Sunday, May 9, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

5.அப்பம் சுவைத்தது. தேநீர் குடித்தார்கள். வண்டி புறப்படும் நேரம் வந்துவிட்டது. அறிகுறியாக நீண்ட விசில் ஒலித்தது. மெதுவாக ஊர்ந்து கடுகடுத்து விரைந்தது. அதன் அசைவிற்கேற்ப பயணிகளும் அசைந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். இருள் கலைந்து கிழக்கில் ஒளிக்கீற்றுக்கள் கோலமிட்டன. பார்த்திருக்க இருள் விரைந்து மறையத் தொடங்கியது. வண்டி நின்றது. "இது எந்த ஸ்ரேசன்“? மேரி கேட்டாள். "கந்தளாய். அடுத்தது தம்பலகாமம்.“ என்றான். "இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு.“? பெரியவர் தொடர்ந்தார். "சரியாகச் சொல்லமுடியாது. எப்படியும் ஏழு மணிக்குத் திருகோணமலை போய்விடும்.“ என்றான். "கந்தளாய் குளம் எங்கே இருக்கு? பார்க்கமுடியுமா“? ஏலிசபெத் குறுக்கிட்டாள். "இங்கிருந்து பார்க்கமுடியாது. வஸ்வண்டியில் போனால் பார்க்கலாம்.“
"மிச்சந்தூரமா“?
"இல்லை. இங்கிருந்து மேற்காக மூன்று மைல் தொலைவில் உள்ளது. எப்போது கொழும்பு போறீங்க“? ஆனந்தன் அறிய விரும்பினான். "எப்படியும் நாலஞ்சு நாளாகும். எல்லாம் நாங்க போகும் இடத்தைப் பொறுத்தது. ஒரு கிழமை லீவு போட்டிருக்கிறன்". பெரியவர் பதிலிறுத்தார். வண்டி ஒலியெழுப்பிப் புறப்பட்டது.

சூரியன் புறப்பட்டு விட்டான். ஒளிக்கற்றைகள் கண்களைச் கூசச் செய்தன. உறக்கத்தைத் தொலைத்த விழிகளில் சோர்வு தெரிந்தன. உலகத்தின் இயக்கம் தொடங்கி விட்டது. இருபக்கமும் வயல் பரந்து பசுமையை விரித்திருந்தது. புனித்துளிகள் மரஞ்செடி கொடிகளின் இலைகளில் தூங்கி வழிந்தன. நீர்நிலைகளில் சூரியகதிர் பட்டு வண்ணமாக ஜொலித்தது. வண்டி நீண்டு கூவியது. அதன்விரைவைக் கட்டுப்படுத்தி மெதுவாக ஊர்ந்தது. தம்பலகாமம் பெயர்பலகை தெரிந்தது. வண்டி தம்பலகாமத்தில் தரித்து நின்றது. மேரி பெரியவரைப் பார்த்தாள். "தயிர் வாங்குவமா அப்பா“? குறிப்பறிந்த ஆனந்தன் தயிர் விற்கும் பையனை அழைத்தான். வாங்கிக் கொண்டார்கள். வண்டி புறப்பட்டது. அடுத்தது சீனக்குடா நிலையம். வண்டி ஓடிக்கொண்டிருந்தது. பாலம்போட்டாற்றைத் தாண்டிக் கொண்டிருந்தது. பற்றைக் காடுகளும் அவற்றால் மூடியபடி இடிபாடுகளுடன் பழைய கட்டிடங்களும் தெரிந்தன. "என்ன காட்டுக்குள் பழைய இடிந்த கட்டிடங்கள்“. மேரி கேட்டாள். அவையெல்லாம் பிரித்தானியாரின் கட்டிடங்கள். இப்போது கவனிப்பாரற்ற நிலையில் அழிஞ்சுபோய்க் கிடக்கு“. ஆனந்தன் விளக்கினான்.

சீனக்குடா விமான நிலைய வளாகம் பரந்து படுத்திருந்தது. அதுதானா விமானநிலையம்? பெரியவர் கேட்டார். "ஓம“ பதிலிறுத்தான். "ஏன் சீனக்குடா என்று பெர் வந்தது.?; சீனர்கள் இங்கிருக்கிறார்களா? பேரியவர் தொடர்ந்தார். ஆனந்தன் முறுவலித்தான். அவனே விளக்கினான். "பிரித்தானியர் காலத்தில் அதோ தெரிகிறதே அந்த எண்ணெய்க் குதங்கள். அவற்றை அமைப்பதற்குப் பலநாட்டு மக்களையும் பிரித்தானியர் வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். இந்தப் பகுதியில் சீனர்கள் இருந்து வேலைசெய்தார்கள். பெருவாரியாக சீனர்கள்தான் வேலையில் ஈடுபட்டார்கள். அவர்கள் இருந்த இடத்துக்கு சீனக்குடா என்று பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள்“;. அவனே விளக்கினான். வாகனங்கள் வீதிகளில் உலாவந்தன. தூரத்தே துறைமுகம் தெரிந்தது. அப்பா சீனக்குடாவில்தான் ஸ்ரனிஸ் சித்தப்பா இருக்கிறார். இல்லையாப்பா? ஏலிசபெத் வினவினாள். "ஓமென்று நினைக்கிறன்.“ பெரியவர் சொன்னார். "அவர் ஸ்ரேசனில்தான் நிற்பார்“. அம்மா மார்க்கிரட் கூறினார். "யார்? டேவிட் அங்கிளின் இளைய மகன் ஸ்ரனிஸ்லாஸா“? ஆனந்தன் இடைமறித்தான். "ஓமோம“ பதில்; வந்தது. வண்டி சீனக்குடா நிலையத்தில் நின்றது. ஆனந்தன் வண்டியைவிட்டுக் கீழே இறங்கினான். நேரே புகைவண்டி நிலையத்துள் புகுந்தான். அனைவரும் ஆவலோடு நடப்பதைக் கவனித்தார்கள். போனது போல் வந்தான். "இன்டைக்கு இரவு டியூட்டியாம். வீட்டுக்குப் போய்விட்டாராம். வீட்டில் நிற்பார்.“ அவசரமாக ஏறிக்கொண்டான். "அங்கு போய்ப் பார்ப்போம்.“ வண்டி புறப்பட்டது.

விரைந்து சென்ற வண்டி வேகத்தைக் குறைத்து மெதுவாக ஊர்ந்தது. மனிதர்கள் அரைவிழி மூடி இருக்கையில் இருந்து பயணித்தார்கள். அவ்வளவு உயிர்களையும் பத்திரமாகச் சுமந்து கொண்டு கும்மிருட்டில் முன்விளக்கேந்தி, நின்றும், ஊர்ந்தும், விரைந்தும், பத்திரமாகச் சேர்த்த பெருமை அதற்கு. அப்பாடா என்பதுபோல் பெருமூச்சு விட்டு வண்டி நின்றது. அது நிலையத்தை அடையுமுன்னே சனங்கள் தங்கள் உடைமைகளைத் தூக்கியவாறு நெரிசலை ஏற்படுத்தினர். ஆக்கப் பொறுத்த மக்கள் ஆறப் பொறுக்கமாட்டார்கள்போலும். அவ்வளவு அவசரம் அவர்களுக்கு. வண்டி நின்றபின்னர்தான் மார்க்கிரட்டுக்கு நெஞ்சு படபடத்தது. மாமா என்ன சொல்வாரோ? இவ்வளவு காலமும் இல்லாத கரிசனை இப்பதான் வந்ததோ? என்றால் என்ன செய்வது? இவர் அதனைத் தாங்கமாட்டாரே? "என்ன மார்க்கிரட் யோசிக்pறாய்? இதை முதலில் யோசித்திருக்க வேணும். ஆற்றில இறங்கினால் நீச்சலடிக்கத்தான் வேண்டும். போவோம். பயப்படாதே. ஏதாகிலும் என்றால் ஸ்ரேசனில் ஒரு அறையை எடுத்து இரண்டு நாள் ஊரைச் சுற்றிப்பார்த்து விட்டுப் போவம். மற்றவர்களுக்குக் கேட்காதபடி காதோடு காதாகப் பெரியவர் கூறினார். "சரி ஸ்ரேசன் வந்தாச்சி. எல்லாத்தையும் எடுங்க“ கட்டளையிட்டார். சனங்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். நிலையத்தில் வருகிறவர்களை எதிர்பாக்கும் கூட்டம் நிறைந்திருந்தது.

ஆனந்தன் தனது உடமைகளைத் தோளில் மாட்டினான். இறங்குவதற்கு உதவினான். அவர்களது பொருட்களையும் சுமந்தான். வெளியில் வந்தார்கள். வாடகைக்கு வண்டி கிடைத்தது. வண்டிக்காரர் பழக்கமானவர். „பேராலய வீதிக்குப் போவோம். ஏன்.சி. ரோட்டால் போய்த் திரும்பிப் போவம். வீடுங்க“ என்றான். வாகனம் விரைந்தது. இடப்பக்கமாகத் திரும்பி ‚குவாட்டலுமாதா’ கோயிலைத் தாண்டி சின்னக் கடைத் தெருவால் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி டொக்யாட் வீதியால் சென்றது. "இந்தப் பெரிய முற்றவெளியா? ஆழகான கட்டிடம் இது என்ன கட்டிடம்“? பெரியவர் கேட்டார். "அதுதான் நகரசபை மண்டபம்.“ விளக்கினான். வண்டி வலப்பக்கம் திரும்பி பேராலய வீதியால் சென்றது. "அந்தச் சந்திக்கு அடுத்து இரண்டாவது வீடு“. என்றான். "அட நமது டேவிட் ஐயா வீடு. இத முதலிலேயே சொல்லியிருக்கலாமே தம்பி.“ சாரதி அன்புடன் கடிந்து கொண்டான். வண்டி நின்றது. பொருட்கள் இறக்கப் பட்டன. அவர்களும் இறங்கினார்கள்.

சில பொருட்களை எடுத்துக் கொண்டு ஆனந்தன் "ஐயா“ அழைத்தவாறே முன்னே சென்று நின்;றான். டேவிட் சாய்மனைக் கதிரையில் சரிந்து பத்திரிகையில் மூழ்கியிருந்தார். அவர் பத்திரிகையில் மூழ்கினால் யாரையும் பார்க்கமாட்டார். படிப்பார். அதேவேளை குரலை மதித்து பதிலும் சொல்வார். அவருக்கு யாருடைய குரல் என்று தெரியும். "ஆனந்தன் விறுவிறு என்று வாறதுதானே? அது என்ன இண்டைக்கு ஐயா... என்ற இழுப்பு. எங்க போனநீ. கொஞ்சநாளாக் காணல்ல“. பேப்பரை மூடியபடி பார்த்தார். அவருக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கவேணும். மனதில் நினைத்தான். "ஐயா என்னோட எங்கட அங்கிள் குடும்பத்தோட வந்திருகிறார். கூப்பிடட்டா”? பதிலுக்காகக் காத்திருந்தான்.
"ஆனந்தன் என்ன விசர்வேலை பார்க்கிறாய்“. அவரது முகம் கடுகடுப்பாகியது. ஆனந்தனுக்கு தூக்கி வாரிப் போட்டது. அதிர்ச்சிக்குள்ளானான். "வந்தவங்கள வாசலில நிற்பாட்டிப் போட்டு நீ மட்டும் வந்திருக்கிறாய். அவங்க என்ன நினைப்பாங்க. கூட்டிவா. பிள்ள.. மயூரி சனங்கள் வந்திருக்கு இந்த இடத்தைக் கொஞ்சம் துப்பரவாக்கு.“ அவர் வரவேற்க உசாரானார். ஆனந்தனுக்குக் கனவு காணுகின்ற பிரமை. தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். வெளியில் போனான். "வாங்கஇ ஐயா வரச்சொன்னார்“;. என்று அவர்களை அழைத்தான். அவர்களது பொருட்களையும் எடுத்துக் கொண்டு போனான்.

டேவிட் உள்அறையில் இருந்து வெளியே வந்தார். அவரைக் கண்டதுதான் தாமதம். மார்க்கிரட் அவரது கால்களைப் பிடித்துத் தாரைதாரையாகக் கண்ணீர் விட்டழுதார். பிள்ளைகளும் தேம்பி அழத் தொடங்கினார்கள். பெரியவர் மூலையில் ஒதுங்கி நின்று கொண்டார். அவரது கண்களும் கலங்கின. ஆனந்தனுக்குச் சங்கடமாகப் போய்விட்டது. டேவிட் ஐயாவைப் பார்த்தான். அவரும் விக்கித்தார். கண்கள் குளமாயிருந்தன. காலில் விழுந்த மார்க்கிரட்டைத் தூக்கி "அழாதே ... என்னிலும் பிழையுண்டு. நான் வந்து பார்த்திருக்க வேணும். இயலாமல் போயிற்று. செபஸ்தி. .நீங்களும் என்னை மன்னித்துக் கொள்ளுங்க. எப்படியென்றாலும் என்னைத் தேடி வந்திற்றீங்க... வாங்க. இருங்க.“.பிள்ளைகளைப் பார்த்தார். அவர்கள் அவரது அன்புப் பார்வையில் கட்டுண்டார்கள். "தாத்தா“ என்றவாறே அவரிடம் ஓடினார்கள். அவர் அணைத்துக் கொண்டார். என்றோ பிரிந்த உறவுகள் சங்கமித்த காட்சி ஆனந்தனை ஈர்த்து விட்டது.

"ஐயா! நான் வீட்டுக்குப் போய் பின்னேரம் வாறன்“. ஆனந்தன் புறப்பட்டான். "அண்ணன் ரீ போட்டிட்டன். இந்தாங்க குடிச்சிட்டுப் போங்க“ ஒடிவந்து கொடுத்தாள். வாங்கிக் கதிரையில் இருந்து குடித்தான். பிள்ளைகள் எல்லோரும் உறவு கொண்டாட ஆன்மயூரியிடம் போய்விட்டார்கள். குடித்து முடிந்ததும் "ஐயா நான் வாறன்.“ புறப்பட்டான். "ஆனந்தன் பின்னேரம் வா. என்ன“? டேவிட் அன்போடு விடைகொடுத்தார். சத்தம் கேட்டு மேரி வெளியே ஓடோடி வந்தாள். "கொண்டுவந்து விட்டுப் போட்டுச் சொல்லாமல் போனால் என்ன அர்த்தம்“ உரிமை கொண்டாடினாள். "உங்களை எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்த்து விட்டேன். கடமை முடிந்தது. அடுத்த கடமை இருக்குதல்லவா? அப்பா அம்மா தேடுவார்கள். பின்னேரம் வாறன்.“ புறப்பட்டான். ஆன்மயூரி வெளிகேற் வரை வந்தாள். அவளோடு மேரியும் வந்து வழியனுப்பினார்கள். அவன் நடந்தான். மேரிக்கு ஏதோ இழந்ததைப் போல் இருந்தது.

"மயூரி! ஆனந்தனை எப்படி உங்களுக்குத் தெரியும்.? இங்கே அடிக்கடி வருவாரா“? கேள்விமேல் கேள்வி கேட்டாள். "மேரியம்மா! சுற்றி வளைக்காதீங்க. நீங்க நினைக்கிறமாதிரி இல்லை. அவர் எனது அண்ணன். ஐயாவுக்கு அவர்மேல் அன்பு அதிகம். எங்கள் அப்பா சுகமில்லாது ஆஸ்பத்திரியில் இருக்கும் போதுதான் பழக்கமேற்பட்டது. அவரின் அப்பாவும் ஆஸ்பத்திரியில் பக்கத்துக் கட்டிலில் இருந்தார். அப்பாவுக்குப் பக்கத்தில் இருப்பதற்கு உதவியில்லை. இருவருக்கும் ஆனந்தனதான் துணையாக இருந்தார். வேண்டிய உதவிகளைச் செய்தார். தனது பிள்ளையைப் போல் உதவிகள் செய்த பிள்ளையென்று நன்றியோடு அப்பா கூறுவார். அடிக்கடி வீட்டுக்கு வந்து அப்பாவைப் பார்த்துப் போவார். இது நீண்டகாலப் பழக்கம். போதுமா“? பெரிய விளக்கம் அளித்தாள். மேரியின் ஆழ்மனதை ஆன்மயூரி புரிந்து கொண்டாள். ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண் எவ்வாறு இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.?

சொன்னமாதிரி மலை நாலரை மணிக்கு ஆனந்தன் வந்தான். வீடு களைகட்டியிருந்தது. பலஆண்டுகளாகப் பிரிந்திருந்த சொந்த உறவுகள் குதுகலித்தன. வீட்டின் பின்புறம் கொய்யா காய்த்துக் குலுங்கியது. பழத்தைவிடவும் செங்காய் ருசித்தது. இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை. ஆன்மயூரி மரக்கிளைகளில் தாவி ஏறினாள். மேரியும் கிளைகளைப் பிடித்துத் தாவினாள். முடியவில்லை. எப்படி ஏறுவது? எலிசபெத் ஏறிவிட்டாள். காய்களைப் பறித்து வந்தாள். சாப்பிட்டார்கள். "அண்ணா! கடற்கரைக்குப் போவம். என்ன“? ஆன் முதலிலேயே திட்டமிட்டிருந்தாள். "அதற்கென்ன போவம். நான் தயார். போவோமா? என்றான். இதோ ஒரு நொடியில் வருகிறோம். பெரியவரும் புறப்பட்டார்.
ஸ்ரனிஸ் வெளியில் வந்தார். "என்ன ஸ்ரனிஸ். நீங்க வரல்லையா“? ஆனந்தன் வினவினான். "எனக்கு நைற் டியூட்டி. நீங்க போங்க. நாளைக்கு நான் சேர்ந்து கொள்கிறேன். சரியா? ஸ்ரனிஸ் புறப்பட்டார். "அண்ணாவை வழியனுப்பி விட்டு வருகிறேன்“. கூறிக் கொண்டு ஆன் குசினிப் பக்கம் போனாள். இரவுச் சாப்பாட்டைக் கட்டி ஸ்ரனிஸின் பையில் வைத்தாள். "அண்ணா எல்லாம் சரியாக இருக்கு. நேரத்துக்குச் சாப்பிடுங்க. என்ன“? கட்டளை பிறப்பித்தாள். ஸ்ரனிஸ் சிரித்துக் கொண்டார். "சரியம்மா. உங்கள் கட்டளையை மீறியிருக்கிறேனா? நான் வாறன்“. ஸ்ரனிஸ் மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய்விட்டார்.

கடற்கரை அழகாகக் காட்சியளித்தது. கடல் மெல்லிய அலைகளைத் தள்ளிய வண்ணம் இசைபாடியது. "குடிகளை நெருக்கி பெருக்கமாய்த் தோண்றும் கோணமாமலை இதுதான்“;. ஆனந்தன் பெருமையாகக் கூறினான். மேரி ஆவலோடு அவன் காட்டிய திசையில் பார்வையைத் திருப்பினாள். கோணேசர் கோயில் குடிகொண்ட மலைத்தொடர் ஒருபுறம் அழகூட்டியது. மறுபுறம். அரசாங்க அதிபரின் அரச விடுதியோடு இணைந்த கடற்படை மலைத்தொடர் மெருகூட்டியது. பூவரசு மரங்கள் வீதியோரங்களில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. நகரசபை ஒலிபெருக்கியூடாக இனிய பாடல்களை ஒலிபரப்பியது. கடற்கரை மணல் விரிந்து பரந்து சிரித்தது. எங்கும் மக்கள் கூட்டம். சிறுவர்கள் கடலை, கச்சான் என்று விற்றவண்ணம் திரிந்தனர். கடற்கரை மணலில் சிறுநண்டு படம் வரைந்தன. சிறுவர்கள் நெருங்குமுன் வளைகளில் ஓடி ஒளிந்து கொண்டன. சிறுவர்கள் ஈரமணலில் வீடுகள் கட்டி விளையாடினார்கள்.

காற்று மெல்ல இசை மீட்டியது. கதை சுவாரஸ்யமாக இருந்தது. கடலைச் சுருள்கள் கைகளில் சுழன்றன. ஐஸ்கிறீம் இனித்தது. பொழுது விரைந்து போனது. டேவிட் கலகலத்து உரையாடினார். தனது அக்காவின் சாயலை மார்க்கிரட் கொண்டிருந்ததை டேவிட் இடைக்கிடை கூறிக் கொண்டிருந்தார். தனது தாயின் சாயலை மேரி கொண்டிருப்பதாக வர்ணித்தார். எலிசபெத், செல்வம், ஏஞ்சல் ஆன்மயூரி கடலலையோடு விளையாடினார்கள். மணலில் உருண்டைகள் செய்து எறிந்தார்கள். அவை கடலில் விழுந்து கரைந்தன. வாழ்க்கையும் இப்படித்தானே. நீர்மேல் குமிழியாக, நிலையற்றதாக இருக்கிறது. பெரியவர் மனந்திறந்து பேசினார். டேவிட் மனம் குளிர்ந்து போனார். குடும்பங்களை ஒன்று சேர்த்த பெருமையை ஆனந்தன் தேடிக்கொண்டான். அத்துடன் நல்லதொரு குடும்பத்தின் அன்பினையும் பெற்றுவிட்டான்.


தொடரும்...

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP