Thursday, May 13, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

15

மயூரி, அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். படலைவரை சென்று வழியனுப்பி வைத்தாள். அப்படியே யோசப் மாஸ்ரர் வீட்டுக்குப் போனான். ஆனந்தனுக்கு அந்த வீட்டில் நல்ல மதிப்பிருந்தது. பீற்றசன் ஆனந்தனின் வீட்டில் தங்கியிருந்துதான் பாடசாலைக்குப் போவான். இருவரும் ஒரே அறையில்தான் இருந்தார்கள். அதனால் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். மயூரியைப் பற்றி அடிக்கடி பீற்றசன் ஆனந்தனோடு அளவளாவி இருக்கிறான். உதவி செய்து தரும்படி கூறியும் இருக்கிறான். பீற்றசன் சனி,ஞாயிறு விடுமுறைகளில் தனது வீட்டுக்கு வந்து விடுவான். ஆனந்தன் தனது கிராமத்திலேயே இருப்பவன். திருகோணமலை நகருக்கு வந்தால் டேவிட் வீட்டிலும், பீற்றசன் வீட்டிலும் நிற்பான். அவன் இரு வீட்டாருக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பவன்.

ஆனந்தன் படலையில் நின்றவாறே பீற்றசனை அழைத்தான். "டேய்...உன்னை யார்டா படலையில் நின்று சத்தம்போடச் சொன்னது? நேரே வருவதுதானே. இது நமது வீடுடா“. ஏசியவாறே பிற்றசன் வந்து படலையைத் திறந்தான். "நீ படலையைப் பூட்டி வைத்தால் நான் எப்படி உள்ளே வருவது? சொல். எங்கட கிராமப்புறம்போல் இங்கு இல்லை. இடத்துக்கிடம் அப்படித்தான் இருக்கவேண்டும்.“ ஆனந்தன் கூறிக்கொண்டே பின்னால் போனான். யோசப் மாஸ்ரர் வந்து நலம் விசாரித்தார். பின்புறம் உள்ள தோட்டத்துக்குள் சென்றார். தோட்டத்தை எட்டிப் பார்த்தான். அவர் அழைத்தார். பீற்றசனும் கூடவே சென்றான். எத்தனை வகைப் பயிர்கள். முக்கனித் தோட்டம் அது. பலவகையான மரக்கறி வகைகள். பூஞ்செடிகள். அவர்களது வீடு நாப்பது பேர்ச்சர்ஸ் நிலப்பரப்புக்குள் இருந்தது. திட்டமிட்டு வீட்டினை அமைத்திருந்தார். சிறிய மாட்டுத் தொழுவமும் இருந்தது.

தங்களுக்குத் தேவையான பாலை இரண்டு பசுக்கள் கொடுத்தன. பயிர்களுக்குத் தேவையான பசளையைப் பக்குவமாகத் தயாரிக்க வசதிசெய்திருந்தார். அவன் பிரமித்துப் போனான். கிளிசறியாத் தடிகளை ஊன்றிப் பழைய சைக்கிள் வளையங்களை திணித்து இறுக்கியிருந்தார். அவை கூடுகளாகக் காட்சியளித்தன. அதனுள் குப்பையையும், சாணத்தையும் போட்டுக் கிளறி விடுவார். பொலித்தின் தவிர்ந்த ஏனைய கழிவுகள் இந்தக் கூடுகளில் இடப்படும். அவை கூட்டுப்பசளையாகும். கூட்டின் அடிப்பகுதியில் சிறு வாயில் இருக்கும். அடிப்பகுதியில் இருந்து கூட்டுப் பசளையை எடுத்து பயிர்களுக்கு இடுவார். நிலத்தைச் சிறு மேடைகளாகப் பிரித்து பயிரிட்டிருந்தார். ஓரு மேடையில் கத்தரியிருக்கும் இன்னொன்றில் மிளகாய், மற்றதில் வெண்டி. தக்காளி, பந்தல்களில் புடொல், பாகல்காய்கள் தொங்கின. வாழைகள் குலைதள்ளித் தலைகுனிந்து நின்றன. இளம் தென்னைகள் குலைகயோடு ஆடின. „பென்சன் எடுக்கும் வரை ஆசிரியர். இப்போது முழுநேர விவசாயி. உடலுக்கும், உள்ளத்துக்கும் உகந்தது. இதில் ஊறினால் உற்சாகம் பிறக்கும்“. சிரித்தவாறே மாஸ்ரர் கூறினார்.

பல அரசாங்க உயரதிகாரிகள் பென்சனுக்கு மனுக்கொடுத்ததும் ஏங்கிவிடுகிறார்கள். உயர்இரத்த அழுத்தத்துக்கு ஆளாகி நோய்வாய்ப் படுகிறார்கள். பென்சனுக்குப் பின்னர்தான் ஒரு மனிதனுக்குக் கடமைகள் காத்திருக்கின்றன என்பதை மறந்து விடுகின்றனர். சந்தோசமாக இருக்க வேண்டிய காலத்தில் சஞ்சலப் படுகிறார்கள். யோசப் மாஸ்ரர் விதிவிலக்கானவர். அவர் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார். அதிகாலையில் படிப்பு. அதன்பின் ஒரு பொடி நடை. பின்னர் தோட்டத்தில் வேலை. குளிப்பு. உணவு. சந்தைக்குப் போதல். பத்திரிகை வாசித்தல். சமையலுக்கு மனைவிக்கு உதவுதல். உணவு. சற்று ஓய்வு மாலைமுழுதும் தோட்டத்தில் பயிர்களோடும், பசுக்களோடும. பேரக்குழந்தைகளோடும்; விளையாடி இன்புறல். நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று நலம் விசாரித்தல் என்று பெரிய கால அட்டவணைப்படி நடப்பவர். என்றும் இளைஞனாகப் பவனி வருபவர். அவரை எண்ணி வியந்தான்.

பீற்றசன் அப்பாவோடு பழகி அவரையே பின்பற்றுபவன். அவன் மாலையில் விளையாட்டுத் திடலில் நிற்பான். விடுமுறை தவிர்ந்த ஏனைய நாட்களில் வீட்டில் நிற்பதை விரும்பாதவர். தோட்டத்தைப் பார்த்துவிட்டு வந்தார்கள். பீற்றசனின் அம்மா தேநீர் கொண்டு வந்தார். "ஆனந்தன் இரவுக்கு நின்று போங்களன்.“ அம்மா அன்பாக வேண்டுகோள் கொடுத்தார். "இல்லையம்மா. நான் அவசரமாக வந்தனான். இப்பவே போகவேணும். நிறைய வேலைகள் கிடக்கு. இன்னொரு நாளைக்கு வாறன்“;. கூறிச்சமாளித்தான். "பீற்றசன் உன்ர விசயமாக நேரடியாகத் தெரியப் படத்திப்போட்டன். இனி உன்ர அப்பா அம்மாவின் சம்மதம் பெறுவது உனது கடமை. ஆனால் நான் அவர்களோடு கதைத்தது மயூரிக்குத் தெரியாது. இப்போது தெரியாது இருக்கட்டும். நாளை நாங்க கொழும்புக்குப் போறம். நீ ஸ்ரேசனுக்கு வாறாய். இதச்சொல்லத்தான் வந்தனான். எனக்கு நேரம் போகுது. நான் வரட்டா? சொல்லிக் கொண்டு தோட்டத்துக்குள் சென்றான். "ஐயா! நான் வாறன்“ அவரது பதிலுக்குக் காத்திராது புறப்பட்டான்.

"ஆனந்தன் எப்படி வந்தநீ.“? பீற்றசன் கேட்டான். "காரா வைத்திருக்கிறன். கால்நடைதான்“. "இரு..இரு.. நான் சைக்கிளை எடுத்திட்டு வாறன். வஸ் ஸ்ராண்டில விடுறன்.“ பீற்றர் சைக்கிளைத் தள்ளினான். ஆனந்தன் சைக்கிள் பாரில் இருந்து கொண்டான். வஸ்நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தான். வஸ் புறப்பட்டதும் பீற்றர்சன் வீடு திரும்பினான். வஸ் கண்டி வீதியால் சென்று நாலாம்கட்டைச் சந்தியில் இடப்பக்கமாகத் திரும்பி சீனாக்குடாவை நோக்கி விரைந்தது. பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பெற்றோல் குதங்களை அமைத்தார்கள். பிரித்தானியரின் ஆட்சிக்குள் இருந்த நாடுகளில் இருந்து கூலிகளைத் தமது வேலைகளுக்குப் பயன்படுத்தினார்கள். சீனாவிலிருந்து வந்த கூலிகள் இந்த இடத்தில் வாடியடித்துச் செயற்பட்டார்கள். சீனர்கள் தங்கியிருந்த இடம் சீனக்குடா என இன்றைவரை அழைக்கப்படுகிறது. இந்தக் குதங்களின் மேல்தான் இரண்டாம் உலக யுத்தத்தின்போது யப்பானியர் குண்டு வீசித்தாக்கினர். அங்கிருந்த மக்கள் பலதிசைகளுக்கும் பரந்தோடினார்கள்.

இன்று இந்த எண்ணெய்க் குதங்களை இந்தியா குத்தகைக் கெடுத்துள்ளது. வஸ் விமானத்தளத்தைத் தாண்டி கிண்ணியாத் துறையை அடைந்தது. கிண்ணியாத் துறையை படகு மூலம் கடந்து தனது சைக்கிளை எடுத்துக் கடற்கரை வீதியால் ஆலங்கேணிக் கிராமத்தை அடையும்போது இருட்டிவிட்டது. ஆனால் நிலவு ஒளியைப் பரப்பி வெளிச்சத்தைக் கொடுத்தது. தனது வேலைகளை முடித்தபின் குளித்து வந்தான். அப்படியே கோயிலுக்குச் சென்று தனது கனவுகளை கணேசப் பெருமானிடம் ஒப்புவித்தான். என்னவோ தெரியாது. இறைவன் சந்நிதியில் பிரார்த்தனையில் ஈடுபட்டபின் உள்ளத்தில் ஒரு தெம்பும், உற்சாகமும் பிறந்து விடுகிறது. அதிலே ஒரு நிம்மதியை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். துன்பங்களில் இருந்து விடுபட இறைவன் சந்நிதி சிறந்த இடமாகப்பட்டது.

வீடு வந்ததும் அம்மா உணவுக்கு அழைத்தார். வந்தான். அம்மா உணவுப் பொருட்களை ஒழுங்கு செய்த முறை அவனைப் பிரமிக்கச் செய்தது. சுற்றிவரப் பாய்விரித்திருந்தார். மத்தியில் சோற்றுப்பானை. சோற்றுப் பானை கழுவப்பட்டு திருநீறு மூன்றிடத்தில் பூசப்பட்டிருந்தது. சோற்றுப்பானையைச் சூழக் கறிவகைகள். தட்டுக்களில் சோறு பரிமாறப்பட்டுக் கறிவகைகள் குவிந்திருந்தன. நிலவில் வட்டமாக இருந்து சாப்பிடுவது எவ்வளவு சந்தோசம். அம்மா, அப்பா. தங்கை, தம்பிமார் புடைசூழ சாப்பிடுவதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது. தம்பிமாரின் தட்டில் கைபோட்டுத் திருடிச் சாப்பிடுவதும், அவர்கள் சத்தமிடுவதும் சொல்லிலடங்காச் சுகங்கள்;. கறிவகைகளோடு உண்டபின் இளமுறைத் தயிருடன், யானை வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து அம்மா தருவதுதான் தேவாமிர்தம். உணவோடு சேர்த்து கொழும்பு செல்லும் செய்தியை அம்மாவிடம் சொன்னான். அம்மா மூலம் அப்பாவின் அனுமதியும் கிடைத்தது. சந்தோசத்தோடு உறக்கம் ஆட்கொண்டது.

ஆனந்தன் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டான். ஆனந்தனின் வீட்டின் பின்புறம் பெரிய தோட்டம் இருந்தது. அப்பாவுக்கு உதவியாக நீரிறைத்தான். பயிர்களுக்குப் பாய்ச்சினான். அப்பா பால்கறந்து வந்தார். அம்மா தேநீர் தயாரித்ததும் அழைத்தார். குடித்தான். காலை உணவின்பின் பாடசாலைக்குச் சென்று ஒரு கண்ணோட்டம் விட்டான். விடுமுறை நாட்களிலும் பிள்ளைகள் படிப்பதற்கேற்ற ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தான். ஒவ்வொரு வெள்ளி மாலையும் கோயிலில் கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். ஏழு மணியிலிருந்து எட்டரை வரை பிள்ளைகள் வகுப்புக்களில் இருந்து படிக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஒழுங்கமைப்பை ஏற்படுத்தியிருந்தான். ஆசிரியர்கள் மேற்பார்வை ஒழுங்குகளைக் கவனித்தார்கள். கிராமம் எழுச்சியை நாடி நிமிரத் தொடங்கியது.

தான் கொழும்புக்குப் போகும் விசயத்தை தனது உயிர்நண்பன் தங்கராசாவிடம் மட்டுந்தான் பகிர்ந்து கொண்டான். இருவரும் தமது அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அதிலே ஒரு சுகத்தையும் கண்டார்கள். மூன்று மணிக்குப் புறப்பட்டால்தான் உரிய நேரத்துக்குச் செல்லலாம். வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டான். வீட்டில் விடைபெற்றுப் புறப்பட்டான் தங்கராசா கிண்ணியாத் துறையடிவரை வந்து வழியனுப்பிவைத்தார். சரியாக ஐந்து மணிக்கு மயூரியின் படலையைத் தட்டினான். மயூரி பயணத்துக்குரிய ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தாள். ஆனந்தனைக் கண்டதும் முகம் மலர்ந்தாள். டேவிட் உற்சாகத்தோடு உலாவந்தார். ஸ்ரனிஸ் தானும் ஸ்ரேசனுக்கு வருவதாகச் சொன்னார்.

இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. எது பொய்த்தாலும் இரவும் பகலும் பொய்ப்பதில்லை. சூரியனும் சந்திரனும் கிழக்கில் உதிப்பதை மாற்றவே இல்லை. மேற்கில் மறைவதையும் மறக்கவில்லை. உலகம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. காலையும், மாலையும் வரத்தான் செய்கிறது. இந்த நியதி மாறாத தன்மையா? அல்லது ஒரு நாள் இவை யாவும் மாற்றம் அடையும் தன்மை கொண்டனவா? இவை புரியாத புதிர்கள்;தான்.

வாடகைக் கார் 'ரக்சி’ வந்தது. பொதிகளை ஏற்றியதும் ஏறிக் கொண்டனர். 'ரக்சி’ விரைந்து சென்றது. ஸ்ரேசன் வந்ததும் இறங்கி உள்ளே சென்றார்கள். ஸ்ரனிஸ் ஏற்கனவே இருக்கைகளைப் பதிவு செய்து ரிக்ற்றையும் எடுத்திருந்தார். வண்டியில் ஏறிக்கொண்டார்கள். தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்தனர். ஆனந்தனின் கண்கள் பீற்றசனைத் தேடின. அவன் வந்து கொண்டிருந்தான். ஆனந்தன் தன்னிருக்கையை விட்டு எழுந்தான். "அண்ணா! எங்கே போறீங்க. நேரமாகிறது. வாங்க..இருங்க.“ மயூரி குசுகுசுத்தாள். "வாறன் மயூரி. அதோ, என்ர பிறன்ட் வாறான்“. சொல்லிக் கொண்டு இறங்கினான். மயூரி எட்டிப் பார்த்தாள். அவள் எதிர்பார்க்கவில்லை. "ஐயையோ, பீற்றசன். எங்கட விசயம் உடையப்போகுதோ தெரியாது“. ஆமை எச்சரிக்கையோடு தலையை உள் இழுப்பதுபோல் தனது தலையை பெட்டிக்குள் இழுத்துக் கொண்டாள். அவள் உள்ளம் படபடத்தது.

"டேய் என்ன இவ்வளவு நேரம்? மயூரிக்குக் கேட்கக்கூடியதாக சத்தமிட்டுக் கதைத்தான். "காத்துக் காத்துக் கண்கள் பூத்துப் போச்சு. எவ்வளவு நேரம்? என்ன செய்தநீ“. ஸ்ரனிசைப் பார்த்து "ஸ்ரனிஸ்! இதுதான் என்ர பிறன்ட் பீறறர்சன். அறிமுகம் செய்தான். "எனக்கு நல்லாவே தெரியுமே. எங்கட ஸ்போர்ஸ்ட் கிளப் மெம்பர். ஹாய்...பீற்றர்சன்... எப்படி நலமா“? .ஸ்ரனிஸ் கைலாகு கொடுத்து நலம் விசாரித்தான். பீற்றர்சன் புன்னகையோடு உரையாடினான். அவனது பார்வை மயூரியின் பக்கம் போனதை ஆனந்தன் கண்டு கொண்டான். மயூரிக்கு உதறல் எடுத்தது. கையும் களவுமாகப் பிடிபடப்போறேனோ? மனம் படபடத்தது. ஆனந்தன் டேவிட்டைப் பார்த்தான். “ஐயா, இவர்தான் பீற்றர்சன். என்னோடு ஆசிரியராக இருக்கிறார்“. அறிமுகம் செய்து வைத்தான். டேவிட் புன்னகைத்தார். அவருக்குப் பீற்றர்சனைப் பிடித்து விட்டது. "எப்படித் தம்பி நலம்.“? ஒரு சம்பிரதாயத்துக்காகக் கேட்டார். "நல்லாயிருக்கிறன். நீங்க எப்படி நலமா?“;. பீற்றர்சன் பதிலளித்தான்.

"பீற்றர்சன் சைக்கிளிலா வந்தநீ.? போகும்போது ஸ்ரனிஸையும் கொண்டுபொய் விடு என்ன“? "அதுக்கென்ன. நீ சொன்னதத் தட்டியிருக்கிறேனா“? பதிலளித்தான். கதையோடு ஆனந்தன் பெட்டியில் ஏறி இருக்கையில் இருந்தான். தனது பொதியை கீழே இறக்கி எதையோ தேடினான். பின் மூடினான். "பீற்றர்சன் இதை ஒருக்கா மேலே வைத்துவிடு. வா உள்ளே“. என்றன். பீற்றர்சனுக்குச் சங்கடமாக இருந்தது. வேறு வழியில்லை. ஏறி உதவினான். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி. "பீற்றர்சன், இதுதான் எங்கட தங்கச்சி. மயூரி. மயூரி! இது என்ர பிறன்ற் பீற்றர்சன்“. அறிமுகம் செய்தான். மயூரிக்கு உயிர்போய் உயிர் வந்த உணர்வு. இந்த அண்ணனின் வேலையென்ன? அப்பா இருக்கிறார். கீழே அண்ணன் நிற்கிறார். பெரிய தர்ம சங்கடமாயிருந்தது.

"ஹலோ“! பீற்றர்சன் சொன்னான். "ஹாய்..“ மயூரியின் வாயிலிருந்து மெதுவாகச் சொற்கள் உதிர்ந்தன. ஸ்ரனிஸ் தனக்குள் சிரித்துக் கொண்டார். "எப்ப இந்த வண்டி கிளம்பும். இந்தச் சிக்கலில் இருந்து காப்பாற்று. கடவுளே கெதியாக வண்டி போகவேணும்“ இறைவனிடம் மன்றாடினாள். அவளது அப்பேதைய மனநிலையை அவள்தான் அறிவாள். இதுவரை அவர்களது இரகசியம் யாருக்கும் தெரியாது. அதேபோல் தெரிந்ததாக யாரும் காட்டிக் கொள்ளவும் இல்லை. ஓன்றும் தெரியாததுபோல் ஆனந்தன் நடித்துக் கொண்டிருந்தான். வண்டி புறப்படும் நேரத்தை முதல்மணி அறிவித்தது. நிம்மதிப் பெருமூச்சுப் பறக்க ஆயத்தமாகியது. "அப்பா. அண்ணாமுன் எப்படி அவரைப் பாரப்பது“? காதளவோடிய கண்கள் அல்லவா? கடைக்கண் அவளையறியாமலேயே பீற்றர்சனை அளந்தது. உரையாடியது. மனதுக்குள் ரசித்துக் கொண்டாள்.

இரண்டாவது மணியொலித்தது. தொடர்ந்து விசில் ஊதப்பட்டது. "அண்ணா! போய்வாறம்.“ கையசைத்த படியே மயூரி சொன்னாள். அவளின் வாயிலிருந்து வந்த சொற்கள் பொதுவாயிருந்தது. ஆனால் அதன் அர்தம் தனித்தனியானது. விளித்தது அண்ணனை. ஆனால் "போய்வாறம்“ என்றது பீற்றர்சனுக்கும் சேர்த்து என்பதை அவன் உணராமல் இல்லை. அவனும் பொதுவாகக் கையசைத்தாலும் அவளுக்காகவே கையசைத்து வழியனுப்பினான். "டேய் திங்கள் வந்துவிடுவோம். ஸ்ரேசனுக்கு வா. சேர்ந்து பாடசாலைக்குப் போவோம்“. அவர்களை விட்டு வண்டி ஓடி இருளில் மறைந்தது. ஆனால் ஸ்ரேசனில் நின்றவர்கள்தான் நிலத்தோடு ஓடிமறைவது போலிருந்தது. டேவிட் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துச் சிரித்தார். ஆனந்தனின் புத்திசாதுரியத்தை மனதார மெச்சினார்.

தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP