கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
21
அவன் கண்கள் அறையை நோட்டம் விட்டன. அந்த அறை விசாலமானது. இரண்டு வகுப்பறைகளின் அளவாக இருந்தது. அவனைப் பல கண்கள் அவதானித்தன. அறையின் சுவரோரமாகச் குந்தியும், படுத்தும் கிடந்தார்கள். பத்து வயதுச் சிறுவர்கள் தொடக்கம் எழுபது எண்பது வயது வயோதிபருமாக சுமார் எண்பதுபேர் இருந்தார்கள். அவர்கள் இருப்பதற்கான அடையாளங்கள் தெரியவில்லை. வாய்திறவாது அமைதியாக இருந்தார்கள். ஆனந்தனைக் கண்டதும் அனுதாபமாகப் பார்த்தார்கள்.
இந்த நெருக்கமான இடத்தில் தான் எங்கிருப்பது? அவன் கண்கள் சுற்றிச் சுழன்றன. சுவரோரமாக ஒரு இளைஞன் தலையசைத்துத் தன்பக்கம் வரும்படி சைகை செய்தான். அவன் பக்கத்தில் சென்றான். அவன் எழுந்து அரக்கி இடம் கொடுத்தான். அப்படியே நிலத்தில் இருந்தான். ஆனந்தன் இருந்தபின் அவனும் இருந்து கொண்டான். அறைகளைச் சுற்றி ஆமிக்காரர்கள். உள்ளிருப்பவர்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் செய்தார்கள். அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று அவதானித்தார்கள். "சோதி..உனக்குத் தெரிந்தவரா“? பக்கத்தில் இருந்தவன் இரகசியமாகக் கேட்டான். தலையசைத்து ‚ஆம்’ என பதிலளித்தான். கதவு திறபட்டால் பயத்தில் நடுங்குவார்கள். கதவு மூடும்வரை அவர்களுக்கு நிம்மதியிருக்காது. இரவானால் பயம் அதிகரிக்கும். கண்களை மூடியபடி குப்புறக் கிடப்பார்கள்.
"சேர்.. நீங்க கல்விப்பணிப்பாளர் ஆனந்தன்தானே“? ஆனந்தனுக்கு ஆச்சரியம். அவன் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் தன்னை அறிமுகம் செய்தான். "சேர்... நான்தான்....சோதிநாதன்...செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் ஏ.எல். வகுப்பில படித்தனான். எங்களுக்குப் புவியியல் பாடம் சொல்லித் தந்திருக்கிறீங்க. உங்கட உதவியால எனக்கு புவியியல் பாடத்தில ஏ கிடைச்சிருக்கு. யுனிவேசிற்றிக்கும் தெரிவாகியிருக்கிறன்“ சோதி தன் சேதிகளைச் சொன்னான்.
ஆனந்தன் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தான். "உங்கட பார்வையின் அர்த்தம் எனக்குப் புரிகிறது. சேர்... நான் எங்கட தோட்டத்தில பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தன். பலபக்கத்தாலயும் ஆமிக்காரர் வந்தாங்க. என்னோட வேலசெய்தவர்களையும் பிடித்து அடித்தார்கள். ஆமிக்காம்புக்கு ஏற்றிச் சென்றார்கள். ஆமிக்காம்பில இரண்டு கிழமை போட்டு சித்திரவதை செய்தார்கள். பிறகு இஞ்ச கொண்டுவந்து போட்டிருக்காங்க. எவ்வளவு கொடுமை சேர். நாங்க இவங்களுக்கு என்ன செய்தம்? ஏன் இந்த ஆக்கினயச் செய்கிறார்கள்“? அவன் சோதி குமுறினான். அவனது கண்களில் கண்ணீர் வற்றியிருந்தது. அவனது உடலெங்கும் அடியின் தழும்புகள். இந்த இளைஞர்கள் வாழவேண்டிய வயதில் எவ்வளவு கனவுக்கோட்டைகளைக் கட்டியிருப்பார்கள். அவற்றை இடிக்கிறார்களே. மனம் நொந்தது.
ஆனந்தனுக்கு சோதியை மட்டுக்கட்ட முடியாதிருந்தது. தாடி மீசை வளர்ந்திருந்தது. அவன் பத்தென்பது இருபது வயது இளைஞனாக இருந்தான். அவனைப் பார்த்து "அப்பா யோகநாதனா“? ஆனந்தன் கேட்டான். " ஓம்“ தலையத்தான். "சேர் பலமாகக் கதையாதீங்க. ஆமிக்குக் கேட்டால் வந்து எல்லாருக்கும் அடிப்பாங்க.“ பயந்தவாறே சொன்னான். சோதியை நினைவு கூர்ந்து பார்த்தான். சோதியின் குடும்பம் வறுமையோடு போராடும் ஏழைக்குடும்பம். பாடசாலையில் படித்தால் வயிறு வாடும். அந்தநேரத்தில் நிலத்தோடு போராடி வேலைசெய்தால் அரைவயிறாவது நிறையும். இப்படியான குடும்பங்கள் செட்டிகுளத்தில் ஏராளம். பள்ளிக்குப் போவதைவிட நிலத்தில் வேலை செய்வது நல்லது என்ற மனப்பாங்கு கொண்ட மக்களிடை பரவியிருந்தது.
இதனை மாற்றியமைக்க ஆனந்தன் பாடுபட்டான். இதனால் அதிபர்களோடு முரண்பாடுகள் தோன்றியதையும் எண்ணிக் கொண்டான். சில கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளுக்கு மேற்பார்வைக்காகப் போவார்கள். பாடசாலைகளில் உள்ள லொக் புத்தகத்தில் தங்கள் வரவை உறுதிப்படுத்துவதற்காகக் கையெழுத்திடுவார்கள். திரும்பிவிடுவார்கள். ஆனந்தன் விதிவிலக்காக இருந்தான். தானாகவே வகுப்புக்களுக்குச் சென்று மாணவர்களோடு பழகிப் பாடங்களைக் கற்பித்தான். வவுனியா மாவட்டப் பாடசாலைகளில் புவியியல் பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் இருந்தார்கள். ஆனால் மாணவர்களது மனதைக் கொள்ளைகொள்ளும் முறையைக் கையாளவில்லை.
அதனால் மாணவர்கள் அதனைவிட்டோடினார்கள். சோதினாதன் பல மாணவர்களோடு ஆனந்தனிடம் வந்தான். மாணவர்கள் தங்கள் நிலைப்பாட்டை விளக்கினார்கள். ஆனந்தன் புவியியல் ஆசிரியர்களைச் சந்தித்தான். அவர்களுக்குப் பயிற்சி வழங்கி நெறிப்படுத்தினான். அவனும் வகுப்புகளில் கற்பித்தான். பல பெற்றோர்கள் வரவேற்றார்கள். யோகநாதன் அவனை நேரில் பார்த்து நன்றி தெரிவித்தார். அதனை நினைவு கூர்ந்தான். அதன் பலாபலனை நேரில் கண்டு கொண்டான்.
அறையின் மூலையில் பெரிய வாளியிருந்தது. அதற்குள்தான் சிறுநீர் களிக்க வேண்டும். இன்னொரு மூலையில் குடிப்பதற்காக நீர் சேகரித்து வைப்பதற்கான வாளி. ஓவ்வொன்றும் தட்டினால் மூடியிருந்தது. தேவையான போது மூடியைத் திறந்து பாவிக்கலாம். அறையெங்கும் கழிவறை மணம். முதலில் கஸ்டமாகத்தான் இருந்தது. மாலையாகி விட்டது. உள்ளிருப்பவர்கள் எழுந்து ஒருவர்பின் ஒருவராக நின்றனர். சுவரில் பென்சிலினாலும், கரித்துண்டுகளாலும் வரைந்த கடவுள் உருவங்கள். சுண்ணம் பூசிக் காவியடித்த சுவரைத் தட்டினால் உதிரும். நகத்தினால் சுவரைச் சுரண்டி அற்புதமான உருவங்களை அமைத்திருந்தார்கள். சுவரெங்கும் சிவன். பிள்ளையார், முருகன், ஜேசு என சித்திரங்கள் நிறைந்திருந்தன.
கோயில்களின் முகப்புத் தோற்றங்கள் தத்ருபமாகத் தெரிந்தன. அனைவரும் சைவ, கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு சமய வேற்றுமைகளைக் காணவில்லை. திருக்கேதீச்சரத்திலுள்ள கோயில் இருக்கும். மடுமாதாவின் திருக்கோயில் அடுத்திருக்கும். பிள்ளையார் சித்திரம் இருக்கும். பக்கத்தில் சிலுவை இருக்கும். வரிசையில் ஒருவர்பின் ஒருவராக ஒவ்வொரு சித்திரங்களின் முன்னால் நின்று காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, உருகியழும் அந்த மக்களைப் பார்த்து ஆனந்தன் விழிநீர் சிந்தியழுதான். சிவனையும், பிள்ளையார் முருகனையும், தொழுது வணங்கும் சைவசமயத்தவர், மடுமாதவின் திருப்பாதங்களையும், சிலுவையையும் தொட்டுக் கண்ணில் ஒற்றிவணங்குவதையும் கண்டான்.
நான்கு பக்கச்சுவர்களையும் தடவித் தொழுது தங்கள் இடத்துக்கு வந்து சேர ஒரு மணிநேரம் சென்றது. ஏழுமணிக்குக் கதவடியில் காத்திருந்தார்கள். கதவு தட்டப்பட்டுத் திறபட்டது. பெரிய பெட்டி வெளியிருந்து உள்ளே தள்ளப் பட்டது. உணவுப் பொட்டலங்கள் பெட்டியினுள் இருந்தன. ஒரு ஒழுங்குமுறையினை தமக்குள் ஏற்படுத்தியிருந்தார்கள். அந்த நாளுக்குரியவர்கள் உணவுப் பொட்டலங்களைப் பகிர்ந்தார்கள். பலருக்கு அரைவயிறும் நிறையாது. உணவும் போதிய அளவு இல்லை. உண்பதற்கும் மனமில்லை. ஆனந்தனுக்கு சோதி உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தான். ஆனந்தன் அரைவாசியை மட்டும் எடுத்து விட்டு மிகுதியை சோதியிடம் கொடுத்தான். அவர்கள் பகிர்ந் உண்டார்கள்.
பொது வாளியினுள் கைகழுவினார்கள். முடிந்ததும் சுவரில் சாய்ந்திருப்பதும். அப்படியே நிலத்தில் படுப்பதுமாக இருந்தார்கள். ஆனந்தனுக்கு ஒருவகையில் நம்மதி. இவ்வளவு நாளும் தனியறையிலேயே காலத்தைக் கழித்தான். இன்று பலரோடு இருக்கிறான். ஆளுக்காள் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது. பலருடன் அளவளாவி விடயங்களைச் சேகரித்துக் கொண்டான். இரவு நடுச்சாமம் இருக்கும். ஆனந்தனுக்கு உறக்கம் வரவில்லை. விழித்திருந்தான். கதவு திறபடும் சத்தம் கேட்டது. மெதுவாகப் பார்த்தான். அறைக்குள் மங்கலான மின்குமிழ் எரிந்து கொண்டிருந்தது. இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் கைகளில் 'டோச் லைற்’ இருந்தது. ஒவ்வொருவராகப் பார்த்து வந்தார்கள். ஆனந்தனின் முகத்தில் 'டோச் லைற்’ வெளிச்சம் பாய்ந்தது. அவன் கண்களை இறுக மூடியபடி கிடந்தான்.
"இன்டக்கித்தான் வந்தனான். என்னைத்தான் தேடுறாங்கள்போல. நடக்கிறது நடக்கட்டும்“. அவனது மனம் திக்திக் என்று அடித்துக் கொண்டது. அவர்கள் விலகிப்போவது தெரிந்தது. போன உயிர் மீண்டும் தன்னிடம் வந்த உணர்வு. தன்னோடு வந்த சிலரைத் தேடிக் கண்டு பிடித்து விட்டார்கள். இரண்டு பேர்களைத் தட்டி எழுப்பினார்கள். "மே..வறேங்..எலியட்ட ..சத்தங் போடவாணாம்.. தேருணவாத... " இழுத்தெடுத்து வெளியில் கொண்டு போனார்கள். கதவு பூட்டப்பட்டது. அவர்கள் போனதும் எல்லாரும் எழுந்து குந்தியபடியே இருந்தார்கள். அனைவரது கண்களும் பேயறைந்ததுபோல் பிதுங்கிக் கொண்டிருந்தன.
அதிகாலை நான்கு மணியிருக்கும். கதவு திறபடும் சத்தம் கேட்டது. கொண்டு போன இருவரையும் இழுத்து உள்ளே தள்ளினார்கள். கதவு பூட்டப்பட்டது. அவர்கள் "ஐயோ அம்மா“ என அழுது புலம்பினார்கள். வெளியில் இருந்து ஆமிக்காரர் அதட்டினார்கள். அவர்கள் இருவரையும் சூழ்ந்து குந்தியிருந்து தடவிக் கொடுத்தார்கள். அவர்கள் அழுதவண்ணம் கிடந்தார்கள். உடலெங்கும் அடிகாயங்கள். இரத்தக் கசிவுகள். முகமெல்லாம் தடித்து வீங்கியிருந்தது. உதடுகள் வெடித்து இரத்தம் கசிந்து காய்ந்திருந்தது. "இவங்களுக்குப் பாடம் படிப்பிக்கவேணும். எங்களச் சித்திரவதை செய்வதுபோல் நாங்களும் அவங்களச் சித்திரவதை செய்யவேணும“;. ஒருவன் கொதித்தான். கேட்டுக்கொண்டு அசையாது இருந்தான்.
அன்றிரவு ஒருவர் வயிற்றுப்போக்கினால் அவதியுற்றார். ஆனந்தன் நடப்பதை அவதானித்தான். அவரை வாளியினுள் மலங்கழிக்க உதவியதையும், அதற்குள்ளேயே குடிப்பதற்காக வைத்திருக்கும் நீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தியதையும் கண்டு கொண்டான். ஒருவருக்கு ஒருவர் உதவுவதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தான். இவர்கள் வெளியில் இப்படி உதவுவார்களா? மனதினுள் எண்ணிக் கொண்டான். இது ஒரு புதுமையான உலகம்தான். ஒவ்வொருவராக எழுந்து விட்டார்கள். வாளி சிறுநீரால் நிறையத் தொடங்கியது. எழுந்ததும் வரிசையாக ஒருவர்பின் ஒருவராகச் சுவர்களைப் பார்த்துச் சுற்றிக் கும்பிட்டு வந்தார்கள். அவர்களது பிரார்த்தனைகள் இறைவனின் செவிகளில் விழுவதில்லையா? இறைவனுக்குச் செவிகள் இல்லையா? ஒருவனை ஒருவன் வருத்தும்போது அதனைத் தட்டிக் கேட்கப் படைத்தவனால் முடியாதா? ஒரு இனத்தை இன்னுமொரு இனம் அடக்கி சித்திரவதை செய்து ஆளுவதை யார் கேட்பது?
கோழிகள் கூவுவது இல்லை. வவுனியா நகர் சோபையிழந்து கிடந்தது. இராணுவத்தின் அட்டகாசம் தலைவிரித்தாடியது. ஏப்பொழுது யாரைக் கைது செய்வார்கள் என்பது தெரியாது. நகரில் இருந்த சனங்கள் பயத்தின் பிடியில் இருந்தனர். வீடுகளை விட்டு காலை ஒன்பது மணிக்குப்பின்னரே கடைகளுக்கு வருவார்கள். பொருட்களை வாங்குவார்கள். உடனேயே வீடுகளுக்குப் போய்விடுவார்கள். பலர் யாழ்ப்பாணம் சென்றுவிட்டார்கள். வவுனியா மாவட்டத்தில் பிறந்து வாழும் மக்கள் எங்கே போவார்கள்? இரவுவேளைகளை ஓரிடத்தில் கூடி ஒன்றாக இரவைக் கழித்தார்கள். பெரும்பாலும் கிறிஸ்தவக் கோயில்களில்தான் இரவைக் கழிப்பார்கள். விடிந்ததும் வீகளுக்குப் போவார்கள்.
விடிந்து எட்டரை மணியாகியிருந்தது. கதவு திறபட்டது. "அடோவ்...எலியட்ட வறேங்.. வெளியில வாங்கடா“ சிப்பாய்கள் அழைத்தார்கள். வெளியில் வந்தவர்களை இருவர் இருவராக விலங்கிட்டார்கள். முதலில் ஆறு சோடிகளை வெளியில் எடுத்தார்கள். வரிசையில் கழிவறைப்பக்கம் கூட்டிச்சென்று விலங்கைத் திறந்து விட்டார்கள். "இக்மன்ட்ர வறேங் கெதியா வா“ சொன்னார்கள். கழிவறைகளைச் சுற்றிக் காவலிருந்தார்கள்.
கழிவறைகள் அடையாத வாயிலகங்களாகச் சிரித்தன. அதற்குள்ளேயே குழாயில் நீர் வசதியிருந்தது. வாயை அலம்பி, கண்களை நனைத்து, கழிப்புக்கள் செய்து வந்தார்கள். சற்றுச் சுணங்கினால் "மொனவத கறனபாங்“ சொல்லி அடித்தார்கள். முடிந்து வந்ததும் விலங்கிட்டார்கள். பழையபடி அறையினுள் விட்டார்கள். அவர்களின்பின் மற்றவர்கள். அறையினுள் உள்ள கழிவு நிறைந்த வாளிகளைத் தூhக்குவதற்கு "நான் நீ“ என்று போட்டி. அவற்றைக் கொண்டு செல்பவர்களுக்கு விலங்கிடமாட்டார்கள். சற்றுத் தூரத்தில் குழிதோண்டிக் கொட்டவேண்டும். அந்தநேரத்திலாவது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் பேராசை அவர்களுக்கு. ஆனந்தனின் நேரம் வந்தது. அவனது கையைப்பிடித்து இன்னொருவரது கையோடு விலங்கிடப் பட்டது. கழிவறைக்குப் போனதும் விலங்கைத் திறந்து விட்டார்கள். வாயை அலம்பி கண்களில் தண்ணீரை வாரியடித்து, கழிப்புக்காக முயற்சித்தான். திறந்த மலசலகூடம். பழக்கமில்லை. ஆமிக்காரர் அவசரப்படுத்தினார்கள் வந்து விட்டான். எல்லோரும் கடன்களை முடிந்து வந்தார்கள். பழையபடி கதவு பூட்டப்பட்டது.
தொடரும்
0 comments:
Post a Comment