Thursday, May 13, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

14

"மேரி...“ ஆழமான கிணற்றுக்குள் இருந்து வரும் ஒலியினைப் போல் வாய் மட்டும் முணுமுணுத்தது. 'இன்ரவியு’ முடிந்து அவன் எதிர்பார்த்த ஆசிரிய நியமனமும் கிடைத்து விட்டது. அவன் பிறந்து வளர்ந்த சொந்த ஊரிலேயே கடமையாற்றச் சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. மேரிக்கு எப்படி அறிவிப்பது. அவளுக்கு எழுதினால் அவளது பெற்றோர் தன்னைத் தவறாக எடைபோட்டு விட்டால்... மயூரி மூலம் தெரியப் படுத்தினான். ஒருநாள் டேவிட் ஆனந்தனைத் தேடி அவன் வீட்டுக்கே வந்து விட்டார். அவர்தான் மெதுவாக ஆனந்தனின் விசயத்தை தாயிடம் உடைத்தார். அவனது வாழ்க்கையைப் பற்றி அம்மாவிடம் சொன்னபோது யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சமயத்தைப் பற்றி அவனது பெற்றோர் அலட்டிக் கொள்ளவில்லை. 'மே மாதம்’ செய்யலாம் என்ற அனுமதியும் கிடைத்து விட்டது. சந்தோசம் தாண்டவமாடியது.

சித்திரை விடுமுறையில் கொழும்பு செல்லவேண்டும். ஒழுங்குகளைக் கவனிக்க வேண்டும். வழக்கம்போல் திடீர் அதிரடி கொடுக்க மயூரி திட்மிட்டாள். ஸ்ரனிஸ்லாஸ் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். "இம்முறை போனால் ஒரு கிழமைக்காவது நிற்க வேண்டும்.“ தீர்மானித்தார்கள். டேவிட் சிரித்தார். "நாங்க நினைப்பது போல் நடக்குமா? நடப்பதுதான் நடக்கும். சித்திரை விடுமுறைக்கு வரும்படி செபஸ்தியார் கடிதம் எழுதியிருந்தார். வரும்போது அறிவித்து விட்டு வரவேண்டும் என்று அன்புக்கட்டளையும் இட்டிருந்தார். "அப்பா! அறிவித்து விட்டுப் போனால் சுவையாக இருக்காது. சொல்லாமல் போய் இறங்கவேணும். அதுதான் நல்லது“. மயூரி துள்ளிக் குதித்தவாறு சொன்னாள். "சரி உன்விருப்பம். முதலில் ஆனந்தனுக்குச் சொன்னாயா? அதச்செய்.“ கட்டளை பிறப்பித்து விட்டு வெளியில் போக ஆயத்தமானார்.

"நாளை இரவு புறப்படவேணும். பெரியண்ணா சீற் புக்பண்ணிப் போட்டார். போனகிழமையே சொல்லிப் போட்டன். ஆனந்தனண்ணன் இப்ப வருவார். நீங்க ஆயத்தமாக இருந்தால் சரி“. மயூரி சொல்லிக் கொண்டே போவதைக் கவனித்தார். இவள் என்னமாதிரி திட்டமிடுகிறாள். தாய் இருந்தால் எவ்வளவு சந்தோசப்படுவாள். தனது மனைவியை நினைத்துக் கொண்டார். மரியநாயகி அற்புதமான பெண். டேவிட் முற்பிறப்பில் செய்த புண்ணியம்தான் மரியநாயகி அவரது மனைவியாக வந்து வாய்த்தவள். அது தற்செயலாக நடந்த சம்பவம். அப்போது டேவிட் அழகான வாலிபன். திருகோணமலை கடற்படைத்தளத்தில் நல்ல உத்தியோகத்தில் இருந்தார். தனிக்கட்டையான அவருக்கு கடுமையான காய்ச்சல் தொற்றிக் கொண்டது. மரியநாயகியின் வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தார். காய்ச்சல் அவரை வாட்டியெடுத்தது.

இரண்டு நாளாக வெளியில் வரவே இல்லை. அவருடைய ஊசாட்டத்தைக் காணவே இல்லை. அறையில் அவரது முனகல் ஒலி கேட்டு கதவைத் திறந்து பார்த்தாள். டேவிட் கீழே கிடந்தார். உதவிக்கு வீட்டில் யாருமே இல்லை. ஆபத்துக்குப் பாவம் இல்லை. பாட்டியிடம் சொன்னாள். "நாயகி நான் வீட்டைப் பார்த்துக் கொள்ளுறன். நீ அந்தப் பொடியனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போ. மருந்தெடுத்து கொண்டு வா. பாட்டி தைரியத்தைக் கொடுத்தார். ரக்சியைக் கூப்பிட்டாள். ரக்சிக்காரரின் உதவியோடு டேவிட்டை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றாள்.

அவரைப் பரிசோதித்த டாக்டர் வாட்டில் அனுமதிக்கும்படி கூறிவிட்டார். வேறு வழியில்லை. ஆஸ்பத்திரி வாட்டில் அனுமதித்து விட்டு வீட்டுக்கு வந்தாள். வேண்டிய பொருட்களைக் கொண்டுபோய் கொடுத்தாள். இரண்டு நாட்களாக பேச்சுமூச்சில்லாது கிடந்தார். மூன்றாம் நாள்தான் அவருக்குச் சுயநினைவு வந்தது. "நான் எப்படி ஆஸ்பத்திரிக்கு வந்தேன“;. யோசித்தவண்ணம் இருந்தார். பக்கத்துக் கட்டிலில் இருந்தவரிடம் கதை கொடுத்தார். அவர்மூலம் மரியநாயகி செய்யும் உதவிகளைத் தெரிந்து கொண்டார். இரண்டு நாட்களாக நீர்ப்பதார்த்த உணவுதான் வழங்கப்பட்டது. மூன்றாம் நாள் மெல்லிய உணவு கொடுக்கலாம் என்று டாக்டர் கூறினார். இடியப்பம் அவித்துக் கட்டிக் கொண்டு வந்தாள். அவளைப் பார்த்ததும் அவரது கண்கள் கலங்கின. ஒரு கன்னிப்பெண் முன்பின் தெரியாத ஒருவருக்கு இப்படி உதவுவதென்பது பூர்வ ஜென்மத்துப் புண்ணியம் என்பதை உணர்ந்து கொண்டார்.

உடல் நலமாகிவிட்டது. வீட்டுக்குப் போகலாம் என டாக்டர் கூறினார். புறப்படத் தயாரானார். மரியநாயகி வந்தாள். அப்போதெல்லாம் ஆட்டோ இல்லை. டாக்சிதான். டாக்சியில் வீடு வந்து சேர்ந்தார்கள். பாட்டி அன்போடு நலம் விசாரித்தார். பாட்டியின் பென்சன் பணத்தில் இரு ஜீவன்களும் வாழ்ந்தனர். மேலதிக செலவுகளை வாடகைப் பணம் ஈடு செய்தது. டேவிட் மரியாதையான வாலிபன். அவருக்கென்று திருகோணமலையில் யாருமில்லை. பாட்டியின் விருப்போடும், ஆசிர்வாதத்தோடும் திருமணம் நடந்தேறியது. யாழ்ப்பாணத்தில் அக்கா இருந்தார். விடுமுறையில் மரியநாயகியையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார். அக்காவுக்கும் மரியநாயகியைப் பிடித்துக் கொண்டது. அக்காவின் வாக்குப்படி மாகிரட்டை செபஸ்தியாருக்குத் திருமணம் செய்து வைத்தார். செபஸ்தியார் கொழும்பில் மாநகரசபையில் சுப்பவைசராகக் கடமையாற்றினார்.

செபஸ்தியார் கொழும்பில் வீடு எடுத்திருந்தார். தம்பதியினரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று அவர்களது வீட்டில் விட்டார். அங்கு ஒருநாள் தங்கியதும் கிளம்பிவிட்டார். அந்தப்பக்கம் செல்லவே இல்லை. அவரது மனதில் படமாக ஓடியது. அவரை அறியாமலேயே பெருமூச்சுப் பறந்தது. தொட்டகுறை விட்டகுறை என்பார்களே, அதனை நினைந்து கொண்டார். மயூரியையும், மேரியையும் எண்ணிக்கொண்டார். மேரியின்ர கலியாணத்தை முடித்தவுடன் மயூரியையும் கரைசேர்த்து விட்டால் பெரிய நிம்மதி. அவரது உள்ளம் அமைதிகொண்டது.

ஆனந்தன் வந்தான். கொழும்புக்குப் போவது பற்றிக் கூறினாள். அவனுக்கு உள்ளத்தில் குதுகலம். "ஏன் போகவேணும்“.? சீண்டிப்பார்த்தான். "அண்ணா என்ன விளையாட்டு விடுறீங்க. நான் வாறதாக அண்ணிக்கு அறிவிச்சுப் போட்டன்“. சிணுங்கினாள். " ஏன் அறிவிச்சிங்க.? அறிவிக்காமல் போவதுதானே நமது திட்டம். ச்சா... கெடுத்துப் போட்டிங்க“ அவன் குழம்பினான். "யாமிருக்கப் பயமேன். அதற்கும் ஐடியா வைச்சிருக்கன். பயம் வேண்டாம். நாளை மலை புறப்படுவோம். சரியா? இருக்கைகள் பதிந்தாகி விட்டன“. படபடவெனக் கொட்டித்தள்ளினாள். "மயூரி எனக்கொரு சந்தேகம். கேட்கலாமா? அவளை நேராகப் பார்த்துக் கேட்டான். "என்ன சந்தேகம்? சொல்லுங்க“. தேநீரைக் கொடுத்தபடி கேட்டாள். தேநீரைக் குடித்தபடியே சொன்னான்.

அவள் இடுப்பில் கைகளை வைத்தபடி நின்றாள். "எப்ப மயூரியின் திருமணம்“.? அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. "என்னண்ணா....புதிய ஞானம் பிறந்து விட்டதா? அண்ணியின் கலியாணம் முடிந்ததும் அடுத்தது எனக்குத்தான். நீங்க அண்ணியோட நின்றுதான் நடத்தி வைக்கவேணும். சரியா“? சிரிப்போடு கலகலத்தாள். "சரிசரி....அப்பா எங்கே..? வினவினான். "பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கார். இப்ப வந்திருவார்“;. படலை திறபடும் சத்தம் கேட்டது. "அதோ அப்பா வாறார்“. டேவிட் வந்து கொண்டிருந்தார். ஆனந்தனைக் கண்டதும் சந்தோசமானார். "ஆனந்தன் கொழும்புக்கு எப்போது போவம்? மயூரி நாளைக்குப் போகணும் என்று சொல்லுறாள். என்ன செய்வம்“.? சிரிப்போடு கேட்டார். "நீங்க என்ன நினைக்கிறிங்களோ அதனைச் செய்வோம்“. அப்படியே டேவிட் பக்கம் திருப்பி விட்டான்.

"சரி மயூரி சொன்னபடி செய்வம். என்ன“? சொல்லிவிட்டு அவனைப் பார்த்தார். அவன் தலையை ஆட்டினான். அன்றையத் தினசரிகளைப் புரட்டினான். சென்றவாரச் சிந்தாமணி கண்ணில் பட்டது. அதனை எடுத்துப் பிரித்தான். கவிதை கண்ணில் பூத்தது. பலமுறை படித்தான். அவனது கவிதை அழகிய ஒவியத்தோடு முதன்முதல் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. படித்தபோது புளகாங்கிதம் அடைந்தான். அவனது உள்ளம் சிறகடித்துப் பறந்தது. "மயூரி இஞ்ச கொஞ்சம் வாங்க. ஒரு கவிதை சிந்தாமணியில் பிரசுர மாகியுள்ளது. படித்துப் பார்த்தீங்களா?“ அழைத்தான். மயூரி ஓடோடி வந்தாள். அவளிடம் பத்திரிகையைக் கொடுத்தான். "நான் இதனைக் கவனிக்கவில்லை அண்ணா“. பத்திரிகையை வாங்கிக் கவிதையைப் படித்தாள்.

அவள் விழிகள் அகன்று விரிந்தன. 'உலகில் பிறவி ஏனெடுத்தேன்...“ படித்து முடித்தாள். அற்புதமாக இருக்கிறது? அண்ணா யாரிந்தக் கவிஞர்? உங்களுக்குத் தெரியுமா? உலக தத்துவத்தைச் சிந்தியுள்ளார்“.? ருசித்துச் சொன்னாள். அவன் புன்னகைத்தான். நாணம் அவன் முகத்தில் இழையோடியது. "இதோ வருகிறேன்“ என்று வெளியே விரைந்தான். "இந்த அண்ணனுக்கு என்ன வந்திற்று“ தோள்பட்டையை அசைத்தவண்ணம் தனது வேலையில் ஆழ்ந்தாள். சற்று நேரத்தில் களைத்து வந்தான். அவனது கையில் பெரிய ஐஸ்கிறீம் கப் இருந்தது. "மயூரி இந்தாங்க ..“ கொடுத்தான். அவள் வியப்போடு வாங்கினாள். "முதலில் ஐஸ்கிறிம். பிறகுதான் கதை. சாப்பிடுங்க“. கரண்டியில் எடுத்துக் கொடுத்தான். "அண்ணா இப்ப சாப்பாடு ரெடி. சாப்பிட்டுவிட்டு ஐஸ்கிறீம் சாப்பிடுவோமே. என்ன அவசரம்“. சாப்பாட்டுக்குப் பிறகும் ஐஸ்கிறீம் சாப்பிடலாம். முதலில் ஒரு கரண்டி ஐஸ்கிறீமைச் சாப்பிடுங்க“. நீட்டினான். அவள் வாங்கிக் கொண்டாள்.

"கவிதை நன்றாக இருக்கிறதா? அதைச் சொல்லுங்க“. கேட்டான். "அதுதான் முதலில் சொல்லிவிட்டேனே. மிகவும் நல்லது. அண்ணா இது உங்க கவிதைதானே. எனக்குத் தெரியும்.“ முகம் மலர்ந்து பாராட்டினாள். "முதன்முதல் எனது கவிதையை ரசித்துப்பாராட்டிய எனது தங்கைக்கு ஐஸ்கிறீம் கொடுத்தது சரியா? தப்பா? சொல்லுங்க“. அவளைப் பார்த்தபடியே நின்றான். "நான் மடச்சி. முதலிலேயே படித்திருக்க வேண்டும். பாராட்டியிருக்க வேண்டும். பரவாயில்லை. எனது அண்ணன் ஒரு கவிஞன் என்பதை எண்ணுமபோது சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அண்ணா வாழ்த்துக்கள்.“ அகம்மகிழச் சொன்னாள். "உண்மையாக எனது கவிதைகளை ரசித்துப் படித்து பொருத்தமான படத்தையும் சேர்த்துப் பிரசுரித்த சிந்தாமணி ஆசிரியர் திரு. எஸ்.டி.சிவநாயகம் அவர்கள்தான் போற்றப் படவேண்டியவர்“;. நன்றியுணர்வோடு கூறினான்.

"அண்ணா சாப்பிடுவோம். பெரியண்ணாவும் அதோ வாறார். அப்பா! வாங்க...சாப்பிடுவோம். பெரியண்ணா! கைகாலைக் கழுவிற்று வாங்க... சாப்பாடு ரெடி“. ஒழுங்குகளைச் செய்து கொண்டே அழைத்தாள். சாப்பாட்டு மேசையில் ஐஸ்கிறீமும் இருந்தது. சாப்பாட்டைப் பரிமாறினாள். ஸ்ரனிஸ் புன்னகைத்தவாறே "என்ன விஷேசம்? எப்ப கொழும்புப் பயணம்“? உரையாடினார். "ஆனந்தன் சொல்ல மறந்திட்டன். உங்கட கவிதையை ஞாயிறு சிந்தாமணியில் படித்தேன். மிகவும் ருசித்தது. அருமையானது“. ஸ்ரனிஸ் கூறிக்கொண்டே உணவருந்தினார். "அண்ணா! ஆனந்தனண்ணாவின்ர கவிதையென்று எப்படித் தெரியும்? அவர் புனைபெயரில்தானே எழுதியிருக்கிறார்“. மயூரி வினாவினாள். "அவர் இந்தக் கவிதையரங்குகளில் பங்குபற்றுபவர்தானே. பலதடவைகளில் அவரது கவிதைகளைக் கேட்டிருக்கிறன். அவர்ர கவிதை வந்தபடியால்தான் சிந்தாமணியை வாங்கி வந்தனான். உனக்குச் சொல்ல மறந்திறட்டன். அதுக்காக கறிவைக்க மறக்காதே“. சிரித்தவாறே ஸ்ரனிஸ் சொன்னார்.

"எனக்கு இதெல்லாம் விளங்காது. கவிதை எழுதுவதற்கு மொழியாற்றலும். கற்பனா சக்தியும் வேண்டும். ஆனந்தனுக்கு அது இருக்கு“. டேவிட் உள்ளே புகுந்து வந்தார். ஆனந்தனுக்கு நாணமாக இருந்தது. தலையைக் கவிழ்ந்து கொண்டான். உணவு முடிந்ததும் ஐஸ்கிறீம் உண்டார்கள். மயூரி மிகுதி வேலைகளை முடிக்க அடுக்களையில் நுழைந்தாள். மண்டபத்தில் சாய்மனைக் கட்டிலில் டேவிட் சாய்ந்திருந்தார். ஸ்ரனிஸ_ம் பக்கத்தில் இருந்தார். "ஸ்ரனிஸ் ஒரு விசயம் சொல்லப்போறன். கோவிக்காமல் கேட்க வேணும்.“ ஆனந்தன் தொடங்கினான். "பீற்றசனைத் தெரியுமா உங்களுக்கு“? வினாவோடு தொடங்கினான். "எந்தப் பீற்றசன்.“? என்னோடு ஆசிரியராக இருப்பவர். நல்ல பொடியன். நமது யோசப் மாஸ்ரரின் இளைய மகன். அவன் மயூரியைக் காதலிக்கிறான். மயூரிக்கும் நல்ல விருப்பம். இது நல்ல இடம். நமது தங்கச்சிக்குப் பொருத்தமான இடம். செய்து வைப்பது நமது கடமை. நல்ல முடிவாக எடுங்க“. விளக்கமாகக் கூறினான்.

"எனக்கும் சாடையாகத் தெரியும். பீற்றசன் நல்ல கால்பந்தாட்டவீரன். எங்கட ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இருக்கிறான். நல்ல பொடியனும்கூட. எனக்கு நல்ல விருப்பம். மயூரியின் விருப்பத்தை அறியத்தான் காத்திருந்தனான். நீங்க சொன்னதும் சந்தோசம். அப்பா! உங்கட விருப்பம் எப்படி“? ஸ்ரனிஸ் டேவிட்டிடம் கேட்டார். அவரும் யோசித்தார். "எனக்கு அந்தக் குடும்பத்தை நல்லாவே தெரியும். யோசப் மாஸ்ரர் தங்கமான மனிசன். அவங்கட சம்மதத்த அறியவேணும்“. தனது மனதைக் காட்டினார். "ஐயா எனக்கு உங்கட சம்மதம் தெரிஞ்சு போச்சு. இனி மிச்சமெல்லாம் நான் பார்த்துக் கொள்வன். மே அல்லது ஜூன் மாதம் திகதியக் குறிப்பிட ஆயத்தப் படுத்துங்க. மயூரியின் வாழ்க்கை நல்லபடி நடக்கும். நமது கனவு மெய்ப்படவேண்டும்.“ அதற்கு அந்த இறைவனின் அருளும் ஆசியும் கிடைக்கும்“. ஆனந்தன் உறுதியளித்தான்.

மயூரியும் வந்து கலந்து கொண்டாள். " மயூரி! இப்ப இரண்டு மணியாகி விட்டது. நான் மூன்று மணிக்கு வீட்ட போகவேணும். நாளைக்குப் பின்னேரம் இஞ்ச வாறன். இங்கிருந்து ஸ்ரேசனுக்குப் புறப்படலாம். என்ன“? ஆனந்தன் நேரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான். "அண்ணா நிழல் சாய்ந்ததும் போகலாம்தானே? சரியான வெயிலாக இருக்கிறது“. போகலாம்தான். ஆனால் இடையில் கொஞ்சம் வேலையிருக்கு. அது முக்கியமானது. நான் இப்பவே கிளம்பினால்தான் முடித்துக் கொண்டு நேரத்துக்கு வீட்டுக்குப் போகலாம்“;. கூறிக்கொண்டு புறப்பட்டான்.


தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP