Thursday, May 20, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

27

அதிகாலையிலேயே சைக்கிள் ஓடுவது உடலுக்கு நல்ல பயிற்சியாகும். காலை வவுனியா மன்னார் வீதியால் சைக்கிளில் புறப்பட்டுவிட்டான். நெடிதுயர்ந்த பாலை, வீரை மரங்கள் பனிநீராடிக் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மூலிகைகளால் நிறைந்த வன்னிக் காட்டினைத் தழுவி காற்று வீசியது. அந்தக் காற்றைச் சுவாசிப்பதில் அலாதி இன்பம் பொங்கியது. களைப்பே தெரியவில்லை. அந்தக் காற்றுக்கு அத்தனை சக்தியிருந்தது. போகும் வழியில் கிராமங்களில் மக்கள் சுறுசுறுப்பாகத் தோட்டங்களிலும், வயல்களிலும் தங்கள் தொழில்களில் ஈடுபட்டுழைப்பதைப் பார்த்து ரசிப்பான். ஆநிரைகள் கூட்டங்கூட்டமாகப் படுத்திருந்து சூரியக்கதிர்களில் சுகம் காணும்.

பூவரசங்குளம் பாடசாலையில் அதிபர் சீனிவாசகம் தனது அலுவல்களில் ஈடுபட்டிருந்தார். ஆனந்தனைக் கண்டுவிட்டார். ஓடோடி வந்தார். "சேர் வணக்கம். இந்த அதிகால வேளயில வந்திருக்கிறியள். எங்கட அதிகாரிமார் பாடசாலயளுக்குப் பத்து மணிக்குப்பிறகுதான் வருவாங்க. வாங்க சேர். ஒரு ரீ குடித்துப் போகலாம்“. அழைத்தார். ஆனந்தன் புன்னகைத்தான். சைக்கிளைவிட்டு இறங்கிப் பாடசாலைக்குள் போனான். பாடசாலை மகிழ்ச்சியான சூழலுடன் நிமிர்ந்து நின்றது. சுற்றிவர நோட்டம் விட்டான். "இன்று முதன்முதலில் உங்கட பாடசாலைக்கு வந்தது சந்தோசமாக இருக்கிறது. பாடசாலை அழகாகக் காட்சிதருகிறது“. மனநிறைவோடு சொன்னான். சீனிவாசகம் மகிழ்ந்து போனார். அவரது மனைவியும் அசிரியர். அவர் சுடச்சுடப் பசும்பால் தேநீரைக் கொண்டு வந்தார். "குடியுங்க சேர்“. அன்போடு சொன்னார்.

நீங்க அதிகாலயிலேயே பாடசாலையில் இருந்து வேலைசெய்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வழியில் மூன்று பாடசாலைகளைப் பார்த்தேன். பாடசாலைகள் தூங்கிக்கிடக்கினறன. இன்று ஆலங்குளம் சந்திவரையுள்ள பாடசாலைகளது நிலைகளை அறியப் புறப்பட்டிருக்கிறன். தேநீரைக் குடித்தவாறே தனது திட்டத்தைக் விளக்கினான். அவனது கையிலுள்ள வவுனியா மாவட்டப் பாடசாலைகளின் அமைவிட வரைபடத்தை சீனிவாசகம் கண்டுகொண்டார். பலஅதிபர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்பதை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டார். அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கப் பாடசாலையைச் சுற்றிப் பார்த்தான். அதிபரின் கனவுகளைக் கேட்டறிந்தார். "சேர்! இதனை மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்த வேண்டும். இங்க ஏ.எல் வகுப்பு இல்லை. அதற்கும் அனுமதி வேண்டும். இங்கயிருந்து பிள்ளைகள் பல்கலைக் கழகம் செல்ல வழிசெய்யவேண்டும். அதுதான் சேர் எங்கட ஆசை“. ஆனந்தனுக்கு அவரது ஆசைகளைக் கேட்கச் சந்தோசமாக இருந்தது.

"ஏன் அதிபர்களின் கூட்டத்தில் இவற்றை முன்வைக்க வில்லை“.? ஆனந்தன் வினாவினான். "ஒரு விசயத்தை முன்வைக்கும்போது சகல ஆதாரங்களையும் இணைத்துக் கொடுக்கவேண்டும். அவற்றைக் கொண்டுவரல்ல. அதனால பேசாமல் இருந்தன். இப்ப எல்லாம் தயார் நாளைக்கு உங்களிட்டக் கொண்டு வந்து தாறன் சேர்.“ சீனிவாசகம் விளக்கினார். "எல்லாம் தயாரா? கிராமத்தின் வரைபடம், கடந்தகால பரீட்சைப் பெறுபேறுகள் எல்லாம் இருந்தால் தாங்க பார்ப்பம்“;. கேட்டான். சீனிவாகம் ஆவணங்களை தயாராக வைத்திருந்தார். அவற்றை மேலோட்டமாகப் பார்த்தான். திருப்திப்பட்டுக் கொண்டான். அவரிடமே திருப்பிக் கொடுத்தான். இந்தப் பாடசாலைக்கு ஒரு மண்டபம் இல்லை. இந்த வருடம் நடைபெறும் க.பnh.த. பரீட்சைக்கு இந்தப் பாடசாலையும் ஒரு பரீட்சை நிலையமாக இயங்கும். சரியா“? அவன் சொல்லும்போது சீனிவாசகம் அதிசயித்துப் போனார்.

"சரி நேரம் ஏழுமணி. விளையாட்டுப் போட்டி ஆயத்தங்கள் தயாரா? நான் வரும்போது வாறன். எல்லாக் கடிதங்களையும் தாங்க. கொண்டு போகிறேன். சொல்லிப் புறப்பட்டான். சைக்கிள் விரைந்தது. சீனிவாசகம் அவன் போவதையே அதிசயித்துப் பார்த்துக் கொண்டு நின்றார். சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தது. கால்கள் பெடலை மிதித்துக் கொண்டிருந்தன. கைகள் ஹாண்டிலில் விளையாடின. கண்கள் வழிகாட்டின. மனம் எண்ணக்கடலில் விரிந்து எதிர்காலத் திட்டக் கனவில் உலா வந்தது. எவ்வளவு தேவைகள் இருக்கின்றன? இவையாவற்றையும் நிறைவேற்றவேண்டும். எண்ணியவாறே சைக்கிள் ஓடினான். முன்னால் குருக்கள்புதுக்குளம் பாடசாலை தெரிந்தது. பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தது.

அதிபர் பாடசாலையிலேயே இருப்பவர். பிள்ளகைள் பாடசாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். சைக்கிள் விரைந்தது. பூவரசங்குளத்தில் இருந்து அவனது கண்கள் இயற்கைத்தாவரங்களை அவதானித்து வந்தன. அவை படிப்படியாக மாறிவருவதை அவதானிக்கத் தவறவில்லை. உயர்ந்த மரங்கள் உயரத்தில் குறைந்து செல்வதை அவதானித்தான். கிளைகள் நிறைந்ததாகத் தெரிந்தன. இலைகள் அகன்ற தாவரங்களும், முட்செடிகளும் காணப்பட்டன. குளங்களையண்டி மருதமரங்களின் நிறைந்திருந்தன. வேம்பு பரவலாகக் காணப்பட்டன. காட்டுப்பூக்கள் கண்களைப் பறித்தன. பிராமனாளங்குளம் தெரிந்தது. முன்னால் தெரிந்த சந்தியில் காலையூன்றினான். கிராமங்களுக்குச் செல்லும் அம்புக் குறிகளைப் பார்த்தான்.

வலப்பக்கமாகச் சைக்கிளைத் திருப்பினான். கிராமங்கள் பிரதான வீதியிலிருந்து விலகியிருந்தன. ஆட்டுமந்தைகள் அலைந்து திரிந்தன. ஊர்மைனைகள் தெரிந்தன. பெரியதம்பனை குளம்தொட்டு வளம்பெருக்கும் பழம்பெரும் கிராமம். பெரிதொரு கிராமம். பாடசாலை தெரிந்தது. உள்ளே சென்றான். ஊர்மாடுகள் பாடசாலை வளவினுள் காவல் செய்தன. பாடசாலையின் ஒருபுறத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பாடசாலை அலுவலகம் மூடிக்கிடந்தது. ஆசிரியர்கள் யாnருமில்லை. புதியதொரு ஆள் தங்கள் பாடசாலைக்கு வந்ததை அறிந்து பிள்ளைகள் ஓடிவந்தார்கள். விசாரித்தார்கள். "நான் உங்களின் ஆசிரியர்தான். வாருங்கள்“ அழைத்தான். பிள்ளைகள் அனைவரும் வந்தார்கள். மாடுகளை அப்புறப்படுத்தினான். எங்கும் சாணம் குவிந்து கிடந்தது.

மாணவ தலைவர்களை அழைத்தான். வந்தார்கள். பக்கத்திலுள்ள வீடுகளுக்குப் போய் மண்வெட்டி, குப்பைவாரி போன்றவற்றை எடுத்துவருமாறு கூறினான். நொடிப்பொழுதில் வந்தன. தானும் ஒருமண்வெட்டியை எடுத்தான். குழிகள் தோண்டப்பட்டன. அவற்றுள் சாணம் தஞ்சமாகியது. பிள்ளைகள் அனைவரும் இயங்கினார்கள். ஆசிரியர் மாதவன் வந்தார். அவரும் சேர்ந்து கொண்டார். அரைமணி நேரத்தில் பாடசாலை பளிச்சிட்டது. ஒன்றுகூடலை நடத்தினான். மிகவும் அழகாகத் தேவாரம் பாடினார்கள். அறிவுக் கதைகளைக் கூறினான். பலவினாக்களைத் தொடுத்தான். பாடசாலையின் நிலையினைப் புரிந்து கொண்டான். ஆசிரியரிடம் தான் யாரென்பதைக் கூறினான்.

"அதிபர் இன்று வரமாட்டார் அவர் கல்வி அலுவலகம் செல்வதாகச் சொன்னவர். இன்றைக்குப் பதிலதிபராக சின்னத்துரை ஆசிரியர் பொறுப்பெடுத்தவர். அவரிட்டத்தான் பாடசாலைத் திறப்பு. அவர் இப்ப வந்திருவார். மாதவன் கூறும்போதே தூரத்தில் சின்னத்துரை வருவதைக் கண்டுவிட்டார். "அதோ வாறார்“ மாதவன் காட்டினார். "மாஸ்டர். நான் யாரென்டு சொன்னால் அவர் திரும்பிப் போயிருவார். அதிபரைச் சந்திக் வந்தவர் என்று சொல்லுங்க. மாஸ்டர் நீங்க வழமையாகப் போடும் நேரத்தைப் பதியச்சொல்லுங்க பரவாயில்லை. பாவம் பிந்தி வரும் ஆசிரியர்களையும் காப்பாற்றத்தானே வேண்டும். சரியா“? ஆனந்தன் முன்னெச்செரிக்கை விடுத்தான். பிள்ளைகள் வகுப்புக்களை நோக்கிச் சென்றார்கள்.

சின்னத்துரை நேரே அலுவலகதுக்குச் சென்றார். மாதவனோடு ஆனந்தனும் சென்றான். ஆனந்தன் கூறியது போல் சின்னத்துரையிடம் ஒப்புவித்தான். "அதிபர் கல்வி அலுவலகம் சென்றிருக்கார். நாளைக்குத்தான் வருவார். கதவினைத் திறந்தவாறே கூறினார். உள்ளே போய் அலுமாரியினைத் திறந்து ஆசிரியர்களின் வரவுப் பதிவேட்டினை எடுத்து அதில் தனது ஒப்பத்தை இட்டு நேரத்தை எட்டு மணியெனக் குறிப்பிட்டார். மாதவன் அவரின் பின்னால் கையெழுத்திட்டார். ஆனந்தனின் கண்கள் வரவேட்டின் குளறுபடிகளைக் கண்டு கொண்டன. "அதிபர் எப்ப கல்விஅலுவலகம் போனவர்.? அவர் எங்க இருக்கிறவர்? போனல் இன்டக்குச் சந்திக்கலாமோ? ஆனந்தன் வினவினான். "அவர் வவுனியாவிலதான் இருக்கிறவர். ஓவ்வொரு நாளும் வந்து போறவர். அவரின் வீட்டு விலாசம் தெரியாது. மாதவன் மாஸ்டர்! உங்களுக்குத் தெரியுமா“? சின்னத்துரை மாதவனிடம் கேட்டார். மாதவனும் தெரியாது என்று தலையை ஆட்டினார்.

பஸ் பாடசாலைப் படலையில் நின்றது. சில ஆசிரியர்கள் இறங்கி வந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். அவர்கள் வரும்போது பிள்ளைகள் விளையாடுவார்கள். இன்று வகுப்புக்களில் ஆசிரியர்கள் இல்லை. ஆனால் வகுப்புக்கள் அமைதியாக இருக்கின்றன. குதுகலிப்போடு அலுவலகத்தில் நுழைந்தார்கள். அதே நேரத்தைப் பதிந்தார்கள். "என்ன மாஸ்டர் இன்றைக்குப் பிள்ளைகள் ஒழுங்கா வகுப்புகளில் இருக்கிறாங்க. அதிபரும் இல்ல. வேலைகள் கொடுத்தீங்களா? சொல்லிக் கொண்டு ஆசிரியர்கள் இளைப்பாறும் அறைக்குள் சென்றார்கள்.

"மாஸ்ரர் இப்ப உங்கட நேரம் என்ன? ஆனந்தன் கேட்டான். சின்னத்துரை தனது மணிக்கூட்டைப் பார்த்தார். "எட்டரையாகிறது“. சின்னத்துரை பதிலளித்தார். மிஸ்டர் மாதவன் உங்கட நேரமென்ன? பாடசாலை மணிக்கூட்டில் தெரியும் நேரமென்ன? மாதவனைப் பார்த்துக் கேட்டான். "பத்தரையாகிறது“ மாதவன் பதிலளித்தான். "மாஸ்டர் தயவுசெய்து அந்த ஆசிரியர் பதிவேட்டைத் தாங்க“. ஆனந்தன் கேட்டான். "உங்களுக்கு அதெல்லாம் எதுக்கு. வந்த லேலையப் பாரத்திட்டுப் போங்க“? சின்னத்துரை சினத்தோடு பதிலளித்தார். மாதவன் அவர் காதுகளில் ஓதினான். சின்னத்துரை நிலைமையைப் புரிந்து கொண்டார். "மன்னிச்சிக் கொள்ளுங்க சேர். நான் யாரோ என்று நினைச்சிட்டன்“. வரவேடு ஆனந்தன் கைகளுக்குத் தாவியது.

ஆசிரியர்கள் கொண்டுவந்த உணவையுண்டு களைப்பைப் போக்கினர். இன்னும் வகுப்புக்களுக்குப் போகவில்லை. "அதிபர் இன்று பாடசாலைக்கு வந்திருக்கிறார். ஏழு மணிக்குக் கையெழுத்திட்டிருக்கிறார். வெளியில் போயிருக்கிறார். சின்னத்துரை மாஸ்டர் பத்துமணிக்கு வந்து அலுவலகம் திறந்து எட்டுமணியென வரவு பதிந்துள்ளார். ஆனால் ஏழரை மணிக்கு வந்த மாதவன் மாஸ்டர் எட்டுமணிக்கு வரவினைப் பதிந்துள்ளார். பத்தரை மணிக்கு வந்த ஆசிரியர்கள் எட்டு மணிக்கு தங்கள் வரவினைப் பதிந்துள்ளார்கள். நான் ஏழேகாலுக்கு வந்து பிள்ளைகளோடு சேர்ந்து பாடசாலையைத் சுத்தம் செய்தேன். சரி லொக் புத்தகத்தை எடுங்கள்“. கேட்டான். சின்னத்துரையருக்கு வெயர்த்து விட்டது. அதனையெடுத்துக் கொடுத்தார்.

ஆனந்தனுக்குச் சிரிப்பாக வந்தது. „வியாழன் அதிபர்களது கூட்டத்துக்கு உங்கள் அதிபர் வந்தார். அதற்குப்பின் அவர் வரவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் அவரைப் பலமுறை வவுனியாவில் கண்டிருக்கிறேன். வரவுப் பதிவேட்டில் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் அவர் பாடசாலைக்கு வரவில்லை. உண்மையாக அவர் சென்ற புதன் வந்திருக்கிறார். அதன்பிறகு அவர் வரவில்லை. நான் வந்தபின்தான் அலுவலகம் திறபட்டது. அவரது ஆவி வந்து கையெழுத்திட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வருகிறது. கூடுவிட்டுக் கூடுபாயும் விக்கிரமாதித்தன் கதையைக் கேள்விப் பட்டிருக்கிறேன். வியாழன், வெள்ளி, இன்று திங்கட்கிழமை மூன்று நாட்களும் அதிபர் வரவில்லை. ஆனால் அதிபர் உங்களுக்குத் தெரியாமல் கையெழுத்திட்டு விட்டுப் போயிருக்கிறார்.“ சுpன்னத்துரையின் முகத்தில் வெயர்வை அரும்பியது.

„மிஸ்டர் சின்னத்துரை நீங்கதான் அவருக்காக பதில் கடமை பார்க்கிறீங்க. இல்லையா? என்ன நடந்தது. உண்மையைச் சொல்லுங்க. பிழைவிடுவது மனித இயல்பு. ஆனால் அதையுணர்ந்து திருந்தவேண்டும். இல்லையா? மிஸ்டர்.மாதவன் ஆசிரியர்கள் இன்னும் வகுப்புக்குப் போவில்லை. அவர்களை வரச் சொல்லமுடியுமா“? சொன்னதும் மாதவன் வெளியில் சென்றார். மாதவன் செய்தியைத் தெரிவித்தான். ஆனால் வந்திருப்பது யாரென்று சொல்லவில்லை. பிரதி அதிபர் வரச்சொன்னதாகவே சொன்னான். அவர்கள் அலுவலகத்துக்குள் வந்தார்கள். சின்னத்துரையர் அவர்களை இருக்கும்படி கூறினார். அவரே தொடங்கினார்.

"அதிபர் புதன்கிழமை தான் வருமட்டும் பாடசாலைக்குப் பொறுப்பாக இருக்கும்படி கூறிச் சென்றவர். ஆனால் இன்றுவரை வரவில்லை. இன்றுவரை அவர் ஒவ்வொருநாளும் கையெழுத்திட்டுச் சென்றிருக்கிறார். லொக்புத்தகத்திலும் இன்று கல்வி அலுவலகம் செல்வதாக எழுதிக் கையெழுத்திட்டுச் சென்றுள்ளார். நானும், நீங்களும், பத்து அல்லது பத்தரை மணிக்கு வந்து எட்டுமணியென்று நேரத்தைப் பதிந்து விட்டு பன்னிரெண்டு மணிக்குப் போய்விடுகிறோம். இதனால் நமது பிள்ளைகள் தமது கல்வியில் பின்னடைந்துள்ளார்கள். இதற்கான மாற்றொழுங் கினை நாம் மேற்கொள்ளவேண்;டும். என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்“;. கூறிவிட்டு மெல்ல இருந்தார்.

ஆசிரியர்களுக்கு மனதுக்குள் கோபம். "ஒரு வெளியாரை வைத்துக் கொண்டு இப்படிக் கதைப்பது நல்லதல்ல“. திருமதி.கார்த்திகேசு வீறாப்பாகச் சொன்னார். ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்தது. "நாம் பிழைவிடுகிறோம் என்பதை ஏற்றுக் கொள்ளவேணும். இதைத்தான் இவ்வளவு நாளும் செய்து கொண்டு வந்திருக்கிறோம். இங்கு இருப்பவர் வெளியாளல்ல. நமது பாடசாலைக்கு மிகவேண்டியவர். நமது கல்வி அதிகாரி. காலையில் அவர் வந்து பாடசாலையைச் சுத்தஞ்செய்து தொடங்கியும் வைத்தார். மாதவன் மாஸ்டரும் அவருக்கு ஒத்தாசை செய்திருக்கிறார். அவர் தானொரு கல்வி அதிகாரியென்று காட்டிக் கொள்ளவில்லை. நமது தவறுகளைச் சுட்டிகாட்டி, திருந்துவதற்கான வழிவகைகளைக் காட்டவே வருகை தந்துள்ளார்“;. சின்னத்துரை கூறியதை ஆசிரியர்கள் உள்வாங்கியதை அவர்களது முகங்கள் காட்டின. "சேர்! எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து நாங்கள் உண்மையாக உழைப்போம்“. ஏகமனதாகக் கூறினார்கள். இப்படியொரு மாற்றத்தைத்தான் ஆனந்தன் எதிர்பார்த்தான்.

"நான் உங்களில் ஒருவன். நானும் ஆசிரியராக இருந்துதான் இந்தநிலைக்கு உயர்ந்துள்ளேன். நாமெல்லோரும் கூடி ஏழைமாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்போம். உங்கள் மனமாற்றம் தொடரவேண்டும். நன்றி. உங்கள் வகுப்புக்களுக்குச் சென்று கடமையைச் செய்யுங்கள்“ கூறிவிட்டு;. லொக் புத்தகத்தில் தனது வருகையைப் பதிந்து, அதிபர் வெளியில் சென்றுள்ளார். என எழுதி ஐந்து வரிகள் இடம் விட்டுக் கையொப்பத்தினை இட்டான். "மிஸ்டர் சினத்துரை இன்று மாலை அல்லது நாளைக் காலை அதிபரை அலுவலகத்தில் என்னைச் சந்திக்குமாறு செய்தியை அனுப்புங்கள். அவரைக் காப்பற்ற வேண்டுமானால் உடனடியாக வரச் சொல்லுங்கள். நான் வாறன“ கூறிச் சைக்கிளில் தாவியேறிப் புறப்பட்டான். அவனையே ஆசிரியர்கள் பார்த்தவாறு நின்றார்கள்.

தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP