Thursday, May 13, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

18

கிழக்கில் சோடித்து ஒளிக்கற்றைகளை விசிறி சூரியன் புறப்பட்டது. இருள் பரந்து கலைந்தது. இந்த இருள் அனைத்தும் எங்கு ஓடி ஒளிகின்றன.? சூரியன் காலையில் கிழக்கில் தோன்றுவதை இதுகாலவரை நிறுத்தவில்லை. மேற்கில் மறைவதையும் மறந்ததில்லை. உலகம் இருக்கும்வரை இந்நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும். சீனக்குடா ஸ்ரேசனில் ஸ்ரனிஸ் வேலை முடிந்து காத்திருந்தார். அவரும் சேர்ந்து கொண்டார். "எப்படிப் பயணமெல்லாம்“? ஸ்ரனிஸ் விசாரித்தார். "எல்லாம் நல்லமாதிரி முடிந்து விட்டது. கலியாணத்தையும் மே மாதம் வைக்கிறதாத் தீர்மானித்துப் போட்டம்.“ டேவிட் பதிலளித்தார். ஆனந்தன் கிழக்குப் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். சூரியன் கோணேசமலைக்கு அப்பால் தரிசனமாகிக் கொண்டிருந்தது. அந்த ஒளிப்பிரவாகத்தில் கோணேச்சரம் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

திருகோணமலைக் கோட்டைச் சுவர்களை எண்ணிப்பார்த்தான். பிரமாண்டமான அந்தச்சுவர்களைக் கட்டுவதற்கு எத்தனை வேலையாட்கள் பணிசெய்திருப்பார்கள். எத்தனையாயிரம் கற்கள் தேவைப்பட்டிருக்கும். எத்தனையாயிரம் கற்களையும் திருக்கோணேசரின் திருக்கோயில் வழங்கியிருந்தது. கோயிலை பறங்கியர் இடித்துத் தரைமட்டமாக்கிக் கோட்டைச் சுவர்களைக் கட்டினார்கள். கட்டும்போது தெரிந்தோ, தெரியாமலோ பல சித்திரங்களை வெளியில் தெரியும்படி கட்டிவிட்டார்கள். கோயிற் கற்களில் உளிகொண்டு வரைந்த சித்திரங்கள் இருந்தன. எத்தனை வகையான சித்திரங்கள். பூக்களாக, விலங்குகளாக, அழகிய உருவங்களாக அற்புதமான சித்திரங்கள் கோடுகளாகச் சுவரின் கற்களில் தெரிகின்றன. நண்பர்களோடு மாலைப் பொழுதுகளில அந்தச்சித்திரங்களில் தன்னை மறந்து ரசித்து நின்றிருக்கின்றான்.

கோட்டை வாசலில் இரட்டை மீன்சின்னங்களையும், அதற்குரியதான பாடலையும் தெரியும்படி கட்டிவைத்த அந்தக் கொத்தனாரை நன்றியோடு நினைவு கூர்ந்தான். கொத்தனார் மட்டும் அவற்றை மறுபக்கம் மறைத்துக் கட்டியிருந்தால் தமிழரின் வரலாறே மறைந்திருக்கும். மானும், குரங்குகளும் மனிதர்களோடு உலாவரும் கோணமாமலையை எண்ணும்தோறும் இனிக்கும். இராவணன் வெட்டும், கன்னியா வெந்நீரூற்றும் சைவசமயத்தின் தொன்மையைப் பறைசாற்றி நிற்கின்றன. நாயன்மார்களை நினைந்து கொண்டான். சுந்தரமூர்த்தி நாயனாரையும், திருஞான சம்பந்தரையும் நன்றியுடன் நெக்குருகி நினைவிருத்தினான்.

பறங்கியர் கோயிலை இடித்தழிக்கு முன்னரும், இலங்கை மன்னன் மகாசேனன் கோணேச கோயிலை இடித்து அழித்துள்ளான். அதனருகில் புத்தவிகாரத்தைக் கட்டினான். இதனை இலங்கையின் வரலாற்றினைக் கூறுவதாக நம்பப்படும் மகாவம்சம் குறிப்பிடுகிறது. சமயங்களைப் பரப்பும் நோக்கோடு அரசர்களும் இருந்தார்கள். ஆதியிலிருந்தே சமயங்கள் மனிதரிடையே போட்டாபோட்டிகளை ஏற்படுத்திப் போர்களை நடத்த வழிகோலின. இலங்கைத் தீவில் இயக்கரும், நாகரும் இருந்தார்கள். விஜயனின் வருகையின் பின்னர்தான் முரண்பாடுகள் தோன்றின. சாக்கியச் சக்கரவர்த்தி துச்சோதனனின் மகனான சித்தார்த்தன் புத்தரானார். பௌத்தம் தோன்றியது. இலங்கையின் மன்னர்கள் பௌத்தத்தை ஒருபுறம் ஏற்றுப் பரப்பினார்கள். இன்னும் முரண்பாடுகள் வளரத் தொடங்கின. இலங்கையின் ஒருபுறம் சைவம் பரவியிருந்தது.

ஆதிகாலத்தில் இலங்கை இராசரட்டை, மாயரட்டை உறுகுணரட்டை என முப்பெரும் பிரிவுகளாக இருந்தன. இராசரட்டை தெதுறு ஓயாவையும், மகாவலி கங்கையையும் எல்லையாகக் கொண்டு வடக்காகப் பரந்திருந்தது. மகாவலிக்கும். வளவை கங்கையையும் எல்லையாகக் கொண்டு உறுகுணை பரந்திருந்தது. அதேபோல் வளவகங்கைக்கும் தெதுறு ஓயாவுக்கும் இடையில் மாயரட்டை பரந்திருந்தது. இராசரட்டையில் நாகர்கள் அரசாண்டார்கள். மகியங்கனைப் பகுதியில் இயக்கர்கள் ஆண்டார்கள். புத்தரின் முதலாவது விஜயத்தின்போது இப்பிரதேசத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த இயக்கரை விரட்டிவிடுவதற்காக வந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது.

அவர்களை வெளியேற்றிவிட்டு தனது மயிர்கற்றை ஒன்றை சமன் தெய்வத்துக்குக் கொடுத்தார். அத்தெய்வம் அதனை நீலமணிக்கிண்ணம் ஒன்றில் பதித்து வைத்தது. இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீபத்தில் நாகரது ஆட்சி நிலவியது. மகோதரனுக்கும், அவனது சகோதரனாகிய சுலோதரனுக்கும் இடையே மணிபதித்த அரசுகட்டிலில் பிரச்சினை நடந்தபோது அதனைத் தீர்த்து வைப்பதற்காகும். மூன்றாவது வருகை களனி எனப்படும் கல்யாணி நதியருகே தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த இடத்தில் தாகபை கட்டப்பட்டது. களனியிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்று தனது அடிச்சுவட்டைப்பதித்தார். அங்கிருந்து அனுராதபுரத்துக்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திகவாப்பிக்கும் சென்றதாக மகாவம்சம் கூறுகிறது.

உலக நாடுகளின் இன்றைய குழப்பங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பது சிலபல சித்தாந்தங்கள்தான். அவற்றை நம்புகின்றவர்களுக்கும், நம்ப மறுப்பவர்களுக்கும் இடையே ஏற்படும் பிணக்குத்தான் யாவற்றுக்கும் மூலகாரணங்களாகும். உலகம் தட்டையானது. அது ஆமையின் முதுகில் இருக்கிறது. என சமயத்தலைவர்கள் சொன்னார்கள். உலகம் உருண்டையென்று கலிலியோ கலிலி கூறினார். சோக்கரட்டீஸ் மக்களின் சிந்தனையைத் தூண்டினார். இவர்கள் தண்டனையை அனுபவித்தார்கள். இன்று நவீன தொழில் நுட்பங்கள் மலிந்து விண்ணில் வலம்வருகிறான் மனிதன். ஆனந்தனின் மனம் எங்கெல்லாமோ சுற்றி ஆராயந்து கொண்டிருந்தது. "அண்ணா! என்ன யோசனை? இறங்குவோமா? மயூரியின் குரல் ஆனந்தனை ஈர்த்தெடுத்தது. தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். "இறங்குவோம்“. கூறிக் கொண்டே உடமைகளை எடுத்தான்.

"மாப்பிளே! வாங்க...வாங்க...எப்படி பயணமெல்லாம்.“? சத்தமிட்டவாறே முன்னால் பீற்றர்சன் வந்து வரவேற்றான். "ஏய் யாருடா மாப்பிள.. நீயா...நானா.“.? புன்னகையோடு ஆனந்தன் பதிலளித்தான். "இரண்டு பேருந்தான். இளந்தாரிகள்தானே“? டேவிட் பெரியதொரு குண்டைப் போட்டார். பீற்றர்சன் பொருட்களை தூக்குவதற்கு உதவினான். "டேய்... மயூரி உனக்கு அப்பிள் கொண்டுவந்திக்கா... இப்படியே மயூரி வீட்டுக்குப் போய்விட்டு பின்னேரம் ஆலங்கேணி போவம். என்ன“? மய+ரிக்குத் தூக்கிவாரிப் போட்டது. குனிந்ததலை நிமிராமல் நின்றாள். பீற்றர்சன் சிலையாக நின்றான். "இஞ்சார்.. மாப்பிள்ளத் தோழா.. நடிக்காத... வாவா...எல்லாருக்கும் எல்லாம் தெரியும். உன்ர அப்பா..அம்மா... எல்லாருக்கும் தெரியும். கவலைப்டாதே சகோதரா..“ பாடலாக நக்கலடித்தான். ஸ்ரனிஸ் ரக்சியை அழைக்க முனைந்தார். "வேண்டாம். நான் சொல்லியிருக்கிறன். அதோ நிற்கிறது ரக்சி. வாங்க போவம்“;. அழைத்தான். ரக்சியில் நான்கு பேர் போகலாம். பீற்றர்சன் தனது சைக்கிளில் ஏறினான். "பீற்றர்சன் ..நேரே .. ரக்சிக்குப் பின்னால் வா..என்ன“? ரக்சி புறப்பட்டது.

வீடு வந்ததும் இறங்கிக் கொண்டார்கள். மயூரி விறுவிறு என்று வீட்டினுள் நுழைந்தாள். உடுப்பை மாற்றித் தேநீர் தயாரித்தாள். "நானும் உதவி செய்யிறனே... ஆனந்தன் அடுக்களைப் பக்கம் வந்தான். "என்ன அண்ணா, மானத்த வாங்குறீங்க.. அப்பா... அண்ணன் என்ன நினைப்பாங்க“? கவலையோடு கூறினாள். "இதிலென்ன தவறிருக்கு? அப்பாக்கும், அண்ணனுக்கும் சொல்லிச் சம்மதம் வாங்கிப் போட்டன். பீற்றர்சனின் அப்பா. அம்மாவிடமும் சொல்லிச் சம்மதம் வாங்கியாச்சு...பிறகென்ன? இந்த அண்ணனுக்கும். இந்தத் தங்கச்சிக்கும் சந்தோசம்தானே“. ஆனந்தன் கோப்பைகளைக் கழுவியவாறே கூறினான். எல்லாவற்றையும் கேட்டவாறே டேவிட் உள்நுழைந்தார். "ஆனந்தன் நமக்காக எவ்வளவு செய்திருக்கிறான். நாங்க அவனுக்கு என்ன செய்யப்போறம். டேவிட் நாதளதளக்க நெஞ்சாரச் சொன்னார். மயூரியும் நெகிழ்ந்து போனாள்.

"அப்பா அண்ணனுக்கு என்ர அண்ணியப் பரிசாகக் கொடுக்கப் போறம்தானே. அதவிட அவருக்கு என்ன வேணும்.“ அப்பா என்ன சொல்கிறார் என்பதை எதிர்பார்த்தாள். "அது நமது கடமையம்மா. ஆனந்தனின் செயற்பாடு அதைவிடப் பெரியது. அவனுக்கு நாம காலங்காலமாக நன்றிசெலுத்த வேணும். அவர் மனதாரச் சொன்னார். உள்ளே வந்த ஸ்ரனிஸ் ஆனந்தனின் கைகளைப் பற்றி " நீங்க என்ர தம்பி. நாங்க மறக்கமாட்டம்“. எங்கோ பார்த்தவாறு கூறினார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. "பெரிய வார்த்தைகளைக் கூறி என்னைக் குழப்பாதீங்க. இப்ப பீற்றர்சன் வருவான். இன்றைக்குப் பின்னேரம் வரை நான் நிற்பன். அவங்கட வீட்ட ஒருக்காப் போய்வருவோமா? நான் முதலிலேயே ஜோசப் மாஸ்ரரிட்டச் சொல்லிப் போட்டன்“. ஒரு வேண்டுகொளைப் போட்டான். "நீ சொன்னால் சரி. நாங்க போவம்“;. டேவிட் ஏற்றுக் கொண்டார்.

குளித்துக் களைப்பைப் போக்கினார்கள். படலையில் சைக்கிள் மணியொலித்தது. மயூரி எட்டிப் பார்த்தாள். "அண்ணா! அவர், உங்கட கூட்டாளி வந்திருக்கார். வரச்சொல்லுங்க“. மெதுவாகச் சொன்னாள். "ஏன் உன்னால சொல்ல முடியாதோ? எங்களுக்குத் தெரியாமல் காதல் பண்ண மட்டும்தெரியும். என்ன“? கூறிக்கொண்டு வெளியில் வந்தான். "என்ன படலையில் நிற்கிறாய். வாறதுதானே..வா..வா..“ அழைத்தான். டேவிட் குளித்துக் கொண்டிருந்தார். ஸ்ரனிசும் பின்னால் அலுவலாக நின்றார். பீற்றர்சன் வந்தான். "எங்க பெரியவங்க“ சிரித்தவாறே கேட்டான். "அவங்க பின்னால நிக்கிறாங்க“. பதிலிறுத்தான். "வீட்டுக்கு உரியவங்கதானே வரவேற்க வேண்டும். அவங்க வரச்சொல்லாமல் வந்தால் அடியும் விழலாம் இல்லையா?“;. பீற்றர்சன் அக்கம் பக்கம் பார்த்துச் சத்தமாகச் சொன்னான். மயூரிக்கு விளங்கியது. "இன்னும் சத்தமாகச் சொன்னால்தான் ஏறும்“. ஆனந்தன் மயூரிக்குக் கேட்கும்படி கூறினான். அவள் சிரித்துக் கொண்டாள்.

"சாப்பிடுவோம். பீற்றர்சன் வா. மயூரி..! அப்பாவைக் கூப்பிடு.“? சத்தங்கேட்டு டேவிட் வந்தார். ஸ்ரனிசும் வந்து மேசையில் அமர்ந்தார். மயூரி பரிமாறினாள். "நல்ல ருசியாக இருக்கும். ஏனென்றால் தோசை கடையில் வாங்கியது“. சிரித்துக் கொண்டே ஸ்ரனிஸ் சொன்னார். "அண்ணா! கிண்டல் வேணாம். பகல் சாப்பாடு நான்தான் செய்யிறன். உப்பக் கனக்கப் போடுவன். கவனம்“. சிரித்துக் கொண்டே மயூரி பரிமாறினாள். கண்ணால் பேசும் கலையை இந்தப் பெண்கள் எங்கே கற்றார்கள்? ஆனந்தன் தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். "பீற்றர்சன் எத்தனை மணிக்கு அப்பா இருப்பார். நாங்க ஒருக்கா வரவேணும்“. ஆனந்தன் வினவினான். "எந்தநேரமும் அப்பா இருப்பார். "எத்தனை மணிக்கு வருவீங்க என்று சொன்னால் நல்லது. நான் சொல்லி வைப்பன். அதுசரி நாங்க எத்தனை மணிக்குப் போகிறோம்“. தங்களது பயணத்தையிட்டுக் கேட்டான். "ஒரு ஐந்து மணிபோல புறப்படுவமா? வெயில் குறைந்திருக்கும். கேள்வியாகவே பதிலளித்தான். "அது நல்லது“. கூறியவாறே எழுந்தான். அவனை ஆனந்தன் வழியனுப்பி வைத்தான்.

சரியாக மூன்று மணிக்கு டாக்சி வந்தது. பீற்றர்சன் அனுப்பியிருந்தான். ஏறிக்கொண்டார்கள். மயூரி வழியனுப்பி வைத்தாள். பீற்றர்சன் வாசலில் காத்திருந்தான். அவர்களைக் கண்டதும் "வாங்க“ என்று வரவேற்று உள்ளே அழைத்தான். ஜோசப் மாஸ்ரர் வீட்டு வாசலில் வந்து அழைத்தார். பீற்றர்சனின் அம்மா புன்னகையோடு வரவேற்றார். வரவேற்பு அவர்களை ஈர்த்தது. சம்பிரதாயமாகப் பலவற்றைக் கதைத்தார்கள். "நாங்களே உங்கள் வீட்டுக்குப் போனகிழமை வரவிருந்தம். நீங்க கொழும்பு போனதை மகன் சொன்னார். நீங்க முந்திட்டிங்க“ சிரிப்போடு ஜோசப் மாஸ்ரர் கூறினார். டேவிட் கொழும்புக்குப் போய்வந்த விடயங்களை விளக்கினார்.

ஆனந்தன் அவர்களைக் கதைக்கவிட்டு பீற்றர்சனோடு தோட்டத்துக்குள் போனான். கொஞ்சநேரத்தால் அவர்களும் தோட்டத்துக்குள் வந்தார்கள். ஸ்ரனிஸ் பிரமித்துப் போனார். "எனக்கும் தோட்டம் வைக்க விருப்பந்தான். ஆனால் நேரங்கிடைப்பதில்லை. சிறிய அளவில் ஒரு தோட்டம் இருக்கிறது. அப்பாவும் தங்கச்சியும்தான் அதற்குப் பொறுப்பு. ஸ்ரனிஸ் தோட்டத்தைப் பாரத்தவாறே கூறினார். பீற்றர்சனின் அம்மா தேநீரோடு வந்தார். தோட்டத்துள் இருந்த இருக்கைகளில் இருந்து தேநீரைக் குடித்;தார்கள். நேரம் போய்க்கொண்டிருந்தது. புறப்பட்டார்கள். ஜோசப் மாஸ்ரர் "நேரங்கிடைக்கும்போது வாங்க“. என்று அழைப்பு விடுத்தார். "அடுத்தவாரம் நாங்க வாறம்“ கூறிக்கொண்டு விடைகொடுத்தார்.
பீற்றர்சன் தனது உடமைகளை எடுத்துக் கொண்டான். "இப்படியே போய் எனது பொதியையும் எடுத்துக் கொண்டு இந்த டாக்சியிலேயே வஸ் ஸ்ரான்ற் போவம் என்ன“? ஆனந்தன் பீற்றர்சனிடம் கேட்டான். அவன் ஆமோதித்தான். டாக்சி பறந்தது.

ஆனந்தனும் பீற்றர்சனும் ஆலங்கேணி புறப்பட்டார்கள். கிண்ணியாத் துறையைத் தாண்டி சைக்கிளில் வீடு சேர்ந்தார்கள். சனநெருக்கடிமிக்க சூழலில் இருந்து தனியானதொரு சூழலில் இருப்பதை உணர்ந்தார்கள். கிராமப்புற வாழ்க்கையில் எவ்வளவு சுகம் உள்ளது. மரஞ்செடி நிறைந்து கண்களுக்குப் பசுமையைக் கொடுக்கும். சுத்தமான காற்று, சந்தோசம் நிறைந்த மக்கள். நின்று இரண்டு நிமிடமாவது கதைத்துச் செல்லும் மக்கள். படிப்பறிவில்லாவிட்டாலும் பண்பாடுள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நகரங்களை விடவும் கிராமத்தின் வாழ்க்கை இன்பம் நிறைந்ததாகப் பட்டது. இருள் சூழ்ந்து கொண்டது. அம்மா அப்பா தம்பிமார் தங்கையரோடு இருப்பது எவ்வளவு சுகமானது. உணவின் பின் அம்மாவோடு மனதிலுள்ளவற்றைப் பரிமாறிக் கொண்டான். "டேவிட் ஐயா வந்து எல்லாம் சொல்லுவார்“;. கூறிவிட்டு உறங்கச் சென்றான். பிராயாணக் களைப்பு உறக்கத்தில் ஆழ்த்தியது.


தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP