Thursday, May 13, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

16

தம்பலகாமத்தில் தயிர் வாங்கிக் கொண்டார்கள். பிரயாணத்தின் களைப்பு ஆனந்தனில் தெரிந்தது. டேவிட் அருகில் மயூரி இருந்தாள். அவர்களுக்கு முன்னால் ஆனந்தன் இருந்தான். தூக்கம் கண்களில் குடிகொண்டது. சாடையாகக் கண்களை மூடி கனவு கண்டான். அதற்குள் கல்லோயா வந்து விட்டது. டேவிட் நல்ல உறக்கத்தில் இருந்தார். "அண்ணா..பீற்றர்சன்.. எப்படி? நல்லவாரா..“? திடீரென இரகசியமாகக் கேட்டாள். ஆனந்தனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு. அதனை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. "யாரையும் நல்லவர், கெட்டவர் என்று எப்படிச் சொல்லமுடியும்? பழகிப் பார்த்தால்தான் தெரியும். எனக்குத் தெரிந்தவரை அவன் நல்லவன்தான்.“ ஆனந்தன் பிடிபடாமல் கதையை வளர்த்தான்.

"பீற்றர்சனைத் தெரியுமா“? ஆனந்தன் கேட்டான். சமாளித்தாள். "நீங்கதானே அறிமுகம் செய்திங்க. அதுக்குள்ள மறந்தாச்சா? என்னண்ணா நீங்க“. அவளின் சமார்த்தியத்தை மெச்சினான். "எனக்கு இப்ப மறதி கொஞ்சம் கூடிப்போச்சு. சரி...சரி..அவன்ர பேச்சு எதற்கு இப்ப? உங்க அண்ணியப்பற்றிக் கதைப்பமா“? ஆனந்தன் கேட்டான். "அங்குதான் போறோமே. போய் நல்லாக் கதைப்பம்.“ சிணுங்கினாள். மயூரியிடமிருந்து உண்மையை எப்படி வரவழைப்பது“? யோசித்தான். " அண்ணா பீற்றர்சன் சரியான முன்கோபி என்ன?“ சட்டென்று கூறினாள். "எப்படித் தெரியும்"? ஆனந்தன் சடுதியாகக் குறுக்காடினான். "மாட்டிக்கொண்டேனே“? மனதில் திட்டிக்கொண்டு, நாக்கைக் கடித்துக் கொண்டாள். விழிகளை மேலே உயர்த்தி "இதுகூடத் தெரியாதா?;“.; எனச் சொன்னாள். "எப்படி“? ஆனந்தன் புரியாததுபோல் கேட்டான்.

"ஓரு ஆளைப்பார்த்த உடனேயே அவரது குணங்களை முகம் காட்டிவிடும் என்று அப்பா அடிக்கடி கூறுவார். அதுதான் சொன்னேன்“. ஒருவாறு நம்பும்படி கூறினாள். "ஒ...அப்படியா“? உதட்டைக் குவித்து நம்பியதாக நடித்தான். "மயூரி இரு..இரு..உன் வாயாலேயே சொல்ல வைக்கிறேன்.“ தனக்குள் கூறிக்கொண்டான்.
சற்று அமைதியாக இருந்தான். "மயூரி பீற்றர்சனும் கொழும்புக்கு வரட்டா என்று கேட்டான். நான்தான் வேண்டாமென்று சொல்லிப் போட்டன்.“ ஒரு அப்பட்டமான பொய்யைச் சொன்னான். "நாங்க போற விசயமெல்லாம் முடிஞ்ச பிறகு கூட்டிப் போவம். என்ன?“ அவனே தொடர்ந்தான். மயூரி மௌனமானாள். "என்ன ஒன்றும் பேசவில்ல. கோபமா“? ஆனந்தன் கூறிமுடிக்குமுன் "சீ..சீ... அப்படி ஒன்றுமில்ல. வந்திருந்தால் உங்களுக்குப் பேச்சுத்துணையாக இருந்திருக்கும். அதுதான் யோசிச்சன்“. மயூரி பிடிபடாமல் தப்பிக் கொள்வதை அவதானித்தான். "அவன் வந்தால் நான் எப்படி மேரியோடு கதைப்பது. அவன் பாவம். தனிய இருக்கவேண்டியதுதான். பிறகு நீங்கதான் கூட்டிக்கொண்டு திரியவேணும்“. அவளது முகபாவனையைப் பார்த்தவாறே தொடர்ந்தான்.

கல்லோயாவைவிட்டு வண்டி நீங்கியது. "மயூரி நேற்று பீற்றசன் வீட்டுக்குப் போயிருந்தனான். யோசப் மாஸ்ரர் நல்ல தோட்டம் போட்டிருக்கார். எத்தனை வகைப் பூஞ்செடிகள், மரக்கறி வகைகள். ஒரு சிறிய தாவரப்பூங்காவே உள்ளது. நல்ல சனங்கள். நான் யோசப் மாஸ்ரரிடம் படித்தனான். தாவரவியல் பாடத்தை அவர்தான் கற்பித்தவர். நல்ல அருமையாகப் படிப்பிப்பார். பீற்றர்சன் என்னோடு ஒன்றாகத்தான் படித்தவன். இப்போது ஒன்றாகவே கற்பிக்கிறோம். விளக்கமாகச் சொன்னான். விழிகள் மலரக் கேட்டுக் கொண்டிருந்தாள். "அண்ணா பீற்றர்சனின் அம்மா எப்படி“? திடீரெனக் கேட்டாள். "சும்மா சொல்லக்கூடாது. அருமையான அம்மா. பாசத்தோடு பழகுவார்“;. ஓப்புவித்தான்.

"ஏன் அவன்ர அம்மாவைப் பற்றிய அக்கறை வந்தது“? சடுதியாக மாற்றினான். "அப்பாவைப் பற்றிச் சொன்னீங்க. அதனால் அம்மாவைப் பற்றிக் கேட்பதில் என்ன தப்பு“? வினாவினாள். பிடிபடாமல் தப்பிவிடுகிறாளே? மனதினுள் வியந்து கொண்டான். "இன்னொரு விசயம் சொல்லப்போறன். அவனும் 'லவ்“ பண்ணுறான். அது விசயமாக உதவி செய்யச் சொல்லுறான்“ சொல்லிக் கொண்டே மயூரியின் முகத்தை அளந்தான். அவளது முகம் மாறிக்கொண்டு வருவதை நோக்கினான். "அவளும் எனக்குத் தெரிந்த அழகான பிள்ளைதான். பிள்ளையைப் பார்த்து அவங்கட வீட்டிலயும் போய் கதைச்சிப் போட்டன்.“ அவள் படபடத்தாள்.

"அப்படி இருக்காது. நீங்க பொய் சொல்லுறீங்க. எப்ப கதைச்சனீங்க?“ திடீரென்று குறுக்காடினாள். "நான் ஏன் பொய்சொல்ல வேணும். உண்மையைத்தான் சொல்லுறன். நேற்றுத்தான் கதைச்சி முடிவெடுத்தனாங்கள். பெண்வீட்டாருக்கும் விருப்பம்தான். என்ர விசயம் முடிஞ்ச பின்தான் கலியாணம் என்று சொல்லிப் போட்டார்கள். எனக்கும் சந்தோசம். பீற்றர்சன் கொடுத்து வச்சவன். நல்லதொரு இடத்தில பெண்பார்த்து லவ் பண்ணியிருக்கிறான்.“ சொல்லி முடித்ததும் அவளை உற்றுப்பார்த்தான். அவள் கண்களில் நீர் துளிர்த்தது. மலர்ந்திருந்த விழிகளில் நீரலைகள் தெரிந்தன. "மயூரி என்ன நடந்தது? கண்களில் என்ன கண்ணீர்“;? தெரியாததுபோல் கேட்டான். "ஒன்றுமில்லை. ஏதோ கண்களில் வழுந்திற்றுப்போல“. மழுப்பினாள். அவள் அழுது விடுவாளோ? எல்லாவற்றையும் சடுதியாக இழந்துவிட்டவள் போல் தோன்றினாள்.

ஆனந்தன் கலகலத்துச் சிரித்தான். தன் காதலன் வேறு பெண்ணைக் காதலிப்பதை எந்தப் பெண்ணால் தாங்கிக் கொள்ளமுடியும்?. "மயூரி! இந்த அண்ணனிடம் உன்னைப் பற்றி ஏதும் சொன்னாயா“? இப்போது நல்லதொரு உரிமையை எடுத்துக் கொண்டான். "பீற்றர்சன் விரும்பிய பெண் நீதான். உன்னைப் பற்றி அவன் என்னிடம் நிறையச் சொல்லி இருக்கிறான். நீ இல்லாவிட்டால் அவன் இல்லையென்ற நிலையில் இருக்கிறான். உனக்காக அப்பா, அண்ணன் எல்லோரிடமும் கதைத்து விட்டேன். ஸ்ரனிஸிடம் விபரத்தச் சொல்லிப் போட்டன். எல்லோருக்கும் நல்ல விருப்பம். பீற்றர்சனை ஸ்ரேசனுக்கு நான்தான் வரச்சொன்னேன். அறிமுகம் செய்ததெல்லாம் உனக்காகத்தான். நீ எனக்குச் செய்யும் உதவிகள் எத்தனை? நானும் என்ர தங்கச்சிக்கு இதுகூடச் செய்யக் கூடாதா“? நா தளதளக்கக் கூறினான்.

மயூரி நெக்குருகி நின்றாள். அவள் கண்கள் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தன. ஆனந்தனின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். "அண்ணா! எனக்காக எவ்வளவு செய்திருக்கிறீங்க. யாருக்கும் தெரியாமல் எனது இரகசியங்களை மனதில் போட்டுப் பூட்டி வைத்திருந்தேன். அதனை உங்களிடம் சொல்லத்தான் நினைத்தேன். முதலில் அண்ணியின் விசயம் சரிவரட்டும் என்று பார்த்திருந்தேன். எப்படியோ உங்களுக்குத் தெரிந்து விட்டது. நீங்கள் அப்பா, அண்ணன் எல்லோரிடமும் சொல்லி சம்மதத்தையும் பெற்றுவிட்டீங்க.“ அவளுக்கு வார்த்தைகள் வரமறுத்தன. அவளது கண்கள் பொலபொலத்தன. கண்ணீரில் திளைத்தாள். அவனது கால்களில் வீழ்ந்து கிடந்தாள். வண்டியில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்களது உரையாடல் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக அமையவில்லை.

"மயூரி! உனது விசயத்தை உன் வாயாலேயே வரவழைக்கத்தான் இவ்வாறு நடந்து கொண்டேன். நீ இப்போவாவது ஒத்துக் கொண்டாயே. அதுவே பெரிய விசயம். இனிக் கவலையை விடு. நடப்பது நல்லதாக நடக்கும்“;. வண்டி நின்றது. எட்டிப்பார்த்தான். மாகோ ஸ்ரேசன் தெரிநிதது."மாகோ வந்திற்று. மயூரி, தேநீர் குடிப்பமா“? சத்தம் கேட்டு "மாகோச் சந்தியா?“ டேவிட் கண்களைத் திறந்தார். "தேநீர் குடித்தால் நல்லதுதான்.“ சோம்பல் முறித்துச் சொன்னார். ஆனந்தன் இறங்கி கன்ரீனில் தேநீர் வாங்கி வந்து கொடுத்தான். குடித்தார்கள். குளிர்வீசியது. சுடச்சுடத் தேநீர் இதமாக இருந்தது. மயூரி புதுத் தென்போடு உற்சாகமாக இருந்தாள். வண்டி புறப்பட்டது.

ஆளையாள் பார்த்துப் புன்முறவல் செய்து கொண்டே பயணத்தைத் தொடர்ந்தார்கள். மனம் சலனமற்று அமைதியாக இருந்தது. ஆனந்தன் கண்களை மெல்ல மூடியிருந்தான். கண்களை உறக்கம் தழுவிக்கொண்டது. "அண்ணா! கொழும்புக்கோட்டை ஸ்ரேசன் வந்திற்று. எழும்புங்க“ எழுப்பினாள். "அதற்குள்ளாகவா“? கூறிக்கொண்டு எழுந்தான். பொதிகளை மேலிருந்து எடுத்தான். வண்டி நின்றதும் எடுத்துக் கொண்டு இறங்கி வெளியில் வந்தார்கள். ரக்சிகள் வரிசையாக நின்றன. ரக்சியைப் பிடித்துக் கொண்டு ஏறி போகுமிடத்தைக் கூறினார்கள். அது அவர்களைச் சுமந்து கொண்டு விரைந்தது. வீடு அண்மித்தது. ரக்சியை நிறுத்தி இறங்கிக் கொண்டார்கள். பிரதான வீதியில் இருந்து ஐம்பது மீற்றர் தூரத்தில் வீடு இருந்தது. நடந்தார்கள். சரியாகக் காலை ஆறரை மணி. செபஸ்தியார் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

வீட்டுக் கதவில் தட்டும் சத்தம் கேட்டது. "ஆரது கொஞ்சம் இருங்க வாறன்.“ சப்பாத்தை மாட்டிக் கொண்டு கதவைத் திறந்தார். அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் எதிர்பார்க்கவில்லை. "வாங்க“ மனம் குளிர்ந்தது. வாய்நிறைய வரவேற்றார். மூவரும் உள்ளே சென்றார்கள். மாகிரட் செபஸ்தியாருக்குத் தேநீர் கொண்டு வந்தார். அப்போதுதான் இவர்களைக் கண்டார். "வாங்க...வாங்க..என்ன அறிவிக்காமல் திடீர்பயணம்? இருங்க தேநீர் கொண்டு வாறன்“. கூறிவிட்டு அடுக்களையில் நுழைந்தார்.

"எல்லாரும் சுகமாக இருக்கிறீங்களா“?; பொதுப்படையாகவே செபஸ்தியார் கேட்டார். "எல்லாரும் சுகம்“. ஆனந்தன் பதிலளித்தான். அறிவித்து விட்டு வந்திருந்தால் லீவு போட்டிருப்பன். வேலையிருக்கு. பத்து மணிபோல வந்திருவன். மாகிரட் கவனித்துக் கொள். நான் வாறன். அவர் புறப்பட்டார். மாகிரட் தேநீNhhடு வந்தார். பரிமாறினார். புன்னகையோடு எடுத்துக் கொண்டார்கள். களைப்புக்குத் தேநீர் சுகமாக இருந்தது. குடித்தவாறே ஆனந்தன் கண்கள் அவளைத் தேடின. அதனை மயூரி புரிந்து கொண்டாள். குடித்தவாறே அவளும் நோட்டம் விட்டாள். மெதுவாக எழுந்து அறைகளை எட்டிப் பார்த்தாள். எலிசபத், மரியா, ஏஞ்சல் ஒருவரும் எழுந்திருக்கவில்லை.

குளியலறையில் சத்தம் கேட்டது. இனிய குரலில் இசை தவழ்ந்து வந்தது. அதிகமாக குளியலறையில்தான் இசை பிறந்ததோ? மயூரியும் குளியலறைக்குள் இருக்கும் போது பாடிக்கொண்டே இருப்பாள். அதற்குக் காரணம் உண்டு. ஓன்று தனது குரலின் இனிமையை ரசிப்பது. தானே தனிமையில் பாடிப்பழகுவது. அடுத்தது பயம். பயத்தின் காரணமாக வந்தபடி பாடுவது. மேரிக்கு இவற்றில் எதுவாக இருக்கும்?. உற்றுக் கேட்டாள்.

மெதுவாக நழுவிப் போனாள். ஆனந்தனுக்கு வரும்படி சைகை செய்தாள். அவன் "ஏன்“? என்பற்கேற்ற பதிலைக் கொடுத்தான். அவள் வற்புறுத்தவே எழுந்து வந்தான். வாயில் விரலை வைத்துக் காதினால் கேட்குமாறு சைகை கொடுத்தாள். இனிய குரல் ஒலித்ததை உணர்ந்து கொண்டான். இவ்வளவு இனிமையான குரலா? வியந்து கொண்டான். அவனுக்கு அங்கு நிற்பதற்கு மனம் இடம்கொடுக்க வில்லை. தனது இருக்கைக்குத் திரும்பிவிட்டான். மாகிரட் அவர்களுக்கான அறையை ஒழுங்கு படுத்தினார். மயூரி மாகிரட்டுக்கு உதவினாள். மெதுவாகப் போய் அப்பாவை குளிக்கச் சொன்னாள். அவர் துவாயை எடுத்துக் கொண்டு மற்றக் குளியலறைக்குச் சென்றார். மயூரி எலிசபத் பக்கம் சென்று நடப்பதைப் பார்த்து ரசிப்பதற்காகச் சுருண்டு படுத்துக் கொண்டாள்.


தொடரும்


கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

17

மேரி குளிக்கும் போது கற்பனையில் மிதந்தாள். ஆனந்தனின் குணாதிசயங்களை எண்ணி வியந்தாள். அவன் வந்தால் அவனிடம் தனது ஆசைகளைக் கூறவேண்டும். கோயிலுக்குச் சென்று பங்குத்தந்தையிடம் அறிமுகம் செய்து திருமணம்பற்றி அவரிடம் சொல்லவேண்டும். திருமணம் ஆனபின் ஆனந்தனை எப்படி அழைக்கவேண்டும்? என்றெல்லாம் கற்பனை செய்து பார்த்தாள். "திருமணம் செய்தபின் அவரை 'அத்தான்’; என்றுதான் அழைப்பேன். "அத்தான்...என்..அத்தான்“ இசையோடு பாடலாக அழைத்துப் பார்த்தாள். "எனக்கு விசரா?..என்ன வந்தது எனக்கு“? தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். இந்தப் பெண்களுக்குத்தான் எத்தனை விதமான கற்பனைகளும் கனவுகளும், ஆசைகளும். இந்தக் கற்பனைகள் நிரந்தரமானவையா? எவைதான் இந்தப் பூவுலகில் நிரந்தரமனவை? கற்பனைகளை வளர்த்தவண்ணமே சந்தோசமாய்க் குளித்தாள்.

மேரி குளித்து முடிந்ததும் தனது அறையினுள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டாள். அடுக்களைக்குச் சென்று தேநீரைக் கோப்பையில் ஊற்றிக் கொண்டாள். வழமையாகத் தேநீர் அருந்தும் மண்டபத்துக்குள் வந்தாள். அப்போதுதான் ஆனந்தனைக் கண்டாள். ஆனந்தன் தினசரியைப் படித்துக் கொண்டிருந்;தான். மேரி வருவதை அவன் கவனிக்கவில்லை. அவனும் எதிர்பார்க்கவில்லை. அவள் தன்னை மறந்து சிலையாகி அதிர்ந்து போனாள். சட்டெனத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். "இப்போதுதானே இவரைப் பற்றி நினைத்தேன். எப்படி இவர் இங்கே? எப்ப வந்தார்?“;. முகம் மலர்ந்து கொண்டது. தான் காண்பது கனவா அல்லது நினைவா என்பதை அறிவதற்குத் தனது கையில் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். வலித்தது. நெஞ்சு படபடத்தது. என்ன கதைப்பதென்று தெரியாது தடுமாறினாள்.

தன்முன்னால் சிலையாக மேரி நிற்பதைக் கண்டு கொண்டான். அவளது அழகில் சொக்கிவிட்டான். அவன் எதிர்பார்க்கவில்லை. குளித்துக் குதுகலிப்போடு புன்னகைதவழ நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் கிறங்கிப்போனான். தனியே இருவரும் ஆளையாள் பார்த்துக் கொண்டனர். புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.

எவற்றையெல்லாம் கற்பனை செய்து மகிழ்ந்தாளோ அவற்றையெல்லாம் மறந்துவிட்டாள். ஓன்றும் நினைவில்லை. நினைவுக்கு வர மறுத்தன. எப்படித் தொடங்குவது? அவள்தான் தொடங்கினாள். "எப்போது வந்தீங்க? தனியாகவா வந்தீங்க?. மயூரி வரவில்லையா“? அவன் பதில்பேசாது புன்னகைத்தான். "இருங்க தேநீர் கொண்டு வாறன்“;. அவள் போகப்புறப்பட்டாள். "வேண்டாம். நான் குடிச்சிற்றன்“. அவன் முடிக்குமுன் "யார் தந்தது“? வினவினாள். "உங்கள் அம்மாதான். இருங்க கதைப்பம்“. அவன் கேட்டுக் கொண்டான். "இன்னொரு தேநீர் குடியுங்க. நான் கொண்டு வாறன். குடித்துக் கொண்டு கதைப்பம். இதோ வாறன்“;. அவள் போய்விட்டாள். அவன் பத்திரிகையை மூடிவைத்தான். போனகையோடு திரும்பினாள். "இந்தாங்க..“ கொடுத்தாள். அவன் வாங்கும்போது அவளது மென்விரல்கள் விரிந்தன. அவனது விரல்கள் அவளின் கைகளில் மொய்த்தன.

சுகம் சுண்டிக்கொண்டது. "எப்படி நலமாக இருக்கிறீங்காளா“? கேட்டான். "நீங்க இருக்கும்போது எனக்கென்ன குறை“? சொன்னாள். "ஆனால் ஒன்று.“ நிறுத்தினாள். "என்னது“? புருவங்களை உயர்த்தி வினவினான். "நீங்க பக்கத்தில் இல்லாததுதான் பெரிய குறை“. நாணத்தோடு கூறினாள். "காலம் கனியும்போது எல்லாம் சரியாகிவிடும். அதுவரை பொறுக்கத்தானே வேண்டும். அதோ ஐயா குளித்துமுடிந்து வாறார். நான்குளிச்சிட்டு வாறன்“. அறைக்குள் போக எழுந்தான். "ஐயா வந்ததைச் சொல்லவே இல்லையே“. சிரிப்போடு சொன்னாள். "நீங்க கேக்கல்ல. அதனால் சொல்லல்ல. கூறிக்கொண்டே சென்றான். எப்படி மேரி? நல்லாக இருக்கிறாயா? மேனியைத் துடைத்தவாறே கேட்டுக் கொண்டு டேவிட் வந்தார்.

புன்னகையோடு "நல்லாயிருக்கிறன். எப்ப வந்தநீங்க? மயூரி வரல்லையா“? வினவினாள். "மயூரி இல்லாம நாங்க வாறதா? வந்திருக்கா“. கூறிக்கொண்டு அறைக்குள் போனார். மேரி அடுக்களைக்குப் போனாள். அம்மா சமையலில் ஈடுபட்டிருந்ததை அவதானித்தாள். "அம்மா, யாரார் வந்தவங்க“. கேட்டாள். "மாமா, மயூரி, ஆனந்தன், மூன்றுபேரும் வந்திருக்காங்க. நீ குளிச்சிக்கொண்டிருந்தாய். அப்பா வேலைக்குப் போகும்போது வந்தாங்க. அப்பா கெதியா வருவதாகச் சொல்லிப் போய்விட்டார்“;. விபரமாகச் சொன்னார். "ஐயா குளிச்சிட்டு வந்திற்றார். தேநீர் குடுப்பம்“;. சொல்லிக் கொண்டே தேநீரைக் கோப்பையில் ஊற்றியெடுத்தாள். கொண்டுபொய்க் கதவில் தட்டினாள். டேவிட் வெளியே வந்தார். தேநீரைக் கொடுத்தாள். அவர் வாங்கிக் கொண்டு மண்டபத்தில் போயிருந்து குடித்தார்.

மெதுவாக அறையினுள் சென்றாள். மயூரி படுத்திருப்பதைப் பார்த்தாள். மெதுவாகப் போர்வையை விலக்கினாள். மயூரி உண்மையாகத் தூங்கி விட்டிருந்தாள். அப்படியே விட்டுவிட்டாள். மற்றவர்களைத் தட்டியெழுப்பி விட்டாள். எலிசபெத் தனக்குப் பக்கத்தில் மயூரி படுத்திருப்பதைப் பார்த்துச் சிரித்தாள். மரியா ஏஞ்சலையும் எழுப்பிக் கொண்டு வெளியில் வந்தாள். விறுவிறுவென்று குளித்து முடித்து வந்தார்கள். ஆனந்தனும் குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு மண்டபத்துள் வந்தான். மயூரி தானாகவே எழும்பமட்டும் காத்திருந்தாள். அதுவரை அம்மாவுக்கு உதவினாள். சாப்பாட்டு மேசை தயார். எலிசபத் அறிவித்தாள். சத்தம் மயூரியை எழுப்பி விட்டது. மயூரி எழுந்து வெளியில் வந்தாள். மேரிக்குச் சந்தோசம் பொங்கியது. "மயூரி வாங்க. சத்தமில்லாமல்தான் வருவீர்களா“? கேட்டவாறே அணைத்துக் கொண்டாள்.

"நினைத்தோம். வந்தோம்“. சிரித்தவாறே சொன்னாள். "சரி குளிச்சிட்டு வாங்க. சாப்பாடு ரெடி. மற்றவங்க காத்திருக்காங்க“. மேரி கூறினாள். "ஆரது மற்றவங்க..? அப்பாவும் அண்ணாவும்தானே. அண்ணா! அண்ணியின் பாட்டு எப்படி“? ஒரு போடு போட்டாள். "பாட்டா யார் பாடியது? எனக்குத் தெரியாதே“. ஆனந்தன் மறைக்கப் பார்த்தான். "அண்ணி பாடியதை நீங்களும்தானே கேட்டிங்க“. மேரிக்குத் தூக்கிவாரிப் போட்டது. "ஐயைய்யோ...இவள் மாட்டிவிடப் பார்க்கிறாளே....“ மனதுக்குள் புறுபுறுத்தான். "ஓ..அதுவா.. ஏதோ கேட்டமாதிரித்தான் இருந்தது. நல்லா விளங்கல்ல“. மழுப்பிவிட்டான். "அண்ணி நல்லாப் பாடுவா. கேட்டோம். தனக்குள் பாடுவது சந்தோசம்தான்“;. மயூரி கிளறிவிட்டாள். மேரி நாணத்தில் உறைந்து போனாள். "சரி மயூரி கெதியாக குளித்துவிட்டு வாங்க. பசிக்குது. சாப்பிடுவோம“;. மயூரியை இழுத்துக் கொண்டு போனாள்.

சற்று நேரத்தால் வந்தார்கள். சாப்பாட்டு மேசையில் அன்றைய நிகழ்ச்சித் திட்டம் தயாரானது. "அண்ணி! அண்ணாவின்ர வேலைவிசயத்தை அறிவித்தேனே. ஏன் பதில் போடவில்லை“? வழக்கினைத் தொடங்கினாள். 'பதில் எழுதினேன். அப்பாவிடம் கொடுத்தேன். ஆனால் அவர் தபால் பெட்டியில் சேர்க்க மறந்திற்றார். ஒருகிழமைக்குப் பிறகுதான் அவருக்கு நினைவு வந்தது. அதை என்னிடமே கொண்டு வந்து தந்திற்றார்“. என்றாள். மயூரி கலகலத்துச் சிரித்துவிட்டாள். "இப்போது அந்தக் கடிதம் எங்கே“? மயூரி தொடர்ந்து வினாவினாள். "என்னிடம் பத்திரமாக இருக்கிறது. சாப்பிட்டதும் தருகிறேன். சரியா? இப்போது சாப்பிடுங்கள்.“ என்றாள்.

"மாகிரட் கோயிலில் விசாரித்தீங்களா? அடுத்த மாதம் விசயத்த முடிக்கலாம் என்றிருக்கிறம். செபஸ்த்தியார் வந்ததும் கேட்டு முடிவெடுக்க வேணும்“;. டேவிட் பிரேரித்தார். "நாங்க பாதரிட்ட சொல்லிப்போட்டம். அவர் சரியெண்டு சொல்லிப் போட்டார். இன்னும் திகதி குறிக்கவில்லை. திகதியைக்குறித்தால் சரி“;. மாகிரட் தாங்கள் எடுத்த முயற்சிகளை விளக்கினார். "இண்டைக்குப் பின்னேரம் பாதரிட்ட எல்லாரும் ஒருக்காப் போவம் என்ன?“. மேரியைப் பார்த்து மயூரி சொன்னாள். "அதுக்கென்ன. போய்வருவம்“. சாப்பிட்டவாறே மேரி வழிமொழிந்தாள். ஆனந்தன் புன்னகைத்தான். சாப்பாடு முடிந்துவிட்டது.

டேவிட் தெருப்பக்கம் உலாப்போனார். கூடவே மரியாவும். ஏஞ்சலும் போனார்கள். ஆனந்தன் மண்டபத்தினுள் வந்தான். தொடர்ந்து மேரியும் வந்தாள். கதிரைகளில் இருந்து 'கரம்போட’; ஆடினார்கள். கரம்போட் ஆடினால் கதைப்பதற்கு வசதியாக இருக்கும். எலிசபத்தும் மயூரியும் சோடி சேர்ந்தார்கள். விளையாடினார்கள். எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. அதைத்தாண்டினால் அலுப்புத் தட்டும். மேரி கதைப்பதும், அம்மாவுக்கு உதவுவதுமாக இருந்தாள். இடைக்கிடை மயூரியும் அடுக்களைப் பக்கம் போய்வந்தாள். மயூரியைத் தொடர்ந்து எலிசபத்தும் சென்று வந்தாள். மயூரி போனதும் கதை தொடரும். "மேரி நான் என்ன செய்யவேண்டும்“? அவளைப் பார்த்தவாறே கேட்டான். "எதைப்பற்றிக் கேக்கிறீங்க“? அவள் கேட்டாள். "நாங்க எதைப்பற்றிக் கதைப்பது“? குனிந்தவாறே கேட்டாள். "நமது திருமணத்தைப் பற்றித்தான்“. பதிலிறுத்தான்.

"அப்பா இதப்பற்றிக் கதைப்பார். சொல்லிக் கொண்டிருந்தவர். வந்திருவார். அவரோடு சேர்ந்து கதைப்பமா“? மேரி பவ்வியமாகக் கூறினாள். "சரி அப்படியே செய்வம“;. ஆனந்தன் ஒத்துக் கொண்டான். "அதற்குமுதல், நான் சொல்வதைக் கேட்கவேணும். செய்வீங்களா“? வினவினான். "நீங்க சொன்னா நான் அதனை மீறமாட்டன். சொல்லுங்க. இனிமேல் நீங்க வாங்க போங்க என்ற மரியாதையெல்லாம் வேணாம். நான் உங்கட மேரியாகவே இருக்க விரும்புறன்.சொல்லுங்க“. நிதானமாகச் சொன்னாள். "வெள்ளியன்றைக்கு செட்டித்தெருக் கோயிலுக்குப் போவோமா? போய் கோயிலில் இருவரும் மாலை மாற்றிக் கொள்வோமா?“;. நம்பிக்கையற்றுத்தான் கேட்டான். "நீங்க சொல்வதை நான் தட்டமாட்டன். அதனைக் கேட்பேன். அதன்படி நடப்பேன். இனி நான் வேறு, நீங்க வேறு இல்லை. போவோம். நாம் சாகும்வரை பிரியாது ஒன்றாகவே இருப்போம்“;. கரம்போட் காயை அடித்தவாறே கூறினாள். ஆனந்தனுக்குச் சந்தோசம்.

மாக்கிரட் மயூரியிடம் ஆனந்தனின் சமயவிடயத்தைத்தான் ஆராய்ந்தார். "அதைப்பற்றிய கவலையை விடுங்கள். அதெல்லாம் சரி. இன்டக்குப் பாதரிடம் கேட்பமா“? மயூரி மாகிரட்டின் ஆலோசனையைக் கேட்டாள். அது சரியென்று பட்டது. மாகிரட் ஆமோதித்தார். வெளியில் போன டேவிட்டும் வந்தார். மயூரி தேநீர் தயாரித்துக் கொண்டு வந்தாள். எல்லோருக்கும் கொடுத்துத் தானும் குடித்தாள். "மேரி..என்ன உங்கட நண்பிகளைக் காணல்ல“. தேநீரைக் குடித்தவாறே கேட்டான். "அவங்க நேற்றுப் பயணம் போனவங்க. பின்னேரம் வந்திருவாங்க. ஏன் அவங்களச் சந்திக்க வேணுமா“? ஒரு சிரிப்போடு கேட்டாள். "அண்ணா! அண்ணியின் கதை எங்கேயோ போகுது“. சொல்லி விட்டு மயூரி சிரித்தாள். "மயூரி தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விடுவா“ மேரி கலகலத்துச் சிரித்தாள்.

செபஸ்தியார் வந்ததும் உடைகளை மாற்றி மேலைக் கழுவிக் கொண்டு வந்தார். பெரியவர்கள் ஒன்று கூடினார்கள். மாகிரட்டும் சேர்ந்து கொண்டார். நடக்கவேண்டிய விடயங்கள் பேசப்பட்டன. மே மாதத்தில் திருமணத்தை வைப்பதாக முடிவாகியது. மாலை உலாவந்தார்கள். விகாரமாதேவிப்பூங்கா, காலிமுகத்திடல் எனச் சுற்றிவந்தார்கள். தனது திட்டத்தை மயூரியிடம் சொல்லி விட்டான். அவளும் அதனை ஏற்றுக் கொண்டாள். வெள்ளிக்கிழமை வந்தது. சொன்னதுபோல் செட்டித்தெருக் கோயிலுக்குச் சென்றார்கள். ஐயரிடம் சொல்லி சிறிதாக பூசைசெய்வித்து அவரது ஆசியுடன் மாலையை மாற்றிக் கொண்டார்கள். மேரி ஆனந்தனின் கால்களில் வீழ்ந்து வணங்கினாள். "இந்த முருகன் சாட்சியாக இனி நான் உங்கள் சொந்தம்.“ என்றாள். அவளைத் தூக்கிநிறுத்தினான்.

"இன்பத்திலும் துன்பத்திலும் பங்குகொண்டு இல்லறத்தை நல்லபடி நடத்துவோம். நான் நினைத்தபடி நீ எனக்கு வந்து வாய்த்துள்ளாய். எதுவந்தாலும் பிரியாது வாழ்வோம்“ உணர்வு பொங்கக் கூறினான். இரகசியமாக நடந்த இந்தத் திருமணம் ஐந்து பேருக்கு மட்டும் தெரிந்திருந்தது. "அண்ணி உங்களுக்குப் பெரியமனது. ஒரு கிறிஸ்தவப் பெண் சைவக்கோயிலில் மாலை மாற்றுவதற்கு மனம் எவ்வளவு பக்குவப்பட்டிருக்க வேணும் என்பதை நான் உணருகிறேன். இது கலியாணம்தான். நீங்க வித்தியாசமான பிறவிதான்“;. மயூரி மேரியின் கண்களைப் பார்த்தவாறே கூறினாள். "உங்கட அண்ணன் எனக்காக நமது வேதத்தைப்படித்து ஞானஸ்தானம் பெற்றிருக்கிறார். அப்பா அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக நமது கோயிலில் தாலிகட்டச் சம்மதித்திருக்கிறார். நான் அவருக்காக இதையாவது செய்தேனே என்ற திருப்தி எனக்கேற்படுகிறது.“ விளக்கினாள். எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாள் எனது மனைவி. நெஞ்சுள் நினைந்து புளகாங்கிதம் அடைந்தான்.

.ஐந்து நாட்கள் சென்றதே தெரியவில்லை. கொழும்புக் கோட்டைப் புகைவண்டி நிலையம் மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கண்கள் கதை பேசின. இளமைக்காலம் பொன்னானது. இன்பம் கொட்டிக்கிடக்கும் காலம்தான் இந்த இளமைக்காலம். எத்தனை கற்பனை? எத்தனை கனவுகள்? வண்டி புறப்படும் நேரம். பிரிவு வரும் நேரம் நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்பது இலேசான செயலல்ல. "நமது கனவு மெய்படுமா“? மேரியின் வாயிலிருந்து முத்துக்களாக உதிர்ந்தன. கண்கள் கலங்கியிருந்தன. ஆனந்தன் தேற்றினான். "கனவுகள் மெய்பபட வேண்டும். மெய்ப்படும்.“; என்று இறைவனிடம் கையேந்துவோம். அவன் மெய்ப்பட வைப்பான.; மே மாதம் எல்லோர் முன்னிலையிலும் இருவரும் ஒருவராவோம“;. ஆனந்தன் அவள் காதுகளில் மெல்ல உறுதியளித்தான். வண்டி விசிலடித்துத் திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது. மேரி கற்பனைக் கனவில் மிதந்தாள்.


தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP