Friday, May 28, 2010

கும்பத்துமால்

அந்தக் கோயில் ஊரிலிருந்து ஒதுக்குப்புற எல்லையில் இருந்தது. கோயில் என்று சொல்வதற்கான கட்டிடங்;கள் இல்லை. வருசத்துக்கு ஒருமுறை வைகாசியில் ஊர் மக்கள் கூடுவார்கள். கோயிலடியைத் துப்பரவாக்குவார்கள். நீளமான கொட்டில் அமைப்பார்கள். கூரையை தென்னோலையால் வேய்ந்து சுற்றிவர அடைப்பார்கள். கொட்டிலின் உட்பக்கமாக வெள்ளை கட்டுவார்கள். சலவைத் தொழிலாளரின் பங்கு வேள்வி முடியும் வரை இருக்கும். கும்பத்து மாலினை இரண்டாகப் பிரித்திருப்பார்கள். முதலாவது அறையில் அம்மன் கும்பம் இருக்கும். அதனைத் திரை போட்டு மூடியிருப்பார்கள். பெரிய செப்புக் குடங்களில் வேப்பங்குழை பரத்தி அதன் மேல் அம்மன் உருப்பதித்து மந்திர உச்சாடனத்தோடு அம்மனை அதில் ஏற்றிவைப்பார்கள்.

இரண்டாவது அறையிலும் வேறு சிறுதெய்வங்களை வைத்திருப்பார்கள். கொட்டிலைச் சேர்த்தாற்போல் முன்னால் அழகான பந்தல் போட்டிருப்பார்கள். பந்தலில் கும்பம் வைக்குமுன் கன்னிக்கால் நடுவார்கள். அதனைச் சோடித்திருப்பார்கள். பார்ப்பதற்கு ஒரு இளம்பெண் நிற்பதுபோல் இருக்கும். அதற்கு நேரே பந்தலுக்கப்பால் வயிரவரின் பந்தல் அம்மனைப் பார்த்தபடி இருக்கும். அதற்கு முன்னால் விறகுகளை அடுக்கித் தீயிட்டுத் தணலை வளர்த்திருப்பார்கள். ஒரு பெற்றமக்ஸ் வெளிச்சம் மட்டும் இருக்கும். அரிக்கன் லாம்புகளும் உலா வரும். அம்மனை உச்சாடனத்துடன் கும்பத்தில் ஏற்றும்போது பூசாரியார் உணர்வு பூர்வமாகக் காணப்படுவார். அவரது உடல் சாமியாட்டம் போடும். கும்பத்தில் சோடனை செய்திருப்பார்கள். கும்பம் வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருக்கும். கும்பம் ஒற்றைப்படையாக இருக்கும். மூன்று தொடக்கம் ஐந்து கும்பங்கள் வரை நிரையில் வைப்பார்கள். அதற்கென விதிமுறைகளைப் பூசாரியார் தெரிந்து வைத்திருப்பார். ஏழு நாட்களுக்குக் கும்பத்துமாலில் வேள்வி நடக்கும். ஏழாவது நாள் ஆயுதபூசை. அடுத்தநாள் காலை குளிர்த்தி நடக்கும். மாலை ஊர்வலம் வரும். அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஈற்றில் கடலில் கும்பத்தைச் சொரிவார்கள்.

கும்பத்துக் காலத்தில் பூசாரியும் அவரோடு வேலைசெய்யும் உதவியாளர்களும் அங்கேயே தங்கி நிற்பார்கள். பயபக்தியாக சடங்குகள் நடக்கும். சடங்குகளில் மக்கள் தங்களை மறந்து ஈடுபடுவார்கள். மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக சடங்குமுறை அமைந்து விட்டது. மக்களிடையே பரஸ்பர நல்லெண்ணத்தை வளர்க்க உதவியாகவும் இருந்தது. பறைமேளங்கள்pன் ஒலியால் நாடும் காடும் அதிரும். உடுக்குகளின் இசை காதுகளில் ஒலிக்கும். அதிகாலையில் ஓரு பூசை. மதியம் ஒரு பூசை நடக்கும். இரவுவேளைப் பூசை ஏழெட்டு மணிக்குத் தொடங்கி பதினொரு மணிவரை நடக்கும்.

இரவுப் பூசையின் போதுதான் ஊர்மக்கள் அதிகம் கூடுவார்கள். சுமார் எட்டு மணிக்குப் பூசை தொடங்கும். பூசாரியார் மடை வைத்து ஆசாரங்கள் செய்வார். மடையில் வெற்றிலை பாக்கு, பழவகை, பொங்கலும் வைப்பார்கள். தேசிக்காய்ச் சாற்றில் சர்க்கரை சேர்த்து, அதற்குள் சின்ன வெங்காயம் நறுக்கிப் போட்டு சுத்தமான தண்ணீரில் கலந்து வைத்திருப்பார்கள். அதனைப் பாணக்கம் என்பார்கள். பூசகர் பூசையின் போது உடுக்கடித்து மந்திரம் சொல்வார். உடுக்கடிக்கவும். மந்திரங்கள் சொல்லவும் அவருக்குத் துணையாக உதவியாளர்களும் இருப்பார்கள். உச்சக்கட்டப்பூசையின் போது பறைமேளங்களும் ஓங்கி ஒலிக்கும். உடுக்கு மந்திரத்துக்கு ஏற்ப பேசும். அப்போது திரை திறபடும். தீபம் காட்டப்படும். மந்திரம் ஓங்கி ஒலிக்கும். திரை திறந்ததும் “ஆ…ஊ….” சத்தங்கள் பறக்கும் உருக்கொண்டு சாமியாட்டம் நடக்கும். ஒவ்வொரு சாமியும், தனக்கென ஆட்டத்தைப் போடும். சாமியாடுபவர்களின் தலைகளில் தண்ணீர்க் குடங்களை எடுத்து ஊற்றுவார்கள். குடங்களில் தண்ணீர் கொண்டு வருவதற்கென்றே சிலர் இருப்பார்கள்.

பறைமேளத்துக்கும், உடுக்கு மேளத்துக்கும் போட்டி நடப்பதுபோல் ஒலிக்கும். அந்த ஒலிக்கு ஏற்ப சாமிகள் ஆடும். சாமியாடுபவர்கள் பறைமேளம் ஒலிக்கும் இடத்துக்குப் போவார்கள். மேளம் அடிப்பவர்கள் விரைந்தும் பலமாகவும் அடிப்பார்கள். அதற்கேற்ப சாமிகள் குதித்து ஆடும். சாமியாடுபவர்களது கண்கள் அரைவிழி மூடியபடி இருக்கும். சிலரது கண்கள் சிவந்து இருக்கும். பார்க்கப் பயமாகத் தெரியும். ஒரு கையில் சிலம்பினை அணிந்து, பொல்லொன்றை இரு கைகளிலும் பிடித்து குலுங்கி ஆடுவார்கள். சாமியாடுபவர்கள் கட்டுச் சொல்வது வழக்கம். அதற்காகவே மக்கள் கும்பத்துமாலுக்கு வருவார்கள். எல்லாச் சாமிகளும் வாய் பேசாது. சில சாமிகள் மட்டும் கட்டுச் சொல்லும். மனதில் உள்ள குறைகளுக்கு சாமிகள் பரிகாரம் சொல்வதைத்தான் கட்டுச் சொல்வதென்பார்கள். சாமி ஆடிமுடிந்ததும் மலையேறிவீடும்.

நாட்டில் ஏற்பட்ட யுத்த நடவடிக்கைகளால் மக்கள் அகதிகளாவும், அனாதைகளாகவும் ஆக்கப் பட்டனர். பலர் கொல்லப்பட்டார்கள். பொத்துவில் தொடக்கம் பருத்தித்துறை வரை இளைஞர்கள் பலர் காணமல் போனார்கள். சொந்த நாட்டுக்குள்ளும் நாடோடிகளாக ஆக்கப்பட்டு அகதிகளானார்கள். பலர் படகுகளில் இந்தியாவுக்குப் போனார்கள். இடம் பெயரந்து வன்னிப் பக்கம் போனார்கள். யுத்தம் பூதாகரமாய் மூண்டது. கொத்தணிக்குண்டுகள் மக்களை அழித்தன. விமானங்களும், ஆட்டிலறிக் குண்டுகளும், ஷெல்லடிகளும் வெடித்து உடல்சிதறிச் செத்தார்கள். பாதுகாப்புக்காக அமைத்திருந்த பதுங்கு குழிகளுக்குள்ளேயே பலர் சங்கமமானார்கள். மாவிலாற்றில் தொடங்கிய யுத்தம் மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் கடற்கரையோரம் வரை சுடுகாடாய்ப் போனது. ஏங்கும் பிணக்குவியல். சரணடைந்தவர்களது கதி தெரியவில்லை. அப்பாவிகள் வவுனியா அகதிமுகாமில் இருந்து முட்கம்பி வேலிகளுக்குள் தவமிருந்தார்கள். பின் ஊரூராய் அலைந்து எஞ்சியவர்கள் தங்கள் சொந்த ஊரில் மீளக்குடியேறினார்கள். கந்தையர் மனதில் பழையன வந்து படம்காட்டியது. தன்னைச் சுதாகரித்துக் கொண்டார்.

குடியேறிய மக்களின் மனங்கள் வாடிக்கிடந்தன. சொந்தங்களைத் தொலைத்து விட்ட சோகம். ஒன்றிலும் உற்சாகமில்லாமல் தவித்தார்கள். இப்படியே விட்டால் இவர்களின் வாழ்க்கை என்னவாவது? ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ? வீடுதோறும் சென்று ஆறுதல் கூறினார். துயரங்களால் ஏற்பட்ட கண்ணுக்குப் புலனாகா மனவடுக்களைப் போக்கவல்லது எது? குhலம்தான் மனக்கவலையை மாற்றவல்லது. பாரம்பரியக் கலாசரங்களும் கலையம்சங்களும் அவற்றைக் குறைக்கும் என்பதைக் கந்தையர் தெரிந்து வைத்திருந்தார். இளைஞர்களைப் பார்த்துக் கந்தையர்தான் சொன்னார். “தம்பிமார் எல்லாத்தையும் இழந்துபோட்டம். இனி இழக்க ஒன்றுமில்ல. நாங்க இப்படி இருந்தமென்டால் எங்கட பழக்க வழக்கமெல்லாம் மறஞ்சிடும். ஏங்கட பாரம்பரியங்களை விடாமல் காப்பாற்ற வேண்டும். மக்களின் மனங்களில் மீண்டும் சந்தோசத்தை வரச் செய்வம். இந்த முறை கும்பம் வைப்பம்.” எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார். இளைஞர்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஊரில் மிஞ்சியிருந்த பெரியவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.

“தம்பிமார் வைகாசிக் கும்பம் நமது ஊரில் விஷேசம். அதைச் செய்வம். போன வைகாசியில நமது சனங்கள்ல அரவாசிப்பேருக்குமேல அழிஞ்சு போச்சுதுகள். இப்ப இருக்கிற நாங்களாவது செய்வம். எல்லாரும் ஒத்துழைச்சால் இருக்கிற சனங்களின் மனத்துயரையாவது போக்கலாம். முதலில் அம்மன் கோயில் பக்கம் போய் வெளியாக்கி கும்பத்துமாலை அமைப்பம். புறப்படுங்க”. கந்தையர் எடுத்த முடிவு சரியாகப் பட்டது. கும்பம் வைப்பதற்கான ஏற்பாடுகளையும் கந்தையர் ஒழுங்கு செய்துவிட்டார்.

“அதுதான் அம்மன் நகர். வாங்க போவம்”. கந்தையர் இடத்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டு நடந்தார். அவரைத் தொடர்ந்து பல இளைஞர்கள் நடந்தார்கள். “எல்லாம் காடு பற்றிப்போய்க்கிடக்கு. சனங்கள் இருந்த இடமெல்லாம் யானைகளின்ட ராச்சியமாப் போச்சு” இளையவர் பெருமூச்சுடன் சொன்னார். “இதுலதான் கோயில் இருந்தது. இதில இருந்த பெரிய காட்டுத்தேங்கா மரத்தக் காணல்ல. அடையாளமே தெரியல்ல”. சொல்லிக் கொண்டு தேடினார்கள். சித்திரத்தாரின் கண்கள் கூர்மையானவை. “இந்தாருக்கு. இந்தக்கல்லிலதான் வயிரவர்ர சூலம் இருந்தது. நல்ல காலம் இந்தக் கல்லாவது இருக்குதே”. கிடைக்காததொன்று கிடைத்த சந்தோசம். சூழ்ந்து நின்று பார்த்தார்கள்.

“இனிப்பாத்துக் கொண்டு நிக்கேலாது. சட்டுப்புட்டென்று வேலய முடிக்க வேணும்”. சிரமதானத்துக்கு ஆயத்தமானார்கள். “முதல்ல அம்மன் கோயில் இருந்த இடத்தத் துப்பரவாக்குவம்”. தொடங்கினார்கள். பற்றைக் காடுகளை வெட்டி இழுத்துக் குவித்தார்கள். காட்டுத்தடிகளை வெட்டிக் கொட்டிலமைத்தார்கள். கிடுகுகளைக் கொண்டு கூரையை வேய்ந்தார்கள். வைரவர் கல்லை மையமாக வைத்து மூன்றடி உயரத்துக்குக் காட்டுத் தடிகாளால் பந்தல் அமைத்தார்கள். கோயிலடிக்குப் போவதற்கான ஒற்றையடிப் பாதையும் தயார். குப்பைகளைக் கூட்டித் தீயிட்டார்கள். நிழல்தரு மரங்களை அப்படியே விட்டார்கள். அவர்கள் கோயிலடியை வெளியாக்கி விட்டார்கள். ஒரு கிராமத்து மக்களை உள்ளடக்கக் கூடியதாக வெளி தெரிந்தது. வேலையில் கவனம் இருந்தாலும் கந்தையரின் மனதில் பழைய அனுபவங்கள் இழையோடின.

சம்பிரதாயப்படி பூசாரியாருக்குப் பச்சைப் பெட்டி அனுப்பியாகி விட்டது. பச்சைப் பெட்டி என்பது பூசாரியாருக்கு உரிய அழைப்பு மரியாதை. ஒரு பனையோலையால் இழைத்த பெரிய கடகப் பெட்டிக்குள் மரக்கறி வகைகள், அரிசி தேங்காய், வேட்டி சால்வை அனைத்தும் இருக்கும். கணபதிப்பிள்ளைப் பூசாரியாரும் உதவியாளர்களும் வந்து விட்டார்கள். உரிய பொருட்களைக் கணபதியார் பட்டியலிட்டு அனுப்பியிருந்தார். கந்தையர் இளைஞர்களை முடுக்கிவிட்டார். பொருட்கள் வந்திறங்கின. வெள்ளை கட்டுவதற்கு சலவைத் தொழிலாளரைத் தேடினார். அவர் இல்லை. கிராமத்தில் இருந்த தொழிலாளர் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வன்னியில் இருந்தன. அங்கு எறிகணைகள் வந்து விழுந்து வெடித்துப் பலியெடுத்துவிட்டது. “எப்படி வெள்ளை கட்டுவது?” கிணறுவெட்டப்பூதம் புறப்பட்ட கதை மாதிரியாகிவிட்டது. இந்த யுத்தம் எல்லாரையும் பாதித்துவிட்டது. கந்தையருக்கு யோசனை பிடித்து விட்டது.

“கந்தையாண்ணே! ஏன் யோசிக்கிறியள். நாங்கள் வெள்ளை கொண்டுவந்து கட்டிறம்”;. வீடுகளில் இருந்து வேண்டிய துணிகள் கிடைத்தன. இளைஞர்கள் வெள்ளை கட்டிவிட்டார்கள். பறை மேளம் இருந்தது. அடிக்க ஆட்கள் இல்லை. கொடிய போரின் தாக்கத்தை அப்போதுதான் உணர்ந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தையும் இந்த யுத்தம் ஏதோ ஒருவகையில் தாக்கியுள்ளதைக் கந்தையர் புரிந்துகொண்டார். “எங்களுக்கு மேளம் அடிக்கத் தெரியம், நாங்க இருக்கிறம்”. இளைஞர்கள் இடைவெளியை நிரப்பினார்கள்.

கந்தையருக்குத் தெம்பு வந்துவிட்டது. பூசாரியார் தனது வேலைகளைத் தொடங்கி விட்டார். இளைஞர்கள் பம்பரமானார்கள். பந்தலை தாங்கியிருந்த கப்புகளுக்கு வெள்ளைத் துணிகளைச் சுற்றினார்கள். வயிரவர் பந்தலில் வெடித்துப் பூமலர்த்த பாளையைக் கட்டவேண்டும். தென்னஞ்சோலையாக இருந்த கிராமங்களில் வட்டுத்தெறித்த தென்னைகள்தான் மிச்சமாய்க் கிடந்தன. தப்பியிருந்த தென்னைகளில் இருந்து தெரிந்து ஒரேயொரு பாளையைக் கொண்டுவந்து கட்டினார்கள். வைரவர் பந்தல் அம்மனைப் பார்த்தபடி இருந்தது. கன்னிக்கால் நாட்டும் சடங்குகளைச் செய்வதற்குப் பூசாரியாருக்கு உதவினார்கள். சிலர் பறைமேளம் அடிப்பதில் கவனஞ்செலுத்தினார்கள். கந்தையருக்கு உலக மாற்றங்களையிட்ட சிந்தனை பிடித்து விட்டது. “பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல” தனக்குள் பண்டிதத் தமிழில் சொல்லிச் சிரித்துக் கொண்டார். வேலைகள் துரிதமாகிக் கொண்டிருந்தன. திடீரென பல்லாயிரக்கணக்கான அழகான வண்ணத்துப் பூச்சிகளின் படையெடுப்பு. குஞ்சு குருமானாய், பாட்டம் பாட்டமாக வட்டமடித்த வண்ணம் பறந்து அந்த இடத்தினைச் சூழ்ந்து கொண்டன. சிறுவர்களுக்குக் கொண்டாட்டம். அவற்றுக்குப் பின்னால் சுற்றினார்கள். அவை பிடிபடாமல் பறந்து திரிந்தன.

அந்திவானம் செம்மை காட்டியது. எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. பூசாரியார் குளித்து வெள்ளையுடுத்து, திருநீறு பூசி அட்டகாசமாகக் காட்சியளித்தார். அவரைப் பார்த்த சிறுவர்களுக்குப் பயமாகவும் இருந்தது. யுத்த டாங்கிகளையும், போர் விமானங்களையும் கண்டு பழக்கப் பட்டவர்களுக்கும் பூசாரியாரின் தோற்றம் கிலியைத் தந்தது. ஒருவரில் ஒருவர் ஒளிந்து பார்த்தார்கள். அவர் மந்திர உச்சாடனத்தில் இருந்தார். அம்மனைக் கும்பத்தில் இருத்துவது இலகுவானதல்ல. மந்திரங்கள் முழங்கின. பறைமேளம் ஒலித்தது. பூசை மணியும், உடுக்கொலியும் சேர்ந்து கொண்டது. ஆட்டிலறிக் குண்டுகளும், ஷெல்வெடிச் சத்தங்களுக்கும் நடுங்காத சிறுவர்கள் இந்த பறைமேளத்தின் சத்தத்துக்குப் பயந்தார்கள். வெடிச்சத்தங்களுக்கு நெஞ்சு படபடக்கும். உடுக்கு, மந்திர ஓசைகளுக்குத் தங்கள் உடல் யாவும் உதறல் எடுத்ததை உணர்ந்தார்கள். பூசாரியார் அம்மனுக்கு உருவேற்றி கும்பத்தில் அமர்த்தும் போது அவரையறியாமல் “ஹா …” என்று அலறிவிட்டார். சனங்கள் திறந்த கண்மூடாது பார்த்திருந்தார்கள்.

மடை வைத்துப் பூசைதொடங்கித் திரை திறந்ததுதான் தாமதம். ஒருவர் “ஹா…ஆ…” சத்தத்துடன் உடலை வளைத்து, முறுக்கி நிலத்தில் விழுந்து புரண்டார். கும்பத்துமாலின் கருவறைக்குள் நுழைந்து முழங்காலில் கிடந்து சாமியாடினார். அவரின் தலையில் தண்ணீர் கொட்டப்பட்டது. இன்னும் சிலர் ஆடினார்கள். அவர்களைச் சூழ்ந்து மந்திரம் ஓதினார்கள். உடுக்கு முழங்கியது. சனங்கள் குவிந்து விட்டார்கள். சனங்கள் இருந்த இடத்தைவிட்டு எழும்பினார்கள். அவர்களை அமர்ந்திருந்து பார்க்குமாறு இளைஞர்கள் கேட்டு;க் கொண்டார்கள். ஆண்கள் ஒருபுறம் இருந்தார்கள். பெண்கள் ஒருபுறமாக இருந்தார்கள். சனங்களின் முகங்களில் பிரகாசம் தெரிந்தது. அவர்கள் தங்கள் துயரங்களில் இருந்து விடுபடும் நிலைக்கு வந்து கொண்டீருந்தார்கள். தங்கட பிள்ளைகளைப்பற்றிக் கட்டுக் கேட்க ஆவலாய் இருந்தார்கள். கந்தையரின் மனதில் சந்தோசம். பாட்டம் பாட்டமாக வண்ணத்துப் பூச்சிகள் வந்தன. எங்கும் பரவிப் பறந்தன. சனங்களில் முட்டி மோதித் திரிந்தன. எவ்வளவு துரத்தியும் முடியவில்லை. வருவதும் போவதுமாகப் பறந்து திரிந்தன. கும்பத்து மாலுக்குள்ளும் சென்று வந்தன.

சனங்களைவிடவும் வண்ணத்துப் பூச்சிகள் அதிகமாயிருந்தன. அங்குமிங்கும் முன்னும் பின்னும் பறந்து திரிந்தன. “எங்கிருந்து இவ்வளவு வண்ணத்துப் பூச்சிகளும் வருது? ஏன்றுமில்லாமல் இப்படிப் பறந்து திரியுதுகள். புதினமாய்க் கிடக்கு.” சனங்களுக்கு அதிசயங் கலந்த ஆச்சரியம். “நானென்டா என்ர வாழ்நாள்ல இப்படி ஓரு புதினத்தக் காணல்ல” வயதில் மூத்த சின்னராசா சொன்னார். உள்ளே சென்ற சாமி வெளியில் வந்து இளைஞரின் மேள இசைக்கு ஏற்பக் குலுங்கியாடியது.

கன்னிக்கால் பக்கத்தால் குலுங்கி ஆடிச் சென்றது. விறகு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. அவ்விடத்தில் சில இளைஞர்கள் எதிரெதிராக நின்றனர். அவர்கள் கைகளில் திருநீறு இருந்தது. வாய்கள் முணுமுணுத்தன. சாமியை நோக்கி மந்திரங்களை முணுமுணுத்து திருநீற்றை “சூ.....“வென்று ஊதினார்கள். அவர்களைச் சாமி பார்த்து நெஞ்சில் கையை வைத்து “என்னை அசைக்க முடியாது.” சைகை காட்டிச் சென்றது. சாமியின் பின்னாலும் வண்ணத்துப் பூச்சிகள் சுழன்று திரிந்தன. “இந்த வண்ணத்துப் பூச்சிகளால கரச்சலாக்கிடக்கு. இதுகள் எங்கிருந்து வருது?”. சனங்கள் ஆளுக்காள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு இடைஞ்சலாய் இருந்தது. சாமி தீயை மிதித்துக் குதித்து ஆடி வந்தது. தலையை நீட்டி “ ம்ம்…” என்று நின்றது. புரிந்து கொண்ட இளைஞர்கள் தலையில் தண்ணீரை ஊற்றினார்கள். கும்பத்து மாலினுள் சென்று சாட்டையை ஏந்தி வந்தது. இளைஞர்களைத் தாண்டிச் சென்றது. சுந்தரலிங்கத்தார் மறைந்து நின்றார். அவரைக் கண்டு கொண்டு அவரிடம் சாட்டையைக் கொடுத்து முழங்காலில் நின்று “ஹா…..” சத்தமிட்டு கைகளை இருபுறமும் நீட்டியது.

சுந்தரலிங்கத்தார் சாட்டையைக் கையிலேந்தி மந்திரித்தார். ஒவ்வொரு கையிலும் மூன்று மூன்று சாட்டையடி கொடுத்தார். முடிந்ததும் சாமியிடம் சாட்டையைக் கொடுத்தார். சாமி கும்பத்து மாலினுள் சென்று சாட்டையை ஒப்படைத்துக் கலையோடு ஆடியது. பூசாரியார் பலத்த சத்தத்தோடு மந்திரித்தார். சாமி வெளியே வந்து கன்னிக்காலுக்கு அண்மையில் மண்டியிட்டுச் சர்வாங்காசனத்தில் கிடந்தது. இரு கைகளிலும் வேப்பங்கொத்தினைப் பிடித்தபடி இரு தொடைகளிலும் ஊன்றித் தலையைச் சுழற்றி ஆட்டியது. மூச்சு விரைந்து கனலாகப் பறந்தது. பின் இருகைளையும் நிலத்தில் ஊன்றிக் குலுங்கிக் குலுங்கி அழுதது. தலையைச் சுழற்றிப் பலமாகக் கலையோடு ஆடியது. சனங்கள் கவலையோடு பார்த்தார்கள். தங்கட பிள்ளயளப் பற்றிக் கட்டுக் கேட்கும்படி பூசாரியிடம் சொல்லி வைத்தார்கள். பூசாரி வந்தார். மந்திரித்த தண்ணீரைத் தெளித்தார். “எந்தத் தெய்வம் என்று சொன்னால்தான் அதற்குரிய மந்திரத்தைச் சொல்லலாம்.” கண்களை மூடி மந்திரத்தை ஓதினார். கேள்வி கேட்டார்.
“சரி…. ஆர்.. நீ? சொல்லு”.
“ நான் அம்மன்”
“எந்த அம்மன்?”
“ வன்னித் தெயவம் வற்றப்பளை அம்மன்.”
சனங்களின் வாய்களில் இருந்து ‘வற்றாப்பளை அம்மன்’ ஒலித்தது.
“ எங்கட பூமரங்களெல்லாம் எங்கம்மா” மனங்கள் குலுங்கின
சாமி குலுங்கி அழுதது. நிமிர்ந்து பூசாரியைப் பார்த்தது. இன்னொரு சாமி ஆடிக்கொண்டு வந்தது. அவ்விடத்தில் வந்து நின்றது. நடப்பதைப் பார்த்தது. பூசாரியார் அதற்கு மந்திரித்த தண்ணீரைத் தெளித்துத் திருநீற்றைப் ‘பூ…’ என ஊதிவிட்டார். அந்தச் சாமி ஒருவித சந்தேகப் பார்வையை வீசி அப்பால் நகர்ந்தது. அது போனதும் கலையோடு; தலையைச் சுற்றி ஆவேசமாய் சாமி ஆடியது. சனங்களை நிமிர்ந்து பார்த்தது. தரையில் குழியைக் கிண்டியது. சைகை செய்தது. அந்தக்குழியை கையால் மூடியது.
“மண்ணுக்க….. விதைச்சிப் போட்டாங்க… புதைஞ்சு போய்க்கிடக்குதுகள் … …..”
சனங்களின் கண்கள் பனித்தன. “ எப்பம்மா பூமரங்கள இனிப் பார்க்கப் போறம்?”
சனங்கள் அங்கலாய்ந்தார்கள். சாமி கைகளை விரித்தது. சனங்களையம் ப+சாரியையும் சுற்றிப் பார்த்தது. அட்டகாசமாயச் சிரித்தது. இரண்டு கைகளையும் விரித்து வண்ணத்துப் பூச்சிகளைக் காட்டி “ உங்கள ….. சுத்திப் பறந்து ……. திரியுது… பார்..” சொல்லி முடிந்ததும் சாமியாடியவர் சரிந்து கிடந்தார். சிறிதும் பெரிதுமாய் பல்லாயிரக்கணக்கில் வண்ணத்துப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. சனங்கள் விறைத்து நின்றார்கள்.

1 comments:

மலைநாடான் May 28, 2010 at 1:17 AM  

வணக்கம் நண்பரே!
நெருக்கமாய் உணர்ந்தேன் எல்லாவற்றையும்.
முடிந்தால் கீழுள்ள மின்னஞ்சலுக்கு மடலிடுங்கள்
நன்றி

jaani.n@gmail.com

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP