சாதனையாளர்கள்
சாம்பல்தீவு அழகிய கிராமம். நீர்வளம் மிக்கது. நிலவளம் கொண்டது. உயர்ந்த உள்ளங்களைக் கொண்ட மாந்தர்கள் வாழுமிடம். தொல்பொருள் என்பது பழங்காலத்துப் பொருட்கள். அவற்றையிட்டு ஆராய்வதை தொல்பொருள்ஆய்வு என்பார்கள். அந்த ஆய்வில் நாட்டங் கொண்டவர்தான் ‘சேமன்’ தம்பிராசா. அவர் பிறந்து வாழ்ந்த கிராமும் சாம்பல்தீவுதான்.
உப்புநீர்ச் சிற்றாறு ஒருபக்கம் ஊரும். கிழக்கே கடல். அலைவீசித் தென்றலை அனுப்பும். தென்னம்பாளைகள் வெடித்துச் சிரிக்கும். தென்னோலைகளைப் பிரித்துச் சூரிய ஒளி எட்டிப் பார்க்கும். கிளி, மைனாக்கள் சீட்டியடித்துக் குதூகலிக்கும். வீடுகளின் முற்றங்களில் றோசாச் செடிகள் பூத்துக் குலுங்கும். கனிகளைச் சுமந்து பலாமரங்கள் காற்றில் அசையும். மாமரங்கள் காய்த்துக் குலுங்கும். ககாய்கறித் தோட்டம் சிரித்துப் படுத்திருக்கும்.
பாடசாலை கிராமத்துக்குப் பெருமை தேடித்தருவது. அதிலே கற்கும் மாணவர்களால் ஊரின் புகழ்பரவும். சாம்பல்தீவு மகாவித்தியாலயம் அதனை நிறைவு செய்வதாக நிமிர்ந்து நிற்கிறது. எத்தனை அதிபர்களும், ஆசிரியர்களும் வந்தார்கள். தமது கடமையை முடித்துச் சென்றார்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தங்களது சேவையைச் செய்துவிட்டுத்தான் போனார்கள். ஆனால் அதிபர் யோகானந்தர் இவர்களைவிடவும் சற்று வித்தியாசமானவர். சாதனையாளர்கள் மற்றவர்கள் செய்வதையே சற்று வித்தியாசமாகச் செய்வார்கள். யோகானந்தர் அப்படிப் பட்டவர்தான். அவரும் சாதனை படைக்கப் புறப்பட்டவர்தான். ஆனால் அந்தச் சாதனையை மாணவர்கள் ஊடாகக்காண ஆசைப்பட்டார். பாடசாலையைப் பொறுப்பெடுத்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. பாடசாலை சோம்பலை விடுத்து விழித்துக் கொண்டது. இருபத்திநான்கு மணித்தியாலங்களைக் கொண்டது ஒருநாள். பாடசாலை எந்நேரமும் திறந்திருக்க வேண்டும் என்பது அவருடைய கொள்கை. பாடசாலை அனைவரையும் அணைத்துக் கொள்ளும் இடமாக அமையவேண்டும். பாடசாலையில் அக்கறையற்ற பெற்றோரையும், மற்றோரையும் ஈர்த்தெடுக்கும் இடமாக விளங்கவேண்டும்.
பழைய மாணவர்களையும் இணைத்து அவர்களது ஆற்றல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். பாடசாலையே தஞ்சம் எனக்கிடந்தார். பாடசாலை புதுப்பொலிவோடு நிமிர்ந்து நிற்கிறது. அதிபரில் சிறார்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர் கூறுவதும், செய்வதும் தங்களுக்காகத்தான். தங்கள் உயர்வுக்காகத்தான் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதிபரின் அறிவுரையும் செயற்பாடுகளும் மாணவர்களைக் கவர்ந்து விட்டது. ஆசிரியர்கள் பிள்ளைகளைக் கவர்ந்து விட்டனர். சாம்பல்தீவு மகாவித்தியாலயம் எந்த நாளும் இயங்கிக் கொண்டுதானிருக்கும். பாடசாலைகள் மூன்றாந்தவணை விடுமுறைக்காக மூடியிருந்தன
தலைமைத்துவம் என்றால் என்ன? தானாகக் கடமைகளை உணர்ந்து செய்வது தலைமைத்துவப் பண்பு. நல்லனவற்றைப் பிறர் செய்யத்தூண்டுவதும் தலைமைத்துவம்தான். சாம்பல்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் இதனை உணர்திருந்தார்கள். அவர்களும் தலைமைத்துவம் கொண்ட தொண்டர்களாக மாறிவிட்டார்கள். விடுமுறை நாட்களிலும் பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தது. மாணவர்கள் தாங்களே கற்றலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். பாடசாலைச் சுற்றுப்புறம் தூய்மை கண்டது. பூந்தோட்டம் அழகூட்டியது. பூங்கன்றுகளுக்கிடையில் கத்தரி, மிளாய், வெண்டி காய்த்துக் கொண்டிருந்தன. கொஞ்சநேரப் படிப்பு. பின்னர் விளையாட்டு என வழக்கப் படுத்திக் கொண்டார்கள். விளையாட்டில் விதிமுறைகள் உண்டு அவற்றுக்குத் தாங்களாகவே கட்டுப்பட்டு விளையாடினார்கள். கற்றல் என்பதும் தவம்தான். இவைகளும் ஒருவகைத் தவம்தான். சந்தோசம் கூத்திட்டது. குப்பை கூளங்கள் குழிகளில் நிறைந்து பசளையாகின. மாணவர்கள் பாடசாலைக்கு விருப்பத்தோடு வந்தார்கள்.
மாதங்களில் மார்கழி மாதம் மகத்தானது. மழையும் பனியும் கலந்து பொழியும். மழைத்தூறலும் பனியும் கலந்து குளிரைத் தடவிக் கொண்டிருந்தது. கோயில்களில் திருவெம்பாவை முடிந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள். அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் பத்தாம் வகுப்பில் படிக்கிறார்கள். அடுத்த வருடம் பதினோரம் வகுப்பு. அவர்கள் வகுப்பறைச் சுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பல மாணவர்கள் பூந்தோட்டத்தில் நின்றிருந்தார்கள். வழமைக்கு மாறாகக் கடல் இரைந்து கொண்டிருந்தது. “கடல் பொங்கி வருது. ஓடுங்கள்”. மக்களிற் சிலர் சத்தமிட்டார்கள். கால் போனபோக்கில் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். சல்லியில் உள்ள மக்கள் சாம்பல்தீவு வழியாக ஓடினார்கள். எல்லோரும் ஓடத் தொடங்கினார்கள். ஆத்திமோட்டைச் சந்தியைத் தாண்டினார்கள். “உயிர்தப்பினால் உப்பும் வித்துச் சீவிக்கலாம்.’. சொல்லியபடி சனங்கள் ஓடினார்கள். பெரியகுளம் மேட்டுப்பகுதியில் மக்கள் குவிந்திருந்தார்கள்.
மாணவர்களுக்குப் புதினமாக இருந்தது. “என்னடா செய்யிறியள். கடல் பொங்கி வருது. உயரமான பகுதிக்கு ஓடுங்க” யாரோ ஒருபெரியவர் கரிசனையோடு சத்தமிட்டு விரைந்தார். அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் மாணவர்களை உசார்ப் படுத்தினார்கள். அவர்களை ஒன்று கூட்டினார்கள். மக்களுக்குப் பின்னால் ஓடவைத்தார்கள். பாடசாலை வெளிக்கதவை மூடினார்கள். அவர்களும் சைக்கிளில் விரைந்தார்கள். சனங்கள் சாரிசாரியாக ஓடிக்கொண்டிருந்தார்கள். சனங்களை உயரமான இடங்களில் அனுப்பினார்கள். நேரம் பதினொரு மணியைத் தாண்டியிருந்தது. வெயில் சுட்டெரித்தது. தெருவெங்கும் மக்கள் கூட்டம். கடற்கரைப் பக்கம் போகமுடியாது. அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் சைக்கிளைத் திருப்பினார்கள்.
திருகோணமலை நகரை நோக்கி மிதித்தார்கள். விரைந்து செல்லமுடியாதிருந்தது. வீதிகளில் மக்கள் திரண்டிருந்தார்கள். பலரின் கண்களில் கண்ணீர் வெள்ளம். ஓலமிட்டு அழுதார்கள். உப்புவெளியைத்தாண்டி மட்டிக்களிக்கு வந்தார்கள். மட்டிக்களிப் பரவைக் கடல் வெறிசோடிக் கிடந்தது. கடல்நீரைக் காணவில்லை. மக்கள் கூட்டம் கடற்பரப்பினுள் பாய்ந்து செல்வதை அவதானித்தார்கள். பலர் கைகளில் மீன், நண்டு என நிறைந்து காணப்பட்டன. கடலுள் நீரில்லாததைப் பார்த்தார்கள். சற்று நேரத்தில் கடல் சீறியெழுந்து விரைந்து வந்தது. மக்கள் கூட்டம் முண்டியடித்து கரையேறி ஓடினார்கள். பலர் விழுந்து புரண்டார்கள்.
கடல்நீர் வேகமாகப் பின்வாங்கியது. கடலை நோக்கி மக்கள் மீண்டும் ஓடினார்கள். பயமறியாச் சிறுவர்கள் பாய்ந்து ஓடினார்கள். அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் எச்சரித்தார்கள். “கடலுள் போகவேண்டாம”; எனக் கத்தினார்கள். அதனை மக்கள் காதுகளில் வாங்கிக் கொள்ளவில்லை. போனவேகத்தில் கடல் வாரிச்சுருட்டித் திரும்பியது. மக்கள் பாய்ந்து கரைக்கு வந்தார்கள். வெகுவேகமாக வந்து கரைகளில் மோதியது. பலர் விழுந்து சுருண்டார்கள். அவர்களைச் சுருட்டி முட்டி மோதியது. ‘மக்களின் அறியாமையினாலும் பயத்தினாலும் அனர்த்தங்கள் அதிகரிக்கின்றன’. ஆசிரியர் வகுப்பில் கூறியதை நினைவு கூர்ந்தார்கள்.
மக்கள் ஓடிய வேகத்தில் முதியவர் இடறி வீழ்ந்து கிடந்தார். முதியவரை நோக்கி அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும ஓடினார்கள். அவரைத் தூக்கி ஓரமாக விட்டார்கள். இரண்டு மூன்று வயதுச் சிறுவர்களும் அனாதரவாக ஓலமிட்டார்கள். அவர்களைத் தூக்கி மக்கள் நின்ற இடங்களில் விட்டார்கள். கடல்நீர் நிறம் மாறியிருந்தது. நிலத்தின் தாழ்வான பகுதிக்குள் ஊடுருவிய நீர் வேகமாகக் கடலுள் இழுக்கப் பட்டது. அந்த வேகம் வீடுகளின் மதில் சுவர்களையும் பெயர்த்து வீழ்த்தியது. அவர்களது வாழ்க்கையில் இது ஒரு புது அனுபவம்.
“ ஸ்ரீவன்! நம்மூர் சனங்களைக் கவனிக்க வேண்டும். விரைந்து போவம்.. எங்கே அஸ்வர்”? அரவிந்தன் சத்தமிட்டான். “அதோ அஸ்வர்” காட்டினான். அஸ்வர் அந்த முதியவருக்கு உதவி செய்து கொண்டிருந்தான். கடல்நீர் கடலுக்குள் வடிந்தோடிக் கொண்டிருந்தது. வானொலிச் சாதனங்கள் நேரடி ஒலிபரப்புச் செய்து கொண்டிருந்தன. அவர்களது காதுகளில் ‘சுனாமி’ என்ற யப்பானியச் சொல் பதிந்து கொண்டது. அனைவரது வாய்களிலும் சுனாமி உலாவந்தது. யப்பானிய மொழிச் சொல்லுக்குச் சர்வதேச அந்தஸ்த்துக் கிடைத்து விட்டது. சைக்கிள்கள் சாம்பல்தீவை நோக்கிப் பறந்தன. கடற்கரையை அண்மித்த பகுதிகளைமக்கள் பாடசாலையில் நிறைந்திருந்தனர்.
அப்படியே சல்லியம்பாள் கோயிலடிக்குச் சென்றார்கள். அவர்கள் திடுக்கிட்டார்கள். என்ன கொடுமை. அவர்களால் அக்காட்சியைப் பார்க்கமுடியவில்லை. படகுகள் வீதிகளில் வீசப்பட்டுக் கிடந்தன.
அலைவாரி கரையில் மோதியவண்ணம் இருந்தது. கடற்கரையோரம் சின்னாபின்னமாகிக் காணப்பட்டது. எங்கும் கடல் சீற்றத்தின் எச்சங்கள் தெரிந்தன. தென்னைகள் சரிந்து கிடந்தன. வீடுகள் சிதைந்து குவிந்து கிடந்தன. தென்னஞ்சோலையாக விரிந்து கிடந்த கடற்கரை பாலைவனமாகப் படர்ந்திருந்தது. கடற்கரையில் மக்கள் கூட்டம். தங்கள் உறவுகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். பல உடலங்கள் கரையொதுங்கின. கடற்கரையோரமாக இருந்த வீடுகளை கடலலை அள்ளிக் கொண்டு போய்விட்டது. கோயில் முன்மண்டபம் அழிவுற்றிருந்தது. மூலஸ்த்தானம் அழிபடவில்லை. அம்பாள் சிலைமட்டும் அசையாமல் இருக்கிறது. அவர்களுக்கு அதிசயம். கையெடுத்துக் கும்பிட்டார்கள். “ஏனம்மா இந்தக் கொடுமை”? அரவிந்தன் இரந்தான்.
“ஸ்ரீவன்! இந்த அம்மன் பேராற்றல் வாய்ந்தசக்தி கொண்டவள். இராம இராவண யுத்தம் பற்றிப் படித்தோம் அல்லவா? நமது அதிபரும் ஆசிரியர்களும் கற்பித்ததை மறந்து விட்டாயா? நினைத்துப் பார். இராமரது வீரர்கள் சாம்பல்தீவில் அதாவது நமது ஊரில் முகாமிட்டிருந்தனர். விடியவும் போர் நிகழவிருந்தது. அன்று இரவு இராமன் இந்த அம்மனைப் பிரதிஸ்டை செய்தான். இந்த இடத்தில் இருத்திக் களப்பலி கொடுத்தான். அந்த அம்மன்தான் இவள். இவளது பேராற்றல் அளப்பெரியது. அதிகம் உக்கிரமுடையது. இவளது உக்கிரத்தைக் குறைப்பதற்காகத்தான் பாலம்போட்டாற்று அம்மனை நிறுவினார்கள். இது நமது மூதாihயர் வாய்வழி வந்த உண்மை. வருடாவருடம் வைகாசிமாதத்தில் உற்சவம் நடக்கும். அந்தக் களப்பலியை நினைவு கூரத்தான் இந்தக் கோயிலில் சேவலைக் கழுவில் ஏற்றுவார்கள்.” அரவிந்தன் இந்தச் சோகத்தின் போதும் தனக்குத் தெரிந்ததைக் கூறினான். ஸ்ரீவனுக்கு ஒரே ஆச்சரியம். அவனுக்குப் பயமாகவும் இருந்தது.
கோணேசர் கோயில் நேரே தெரிந்தது. கடற்கரை ஓரங்களில் உயிரற்ற உடல்கள் புதையுண்டு கிடந்தன. தூரத்தே சிலர் மீட்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
“தம்பிமார் அங்கால ஓடுங்கள். பயந்து போவிங்கள்.” பெரியவர்கள் எச்சரித்தார்கள். “ஐயா நாங்கள் சல்லியம்மனின் பிள்ளைகள். எங்களுக்குப் பயமாவது, நாங்கள் பயப்படுவதாவது. நமது மக்கள் செத்துக்கிடக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.” சிறார்களது பேச்சுப் பெரியவர்களது வாய்களுக்குப் பூட்டுப் போட்டது. “உங்க இஸ்டம். வாங்க.” அவர்களுடன் சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். கூடவே நண்பர்களும் உதவிக்கு வந்தார்கள். சில ஆசிரியர்களும், அதிபரும் வந்தார்கள். கடற்கரையைப் பார்த்தார்கள். அவர்களது கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. மீட்புப் பணியில் அவர்களும் பங்கு கொண்டார்கள். தனது மாணவர்களைக் கண்டதும் அதிபர் நெகிழ்ந்து போனார். இராணுவத்தினரும் பல்வேறு இளைஞர்களும் பங்கு கொண்டு உழைத்தார்கள்.
அனைவருக்கும் களைப்பு. தாகம் தலைக்கேறியது. கிணறுகளை எட்டிப் பார்த்தார்கள். பளிங்கு போன்ற தண்ணீர்; கருமையடைந்து தெரிந்தது. பார்க்கப் பயங்கரமாக இருந்தது. உப்பாகக் கரித்தது. வீடுகள் உருக்குலைந்து கூரையற்றுக் கிடந்தன. கிடுகுக்கூரை சிதைந்து அப்பால் சரிந்த மரங்களில் சிக்கியிருந்தது. தென்னை மரங்கள் சரிந்து கிடந்தன. இளநீர் குலைகளைக் கண்டார்கள். சிதைந்த வீட்டினுள் எட்டிப் பார்த்தார்கள். இரண்டு மூன்று கத்திகள் தெரிந்தன. எடுத்துக் கொண்டார்கள். இளநீரை வெட்டினார்கள். காப்பாற்றப் பட்டவர்கள் களைத்திருந்தார்கள்.
அனைவருக்கும் இளநீரைக் கொடுத்தார்கள். தாங்களும் உட்கொண்டார்கள். தொண்டு நிறுவனங்கள் வந்து சேர்ந்து கொண்டன. கரையோரக் கிராமங்கள் சோகத்தில் ஆழ்ந்து விட்டன. அரவிந்தன் மற்றவர்களுக்குச் சைகை காட்டினான். மூவரும் பாடசாலையை நோக்கி விரைந்தார்கள். மக்கள் வெள்ளம் பாடசாலையை நிறைத்திருந்தது. கரையோர மக்கள் பாடசாலையில் தஞ்சமாகினார்கள். அவர்களைப் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது.
சாம்பல்தீவு மகாவித்தியாலயம் சுனாமியினால் பாதிக்கப் படவில்லை. பயத்தினால் இடம் பெயர்ந்த மக்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டார்கள். அரவிந்தன் சுற்றிப்பார்த்தான். “அஸ்வர்! எங்கே ஸ்ரீவன்”?;. நமது வகுப்பு மாணவர்களைக் கூப்பிடு. வகுப்பறைகளில் தஞ்சமடைந்த மக்களைக் குடும்பவாரியாகப் பதிவு செய்வோம். விரைவாகச் செய்வோம். சரியா”? மாணவர்களைப் பாடசாலைக்கு வரும்படி செய்தி அனுப்பியாகிவிட்டது. பல மாணவர்கள் வந்துவிட்டார்கள். சாரணர்கள் தங்கள் சீருடையில் வந்தனர்.
மாணவிகள் பதிவுகளை மேற்கொண்டார்கள். “இயற்கையினால் நமது மக்கள் அகதிகளாக்கப் பட்டுவிட்டார்கள். அவர்களுக்கு உதவுவோம். புறப்படுவோம்..” பாடசாலையில் இருந்த மண்வெட்டிகள் வெளியில் வந்தன. பொருத்தமான இடங்களில் கழிவுகள் போடுவதற்கான குழிகள் அமைந்தன. தொட்டிகளில் தண்ணீர் நிரம்பியது. கழிவறைகள் சுத்தமாக்கப் பட்டன. பல மாணவர்கள் கிராமத்தின் வீதிகளில் வலம் வந்தார்கள். மக்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உணவுப் பார்சல்கள் தயாராகின.
மேற்குவானம் சோகத்தால் சிவந்திருந்தது. மக்கள் துயரில் பங்குகொண்டது போல் சூரியன் அழுது வடிந்து கீழிறங்கியது. இருள் சூழ்ந்து கொண்டது. அரவிந்தன் தலைமையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. மின்வெளிச்சம் பரவியது. மாணவிகளுக்கு உதவியாக மாதர்சங்க உறுப்பினர்களும் தேநீர் தயாரித்தார்கள். அஸ்வர் பெருங்கூட்டம் புடைசூழ உணவுப் பார்சல்களோடு வந்தான். ஸ்ரீவன் உடுதுணிகளை அள்ளியவாறு இளைஞர் கழகத்துடன் வந்தான். அபயபுர சிங்கள மகாவித்தியாலய் மாணவரணி வந்தது. அவர்கள் பாய்களும் போர்வைகளும் கொண்டுவந்தனர். பதிவுகளைப் பரிசீலித்தார்கள். ஏறத்தாழ இருநூற்று ஐம்பத்தைந்து குடும்பங்கள் அகதிளாகி இருந்தனர். பதிவுகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளித்தார்கள்.
உணவுப்பொதிகளைப் பகிர்ந்தார்கள். வாளிகளில் தண்ணீர் நிறைத்துக் கொடுத்தார்கள். முதியோர்களை ஆதரித்து உபசரித்தார்கள். தாய்மார்களை அன்புடன் போற்றினர். அதிபர் அப்போதுதான் களைத்து வந்து சேர்ந்தார். அனைத்தையும் உற்று நோக்கினார். அவருக்குப் பெருவியப்பாக இருந்தது. சந்தோசம் அவரது களைப்பைப் போக்கியது. “இவற்றைவிட எனக்கென்ன வேண்டும். எனது மாணவர்கள் சாதனையாளர்கள்தான். தாமாகவே இயங்கும் வல்லமை பெற்றவர்கள்.” மாணவர்களது சேவை அவரது உள்ளத்தைத் தொட்டது. அவரை அறியாமலேயே கண்கள் பனித்தன.
யாவும் கற்பனை.
1 comments:
திரு.கேணிப்பித்தன்.
வணக்கம்.
தங்கள் தளம் பார்வைக்குக் கிடைத்தது.
வாழ்த்துக்கள்.
புதிய பதிவுகலை நேரடியாகவும் எனக்கு அனுப்புங்கள்.தவறவிடாது பார்க்கலாம்.
நட்புடன்,
முல்லைஅமுதன்.
mullaiamuthan@gmail.com
Post a Comment