Thursday, May 6, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

3

இருள் பரவிக் கொண்டிருந்தது. இருளை விரட்டி மின்விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. இயந்திர கதியில் இயங்கும் மக்கள் கூட்டம் அசைந்த வண்ணமிருந்தது. வாகனங்கள் வருவதும் போவதுமாக இயங்கின. கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையம் பயணிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அடிக்கடி ஒலிபெருக்கிகள் அலறிக் கொண்டிருந்தன. சிங்களத்தில் எப்படி அறிவிப்பார்களோ அப்படியே தமிழின் மொழி பெயர்ப்பை சிங்களத்தில் எழுதி அரைகுறைத் தமிழில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். புகையிரத நிலையங்களில் ஒலிபரப்புச் சேவை வித்தியாசமானதாக இருக்கும். எந்த மொழியும் சரியாக உச்சரிக்கப் படாது. ஒரு ததிங்கிணத்தோம் மெட்டில் சொல்லுவார்கள். பயணிகள் மனதுக்குள் திட்டிக்கொள்வார்கள்.

"இரவு எட்டு மணிக்கு திருகோணமலைக்குப் புகைவண்டி புறப்படும்.“ அறிவிக்கப்பட்டது. இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் இருந்தன. ஆனந்தன் ஓடோடி வந்தான். மூன்றாம் வகுப்புப் பெட்டியில் தொற்றிக் கொண்டான். பயணங்களிலகூட வகுப்புவாதம் உண்டு. ஏழைகளும், உழைக்கும் வர்க்கமும் மூன்றாம் வகுப்பில்தான் செல்லமுடியும். வெயர்த்துக் கொட்டியது. ஒரு மூலையில் இருக்கை கிடைக்குமா என்று தேடினான். மூலை இருக்கை கிடைத்தால் தலைசாய்த்துச் சரிந்து கொள்ள வசதியாக இருக்கும். மூலை இருக்கைகளுக்குத்தான் போட்டி அதிகம். முந்தி வருபவர்களுக்கே மூலை இருக்கை கிடைப்பதரிது. இறுதி நேரத்தில் வருபவருக்குக் கிடைக்குமா? மூலை இருக்கை கிடைக்கவில்லை. ஒரு இருக்கையில் இடம் தென்பட்டது. மெதுவாக நகர்ந்தான். அந்த இருக்கையில் இருவர் இருந்தார்கள். மூன்றாவதாக அவன் அமர்ந்து கொண்டான். இருக்க இடமாவது கிடைத்ததே. நிம்மதிப் பெருமூச்சுப் பறந்தது. மணி ஒலித்ததும் புகைவண்டி புறப்பட்டது.

புகைவண்டி மருதானையைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. கையிலிருந்த சூட்கேஸ் பெட்டியைத் திறந்தான். அதனுள் இருந்து சில சஞ்சிகைகளை எடுத்தான். சூட்கேசை மூடி இருக்கையின் கீழ் வைத்தான். சஞ்சிகைகளை மேலோட்டமாகப் பார்த்தான். புகைவண்டி களணியைத் தாண்டிக் கொண்டிருந்தது. சஞ்சிகை திறந்தபடியே இருந்தது. யன்னல் வழியே எட்டிப்பார்த்தான். களணி நதியில் மின்விளக்குகளின் ஒளி சிதறிக்கொண்டிருந்தது. அந்தக் காட்சியில் மெய் மறந்தான். கல்யாணி நதி களணிநதியாகப் போய்விட்டதை யோசித்தான். 'பழையன கழிதலும் புதியன புகுதலுமா’ இவை? ஒரு காலத்தில் சோழப் பெருமன்னர்களும், பாண்டியர்களும் ஆட்சி செய்தார்கள்தான். அவர்கள் இலங்கையர்கள் இல்லை.

இங்குள்ள வளங்களைச் சுரண்டித் தங்கள் தாய்நாட்டை வளமாக்கினார்கள். இந்தியாவில் இருந்து துரத்தப்பட்ட விஜயன் ஆட்சியையே கைப்பற்றி ஆளும் அளவுக்கு பண்டைய மக்கள் இருந்துள்ளார்கள். இன்று இலங்கையிலேயே காலங்காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் நசுக்கப் படுகிறார்கள். ஆட்சியாளர்கள் மட்டுமல்ல சமயங்களும் வந்து புகுந்து கொண்டன. சிவபக்தனான இராவணன் ஆண்ட பூமி. இராமர்களின் பக்தர்களால் பறிபோயிற்று. மனதில் எண்ணம் தலைதூக்கியது. சிந்தனையில் ஆழ்ந்தான். பக்கத்தில் இருந்த பெரியவர் கைதை கொடுத்தார். “தம்பி திருகோணமலைக்கா போகிறீர்கள்“. சத்தம் வந்ததும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். சஞ்சிகையை மூடினான். அந்தப் பெரியவரைப் பார்த்தான். அவர் ஒரு புன்னகையோடு பதிலுக்காகக் காத்திருந்தார்.

“ஆமாம்“ என்றான். "நீங்கள்?“ வினா தொடுத்தான். "நாங்களும் திருகோணமலைக்குத்தான் போகிறோம்.“ என்றார். நாங்களும் என்றாரே. அப்படியானால் முன்னால் இருப்பவர்கள் அவரது குடும்பத்தவர்கள்தான்;. புரிந்து கொண்டான். ஒரு இருக்கையில் மூன்றுபேர் அமர்ந்து பயணிக்கலாம். ஆனால் இரவுப் பயணம் மிகக் கஸ்டமானது. அவரது பக்கத்தில் ஒரு மகள் இருந்தார். அவள்தான் கடைக்குட்டி. முன்னால் அவரது மனைவியும் இரண்டு மகள்களும் இருந்தார்கள்.

பெரியவர் "என்ன புத்தகங்கள்?“ என்றார். அவரிடம் மூன்றைக் கொடுத்தான். அவன் கையில் ஆனந்தவிகடன் இருந்தது. பெரியவர் ஒவ்வொன்றாகப் பார்த்தார். குமுதம், கற்கண்டு, கல்கி என அழகான அட்டைப்படங்களோடு அவரது கைகளில் புரண்டன. அவரது மகள்மார் ஒவ்வொன்றைப் பற்றிக் கொண்டார்கள். பெரியவருக்குப் புத்தகத்தில் அவ்வளவு நாட்டமில்லை. இடைக்கிடை கதை கொடுத்துக் கொண்டிருந்தார். பயணத்தில் கதைப்பது நல்லதுதான். பொழுதும் போகும். பயணமும் அலுப்பிருக்காது. “தம்பி! சொந்த ஊர் திருகோணமலையா? வினா பறந்தது. தலையை அசைத்து ஓமோம் சொன்னான். “நீங்கள.;“? ஆனந்தவிகடனைப் பார்த்தவாறே பதிலுக்கு அவனும் கேட்டான். நாங்கள் கொழும்பிலதான் இருக்கிறம். இப்ப திருகோண மலைக்குப் போகிறம்.“ என்றார்.

கதை தொடர்ந்தது. தனது பெயரைச் சொன்னார். அவன் காது கொடுத்துக் கேட்டான்.
“தம்பி பேராலய வீதி தெரியுமோ?“ இமைகளை உயர்த்தியவாறு அந்தப் பெரியவர் கேட்டார். "ஓம்“ பதில் சொன்னான். ஏன் இப்படிக் கேட்கிறார். ஒருவேளை இதுதான் திருகோணமலைக்கு அவரது முதற்பயணமோ? மனதினிலே நினைத்துக் கொண்டான்.
“ஓம். நல்லாத் தெரியும்.“ மீண்டும் பதிலளித்தான்.
“உங்களுக்கு மிஸ்டர் டேவிட்டைத் தெரியுமோ?“
“எந்த டேவிட் என்றால் சொல்லலாம்.“ அவன் பதிலளித்தான். “துறைமுகக் கூட்டுத்தாபனத்தில வேலை செய்கிறார். சிவப்பாக ஒல்லியாக இருப்பார்.“ பெரியவர் தொடர்ந்தார்.
“ நல்லா வெத்திலை போட்டு தமாசாகப் பேசுவார். அவரா?
“ஓமோம். அவர்தான்.“
“ நல்லாத் தெரியும். அவரது வீட்டுக்குப் போயிருக்கிறன். நல்ல மனிசன். அவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண்கள். இருவரும் வேலை செய்கிறார்கள். மற்றது பெண். அவர் படித்துக் கொண்டிருக்கிறார். பெயர் ஆன்மயூரி. நான் அடிக்கடி அவங்கட வீட்டுக்குப போறனான்.“

ஆனந்தனின் பதில் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக எதிரே மூலையிருக்கையில்; இருப்பவரின் மனதில் மலர்ச்சியைக் கிளறிவிட்டிருந்தது. தற்செயலாக நிமிர்ந்தவனின் கண்கள் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இரு விழிகளைக் கவனித்தான். அந்தப் பார்வை அவனது உள்ளத்தை ஊடறுத்துச் செல்வதை உணர்ந்தான். அவனது பார்வை பட்டதும் அந்த விழிகள் வேறுபக்கம் பார்த்தன. கடைந்தெடுத்த அழகான சிலையாக அவள் இருந்தாள். மொனாலிசாவின் சாயல். சாயல் என்ன? மொனாலிசாதான். கள்ளங்கபடமற்ற அந்த அழகுச் சிலிர்ப்பு. வசீகரப் பார்வை. பக்கம் திரும்பும்போது ஏற்றவாறு அசைந்து விழும் இரட்டைப்பின்னல். பிறை நெற்றியில் தொட்டுக் கொஞ்சும் சுருள் முடிகள். அவற்றை அடிக்கடி பின்னால் ஒதுக்கித் தள்ளும் தளிர்க்கரங்கள்.

மன்மதனின் கைகளின் வளைத்த வில்லொத்த புருவங்கள். அதன்கீழ் கயல்போன்ற நீண்டமடல்கள். அதில் பூட்டிக் குறிபார்க்கும் அம்புகளாய் கருநாவற் கண்கள். தக்காளிக் கன்னங்கள். வலக்கன்னத்தில் அழகுக்கு மெருகேற்றும் கருமச்சம். காண்பவரைக் கவரும் புன்னகை. ஆனந்தனைக் கவர்ந்தெடுக்கும் அழகுச் சிலையாக அவள் இருந்தாள். மங்கிய ரெயிலின் வெளிச்சத்தில் அவள் ஜொலித்தாள். ‚மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்.’ பாரதியின் கவிதைவரிகள் உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்து நாவழியே வந்து எட்டிப் பார்த்தன. அடக்கமான இந்தப் பெண் எனக்குக் கிடைத்தால்?; நான் அதிர்ஸ்டசாலிதான். மனதில் ஒரு கற்பனையை வளர்த்துப் பார்த்தான். சுகமாக இருந்தது.
அந்தக் கற்பனையைத் தகர்ப்பதுபோல் பெரியவர் தொடர்ந்தார்.
“தம்பி உங்கட பேரென்ன?
“ஆனந்தன்.“ சொன்னான். சற்று மௌனம் தொடர்ந்தது. அவனே பேசினான்.
"ஐயா! நீங்கள் மிஸ்டர் டேவிட் வீட்டுக்கு போகவேணும். சரி.
அவரை எப்படித் தெரியும் ?
"அவர் என்ர மனிசியின்ர தாய்மாமன். அவரைச் சந்தித்துக் கனகாலம். எங்களுக்குத் திருமணம் முடித்துவிட்டுப் போனார். பிறகு சந்திக்கவே இல்லை. இப்ப உறவைப் புதுப்பிக்கப் போறம்.“ பெரியவர் தொடர்ந்து பேசிக்கொண்டு போனார். அவரது மனைவி மார்கிரட் புன்னகையோடு காட்சியளித்தார்.
"அவர் ஸ்ரேசனுக்கு வருவாரா?“
"நாங்க போறதே அவருக்குத் தெரியாது. ஒரு அதிரடி சிகிச்சை மாதிரி கொடுக்கப் போறம்.“ சிரித்துக் கொண்டே கூறினார். அவரது பதில் ஆனந்தனைக் கவர்ந்தது.
"அப்படியா? சரி அவரது வீட்டைக் காட்டுவது எனது பொறுப்பு.“ஆனந்தன் பதிலளித்தான்.
"மார்கிரட்! உனக்கும்; தெரியாது. எனக்கும் தெரியாது. பார்த்தாயா? இந்தத் தம்பியை கடவுள்தான் அனுப்பியிருக்கிறார்.“ ஒரு புன்னகையோடு கூறினார். ஆனந்தன் தலை கவிழ்ந்து கொண்டான். புகைவண்டி கூவிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.

வண்டியின் குலுக்கல் புரட்டி எடுத்தது. பயணிகளைப் பேயாட்டம் ஆட்டிக் கொண்டிருந்தது. ஓவ்வொரு நிலையத்திலும் வண்டி நிற்பதும் புறப்படுவதுமாகச் சென்றது. பெரியவர் தூங்கி விழுவதும், கண்களைத் திறந்து பார்ப்பதுமாக இருந்தார். ஆனந்தன் அடிக்கடி ஓரக்கண்ணால் எதிர்மூலையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். ஓரவிழிகள் அவனை மேய்ந்தன. ‚தான் நோக்கில் நிலம் நோக்கும்.நோக்காக் கால் நிலம் நோக்கி மெல்ல நகும்’ திருக்குறளை நினைவு கூர்ந்தான். வாசுகியை இப்படித்தான் அனுபவித்திருப்பானோ? வள்ளுவனின் ஆராய்ச்சியையும், அனுபவத்தையும் மெச்சிக் கொண்டான். „ஏன் திருக்குறளில் காமத்துப்பாலை இறுதியில் வைத்தான?. சே.. என்ன முட்டாள்தனம். அவன் இறுதியிலா வைத்தான். அறம், பொருள், இன்பம் என்று நிறைவாகவல்லவா வைத்துள்ளான். அறவழி நின்று பொருள் தேடி, அதன்பின் இல்வாழ்க்கை வாழ்வதுதான் இன்பம் பயக்கும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கைதான் பயனுள்ள வாழ்க்கை.“ மனதினுள்ளே வினா விடைகள் முளைத்தெழுந்து மறைந்தன.

மாகோ சந்தி வந்து விட்டது. ரெயில்பெட்டிகளில் ஏறுவதும், இறங்குவதுமாக மக்கள் கூட்டம் திணறிக் கொண்டிருந்தது. ரெயில் பெட்டிகளுக்குள் வியாபாரம் நடத்துபவர்களின் ஒலி வான்முட்டியது. களைத்து வரும் மக்களுக்கு அது ஒரு சேவைதான். சேவையளிப்பதன்மூலம் தங்கள் வருவாயை பெருக்கிக் கொள்வது ஒரு நோக்கம். அது அவர்களுக்குத் தெரியாமலேயே பயனாளிகளுக்குச் சேவையாகப் போய்ச் சேர்ந்து விடுகிறது. பயணிகள் கைகால்களை நீட்டி, நிமிர்த்தி அசதி நீக்கவும் வசதியாக இருந்தது. பேரியவர் விழித்துக் கொண்டார். „மேரி! எந்த ஸ்ரேசன்..பார்“

„இது மாகோ ஸ்ரேசன்“
எதிர் மூலையில் இருந்து இசைக்கோலமாகப் பதில் வந்தது. தன்முன்னால் இருக்கும் தேவதையின் பெயரைத் தெரிந்து கொண்டான். அதில் தன்னைமறந்த சந்தோசத்தில் இருந்தான்.
„அப்பா! தேனீர் குடிப்பமா?“ தேனாய் இனிக்கும் குரல்.
„ஓம் .. „
இருக்கையின் கீழிருந்த கூடை இழுக்கப் பட்டது. அதற்குள் சுடுதண்ணீர் குடுவை இருந்தது. சில குவளைகளும் இருந்தன. யாவும் வெளியில் வந்தன. குவளைகளுக்குள் தேனீர்; ஊற்றப் பட்டது. முதற்குவளை பெரியவருக்குப் பரிமாறப் பட்டது. அதனை அவர் "தம்பி தேனீர் குடியுங்க“ஆனந்தனிடம் நீட்டினார்.
"தாங்க்ஸ் நீங்கள் குடியுங்கோ“ ஆனந்தன் மரியாதையாகச் சொன்னான்.

"அப்பா அதை நீங்கள் குடியுங்கோ. இதனை நான் அவருக்குக் கொடுக்கிறேன்.“ ஒரு குவளையை மென்கரங்கள் தாங்கி நீண்டது. இவ்வளவு நேரமும் கண்களால் கதையளந்த பெண் இப்போது அன்போடு நீட்டும் தேனீரை வாங்காது விடலாமா? அது அநாகரீகம். எனினும் "உங்களுக்கு ஏனிந்தச் சிரமம்.“? சொல்ல நினைத்தான். அவள் அதனைப் புரிந்து கொண்டதுபோல் "பரவாயில்லை. குடியுங்கள்.“ நீட்டினாள். "தம்பி என்ன யோசிக்கிறீங்க....குடியுங்க“ தமாசாய்ப் பெரியவர் உற்சாகப் படுத்தினார். வேறு வழியின்றி பெற்றுக் கொண்டான். குடிக்கும் போது மேரியையும் அவதானித்தான். தேனீர் அவளது தொண்டை வழியே செல்வதே ஒரு அழகுதான். ஏன் இவ்வளவு மென்மையைப் பெண்களுக்கு இறைவன் படைத்தான். குவளையில் இதழ்கள் மொய்த்து சத்தமில்லாது வாய்க்குள் இழுத்து விழுங்குவதே ஒரு கலைதான். மேரியின் பார்வை, அனுசரிப்பு, ஒரு புன்னகை என்நேரமும் குந்தியிருந்து வேடிக்கை காட்டும் அழகு. அன்பான தொனியில் அடக்கமாகப் பேசும் பண்பு. அனைத்தையும் அவன் இரசித்தான். அவன் தேனீரை அருந்தியவாறே கற்பனை உலகில் சஞ்சரித்தான். இவள் எப்படிப் பட்ட பெண். அவனது உள்ளத்தில் பெரியதொரு ஆராய்ச்சி நிகழ்து கொண்டிருந்தது.

திருகோணமலைக் கடற்கரை மக்களை நிரப்பி களிப்புற்றது. காற்று வீசி ஒரு கலகலப்பை ஏற்படுத்தியது. பெருமபுலவர் சிசேகரனாரின் அருமையான உரை நிகழ்ந்து கொண்டிருந்தது. காது கொடுத்துக் கேட்டான்.“ஆண் இந்த உலகில் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டுமானால் அதற்கு நல்லதொரு பெண்ணின் துணை வேண்டும். அதேபோல் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் துணை அவசியம் தேவை. அதனைத்தான் இல்வாழ்க்கை என்று நம்முன்னோர் அழைத்தனர். இல்வாழ்க்கை மூலம்தான் அறவாழ்க்கை வாழ்ந்து பிறவிப் பெருங்கடலைக் கடக்கலாம். துறவிகளை ஆதரித்து அவர்களுக்குத் துணை போகலாம். பரம்பரையை உருவாக்கலாம். பாரினில் நல்லனவற்றை நிலை நாட்டலாம்.

அவ்வாறு இவ்வுலகில் இல்வாழ்க்கை வாழ்ந்து உதாரண புருசர்களாகப் புகழேணியில் பூத்தவர்கள் பலர். திருவள்ளுவர், ஸ்ரீஇராமகிருஷ்ண பரமகம்சர், உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா காந்தி, போன்றோர்களது வாழ்க்கை உன்னதமாக இருந்ததற்கு அவர்களுக்கு வாய்த்த இல்வாழ்க்கைத் துணைகளே காரணம் என்பார்கள்.

திருவள்ளுவர் உலகமறை எனப் போற்றப் படும் திருக்குறளை உலகுக்கு அளித்தவர். வாசுகி அம்மையார் திருவள்ளுவரின் துணைவியாராவார். திருவள்ளுவர் திருக்குறளை எழுதுவதற்கு உந்துசக்தியாக விளங்கியவர் வாசுகி அம்மையார்;. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஓவ்வொரு அதிகாரத்திலும் 10 பாடல்கள் உண்டு. எல்லாமாக 1330 பாக்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப் பட்ட சொற்களால் ஆனவை. இரண்டு அடிகளில் ஏழு சொற்களில் சொல்லவேண்டியவற்றை சுருக்கி அழகாகக் கூறியுள்ளார். இவ்வாறு எழுதுவதற்கு உரிய சூழல் வேண்டும். அதனை வாசுகி அம்மையார் ஆக்கிக் கொடுத்தமையினாற்தான் வள்ளுவரால் எழுத முடிந்தது.; திருக்குறள் ஒரு வாழ்க்கைத் தத்துவ நூல். அந்த நூலில் வாழ்க்கை அனுபவத் தத்துவ முத்துக்கள் நிரவியுள்ளன. திருவள்ளுவர் குறள் ஊடாக இன்றும் வாழ்கிறார். வாசுகி மறைந்ததும் திருவள்ளுவர் ஆடிப்போய் விட்டார். அவர் வாசுகியின் பிரிவைத் தாங்காது தவித்தார். நெஞ்சுருகப் பாடினார். நினைந்து நினைந்து உருகினார். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கமான பிணைப்பின் மகத்துவத்தை என்னவென்பது.


ஸ்ரீஇராமகிருஷ்ண பரமகம்சர் அவர்கள் சற்று வித்தியாசமானவர். திருமணம் செய்தும் துறவியாக வாழ்ந்தவர். பெண்ணினுள்ளே சக்தியைக் கண்டவர். அன்னை சாரதா தேவி பரமகம்சரின் தேவைகளை நிறைவு செய்தார். ஆனால் அவர்களிடையே தாம்பத்திய வாழ்க்கை இருக்கவில்லை. சாரதாதேவியைப் பராசக்தியாகவே போற்றினார். அவரது துறவற வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்க வில்லை. மாறாக பரமகம்சரின் புகழ் ஓங்கச் செயற்பட்டார். அவரை உலகம் போற்றுகிறது.

மகாத்மா காந்தியின் வெற்றிக்குப் பின்னால் அன்னை கஸ்தூரிபாய் இருந்தார். அவர்களிடையே தாம்பத்திய உறவு இருந்தது. வாரிசுகள் உருவாகினர். ஆனால் அந்த வாரிசுகள் ‘சுயம்’ அற்றவர்களாக உருவாகினர். அன்னை கஸ்தூரிபாயால் பிள்ளைகளைச் செம்மையாக வளர்த்தெடுக்க முடியவில்லை. அதனால்; நாடு எதிர்பார்த்த சேவைகளை அவர்களால் கொடுக்க முடியவில்லை. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது அறிஞர்களது முடிவாகும்.

சில பெண்கள் பெண்ணுரிமைக்காகப் போராடும் போது தமது குடும்பப் பொறுப்புக்களில் இருந்து விலகிப் போவதைக் காண்கிறோம். ஆனால் பெண்ணுரிமை என்றால் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் சமமான பங்கு கொண்டு ஆணுக்குச் சமமாக ஈடுகொடுத்து அவனையும் அணைத்துக் கொண்டு பிறவிப் பெருங்கடலைக் கடக்க வேண்டும். அப்படியான பெண்ணையே பெருந்தகைப் பெண் எனலாம். இந்தவகையில் எனது நாயகியாக இப்பெண்;, சிறந்த குடும்பப் பெண்ணாய், இல்லத் தலைவியாய், உன்னதமான தாயாய், கணவனைப் போற்றும் உத்தமியாய், சமூகசேவையில் தன்னை அர்ப்பணித்து, அநாதைச் சிறார்களுக்கு அடைக்கலம் தரும் பெண்ணாய், அபலைப் பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் தீபமாய், முதியோர்களையும் காப்பாற்றும் ஏழை பங்காளியாய் விளங்கி வாழ்வாளா? இவளைப் பெருந்தகைப் பெண் என அழைத்தல் சாலப் பொருத்தமானது போல் தெரிகிறது. இத்தகைப் பெண்ணையே,

‘தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகை சான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’.

என வள்ளுவர் பெருமையோடு கூறியிருக்கிறார். ஓரு பெண் தான் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும். இல்வாழ்க்கை எனும் அதிகாரத்தில் வள்ளுவர் இதனை அழகாகச் சொல்லி இருக்கிறார். இந்த இல்வாழ்க்கைக்குச் சில வரையறைகள் உண்டு. அந்த வரையறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை. பண்டைமாற்றுப் பொருளாதார அமைப்பில் இல்லற வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டல் சிறப்பாக ஆணிடமே ஒப்படைக்கப் பட்டிருந்தது. இல்லறத்தை மாண்புடையதாக ஆக்கிக் கொள்ளும் பொறுப்புச் சிறப்பாகப் பெண்ணிடம் இருந்தது. பெண் உயர்ந்த இடத்தில் வைக்கப் பட்டுள்ளதை இங்கு நோக்கலாம். வருவாயை அறிந்து அதற்கேற்பக் குடும்பத்தைக் கொண்டு செல்லும் பக்குவம் உடையவளாகப் பெண் கருதப் பட்டாள். அந்த ஆற்றல் பெண்களிடம்தான் உண்டு. அதனாலேயே வள்ளுவர் வாழ்க்கையின் துணையாகப் பெண்ணை உயர்த்தியுள்ளார்.

‘மனைத் தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’.

இவ்வாறு பெண்ணின் பெருமைகளை வள்ளுவர் அடுக்கிக் கொண்டே சென்று ஒரு உச்சக் கட்டத்தைக் காட்டுகின்றாரே. அது எப்படி? அதனைத்தான் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்று முடித்து விடுகிறார். ஒரு பெண் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தால், ‘மழையே! பெய்’ என்று சொன்னால் மழை பெய்யும் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். எனப் புலவர் பேருரை நிகழ்த்தினார். புலவர் சிவசேகரனாரிடம் பாடம் படித்தவன். அவரது சொற்பொழிவுகளைக் கேட்டு ரசிப்பவன் ஆனந்தன். அவனது கண்கள் மூடியிருந்தன. "என்ன நித்திரையா? தேநீரைக் குடித்து விட்டு நித்திரை கொள்ளலாமே“? "நித்திரை இல்லை. ஒரு அற்புதமான கற்பனை“. புதிலளித்துத் தேநீரை ஒரு மிடர் உள்ளிழுத்தான். சுவைத்தது. மௌனம் தொடர்ந்தது.

தொடரும்..

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP