பயிலுநர் ஆசிரியர்.
1908ம் ஆண்டு ‘கேம்பிறிஜ்’ பரீட்சை நடந்தது. அப்பொழுது அவருக்குப் பதினாறு வயது. ‘கேம்பிறிஜ்’ பரீட்சையில் வெற்றி பெற்றார். அவரின் திறமையைப் பலரும் பாராட்டினார்கள். சிறப்பாகச் சித்தியெய்திய மயில்வாகனத்தை சென் மைக்கல் கல்லூரி ஆசிரியர் பதவி கொடுத்துக் கௌரவித்தது. பயிலுநர் ஆசிரியராகப் பதவியினைத் தொடர்ந்தார். 1909 முதல் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகக் கடமையாற்றினார். 1911ம் ஆண்டில் மயில்வாகனம் தனது அன்னையை இழந்தார். அந்தச் சோகம் அவரை வாட்டியெடுத்தது. அதனால் கல்முனை புனித மரியாள் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
ஆசிரியர் கற்பித்தல் துறையில் பயற்சியினைப் பெற்றிருக்க வேண்டும். அப் பயிற்சியைப் பெறவிரும்பினார். மகரகமை ஆசிரிய பயிற்சிக் கல்லூரி உட்புகுமுகத் தேர்வை எழுதினார்.பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாண்டுக் கால ஆசிரியர் பயிற்சியின் போது பலவிடயங்களைக் கற்றறிந்தார். அத்துடன் கொழும்பில் பல நல்லறிஞர்களின் நட்பையும் பெற்றார். பயிற்சியின் போது அங்கே விரிவுரையாளராகக் கடமையாற்றிய தென்கோவை கந்தையாபிள்ளையிடம் பழந்தமிழ் இலக்கியங்களையும், தமிழ் இலக்கணத்தையும் பயின்றார்.
ஆசிரியர் பயிற்சியின் போது இலங்கை அரசினரால் பெருமதிப்புப் பெற்ற கலைச்செல்வராகிய கைலாசபிள்ளை முதலியார் அவர்களைச் சந்தித்துச் சிலப்பதிகாரத்தைக் கற்றார். “கலைச்செல்வராகிய கைலாசபிள்ளை முதலியார் அவர்கள் பரம்பரைக் கலைவாணர் குலத்தில் உதித்தவர். பழைய இசைமரபு தவறாது கம்பீரமான குரலிலே மங்கல வாழ்த்துப் பாடலினைப் பாடக்கேட்டது இன்னும் என் அகச்செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது”. என சுவாமி விபுலானந்தரே யாழ்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1912ல் ஆசிரியர் பயிற்சி முடிந்தது. பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியானார். சென் மைக்கல் கல்லூரியில் மீண்டும் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். மயில்வாகனம் தனது மாணவர்களுக்கு மிகத் திறமையாகக் கற்பித்தார். ஆசிரிய பயிற்சியினைப் பெறாது கற்பித்ததையிட்டு அசைபோட்டுப் பார்த்தார். பயிற்சி பெற்றதன் பின்னர் தான் கற்பிக்கும் முறையினையும் கண்டு பிரமித்தார். கல்வி உளவியலைக் கற்றதனால் அவர் பெற்ற நன்மைகளை எண்ணிப் பார்த்தார்.
மாணவர்களின் சந்தேகங்களை எளிய முறைகளைக் கையாண்டு தீர்த்தார். அவர்களுடன் அன்பாகப் பழகினார். இரண்டாண்டுகள் சிறந்த ஆசிரியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து வாசித்தார். அத்துடன் பல கட்டுரைகளையும் எழுதினார். சென்மைக்கல் கல்லூரியின் 1914ம் ஆண்டு வெளிவந்த வருடாந்த மலருக்கு அவர் எழுதிய (ழுரச ஐகெயவெ னுநியசவஅநவெ) ‘மழலையர் பிரிவு’ அற்புதமான கட்டுரையாகும். 1872ல் தொடங்கப்பட்டட சென்மைக்கல் இக்கல்லூரி இப்போது சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கல்லூரியதாக ஏற்றம் பெற்றுள்ளது.
இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி
1903ல் கொழும்பில் இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1915ல் மயில்வாகனம் இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியில் நுழைந்து 1916ல் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றார். ஆசிரிய பயிற்சியின் போதும், தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும்போதும் தென்கோவை வித்துவான். கந்தையாபிள்ளை, முதலியார்; சிற். கைலாயபிள்ளை, வதிரி வித்துவான் சி. தாமோதரம்பிள்ளை ஆகிய தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைக் கற்றார்.
அதன்பேறாக மதுரைச் தமிழ்ச்சங்கத்தால் நடத்திய பரீட்சையில் தோற்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையில் இருந்து முதன்முதலாக பண்டிதர் பட்டத்தைப் பெற்ற பெருமை மயிலவாகனனையே சாரும். பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற திறனுடன் பண்டிதர் பட்டமும் சேர்ந்து கொண்டது. உழைப்பால் உயர்ந்த பண்டிதர் மயில்வாகனம் படித்துக் கொண்டே இருந்தார்.
‘கல்வி கரையில’ என்பதவர் கொள்கை. திறமை சாலிகளுக்கு எந்நாளும் கதவு திறந்தே இருக்கும். முயற்சிக்கு எந்நாட்களிலும் மதிப்பு இருக்கத்தான் செய்யும். ‘நீ எதுவாக வரவேண்டும் என்று விரும்புகிறாயோ ஒருநாளைக்கு அதுவாக வந்தே தீருவாய்.’ என்பதற்குப் பண்டிதர் மயில்வாகனம் சான்றாக விளங்கினார
இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், கதையும் இசையும். நாடகமும் கலந்து ஓருருவான இலக்கியத் திருவுருவம். எனினும் இந்நூலின் அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை என்பவற்றில் காணப்படும் இசை நாடகச் செய்திகளுக்கு விளக்கமளிக்கத் தமிழறிஞர்களால் முடியவில்லை.
முத்தமிழ்க் காப்பியத்தினை முற்றும்படித்து இன்புறுவதற்கு ஏற்ற கருவியாக இசையியல் நாடகவியல்களை ஆராய்ந்து தெளியவேண்டும். இதனைச் சுவாமி விபுலானந்தர் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை நாடக நுணுக்கங்களைத் துருவி ஆராயத் தொடங்கினார்.
தமிழிலக்கிய இலக்கண நூல்களில் இருந்த ஆழ்ந்த அறிவும், கணிதம். பௌதிகம், பன்மொழியாற்றல் சிலப்பதிகார இசை நாடக நுட்பங்களை வெளிக்கொண்டுவர பேருதவியாகின. சிலப்பதிகாரத்தை முத்தமிழ் என்ற வட்டத்தில் இருந்து பிரித்தெடுத்து அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதன் நல் விளைவுதான் மதங்கசூளாமணியாகவும், யாழ் நூலாகவும் பின்னர் மலர்ந்தன.
கொழும்பு தொழில் நுட்பக்கல்லூரி;யில் டிப்ளோமா பரீட்சைக்குத் தோற்றினார். பரீட்சையில் தேறியவுடன் அக்கல்லூரி அவரை இராசாயன விரிவுரையாளராகத் தேர்ந்தெடுத்தது. அதனை விரும்பியேற்றார். தனது பணியைச் செவ்வனே செய்தார். அவரது பெருமை இலங்கை எங்கிலும் பரவியது. படித்தோர் மட்டத்திலும், அறிஞர்கள் மத்தியிலும் மயில்வாகனத்தின் பெயர் பேசப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியர் தேவையிருந்தது. மயில்வாகனத்தை விஞ்ஞான ஆசிரியராகச் சேவைக்கு அழைத்தது. சம்பத்தரிசியார் கல்லூரியின் அழைப்பை ஏற்றுச் சென்றார். ஆசிரியராகத் தனது சேவையைத் தொடங்கினார். மாணவர்களுக்குக் கற்பிக்கும் அதேநேரம் தானும் கற்றலில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தில் குருநகருக்கு அருகில் உள்ள மரகத மடத்தில் (ஐஅயசயடன ஐnn) சில காலம் தங்கியிருந்தார்.
பின்னர் ஆனைப்பந்தியில் இருந்த விவேகானந்த சபையில் குடியிருந்தார். கற்றுக் கற்பிக்கும் முறையினால் ஏற்படும் நன்மைகளைப் புரிந்து கொண்டார். கல்லூரியில் ஆசிரியர் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதற்குப் பண்டிதர் மயில்வாகனம் சிறந்த சான்றாக விளங்கினார். அதற்கு சம்பத்தரிசியார் கல்லூரி உதவியாக இருந்தது. லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்.சி பரீட்சைக்குத் தன்னைத் தயார்ப்படுத்தினார். அப்பரீட்சையில் தோற்றி 1920ல் பி.எஸ.;சி பட்டத்தைப் பெற்றார். மயில்வாகனம் பன்மொழிப் புலவராக விளங்கினார்.
மயில்வாகனம் பி.எஸ்.சி – அதிபர்
திருவிளங்கத்தார் மானிப்பாய் தந்த மூதறிஞர். அவர் மானிப்பாயில் இந்துக்கல்லூரியின் முகாமையாளராக இருந்தார். அவர் திருப்புகழுக்கு உரையெழுதியவர். மானிப்பாய் இந்துக்கல்லூரி சிறந்ததொரு அதிபரைத் தேடிக் கொண்டிருந்தது. பண்டிதர் மயில்வாகனத்தின் மொழிப் புலமையையும் ஆற்றலையும் வழக்கறிஞர் திருவிளங்கத்தார் அறிந்தார். அந்தப் பதவி புனிதமும் உயர்வும் அடையும் என்றெண்ணினார். மயில்வாகனத்தினால் தனது கனவு நிறைவேறும் என நினைந்தார். அதற்குத் தகுதியுடையவர் மயிலவாகனம்தான் என்று முகாமையாளர் தீர்மானித்தார்.
அந்தப் பதவி புனிதமும் உயர்வும் அடையும் என்றெண்ணினார். மயில்வாகனத்தை அணுகி தனது விருப்பத்தை எடுத்தியம்பினார். மயில்வாகனமும் மறுக்காது அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார். விஞ்ஞானக் கல்விக்கு ஆய்வுகூடம் அவசியம் என வலியுறுத்தினார். மயில்வாகனனின் தலைமையில் மானிப்பாய் இந்துக்கல்லூரி ஏற்றம்பெற்றது. அதனை நிறுவும் முயற்சியில் இறங்கி ஆய்வு கூடத்தை நிறுவினார். சதாசிவ ஐயர் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உழைத்தவர். அதேபோல் பண்டிதர் மகாலிங்கசிவம் தமிழ்ப்பற்றுள்ளவர். இவர்களது நட்பு பண்டிதர் மயில்வாகனத்துக்குப் பெருந்துணையாயிற்று. இவர்களடன் சேர்ந்து ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தைத் தொடங்கினார். அதற்கெனப் பாடத்திட்டத்தையும் வகுத்தனர். இன்று ஆயிரக்கணக்கான பண்டிதர்கள் உருவாகியிருக்கிறார்கள். இன்னும் பலருக்கு ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் களமமைத்துக் கொடுக்கிறது.
பண்டிதர் மயில்வாகனம் யாழ்ப்பாணத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள் வரை வாழ்ந்தார். அக்காலத்தில் அரிய பணிகளை ஆற்றினார். பல தமிழறிஞர்களின் நட்புக்கிட்டியது. அதிபரின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினார். திருவிளங்கம் பிள்ளை கொழும்பில் இருந்தார். அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் வருவார். பண்டிதர் மயில்வாகனத்துக்கும் யோகர் சுவாமிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டது. திருவிளங்கம் பண்டிதர் மயில்வாகனத்தின் விடுதிக்கு வருவார். அப்போது யோகர் சுவாமிகளும் வருவார்.
யாழ்ப்பாணத்தின் சிறந்த அறிஞர்களும் வருவார்கள். சமயப் பிரசங்கங்கள் நடைபெறும். பக்தி மயமாக இருக்கும். உலக வாழ்க்கை பற்றிய விவாதங்கள் நடைபெறும். அடிமட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பார்த்தார். யோகர் சுவாமியின் நடத்தைக் கோலங்கள் ஆச்சரியமாக இருந்தன
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் தமது விடுதியில் விவேகானந்த சபையை நிறுவினார். 1917ல் ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்துறவியான சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். அப்பொழுது இச்சபை முன்னின்று தொண்டாற்றியது. சுவாமி சர்வானந்தருக்கும் பண்டிதர் மயில்வாகன்துக்கும் இடையில் நட்பு வளர்ந்தது. அந்த நட்பு ஆன்மீகம் கலந்ததாக அமைந்தது. மக்கள் சேவைதான் மகேசன் சேவை என்னும் அருட்டுணர்வு ஆட்கொள்ளத் தொடங்கியது. சுவாமி சர்வானந்தரின் வருகையும், நட்பும் வழிகாட்டலும் கிடைத்தது. பண்டிதரின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் துளிர்விடத் தொடங்கியது.
ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கம்.
இந்தியாவில் கல்கத்தா பெரியதொரு நகரம். கங்கைக்கரையில் உள்ளது. அதனை இப்போது கொல்கொத்தா என அழைப்பார்கள். கொல்கொத்தாவின் வடக்கே வேலூர் உள்ளது.
வேலூரில் பஞ்சவடி தீரத்தில் தட்சநேஸ்வர ஆலயம் இருக்கிறது. இங்குதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சதேவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கடுந்தவமிருந்தார். உலகத்தை உய்விக்க வேண்டிப் பல அவதார புருசர்கள் தோன்றினார்கள். தட்சநேஸ்வர ஆலயம்அவர்களுள் ஒருவர்தான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர். அவரது சீடர்களாக பதினெட்டுப் பேர்கள் இருந்தார்கள். அவர் தனது சீடர்களுக்கு ஞானோபதேசம் செய்து மறைந்தருளினார்.
கடவுளைப் பற்றிய தேடலில் இறங்கிய இளைஞனாக நரேந்திரன் விளங்கினான். ஸ்ரீஇராமகிருஷ்ணர் அவனை ஈர்த்து ஞானோபதேசம் செய்தார். நரேந்திரன் துறவு பூண்டு விவேகானந்தர் ஆனார். சுவாமி விவேகானந்தர் உலக நாடுகளில் இந்து தர்மத்தின் புகழைப்பரப்பினார்.
வேலூரில் ஸ்ரீஇராமக் கிருஷ்ண சங்கம் அமைந்தது. அதுவே தலைமைச் செயலகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் சின்னம் மிகவும் அழகாக உள்ளது.
உலகின் பலபாகங்களிலும் ஸ்ரீ இராம கிருஷ்ண சங்கம் மக்களுக்காகச் சேவை செய்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணிச் சேவை செய்வதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் பணியாகும். வங்கதேசத்தின் இளைஞன்தான் தாரக். பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச தேவரினால் ஈர்க்கப்பட்டுத் துறவு பூண்டவர்.
உலகின் பலபாகங்களிலும் ஸ்ரீ இராம கிருஷ்ண சங்கம் மக்களுக்காகச் சேவை செய்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணிச் சேவை செய்வதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் பணியாகும். வங்கதேசத்தின் இளைஞன்தான் தாரக். பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச தேவரினால் ஈர்க்கப்பட்டுத் துறவு பூண்டவர். பின்னர் சுவாமி சிவானந்தராகச் சேவை செய்தவர். இவர்கள் ஸ்ரீ இராமகிருஷ்ண பமஹம்சரின் நேரடிச் சீடர்கள். சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்து இலங்கைக்கும் வந்தார். இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களைத் தரிசித்தார்.
விவேகானந்தர் ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளைப் பரவ வழிசமைத்தார். ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளை ஸ்ரீஇராம கிருஷ்ண சங்கத்தின்
துறவிகள் இலங்கையிலும் வேரூன்றச் செய்தார்கள். சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.
பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளத்தை ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகள் ஆட்கொண்டு விட்டன. பரமஹம்சரின் போதனைகளில் அதிக ஈடுபாடு கொண்டார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளம் துறவைநாடிச் சென்றது. உலக இன்னல்களுக்குக் காரண காரியம்தேடிப் புறப்பட்ட சித்தார்தன்போல் மயில்வாகனமும் புறப்பட்டு விட்டார்.
பிரபோத சைத்தன்யர் எனும் பெயருடன் துறவறம்
1922ல் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமக்கிருஷ்ண மடத்தை அடைந்தார். தனது அங்கலாயும் உள்ளத்துக்கு ஸ்ரீராமக்கிருஷ்ண மடம் விருந்தளித்தது. அங்கே பிரமச்சரிய விரதம் பூண்டு துறவு மார்க்கத்தில் காலடியைப் பதித்தார். தந்தையாரிட்ட மயில்வாகனம் பெயர் நீங்கியது. பிரபோத சைத்தன்யர் என்ற பிரமச்சரியப் பெயரால் அழைக்கப் பெற்றார்.
மடத்தின் அமைதியும், சாந்தமும் அவரை ஆட்கொண்டு விட்டது. தியானம் அவரை நிதானிக்க வைத்தது. நிறைய வாசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அவரது சிந்தனை பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாமர மக்களின் எழுச்சிக்காக விரிந்தது. பண்டிதராய் இருக்கும் போது தொடர்ந்த தமிழ்ப்பணியையும், சமயப்பணியையும் தொடர்ந்தார்.
ஏழைகளின் கண்ணீரில் இறைவனைக் காணமுடியும் என்பதைப் புரிந்து கொண்டார். படமாக இருக்கும் பரமனுக்கு அன்பின் நிமித்தம் நாம் ஒன்றைக் கொடுத்தால், அது அருக்குப் போய்ச் சேராது. அதே பொருளை அவனாகக் கருதி நடமாடும் ஏழைக்குக் கொடுத்தால் படமாக இருக்கும் பரமனுக்குச் சேரும் எனத் திருமூலரின் கூற்றாகும். திருமூலரின் சிந்தனை அவரைச் சிக்கெனப் பற்றிக் கொண்டது.‘படமாடக் கோயில் பரமர்க்கு ஒன்றீந்தால்நடமாடக் கோயில் நம்மவர்க்கு அது ஆகாநடமாடக் கோயில் நம்மவர்க்கு ஒன்றீந்தால்படமாடக் கோயில் பரமர்க்கு அது ஆகும்மே’
என்பதன் தாற்பரியத்தை உணர்ந்து கொண்டார். அந்த உணர்வுதான் மட்டக்களப்புக்குக் கல்விப் பயிர் செழிக்க உதவியது.
பத்திரிகை ஆசிரியராகப் பணி
ஸ்ரீராமக்கிருஷ்ண சங்கம் தமிழில் வெளியிடும் ஸ்ரீராமக்கிருஷ்ண
விஜயம், ஆங்கிலத்தில் வெளியிடும் வேதாந்தகேசரி மாதாந்த இதழ்களின் ஆசிரியராகச் சேவைசெய்தார். அரிய பல கட்டுரைகளையும் எழுதினார். இக்கட்டுரைகளை எழுதியவர் பண்டிதர் மயில்வாகனம் எனக் குறிப்பிடப்பட்டது. சில நாட்களின் பின்னர் பிரபோத சைத்தன்யர் எனக்குறிப்பிடப்பட்டது. துறவு மார்க்கத்தில் செல்லுவதற்குரிய பயிற்சிகளிலும் தன்னை ஆழ்த்திக் கொண்டார்.
ஸ்ரீராமக்கிருஷ்ண விஜயத்தில் பெரும்பாலும் சமயம்சார்ந்த ஆக்கங்களையே எழுதினார். அருநிதியம் விலை சரசம், அறத்துப்பாலாராய்ச்சி, உறக்கமும் விழிப்பும், வரகுணதேவர் சரித்திரம், விநாயகக்கடவுள், வினைப்பயன், வைதிகநெறி, தமிழ்மொழியின் தற்கால நிலையும் தமிழரது கடமையும், உயிர்வாழ உழைப்பு, அழுத பிள்ளை பால்குடிக்கும், நம் நாட்டின் பெருமை, பெரியோரின் வாழ்க்கையும் அவரது திருநட்சத்திரங்களும், மாதவர் நோன்பும் மடவார் கற்பும் மன்னவர் நீதியும், மானிடனும் அவன் மனத்தின் ஆற்றலும், இளமைப்பருவத்தின் பெருவனப்புப் போன்ற பல கட்டுரைகளை எழுதினார். சிலப்பதிகாரத்தினுள் புதைந்திருந்த இசை நாடக நுணுக்கங்களையும் ஆராயத் தொடங்கினார்.
ஸ்கொட்லாந்தின் புகழ்பெற்ற கவிஞர் வால்டர் ஸ்கொட.; ஸ்கொட்லாந்தின் யாழைத்தேடி எழும் ஏக்கக் குரலாக லேடி ஒஃப் த லேக்(டுயனல ழக வாந டுயமந) எனும் அழகிய கவிதையில் மூழ்கி அதனை ‘நீர்நிலைக் கன்னிகை’ என்ற தலைப்பிட்டு மொழி பெயர்த்து எழுதினார். அதன் சாரம் இவ்வாறுள்ளது.
“நல்யாழே துயிலொழிந்து எழுவாயாக, நினது நரம்புகளில் படருங் கையானது பயிற்சியற்ற கையெனினும் செழிய பழம் பாடல்களின் இன்னொலியை ஓரளவிற்காவது இசைத்தலாகாதா? நின் இசைக்கு ஒர் இதயமாவது துடிப்புறு மெனின், நின் செயல் வீண் செயலாகாதல்லவா? நீ இன்னும் வாய் திறவாதிருத்தல் தகுதி யன்று. சித்தத்தைக் கவரும் வனமோகினியே, எழுந்திரு!இன்னும் ஒருமுறை எழுந்திரு”
வால்டர் ஸ்கொட்டின் பாடல் அடிகளது உள்ளத்தை உருக்கி உள்ளொளியைத் தூண்டியது.
தமிழரின் சொத்தான யாழ்கள் துயிலில் மூழ்கியிருப்பதை உணர்ந்தார். அவற்றை மீட்டெடுக்க ஆராய்ச்சியில் இறங்கினார். வேதாந்த கேசரியில் அரிய ஆங்கிலக் கட்டுரைகளை எழுதினார்.
மொழிபெயர்ப்புக் கலை
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ் மொழியில் பெர்ததல் வேண்டும்” என்ற பாரதியின் கனவுக்கு உயிர் கொடுத்தவர் சுவாமி விபுலாநந்தரே. ஒரு மொழியில் உள்ளதை இன்னொரு மொழிக்கு மாற்றிச் சொல்வது ஒரு கலை. அக்கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். மொழி மாற்றம் செய்யும்போது மூலக்கரு சிதையாவண்ணம் பாரத்துக் கொள்ளவேண்டும் என்று கூறியவர். பிறமொழி இலக்கியங்களைக் கற்று தான் சுவைத்தவற்றைத் தமிழில் மொழிமாற்;றம் செய்து பல பத்திரிகைகளில் வெளியிட்டார். லத்தின் மொழியில் உள்ள ‘எயினெயிட்’; என்ற நூலைத்; ‘ஏநேய காவியம்’ என தமிழில் எழுதினார். ஷேக்பியரை செகப்பிரியர் என்று பெரிட்டழைத்தவர் விபுலாநந்தர். ஷேக்ஸ்பியரின் சிறந்த ஆக்கங்களைத் தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார். ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கூற்றை செயல்மூலம் உணர்த்தியவர். தமிழின் தொன்மையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார். மதங்கசூளாமணியில் அவர் எடுத்துக் காட்டியலில் சேக்ஸ்பியரின் கவிதைகளை சிதைவின்றி மொழி பெயர்த்துக் காட்டியதைத் தமிழ் உலகம் வியக்கிறது.
யூலியஸ்சீசர் உரோம மக்களின் பண்டைய தலைவன். உரோமப்பேரரசை விரிவு படுத்தியவன். அவன் புகழ் கண்டு அவனது நண்பர்கள் பொறாமை கொண்டனர். சீசரைக் கொல்லத் திட்டமிடுகின்றார்கள். சீசரின் மனைவி கல்பூர்னியா தீயகனவு காணுகிறாள். அரச சபைக்குப் போகவேண்டாம் என்று கெஞ்சுகிறாள். தடுக்கிறாள். சீசர் புன்னகைத்தவாறே பதிலளிக்கிறான். அதனை சேக்ஸ்பியர் அழகாகச் சித்தரிக்கிறார். நம் அடிகள் அதனை மொழிமாற்றம் செய்து மூலக்கரு சிதைவுறாது வீறுபெறச் செய்கிறார். அவரது மொழிமாற்றம் அற்புமதாக உள்ளது.
“அஞ்சினார்க்குச் சதமரணம், அஞ்சாத நெஞ்சத்துஆடவர்க்கு ஒரு மரணம் அவனிமிசைப் பிறந்தோர்துஞ்சுவர் என்றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும்துன்மதி மூடரைக் கண்டால் புன்னகை செய்பவன்நான்இன்னலும் யானும் பிறந்ததொரு தினத்தில் அறிவாய்இளம் சிங்கக்குருளைகள் நாம்: யான் மூத்தோன்எனதுபின் வருவது இன்னல் எனப் பகைமன்னர் அறிவார்பேதுறல் பெண்ணங்கே யான்போய் வருதல் வேண்டும்”
எனத் தன் மனைவிக்குக் கூறிச் செல்கிறான். சீசரின் அஞ்சாமையை அழகாகக் காட்டுகிறார். இதேபோல் அற்புதமான எடுத்துக் காட்டுகளை மதங்க சூளாமணியில் காணலாம்.
சிறந்த ஆங்கிலப் புலவர்களாகிய மில்ரன், வேட்ஸ்வேர்த்,ஷெல்லி, கீற்ஸ் போன்ற பலரின் கவிதைகளைத் தமழில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்தார். நோர்வே நாட்டைச்சேரந்த் நாடகாசிரியர் இப்சனின் ஆக்கங்களையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். வங்ஙக் கவி ரவீந்திநாத் தாகூரின் ஆக்கங்களையும் அறிமுகம் செய்துள்ளார்.
கட்டுரையாசிரியர் - எழுத்துப்பணி
சுவாமி விபுலானந்தர் சிறந் எழுத்தாளர். அவர் காலத்தில் இருந்த பத்திரிகைகளுக்கு நிறையவே எழுதினார். தான் ஆசிரியராக இருந்த ஸ்ரீராமக்கிருஷ்ண விஜயம், ஆங்கிலத்தில் வெளிவந்த வேதாந்தகேசரி மாதாந்த இதழ்களில் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் கலைமகள், மணிக்கொடி, மஞ்சரி, நலசக்தி, குமரன், செந்தமிழ், தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, இந்து சாதனம், இலங்கையில் வெளிவந்த விவேகானந்தன், ஈழகேசரி, ஆகிய பத்திரிகளுக்கும் எழுதினார். இலங்கையில் அமையவிருக்கும் பல்கலைக்கழகம் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி ‘இந்து ஓகன்’ (ர்னைனெர ழுசபயn) பத்திரிகையில் தொடர் கட்டுரைகளை எழுதினார். யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமையவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விவேகானந்தன் பத்திரிகையில் எழுதினார். விவேகானந்தன் பத்திரிகையில் வெளியான பதிநாலு கட்டுரைகளைத் தொகுத்து ‘விபுலானந்தர் உள்ளம்’ என்ற தலைப்பில் 1976ல் ச. அம்பிகை பாகன் வெளியிட்டார்.
கலைச்சொல்லாக்கப் பணி
பாரதியின் ஏற்றமிகு கருத்துக்களை விபுலாநந்தர் செயல்மூலம் சிறப்படையச் செய்தவர். அதிலொன்று கலைச்சொற்களை உருவாக்குவதாகும். தமிழ்மொழி உயர்நிலை அடைவதற்கு அறிவியல் நூல்கள் வேண்டும். அறிவியல் நூல்களை எழுதுவதற்குக் கலைச் சொற்கள் முக்கியம். ஆகவே கலைச் சொல்லாக்கத்தினை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1934ல் சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டில் சொல்லாக்கக் கழகம் உருவாயிற்று. இச்சொல்லாக்கக் கழகத்தின் பொதுத்தலைவராக விபுலாநந்த அடிகளாரே தெரிவு செய்யப்பட்டார். சொல்லாக்கக் கழகம் 1934 ஒக்டோபர் 14ந் திகதி தனது வேலையைத் தொடங்கியது. கணிதம், பௌதிகம், வேதியல். தாவரவியல், விலங்கியல். உயிரியலும் நலவியலும், புவியியல், வரலாறு, வேளாண்மை போன்ற ஒன்பது தலைப்புக்களில் கலைச்சொல்லாக்கக் குழுக்கள் தமது கடமைகளில் ஈடுபட்டன. பொதுத்தலைவராகக் கடமையாற்றிக் கொண்டு, பௌதீகவியற் குழுவின் தலைவராகவும் செயற்பட்டார். 1935, 1936ம் ஆண்டுகளில் புதியகலைச் சொற்கள் ஆக்கப்பட்டன.
கலைச் சொற்களை ஆக்கும்போது முகக்pயமான கருத்துக்களை வெளியிட்டார். முதலில் தமிழில் உள்ள மருத்துவ, தத்துவ நூல்களை ஆராயும்ப டிவற்புறுத்தினார். அவற்றுள் பொதிந்து கிடக்கும் விஞ்ஞான நுண்மொழிச் சொற்களை தெரிந்தெடுக்க வேண்டும். அவற்றின் பொருளை நிச்சயித்துக் கொள்ளவும் வேண்டும். சுருக்கம், விளக்கம், தெளிவு, தமிழுருவம் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளும்படி தெளிவு படுத்தினார். வழக்கில் உள்ள சொற்களைப் புறக்கணியாது அவற்றையும் சேர்க்கும்படி கூறினார். பொருத்தமான தமிழ் மொழிச் சொற்கள் கிடையாது போகுமிடத்து தமிழ்மணம் குன்றாமல் சொற்களை ஆக்கலாம் என்றார்.
1936ம் ஆண்டு சேர் . சீ. பி. இராமசாமி ஐயரவர்கள் மகாநாட்டினைத் திறந்து வைத்தார். சுவாமி விபுலாநந்தர் தலைமையில் மகாநாடு நடந்தேறியது. ஒன்பது துறைகளையும் சேர்ந்த அறிஞர்களது பதினாயிரம் கலைச் சொற்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன. 1938ம் ஆண்டு சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினால் “கலைச்சொற்கள் அகராதி“ வெளியிடப் பட்டது. “…இவ்வாறு அடிகளார் தொடங்கி வைத்த நன்முயற்சியினால் விஞ்ஞானக்கலை இன்று தமிழில் விரைவாக வளர்ந்து வருகின்றது…” எனப் பேராசிரியர் அமரர் கணபதிப்பிள்ளை கூறியுள்ளார்.சுவாமி விபுலானந்தா தனது கடும் பயிற்சியினால் துறவறவாழ்க்கையின் அடுத்த கட்டத்தை அடைந்துவிட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடுந்தவம் நோற்றார். ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடர்களாக பதினெட்டுப் பேர் இருந்தார்கள். முதன்மைச் சிடராக சுவாமி விவேகானந்தர் விளங்கினார். அவரைத் தொடர்ந்து பலர் இருந்தார்கள். அவர்களுள் ஒருவர் சுவாமி சிவானந்ததர் ஆவார். பிரபோத சைத்தனயரின் பக்குவத்தை உணர்ந்தார்கள்.
1924 சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமி கூடிவந்தது. சுவாமி சிவானந்தர் பிரபோத சைத்தன்யரை அழைத்து ஞானோபதேசம் கொடுத்தார். தொடர்ந்து ‘விபுலானந்தா’ என்ற துறவறப் பெயரைச் சூட்டினார். தந்தையார் சூட்டிய மயில்வாகனம் எனும் பெயரைத் துறந்தார். பண்டிதர் மயில்வாகனம் .பி.எஸ்.சி என்ற தகைமைப் பெயர் நீங்கியது.
பிரபோத சைத்தன்யர் என்ற மடாலயப் பெயரும் நீங்கியது.‘சுவாமி விபுலானந்தா’ என்ற துறவறப் பெயர் வந்து சூழ்ந்து கொண்டது. சேரத்து இளங்கோவைப்போல் ஈழத்து விபுலாநந்தர் உருக்கொண்டார்.
இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றினார். சிலப்பதிகாரத்தினுள் இளங்கோ அடிகள் புகுத்திய இசைநாடக மரபினை ஆராய்ந்து தமிழ் உலகத்துக்கு அளிக்க விபுலானந்தர் வந்தார். சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை, என்பவற்றில் காணப்படும் இசை நாடக ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். தமிழரின் சொத்தான யாழ்களை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியிலும் இறங்கினார். 1924ல் மதுரைத் தமிழ்ச் சங்கம் தமது இருபத்து மூன்றாம் ஆண்டு உற்சவ விழாவைக் கொண்டாடினார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக ஹைகோட் வக்கீல் திரு.வு.ஊ. சீனிவாச ஐயங்கார் இருந்தார்கள்.
அந்த ஆண்டு விழாவிலே பெரும் புலவராகிய மஹாமஹோபாத்தியாய சாமிநாதையர் தலைமை வகித்தார். இளந்துறவி இவ்விழாவில் கலந்து கொண்டு “நாடகத் தமிழ்” என்ற சொற்பொழிவு மூலம் தான்கண்ட இசைநாடக முடிபுகளை வெளியிட்டார். இதுவே பின்னர் “மதங்கசூளாமணி” என்ற நூலாக வெளிவந்தது.
இளந்துறவி விபுலாநந்தருக்குப் பல பணிகள் காத்திருந்தன. இலங்கை மக்களுக்கு அவரது சேவை அவசரமாகத் தேவைப்பட்டது. சர்வானந்தர் இளந்துறவியை அழைத்தார். திருகோணமலைப் பயணம் பற்றிக்கூறினார். அங்கு ஆற்றவேண்டிய சேவைகளைப் பற்றி எடுத்துரைத்தார். இலங்கைப் பயணம் தொடங்கியது.
இலங்கையில் ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்கப் பாடசாலைகள்.
1924 டிசம்பர் மாதம் சர்வானந்தர் விபுலானந்தருடன் திருகோண மலைக்கு வருகை தந்தார். இலங்கையில் ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்கப் பாடசாலைகள் சிலவே இருந்தன. அவற்றை மைலாப்பூரில் உள்ள ஸ்ரீ இராமக் கிருஷ்ண சங்கமே மேற்பார்வை செய்தது.
அப்போது இலங்கை அரசாங்கத்தின் சட்ட அங்கீகாரம் இல்லாதிருந்தது. அதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் சுவாமி சர்வானந்தர் ஈடுபட்டார்.
வட இலங்கையில் ஆறுமுக நாவலரின் அரியசேவை வேரூன்றியிருந்தது. சைவ பரிபாலன சபையும், இந்து மகாசபையும் அனுசரணையாக இருந்தன. ஆறுமுக நாவலரும் கிறிஸ்தவப் பாடசாலையிலேயே கல்வி கற்றவர். விவிலியநூலை நன்கு கற்றுணர்ந்தவர். அதனை தமிழில் மொழிபெயர்த்தவர்.
வேற்றுச் சமயத்தைக் கற்றால்தான் தனது சமயத்தின் மகிமை புரியும். எல்லாச் சமயங்களும் அன்பினையே சுட்டிக்காட்டுவன. வேற்றுச் சமயக்கருத்துக்களை அவர் ஏற்கவில்லை. சைவசமயத்தின் உள்ளார்ந்த தத்துவத்தை உணர்ந்தார்.
தமிழ் மொழியின் அருமையையும், பெருமையையும் உணர்ந்தார். இளம் துறவி சுவாமி விபுலானந்தரின் தோற்றம்.அதனால் சைவசமயத்தின்பால் அவரது பற்று வளர்ந்தது. ஆங்கிலக் கல்வியின் தேவையை உணர்ந்து அம்மொழியைக் கற்றுத்தேறவும். அதே வேளை தமிழைக் கற்கவும் பிடியரிசி முறையைக் கைக்கொண்டு கல்விப் பயிர் வளர்த்தார். தமிழுக்காகவும், சைவத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த ஆறுமுக நாவலரை விபுலாநந்தர் வியந்து போற்றினார். ஆறுமுக நாவலரின் மேல் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.
விபுலானந்தரின் சிந்தையில் கிழக்கிலங்கை மக்களது மிகப் பின்தங்கிய வாழ்க்கை முறைகள் பதியத் தொடங்கின. கிழக்கிலங்கையில் ஒரு மாற்றம் தேவை என்பதை உணரத்தொடங்கினார். அந்த மக்களது வாழ்க்கையில் கல்வியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பினார்.
கிழக்கிலங்கையில் விபுலானந்தரின் வருகைக்கு முன்பே பல சைவப் பெரியார்களினால் பாடசாலைகள் தொடங்கப்பட்டிருந்தன. மட்டக்களப்பில் ஆனைப்பந்தி, ஆரையம்பதி, கல்லடி உப்போடை, காரைதீவு, மண்டுர், முறக்கட்டாஞ்சேனை, ஈச்சந்தீவு போன்ற கிராமங்களில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. 1925ல் இவை யாவும் சுவாமி விபுலானந்தர் மூலம் இராமக்கிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
திருகோணமலையில் கிறிஸ்தவப் பாடசாலைகளே அதிகம் இருந்தன. அந்நியரின் ஆட்சி அவர்களது சமயம் பரப்பும் கொள்கைக்கு ஏற்றதாக அமைந்திருந்தது. ஐரோப்பியர்கள் தமது சமயத்தைப் பரப்பும் ஊடகமாகக் கல்வியைக் கைக்கொண்டனர். அதற்கெனப் பல்வேறு கிறிஸ்தவ சமயச் சபைகள் தோன்றி தென்னாசிய நாடுகளில் சமயத்தைப் பரப்பின. இலங்கையிலும் அமெரிக்க மிசன்சபை, மெதடிஸ்த சபை, லண்டன் மிசனரிச் சபை, பப்ரிஸ்ற் சபை, சேர்ச் மிசனரிச் சபை, றோமன் கத்தோலிக்க சபை போன்றன தமது சமயத்தைப் பரப்பின.
திருகோணமலையில் 1817 ல் சாமுவேல்பிரோட் பென்ற் என்ற மெதடிஸ்த திருச்சபைக் குருவானவரால் ஆலயங்களும். பாடசாலைகளும் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 1823ல் மூன்று மெதடிஸ்த மிசன் பாடசாலைகள் இயங்கத் தொடங்கின. ஒன்று சின்னமுத்தவெளி எனப்படும் றைபிள் கிறீன் விளையாட்டரங்கத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டது. அது இப்போது பெண்கள் கல்லூரியாக இயங்குகிறது. அடுத்து பெருந்தெருவில் அமைந்த பாடசாலையாகும். அது இப்போது விக்னேஸ்வரா மகா வித்தியாலயமாகக் கல்விப் பயிர் வளர்க்கிறது. இன்னுமொன்று உப்புவெளியில் கட்டப்பட்டது. பலலாண்டுகளாக மெதடிஸ்த தமிழ் வித்தியாலயமாகச் சேவைசெய்த பாடசாலை ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயமாக பெயர்மாற்றப்பட்டு விட்டது.
1862ல் நான்கு றோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலைகளும்; இயங்கின. 1867ல் ஜூலை 27ல் அருட்தந்தை லூயிஸ் மேரி கீரிங் அவர்களால் புனித சூசையப்பர் ஆங்கிலப் பாடசாலை தொடங்கி வைக்கப்பட்டது. இவை கிறிஸ்தவ சமயத்துக்கும், ஆங்கில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்தன. மேல்நாட்டுக் கலாச்சாரப் பாரம்பரியமும் திருகோணமலையில் வேரூண்றத் தொடங்கியது.
ஆங்கிலம் கற்றவர்களை நாடி அரச உத்தியோகங்கள் வந்தன. ஆங்கிலம் கற்றவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்துக் கிடைத்தது. தொழில் வாய்ப்புக் கிட்டியது. சுகபோக வாழ்வும் கிடைத்தது. கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தவர்கள் மதிக்கப்பட்டார்கள். புதிய பாரம்பரியம் உருவாகத் தொடங்கியது. பழையன மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.
சைவசமய வழிபாடடீடங்கள் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டன. ஆங்கிலம் படித்த சமூகத்தின் முன் ஏனையவர்கள் கூனிக்குறுகி நின்றனர். ஆறுமுகநாவலரும், சுவாமி விபுலானந்தரும் அவர்களை நிர்த்த வந்த ஆசான்களானார்கள். அதனைத் தொடர்ந்து புனித மரியாள் கல்லூர் கட்டப்பட்டது
பல இந்து ஆலயங்கள் இருந்தாலும் அதற்கேற்ப இந்துப் பாடசாலைகள் தொடங்கப் படவில்லை. எனினும் சில இந்துப் பெரியார்கள் திண்ணைப் பள்ளிக்கூடங்களை நடத்தினார்கள். ஆர்வங்கொண்ட சில இந்துப் பெரியார்களினால் 1897ல் ஆண்களுக்கான இந்து ஆரம்பப்பாடசாலை தொடங்கப்பட்டது.
1910 இல் இந்து ஆங்கிலப் பாடசாலையும், சைவப் பெரியார்களினால் தொடங்கப்பட்டது. இந்து ஆங்கிலப் பாடசாலையும், கோணேஸ்வர வித்தியாலயமும் 1922 ஆண்டு உத்தியோக பூர்வமாகப் பதியப்பட்டன. அதன் முகாமையாளராக முதலியார் வல்லிபுரம்பிள்ளை இருந்தார். முதலியார் வல்லிபுரம்பிள்ளை அவர்கள் தமது முகாமைத்துவத்துக்குக் கீழிருந்த இந்து ஆங்கிலப் பாடசாலையும், கோணேஸ்வர வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளையும் 01-06-1925ல் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைத்தார்.
சுவாமி சர்வானந்தரும், சுவாமி விபுலானந்தரும் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் இருந்த ரோசாத்தோட்டம் (சுழளந குநைடன) என்ற வீட்டில் குடியிருந்தனர். சுவாமி விபுலானந்தரின் இருப்பு கிழக்கிலங்கைக்கு அத்தியாவசியமாக இருந்தது. இதனை ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கமும் உணர்ந்திருந்தது. 1925ல் விபுலானந்தர் கிழக்கிலங்கையில் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் ஈடுபட்டார். 1925 தொடக்கம் கிழக்கிலங்கையின் கல்வி வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி உதயமாயிற்று எனலாம்.
அதேவேளை பெண்பிள்ளைகளுக்கான பாடசாலையின் தேவையை திருமதி. தங்கம்மா சண்முகம்பிள்ளை உணர்ந்தார். 1923ல் இந்துப் பெண் பிள்ளைகளுக்கான ஆரம்பப் பாடசாலையைத் தொடங்கிவைத்தார். இன்று ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் பாடசாலையாக விளங்குகிறது.
சிவானந்த வித்தியாலயம்.
கிழக்கு மாகாணத்தில் கிறிஸத்தவ மிசனரிப் பாடசாலைகளே அதிகமாக இருந்தன. அரசாங்கமும் அதற்கு உதவியாக இருந்தது. இந்துப்பாரம்பரியத்தில் ஊறிய பெரியார்கள் தமது முயற்சியினால் ஆங்காங்கே இந்துப் பாரம்பரிய பாடசாலைகளை நிறுவி இயக்கி வந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதே நிலை தொடர்ந்தது. சுவாமி விபுலானந்தரின் வருகையினால் இந்துப் பாரம்பரியப் பாடசாலைகளை ஸ்ரீஇராமகிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்தன.
இந்துப்பாரம்பரியத்தில் ஒரு ஆங்கில மொழிமூலப் பாடசாலையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. 1925 ஆண்டு மார்ச் மாதம் மட்டக்களப்புப் பெரியோர்கள் கொண்ட மகாசபையைக் கூட்டினார். அடிகளாரது ஆவலைப் புரிந்து கொண்ட பெரியோர்கள் கல்லடி உப்போடையில் பாடசாலை அமைவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். 06-11-1925ல் அடிக்கல் நாட்டப்பட்டது. மட்டக்களப்புப் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் பாலமும் 1927ல் கட்டி முடிக்கப்பட்டது.
சிவானந்த வித்தியாலயத்தைக் கவியரசர் தாகூரின் சாந்திநிகேதனை ஒத்ததாக அமைக்கத் திட்டமிட்டார். பாடசாலைகள் நல்ல அமைதியான சூழலில் அமைந்திருப்பது பொருத்தமானது. அதற்கேற்ற இடமாகக் கல்லடி உப்போடை திகழ்ந்தது. ஒருபுறம் கிழக்காக வங்காள விரிகுடாக் கடல் ஆரவாரிக்கிறது. மறுபுறம் இயற்கையழகை அள்ளி வீசும் பாடு;மீன் நிறைந்த மட்டக்களப்புவாவி. இவற்றின் நடுவிலே வெண்மணல்பரப்பிலே வகிடெடுத்து நீண்டு கிடக்கும் மட்டக்களப்பு – கல்முனை கரிய தார்வீதி. வீதியை ஒட்டினாற்போல் சிவானந்த வித்தியாலயம் அமைந்துள்ளது. தனது ஆத்ம குருவான சிவானந்தரின் பெயரைச் சூடி 20 – 04 - 1929 ல் திறக்கப்பட்டது.
பாடசாலை வளாகத்தை ஒட்டினாற்போல் சிவபுரி ஆச்சிரமம். மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதிகள். வேம்பு, மஞ்சவர்ணா, மரமுந்திரிகை மரங்கள் நிறைந்த சோலையாக சிவானந்த வளாகம் பரிணமிக்கிறது. சாந்திநிகேத்தன் இன, மத, மொழி பேதங்களற்று, எல்லோருக்கும் அறிவினை வாரி வழங்குதல்போல், சிவானந்த வித்தியாலயமும் திகழ்வதே அவரது நோக்கமாகும். அதற்கேற்ப இந்துக்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும், பொளத்தரும் கல்வி கற்க வழி செய்தார். ஆங்கிலம் போதனா மொழியாக இருந்தாலும், தமிழ், சமஸ்கிருதம், லத்தின், அத்துடன் சிங்களமும் கற்பிக்கும் ஏற்பாட்டைச் செய்தார்.
திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் கல்விப்பயிர் வளர்க்கும் அதே நேரம் மட்டக்களப்பில் சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிடப் பணியினையும் நிறைவேற்றினார்.
இன்று இப்பாடசாலைகள் இலங்கையின் சிறந்த பாடசாலைகளாகத் திகழ்கின்றன. 1940 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு பரிசளிப்பு விழா நடந்தது. அப் பரிசளிப்பு விழாவில் அன்றையக் கல்வி அமைச்சராகவும், இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தையுமான ஊ.று.று.கன்னங்கரா அவர்கள் கலந்து சிறப்பித்தார். இன்று பல அறிஞர்களையும், பேராசிரியர்களையும். டாக்டர்களையும். பொறியிய லாளர்களையும். சட்ட வல்லுநர்களையும், அரசியல் வாதிகளையும். நல்லாசிரியர்களையும். பல்துறை விற்பன்னர்களையும் உருவாக்கும் உன்னத நிறுவனமாகத் திகழ்கிறது. இந்துக் கல்வி முறையில்…
சுவாமி விபுலானந்தரின் வருகையினால் சிறப்பாக இந்துக் கல்வி முறையில் ஒரு உத்வேகம் தோன்றியது. 16-02-1926ல் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம் சுவாமி விபுலானந்தர் மூலமாக ஸ்ரீராமகிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இலங்கையில் உள்ள ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்பப் பாடசாலைகள் எல்லாம் மைலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண சங்கத்தின் மேற்பார்வையில் இருந்தது 03-11-1926 ல் சுவாமி அவிநாசானந்தர் இலங்கைக்கு வந்து சேர்ந்தார். அவர் கொழும்பில் இருந்துகொண்டு ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் வளர்ச்சியில் பங்கு கொண்டார். இலங்கை அரசின் அனுமதியைப் பெறுவதற்கு முயற்சித்தார். சுவாமி அவிநாசானந்தரின் பெருமுயற்சியினால் அப்போதிருந்த தேசாதிபதியினால் 17-07-1929 ல் இலங்கையில் பதிவு செய்யப்பட்டு;ச் சட்ட அந்தஸ்தைப் பெற்றது.
ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமையாளர்
சுவாமி விபுலானந்தர் பாடசாலைகளின் வளர்ச்சியில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். 1928 தொடக்கம் 1930 ஜூலை வரை அதிபர் பதவியையும் ஏற்றுக் கடினமாக உழைத்தார். 20 – 04 – 1929ல் சிவானந்த வித்தியாலயம் திறக்கப்பட்டது. ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் தொகை இலங்கையில் பெருகின. அவற்றை நெறிபடுத்து வதற்கும் முகாமைப்பதற்கும் முழுநேரமும் தேவைப்பட்டது. அதனால் அதிபர் பதவியைத் துறந்து கிழக்கிலங்கை முழுவதிலுமுள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமையாளராகச் செயற்பட்டார்.காந்தியடிகளோடு …..யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த இளைஞர் காங்கிரஸ் நம் நாட்டுக்குப் பொருத்தமான தேசியக் கல்விச் சிந்தனைகளை உருவாக்குவதில் கனதியான பங்களிப்பைச் செய்தது. இச்சங்கத்தில் மக்கள் மத்தியில் பெருமதிப்புப் பெற்ற ஹண்டி பேரின்பநாயகம், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, சைவப்புலவர் நவரத்தினம், சிவபாதசுந்தரனார், நேசையா போன்றோர் உறுப்பினர்களாக இருந்தனர். சங்கத்துக்கும் சுவாமி விபுலானந்தருக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு இருந்தது. 1927ல் காந்தியடிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டார். மகாத்மா காந்தி பிரித்தானியரின் ஆட்சியை எதிர்த்துப் போர்க்கொடி எழுப்பியவர். அந்நிய ஆதிக்கம் நீங்கினால்தான் நம் மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்கும். அதற்காகப் பல போராட்டங்களை நடத்தினார். அதேவேளை முதலாவது உலக மகா யுத்தம் நடந்தபோது பிரித்தானிய அரசுக்காகப் படையும் பணமும் அனுப்பி உதவினார்.
அதே யுத்தத்தின் போது விபுலானந்த அடிகள் பிரித்தானியருக்கு உதவியாகக் கரையோரக் காவல்படையில் ஒரு அதிகாரியாகச் சேர்ந்து பணிபுரிந்தார். சங்கத்தின் சார்பில் சுவாமி விபுலானந்தரே காந்தியடிகளை வரவேற்று நிகழ்ச்சியை வழிநடத்தினார். காந்தியடிகள் தமதுரையில் “இத்தகைய துறவி இளைஞர் குழாத்துக்குத் தலைமை தாங்க முடியுமானால் உங்களுக்கு என்ன குறை”? எனக் கூறினார். “என்னைப் பொறுத்தமட்டில் முத்திக்கு வழி எங்கே இருக்கிறது என்றால், எனது தேசத்துக்காகவும், மனித சமுதாயத்துக்காகவும் ஓயாமல் தொண்டு செய்து கொண்டிருப்பதுதான்”; எனக் காந்தியடிகள் ஒரு இடத்தில் கூறினார். அதனையே விபுலானந்த அடிகளும் செய்தார்.
காந்தியக் கல்விக் கருத்துக்களான சமய சமரசம், கிராம எழுச்சி, சாதிப்பாகுபாடு ஒழிப்பு, தொழிற்கல்வி, பெண்கள் கல்வி, தாய்மொழிக்கல்வி, எல்லோருக்கும் கல்வி, நலிந்தோருக்கு உதவுதல், என்பன சுவாமி விபுலானந்தருடன் இணைந்து கொண்டன. இவற்றை ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளில் நடைமுறைப் படுத்தினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் - தமிழ்ப் பேராசிரியர்
1857ல் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப்பல்கலைக்கழகம் இல்லாததைப் பலர் உணர்ந்தார்கள். சென்னை அரசை வற்புறுத்தியும் வந்தார்கள். அதன்பயனாக விசாரணைச் சபை நிறுவப்பட்டது. அச்சபையின்முன் சாட்சியமளிக்க சுவாமி விபுலானந்தர் அழைக்கப்பட்டிருந்தார். செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் அளித்த கட்டிடங்கள், நிலம். பணம் ஆகியவற்றைக் கொண்டு 1929ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.
ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் அனுமதியுடன் 1931 அண்ணாமலை பல்கலைக்கழகம் விபுலானந்தரை அழைத்துப் பேராசிரியர் பதவியைக் கொடுத்துக் கௌரவித்தது. அவர் தனது சேவையை நேர்த்தியாக 1933 வரை செய்தார். சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, அடிகளாரின் அன்பைக் கவர்ந்த கந்தசாமி ஆகியோர் விரிவுரையாளர்களாகச் சேவை செய்தனர். சுவாமியிடம் அ.மு.பரமசிவானந்தம், மு.ஆலாலசுந்தரஞ் செட்டியார், இலங்கையைச் சேரந்த க.கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம் ஆகியோர் தமிழ்கற்றனர்.
இந்தியநாடு பிரித்தானியர் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது லெப்ரினனட் கேணல் சேர் ஜோர்ஜ் பெடறிக் ஸ்ரான்லி அவர்கள் 1929 தொடக்கம் 1934 வரை மாட்சிமைமிக்க கவர்ணராக இருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933ல் பட்டமளிப்பு விழா சிறந்த முறையில் நடந்தது. அதற்காகக் கவணர் வருகை தந்தார். மண்டபம் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு பேராசிரியர்களின் விடுதிகள் மேல் மாடியிலும் ‘ஜூனியன் ஜாக்’ கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனால் சுவாமி விபுலானந்தர் வீட்டின் மேல்மாடியில் இந்திய தேசியக் காங்கிரஸ் கொடி கட்டப்பட்டிருந்தது. மாட்சிமைமிக்க கவர்னர் பட்டமளிப்பு மண்டபத்துக்கு வருமுன் பொலிசார் அடிகளாரின் வீட்டைச் சோதனையிட்டனர். இந்தியர்கள் செய்யத் துணியாத சாதனையினை இலங்கையில் பிறந்த அடிகள் செய்தார்கள். அந்நியர் ஆட்சியை எதிர்த்து இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட அடிகள் அஞ்சவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்பன்றோ? என அவரது மாணவரில் ஒருவரான பூ.ஆலாலசுந்தரம் எழுதுகிறார்.
சுவாமி விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அப்போதுதான் மானிடத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டார். தாழ்த்தப்பட்டோர் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை நேரில் கண்டறிந்தார். திருவேட்களத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேரிக்குடி யிருப்புக்களில் வாழ்ந்தார்கள். அம்மக்களின் துயரத்தைத் துடைக்க எண்ணினார். அங்கு இரவுப் பள்ளியினைத் தொடங்கிச் சேவை செய்தார். பகல் முழுவதும் பல்கலைக் கழகத்தில் சேவை செய்வார். இரவானதும் திருவேட்களத்தில் சேரிப்பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துதல் எனச் சேவை செய்தார். தான் வருந்தி உழைக்கும் பணத்தை இந்த ஏழைகளின் ஏற்றத்துக்காகச் செலவு செய்தார்.
மாலையானதும் பொட்டுக்கடலையும், சர்க்கரையும் வாங்கிப் பொட்டலமாகக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பாடம் முடிந்ததும் பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்வார்கள். அதனால் மேட்டுக்குடியினர் நல்லநீர்க் கேணியில் சுவாமி விபுலாநந்தருக்குத் தண்ணீர் எடுப்பதற்கும் தடைபோட்டார்கள். உவர்நீரையே பயன்படுத்தி வாழ்ந்தார். இந்திய மக்களது விடுதலைக்காகச் சுவாமி விபுலானந்தர் காட்டிய தீவிர ஆதரவுக்கு இந்திய மக்கள் அளித்த பரிசு மகத்தானது. அதனைத்தான் ஈழப்போராட்டத்திலும் இந்திய மக்கள் ஒதுங்கியிருந்து காட்டினார்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அனைவரையும் கவரும் வகையில் தனது சேவையினைத் தொடர்ந்தார். கற்றவர்களுக்கும் விளங்கிக் கொள்ளச் சிரமமாக இருந்த சிலப்பதிகாரம் நூலின் அரங்கேற்று காதையினைச் சுவைபடக் கற்பித்தார். அதன் ஊடாக இசை நுணுக்கங்களையும், இசைக் கருவிகளையும், யாழ்வகைகளையும் பற்றிய ஆராய்ச்சியை ஆழமாக மேற்கொண்டார். இவற்றுக்கு உதவியாக பழந்தமிழ் இலக்கிய, இலக்கண அறிவும், விஞ்ஞான, கணித, பன்மொழியாற்றலும் கைகொடுத்துதவின.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழாராய்ச்சிப் பிரிவுக்கான பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். இசை ஆராய்ச்சி பற்றிய சிந்தனையைத் தூண்டும் விரிவுரைகளைச் செய்தார். சென்னைப் பல்கலைக் கழகம் சுவாமி விபுலானந்தரைத் தமிழாராய்ச்சித்துறை அங்கத்தவர் களில் ஒருவராகவும், தமிழ் பரீட்சகர்களுள் ஒருவராகவும் நியமித்துக் கொண்டது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாரதி கழகம்
பாட்டுக்கொரு புலவன் பாரதியின் கவிதைகளைக் கவிதகைளே இல்லை எனப் பலர் வாதாடி வந்தார்கள். அவர்களுள் கல்கி, வ.ரா, கு.ப.ராஜகோபால், புதுமைப்பித்தன், பிச்சைமூர்த்தி, ராமையா, சுந்தரராஜன், போன்ற அக்கால பிரபல எழுத்தாளர்கள் முக்கிய இடங்களை வகித்தார்கள். அதனை எதிர் கொண்டு பாரதியின் கவிதைகள் உலகத் தரமிக்கது என முழங்கிய பெருமகன் சுவாமி விபுலானந்தரே. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாரதி கழகத்தைத் (டீhயசயவாi ளவரனல உசைஉடந) தோற்றுவித்து மாதமிருமுறை பாரதியின் பாடல்களின் சிறப்புக்களை பரவச் செய்தார். பண்டிதர்க்கே சொந்தமாக இருந்த தமிழ் மொழியைப் பாமரரின் சொத்தாக மிளிரச் செய்த பெருமை பாரதியாரைச் சாரும். ‘பாரதி தமிழ்மொழியைச் செம்மைப் படுத்திய சாரதி’ என சுவாமி விபுலாந்தர் முழங்கினார்.
சுவாமி விபுலாநந்தர் 1933ல் பேராசிரியர் பதவியினைத் துறந்தார். சுவாமியவர்களது பிரிவு திருவேட்களத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களைப் பெரிதும் பாதித்தது. அம்மக்கள் அளித்த பிரியாவிடை மடலில் ‘ஏழைக்கிரங்கும் எந்தாய்,’ ‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்றறிந்த பெரியீர்;’எனக் குறிபிட்டிருந்தனர். இலங்கை திரும்பிய சுவாமி விபுலானந்தர் சிவானந்த வித்தியாலயத்தின் அதிபர் பதவியினையும் பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவியைத் திறம்பட நடத்திய சுவாமி விபுலானந்தர் சிறிய பாடசாலையின் அதிபர் பதவியை மனதார ஏற்றுச் சேவைசெய்தார். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அப்பரின் திருவாக்குக்கு ஏற்ப பணியினை மேற்கொண்டார். கிழக்கிலங்கை முழுவதிலுமுள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமையாளராகவும் செயற்பட்டார்.
பிரபுத்த பாரதத்தின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இமயமலைச் சாரலில் மாயாவதி ஆச்சிரமம் உள்ளது. அங்கிருந்து ‘பிரபுத்த பாரத’ என்ற ஆங்கில இதழ் மாதாமாதம் 1896ம் ஆண்டு தொடக்கம் வெளிவருகிறது. அந்த இதழ் தரமான வேதாந்த தத்துவங்களையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் தாங்கி வருவது. வாசிப்பவர்களது மனங்களைத் திருப்தியடையச் செய்வது. சுவாமி விபுலானந்தருக்கு ‘பிரபுத்த பாரத’ ஆங்கில இதழின் ஆசிரிய பீடத்தை அலங்கரிக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது.
சுவாமி விபுலானந்தர் 1939 ம் ஆண்டு ஆகஸ்ற் மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்டார். ஸ்ரீ;ராமகிருஷ்ண சங்கத்தின் அனுமதியுடன் இமயமலைச் சாரலில் உள்ள மாயாவதி ஆச்சிரமத்தை அடைந்தார்.
தமிழ் நூல்களில் புதைந்து கிடக்கும் அரிய கருத்துக்களை ஆங்கிலத்தில் பிரபுத்த பாரதம் தாங்கி வெளிவரத் தொடங்கியது. ‘பிரபுத்த பாரத மூலம் மறைந்து போன தமிழிசைக் கருவிகளான யாழ் வகைகளையும், இசை நுணுக்கங்களையும் பிரித்துத் தொகுத்து ஒழுங்கமைத்து உலகத்தவர் அறிந்திடச் செய்தார்.அடிகளார் மாயாவதி ஆச்சிரமத்தில் இருந்து மயிலை- சீனி. வெங்கடசாமி அவர்களுக்கு “இப்பொழுது தமிழ் நிதியத்தை வெளிநாட்டவருக்கு ஆங்கில மொழிமூலமாக அறிவிக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இருந்து சில மொழிபெயர்ப்புக்களைச் செய்து கொண்டி ருக்கிறேன்”; என எழுதியிருந்தார். சுவாமி விபுலானந்தர் சிறந்த ஆசிரியர். பேராசிரியர். சிறந்த கல்விமான்.
‘மனிதனில் உள்ள முழுநிறைவை விருத்தி செய்வதே கல்வி. கல்வியும் மனிதனின் விருத்தியுமே மனித வரலாறாகும்;’ என்று கூறிய கார்ல்மாக்ஸ்சின் சிந்தனையில் ஊறியவர். சிறந்த கல்விக் கட்டுரைகளை எழுதினார். தமிழ் மொழியிலுள்ள இலக்கிய வகைகளை மொழிமாற்றம் செய்து கட்டுரைகளை எழுதினார். அவர் தமது நண்பரொருவருக்கு நாலாயிரத்திவ்வியப் பிரபந் தத்திலிருந்து சில பகுதிகளை மொழிமாற்றம் செய்து கொண்டிருப்பதாய் எழுதியிருந்தார். பிரபுத்த பாரத இதழின் ஆசிரியராக 1941 வரை தொடர்ந்தார்.
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்.
இலங்கையில் பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சேர்.பொன். அருணாசலம், சேர்.பொன். இராமநாதன், கலாயோகி ஆனந்தக் குமாரசாமி முதலியோர் வலியுறுத்தியும் பாடுபட்டும் வந்தனர். அதன்பயனாக 1921ல் இலங்கைப் பல்கலைக் கழகக்கல்லூரி நிறுவப்பட்டது. 1941ல் இலங்கைப் பல்கலைக் கழகக்கல்லூரி பல்கலைக் கழகமாகத் தரமுயர்த்தப் பட்டது. ஆனாலும் ஒரு தமிழ்ப் பேராசிரியரை 1943ல் தான் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கென தமிழ்பேராசிரியராக சுவாமி விபுலாநந்தர் நியமனம் பெற்றார். இதனை ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்கமும் ஏற்றுக் கொண்டது.
சுவாமி விபுலாநந்தர் பேராசிரியராக வந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவரிடம் கற்ற க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம் ஆகிய இருவரும் விரிவுரையாளர்களாக இருந்தனர். திரு. சு. வித்தியானந்தன் கற்றுக் கொண்டிருந்தார். பின்னர் இவர்கள் ஒருவர்பின் ஒருவராக தமிழ்ப் பேராசிரியர் பதவியினை வகித்தார்கள். திரு. சு. வித்தியானந்தன் யாழ்ப்பணத்தில் பல்கலைக்கழகம் அமைந்த போது அதன் உபவேந்தராகப் பணியாற்றினார்.
சுவாமி விபுலாநந்தர் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுமானி (ஆ.யு) வகுப்பை 1944ம் ஆண்டு தொடக்கி வைத்தார். தமிழ் வித்துவான் வகுப்புக்களையும் 1946ல் தொடக்கி வைத்தார். சிங்கள மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் தமிழ் வகுப்புக்களை நடத்தினார். பல்கலைச் சேவையினைச் செய்து கொண்டு கல்விப்பகுதியின் பாடநூற் சபை, பரீட்சைச்சபை, கல்வி ஆராய்ச்சிக்குழு போன்னவற்றில் முக்கிய பங்கினை வகித்தார்.
இலங்கையின் இடைநிலைக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றினார். பள்ளிக்கூடங்களில் கலைத்திட்டத்தில் இசை ஒரு பாடநெறியாக சேர்ப்பதற்கு அரும்பாடு பட்டார். இசைக்கான பாடத்திட்டத்தினையும் அமைத்துக் கொடுத்தார். சுவாமி விபுலானந்தர் இறக்கும்வரை இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவே இருந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசை பற்றிய விரிவுரைகளை நடத்தி, இலங்கைப் பல்கலைக் கழகத்தில் யாழ்நூலாக வடிவமைத்தார். தமிழர் இசை பற்றி ஆராய்ந்து கண்ட முடிபுகளைக் கட்டுரைகளாக்கி பத்திரிகைகளில் வெளியிட்டு வந்தார்.
செந்தமிழ், தமிழ்ப்பொழில் ஆகிய இதழ்களில் கட்டுரைகள் வெளிவந்தன. தமது பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து செய்த ஆராய்ச்சியின் கண்ட முடிபுகளை யாழ்நூலாக எழுதிமுடித்தார்.; 1943 ஆண்டு ஆனி மாதம் யாழ்நூலை எழுதி முடித்துவிட்டார். அதனைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்துக்கு அனுப்பி விட்டார். இரண்டாம் உலகப்போர் போன்ற இடர்களினால் நூல் அச்சிடும் பணிகள் தாமதமாகின. அது 1947ல்தான் முடிவுற்றது. தனது மாணவர்களில் ஒருவரான வெள்ளைவாரணனார் யாழ்நூலுக்குச் சிறப்புப் பாயிரமும் எழுதி, கையெழுத்துப் படிகளை எழுதியும், ஒப்பு நோக்கியும் உதவி புரிந்ததையும் விபுலாநந்த அடிகள் குறிப்பிட்டுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் அரங்கேற்றம் செய்வதற்குரிய ஆயாத்தங்களைச் செய்தது.
சுவாமி விபுலானந்தர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது சம்பளம் பெற்றுக் கொண்டு சுகபோகமாக வாழ்ந்தவர்தானே என்று பலர் விமரிசித்தனர். அவர்களுள் ஸ்ரீஇராமகிருஷ்ண சங்கத்துறவிpயான சுவாமி நிஷ்காமானந்தரும் ஒருவர்;. அவரே கூறுகிறார். சுவாமி விபுலானந்தரும் சுவாமி நிஷ்காமானந்தரும் கடற்கரையில் பேசிக்கொள்கிறார்கள். சுவாமி நிஷ்காமானந்தர் “தங்களுக்குத் தமிழ்ப்பணி ஆற்ற ஆர்வமிருந்தால் தாராளமாக ஆற்றுங்கள். பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவோ அல்லது அத்தியட்சராகவோ இருங்கள். ஆனால் தாங்கள் ஏன் அவ்வளவு ஊதியம் பெறவேண்டும்.? நாம் துறவிகளல்லவா”? ஆத்திரத்துடன் சொற்கள் வெளிவந்தன.
அமைதியுடன் சுவாமி விபுலானந்தர் விடையளிக்கிறார். “நமது வளர்ப்புக் குழந்தையான சிவானந்த வித்தியாலயத்தைப் பேணி வளர்த்தெடுப்பதற்காகத்தான் ஊதியம் பெறுகிறேன். அங்கே உள்ள ஏழைமாணவர்களின் வயிற்றுப் பசிக்கும். அறிவுப்பசிக்கும் யார் உதவுவார்கள்?” அதனைக் கேட்ட சுவாமி நிஷ்காமானந்தர் விக்கித்துப் போகிறார். “பணியுமாம் என்றும் பெருமை: சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. என்பதற்கு இலக்கணமாக அடக்கம், அன்பு, அமைதி, பொறுமை இவையெல்லாம் ஓர் உருவெடுத்து என்முன் நிற்பதுபோல் அவர் காட்சியளித்தார்” என சுவாமி நிஷ்காமானந்தர் கூறுகிறார்.
சுவாமி தானே வருந்தி உழைத்த பணத்தை அநாதைகளுக்கு வழங்கினார். அவர் பவணத்தைக் கையால் தொட்டதே இல்லை. அவரது வங்கிக் கணக்குகளை இலங்கைப் பல்கலைக் கழகப் பதிவாளராக இருந்த ஏ.எம்.கே. குமாரசாமிதான் கவனித்துக் கொண்டார்.பண்டிதர் மயில்வாகனத்துக்குத் தந்தைவழிச் சொத்தாக கிடைத்த வீடும் வளவும் அவர் துறவு பூண்டதும் சமய சமூகப் பணிகளைச் செய்யும் நிலையமாக்கி அதனை நிர்வகிக்க தர்மகர்த்தாச் சபையையும் நியமித்திருந்தார். அத்தர்மகர்த்தாக்களின் பின் அச்சொத்து ஸ்ரீஇராமகிருஷ்ண சங்கத்தைச் சேரவேண்டும் என்று எழுதிவைத்து விட்டார். இன்று அவரது நினைவாலயமாகத் திகழ்வதை காரைதீவில் காணலாம்.
யாழ்நூல் அரங்கேற்றம்
1947 ஆம் ஜூன் மாதம் 5ம் 6ம் திகதிகளில் திருக்கொள்ளம்பூதூர்த் திருக்கோயிலில் அரங்கேற்றம் இடம்பெற்றது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் யாழ்நூல் அரங்கேற்றம் பற்றி தமிழ்ப் பொழில் பத்திரிகையில்
அறிக்கை ஒன்றை விடுத்தார். அதன் சுருக்கம் இவ்வாறுள்ளது.‘அருள்மிகு விபுலாநந்த அடிகளார் பதினான்கு ஆண்டுகளாக இடைவிடாது இயலிசை ஆராய்ச்சியினை நிகழ்த்தினார். அவர் நுண்ணிதிற் கண்டுணர்ந்த பழந்தமிழிசை நூன்முடிபுகளை ஒரு கோவைப்படுத்தி யாழ்நூலாக தமிழகத்திற்கு இயற்றி உதவியுள்ளார். நம் தமிழ்ச்சங்கச் சார்பில் வெளிவரும் இவ் யாழ்நூல் அரங்கேற்றம் நிகழும் சர்வசித்து வைகாசி உஉ, உங (5, 6 – 6 47) வியாழன், வெள்ளி இரண்டு நாட்களிலும் திருக்கொள்ளம்பூர்த் திருக்கோயிலிலே ஆளுடையபிள்ளையார் திருமுன்னர் நிகழவிருக்கிறது.
இவ்விரண்டு நாட் காலையிலும் அருண்மிகு அடிகளார் அவர்கள் சிவபுரியில் சுவாமி சுவாமி விபுலானந்தர் யாழ்நூலில் உள்ள இசைகளின் முடிபுகளை எடுத்துரைத்து விளக்குவார்கள். நண்பகலுக்கு மேல் புதுவதாக அமைக்கப்பெற்ற வீணைக்கருவிகளிலே அவர்கள் அராய்ச்சியிற் கண்ட இசை உருவங்கள் இசைத்துக் காட்டப் பெறுவ. இவ்வரங்கேற்றத்தை ஒட்டிய இயற்புலவர், சொற்புலவர்களும் இசைப்புலவர் இசையரங்கும் நிகழும். அன்பர்கள் இவ்விழாவினைச் சிறப்பித்தருள்வார்களாக. 05-06-1947 வியாழக்கிழமை சென்னை மாகாணக் கல்வி அமைச்சர் திரு.தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களின் தலைமையில் விழா தொடங்கியது. கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சர் நீ.கந்தசாமி, கோலூர் ஜமீந்தார் திரு. ராம.தி. சிதம்பரம் செட்டியார், டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரபாரதியார், போன்ற அறிஞர்பெருமக்கள் புடைசுழ்ந்து வந்தனர். யாழ்நூல் குறித்த கணக்குப்படி அமைக்கப்பெற்ற முளரியாழ், சுருதி வீணை, பாரிசாதவீணை, சதுர்த்தண்டி வீணை போன்ற இசைக்கருவிகளைச் சிலர் தாங்கி வந்தார்கள். திருக்கொள்ளம்பூதூர்த் திருக்கோயில் தெற்கு வாசல் ஊடாக அடிகள் பிரவேசித்தார்கள்.
ஒளவை துரைசாமிப்பிள்ளை அழகிய நாச்சியார் சேவடி பரவிய பாடலைப் பாடினார்கள். அரங்கேற்று மண்டபம் குதூகலித்தது. திருமுறை ஓதப்பட்டது. திரு. சிதம்பரம்செட்டியாரும், நீ. கந்தசாமி அவர்களும் வரவேற்புரையை நிகழ்த்தினார்கள். “யாழ்நூலாசிரியர் அவர்கள் தமது வாழ்வு முழுவதையும் தமிழன்னையின் திருப்பணி யொன்றிறற்கே உரிமை செய்து வாழ்பவர்”;. எனத் தலைவர் அவிநாசலிங்கம் செட்டியார் வலருணித்தார். விபுலானந்த அடிகள் யாழ்நூலின் வரலாற்றினையும், தாம் ஆராய்ந்து கண்ட உண்மைகளையும் விளக்கினார்.
மாலைநிகழ்வின்போது இசையறிஞர் க.பொ.சிவானந்தம் பிள்ளையவர்கள் பாரிசாத வீணையை இசைத்தார். அதில் சங்கராபரணம், அரிகாம்போதி, பிந்துவராளி, என்னும் நிறங்கள் பரவி கானமழை பொழிந்தது. சதுர்த்தண்டி வீணையில் மாயாமாளகௌளை, கானமூர்த்தி, காயகப்பிரியா, தவளாம்பரி, என்ற நிறங்களை இசைத்தார். சபை களைகட்டி ரசித்திருந்தது.அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க தலைவர் சிவானந்தம் பிள்ளை அவர்களுக்கு ‘வீணைவித்தகர்’ என்னும் பட்டத்தைப் பொற்பூவுடன் சூட்டினார்.
06-06-1947 வெள்ளிக்கிழமை அவை கூடியது. அடிகளாரின் அருந்திறனைப் பாராட்டி சோமசுந்தர பாரதியார், வித்துவான் துரைசாமிப்பிள்ளை போன்றோர் பேசினார்கள். இசைப் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி யாழ்நூலிற்காட்டும் அரிய இசைக் கருத்துக்களை விளக்கினார்கள். ‘வீணைவித்தகர்’; சிவானந்தம்பிள்ளை அவர்கள் யாழ்நூலில் குறிப்பிடப்பட்ட விதிப்படி அமைந்த சுருதி வீணையில் பண்டைத்தமிழர் இசை உருவாகிய ஏழ்பெரும்பாலைகளை கிரகசுகவரம் மாற்றியமைக்கும் முறையில் இனிமையாக வாசித்துச் சபையை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். “இது இறைவனின் திருவருளால் நிகழ்ந்தது”. என அடிகள் பலரிடமும் சொல்லி மகிழ்ந்தார்.
தொடரும் -
Sunday, July 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment