கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
20
ஆனந்தனுக்கு நினைவு திரும்பியிருந்தது. ராஜபக்சதான் எழுப்பினான். "மாத்தயா மேக்க பொண்ட.. இதைக்குடியுங்க..“ தேநீரைக் கொடுத்தான். இனி அடிக்காமப் பார்ப்பது என்ர கடமை. என்ர நோனாக்கு ...உங்களத் தெரியுமாம். மிச்சம் நல்ல மனிசன் என்றும் சொன்னா. எப்படி இதுநடந்தது என்று விசாரிச்சன். உங்கடவங்கதான் பிட்டிசன் எழுதியிருக்காங்க. எங்கட பெரிய கொமாண்டரும் சொன்னார். இன்டைக்கு டாக்டர் வருவார். உடம்பைக் காட்டுங்க. என்ன செய்யிறது. கஸ்டம் வந்தால் அப்படித்தான். நம்மளுக்கும் மனவருத்தம்தான்.“ அவன் உண்மையாகவே வருந்தினான். மெதுவாக எழுந்தான். வெளியில் கழிவறைக்குப் போகவேணும். கதவைத் திறந்து கழிவறைக்குப் போக உதவினான். முடிந்ததும் மெதுவாக அறையினுள் கொண்டுவந்து விட்டான்.
"மாத்தையா! நல்லா அடிச்சிருங்காங்க... முகமெல்லாம் வீங்கியிருக்கு“. அனுதாபத்தோடு சொன்னான். மெதுவாகத் தன்கையினால் தடவிப்பார்த்தான். தொட்ட இடமெல்லாம் தடித்திருந்தது. நோந்து வலித்தது. வாயைத் திறந்து தேநீரையும் குடிக்கமுடியாத அளவுக்கு உதடுகள் வீங்கியிருந்தன. புருவங்கள் புடைத்திருந்தன. உடல் முழவதும் வலித்தது. சேட்டில் தொட்டந் தொட்டமாக இரத்தக்கறை. தன்விதியை நொந்து கொண்டான். நான்படும் இந்தத் துயரம் இனி எந்த இளைஞர்களும் படக்கூடாதது. இறைவனை வேண்டிக் கொண்டான். விட்டு விடுதலையாகி எனது மனைவி பிள்ளைகளோட போய் சேரவேண்டும். அவள் அங்கே எப்படி இருக்கிறாளோ?. கவலை அவனை ஆட்கொண்டது. மெதுவாக தேநீரைக் குடித்தான்.
"மாத்தையா...இப்ப டாக்டர் வருவார்...உடம்பைக் காட்டுங்க...சரியா? சொல்லிவிட்டு அவனது கடமையில் மூழ்கினான். அவன் சொன்னதுபோலவே டாக்டர் வந்தார். ராஜபக்ச கதவைத் திறந்துவிட்டான். அவன் வெளியே நின்று அவதானித்தான். டாக்டரைக் கண்டதும் மெல்ல எழுந்தான். "குட்மோர்னிங். ஐ ஆம் ஆனந்தன். டிப்பியூட்டி டிரக்டர் ஒப் எடுயுகேசன்“ கஸ்டப்பட்டுத் தன்னை அறிமுகம் செய்தான். சொற்கள் வரமறுத்தன. தனது அடையாள அட்டையைக் காட்டினான். அவனிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்தன. அதிலொன்று கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை. மற்றையது தேசிய அடையாள அட்டை. அவர் நெகிழ்ந்து போனார். ஒரு புன்னகையுடன் அவனைக் கவனமாகப் பரிசோதித்தார். "ஐ ஆம் டாக்டர் சுனில்“ அவர் கூறினார். அவனைப்பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தார். அனுதாபப்பட்டதை அவரது முகம் காட்டியது. அவரும் பெரும்பான்மை இனத்தவர்தான்.
"கான் யு றிமூவ் யுவர் சேட் பிளிஸ்“ டாக்டர் சொன்னதும் மிகக்கஸ்டத்துடன் கழற்றினான். உடல் நீலம்பாரித்து அடிகாயத் தழும்புகள் தெரிந்தன. "ஓ..மை கோட்...“ டாக்டர் விறைத்துப் போனார். "இப்படியுமா? மே... சார்ஜன் ..மே...மொக்கத...பளன்ன.. மெயாகே அங்க..ஒக்கம ..துவால. சார்ஜன்...இதென்ன. இவரது மேனியெங்கும்...காயங்கள்“ அவர் உண்மையிலேயே அனுதாபப் பட்டார்.
"ஐ கான்ட் ரொலறெற் தீஸ் திங்ஸ். கி இஸ் அன் ஒபிசர். என்னால் இவற்றைப் பொறுத்துக் கொள்ளமுடியாது. இவர் ஒரு அரச உத்தியோகத்தர்“ வேதனையோடு சொன்னார். "அப்பி ஒக்கம மினிசு... நாங்கள் அனைவரும் மனிதர்கள்“ அவரது வாய் முணுமுணுத்தது. ஒரு தாளை வரவழைத்தார். நிறையவே எழுதினார். ஓன்றைக் கொடுத்தார். காவலறையில் பார்வைக்கு வைக்கும்படி கொடுத்தார். கடமைக்கு வரும் காவலர்களுக்கு அறிவுறுத்தலாக இருந்தது. "மே... சார்ஜன்..மேயாட்ட காண்ட இடதென்ட எப்பா..இவருக்கு அடிக்க இடம்கொடுக்க வேண்டாம்.“ சொல்லிவிட்டு ஆனந்தனிடம் வந்தார். மருந்து கொடுத்து விடுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். சொன்னபடி மருந்து வகைகளை ராஜபக்ச கொண்டு வந்து கொடுத்தான்.
ஒரு கிழமை நிம்மதியாக அடிவதை இல்லாது நாட்கள் நகர்ந்தன. விடிவதும், பொழுது படுவதும் அவனுக்குத் தெரியாதிருந்தது. இந்தச் சித்திரவதை முகாமுக்குள் வந்து எத்தனை நாட்கள்?. "மாத்தயா!“ கூறிக்கொண்டு ராஜபக்ச வந்தான். "அத தவச ஒகொல்லாங்கே உற்சவ தவச. நேயத? இன்றைய நாள் உங்கள் பெருநாள். பொங்கல் நாள் அல்லவா“? கேட்டான். "மகே நோனா கிறிபத் ஹதலா துன்னே. ஓயாட்ட தென்ட கியலா. கண்ட.. எனது மனைவி பொங்கல் செய்து உங்களுக்குக் கொடுக்கும்படி தந்தவர் இந்தாங்க சாப்பிடுங்க“. சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றான். அவனுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்று ஒன்றும் தெரியவில்லை. தன்னைக் கைது செய்த நாளைக் குறித்திருந்தான். தனது தினக்குறிப்பைப் பார்த்தான். மூன்று கிழமைகள் நகர்ந்திருந்தன.
ராஜபக்சயின் மனைவியை நினைத்துக் கொண்டான். அவள் தயாவதி. ஒருநாள் கல்வி அலுவலகம் வந்திருந்தாள். தனது கணவன் தூரத்தில் கடமையாற்றுவதாகவும், தனக்கு பக்கத்தில் உள்ள மூன்றுமுறிப்புப் பாடசாலைக்கு இடமாற்றம் தரும்படியும் கேட்டாள். அவளைப் பார்த்ததும் கட்டாயம் இடமாற்றம் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தாள். தூரத்தில் கடமையாற்றுவதால் வஸ்சில் பயணம் செய்யவேண்டியிருந்தது. அவள் கடமையாற்றும் பாடசாலை அதிபரும் சிபார்சு செய்திருந்தார்.
ஒரு கர்ப்பவதிக்கு இதையாவது செய்யவேண்டும் என்பதால் உடனடியாக இடமாற்றத்தைச் செய்து கொடுத்தான். ஒரு நாள் பாடசாலை மேற்பார்வைக்காக அப்பாடசாலைக்குச் சென்றபோது அதிபர் அவளது கடமையுணர்வைப் பற்றிப் புகழ்ந்தார். அவளும் வந்து நன்றி கூறினாள். "நான் எனது கடமையைத்தான் செய்தேன்“. மனதினுள் நினைந்து கொண்டான். அந்த நன்றியை அவள் மறக்கவில்லை. எல்லாச் சிங்களவர்களும் இனவிரோதிகள் இல்லை. சாதாரண மக்கள் நல்லவர்கள். இனவிரோதத்தை வளர்த்து விடுபவர்கள் சுயநல அரசியல்வாதிகள் என்பதை ஆனந்தன் அறிந்திருந்தான். இச்செயல் தமிழர்களிடமும் இருந்தது. முஸ்லிம்களிடமும் இருந்தது.
பொங்கலை வாயில் வைத்தான். உண்ணமுடியாதிருந்தது. போட்டிருந்த உடைகள் அழுக்கேறிக் கறுத்திருந்தன. டெனிம்துணி தடிப்பானது. அது தாக்குப் பிடிக்கும். ஆனால் சேட் கிழிந்து அழுக்கடைந்து பிணவாடை வீசியது. அவன் குளித்துப் பலவாரங்கள் கடந்து விட்டன. "ஒரு கல்விப்பணிப்பாளர் ஆதிவாசியாக ஆகிவிட்டார“; என்று தனக்குத்தானே சொல்லிச் சிரித்தான். விலங்குகள்கூடப் பற்களைத் துப்பரவு செய்வதாக அறிந்திருந்தான். சில குரங்குகள் பல் துலக்குவதாக வாசித்திருந்தான். "நான் பல்துலக்குவதில்லை. குளிப்பதில்லை. தலைவாருவதில்லை. படுக்கை விரித்துப் படுப்பதில்லை. எனக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்“?. தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.
"மாத்தையா! அடுத்தகிழமை கூட்டுப்படை முகாமுக்கு அனுப்புவாங்கபோலக் கிடக்கு. பேசிக்கொண்டாங்க. அங்க போனா சி.ஐ.டி விசாரிக்கும். பிறகு விட்டிடுவாங்க“ ராஜபக்ச ஒருநாள் சொன்னான். "எப்ப விடுவாங்க“? ஆவலோடு கேட்டான். "உங்கட உடம்புல காயங்கள் இருக்குத்தானே? அது சுகமாகமட்டும் இஞ்சதான் வெச்சிருப்பாங்க. டாக்டர் ஒருக்கா பார்த்தபின்தான் றிலீஸ் வரும். அதுவரை இங்கதான். ஆனால் இனி அடிக்கமாட்டாங்க. டாக்டர் சரியான றிப்போட் போட்டிருக்கார்“;. அவன் சொன்னவற்றை எண்ணிப் பார்த்தான். ஆனாலும் அவனுக்கு நம்பிக்கையில்லை.
இரவுவேளையில் கடமைக்கு வரும் சிப்பாய்கள் வந்து முறைத்துப் பார்த்து விட்டுச் செல்வார்கள். "அடோவ் கொட்டியா... ஒயலாட்டப் பாடமக் தென்டோன. அடேய்..புலி...உங்களுக்குப் பாடமொன்று தரவேணும்“. சொல்லிக் கொண்டு போவார்கள். அவர்கள் காவலில் உள்ள இளைஞர்களை வதைத்தெடுப்பார்கள். "இந்த இளைஞர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவன் மனம் அழும். இப்போது அவனது கண்களில் இருந்து கண்ணீர் வருவதில்லை. காலம் திருகோணமலை – கொழும்புக் கோச்சியைப் போல் ஊர்ந்தது. நாட்கள் வாரங்களாகி மாதமும் முடிந்து அரைவாசியாகியது. அவனுக்கு விடிவுதான் வரவில்லை.
கப்ரன் செனிவரத்ன வந்தான். ஆனந்தனின் கண்கள் அவனைக் கண்டு கொண்டன. இவன் ஏன் வாறான்? மனம் படபடத்தது. ராஜபக்ச கடமையில் இருந்தான். அவனிடம் ஏதோ கதைத்தான். சில படிவங்கள் நிரப்பப்பட்டன. கப்ரன் கையெழுத்திட்டுக் கொடுத்தான். ராஜபக்ச செனிவரத்னயுடன் வந்தான். கதவு திறபட்டது. ஆனந்தனை வெளியில் அழைத்தான். அவன் வந்தான். சிங்களத்தில் உரையாடினான். ராஜபக்ச அரைகுறைத் தமிழில் அதனை மொழிமாற்றம் செய்தான். கப்ரன் சொல்வது ஆனந்தனுக்கு நன்றாக விளங்கியது. உங்கள எங்களுக்கு முன்பின் தெரியாது. உங்கட ஆக்கள்தான் பிட்டிசன் போட்டது. நாங்க விசாரிச்சம். காட்டில் இருட்டில் எது மான், எது மரை, எது புலி என்று விளங்காது. அதைக்கண்டு பிடிக்கவேண்டியது எங்கட கடமை. அதுக்காக எல்லத்தையும் புடிச்சி வந்து விசாரிக்கிறம். உண்மையை அறிய உங்கள அடிக்க வேண்டியிருந்தது. அதுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுறம். சமாவென்ட...மன்னித்துக் கொள்ளுங்க.“ கப்ரன் சொல்லி முடித்தான்.
ஜீப் வந்தது. "என்ட...“ ஆனந்தனை அழைத்தான். ராஜபக்ச "யன்ட மாத்தயா..போங்க“ என்றான். ஆனந்தன் அவனுக்கு நன்றி கூறினான். பக்கத்தின் அறைக்கதவுகளை நோட்டம் விட்டான். பலமுகங்கள் எட்டிப்பார்த்;தன. அந்த முகங்களில்தான் எத்தனை சோகங்கள். காவல் அறைகளில் இருந்து அழைத்துச் செல்லப் படுபவர்கள் அதிகமாக விசாரணக்கென அழைத்துச் செல்லப்படுவார்கள். பலர் திரும்பி வருவதேயில்லை. அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது ஆண்டவனுக் குத்தான் வெளிச்சம். சிலரைச் சித்திரவதையின்பின் கொண்டு வந்து விடுவார்கள். ஆனந்தனுக்கு என்ன நடக்கப்போகிறது என்று அவர்களுக்கு ஏக்கம். பரிதாபமாகப் பார்ப்பதைத் தவிர வேறு ஒன்றும் அவர்களால் செய்யமுடியாது.
செனிவரத்ன ஜீப்பின் முன்னாசனத்தில் ஏறியிருந்தான். ஐந்து சிப்பாய்கள் நின்றனர். ஆனந்தனை ஏறச் சொன்னார்கள். அவன் இருக்கையில் இருக்காது கீழே இருந்தான். அவனை சீற்றில் இருக்குமாறு சிப்பாய்கள் கூறினார்கள். அவனுக்குப் பயம் கௌவிக்கொண்டது. இப்படி இருக்கச் சொல்வார்கள். இருந்தால் அடித்துக் கீழே போட்டு மிதிப்பார்கள். அவன் தயங்கினான். கப்ரனே சொன்னான் "கமக்நஹ...சீற்றெக்க வாடிவென்ட...பரவாயில்லை சீற்றில் இருக்கலாம்“. சீற்றில் இருந்தான். ஜீப் இராணுவமுகாமை விட்டு வெளியில் வரைந்தது. வவுனியா நகரின் ஊடாகச் சென்று நகரசபை வளாகத்தில் நின்றது.
இராணுவத்தினர் இறங்கினார்கள். ஆனந்தனும் இறங்கினான். நகரசபை கூட்டுப்படை முகாமாக மாறியிருந்தது. நகரசபை இயங்கவில்லை. இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது. அங்கு முப்படையினரும் இருந்தார்கள். எங்கும் இராணுவத்தினரும், வாகனங்களுமாக நிறைந்திருந்தது. ஆனந்தனுக்குக் காவலாக வந்த இராணுவ வீரர்கள் ஜீப் பக்கம் நின்றார்கள். கப்ரன் ஒரு அறையினுள் நுழைந்தான். சற்று நேரத்தால் ஆனந்தனை அழைத்தான். கப்ரன் முன்னால் சென்றான். பின்னால் ஆனந்தன் சென்றான். ஓரு அறை அலுவலகம்போல் இருந்தது. எழுதுவினைஞர்களாகப் பல பொலிஸார்கள். ஒருவரிடம் கோவையைக் கொடுத்தான். அவர் பெயரைப் பதிந்தார். மற்ற மேசையில் உள்ளவர் உயரம், நிறை அகியவற்றைக் கணித்துப் பதிந்தார். இன்னுமொருவர் விரலைப் பிடித்து அழுத்திக் கைவிரல் அடையாளங்களை பதியச்செய்தார். முடிந்ததும் வெளியில் வந்தான். அவனைப் போல் பலர் நின்றிருந்தனர்.
காத்திருந்த இன்னுமொரு பொலிஸக்காரர் ஆனந்தனது கைகளைப் பிடித்தான். பக்கத்தில் நின்ற இன்னுமொருவரது கையோடு சேர்த்து விலங்கை மாட்டினான். ஆனந்தன் அதிர்ந்துவிட்டான். ஒரு குற்றமும் செய்யாத அப்பாவியின் கைகளுக்கு விலங்கா? உடல் வெடவெடத்தது. மனம் அழுதது. இது ஒரு நாடா? பேயரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள். எவ்வளவு அற்புதமாகப் பாரதி சொன்னான். பேனா பிடித்து 'ஆனா’ச் சொல்லிக் கொடுத்த கைகளில் விலங்கினை மாட்டி வேடிக்கை பார்க்கிறது நீதி. என்ன கொடுமை. இளைஞர்கள் வன்செயலில் இறங்குவதற்கு இவையெல்லாம் காரணங்கள்தானே? கைவிலங்கோடு சோடி சோடிகளாய் அழைத்துச் சென்றார்கள். ஒரு அறையின் கதவைத் திறந்தான். விலங்கைக் கழற்றிவிட்டான். உள்ளே போகும்படி பணித்தான்.
தொடரும்
0 comments:
Post a Comment