Sunday, April 25, 2010

சாதனை படைத்தவர்கள்

“சீனாவுக்கும் எங்கள் ஊருக்கும் என்ன தொடர்பு? ஏன் சீனக்குடா என்று பெயர்வந்தது”. ஆதவன் பாடசாலையின் எல்லையில் நின்று யோசித்தான். பாடசாலையின் எல்லையைக் கடல் தழுவிக்கொண்டிருந்தது. நிலப்பரப்பினுள் கடல்நீர் விரல்களை நீட்டிக் குடைந்து குடாக்களை உருவாக்கியிருந்தது.

அதில் ஒன்றுதான் இந்தச் சீனக்குடா. திருகோணமலையின் இயற்கைத் துறைமுகத்தின் மேற்குக் கரையோரத்தில் சீனக்குடா சிதறிக்கிடக்கிறது. குடாக்கடலின் ஓரமாக சமனற்ற நிலப்பரப்பு. அங்குதான் சீனக்குடா தமிழ்வித்தியாலயம் குந்தியிருக்கிறது.


“பிரித்தானியர் எண்ணைய்க் குதங்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள். வேலைசெய்வதற்காக சீனாவிலிருந்து வந்தவர்கள் முகாமிட்டிருந்த பகுதி சீனக்குடாவாகியது”. யாரோ ஒரு பெரியவர் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டான். சிறியஅலைகள் கரையில் மோதிக் கொண்டிருந்தன. சிறு நண்டு கரைமீது படமொன்று வரையும். அலை வந்து மெதுவாக அழித்தோடிப் போகும்.. அவன் வாய் முணுமுணுத்தது.

ஆதவன் அதனை ரசித்துக் கொண்டிருந்தான். நுரைகள் கரையில் மாலைகளாகப் படிந்திருந்தன. அவை அடுக்கடுக்காய்த் திரண்டு கிடந்தன. எத்தனை அலைகள்.? ஆலைகள் எழுந்து வருவதும் போவதுமாக இருந்தன, எழுவதும் மடிந்து சுருண்டு புரள்வதுமாகக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. ஜூன், ஜூலை வந்தாலே ஒரு பயம் தழுவிக் கொள்ளும். இலங்கைத்தீவில் இம்மாதங்களில்தான் வன்செயல்கள் அதிகரிக்கும். அகதிகளாக மக்கள் இடம்பெயர்ந்து நலிவுறுவதும் இம்மாதங்களில்தான். “எத்தனைமுறை நாங்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்றோம். இனி ஓடுவதற்கு இடமும் இல்லை. வாழ்ந்தால் இங்கேயே வாழ்ந்து மடிவோம். ஓற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும்”. அவனது சின்னமனதில் சமாதானத்தின் தேவை புகுந்து கொண்டது.


ஆழ்ந்து யோசித்தான். “மாணவ சமுதாயம் விழித்துச் செயற்பட்டால் இந்த நாட்டைச் சொர்க்கமாக்கலாம். முயற்சித்தால் என்ன? சரி விளையாடிப் பார்ப்போம்”. தனது நண்பர்களை எண்ணிக் கொண்டான். தலையைத் திருப்பிக் கண்களை மேயவிட்டான். கண்களுக்கெட்டிய தூரம்வரை அவனது பார்வை பாய்ந்தது. விளையாட்டு மைதானம் விரிந்து கிடந்தது. சிறுவர்கள் காலையிலும் மாலையிலும், விளையாடுவார்கள். கடல் துள்ளிக்குதித்து அலைகளை வீசும். மென்படையை அலைகள் கரைத்துச் செல்லும். சிறுகற்களைக் கரையில் உருட்டிவிடும். கரையில் நின்றவாறே பாடசாலையைப்


பார்த்தான். பாடசாலை பழைய கட்டிடங்களோடு வயது முதிர்ந்து கிடந்தது. பற்றைகள் புடைசூழ கட்டிடங்கள் ஒதுங்கி ஓரமாகச் சிதறிக்கிடந்தன.

இரவு வேளைகளில் பாடசாலையினுள் பலர் வருவார்கள். தங்கி பாடசாலையை அசுத்தமாக்குவார்கள். அப்படியே சென்று விடுவார்கள். அதனை நினைந்து வருந்தினான். “எங்கள் பாடசாலைக்கு ஒரு விடிவு வாராதா? ஒரு புறம் துறைமுகம். ஓருபுறம் பிரித்தானியரால் அமைக்கப் பெற்ற எண்ணெய்க் குதங்கள் தெரிந்தன. பிறிமா தொழிற்சாலை நிமிர்ந்து நின்றது.

சீமேந்துத் தொழிற்சாலை, விமானப்படைத்தளம். புகைவண்டி நிலையம். குறிஞ்சியும், நெய்தலும் குலவி மகிழுமிடம். மூவின மக்களும் சேர்ந்து வாழுமிடம். அழகான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள பாடசாலை கல்வியில் பின்தங்கியுள்ளதே.” அவன் உள்ளத்தில் ஏக்கம் குந்திக்கொண்டது.

“ஒரு நல்லகாலம் வராமலா போகும். வரும் காத்திருப்போம்.” முணுமுணுத்தான். விளையாட்டுத் திடல் ஒப்புரவாக அமையவில்லை. கிறேவல் சார்ந்த மலைச்சாரல். விளையாடுவதற்கேற்ற திடலாக இல்லை. விளையாடும் போது பலமுறை விழுந்திருக்கிறான். சிறுவர்கள் விழுந்து காயப்பட்டும் இருக்கிறார்கள். தூரத்தில் சைக்கிள் தெரிந்தது. அன்வர் வந்து கொண்டிருந்தான். கூடவே அன்ரனும் வந்தான். அவர்களும் நல்ல சிந்தனையுடையவர்கள். மூவரும் நண்பர்கள். பத்தாம் வகுப்பில் படிக்கிறார்கள். புரட்சிகரமான சிந்தனைகளை உடையவர்கள்.

“ஹாய்..ஆதவன!; தனிமையில் என்ன யோசிக்கிறாய்”?. அன்வர் சைக்கிளை நிறுத்திவிட்டு பக்கத்தில் வந்து கொண்டே கேட்டான். “நமது பாடசாலையின் நிலையை எண்ணிப் பார்த்தேன். நமது ஊரில் இருந்து பற்றுள்ள ஒருவனாவது நன்றாகப் படிக்கவேண்டும். நமது பாடசாலைக்கு ஆசிரியராக வரவேண்டும். அப்போதுதான் நமது பாடசாலை விழித்துக் கொள்ளும். இதனை நமது ஆசிரியர்கள் அடிக்கடி சொல்வதை நினைத்துப்பார். நாம் படித்து இப்பாடசாலையில் ஆசிரியராக வந்தால்தான் நமது பாடசாலையை உயர்த்தலாம். ஆனால் படிப்பதற்கு ஏற்ற வசதியில்லை. நமது பெற்றோரும் நம்மைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அவர்கள் கடலுக்குப் போவார்கள். வேலை முடிந்ததும் வருவார்கள். கடல்தான் அவர்களுக்குத் தஞ்சம். நாம் படிக்கவேண்டும். அதுதான் யோசிக்கிறன்.”

“எங்களுக்கும் அதுதான் யோசனை. என்ன செய்யலாம்.”? அன்வரும், அன்ரனும் ஒரே குரலில் கூறினார்கள். நடந்து கொண்டே பாடசாலை வளவினுள் வந்தார்கள். பாடசாலை விளையாட்டு மைதானத்தின் ஓரமாக வேம்பு நிழல்பரப்பிக் கொண்டிருந்தது. அதற்கப்பால் ஆசிரியர் விடுதியிருந்தது. வேப்பமரத்தடியில் மரக்குத்திகள் கிடந்தன. மரக்குத்திகளில் இருந்தார்கள். வேம்பு பூத்துக் கலகலத்தது. இலைகள் காற்றில் அசைந்து இசையெழுப்பிக் கொண்டிருந்தன. நேரே பார்த்தார்கள். “அன்வர்! அந்த விக்ஸ் மரத்துக்கு எத்தனை வயதிருக்கும்? சொல். பார்க்கலாம்.?” ஆதவன் வினவினான்.

“சுமார் முப்பத்தாறு இருக்கலாம்’
“எப்படிச் சொல்வாய்” அன்ரன் கேட்டான்.
“இந்தப் பாடசாலை ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திரெண்டில் கட்டப்பட்டது. அப்போது நடப்பட்டிருக்கலாம். அதுதான் சொன்னேன். இது ஒரு ஊகந்தான்”.
‘பரவாயில்லையே. உனக்கும் மூளை வேலை செய்யுது.” ஆதவன் சிரிப்போடு சொன்னான்.“ இதுதானே கூடாது. நக்கல் அடிக்காதே” சந்தோசமாக உரையாடினார்கள். “அன்வர்! நான் சொல்வதைக் கேள். நாம் படிக்க வேண்டும். நமது கிராமத்தில் எழுச்சியைக் காணவேண்டும். அதற்குப் பல தியாகங்களைச் செய்யவேண்டும்.”

“என்ன செய்யவேண்டும்”. அன்ரன் வினவினான் “பாடசாலைக்குப் புதிய அதிபர் வந்திருக்கிறார். அவரிடம் நல்ல திட்டமுள்ளது போல் தெரிகிறது. நமது ஆதங்கத்தை அவரிடம் சொல்வோமா? அவரைச் சந்திப்போமா?’ அன்வர் உற்சாகமாகச் சொன்னான். “நல்ல விசயம்தான். அதற்கு முதல் எங்கட ரீச்சர்மார் சொன்னதைச் செய்வோமா? செய்தால் புதிய அதிபருக்கு நம்மீது நம்பிக்கை பிறக்கும்” ஆதவன் உசாரூட்டினான்.

“ ரீச்சர்மார் என்ன சொன்னவங்க.” அன்வர் தெரியாதவன்போல் கேட்டான். “இதைக்கூட நீ நினைவில் வைக்கவில்லை. எப்படி படிக்கப்போகிறாய்?. எத்தனைநாள் முதலிருந்த அதிபர்களும், நமது ரீச்சர்மார்களும் சொல்லியிருக்கிறார்கள். இது நமது பாடசாலை. பாடசாலையைச் சுத்தமாகவும், அழகாகவும் வைக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். இரவு வேளையில் பாடசாலையில் வந்து படியுங்கள். பக்கதுணையாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் படித்தால் ஊர் முன்னேறும். என்று எவ்வளவு புத்திமதி கூறியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும்தானே சொல்லுவார்கள். நாங்கதான் கேட்பதில்லை. வீட்டிலும் படிக்கச் சொல்வார்கள். நமக்குத்தான் வீட்டில் படிக்க வசதியில்லை. நாங்களும் யோசிக்க வேணும்..” ஆதவன் கவலையோடு கூறினான்.

“ஆதவன்! நடந்தவற்றை மறப்போம். நடக்கப்போவதையிட்டு யோசிப்போம். நாளைக்குச் சனிக்கிழமை. ரீச்சர்மார் சொன்னவற்றைச் செயலில் காட்டுவோமா? நமது பாடசாலை பற்றைகளில் மறைந்துள்ளது. எங்கும் குப்பை கூளங்கள். அவற்றை முதலில் துப்பரவு செய்வோமா? சிரமதானம் செய்தால் என்ன? முதல் முயற்சியாக மேற்கொள்வோமே. நீ என்ன சொல்கிறாய்”? அன்வர் விளையாட்டகச் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொண்டான் ஆதவனுக்கு உற்சாகம் பிறந்து விட்டது. “சரி வாங்க. முதலில் நமது ரீச்சரிடம் ஆலோசனை கேட்போம்.” ரீச்சரிடம் ஓடினார்கள். “என்ன ஓட்டப்போட்டி நடக்கிறது?” ரீச்சர் உமா விளையாட்டாகக் கூறினார்.

“ரீச்சர்! இனி ஓட்டப்போட்டிதான். உங்கட ஆலோசனைதான் தேவை.” உமா அவர்களது மன உறுதியைப் புரிந்து கொண்டார். அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார். “என்ன விசயம். சொல்லுங்க.” தங்கள் முடிவைச் சொன்னார்கள். உமா இந்த உலகத்தில் இல்லை. “ஆதவன் இது உங்களது வழமையான விளையாட்டுத்தானே?. விளையாடுவதற்கும் ஒரு எல்லையுண்டு. நீங்கள் நல்லா யோசிக்க வேண்டும். நமது சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். என்ன? நான் சொல்வது புரிகிறதா”?. உமா சற்று அழுத்தமாகவே கூறினார்.

“ரீச்சர். இவ்வளவு நாளும் விளையாடினோம்தான். ஆனால் இப்போது விழித்துக் கொண்டோம்.. எங்களை வழிநடத்துங்கள்.” அவர்களது குரலொலி உமாவை சிறைப்பிடித்து விட்டது. “ஆதவன், அன்ரன், அன்வர்! விளையாட்டுத்தான். விளையாட்டு மூலம் சாதனை படைக்கலாம். வெறும் விளையாட்டு, கல்வி இல்லை. ஆனால் விளையாட்டில்லாமல் கல்வி இல்லை. இறைவனே திருவிளையாடல் மூலம்தான் மனிதனுக்கு வாழ்வை விளக்குகிறார். உங்களுக்கு வாழ்த்துக்கள்.” அவர்களை அமரச்சொன்னார். கதிரைகளில் இருந்தார்கள். எல்லா வழிவகைகளையும் விளக்கினார். ஆசிரியர்கள் என்பவர்கள் கல்வி உளவியலைக் கற்றவர்கள். அதனைச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பரீட்சித்துப் பார்ப்பவர்கள். உமா நல்லதொரு ஆசிரியர். எங்கு தட்டினால் இயந்திரம் இயங்குமோ, அங்கு தட்டிவி;ட்டார். மாணவர்கள் பம்பரமானார்கள்.


நேரம் மாலை ஆறுமணி. இருவரும் கோயிலுக்கு ஓடினார்கள். பூசை நடந்து கெண்;டிருந்தது. குருக்கள் திருக்குமரன் வாழ்த்தினார். நண்பர்களிடம் செய்தி பரிமாறப் பட்டது. பள்ளிவாயில் மௌலவி அமீரலியிடம் ஆலோசனை பெறப்பட்டது. அவர் ஓரு புன்னகையை மட்டும் உதிர்த்தார். “நல்லது நடக்கும்” என்றார். பங்குத் தந்தை மரியசேவியரிடம் ஓடினார்கள். செய்தியைக் கேட்டதும் அவரது உள்ளம் புளகாங்கிதம் அடைந்தது. “நாளை அங்கு உங்களில் ஒருவனாக நிற்பேன்”; என்றார். இரவு எட்டு மணி விகாரைக்கு ஓடினார்கள். தர்மானந்த தேரர் வரவேற்றார். அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “உங்களால் முடியும். முயற்சி திருவினையாக்கும். நாளைக்குப் பார்ப்போம்.” என்றார். வணக்கம் கூறிப் புறப்பட்டார்கள். செய்தி காட்டுத் தீபோல் ஊரெங்கும் பரவியது.. மாணவர்கள் செய்தி காவிகள். அவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் சாதனை படைக்கலாம். ஆதவனும் அன்வரும் சாதனை படைக்கப் புறப்பட்டு விட்டார்கள்.

திருக்கோணமலைத் துறைமுகம் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. காலைநேரம் அற்புதமாகப் பரந்தது. ஆதவனும் அன்வரும் பாடசாலையை நோக்கி வந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதிபர் பத்மசீலன் அதிகாலையிலேயே வந்து விட்டார். அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவரைச் சூழப் பலர் நின்றிருந்தார்கள். அதிபரைக் கண்டதும் பயமாக இருந்தது. அவரது பக்கத்தில் சென்றார்கள். “சேர் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் சொல்லாமல்....” இழுத்தார்கள். “எல்லாம் எனக்குத் தெரியும். ரீச்சர் உமா அறிவித்தார். பெரிய சந்தோசம். நான் யோசித்ததை நீங்கள் சாதித்துவிட்டீர்கள்”. அவர்களது தலைகளைத் தடவிவிட்டார்.

அவர்களுக்கு உச்சி குளிர்ந்தது. உமாவுக்குச் சந்தோசமாக இருந்தது. சொல்லி வைத்தாற்போல் அனைத்துச் சமய குரவர்களும் வந்தார்கள். அதிபரோடு சேர்ந்து அவர்களை வரவேற்றார்கள். சமய குரவர்கள் ஆசிர்வதித்துச் சிரமதானப் பணியைத் தொடங்கி வைத்தார்கள். தர்மானந்த தேரர் வாழ்த்தினார். பங்குத்தந்தை மரியசேவியர் வாழ்த்தினார். மௌலவி அமீரலி ஆசிர்வதித்தார். குருக்கள் திருக்குமரன் பாராட்டி வாழ்த்தினார். விளையாட்டு மைதானத்தில் இவ்வளவு சனக்கூட்டத்தை இன்றுதான் உமா ரீச்சர் பார்த்தார். எப்படி இம்மாணவர்களால் ஒரு இரவுக்குள் சாதிக்க முடிந்தது. மாணவர் சமுதாயம் வலிமைமிக்கது. அவர்கள் நினைத்தால் உலகை மாற்றி அமைக்கலாம். அவர்களிடம் ஆற்றல்கள் நிறையவே உண்டு. அதனை அவர்கள் உணர்ந்து கொண்டால் உலகம் உயர்வு கொள்ளும். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது அனைவரதும் கடமையாகும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாடசாலை வளவினுள் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்புகாமி புள்டோசருடன் வந்தார். விளையாட்டு மைதானம் ஒப்புரவானது. கதிர்காமத்தம்பி முதலாளியும் காதர் முதலாளியும் உணவுப் பொட்டலங்களோடு வந்தார்கள். பல நிறுவனங்கள் வந்திறங்கின. பிஸ்கற், குளிர்பானங்கள் பரிமாறப்பட்டன. விமானப்படையதிகாரி வட்டுகொட வந்தார். பார்வையிட்டுச் சென்றார். சற்று நேரத்தில் நூற்றுக்கணக்கான படையினர் குவிந்தனர். மக்கள் அனைவரும் மனிதர்கள்தான் என்ற தத்துவம் மிளிர்ந்தது. பழைய கட்டிடங்கள் புதுவடிவம் பெறத் தொடங்கின. பிள்ளைகளின் கிறுக்கல்கள் ஓடிமறைந்தன. பற்றைக் காடுகள் பறந்து விட்டன. பாடசாலை புதுமைக் கோலத்தில் நின்றது.

அனைவரும் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இனபேதம் அங்கு இல்லை. சந்தோசம் கும்மாளமிட்டது. தர்மானந்ததேரரும், திருக்குமரன் குருக்களும். பங்குத்தந்தை மரியசேவியரும், மௌலவி அமீரலியும் சந்தோசப் பட்டார்கள். இப்படியே நமது நாடு இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். நாமும் இந்தச் சமாதானத்துக்காகத்தானே சேவை செய்கிறோம். சிறுவர்களின் துணிச்சலையும் ஓற்றுமையையும் பாராட்டினார்கள். அயலிலுள்ள சிங்கள மகாவித்தியாலயம் உள்ளது. கபிலதான் மாணவ தலைவன். கபில தலைமையில் மாணவரணி வந்தது. தீபிகா தலைமையில் மாணவியர் வந்து சூழ்ந்தனர். ஆவர்களும் சிரமதானப்பணியில் ஈடுபட்டுழைத்தார்கள். ‘இது நமது நாடு. நமது பாடசாலை. நூம் ஒருதாய் மக்கள்’ என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது.

பகல் உணவுத் திட்டம் பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும் சமைப்பதற்கேற்ற கட்டிடம் இல்லை. அதனை அதிபர் ஒரு நிறுவனத்திடம் கேட்டிருந்தார். ஏற்ற ஒழுங்குகளையும் செய்திருந்தார். ஆனால் எப்போது கட்டப்படும் என்பது தெரியாதிருந்தது. சிலவாகனங்கள் வந்துநின்றன. பலர் இறங்கி வந்தார்கள். எடுப்பான நடையோடு சூரியா நடந்து வந்தார். சூரியாவின் வரவு அனைவரையும் கவர்ந்தது.

அதிபர் வரவேற்று அழைத்து வந்தார். சமய குரவர்கள் வந்து ஆசிர்வதித்து வரவேற்றார்கள். சூரியா பிரமித்துப் போனார். தன்னை இவர்கள் வரவேற்பதா?. சூரியா தன்னைத் தானே உயர்த்திக் கொண்டது கிடையாது. வலக்கை கொடுப்பதை இடக்கை அறியக் கூடாதென்ற புனிதக் கொள்கையைத் தன் கொள்கையாகக் கொண்டவர். அதிர்ந்து போனார். தர்மானந்த தேரர் வந்து வாழ்த்தினார். பங்குத்தந்தை போற்றினார். அனைத்துச் சமய குரவர்களும் பாராட்டினார்கள். இந்தப் பெரியவர்கள் போற்றுவதற்குத் தான் தகமையுள்ளவாரா? மனதினிலே கேள்விகளைக் கேட்டுக் கொண்டார். அவருக்குச் சங்கடமாக இருந்தது. எனினும் அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

எந்த நேரமும் சூரியாவின் முகத்தில் ஒரு புன்னகை குந்தியிருக்கும். அந்தப் புன்னகையை வீசியவாறு நடந்து வந்தார். பாடசாலையைப் பார்த்ததும் சூரியாவுக்கு அதிர்ச்சியான ஆனந்தம் பொங்கியது. கூடவே எஞ்ஜினிர சிவலிங்கமும்; வந்திருந்தார். கட்டிடப் பொருட்களும் வந்திறங்கின. பெற்றோர்களுள் மேசன்மார் இருந்தார்கள். அத்திவாரம் வெட்டப்பட்டது. சமய குரவர்கள் சேர்ந்து வாழ்த்த அடிக்கல்லை சூரியா நாட்டிவைத்தார். அப்போதும் சூரியா மலர்ந்த முகத்துடனேயே இருந்தார். வந்திருந்த பிரமுகர்களும் நாட்டினார்கள். கட்டு வேலைகள் தொடங்கின.

குழுக்களாகப் பிரிந்து செயற்பட்டார்கள். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு செயற்திட்டத்தில் ஈடுபட்டது. பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் வந்திருந்து செயற்பட்டார்கள். பெற்றோர் இவ்வாறு செயற்பட்டது இதுதான் முதற்தடவை. அனைவருக்கும் ஆச்சரியம். சந்தோசம் கலந்த நிகழ்ச்சியாக அமைந்தது. பற்றைகள் படர்ந்து வேலி உடைந்து கிடந்தது. பற்றைகள் அகற்றப்பட்டன. பாடசாலையின் வேலி செப்பனிடப்பட்டது. “அமுதன். அடுத்து நமது திட்டப்படி பாடசாலையைச் சுற்றி நிழல்தரு மரங்களை நட்டால் என்ன?”அழகாக இருக்கும். அத்துடன் நிழலும் கிடைக்கும்.” ஆதவன் அமுதனின் காதுகளில் ஓதினான். பிள்ளைகளின் காதுகளிலும் புகுந்து வந்தன. சிங்கள மகாவித்தியாலய மாணவர்களும் மரக்கன்றுகளைக் கொண்டுவந்தார்கள். மரக்கன்றுகள் வந்து குவிந்தன. மா, பலா, வாழை. தேக்கு, வேம்பு, பப்பாளி, தோடை என அனைத்து மரக்கன்றுகளும் குவிந்தன.

“எப்படி இக்கன்றுகளைப் பெற்றீர்கள்.? எவ்வளவு செலவாகியிருக்கும்”. சூரியா பிள்ளைகளிடம் வினவினார். “எங்களுக்கு ஒரு சதமும் செலவில்லை. உங்கள் நிறுவனத்தினர் இரண்டு மாதங்களுக்குமுன் எமது பாடசாலைக்கு வந்திருந்தார்கள். வீட்டிலும் பாடசாலையிலும் மரக்கன்றுகளை வளர்க்கும்படி அறிவுறுத்தினார்கள். மரக்கன்றுகளை இளநீர்க் கோம்பைகளில் வளர்க்கும்படி வழிகாட்டினார்கள். பாடசாலையில் வேலியில்லை. வீடுகளில் வளர்த்தோம். பொழுது போக்காகவும் இருந்தது. இப்படிச் செய்வதன் மூலம் மரக்கன்றுகளை வளர்க்கவும் கற்றுக் கொண்டோம்.” விளக்கினார்கள். “என்ன கற்றுக் கொண்டீர்கள்? சூரியா குறுக்கிட்டார். “ மாணவர்கள் பதிலளித்தார்கள்.

“சிறந்த விதைகளைத் தேர்ந்தெடுத்தோம். கோம்பைகள் அல்லது அளவான பொலித்தின் உறைகளைத் தேடி எடுப்போம். அதனுள் வளமான மண்ணையிட்டு விதைகளை நடுவோம். அதனைக் கொப்பியில் பதிந்து கொள்வோம். திகதியையும் குறித்துக் கொள்வோம். தண்ணீர் விடுவோம். முளை வருவதை அவதானித்துக் குறிப்பெழுதுவோம். இலைகள் துளிர்விடுவதைப் பார்க்கச் சந்தோசமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்றுகள் உள்ளன. ஓவ்வொருவரும் ஒருவகை மரக்கன்றுகளைத்தான் வளர்க்கிறோம். வேண்டியபோது மரக்கன்றுகளைப் பரிமாறிக் கொள்வோம். கற்றலும் நடக்கிறது, பொழுது போக்குடன் செலவுக்கு எமக்குப் பணமும் கிடைக்கிறது. இது மிகுந்த பயனுடைய திட்டம். இதனைத் தொடர்ந்து உங்களது நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். இது எமது வேண்டுகோளாகும்.” ஒரு மாணவி கேட்டுக் கெண்டார். “தனியாருக்குப் போகும் பணத்தை படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுப்பதால் படிப்புச் செலவைச் சமாளிக்கலாம். அல்லவா”?. இன்னுமொரு மாணவி பதிலிறுத்தாள். சூரியாவுக்குப் பெருமையாக இருந்தது.

மாணவர்களுடன் சூரியாவும் சிரமதானப் பணியில் இறங்கிவிட்டார். ஒரு சிறந்த தொண்டன்தான் தலைவனாக முடியும். இதனை அனுபவத்தில் கண்டவர். அதனால் மாணவர்களுடன் சேர்ந்து அவர்களைக் கலகலப்பாக்கித் தானும் ஈடுபட்டார். பாடசாலை வளவு, கட்டிடங்கள். சுற்றுச்சூழல் அழகு பெற்றது. அன்றைய நாளை நினைவு கொள்ளவேண்டும். அதிபர் பத்மசீலன் வந்தார். சூரியாவை மாமரக் கன்று ஒன்றை நடும்படி கேட்டுக் கொண்டார். சூரியாவிடம் மரக்கன்று கொடுபட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் கைகளைத் தட்டினார்கள். பெரும் ஆரவாரத்தோடு சூரியா மரக்கன்றை நட்டார். சமயகுரவர்களும் ஆளுக்கொரு மரக்கன்றுகளை நட்டார்கள். மரக்கன்றுகளை எப்படி, எங்கே நடுவதென்று திட்டமிட்டு வைத்திருந்தார்கள். அந்தந்த இடங்களில் மரக்கன்றுகள் நடப்பெற்றன. பூந்தோட்டம் திட்டமிடப்பட்டு அழகாக நடப்பெற்றது. மலை மெல்லப் படரத் தொடங்கியது. அதிபர் பாடசாலையினைச் சுற்றி நோட்டம் விட்டார். காலையில் காடுபற்றி பயங்கரமாகத் தெரிந்த பாடசாலைக் காணியைக் காணவில்லை. அது அழுகுபெற்று புத்துயிர் பெற்று நிமிர்ந்திருந்தது.

ஒருநாள் பொழுதுக்குள் பாடசாலை பொலிவுற்றுப் பளிச்சிட்டது. நிகழ்வு முடிவுறும் தருணம் வந்தது. செயற்பாட்டில் முன்னின்று உழைத்தவர்களை அனைவரும் பாராட்டினார்கள். “இவ்வாறான நிகழ்வுகள் பாடசாலைகள் தோறும் நடைபெற வேண்டும். அப்போதுதான் இனநல்லுறவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உதவிகள் செய்து சமாதானமாக வாழவும் முடியும்” சமயகுரவர்கள் பாராட்டினார்கள். “இந்த மாணவர்களைப் பாராட்டும் இந்நாளில் வீட்டுக்கொரு மரம் நடும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துங்கள். நமது வளங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சின்னஞ்சிறு சிறார்களின் மனவளங்களையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். நமது சூழலின் வளங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற வேற்றுமையை நான் காணவில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக நிற்கிறீர்கள். மிகச் சந்தோசமாக இருக்கிறது. இப்படியே ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாடசாலைத் தேவைக்கேற்றவாறு பயனுறச் செய்த அதிபர், ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்”. சூரியா நிறைவாகக் கூறினார்.

மாலையானதும் சிரமதானப் பணி நிறைவாகியது. வெளியில் வந்துநின்று பாடசாலையைப் பார்த்தார்கள். அவர்களது கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. ‘சீனக்குடா உயர்நிலை வித்தியாலயம்’ காட்சியாகிக் கொண்டிருந்தது. சிங்கள மகாவித்தியாலய மாணவர்கள் தமிழ் முஸ்லிம் மாணவர்களோடு வாஞ்சையுடன் உரையாடினார்கள். உமா ரீச்சர் ஆதவனைப் பார்த்தார். அன்ரனையும், அன்வரையும் அழைத்தார். சிங்கள மகாவித்தியாலய மாணவர் தலைவர்களை அழைத்தார். அவர்கள் அனைவரையும் பார்த்தார். அவர்களை வாஞ்சையோடு பாராட்டினார். “ நீங்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய சாதனையைச் சாதித்துவிட்டீர்கள். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேற்றுமையை உடைத்தெறிந்து விட்டீர்கள். உங்கள் சாதனை தொடரவேண்டும். படிப்பில் மிகுந்த கரிசனையைக் காட்டுங்கள். சிறந்த பெறுபேற்றை பெறுவதற்கு வாழ்த்துக்கள்.” என்றார். அதிபர் பத்மசீலன் அனைவருக்கும் நன்றி கூறினார். ஆதவனும், அன்வரும், அன்ரனும் ஏனைய மாணவர்களை ஊக்குவிக்கும் சாதனை வீரர்களாக வலம்வருகிறார்கள்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP