Monday, May 31, 2010

சொந்த மண்ணின் அகதி
பங்குனி மாதத்தின் நெருப்பு வெயில் சுட்டெரிக்கிறது. செல்வராசா என்ற செல்லன் மெல்ல நடந்து வந்து அந்த பிரதேச செயலாளர் அலுவலக வளாகத்துள் நுழைந்தார். அவரை முதுமை துரத்தத் தொடங்கியதால் சற்றுத் தளர்வு. அனுபவ முத்திரைகளை அவரது நெற்றியில் புரிகளாக விழுந்த கோடுகள் காட்டின. வாளிப்பான இளமை குந்தியிருந்தமைக்கான வடுக்களை அவரது உடலின் சுருக்கங்கள் தெளிவு படுத்தின. வளாகத்தினுள் மரங்கள் சோலைகளாகி நிழலைக் கொடுத்தவண்ணம் நின்றன. வளாகத்தின் புதிய கட்டிடத்துக்குப்பின்னால் அந்தப் பெரிய மாமரம் இன்னும் நிற்கிறது. ஆனால் அது முன்னையமாதிரி இல்லை. கிளைகள் வெட்டப்பட்டுச் சடைத்திருந்தது. அடிமரம் மட்டும் பெரிதாக இருந்தது. அதனண்டை சென்று அதன் நிழலில் குந்தியிருக்கிறார்.
செல்லனுக்கு இப்போது எண்பத்து மூன்றுவயதாகிறது. செல்லனைக் கண்டதும் அந்த மரம் கிளைகளை அசைத்துச் சாமரம் வீசுவதுபோலிருந்தது. அந்தமரத்துக்கு மட்டும் செல்லனின் கதை தெரிந்திருந்தது. ஏனென்றால் அந்த மரம் அவனது பாட்டனாரால் நடபட்டது. பரம்பரை முதுசம். மரத்துக்கு மட்டும் நடக்கும் சக்தியிருந்தால் தன்னை வளர்த்தவனோடு அவன்போகும் இடத்துக்கெல்லாம் போயிருக்கும். தன்னோடு இருந்த சனங்கள் இப்போது எங்கிருக்கின்றனர்? அவருக்கே தெரியாது. சனங்கள் பிரதேச செயலக வளாகத்தில் தமது கடமைகளை முடிப்பதற்காக வருவதும் போவதுமாக இருந்தார்கள். களைப்புத் தணிந்ததும் பதிவாளர் பகுதியில் உள்ள யன்னலூடாகப் பிறப்பு அத்தாட்சிக்கான விண்ணப்பப் படிவத்தைக் கேட்டெடுத்தார். அதனை அவரால் நிரப்பமுடியாது. கண்ணும் மங்கலாய் போய்விட்டது. பக்கத்தில் பர்தா உடையில் இளம்பெண் நின்றிருந்தாள். “தங்கச்சி இத நிரப்பித்தாம்மா” கெஞ்சினார். அவள் படிவத்தை வாசித்து அவரிடம் விபரத்தைக் கேட்டு எழுதத் தொடங்கினாள்.
பெயரைக் கேட்டாள். சொன்னார். தற்போது இருக்கும் விலாசம் கேட்டாள். “மாகாணம் கிழக்கு. அது சரி. மாவட்டம் திருகோணமலை. சரி. பதிவாளரது பிரிவு”? கேட்டாள். “தம்பலகாமம் கிழக்கு” சொன்னார். “ஐயா இது கிண்ணியாப் பிரிவு. கிண்ணியா என்று போடட்டா? அதுதான் சரி”. அவள் வாதாடினாள். “இல்லம்மா நான்பிறக்கேக்க கிண்ணியா பிரதேசச் செயலாளர் பிரிவு இ;ல்லம்மா. நான் சொல்லுறபடி எழுதம்மா”. அவள் வேண்டா வெறுப்பாக எழுதினாள். “பிறந்த இடம்”? கேட்டாள். அவரது உட்குவிந்த கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலத்தது. தனது இரண்டு கைகளையும் விரித்து “இதுக்குள்ளதானம்மா பொறந்தனான்.” சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. படிவத்தைக் கொடுத்து விட்டுச் சென்றாள். அதனை யன்னல் ஊடாகக் கொடுத்தார். பார்த்துச் சொல்லுவதாகப் பதில் வந்தது. அப்படியே வளாகத்தின் ஒரு மூலையில் குந்திக் கொண்டார். அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. மெதுவாக எழும்பி அந்த மாமரத்தடியின் கீழ் சென்றார். அவரை யாரும் பொருட்படுத்தவில்லை. இன்றைய தலைமுறையினருக்கு அவரையும், அவரது கதையையும் தெரியாது. தமிழர் செறிந்து வாழ்ந்த இடத்தில் தமிழர்களே இல்லை. அப்பிரதேசத்தில் தற்போது எஞ்சியுள்ள சில தமிழ்க்கிராமங்களின் மக்களே வருவார்கள். பொதுவாகத் தமிழர் மிகக் குறைவு.
மாமரத்தின் இலைகள் பழுத்துச் சொரிந்து கொண்டிருந்தன. சருகுகள் படைகளாகப் பரந்து கிடந்தன. அவற்றை ஒருபுறமாக ஒதுக்கி விட்டு மரத்தடியோடு உடம்பைச் சாத்தி ஒருக்களித்திருந்தார். அண்ணார்ந்து பார்த்தார் மாந்தளிரகள் முளைவிட்டு எட்டிப் பார்த்தன. கூப்பிடு தூரத்தில் கன்ரீன் தெரிந்தது. இப்போது கன்ரீனில் சனமில்லை. கன்ரீனில் நின்ற பையனை அழைத்தார். அவனிடம் ஒரு பணி;சும், பிளைன்ரீயும் தரும்படி கேட்டார். அவன் ஒரு சிரிப்போடு கொடுத்துவிட்டுப் போனான். அவற்றைச் சுருங்கிக் கிடந்த வயிற்றுக்குள் விட்டார். காய்ந்து கிடந்த வயிற்றில் இருந்து பெரிதாய் ஏப்பம் வந்தது. மடியில் இருந்த சுருட்டை எடுத்துப் பற்றவைத்து உள்ளிழுத்துப் புகையை வெளியில் விட்டார். புகை சுருண்டு பரவி மேலெழுந்து கரைந்து சென்றது. பழய நினைவுச் சுழியில் மிதந்தார்.
“செல்லன் அந்த மாமரத்தைப் பார். நிறையப் பூவும் பிஞ்சுமாய் கிடக்கு. சருகுகளை கூட்டியொதுக்கிப் போட்டு வேப்பஞ்சருகையும் கலந்து நெருப்பு வெய். புகை மாமரத்தில படட்டும். பூச்சி விழாது. கலைஞ்சிடும்.” சின்னத்துரையர் சொல்லிப்போட்டுப் போய்விட்டார். செல்லன் அப்பா சொன்னதுபோல் சருகுகளைக் கூட்டி வட்டமாகக் குவித்துவிட்டு வேப்பஞ்சருகையும் கலந்து நெருப்பை வைத்தான். அது பகைந்து மாமரத்தின் இலைகுழைகளுக்கு ஊடாகப்பரந்தது. பூச்சிகள் விலகிப்போனதைச் செல்லன் அவதானித்தான். பூச்சிகளை விரட்ட இந்தப்புகை நல்லதுதான். அவனுக்கு அது அனுபவப் பாடம். வேப்பைமரங்கள் நிறையவே நின்றன. ஆனால் அவை இப்போது அங்கில்லை எல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டு விட்;டன. புதிதாக வைத்த மரங்கள்தான் தெரிந்தன.
செல்லனின் கண்கள் அந்தச் சூழலை ஒருமுறை துளாவி வந்தன. பெருமூச்சு மட்டும் பறந்தது. மணலில் தனது கைகளை ஊன்றி மறுபக்கம் ஓருக்களித்து இருந்தார். கைகளில் மணல் பதிந்த தடங்கள் தெரிந்தன. தனக்குள் பேசிக் கொண்டார். “எத்தனை தலைமுறையாய் இதுக்குள்ள கிடந்தம். என்ர பாட்டன், முப்பாட்டான் அரது பாட்டன் காலத்தில இருந்து இங்கதானே கிடந்து புரண்டனாங்கள். எங்களுக்கென்று குளக்கோட்டு மன்னனால் தரப்பட்ட நிலபுலங்கள். எல்லாம் போய்விட்டது. அந்நியர் ஆட்சியின் போதும் எங்களுக்கு எங்கட நிவபுலங்களைத் தந்து அதற்கான உறுதிப்பத்திரங்களும் தரப்பட்டன”. அவரது மனக்குரல் நின்றது. “என்னப்பா இதில கிடக்கிறிங்க” அந்தக் கன்ரீன் பொடியன் கதை கொடுத்தான்.
“புறப்பு கடுதாசி எடுக்க வந்தனான். கொஞ்சம் பொறுக்கட்டாம். இந்த இணல் நல்லாருக்கு இருக்கிறன்.” சொன்னார். அவன் சிரித்தவாறே போய்விட்டான். அவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தார். முதுமையில் தனியே கதைப்பார்கள் என்பது உண்மைதான் போல் தெரிகிறது. அவர்களது கதைகளை யார் கேட்கிறார்கள். அதனால் வயதுபோனவர்கள் தங்களது திருப்திக்காகத் தங்கள் ஆதங்கங்களைத் தாங்களே சொல்லி ஆறுதல் அடைவதற்காகக் கதைக்கிறார்கள். சிறுவர்களும் இப்படித்தானே? தனிமையில் இருக்கும்போது தனக்குத் தானே கதைப்பார்கள். செல்லனும் இப்போது அப்படித்தான் இருந்தார். அந்த மரந்தான் கேட்டுக் கொண்டு நின்றது.
“இதுக்குள்ள தானே தங்கச்சியின்ர கலியாணம் நடந்தது. அந்த இடத்தைப் பார்த்தார். அதிலதான் என்ர வீடு இருந்தது. மாமா. அண்ணன், சித்தப்பா, பெரியப்பா வீடுகள் பக்கத்துப் பக்கத்தில் சந்தோசமாய்க் கிடந்தம். தனிக்குடித்தனங்களும். கூட்டுக் குடும்பங்களுமாக சா.. எப்படியெல்லாம் வாழ்ந்தம். எல்லாத்தையும் பறிச்சிப் போட்டுத் தெருவில விட்டுட்டாங்க. இத ஆரிட்டச் சொல்லுற. சொன்னாலும் ஆர் தட்டிக்கேக்கப் போறாங்க?”. செல்லனின் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் உடைந்து வீழ்ந்தன. “இந்த வீட்டில இருந்து கூப்பிடு தூரத்திலதான் குட்டிக்கரச்சை றோமன் கத்தோலிக்க பாடசாலை இருந்தது. லூர்துமேரி அக்கா படிப்பிச்சவ. அதிலதான் நான் படிச்சனான். மூண்டாம் வகுப்புத்தான் படிச்சனான். என்னோட இந்தக்காலத்துப் பிள்ளையள் வாசிக்கட்டும் பார்ப்பம். இப்ப என்ன படிப்பு. பிள்ளயளுக்கு வாசிக்கத் தெரியாது.
இதில இருந்து வடக்குப்பக்கமாக ஒரு தாவுத்தாவினா அடப்பனார் வெட்டையில இருந்த மாமா கனகசிங்கத்தார் வீட்டில நிற்பன். அங்கிருந்து கிழக்கால் ஒடினா … இடுப்பளவு உப்புத்தண்ணியோடும் கட்டையாறு. அதைக் கடந்தால் நீரோட்டுமுனைப் புள்ளையார் கோயில் வரும். ஒரு கும்பிடு போட்டுத் தெற்கால ஓடினா பூசாரி வெட்டையில தம்பிமுத்துப் பூசாரியார் வீட்டில நிற்பன். அங்கிருந்து நேர ஓடினா.. தாமரவில் சோமநாதர் வீட்டில பனையான் மீன்கறியோட தாமர இலயில போட்ட சாப்பாடு கிடைக்கும். உப்பாத்துக் கோணாமலையர் வருவார். ஒன்டுரெண்டு கத. அது முடிஞ்சதும் ஓடி கட்டையாற்றைக் கடந்தால் ஆலங்கேணிப் பிள்ளையார் கோவில் அமுது கிடைக்கும். அங்கிருந்து மேற்காக ஓடினால் சமாவைத்ததீவில் அண்ணாவியார் தாமோதரனாரின் கூத்து நடக்கும். சா…என்ன அற்புதமான வாழ்க்கை”.
“கிருஸ்ணபிள்ளை உடையாரின் ராசாங்கம் நடக்கும். யப்பான்காரன் போட்ட குண்டால் பெற்றோல் தாங்கி எரிஞ்சபோது நான் இந்த மாமரத்தில் எறியிருந்துதான் பார்த்தனான். வானம் முட்ட நெருப்புக் கொழுந்து விட்டு எரிஞ்சுது. எங்கட சனங்கள் மாகாமம் சுங்கான்குழிப் பக்கம் ஒருகிழமை போயிருந்து வந்ததுகள். ஒரு பிளேன் எங்கட வண்ணான் வயலுக்க விழுந்தது. போகப் பயம்தான என்டாலும் கூட்டாளிகளோட போய்ப்பார்த்தனான். பெரிய லொறிகளைக் கொண்டு வந்து கட்டிக் கொண்டு போனாங்க. நீரோட்டுமுனை அம்மன் கோயிலில இருந்து தம்பலகாமம் ஆதிகோணநாயகரின் பதினாலாவது திருவிழாவுக்கு முள்ளுக் காவடி எடுத்துப் போறனாங்க. ஆலங்கேணி, உப்பாறு ஊர்களில் இருந்தும் காவடிகள் போகும். இஞ்;ச அப்ப கொஞ்சம் முஸ்லிம் சனங்கள்தான் இருந்தவங்க. படிக்காம இருந்த சனங்கள நம்மட காசிநாதர் ஐயாதான் வீடுவீடாய்ப் போய் பிள்ளயளுக்கு முட்டாசி குடுத்துப் பள்ளிக்குக் கூட்டிப்போய்ப் படிப்பிச்சவர். வசதியுள்ளவங்கட பிள்ளயள வெளியூரிலும் படிக்க எற்பாடு செய்தவர். ஆனாலும் அவர் எங்களப் படிக்கச் சொல்லல்ல. முஸ்லிம் பிள்ளயளுக்குத்தான் உதவி செய்தவர். பாவம் அவர் நல்லதுதான் செய்தார். அந்தா இருக்கிற பெரிய பாடசால அப்ப இதில இல்ல. அதுதான் எங்கட விளையாட்டுத் திடல். கிளித்தட்டு அதிலதான் விடியவிடியப் பாய்வம்.”
“சாமி விபுலானந்தர் சமயங்கள நேசித்தவர். அவர் பல சைவப்பாடசாலைகள கிழக்கு மாகாணத்தில தொடங்கினார். எல்லாச் சமயப் பிள்ளைகளையும் தனது பாடசாலையில சேர்த்துக் கொணடவர். கிறிஸ்தவப் பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகள் சேருவதில்ல. கிராமப் புறங்களில எல்லாப்பிள்ளையளையும் சேர்த்துக் கொள்வாங்க. ஆனால் கத்தோலிக் கதாவாசகம்தான் படிப்பிப்பார்கள். எங்கட நாடு சுதந்திரம் பெற்றதென்று சொன்னாங்கள். சுதந்திரம் என்டால் என்ன என்று எனக்கு இன்னும் விளங்கல்ல.அது பெரிய தந்திரம் நம்மட நாட்டுக்குக் கிடச்ச சாவுமணி. எங்கட பொடியள் கொஞ்சப்பேர் வெளியில் போய் இங்கிலிஸ் படிச்சாங்க. எங்கட பொடியள் என்றால் தம்பலகாமம் கிழக்குப் பகுதி தமிழ் முஸ்லிம் எல்லாரையும் சேர்த்துத்தான் சொல்லுறன். பாராளுமன்றத் தேர்தல் வந்துது. நாங்களெல்லாம் ராசாக்களாம். வாக்குக் கேக்கிறவங்க எங்கட தொண்டர்களாம் என்டாங்கள். வாக்குப்போட்டு ஆதரிக்கச் சொன்னாங்கள். எங்கள ராசாக்கள் என்டால் எங்களுக்கு மதிப்பு வராதே. வாக்குப் போட்டம். அவங்களும் வெற்றி பெற்றுப் பாராளுமன்றம் போய் வந்தாங்கள். இரண்டு பேரும் முஸ்லிம்தான். தமிழ்தானே நம்மட தாய்மொழி.
பெரிய வரவேற்பெல்லாம் செய்தம். சீனடி சிலம்படி வித்தையெல்லாம் காட்டி வரவேற்பெடுத்தம். எங்களுக்குள்ள வேற்றும இருக்கல்ல. ஆனா எங்களுக்குத் தெரியுமா அவங்கட மனதுக்குள்ள கரவுகள ஒளிச்சி வச்சிருந்தாங்க. ஒருநாள் லொறிகள், ரக்டர்கள். குண்டர்கள் கூடி வந்தார்கள். அரசாங்கம் எங்கட காணிகள சுவிகாரம் செய்திட்டாம். எங்கட வீடுகளை உடைத்தெடுத்துப் போகச் சொன்னாங்க. “அதென்ன தமிழ் மக்கள்ற காணிகள மட்டுந்தானா”? கேட்டம். “வாயமூடிற்றுப் போங்க” என்டாங்க. அத்தனை தமிழ் மக்களது வீடுகளுக்குள்ளும் நுழைந்து வந்தார்கள். ஒரு ஒதுக்குப் புறமான இடத்துக்கக் கொண்டு போய் நிலம் ஒதுக்கித் தந்தார்கள். எங்கட சனங்கள் பொருமினார்கள். அவங்க விட்ட கண்ணீர்தான் சுனாமியாய் சுழன்றடிச்சது. திட்டம்போட்டுச் சட்டமாக்கித் தமிழர மட்டும் குடியெழுப்பிப் போட்டாங்கள். அகதியாக்கிப் போட்டாங்கள். சின்னச் சின்னக் குடிசைகளைப் போட்டுக் குந்திக் கிடந்தம். விட்டாங்களா? தொன்னூறு இனக்கலவரத்தில் அங்கிருதும் விரட்டப்பட்டு ஊரூராய் அலைந்து திரியுறம்.” தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.
“அதுமட்டுமா? இந்தப் பிரதேசத்தில இருந்த தமிழர்களைக் கடத்திக் கொண்டுபோய் சாக்காட்டிப் போட்டாங்கள். நகரசுத்தித் தொழிலாளர்களும் தமிழர்கள்தான். அவங்கட குடியிருப்புக்களையும் அழித்து அப்புறப் படுத்திவிட்டாங்கள். கொஞ்சப் பேர் காணாமலே பொயிட்டாங்க. தொண்ணூறுக் கலவரம் சாதகமாகப் போய்விட்டது. காணிச்சட்டம் வந்ததிலிருந்து அலெக்தோட்டம் அரசினால் சுவீகரிகப்பட்டது. அரச காணிகளில் தமிழ் முஸ்லிம் சனங்கள் குடியேறினார்கள். கலவரத்தினால் தமிழ் கிராம மக்களில் அரைவாசிச் சனம் செத்துப் போயிற்றுகள். மிஞ்சிக் கிடந்தவங்கள கிளப்பன்பேக் அகதி முகாமில போட்டாங்க. அலெக்தோட்டத்தில் தனிமுஸ்லிம் சனங்களக் குடியேற்றி கிராமங்களை உருவாக்கி பைசல்நகர், ஹிஜிரா நகர் இப்படி முஸ்லிம் பெயர்களை வைத்து கிண்ணியா தனிமுஸ்லிம் பிரதேசமாக மாறிவிட்டது. இது திட்டமிட்ட இன அழிப்புத்தானே? ஒருபக்கம் பெரும்பான்மை அரசாங்கம் இன அழிப்பைச் செய்யுது. இன்னொரு பக்கம் மறைமுகமாக தவித்த முயலடிக்கும் வேலை நடக்குது, தமிழ் பாடசாலைகள் என்ன பாவம் செய்திச்சி. அந்தப் பாடசாலைகளையும் முஸ்லிம் பாடசாலைகளாக மாற்றிக் கொண்டாங்க. அவங்குளுக்குத் தேவையென்டால் புதிசா முஸ்லிம் பாடசாலைகள கட்டலாம்தானே. இது ஆருக்குத் தெரியப்பேகுது.? சொல்லப்போனால் நான் இனவாதியாம்.” தனக்குத்தானே சொல்லிச் சிரித்தார்.
“காலம் இப்படியே இருப்பதில்லை. உலகம் சுழன்று கொண்டுதான் இருக்குது. சூரியன் உதிக்காமல் இருப்பதில்லை. இரவு பகல் வரத்தான் செய்யும். இந்த மனிசன் தான் மட்டும்தான் வாழப்போவதாக எண்ணயிருக்கிறான். இன்னும் புத்தரும். யேசுவும். நபிகளும் சித்தர்களும் வரத்தான் போகிறாங்கள். நான் இந்த மரத்துக்குக் கீழ இருந்து சொல்லுறன். ஒரு நாளைக்கு இன்னொரு சுனாமி வரத்தான் போகுது. அப்ப எல்லாம் அள்ளிக் கொண்டு போகத்தான்போகுது.” அவர் கண்கள் சிவந்து கொண்டு வந்தன. கன்ரின் பொடியன் வந்தான். “என்ன ஐயா தனியக் கதைக்கிறிங்க”. அவனது குரலால் செல்லனின் கதையும் சிந்தனையும் முடிவுக்கு வந்தது. செல்லனின் சிந்தனை குழம்பி நிமிர்ந்து பார்த்தான். மீண்டும் கன்ரின் பொடியன் “ஐயா அந்த அக்கா கூப்பிடுறாங்க. போய் பாருங்க” கூறிவிட்டுச் சென்றான். செல்லன் எழுந்து நின்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டு நடந்தார். யன்னல் கம்பிகளைப் பிடித்தபடியே எட்டிப் பார்த்தார்.
“தங்கச்சி .. என்ன பருவம். கிடைச்சிதா?”“ என்ன பருவம் ? உங்கட பதிவு இங்க இல்ல. அது டமேஜா போச்சு”“டமஜ் என்டால் என்ன?“டமஜ் என்றால் அழிஞ்சி போச்சி உங்கட பதிவு இங்க இல்ல. இனி நீங்க வேறெங்காவது போய்த் தேடிப் பாருங்க.” “வேறெங்க போய்த் தேடுவது. நான் இந்த இடத்திலதானே பொறந்தனான்”?“கொழும்பு மாளிகாவத்தயில போய்ப் பாருங்க” “நான் கொழும்பிலயா பொறந்தனான். நான் இதில இருந்த எங்கட வீட்டிலதான் பொறந்தனான்.” செல்லன் ஆத்திரத்தோட அந்த எழுது வினைஞரைப் பார்த்தார்.“அதெப்பிடி இல்லாமப் பேகும். வேறென்ன வழி செய்யிறது”? எழுதுவினைஞர் அங்கில்லை. செல்லனின்ன உள்ளம்பேசியது.“யாழ்ப்பாணத்தில முஸ்லிங்கள குடி எழுப்பினது பிழையென்று சொல்லுறாங்க. அப்பிடியென்றால் நாங்க தமிழர்கள். நாங்க பரம்பரையாக வாழ்ந்த இந்த இடத்தில இருந்து எங்கள முஸ்லிம்கள் அரசாங்கத்தின்ர உதவியோட குடி எழுப்பியது சரியா? சொந்த மண்ணில் பிறந்ததற்காக அத்தாட்சியையும் தொலைத்து விட்டாங்களே? வேதனைப் பட்டார். “ஐயா! இந்தாங்க“! அந்த எழுது வினைஞர் ஒரு பத்திரத்தை அவர் கைகளில் திணித்து விட்டுப்போனார்;. ‘பதிவுப்புத்தகத் தேடுதல் விளைவு’. “திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் கிழக்குப் பகுதியின் பிறப்பு பதிவின் மூலமும், இணைப்பும் பழுதடைந்து இருப்பதால் மறுபக்கத்தில் குறிப்பிட்ட செல்லன் என்பவரது பிறப்பு பதியப் பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியாதவனாயுள்ளேன்’;. என்ற சான்றிதழ் அவரைப் பார்த்துச் சிரித்தது. நான் இங்க பொறக்கல்லையா? பிறந்த சொந்த மண்ணிலேயே நான் அகதியா? செல்லன் தடுமாறினார்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP