கனவு மெய்ப்பட வேண்டும்
1
ஆனந்தனுக்கு அந்த நீல ஜீன்ஸ் எடுப்பாகத் தான் இருந்தது. உடலொட்டிய டெனிம் ஜீன்ஸ்சுக்குப் பொருத்தமான மெல்லிய நீலநிற சேட். அவனது செம்மஞ்சள் மேனிக்குக் கச்சிதமாக இருந்தது. இடுப்புப் பட்டி மின்ன அவன் நடப்பது அழகாக இருந்தது. இடக்கண்ணுக்கு நேரே உச்சியிலிருந்து ஒரு அங்குல இடை வெளியில் எடுத்து விட்ட வகிடு. நெற்றியில் சுருளாக விழுந்து காற்றில் அலையும் சுருள்முடி. அழகிய அரும்பு மீசை. எந்த நேரமும் முறுவல் ஓடும் இதழ்கள். கனிவான பேச்சு. கம்பிரமான ஒலி. நடையில் ஒரு மிடுக்கு. அனைவரையும் மதிக்கும் பண்பு. அன்போடு உறவாடும் தன்மை. இது ஆனந்தனின் இயல்பு.
அதனால் அந்தத் திணைக்களத்தில் அவனுக்குப் பெருமதிப்பு ஏற்பட்டதில் வியப்பில்லை. அவன் உயர்பதவி வகித்தாலும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதும் இல்லை. எல்லாரோடும் சகஜமாகப் பழகுவான். அவன் வவுனியா நகருக்கு இடமாற்றம் பெற்று வந்து ஆறுமாதங்கள்தான் ஆகின்றன. இந்த ஆறுமாதங்களில் நல்லதொரு உயரதிகாரி தமக்குக் கிடைத்து விட்டதாக அனைவரும் உணரத்தொடங்கி விட்டனர். அவனை உயரதிகாரியாக நினைத்ததே இல்லை. தங்களுக்குக் கிடைத்த உறவினனாகவே அனைவரும் கருதினர்.
அது மார்கழி மாதம். மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். இயற்கையின் அழகு துள்ளி விளையாடும். மார்கழியில் மயிர் நனையாத் தூறலாமே? மழைத்தூறல்களைக் கையிலேந்திப் பார்க்க ஆசை. பார்த்தால் என்ன? கைகளை நீட்டினான். கைகளில் குளிர்தடவி விட்ட உணர்வுமட்டும் புரிந்தது. இரு கைகளையும் சேர்த்துத் தேய்த்துக் கொண்டான். மழையோடு பனி கலந்து இறைக்கும் அற்புதம். குளிர் காற்று வீசி முகத்தில் அறையும் சிலிர்ப்பு. அது இங்கிதத்தை அள்ளி இறைக்கும் பக்குவம். மார்கழியில்தான் வருடத்துக்கான பரீட்சைகள் பள்ளிகளில் நடைபெறும். இலங்கையில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முக்கியமானது. கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்காலங்களில் கல்வி சார்ந்த அலுவலர்களும், அதிபர், ஆசிரியர்களும் மாணவர்களும் இயந்திர கதியில் இயங்குவார்கள்;. நகரம் சுறுசுறுப்பாக இயங்கும். பரீட்சைகள் முடிவுற்றதும் நகரம் சோபை இழந்ததுபோல் காட்சிதரும்.
வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று விளையாடிக் கொண்டிருந்தது. வவுனியா மாவட்டம் மாரியில் நீந்திக் கொண்டிருந்தது. குளங்கள் நிறைந்து வளம்பெருக வேண்டும். இது அக்கால மன்னர்களது வைராக்கியமாகும். அக்கால மன்னர்கள் ஏராளமான குளங்களைக் கட்டி வைத்திருந்தனர். மன்னர்களுக்குள் தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடு இருக்கவில்லை. அவ்வாறுதுதான் ஆட்சி செய்துள்ளனர். சிங்கள மன்னர்களானாலும், தமிழ் மன்னர்களானாலும் அவர்கள் அனைவரும் பதவி ஆசை கொண்டவர்களே. அவர்களுக்கு அரச பரம்பரையில்தான் கரிசனை. அரசர்களுக்கு மொழி, இனம். நாடு முக்கியமல்ல. திருமணங்கள் அரச பரம்பரையில்தான் செய்து கொள்வார்கள். தூய்மையான அரச பரம்பரை எந்த நாட்டிலும் இல்லை. ஆனால் சாதாரண பிரசைகள் தங்களது சாதி, மொழி, இனங்களை விட்டுவிலகாது இருக்கவேண்டும். இதில் கரிசனை காட்டினார்கள். நாடு செழிக்கவும் தமது பரம்பரை நல்லநிலை பெறவும் கவனம் செலுத்தினார்கள். அதற்காகப் பாடுபட்டார்கள். குளங்களை அமைத்தார்கள்.
வவுனியாவிலும் குளங்கள் ஏராளம் உண்டு. இப்போதுள்ள வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கப்பாலும் வன்னி இராச்சியம் பரந்திருந்தது. வர்ணாச்சிரம தர்மம் என்பார்களே அது அக்காலத்தில் நிலவியது. அதற்கேற்பக் குளங்களும் அமைக்கப் பட்டன. அவ்வாறு அமைந்த குளங்கள் வன்னிப்பிரதேசத்திலும் உண்டு. இந்த மாரியில் அவை நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. மரங்கள் மதாளித்துச் சிலிர்த்தன. குரங்குகள் கொப்புகளில் குளிர்காய்ந்தன. வீதிகளில் குறுக்கறுத்து மழைநீர் சலசலத்தது. வழிந்து சிறுகால்வாய்களூடாக ஓடியது. அதில் அடையல்கள் சவாரி செய்தன. குடைகள் உலா வந்தன. வாகனங்கள் மழைநீரை வாரியடித்துச் சென்றன. இராணுவ வாகனங்கள் வேகமாக வரும். மக்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தற்செயலாக மோதுண்டால் அவ்வளவுதான். இராணுவத்தைத் தாக்க முயன்றதாகக் குற்றம் பதியப்படும். மக்களையும் இராணுவத்தினர் வாட்டி வதைத்தெடுத்தனர். அடாவடித் தனம் தலைவிரித்தாடியது. பாரதி சொல்வானே ‘பேயரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரம்’ என்று. அவ்வகை இனவாத ஆட்சி. நாட்டு நடப்பு அப்படி இருந்தது. பெரும்பான்மை இனத்தவரின் ஆட்சி. அதனால் சிறுபான்மை மக்கள்மேல் அராஜகம் கட்டவிழ்க்கப் பட்டிருந்தது. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப் பட்டிருந்தனர். அவர்களின் அட்டகாசம் அதிகரித்திருந்தது.
வவுனியா வடக்கையும் தெற்கையும் இணைக்கும் சந்தைப் பெருநகராக விளங்குகிறது. வவுனியா நகரின் சந்தி முக்கியமானது. அச்சந்தியில் இருந்து இலங்கையின் எந்தப் ;பகுதிகளுக்கும் செல்வதற்கான போக்கு வரத்துச் சேவைகள் உண்டு. தெற்கின் விளைபொருட்கள் வந்து குவியும். வடக்கிலிருந்து புகையிலை, வெங்காயம், வாழைக்குலைகள் என ஏராளம் வரும். லொறிகளில் ஏற்றப்பட்டதும்; தெற்குநோக்கி விரையும். தெற்கின் பண்டங்கள் வடக்கு நோக்கிப் பயணமாகும். சந்தை இரைந்து கொண்டிருக்கும். புகைவண்டிச் சேவைகள் வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் விரைந்து கொண்டிருக்கும். மூவின மக்களும் ஒன்றுகூடி மகிழும் இடமாக வவுனியா திகழ்கிறது. அரச, அரசசார்பற்ற, தனியார் நிறுவனங்கள் நகரில் ஆங்காங்கு தத்தம் நாளாந்த நடவடிக்கைகளில் மூழ்கியிருந்தன. அதேபோல் இராணுவத்தின் கெடுபிடிகளும் தொடர்ந்தன.
கண்டி வீதியால் அந்த லாண்ட்றோவர் விரைந்து கொண்டிருந்தது. கல்வித் திணைக்கள வளாகத்தினுள் வாகனம் நுழைந்தது. லாண்ட்றோவரில் இருந்து ஆனந்தன் இறங்கினான். அவனது கையில் பல ஆவணங்கள் இருந்தன. அவை யாவும் பரீட்சை சம்பந்தமான ஆவணங்கள். ஆனந்தன் பல பரீட்சை நிலையங்களின் இணைப்பாளராகச் செயற்பட்டுக் கொண்டிருந்தான். பரீட்சைத் திணைக்களத்தில் இருந்து வினாத்தள்கள் அடங்கிய பொதிகள் வந்திருந்தன. அவற்றைப் பெற்றுக் காவல்துறையினரின் நிலையத்தில் பத்திரமாக வைத்திருந்தான். காலையில் வினாப்பொதிகளை எடுத்துவருதல், பரீட்சை நிலையங்களுக்குப் பகிர்ந்து கொடுத்தல், பரீட்சை முடிவுற்றதும் விடைப்பொதிகளை ஒன்று சேர்த்து மத்திய இணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தல் ஆகிய கடமைகள் ஆனந்தனிடன் கொடுபட்டிருந்தன.
மழை அனைவரையும் ஆட்டிப்படைத்தது. ஆனந்தன் மட்டுமல்ல பரீட்சைக் கடமையில் ஈடுபட்ட அனைவரும் களைத்திருந்தனர். காலையில் வழமைபோல் வினாத்தாள் பொதிகளை எடுத்துக் கொண்டான். எங்கும் மழைநீரின் அட்டகாசம். பெருவெள்ளக் காடாய் வவுனியா காட்சி தந்தது. வாகன வசதி போதுமானதாக இல்லை. ஒரு வாகனத்தில் இரண்டு பகுதிகளுக்குச் செல்லவேண்டும். கடந்த நான்கு நாட்களாக இவ்வாறு சமாளித்தாகி விட்டது. ஆனால் இன்று பெருஞ்சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஓமந்தை அழகானதொரு சிறிய நகர். மருதநிலத்தின் அழகு தலைவிரித்தாடும். நிலம் விளைந்து நெற்கதிர்கள் சாய்ந்து படுத்திருக்கும். ஆநிரைகள் கூட்டங்கூட்டமாய்த் திரியும். படித்தவர்களின் முயற்சியால் பெரியதொரு உயர்நிலைப் பள்ளிக்கூடம் நிமிர்ந்து நின்றது. அந்தப் பள்ளிக்கூடம் ஒரு பரீட்சை மத்திய நிலையமாக இயங்கியது. ஓமந்தைப் பரீட்சை நிலையத்துக்குச் செல்வதே பெரும்பாடாய் இருந்தது. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. காலை எட்டரை மணிக்குப் பரீட்சை தொடங்கும். அதற்குமுன் வினாத்தாள் பொதிகளை ஒப்படைக்க வேண்டும். ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தினான்.
உதவிப்பணிப்பாளர் செல்வம் வினாப் பொதிகளுடன் தயாராக நின்றார். அவர் ஒரு மேதை. அதிகாலை மூன்றுமணிக்கு எழுந்து விடுவார். குளித்து தேநீர் தயாரித்துக் குடிப்பார். ஆங்கிலப் புத்தகங்களை வாசித்து ரசிப்பார். இரசித்துச் சுவைத்தவற்றை அழகாக எடுத்து விளக்குவார். சேக்ஸ்பியரின் யூலியஸ்சீசர் நாடகம் அற்புதமானது. அதில் அந்தனியின் பேச்சு மிகவும் சுவாரஸ்யமானது. அந்தப் பேச்சு அவருக்குத் தண்ணிபட்ட பாடம். நடித்தவாறு பேசிக்காட்டுவார். பாராளுமன்றத்தில் அன்றைய உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களைப் படித்துவிட்டு பேசிக்காட்டுவார். வழக்கறிஞர் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களது நீதிமன்ற வாதங்களை அப்படியே பேசுவார். ஆங்கிலம் ஆற்றொழுக்காக ஓடும். செல்வராசா அவரது பெயர். ஆனால் அவர் தனது பெயரின் முதல் எழுத்தை மட்டும் எழுதி தனது அப்பாவின் பெயரான கணபதிப்பிள்ளை என்பதையே எழுதுவார். தனது தந்தையின் பெயரால் அழைக்கப் படுவதையே பெரிதும் விரும்பினார். தந்தையை இளமையிலேயே இழந்துவிட்டார். தனது தாயையும், தம்பிமார்களையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார். திருமணம் செய்யாத கட்டைப் பிரமச்சாரி. அவரை அந்த வாடகை வாகனத்தில் அனுப்பி வைத்தான். அவர் ஓமந்தைப் பரீட்சை நிலையத்துக்கு உரிய வினாப் பொதிகளோடு சென்று விட்டார். மற்ற வாகனத்தில் பாவற்குளம் பரீட்சை நிலையத்துக்கு விரைந்தான்.
பாவற்குளம் பண்டையப் பெருமைகளுக்கு உதாரணமாய் விளங்கியது. வன்னிவள நாட்டின் பொருளாதாரத் தொட்டில் அது. குளம் தொட்டு வளம் பெருக்கும் பூமி. பயிர் செழித்து விளைச்சலைக் கொடுக்கும் வளமான மண் நிறைந்தது. நாடு சுதந்திரம் பெற்றபின் குடியேற்றத் திட்டங்கள் என்ற பெயரால் பெரும்பான்மை மக்களைத் தமிழ்ப் பிரதேசங்களைக் கைப்பற்றி அவர்களை குடியேற்றும் நோக்குடன் செயற்படுத்திய திட்டங்களில் ஒன்றுதான் பாவற்குளம் குடியேற்றத் திட்டம். தமிழர்கள் பெரும்பான்னையாகக் குடியேற வேண்டிய பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றி சகல வசதிகளையும் அரசு செய்து கொடுத்திருந்தது. பாவற்குளம் பாரிய குளமாகும். அது உடைப்பெடுத்து வீதியின் குறுக்காகப் பாய்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில்தான் பரீட்சை நிலையம் இருந்தது. ஆனாலும் எப்படிப் போவது. பேரிரைச்சலோடு வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது.
அவனுக்குச் சிந்திக்க அவகாசமேது? அந்தக் குளிரிலும் வெயர்த்துக் கொட்டியது. நேரத்தைப் பார்த்தான். ஒன்பதைத் தாண்டிவிட்டது. சாரதி காசிம் வானத்தைப் பார்த்தான். அது இருண்டு கறுத்து உறுமியது. இடைவிட்ட மின்னல். இடையிடைலே இடியோசை காதைப் பிளந்தது. “காசிம் வாகனத்தைத் திருப்புங்கள். மதவாச்சி வழியாகப் போவோம்.” கூறிமுடிக்குமுன் வாகனம் திரும்பியது. காசிம் தனது கடமையில் கண்ணானவர்.
வழிநெடுகிலும் மழைநீர். நீரைக் கிழித்து வாகனம் விரைந்தது. ஈரற்பெரியகுளத்தைத் தாண்டி மதவாச்சிச் சந்தியில் வலப்பக்கமாகத் திரும்பி மன்னார் வீதியால் வாகனம் சென்றது. சரியாகப் பத்து மணிக்குப் பரீட்சை நிலையம் வந்துவிட்டான். ஆனந்தனைக் கண்ட அதிபர் சீனிவாசகம் முகம்மலர்ந்து வரவேற்றார். சீனிவாசகம் கட்டுமஸ்த்தான உடலுடையவர். மகாபாரதத்தில் வரும் பீமனின் சாயலை அவரில் காணலாம். சிரிக்கும் போது கன்னத்தில் ஒரு குழி விழும். சிறிதாகக்; கண்ணிமைகள் மூடியிருக்கும். பாதிவிழிகள் தெரியும். பாடசாலைக்காகவும். மாணவர்களது எதிர்காலத்துக்காகவும் உழைப்பவர். கடமை உணர்ச்சி உள்ளவர். வவுனியா மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர். உரிய நேரத்துக்குப் பரீட்சை நடைபெறுவதில் அக்கரை உள்ளவர். வினாப் பொதிகளை பெற்றதும் இயந்திரமயமானார். வினாத்தாட்களை பரீட்சார்த்திகளுக்கு விநியோகித்தார். செல்வராசா அதிபர் அற்புதமான மனிதர். பிறருக்கு உதவுவதில் முன்நிற்பவர். அவர் சீனிவாசகத்தின் உதவிப் பரீட்சகராகச் செயற்பட்டார். இருவரும் சுறுசுறுப்பானார்கள். கடுகதியாக வினாத்தாட்களைப் பரிமாறினார்கள். ஏனைய உதவியாளர்களும் விரைந்து செயற்பட்டார்கள். வினாத்தாட்கள் கொடுபட்டன. வினாத்தாள்கள் கொடுபட்டபின்தான் ஆனந்தனுக்கு நிம்மதிப் பெருமூச்சுப் பறந்தது.
சீனிவாசகம் பரீட்சை நடைபெறுவதற்குரிய ஒழுங்குகளைச் செய்திருந்தார். பதகளிப்பால் சீனிவாசகத்தின் மூக்குக்கண்ணாடி கீழே விழுந்து விட்டது. அதிர்ஸ்ட்டவசமாக ஒரு கண்ணாடி தப்பிப் பிழைத்தது. ‘இஸ்றெயில்’ நாட்டின் முன்னாள் அமைச்சர் மோசிதயான் போல் ஒற்றைக் கண்ணாடியில் காட்சியாகிக் கொண்டிருந்தார். நமது நாடு பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தது. அப்போது சோல்பரிப்பிரபு ஆளுநராக இருந்தார். அவர் ஒற்றைக்கண்ணில் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். எதற்காகக் கண்ணாடி அணிந்தாரோ தெரியாது. ஆனால் அப்போது நமது மக்கள் பேசிக்கொண்டார்கள். மக்கள் அனைவரும் தனது ஒரு கண்போன்றவர்கள். அவர்கள் அனைவரையும் ஒருகண்ணால்தான் பார்க்கவேண்டும் என்று அவர் ஒரு கண்ணுக்குக் கண்ணாடி அணிந்து நோக்கினாராம்.
அதேபோல் சீனிவாசகமும் கல்வி உலகத்தை ஒரு கண்ணாக மதித்தார். சீனிவாசகத்துக்கு ஒரு கண்ணாடி இல்லாதது குறையாகத் தெரியவில்லை. அவருக்குக் கடமைதான் முக்கியம். ஆனந்தனின் மனதில் சீனிவாசகத்தின் உருவம் படிந்து கொண்டது. அனுமானின் உள்ளத்தில் இராமனின் உருவம் எப்படி இடம்பிடித்ததோ அப்படியே சீனிவாசகத்தின் உருவம் பதிந்து கொண்டது. வானத்தில் இருள் சூழ்ந்து மூடிக்கொண்டது. பகற்பொழுது போல் இல்லை. பரீட்சை மண்டபத்துள் போதிய வெளிச்சம் இல்லை. ஊரவர்களின் உதவி அவருக்கு நிறையவே இருந்தது. பல ‘பெற்றோமக்ஸ்’ விளக்குகள் விரைந்து வந்தன. ஒவ்வொரு அறையிலும் பெற்றமக்ஸ். உரிய இடங்களில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
முதல்நாள் நடைபெற்ற பரீட்சையின் விடைத்தாள் பொதிகளைப் பாதுகாப்பாகச் சீனிவாசகம் வைத்திருந்தார். அவற்றை அவர் ஆனந்தனிடம் ஒப்படைத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டு திரும்பினான். மழை கொட்டிக் கொண்டிருந்தது. பசி வயிற்றைப் பிசைந்தது. தான் கொண்டு வந்த விடைத்தாள் பொதிகளை இணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தான். பதிவேட்டுப் பற்றுச் சீட்டுக்களைப் பெற்றான். நிம்மதிப் பெருமூச்சோடு மீண்டும் ‘லான்ட் றோவரில்’ ஏறிக் கொண்டான். செல்வமும் சேர்ந்து கொண்டார்.
“காசிம் நேரே சுத்ததனந்தா ஹோட்டலுக்கு விடுங்கோ. சாப்பிடுவோம்.” ஆனந்தன் முடிக்கவில்லை. ஜீப்வண்டி ஹோட்டல் பக்கம் திரும்பியது. மாற்றமாகிச் செல்லவிருந்த நண்பர் ராஜசுந்தரத்தின் நினைவு வந்தது. அவரும் எதிரே வந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு பறப்பட்டான். வாகனத்தின் ரயர்கள் மழைநீரைக் கிழித்து இரைந்து சென்று சுத்தானந்தா ஹோட்டலை அடைந்தது. உள்ளே சென்றார்கள். ஹோட்டல் அழகாக இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. மேசையில் இருந்த உணவுக்குரிய பட்டியலைப் பார்த்தான். விரும்பிய உணவு வகைகளைச் சுட்டிக்காட்டினான். உணவு மேசையில் குவிந்தது.
சாப்பிடும்போது யாரும் கதைக்கவும் இல்லை. அவ்வளவு பசி அவர்களுக்கு. உணவுக்கு மேல் வாழைப் பழத்தையும் விழுங்கினார்கள். ஆனந்தன் கட்டணத்தைச் செலுத்தினான். வெளியே வந்தார்கள். “இன்று யார் முகத்தில் விழித்தோம்?” செல்வம்தான் பேச்சைத் தொடங்கினார். “யார் முகத்தில் விழித்தாலும் கடமையைச் செய்ததில் மனத்திருப்தி ஏற்பட்டது. அல்லவா? அதற்காக நாம் கடவுளுக்குத்தான் நன்றி கூறவேண்டும்.” ஆனந்தன் சொல்லிக் கொண்டு வாகனத்தில் ஏறினான். கண்டி வீதியில் அவர்கள் தங்கும் விடுதி இருந்தது. அந்த விடுதிக்கு வாகனம் சென்றது. வழியில் ராஜசுந்தரம் இறங்கிக் கொண்டார். அந்த விடுதி தூரத்தில் உள்ள மாணவர்கள்; தங்கிப் படிப்பதற்காகக் கட்டப்பட்டது. விடுமுறைக் காலங்களில் பரீட்சை எடுக்கும் மாணவர்கள் மட்டும் தங்கியிருப்பார்கள். மற்றவர்கள் விடுமுறைக்காகத் தங்கள் வீடுகளுக்குப் போய்வி;டுவார்கள். ஒரு அறையோடு சேர்ந்த சிறிய மண்டபம் இவர்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. செல்வம் மட்டும் சிறிய அறையில் ஓய்வைக் கழிப்பார். மற்றவர்கள் மண்டபத்தில் உள்ள கட்டில்களைப் பயன்படுத்துவார்கள். நேரம் பிற்பகல் மூன்று மணியிருக்கும். விடுதியினுள் நுழைந்து சற்றுக் களைப்பாற எண்ணினார்கள். செல்வம் அறையினுள் சென்றார். மேசையில் தினசரிகள் கிடந்தன. ஆனந்தன் அவற்றைப் பார்த்து விட்டு உடைகளை மாற்ற எண்ணினான். கட்டிலில் சாய்ந்தவாறு ஆனந்தன் அன்றயத் தினசரிகளைப் புரட்டினான்.
வாகனங்களின் இரைச்சல் கேட்டது. விடுதியின் முன்னால் இரண்டு வாகனங்கள் வந்து நின்றன. தடதடவென பூட்ஸ் சத்தங்கள். தொடர்ந்து ஸ்ரீலங்கா ராணவத்தினரின் சுற்றி வளைப்பு. ஆனந்தன் வெளியில் வந்தான். அவனது கண்கள் சுழன்றன. கட்டிடங்களைச் சுற்றி இராணுவத்தினர் நின்றிருந்தனர். அவர்களின் கைகள் துப்பாக்கிகளை ஏந்தியிருந்தன. அசைந்தால் துப்பாக்கிகள் குண்டுகளைக் கக்கும். உயிர் பறிக்கும். ஒன்றும் புரியாது விழித்தான். ஒரு இராணுவக் கப்ரன் வாகனத்தில் இருந்து இறங்கினான். மெதுவாக நடந்து வந்தான். அவனைப் புடைசூழ பல இராணுவ வீரர்கள் பின்தொடர்ந்தார்கள். அவர்களை நோக்கி ஆனந்தன் எதிர்கொண்டான்.
தொடரும்
0 comments:
Post a Comment