கறிவேப்பிலை
அந்தப் பாடசாலைக்கே ஆசிரியராகவும், அதிபராகவும் வருவார் என்று ஆனந்தர் பாடசாலையில் படிக்கும்போதே கனவிலும் நினைக்கவில்லை. அது தற்செயலாக நடந்த விடயமென்றும் சொல்லமுடியாது. இடைநடுவில் ஏற்பட்ட ஞானமென்று சொல்லலாமா? சித்தார்த்தான் நாட்டு நடப்பைக் கண்டுதானே ஞானியானார்? தான் படிக்கும்போது அமைந்த அல்லது வாய்த்த ஆசிரியர்களும் காரணமாக இருக்கலாம். தாரமும் குருவும் தலைவிதிப்படியாமே? அதைப்போல் வைத்துக் கொள்ளலாமா?. அவர்களைப் பின்பற்றிப் பல மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைப்போல் வருவதில்லையா? எந்த ஒரு நல்ல சீடனையும் ஆட்கொள்ளும் குருவின் ஆசிகளும் துணைபோவதும் உண்மை. அந்த வகையில் ஞானம் பெற்றவர்தான் ஆனந்தர்.
பிறந்த ஊரைவிட்டு வெளியூர் சென்று கல்வி கற்பதால் கிடைக்கும் நன்மைகள் பல. ஆனால் அங்கும் தீமைகள் ஒட்டிக்கொள்வதென்பதும் வாஸ்த்தவம்தான். எப்படித்தான் திருகோணமலை பாடல்பெற்ற திருத்தலம் என்று சொன்னாலும் கல்வியில் பின்தங்கியே கிடக்கிறது. இரண்டு மூன்று உயர்தரப்பாடசாலைகள் இருந்தாலும் கிராமத்து மக்களுக்குக் கல்வி நரிக்கொம்பாம்பாகவே இருந்தது. இயற்கைத்துறைமுகம் ஒன்று அமைந்ததால் திருகோணமலைக்கு விளைந்த தீமைகள்தாம் அதிகம். அந்நியரின் படையெடுப்புக்களுக்கு உதவியாக இருந்தது. உலகமகா யுத்தத்தில் யப்பானின் குண்டு வீச்சுக்குள்ளானது. பிரித்தானியரின் கடற்படைத்தளம், விமானத்தளம் இருந்தமையால் உயர்கல்வியின் தேவை உணரப்படவில்லை. ஆங்கிலம் பேசவும், எழுதவும் தெரிந்திருந்தால் போதும். ஏதாவது வேலை கிடைத்து விடும். அதற்கேற்றால் போல் கத்தோலிக் மிசன் பாடசாலைகளும், மெதடிஸ்த மிசன் பாடசாலைகளும் தயார்ப்படுத்திக் கொடுத்தன. அதனால் கல்வி மான்களோ, அறிஞர்களோ உருவாகவில்லை. உயர்கல்விப் பீடங்களைப் பற்றிக் கதைப்பவர்களே இல்லை.
திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஐம்பதுகளில் குரல் கொடுத்தவர்களே அதனை மறந்து வேறு மாவட்டங்களில் பல்கலைக் கழகங்களை நிறுவிவிட்டார்கள். இன்றுவரை உயர்கல்வி நிறுவனம் என்று சொல்லக்கூடியதாய் ஒன்றுமில்லை. அண்மையில்தான் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியும், பல்கலைக்கழக வளாகமும் இயங்குகிறது. திருகோணமலை நகரில் வெளிமாவட்டத்தவரே கடமை நிமித்தம் வந்து உயர்பதவிகளில் குந்தியிருந்தனர். நெருக்கமாகக் கொட்டில்களில் குறைந்த வாடகையில் குடியிருந்து கடமை முடிந்ததும் போய்விடுவார்கள். திருகோணமலை மாவட்டக் கிராம மக்கள் தங்கள் நிலபுலங்களை நம்பி வாழ்க்கையை ஓட்டினார்கள். அந்நியர் ஆட்சியின் பின்னரும் அதே நிலைதான் தொடர்ந்தது.
சுதந்திரம் என்பதென்ன? ‘சு’தந்திரம்தானே? அதாவது தந்திரமாக வாழும் வழிகளைத் தேடுவது. இதனைத்தான் ‘வாழும் கலை’ என்று சொல்கிறார்களோ? படித்தவர்கள் அதனைச் செய்தார்கள். படித்தவர்கள் படியாதவர்களைச் சுரண்டத் தொடங்கினார்கள். அதுவும் ஒருவகைச் சு(ய)தந்திரம்தானே? கிராமங்களில் உயர் வகுப்புக்களைப் படிப்பதற்கு வசதிகளும் இல்லை. கிராமத்துப் பிள்ளைகள் தங்கியிருந்து படிக்க திருகோணமலை நகரில் விடுதிகளும் இருக்கவில்லை. கிறிஸத்தவப் பிள்ளைகளுக்கு விடுதி வசதி கிடைத்தது. கிராமங்களில் சுயமொழிக் கல்வியைக் கற்று தம்குலத் தொழில்களில் ஈடுபட்டனர். இலவசக் கல்வி இந்த நாட்டுக்கு ஒரு வரப்பிரசாதந்தான். அதனை நடைமுறைப்படுத்திய புண்ணியவாளன்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள்தான்.
அரசியல் மாற்றங்களினால் சுதேசமொழிக் கொள்கை வந்தபின் கிராமங்களும் விழித்துக் கொண்டன. சுயமொழிக்கல்வியைத் தொடர்வதில் இடர்ப்பாடுகள் இருந்தன. படிப்படியாக இந்த நிலை மாறிக் கொண்டு வந்தது. சுயமொழிக் கொள்கை என்று தனிச்சிங்கள அரசகரும மொழிச் சட்டம் பிரிவினையை ஏற்படுத்தி விட்டது. சுயமொழித் திட்டத்தைக் கொண்டு வந்த அரசியல் சாணக்கியர்கள் தங்களது வாரிசுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கல்வியைத் தொடர வைத்தார்கள். அது இற்றைவரை தொடர்கிறது. உயர்கல்வி சுயமொழியில் இருப்பது நன்மைபயக்கும் என்பது கல்விமான்களின் கணிப்பு. வசதியான மாவட்டங்களில் வசதியான பெரிய பாடசாலைகளில் கற்றவர்கள் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்து வேலை வாய்ப்புகளையும் பெற்றார்கள்.. இந்த மாவட்டத்திலேயே வசதியற்ற கிராமப் பாடசலைகளில் சாதாரணசித்திகளை மட்டும் பெற்றார்கள். வசதியான பாடசாலைகளில் படித்தவர்கள் சிறப்பான சித்திகளைப் பெற்று பல்கலைக் கழகம் சென்றார்கள். கிராமங்களில் வசதிகள் குறைவாக இருந்தாலும் அவர்களிடம் ஆற்றல் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது. இதனடிப்படையில் தரப்படுத்தல் முறையும், மாவட்டக் கோட்டாமுறையும் வந்ததைப் பலர் எதிர்த்தார்கள். அதிலும் சு(ய)தந்திரம் இருந்ததை நன்றாகச் சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
பின்தங்கிய மாவட்டங்களில் கோட்டாமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டங்களை ஆக்குவோர் அதில் ஓட்டைகளை அறிவதில்லையா? அல்லது சட்ட வரைஞர்கள் திட்டமிட்டு அப்படிச் செய்தார்களா? அவர்களுக்கும் அந்த ஓட்டைகள் உதவுமல்லவா? அவனுக்குத்தான் வெளிச்சம். முழுமாவட்டத்துக்கும் உரியதாகவுள்ள கோட்டாமுறை வசதியான நகர்புறத்துப் பாடசாலைகளுக்கே போய் சேர்வதை யாரும் கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து மூன்று வருடங்கள் அந்த மாவட்டத்தில் இருந்து வாக்காளர் பட்டியலில் குடும்பப் பதிவிருந்தால் சலுகை கிடைக்கும் கல்வித்தரமுடைய மாவட்டத்தில் இருந்து வந்து திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி. மன்னார். முல்லைத்தீவு மாவட்டங்களில் உத்தியோகம் பார்க்கும் அலுவலர்கள் மூளைசாலிகள்.
தங்கள் குடும்பங்களை தாங்கள் வாழும் இடங்களில் வாக்களர் பட்டியலில் சேர்த்து விடுவார்கள். பாடசாலைகளிலும் பிள்ளைகளைச் சேர்த்து விடுவார்கள். சாதாரணதரப் பரீட்சையை இந்த மாவட்டங்களில் எடுக்க வைத்து விடுவார்கள். உயர்தரப் பரீட்சைக்கு இம்மாவட்டங்களில் விண்ணப்பிப்பார்கள். ஆனால் வசதிகள் நிறைந்த மாவட்டத்தில் கற்க விடுவார்கள். பரீட்சையையும் இம்மாவட்டங்களில் எடுப்பார்கள். பல்கலைக் கழகங்களுக்குப் போவதும் இவர்களது பிள்ளைகள்தான். தரப்படுத்தலையும். கோட்டா முறையையும் உள்ளுற வாழ்த்திக் கொண்டு, அதற்கு எதிராகப் பேசுபவர்களும் இவர்கள்தான். கோட்டா முறைகூட இவர்களுக்கு உதவியதை நினைக்கச் சிரிப்பாய் வருகுது.
இந்தநிலையில்தான் ஆனந்தர் சொந்த ஊரில் ஆசிரியராக வந்து பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் அப்பாவிப் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று பாடுபட்டவர். அவருக்குப் பக்கபலமாக நல்லாசிரியராக தங்கராசா வந்து வாய்த்தார். அவர்கள் இருவரும் ஆசிரியர்களாக ஒன்றாக கற்பித்தலில் ஈடுபட்டார்கள். பாடசாலையின் முழு வளர்ச்சியிலும் அவர்கள் கண்ணாயிருந்தார்கள். அவர்களது வீடுகள் ஓலைக் கொட்டில்கள்தாம். ஊரும், பிள்ளைகளும் கல்வியில் உயர்ந்தால் தாங்கள் உயர்ந்ததற்குச் சமன் என்பார்கள்.
கிண்ணியாவில் கற்பித்த அதிபர் காசிநாதரைப்போல் அவர் வழியில் நின்று, வீடுவீடாய்போய் பிள்ளைகளைப் பிடித்துப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கற்பித்தார்கள். “ஆளே, நமது ஊரிலிருந்து பிள்ளைகள் பல்கலைக்கழகம் போகவேணும். அதற்கு உயர்தர வகுப்பு வைக்கவேண்டும். பாடசாலை மகாவித்தியாலயமாகத் தரமுயர்ந்தால்தான் உயர்தர வகுப்பு வைக்கமுடியும். அனுமதியும் கிடைக்கும். மகாவித்தியாலயமாய் தரமுயர்வதற்குப் பிள்ளைகளின் எண்ணிக்கையும் வேண்டும். அத்துடன் க.பொ.சா. பரீட்சையில் நல்ல பெறுபேறும் வேண்டும். பெறுபேறு எடுத்து விடலாம். பிள்ளைகளின் ஒத்துழைப்பு உள்ளது. எப்படிப் பிள்ளைகளது தொகையைக் கூட்டுவது”? தங்கராசா ஆனந்தரோடு ஆலோசித்தார்.
“அதற்கு வழியுண்டு” ஆனந்தர்
“என்ன வழி”“பாடசாலையிலிருந்து இடைவிலகிய பிள்ளைகளை மீண்டும் சேர்ப்பது”“அது எப்படி முடீயும்”?“அதிபர் சம்மதித்தால் சேர்க்கலாம். அதற்கு முறைசாராக் கல்விப்பிரிவு இருக்கிறது. அதற்குரிய வேலைகளைச் செய்து போட்டன்”
மாலை நேர வகுப்புக்களை வைத்தார்கள். இடைவிலகிய பிள்ளைகளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். எண்ணி மூன்று மாதங்களில் மாணவர் தொகையை சரிப்படுத்தினார்கள். இடைவிலகிய பிள்ளைகளை அவர்களது தரத்ததுக்கு ஏற்ப பாடசாலையில் சேர்க்கும் சுற்று நிருபத்தையும் வைத்திருந்தார்கள். அதிபர் வெற்றிவேல் அருமையானவர். ‘அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்தல்…அன்ன யாவிலும் புண்ணியம் கோடி ஆங்கோரேழைக்கு எழுத்தறிவித்தல்’ என்று பாரதிவழியில் வாழ்பவர். இருவரும் அதிபரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். பாடசாலை நேரத்தில் அதிபரோடு கதைக்க முடியாது. அவர் அதிபர் அறையில் இருக்கமாட்டார். ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புக்களை நடத்திக் கொண்டிருப்பார். ஆசிரியர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. உண்மையில் அந்தப் பாடசாலையில் பன்னிரண்டு வுகப்புக்களும் ஆறு ஆசிரியர்களுமே இருந்தார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் இரண்டு வகுப்புக்களைப் பார்த்தே ஆகவேண்டும். ஓரு வகுப்புக்கு எழுத்து வேலையைக் கொடுத்து விட்டு மற்ற வகுப்புக்குக் கற்பிப்பார்கள். பின் அந்த வகுப்புக்கு பயிற்சி கொடுத்து விட்டு மற்ற வகுப்பைப் பார்ப்பார்கள். இப்படிக் கடுமையாக உழைத்தார்கள்.
அதிபரிடம் பிள்ளைகளைச் சேர்ப்பதுபற்றிச் சொன்னபோது அவர் துள்ளிக்குதித்தார். “பிள்ளைகளைச் சேர்த்துக் கற்பிக்கத்தானே நாமிருக்கோம். எத்தனை பிள்ளைகளும் வரட்டும். சேர்ப்போம். இடமா இல்லை. இந்தப் பாடசாலையின் மரங்கள் வகுப்புக்களை நடத்த அனுமதி தரும்.” அதிபரின் புன்னகை கலந்த சம்மதம் அவர்களை உற்சாகப் படுத்தியது. பிள்ளைகளின் தொகை அறுநூற்றைத் தாண்டியது. மகாவித்தியாலயமாகத் தரமுயர்வும் பெற்றது. எனினும் உயர்தர வகுப்புக்கள் நடத்த அனுமதி இன்னும் இல்லை. பாடசாலையில் பகலிரவு பாராது வகுப்புக்களை நடத்தி க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறவைத்தார்கள். உயர்தர வகுப்பும் தொடங்குவதற்குரிய வழிவகைகளைச் செய்தார்கள். ஆனால் அம்முயற்சி இழுபறியில் கிடந்தது.
ஆனந்தர் இப்போது அதிபராகக் கடமையினை ஏற்றிருந்தார். ஆனந்தர் தற்துணிவுள்ள அதிசயப்பிறவி. உரிய அனுமதியின்றி வகுப்புக்களை நடத்தினார். அதிகாரிகள் வந்து பார்த்தால் ஏற்றபதில் சொல்லக்கூடிய வல்லமையையும் பெற்றிருந்தார். பொருத்தமான ஆவணங்களைத் தயார் படுத்தி வைத்திருந்தார். உயர்தர வகுப்பும் தொடங்குவதற்குரிய வழிவகைகளைச் செய்வதில் அலுவலகங்களையும் அதிகாரிகளையும் சந்தித்தார். அவர் பட்ட துயரங்கள் அவருக்குத்தான் தெரியும். பசி துறந்து பணியில் ஈடுபட்டார். கொழும்பில் உயர்தர அதிகாரிகளின் உதவி கிடைத்தது. பலமாத முயற்சி பயனைக் கொடுத்தது. உயர்தர வகுப்பு வைப்பதற்கான அனுமதியும் கிடைத்து விட்டது.
உரிய கடிதத்தோடு ஒன்று கூடல் நேரத்தில் ஆனந்தர் அதனை அறிவித்தார். ஆசிரியர் சச்சிதானந்தம் மாணவர்களிடம் கூறிருந்தார். மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்தார்கள். இந்தக் கிராமத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்குப் போவதென்றால் எவ்வளவு பெரிய சாதனை. சில உயர்தர மாணவர்கள் பூமாலை சகிதம் வந்தார்கள். அதிபரின் கழுத்தில் தொங்கவிட்டு அழகுபார்க்க நினைத்தார்கள். அதிபர் அவற்றை ஏற்கவில்லை. “நான் இந்த ஊரில் பிறந்தவன். வெளியூர்களில் படித்தவன். நமது ஊர்மக்களின் வறுமையை உணர்ந்தவன். என்னை எனது பெற்றோர் வறுமையில் வாடி எஸ்.எஸ்.சி வரைதான் கற்பித்தார்கள். எனது உயர்கல்வியை நானே தேடிப் படித்து இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன். நீங்கள் இந்த ஊருக்குச் செய்யும் கடமைகள் பலவுள்ளன. நீங்கள் இப்பாடசாலையில் இருந்து பல்கலைக் கழகம் சென்று உயர்பதவிகளைப் பெறவேண்டும். இந்தப் பாடசாலைக்கு ஆசிரியர்களாக அதிபர்களாக வரவேண்டும். அதனைத்தான் மனதார நாங்கள் எற்றுக் கொள்வோம். இந்த ஊர் எனக்கு என்ன செய்தது? என்று கேட்காதீர்கள். இந்த ஊருக்காக நான் என்ன செய்தேன் என்று கேளுங்கள். பூமாலைகளைப் போடும் நீங்கள் ஒருநாளைக்கு எங்களைப் புறந்தள்ளவும் கூடும். ஆனாலும் எங்களது கடமையை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.” கூறிவிட்டு வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுப்பினார்.உயர்தர வகுப்பில் அனைத்துப் பாடங்களையும் அதிபராக இருந்த ஆனந்தரே சிலகாலம் கற்பித்தார். பின்னர்தான் சில ஆசிரியர்கள் வந்தார்கள். முதற்தடவையிலேயே பல மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றார்கள். ஆனந்தரும், தங்கரும் கல்விப் பணிப்பாளர்களாகப் பதவியுயர்வு பெற்றுச் சென்றார்கள். முதன்முதல் பல்கலைக்கழகம் சென்றவரே அதிபராகக் கடமையும் ஏற்றிருந்தார். இப்போது இருக்கும் பல ஆசிரியர்கள் அந்தப் பாடசாலையிலேயே படித்தவர்கள்தான்.
இப்போது ஆனந்தரும், தங்கரும் பென்சனியர்கள். யுத்தக்கொடுமையினால் இடம் பெயர்ந்து வாழ்பவர்கள். பென்சன் நாளன்று பென்சனை எடுத்துவிட்டு ஊரில் ஓரிரு நாட்களைக் கழிப்பார்கள். வரும்போதெல்லாம் தங்களிடம் படித்து அதிபராயும். ஆசிரியர்களாயும் இருப்பவர்களைச் சந்திப்பார்கள். அறிவுரை சொல்வார்கள். அவர்களது அறிவுரைகளை வேண்டா வெறுப்பாகக் கேட்பார்கள். மெதுவாகக் கழன்றுவிடுவார்கள்.
“ஆளே பென்சன் எடுத்திட்டு ஒருக்கா நமது ஊரைப்பார்த்திட்டு வருவம். எப்படிக் கிடக்குதென்று அறிய ஆசை. பாழாய்போன இந்த யுத்தத்தினால எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலி கொடுத்திட்டம். எத்தனை கோடி பெறுமதியான சொத்துக்களை நமது சனங்கள் இழந்து தவிக்குதுகள். அதோட எங்கட நிம்மதியான வாழக்கையும் போச்சு” தங்கர் ஆனந்தரைக் கண்டதும் சொன்னார். “ஒன்றுக்கும் பயனில்லாத அமைப்புக்களால் சொந்தச் சனங்கள் செத்ததுதான் மிச்சம். இந்த வாழ்க்கை என்பது வேடிக்கையானது. அவனவன் வாழப் பழகிக் கொண்டான். சரி பகல்உணவுக்குப்பின் ஒருக்காப் போய் இரவுப் பொழுதை அங்கேயே முசுப்பாத்தியாய் கழிப்பம் என்ன?” ஆனந்தர் கூற இருவரும் சொந்த ஊருக்குப் வஸ் ஏறினார்கள். “ சா…என்ன மாதிரியான பாலம். இப்ப வசதியாய் போச்சு. நல்ல பாலம் கட்டிப்போட்டாங்க. நம்மட காலத்தில இந்தத் துறையடியில எவ்வளவு நேரம் காத்துக்கிடந்திருப்பம்”. தங்கர் பழைய நினைவுகளில் இழையோடினார்.
ஊர் கலகலப்பாக இருந்தது. ஒலிபெருக்கிச் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. பாடசாலையில் விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அங்கு போனபின்தான் தெரிந்தது. ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். ஆனந்தரின் கண்கள் பனித்தன. “ஆளே இந்த உலகத்தைப் பற்றி யோசிக்கக் கூடாது. நாங்க கறிவேப்பிலைகள். இன்னும் சொன்னா பற்றவைத்து காரியம் முடிஞ்சதும் தூக்கியெறிந்து விட்ட குறங்கொள்ளிக் கட்டைகள். இப்படியே போய் ஒருக்கா கோயிலைப் பார்த்துக் கும்பிட்டுட்டுத் திரும்பிப் போவம்.” கோயிலின் முன்னால் நின்று மனதை ஒருநிலைப் படுத்திக் கும்பிட்டார்கள். “ஐயா பாடசாலையில விளையாட்டுப் போட்டி நடக்குது. நீங்க போகல்லயா”? ஐயர் தீருநீறு கொடுத்தவாறே கூறினார். கண்களை மூடி மெய்மறந்து கும்பிட்ட ஆனந்தரின் செவிகளில் ஐயரின் குரல் அதிர்ந்தது. தன்னைச் சுதாகரித்துக் கொண்டார். “அதற்காகத்தான் வந்தநாங்கள். முதலில விநாயகப் பெருமானைப் பார்த்து விட்டுத்தான் மற்றது” பதிலளித்துத் திருநீற்றைப் பூசினார்.
ஐயருக்கும் தெரியும். உண்மையில் அவர்களை யாரும் அழைக்கவில்லை. அவர்கள் இருவரும் இந்த ஊரில் இருக்கும்போது ஒவ்வொரு வெள்ளியும் கூட்டுப்பிரார்த்தனை நடக்கும். ஊரில் கலைவிழாக்கள், பெருவிழாக்கள் மக்களுக்கு விழிப்பையூட்டும். பாடசாலையின் இரண்டு தூண்களான அவர்கள் இந்தக் கிராமத்துக்குச் செய்த சேவைகளை ஐயர் மனதில் நினைந்து கொண்டார். இந்த ஐயரும் இவர்களிடம் படித்தவர்தான். மனிதனின் மனம் பலத்தையும், பலவீனத்தையும் கொண்டதுதானே? அவர்களது மனங்கள் தளர்ந்து விட்டனதான். சிரிப்பாகவும் இருந்தது. ஆளையாள் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.
ஊர் மாறியிருந்தது. ஓலைக்குடிசைகள் உணர்ச்சியில்லாக் கட்டிடங்களாக ஆகியிருந்தன. அந்தக் காலத்தில் வீதிகளில் விழுந்தாலும் காயமேற்படாது. மணலாக இருந்தன. மணலைப்போல் மக்களது இதயங்கள் இருந்தன. காயப்படுத்தாத உள்ளங்கள் இருந்தன. இப்போது தார் வீதிகளாக மாற்றம் பெற்றிருந்தன. உள்ளத்தாலும் உடலாலும் காயப்படுத்தும் மனிதர்கள் உள்ளனர்.
மணல்வீதிகள் தார் வீதிகளாக மாற்றம் பெற்றிருந்தன. வீதியில் விழுந்தால் காயமேற்படும். இப்போது காயப்படுத்தும் மனிதர்கள் உள்ளனர். என்ன இருந்தும் மனிதர்களின் மனங்கள் மாறிவிட்டதை உணர்ந்தார்கள். மனிதரை மதிக்காத பண்புகள் நிறைந்திருந்தன. வளர்த்த கடாக்கள்தான் மார்பில் குறிவைத்துத் தாக்கும். அன்று தனக்குப் பூமாலை சூடவந்தவர்களை முன்நிறுத்திப் பாரத்தார். அவர்களது செயலை இப்போது எண்ணிப்பார்த்தார். மனப்பாங்கை நினைத்துக் கொண்டார். அவர்கள் இந்தநிலைக்கு உயர்ந்து நிற்பதற்குத் தூண்களாகிச் சுமந்தோமே. அதிலொரு சுகமிருப்பதை அனுபவிதார்கள். புறந்தள்ளிவிட்டதை எண்ணிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களது உள்ளம் அவ்வளவுதான். ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். அவர்களால் உருவான பாடசாலைக்குள் அவர்களுக்கு இனியென்ன வேலை? பாடசாலைக்குள் நுழையவேண்டாம் என்பதற்குத்தானே பென்சன் கிடைக்கிறது. கறிக்கு ருசியூட்டத்தானே கறிவேப்பிலையைப் போடுகிறார்கள். ருசியூட்டியபின் அந்த இலைகளால் பயனில்லை. அவற்றை வீசிவிடுவார்கள். இதுதான் மனித வாழ்க்கை. வந்ததுபோல் வஸ்சில் ஏறிக் கொண்டார்கள்.
Monday, June 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment