Tuesday, May 4, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

2

“குட் ஆப்ரநூன். மாலை வணக்கம்” ஒரு முறுவலை வீசிவிட்டுக் கூறினான். “கான் ஐ ஹெல்ப் யூ பிளீஸ். உங்களுக்கு நான் உதவலாமா?” மிகப் பௌவியமாக ஆனந்தன் கேட்டான். சிப்பாய்களைக் கைகளால் விலக்கியவாறு கப்ரன் செனிவரத்ன முன்னே வந்தான்.
“மே..கத்தாவ எப்பா. ஓகொல்லோ கௌத? இந்தக் கதையெல்லாம் வேண்டாம். நீங்கள் எல்லோரும் யார்”? கப்ரன் கேட்டான். ஸ்ரீலங்கா அரசு சிங்கள இளைஞர்களையே இராணுவத்தில் சேர்த்துள்ளது. சிறுபான்மையாக சில முஸ்லிம் இயைஞர்களையும் உள்ளீர்த்துள்ளனர். சிங்களம் ஆட்சி மொழி என்பதனை வலியுறுத்தி சிங்களத்திலேயே கடமையாற்ற ஏற்பாடு செய்துள்ளனர். மேலிடம் தொடக்கம் அடித்தளம்வரை உள்ள அனைத்து அலுவலர்களும் சிங்களத்தில் கையெழுத்திடும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தியிருந்தனர். அது இன்றுவரை கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழும் அரசகரும மொழி என்று கூறினாலும் நடைமுறையில் அது பேணப்படுவதில்லை. இதற்கு வதிவிலக்காக தமிழர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது கௌரவமாகக் கருதப்படுகிறது. ஒரு தமிழன் தனது கையொப்பத்தினை தமிழில் இன்றுவரை இடுவதில்லை. அனைவரும் பாரதி கூறியதுபோல் நடிப்புச் சுதேசிகள்தான். ஆனந்தன் மண்டபக் கதவுகளை அகலத் திறந்து விட்டான். அவர்களை அழைத்தான். “கம் இன். சிற் டவுண் பிளீஸ்.” கதிரைகளைக் காட்டி அவர்களை அமரும்படி கேட்டுக் கொண்டான். “நாங்கள் கல்விப் பணி;ப்பாளர்கள். பரீட்சை நடத்துகிறோம். விடைத்தாள் பொதிகளை ஒப்படைத்து விட்டு இப்போதுதான் வந்தோம்” ஆங்கிலத்தில் ஆனந்தன் கூறினான்.

கப்ரன் செனிவரத்னவுக்கு ஆங்கிலம் தெரியும். எனினும் அவனும் சிங்களத்தில்தான் கதைத்தான். வேட்டையாட வந்த இடத்தில் மரியாதை. அவர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. சிப்பாய்கள் ஆளையாள் பார்த்துக் கொண்டனர். “இராணுவத்தைக் கண்டால் பயங்கரவாதிகள் சுட்டுவிட்டு ஓடுவார்கள். மிகக்கவனமாகப் பதுங்கி, ஆயத்தம் செய்து பிடிக்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். அவர்களை நம்பவே கூடாது.” பயிற்சியின் போது வழங்கப்பட்ட அறிவுரைகள் அவை. சிப்பாய்களுக்கு ஏமாற்றம். சுற்றி வளைத்து மிகஅவதானத்தோடு வந்தால் இப்படியொரு வரவேற்பா? அந்தக் கப்ரனுக்கு அதிர்ச்சி. தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். “மே.. ஆனந்தன் கௌத? ஆனந்தன் யார்”;? கப்ரன் கேட்டான்.

“வெல். யேஸ்.. இற்ஸ் மி. நான்தான் ஆனந்தன். டிப்பியூட்டி டிறெக்டர் ஒப் எடியுகேசன். பிரதிக்கல்விப் பணிப்பாளர்;” ஆனந்தன் விடையளித்தான். ஆனந்தனை உற்றுப் பார்த்தான். “ஆனந்தனைப் பிடித்து வா. மிகப்பயங்கரமான பயங்கரவாதி. முரட்டு ஆசாமி. மடக்கிப் பிடிக்க வேண்டும்.” ஆனந்தனை அந்த மேலதிகாரியும் இதுவரை நேரில் பார்க்வில்லை. வாய்க்கு வந்தபடி அவனது மேலதிகாரி கட்டளை இடடிருந்தான். கப்ரன் செனிவரத்தின உள்ளத்தில் பெரும் போராட்டம். அவர் கூறிய கில்லாடி எப்படி இருப்பான்.? தனது மேலதிகாரியை நினைத்தான். “சேர் ஆனந்தன் எப்படி இருப்பான்.” கப்ரன் செனிவரத்ன கேட்டான். “கறுத்து உயரமாக இருப்பான். குறும்தாடி வைத்துள்ளான். படு கில்லாடி. துப்பாக்கியை லாவகமாகக் கையாளுவான். மிகக் கவனம்.” தான் எதிரிகளைக் கற்பனையில் எவ்வாறு பார்த்தானோ அவ்வாறே அந்த அதிகாரி கப்ரனுக்கு கூறிவைத்தான். உண்மையில் அவன் கண்டதே இல்லை. தனது உயரதிகாரி கூறியவற்றுக்கு எதிர்மாறாக இருக்கிறதே. மேலதிகாரி கூறிய ஆனந்தன் கறுப்பு. உயரமானவன். எண்ணிப் பார்த்தான்.

ஆனந்தனை உற்றுப் பார்த்தான். “இவன்தானா அவன். இல்லையே. இவனுக்குச் சிவந்த மேனி. இவன் அவர் கூறியது போல் உயரமில்லையே. முரட்டுத் தன்மையும் இல்லையே. மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறான். மிகச் சாதுவாக இருக்கிறான். அவன் தோற்றத்திலேயே பண்பாடு விளங்குகிறது. இவன் உயரதிகாரியாக அரசாங்கத்தில் கடமை செய்கிறான். அதுவும் கல்விச் சேவையில். எதனை நம்புவது.?” அவர்களால் நம்ப முடியவில்லை. அந்த இராணுவக் கப்ரனுக்குச் சந்தேகம். மேலதிகாரியின் கட்டளையை நிறைவேற்றியாக வேண்டும். தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். மீண்டும் அவனே தொடர்ந்தான்.

“ மே .. ஆனந்தன் கௌத. மட்டக் கியான்ட. கூ இஸ் ஆனந்தன்.? பிளீஸ் ரெல் மி” கப்ரன் செனிவரத்ன வாயிலிருந்து ஆங்கில வார்த்தைகள் வந்தன. ஆனந்தன் புன்னகைத்தான். ஆங்கிலத்தில் “ நான்தான் ஆனந்தன்.” ஆணித்தரமாகக் கூறினான். தனது அடையாள அட்டையைக் காட்டினான். கப்ரன் செனிவரத்னவுக்கு தலை சுற்றியது. வேறு வழியில்லாது வாகனத்தில் ஏறுமாறு உத்தரவிட்டான். ஆனந்தன் ஏறிக்கொண்டான். வாகனம் திரும்பியது. செல்வம் கப்ரனிடம் ஓடி வந்தார். அவரது கண்கள் சிவந்திருந்தன. கோபம் ஒருபக்கம். துயரம் ஒரு பக்கம். “ஏன் அவரைக் கூட்டிப் போறியள். டு யூ ஹாவ் எனி அறஸ்ற்; வாரண்ட்.” இந்தக் கேள்வி கப்ரனைத் தாக்கியது. பெரும்பான்மை மக்களின் ஆட்சியில் இவர்களது கேள்விக்கு இடமில்லை. சிறுபான்மை மக்கள் வெறும் புழுக்கள். அடிமைகள் என்ற நினைப்பு. அதனால் அவசரகாலச் சட்டத்தை அமுலாக்கம் செய்தனர்போலும். அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “மே நாக்கியோ கட்ட வாகென இன்ர. ஏய் கிழவா வாயை மூடிக் கொண்டு கிட”. அவன் அதட்டலோடு சத்தமிட்டான். “செல்வம் பேசாதிருங்கள். நான் போய் வாறன்.” ஆனந்தன் கைகாட்டினான். செல்வம் செய்வதறியாது தடுமாறினார். அவரது கண்கள் குளமாயின. வாகனம் வீர் என்று விரைந்தது.

மழை பொழிந்த வண்ணம் இருந்தது. மக்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். இராணுவ வாகனத்தைக் கண்டு ஒதுங்கினார்கள். வாகனத்தினுள் செல்பவர்களைப் பார்ப்பதற்கு அவர்களுக்குத் தைரியம் கிடையாது. ஆனந்தனை யாரும் கண்டு கொள்ளவில்லை. வாகனம் படைமுகாமுக்குள் நுழைந்தது. ஈரற்பெரியகுளம் இராணுவ முகாம் பரந்திருந்தது. அது வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும்; எல்லையாக உள்ளது. அது சிங்களச் சிப்பாய்களின் சாம்ராச்சியம். இராணுவ வாகனங்களின் இரைச்சல். போவதும் வருவதுமாக அசைந்தவண்ணம் இருந்தன. ஆனந்தன் வாகனத்தில் இருந்து இறக்கப் பட்டான். அவனைச் சூழ்ந்து துப்பாக்கிகளுடன் இராணுவச் சிப்பய்கள். பெரிய பயங்கரவாதியைப் பிடித்த சந்தோசம் அவர்களுக்கு. ஆனந்தனைப் பார்ப்பதற்காகப் பல சிப்பாய்கள் எட்டிப் பார்த்தார்கள். ஆனந்தனுக்குச் சிங்களம் தெரியும். ஆனால் சரளமாகப் பேசவராது. சிங்களம் புரியாதவனாகவே காட்டிக் கொண்டான். சிப்பாய்கள் பேசிக்கொண்டார்கள். “பெரிய புலியைப் பிடித்துவிட்டீர்கள். எப்படி முடிந்தது?” ஆச்சரியத்தோடு கேட்டார்கள். “அதுதான் மச்சான் நம்ம கெட்டித்தனம்.” பிரமாதமாகப் புளுகினான் ஒருவன். “மச்சான் இவன் புலியில்ல. எலி. இவனை ஏன்பிடிச்சாங்கள். பாவம்டா.” அனுதாபத்தோடு இன்னொருவன் கூறினான்.

“ஏய். கோப்ரல்.. பொல்லாத புலி இது. இப்படித்தான் இருக்கும். தெரியுமா”? வேறொரு சிப்பாய் உளறினான். கப்ரன் செனிவரத்ன முன்னால் நடந்தான். சிறிய கட்டிடம் வந்தது. அதன் வாசலில் ஹேமசிறி நின்றான். கப்ரனைக் கண்டதும் சலூற் அடித்தான். “மே சார்ஜன் ஹேமசிறி ..மெயாவ பாரகண்ட”. கப்ரன் செனிவரத்ன ஆனந்தனைப் பொறுப்பெடுக்கும்படி கட்டளையிட்டான். ஹேமசிறி திறப்புகளுடன் வந்தான். கையில் சில பத்திரங்களையும் கொண்டு வந்தான். அவற்றில் கப்ரன் கையெழுத் திட்டான். இரும்புக் கதவைத் திறந்தான். அது கிறீச்சிட்டுத் திறந்து கொண்டது. ஹேமசிறி கப்ரனைப் பார்த்தான். கப்ரன் ஆனந்தனைக் கைகாட்டி அழைத்தான். அவன் வந்தான். உள்ளே போகுமாறு கட்டளை வந்தது.

ஆனந்தனை அந்த அறையினுள் தள்ளி விட்டார்கள் அவன் உள்ளே நுழையும்போது பின்னாலிருந்து உதைத்தார்கள். ஆனந்தன் இதனை எதிர்பார்க்கவில்லை. எதிரேயிருந்த சுவரில் போய் விழுந்தான். தாமாகவே கைகள் சுவரிலிருந்து அவனைக் காப்பாற்றின. அவன் திரும்புமுன் அறை அடைக்கப்பட்டது. பெரிய பூட்டினால் பூட்டப்பட்டது. ஆனந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடல் நடுங்கி நொந்தது. அவன் கண்கள் சுவர்களை நோட்டம் விட்டன. எங்கும் ரத்தக்கறை படிந்திருந்தது. பிணவாடை அடித்தது. ஏழடி நீளமும் ஏழடி அகலமும் கொண்ட காவலறை அது. காற்று உட்புக முடியாதபடியான வடிவமைப்பு. இரண்டரையடி அகலத்திலான இரும்புக் கம்பிகள் போட்ட கதவு. அதன் உயரம் ஐந்தடி. தூசிநிறைந்து அசுத்தமாக இருந்தது. சொல்லப்போனால் அது ஒரு இருட்டறை. மெல்ல இருள் பரந்தது. நேரம் மெதுவாகவே நகர்ந்தது. அடிக்கடி சிப்பாய்கள் வந்தார்கள் எட்டிப்பார்த்தார்கள். பல்லைக் கடித்துக் கெட்ட வார்த்தைகளால் சிங்களத்தில் ஏசினார்கள்.

நேரம் நகர்வது கடினமாக இருந்தது. அவனது உள்ளத்தில் நாளை நடைபெறவிருக்கும் பரீட்சையே நிறைந்திருந்தது. எப்படியாவது பரீட்சை நடைபெற வேண்டும். ஏழை மாணவர்கள் பாதிக்கப் படக்கூடாது. காவலுக்கு நின்ற சிப்பாயை அழைத்தான். அவன் பல்லைக் கடித்தவாறே “மொக்கத்த”? “என்ன” என்று கேட்டான். நாளைய பரீட்சை பற்றித் தெரிவித்தான். அவன் பதில் கூறாது போய்விட்டான். கம்பி எண்ணுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இதுதான் அவனது முதல் அனுபவம். கம்பிகளைப் பிடித்தவாறு வாசலையே பார்த்திருந்தான். எங்கும் கும்மிருட்டு. அறையினுள் இருளாகவே இருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது. நிலம் ஈரமாகக் கசிந்திருந்தது. நுளம்பின் விளையாட்டு. அவை பறந்து காதுகளில் ரீங்காரம் செய்தன.

சரியாக மாலை ஏழரை மணியிருக்கும். சிப்பாய்கள் சிலர் வந்தனர். ஒருவன் பூட்டைத் திறந்தான். அது கிரீச்சிட்டுத் திறந்து கொண்டது. “மே எலியட்ட என்ர” வெளியில் வருமாறு பணித்தான். ஆனந்தன் கையில் அவனது தினக்குறிப்பேடும் பேனாவும்தான் இருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டான். சிப்பாய்கள் புடைசூழ ஆனந்தன் நடந்தான். அவர்களது கைகள் துப்பாக்கிகளை ஏந்தியிருந்தன. எச்சரிக்கையுடன் நடந்தார்கள். நாளை பரீட்சை. அதனால் எப்படியும் விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சென்றான். நூறு மீற்றர் தொலைவில் பெரிய கட்டிடத் தொகுதி இருந்தது. அதற்குள் நுழைந்தார்கள். பெரியதொரு மண்டபம். அதனைத் தொடர்ந்து இரண்டு அறைகள். அந்த மண்டபத்தில் இரண்டு மேசைகள் கிடந்தன. நான்கு கதிரைகளும் தென்பட்டன.

மெல்லிய பச்சை வெளிச்சம் மண்டபத்துள் பரவியிருந்தது. மண்டபத்துள் ஆனந்தன் நின்றான். ஆனந்தனைச் சூழ சிப்பாய்கள் நின்றார்கள். அவனை நோக்கி மூன்றுபேர் வந்தார்கள். முன்னால் வந்தவனைக் கண்டதும் நின்றவர்கள் சலூற் அடித்தார்கள். அவன்தான் இவர்களுக்கெல்லாம் பெரியவன் போல் தெரிந்தது. ஆனந்தனைக் காட்டி ஏதோ சொன்னார்கள். அவன் ஆனந்தன் பக்கம் வந்தான். அவன் வரும்போதே ஆனந்தன் “குட் ஈவினிங்” என்றான் ஒரு முறுவலோடு. பதிலுக்கு அசட்டுச் சிரிப்பு மட்டும் தெரிந்தது. மேசைமேல் ஏறி இருந்தான். ஒரு கதிரையைப் பற்றினான். பக்கத்தில் இழுத்து அதன்மேல் காலொன்றை ஊன்றினான். மேசைமேல் வசதியாக இருந்தான். ஆனந்தனும் ஒரு அரசாங்க உயரதிகாரி. இந்த இராணுவ அதிகாரியும் உயரதிகாரிதான். இருவரும் பல்கலைக்கழக பட்டதாரிகள். ஆனாலும் இராணுவ அதிகாரி காரமாக இருந்தான். பெரும்பான்மை இனத்துவ மேலாதிக்கம் அவனிடம் தெரிந்தது. அவனிடம் மரியாதை என்பதே இல்லை. சிங்களத்தில் மட்டுமே உரையாடினான்.

“ நம மொக்கக்த? உன்ர பேரென்ன”? மேலதிகாரியின் குரல்.
“ஆனந்தன்” பெயரைக் கூறினான். “சரி. உன்னை விடுகிறேன். உண்மையை ஒப்புக்கொள்”. அந்த இராணுவ அதிகாரி இப்படித்தான் தொடங்கினான். ஆனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் எதனைக் கேட்கிறான்.

“எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதைப்பற்றிக் கேட்கிறீர்கள். சொன்னால் விளக்கமாகக் கூறுகிறேன்”. என்றான். அந்த இராணுவ அதிகாரி அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். ‘தமிங்களத்தில்’; சொன்னான். ‘தமிங்களம்’ என்பது இங்கே தமிழ்கலந்த சிங்களம். “அடோவ் செய்வதையெல்லாம் செய்து கதையளக்கிறது.? “மே கப்ரன்! மெயா மொனவத கரே. கியான்ட. கப்ரன். இவன் என்ன செய்தவன்? சொல்.” என்றான். கப்ரன் செனிவரத்ன தனது குறிப்புப் புத்தகத்தை விரித்தான். சிங்களத்தில் உளறிவைத்தான். “ஏய் நீ புலிகளுக்குச் சல்லி சேர்த்து கொடுத்தது. மீற்றிங் நடத்தினது. சாப்பாடு கொடுத்தது. கப்ரன் சரியாக சொல்லியிருக்கிறது. புரியுதா? உண்மையை ஒத்துக்கொள்.” அந்த அதிகாரி அடுக்கிக் கொண்டு போனான். ஆனந்தனுக்குச் சிரிப்பு ஒருபுறம். வேதனை இன்னொரு புறம். கனவிலும் நினைக்காத வற்றைக் கூறுகிறானே? இவனெல்லாம் கற்றவனா? கல்வி என்பது இதுதானா?

கல்வி என்பது என்ன? சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுதானே? நிலையில்லா வாழ்க்கையில் நல்லனவற்றைச் செய்வதுதானே?. ஆனந்தன் கண்கள் சிவந்தன. கண்ணீர் பொங்கியது. ஆத்திரம் உடலை உலுக்கியது.“வட் நொன்ஸன்ஸ். என்ன இது.? ஐ ஆம் ஏ டிப்பியூட்டி டிறக்ரர் ஒவ் எடியுகேசன். நான் ஒரு பிரதிக் கல்விப் பணிப்பாளர். உங்களைப்போல் நானும் ஒரு உயர் அதிகாரி. என்னிடம் இப்படிக் கேட்கலாமா? வேதனையோடு ஆங்கிலத்தில் கூறினான். அந்த அதிகாரி ஆணவத்தோடு எழுந்தான். “அப்ப நீ உண்மை சொல்ல மாட்டாய். கதிரையைக் காலால் உதைத்து எழுந்தான். “மே சார்ஜன், மெயாட்ட கொந்த பாடமக் தெமு” கூறி வெளியில் சென்றான்.

அவ்வளவுதான். சுற்றிநின்ற சிப்பாய்கள் சாடினார்கள். ஆனந்தனின் உடலில் அடி விழாத இடமில்லை. கீழே சுருண்டு விழுந்தான். எப்படி இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டான். தமிழனாய் இந்த நாட்டில் பிறந்தது அவன் செய்த குற்றமா? கல்விக்காகத் தன்னையே அர்ப்பணித்துச் சேவையாற்றும் உயர்அதிகாரிக்கு ஸ்ரீலங்கா அரசு கொடுக்கும் பரிசு இதுதானா? அவன் மனம் கலங்கியது. அவன் கண்விழித்து நிமிர்ந்தபோது மீண்டும் அந்த உயர் அதிகாரி உள்ளே வந்தான். அவன் இப்போது சீருடையில் இல்லை. அரைக்காற் சட்டையும் ரீ சேட்டும் அணிந்திருந்தான். ஆனந்தனை நோக்கி வந்தான். ஆனந்தன் வெறும் தரையில் கிடந்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. தலையை நிமிர்த்திப் பார்த்தான். அதிகாரி கதிரையை இழுத்து ஆனந்தன் பக்கத்தில் இருந்தான். “ஹலோ.. மிஸ்டர்.. உண்மையை ஒத்துக் கொள். இதில கையெழுத்துப் போடு”. தாளை எடுத்து நீட்டினான். அந்த அதிகாரியின் கண்கள் சிவப்பேறி இருந்தன. மதுவின் மணம் வீசியது. ஆனந்தன் தாளைப் பார்த்தான். தனிச்சிங்களத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. ஆனந்தனுக்கு ஆத்திரம் பொங்கியது.

“ஆர் யூ அன் எடியூகேற்றற் ஒவ்பிசர். இஸ் திஸ் த வே யூ ரீற் அன் ஒவ்பிசர்?” ஆனந்தன் வேதனையோடு கூறினான். அது அந்த அதிகாரிக்கு வெறியைக் கூட்டியது. “அடோவ்.. கனக்கக் கதைக்கிறாய் நீ. பற தெமழ. நீதான் சரியான கொட்டியா. கிழட்டுப் புலி. உன்ன சும்மா விடமாட்டம். மே சார்ஜன்! புட் கிம் டவுண். விமட்ட தாண்ட” கட்டளை பிறந்தது. ஆங்கிலம், சிங்களம், அரைகுறைத்தமிழ் கலந்து அதிகாரி பேசினான். அந்த சார்ஜன் ஆனந்தனை அலக்காகத் தூக்கிக் கீழே போட்டான். ஆனந்தனின் முதுகுப்புறம் தரையில் அடிபட்டது. அவன் எதிர்பார்க்காதது நடந்தது. ஒரு கட்டுமஸ்த்தான சிப்பாய் வந்தான். ஆனந்தனின் நெஞ்சில் குந்தி அமர்ந்தான். ஆனந்தனின் கைகளைச் சிப்பாய் இழுத்தான். தனது இரண்டு முளங்கால்களுக்குள் மடக்கி இறுக்கினான். மேசையொன்று நகர்த்தப்படும் சத்தம் கேட்டது. ஆனந்தனின் கால்கள் இழுத்து உயர்த்தப் பட்டன. பாதங்கள் இரண்டும் மேசையின் விளிம்பைத் தொட்டன. குதிநரம்பு விளிம்பில் பதிந்திருந்தது. சிப்பாயின் முதுகுப்புறம் ஆனந்தனுக்குத் தெரிந்தது. அவன் நெஞ்சு வலித்தது.

சிப்பாயின் இரண்டு முரட்டுக் கைகளும் ஆனந்தனின் இரு கால்களையும் இறுக்கிக் கெட்டியாகப் பிடித்தன. இரண்டு சிப்பாய்கள் இருபுறமும் நின்றார்கள். அவர்களது கைகளில் மணல் நிறைத்த ‘எஸ்லோன் பைப்’ இருந்தன. ஆனந்தனின் முகம் மட்டுமே அசைந்தது. கைகள் சிப்பாயின் கால்களுள் சிக்கியிருந்தன. யோகாசனப் பயிற்சி நிலையில் ஆனந்தன். அந்த அதிகாரி ஆனந்தனின் முகத்துக்கு அருகே கதிரையில் இருந்தான். “இப்ப சொல். உண்மையை ஒத்துக் கொள்கிறாயா? இல்லையா?” ஆனந்தனுக்கு மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. சேர்! ஐ ஆம் இன்னசன்ற். எனக்கு ஒன்றுமே தெரியாது. நம்புங்கள்.” ஆங்கிலத்தில் கூறினான்.

அந்த அதிகாரி ஆணவமாக எழுந்தான். “காப்பாங்.. அடியுங்கள்.” கட்டளையிட்டான். எழுந்து அப்பாற் சென்றான். வேட்டை நாய்களுக்கு விருந்து. காத்திருந்த சிப்பாய்கள் விளையாடினார்கள். ‘எஸ்லோன் பைப’; ஆனந்தனின் பாதங்களை முத்தமிட்டன. அடிமேல் அடி. ஒவ்வொரு அடியும் உச்சந்தலையில் உறைத்தது. காய்ச்சிய இரும்புக் கம்பியால் சுடுவதுபோல் சுட்டது. ஒவ்வொரு அடிக்கும் கைவிரல்கள் இறுக்கி மூடி விரிந்தன. தலை அரை வட்டத்தில் மின்விசிறியாக ஆடியது. கால்கள் மரத்து விட்டன. குதிகால் நரம்புகளை மேசை விளிம்பு வெட்டியது. தோல் கிழிந்து இரத்தம் கசிந்து கீழ் நோக்கி வழிந்தது. கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாய்தடுமாறி புலம்பியது. உடலெங்கும் வெயர்த்து மூச்சுத்தடுமாறி …மரண அவஸ்த்தையில்.. திணறி மயக்கம் வந்தது. மயங்கிவிட்டான்.

அறியாத உலகத்தில் அந்தரத்தில் பறந்து விழுவதுபோன்ற உணர்வில் வாய் அரற்றியது. உடல் அசைவற்றுக் கிடந்தது. மனிதனாகப் பிறப்பது அரிதாம். அதிலும் அரிது கூன், குருடு நீங்கிப் பிறப்பது அரிதாம். ஆனால் அரிதான மனிதப்பிறவியில் இப்படி ஒரு இக்கட்டான கேவலமான அவல நிலையா? துன்பங்களையும் துயரினையும் நீக்கி மனிதன் உன்னத நிலையை அடையவேண்டும் என்பதற்காகத்தானே புத்தபெருமானும், ஜேசு, நபிகள் போன்றோரும் அவதரித்துப் போதித்தார்கள். புத்தனைப் பின்பற்றும் மனிதர்களா இப்படியான ஈனச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த அடிவதை வேதனையின் மத்தியிலும் ஆனந்தனின் மனதில் கேள்விகள் எழுந்தன. விடைகாணமுடியாது அலைகளாக விரிவடைந்து சென்று கொண்டிருந்தன. கனவுலகில் சஞ்சரித்தான். ஒரு மயக்கநிலையில் ஆனந்தன் இருந்தான். சூழலில் நடப்பது புரியாத புதிராகத் தெரிந்தது.

அதிகாரி வந்தான். பார்த்தான். “மே... சுட்டக் வத்துற தாண்ட“ தண்ணீரை ஊற்றுமாறு சொன்னான். சிப்பாய்கள் ஆனந்தனின் முகத்தில் தண்ணீரை அடித்தார்கள். தண்ணீரில் அப்படியென்ன சக்தி இருக்கிறது. தண்ணீர் பட்டதும் ஆனந்தனுக்கு நினைவு துளிர்விட்டது. மெதுவாக விழிகளைத் திறந்து பாத்தான். அவனைச் சுற்றி இருவர் காவல் நின்றார்கள். மற்றவர்கள் வெளியில் சென்று வந்தார்கள். அவனது தலை அசைந்தது. அந்த அதிகாரி ஏதோ கட்டளை இட்டான். ஆனந்தனை அப்படியே விட்டுக் கதவைத் தாளிட்டார்கள். வெளியில் காவல் இருந்தார்கள். ஆனந்தன் அரற்றினான். அவனது வாய் "மேரி..மேரி..“ என முணுமுணுத்தது. மேரி அவனது மனைவி. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட அன்புப்பெடை. ஆனந்தனுக்குச் சற்றுத் தலைவலி என்றாலே தாங்கமாட்டாது துடிப்பாள் மேரி. ஆனந்தன் மயங்கிக் கிடந்தான். அவனது நினைவுகள் சிறகடித்துப் பறந்து உலாவந்தன.

தொடரும்..

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP