கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
6
பனிகலந்து குளிர்காற்று வீசியது. விடிகாலைப் பொழுது. சரியாக ஆறுமணி. அன்புவழிபுரம் சந்தியைத் தாண்டி வாகனம் கன்னியா வெந்நீர் ஊற்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. இயற்கையின் அழகு கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. வீதியோரம் பசும்புற்தரை பசுமை விரித்து வரவேற்றது. உயர்மரங்களில் குரங்குகளின் குதூகலிப்பான பாய்ச்சல். இளைஞர் யுவதிகளின் சைக்கிள் பவனி. கன்னியா வெந்நீரூற்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஒரு பதிவான இடத்தில் சிறுமதில் சூழந்திருக்க அதனுள் ஏழு சிறு கிணறுகள். ஓவ்வொன்றும் வித்தியாசமான வெப்பத்தில் நீரைக் கொண்டிருந்தன. சுமார் மூன்றடி ஆழத்தில் நீர் இருந்தது. ஒரு கிணற்றுநீர் அளவான சூடாக இருக்கும். அடுத்தது அதைவிடவும் சூடாக இருக்கும். அந்த நேரத்தில் இளஞ்சூடு இங்கிதத்தை அளித்தது. மேரிக்கு புதுவித அனுபவம். எப்படி தண்ணீர் சூடாகிறது? அவர்கள் யாருமே வெந்நீரூற்றைப் பார்க்கவில்லை.
ஆசைதீரக் குளித்தார்கள். டேவிட் படுசந்தோசமாகக் காணப்பட்டார். செபஸ்தியார், மார்கிரட். பிள்ளைகள் அனைவரும் சந்தோசத்தில் மிதந்தார்கள். கிணறுகளில் வெந்நீரை அள்ளி மாறிமாறி உடலில் ஊற்றிக் குளித்தார்கள். சிரிப்பும் கும்மாளமும் கொலுவிருந்தது. டேவிட்டுக்குச் சொந்தங்கள் மறந்து பல வருடங்கள் பறந்து விட்டன. இப்படி மீண்டும் சந்திக்கும் வாய்ப்பையே மறந்திருந்தார். அவர் நினைத்துப் பார்க்காதது நடந்து கொண்டிருக்கிறது. மனித மனதுக்கு மட்டுந்தானே உணர்வுகளை அனுபவிக்கவும், அதனை அசைபோட்டு ரசிக்கவும். நினைவில் தோய்ந்து சந்தோசிக்கவும் முடியும். "தம்பி ஆனந்தன்! உன்னாலதான் நான் இண்டைக்குச் சந்தோசமாக இருக்கிறன்“. டேவிட் மனம்விட்டுப் பேசினார். "ஐயா மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவியைச் செய்யவேணும். உங்கள் சந்தோசத்தைப் பார்க்க எனக்குப் பெரிய சந்தோசமாக இருக்கு. அதைவிடச் சந்தோசம் தங்கைச்சி ஆன்மயூரிக்கு. அங்க பாருங்க. அவ சொந்தங்களோட எவ்வளவு சந்தோசமாக விளையாடுறா. அவ இப்படிச் சந்தோசமாக இருந்ததை நான் பார்த்ததே இல்லை.“ கைகளால் காட்டியவாறு கூறினான். நேரம் போனதே தெரியவில்லை.
குளித்து வெளியே வந்தார்கள். உடைகளை மாற்றினார்கள். பக்கத்தில் கடைகள் இருந்தன. அரியரத்தினம் ஆனந்தனின் நண்பன். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அரியன் ஆனந்தனைக் கண்டதும் மகிழ்ந்து போனான். கன்னியாவுக்கு வந்தால் வீட்டுக்கு வரும்படி அழைத்திருந்தான். அரியனின் அப்பா உணவுக்கடை வைத்திருந்தார். அந்தக் கடைக்குள் நுழைந்தார்கள். அரியன் ஆனந்தனைக் கண்டுவிட்டான். "டேய் ஆனந்தா வா..வா.. எப்ப வந்தநீ.“ கேள்வியோடு வரவேற்றான். "அரியன்.. சரியான பசி. டேவிட் ஐயாவைத் தெரியும்தானே? இவர்கள் அவரின் சொந்தக்காரர். கன்னியா பார்க்க வந்தார்கள். குளிப்பு முடிந்து விட்டது. இனிச் சாப்பாடுதான்.“ அரியனின் அப்பா புன்னகையோடு வந்தார். அவரிடம் அரியன் ஏதோ சொன்னான். அவரே பக்கத்தில் வந்து விட்டார். இருக்கைகளில் இருந்தார்கள். ருசியான தோசை கமகமத்தது.
அரியனும் அவர்களோடு அமர்ந்து கொண்டான். சுடச்சுடத் தோசை இருந்தது. சாம்பார், சம்பல் எனப்பரிமாறப்பட்டன. சுவைத்து உண்டார்கள். செபஸ்ரியான் இவ்வாறான உணவு உண்டதே இல்லை. "நல்ல ருசியான தோசை". என்றார். சுத்தமான காய்ச்சிய பசும்பால் கிடைத்தது. புண்ணிய தீர்த்தம் ஆடிய திருப்தியில் இருந்தார்கள். சற்று ஓய்வெடுத்தார்கள். அரியனின் அப்பா அற்புதமான மனிதர். பார்த்த மாத்திரத்திலேயே ஆட்களை எடைபோட்டு விடுவார். அவருக்கு அனைவரையும் பிடித்து விட்டது. தங்களோடு பகல் பொழுதைக் களிக்கும்படி அன்பாக வேண்டுகோள் விடுத்தார். அவரது வற்புறுத்தலைத் தட்டமுடியவில்லை. அன்று மாலைவரை அவர்களது வீடு கலகலத்தது. பொழுது இன்பமாகக் கழிந்தது. கொழும்புக்குப் போவதை நினைக்கும்போதுதான் துக்கமாக இருந்தது.
மாலை நான்கு மணியிருக்கும். பிரிய மனமில்லாது புறப்பபட்டார்கள். ஒருகிழமை விரைந்தோடியது. திருகோணமலை புகைவண்டி நிலையம் பொலிவிழந்து கிடந்தது. ஆனால் பயணிகள் நிறைந்திருந்தனர். வெறுமையை உணர்வதும், முழுமையைக் காண்பதும் அவரவர் மனதிற்கேற்ப நிறைபவை. பயணிகள் நிறைந்திருந்தாலும், அல்லது பலர் நம்மோடு அருகிருந்தாலும், நமது மனதில் நிறைந்திருப்பவர்கள் இல்லாதபோது வெறுமையை உணரமுடியும். பயணிகள் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். மெல்லிய இருள் பரவிக் கொண்டிருந்தது. டேவிட் ஐயாவின் கண்கள் குளமாகியிருந்தன. புகைவண்டி புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தன. ஆனந்தனை இன்னும் காணவில்லை. அவனது வருகையைப் பலர் எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். "எங்கே இந்த அண்ணன் போனார்.“? ஆன்மயூரி மனதுக்குள் கேட்டவண்ணம் இருந்தாள்.
மேரியின் கண்கள் ஒரு நிலையில் இல்லை. அவை அலைபாய்ந்து கொண்டிருந்தன. மனம் வெறுமையை உணர்ந்து கொண்டிருந்தது. அவளது மனம் அவளிடம் இல்லை. மக்களின் கனத்த உள்ளங்களை ஒன்று சேர்த்துப் பிரியவைப்பது இயற்கையின் வேடிக்கை விளையாட்டா? நம்மீது அன்பு செலுத்துபவரின் வருகை எதிர்பார்த்தது போல் கிடையாது விட்டால் மனம் எவ்வாறெல்லாம் சிந்திக்கும். மனச்சுமை கூடி இதயத்தை அழுத்தும். இதயம் பிழிபட்டுக் கடுக்கும். மேரிக்கு இதயம் கடுத்தது. ஒரு கிழமை ஓடிப்போயிற்று. "எப்படி இந்த நேரம் பறக்கிறது.? நான் தனிமையில் இருக்கும் போது மெதுவாக நகரும் நேரம், விரும்பியவர்களுடன் இருக்கும் போது எப்படி விரைந்தோடுகிறது“? அதிசயித்துக் கற்பனையில் மேரி ஆழ்ந்து விட்டாள்.
"ஹலோ... என்ன... யோசனையா“? மேரி சத்தம் கேட்டுத் திடுக்கிட்டாள். தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். வாடியிருந்த முகம் மகிழ்ச்சி கண்டது. அவளது கண்களில் மலர்ச்சி குடிகொண்டது. முகமெல்லாம் பூத்து மலர்க்கொத்தாகக் காட்சியாகியது. தன்னை மறந்து புன்னகையை இதழ்கள் சுமந்தன. ஆனந்தன் அவளது அழகை அப்படியே அள்ளிப் பருகினான். தேனுண்ட வண்டாகத் திளைத்தான். "அண்ணா! இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள்“;? அழாக்குறையாக ஆன்மயூரி கேட்டாள். "அதையேன் கேட்கிறாய் மயூரி? ஆஸ்பத்திரிக்குப் போய்வர நேரமாச்சு. நான் என்ன செய்வது?.
"யாருக்கண்ணா சுகமில்லை“ பதட்டத்தோடு மயூரி கேட்டாள்.
"அப்பாவுக்கு"
"அப்பாவுக்கு என்ன“
"அவருக்குக் காய்சல் வந்திருக்கு. அவர் கவனியாது இருந்திருக்கிறார். உரமான காய்ச்சல். ஆஸ்பத்திரியில் காட்டி மருந்தெடுத்து கொடுத்து வீட்டில் கொண்டுபோய் விட்டிட்டு வாறன். கொஞ்சம் பிந்திப்போச்சு“. "இப்ப அப்பாவுக்கு எப்படி இருக்கு“? மேரி ஆவலோடு விசாரித்தாள். "பரவாயில்லை. ஓய்வெடுத்தால் சுகமாகிவிடும்“. மேரியைப் பார்த்தவாறே பதிலிறுத்தான். பெரியவரோடு அளவளாவிய டேவிட் அப்போதுதான் ஆனந்தனைக் கண்டார். பெரியவரும் ஆனந்தனை அன்போடு விசாரித்தார். "ஐயா...இனி எப்போது திருகோணமலைப் பக்கம்.“. கேட்டுவிட்டு மேரியின் பக்கம் பார்த்தான். அவள் தலைகுனிந்திருந்தாள்.
"லீவு கிடைக்கும்போதெல்லாம் வருவோம்“ பெரியவர் புன்னகையோடு பதிலளித்தார். டேவிட் அட்டகாசமாகச் சிரித்தார். பிள்ளைகளும் சிரித்தார்கள். மேரிமட்டும் சிரிக்கவில்லை. அவளுக்கு இதயம் கனத்தது. கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வரும்போது அவளது மனம் வெறுமையாக இருந்தது. ஆனால் கொழும்புக்குத் திரும்பும் போது கனக்கத் தொடங்கியது. அவளை அறியாத சோகம் ஆட்கொள்வதை உணர்ந்தாள். ஒரு கிழமையாகக் கேலியும், கிண்டலுமாக உள்ளம் மகிழ்ந்து கிடந்தது. ஆனால் பிரியும் நேரம் நெருங்கும்போது வெந்து வெடிக்கிறது.
புகைவண்டி புறப்படுவதற்கான மணி ஒலித்தது. பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து விட்டார்கள். "மேரி .. என்ன முகம் வாடிக்கிடக்கு. சந்தோசமாகப் போய்வாங்க.. என்ன,“? மயூரி முறுவலை வரவழைத்துக் கூறினாள். உண்மையில் அவளது மனமும் இருண்டு கிடந்தது. கொஞ்சநாட்களாக வீடு கலகலத்துக் கொண்டிருந்தது. எந்த நேரமும் சந்தோசம் நிறைந்திருந்தது. சந்தோசம் அதிக நாட்களுக்கு நீடிப்பதில்லையோ?. இன்பமும் துன்பமும் ஒருவகைச் சக்கரம்தான். அது வருவதும் போவதுமாகத்தான் இருக்கும். சந்தோசம் வரும்போது துள்ளி மகிழ்வதும், துன்பம் சூழும்போது துவண்டு வாடுவதும் ஏன்?. இன்ப துன்பங்களைச் சரிசமமாக எடுத்துக் கொள்ள முடிவதில்லையே. ஞானிகளால்தான் சாதிக்கலாம். நாங்கள் சாமான்யமானவர்கள்தானே. மேரி முறுவலிக்க முனைந்தாள். அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. அவளால் முடியவில்லை. "அக்காவுக்கு திருகோணமலை பிடித்துவிட்டது“. ஆனந்தனைப் பார்த்தவாறு எலிசபெத் கூறினாள்.
புகைவண்டி கூவி விசிலடித்தது. பச்சை வெளிச்சம் தூக்கிக் காட்டப்பட்டது. புகைவண்டி மெதுவாகத் தனது பயணத்தைத் தொடங்கியது. ஆனந்தன் கையை அசைத்தான். மேரியும் அசைக்கக் கையை எடுத்தாள். இருகைகளும் முட்டிக் கொண்டன. மின்கம்பியில் பட்ட இரும்புத்துண்டம் போல் ஒட்டியமாதிரி இருந்தது. மின்னலின் அடி விழுந்தது போன்ற பிரமை. கைகள் இரண்டும் பேசிக்கொண்டன. புகைவண்டி ஓடிக்கொண்டிருந்தது.
கைகள் விடுபடுவதாக இல்லை. மனமில்லாது கைகள் பிரிந்து கொண்டன. பெரியதொரு சுமையைத் தாங்கிய வண்ணம் மேரி இருளில் மறைந்து கொண்டிருந்தாள். தனிமையை இன்றுதான் ஆனந்தன் உணர்ந்தான். வேதனை என்பதென்ன? சிலையாக நின்று தூரத்தே கூவிச் செல்லும் புகைவண்டியை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான். "அண்ணா ... போவோமா“? மயூரியின் குரல் கேட்டதும்தான் ஆனந்தன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். "மய+ரி .. .நான் வீட்டுக்குப் போறன். அப்பாவைப் பார்க்க வேணும். நாளைக்கு வந்து பார்க்கிறன். ஐயா! ..நான் வாறன்.“; விடை பெற்றான். "அண்ணா நாங்க நாளைக்கு வீட்டுக்கு வாறம். சரியா“? மயூரி கூறினாள். அவன் தனது வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தான்.
புகைவண்டி ஓடிக் கொண்டிருந்தது. மேரியின் மனம் போட்டி போட்டு ஓடியது. இருளைக் குடைந்து ஆனந்தனைத் தேடி அலைந்தது. ஒவ்வொரு புகைவண்டி நிலையத்திலும் மேரியின் விழிகள் ஆனந்தனைத் தேடின. எதைப்பார்த்தாலும் அதில் தான் தேடும் பொருளைத்தான் தனது கண்கள் தேடியதை மேரி உணர்ந்தாள். இந்த மனம் ஒரு குரங்குதான். ஒரு நிலையில் இருப்பதில்லை. சந்தோசம் வந்தால் துள்ளும். துக்கம் வந்தால் துவண்டு சோர்ந்து சுருண்டுவிடும். சீ... என்ன மனம். கண்களை மூடியபடியே விழித்திருந்தாள். தலை மட்டும் புகைவண்டி இருக்கையின் பின்புறமாகச் சாய்ந்திருந்தது. கடுந்தவமிருக்கும் ஞானியைப்போல் கண்மூடி மௌனித்துக் கனவுகண்டாள்
"மார்கிரட்...என்ன யோசிக்கிறாய்? எனக்கு ஆனந்தனை நல்லாப் பிடிச்சிருக்கு. நமது மேரிக்குப் பொருத்தமான பொடியன். நீ என்ன சொல்லுறாய்“? செபஸ்தியார் மனைவியிடம் கதை கொடுத்தார். அப்பா ஆனந்தனைப் பற்றிச் சொல்லிக்கொண்டதை மேரி கண்திறக்காது கேட்க ஆயத்தமானாள். அது மேரியின் காதுகளில் தேனாய் இனித்தது. தான் எண்ணுவதைத் தனது பெற்றோர் உணர்ந்து தெரிவிப்பது மகிழ்ச்சியை ஊட்டியது. கண்களை மூடியவாறே காது கொடுத்துக் கேட்டாள். "எனக்கும் புடிச்சிருக்கு. ஆனால் அதில ஒரு சிக்கல் இருக்கும்போலத் தெரியுது“. மார்கிரட் மெல்ல இழுத்துச் சொன்னார். மேரி உசாரானாள். அவளது மனம் திக்திக் என அடித்துக்கொண்டது. "என்ன சிக்கல்?’. செபஸ்த்தியார் வினவினார். "நாம கத்தோலிக்க வேதக்காரர். அந்தப் பொடியன் சைவம். சமயச்சிக்கல் வருமென்றுதான் யோசிக்கிறன்.“ மார்க்கிரட் சிக்கலை வைத்தார். மேரிக்குத் தூக்கிவாரிப் போட்ட உணர்வு. சமயம் எனக்குத் தடையாகுமா? விரும்பிய மனங்களைப் பிரிக்குமா? அவளது மனம் சங்கடப்பட்டது. போராட்டமாக உருவெடுத்தது.
மேரியின் உள்ளம் போர்க்களமாகியது. சமயம் தடையாக வந்தால் என்ன செய்வது?. முன்பின் யோசிக்காது மனதைப்பறிகொடுத்து விட்டேனே. சமயத்தை விட்டுக் கொடுத்தால் என்ன? சமயத்தை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? விழிகள் மூடியிருந்தன. ஆனால் உள்ளம் போராடிக்கொண்டிருந்தது. உடலெங்கும் வலித்தது.“ மார்க்கிரட்.. தூக்கமா“? சொஸ்தியார் தொடங்கினார். "நான் ஒரு முடிவுக்கு வந்திற்றன். மேரிக்கு ஆனந்தன்தான். என்ன வந்தாலும் அதனைச் சரிசெய்யலாம். நம்பிக்கை இருக்கு“. செபஸ்தியார் கூறிக்கொண்டிருந்தார். மேரிக்கு ஐஸ்கிறீம் சாப்பிட்டமாதிரி இருந்தது. மேரி...உள்ளத்தால் குளிர்ந்து போனாள். அப்பா முடிவெடுத்தபின் அப்பீலேது? நடப்பது நல்லதாக இருக்கும். இமைகளை இறுக்கி மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தாள். அப்படியே உறங்கிவிட்டாள்.
இரவிரவாக ஓடிக்களைத்த வண்டி பெரிய நீண்ட கூவலோடு வேகத்தைக் கட்டுப்படுத்தியது. மெதுவாக ஊர்ந்து கொழும்புக் கோட்டையில் நின்றது. பொருட்களைக் கைகளில் எடுத்துக் கொண்டு இறங்கினார்கள். வெளியில் வந்தார்கள். வாடகைக் கார் தயாராக நின்றது. ஏறி வீட்டையடைந்தார்கள்.
தொடரும்...
1 comments:
அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.
நிர்வாக குழு,
தகவல் வலைப்பூக்கள்.....
http://thakaval.info/blogs/literature
Post a Comment