில் உள்ள காரைதீவுக் கிராமத்தில் பிறந்தவர்தான் சுவாமி விபுலானந்தர்.
ஈழத்திருநாடு
ஈழத்திருநாடு என்று இலங்கையைக் கூறுவார்கள். இத்திருநாட்டில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் கிழக்கு மாகாணமும் ஒன்று. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முன்னர் இரண்டு மாவட்டங்கள்தான் இருந்தன. அவை திருகோணமலையும் மட்டக்களப்பும் ஆகும்
கிழக்கு மாகாணத்தை இப்போது மூன்று மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை ஆகியன இதிலடங்கும். ‘மீன்பாடும் தேன் நாடு’ என்று மட்டக்களப்பை அழைப்பார்கள். திருகோணமலையைப் பாடல் பெற்ற திருத்தலம் என்றழைப்பார்கள்.
மட்டக்களப்புக்கு அதன் நீண்ட வாவி இயற்கை அழகை ஊட்டுகிறது. அதேபோல் திருகோணமலைக்கு அதன் இயற்கைத் துறைமுகம் அழகூட்டுகிறது. மட்டக்களப்பு வாவி மட்டக்களப்பை இருகூறுகளாக்கி கல்முனைவரை நீண்டு கிடக்கிறது.
கல்முனையில் இருந்து வருபவர்கள் வாவியைத் தோணிகள் மூலம் கடந்து நகரை அடைவார்கள். வாகனங்களைப் பெரிய பாதைப் படகு மூலம் ஏற்றி இறக்குவார்கள்.
இறங்குதுறை மட்டக்களப்புக் கோட்டைக்கு அண்மையில் இருந்தது. கோட்டையில் போத்துக்கேயர் காலத்துப் பீரங்கிகள் பொருத்தப் பட்டிருந்தன. அவற்றை இப்போதும் காணலாம். சூரியன் உதிக்கும் பகுதியை எழுவான்கரை என்பார்கள். சூரியன் மறையும் பகுதியை படுவான்கரை என்பார்கள். சூரியனை மையமாகக் கொண்டு நிலங்களுக்குப் பெயரிட்டார்கள். திசைகளையும் தெரிந்து கொண்டார்கள். வாவியின் இருகரையும் அழகாக இருக்கும். தென்னை விரி;சோலை பரந்தி ருக்கும். படகுகள் அசைந்து செல்லும். மீனும், இறால் நண்டுவகை களும் பிடிபடும். மக்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை அளித்து வருகிறது. விதையாத வயலாக வாவி இன்றும் விளங்குகிறது.
போத்துக்கேயர் இலங்கையின் கரையோர மாகாணங்களைக் கைப்பற்றி ஆண்டனர். மட்டக்களப்பும் அவர்களது ஆட்சியினுள் வந்தது. அத்துடன் அவர்கள் தமது கத்தோலிக்க சமயத்தைப் பரப்பினார்கள். முதலாவதாககக் கத்தோலிக்க கோயில்களையும், சமயத்தைப் பரப்பப் பாடசாலைகளையும் கட்டினார்கள். மட்டக்களப்பில் உள்ள தாண்டவன்வெளியில் முதலாவது கத்தோலிக்க தேவாலயத்தை 1624ல் கட்டினார்கள். கதர்தோலிக்க குருமார் பாடசாலைகளையும, ஆசிரிய பயிற்சிக் கலாசாலையையும் அமைத்தார்கள். அச்சியந்திர சாலைகளையும் நிறுவினார்கள்.
1626ல் போர்த்துக்கேயர் மட்டக்களப்பின் புளியந்தீவில் கோட்டையினைக் கட்டினர். ஒல்லாந்தர் போர்த்துக்கேயரை வென்று தமது ஆட்சியைத் தொடர்ந்தார்கள். போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையை ஒல்லாந்தர் 1682ல் திருத்தியமைத்தார்கள். ஒல்லாந்தர் காலத்தில் மெதடிஸ்த மிசன் ஆலயங்களும் பாடசாலைகள் வளரத்தொடங்கின. ஒரு மதபாடசாலையின் தலையாய நோக்கம் கிறிஸ்தவ மதத்தைப் போதிப்பதே. இதனை இலக்காகக் கொண்டு கல்வி போதிக்கப்பட்டது. கிறிஸ்தவ மதமும், ஆங்கிலமும் உயர்ச்சியடையத் தொடங்கியது. ஆங்கிலப் பண்பாடு தோற்றம் பெற்றது. கிறிஸ்தவ மதத்தில் சேருவோருக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தன. சமூக அந்தஸ்த்துக் கிடைத்தது.
மட்டக்களப்பில் இருந்து சுமார் 39 கிலோ மீற்றர் தூரத்தில் கல்முனை உள்ளது. கல்முனையின் அருகாமையில் காரைதீவு என்றொரு கிராமம் உள்ளது. அது அழகான ஊராகும். அதனைக் ‘காரேறும் மூதூர்’; என அழைப்பார்கள். காரைதீவின் கிழக்கே வங்காள விரிகுடாக் கடல் விரிந்து கிடக்கிறது. காரைதீவு மணல் பரந்த கிராமம். வீடுகள் நெருக்கமாக இருந்தன. வீடுகளின் முன்னால் கனிதருமரங்கள் நிறைந்திருக்கும். கிணற்றடியில் கமுகுகள் பாக்கினைச் சுமந்து காற்றில் அசையும். பாக்குக் குலையோடு இருந்தால் கமுகுமரங்களுக்குத் தனியான அழகுதான். கமுகு மரங்களைச் சுற்றி வெற்றிலைக் கொடிகள் படர்ந்து அழகூட்டும். தென்னைகள் பாளை வெடித்துக் காற்றில் ஆடும். இளநீரையும், தேங்காய்களையும் தாங்கி நிற்கும்.
காரைதீவின் மேற்கே வயல்வெளி பரந்துள்ளது. கிராமத்தையும் வயல்வெளியையும் கரிய தார்வீதி பிரிக்கிறது. கல்முiனையில் இருந்து வரும் தார்வீதி வடக்குத் தெற்காக பொத்துவில் நோக்கிச் செல்கிறது. அவ்வீதியில் இருந்து காரைதீவு ஊருக்குள் செல்லும் வீதி கடற்கரைவரை செல்கிறது. அச்சந்தியில் கண்ணகி அம்மன் கோவில் உள்ளது.
கோயிலில் இருந்து கூப்பிடு தூரத்தில் சின்னத்தம்பியின் வீடு இருந்தது. அவருடைய மகன்தான் சாமித்தம்பி விதானையார்.
அக்காலத்தில் கிராமத்தின் தலைமகனாக சாமித்தம்பி விதானையார் விளங்கினார். அவர்தான் கிராமத்தின் சிற்றரசன். பேரும் புகழும் விதானையாருக்கு இருந்தது. மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. விதானையார் அரசாங்கத்தின் பிரதிநிதியாகச் செயற்படுபவர்.
காரைதீவின் ஊடாக தோணா எனப்படும் சிற்றாறு ஓடுகிறது. கடற்பெருக்கின் போது தோணாவிலும் தண்ணீர் கூடும். மாரிகாலத்தில் வெள்ளம் பாய்ந்தோடும். தோணாவை நிறைத்து ஊதாநிறத்தில் பூக்களைத் தாங்கி நீர்த்தாவரங்கள் மிதக்கும். பார்ப்போரின் கண்களைக் கவரும். காரைதீவுக்குப் பெருமைசேர்ப்பது தென்னைகள். வங்காளவிரிகுடாக் கடலின் காற்று தென்னைகளை வருடி, ஓலைகளை அசைத்து இசையைக் கூட்டும். தென்னை மரமும் ஒரு கற்பகதருதான். தென்னை அதிக பலனை மக்களுக்குத் தருகிறது. அதனால் அதனைக் கற்பகதரு என்றார்கள். தென்னை தேங்காய் தருகிறது. இளநீரைத் தருகிறது. அதன் ஓலைகள் கிடுகுகளாகப் பின்னப் படுகிறது. கிடுகுகள் வீடுகளின் கூரையை வேய்வதற்குப் பயன்படுகிறன.
அதன் ஈர்க்கு விளக்குமாறு செய்ய உதவுகிறது. ஈர்க்கில் கட்டு முற்றத்தைப் பெருக்க உதவுகிறது. தேங்காயை உரித்தால் உரிமட்டை வரும். உரிமட்டை தும்புகளைக் கொண்டுள்ளது. தும்பு கயிறு இழைக்க உதவுகிறது. தும்புத்தடி செய்ய உதவுகிறது. தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் எடுக்கப் படுகிறது. முற்றிய மரங்கள் வீட்டுக் கைமரங்களாக வீடு கட்டப்பயனாகிறது.
காரைதீவில் இராசகோபாலன்பிள்ளையின் குடும்பமும் செல்வாக்குள்ளது. இராசகோபாலன்பிள்ளையின் மகளாக கண்ணம்மை வாழ்ந்தார். கண்ணகி வழிபாட்டில் கண்ணம்மை சிறந்து விளங்கினார். சின்னத்தம்பியும் இராசகோபாலன்பிள்ளையும் தமது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். இல்லறம் சந்தோசமாகக் கழிந்தது. பத்துத் திங்கள் பறந்தோடியது. இத்தம்பதியினருக்கு 1892 ஆண்டு மார்ச் 27ம் திகதி ஆண்குழந்தை பிறந்தது.
‘மயில்வாகனம்’ எனப் பெயரிட்டனர். பாலூட்டித் தாலாட்டி வளர்த்தார்கள். மயில்வாகனனுக்கு இரு சகோதரிகள் இருந்தார்கள். ஒருவரின் பெயர் கோமளவல்லி. மற்றவரின் பெயர் மரகதவல்லி.
மட்டக்களப்பு மாவட்டம் பத்தினித் தெய்வ வழிபாட்டில் பெருமை மிக்கது. கண்ணகிக்குக் கோயில்கள் அதிகம் உள்ளன. காரைதீவில் உள்ள கண்ணகிக்குக் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவம் நடைபெறும். உற்சவ காலத்தில் மக்கள் பயபக்தியாக இருப்பார்கள்.
கண்ணகி வழக்குரை காதை பாடப்படும். மக்கள் பெருந்திரளாகக் கூடிக் கொண்டாடுவார்கள். விதானையாரின் மேற்பார்வையில் உற்சவம் நடக்கும். மயில்வாகனம் கோயிலுக்குப் போவான். கண்ணகி வழக்குரை காதையில் மூழ்கி ரசிப்பான். சிலப்பதிகாரத்தை நன்கு அறியக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
இளமைக் கல்வி
இளமைக் கல்வியை தந்தையிடமே கற்றான்;. மயில்வாகனம் ஆரம்ப பள்ளிப் பருவத்தினை அடைந்தான். அவனை சாமித்தம்பி விதானையார் திரு. நல்லரத்தினசிங்கம் அவர்களிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் முறைப்படி வித்தியாரம்பம் செய்து வைத்தார். தொடக்கக் கல்வியை நல்லரத்தினம் ஆசிரியரிடம் கற்றார்.
காரைதீவில் கிறிஸ்தவப் பாடசாலை இருந்தது. அங்கு குஞ்சித்தம்பி ஆசிரியர் கற்பித்தார். அவர் சிறந்த ஆசானாய் விளங்கினார். மயில்வாகனத்தின் திமையைக் கண்டு வியந்தார். அப்பாடசாலையில் 1897ல் சேர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை கற்றான்;. காரைதீவு விநாயகர் கோயில் அர்ச்சகராக புலோலியூர் வைத்தியலிங்க தேசிகர் இருந்தார். அவர் பேரறிஞராய்த் திகழ்ந்தவர். கோயில் பூசையையும் செய்தார். பாடசாலையையும் நடத்தி வந்தார். அவரிடம் நன்நூல், நிகண்டு, சூடாமணி, போன்ற நூல்களையும் வடமொழியையும் கற்றான்.
அக்காலத்தில் ஆண்பிள்ளைகளும் பெண்களைப்போல் குடுமி வைப்பது வழக்காக இருந்தது. மயில்வாகனமும் குடுமி வைத்திருந்தான். அதிகாலையில் எழுந்ததும் குளிப்பான். தலையை வாரிக் குடுமி கட்டிக் கொள்வான். பெண்பிள்ளைகள் போல் நீண்ட சட்டையை அணிந்து கொள்வான். காதுகளில் வெண்கடுக்கண் அணிந்திருந்தான். இளமையிலேயே புலமை உடையவனாகக் காணப்பட்டான்.
சாமித்தம்பி விதானையார் 1901ல் மயில்வாகனத்தின் ஒன்பதாவது வயதில் கல்முனை வெய்ஸ்லிக் கல்லூரியில் சேர்த்துவிட்டார். கல்முனை சற்று நாகரிகத்தைப் பற்றியிருந்தது. வெய்ஸ்லிக் கல்லூரி கிறிஸ்தவப் பாடசாலை. அங்கு கற்ற மாணவர்கள் மயில்வாகனத்தைச் ‘சைற்லாம்ப்’ எனப்பகுடி பண்ணினார்கள். மயில்வாகனம் செய்த முதல் வேலை தனது காதுகளில் அணிந்திருந்த வெண் கடுக்கண்களைத் துறந்ததுதான்.
அத்துடன் தனது குடுமியையும் எடுத்துவிட்டார். உச்சியில் வகிடெடுத்து இருபக்கமும் அழகாகச் சீவியிருப்பான். அங்கு ஆங்கிலக் கல்வியைக் கற்கத் தொடங்கினான். சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வெய்ஸ்லிக் கல்லூரிக்கு மற்றப் பிள்ளைகளுடன் நடந்தே செல்வான். ஒரு துணியால் செய்த உறையினுள் புத்தகங்களை திணிப்பான்.
தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடப்பான். நடையோடு பாடங்களையும் மனனம் செய்வான். கருவில் திருவுடைய மயில்வாகனம் குரு பக்தியுள்ளவன். தனது குருவை மதித்தவன்.
‘அம்புவியிற் செந்தமிழோ டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவு தீட்டி வம்பு செறி வெண்கலச வல்லியருள் எனக்கூட்டி வைத்த வள்ளல் குஞ்சித் தம்பி யெனும் பெயருடையோன் தண்டமிழின் கரைகண்ட தகமையோன்தன் செம்பதும மலர்ப் பதத்தைச் சிரத்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே’
இவ்வாறு தனது பன்னிரெண்டாவது வயதில் தனது குருவாகிய ; குஞ்சித்தம்பி ஆசிரியருக்குக் கவிதையில் வணக்கம் சொன்னார்.
அக்காலத்தில் புளியங்தீவுதான் பெரிய நகரமாக இருந்தது. மட்டக்களப்பு வாவியைத் தோணிகளின் மூலம் கடக்கவேண்டும்.
வாகனங்கள் அக்காலத்தில் மிகக்குறைவு. மாட்டு வண்டிகள்தான் அதிகம் இருந்தன. அவற்றைப் படகுப் பாதையின் உதவியுடன் கடப்பார்கள். மக்கள் காரைதீவிலிருந்து கல்முனைக்கு வருவார்கள். பின்னர் மட்டக்களப்புத் துறையைக் கடந்து நகருக்குச் செல்வார்கள். சாமித்தம்பியும் தனது மகனோடு துறையைத் தாண்டித்தான் சென்றார்.
கிழக்கின் முக்கியமான இடங்களில் மெதடிஸ்த திருச்சபை ஆலயங்களைக் கட்டியது. சமயம் பரப்பும் நோக்காகவே பாடசாலைகளையும் அமைத்தது. ஆங்கிலம் போதனை மொழியாக இருந்தது. சுயமொழியும் போதிக்கப்பட்டது. 1814ல் மட்டக்களப்பில் மெதடிஸ்த கல்லூரி கட்டப்பட்டது. 1904ல் மெதடிஸ்த கல்லூரியில் மயில்வாகனம் சேர்க்கப்பட்டான். மட்டக்களப்பில் சென்மைக்கல் கல்லூரி புளியந்தீவில் 1872ம் ஆண்டு கட்டப்பட்டது. தொடக்கத்தில் 57 மாணவர்கள் கல்வி பயின்றனர். மட்டக்களப்பில் சாமித்தம்பியின் நண்பர் திரு. வேலுப்பிள்ளை வாழ்ந்தார். அவர் ஒரு பிரசித்தி பெற்ற நொத்தாரிசு. சென்மைக்கல் கல்லூரியின் தென்புறத்தே திரு. வேலுப்பிள்ளை அவர்களின் வீடு இருந்தது. மயில்வாகனம் அவரது வீட்டில் தங்கியிருந்து படிப்பதற்கு ஏற்பாடாயிற்று. சாமித்தம்பி 1906ம் ஆண்டு சென் மைக்கல் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.
அப்போது மயில்வாகனத்துக்குப் பதின்நான்கு வயது. மயில்வாகனம் திரு. வேலுப்பிள்ளையின் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்றான். திருமதி. வேலுப்பிள்ளை அன்பானவர். மயில்வாகனத்தை அவருக்குப் பிடித்துக் கொண்டது. வேண்டிய உணவுப் பொருட்கள் கரைதீவில் இருந்து வந்துவிடும். மயில்வாகனம் அன்பாகப் பழகினான். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தனது வேலைகளை முடித்துப் படிப்பான். ஏழுமணிக்குக் காலை உணவைத் திருமதி. வேலுப்பிள்ளை தயாரித்து வைத்து விடுவார். பெரும்பாலும் இடியப்பம் அல்லது பிட்டு இருக்கும். அத்துடன் தயிரும் இருக்கும். அதிகாலையில் இடியப்பம் அல்லது பிட்டோடு தயிரைப் பிசைந்து சாப்பிடுவது மயில்வாகனத்துக்குப் பிரியமானது. சாப்பிட்டதும் எட்டிச் சிறுநடை போட்டால் கல்லூரியில் நிற்பான்.
சென்மைக்கல் கல்லூரியில் புகழ்பெற்ற விஞ்ஞான, கணித ஆசிரியராக அருட்தந்தை. பேர்டினன்ற் பொனல் இருந்தார். அவர் ஒரு பிரஞ்சுக்காரர். மயில்வாகனம் இராசாயனம், பௌதிகம், கணிதம் ஆகிய பாடங்களில் சிறந்து விளங்கினான். அதனால் அருட்தந்தை. பேர்டினன்ற் பொனல் அவர்களது பாராட்டுதல்களைப் பெற்றான்.
அவர் அவனை ‘மயில்குஞ்சு’ என்றே செல்லமாக அழைப்பார். லத்தின் மொழியினைக் கற்றுக் கொண்டான். கிரேக்கக் காவியங்களைப் படித்தறிய லத்தின் மொழி பேருதவியாக இருந்தது.
விபுலானந்தரைப் பற்றி எழுதுபவர்களும், பேசுபவர்களும் இப்படிக் கதைகதையாகக் கூறுவர். அவற்றுள் சுவையான நிகழ்வாக இதனை அனைவரும் கையாளுவர். அதனை இங்கு நானும் தருகிறேன். ‘ஒருநாள் வழமைபோல் மயில்வாகனம் கல்லூரி செல்ல ஆயத்தமானான். கடமைகளை முடித்தான். திருமதி. வேலுப்பிள்ளை அன்று இரவு அப்பம் சுடுவதற்காக மாவைக் கரைத்துப் புளிக்க வைத்து மூடியிருந்தார். திருமதி. வேலுப்பிள்ளை அன்று வழமைக்கு மாறாக வேறேதோ வேலையில் இருந்திருக்கிறார். காலையிலேயே தனது கடமைகளை முடித்துக் அடுக்களைக்குள் புகுந்தான். உணவு இருக்கும் மேசைக்குச் சென்றான். இடியப்பம் இருந்தது. புளிக்கவைத்த மாவும் இருந்தது. அதனைத் தயிரென நினைத்து குழைத்து உண்டான். உண்ணும் போது புளித்த கள்ளின் மணம் வீசியது. அதனைப் பற்றி சிந்தனையின்றி உண்டபின் கல்லூரிக்குச் சென்றுவிட்டான்.
திருமதி. வேலுப்பிள்ளை குசினியில் அப்பம் சுடுவதற்காக வந்தார். புளிக்க வைத்த மா குறைந்திருந்தது. ‘மாவினைப் பூனை விளையாடி விட்டதோ? அப்படி விளையாடச் சந்தர்ப்பம் இல்லையே. கூடையால் அவற்றை மூடிவைத்தேனே’? என நினைந்து கொண்டார். இதில் அதிசயம் என்னவென்றால் மயில்வாகனத்துக்குப் புளித்த மா ஒன்றும் செய்யவில்லை. கல்லூரி முடிந்தபின் வீடு வந்தான்.
“மகன் காலையில் சாப்பிட்டாயா”? திருமதி.வேலுப்பிள்ளை வினவினார்.
“ ஓம். சாப்பிட்டேனே.” மயில்வாகனம் பதிலளித்தான். “ என்ன சாப்பிட்டாய்? இடியப்பமும் தயிரும்” “எங்கே சாப்பிட்டாய். தயிர் அப்படியே இருந்ததே”. என்றார். “இல்லை அம்மா நான் தயிர் சாப்பிட்டேன்”. பதிலளித்தான் மயில்வாகனம். “நீ சாப்பிட்டது தயிரா? வித்தியாசம் விளங்கவில்லையா”? சிரிப்போடு திருமதி. வேலுப்பிள்ளை கூறினார். “நல்ல தயிர்தான். எனக்கு ஒரு வித்தியாசமும் விளங்கவில்லை”. மயில்வாகனம் விளக்கினான். “அது அப்பம் சுடுவதற்காகக் கரைத்துப் புளிக்க வைத்த மா”. என்று விசயத்தை திருமதி. வேலுப்பிள்ளை கூறி விழுந்து விழுந்து சிரித்தார். மயில்வாகனமும் சிரித்துக் கொண்டானாம்.’இக்கதை விபுலானந்தரின் மனநிலையை உணர்த்துகிறதல்லவா?

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP