கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
23
பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதால் அடிவிழாது என்ற நம்பிக்கை வந்தது. ஒரு உணவுப்பொடலம் வந்தது. பாதியை உண்டான். மீதியைக் குப்பைக் கூடையில் போட்டான். சுவரில் சாய்ந்தவாறே தனிமையில் இருந்தான். தனிமை பொல்லாதது. உடல் ஒரு இடத்தில் இருக்கும். ஆனால் உள்ளம் உலகமெல்லாம் அலைந்து வரும். மேரியின் நினைவில் மூழ்கிப் பெருமூச்செறிந்து உருகினான். பிள்ளைகள் எப்படி இருப்பார்களோ? நான் தனிமையில் இங்கு இருக்கிறேன். ஆனால் அவள் அங்கிருந்து இராமனை நினைந்துருகும் சீதையைப் போல் நினைந்து நினைந்துருகி மூர்ச்சிப்பாளே. அவனது கண்கள் பனித்தன. கண்ணீர் மல்க ஏங்கித்தவித்தான்.
மூன்று மணியிருக்கும். ஒருவரைக் கொண்டு வந்தார்கள். அவன் பரமன். செட்டிகுளத்தில் பொதுச்சேவை செய்வதில் வல்லவன். பிறருக்கு உதவுவதிலும் முன்னிற்பவன். சூதுவாது தெரியாத அப்பாவி. காது கொஞ்சம் மந்தம். ஆனந்தனைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம். அவனைக் குட்டியென்றுதான் அழைப்பார்கன். ஆனந்தனை பரமனால் அடையாளம் காணமுடியவில்லை. பரமனை அந்த அறையில் போட்டுப் பூட்டிவிட்டுச் சென்றார்கள். ஆளுக்காள் ஆறுதலாக இருந்தது. மெதுவாக உரையாடினார்கள். அவனையும் ஆமிபிடித்து வதைத்ததைச் சொன்னான். இப்போது இந்த அறையில் இருவர் மட்டுமே இருந்தார்கள். ஆனால் அடுத்த அறையில் பலர் இருந்தார்கள். வெளியில் நடப்பதை அறியமுடியாது. இருவரும் அறையில் இருந்த மேடைக்கட்டிலில் சாய்ந்திருந்தார்கள். சாய்ந்தவாறே கண்ணயர்வதும், விழித்தெழுவதுமாகப் பொழுது கழிந்து கொண்டிருந்தது.
மாலை ஐந்து மணியாகிவிட்டது. கதவு திறக்கப்பட்டது. "அத்துளட்ட யன்ட. உள்ளே போ“. போலிஸ்காரர் இன்னொருவரை உள்ளே தள்ளினார்கள். "அலெக்ஸ் வாங்க. எங்களுக்குத் துணையா அல்லது காவலா“? கேட்டவாறே அலக்சாந்தரை வரவேற்றார். பேயறைந்த முகமாக இருந்த அலெக்சாந்தரின் முகத்தில் ஒரு மின்வெட்டுப் புன்னகை பளிச்சிட்டது. அவர் யாவற்றையும் மறந்து "சேர்..“ மெய்மறந்து தழுவிக் கொண்டார். அலக்சாந்தரின் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலத்தது. "என்னை ஆமிக்காரர் வந்து தேடினார்களாம். எனக்குத் தெரியாது. அவர்களிடம் அகப்பட்டால் சித்திரவதை செய்வார்கள். பயந்துபோனன். நமது பாதர் அருட்தந்தை ஜோசப் அவர்களோடு வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தன். என்ன அநியாயம் சேர். உங்களையுமா சேர்...? அலக்சாந்தர் கண்ணீர் சிந்தினார். "நான் மட்டுமென்ன விதிவிலக்கா? கடவுளை இவர்கள் இன்னும் காணவில்லை. கண்டால் அவரையும் பிடிச்சிச் சித்திரவதை செய்வார்கள்“;. ஒரு சிரிப்போடு ஆனந்தன் பதிலளித்தான்.
அலெக்சாந்தர் செட்டிகுளம் கல்லூரியின் பதில் முனைவராகக் கடமையாற்றுபவர். ஒரு கிறிஸ்தவருக்கு உரிய அடக்கம், நேர்மை, கடமையுணர்வு கொண்டவர். பிறரை மதிப்பதிலும், மாணவர்களை உயர்த்தி விடுவதிலும், உதவிகள் செய்வதிலும் முன்னிற்பவர். சிறந்த விளையாட்டு வீரர். ஊரவரால் மதிக்கப் படுபவர். நல்லதொரு மனைவி, மூன்று பிள்ளைகள் அவரது சொத்து. பாடசாலை வளர்ச்சியில் முழுநேரத்தையும் போக்குபவர். சிறியதொரு குறையைக் கண்டாலும் அதற்காக வருந்துபவர். அவரையும் இந்தக் கூண்டுக்குள் போட்டு விட்டார்களே. என்ன ஆட்சியிது. தமிழராகப் பிறந்தால் இவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டுமா? இங்கு நடக்கும் இந்த ஆட்சிமுறைகளை எந்த நாட்டு மக்களாவது அறிந்திருக்கிறார்களா? சாதாரண மக்கள் வேற்றுமையில்லாது வாழும்போது, அவர்களைப் பிரித்து, முரண்பாடுகளைத் தோற்றுவித்து அவற்றில் தங்களை வளர்த்து இன்பங்காணுகிறார்களே. ஆனந்தனது உள்ளம் கொதித்தது.
நடுச்சாமம் கதவு திறபட்டது. பத்துப்பேர்களைக் கொண்டு வந்து அடித்தார்கள். அவர்கள் அலறினார்கள். அறையில் தள்ளிப் பூட்டினார்கள். இருக்கவும் இடமில்லை. சிலர் நின்றார்கள். அவர்களில் பலர் தண்ணி யடித்திருந்தார்கள். சாராயநெடில் வீசியது. அத்தனைபேரும் கிராமப்புறச் சிங்களவர்கள். சிங்களத்தில் கதைத்துக் கொண்டார்கள். ஆனந்தன் எழுந்து குந்திக்கொண்டான். அவர்களில் சிலர் கிராமத்துச் சண்டியன்கள். முரட்டுத்தனமான பார்வை தெரிந்தது. "மொக்கட்டத ஆவே..“? ஒருதனிடம் விசாரித்தான். "மாடு கொண்டு போகும்போது பிடிச்சாங்கள்“. ஒருதன் சொன்னான். திருட்டு மாடு கடத்திப் பிடிபட்டுவிட்டார்கள் என்பது பின்னர்தான் தெரியவந்தது. "ஆநிரை கவர்தல் பண்டைய மன்னர்களின் செயலாக வழிவழிவந்த கலையல்லவா..? கிரேக்கர்களும் இச்செயலில் வல்லவர்கள். அது வீரமாகப் போற்றப்பட்டது. இப்போது இவர்கள் செய்தால் அது திருட்டு. என்ன ஞாயம்.? ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்தது. 'சமரசம் உலாவும் இடமே... நம் வாழ்வில் காணா..சமரசம் உலாவும் இடமே’ பாடலடிகள் அவன் மனதில் வந்து குந்தியிருந்து கும்மாளமடித்தது.
'இடுக்கண் வருங்கால் நகுக’. வள்ளுவன் கூற்று வாயில் வந்தது. மாட்டுக் கள்வர்களுடன் ஆனந்தனும், அப்பாவி அதிபரும், பரமனும் ஒன்றாகக் கூண்டினுள் இருக்கும் காலம். கிளியும் பருந்தும் ஒருகூட்டில் நளனது ஆட்சியில் இருந்ததாம். புகழேந்தி பாடினான். நமது ஜனநாயக ஆட்சியில் கல்விப்பணிப்பாளரும், அதிபரும் முரட்டு மாட்டுக் கள்வர்களும் ஒரு கூட்டில் உள்ளார்களே. அற்புதமான ஆட்சியல்லவா? எந்தப் புலவன் பாடப்போகிறானோ? மெல்லச் சிரித்தான். "என்ன சிரிக்கிறீங்க..“? பரமன் கேட்டான். "மாட்டுக்கள்வர்களுடன் கள்வர்களாக நாங்களும் கிடக்கிறோம். அதுதான்“. பரமனுக்கும் சிரிப்பு வந்தது. அலக்ஸாந்தர் மௌனித்திருந்தார். அவருக்கு முரட்டு ஆசாமிகளைக் கண்டாலே பயம். சிறுநீரின் மணம் அறையெங்கும் பரவி மூக்கைத்துளைத்தது. கண்களை மூடியபடியே எண்ணவோட்டத்தில் மிதந்தான். குந்தியிருந்தவாறே பாதியிரவு கழிந்துபோனது.
விடிந்து விட்டது. பொலிஸ்நிலையம் சுறுசுறுப்பானது. கடமை மாற்றம் இடம் பெற்றது. இரண்டு மூன்று பேர்களாகக் கழிவறைகளுக்குக் கூட்டிச்சென்றார்கள். ஆயதமேந்திய பொலிஸ்காரர் காவலிருந்தார்கள். கைவிலங்கு போடவில்லை. பெரியதொரு தண்டனை குறைந்திருந்தது. மனதில் உரமற்றவர்களாக மனிதர்களை மாற்றுவது இவ்வாறான செயல்களே என்பதைப் புரிந்து கொண்டான். உளவியல் ரீதியான தண்டனை மன அழுத்தங்களை ஏற்படுத்துவன. அந்த அழுத்தத்திலிருந்து விடுபட நாட்கள் எடுக்கும். ஆனந்தன் உளவள உறுதியுள்ளவன். அவனால் இவற்றைத் தாங்கிக் கொள்ளும் சக்தியிருந்தது.
காலை எட்டரை மணிக்கு மாட்டுத்திருடர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய வேண்டுமாம். அவர்களை ஆயத்தமாகும்படி சில பொலிஸ்காரர்கள் வந்து கூறினார்கள். அடிக்கடி பலதரப்பட்ட பொலிஸ்காரர்கள் வந்து கதவினூடாகப் பார்த்தார்கள். கதைத்தார்கள். போலிஸ்காரரைக் கண்டால் பயந்தமாதிரி இருப்பார்கள். அவர்கள் போனதும் ‚கைவாறு’ அடிப்பார்கள். தங்கள் வீரதீரச் செயல்களைப் பரிமாறிக் கொள்வார்கள். எல்லாம் திருட்டுச் சம்பவங்களாகவே இருந்தன. சில பொலிஸ்காரர்கள் அவர்களிடமிருந்து வெற்றிலை பாக்குப் பெற்றுச் வாயில் போட்டுச் சென்றார்கள். ஒருவர் அவர்களைப் பார்த்தபடி வந்தார். அவரது கண்களில் ஆனந்தனின் உருவம் பட்டுவிட்டது. அவர் உசாரானார். மீண்டும் எட்டிப் பார்த்தார். "சேர்... நீங்களா...ஓ..மைகோட்...“ பெரும் ஆச்சரியத்தோடு கேட்டார். "மே..றாளஹாமி... என்ட“ ஒரு போலிஸ்காரரை அழைத்தார். உடனடியாக மாட்டுக்கள்வர்களை வெளியில் எடுக்குமாறு பணித்தார். பல பொலிஸ்காரர்கள் வந்து அவர்களை அழைத்துக் கொண்டு போனார்கள்.
"சேர்.... நான் லீவில போயிருந்தன். இப்போதுதான் வந்தேன். இவங்களோடு எப்படி இருந்தீங்க? நான் இருந்திருந்தால் விட்டிருக்கமாட்டன்“. கவலையோடு சொன்னார். "பரவாயில்ல..அவர்களும் மனிதர்கள்தானே? பார்க்கப் போனால் அவர்களுக்கு நாங்களும் திருடர்களாகத்தான் தெரிந்திருக்கும்“. வழமையான தமாசோடு பதிலளித்தான். "இவங்கள் அடிக்கடி இங்கு வாறவாங்கதான். சரியான திருட்டுப் பேர்வழிகள். ஆனால் இனக்குரோதம் இல்லாத அப்பாவிகள்“. கூறிக் கொண்டே திரும்பிப் பார்த்தார். பொலிஸ்காரர் சிலர் வந்தார்கள். கதவினைத் திறந்து அவர்களை அழைத்துச் சென்றார்கள். "மே...றாளஹாமி... மே...மாத்தயளா இன்ன கூடுவே .. சிங்களத்தில் விளக்கி..."இந்த ஐயாமார் இருக்கிற கூட்டுக்குள்ள வேறு யாரையும் போடவேண்டாம்.“ கட்டளை பிறப்பித்தார்.
"நான் உங்கட பைலைப் பார்க்கிறன். ஏச். கியு... வருவார். அவரிட்டயும் கதைக்கிறன். சரியான வேலையிருக்கு. கொஞ்ச நேரத்தில வந்து பார்க்கிறன்“. சொல்லிவிட்டு நடந்தார். அவர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கணபதிப்பிள்ளை. நல்ல மனிதநேயமுள்ள அதிகாரி. ஆனந்தனை நன்றாக அறிந்தவர். பரீட்சைக் காலங்களில் இந்தப் பொலிஸ்நிலையத்தில்தான் பரீட்சை வினாப் பொதிகளை வைப்பது வழக்கம். கல்விவிடயமான கூட்டங்களில் பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொள்வார்கள். அதனால் ஆனந்தனுக்குப் பலபொலிஸ் உயரதிகாரிகள் பழக்கமாக இருந்தார்கள். கணபதிப்பிள்ளையின் மனைவியும் ஒரு ஆசிரியை. அதனால் ஆனந்தனிடம் மிகவும் மரியாதை வைத்துள்ளவர். அவர் மூலம் ஆனந்தன் பொலிஸ்நிலையத்தில் இருக்கும் செய்தி ஆசிரிய சமூகத்துக்குப் பரவியது.
பத்து மணி. கணபதிப்பிள்ளை வந்தார். "சேர்...யோகதாசுக்குச் சொல்லியனுப்பி இருக்கிறன். அவர் இப்ப உங்களுக்கு வேண்டிய உடுப்புக்களக் கொண்டு வருவார். உங்களப் பார்க்கக் கவலயாக் கிடக்கு. கிழிஞ்ச சட்டை. அழுக்கான காற்சட்டை. தாடி மீசை. எத்தன நாளாய் குளிக்கல்ல“? அக்கரையோடு வினவினார். "இன்ஸ்பெக்டர்.... இது எனக்கு மடடுமல்ல. நமது தமிழ் இளைஞர்களுக்கும், ஓரு தவவாழ்க்கை. இரண்டரை மாதங்களாக சுத்தமான சுகவாழ்க்கை அனுபவிக்கிறன். தினமும் சேவ் எடுப்பதில்லை. பல்தேய்த்து முகங்கழுவி, சோப் போட்டுக் குளிப்பதில்லை. உடைமாற்றுவதில்லை. பௌடர் போடுவதில்லை. பாய், படுக்கை விரித்துத் தலையணையில் உறங்குவதில்லை. ஆனால் எனக்குத் தினமும் பூசைநடக்கும். இப்ப அது குறைஞ்சிற்று. இதெல்லாம் எல்லாருக்கும் கடைப்பதில்லை. என்னைப்போன்ற ஒருசிலருக்கே கிடைக்கிறது. இது ஒரு தவவாழ்க்கைதானே“? புன்சிரிப்போடு ஆனந்தன் விளக்கினான். அலக்சாந்தருக்குக் கண்கள் கலங்கின. பரமன் பார்த்துக் கொண்டிருந்தான்.
யோகதாஸ் வந்தார். ஆனந்தனைக் கண்டதும் கண்ணீர் விட்டு அழுதார். "சேர்....நாங்க நினைக்கேல்ல... இப்பதான் போனமூச்சி வந்தமாதிரிக் கிடக்கு“. அவரது கையில் சாரம், சவர்க்காரம், துவாய் இருந்தது. "சேர்...போட்டிருக்கிற உடுப்புக்களைத் தாங்க. நான் லோன்றிக்குக் குடுத்து எடுத்து வைக்கிறன்“;. யோகதாஸ் கேட்டார். "யோகதாஸ்...இந்தக்கால்சட்டை சேட்டோடு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் கிடக்கிறன். இது கின்னர்ஸ் சாதனை. என்ன“? சொல்லியவாறு சாரத்தை மாற்றினார் யோகதாஸ் கொண்டுவந்த உடுப்புக்களை மாற்றினான். கிழிந்து அழுக்கடைந்த உடுப்புக்களைச் பேப்பரால் சுற்றிக் கொடுத்தான்.
கணபதிப்பிள்ளை வந்ததும் மூன்றுபேரையும் குளிப்பதற்கு வெளியில் வருமாறு அழைத்தார்.
பொலிஸ்காரர் சுற்றிக் காவலுக்கு நின்றார்கள். ஆளுக்கொரு குளியலைறைக்குள் புகுந்தார்கள். தண்ணீர் பட்டதும் இதமாக இருந்தது. ஆனால் ஆனந்தன் அந்தச் இதத்தை அனுபவிக்கவில்லை. உடலெல்லாம் வலித்தது. சோப்பைத் தலைக்குப் போட்டுத் தேய்த்தான். கைவிரல்களோடு கற்றை கற்றையாகத் தலைமுடி கழன்று வந்தது. தண்ணீரில் மிதந்து அடையலாகச் சென்றது. எவ்வளவு முடி? மனம் முனங்கியது. அந்தநேரத்திலும் மேரியை நினைந்துருகினான். மனம் சற்று நேரத்தில் எவ்வளவு தூரம் செல்கிறது. எத்தனையாயிரம் நினைவுகளைச் சுமந்து வருகிறது. அந்த நினைவுகள் எவ்வளவு சுகத்தைத் தருகிறது. அதேவேளை எத்தனை துயரங்களைச் சொல்லிச் செல்கிறது.
"அத்தான் எவ்வளவு அடர்த்தியான முடி. சுருள் சுருளாக என்னைக் கிறங்கச் செய்கிறது“. ஆனந்தனின் தலைமுடிக்குள் தனது விரல்களை விட்டு அளைந்து கோதிக் கொண்டே மேரி அனுபவித்துக் கூறியதை நினைவிலிருத்தினான். அவளின் ரசனையை அனுபவித்தவன். "மேரி.. நீ இதனைக் கண்டால் எவ்வளவு கவலை கொள்வாய். நீ இதனைப் பார்க்காது விட்டது நல்லது“. பெருமூச்செறிந்து தனது உணர்வுகளை உதிர்த்து விட்டான். காற்றோடு அவைகளும் கரைந்து போயின. குளித்து வெளியில் வந்தார்கள். ஆனந்தனுக்கு உடற்பாரம் குறைந்து காற்றாய் இருப்பதுபோல் ஒரு உணர்வு. பகல் உணவு வந்தது. பரமனின் மனைவி கொண்டு வந்திருந்தார். அவர் பரமனைப் பார்த்து அழுதார். அலக்சாந்தரையும், ஆனந்தனையும் பார்த்து "உங்களுக்கும் இந்த நிலையா சேர்“? கேட்டுக் கண்கலங்கினார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் வரத்தொடங்கி விட்டார்கள். அதிபர் பாலசிங்கம் அற்புதமான பிறவி. காலையில் பெரிய வெந்நீர்;;க் குடுவையில் தேநீர் கொண்டு வருவார். இரவில் பலவிதமான உணவுவகைகளைச் சுமந்து தருவார். "சேர் கடவுள் இல்லசேர். இருந்தா இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு இருப்பாரா? உங்களக் கூட்டுக்குள்ள கம்பிக்குப் பின்னால் காணும்போது எங்கட மனம் துடிக்குது சேர்“;. கண்ணீர் சிந்தியவாறே திருச்செல்வம் அதிபர் அழுதார். "அதிபர் சின்னப்பிள்ளைகளாட்டம் அழுவதா“? ஆனந்தன் அவரைத் தேற்றினான். "திரு ......நான் இங்கிருந்து பார்த்தால் நீங்கதான் உள்ளே இருப்பது போல் தெரிகிறது“. ஆனந்தன் நகைச்சுவையோடு கூறினான். "எப்படி சேர்......உங்களால இப்படிக் கதைக்க முடியுது“.? திருச்செல்வம் கேட்டார். சுண்ணாம்புக் காளைவாயில் நாவுக்கரசரைப் போட்டார்கள். அவருக்கு சுண்ணாம்புக் காளவாய் 'வீசுதென்றலும், வீங்கிள வேனிலும், மூசும் வண்டறைப் பொய்கையும் போன்ற’தாயிருந்ததாகப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறீர்கள் அல்லவா? நமது மனதில் சத்தியம் நிறைந்துள்ளதால், வைராக்கியம் அப்பரின் மனநிலைக்குக் கொண்டு சென்றுவிடும்“. தத்துவக் கருத்துக்களை உதிர்த்தான். வருகிறவர்களுக்கு ஆனந்தனே ஆறுதல் கூறினான்.
தொடரும்
0 comments:
Post a Comment