Thursday, May 20, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

28

வெயில் வன்னிக் காட்டிலும்; தனது சேட்டையைக் காட்டியது. பூவரசங்குளத்துச் சந்தியில் இருந்த கடையில் புகுந்தான். நல்ல கறிவணிஸ் தெரிந்தது. சாப்பிட்டான். காய்ச்சிய பசும்பால் கிடைத்தது. வயிறு நிரம்பியது. முடிந்ததும் பாடசாலையினுள் நுழைந்தான். அதிபர் சீனிவாசகம் எழுந்து வந்தார். சீனிவாசகம் நமது விளையாட்டுப் போட்டிக்குச் சில பரிசுப் பொருட்கள் வேண்டுமே. என்ன செய்வது“? விசாரித்தான். "சேர்! நீங்க சொல்லமுதலிலேயே நானும் அலெக்ஸாந்தரும் அவற்றைச் சேர்த்து விட்டோம்.“ சந்தோசத்தோடு சீனிவாசகம் சொன்னார். „விளையாட்டுப் போட்டிக்குரிய ஆயத்தங்கள் எல்லாம் தயார் வியாழன் நீகள் வந்தால் சரி. ஆனால் நடுவர்களுக்கு எப்படியும் உணவு கொடுக்கவேணும். அதுதான் முடியவில்லை.“ சீனிவாசகம் விளக்கினார். ஆனந்தனுக்கு உச்சி குளிர்ந்தது. „உணவை நான் பார்த்துக் கொள்ளுவேன்“;. ஆனந்தன் கூறினான்.

"சரி கடிதங்களைத் தாருங்கள். உடனே போய் அவற்றைக் கொழும்புக்கு அனுப்ப வேணும்“;. விரைவு படுத்தினான். சீனிவாசகம் எல்லாம் தயாராக வைத்திருந்தார். "சேர்! சாப்பிட்டுட்டுப் போங்களன். சாப்பாடு தயாராக இருக்கு“. சீனிவாசகம் முறுவலோடு அழைத்தார். "ஐயய்யோ, இப்பதான் அந்தக் கடையில சாப்pட்டேனே. இனிச்சாப்பிட இயலாது. பிறகு பார்ப்போம். நன்றி. நான் வாறன். கடிதங்களைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

கால்கள் பெடலை மிதித்தன. விளையாட்டுப் போட்டிக்குரிய உணவுபற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான். சாளம்பைக் குளம் வித்தியாலயம் வாருங்கள் என்றழைத்தது. அதிபர் கரீம் புன்னகையோடு வரவேற்றார். பாடசாலையைச் சுற்றி வலம் வந்தான். கண்கள் தேவைப்பாடுகளை ஆராய்ந்தன. "சேர் விளையாட்டுப் போட்டிக்குரிய ஆயத்தங்கள் நடக்குது. உணவுப்பார்சல்கள் பத்து எங்கள் பாடசாலை தரும். அலெக்ஸாந்தரிடம் கூறிவிட்டேன். பயப்படத்தேவையில்லை“. கரீம் அதேசிரிப்போடு கூறினார். அவரை அன்போடு பார்த்தான். நன்றி கூறினான். நல்ல மனிதர்கள் உலகத்தில் ஏராளம் உண்டு. அவர்களை நாம்தான் இனம்காணத் தவறிவி;டுகிறோம். "மிஸ்டர் கரீம் நான் அவசரமாக அலுவலகம் போகவேணும். நான் வருகிறேன். கூறிப்புறப்பட்டான். சேர்! சாப்பிட்டுங்களன். சுhப்பாடு தயாராக இருக்கு. அதிபர் அழைத்தார். வேண்டாம் கரீம் சாப்பிட்டுட்டன். இன்னொரு நாளைக்குப் பாரப்போம். நான் வாறன்“. புறப்பட்டான்.

வழியில் சுணங்காமல் நேரே கல்வித்திணைக்களத்துக்குச் சென்றான். தனது அறையில் உடலைக் கழுவினான். உடைகளை மாற்றிக் கொண்டு அலுவலகத்துக்குள் புகுந்து கடிதங்களைப் பார்வையிட்டுத் தேவையான பதில்களைத் தயாரித்தான். திறக்கவேண்டீய இரு பாடசாலைகளின் கோவைகளைப் பார்வையிட்டான். எஸ்.ஓ.படிவங்கள் சரியாகப் பூரணப்படுத்தப் படவில்லை. வரைபடங்கள் இல்லை. குறைபாடுகளைச் சரிசெய்தான். கல்விப்பணிப்பாளருடன் கலந்தாலோசித்தான். எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உரையாடினான். ஆனந்தனது செயற்பாடுகள் கல்விப் பணிப்பாளர் சிவபாததத்துக்குப் பிடித்து விட்டது. அவன் தயாரித்த கடிதங்களுக்கு தனது ஒப்பத்தையிட்டு அவனிடமே கொடுத்தார். அவற்றை கல்வி அமைச்சுக்கு அனுப்பினான்.

தான் சென்றுவந்த பாடசாலைகளின் நிலையை அறிக்கையாகத் தயாரித்தான். அறிக்கையை கல்விப் பணிப்பளருக்குக் கோவைப்படுத்தினான். நேரம் ஐந்து மணியைத் தாண்டியிருந்தது. தனது அறையில் தினசரிகளைப் புரட்டியபடி இருந்தான். கதவில் யாரோ தட்டுவது தெரிந்தது. "சேர்! மே ஐ கம் இன்..சேர்“. மெல்லிய சத்தம் வந்தது. "ஓ..யெஸ். கம் இன்“ கூறியவாறு கதவினைத் திறந்தான். அங்கே முருகப்பா நின்றிருந்தார். மெதுவாக உள்ளே வந்தார். "வாங்க மிஸ்டர் முருகப்பா“ அழைத்துக் கதவினை மெல்ல மூடினான்.

முருகப்பா திடீரென ஆனந்தனின் கால்களைப் பிடித்துக் கொண்டார். "இதன்ன மிஸ்டர் முருகப்பா? காலை விடுங்க. எழும்புங்க. நான் பெரிய மனிதனல்ல. உங்களப்போல சாதாரண மனிதன். உங்கட வயதென்ன. எனது வயதென்ன? நீங்க போயும் போயும் என்ர காலில விழுவதா?. எழும்புங்க“. அவரைப் பிடித்து எழுப்பினான். "சேர்! இதுதான் முதலும் கடைசியும். நான் விட்டபிழைகளை உணர்ந்து கொண்டேன் சேர். என்னை மன்னிச்சிக் கொள்ளுங்க. இனிமேல் என்ர கடமையச் சரியாகச் செய்வன். அதிபர் கரிமோட கதைச்சனான் சேர். அவர்ர பாடசாலையில் இருந்து விளையாட்டுப் போட்டிக்கு உணவுப் பார்சல் தருவதாகக் கூறினார். எங்கட பாடசாலையில இருந்து நாப்பது பார்சல் வரும். அது என்ர பொறுப்பு“. உண்மையில் முருகப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன.

ஆனந்தனின் மனம் வருந்தியது. வயதில் முதிர்ந்த ஒருவர் தனது காலில் விழும்படி தான் நடந்து கொண்டதற்கு வருந்தினான். அவனது மனதில் போராட்டம். தனது குற்றங்களை மறைப்பதற்காக இப்படி நடந்து கொண்டார். தனக்குத் தானே தேற்றிக் கொண்டான். "வியாழன் விளையாட்டுப் போட்டி கலகலப்பாக நடைபெறும். நான் வாறன் சேர்“. கூறிவிட்டு அவர் போனார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். மனிதர்கள் தமது குறைகளைத் தாமே உணர்ந்து கொண்டால் இந்த உலகத்தில் குற்றங்கள் பெருகாது. அதேவேளை அவர்களுக்கு உரியமுறையில் தெளிவு படுத்தி அவற்றைப் பெரிதாக்கி மனங்களை நோகச்செய்யாமலும் இருக்கவேண்டும். முருகப்பா தொடர்ந்து செய்து வந்த இச்செயற்பாடுகளை இனியும் செய்யமாட்டார். ஆனால் அதனைச் சரியாக நெறிப்படுத்த வேண்டும். சந்தர்ப்பங்கள்தான் அனைவரையும் ஆட்டிப்படைக்கின்றன.

விளையாட்டுப் போட்டி ஆனந்தன் எதிர்பார்த்ததற்கு மேலாக சிறப்பாக நடந்தது. கல்விப்பணிப்பாளர் திரு.சிவபாதம் வித்தியாசமானவர். பொதுவாக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதைத் தவிர்த்துக் கொள்வார். ஆனால் ஆனந்தன் அழைத்தபோது வந்து விட்டார். அவரது வாயாலேயே "இரண்டு புதிய பாடசாலைகள் அடுத்த மாதம் இந்த கல்வி வட்டாரத்தில் திறபடும். அத்துடன் இரண்டு பாடசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமையும். நேற்றுத்தான் திரு.ஆனந்தன் அதற்கான கடிதங்களை முறைப்படி தயாரித்து எனது அனுமதியைப் பெற்று கல்வி அமைச்சுக்கு அனுப்பியிருக்கிறார். அவரது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். அவருக்கு ஒத்தாசை கொடுக்கும் அதிபர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்“. எனக் கூறினார். அருட்திரு.பிலிப் அடிகளார் கல்விப் பணிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

"அலெக்ஸ் என்ன யோசனை“? ஆனந்தன் அவரைப் பார்த்துக் கேட்டான். "இல்லை சேர். முருகப்பாவை நினைத்துக் கொண்டேன். விளையாட்டுப் போட்டிக்கு ஒரு சதமும் தரமாட்டேன் என்று அடம்பிடித்தவர், ஐம்பது உணவுப் பார்சல் தந்தாரே. அதை நினைத்தேன்“. ஆனந்தன் கொடுப்புக்குள் சிரித்தான். "முருகப்பா நல்ல மனிசன். ஆனால் ஒருவிதமான போக்கு. அவரை நீதான் ராசா என்றால் எல்லாம் செய்வார்;. பொதுவாக நமது கல்வி வட்டாரத்தில் உள்ள அதிபர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான்;“. சிரித்துக் கொண்டே ஆனந்தன் கூறினான். "சேர் நீங்க எல்லாரையும் நம்பியிருக்கிறீங்க. ஆனால் இரண்டு மூன்று பேர் நமக்கு ஆப்பு வெச்சிருக்காங்க“. பரமன் கூறினான்.

"சேர், எல்லா அதிபர்களும் வந்து பார்த்துப் போனாங்க. ரத்தினத்தாரும், லிங்கரும் வரல்லயே. பார்த்தீங்களா? இவங்கதான் பிட்டிசத்துக்குப் பின்னால் இருப்பதாகப் பரவலான கதை“. பரமன் குறிப்பிட்டான். "யாரையும் நாங்க குற்றம் சொல்லக்கூடாது. இதனை நாம் அனுபவிக்கவேணும் என்டு இருக்கு. அதை அனுபவிக்கிறம். எல்லாம் நன்மைக்கே. நாம் பட்ட துன்பத்தை பிறர்படும்படி செய்யவோ, நினைக்கவோ கூடாது“. அலெக்ஸாந்தர் ஆனந்தனைப் பார்த்தார். அனந்தன் சிரித்துக் கொண்டு நின்றான்.

யோகதாஸ் வந்தார். மாற்றுடைகளைக் கொடுத்தார். "சேர், உங்கள பொலிஸ் கைது செய்துள்ளதாகவும், செட்டிகுளம் கல்வி வட்டாரம் வெற்றிடமாக இருப்பதாகவும், அதற்காகத் தற்காலிகமாக வேறு ஒருவரையும் நியமித்து, அனுமதிக்காகக் கல்வி அமைச்சுக்குக் கடிதம் அனுப்பியாச்சு. ஆவர்தான் இப்ப கடமைசெய்கிறார். பாருங்க சேர் இவங்கட குணத்த. ஆறதலாகக் கடிதம் அனுப்பியிருக்கலாம்தானே?“. கலங்கியவாறு யோகதாஸ் கூறினார். "யோகதாஸ் சரியானதைத்தான் கல்விப் பணிப்பாளர் செய்திருக்கிறார். கட்டாயம் ஒருவர் அந்த வேலைகளைக் கவனிக்கவேண்டும். அடுத்தது கல்வி அமைச்சுக்குத் தெரிவிக்க வேண்டியது அவரது கடமை. அதனை நாங்கள் ஏன் பெரிதுபடுத்தவேணும்.? வாறகிழமை எங்கள விடுவாங்க. வேறென்ன விசேசம்? மனதினில் கவலை இருந்தாலும். அதனை வெளிக்காட்டாது யோகதாசுக்குப் பதில் கூறினான்.

"யாரைப் போட்டிருக்கிறார்“;? கேட்டான். "ஐயாத்துரையரப் போட்டிருக்கிறார்“. யோகதாஸ் பதிலளித்தார். "எங்களிடம் பலவீனங்கள் நிறையவே உண்டு. தகுதியான தகைமையுள்ளவர்களை உரிய பதவிக்கு நியமிப்பதில்லை. இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள்தான் கல்வி அதிகாரியாக நியமனம் பெறவேண்டும். ஆனால் அதற்கு எதிர்மாறாக நியமனங்கள் நடக்குது. கல்வி உலகம் சீரழிவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அடுத்தது கல்வி அமைச்சும், அரசாங்கமும் கல்விச்சேவையை அலட்சியம் செய்வதாகும். பாடசாலைக்கு கல்வி மேற்பார்வைக்குச் செல்பவர் பாடசாலைகளில் உள்ள அதிபர், ஆசிரியர்களைவிடவும் தகைமையுடையவராக இருக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் மரியாதை செலுத்துவார்கள். இவற்றுக்குக் காரணம் அரசியல்வாதிகள்தான். இந்தநிலை என்று மாறும். பெருமூச்செறிந்து கூறினான்.

அதிபர் பாலசிங்கம்; இரவு உணவினைச் சுமந்து வந்தார். "எங்களால எவ்வளவு பேருக்குத் துன்பம்“. ஆனந்தன் கவலையோடு சொன்னான். "ஏன் சேர் அப்படிச் சொல்றீங்க. இது எங்கட கடமை. நாங்க சந்தோசப்படுறம் சேர். உங்களுக்குச் சேவைசெய்யக் கொடுத்து வைத்திருக்க வேணும். உங்களால வவுனியா மாவட்டம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது. நீங்க விரைவில வெளியில் வந்து சேவைசெய்ய வேணும். இதுதான் எங்கள் எல்லோரதும் பிரார்த்தனை“. பாலசிங்கம் சொல்லும்போதே அவரது நா தளதளத்தது. „சேர், சட்டத்தரணி வந்தாரா? என்ன சொன்னார்?“ வினவினார். "அடுத்த கிழமை பார்க்கலாம் என்று சொன்னன். அடுத்த கிழமை நாங்க வெளியில வருவோம் என்ற நம்பிக்கை இருக்கு. எங்களால நீங்களும் அலைவதுதான் சங்கடமாயிருக்கு“. ஆனந்தன் விளக்கினான்.

"டி.ஒ. போடாட்டிச் சரி. போட்டாத்தான் சேர் சிக்கல். உங்கட விருப்பம்போல செய்வம் சேர். பகல் என்ன சாப்பிட்டிங்க.? உணவைக் கொடுத்தவாறே பாலசிங்கம் கூறினார். "பகல் அலெக்ஸ் வீட்டிலிருந்தும், பரமன் வீட்டிலிருந்தும் உணவு வந்தது. நல்ல சாப்பாடுதான். ஆனால் சாப்பிடேலாது“. ஆனந்தன் பதிலளித்தான். "வேறென்ன சேர் வேணும்.“? பாலசிங்கம் கேட்டார். "ஒன்றுமே வேண்டாம். சுதந்திரமாக வெளியில் வரவேண்டும்“ புன்னகையோடு ஆனந்தன் சொன்னான்.

தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP