கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
7
ஆனந்தனுக்கு நினைவு திரும்பியிருந்தது. மழை பெய்துகொண்டிருந்தது. குளிர் சில்லிட்டது. வெறும்; சிமெந்துத் தரையில் குறுகிக் கிடந்தான். எழும்பமுடியாது உடல் வலித்தது. “நான் எங்கே இருக்கிறேன். இதெல்லாம் கனவா”? அவசரமாக கழிவறை அழைத்தது. எப்படிப்போவது? மெதுவாக இரும்புக்கதவின் கம்பிகளைப் பிடித்து எழுந்தான். முனங்கலோடு "சேர்“ சத்தமிட்டான். சிப்பாய் வந்தான். "மொக்கத்த ...என்ன?" சிங்களத்தில் கூறிப் பின் தமிழிலும் சொல்லிச் சத்தத்தோடு வந்தான். இவன் சொன்னான். " மட்ட ஹரி..கறதறபாங். சரியான கரைச்சல்....“ சிப்பாய் முணுமுணுத்தான். திறப்பை எடுத்து வந்து இரும்புக்கதவைத் திறந்து விட்டான். "யன்ட...போ“ சொன்னான். மெதுவாகத் தவழ்ந்து கழிவறைக்குள் சென்றான். சுவரைப்பிடித்து ஒருவாறு நின்று சிறுநீர் கழித்தான். மெதுவாகத் திரும்பினான். தடுமாறி விழப்போனவனை அந்தச்சிப்பாய்தான் தாங்கிக் கொண்டான். ஆனந்தனை அறையினுள் விட்டுப் பூட்டிவிட்டான். ஆனந்தன் அப்படியே சுருண்டு கொண்டான்.
ஆனந்தன் மேரியைத் திருமணம் செய்த நாளில் இருந்து படுக்கையை அவன் விரித்ததில்லை. உணவு தயாராக இருக்கும். கை கழுவுவதற்குத் தண்ணீர் தயாராய் இருக்கும். கை அலம்புவதும் உண்பதுவும்தான் அவனது வேலை. படுக்கை விரித்திருக்கும். படுத்தெழும்புவதுதான் அவனது கடமை. மேரி அவனது வேலைகளை எல்லாம் தானே முன்னின்று செய்வாள். இன்று வெறும் சிமெந்துத் தரையில் கிடக்கிறான். அவனது வாய் அடிக்கடி மேரியின் பெயரை முணுமுணுக்கும். நெஞ்சு விம்மி அழும். ஆனந்தனைத் தனது குழந்தையாகவே மேரி கவனித்தாள்.
சற்று நேரத்துக்குள் அந்தச் சிப்பாய் வந்தான். "மே... மேக்க பொண்ட...இதைக்குடி“ என்று தேநீர் கோப்பையைக் கொடுத்தான். ஆனந்தனுக்கு ஆச்சரியம். ஆனந்தன் நன்றியோடு வாங்கிக் கொண்டான். அந்தக்குளிருக்கும், கடும் பசிக்கும் தேநீர் அமிர்தமாக இருந்தது. குடித்தான். சிப்பாய் வந்து கதை கொடுத்தான். தன்னை அறிமுகம் செய்தான். அரைகுறைத் தமிழில் உரையாடினான். தனது மனைவி ஒரு ஆசிரியர் என்றான். கல்விக்கடமை செய்பவர்கள் நல்லவர்கள் என்று அந்த ஆசிரியை கூறியதைப் பலதடவைகள் சொன்னான். "நான் என்னால் முடிந்த உதவியைச் செய்வேன். நான் கடமையில் இருக்கும் போது அடிக்கவிட மாட்டேன்“ என்றான். அவன் சொன்னதுபோல் கடமையில் உள்ளபோது யாரும் அடிக்கவில்லை. அவனது டியூட்டி முடிந்து விட்டது. அவன் ஆனந்தனிடம் வந்தான்.
"மாத்தையா.... மம யனவா. கியலாத்தமாய் யன்னே. பயவெண்ட எப்பா“ என்றான். "நான் போகிறேன். இவர்களிடம் சொல்லி விட்டுத்தான் போகிறேன்.“; என்றான். ஆனந்தனுக்கு ஆச்சரியம். தன்னை இவனொருவனாவது மதிக்கிறானே. மரியாதையாகக் கதைக்கிறானே. அவனுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தான். அவனை அழைத்தான். "உங்க மனைவியின் பெயரென்ன“? கேட்டான். "தயாவதி. மூன்றுமுறிப்புப் பாடசாலயில படிப்பிக்கிறார்“. சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான். தயாவதியை நினைவிருத்திப் பார்த்தான். அவன் சென்றபின் பலர் வந்தார்கள். போனார்கள். ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை காவல் கடமை மாறும். இரவு நடுச்சாமம் கழிந்து சரியாக மூன்று மணி. இரும்புக் கதவு கிறீச்சிட்டது. "அடோவ் ... உம்ப கொட்டியாத? பலமு“ நீ புலியா? பார்ப்போம்“ கூறிக்கொண்டு பல சிப்பாய்கள் அறையினுள் புகுந்தார்கள். சரமாரியாக அடித்தார்கள். ஆனந்தன் மெதுவாக அறையின் மூலைக்குள் ஒதுங்கினான்.
விலா எலும்புகளை மறைத்து முழங்கைகளால் பாதுகாப்புக் கொடுத்தான். முதுகு, பிறடி, எங்கும் சரமாரியாக அடிவிழுந்தது. என்ன கொடுமை? இவர்கள் மனிதர்களா? தமிழரெல்லாம் புலிகளா? இவர்கள் புலிகளை உருவாக்குகிறார்களா? புத்தபிரான் இதற்காகவா புத்ததர்மத்தை உருவாக்கினார்? மனிதர்களுக்கு அஞ்ஞானத்தைப் போக்கி அறக்கருத்துக்கள் ஊடாக மெய்ஞானத்தைப் போதித்த போதிமாதவனைப் பின்பற்றுபவர்களா இவர்கள்? சாக்கிய இனத்தவரான புத்தர் எங்கே? இலங்கைச் சிங்களவர்கள் எங்கே.? எல்லாச் சிங்களவர்களும் அப்படியா? இல்லையே. தன்னோடு வேவைசெய்யும் உதவிப்பணிப்பாளர் திசநாயக்க அதிபர் அப்புகாமி. இவர்களெல்லாம் அற்புதமான மனிதர்கள். அவன் யோசனை விரிந்தது.
நானும் எனது மூதாதயரும் இந்த இலங்கைத்தீவில்தான் பிறந்தோம். இந்த நாட்டுக்குடிமக்கள் நாங்கள். இலங்கை சிங்களவர்களுக்குரியதா? சிங்களவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? சிங்கபாகு யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவன்? விஜயன் யார்? தனது தந்தையாலே மொட்டை அடித்து நாடு கடத்தப்பட்டவன். எப்படி இலங்கைக்கு வந்தான்? குவேனியை ஏமாற்றி தம்பபன்னியைக் கைப்பற்றினான். இயக்கர். நாகர் எங்கே? புத்தர்தானும் இலங்கையர் இல்லை. சிங்கம் இலங்கையில் இல்லை. இதுவே சிங்களவருக்கோ அல்லது புத்தருக்கோ சொந்தமில்லாத தீவு. 'மகாவம்சம்’ சோடிக்கப் பட்டுள்ள கற்பனைகள் நிறைந்த பாளிமொழியில் எழுதப்பெற்ற நூல்தான். உண்மையான வரலாறு கொண்ட நூலல்ல. மகாவம்சத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் பல இதிகாசப் புராணக் கதைகள். ஹம்சனின் கதை புராணக் கதையாகும். ஹம்சனின் உயிருக்கு அவனது தங்கையின் வயிற்றில் உருவாகும் ஆண்குழந்தையினால் அழிவு எனக் கூறப்பட்டுள்ளது. மகாவம்சத்தில் பாண்டுகபாயனின் வரலாறாக திரிபுபடுத்தப் பட்டுள்ளது.
வாலகம்பாகு பல தோல்விகளைக் கண்டுள்ளான். தோல்வியோடு குகையில் தங்கியிருந்த போது ஒரு சிலந்தி வலைபின்னுவதைப் பார்த்தான். அது ஒரு இடத்தில் இருந்து மறுமுனைக்குப் பாய்ந்து வலையினைப் பொருத்தவேண்டும். பலமுறைகள் முயற்சித்தது. அந்த முயற்சிகளைக் கணக்கிட்டான். ஏழுதடவைகள் முயற்சித்தது. எட்டாவது முறை அது வெற்றி கண்டது. அவனும் ஏழு முறை முயன்றான். போரில் வெற்றி பெறமுடியவில்லை. சிலந்தியின் முயற்சியை எண்ணிப் பார்த்தான். அவனது உள்ளத்தில் புத்துணர்ச்சி பொங்கியது. எட்டாவது தடவையாக படையெடுத்தான். வெற்றி பெற்றான்.
இக்கதை 'றொபட் புறூஸ்’ மன்னனது கதையைப் பிரதிபலிக்கிறது. இலங்கை தனியே ;தமிழருக்குச் சொந்தமானதுதானா?. விஜயன் பாண்டிய இளவரசியை மணந்ததாகவும் அவனது சந்ததியினர்தான் சிங்கள மக்கள் எனவும் கூறப்படுகிறது. அப்படியாயின் சிங்களவர்கள் தமிழ்த்தாயின் பிள்ளைகள் அல்லவா? இலங்கையின் கடைசிமன்னன் யார்? எப்படிச் சிங்களவர்கள் இந்த நாட்டைச் சொந்தங் கொண்டாடலாம். ஐரோப்பியர் இந்த நாட்டுக்கு ஏன் வந்தார்கள்.? யார், எப்படி இந்த நாட்டைப் ஐரோப்பியருக்குக் காட்டிக் கொடுத்தார்கள். பதவிக்காகச் சிங்களப்பிரதானிகளே காட்டிக் கொடுத்தார்கள். சிங்களவர்களை ஆங்கில அரசு சிறைப்யிட்டபோது சிங்களவர்களைச் சிறை மீட்டது யார்? ஆனந்தனுக்கு சிப்பாய்கள் அடித்தது வலிக்வில்லை. அவனது மனம் இறுகிக் கொண்டு வந்தது. கிரேக்க, ரோமானிய புராண இலக்கியங்களைப் படித்திருக்கிறான். அந்த இலக்கியங்களில் காணப்படும் அதியற்புதக் கதைகள் பலவற்றை மகாவம்சம் கொண்டுள்ளதை அலசினான்.
ஆளப்பிறந்தவர்களின் சதிவலைகளை அவன் இருளில் கிடந்தவாறே கிளறிப்பார்த்தான். எந்தநாட்டிலும் இந்தச்சதி நடக்கத்தான் செய்கிறது. மண்ணாசை, பெண்ணாசை, பதவியாசையால்தான் சதிவலைகள் உருவாகின. இலங்கைமேல் படையெடுத்த மன்னர்களையிட்ட சிந்தனை வந்தது. வந்த அத்தனை மன்னர்களும் தமிழரின் நலனுக்காக என்ன செய்தார்கள்?. ஆண்டபரம்பரை என நாம் மார்தட்டிக்கொள்ள நமக்கு என்ன அருகதையுண்டு. நாங்கள் சாதாரண குடிமக்கள்தானே. ஆண்டவர்கள் ஆண்டு போய்விட்டார்கள். சாதாரண குடிமக்கள் சண்டையிடுகிறோம். இந்தியக்குடியினரா நாங்கள். தமிழ்மொழிதானே தென்னிந்தியாவோடு எம்மை இணைத்துள்ளது. தமிழர்களை ஓரணியில் சேர்க்க உதவுகிறது.
போத்துக்கீசரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் ஆண்டபோது நாம் அடிமைகளாகக் கிடந்தோம். அப்போது ஆட்சியாளர்களுக்குக் கைகட்டி ஆமாம்போட்டவர்களது வாரிசுகள் இன்று சுகபோகத்தை அனுபவிக்கக் கற்றுக் கொண்டார்கள். அதனால் வந்த வதையிது. ஆனந்தனின் மனம் போர்க்களமானது. சிந்தனை நாலாபக்கமும் சிதறியது. சந்தர்ப்பவாத அரசியலில் குளிர்காயும் போலிகள் இன மத மொழியினை வேறுபடுத்திக் காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இன்றைய அமெரிக்கர்கள் யார்? ஐரொப்பியர் அமெரிக்காவில் குடியேறி, அங்கு காலங்காலமாக வாழ்ந்த பழங்குடியினரான செவ்விந்தியர்களை கொன்றழித்து விட்டு தங்கள் நாடென்று தனித்துவம் பேசுகிறார்கள். மாயா, இன்கா இனமக்கள் பேரும்புகழோடும் வாழ்ந்த நாகரீகம் மிக்க பழங்குடியினர். இன்று அந்த இனங்களின் தடயமே இல்லை. அதேபோல் இலங்கையில் வாழ்ந்த நாகர், இயக்கர் இனங்களும் வரலாற்றில் மட்டுமே பேசப்படுகிறார்கள்.
இந்த இலங்கைத் தீவில் காலங்காலந் தொட்டு இரு இனமான சிங்களவர்களும், தமிழர்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள். காலகதியில் முஸ்லிம்களும் சேர்ந்து விட்டார்கள். இலங்கை எவ்வளவு அழகான நாடு. இன்று இங்கு மூவின மக்கள் வாழ்கிறார்கள். இவர்களை ஒற்றுமைப் படுத்தி இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி காணலாம். என்ன வளமில்லை இந்த இலங்கை நாட்டில். சிறிதும் பெரிதுமாய் நூற்றுக்குமேல் நதிகள் பாய்கின்றன. வற்றாது ஓடுகின்ற பெரும் நதிகளுண்டு. நல்ல மண்வளமுண்டு. உழைக்கும் மக்களுண்டு. எல்லோரும் மனம் வைத்தால் வல்லரசாக மாறலாம். ஆனால் சுயநலக்கும்பல் இனமத, மொழியின் பெயரால்; பிரிவினையைக் காட்டி அழிவுப்பாதையில் செல்கிறார்கள். இவர்களை என்ன செய்வது.?
"இந்தச்சிப்பாயின் துப்பாக்கியைப் பறித்து அழித்துவிட்டுப் புரட்சிவாதியாய் மாறினால் என்ன? எனக்கு என்ன தெரியும்? துப்பாக்கியை என்னால் ஏந்தமுடியுமா? என்னால் இன்னொரு உயிரைப் பறிக்க முடியுமா? நான் படித்த கல்வி எனக்குக் கோழைத்தனத்தைத் தந்திருக்கிறது. எங்களை வளர்த்தெடுக்கப் பாடுபட்ட அம்மாவைக் காப்பாற்றவேண்டும். அப்பா இல்லாத தம்பிமார், எனது மனைவி பிள்ளைகளும், இந்தச் சமூக அமைப்பும் எனக்குத் தடையாக உள்ளன. சீ... நானும் மனிதன்தானா“? மனதுக்குள் கேள்விகள் வேழ்வியாகக் கொழுந்துவிட்டெரிந்தன. மனம் இடிந்து அழுதது. அடித்துக் களைத்தவர்கள் கதவை இழுத்து மூடிவிட்டுச் சென்றார்கள்.
நுளம்பின் தொல்லை தொடர்ந்தது. ஆனந்தனுக்கு உறக்கம் இல்லை. இரத்தக்கறை படிந்து காய்ந்த சுவரில் சாய்ந்திருந்தான். சாய்ந்தபடி உறங்குவதும் எழுவதுமாகக் கனவுலகில் இருந்தான். இருக்கும் இடங்களை மாற்றி மாற்றி அந்தச் சின்ன இருள்படிந்த அறைக்குள் கிடந்தான். அவனது உடல் சிறைப்பட்டுக் கிடந்தது. ஆனால் அவன் மனம் இந்தப்பிரபஞ்ச இரகசியங்களை அறியும் ஆசையில் உலாவந்தது. மூலையில் சாய்ந்தவாறே கால்களை நீட்டிச் சாய்ந்திருந்தான். அவனது உடமைகளான டயறியும், பேனாவும் பக்கத்தில் கிடந்தன. வாகனங்கள் இரைந்து கொண்டிருந்தன. நுளம்பு மட்டும் இசைபாடிச் சுதந்திரமாக இரத்தம் குடித்துச் செல்கின்றன.
'ஏய் ..ஏய் ..நுளம்பே
உனக்குள்ள சுதந்திரம்
எனக்கில்லை - நீ
இரைந்து வருகிறாய்
இரத்தம் குடிக்கிறாய்
பறந்து போகிறாய் - நான்
பகலிரவு தெரியாப்
பாவியாய் கிடக்கிறேன்.
போ... போ.. அப்பால்
பிடித்து உன்னையும்
போடுவார் சிறையில்;.
கவிதையாய் வரும். டயறியில் கிறுக்குவான். அலுப்பும், அழுகையும் அவன் துணையாகும். கடும் மழை பெய்து கொண்டிருந்தது. நடுச்சாமம் கழிந்துவிட்டது. கும்மிருட்டில் மின்சார வெளிச்சத்தின் ஊடுருவல். இரும்புக்கம்பிக் கதவிடுக்கால் மழைவீழ்ச்சி தெரிந்தது. வெள்ளித்தாரைகள் கொட்டிய வண்ணமாகத் தெரிந்தது. குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. குடித்த தேநீர் உடலுள் சென்று சிறுநீரைப் பெருக்கியது. மெதுவாக எழுந்தான். கதவினைப் பிடித்தவாறு "சேர்“ என்றான். கடமையிலிருந்தவன் கடுப்போடு வந்தான். சைகைமூலம் காட்டினான். முணுமுணுத்தவாறே கதவினைத் திறந்தான். தாரைதாரையாக மழைநீர் கொட்டிக் கொண்டிருந்தது. கழிவறையை நோக்கி நடக்க முயற்சித்தான்.
"ஒத்தன யன்ட எப்பா மெத்தன தாண்ட.“ அங்கே போகாதே. இதிலே அடி“ சிப்பாய் சிங்களத்தில் சொன்னான். கூரையால் வடியும் நீரை சுழன்றடிக்கும் காற்று விறாந்தையெங்கும் வாரி விளாசியது. விறாந்தையின் விளிம்பில் நின்றவாறே சிறுநீரைக் கழித்தான். நிலத்தில் இருந்து விறாந்தை ஒன்றரை அடி உயரமுடையது. மழைநீர் பரவி எங்கும் வெள்ளக்காடாய்த் தெரிந்தது. ஆனந்தன் அதனை எதிர்பார்க்க வில்லை. பின்னலிருந்து இடுப்புக்குக்கீழ் விழுந்த உதையால் ஆனந்தன் மழைநீரில் குப்புற விழுந்தான். மழைநீரும், சகதியும் அவனைக் குளிப்பாட்டியது. அந்தக் குளிரில் மெதுவாகக் கைகளை நிலத்தில் ஊன்றி எழுந்தான். படிந்த சேற்றை மழைநீரிலேயே கழுவினான். தொப்பாய் நனைந்து நடுங்கினான்.
தொடரும்
0 comments:
Post a Comment