Monday, May 17, 2010

கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி

19

பாடசாலை கலகலத்தது. அதிபர் சின்னத்தம்பி; விட்டுச்சென்ற பணியை அதிபர் ஸ்ரனிஸ்லாஸ் தொட்டு வளமுறச் செய்தார். அந்த ஊர் பழம்பெரும் கிராமம். குளக்கோட்டன் கந்தளாய்க் குளத்தைக் கட்டிப் பலகிராமங்களை அமைத்துக் குடியிருப்புக்களை ஏற்படுத்தி மக்களைக் குடியமர்த்தினான். தம்பைநகரின் கிழக்கெல்லையாகக் கொட்டியாரக்குடாக் கடல் நெளிகிறது. கொட்டியாரக்குடாக் கடலைத் தழுவியணைத்து மகாவலி சங்கமமாகிறது. கங்கைநீர் கோணேசர் பாதங்களைத் தொட்டளைந்து விளையாடும் இடமாகக் கொண்டுள்ளது. தம்பலகாமக்குடாவில் கந்தளாய்க் குளத்தின் வடிச்சல் நீரும், உவர்நீரும், மகாவலியின் நன்நீரும் சங்கமிக்கும். மூன்றும் கலந்துகொள்ளும். அங்கு முத்து விளையக் களம் அமைத்துக் கொடுக்கும்.

சேர,சோழ,பாண்டியரும், பிறநாட்டு மன்னர்களும், வணிகப்பெரு மக்களும் தம்பைநகரின் கப்பல்துறைமுகத்தில் ஒன்று சேருவர். கப்பல் துறைமுகம் பிரபலமாக விளங்கியது. ஈழத்துணவு இங்கிருந்து சென்றது. பாய்மரக்கலங்கள் தரித்து நிற்கும். தேரோடும் வீதிகளும், பல்தேசத்து மக்களும் நிறைந்திருந்தனர். ஒரே கேளிக்கையாக இருக்கும். தம்பலகாமப் பற்று பரந்த பிரதேசமாக விளங்கியது. கிழக்கில் நெய்தலும், மேற்கில் மருதமும், வடக்கில் குறிஞ்சியும், தெற்கில் முல்லையும் கலந்து பரந்து எல்லைகளாக விளங்கின. குளக்கோட்டு மன்னனால் அம்மன் கோயில்கள் கட்டப்பட்டன. இன்று அந்தக்கப்பல்துறைக்குப் பல்வேறு காரணங்களைக் கற்பித்து வரலாறு கூறுகிறார்கள்.

அப்போது சிற்றூர்கள் இல்லை. தம்பலகாமம் கிழக்கு எனும் பெயரினால் அழைக்கப்பட்டது. பல சிற்றூர்கள் இருந்தன. நீரோட்டுமுனை, தாமரைவில், ஆலங்கேணி, சூரன்கல், மணியரசன்குளம், பாண்டியனூற்று, மாகாமம், தீனேரி,கற்சுனை எனக் கிராமங்கள் மகாவலி கங்கைக் கரையோரம் வரை நீண்டு கிடந்தன. இக்கிராமங்களில் அம்மன் கோயில்கள் நிறைந்திருந்தன. அவற்றில் ஒன்று ஆலங்கேணியில் அமைந்திருந்தது. பூசாரிவெட்டை பூசாரிமார்களுக்கு நிவந்தமாகக் கொடுபட்டது. வண்ணத்தொழில் செய்வார்க்கு வண்ணான்வெளி கிராமம் கொடுபட்டது. வயல்களில் மேற்பார்வையில் ஈடுபட்டவர்களுக்கு அடப்பானார்வெட்டைக் கிராமம் நிவந்தமாகக் கொடுக்கப பட்டது. சைவப்பாரம்பரியம் சிறப்புற்று விளங்கியது.

'மாற்றமாம் வையகம்’ என்பது எவ்வளவு உண்மை. இன்று எல்லாம் மாறிவிட்டது. கோயில்கள் எல்லாம் மண்மேடுகளாயின. மாகாமத்தில் தொடங்கிய கொள்ளை நோயால் வாழ்ந்திருந்த தமிழ் மக்கள் பலரைச் சாவு காவு கொண்டது. பலர் வேறு இடங்களை நாடிச் சென்றனர். ஊர்கள் அழிந்தன. மக்கள் நிறைந்திருந்த ஊர்மனைகள் காடுகள் பற்றி விலங்குகள் நிறைந்தன. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வேற்று மக்களும், வேறு சமயங்களும் வந்து புகுந்தன. புதுப்புது ஊர்கள் முளைத்தன. 'பழையன களைதலும், புதியன புகுதலும் வழுவல’ என்பது இன்று வழக்கொழிந்து 'புதியன புகுத்தலும், பழயன கழித்து விரட்டலும்’ என்று ஆகிவிட்டது.

அந்நியர் படையெடுப்பின் பின்னர் யாவும் நிலைகுலைந்து போயின. மக்கள் திசைதெரியாது கால்போன பக்கம் சென்று குடியேறினர். பலசதாப்பதங்களின் பின் படிப்படியாகத் தமது பிரதேசங்களில் குடியிருந்தாலும் அந்நியர் ஆட்சியரின் அதிகாரிகளிடம் இருந்து தமது நிலங்களை பணம் கொடுத்து எழுதி வாங்கினார்கள். பிரித்தானியர்கள் இந்த நடைமுறையைச் செய்தார்கள். குருகுலக் கல்விமுறை படிப்படியாக மாற்றம் பெற்றது. கிறிஸ்தவ மதம் பரவியது. பாதிரிமார் பாடசாலைகளைத் திறந்து கல்விப்பயிர் வளர்த்தார்கள். ஆலங்கேணியிலும், நீரோட்டு முனையிலும் குருகுலமுறைக் கல்வி நடைபெற்றாலும் அது வெற்றியளிக்க வில்லை. பாதிரிமார் ஆலங்கேணிப்பாடசாலையை 1898ல் பொறுப் பெடுத்தார்கள்.

பாடசாலை பலசதாப்தங்களாக நடைபெற்றாலும் வளர்ச்சி யடையவில்லை. எழுச்சியை வேண்டி நின்றது. அதனை நிறைவு செய்யவென்று பல இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனந்தனும் முழமையாகத் தன்னை இணைத்துக் கொண்டான்.

அன்று மாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானத்தில் பயிற்சியளிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். நல்ல களைப்பு. ஆறுதலாக வீட்டுக்கு நடந்து போனார்கள். அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. வீட்டில் டேவிட் ஜோசப் மாஸ்ரரோடு ஆனந்தன் வீட்டுக்கு வந்திருந்தார். அப்பா அம்மாவோடு கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் கண்டபோது ஆனந்தன் மனம் சந்தோசத்தால் துள்ளியது. பீற்றர்சனுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. அவனுக்குத் தன் அப்பாவையும், டேவிட்டரையும் கண்டதும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

இரவுப்பொழுது மகிழ்ச்சியாகக் கழிந்தது. ஆனந்தனின் திருமணம் மே மாதம் இருபத்தோராம் திகதி நடத்துவதற்கான பேச்சு நடந்து முடிந்தது. ஜூன் மாதம் பீற்றர்சன் மயூரியின் திருமணத்தையும் நடத்தி முடிக்க முடிவாகிவிட்டது. ஜோசப் மாஸ்ரர் ஒரு புரட்சிகரவாதி. அவருக்கு எம்மதமும் சம்மதமே. முரண்பாடுகளுக்கு மனிதமனங்களே காரணம் என்பதைப் புரிந்து கொண்டவர். ஆனந்தனின் பெற்றோர் எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவித்து விட்டனர். வாழப்போவது நமது பிள்ளைகள்தான். அவர்களது சந்தோசம்தான் முக்கியமானது. ஓவ்வொருவரும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இந்த உலகத்தில் சொர்க்கத்தைக் காணலாம் என்பது ஆனந்தனின் அப்பா கணபதிப்பிள்ளையரின் வாதம்.

வந்தவேலைகளை முடித்து விட்டு இருவரும் புறப்பட்டனர். திருமணத்தை முடித்துவைப்பதற்கான வேலைகளைப் பார்க்க எல்லாரும் ஒன்றாகிச் செயற்பட்டனர். இவ்வளவு விரைவில் இவையெல்லாம் நடக்குமென்று மார்கிரட் எதிர்பார்க்கவில்லை. கொழும்பில் ஆனந்தனின் குடும்பத்தவர்கள் தங்குவதற்கு வீடு தேவைப்பட்டது. பாத்திமா தங்கள் வீட்டில் சகல வசதிகளையும் செய்து கொடுத்தாள். ஆனந்தன் தங்குவதற்கு லதா தங்கள் வீட்டில் ஒழுங்குகளைச் செய்தாள். மேரிக்காக பாத்திமாவும், லதாவும் தங்கள் குடும்பத்தவரோடு வேண்டிய ஒத்தாகைளைச் செய்து கொடுத்தார்கள். தங்களது உறவினரின் திருமணம்போல் கலந்து கொண்டு பாடுபட்டார்கள். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாட்டைக் காணவில்லை. சைவம், கிறிஸ்த்தவம், பௌத்தம். இஸ்லாம் என்ற பாகுபாட்டைக் காணவில்லை. எல்லோரும் சங்கமித்த காட்சியைக் கணபதிப்பிள்ளை கண்டார்.

இப்படி எல்லா மக்களும் ஒன்றாக இருந்தால் நமது நாடு சொர்க்கமாகும். மனதினிலே எண்ணிச் சந்தோசித்தார். மனம் மகிழ்ந்தது. செபஸ்தியார் எதனை நினைத்தாரோ அதனை ஆனந்தன் நிறைவேற்றி வைத்தான். "மாகிரட் இப்ப என்ன சொல்கிறாய“;. டேவிட் புன்னகையோடு கேட்டார். "எல்லாம் உங்கட தயவுதான்.“; மாகிரட் சிரித்துக் கொண்N;ட கூறினார். "மேரி நமது 'கனவு மெய்ப்பட வேண்டும்’ என்று இறைவனிடம் வேண்டுதல் செய்தோம். இன்று அதனை அவர் நிறைவேற்றியிருக்கிறார். நமது திருமணத்தில் எல்லாச் சமயத்தவரும் ஒன்றாகி நடத்தி வைத்துள்ளார்கள். இறைவன் ஒருவனே. அவனை எந்தப் பெயர்கொண்டும் அழைக்கலாம்“. அவளது காதுகளில் ஓதினான்.

அவளுக்குப் பெருமையாக இருந்தது. மயூரி அடிக்கடி மேரியின் பக்கம் வந்து சீண்டிக் கொண்டிருந்தாள். "மயூரி உங்கட திருட்டுத்தனங்கள நானும் கவனிச்சன். அடுத்தமாதம் வருவீங்கதானே. அப்ப பார்ப்பம். எங்க பீற்றர்சன். அண்ணி சத்தம் போடதீங்க. சிரித்துக் கொண்டே ஓடினாள். மேரி திருகோணமலைக்குப் புறப்பட்டாள். பாத்திமாவும், லதாவும் தேம்பித்தேம்பி அழுதார்கள். "இவ்வளவு காலமும் சேர்ந்தொன்றாய் திரிந்தோம். இப்போது நீங்க ஒருபுறம். நாங்க ஒருபுறம் என்று பிரிஞ்சிட்டம்“. லதா விசும்பினாள். மேரி கண்கலங்கி விம்மினாள். "உங்கட உதவிய மறக்கமாட்டன். அடிக்கடி கொழும்புக்கு வருவன்“;. கூறிப்புறப்பட்டாள்.

ஆனந்தனது இல்வாழ்வு கலகலத்தது. மயூரியின் திருமணத்தையும் நடத்திவைத்தார்கள். மேரி இரண்டு குழந்தைகளைப் பெற்று ஆனந்தனைத் தந்தையாக்கினாள். மேரியை தனது பேறாகவே நினைத்தான். அவனைப் பொறுத்தவரை இல்லறவாழ்வு இனித்தது. பதவியுயர்வு அவனைத் தேடிவந்தது. கல்வி நிர்வாகசேவையின் உயரதிகாரியாக வவுனியாவுக்கு வந்தான்.

தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP